Tuesday, May 12, 2015

தலைவன் - பகுதி 1 - அறிவியல் சிறுகதை

தலைவன்

                                                            ---(1)---

                                                                    வருடம் 2042
நிலவின் இரவில் அமைதி எங்கும் வியாபித்திருந்தது. ஆகாயத்தை நட்சத்திரங்கள் மலர்ச்சரம் போல அலங்கரித்து மின்னிக் கொண்டிருந்தன. நீல நிறப் பந்தாய் தெரிந்த பூமியை ஆஷா கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்ன மறுபடியும் தாத்தா ஞாபகமா?"
ஆஷாவின் தந்தை அவள் பின்னால் நின்று கொண்டிருந்தார்.
"அவரை நீங்கள் பூமியிலேயே தங்க விட்டு வந்திருக்கக் கூடாது."  
"தாத்தாவை என்னுடன் நிலவுக்கு வரச் செய்ய எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் அவர் பிடிவாதம் பற்றி உனக்குத் தெரியாது?"
"நீங்கள் பூமியை கை கழுவி விட்டு வந்திருக்கக் கூடாது. உங்களுடைய சுயநலத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை."
"ஆஷா, உனக்கு இப்போது இருபது வயது. 25 வருடங்கள் முன்பு பூமிக்கு நேர்ந்த கதி நீ கேள்விபட்டிருப்பாய். இருந்தாலும் சொல்கிறேன். ஈரான், இஸ்ரேல் என்னும் இரண்டு சிறிய நாடுகள் இடையே அணு ஆயுதப் போராக ஆரம்பித்தது அமெரிக்கா, ஐரோப்பா,சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளையும் இழுத்தது. அதன் விளைவாக இந்நாடுகள் முழுதும் அழிந்தது. போருக்குப் பின்னும் கதிர் வீச்சின் காரணமாக இப்பிரதேசங்கள் யாரும் வசிக்க முடியாத அளவுக்கு  மாறியது. போரில் நடு நிலைமை வகித்த இந்தியா நாடு மட்டுமே தப்பியது. ஆனால் அதன் பின்னர் கோள வெம்மை காரணமாக இந்நாடும் இயற்கையின் சீற்றத்திற்கு உள்ளாகியது. அதனால் இந்நாட்டில் வசித்தவர்கள் நிலவு, செவ்வாய் போன்ற இதர கிரகங்களுக்கு குடியேறினர். உன் தாத்தா போன்ற சிலர் பூமியிலிருந்து குடிப் பெயர மறுத்தனர்."
"பூமி நமது தாய்க் கிரகமாக இருக்க நாம் ஏன் அதற்கு எந்த உதவியும் செய்யவில்லை"
"நிலவில் வசிக்கும் நாம் விஞ்ஞான வளர்ச்சியில் பெரிதும் முன்னேறினோம். ஆனால் நமக்குத் தேவையான சில கனிமங்கள் பூமியில் மட்டுமே கிடைக்கிறது. பூமியிலோ விவசாயம் செய்ய முடியாத நிலை. அதனால் அவர்களுக்கு வெறும் உணவுப் பொருட்களை நாம் அளிக்கிறோம். அதற்குப் பதிலாக பூமியில் உள்ளவர்களைப் பயன்படுத்தி அங்குள்ள கனிமங்களை எடுத்துக் கொள்கிறோம். சுரங்கங்களில் வேலை செய்யும் இவர்கள் நிலைமை பரிதாபத்துக்குரியது. சுருக்கமாக சொல்லப் போனால் பூமி இப்போது நமது நிலவின் காலனிப் பிரதேசம்."
"சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தியா பிரிட்டனின் காலனிப் பிரதேசமாக இருந்தது போல".
"ஆம் சரியாகச் சொன்னாய். பூமியின் சீரமைப்பு மற்றும் அதற்கு முழு வளர்ச்சி  அளிக்க வேண்டும் என்று நான் மற்றும் சிலரும் போராடுகிறோம்.அதற்காக ஒரு கட்சியும் ஆரம்பித்தேன். அடுத்த மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் நான் வெற்றி அடைந்தால்  பூமியின் நிலையை முற்றிலும் மாற்றி அமைப்பேன். நேரமாகிறது உன் அம்மா தேடுவாள். தூங்கலாம் வா."
அடுத்த நாள் ஆஷா தனது பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். மானிட்டரில் செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது.
"அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக நடத்திய கருத்துக் கணிப்பில் விஷால் குமார் 20 சதவிகித வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்."
செய்தியை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தபோது அவள் நண்பன்  பிரேம்  முதுகைத் தட்டினான்.
"உன்னுடன் தனியாகப்  பேச வேண்டும். வெளியே போகலாம் வா."
ஆஷா பிரேமைப் பின் தொடர்ந்து சென்றாள்.
"நீ பூமிக்கு கள்ளத்தனமாக செல்லும் விண்கலத்தில் ஒரு இடம் வேண்டும் என்று கேட்டிருந்தாய் அல்லவா. நான் பெரிதும் முயற்சி செய்து நாளை செல்லும் விண்கலத்தில் உனக்கு ஒரு இடம் பிடித்து வைத்திருக்கிறேன். உனக்கு சம்மதமா"
ஆஷா தீவிரமாக யோசித்து பதிலளித்தாள். "இல்லை பிரேம். பூமிக்கு இப்போதே செல்ல  அவசியம் இல்லை. அடுத்த மாதம் நடக்கும் தேர்தலில் என் அப்பா வெற்றி அடைவது உறுதி. அவர் ஜனாதிபதி ஆனால் பூமிக்கு செல்ல இப்போதிருக்கும் எல்லா கட்டுப்பாடுகளையும் தளர்த்தி விடுவார்."
"நன்றாக யோசித்து சொல். உனக்கு இடம் கிடைப்பதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன்."
"இப்போது வேண்டாம். இந்த சமயத்தில் நான் பூமிக்கு திருட்டுத்தனமாக சென்றால் என் அப்பா ஜனாதிபதி ஆகும் வாய்ப்பை கடினமாக்கும். அது பூமியின் எதிர்காலத்திற்கும் நல்லதில்லை."
"நாளை வரை உனக்கு டைம் கொடுக்கிறேன். நன்றாக யோசித்து சொல்."
பிரேம் சென்றதும் ஆஷா மெல்ல தன் வீட்டை நோக்கி நடந்தாள்.
வீட்டின் கதவு திறந்தே இருந்தது. வீட்டிற்குள் காலை வைத்ததுமே ஆஷாவுக்கு எதுவோ சரியாகப் படவில்லை. தன் தந்தையின் அறைக்குச் சென்றதும் உறைந்துப் போனான். விஷால் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். பிறகு பதட்டத்துடன் படுக்கை அறைக்குச் சென்று பார்த்தபோது அவன் அம்மாவும் இறந்துக் கிடந்தார்.
ஆஷாவுக்கு இடி விழுந்தது போலிருந்தது. வெகு நேரம் கண்களை மூடிக் கொண்டு அழுதாள்.
சற்று சுதாரித்தப் பிறகு தன் போனை எடுத்தாள்.
"பிரேம் எனக்கு உன் உதவி வேண்டும்."
                                                                           ------------******-----------                                                                   -
ஆஷா பூமிக்கு வந்து ஒரு வாரம் கழிந்திருந்தது. அவள் நினைத்ததைக் காட்டிலும் பூமியில் வறுமையும் பசியும் தாண்டவமாடியது. எங்கு பார்த்தாலும் குடிசைகள் நிறைந்த சேரிப் பகுதிகளும், விலா எலும்புகள் தெரிந்த குழந்தைகளும், உணவுக்காக சண்டைப் போடும் இளைஞர்களும் காணப்பட்டனர். ஒரு நாளைக்கு இரு வேலை ரேஷனில் உணவு அளிக்கப்படும்.ஒரு வேலை உணவாக இரண்டு சப்பாத்திகளும், தாலும் சிறிது அரிசியும் ரேஷனில் கிடைக்கும். அதற்காக நடக்கும் அடிபிடி சண்டையைப் பார்த்து ஆஷாவுக்கு துக்கம் நெஞ்சை அடைத்தது.
பூமியில் ஆண், பெண்  அனைவரும் சுரங்கத்தில் வேலை செய்பவர்களாக இருந்தனர். கடுமையான சூழ்நிலையில் வேலை செய்வதால்  காச நோய் மற்றும் பல விதமான நோய்க்கு ஆளாகியிருந்தனர். அவர்களை நிர்வாகம் செய்வதற்கு நிலவிலிருந்து சிலர் பூமியில் வசித்து வந்தனர். அவர்கள் சேரிப்பகுதிகளில் இருந்து ஒதுங்கி வசதியான மாளிகைகளில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர்.
ஆஷாவிடம் பணம் நிறைய இருந்ததால் தங்குவதற்கு ஒரு நல்ல வீடு கிடைத்தது. அவள் காலைப் பொழுதில் சேரிப்பகுதிக்கு சென்று  தன் தாத்தாவின் புகைப்படத்தைக் காண்பித்து அவரைப் பற்றி விசாரிப்பான். எந்தத் தகவலும் கிடைக்காததால் பெரிதும் ஏமாற்றமே மிஞ்சியது.
ஒரு நாள் வெகு நேரம் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்தபோது அவள் பெட்டி உடைக்கப்பட்டது தெரிந்தது. அவளிடமிருந்த பணம், உடைகள், உணவு எதுவும் திருடுப் போகவில்லை. மாறாக அவள் புத்தகங்கள் அனைத்தும் களவாடப்பட்டிருந்தது.
வேலைக்காரன் பஷீரிடம் விசாரித்தாள்.
"இங்கு யாரும் புத்தகங்கள் படிப்பதே இல்லை. ஒரு வேலை உணவுக்கே தாளம் போடும் போது புத்தகம் எங்கு படிப்பது. ஆனால் சேரியில் மூன்று இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் புத்தகம் படிக்கிறார்கள். நிலவிலிருந்து வந்தவர்களுக்காக ஒரு நூலகம் உண்டு. அங்கிருந்து பல புத்தகங்கள் திருடியதற்காக அவர்கள் சிறை சென்றிருக்கிறார்கள். நாளை நீங்கள் சென்று விசாரிக்கலாம்."
ஆஷா   அடுத்த நாள் சேரிப்பகுதி சென்றாள். தான் தேடிய குடிசை வந்ததும் மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தாள்.
சுற்றி நடப்பது என்னவென்பதே தெரியாமல் மூன்று இளைஞர்கள் புத்தகம் படித்துக் கொண்டிருந்தனர்.
ஆஷா நுழைவதைப் பார்த்து மூவரும் எழுந்தனர்.
"யார் நீ. இங்கு எதற்கு வந்தாய்"
"புகழ் பெற்ற புத்தகத் திருடர்கள் நீங்கள் தானா"
"நாங்கள் எதைத் திருடினால் உனக்கென்ன?"
"நீங்கள் படித்துக் கொண்டிருப்பது என் புத்தகங்கள்."
மூவரும் லேசாகத் திடுக்கிட்டனர்.
ஒருவன் மட்டும் சுதாரித்து, "புத்தகம் வேண்டுமானால் உன்னுடையதாக இருக்கலாம். ஆனால் அதில் உள்ள கருத்துக்கள் இந்த உலகம் அனைத்திற்கும் சொந்தம். அதனால் எங்களைத் திருடர்கள் என்று சொல்லாதே."
"அந்த புத்தகத்தை எழுதியவர் என் தாத்தா என்பதால்  அதிலுள்ள கருத்துக்கள் எனக்கும் ஒரு விதத்தில் சொந்தம் தான்."
அதைக் கேட்டு மூவரும் அதிர்ந்தனர். "என்ன! சரித்திர எழுத்தாளர் ராஜ்குமார்  உன் தாத்தாவா"
"ஆம்"
"உன் தந்தை குடும்பத்துடன் நிலவுக்கு சென்றுவிட்டார் என்றல்லவா கேள்விப்பட்டோம்"
ஆஷா தன் கதையையும், தாத்தாவைத் தேடி தான் பூமிக்கு வந்ததையும் கூறினாள்
"உன் தாத்தா எங்கிருக்கிறார் என்று தெரியுமா?"
"ஒரு வாரமாகத் தேடியும் பலரிடம் விசாரித்தும் பலனில்லை"
"அவர் நிலவின் அடக்குமுறையை எதிர்த்து புரட்சி செய்ய முற்பட்டார் என்று கூறி அந்தமான் சிறையில் அடைத்துள்ளனர்."
"உனக்கு மட்டும் எப்படி இது தெரியும்"
"ராஜ்குமார். பற்றிய எல்லா விபரமும் எங்களுக்கு அத்துப்படி. உன் தாத்தாவைத் தேடும் முயற்சியில் எங்களையும் சேர்த்துக் கொள்."
"சந்திரன்"
"மோகன்"
"நீரோ"
மூவரும் ஆஷாவை நோக்கிக் கை நீட்டினர்.
நால்வரின் கரங்களும் இணைந்தன.

    

                                                                 ---(2)---


ஒரு சிறிய படகு கடலில் சென்று கொண்டிருந்தது. புத்தகத் திருடர்களும் ஆஷாவும் அந்தப் படகில் இருந்தனர். படகை வல்லப் என்ற இளைஞன் செலுத்திக் கொண்டிருந்தான்.
ஆஷா -  "இந்தப் படகில் செல்வது கொடுமையாக இருக்கிறது. அந்தமான் செல்வதற்கு கப்பல்கள் எதுவும் இல்லையா".
சந்திரன் -  "பூமி கற்காலத்திற்கு திரும்பி விட்டது என்பதை இன்னுமா நீ உணரவில்லை. கப்பலை இங்கு இருப்பவர்கள் யாருமே பார்த்ததில்லை. நிலவிலிருந்து வந்தவர்கள் உபயோகத்திற்கு மட்டும் விமான வசதி உண்டு."
ஆஷா, -  "இந்தப் படகில் அந்தமான் செல்ல எவ்வளவு நாள் ஆகும்."
வல்லப் - "மூ மூ மூன்று நா நா"
ஆஷா - "மூன்று நாட்களா?"
ஆம் என்று வல்லப் சைகை செய்தான்.
நீரோ - "டேய் திக்குவாயா. வாயை மூடிக் கொண்டு படகை மட்டும் ஒட்டு".
ஆஷா - "ஏன் அவனை இப்படி மட்டம் தட்டுகிறாய்? அவன் உதவி  இல்லாவிட்டால் நாம் அந்தமான் செல்ல முடியுமா"
நீரோ - "அது சரி தான். ஆனால் இவன் பேச ஆரம்பித்தால் விடிந்தே விடும்."
மோகன் - "யாருடைய பலவீனத்தைய்ம் குறை சொல்லாதே. இது உன்னிடம் இருக்கும் கெட்டப்பழக்கம் நீரோ."
மோகன் வார்த்தைகளைக் கேட்டதும் நீரோ அடங்கினான்.
மூவரும் அமைதியாக ஆளுக்கு ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர். மோகன் - 'My experiments with Truth,  நீரோ  - ‘Discovery of India’ , சந்திரன் - ‘Bose – The springing Tiger’   படித்துக் கொண்டிருந்தனர்.
ஆஷா வல்லபிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து, "இதைப் படிக்கிறாயா” என்று கேட்டாஉன் தாத்தாவா.
வல்லப்  - "புத்தகம் மட்டும் படித்து நடைமுறை வாழ்க்கையை நடத்த முடியுமா. அது வெறும் முட்டாள்கள் செய்யும் வேலை."
ஆஷா - "இப்போது திக்காமல் பேசுகிறாயே?"
வல்லப் - "அது எப்போதாவது வரும்."
நீரோ - "புத்தகம் முட்டாள்கள் தான் படிப்பார்கள் என்று எந்த முட்டாள் சொன்னது. அப்படி என்றால் ஐன்ஸ்டீன் முட்டாளா? ஸ்டீவ் ஹாக்கிங் முட்டாளா? ந்யூட்டன் முட்டாளா?"
வல்லப் - "நீ சொன்ன ஐன்ஸ்டீன், ஸ்டீவ், ந்யூட்டன் இவர்கள் எல்லோரையும் இந்தப் படகைச் செலுத்த சொல்லேன். ஏன் முதலில் நீ முயற்சித்து பாரேன்."
நீரோ - "இதற்கு நீ முழு ஊமையாகவே இருந்திருக்கலாம்."
மோகன் - "நீரோ! ஏன் வல்லபை வம்பிழுத்துக் கொண்டே இருக்கிறாய்."
நீரோ  புத்தகம் படிப்பதைத் தொடர்ந்தான்.
அனைவரும் அமைதியாக இருக்க ஆஷாவிற்கு நான்கு ஆண்கள் அம்த்தியில் தான் தனித்து ஒரு பெண் என்பது உறுத்தியது. அவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைத்திருக்கக் கூடும் என்பதை தெரிந்து கொள்ளவும் ஆவல் தோன்றியது.
மோகனும் சந்திரனும் ஆஷா இருப்பதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் புத்தகத்தில் மூழ்கி இருந்தனர்.
நீரோ தன்னை அவ்வப்போது பார்ப்பதும் சிரிப்பதுமாக இருந்தான். இவன் முகத்தில், சிரிப்பில் ஒரு கவர்ச்சி. எந்தப் பெண்ணையும் அடிமைப்படுத்த்தி விடக்கூடிய கவர்ச்சி. கூடாது. தான் இதில் விழுந்து விடக்கூடாது. கவனம் தேவை.
"களைப்பாக இருந்தால் சற்று உறங்கலாமே?"
வல்லப் அவளைப் பார்த்து கேட்டதில் ஒரு அக்கறை இருந்தது.சகோதரத்தன்மை தெரிந்தது.
மூன்று நாட்கள் கழித்து படகு அந்தமான் கரையை அடைந்தது.
ஆஷா - "சிறை இருக்கும் இடத்தை எப்படி கண்டு பிடிப்பது?"
சந்திரன் - "யாரிடமாவது விசாரிக்கலாம்"
வல்லப்  ஒரு மேப்பை எடுத்து சிறை இருக்கும் இடத்திற்கு செல்லும் வழியை குறித்துக் கொண்டான்.
மோகன் - "பரவாயில்லை நல்ல முன் யோசனையாகத் தான் எடுத்து வந்திருக்கிறாய்"
வல்லப் - "என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள்."
நால்வரும் அவன் பின்னே சென்றனர்.
சிறிது நேரத்தில் சிறைச்சாலை தெரிந்தது.
சந்திரன் - "இப்போது ராஜ்குமாரை எப்படி விடுவிப்பது"
ஆஷா - "பலத்த காவல் இருக்கும் அல்லவா"
சந்திரன் - "நம்மிடம் பெரிதாக ஆயுதம் எதுவும் இல்லை. என்னிடம் ஒரு ரிவால்வர் இருக்கிறது அவ்வளவு தான். இதை வைத்து நாம் என்ன செய்ய முடியும்."
நீரோ - "ஆஷா உன்னிடம் பணம் இருக்கிறது அல்லவா. லஞ்சம் கொடுத்து முயற்சி செய்யலாமா?"
மோகன் - "அது தவறான அணுகுமுறை நீரோ"
வல்லப் - "இது எதுவும் இங்கு உதவாது. இந்த சிறையை  காவல் காக்க ஒரு ஆள் கூட கிடையாது. சிறைச்சாலை முழுதும் கதிர்களால் காவல் காக்கப்படுகிறது. யாரும் உள்ளேயோ வெளியிலோ செல்ல முடியாது."
நீரோ - "இது எல்லாம் உனக்கு எப்படித் தெரியும்"
வல்லப் - "அவசியம் தெரிய வேண்டிய விஷயங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும். இப்போது உன் புத்தகங்களா  நமக்கு உதவி செய்கிறது."
ஆஷா - "அப்படி ஆனால் தாத்தாவைக் காப்பாற்ற ஒன்றும் செய்ய முடியாதா?"
வல்லப் - "இந்த சிறையின் கதிர்களை எல்லாம் ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டம் மூலம் இயக்கப்படுகிறது. ஒரு கம்ப்யூட்டர் மட்டும் என்னிடம் இருந்தால் போதும். சிஸ்டத்தை ஊடுருவி அதனை செயலிழக்கச் செய்ய முடியும்".
ஆஷா தான் நிலவில் பயன்படுத்திய லாப்டாப்பைக் காண்பித்தாள் வல்லப் அதனை ஆர்வத்துடன் வாங்கிப் பார்த்தான்.
வல்லப் - "இதைக் கொண்டு ஒரு நிமிடத்தில் சிறைச்சாலையின் சிஸ்டத்தை ஊடுருவ முடியம்."
நீரோ பொறாமையுடன்  வல்லபை பார்த்தான்.
சந்திரன் - "உனக்கு எப்படி கம்ப்யூட்டரை இயக்கத் தெரியும். நம் பூமிவாசிகள் யாரும் கம்ப்யூட்டரைப் பார்த்தது கூடக் கிடையாதே."
வல்லப் - "நீங்கள் புத்தகத் திருடர்கள் என்றால் நான் கம்ப்யூட்டர் திருடன். பூமியில் தங்கியிருக்கும் நிலவுவாசிகளின் கம்ப்யூட்டர்களைத் திருடி இருக்கிறேன். ஆனால் உங்களைப் போல நான் மாட்டவில்லை. செய்யும் தப்பைத்  தெளிவாகச் செய்வேன் நான்."
ஆஷா - "பேச நேரமில்லை. வல்லப் சீக்கிரம் உன் வேலையைத் தொடங்கு."
வல்லப் கம்ப்யூட்டரை இயக்கி பிறகு வெற்றி என்று தன் விரல்களால் சைகை செய்தான்.
ஐவரும் சிறை நோக்கி  வேகமாக நடந்தனர்.
சிறையின் உள்ளே சென்றதும் அங்குள்ள கைதிகள் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கைதிகள் சிலர் பசி  மயக்கத்திலிருந்தனர். இன்னும் சிலர் சித்தம் குலைந்த நிலையிலிருந்தனர்.
வல்லப் - "இங்குள்ள கைதிகளுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு வேலை உணவு தான். கைதிகளை சில சமயம் இருட்டறையில்  அடைத்து வைத்தும் விடுகிறார்கள்."
சந்திரன் - "உன் தாத்தாவை நாம் எப்படிக் கண்டுபிடிப்பது. அவரை இதற்கு முன் பார்த்திருக்கிறாயா?"
ஆஷா - "இல்லை. அவர் புகைப்படம் என்னிடம் இருக்கிறது. ஆனால் அது 30 வருடம் முன் எடுத்தது"
ஒவ்வொரு அறையாகத் தேடியவர்கள் வயதான ஒரு மனிதர் மயக்க நிலையிலிருப்பதைப் பார்த்தனர்.
அவரைப் பார்த்ததுமே ஆஷா  "இது தான் என் தாத்தா!" என்று உற்சாகத்துடன் கத்தினாள்
சந்திரன் - "நன்றாகப் பார்த்து சொல்லு. அவரை ஒரு முறை கூட நீ பார்த்ததில்லை."
ஆஷா - "சந்தேகமே இல்லை. என் உள்ளுணர்வு சொல்கிறது. இது தான் என் தாத்தா"
சந்திரன் - "இதைத் தான் இரத்த பந்தம் என்று சொல்வார்களா".
வல்லப்  - "சிறையின் செக்யூரிட்டி சிஸ்டம் ஊடுருவப்பட்டிருப்பது இந்நேரம் அதிகாரிகளுக்கு தெரிந்திருக்கும். நாம் உடனே இங்கிருந்து கிளம்ப வேண்டும். சீக்கிரம் இவரைத் தூக்கி  வெளியேறுங்கள்."
ராஜைத் தூக்கிக் கொண்டு ஐவரும் கரையிலிருக்கும் படகு நோக்கி வேகமாக ஓடினர். சிறிது நேரத்தில் கரையை வந்தடைந்தனர்.
நீரோ - "முதலில் இவர் மயக்கம் தெளிய வேண்டும். நம்மிடம் இருக்கும் தண்ணீர் இவருக்குக் கொடு"
வல்லப் - "ஜீஸ் ஏதாவது இருந்தாலும் கொடுக்கலாம்"
சில நிமிடங்களில் ராஜின் உதடுகள் அசைந்தது. இமைகள் லேசாகத் திறந்து மூடிக் கொண்டன.
நீரோ - "பெரியவருக்குத் தொடர்ந்து நீர் மற்றும் ஆகாரம் அளித்தால் நினைவு வந்து விடும். நாம் சீக்கிரம் தீவை விட்டுக் கிளம்ப வேண்டும்."
வல்லப் - "நாம் எங்கு செல்வது."
சந்திரன் - "நாம் மீண்டும் நம் பழைய இருப்பிடத்திற்கு சென்றால் ஆபத்து. பெரியவரை அங்கு மறைத்து வைக்கவும் முடியாது."
வல்லப் - "அந்தமான் தீவிலேயே சில நாட்கள் மறைந்திருக்கலாமா"
ஆஷா - "வேண்டாம். இன்னும் சில மணி நேரங்களில் இந்த இடம் முழுதும் ரோபோ காவல் வீரர்கள் நம்மை வேட்டையாட ஆரம்பித்து விடுவார்கள்."
நீரோ - "இலங்கைத் தீவுக்கு நாம் போகலாம். அங்கு நிலவுவாசிகளின் கெடுபிடி அவ்வளவாகக் கிடையாது. அங்கிருந்து நம் அடுத்த திட்டங்களைப் பற்றி யோசிக்கலாம்"
ஆஷா - "அதுவும் நல்ல யோசனையாகத் தான் படுகிறது."
சந்திரன் - "உன் தாத்தா கிடைத்தாகி விட்டது. அவரை உன்னுடன் நிலவுக்கு அழைத்துச் செல்லப் போகிறாயா?"
ஆஷா - "இன்னும் முடிவு செய்யவில்லை. தாத்தா இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார் என்று நினைக்கிறேன்"
நீரோ - "பேசி கொண்டிருப்பதில் பலனில்லை. அடுத்து செய்ய வேண்டியது பற்றி நாம் பிறகு சிந்திக்கலாம். எல்லோரும் படகு மீது ஏறுங்கள்வல்லப் சீக்கிரம் படகை செலுத்து."
அனைவரும் படகு  மீது ஏறினர். வானம் இருட்டிக் கொண்டது. நிலவு மெதுவாக வானத்தில் தோன்றியது. அலைகளில்   மெதுவாக ஆடியவண்ணம்  அந்தப் படகு வெகு தூரம் கடலில் சென்று  மறைந்தது.

                                                             ---(3)---


ஆஷா தனது நண்பர்களுடன் இலங்கை வந்து ஒரு வாரம் கழிந்திருந்தது. அவள் தாத்தாவின் உடல்நலம் வெகுவாக முன்னேறியிருந்தது.
அன்று அவருக்கு உணவு எடுத்துச் செல்ல அவர் அறை சென்ற போது ஒரு சிறு வியப்பு காத்திருந்தது. எப்போதும் படுக்கையிலிருக்கும் அவன் தாத்தா அன்று காணவில்லை. அறையினருகே இருந்த வெராந்தாவில் நின்று கொண்டு கடலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
தன்னருகே வந்து நின்ற ஆஷாவைப் பார்த்து கேட்டார்.
"நீ தான் என்னை இங்கு கொண்டு வந்தவளா? இது என்ன இடம்? நீ யார்?"
"ஆம் நானும் என் நண்பர்களும் உங்களை அந்தமான் சிறையிலிருந்து விடுவித்தோம். என்னை உங்கள் பேத்தி என்று நினைத்துக் கொள்ளுங்கள்."
"ஆம்! எனக்கு ஒரு பேத்தி இருந்தால் உன் வயது தான் இருக்கும். என்னை விடுவித்த காரணம்?"
"தாத்தாவைப் பேத்தி காப்பாற்றுவதை விட வேறு என்ன முக்கிய காரணம் வேண்டும்."
"என்ன சொல்கிறாய்"
ஆஷா தன்னிடமிருந்த போட்டோவைக் காண்பித்தாள்.
"இதில் இருப்பவர்கள் யார் தெரிகிறதா?"
"30 வருடங்கள் முன்னர் என் மகனுடன் எடுத்த போட்டோ இது."
"இப்போது இந்தப் போட்டோவைப் பாருங்கள்"
"இதில் இருப்பது என் மகன். அவன் கையிலிருக்கும் குழந்தை?"
ஆஷா தன் விரல்களால் தன்னைச் சுட்டிக்காட்டினாள்.
"இருக்காது. இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. என் மகன், அவன் போய் விட்டான். என்னை விட்டுப் போய் விட்டான். அவன் பெயரைச் சொல்லி யாரும் என்னைத் தேடி வர வேண்டாம். என்னை நிம்மதியாக இருக்க விடு. என்னை விட்டுப் போய் விடு."
"ஒரு நிமிடம் நான் சொல்வதைக் கேளுங்கள்"
"வேண்டாம். நீ என்னுடைய உண்மையான பேத்தி ஆகவே இருக்கலாம். ஆனால் உன் முகத்தைப் பார்க்கக் கூட நான் விரும்பவில்லை. உன் அப்பா எனக்கும் அவன் பிறந்த மண்ணுக்கும் துரோகம் செய்து விட்டான். அவன் வாரிசாகிய நீயும் அவனைப் போலத் தான். இங்கிருந்து நீ தொலைந்து விடு. உன்னுடைய நிலவுக்கே போ. நன்றாக வசதியாக வாழ்ந்துக்கொள்."
"அப்பா செய்தது எந்த விதத்திலும் தவறாகாது. நீங்கள் உங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்தீர்கள். உங்களுடைய இறந்த கால நினைவுகளை மட்டுமே சிந்தித்தீர்கள். அப்பா எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தார். தன் எதிர்கால சந்ததியினர் மற்றும் இந்த மனித குல எதிர்காலம் பற்றி சிந்தித்தார். அதனால் தான் அவர் அந்த முடிவெடுத்தார்."
"இதைத்தான் உன் அப்பாவும் என்னிடம் சொன்னான். இதெயெல்லாம் சொல்லி என்னை சமாதானப்படுத்த முடியாது."
"நீங்கள் பூமியிலேயே தங்கியிருந்து இங்கு என்ன பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தீர்கள். ஒன்றுமில்லை. ஆனால் அப்பா இங்கிருந்து எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்தார். அதனால் நிலவு சென்றார். பூமியை மீண்டும் சொர்க்கபுரியாக மாற்ற அவரிடம் திட்டமிருந்தது. அவரால் கண்டிப்பாக அது முடிந்திருக்கும். விதி மட்டும் விளையாடாமல் இருந்தால்."
ராஜ்குமார் கேள்வியுடன் ஆஷாவை நோக்கினார்.
"அப்பா பூமியின் புனர் நிர்மானத்திற்காகப் போராடினார். அதனால் எதிரிகள் கையால் அப்பாவும் அம்மாவும் கொல்லப்பட்டனர்."
ராஜ்குமார் இடி விழுந்தது போல அப்படியே நிலை குலைந்தார்.
"எனக்கு முன் நீ இறப்பதற்கா உன்னைப் பெற்றேன்"
கைகளால் முகத்தை மூடிக் கொண்டு அழுதார்.
ஆஷாவைத் தன்னருகே வரும்படி அழைத்தார்.
அவனைக் கட்டிப் பிடித்து வெகு நேரம் அமைதியாக இருந்தார்.
அப்போது அவர்களைத் தேடி புத்தகத் திருடர்களும் வல்லபும் அங்கே வந்தனர்.
அவர்களிருக்கும் நிலையைக் கண்டு திரும்பிச் செல்ல எத்தனித்தனர். ஆஷா அவர்களை இருக்கச் சொல்லி நிறுத்தினாபேத்தி.
"இவர்கள் நான்கு பேர் உதவியில்லை என்றால் நான் உங்களை விடுவித்திருக்க முடியாது."
அவர்களைத் தன் தாத்தாவிற்கு அறிமுகப்படுத்தினான்.
சந்திரன் - "உங்களைப் பற்றி எந்த அறிமுகமும் எங்களுக்குத் தேவையில்லை. நீங்கள் இந்திய விடுதலைப் போர் பற்றி எழுதிய புத்தகங்கள் ஒன்று விடாமல் நாங்கள் படித்திருக்கிறோம்."
ராஜ் - "ஆச்சரியம்! இந்த காலத்திலும் புத்தகம் படிக்கிறீர்களா?"
வல்லப் - "இவர்களில் என்னை சேர்த்துக் கொள்ளாதீர்கள். எனக்குப் புத்தகம் தொட்டாலே தூக்கம் வந்து விடும்"
ஆஷா - "வல்லப், உன்னைப் பற்றி நீயே குறைவாக சொல்லாதே. இவனுக்கு கம்ப்யூட்டர் பற்றி முழுதும் அத்துப்படி. இவன் செய்த சாகசத்தினால் தான் உங்களை அந்தமான் சிறையிலிருந்து விடுவிக்க முடிந்தது."
ராஜ் - "உங்களைப் பார்த்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது. தற்போது பூமியிலிருக்கும் மனிதர்களின் நிலையென்ன. அவர்கள் வெறும் செக்கு மாடுகள். உண்ண உணவு கொடுத்தால் போதும், அடிமைகள் போல உழைக்கிறார்கள். அவர்கள் உள்ளே இருக்கும் அந்த நெருப்பு, ஜீவசக்தி முழுதும் அணைந்து விட்டது. அதனால் தான் நிலவின் ஆதிக்கம் அசைக்க முடியாததாக இருக்கிறது. அவர்களிலிருந்து நீங்கள் வேறுபட்டு இருக்கிறீர்கள். உங்களுக்குள் வயிற்றுப் பசியையும் தாண்டி ஒரு பசி இருக்கிறது. ஒருவனுக்கு தொழில்நுட்ப அறிவு பற்றிய பசி, மற்ற மூவருக்கும் புத்தகம் மூலம் கிடைக்கும் உலக அறிவு பற்றி பசிஉங்களைப் பார்த்ததும் பூமியின் எதிர்காலம் பற்றி எனக்கு ஒரு புது நம்பிக்கை வந்திருக்கிறது."
நீரோ - " எங்களை நீங்கள் மிக அதிகமாகப் புகழ்கிறீர்கள்."
ராஜ் - "உங்களைப் புகழ்வது மட்டும் எனது நோக்கமல்ல. உங்களை வைத்து சில திட்டங்கள் நான் தீட்டியிருக்கிறேன்."
நீரோ - "என்ன திட்டம் அது?"
ராஜ் - "பூமி ஏன் நிலவின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடக் கூடாது?"
நீரோ - "நம்மிடம் என்ன இருக்கிறது. ஆள் பலம், ஆயுத பலம், அறிவு பலம் இவை எல்லாவற்றிலும் நிலவுக்கு எதிராக நாம் வெறும் ஒரு சிற்றெரும்பு போலத்தான்."
ராஜ் - "சிற்றெரும்பு யானையின் காதுக்குள் புகுந்த கதை உனக்குத் தெரியுமல்லவா. யாரையுமே குறைத்து எடை போட வேண்டாம்."
நீரோ - "சரி திட்டம் பற்றி விரிவாகச் சொல்லுங்கள்."
ராஜ் - "நீங்கள் நால்வரும் நிலவின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராட ஒரு இயக்கம் தொடங்க வேண்டும்."
நீரோ - "நாங்கள் நால்வர் மட்டும் என்ன சாதிக்க முடியம்?"
ராஜ் - "உங்கள் நால்வரில் தொடங்கும் இந்த இயக்கம் பூமியில் உள்ள அனைவரையும் இணைக்க வேண்டும். ஒவ்வொருவர் மனத்திலும் விடுதலை உணர்வை நீங்கள் தூண்ட வேண்டும் புரிகிறதா?"
நீரோ - "எங்களால் முடியும் விஷயமா இது?"
மோகன் - "முடியும். நம்மால் கண்டிப்பாக முடியும். நம்பு. நம்பினால் வழி தானாகப் பிறக்கும்."
ராஜ் - "உங்கள் இயக்கத்திற்கு தலைவன் ஒருவன் வேண்டும். யார் தலைவனாக விரும்புகிறீர்கள்"
மோகன் - "ஆஷாவே தலைவி ஆகலாமே?"
ராஜ் - "ஆஷா தலைவி ஆக முடியாது. என்ன இருந்தாலும் ஆஷா நிலவுவாசி. அவள் இயக்கத்தின் பிரதிநிதியாக இருந்தால் மக்கள் அவநம்பிக்கையுடன் பார்ப்பார்கள். சொல்லப் போனால் விடுதலைப் போராட்டத்தில் ஆஷாவின் பங்கு வெறும் ஆலோசனை வழங்குவது மட்டுமே. பூமியின் மைந்தர்களாகிய நீங்கள் தான் இந்த இயக்கத்தை முன்னின்று நடத்த வேண்டும்."
நால்வர் மத்தியிலும் பெரும் அமைதி இருந்தது.
மோகன் - "நீங்கள் கொடுத்த இந்தப் பொறுப்பு எங்களுக்கு பெரும் மலைப்பைத் தருகிறது. யார் தலைவன் என்பதை நீங்களே தேர்ந்தெடுத்து சொல்லுங்கள்"
ராஜ் சற்று யோசித்து - "நல்லது. தலைவனைத் தேர்ந்தேடுப்பதற்கு முன் உங்களைப் பற்றி நான் நன்குப் புரிந்துக் கொள்ள வேண்டும். உங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச விரும்புகிறேன்." 
சந்திரன் - "எங்களுக்கு இதில் சம்மதம்."
ராஜ் - "மோகன், முதலில் நீ என்னுடன் அறைக்கு வா.  ஆஷா நீயும் என்னுடன் வா."
அறைக்குச் சென்று மூவரும் அமர்ந்தனர்.
ராஜ் - "நீ சரித்திரம் படித்தவன். வரலாற்றில் பல நாடுகள் ஒவ்வொரு வழியில் சுதந்திரம் பெற்றிருக்கிறது. இதில் நீ எந்த வழியைப் பின்பற்றுவாய்".
மோகன் - "அறப் போராட்டம். அதுவே சிறந்த வழி"
ராஜ் - "வன்முறைக்கு இடமே இல்லையா?"
மோகன் - "வன்முறைக்கு சிறிதும் இடமில்லை"
ராஜ் - "எதிரி வன்முறையைப் பின்பற்றி உன் மக்களை நசுக்கினால்?"
மோகன் - "அனைவரும் ஒட்டு மொத்தமாக உயிரை விடுவோமே ஒழிய, எங்கள் பக்கத்திலிருந்து வன்முறைப் பிரயோகம் சிறிதுமிருக்காது".
ராஜ் - "உன் அறப் போராட்டத்தைப் பற்றி கொஞ்சம் விளக்கு."
மோகன் - "முதலில் எதிரியுடன் பேச்சு வார்த்தை. அது வெற்றி பெறாவிட்டால் ஒத்துழையாமை".
ராஜ் - "நல்லது, நீ வெளியே சென்று நீரோவை அனுப்பு."
நீரோ உள்ளே நுழைந்ததும் அவனிடம் அதே கேள்வியைக் கேட்டார்.
நீரோ - "என் வழி எதிரியுடன் பேச்சுவார்த்தை. வன்முறைக்கு சிறிதும் இடமில்லை."
ராஜ் - "வெறும் பேச்சுவார்த்தை மூலம் மட்டும் உன் எதிரியை சம்மதிக்க வைக்க முடியுமா?"
நீரோ - "முடியும். மனிதர்கள்  அனைவரும் அடிப்படையில் நல்லவர்கள்.சரியான சமயத்தில், சரியான வார்த்தைகள் சரியான விதத்தில் சொல்லப்பட்டால் நிச்சயம் பலனுண்டு. அந்தத் திறமை எனக்கு இருக்கிறது என்றும் நம்பிக்கை உள்ளது."ராஜ் - "நீ போகலாம். அடுத்து சந்திரனை அனுப்பு."
சந்திரன் தன் வழிமுறைகளைப் பற்றி ராஜிடம் விளக்கினான்.
சந்திரன் - "புரட்சி. ஆயுதப் புரட்சி ஒன்றே வழி, எதிரியின் வலிமையை வலிமையால் தான் அடிக்க வேண்டும்."
ராஜ் - "சுதந்திரம் அடைந்தப் பிறகு எப்படிப் பட்ட அரசாங்கம் பூமிக்கு நல்லது."
சந்திரன் - "ஜனநாயகம் மீதெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நல்ல இதயம் கொண்ட அதே நேரம் இரும்புக் கரம் கொண்ட ஒரு தலைவன் தான் பூமிக்குத் தேவை."
ராஜ் - "சரி. நீ அடுத்து வல்லபை அனுப்பு".
வல்லப் - "போராட்டத்திற்கு இந்த வழி என்று என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள மாட்டேன். முதலில் பேச்சுவார்த்தை. பிறகு மிரட்டல். பிறகு அறப்போராட்டம். இது எதுவும் ஒத்து வரவில்லையென்றால் ஆயுதப்போராட்டம். அதுவும் உயிர்ச்சேதம் அதிகம் இல்லாமல் அதே சமயம் அதிகத் தாக்கமுள்ள போர் முறையைத் தேர், தேர் , தேர்ந்".
வல்லபுக்கு வாய் திக்கியது.
ராஜ் - "உனக்குத் திக்கும் என்பது தெரியாது".
வல்லப் - "உணர்ச்சி வசப்படும் போது இப்படி ஆகி விடுகிறது".
ராஜ் - "சரி நீ போகலாம்".
வல்லப் வெளியேறியதும் ஆஷா - "சொல்லுங்கள். யார் தலைவன்?"
ராஜ் - "நீரோ, கனவுலகில் மிதப்பவன். வெறும் பேசி எதிரியை சம்மதிக்க முடியும் என்று நம்புகிறான். அது நடைமுறைக்கு ஒத்து வராது.சந்திரன், போராட்ட குணமுள்ளவன். ஆனால் வன்முறையைப் பின்பற்றுபவன். அது அவன் தலைவனாவதற்கு பெருந்தடையாக உள்ளது.   மோகன், நல்ல தலைவனாகலாம். அவன் அறப்போராட்ட வழி சரித்திரத்தில் வெற்றியும் கண்டிருக்கிறது, தோல்வியும் கண்டிருக்கிறது. வல்லப் வழிமுறை தான் சிறந்தது. அவன் நல்ல சமயோசித புத்தியுள்ளவனாக இருக்கலாம். அவனே தலைவன் என்று கூறியிருப்பேன். அவனிடம் இருக்கும் ஒரே குறை அவன் திக்குவாய். ஒரு தலைவனுக்கு பேச்சுத்திறன் என்பது எவ்வளவு முக்கியம்.இந்த ஒரு காரணம் அவனைத் தகுதியில்லாதவனாய் ஆக்குகிறது".
ஆஷா - "குழப்புகிறீர்கள் தாத்தா. கடைசியில் யார் தலைவன்."
ராஜ் - "மோகன் தான் தலைவன். வா வெளியே சென்று அவர்களிடம் இதைத் தெரிவிக்கலாம்."
வெளியே வந்த அவர்களை நால்வரும் ஆவலுடன் நோக்கினர்.
ராஜ் - "உங்கள் தலைவன் மோகன். மோகன் தலைவன் என்றாலும் எந்த விஷயத்தையும் நால்வரும் சேர்ந்து விவாதித்து ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும். வல்லபை உதவித்தலைவனாக நியமிக்கிறேன்.நீரோ கொள்கைபரப்புச் செயலாளன். சந்திரன், நீ அனைவருக்கும் எந்த உதவி தேவைபடுகிறதோ அதை செய்யலாம்."
மோகனுக்கு வல்லபும் நீரோவும் கை குலுக்கினர்.
சந்திரன் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தது.

அடுத்த நாள் காலை சந்திரன் காணவில்லை.