Friday, December 9, 2016

நான் அவனில்லை - அறிவியல் சிறுகதை

                           நான் அவனில்லை


ரியா புள்ளி மான் போல உற்சாகத்துடன் குதித்து குதித்து நடந்தாள். அவள் பின் மாறன் புத்தகப் பையை சுமந்தபடி வந்தான். குழந்தை சிறிது நேரத்தில் சோர்வடைந்தது.

"அப்பா கால் வலிக்குது."

மாறன் குழந்தையைத் தன் தோளில் ஏற்றினான்.

மாறன் ஒரு சராசரி மனிதன். அன்பான கணவன். கனிவுமிக்க தந்தை. கடுமையான உழைப்பாளி. பொறுமையான முதலாளி.  நேர்மையான குடிமகன். எளிய நடத்தைக்கும், சிந்தனைக்கும் உரியவன். குழப்பமான உளச்சிக்கலுக்கு இடமளிக்காதவன். இவை ஒரு சராசரி மனிதனுக்குரிய குணாதிசயங்கள் என்றால் மாறன் அதற்கு முற்றிலும் பொருந்தினான்..

எல்லா தந்தையைப் போல குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்பவனும் அவன் தான்.

"கீழே இறக்குங்க அப்பா. நான் பெரிய பெண் எல்லோரும் பார்த்தா சிரிப்பாங்க.

மாறன் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. பள்ளியை நெருங்கியதும் குழந்தையை இறக்கினான். விடைப் பெற்றுக் கொண்டு ரியா சிட்டென பறந்தாள்.

வீடு திரும்பி காலை உணவு முடித்து கடை திறக்கக் கிளம்பினான். மதுரையில் ஒரு துணிக்கடை நடத்தி வந்தான்.


மனைவி வனிதாவிடம் விடை பெறும் முன் அவள் நெற்றியில் முத்தமிட்டான். அன்றாடம் நடக்கும் விஷயம் தான். வனிதாவுக்கு இதில் ஒரு ஆனந்தம்.

அவன் நடந்து செல்வதையே அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். மாறன் சாலையைக் கடக்கும் போது அந்த விபரீதம் நடந்தது. ஒரு கார் அவனை அடித்து விட்டு நிற்காமல் சென்றது. அவனைச் சுற்றிக் கூட்டம் கூடியது.

வனிதா பதறியபடி ஓடி வந்தாள். உடனே ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு ICUவில் சேர்க்கப்பட்டான். மூளைக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு கோமாவில் இருந்தான்.

மூன்று நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு டாக்டர் கையை விரித்தார். சென்னையில் பிரபல நியூரோ சர்ஜன் சத்யனிடம் சேர்க்கும்படி சொன்னார்.

மாறனின் உணர்வற்ற உடலுடன் வனிதா சென்னைக்குப் பயணமானாள். சிறு நூலெனத் தொங்கும் நம்பிக்கையைத் தொற்றியபடியே.

                         ----------********---------

"குழந்தைக்கு காய்ச்சல் இன்னமும் குறையலை."

ஸ்வப்னா அறைக் கதவினருகே நின்றுக் கொண்டிருந்தாள்.

ஜீவனுக்கு எழுத்து தடைபட்டது சலிப்பளித்தது. எழுதும் போது சுற்றி நடப்பது எதுவும் அவனுக்கு பொருட்டில்லை.


ஜீவன் ஒரு எழுத்தாளன். எழுத்தாளன் என்றதும் அவனைப் பற்றிய பிம்பம் உங்கள் மனதில் எழுந்திருக்கும். அவன் தனிமையானவன். உணர்வுகளின் எல்லைக் கோட்டில் வாழ்ந்திருப்பவன். தன் ஒரு வாழ்க்கையில் பல உலகங்களில் உலாவுபவன். குழந்தையின் பிறந்த நாளைக் கூட மறப்பவன்.

"மருந்து கொடுத்தாயா?"

"ம்"

"இந்நேரம் எந்த டாக்டர் இருப்பார். காலையில் பார்க்கலாம்."

ஸ்வப்னா உணர்ச்சியற்ற முகத்துடன் நகர்ந்தாள்.

ஜீவனால் அதற்கு மேல் எழுத முடியவில்லை. மகள் தியாவின் அறைக்குச் சென்றான். குழந்தை ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். காய்ச்சல் நெருப்பாக அடித்தது.

தன் படுக்கை அறைக்குச் சென்றான். அவன் வந்தது தெரிந்து ஸ்வப்னா மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள். ஜீவன் தலையணை சரி செய்தான். படுத்ததும் தன் கதையின் தொடர்ச்சியும், குழந்தையின் நிலையும் போட்டிபோட்டுக் கொண்டு மனதில் அலையோடியது. போட்டி முடிவில் குழந்தை ஜெயித்தது. வைத்திய செலவிற்கு என்ன செய்வது என்று குழம்பினான். அன்று தனக்கு உறக்கமில்லை என்று அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.

                        --------********--------


சத்யன் அறைக்கு வந்ததும் தனக்காகக் காத்திருந்த நித்யனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். நித்யன் அதே மருத்துவமனையில் ஒரு சைக்காலஜிஸ்டாக இருந்தார். நேரம் கிடைக்கும் போது இருவரும் தத்துவம், அரசியல், வரலாறு என்று பல விஷயங்களைப் பேசுவார்கள்.

"கோமா ஸ்டேஜில் சீரியஸாக மாறன் என்று ஒரு பேஷண்ட் அட்மிட் ஆகியிருக்கிறார். ஆக்சிடெண்டில் மூளைக்கு பலத்த சேதம்.  அவரைப் பரிசோதனை செய்துக் கொண்டிருந்தேன். அதனால் நேரமாகி விட்டது. சரி என்ன விஷயம் திடீரென்று இந்தப் பக்கம்."

"செயற்கை மூளை மாற்றம் பற்றி உங்கள் ஆராய்ச்சி எந்த நிலையில் இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ள வந்தேன்."

"முற்றிலும் வெற்றிகரமாக முடிந்து விட்டது. நான் முதலில் சொன்ன மாறனுக்கே இதைப் பரிசோதித்துப் பார்க்கலாமா என்று ஒரு யோசனை உள்ளது."

"அருமை. எப்படி இதை சாதித்தீர்கள்."

"முதலில் ஒரு நபரின் மூளையை ஸ்கேன் செய்து அதன் நகலை எடுத்துக் கொள்வோம். மூளையின் ஒவ்வொரு இணைப்பும் துல்லியமாக அந்த நகலில் இருக்கும். பிறகு அதன் மென்பொருள் பிரதி எடுக்கப்பட்டு ஒரு சிப்பில் ஏற்றப்படும். அந்த சிப் மூளை போன்ற வடிவான ஒரு ப்ராஸ்தேடிக் உறுப்பில் வைக்கப்படும். அந்த ப்ராஸ்தேடிக் உறுப்பு ஒரு அறுவை சிகிச்சை மூலம் பேஷன்டில் பொருத்தப்படும்."

"உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள். எனக்கு ஒரு சந்தேகம். இந்த செயற்கை மூளை ஒரு மென்பொருள் பிரதி தானே. இது அதன் ஆதாரமான மனிதனின் மூளையின் செயல்பாட்டை அப்படியே ஓத்திருக்குமா?"

"அதிலென்ன சந்தேகம் செயற்கை மூளை பொறுத்தப்பட்டவனும், அதன் அசலான மூளையைக் கொண்ட மனிதனும் ஒரே சந்தர்பங்களில் ஒரே விதமாகத் தான் நடந்துக் கொள்வார்கள்."

"ஒரே விதமான மூளையைக் கொண்டவர்கள் ஒரே விதமாக சிந்திக்கிறார்கள் என்று இதன் அர்த்தமா. அப்படியானால் சிந்தனை என்பது மூளையிருந்து தான் தோன்றுகிறது என்று கூறுகிறீர்களா?"

"ஆம் இது ஒரு குழந்தைக்கு கூடத் தெரியுமே."

"நமது சிந்தனைகளின் தோற்றம் மூளையிலிருந்து இல்லை. நமது மரணத்திற்குப் பிறகும் சிந்தனைகளுக்கு அழிவில்லை. மூளை என்பதை நம் சிந்தனைகள் ஒரு கருவியாகத் தான் பயன்படுத்திக் கொள்கிறது. மரணத்திற்குப் பிறகு அது வேறு ஒரு உடலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும். நம் இந்து சித்தாந்தங்களில் கூறப்படும் மறு ஜென்மத்திற்கு லாஜிக்கலான விளக்கம் இதுவாகத் தான் இருக்கும்."

"இதெல்லாம் அறிவியல் பூர்வமான விளக்கங்கள் கிடையாது. ஒரு டாக்டராக இருந்துக் கொண்டு நீங்கள் இது போல பேசுவது சிரிப்பாக இருக்கிறது."

"ஒரு விஷயம் தெரியுமா. இருதய நோயாளிகள் இறந்தப் பிறகு அவர்களை உயிர்ப்பிக்க angiotherapy என்ற சிகிச்சை செய்வார்கள். அப்போது நோயாளியின் நெஞ்சை சில கருவிகள் கொண்டு அழுத்துவார்கள். அதில் சிலர் பிழைக்கவும் கூடும். மரணத்தைத் தொட்ட நோயாளி மீண்டும் உயிருடன் வருவார். இவர்கள் சில நிமிடங்கள் இறந்த நிலையிலிருந்து மீண்டு வந்தவர்கள். இறந்த நிலையில் அவர்கள் மூளை தன் செயல்பாட்டை இழந்து, உணர்வுகள் சிறிதும் இருக்கக் கூடாது அல்லவா. ஆனால் அவர்கள் தாங்கள் இறந்திருந்த கணங்களில் தங்களைச் சுற்றி அறையில் என்ன நடந்தது என்று தெளிவாகக் கூறினார்களாம். இதற்கென்ன பதில் சொல்கிறீர்கள்."

"எதற்கு விவாதம். நமக்குள் ஒரு போட்டி வைத்துக் கொள்வோம். நான் மூளை மாற்றம் செய்யப் போகும் பேஷண்ட் எப்படி நடந்துக் கொள்கிறான் என்பதைப் பொறுத்து இதற்கான முடிவை நாம் அறிந்துக் கொள்ளலாம். நோயாளியும், அசலான மூளைக்கு சொந்தக்காரனும் ஒரே விதமான நடத்தை, குணாதிசயம் உடையவர்களாக இருந்தால் நான் வெற்றி பெற்றேன். இல்லையானால் நீங்கள். சரியா?"

அப்போது ஜீவன் அறைக்குள் வேகமாக நுழைந்தான்.

"என் பெண்ணிற்கு மூளைக் காய்ச்சல். நேற்று தான் அட்மிட் செய்தேன். அவளுக்கு ட்ரீட்மெண்ட் செய்ய 2 லட்சம் கேட்கிறார்கள். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. பணம் கொடுத்தால் தான் ட்ரீட்மெண்ட் என்று சொல்கிறார்கள். நான் 2 மாதத்தில் பணத்தைப் புரட்டி விடுவேன். சிகிச்சையைத் தொடர சொல்லுங்கள்."

சத்யன் ஜீவனை உற்றுப் பார்த்தார்.

"நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்."

"நான் ஒரு எழுத்தாளன்."

சத்யன் சில நிமிடங்கள் சிந்தனையில் இருந்தார்.

"நீங்கள் ட்ரீட்மெண்டிற்கு பணமே தர வேண்டியதில்லை. ஆனால் ஒரு சின்ன பரிசோதனை. அதற்கு நீங்கள் உதவ வேண்டும். உங்களை ஒரு ஸ்கேன் மட்டும் செய்வோம். அரை மணி நேர வேலை. அவ்வளவு தான். "

ஜீவன் ஒத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் அறையை விட்டு அகன்றதும் சத்யன் நித்யனைப் பார்த்து சிரித்தார்.

"போட்டி இப்போது ஆரம்பமாகிறது."

                            ------******---------

மாறனுக்கு மாற்று மூளை பொருத்தி ஒரு மாதம் ஆகி உடல் மிகவும் தேறியிருந்தது. இருந்தாலும் வனிதா கவலையில் இருந்தாள். எப்போதும் ஒரு புத்தகத்தைப் படிப்பதும் அல்லது எழுதிக் கொண்டும் இருந்தான். தன்னிடமும், குழந்தையிடமும் நேரம் செலவழிப்பது மிகவும் குறைவு. எப்போதும் சிரித்தபடி, அனைவரையும் சிரிக்க வைக்கும் மாறன் எங்கே தொலைந்துப் போனான் என்று நினைத்தாள். தான் ஒரு அந்நியனிடம் வாழ்க்கைப்பட்டது போல உணர்ந்தாள்.

"அப்பா ஸ்கூலுக்கு நேரமாச்சு. கிளம்பி வாங்க."

மாறன் குழந்தையுடன் கிளம்பினான். ரியா புத்தகப் பையை நீட்ட மாறன் அதை அவள் தோளில் மாட்டினான்.

"எனக்கு தோள் வலிக்கும்னு நீங்க தானே தூக்கிட்டு வருவீங்க. இப்போ ஏன் இப்படி"

"நீ பெரிய பெண் ஆயிட்டே. அதனால் தான்."

சிறிது தூரம் நடந்ததும் ரியா நின்றாள்.

"கால் வலிக்குது அப்பா."

"இன்னும் கொஞ்ச தூரம் தான். நட."

ரியா மாறனை கேள்வியுடன் பார்த்தபடி நடந்தாள்.

வீட்டிற்கு வந்ததும் மாறன் உணவருந்தி வெளியே கிளம்பினான்.

"இவ்வளவு நாள் ரெஸ்ட் எடுத்தீங்க. இன்றைக்காவது கடைக்கு போங்களேன். ஒரு மாதமாக நான் தான் வீட்டையும் கடையையும் பாத்துக்கிறேன்."

"நீ போ. எனக்கு வேறு வேலை இருக்கிறது."

மாறன் கிளம்ப, வீட்டு வாசல் வரை வந்த வனிதா அவனிடம் ஏதோ எதிர்பார்த்தாள். அவன் அவளைப் பொருட்படுத்தாமல் செருப்பை மாட்டிக் கொண்டான்.

"நாளை வெளியூர் போகிறேன். வருவதற்கு இரண்டு வாரங்கள் ஆகும்."

"என்ன வேலையா போகிறீர்கள்."

"என்னை ஒரு கதை எழுத சொல்லியிருக்கிறார்கள். 20 லட்சம் தருவதாக உறுதி அளித்திருக்கிறார்கள். கதை நல்லபடியாக வர வேண்டும் என்று கோவாவில் ஒரு ஓட்டலில் தனியாக தங்கி எழுத சொல்லியிருக்கிறார்கள்."

"புதுசா என்ன கதை எல்லாம். ஒரு புக் கூட முன்னாடி படிக்க மாட்டீங்க. பிசினஸ் பத்தி ஒரு அக்கறையும் இல்லாம ஏன் இப்படி மாறிட்டீங்க. நாம் டாக்டரை மறுபடியும் பார்க்கணும். உங்களுக்கு என்னவோ ஆயிடுச்சு."

மாறன் எதுவும் பேசாமல் தெருவிற்கு சென்று விட்டான்.

வனிதா உடனே டாக்டர் சத்யனை மருத்துவமனையில் சந்தித்தாள்.


"அவர் இப்போ சுத்தமா மாறிட்டார் டாக்டர். ஏதோ மூணாவது மனுஷனோட குடும்பம் நடத்துற மாதிரி இருக்கிறது. அவரைப் பழைய நிலைக்கு மாற்ற முடியாதா."

"உன் கணவனுக்கு மூளை மாற்று சிகிச்சை செய்திருக்கிறோம். அதனால் அவன் ஒரு புது மனிதன். அவன் உயிரோடிருப்பதே பெரிய விஷயம். நீ தான் அடஜஸ்ட் பண்ண வேண்டும். இப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறான்."

"எப்போதும் புத்தகம் கையுமாக இருக்கிறார். பிசினஸ் மீது எந்த பொறுப்பும் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார். புதிதாக கதை எல்லாம் எழுதுகிறார்."

"எல்லாம் சரி ஆகி விடும். முன்னை விட பெரிய ஆளாக உன் கணவன் வருவான். கவலைப்படாமல் போ."

அவள் சென்றதும் சத்யன் முகத்தில் ஒரு புன்முறுவல் தோன்றியது.
-     
-       ----------***********---------

ஜீவன் என்றுமில்லாத உற்சாகத்துடன் ஸ்வப்னாவிடம் பேசினான்.

"நான் நாளை கோவா போகிறேன். வருவதற்கு இரண்டு வாரங்கள் ஆகும். என்னை ஒரு கதை எழுத வாய்ப்பு தந்திருக்கிறார்கள். இருபது லட்சத்திற்கு அக்ரீமெண்ட் போட்டிருக்கிறது. முன் பணம் ஐந்து லட்சம் தந்திருக்கிறார்கள். இதை யாரிடமும் சொல்லாதே. நான் எழுதும் கதை பற்றி பிறரிடம் விவாதிக்கக் கூடாது."

"தியா இன்னும் முழுதாகத் தேறவில்லை. அதற்குள் இப்படித் தனியாக விட்டுச் சென்றால் நான் எப்படி சமாளிப்பது."


"இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. ஒரு கதைக்கு ஆயிரம் கிடைப்பதற்கே அல்லாடிக் கொண்டிருந்தேன். இப்போது லட்சக் கணக்கில் கொடுக்கிறார்கள். நம் பொருளாதார சிக்கல் எல்லாம் தீர்ந்து விடும்."

ஸ்வப்னா ஓன்றும் சொல்லாமல் சமையல் அறை சென்றாள். ஜீவன் தான் எழுதப் போகும் கதைக்கான சிந்தனையில் ஆழ்ந்தான்.

                    ----------**********-------------

ஜீவன் கோவாவின் ராயல் பார்க் நட்சத்திர ஓட்டலில் ஒரு வாரமாகத் தங்கியிருந்தான். கதை மிகவும் அருமையாக உருவாகி வந்தது. தனிமை அதற்குப் பெரிதும் உதவியாக இருந்தது. ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கடற்கரையில் அமர்ந்து சூரியனின் உதயத்தைப் பார்ப்பதில் நேரம் கழித்தான். அவன் கற்பனைக்கு அது பெரிதும் ஊக்கமாக இருந்தது. அதே நேரம் இன்னொரு மனிதனும் அங்கு அமர்ந்து கடற்கரையை ரசிப்பதைக் கண்டான். இன்று அவனிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்து அவனை அணுகினான்.

"இது கொஞ்சம் ஒதுக்குப்புறமான இடம். அதிகம் ஆள் நடமாட்டம் கிடையாது. நாம் இருவர் மட்டும் இந்த இயற்கை அழகை ரசிக்கிறோம் இல்லையா."

"ஆம். கடலிலிருந்து விடுதலை பெறுவது போன்று சிவப்புப் பந்தாக வெளி வரும் சூரியனின் அழகை, அது வானத்தைப் பல வித வண்ணக் கலவையாக மாற்றும் விந்தையை, பல விதப் பறவைகள் விண்ணில் மலர்ச்சரம் போல பறக்கும் அழகை, குழந்தையைத் தாலாட்டுவது போன்ற கடல் அலைகளை நாம் இருவர் மட்டும் தான் பார்க்கிறோம் என்றால் நாம் வரம் பெற்றவர்கள் ஆவோம்"

இந்தப் பதிலைக் கேட்டு ஜீவன் அதிர்ந்தான். அவனிடம் இதே கேள்வியை யாராவது கேட்டிருந்தால் இந்த பதிலை தான் அவனும் சொல்லியிருப்பான்."

"உங்கள் பெயர் என்ன. நீங்கள் பேசுவதைக் கேட்டால் நீங்கள் கவிஞராக அல்லது எழுத்தாளராக இருக்க வேண்டும்."

"என் பெயர் மாறன். நான் எழுத்தாளர் எல்லாம் கிடையாது. குறிப்பிட்ட எந்தத் தொழிலும் இல்லை. நாடோடி போல சுற்றுகிறேன்."

மாறன் பொய் சொல்கிறானோ என்ற சந்தேகம் ஜீவனுக்கு சந்தேகம் வந்தது.
"என் பெயர் ஜீவன். நான் கணினித் துறையில் வேலை செய்து வருகிறேன்."

"நானும் உங்களை எழுத்தாளர் என்று தான் நினைத்தேன்."

ஜீவன் இதைக் கேட்டு துணிக்குற்றான்.

"இந்த நேரம், இந்த இடத்தில் மணிக் கணக்கில் உட்கார்ந்திருப்பவர் எழுத்தாளராகத் தானே இருக்க வேண்டும்."

பேச்சு போகும் திசை ஜீவனுக்குப் பிடிக்கவில்லை. சத்யனிடம் விடை பெற்றுக் கொண்டு தன் அறை வந்தான்.  ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்த போது இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஹோட்டலுக்குள் மாறன் நுழைந்துக் கொண்டிருந்தான். அவனும் இதே ஹோட்டலில் தான் தங்கியிருக்க வேண்டும் என்று புரிந்தது. இவ்வளவு நாளாகக் கண்ணில்படாதது ஆச்சர்யம்.

ஜீவனுக்குத் தான் மேலும் அந்த ஹோட்டலில் தங்கியிருப்பது நல்லதல்ல என்று தோன்றியது. தான் கதை எழுதும் விபரங்கள் ஏதும் மற்றவர்க்குத் தெரியக்கூடாது என்று பதிப்பகத்தில் கூறியிருந்தார்கள். மாறன் முன் தன் ரகசியம் அனைத்தும் அப்பட்டமாகுமோ என்று பயந்தான். தான் நினைப்பது அனைத்தையும் அவன் பிரதிபலிப்பது வியப்பாக இருந்தது.

சிறிது தள்ளி இன்னொரு ஹோட்டலுக்கு மாறினான். அதன் பிறகு அவன் மாறனை சந்திக்கவில்லை. இரு நாட்களில் கதை எழுதி முடித்து சென்னை திரும்பினான். மாறன் அவன் நினைவிலிருந்து முற்றிலும் அகன்றான்.

கதை பதிப்பகத்தாருக்கு மிகவும் பிடித்து விட்டது. 20 லட்ச ரூபாய்க்கு காசோலையும் வாங்கி கொண்டான்.

முதல் முறையாக ஸ்வப்னாவுக்கும் குழந்தை தியாவுக்கும் துணிகள் மற்றும் பரிசுப் பொருள்கள் வாங்கி வீட்டிற்குச் சென்றான். அவர்களை இது பெரிதும் மகிழ்ச்சி அடையச் செய்தது.

                          -----------**********----------

அடுத்த நாள் ஜீவனுக்கு அதிர்ச்சி போன் கால் மூலம் வந்தது. பதிப்பகத்தின் எடிட்டர் மறுமுனையிலிருந்தார். உடனே தன்னைச் சந்திக்க வருமாறு கூறினார்.

பதிப்பகம் வந்ததும் எடிட்டர் கோபத்தின் உச்சியிலிருப்பதை ஜீவன் கண்டான்.

"என்ன கதை எழுதியிருக்கிறீர்கள். இது போலவே இன்னொரு கதை ஒரு வார்த்தை கூட மாறாமல் அப்படியே எங்களுக்கு வந்திருக்கிறது. இது வரை சுமாரான கதைகள் எழுதி வந்தீர்கள். இப்போது அப்படியே இன்னொருவரின் கதையை உருவி இருக்கிறீர்கள்."

"நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. இது முற்றிலும் என் சொந்தக் கதை தான்."

"வேறு யாரிடமாவது கதையைப் பற்றி டிஸ்கஸ் செய்தீர்களா."

"இல்லை. கோவாவில் கூட நான் கதை எழுதும் போது தனிமையில் தான் இருந்தேன். யாரிடமும் பேசவில்லை. வெய்ட். இந்த இன்னொரு கதையை எழுதியது யார்?"

"மாறன் என்று ஒரு புது எழுத்தாளர்."

"எனக்கு எல்லாம் விளங்கி விட்டது. உங்களை மீண்டும் வந்து சந்திக்கிறேன். அப்போது அனைவற்றையும் தெளிவாக விளக்குகிறேன். அந்த மாறனின் அட்ரஸ் மட்டும் தாருங்கள்."

"அவர் சொந்த ஊர் மதுரை. கதையைக் கொடுப்பதற்காக சென்னை வந்தார். சைதாப்பேட்டையில் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார்."

எடிட்டரிடமிருந்து ஹோட்டல் அட்ரஸை வாங்கி கொண்டு ஜீவன் சைதாப்பேட்டை வந்தான். ஜீவன் அறைக் கதவைத் தட்டியபோது வனிதா திறந்தாள்.  மாறன் குளித்து விட்டு வெளியே வந்தான். ஜீவனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.

"ஜீவன் நீங்கள் எப்படி இங்கே. நான் இருக்குமிடம் உங்களுக்கு எப்படி தெரியும்"

"என்னிடம் நாடகம் ஆடியிருக்கிறாய். உண்மையைச் சொல் நீ ஒரு எழுத்தாளன் தானே. "

மாறன் அமைதியாக இருந்தான்.

"கோவாவில் இருக்கும்போதே எனக்கு உன் மீது சந்தேகம். ஏன் என் கதையைத் திருடினாய்?"

"உன் கதையை நான் எங்கு திருடினேன்? ஏன் இப்படி இருக்கக்கூடாது. நீ என் கதையைத் திருடிவிட்டு இப்போது நேர்மையானவன் போல நடிக்கலாம் இல்லையா."

"நான் இது வரை நூற்றுக்கணக்கில் கதைகள் எழுதியிருக்கிறேன். நீ இதற்கு முன் எத்தனை கதைகள் எழுதியிருக்கிறாய். திடீரென்று எப்படி உன்னால் இந்தக் கதை எழுத முடிந்தது."

"நீ பல கதைகள் எழுதியிருக்கலாம். நான் இதற்கு முன் எழுதாமல் இருக்கலாம். ஆனால் இதை வைத்து ஒருவரின் கற்பனையை எடை போட்டு விட முடியாது.      இந்தக் கதை நான் எழுதியதுதான்."

"உன்னிடம் பேசிப் பயனில்லை. நான் உன் மீது வழக்கு தொடுக்கப் போகிறேன்."

ஜீவன் ஹோட்டலை விட்டு கோபத்துடன் கிளம்பினான். இது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த வனிதா மாறனிடம் எதுவும் சொல்லாமல் கிளம்பி டாக்டர் சத்யனை சந்தித்தாள்.

"என் கணவனை நீங்கள் என்ன செய்தீர்கள். அவனுக்கு மாற்று மூளை பொருத்தியிருக்கிறேன் என்று சொன்னீர்கள். அது இறந்துப் போன வேறு ஒருவருடைய மூளையா'"

"நீ கேட்கும் விஷயங்களுக்கு எல்லாம் நான் விளக்கம் கொடுக்க முடியாது. உன் கணவன் நன்றாகத் தானே இருக்கிறான். பிறகு ஏன் இந்த படபடப்பு. "

"மாற்று மூளை சிகிச்சைக்கு அரசிடமிருந்து சட்டப்பூர்வமான அனுமதி வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா. க்ளோனிங் போல இதிலும் பல தார்மீக சிக்கல்கள் இருக்கிறது?"

"நீ என்ன சொல்ல வருகிறாய்."

"என் கணவனின் மாற்று மூளைக்கு சொந்தக்காரன் யார் என்று தெரிய வேண்டும். இல்லையென்றால். நான் அரசாங்கத்திடம் முறையிடுவேன்."

"ஜீவன் என்னும் எழுத்தாளன். அவன் இறக்கவில்லை. உயிருடன் இருக்கிறான். அவன் மூளையை ஸ் கேன் செய்து அதன் நகலைத் தான் மாறனுக்குப் பொருத்தியிருக்கிறோம்."

வனிதா வாசலில் மாறனைப் பார்த்தாள். அவளைப் பின் தொடர்ந்து வந்திருந்தான்.

"உன் கதைக்கு சொந்தக்காரன் ஜீவன். ஏன் என்றால் நீ மாறன் இல்லை. ஜீவன். உன் உடல் வேண்டுமானால் மாறனாக இருக்கலாம். ஆனால் உன் சிந்தனைகள் அனைத்தும் ஜீவன் தான்."

"என்ன உளறுகிறாய் வனிதா."

"உனக்குப் பொருத்திய மாற்று மூளை ஜீவன் மூளையின் நகல்."

ஜீவன் சிலை போல உறைந்தான்.

                       --------*********-----------

அடுத்த நாள் ஜீவன் எடிட்டரை சந்திக்கச் சென்றான்.

"மாறன் நேற்று போன் செய்தான். உன் கதையை காப்பியடித்ததாக ஒப்புக் கொண்டான். அவன் கதைக்கு நாங்கள் அளித்த 20 லட்சமும் உனக்கே கொடுக்குமாறு சொன்னான். முன் பின் கதை எழுதாத கத்துக்குட்டிகளுக்கு இது போல வாய்ப்பு கொடுத்தால் இப்படி தான் நடக்கும் போல. உன்னை சந்தேகித்தற்காக மன்னித்துக் கொள்."

"மாறன் இப்போது எங்கே"

"நேற்றே மதுரை சென்று விட்டான்."

"அவனை நான் சந்திக்க வேண்டும். அவன் மதுரை அட்ரஸ் தாருங்கள்."

அட்ரஸை வாங்கிக் கொண்டு உடனே ஒரு கார் பிடித்து ஜீவன் மதுரை வந்தான். மாறனின் வீடு பூட்டியிருந்தது.

அக்கம்பக்கம் விசாரித்தபோது மாறன் வீட்டைக் காலி செய்து வேறு ஊர் குடியேறப் போய் விட்டதாகக் கூறினார்கள். அவன் கடைக்குச் சென்ற போது மாறனின் தம்பி கடையைத் தன் பெயருக்கு மாறன் மாற்றிவிட்டதாகக் கூறினான்.

                         ----------**********------------- 

சத்யனை சந்திப்பதற்காக நித்யன் வந்திருந்தார்.

"ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தீர்களே?"

"போட்டியில் நான் ஜெயித்து விட்டேன்"

"எந்தப் போட்டி?"


"சிந்தனைகளின் தோற்றம் மூளையா அல்லது வேறா என்று விவாதித்தோம் அல்லவா. அதற்குப் பதில் கிடைத்து விட்டது. என் மாற்று மூளை பேஷண்ட் மாறனின் குணாதிசயங்கள் அப்படியே அசல் மூளையின் சொந்தக்காரனை ஒத்திருக்கிறது. அவனைப் போலவே இவனும் ஒரு கதை எழுதியிருக்கிறான். இருவரின் கதையும் ஒரு வார்த்தை கூட மாறாமல் இருக்கிறது. வேண்டுமானால் இருவரின் கதையும் படித்துப் பாருங்கள்."

"இதில் உங்கள் கை வரிசை இருக்கும் என்று நினைக்கிறேன்"

"எப்படி இல்லாமல் இருக்கும். பதிப்பகத்தின் எடிட்டரை இருவருக்கும் கதை எழுத வாய்ப்புக்கு கொடுக்கச் சொன்னதும், ஆளுக்கு 20 லட்சம் கொடுக்கச் சொன்னதும் நான் தான்."

"இதுவும் உங்கள் பரிசோதனை தான் என்று புரிகிறது."

"தோல்வியை ஒப்புக் கொண்டு நான் இழந்த 40 லட்சத்தைத் திருப்பிக் கொடுங்கள்."

"ஆர் யூ சீரியஸ்."

"அப் கோர்ஸ் ஐ ஆம்."

"செக் எடுத்துக் கொண்டு நாளை வருகிறேன். இப்போதைக்கு பையில் இந்த 20 ரூபாய் நோட் தான் இருக்கிறது. முன் பணமாக வாங்கிக் கொள்ளுங்கள்."

இரண்டு கதைகளையும் வாங்கிக் கொண்டு நித்யன் கிளம்பினார்."

அடுத்த நாள் சந்திக்கும் போது மிகவும் பரபரப்புடன் உற்சாகமாக இருந்தார்.

"சத்யன் யூ லாஸ்ட். கதைகள் அப்படியே ஒத்திருக்கிறது என்று தானே கூறினீர்கள். கடைசி ஐந்து பக்கங்களைப் படியுங்கள். இரு கதைகளின் முடிவும் வேறு. முதல் 250 பக்கங்கள் அப்படியே இருந்ததால் கடைசிப் பக்கங்களை யாரும் படிக்கவில்லை. நீயும் அந்த எடிட்டரும் உட்பட."

சத்யன் கடைசிப் பக்கங்களை படித்தார்.

"ஆம் கதையின் முடிவு முற்றிலும் வேறாக இருக்கிறது."

"இப்போது புரிகிறதா? இருவரின் சிந்தனைகளும் ஒரே விதமாக இருந்தால் முடிவு மட்டும் ஏன் மாறுபடுகிறது. மூளைக்கு அப்பாற்பட்ட ஒன்று தான் நம் சிந்தனைகளை இயக்குகிறது என்று ஒப்புக் கொள்கிறீர்களா. சிந்தனைகள் நம் மரணத்திற்குப் பிறகும் அழிவில்லை என்று நம் தத்துவங்களில் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்? "

"அவ்வளவு எளிதாக அந்த முடிவிற்கு நாம் வர முடியாது. இதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். ஜீவனின் மூளையைப் பிரதி எடுத்த மென்பொருளில் ஏதாவது சிக்கல் இருக்கலாம். "

"உங்கள் தோல்வியை மறைக்க காரணம் தேடாதீர்கள். போட்டியில் தோற்று விட்டதை ஒப்புக் கொள்ளுங்கள். 40 லட்சம் எல்லாம் கேட்க மாட்டேன். என் 20 ரூபாய் கொடுங்கள்."

"வெயிட். இருவரின் மூளையும்,சிந்தனைகளும் ஒரே போல  இயங்க வேண்டும் என்றால். இருவரும் ஒரே விதமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். முதலில் கதை எழுதும் போது இருவரும் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தார்கள். கடைசி இரண்டு நாட்கள் வேறு ஓட்டல் மாறினார்கள். அதனால் இருவரின் கற்பனையும் மாறியிருக்கலாம் அல்லவா."

"நீங்கள் சொல்வது எவ்வளவு அபத்தம் என்று உங்களுக்கே தெரியும். என் 20 ரூபாயை முதலில் தாருங்கள்."

பணத்தைப் பிடுங்கிக் கொண்டு நித்யன் கிளம்பினார். சத்யன் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தார்.

                       ----------*************-----------

வனிதா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். அவர்கள் கோவையில் குடியேறி 2 மாதங்கள் ஆகியிருந்தது. மாறனிடம் நிறைய மாறுதல்கள் தெரிந்தது. கோவையில் ஒரு ஜவுளி பிசினஸ் ஆரம்பித்து மிக நன்றாக நடந்துக் கொண்டிருந்தது. வியாபாரத்தில் மாறன் மிகவும் ஆர்வம் காட்டினான்.

வழக்கம் போல குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றான். ஸ்வப்னா வாசல் அருகே வந்தாள்.  வெகு நாட்கள் கழித்து முதன் முறையாக ஸ்வப்னாவின் நெற்றியில் முத்தமிட்டான்.

சிறிது தூரம் சென்ற பிறகு ரியாவின் வேகம் குறைவதை மாறன் கவனித்தான்.

"கால் வலிக்குதா பாப்பா?"

"இல்லைப்பா நானே நடக்கிறேன். நான் பெரிய பிள்ளை ஆயிட்டேன் இல்லையா?"

அன்றிரவு மாறனுக்கு உறக்கம் வரவில்லை. அவன் மனதில் பல கற்பனைகள் நதி வெள்ளம் போல சுரந்துக் கொண்டிருந்தது. தான் வெகு நாட்கள் கட்டுப்படுத்தியிருந்ததை அவனால் மேலும் தடுக்க முடியவில்லை.


வேகமாக ஒரு பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தான். எவ்வளவு நேரம் எழுதினான் என்று அவனுக்கே தெரியாது. திடீரென்று ரியா உறக்கத்தில் பேசிக் கொண்டிருந்தது கேட்டு எழுதுவதை நிறுத்தினான்.

"அப்பா என்னைத் தூக்குங்க. நான் பெரிய பெண் இல்லை. கால் ரொம்ப வலிக்குது. என்னைத் தூக்குங்க."

மாறன் குழந்தையை சிறிது நேரம் பார்த்துக் கொண்டே இருந்தான். பிறகு பெருமூச்சு விட்டு தான் எழுதியவற்றை அனைத்தும் கிழித்துப் போட்டான்.

பிறகு குழந்தையின் அருகில் படுத்து, தனக்குள் சொல்லிக் கொண்டான்.

"நான் அவனில்லை."
                               --------------------********-----------------------

 



  









Thursday, November 3, 2016

10.5 நொடிகள்-- அறிவியல் சிறுகதை

                            10.5 நொடிகள்


                                  ஆர்யா


நீங்கள் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களை மெய்மறந்துப் பார்ப்பவரா? அல்லது விண்ணில் பறக்கும் பறவைகளை ரசிப்பவரா? நம் காலைத் தொட்டு தொட்டு விலகும் அலைகளால் ஈர்க்கப்படுபவரா? சாதாரணக் கண்களுக்குச் சீரற்றுத் தெரியும் விஷயங்களில் ஒரு ஒழுங்கான முறை (pattern) உங்கள் கண்களுக்கு மட்டும் தெரிகிறதா? அப்படியானால் நம் இருவர் அலைவரிசையும் ஒன்று தான்.
என்னைப் பொறுத்த வரை இந்தப் பார்வை இயற்கையோடு நின்று விடுவதில்லை.காலையில் முக்கிய சாலையின் போக்குவரத்து நெரிசலில் கூட ஒரு ஒழுங்கு எனக்குத் தெரிகிறது. இரவின் அமைதியில் வெளி உலகத்தின் சப்தங்களில் கூட என்னால் இந்த ஒழுங்கைக் கண்டுப் பிடிக்க முடிகிறது.
என்னை இப்படி மாற்றியது கணிதத்தின் மீது எனக்கிருந்த ஆர்வம் தான். எண்களில் காணப்படும் ஒழுங்கான முறை (pattern) எனக்கு நிஜ வாழ்க்கையின் சம்பவங்களிலும் தெரிகிறது. இது பல முறை என்னைச் சிக்கலில் மாட்டியதும் உண்டு. படிக்கும் காலத்தில் மூன்று முறை ஒரு பாடத்தில் வாங்கிய மதிப்பெண்ணை வைத்து அடுத்த முறை பரிட்சையில் இந்த மதிப்பெண் தான் வரும் என்று அனுமானித்துப் படிக்காமல் தேர்வுக்குச் சென்றேன். அந்தப் பாடத்தில் நான் தேர்வாகாமல் போனது முதல் நான் சிறிது ஜாக்கிரதை ஆனேன். என் சொந்த வாழ்க்கையில் கடந்த காலச் சம்பவங்களின் முறையை வைத்து எதிர்காலத்தைக் கணிப்பதைக் கட்டுப்படுத்தினேன்.
இருந்தாலும் எனக்குள் இருந்த இந்தத் திறமை தான் என்னை இந்தப் பதவிக்கு உட்கார வைத்தது.
என் பெயர் ஆர்யா. எனக்கு வயது 45. நான் பெங்களூரில் கூகுள் கம்பெனியின் தலைமை வடிவமைப்பாளராகப் பணி செய்கிறேன். என் தற்போதைய பிராஜெக்ட் மிகவும் சவாலானது. என் முன் அடுக்கடுக்காகக் கிடக்கும் காகிதங்களை பார்க்கிறீர்கள். இதைப் படிக்கும்போது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எண்களாகத் தான் உங்களுக்குத் தெரியும்.  உலகத்தின் முக்கிய இடங்களின் 100 வருடத்தின் தட்ப வெட்பத் தகவல்கள் இதில் ஒளிந்துக் கிடக்கிறது. இவற்றில் உள்ள சீரான ஒழுங்கை அடையாளப்படுத்தி, அதிலிருந்து எதிர்காலத்தின் தட்ப வெப்பத்தைக் கண்டுபிடிப்பது தான் இந்த பிராஜெக்டின் குறிக்கோள்.
இரண்டு வருடமாகப் போராடி, இதில் ஓரளவு எனக்கு வெற்றிக் கிடைக்கும் தருவாயில், ஒரு சிறு சிக்கல் அலைக்கழித்தது. முன்பு எனக்குக் கிடைத்த சரியான விடை இப்போது தவறாக வந்துக் கொண்டிருந்தது.
நான் நம்பிக்கையை முற்றிலும் இழந்தத் தருவாயில், எதேச்சையாக Chaos Theory பற்றி படிக்க, என் பிரச்சினைக்கான பதிலும் அதில் கிடைத்தது. மறுபடியும் என் தகவல்களை அலச ஒரு தகவலின் மதிப்பு 0.01% தவறானது தான் எனக்குப் பெரிய தலைவலியாக மாறியது தெரிய வந்தது.
அன்றிலிருந்து Chaos Theory மீது எனக்கு ஆர்வம் கூடியது. என் பிராஜெக்டுக்கு அது பெரிதும் உதவும் என்பதும் புரிந்தது. ஆனால் அதன் கணிதம் என்னைப் பெரிதும் குழப்பியது. என் வயது தான் அதற்குக் காரணம். என் வயதில் அனைத்தையும் மேலோட்டமாகவும், அனைத்தையும் ஒருங்கிணைக்கும் தன்மையுடன் பார்க்கும் தன்மை வந்து விடுகிறது. ஒரு சிறிய புதிரின் ஆழத்திற்குச் செல்ல அறிவாற்றல் நிறைந்த துடிப்பான இளைஞர் எனக்குத் தேவை.
அது யார்.
நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

                                                    நிஷா


நான் நிஷா. இந்த வருட ஒலிம்பிக் போட்டி பெண்கள் 100 மீட்டர் பந்தயத்தில் கலந்துக் கொள்ளப் போகிறேன்.
10.5 நொடிகள். என் இலக்கு, என் இலட்சியம், என் கர்மா, அனைத்துமே இந்த 10.5 நொடிகள். என்னை இயந்திரமாக்கியது இந்த 10.5 நொடிகள்.
என் இலக்கை எட்ட ஓடுகிறேன். வெறித்தனமாக ஓடுகிறேன். ஓடும் போது என் கண்களில் தெரிவது வெறும் 10.5 என்ற எண்கள் மட்டுமே..
ஆனால் இந்த 10.5 என்ற மாய இலக்கை அடைவதற்கு என்னை நான் சிதைத்துக் கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா?. ஒரு நாட்டின் முழு கனவையும் சுமந்து நிற்கும் எனக்கு என்ன ஆசைகள்?, இதைப் பற்றி யாருக்காவது அக்கறை இருக்கிறதா? 
எனக்கு சிறு வயது முதல் இயற்கையாகக் கணிதம் நன்றாக வரும். ஐந்தாம் வகுப்பிலேயே எனக்கு Calculus அத்துப்படி. என்னை ஒரு விண்வெளி ஆய்வாளராகக் கனவு செய்ய ஆரம்பித்தேன்.
நான் தற்போது திருச்சி ஆர்.ஈ.சியில் விண்வெளித் அறிவியல் துறையில் இளங்களைப் பட்டம் படித்து வருகிறேன். கல்லூரியில் நடந்த வருடப் போட்டியில் 100 மீட்டர் போட்டிக்கு என் பெயரைக் கொடுத்தேன். இறுதிப் போட்டியில் நான் முதலாவதாக வந்தேன். 10.5 நொடிகளில் ஓடி முடித்தேன். அது ஒரு உலக சாதனை
அந்தப் போட்டியைக் காண நரேன் வந்து தொலைத்து விட்டான். அன்றிலிருந்து ஆரம்பித்தது என் கெட்ட காலம். என் பெற்றோரைப் பல முறை சந்தித்து அவர்களுக்கு ஆசை காண்பித்து மயக்கினான்.
பலன்! இதோ இங்கு வந்து நான் நிற்கிறேன். இல்லை ஓடுகிறேன். இந்த வருடம் முழுதும் பயிற்சி. பயிற்சி. பயிற்சி. நான் கல்லூரிக்குச் சென்று எத்தனையோ மாதங்கள் ஆகிறது.
நான் ஏதாவது புத்தகத்தைத் தூக்கினாலே நரேன் கொதித்து விடுவான். விளையாட்டு மைதானத்தை 20 முறை ஓட வைத்து விடுவான். இருந்தாலும் அவனுக்குத் தெரியாமல் அறிவியல் புத்தகங்கள் படிப்பேன். தற்போது Chaos Theory பற்றி படித்துக் கொண்டிருக்கிறேன். முறைப்படி படித்தால் 10 வருடங்களில் நோபல் பரிசு வாங்கும் அளவுக்கு இந்தத் துறையில் என்னால் சாதிக்க முடியும். இதைப் பற்றிப் பேசி என்ன பயன். எல்லாம் வெறும் கனவு.
"இந்த முறையும் மான் போல உன் இலக்கை அடைந்து விட்டாய். தொடர்ந்து ஒரு மாதமாக, ஒவ்வொரு முறையும் 10.5 நொடிகளை சாதித்து வருகிறாய். இதைத் தொடர்ந்தால் இந்த வருடம் தங்க மெடல் உனக்குத் தான்."
நரேன் என்னை ஒரு குழந்தையை அள்ளுவது போலத் தூக்கிக் கன்னத்தில் முத்தமிட்டான். நான் நனவுலகிற்குத் திரும்பினேன்.

                                                   

                                                         நரேன்


தோல்வி. அதன் வலி. அது தரும் வேதனை. அதை அனுபவிப்பவனுக்கு தான் அந்த ரண இம்சை புரியும். என் தோல்வி எனக்கு இழைக்கப்பட்ட அநீதி. எனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வெற்றியைப் பறித்தது ஒரு நயவஞ்சகனின் சதி.
2012 ஆம் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு 100மீ இறுதிப் போட்டியில் எனக்குத் தங்க மெடல் கிடைத்தது. ஆனால் இரண்டு நாட்களில் அது பறிக்கப்பட்டது. நான் ஊக்க மருந்து சாப்பிட்டதாகப் பரிசோதனையில் தெரிய இடி விழுந்தது போலக் கலங்கினேன். இது விகாஸ் என்னும் இன்னொரு போட்டியாளனின் சதி வேலை என்றும் என் உணவில் ஊக்க மருந்தைக் கலந்திருந்தான் என்பதும் பின்னர் விளங்கியது.
அதன் பின்னர் விரக்தியில் நிறைய குடித்தேன். மூன்று ஆண்டுகள் பைத்தியம் போல அலைந்தேன். ஆனாலும் ஓட்டப்பந்தயம் எங்கு நடந்தாலும் நின்று வேடிக்கைப் பார்ப்பேன். ஒரு நாள் ஆர்.ஈ.சியில் நடந்த தடகளப் போட்டிக்குத் தற்செயலாகச் சென்றேன். நிஷாவையும் அன்று தான் முதன் முதல் பார்த்தேன்.
நிஷா ஒல்லியாகச், சற்றே கூன் போட்டு வளைந்த முதுகுடன் நின்றுக் கொண்டிருந்தாள். தடகள வீராங்கனைக்குச் சற்றும் பொருத்தமில்லாத உடல்வாகு. இந்தப் பெண்ணுக்கு இங்கு என்ன வேலை என்று தான் பார்ப்பவர்கள் அனைவருக்கும் கேட்கத் தோன்றும். 
ஆனால் ஓடும் போது அவள் முற்றிலும் வேறு ஒரு அவதாரமாக உருமாறினாள். இலக்கை மட்டுமே நோக்கிய தீர்க்கமான பார்வையுடன் ஓடினாள். 10.5 வினாடிகளில் இறுதிக்கோட்டை அடைந்தாள். இது ஒரு உலக சாதனை என்று யாரும் அறியவில்லை. 10.59 வினாடிகள் தான் 100மீ ஆட்டத்தின் முதன்மையான சாதனை. அதை நிஷா அன்று முறியடித்திருந்தாள். இதை அப்படியே ஒலிம்பிக்கில் செய்து காட்டினால் இந்தியாவுக்கு ஒரு தங்க மெடல் உறுதி.
அன்றே நான் முடிவு செய்தேன். நிஷாதான் என் கனவை நோக்கி இட்டுச் செல்லும் சாதனம் என்று. அவள் கல்லூரி நிர்வாகம், பெற்றோர்களைச் சமாதானம் செய்வது மிகவும் எளிதாக இருந்தது.
பிரச்சினை நிஷா தான். அவள் தன் திறமையின் மதிப்பைச் சற்றும் அறியவில்லை. எப்போதும் ஒரு புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு அலைகிறாள். அவளிடம் இருக்கும் இன்னொரு குறை திடீரென்று சுற்றி என்ன நடக்கிறது என்ற பிரஞையே இல்லாமல் உறைந்து விடுவாள். ஏதோ ஒரு கனவுலகுக்குச் சென்றவள் போல இருப்பாள். முக்கியமான போட்டியில் ஓடும்போது இவ்வாறு நடந்து விடுமோ என்று எனக்கு அவ்வப்போது ஒரு பயம் வரும்.
இப்போதும் அவள் அவ்வாறே உறைந்திருக்கிறாள். நான் அவளை கட்டிப்பிடித்து தூக்கியதை அவள் உணரவில்லை. நான் அவள் தோளை உலுக்கியதும் தான் இந்த உலகிற்குத் திரும்பினாள்.

                               நிஷா


நான் நனவிற்கு வந்த போது நரேன் என்னை அணைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். அவன் எப்போதெல்லாம் என் ஓட்டத்தில் திருப்தி அடைகிறானோ அப்போதெல்லாம் இப்படித்தான் உணர்ச்சி வசப்படுவான். விளையாட்டில் எல்லா பயிற்சியாளர்-வீரர்களிடமும் இடையே இது சர்வ சாதாரணமாக நடக்கும். உணர்ச்சிப் பெருக்கில் ஆண் பெண் பேதம் மறைந்து விடுகிறது.
ஆரம்பத்தில் நரேன் இது போல அணைப்பது, முத்தமிடுவது சுத்தமாகப் பிடிக்காது. போகப் போகப் பழகி விட்டது. அவன் செய்கையில் காதல் காம உணர்வுகள் சுத்தமாகக் கிடையாது. ஒருவேளை அதெல்லாம் இருந்திருந்தால் பிடித்திருக்குமோ என்னவோ,
நாங்கள் மைதானத்தை வீட்டுக் கிளம்பி நடந்துக் கொண்டிருந்தபோது நரேன் திடீரென என் கால் முன் மண்டியிட்டான். என் ஷூ லேஸ் அவிழ்ந்திருந்தது.
"உன்னிடம் எத்தனை முறை செல்வது. ஒரு வீராங்கனைக்கு இந்த விஷயத்தில் மட்டும் அலட்சியம் கூடாது. முக்கியமானப் போட்டியில் இப்படி நீ கவனக்குறைவாக இருந்தால் என்னவாகும்."
நரேன் பொறுமையாக என் ஷூ லேஸைக் கட்டி விட்டான்.
அவன் மிகவும் நல்ல மூடில் இருப்பதுப் புரிந்தது. இப்போது இந்த விஷயத்தைப் பற்றி பேசுவது பொருத்தமாக இருக்கும் என மெல்ல ஆரம்பித்தேன்.
"நரேன், உங்களுக்கே நன்றாகத் தெரியும், இந்த வருடம் நான் காலேஜ் பக்கம் சுத்தமாக எட்டிக் கூடப் பார்க்கவில்லை. அடுத்த வாரம் பைனல் இயர் பரீட்சை. நான் கண்டிப்பாகப் போக வேண்டும்."
"அதைப் பற்றி எல்லாம் நீ கவலைப் படாதே. உன் கல்லூரி துணை வேந்தரிடம் அமைச்சரே பேசி விட்டார். உன்னை டிஸ்டிங்க்ஷனில் பாஸ் செய்து விடுவார்கள். நீ ஒலிம்பிக் போட்டியில் மட்டும் கவனம் செலுத்து."
"கவலை அதைப் பற்றி இல்லை. என் பட்டப்படிப்பு மீது எனக்கு எவ்வளவு அக்கறை உண்டு என்பது உங்களுக்கே தெரியும். கொஞ்சம் அதற்கும் நேரம் ஒதுக்க சம்மதிக்கலாம் அல்லவா? உங்களுக்காகத் தான் நான் எல்லாவற்றையும் தியாகம் செய்து நிற்கிறேன்."
"நீ எனக்காகத் தியாகம் செய்யவில்லை. இந்த நாட்டுக்காகத் தியாகம் செய்கிறாய். உனக்கும் போர் முனையில் நிற்கும் ராணுவ வீரனுக்கும் கொஞ்சமும் வித்தியாசம் கிடையாது."
"35 வயதிற்கு மேல் ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு வாய்ப்பு மங்கி விடும். அதன் பிறகு என எதிர்காலம் பற்றி யோசித்துப் பாருங்கள்."
"நீ இந்த முறை தங்க மெடல் வாங்கு. அதன் பிறகு நடப்பதைப் பார். அரசாங்கம் கோடி கணக்கில் பணத்தைக் கொட்டும். விளம்பரங்களில் நடித்தால் பணத்தை அள்ளுவாய். நீ விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் தனியார் நிறுவனங்கள் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு உனக்கு வேலை கொடுப்பார்கள்."
"அப்படியானால் நமக்குள் ஒரு ஒப்பந்தம் செய்துக்க கொள்ளலாம். இந்த ஒலிம்பிக் போட்டியோடு முடித்துக் கொள்வோம். அதன் பிறகு என்னை விட்டு விடுங்கள்."
"அது என் கையில் கிடையாது. நீ இந்த முறை மெடல் வாங்கினால் மக்கள் எதிர்பார்ப்பு பெருகி விடும். அவ்வளவு சீக்கிரம் நீ ஓய்வு பெற்று விட முடியாது."
எங்களிடையே ஒரு நீண்ட மௌனம் நிலவியது.
நரேன் என் தோள் மீது கை போட்டு, "நிஷா நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே. நீ ஜஸ்ட் 9am - 5pm ஒரு கம்பெனியில் வேலை பார்க்கப் பிறந்தவள் இல்லை. உன் தகுதியே வேறு. நீ ஒரு நட்சத்திரமாக ஜொலிக்கப் பிறந்தவள். உன்னைப் பார்த்து எதிர்காலத்தில் பல பெண்களுக்கு விளையாட்டில் ஈடுபாடு வரும்."
இதையே நான் படித்தும் அறிவியல் துறையில் சாதிக்க முடியும் என்று அவனிடம் சொல்ல நாக்குத் துடித்தது. ஆனால் தேவையில்லாமல் விவாதம் வளரும் என்று பேசாமல் இருந்தேன்.
நரேன் முகத்தில் கவலைக் கோடுகள் தெரிந்தது. அவன் முகம் இறுக்கமாக இருந்தது. ஹாஸ்டல் வந்த பிறகு என்னிடம் விடை கூடப் பெற்றுக்கொள்ளாமல் சென்று விட்டான்.

                                                          நரேன்


என் அறைக்கு வந்ததும் தலைக்குள் ஏதோ விண் என்று தெறிப்பது போல இருந்தது. நிஷா இன்று பேசியது எதுவும் சரியாகப் படவில்லை. ஏதோ நடந்து விடுமோ என்ற பயம் மனதில் உண்டானது.
அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தேன். பிறகு ஒரு முடிவுடன் நிஷாவின் ஹாஸ்டலுக்குச் சென்றேன்.
அங்கிருந்த வாட்ச்மேனிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தேன்.
"அண்ணே, இங்க நிஷானு ஒரு பொண்ணு தங்கியிருக்கில்லே? அவளைப் பற்றிக் கொஞ்சம் பேசணும்."
"எந்த நிஷா. ஒலிம்பிக்கில் ஒடப் போகுதே அந்தப் பொண்ணா?"
"ஆமான்னே, அவளோட கோச் தான் நான்."
"சொல்லுங்க தம்பி, நான் என்ன செய்யணும்."
"நிஷா அடிக்கடி வெளியே போவாளா?"
"ரொம்ப வெளியே சுத்தாது. அவளுக்கு இங்கிருக்கிறது ஒரே பிரண்ட் தான். அவளோட எப்போதாவது வெளியே சாப்பிடப் போவாள். அவ்வளவு தான்."
"ஒண்ணுமில்லே இன்னும் மூணு மாசத்துல ஒலிம்பிக் ஆரம்பிக்குது இல்லே. கொஞ்சம் கடுமையா இருக்க வேண்டியிருக்கு. அவளைப் பயிற்சியைத் தவிர வேற எதற்கும் வெளியே போக அனுமதி கொடுக்காதீங்க. கேட்டா மினிஸ்டரோட ஆர்டர்னு சொல்லுங்க."
"சரி தம்பி. நம்ம நாட்டுக்கு ஒரு மெடல் வாங்கிக் கொடுங்க. அதுக்காக என்ன வேணும்னாலும் செய்யறேன்."
"இன்னொரு உதவி வேணும். அந்தப் பொண்ணோட ரூம் சாவி வேணும்."
"அவளுக்குத் தெரியாம ரூமுக்கு நீங்க போறது தப்பு. இந்த உதவி செய்யறது கஷ்டம்."
"டீன் ஏஜ் வயசுப் பொண்ணு இல்லையா. எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லையானு கொஞ்சம் பார்க்கணும். இந்த ஒரு முறை உதவி செய்யுங்க."
"சாவி வார்டன் ரூமில் இருக்கு. நான் போய் எடுத்து வரேன்."
சிறிது நிமிடங்களில் சாவியுடன் வந்தார்.
நான் நிஷாவின் ரூமுக்குள் நுழைந்து அலசிப் பார்த்தேன். அவள் பெட்டியில் சில புத்தகங்கள் இருந்தன. அவற்றை எடுத்துக் கொண்டு ரூமைப் பூட்டி சாவியை வாட்ச்மேனிடம் கொடுத்தேன்.
என் ஹாஸ்டல் வந்ததும் ஒரு ஓரமாக சென்று புத்தகங்கள் அனைத்தையும் கொளுத்தினேன்.
மனதுக்கு இப்போது ஒரு நிம்மதி வந்தது. நிம்மதியாக உறங்கினேன்.
அடுத்த நாள் மைதானத்திற்குச் சென்றேன். எப்போதும் எனக்கு முன் நிஷா வந்து விடுவாள்.
அன்று நான் வெகு நேரம் காத்திருந்தேன். நிஷா வரவே இல்லை.

                                                   

                                                 நிஷா


என் அறைக்கு வந்ததும் அன்றைய செய்தித்தாள் என் கண்ணில் பட்டது. அதில் என் புகைப்படம் பார்த்து வியப்பாக இருந்தது. இந்த வருட ஒலிம்பிக் நட்சத்திரங்களில் நானும் ஒருவள் என்று பிரதானமாக எழுதியிருந்தார்கள்.
என் மனதிலிருந்த சஞ்சலம் குறைவது போல இருந்தது. என் மீது இருக்கும் பொறுப்பு எவ்வளவு முக்கியமானது என்றும், ஒரு நாட்டின் எதிர்பார்ப்பையே தாங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதும் புரிந்தது.
இந்த ஒரு ஒலிம்பிக் மட்டும் முழு முயற்சியுடன் பங்கு பெற வேண்டும் என்றும் அதன் பிறகு படிப்பில் கவனத்தைத் திருப்பலாம் என்றும் தீர்மானத்துடன் முடிவெடுத்தேன்.
நரேனுடன் பேச வேண்டும் என்றது தோன்றியது. அப்போது என் தோழி சுனிதா சாப்பிட அழைத்தாள்.
மெஸ்ஸுக்குச் சென்றுத் திரும்பி வந்தப் போது என் பெட்டி வைத்திருக்கும் இடம் மாறியிருந்தது தெரிந்தது. யாரோ அறைக்குள் வந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் தோன்ற பெட்டியை திறந்தேன்,
பெட்டியைத் திறந்துப் பார்த்ததும் அதிர்ச்சி காத்திருந்தது. என் புத்தகங்கள் எதுவும் காணவில்லை.
பக்கத்து அறைகளில் சென்று விசாரித்தேன். நரேன் என் அறைக்குள் வந்ததைப் பார்த்தாக ஒருவள் சொன்னாள்.
நேராக நரேன் இருக்கும் ஹாஸ்டல் சென்றேன். வாசலில் வாட்ச்மேனிடம் அனுமதிக் கேட்டுக் கொண்டிருந்த போது.என் காலில் ஒரு கருகிய தாள் பட்டது.  அது வந்த இடத்தை நோக்கிச் சென்றேன். என் புத்தகங்கள் எல்லாம் எரிக்கப்பட்டது தெளிவானது.
எனக்குள் கோபம் கொந்தளித்தது. நரேன் இவ்வளவு கீழ்மையானவனா? நேராக என் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டு அழுதேன். மனதிற்குள் சில திட்டங்கள் தோன்றின.
என் போனை எடுத்து திருச்சியில் என்னுடன் படிக்கும் வினோத்தைத் தொடர்புக் கொண்டுப் பேசினேன். கல்லூரியில் அவன் என் பின்னே அலைந்துக் கொண்டே இருப்பான். அவனுக்கு அழகை விட அறிவான பெண்கள் என்றால் பிடிக்கும்.
"வினோத் எனக்கு ஒரு அவசர உதவி தேவை. இன்றிரவு டெல்லியிலிருந்து சென்னை வரும் ட்ரெயினில் டிக்கெட் தேவை. முடிந்தால் சென்னையிலிருந்து திருச்சிக்கு இன்னொரு ட்ரைனிலும் டிக்கெட் எடுத்து விடு."
"ஓகே. ஆனால் இந்த உதவி செய்தால் என்னை நீ காதலிப்பாய் என்று உறுதி கொடுப்பாயா?"
"அதைப் பிறகு பார்க்கலாம். இந்த உதவி மட்டும் நீ செய்தால் உன்னை நான் மறக்கவே மாட்டேன்"
"சரி முத்தம் மட்டும் கொடு. இப்போது போனில் ஒன்று. நேரில் இன்னொன்று."
முத்தம் தானே. தொலைந்துப் போகட்டும் என்று கொடுத்தேன்.
சில நிமிடங்களில் டிக்கெட்டுக்கான SMS வந்தது. நான் உடனே கிளம்பி வாசல் வரை வந்தேன். பிறகு ஏதோ பொறி தட்டப் பின் வாங்கினேன். ஹாஸ்டலுக்குத் திரும்பிச் சென்று அங்குத் தங்கியிருக்கும் நஸ்லீனிடம் பர்தா துணியைக் கெஞ்சி வாங்கினேன். அதை அணிந்துக் கொண்டு ஹாஸ்டலை விட்டு வெளியேறினேன். வாட்ச்மேன் சந்தேகப்படாதது நிம்மதியாக இருந்தது.
ஒரு ஆட்டோ பிடித்து ரயில் நிலையம் நோக்கிச் சென்றேன். சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பது போல இருந்தது.

                                             நரேன்


நிஷாவுக்காக வெகு நேரம் காத்திருந்து சலித்துப் போனேன். அவள் தங்கியிருந்த ஹாஸ்டலுக்குச் சென்றேன். அவள் அறையின் சாவியை வாட்ச்மேனிடம் வாங்கிக் கொண்டு அறையைத் திறந்துப் பார்த்ததும் அதிர்ச்சி காத்திருந்தது. அவள் அறையில் எந்தப் பொருளுமின்றிக் காலியாக இருந்தது. அவள் செல்போனுக்கு அடித்துப் பார்த்தும் பதிலில்லை.
அவள் எங்கு சென்றிருக்கக்கூடும் என்ற சிந்தனை எழுந்தது. ஹாஸ்டலைச் சுற்றி பலரிடம் விசாரித்தும் பலனில்லை. நேரமாகக் கோபமும் வந்தது.
ஒரு வேலை அவள் திருச்சிக்கே சென்றிருக்கக் கூடுமோ என்று யோசித்தேன். அது தான் நடந்திருக்க வேண்டும் என்று திட்டவட்டமாகத் தோன்றியது.
நேராக நானும் திருச்சி போகலாமா என்று யோசித்து அதைக் கைவிட்டேன்.
ஒலிம்பிக் விளையாட்டை ஒருங்கிணைக்கும் இயக்குநர் கணேஷ் ராமைச் சந்தித்து அவரிடம் விபரங்கள் கூறினேன். அவர் தன முழுக் கோபத்தையும் என் மேல் காட்டினார்.
"நீ முட்டாள்தனமான வேலை செய்திருக்கிறாய். அவளுடைய புத்தங்களை எரித்து நீ சாதித்தது என்ன?"
"அவள் ஓட்டத்தில் முழு மனதுடன் ஈடுபடுவாள் என்று நினைத்து அதைச் செய்தேன்."
"உன் மேலிருக்கும் கோபத்தை அவள் இப்படி வெளிக்காட்டியிருக்கிறாள்."
"நான் திருச்சி சென்று அவளை சந்தித்துப் பேசவா?"
"இல்லை இதை வேறுவிதமாக அணுக வேண்டும். நான் அவளுக்கு ஒரு சின்ன மிரட்டல் கடிதம் அனுப்பப் போகிறேன். பதறிக்கொண்டு டெல்லி திரும்புவாள் பார்."
இயக்குனர் தன் திட்டங்களைக் கூறினார். எனக்கும் அது நல்லதாகத் தோன்றவே விடைபெற்றுக் கிளம்பினேன்.

                                                    

                                                    நிஷா


இரண்டு ரயில்கள் மாறி ஒரு வழியாக திருச்சி வந்து சேர்ந்தேன். வீட்டில் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி. தேவையில்லாமல் பயப்படுவார்கள் என்று நான் வருவது பற்றி முன்னதாகச் சொல்லவில்லை.
நல விசாரிப்புகள், தடபுடலான விருந்துக்குப் பிறகு மெதுவாக ஏன் வந்தேன் என்பது பற்றிப் பேச்சு ஆரம்பித்தது. அப்பா நேராக விஷயத்துக்கு வந்தார்.
"நீ ஒலிம்பிக் எல்லாம் முடிந்தப் பிறகு தான் திருச்சி வருவாய் என்றுக் கூறியிருந்தாயே? நாங்கள் கூட அடுத்த மாதம் உன்னை டெல்லி வந்து சந்திக்கலாம் என்று நினைத்திருந்தோம். இப்போது திடீரென்று வந்திருக்கிறாய். ஏதாவது பிரச்சினையா?"
"நான் இனிமேல் ஓடப்போவதில்லை அப்பா."
"என்ன இப்படி சொல்லுகிறாய். நீ கண்டிப்பாக மெடல் வாங்குவாய் என்று நாடே எதிர்பார்க்கிறது. போன வாரம் கூட ஹிந்து பத்திரிக்கையிலிருந்து எங்களைப் பேட்டி கண்டார்கள். நீ ஜெயித்தால் எங்களுக்கு எவ்வளவுப் பெருமையாக இருக்கும். நீ என்னவென்றால் இப்படிச் சொல்கிறாய்."
"நான் படிக்க வேண்டும்.  பெரிய சைன்டிஸ்ட்டாக வேண்டும்.  ஓடுவது, விளையாடுவது  இதிலெல்லாம் எனக்கு ஈடுபாடு இல்லை. அந்த நரேன் வேறு மிகவும் தொல்லைத் தருகிறான்."
"இந்த முறை ஜெயித்து விட்டு, பிறகுக் கூடப் படிக்கலாமே?"
"அது நடக்காதோ என்று பயமாக இருக்கிறது. நான் இந்த முறை கண்டிப்பாக மெடல் வாங்கி விடுவேன். அது தங்கமா அல்லது வெள்ளியா என்பதில் தான் சந்தேகம். மெடல் வாங்கியப் பிறகு கிடைக்கும் பணம், புகழ் என்னை இதில் அடிமைப்படுத்தி விடுமோ என்று பயமாக இருக்கிறது. படிக்க வேண்டும் என்ற எனது உறுதி தளர்ந்து விடுமோ என்று சந்தேகமாக உள்ளது."
“நீ சைன்டிஸ்ட்டாகவே ஆகிறாய் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்தத் துறையில் நீ ஒரு சராசரியாக இருந்து விட்டால் என்ன செய்வாய். இயல்பாகவே உனது திறமை விளையாட்டில் என்றிருக்கும் போது ஏன் அதை வீணடித்துச் சஞ்சலப்படுகிறாய்."
"நான் சராசரி சைன்டிஸ்ட்டாக இருப்பேனா அல்லது அந்தத் துறையில் புகழ் பெறுவேனா என்பது தெரியவில்லை. ஆனால் மிகவும் மகிழ்ச்சியான சைன்டிஸ்ட்டாக இருப்பேன். நான் வேலை செய்யும் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்துச் செய்வேன். அது போதும் எனக்கு."
"என் வாழ்க்கையையே உனக்கு உதாரணமாக சொல்கிறேன். நான் ஒரு கட்டிடக்கலை நிபுணராக வேண்டும் என்று இளம் வயதில் விருப்பப்பட்டேன். ஆனால் உன் தாத்தாவின் பேச்சைக் கேட்டு இப்போது இந்தியாவின் மிகச் சிறந்த வக்கீலாக இருக்கிறேன். நல்ல பணம், வசதி, மகிழ்ச்சியான குடும்பம் என்று நிறைவான வாழ்க்கை எனக்கு அமைந்திருக்கிறது."
"நீங்கள் முழு அளவில் மகிழ்ச்சியுடன் இல்லை. அது எனக்கு நன்றாகத் தெரியும். இப்போதும் சட்டம் பற்றி புத்தகங்கள் படிப்பதை விட கட்டிடக்கலை பற்றித்தான் நிறைய படிக்கிறீர்கள். ஏதாவது வித்தியாசமான கட்டிடம் வழியில் பார்த்தால். உடன் வரும் எங்களைக் கூட மறந்து அதில் லயித்து விடுகிறீர்கள்."
"அதுவும் ஒரு விதத்தில் நல்லது தானே. நான் மட்டும் எனக்குப் பிடித்தத் துறையில் இருந்திருந்தால் அதில் முழுமையாக மூழ்கியிருப்பேன். உங்களுடன் நேரம் செலவளித்திருக்க மாட்டேன். என் தொழில் உங்களுக்கு ஒரு சுமையாக இருந்திருக்கும்."
"நீங்கள் எங்களுடன் இப்போது நேரம் செலவிடுகிறீர்கள் என்பது உண்மை தான். ஆனால் அதில் சிறிது விலகல் இருக்கும். ஆனால் நீங்கள் விருப்பப்பட்டத் தொழில் செய்திருந்தால் எங்களுடன் செலவிடும் குறைவான நேரங்களும் நிறைவான நேரங்களாக இருந்திருக்கும்."
"சரி அடுத்து என்ன செய்யப் போகிறாய்."
"நான் மீடியாவிடம் போகப் போகிறேன். நான் விளையாட்டிலிருந்து விலகப் போவதை அறிவிக்கப் போகிறேன்."
"மக்கள் உன்னை வெறுப்பார்கள். அரசாங்கம் வேறு விதமாக உன்னைக் கட்டாயப்படுத்தும்."
"நான் கோர்ட்டுக்குச் செல்லக் கூடத் தயார். நான் இதை ஹாண்டில் செய்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள்."
அப்பா கவலை தோய்ந்த முகத்துடன் டிவி பார்க்க முன்னறைக்குச் சென்று விட்டார். நான் பத்திரிக்கைகளுக்குப் போன் செய்ய ஆரம்பித்தேன்.
அடுத்த நாள் அப்பாவும் நானும் சென்னை சென்றோம். நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் அன்று மாலை பத்திரிகைகளுக்காக பேட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நான் என் முடிவைத் தெரிவித்தேன். நிருபர்களிடம் பலத்த சலசலப்பு ஏற்பட்டது. அவர்கள் இதைச் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. காரசாரமான கேள்விகள் என் மீது தொடுத்தனர்.
"நீங்கள் இந்திய நாட்டு மக்களை ஏமாற்றி விட்டீர்கள் என்பதை நீங்கள் உணரவில்லையா?"
"நீங்கள் எந்தப் பத்திரிகை?"
பத்திரிக்கையின் பெயரை அந்த நிருபர் சொன்னார்.
"உங்கள் பத்திரிகையில் தானே சைனாவில் எப்படி பயிற்சி என்ற பெயரில் விளையாட்டு வீரரகளைக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று எழுதியிருந்தார்கள். வீர்களின் சொந்த விருப்பம் பற்றிக் கொஞ்சம் கூட அக்கறையில்லாமல் வற்புறுத்தி ஒலிம்பிக்கிற்காக கடுமையானப் பயிற்சி அந்த நாட்டு அரசாங்கம் அளிக்கிறது என்று நீங்கள் தானே எழுதியிருந்தீர்கள்."
"ஆம் அந்தக் கட்டுரை நான் தான் எழுதியிருந்தேன்."
"அதற்கும் என் நிலைமைக்கும் என்ன வித்தியாசம். என் விருப்பத்திற்கு கொஞ்சமும் மதிப்பின்றி வற்புறுத்தி நமது அரசாங்கம் ஒலிம்பிக்கிற்கு அனுப்ப நினைக்கிறார்கள். இது ஒரு ஜனநாயக நாடு தானே. அல்லது நமது நாட்டிலும் அடக்குமுறை ஆட்சி தான் நடக்கிறதா?"
"உனக்காக நமது அரசாங்கம் எவ்வள்வு செலவு செய்திருக்கிறார்கள். அது பற்றிக் கொஞ்சமாவது கவலை இருக்கிறதா உனக்கு?"
"நீங்கள் ராகுலின் தந்தை தானே. உங்களை நான் ஆர்.ஈ.சி.யில் பார்த்திருக்கிறேன். உங்கள் மகன் என் சீனியர். இப்போது அவர் என்ன செய்கிறார்?"
"சம்பந்தமில்லாதக் கேள்வி. இருந்தாலும் சொல்கிறேன். அவன் இப்போது அமெரிக்காவில் இருக்கிறான். மைக்ரோசாப்டில் வேலை செய்கிறான்."
"உங்கள் மகன் ஆர்.ஈ.சியில் படிப்பதற்கு அரசாங்கம் எவ்வளவு சலுகை அளித்தார்கள் தெரியுமா? அந்த சலுகையையில்லாமல் உங்கள் மகன் கனவிலும் படிப்பை முடித்திருக்க முடியாது. தான் கற்ற அறிவை சொந்த நாட்டிற்குப் பயன்படுத்தாமல், உங்கள் மகன் அமெரிக்காவிற்கு கூலி வேலை செய்கிறானே? அது பற்றி முதலில் கவலைப்படுங்கள்."
"நீ செய்வது தேசத்துரோகம்."
"தேசத்தின் மீது அவ்வளவு அக்கறை இருந்தால் எல்லையில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நம்மைக் காக்கும் ராணுவத்தில் சேர வேண்டியது தானே. கோழை போல இங்கு நின்று ஒரு சாதாரணப் பெண்ணிடம் கேள்வி கேட்கிறாய்"
கூடியிருந்த நிருபர்கள் அனைவரும் கூச்சல் போட ஆரம்பித்தனர்.
"நான் ஒன்று மட்டும் கூறுகிறேன். நான் செய்வது தேசத்துரோகம் என்று மட்டும் நினைக்காதீர்கள். நான் chaos theory என்ற அறிவியல் துறையில் நோபல் பரிசு வாங்கி நமது நாட்டைப் பெருமைப்படுத்துவேன் என்று உறுதி கூறுகிறேன்."   
நான் கூறியதை யாரும் காதில் வாங்கி கொள்ளவில்லை. பிரச்சினைப் பெரிதாகும் என்பதை உணர்ந்து அப்பாவும் நானும் உடனடியாக அங்கிருந்துக் கிளம்பினோம். 
நாங்கள் எங்கள் அறையை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தப் போது ஒரு நடுத்தர வயதுப் பெண் என்னை நிறுத்திக் கேள்வி கேட்டாள்.
"மேடம், நீங்கள் நிஷா தானே?"
"ஆம். நீங்கள் தானே ஒலிம்பிக்கில் கலந்துக் கொள்வதாக இருந்தது."
"ஆம்."
எதிர்பாராதவண்ணம் அப்பெண் என் கன்னத்தில் அறைந்து விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து விட்டாள்.
எனக்கு அழுகை பொங்கி கொண்டு வந்தது.
"நான் அவ்வளவு மோசமா?" என்று கதறியவண்ணம் அப்பாவின் தோளில் சாய்ந்தேன். அப்பா என்னை அணைத்த வண்ணம் ரூமிற்கு அழைத்துச் சென்றார்.
அடுத்த நாள் திருச்சி வந்து சேர்ந்த போது இன்னொரு அதிர்ச்சி எனக்கு காத்திருந்தது.
அம்மா ஒரு கடிதத்தை என்னிடம் நீட்டினாள்.
விளையாட்டுத் துறையிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. நான் ஒலிம்பிக்கிலிருந்து விலகுவதைக் கண்டித்தும் அபராதமாக 50 லட்சம் கட்ட வேண்டும் என்றும் கடிதத்தில் எழுதியிருந்தது
எனக்கு இடி விழுவதுப் போல இருந்தது. அப்பா இது பற்றிச் சிறிதும் சலனப்படவில்லை.
"இதெல்லாம் கோர்ட்டில் செல்லாதம்மா. நாம் இதை எதிர்த்து ஒரு கேஸ் போடுவோம். உனக்காக நானே ஆஜர் ஆகிறேன். இதெற்கெல்லாம் சட்ட ரீதியான வலு அரசாங்கத்திடம் இல்லை."
அப்பா சொன்னது மிகவும் ஆறுதலாக இருந்தது. ஆயினும் டெல்லி சென்று விளையாட்டுத் துறை இயக்குநரைச் சந்திப்பது என்று முடிவு செய்தோம்.                                                                                   

                                                        ஆர்யா


நான் பொழுதுபோக்கிற்காக செலவு செய்யும் நேரம் மிகவும் குறைவு. அறிவியல் குறித்த புத்தகங்கள் படிப்பேன். அது போக தொலைக்காட்சியில் இரவுச் செய்திகள் பார்ப்பேன். இன்று செய்திகளில் ஒலிம்பிக் வீராங்கனை நிஷாவின் பேச்சு சுவராஸ்யமாக இருந்தது. எனக்குத் தெரிந்து விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் சூழ்நிலைக்கு காரணமாக படித்து ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். ஆனால் படிப்பில் ஆர்வமுள்ள இந்தப் பெண் விளையாட்டில் மாட்டிக் கொண்டது வியப்பாக இருந்தது.

நிருபர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் அவள் சாமர்த்தியமாக பதில் அளித்துக் கொண்டிருந்தாள்.

முடிவில் அவள் கூறியது தான் என்னைப் பிரமிக்கச் செய்தது. Chaos Theory துறையில் சாதித்து நோபல் பரிசு வாங்குவேன் என்று உறுதியுடன் கூறியதை நிருபர்கள் யாரும் கவனிக்கவில்லை.

நான் தேடிய உதவியாளர் கிடைத்து விட்டாள். நான் முடிவு செய்து விட்டேன்.                                    

 

                                                            நரேன்


கணேஷ் ராமின் அறையில் அமர்ந்து நிஷா அளித்தப் பேட்டியின் விடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
"இந்தப் பெண்ணை மிகச் சாதாரணமாக எடை போட்டு விட்டேன். மிகவும் தைரியசாலியாகத் தான் இருக்கிறாள்."
"நீங்கள் அனுப்பிய கடிதத்திற்குப் பலனிருக்காது என்று உங்களுக்குத் தோன்றுகிறதா.?
"உண்மையைச் சொல்ல வேண்டுமானால் நான் அனுப்பிய மிரட்டல் சட்டப்படிச் செல்லாது."
"அவள் தந்தையும் ஒரு வக்கீல் தான் என்று அவள் சொல்லியிருக்கிறாள்."
"இதை நீ முன்னரே சொல்லியிருக்க வேண்டும்.  வேறு விதமாக நாம் இதை அணுக வேண்டும். மக்களுக்கு அவள் மேல் வெறுப்பு வருமாறு செய்ய வேண்டும். எல்லாப் பத்திரிகைகளுக்கும் நான் சொல்வது போல செய்தி வரும்படி பார்த்துக் கொள்."
"அதற்கெல்லாம் அவள் பணிவாள் என்று எனக்குத் தோன்றவில்லை. அவள் கல்லூரியில் தொடர்ந்து படிக்க முடியாதபடிச் செய்யலாமா?"
"அவள் அப்பா வக்கீல் என்பதால் இதற்கும் கோர்ட் சென்று அவளால் போராட முடியும். இப்போதைக்கு நம் ஒரே துருப்புசீட்டு மீடியா தான். அதை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும்."
கணேஷ் ராமிடம் மேலும் விபரங்கள் கேட்டுக் கொண்டு நான் அங்கிருந்துக் கிளம்பினேன்.


                                                     நிஷா


கணேஷ் ராமை நான் இதற்கு முன் நேரில் சந்தித்தது இல்லை. அவர் ஒரு மிகச் சிறந்த நிர்வாகி எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கிணையான சாமர்த்தியமும், அறிவாற்றலும் இருப்பதை, அவரிடம் பேசிய சில நேரங்களில் எனக்குத் தெளிவானது.
"உனக்கு விளையாட்டில் ஆர்வமில்லையென்றால் அதை முதலிலேயே சொல்லித் தொலைக்க வேண்டியது தானே. கடைசி நிமிடத்தில் ஏன் பிரச்சினை செய்கிறாய்."
"நரேன் எனக்கு மிகவும் தொல்லைகள் தருகிறான்."
"அப்படியானால் உன் பயிற்சியாளரை மாற்றி விடுகிறேன்."
"அது சரி வராது. இருக்கும் குறைந்த கால அவகாசத்தில் புதிதாக வருபவருக்கு என் பலம் மற்றும் பலவீனம் தெரியாது. மேலும் இவ்வளவு நாட்கள் இருதலைக் கொல்லி எறும்பு போலக் குழப்பத்தில் இருந்தேன். இப்போது தான் தெளிவு பிறந்துள்ளது. என் எதிர்காலம் அறிவியல் துறையில் தான் என்று முடிவெடுத்திருக்கிறேன்."
"அப்படியானால் நான் கடிதத்தில் எழுதியது போல நீ அபராதம் கட்ட வேண்டும்."
அப்பா - "நிஷா எந்த விதமான ஒப்பந்தமும் கையெழுத்திடவில்லை. அதனால் இது சட்டப்படி செல்லாது."
"உன் மீது மக்களுக்குப் பெரும் வெறுப்புள்ளது. உன்னைத் தேசத்துரோகியாகத் தான் அனைவரும் பார்க்கிறார்கள்."
"நான் தேர்ந்தெடுக்கும் அறிவியல் துறையில் பெரிதும் சாதிப்பேன். மானுடத்திற்குப் பெரும் புதிராக இருக்கும் கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிப்பேன். இதன் மூலம் நம் எதிர்கால சந்ததியினர் கூடப் பெரிதும் பயனடைவார்கள். ஒலிம்பிக்கில் மெடல் வாங்குவது நாட்டுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் தான். ஆனால் அது சில நாட்களில் மறந்து விடும். நான் எதிர்காலத்தில் அறிவியல் துறையில் சாதிக்கும் விஷயங்கள் தலை முறையை தலைமுறையாக மக்களுக்குப் பலனளிக்கும். இந்த இரண்டில் எது முக்கியம் என்று யோசித்து முடிவெடுங்கள்."
அப்பா - "நிஷாவை உங்கள் மகள் போல நினைத்து உதவி செய்யுங்கள்.  பிரச்சினையைப் பெரிதாக்காமல் இதோடு விட்டு விடலாம்."
கணேஷ்ராம் சிறிது நேரம் யோசித்தார்.
"நீ கல்லூரியில் முதல் மாணவி என்று கேள்விப்பட்டேன். உன்னால் அறிவியல் துறையில் சாதிக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உன் விருப்பம் போல் செய்துக் கொள். நான் உனக்கு ஒரே ஒரு அறிவுரை மட்டும் கூறுகிறேன். எப்போதும் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று இருக்காதே. முடிவெடுக்க நேரம் எடுத்துக் கொள் முடிவெடுத்தப் பின் அதிலிருந்து பின் வாங்காதே. உன் எதிர்காலத்திற்கு என் வாழ்த்துக்கள்."
அப்பாவும் நானும் நிம்மதிப் பெருமூச்சு விட்டு, கணேஷ் ராமிடம் விடை பெற்றுக் கொண்டோம்
இரண்டு மாதங்கள் கழிந்தது.வாழ்க்கை சிறகடித்துப் பறக்கும் சிட்டுக்குருவி போல சென்றது.என் கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்தேன். முதல் மாணவியாகத் தேர்வு பெற்றேன். பல கம்பெனிகளிலிருந்து வேலை வாய்ப்பு வந்தது. ஆனால் எதுவும் எனக்குத் திருப்தியாக இல்லாதது சற்று சோர்வாக இருந்தது.
அப்போது தான் ஆர்யாவை சந்தித்தேன்.ஒரு நாள் காலை என் வீட்டிலேயே வந்து சந்தித்தார். தன்னை அறிமுகப்படுத்திய பின் தனது ஆராய்ச்சிக்கு உதவி செய்ய அழைத்தார்.பிறகு தனது ஆராய்ச்சியைப் பற்றி விளக்கினார். உடனே இந்த வேலையை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அடுத்த நாளே டெல்லிக்குப் பயணமானோம். முதல் இரண்டு வாரங்கள் பயிற்சி வகுப்புகள் நடந்தது. அதன் பிறகு ஒரு நாள் ஆர்யா தனது அறைக்கு வருமாறு என்னை அழைத்தார்.
"நான் உன்னை ஏன் இந்த வேலைக்குத் தேர்வு செய்தேன் தெரியுமா? டிவியில் உனது பேட்டியைக் கண்டேன். உனக்கு chaos theory பற்றி ஆர்வம் இருப்பது எனக்கு வியப்பளித்தது. இந்தியாவில் கல்லூரிகளில் இது தொடர்பாகப் பாடங்கள் அதிகம் கிடையாது. பெரும்பாலும் இந்தத் துறையில் ஆராய்ச்சிகள் நடப்பதில்லை. மாணவர்கள் கணினித் துறையில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். உனக்கு இதில் பிடித்தம் இருந்தது நீ தேர்வானதற்கு முக்கியக் காரணம். அது மட்டுமல்ல இயல்பாக ஒரு வீராங்கனைக்கு இருக்க வேண்டிய தீவிரமும், இலக்கை அடைவதற்குத் தேவையான உக்கிரமும் இருக்கிறது. அது இந்த ஆராய்ச்சிக்கு அவசியம் தேவை."
ஆர்யா பேசுவதை நிறுத்திவிட்டு சில நொடிகள் என் அசைவுகளைக் கவனித்தார். அவர் சொல்வதை நான் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆர்யா மேலும் தொடர்ந்தார்.
"உனக்கு Butterfly Effect பற்றித் தெரியுமா?"
"தெரியும். பூமியின் எங்கோ ஒரு மூலையில் நடக்கு ஒரு சிறு பட்டாம்பூச்சியின் படபடப்பு வேறு ஓரிடத்தில் ஒரு பெரிய பூகம்பத்தையே நிகழ்த்தும். அதாவது ஒரு சிறிய சலனம் கூட பெரும் மாற்றங்கள் நிகழ்த்த வல்லது."
"ஆம். இது பற்றி பல ஹாலிவுட் படங்களும் வந்திருக்கிறது. சாமானியர்கள் பெரும்பாலும் chaos theory பற்றி அறிந்திருப்பது இவ்வளவு தான். ஆனால் chaos theory இதோடு முடிவதில்லை. அதன் ஆழம் திகைப்பளிக்கக் கூடியது.  மற்ற அறிவியல் கோட்பாடுகள் மூலம் நாம் கணிக்க முடியாத பல புதிர்களை நாம் chaos theory மூலம் கண்டுப்பிடிக்க முடியும்."
"தெரியும். உதாரணத்திற்கு பூமியின் ஒவ்வொரு நாள் தட்ப வெப்பத்தை எடுத்துக் கொண்டால் அது ஒன்றுக்கொன்று சிறிதும் தொடர்பில்லாததாக இருக்கும். ஆனால் அதிலும் ஒரு ஒழுங்கு முறை இருக்கிறது. இன்றைய தட்ப வெப்பத்தை பூமியின் முந்தைய தட்ப வெப்பத்தின் வரலாற்றின் மூலம் கணிக்க முடியும்."
"ஆம் இது தான் இந்த ஆராய்ச்சியின் நோக்கமே. நம் டேட்டாபேஸில் பூமியின் பல்லாயிரம் ஆண்டுகளின் தட்ப வெப்ப வரலாறு இருக்கிறது. இதைப் பயன்படுத்தி அடுத்த 10 வருட பூமியின் தட்ப வெப்பத்தை நாம் கணிக்க வேண்டும். இது தான் உன் அசைன்மென்ட். இன்றிலிருந்தே இந்த வேலையை நீ தொடங்கலாம்."
ஆர்யாவிடம் பேசிவிட்டு அறையிலிருந்து வெளியே வந்த பின் என் மனதிலும் பட்டாம்பூச்சி பறப்பதை உணர்ந்தேன்.

                                                      ஆர்யா


என்னிடம் பலர் வேலை பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். தனித்திறமை கொண்டவர்கள். அவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1) முதலாமவர்கள் ஒரு வேலையை எடுத்துக் கொண்டு ஒரு கோணத்தில் தீர்வு செய்ய முயல்வார்கள். அதில் தோல்வி அடைந்தால் மற்றவரிடம் உதவி கேட்பார்கள்.
2) இரண்டாமவர் ஒரு வேலையை எடுத்துக் கொண்டு ஒரு கோணத்தில் தோல்வி அடைந்தால் பல கோணங்களில் தீர்வு செய்ய முயன்று வெற்றிகரமாக முடிப்பார்கள்.
3) மூன்றாமவர்கள் மனதிலேயே பல கோணங்களில் தீர்வுகளையும் ஓட விட்டு சிறப்பான ஒரு தீர்வை தேர்வு செய்து வேலையைக் கச்சிதமாக முடிப்பார்கள்.

நிஷா இதில் மூன்றாம் வகை. அபரிதமான திறமை இப்பெண்ணிடம் இருக்கிறது. மற்றவர்கள் 5 நாட்கள் எடுக்கக் கூடிய வேலையை ஒரே நாளில் முடித்து விடுவாள்.
தினமும் அவளை மாலை நேரம் சந்தித்துப் பேசுவேன். வேலையைத் தவிர்த்து சரித்திரம், அரசியல், தத்துவம் பற்றியும் பேசுவேன். பெரும்பாலும் பேசுபவன் நானாகத் தான் இருப்பேன். அவள் பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருப்பாள். இன்னும் வயதாகவில்லை என்பதால் நான் பேசுவதெல்லாம் அவளுக்குப் புதிதாக இருக்கும்.
ஒரு நாள் பார்க்கிங்கில் இருக்கும் என் காரை நோக்கிச் சென்ற போது தான் நான் நரேனை சந்தித்தேன். பல நாட்கள் அதிகம் குடித்திருந்தால் அவன் உடல் தளர்வாக இருந்தது. சற்று மன நிலை பிரண்டிருப்பதாகத் தோன்றியது.
என்னை நோக்கி ஓடி வந்து கால்களைப் பற்றிக் கொண்டான்.
"என் நிஷாவை என்னிடம் கொடுத்துடுங்க சார். அவள் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அவள் மெடல்களாக வாங்கி குவிக்க வேண்டும். அது தான் சார் அவள் விதி. அவளை வெறும் குமாஸ்தா வேலை செய்ய விட்டு வீணடிக்காதீர்கள். அவளை என்னிடம் கொடுத்து விடுங்கள். உங்களுக்குத் புண்ணியமாகப் போகும்"
அவன் தான் நிஷாவின் கோச் என்றும் சொன்னான். அவனை என் காரில் ஏற்றுக் கொண்டு அருகிலிருக்கும் ஹோட்டலுக்குச் சென்றோம். ஆளுக்கு ஒரு மசால் தோசை ஆர்டர் செய்தேன். மெதுவாக அவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.
"நீ நிஷாவைக் காதல் செய்கிறாயா?"
"காதலா? எனக்கா? அவள் என்னுடைய அம்பு சார். என் கனவை அந்த அம்பு ஏந்திச் செல்கிறது. வேட்டைக்காரனுக்கு தன் ஆயுதத்தைக் கண்டதும் ஒரு பரவசம்   வருமே. அதே பரவசம் தான் எனக்கும் அவள் மீது."
"அவளை மறந்து விடு. அவள் கனவுகள் வேறு. அவள் வாழ்க்கையின் நோக்கம் வேறு. உன் கனவுகளை அவள் மீது திணிக்காதே"
"இல்லை. நிஷாவுக்கு இறைவன் கொடுத்த வரம் அவளின் ஓட்டத் திறமை. அதை வீணடிப்பது அந்தக் கடவுளுக்கே செய்யும் துரோகம்."
"இறைவன் நிஷாவுக்கு இரு வகையான திறமைகள் அளித்திருக்கிறார். ஒன்று ஓட்டத் திறமை. மற்றொன்று அறிவுத் திறமை. நீ நினைப்பது போல் அவள் ஒன்றும் குமாஸ்தா வேலை செய்யவில்லை. மாபெரும் அறிவியல் மேதைகளைத் தடுமாறச் செய்த புதிர்களை அவள் தீர்வு செய்கிறாள். இதற்கு அசாத்தியமான மூளைத் திறமை தேவை. அது சாமானியர்களால் இயலாதது. இன்னும் பத்து வருடங்களில் அவளுக்கு நோபல் விருது கிடைக்கும்.  நீ அவளை விட்டு வெகு தூரம் விலகிப் போய் விடு. அது தான் நம் அனைவருக்கும் நல்லது"
திடீரென்று நரேன் வெறி பிடித்தது போல என் சட்டையைப் பற்றினான். என் கழுத்தை வலிக்குமாறு அழுத்தினான்.
"நான் ஒரு விளையாட்டு வீரன். உன்னை விட எனக்கு ஸ்டாமினா அதிகம். நம் இருவரில் யார் இலட்சியம் வெற்றி பெறுகிறது என்று பார்த்து விடுவோம்."
நான் மெதுவாக அவனிடம் ஒரு போட்டோவைக் காண்பித்தேன்.
"என்னுடன் இருக்கும் இவர் யார் தெரியுமா. டெல்லி நகரின் தலைமைப் போலீஸ் அதிகாரி. என் உற்ற நண்பர். ஒரு போன் செய்தால் போதும் உன்னை ஒரேடியாக அள்ளி ஜெயிலில் அடைத்து விடுவார். இங்கிருந்து ஓடிப் போய் விடு."
அவன் மெதுவாக என் கழுத்தை விடுத்து வெளியேறினான். விலகும் முன் என்னை நோக்கிய அவனுடைய ஏமாற்றப் பார்வை மனதை ஏதோ செய்தது

                                                           நிஷா


நம் வாழ்க்கையின் பெரும் பகுதி சலிப்புடனேயே போகிறது. அன்றாட இயந்திரத்தனம் நம்மைக் கரைத்து விடுகிறது. ஆனால் சில தருணங்கள் நம்மை பரவசத்தின் உச்சத்திற்கே அழைத்துச் செல்வதாக அமைகிறது. குறிப்பாக நாம் அதி தீவிரத்துடன் விரும்பும் ஒரு துறையில் சாதிக்கும் போது தோன்றும் உணர்வுகள் விவரிக்க முடியாதவை.
அந்தத் தருணத்தை தான் நான் இப்போது உணர்கிறேன். ஆர்யா எனக்களித்த வேலையில் நான் ஒரு பெரும் கண்டுப்பிடிப்பை செய்து விட்டேன். "யூரேக்கா" என்று கத்த வேண்டும் போல இருந்தது. ஆர்யாவின் அறையை நோக்கி ஓடினேன். அவர் யாருடனோ விவாதித்துக் கொண்டிருந்தார்.
கதவைத் திறந்து அவரிடம் உடனடியாகப் பேச வேண்டும் என்றேன். அவர் என் மீது எரிச்சல் அடைந்ததை உணர்ந்தேன்.  கதவைக் கூடத் தட்டாமல் அறைக்குள் திடீரென்று நான் நுழைந்தது தான் காரணம். பெரும்பாலான நேரங்களில் கம்பெனியின் உயர் அதிகாரிகளுடன் விவாதத்தில் இருப்பார். என்னைப் போன்ற கீழ் நிலை ஊழியர்களிடம் அவர் பேச நேரம் ஒதுக்குவதே பெரும் விஷயம். அதை நாங்கள் துஷ்பிரயோகம் செய்வது அவரை சினமுரச் செய்யும்.
"ஒரு மணி நேரம் கழித்து வா. இப்போது நான் பிசியாக இருக்கிறேன்."

"முக்கியமான விஷயம். இப்போதே பேச வேண்டும்."
"எதுவென்றாலும்" அவர் தொடங்கும்போதே நான் குறுக்கே பேசினேன்.
"இன்று வானிலை அறிக்கைப்படி டெல்லியின் உஷ்னம் 30 டிகிரி சென்டிகிரேட். இதே உஷ்ணம் 880 நாட்கள் முன் அச்சாக இருந்தது. உஷ்ணம் மட்டுமில்லாமல் இன்றைய சீதோஷ்ணத்தின் எல்லா விஷயங்களும் ஒத்திருக்கிறது."
"சோ வாட்?" என்றார் ஆர்யா கேள்வியுடன்.
"இன்றைய சீதோஷ்ணம் மட்டுமில்லை ஒவ்வொரு நாளின் சீதோஷ்ணமும் அச்சாக பல ஆண்டுகள் முன்னர் இருந்த சீதோஷ்ணத்துடன் ஒத்திருக்கிறது. இது வெறும் எதேச்சையாக நடப்பது அல்ல. இதில் ஒரு கணித ரீதியான ஒழுங்கு முறை இருக்கிறது."
"மேலும் சொல்."
"ஒரு சிறு உதாரணத்துடன் இதை விளக்குகிறேன். இன்று உஷ்ணம் 30 டிகிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் கண்டுபிடித்த இந்தக் கணித சமன்பாடுப்படி 880 நாட்கள் பிறகு இதே சீதோஷ்ணம் இருக்கும், அதற்கடுத்து 880 நாட்கள் பிறகு இது நிகழும். இவ்வாறாக தொடர்ச்சியாக இது நடக்கும்"
"அது என்ன 880 நாட்கள். இது மாறவே மாறாதா."
"மாறும். இந்த சமன்பாடு படி ஐந்து முறை 880 நாட்கள் இந்த சீதோஷண ஒற்றுமை நிகழும் 1 அதன் பிறகு 10 முறை 1760 நாட்களுக்கு ஒரு முறை சீதோஷ்ண ஒற்றுமை நிகழும். பிறகு 3520 நாட்களுக்குப் பிறகு சீதோஷண ஒற்றுமை நிகழும். This is a repetitive pattern."
ஆர்யாவின் முகத்தில் பெரும் வியப்பு தெரிந்தது.
"எப்படி இதைக் கண்டுப்பிடித்தாய்."
"Chaos Theory துணையுடன் தான். அதில் Period Doubling என்று ஒரு கான்செப்ட் இருக்கிறது. அதன்படி நம் உலகில் சில விஷயங்கள் மறுபடி மறுபடி திரும்ப நடக்கிறது. அது எப்போது நடக்கிறது என்பதை துல்லியமாகக் கணிக்க தான் Period Doubling சமன்பாடு உதவுகிறது. நான் மேற்கூறிய உதாரணத்திலேயே திரும்ப திரும்ப நிகழும் சீதோஷ்ண ஒற்றுமையில் 880, 1760, 3520 நாட்கள் என்று ஒரு ஒழுங்கு முறை தெரிகிறது அல்லவா."

"நாட்களின் ஒழுங்கு முறை இவ்வாறாக எல்லையில்லாமல் இரு மடங்காகிக் கொண்டு தொடருமா."
"இல்லை. ஒரு கட்டத்திற்குப் பிறகு இந்த ஒழுங்கு முறை சிதைந்து விடும். சீதோஷ்ணம் கணிக்க முடியாத ஒரு நிலையை அடைந்து விடும். Then chaos rules. சொல்லப்போனால் நாம் அந்தக் கட்டத்தை அடையும் கால கட்டம் வெகு தொலைவில் இல்லை."
"குளோபல் வார்மிங்." ஆர்யா பெருமூச்செறிந்தார்.
ஆர்யா எழுந்து என்னைத் தோளில் தட்டினார்.
"இந்த நாள் நம் இருவருக்கும் மறக்க முடியாததாக அமையும். இன்று நீ வீட்டிற்குச் சென்று ஓய்வெடு. உன்னுடைய வெற்றியைக் கொண்டாடு. உன் கண்டுபிடிப்பை நாளை இந்த உலகிற்குத் தெரியப்படுத்தலாம்."
நான் அறையை விட்டு செல்லும் முன் ஆர்யா என்னிடம் மேலும் பேச நினைக்கிறார் என்பதை உணர்ந்து தயக்கத்துடன் நின்றேன்.
"இன்று நரேனை சந்தித்தேன். அவனால் பிரச்சினைகள் வருமென்று நினைக்கிறேன். அவன் வன்முறையில் இறங்கக் கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது. நீ இனிமேல் நம் கெஸ்ட் ஹவுசிலேயே தங்கி கொள். அதுதான் உனக்குப் பாதுகாப்பு."
என் முகம் இருண்டது.
"உன் மகிழ்ச்சியான நாளை நரேன் கலைத்து விட அனுமதிக்காதே. உன் வேலையில் மட்டும் கவனம் கொள் மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்."
மகிழ்சசியான மனநிலையில் ஆர்யாவின் ஆர்யாவின் அறைக்குள் வந்த நான் குழப்பத்துடன் அறையை விட்டுச் சென்றேன்.

                                                    நரேன்


நான் இயற்கையில் குடிகாரன் இல்லை. வாரத்திற்கு ஒரு முறை நண்பர்களுடன் அளவாக ஒரு பெக் அடிப்பதோடு நிறுத்திக்கொள்வேன் ஒலிம்பிக்கில் பதக்கம் இழந்தப் பின் துக்கத்தை மறக்க குடிக்க ஆரம்பித்தேன். நிஷா எனக்கு மாணவியான பிறகு குடியை விட்டேன். இப்போது மறுபடியும் குடிக்க ஆரம்பித்தது அதே நிஷா தான் காரணம்.
இன்று ஆர்யாவிடம் ஏற்பட்ட அவமானம் தாங்காமல் நெஞ்சு வலித்தது. என்னால் எதுவும் செய்ய முடியாத நிலையை மனம் ஏற்க மறுத்தது.
நிஷாவை சந்திக்க முயன்றும் நடக்கவில்லை. அவள் இருக்கும் கெஸ்ட் ஹவுஸுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
ஒரு வேளை நான் இறந்தால் நிஷா அதை எப்படி எதிர்கொள்வாள். அவளுக்கு குற்றவுணர்வு வருமா. அந்தக் குற்ற உணர்வு அவளை மறுபடியும் ஓட வைக்குமா.
ஒரு முடிவுடன் நான் வேகமாக ஒரு கடிதம் எழுதினேன்.  பிறகு கையிலிருந்த விஷ மருந்தை சில நொடிகள் பார்த்தேன்.மருந்தை வேகமாக முழுங்கினேன். சில நிமிடங்களில் என் சுய நினைவை இழந்தேன்.
                                                                               

                                                          நிஷா


அன்று பிராஜெக்ட் விஷயமாக ஆர்யாவுடன் ஒரு மீட்டிங்கில் இருந்தேன். அப்போது தான் நரேனின் அந்தக் கடிதம் கிடைத்தது. அதில் அவன் தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாகவும் இறந்தப் பிறகாவது அவன் கனவை ஏற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தான்.
நான் கடிதத்தை ஆர்யாவிடம் காண்பித்தேன். அவர் வேகமாகத் தன் ஐபோனில் செய்தகளைப் பார்த்தார். நரேன் விஷம் குடித்திருந்தது, உயிருக்குப் போராடுவதும் தெரிந்தது.
உடனே ஆர்யாவின் காரில் நரேன் அட்மிட் ஆகியிருந்த ஆஸ்பிடலுக்குச் சென்று அவனை சந்தித்தோம்.
ஆர்யாவின் கைகளை நரேன் பிடித்துக் கொண்டான்.
"ஒரு முறை. ப்ளீஸ் ஒரு முறை மட்டும். நிஷாவை ஓட அனுமதியுங்கள்" 
பெரும் பிரயாசைப்பட்டு இந்த ஒரு வரி மட்டும் தான் அவனால் சொல்ல முடிந்தது. பிறகு மயக்கத்தில் ஆழ்ந்தான்.
டாக்டரிடம் விசாரித்ததில் அவன் அபாயக் கட்டத்தைத் தாண்டி விட்டதாகவும், பிழைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றுக் கூறினார்.
ஆஸ்பிடல் வீட்டுக் கிளம்பி காரில் சென்றுக் கொண்டிருந்த போது ஆர்யா எங்கள் இருவரிடையே இருந்த மௌனத்தைக் கலைத்தார்.

"நிஷா நீ ஒலிம்பிக்கில் கலந்துக் கொள்வது தான் சரி என்று எனக்கும் தோன்றுகிறது. நரேன் கேட்பது இந்த ஒரு முறை மட்டும் தானே. என்ன இரண்டு மாதங்கள் உன்னால் வேலைக்கு வர முடியாமல் போகுமா. அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. நீ ஏற்கனவே பிராஜெக்ட் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பித்திருக்கிறாய். அதனால் இந்த ஒலிம்பிக்கில் கலந்துக் கொண்டு நம் நாட்டுக்கு ஒரு மெடல் வாங்கி கொடு. நரேன் மற்றும் கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆசையையும் நிறைவேற்றியதாக அமையும். நமது கம்பெனிக்கும் பெருமை. என்ன சொல்கிறாய்."
"எனக்கு ஓட சுத்தமாக இஷ்டமில்லை."
"நீ உனக்காக ஓடவில்லை. ஓடும்போது நீ கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவை ஏந்திச் செல்கிறாய். அதை நினைவில் நிறுத்திக் கொள்."
சிறிது நிமிடங்கள் யோசித்து ஆர்யாவிடம் என் சம்மதத்தைத் தெரிவித்தேன்.
"குட். உன் பணி விடுப்புக்குத் தேவையான கம்பெனியின் காகித வேலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். ஒரு வாரத்தில் நரேன் நார்மலாகி விடுவான். அவனுடன் நீ டெல்லி செல்."
ஆர்யாவின் பெருந்தன்மையை எண்ணி வியந்துக் கொண்டிருந்தேன்.

                                                            நரேன்


நியாயமாக சொல்ல வேண்டுமென்றால் நான் ஆர்யாவைக் கோவில் கட்டிக் கும்பிட வேண்டும். நிஷாவை என்னிடம் திருப்பித் தந்ததற்காக. ஆனால் எனக்கு அவர் மீது கோபமும் வெறுப்பும் தான் இருக்கிறது. ஏதோ பிச்சை தருவது போல நிஷாவை என்னிடம் அனுப்பியதாகத் தோன்றுகிறது. நிஷாவின் முதல் விருப்பம் ஓட்டம் மீது இல்லை. ஆர்யாவைத் திருப்திபடுத்துவதற்காகத் தான் என்னிடம் வந்திருக்கிறாள்.
இரண்டே வாரங்களில் என்னுடல் தேறியது. நிஷாவின் பயிற்சிகளைத் தொடங்கினேன். என் எதிர்பார்ப்புக்கு மாறாக நிஷா அதே 10.5 நொடிகள் இலக்கை அடைந்தாள். இத்தனை மாதங்கள் பயிற்சி இல்லாததால் அவள் வேகம் குறையும் என்று நான் நினைத்தது தவறு. முன்னர் விட ஆர்வத்துடனும் ஈடுபாடுடனும் அவள் பயிற்சிகளை மேற்கொண்டாள்.
தொடர்ந்து ஒரு வாரம் பயிற்சிகள் திருப்தியாக சென்றது. நிஷா இந்த வாரம் ஒவ்வொரு நாளும்10.5 நொடிகளை சிறிதும் பிசிறின்றி முடித்துக் காட்டினாள்.
ஒலிம்பிக்கிற்கு இன்னும் 5 வாரங்கள் இருந்தது. நிஷாவுக்குக் கண்டிப்பாகத் தங்க மெடல் உறுதி.

நிஷாவும் நானும் வெளியே சென்று டின்னர் சாப்பிடும் அளவிற்கு எங்களுக்குள் நட்பு உருவானது. நான் மகிழ்ச்சியாக இருந்தேன்.
ஆனால் இது நீடிக்கவில்லை. அடுத்த வாரம் நடந்த பயிற்சியில் நிஷா 12 நொடிகள் எடுத்துக் கொண்டாள். ஏதோ ஒரு நாள் இப்படி நடந்து விட்டது என்று நானும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதற்கடுத்த நாள் நிஷா 10.5 நொடிகளில் முடித்தாள். அதற்கடுத்த நாள் 11.5 நொடிகள். அடுத்த நாள் 10.5 நொடிகள்.
அதற்கடுத்த வாரம் இதை விட மோசம். ஒரு முறை தான் நிஷா 10.5 நொடிகள் இலக்கை அடைந்தாள்.
இதன் காரணம் என்ன என்று எனக்கு விளங்கவில்லை. நிஷாவிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவள் அதே ஆர்வத்துடன் தான் ஓடினாள். அலட்சிய மனோபாவம் சுத்தமாக இல்லை.
இந்த வாரத்தோடு டெல்லியில் பயிற்சி முடிகிறது. இந்த ஞாயிறு ஒலிம்பிக் போட்டி நடக்கும் ரியோ நோக்கி பயணமாகிறோம். இந்த வாரம் முழுதும் நிஷா ஒரு முறை கூட 10.5 நொடிகள் இலக்கை அடையவில்லை. 
ரியோ செல்லும் முன் கடைசியாக இன்று பயிற்சி நடக்கிறது. நிஷா 12 நொடிகள் எடுத்துக் கொண்டாள்.
நான் கோபத்தின் உச்சத்தில் நிஷாவை அறைந்து விட்டேன். நிஷா அழுதுக் கொண்டே மைதானத்தை விட்டு ஓடி விட்டாள்.
என்ன மடத்தனம் செய்து விட்டேன். இன்றிரவு ரியோ நோக்கிப் பயணமாகிறோம். இப்போது அவளை அடித்திருக்க வேண்டியதில்லை. அவளை செல்போனில் தொடர்புக் கொள்ள முயன்றேன். அவள் போனை எடுக்கவில்லை. அவள் ஹாஸ்டல் சென்றேன். அவள் அறை பூட்டியிருந்தது.
வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறி விட்டதோ என்று பயந்தேன். அவள் தந்தைக்குப் போன் செய்தேன். அவருக்கும் நிஷா பற்றி எந்த விபரமும் தெரியவில்லை.
என் பெட்டிகளை எடுத்துக் கொண்டு ஏர்போர்ட்டை நோக்கி டேக்சியில் சென்றேன். ஏர்போர்ட் வந்ததும் நிஷாவை என் கண்கள் வலை வீசித் தேடியது. அவள் எங்கும் காணவில்லை.

போர்டிங் பாஸ் எடுத்துக் கொண்டு நான் கேட் நோக்கிச் செல்லும் முன் நிஷா தெரிந்தாள். மகிழ்ச்சியில் அவளை அப்படியே அள்ளிக் கொள்ள வேண்டும் என்று ஓடினேன்.
அவள் அருகில் சென்றது தான் அவள் ஆர்யாவுடன் வந்திருப்பது தெரிந்தது. என் உற்சாகம் குறைந்தது.

                                                    நிஷா


உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு நரேன் மீது கோபமே இல்லை. எனக்குக் கோபம் என் மீது தான். நரேனை ஆசைக் காட்டி ஏமாற்றி விட்டதாகக் குற்ற உணர்ச்சி தோன்றுகிறது.
என் ஓட்டத்திறனில் ஏன் இந்த சரிவு என்று எனக்கு விளங்கவில்லை. முன்பை விட உற்சாகமாக இருக்கிறேன். ஜெயிக்க வேண்டும் என்ற வெறியும் கூடியிருக்கிறது. பதட்டமும் காரணமில்லை. பின் ஏன் இப்படி நடக்கிறது?
நரேன் அடித்ததும் நேராக எனக்குப் பிடித்த ராமர் கோவில் சென்றேன். அங்கு அமர்ந்து வெகு நேரம் அழுதுக் கொண்டிருந்தேன். பிறகு ஆர்யாவுக்குக் கால் செய்தேன்.
அவர் டெல்லி வந்திருப்பதாகவும் ரியோ போட்டிகள் காண அவரும் முடிவு செய்திருப்பதாகக் கூறினார்.
அவரிடம் விபரங்கள் கூறினேன். ஒரு மணி நேரத்தில் என்னைச் சந்தித்தார்.
"நிஷா என்ன ஆயிற்று உனக்கு. மறுபடியும் சயின்சா ஸ்போர்ட்ஸா என்ற குழப்பமா?"
"இல்லை மெடல் வாங்க வேண்டும் என்று எனக்குள் வெறி அதிகமாகிக் கொண்டு தான் இருக்கிறது. பிறகு ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை."
"எப்போது உன் பிளைட்"
"நான் ரியோ செல்லப் போவதில்லை. ஒலிம்பிக் போட்டியில் நான் சொதப்பினால் நரேன் நொந்து விடுவான். அவனை ஏமாற்ற நான் விரும்பவில்லை."
"அப்படித் தளர்ந்து விடாதே. உறுதியாக இரு. இறுதிப்போட்டியில் உன்னிடம் ஒரு அசுர சக்தி வந்து வெற்றி பெறுவாய் என்று எனக்கு ஏதோ தோன்றுகிறது. நீ கண்டிப்பாக ரியோ செல்ல வேண்டும்.
நான் தயக்கத்துடன் அவரைப் பார்த்தேன்.
"உன்னால் முடியும் நம்பு".
பிறகு நாங்கள் இருவரும் என் அறைக்குச் சென்றோம். என் பெட்டிகளை எடுத்துக் கொண்டு ஏர்போர்ட் சென்றோம். அங்கு நரேன் எனக்காகக் காத்திருந்தான். என்னைப் பார்த்ததும் அவன் முகத்தில் தெரிந்த மலர்ச்சி ஆர்யாவைப் கண்டதும் மறைந்தது.
ஆர்யா நரேனிடம் கை குலுக்கி, "நரேன் போட்டி முடியும் வரை உன் கோபத்தைக் குறைத்துக் கொள். நிஷாவை நன்றாகப் பார்த்துக் கொள். உங்கள் இருவருக்கும் பெஸ்ட் ஆப் லக். நான் நாளை பிளைட்டில் ரியோ வருகிறேன். அங்கு உங்களை சந்திக்கிறேன்."
விமானப் பயணம் முழுதும் நரேனிடம் நான் பேசவில்லை.
முதல் நாள் ஒலிம்பிக் விழாவிற்காக இந்திய அணியின் கொடியை ஏந்திச் செல்லும் கௌரவத்தை எனக்கு அளித்தார்கள். அதற்கு நான் தகுதியானவளா என்று எனக்குத் தெரியவில்லை.
தடகளப் போட்டிக்கு இன்னும் ஐந்து நாட்கள் இருந்தன. அடுத்த நாள் ஆர்யாவும் வந்தார். போட்டிக்கு முன் நடக்கும் பயிற்சிகளை ஆர்யாவும் பார்க்க வந்தார். என்னால் 10.5 நொடிகளில் ஒரு நாள் கூட ஓட முடியவில்லை.
ஆர்யாவுக்கும் ஏமாற்றமாக இருந்தது. நரேன் என் மீதிருந்த நம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்டதாகத் தெரிந்தது.
ஆர்யா நரேனிடம் ஏதோ சில விபரங்கள் கேட்டார்.
ஆரம்பச் சுற்றுகளில் நான் எளிதாகத் தேர்வாகி விட்டேன். 11லிருந்து 12 நொடிகளில் ஓடி முடித்தேன். ஐந்தாவதாக நான் இருந்தேன்.
நாளை இறுதிப் போட்டி. நரேன் இன்று காலை கடைசியாகப் பயிற்சிக்கு அழைத்திருந்தான். நான் மைதானத்திற்குக் கிளம்பும் போது ஆர்யா வேகமாக என் அறைக்கு வந்தார்.
"நிஷா இன்று நீ பயிற்சிக்குப் போகாதே. இன்று நீ சென்றால் நாளை நீ முதலாவதாக வர முடியாது."
நான் குழப்பமாக ஆர்யாவைப் பார்த்தேன்.
"நேற்று நரேனிடம் இந்த இரு மாதமாக நடந்த பயிற்சி ஆட்டங்களில் உன் டைமிங் ரிசல்ட்டைக் கேட்டு வாங்கியிருந்தேன்.
"முதல் வாரம் நீ எல்லா நாட்களும் 10.5 நொடிகளில் ஓடி முடித்தாய். அடுத்த வாரம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 10.5 நொடிகளில் முடித்தாய். அதற்கடுத்தது வாரம் 2 நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் இதை சாதித்தாய். அதற்கடுத்த வாரம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை இது நடந்தது. இதிலிருந்து உனக்கு என்ன புரிகிறது.”
"நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்."
"This is chaos theory. Period Doubling Concept. உன் ஓட்ட ரிஸல்ட்களில் அழகான ஒரு pattern இருப்பதை நான் கண்டுபிடித்தேன்."
ஆர்யா கூறுவதை என்னால் சுத்தமாக நம்ப முடியவில்லை.
"இந்த pattern படி உன் அடுத்த ஓட்டத்தில் 10.5 நொடிகளில் நீ முடிப்பாய். அதனால் இன்று பயிற்சி ஆட்டத்தைத் தவிர்த்து விடு. இன்று ஓடாமல் நாளை நீ இறுதிப் போட்டியில் ஓடினால் கண்டிப்பாக 10.5 நொடிகளில் முடிப்பாய்"
நான் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.
"இன்று பயிற்சிக்கு நான் போகா விட்டால் நரேன் என்னைக் கொன்றே விடுவான்."
"இப்போதே இங்கிருந்து கிளம்பு. நாம் எங்காவது தலைமறைவாக இருப்போம்.  அவன் போன் செய்தால் எடுக்காதே. நாளை காலை இறுதிப் போட்டிக்கு நேரடியாக மைதானத்திற்குச் சென்று விடு."
நாங்கள் ஒரு டேக்சியில் ஏறும்போது நரேன் எங்களைப் பார்த்து விட்டான். அவன் இன்னொரு டேக்சியில் ஏறி எங்களைப் பின் தொடர்ந்தான்.
வெகு நேரம் எங்களைப் பின் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தான்.
"ஆர்யா வண்டியை நிறுத்துங்கள். நான் நரேனிடம் பேச வேண்டும்."
ஆர்யாவுக்கு இதில் சம்மதம் இல்லை. தயக்கத்துடன் வண்டியை நிறுத்தச் சொன்னார்.
நரேன் வேகமாக எங்கள் முன் வந்து ஆர்யாவைத் தாக்கினான்.
"இது வரை நல்லவன் போல நீ நடித்திருக்கிறாய். கடைசி நேரத்தில் கழுத்தறுத்து என்னை ஜெயிக்கப் பார்க்கிறாய். நிஷா நாளை இறுதிப் போட்டியில் பங்கெடுக்காமல் இருக்கத் தான் நீ சதி செய்திருக்கிறாய். "
"நரேன் நீ எல்லாம் தவறாகப் புரிந்திருக்கிறாய். நாங்கள் செய்வது எல்லாவற்றிலும் ஒரு நன்மை இருக்கிறது.  இன்று பயிற்சி வேண்டாம். நாளை இறுதிப் போட்டியில் நிச்சயம் கலந்துக் கொள்வேன் என்னை நம்பு."
நரேன் என் கன்னத்தில் அறைந்தான்.
"இன்று பயிற்சி ஓட்டத்தில் நீ ஓடுகிறாய். 10.5 நொடிகளில் முடிக்கா விட்டால் நாளை இறுதிப் போட்டியில் நானே உன்னை ஓட விட மாட்டேன்."
ஆர்யாவும் நரேனிடம் விளக்கம் அளிக்க முயன்றார். நரேன் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் என் கையைப் பிடித்துத் தர தரவென இழுத்து தன் டேக்சியில் ஏற்றுக் கொண்டான்.
நேராக மைதானத்திற்குச் சென்றோம்.
நரேன் தன்னிடமிருந்த ஒரு குப்பியை காண்பித்தான்.
"நீ என்ன செய்வாய் எது செய்வாய் என்று தெரியாது. நீ இன்று 10.5 நொடிகளில் ஓட வேண்டும். உன்னால் அது முடியும். அப்படி 10.5 நொடிகளில் ஓடாவிட்டால் இந்த விஷத்தை நான் குடித்து இங்கேயே உன் முன் தற்கொலை செய்வேன்."
"நரேன் இன்று வேண்டாம். நான் கண்டிப்பாக உன் கனவை நிறைவேற்றுவேன். இன்று ஓடினால் நாளை நான் வெற்றி பெற முடியாது. இதில் ஒரு சயின்ஸ் இருக்கிறது. அதை எப்படி உனக்கு விளக்குவது என்று எனக்குப் புரியவில்லை. என்னைச் சற்று நம்பு."
"என்ன சயின்ஸ். எனக்குத் தெரிந்த சயின்ஸ் சொல்லவா. நீ ஓடும்போது உன்னை ஒரு மானாகக் கற்பனை செய்துக் கொள். உன்னை அடித்துக் கொல்ல ஒரு சிறுத்தை உன்னைப் பின் தொடர்ந்து வருவதாக உருவகித்துக் கொள். உன் உயிர் நீ ஓடுவதில் தான் இருக்கிறது என்று கற்பனை செய்துக் கொள். எங்கே ஓடு. ஓடு நிஷா."
"இன்று வேண்டாம் நரேன். ப்ளீஸ் நான் சொல்வதைக் கேள்."
நரேன் தன் கையிலிருந்த குப்பியைத் திறந்தான்.
"வேண்டாம். முட்டாள்தனமாக எதையும் செய்து விடாதே நான் ஓடுகிறேன்."
"ஓடினால் மட்டும் போதாது. எனக்குத் தேவை 10.5 நொடிகள். இல்லாவிட்டால். என் மரணம் இங்கு நிகழும்."
நான் வெறிப் பிடித்தவள் போல ஓடினேன்.10.5 நொடிகளில் முடித்தேன்.
நரேன் என்னை ஏளனமாகப் பார்த்தான். "என்ன ஆயிற்று உன் சயின்ஸ். நான் சொல்லவில்லை. இதில் எந்த தர்க்கமும் வேலை செய்யாது. நீ ஜஸ்ட் ஒரு மிருகம். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் மிருகம். இவ்வாறாக நினைத்து நாளை ஓடு. வெற்றி உனக்குத் தான். தேவையில்லாமல் குழப்பிக் கொள்ளாதே. அறைக்குச் சென்று ஓய்வெடு."
அதற்குள் ஆர்யாவும் மைதானத்திற்கு வந்து விட்டார். நான் பயிற்சி ஓட்டத்தில் 10.5 நொடிகளில் முடித்ததை ஊகித்துக் கொண்டார். எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டார்.
நான் என் அறைக்குச் சென்றேன். இரவில் தூக்கம் வரவில்லை.
"நீ ஒரு மிருகம். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் மிருகம்" என்ற நரேனின் வரிகள் இரவு முழுதும் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
அடுத்த நாள் நான் வினோதமான மன நிலையில் இருந்தேன். முடியும் மற்றும் முடியாது என்ற சிந்தனைக்கே அங்கு இடமில்லை. நம்பிக்கை மற்றும் அவநம்பிக்கை தாண்டிய நிலையது. என் மனதில் ஒரே நினைவு தான் ஓடிக் கொண்டிருந்தது. நான் ஒரு வேட்டையாடப்படும் மான். என் உயிரைக் காப்பாற்ற ஓடிக் கொண்டிருக்கிறேன். அது நான் நினைத்த மானாகவே என்னை மாற்றி விட்டது.
போட்டி ஆரம்பித்தது. என்னை சுற்றி மைதானத்திலிருக்கும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கிறேன். ஒவ்வொருவரும் தங்கள் நாட்டுக் கொடியை ஏந்திக் கொண்டு உற்சாகமாகக் கத்திக் கொண்டிருந்தனர். நரேன் பதற்றத்தில் போட்டியைக் கூட காண முடியாமல் கண்களைக் பொத்திக் கொண்டிருந்தான். ஆர்யா மெளனமாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.
துப்பாக்கி சத்தம் கேட்டதும் ஓடினேன். சுற்றியிருக்கும் எதுவும் என் கண்களுக்குத் தெரியவில்லை.  என் அருகில் ஓடுபவர்கள் பற்றி எந்த சிந்தனையும் இல்லை.  எல்லைக் கோடு மட்டுமே எனக்குத் தெரிந்தது.
எல்லைக் கோட்டைத் தொட்டதும் ஒரு மயக்கத்திலிருந்து மீண்டு வந்தது போல இருந்தது. போட்டியாளர்கள் எனக்குக் காய் கொடுத்தனர்.  நான் முதலாவதாக வந்திருந்தேன். 10.25 நொடிகளில் ஓடி முடித்தேன் என்று யாரோ கூறினார். அரங்கத்திலிருந்த அனைவரும் என் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தனர்.

போட்டியாளர்கள் அறைக்குச் சென்ற போது நரேனும் ஆர்யாவும் எனக்காகக் காத்திருந்தனர்.
ஆர்யா என்னை அணைத்துக் கொண்டார்.
"என்ன ஆர்யா சயின்ஸ் தோற்று விட்டதே."
"சயின்ஸ் தோற்காதம்மா. அறிவியல் மற்றும் கணித விதிகளைக் கொண்டு நாளை தட்ப வெப்பம் என்னவென்று கண்டு பிடித்து விடலாம். கிரகங்கள் எப்படி சுற்றும் என்று சொல்லி விடலாம். ஆனால் மனிதனின் எதிர்காலத்தை கணிக்க முடியாது. அது அறிவியல் விதிகளுக்கும், அனைவரும் நம்பும் கடவுள் நம் மீது சுமத்திய விதிக்கும் அப்பாற்பட்டது. அசாதாரண சந்தர்ப்பங்களில் மனிதன் அசாதாரண செயல்களைச் செய்கிறான். தன்னைக் கட்டுப்படுத்தும் அனைத்து விதிகளையும் உடைக்கிறான். இதைத் தான் ஆங்கிலத்தில் free will என்கிறார்கள். இன்று சயின்ஸ் தோற்கவில்லை. நீ வெற்றி பெற்றிருக்கிறாய் அவ்வளவு தான்."
நரேன் அழுதுக் கொண்டிருந்தான். அவன் அருகில் சென்று அவன் கண்ணீரைத் துடைத்தேன்.
"நான் எப்படி வெற்றி பெற்றேன் தெரியுமா. நீ கூறியது போல என்னை வெறும் மானாக மட்டும் கற்பனை செய்யவில்லை. துரத்தும் புலி உன்னையாக நினைத்துக் கொண்டேன்."
என் மெடலை நரேனின் கழுத்தில் மாட்டினேன். அவன் எந்த மறுப்பும் சொல்லவில்லை. என்னை இறுக அணைத்துக் கொண்டான்.
"ஓடு நிஷா. என்னை விட்டு ஓடிப் போய் விடு. இனி நீ என் வாழ்க்கைக்குள் வராதே. ஜஸ்ட் கோ."
நான் சிரித்துக் கொண்டே அவனுக்கு ஒரு நீண்ட முத்தம் கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறினேன்.
இனி நான் வாழப் போவது எனக்காக. என் கனவுகளுக்காக.
விடை பெறுகிறேன். மன நிறைவாக.
                        The End
Inspiration
Non Fiction- Chaos –James Gleick
Fiction - பத்து செகண்ட் முத்தம் --- சுஜாதா