Tuesday, May 12, 2015

தலைவன் - பகுதி 2 - அறிவியல் சிறுகதை

நிலவு

நள்ளிரவில் நிலவின் வீதிகளில் சந்திரன் தனக்குள் யோசித்துக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தான்.
"என் திட்டங்களில் சிறு மாறுதல் வேண்டியிருக்கிறது. புரட்சி நிலவிலிருந்து ஆரம்பிக்கும். உயிர் வேண்டும். விக்ரம் பாண்டே, உன் உயிர் வேண்டும். உன் மரணம் தான் என் புரட்சியின் ஆரம்பம்."
அப்போது அவனை நான்கு பேர் சூழ்ந்துக் கொண்டனர். அவர்கள் கைகளில் துப்பாக்கி இருந்தது.
சந்திரன் கைகள் தன்னிடமிருந்த ரிவால்வரை நோக்கிச் சென்றது. ஏதோ தோன்ற எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தான்.
சந்திரனின் கண்களையும் கைகளையும் கட்டி ஒரு வண்டியிலேற்றிச் சென்றனர். சிறிது நேரங்கழித்து சந்திரன் கண் கட்டு மட்டும் அவிழ்க்கப்பட்டது.
அவன் முன் மொட்டையடித்த ஒரு மனிதன் அமர்ந்திருந்தான்.
"யார் நீ. உன் பெயர் என்ன?"
"சந்திரன்"
"அப்படி என்றால்?"
"நிலவு என்று அர்த்தம்."
மொட்டை மனிதன் சத்தமாக சிரித்தான்.
"வேடிக்கையாகப் பேசுகிறாய். நீ எங்கிருந்து வருகிறாய். நள்ளிரவில் உனக்கென்ன வேலை."
"முதலில் நீங்கள் யார்?"
"மாவோ இயக்கம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?"
"தெரியும் 20ஆம் நூற்றாண்டில் பூமியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காக ஆயுதப் புரட்சி செய்தவர்கள்."
"அதே. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம்."
"ஏற்றத் தாழ்வா? நிலவிலா?"
"நீ என்ன நிலவுக்குப் புதியவனா. தெரியாதவன் போல் கேட்கிறாய். இங்கு செல்வம் அனைத்தும் விக்ரம் பாண்டேயின் கட்சியைச் சேர்ந்தவர்கள் கையில் தான். எல்லாத் தொழில் நிறுவனங்களும் கட்சித் தலைவர்கள் வசம் தான் உள்ளது.கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை, வசதியான வாழ்க்கை, அவர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி. கட்சி அல்லாதவர்கள் நிலை கொத்தடிமைகளை விடக் கேவலமானது."
"அப்படி ஆனால் உங்கள் எதிரி யார்?"
"விக்ரம் பாண்டே".
"என் எதிரியும் அவன் தான். நான் பூமியிலிருந்து வருகிறேன். எங்களை அடிமையாக வைத்திருந்த விக்ரம் பாண்டே தான் என் முதல் எதிரி. உங்கள் திட்டம் என்ன?"
"நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் கலவரம் உண்டாக்க வேண்டும்."
"ஒன்றும் பிரயோஜனமில்லை. வன்முறையைக் காரணம் காட்டி விக்ரம் தேர்தலை முழுதும் ரத்து செய்து எமெர்ஜென்சி சட்டம் கொண்டு வந்து விடுவான். இருக்கும் கொஞ்ச நஞ்ச ஜனநாயகமும் போய் விடும்."
"என்ன சொல்ல வருகிறாய்."
சந்திரன் தன் ரிவால்வரைக் கையில் எடுத்து, "விக்ரம் பாண்டே!" என்று கூறி சுடுவது போல பாவனை செய்தான்.

---(7)---


நிலவுவாசிகள் அனைவரும் டிவி முன் அமர்ந்து விக்ரம் பாண்டேவின் பேச்சைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
"நண்பர்களே. நமது நிலவு இப்போது மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளது. பூமி மக்கள் நமக்கு துரோகம் இழைத்து விட்டார்கள். நம்மிடமிருந்து பல உதவிகள் பெற்றும் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார்கள். நமக்கு நியாயமாகத் தர வேண்டிய கனிமங்களின் சப்ளையை நிறுத்தி விட்டார்கள். இதனால் நிலவில் அவசியப் பொருட்களுக்குத் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால். ஒரு மாதத்தில் மின்சார சப்ளை நிறுத்த வேண்டிய கட்டாயம் வரும். இதனால் பூமி மீது போர் இந்த கணத்திலிருந்துத் தொடங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆயினும் நாளை நடக்கும் அதிபர் தேர்தல் எந்த விதத்திலும் தடையின்றி நடைபெறும். நன்றி."
விக்ரம் மறைந்த அடுத்த நொடி ஆஷாவின் முகம் டிவியில் தெரிந்தது.
"மக்களே! என் பெயர் ஆஷா. நான் மறைந்த நமது தலைவர் விஷாலின் மகள். நம் மக்கள் அனைவருக்கும் பூமி மீது பெருங்கோபம் உள்ளது என்பதை அறிவேன். அந்தக் கோபம் நியாயமானதா. நீங்களே பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்."
டிவியில் பூமி தெரிந்தது. மக்கள் உணவுக்காக ரேஷனில் நிற்பது,சுரங்கங்களில் கடினமான சூழ்நிலையில் வேலை செய்வது, குழந்தைகள் காச நோயினால் துன்புறுவது, சேரிகளின் வறுமையான சூழ்நிலை என்ற பல காட்சிகள் டிவித் திரையில் தெரிந்தது.
ஆஷா மீண்டும் டிவித் திரையில் தோன்றினாள். "மக்களே! இதுதான் பூமியின் தற்போதைய நிலை. அங்கு துன்புறுபவர்கள் யாரும் அந்நியர்கள் கிடையாது. அவர்களில் ஒருவர் உங்கள் தந்தையாக இருக்கலாம், உங்கள் சகோதரராக இருக்கலாம், உங்கள் முதிய பாட்டியாக இருக்கலாம். நம்மில் ஓடும் இரத்தம் தான் அவர்கள் உடலிலும் ஓடுகிறது. அவர்களை நாம் கை விடலாமா. பூமியை இந்த நிலைக்குத் தள்ளிய விக்ரம் பாண்டேவுக்கு நாளை தேர்தலில் உங்கள் வாக்கா அல்லது நம் தாய் கிரகத்தை உன்னத நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கும் எனக்கு உங்கள் வாக்கா என்பதை தெளிவாக யோசித்து முடிவு செய்யுங்கள். நன்றி."
டிவித் திரையிலிருந்து ஆஷா மறைந்தும் மக்கள் அனைவரும் அதிர்ச்சியடன் அமர்ந்திருந்தனர்.
                                                                         ------*****-------
விக்ரம் பாண்டே ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் மட்டும் மக்களை சந்திக்கும் தினமாக வைத்திருந்தான்.மக்களிடம் சராசரி மனிதன் போல பழகிப் பேசுவது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்கவும் இது உதவியது.
அன்று மக்களைத் தன் மாளிகைக்கு அருகிலிருந்த ஒரு பார்க்கில் சந்தித்தான். பார்க்கிற்கு நேரெதிரே ஒரு உயர்ந்த கட்டிடத்தில் சந்திரன் தன் துப்பாக்கியை விக்ரமை நோக்கிக் குறி பார்த்துக் கொண்டிருந்தான்.
மக்கள் மத்தியில் விக்ரம் இருந்ததால் வெகு நேரம் தயங்கினான். சில நிமிடங்கள் கவர்னர் தெளிவாகத் துப்பாகிக் குறியிலிருந்த போது ட்ரிக்கரை அழுத்த நினைத்த நொடியில் ஒரு சிறிய குழந்தை கவர்னர் அருகில் வர கவர்னர் குனிந்து  குழந்தையைத்  தூக்கினான். குழந்தையின் தலை துப்பாக்கியின் குறியில் வந்தது.
சந்திரன் ஒரு பெருமூச்சு விட்டுத் துப்பாக்கியைத் தன் பெட்டியில் வைத்து அக்கட்டிடத்திலிருந்து வெளியேறினான்.

பூமி


நிலவு பூமி மீது போர் தொடுத்து ஒரு இரவு கழிந்திருந்தது.நிலவின் ட்ரோன் விமானங்கள் பூமிக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
நீரோவும் வல்லபும் செய்வதறியாது உறைந்துப் போய் அமர்ந்திருந்தனர்.
"எல்லாம் என்னுடைய முட்டாள்தனம். உன் பேச்சை நான் கேட்டிருக்க வேண்டும் வல்லப்."
"நடந்து முடிந்தது பற்றி பேசி என்ன புண்ணியம். இனி என்ன செய்வது என்று முடிவெடுக்க வேண்டும்."
"எனக்கு ஒரு யோசனையும் ஓடவில்லை. நீ சொல். என்ன செய்யலாம்."
"நான் இன்றே செவ்வாய் கிரகத்தை நோக்கிப் பயணம் செய்கிறேன். அவர்கள் உதவி நமக்குக் கண்டிப்பாகத் தேவை"
"இந்தப் போர் சூழ்நிலையில் நீ பிரயாணம் செய்தால் உன் உயிருக்கு ஆபத்து ஏற்படும்".
"என்னைப் பற்றி கவலை வேண்டாம். நம் மக்களைப் பற்றி மட்டுமே சிந்திப்போம்."
வல்லப் நீரோவின் மாளிகையை விட்டு வெளியேறி சென்றுக் கொண்டிருந்தபோது ஒரு ட்ரோன் விமானம் நீரோ மாளிகை மீது குண்டுத் தாக்குதல் நடத்தி மறைந்தது.
வல்லப் "நீரோ!"  என்று கதறிய வண்ணம் இடிந்த மாளிகைக்குள்ளே சென்றான்.
நீரோ தலையில் பலத்த அடியுடன் தரையில் படுத்திருந்தான். அவன் உயிர் இன்னும் இருப்பது தெரிந்து வல்லப் சற்று நிம்மதி அடைந்தான்.
நீரோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டான். நீரோவின் அருகிலேயே வல்லப் இருந்தான்.
அடுத்த நாள் ஒரு அதிசயம் நடந்தது. நிலவின் ட்ரோன் விமானங்கள் முழுதும் காணவில்லைபோர் முடிவுக்கு வந்திருந்தது.

நிலவு

விக்ரம் பாண்டேயின் அலுவல் கட்டிடம் அவன் தங்கும் மாளிகையிலிருந்து சொற்ப தூரம் தான். அதனால் அவன் தினமும் நடந்தே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
போகும் வழியில் செக்யூரிட்டிட்டி ஆட்கள் காவல் காத்து நின்றனர். சந்திரன் செக்யூரிட்டி வேடத்தில் கையில் துப்பாக்கியுடன் நின்றான். கவர்னர் தன்னை நெருங்கும் போது துப்பாக்கியால் சுட நினைத்திருந்தான். கவர்னர் அவனருகே நெருங்கும் போது அவன் உதவியாளரின் குழந்தை ஓடி வந்து கவர்னருக்குக் கை கொடுத்தது.
இந்த கவர்னருக்குக் குழந்தைகள் மீது எவ்வளவு பற்று இருக்கிறது என்று சந்திரன் வியந்தான்.இவனிடமும் மனித நேயம் இருக்கிறதோ? பிறகு ஏன் பூமி மக்கள் மீது மட்டும் இவ்வளவு கொடூரமான அணுகுமுறையைப் பின்பற்றுகிறான்? வெறும் அரசியல் காரணங்களுக்காக   தானா?  தன் உறுதி தளர்வதை சந்திரன் உணர்ந்தான். கூடாது இவனைக் கொல்லாமல் விடக் கூடாது. வேறு ஒரு தக்க சமயம் பார்க்க வேண்டும். சந்திரன் மெதுவாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
                                                                          -----*****----
விக்ரம் தன் அலுவல் அறைக்கு வந்ததும் தன் மூத்த அமைச்சர்களை  அவசரமாக சந்தித்தான்.
"இந்த ஆஷா எங்கிருந்து வந்தாள். நாளை தேர்தலில் என் வெற்றி உறுதி என்று நினைத்திருந்தேன். இப்போது இவள் அனைத்தையும் மாற்றி விடுவாள் போலிருக்கிறது."
விக்ரம் கடுங்கோபத்தில் கத்திக்கொண்டிருந்ததால் ராணுவ அமைச்சர் அமைதியாக இருந்தார்.
"ஆஷா இப்போது எங்கிருக்கிறாள்."
"நமது காவல் மற்றும் கமாண்டோ வீரர்கள் சல்லடையாகத் தேடி வருகின்றனர். அவள் எங்கிருக்கிறான் என்பது பெரிய மர்மமாக உள்ளது."
"தேர்தல் கமிஷனரை அழைத்து நாளை தேர்தலை ரத்து செய்து விடச் சொல்லுங்கள்."
"பல முறை பயமுறுத்திக் கூறியும் அவர் பணிய மறுக்கிறார். தேர்தலை ரத்து செய்தால் பெரியக் கலவரம் ஏற்படும் என்று காரணம் கூறுகிறார்."
"பூமி மீது போர் எப்படி செல்கிறது?"
"ஒரு சிக்கலுமின்றி செல்கிறது. இன்னும் ஒரு வாரம் நம் குண்டு வீச்சுத் தொடர்ந்தால் பூமி முழுதும் தரைமட்டமாகிவிடும்."
"நல்லது. இப்போதே நம் ராணுவ வீரர்களை அனுப்பி தேர்தல் கமிஷனரைக் கைது செய்யச் சொல்லுங்கள். புது தேர்தல் கமிஷினரை இன்றே நியமித்து தேர்தலை ரத்து செய்யச் சொல்லுங்கள்."
ராணுவ அமைச்சர் சென்றதும் டிவித் திரையில் போர் நிலவரங்களை விக்ரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
பிறகு ஜன்னல் ஓரம் நின்று எதிரே இருந்த உயர்ந்தக் கட்டிடங்களை பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று நெற்றிப் பொட்டில் ஒரு குண்டு பாய்ந்து அப்படியே கீழே சரிந்தான்.
எதிரே ஒரு கட்டிடத்திலிருந்த சந்திரன் தன் துப்பாக்கியை ஒரு பெட்டியில் வைத்து அங்கிருந்து கிளம்பினான்.
                                                                         --------******---------
விக்ரம் இறந்து ஒரு வாரம் கழிந்திருந்தது. தேர்தலில் ஆஷா வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனாள்.
முதல் வேலையாக பூமி மீது நடந்துக் கொண்டிருந்த போரை நிறுத்தினான். தன் நண்பர்களை சந்திக்க பூமிக்குச் சென்றான்.
வல்லப் அவனை வரவேற்று நீரோவைப் பார்க்க அழைத்துச் சென்றான்.
வல்லப் - "தலையில் அடிபட்டதால் மன நிலை முழுதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தலைமைப்பதவியை நான் ஏற்றிருக்கிறேன். எப்படிப்பட்ட தலைவன் நீரோ! தன் பேச்சு மூலம் மக்களை எப்படி ஈர்த்தான். இப்போது நான் மட்டும் தனியாக இந்தப் பெரும் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது. நண்பர்களில் எஞ்சியிருப்பது நீ ஒருவன் மட்டும் தான்."
ஆஷா - "கவலைப்படாதே வல்லப். மோகன், நீரோ இவர்கள் தியாகம் வீணாகப் போகாமல் பார்த்துக் கொள்வது நம் பொறுப்பு. நிலவு, பூமிக்கிடேயே ஒரு உன்னதமான உறவை நாம் ஏற்படுத்த வேண்டும். அடுத்து நாம் இருவரும் செவ்வாய் கிரகம் செல்ல வேண்டும். செவ்வாய் அரசாங்கத்துடன் நட்புறவை நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு முன் என் தாத்தாவை சந்திக்க வேண்டும். அவர் இப்போது இலங்கையில் தானே இருக்கிறார்?"
வல்லப் - "ஆம்! நல்ல வேலை ட்ரோன் விமானங்கள் இலங்கை மீது தாக்குதல் நடத்தவில்லை. அதனால் அவர் பத்திரமாக இருக்கிறார்."
ஆஷா - "நாம் இருவருமே அவரை சந்திக்கப் போகலாம்."
வல்லப் - "இப்போது இலங்கைக்கு 20 பேர் வரை செல்லக் கூடிய மோட்டார் படகு வசதி இருக்கிறது. 1 மணி நேரத்தில் சென்று விடலாம்."
                                                                         --------******---------
அடுத்த நாள் மோட்டார் படகில் ஆஷாவும் வல்லபும் இலங்கை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர்.
வல்லப் - "மூன்று மாதங்கள் முன்னர் நம் நண்பர்களுடன் அந்தமான் தீவிற்குச் சென்றது நினைவுக்கு வருகிறது."
ஆஷா - "ஆம் அப்போது நீ தான் படகு ஒட்டினாய். நீரோவிற்கும் உனக்கும் நடந்த வாக்குவாதம் கூட எனக்கு ஞாபகம் இருக்கிறது."
வல்லப் - "சந்திரன் பற்றி ஏதாவது செய்தி கிடைத்ததா?"
ஆஷா - "தெரியவில்லை. விக்ரம் பாண்டேவைக் கொன்றது சந்திரன் தான் என்று ஒரு வதந்தி உலவுகிறது. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை."
வல்லப் - "அவன் நம்முடன் இருந்தால் ஒரு பெரிய பலமாக இருக்கும்."
ஆஷா அதை ஆமோதிக்கும் வண்ணம் தலை அசைத்தாள்.
இருவரும் மௌனமாகப் பழைய நினைவுகளில் மூழ்கினர்.
படகை ஒட்டிக் கொண்டிருந்த மனிதன் அவர்கள் பேச்சைக் கேட்ட வண்ணம் இருந்தான்.
மொட்டை அடித்து தாடியுடன் காணப்பட்டான் அம்மனிதன்.
"வல்லப், ஆஷா! நான் எப்போதும் உங்கள் அருகிலேயே இருப்பேன். உங்களுக்கு காவலாகத் துணையாக இருப்பேன்.நம் இலட்சியக் கனவு நிறைவேற உறுதுணையாக இருப்பேன். எனக்குள் இருக்கும் புரட்சித் தாகமே சற்று உறங்கு. என் நண்பர்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடு. "
மாறு வேடத்திலிருந்த சந்திரன் மௌனமாகக் கடலைப் பார்த்தவண்ணம் படகை செலுத்திக் கொண்டிருந்தான்.
                                                                                THE END
Inspiration – Early 20th Century Indian and World Hist