Monday, October 23, 2017

இரு உலகங்கள் - தமிழ் அறிவியல் கதை

                                       இரு உலகங்கள்

                                                             வருடம் 2017


ஓங்கி நெடிதுயர்ந்து நின்றுக் கொண்டிருந்தது ரஞ்சித்தின் சிலை. 600 அடி உயரமுள்ள ராட்சத சிலை அது. சிலை மீது வண்ண வண்ணமாக ஒளி வெள்ளம் தன் வெளிச்சத்தை பாய்ச்சிக் கொண்டிருந்தது. சிலையைக் காண பல நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். ஆங்காங்கே காணப்பட்ட சில ராணுவ வீரர்கள் அனைவரையும் கவனமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர்.  டெல்லி நகரின் மையப்பகுதியில் சிலை இருந்ததால் 20 கி.மீ தூரத்திலிருந்தே சிலை தெரிந்து விடும்.  சிலையின் பிரம்மாண்டம் அனைவரையும் திகைக்க வைப்பதாக இருந்தது. நிஜத்தின் ரஞ்சித்தைப் போலவே.
சிலை அளித்த உணர்ச்சிகளின் வீர்யத்தை தாங்க முடியாமல் ரெமோ அவ்விடத்தை விட்டு நகர்ந்து தெருவில் நடக்க ஆரம்பித்தான். தெருவில் உள்ள சுவர்களில் எல்லாம் ரஞ்சித்தின் படங்கள். ஆள் நடமாட்டமில்லாத ஓரிடத்திற்கு வந்த பின் நின்று யாருக்காகவோ காத்திருந்தான். அவன் எதிர்பார்த்த நபர் சிறிது நேரத்தில் வந்தான்.
"ஜெரி, நான் கேட்டது கிடைத்ததா?", ரெமோ ஆர்வத்துடன் வந்தவனைக் கேட்டான்.
ஜெரி மெளனமாக இல்லை என்று சைகையில் தெரிவித்தான்.
"Experiments  with  Truth புத்தகம் கிடைத்ததா? எவ்வளவு நாளாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். Discovery of  India கிடைத்ததா? Freedom at  Midnight? அதுவும் கிடைக்கவில்லையா. நீ பொய் சொல்கிறாய். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கிறேன். நான் கேட்ட புத்தகங்கள் தருவாயா?"
"ரெமோ. உனக்கு தெரியாதது அல்ல. நாம் இருப்பது ரஞ்சித்தின் சர்வாதிகார ஆட்சியில். எல்லா வரலாற்று புத்தகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் விடுதலை குறித்தும் அதன் தலைவர்கள் பற்றிய  எல்லா புத்தகங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளது."
"தடை நம் நாட்டில் மட்டும் தானே. அமெரிக்காவில் இந்த புத்தகங்கள் எல்லாம் கிடைக்கிறது அல்லவா. அங்கிருந்து வரவழைத்து தருகிறேன் என்று வாக்கு கொடுத்தாயே?"
"கஸ்டம்ஸில் எல்லா புத்தகங்களும் பறிமுதல் செய்து விட்டார்கள். புத்தகங்களை அமெரிக்காவிலிருந்து மறைமுகமாக கொண்டு வர முயன்ற என் ஆளையும் சிறையில் வைத்து விட்டார்கள்."
ரெமோ ஏமாற்றத்துடன் அங்கிருந்து நகன்றான். ஜெரி பின்னே இருந்து குரல் கொடுத்தான்.
"ரெமோ, நீ அமெரிக்கா செல்கிறாயா? சன்னிவேல் நகரில் ஒரு பெரும் நூலகம் இருக்கிறது. உலகில் இருக்கும் எல்லா வரலாற்று புத்தகங்களும் அங்கு கிடைக்கும். உனக்கு வேண்டிய எல்லா புத்தகங்களும் ஆசை தீர படிக்கலாம்."
"வெளிநாடுகளுக்கு செல்வதற்கு பெரும் கெடுபிடிகள் இருக்கிறது. ரஞ்சித்தின் ஆட்சியில் அரசு அதிகாரிகள், பெரும் வணிகர்கள் மட்டுமே வெளிநாடு செல்ல முடியும். அதிலும் குறிப்பாக என் போன்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் செல்வதற்கு தடை உள்ளது."
"நேர் வழியில் வெளிநாட்டு செல்வதற்கு தான் தடை. எனக்கு தெரிந்த உயர் அதிகாரி ஒருவரின் மகள்  அமெரிக்காவில் இருக்கிறாள். பெண்ணுக்கு நகைகள்  மீது பைத்தியம். அவள் தாயார் நகைகள்  அனுப்புவதற்கு ஆள் தேடுகிறார். நகைகள்  விலை மதிப்பற்றது என்பதால் நேரில் யாராவது சென்று கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதிகாரிக்கு ஒரு மகனும் உண்டு. மகன் பெயரில் பாஸ்போர்ட், விசா எடுத்து, அதில் அதிகாரியின் மகனுக்கு பதிலாக உன் புகைப்படங்கள் போட்டு விடலாம். அமெரிக்கா போகிறாயா?"
"இதில் ஆபத்து அதிகம். நான் யோசித்து சொல்கிறேன்."
"இது உனக்கு நல்ல வாய்ப்பு. பைசா செலவில்லாமல் அமெரிக்கா போகலாம். உனக்கு வேண்டிய புத்தகங்கள் எல்லாம் படிக்கலாம். நாளைக்குள் எனக்கு பதில் வேண்டும். சரியா."
ரெமோ சிந்தனையுடன் தன் வீடு நோக்கி நடந்தான்.
                          -----------**************----------------
வீட்டில் ஜென்னி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள். அரசாங்கத்தின் ஒரே சேனல் மட்டுமே வரும். அதிலும் ரஞ்சித்தின் புகழாரங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும்.
"என்ன ஆயிற்று. உடம்புக்கு எதுவும் சரியில்லையா?", ரெமோவின் சோர்வான முகத்தைப் பார்த்து ஜென்னி வினவினாள்.
"ஜெரி மீண்டும் கை விரித்து விட்டான். புத்தகங்கள் கிடைக்க வில்லை."
"நீ இந்த புத்தகங்களில் தேடுவது என்ன."
"நம் நாட்டின் உண்மையான சரித்திரம் பற்றி நாம் அறிந்தது என்ன. 1975  முதல் 42  ஆண்டுகளாக ரஞ்சித் ஆண்டு வருகிறான். அதற்கு முன் ஹீராலால் என்பவர் 1947  முதல் 1975  வரை  பிரதமராக இருந்தார்.  ஹீராலால் ஆட்சியில் நடந்தது என்ன, அவர் கொள்கைகள் என்ன, பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு உறவுகளில் அவர் சாதித்தது என்ன - இதெல்லாம் மூடி மறைக்கப்பட்டு விட்டது. ஹீராலால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெரும் தலைவர். அது தவிர மோகன்தாஸ், ஜவஹர், ராஜகோபால், சுபாஷ், வல்லபாய் போன்ற பல தலைவர்களின் சரித்திரம் புதைக்கப்பட்டு விட்டது. ஒரு நாட்டின் சரித்திரமே இந்த சர்வாதிகார ஆட்சியில் அழிக்கப்பட்டிருக்கிறது"
"அப்படியானால் உன் சரித்தர பட்டப்படிப்பில் என்ன தான் சொல்லிக் கொடுத்தார்கள்."
"ரஞ்சித் எப்படி நாட்டை வல்லரசாக்கினான் என்றும், பொருளாதாரம் உயர்ந்தது என்றும், எதிரி நாடுகள் நம்மைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்றும் மக்கள் எப்படி மகிழ்ச்சியாக இருக்கறார்கள் என்றும், நாட்டில் எப்படி தேனும் பாலும் ஓடுகிறது என்றும் புளுகுமூட்டைகள் தான் சரித்திரம் என்ற பெயரில் அவிழ்த்து விடப்படுகின்றன. ஆனால் உண்மையில் நடந்தது என்ன. நாட்டின் ஜனநாயகம் முடக்கப்பட்டு விட்டது. எதிரி கட்சித் தலைவர்கள் எல்லாம் ஒன்று சிறையில் அல்லது பரலோகம் அனுப்பப்பட்டு விட்டார்கள். மக்கள் தங்களுக்கு  சொந்தமாக நிலம்  வைத்துக் கொள்ள முடியாது. அனைத்தும் கட்டுமானப் பணிகள் என்ற பெயரில் பறிமுதல் செய்யப்பட்டு விட்டது. கிராமங்கள் மற்றும் விவசாயம் அழிந்து விட்டது. உணவு மட்டும் எல்லா அன்றாட தேவைகள் ரேஷன் முறையில் தான் வழங்கப்படுகிறது. இது தானே உண்மையான சரித்திரம்."
"நம் நாட்டின் நிலை மாறும் என்று நினைக்கிறாயா?"
"ஜெரி ஒரு யோசனை சொன்னான். நாம் அமேரிக்கா போகலாமா?"
அப்போது வெளியே கதவை தட்டினார்கள்.
ரெமோ தயக்கத்துடன் கதவை திறந்தான். வந்தவர்கள் உளவுத் துறை அதிகாரிகள் என்பது ரெமோவுக்கு புரிந்தது.
"ரெமோ என்பது நீங்கள் தானே?"
"ஆம்."
"வரலாற்று ஆராய்ச்சியாளர்?"
"நான் தான்."
"நீங்கள் என்னுடன் வர வேண்டும்."
"நான் ஏன் வர வேண்டும். எந்த தவறும் நான் செய்யவில்லையே."
"ரஞ்சித் உங்களை சந்திக்க விரும்புகிறார்."
ரெமோ அதிர்ச்சியில் பொம்மை போல அதிகாரியை தொடர்ந்து காரில் ஏறினான்.
                              --------**********-----------
ரஞ்சித்தை ரெமோ இதற்கு முன் சந்தித்தது இல்லை. தன் வாழ்நாளில் அவனை சந்திக்கக் கூடும் என்று ரெமோ கனவு கூட கண்டதில்லை.
ரஞ்சித்திற்கு 72  வயது இருக்கலாம். புகைபிடிக்கும் பழக்கம் இருப்பதால் உதடு லேசாக கருத்திருந்தது. தலையின் முன் பகுதி வழுக்கையாக இருந்தது. சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.
"நீ சரித்திரம் படித்தவன் என்று கேள்விப்பட்டேன். இந்த நாட்டின்  சரித்திரம் பற்றி உனக்கு என்ன தெரியும்."
"உண்மையில் ஒன்றும் தெரியாது. அதற்கு காரணம் உங்களுக்கே தெரியும்."
ரஞ்சித் முகத்தில் புன்முறுவல் தோன்றியது.
"உன் நேர்மை எனக்கு பிடிக்கிறது. அதனால் தான் எனக்கு உதவி செய்ய உன்னை அழைத்தேன். சரித்திரம் பற்றி பொதுவாக உன் கருத்து என்ன."
"ஒரு நாட்டின் அரசியல், சமூக நிகழ்வுகளை பதிவிடுவது."
"நீ நேர்மையானவன். ஆனால் முட்டாள். சரித்திரம் பதிவிடப்படுவதில்லை, உருவாக்கப்படுகிறது. நீ தாஜ் மகால் சென்றிருக்கிறாயா? அதைப் பற்றி சரித்திரம் கூறுவது என்ன? . ஒரு கருணையே உருவான மன்னன் தன் காதலியின் நினைவாக உருவாக்கிய நினைவிடம் என்பது தானே? இதற்கு பின் நடந்த அக்கிரமங்கள் பற்றி எந்த சரித்திரமாவது கூறுகிறதா? தாஜ் மகாலை உருவாக்கியவர்கள் கைகள் எல்லாம் வெட்டப்பட்டது என்ற உண்மையை சரித்திரம் பதிவிட்டதா. சரித்திரம் பதிவிடப்படுவதில்லை தோழனே. உருவாக்கப்படுகிறது. "
ரெமோ பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான்.
"நான் ஆட்சி புரிந்து 42  ஆண்டுகள்  கடந்து விட்டது. ஆட்சி செய்த புதிதில் அதிகாரம் போதை தந்தது. இப்போது இல்லை. இன்றே கூட ஆட்சியை உதறி விட்டு செல்ல தயார். நான் கவலைப்படுவது எiல்லாம் வேறு ஒரு விஷயத்தைப் பற்றி. அது என்னவென்று உன்னால் யூகிக்க முடிகிறதா?"
ரெமோ மௌனம் காத்தான்.
"அதிகம் பேச மாட்டேன் என்கிறாய். என்  கவலை எல்லாம் சரித்திரம் என்னை எப்படி பார்க்கும் என்பது பற்றி தான். நாளைய சமூகம் என் ஆட்சி பற்றி என்ன தீர்ப்பு அளிக்கும் என்பது தான் என் சிந்தனை முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது. அதற்கு உன் உதவி தேவை."
"நான் எப்படி உதவ முடியும்."
"நீ ஒரு சரித்திரத்தை உருவாக்க போகிறாய். என் சரித்திரத்தை எழுதப் போகிறாய். நீ இதற்கு பெரிதும் ஆராய்ச்சி எதுவும் செய்ய வேண்டாம். நான் சொல்வதை மட்டும் எழுத வேண்டும். இதில் உனக்கு கவனம் தேவை. ஆர்வக்கோளாறில் எதுவும் செய்து விடாதே. நாளை முதல் தினமும் இரண்டு மணி நேரம் உனக்கு ஒதுக்குகிறேன். என் வாழ்வின் பக்கங்கள் உன் கைகளில். நாளை சந்திப்போம்."
அறையை விட்டு வெளியே வந்ததும் ரெமோவுக்கு கோபத்தில் கைகள் நடுங்கியது. ரஞ்சித்தை உரக்க திட்ட வேண்டும் என்று உதடுகள் துடித்தது.
சிறிது நேரத்தில் தன் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்தான். ஜெரியை தொடர்பு கொண்டான்.
"ஜெரி என் அமெரிக்க பயணத்திற்கு ஏற்பாடுகள் செய். என்னுடன் என் மனைவி ஜென்னியும் வருகிறாள்."
"இரண்டு பேர் பயணம் செய்ய வேண்டுமா? சிறிது கஷ்டம் தான். பரவாயில்லை சமாளித்து விடலாம். நாளை தயாராக இரு."
தன் புது திட்டத்திற்கு ஜென்னியிடம் எப்படி சம்மதம் வாங்குவது என்ற யோசனையுடன் வீட்டிற்கு ரெமோ சென்றான்.
                            ---------*********----------
அமெரிக்கா வந்து சேர்ந்த இரண்டு நாட்களில் ஜெரி தெரிவித்த நூலகத்திற்கு ரெமோ ஜென்னியுடன் வந்தான். அவன்  தேடிய புத்தகங்கள் அனைத்தும் அங்கு கிடைத்தது. விலை மதிக்க முடியாத பொக்கிஷம் கிடைத்தது போல ரெமோ உணர்ந்தான்.
நூலகத்திற்கு அருகில் ஒரு குளம் இருந்தது. அதை சுற்றி பாதை இருந்தது. அதை நடை பயில்பவர்கள், உடற்பயிற்சிக்காக ஓடுபவர்கள் பயன்படுத்தினர். புறாக்கள் மற்றும் பறவைகள் குளத்தில் மீனைக் கொத்தி பறந்துக் கொண்டிருந்தன. பாதையை  ஒட்டி அமர்வதற்கு சிமெண்டினால் செய்த இருக்கைகள் இருந்தன. இருவரும் குளத்தின் அழகை ரசித்தவாறு நடந்தனர்.
ரெமோ பின்னால் ஏதோ சத்தம் கேட்டு திரும்பினான். ஒரு சிறுவன் ரோலர் பிளேடில் சறுக்கியவண்ணம் வேகமாக அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தான். கிட்டே நெருங்கியவன் ரெமோ வைத்திருந்த புத்தகங்களின் பையை பிடுங்கி கொண்டு வேகமாக சென்று  விட்டான்.
ரெமோ கத்தியவாறு அவனை பின் தொடர்ந்து ஓடினான். திருடியவன் ஓரிடத்தில் நின்று பையைப் பார்த்தான். வெறும் புத்தகங்கள் என்றதும் அதை கிழித்து குளத்தில் எறிந்தான். ரெமோவை நோக்கி நடு விரலைக் காண்பித்து மறைந்தான்.
ரெமோவை தேடி கண்டுபிடித்து ஜென்னி வந்தாள்.
"நான் எங்கு சென்றாலும் துரதிர்ஷ்டம் என்னைத் தொடர்ந்து வருகிறது. எல்லா புத்தகங்களும் போய் விட்டது."
"எல்லா புத்தகங்களும் போகவில்லை. இதைப் பார்."
ஜென்னி தன் கைப் பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தாள்.
"History  of  20th  centrury  India " என்ற தலைப்பில் புத்தகம் சிவப்பு நிற அட்டையில், தடிமனாக 600  பக்கங்களுக்கு மிகாமல் இருந்தது.
"நீ விழுந்து விழுந்து புத்தகங்கள் எடுப்பது பார்த்து எனக்கு பொறாமையாக இருந்தது. அதனால் நானும் வீம்புக்கு இந்த புத்தகம் எடுத்தேன்."
புத்தகத்தின் முதல் பக்கத்தில், 'Dedicated to my Friend Rasik', என்று எழுதியிருந்தது.
ரெமோ புத்தகம் எழுதியவர் யார் என்று  பார்த்தான். புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் முல்லர் என்ற பெயரை அவன் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை. ஆசிரியர் பற்றிய குறிப்புகள் படித்தான்.
"ஜென்னி இதை எழுதியவர் இங்கு தான் அருகில் சான் ஹோஸேவில் இருந்திருக்கிறார். ஒரு அமெரிக்கர் இந்திய சரித்திரம் பற்றி எழுதியிருப்பது மிகவும் ஆச்சரியம். அவரை நாம் சந்திக்க வேண்டும்."
"அவர் இருந்த இடத்தின் விலாசம் இது தான்".  ஜென்னி தன மொபைலில் காண்பித்தாள்.
"எப்படி உனக்கு கிடைத்தது", என்றான் ரெமோ வியப்புடன்.
"இந்தியாவில் தான் இணையம் தடை செய்யப்பட்டுள்ளது. சுதந்திர நாடான அமெரிக்காவிலுமா?"
"அவரை நாம் இப்போதே சந்திக்க வேண்டும்."
"அது முடியாது. அவர் இறந்து 30  ஆண்டுகள் ஆகிறது. அவரைப் பற்றிய விக்கிபீடியா குறிப்புகள் எடுத்திருக்கிறேன் பார்."
"அவர் மகன், அல்லது பேரன் யாராவது உயிருடன் இருக்க வேண்டும் அல்லவா. நாம் இந்த விலாசத்திற்கு போக வேண்டும்."
இருவரும் டேக்சி பிடித்து ராபர்ட் முல்லரின் விலாசத்திற்கு வந்தார்கள்.
வீட்டின் கதவை தட்டியதும் 50  வயது மதிக்கத்தக்க நபர் திறந்து வரவேற்றார்.
புத்தகம் எழுதியவர் குறித்த கேள்விகள் ரெமோ கேட்டான்.
"இது எழுதியவர் என் தாத்தா தான். அவருக்கு சரித்திரம் மீது மிகுந்த ஆர்வம். முதலில் அமேரிக்கா மற்றும் ஐரோப்பா சரித்திரம் பற்றி தான் ஆராய்ச்சி செய்தார். நிறைய புத்தகங்களும் எழுதினார். 1948 ஆம் வருடம் இங்கிருந்து அருகில் உள்ள வீட்டிற்கு ஒரு இந்தியர் குடியேறினார். அவர்  இந்தியாவில் உள்ள ஒரு அரசியல் தலைவரின் குடும்பத்தை சேர்ந்தவர். அவருடன் தாத்தா நட்பு கொண்டார். இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். ஒவ்வொரு நாளும் சந்தித்து மணிக்கணக்கில் பேசுவார்கள். அதன் பின் தான் தாத்தாவுக்கு இந்திய அரசியல் பற்றி ஆர்வம் வந்தது. இந்த புத்தகத்தை எழுதினார்."
"அவர் இந்தியா சரித்திரம் குறித்த புத்தகங்கள் வைத்திருப்பாரே?"
"Freedom at Midnight, Discovery of India, My Experiments with Truth, என்று பல புத்தகங்கள் வைத்திருந்தார். எல்லாவற்றையும் சென்ற ஆண்டு தான் விற்றேன்."
ரெமோவின் முகத்தில் சோகம் படர்ந்ததை ஜென்னி கவனித்தாள். இருவரும் வெளியே கிளம்ப எத்தனித்தனர்.
"நீங்கள் வேண்டுமானால் நான் சொன்ன என் தாத்தாவின் நண்பர் வசித்த வீட்டிற்கு போகலாமே. வீட்டின் சாவி என்னிடம் தான் இருக்கிறது. அங்கு நீங்கள் தேடும் புத்தகங்கள் கிடைக்கலாம்."
ஜென்னி - "நீங்கள் சொன்ன அந்த வீட்டில் வசித்த இந்தியர் யார்."
"ரசிக். இந்தியாவின் முதல் பிரதமர் ஹீராலாலின் மகன்."                   
                             -------********---------
ரசிக் வீடு பாழடைந்து கிடந்தது. அவர்  பற்றிய குறிப்புகளை ஜென்னி  விக்கிப்பீடியாவில் தேடினாள். அவர் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி என்றும் அவர் கண்டுபிடிப்புகள் பற்றிய விபரங்கள் மட்டுமே இருந்தன. ரசிக்கிற்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என்பது புரிந்தது. ஹீராலால் இறந்த இரண்டே வாரங்களில் ரசிக் மரணமடைந்தார் என்று தெரிந்தது.
வீட்டை இருவரும் அலசி பார்த்தனர். புத்தகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சில அறிவியல் புத்தகங்கள் மட்டுமே ஒரு அலமாரியில் இருந்தன.
"விஞ்ஞானி வீட்டில் சரித்திரத்தை தேடினால் என்ன கிடைக்கும். வா ஜென்னி கிளம்பலாம்."
அப்போது ஜென்னிக்கு ஒரு வினோதமான சிந்தனை தோன்றியது.
"ரெமோ, உனக்கு இந்தியா உடனே திரும்பி செல்ல விருப்பம் உள்ளதா?"
"யார் அந்த நரகத்திற்கு போவார்கள்."
"நமக்கு இருக்கும் பணத்தில் இன்னும் ஒரு வாரம் கூட ஹோட்டலில் தாக்குப்பிடிக்க முடியாது. வேண்டுமானால் இங்கேயே தங்கி கொள்ளலாமே. எவ்வளவு விசாலமான வீடு. முல்லரின் பேரன் நிச்சயம் ஒத்துக் கொள்வார்.  நம் அமெரிக்கா விசா ஆறு மாதத்திற்கு இருக்கிறது. அது வரை இந்த வீட்டில் தங்கலாம். "
ரெமோவுக்கும் இது நல்ல யோசனையாக பட்டது. அடுத்த சில நாட்கள் வீட்டை சுத்தம் செய்வதில் செலவிட்டனர்.
ஜென்னி படுக்கையறையில் மாட்டியிருந்த ஒரு படத்தை சுத்தம் கழட்டிய போது ஒரு ரகசிய அறைக்கு செல்லும் கதவு தெரிந்தது. கதவை திறந்து இருவரும் அதற்குள் நுழைந்தனர்.
அறையில் ஒரு மேஜை மற்றும் நாற்காலி இருந்தது. மேஜையின் உள்ளே ஒரு டைரி போன்ற புத்தகம் இருந்தது. ரெமோ அதை புரட்டிப் பார்த்தான்.
"கடைசியில் அதிர்ஷ்டம் நம்மை நோக்கி கண் திறந்து விட்டது. இது ரசிக்கின் டைரி. இதில் அவர் வாழ்வின் விபரங்கள் உள்ளன. நிச்சயம் ஹீராலால் மற்றும் வேறு அரசியல் தலைவர்கள் பற்றிய விபரங்கள், சுதந்திர இந்தியாவின் அரசியல் நிலை பற்றிய செய்திகளும் இருக்கும். இன்று இரவு நான் இதை படிக்கப் போகிறேன்."
"அப்போது நான்  என்ன செய்ய. எனக்கு பொழுது போக ஏதாவது வழி சொல்."
"நீ முல்லரின் புத்தகத்தைப் படி. அது பெரிய புத்தகம். நீ என்னை விட வேகமாகவும் படிப்பாய். படித்து முடித்தவுடன் இருவரும் நம் புத்தகங்களில் உள்ள விபரங்களை பரிமாறிக் கொள்ளலாம்."
ஜென்னி சம்மதித்து புத்தகத்துடன்  படுக்கை அறைக்கு சென்றாள். ரெமோ  ஹாலில் உள்ள சோபாவில் படுத்துக் கொண்டு டைரியைப் புரட்டினான்.
40  வருடங்கள் முன்பு டைரி எழுதப்பட்டிருக்க வேண்டும். பக்கங்கள் மிகவும் பழுப்பேறி இருந்தன.
டைரி ஒரு கதை வடிவில் இருப்பதை உணர்ந்தான். அவனை ரசிக்கின் வாழ்க்கை குறிப்பு மெதுவாக தன்னுள் இழுத்துக் கொண்டது  
                            ---------**********----------- 

                                              முதல் கதை     

                                                  வருடம் 1922


இது என் சுயசரிதை. ஒரு கதை என்று கூட சொல்லலாம். நீங்கள் படித்த மற்ற சுயசரிதை அல்லது கதையிலிருந்து இது சற்று மாறுபட்டிருக்கும். நான் இந்தக் கதையில் என் வாழ்வின் மூன்றே ஆண்டுகளை மட்டுமே விவரித்திருக்கிறேன். என் வாழ்வின் முழு சாராம்சமாக இந்த மூன்று ஆண்டுகள் அமைந்துள்ளது. இந்த நாட்டின் சரித்திரத்தின் முக்கியமான திருப்புமுனைகள் இந்த மூன்று ஆண்டுகளில் தான் நடந்தது.
நான் இந்தக்கதையின் முதல் பகுதியை 1922 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறேன். அப்போது எனக்கு வயது ஆறு. இந்த சிறு வயதில் நடக்கும் சம்பவங்கள் பெரும்பாலும் நம் நினைவில் நிற்பதில்லை. ஆனால் எனக்கு இந்த ஆண்டு முக்கியமான வருடம். நெஞ்சில் பசுமரத்தாணி போல பதிந்த பல சம்பவங்கள் என்னுடைய இந்த சிறு வயதில் அரங்கேறியது.
நவம்பர் மாதத்தின் அந்த நாள் எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது. சபர்மதி ஆசிரமத்தில் நான் விளையாடிக் கொண்டிருந்தேன். உள்ளே அப்பாவும் தாத்தாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசுவது என் காதில் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. இருவரும் மிகவும் உணர்ச்சிகரமான விவாதத்தில் இருந்தார்கள்.
சிறு வயது முதல் என் அப்பாவை விட தாத்தாவிடம் நான் அதிகம் நெருக்கம் கொண்டிருந்தேன். என் முதிரா வயது கேள்விகளுக்குப் பொறுமையாக தாத்தா பதில் கூறுவார். அப்பா என்னிடம் நேரம் செலவிட்டது மிகவும் குறைவு. இத்தனைக்கும் தாத்தாவுக்கு வேலைகள் அதிகம்.  மோகன்தாஸ் என்பது அவரது பெயர். ஆனால் அவரை அனைவரும் தேசப்பிதா என்று தான் அழைத்தார்கள். அவரைப் பார்க்க நாள்தோறும் மக்கள் வந்து கொண்டே இருப்பார்கள். நான் அவரைச் சந்திக்க வந்த பெருந்தலைவர்கள் மடியில் விளையாடிய அதிர்ஷ்டக் குழந்தையாக வளர்ந்தவன். ரசிக் என்ற எனது பெயர் அவர் நண்பர்கள் அனைவருக்கும் தெரியும்
இந்த உலகத்தை அவர் கண்களின் மூலமாகத் தான் பார்க்கத் தொடங்கினேன்.
என் ஐந்தாவது வயதிலேயே புத்தகங்களை எனக்கு அறிமுகம் செய்தார். இதிகாசக் கதைகளை எனக்குச் சொன்னார். பின்னாளில் தனிமை உணர்வு என்னைச் சூழ்ந்தபோதெல்லாம் புத்தகங்களை நான் நாடினேன். அதற்கான வித்து தாத்தாவிடமிருந்தே வந்தது.அவர் அரசியல் மற்றும் சரித்திர புத்தகங்கள் அதிகம் படிப்பார். தல்ஸ்தாயின் 'War and Peace’ புத்தகத்தை மிகவும் புகழ்ந்துக் கூறுவார். என்னையும் படிக்கத் தூண்டுவார். ஆனால் என் ஆர்வம் அறிவியல் புத்தகங்கள் மீது சென்றது. தாத்தாவோ அறிவியல் மானுடத்துக்குத் தீங்கு விளைவிக்கும் சக்தி என்றே நம்பினார்.  இதைப் பற்றி அவரிடம் கடுமையான வாக்குவாதங்கள் நான் செய்ததுண்டு.
தாத்தாவிடமிருந்து நான் கற்றுக் கொண்டது கொள்கைப்பிடிப்பு. அவரைப் போலவே நானும் எளிதான மனச் சமாதானங்கள் செய்தது கிடையாது. அப்பாவுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்த பிறகு, நான் மெளனமாக இருந்தாலும், என் அடி மனதில் நான் தாத்தாவின் பக்கமே இருந்தேன். சத்தியத்தின் உருவான ராஜா ஹரிச்சந்திரனை மனதில் கொண்டே ஹரிலால் என்ற பெயர் அப்பாவுக்கு வைத்தார். அப்பாவோ இதற்கு முற்றிலும் நேர் எதிர். வாழ்க்கையில் கொள்கைகள் உட்பட எதுவும் நிரந்தரம் கிடையாது என்று நினைப்பவர்.
உள்ளே நடந்த விவாதம் மீது என் கவனம் சென்றது.
"ஹரி நீ இப்போது மிக அதிகமாக குடிக்க ஆரம்பித்து இருக்கிறாய் என்று என் மருமகள் கூறினாள். இது நீ எனக்கு அளிக்கும் தண்டனையா. என் மீதுள்ள கோபத்தை இப்படித்தான் காண்பிக்கிறாயா."
"உங்கள் மீது கோபப்படும் தகுதி எனக்கு இருக்கிறதா. நான் வெறும் அற்பன். இந்த உலகில் பிறந்தது வீண். குடித்துக் குடித்து என் அழிவை நான் விரைவில் தேடிக் கொள்கிறேன். என்னைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள் அப்பா. நாட்டைப் பற்றியும் மக்களை பற்றியும் சிந்தியுங்கள்"
"அப்படி என்னால் விட முடியுமா. உன் தேவைகள் என்ன? சொல் என்னால் முடிந்ததை செய்கிறேன்."
"என்னால் இந்த ஆசிரமத்தில் வேலைகள் செய்ய இயலாது தந்தையே. என் திறமைகளை நிரூபிக்கும் சரியான வாய்ப்புகளை எனக்கு அளியுங்கள். மராட்டிய மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தலில் நிற்க  உத்தேசித்துள்ளேன்."
"அது நீ செய்யும் பெருந்தவறாகும். பதவியைத் தேடி ஒருவன் போகக்கூடாது. நம்முடைய தகுதிகளை நாம் வளர்த்துக் கொண்டால் பதவி நம்மைத் தேடி தானே வரும்."
"அப்படியானால் உங்கள் ஆதரவு எனக்கு கிடையாது. அப்படித்தானே."
"நீ என் மகன் என்பதால் உன் மீது நான் பாரபட்சம் காண்பிக்க முடியாது. தலைமைப் பதவிக்கான ஏற்ற நபர் நீ இல்லை."
"உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து ஏது தந்தையே. என் வழியில் நான் செல்கிறேன்."
தந்தை கோபமாக ஆசிரமத்தை விட்டு வெளியேறினார்.
அவர் செல்வதை தாத்தா கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
                             -------********---------
அன்று மாலை தாத்தாவை சந்திக்க ஜவஹர், ராஜகோபால் மற்றும் முகம்மது அலி  வருவதாக பேச்சு பரவியது. அவர்களுடன் மிக முக்கியமான பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதால் தாத்தா மற்ற உதவியாளர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.
இவர்கள் மூவரின் வரவை நான் எப்போதும் ஆவலுடன் எதிர்பார்ப்பதுண்டு.
ராஜகோபால் பல இதிகாசக் கதைகள் கூறுவார். தாத்தாவை விட மிக சுவையாகக் கதைகளை விவரிப்பார்.
ஜவஹர் மற்றும் முகம்மது அலி வரும் போது அவர்களுடன் டினாவும் வருவாள். அவளுடன் விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.
நேரம் தவறாமல் விருந்தினர்கள் வந்தனர். அது அவர்கள் தாத்தாவுக்கு காண்பிக்கும் மரியாதை. ஏனென்றால் அவர் நேரம் தவறாமையை தான் நம்பும் அகிம்சைக்கு நிகராகக் கடைபிடித்தார்.
குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தோம். பெரியவர்கள் உள்ளே பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்தில் நாங்கள் உள்ளேயும் சென்று ஓடிப் பிடித்து விளையாடினோம்.
இது முகம்மது அலிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. எங்களை வெளியே சென்று விளையாடுமாறு கடிந்துக் கொண்டார்.
"சிறுவர்கள் தானே அப்படித் தான் இருப்பார்கள். இங்கே வாருங்கள்." என்று தாத்தா எங்களை அழைத்து அன்பாக பேசினார்.
டினா தாத்தாவின் மடியில் அமர்ந்தாள். நான் ஜவஹர் மடியில் அமர்ந்தேன். பெரியவர்கள் தங்கள் விவாதத்தைத் தொடர்ந்தனர்.
அலி - "சத்தியாக்கிரகப் போராட்டம் நீங்கள் எதிர்பார்க்கும் பலனை அளிக்கும் என்று நான் நம்பவில்லை. இதனால் நாடு முழுதும் குழப்பங்கள் ஏற்படும்.  சட்டரீதியாக அணுகி சுதந்திரம் அடைவது தான் சரியான வழி. சத்தியாக்கிரகம் நீங்கள் நம்பும் அகிம்சைக்கு முரண்பாடானது என்று நான் நினைக்கிறேன்"
தாத்தா - "சத்தியாக்கிரகம் அகிம்சையுடன் முரண்பட்டதல்ல. நாம் நம்முடைய எதிரிகளையும் மதிக்கிறோம். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். ஆனால் நாம் கோழைகள் கிடையாது. நம் உரிமைகளை நிலைநாட்ட போராட்டம் அவசியம் தேவை. அதற்கான கருவிதான் சத்தியாக்கிரகம்."
அலி - "நீங்கள் கிலாபத் இயக்கத்திற்கு அளித்த ஆதரவு இந்திய இஸ்லாமியர்களை பிளவுபடுத்தி விட்டது. இஸ்லாமியர்களுக்குத் தேவை கல்வி மற்றும் முற்போக்கான சிந்தனை. உங்கள் நிலைப்பாடு இஸ்லாமியர்களை பழமைவாதிகளாக மாற்றி விடும்."
தாத்தா - "நீங்கள் இந்த மண்ணை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை. இங்கு மேற்கத்திய நவநாகரீக சிந்தனைகள் அவ்வளவு எளிதாக ஊன்றி விடாது. இந்த பூமிக்கென்று ஒரு ஞான மரபு உள்ளது. அது இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்று எல்லா மதத்தினரையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளது."
ராஜகோபால் - "நீங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் அல்ல என்பதை நிரூபிக்க நடக்கவிருக்கும் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு ஏன் ஜின்னாவை தேர்ந்தெடுக்கக் கூடாது."
தாத்தா - "தலைவரை நான் தேர்ந்தெடுக்க முடியாது. மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்."
ராஜகோபால் - "ஜின்னாவுக்கு எதிராக உங்கள் தரப்பிலிருந்து யாரையும் நிறுத்தாமல் இருப்பீர்களா."
தாத்தா - "தேர்தலில் போட்டி மிகவும் அவசியமானது."
தலைவர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மூவரும் தாத்தாவிடம் விடை பெற்றுச் சென்றனர்.
 ராஜகோபால் அலியுடன் தனிமையில் உரையாடினார்.
முகம்மது அலி - "மோகன்தாஸ் ஒரு கபடதாரி. தன்னை ஒரு மதச்சார்பற்றவர் என்று காண்பித்துக்கொள்வதெல்லாம் வெறும் நாடகம்."
ராஜகோபால் - "நீங்கள் தலைவர் தேர்தலுக்கு நிற்பது உறுதியா?"
முகம்மது அலி - "இஸ்லாமியர்களின் பிரதிநிதியாக நிற்பது என்னுடைய கடமை."
ராஜகோபால் - "மோகன்தாஸின் ஆதரவின்றி நிற்பவர் யாரும் வெற்றி பெற முடியாது. அதுதான் தற்போதைய அரசியல் நிலவரம். நீங்கள் சற்று யோசித்து முடிவெடுக்க வேண்டும்."
அலி பேசியவாறே டினாவை  அழைத்துக் கொண்டு  ஆசிரமத்தை விட்டுக் கிளம்பினார். 
                         ---------***********-----------  
நேரம் இரவை நெருங்கி கொண்டிருந்தது. அம்மா ரொட்டி, தால் சமைத்துக் கொண்டிருந்தார். நான் அன்றைய நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
அரசியல் செய்திகள் அனைத்தையும் தவிர்த்தேன். எனக்கு அவற்றில் ஆர்வம் இருப்பதில்லை. நடுப்பக்கத்தின் ஓரத்தில் ஒரு செய்தி என்னைக் கவர்ந்தது. விஞ்ஞானி ஐன்ஸடீனின் பேட்டி ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். செய்தியில் உள்ள அறிவியல் தகவல்கள் பெரும்பாலும் என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு கேள்வி-பதில் என் கற்பனையைத் தூண்டியது.
கேள்வி - "எதிர்காலத்தில் மனிதனால் காலப்பயணம் செய்ய இயலுமா?"
பதில் - "முடியும். அதற்கான அறிவியல் சாத்தியக்கூறு உள்ளது. எதிர்காலத்திற்கும், சரித்திர காலத்திற்கும் மனிதனால் செல்ல முடியும். ஆனால் அப்படி ஒரு இயந்திரத்தை வடிவமைப்பதற்கான பொறியியல் வல்லமை அசாத்தியமானது. இன்னும் ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் கழித்து அப்படி ஒரு இயந்திரத்தை மனிதனால் உருவாக்க இயலும்."
காலப்பயணம் என்ற வார்த்தை என்னை கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்றது. நூற்றாண்டுகள் கழித்து பாரதம் சுதந்திரம் அடைந்திருக்குமா என்பதைக் காண்பதாக கற்பனை செய்துக் கொண்டேன். சரித்திரக் காலம் சென்று வீர சிவாஜி மன்னருடன் போரிடுவதாகவும், புத்தரை தரிசிப்பதாகவெல்லாம் கனவு கண்டேன்.
என் அம்மாவிடம் சென்று இதைப் பற்றி ஆர்வமாகக் கூறினேன். அம்மாவுக்கு நான் சொல்வதின் மீது கவனம் இல்லை. இருந்தாலும் நான் விடாமல் பேசிக் கொண்டிருந்தேன். அம்மாவிடம் அவள் பத்து வருடங்கள் பின்னால் சென்றால் என்ன செய்வாள் என்று கேட்டேன்.
"உன் தந்தையை மணந்திருப்பதைத் தவிர்த்திருப்பேன்."
அம்மாவின் பதிலை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ஒன்றும் பேசாமல் தலையணையில் முகத்தைப் புதைத்து அழுதேன்.
சிறிது நேரத்தில் அம்மா என் தலைமுடியைக் கோதுவதை உணர்ந்தேன்.
"உன் அப்பா இன்னும் வரவில்லை. நான் சென்று அவரைத் தேடுகிறேன். நீ வீட்டைப் பூட்டி பத்திரமாக இரு."
"எனக்கு பயமாக இருக்கிறது. நானும் வருகிறேன்."  
"நான் எங்கு போவேன் என்று உனக்குத் தெரியும். அங்கெல்லாம் நீ வரக்கூடாது."
நான் அடம் பிடித்ததால் அம்மா என்னையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
சில தூரம் நடந்தபின் ஒரு மதுக்கடை வந்தடைந்தோம். அங்குள்ளோர் எங்களை விசித்திரமாகப் பார்த்தனர்.
கடையின் ஒரு ஓரத்தில் அப்பா சுருண்டுப் படுத்துக் கிடந்தார். அவரை நானும் அம்மாவும் கைத்தாங்கலாக வீட்டுக்கு அழைத்து வந்து படுக்கையில் கிடத்தினோம்.
அவரிடமிருந்து புலம்பல்கள் வந்த வண்ணம் இருந்தது.
"நான் யார். தேசப்பிதாவின் மகன். அவர் தசரதன் என்றால் நான் ராமன். அவர் கிழித்த கோட்டை தாண்ட மாட்டேன். ஆனால் குடிக்க மட்டும் செய்வேன். அதை ஆண்டவனால் கூட தடுக்க முடியாது. அப்பா இது நான் உங்களுக்கு கொடுக்கும் தண்டனை கிடையாது. ஆண்டவனுக்கு கொடுக்கும் தண்டனை."
சிறிது நேரத்தில் அவரிடமிருந்து குறட்டை சத்தம் வந்தது.
நானும் அம்மாவும் அடுத்த அறை சென்று படுத்தோம்.
"அம்மா. உன் மீது நான் கோபம் கொண்டிருக்கக் கூடாது. நீ அப்பாவைத் திருமணம் செய்யாதிருந்தால் சந்தோஷமாக இருந்திருப்பாய்."
அம்மா என்னை அணைத்துக் கொண்டார்.
                            --------*********------

அடுத்த நாள் காலை அப்பா காணவில்லை. அம்மாவும் நானும் தேடித் பார்த்து எந்தப் பலனுமில்லை.
ஒரு வாரம் கழிந்ததும் அப்பா வீடு திரும்பவில்லை. அம்மா மிகவும் துவண்டுப் போயிருந்தாள். என்னுடன் சரியாகப் பேசவில்லை. அது எனக்கு மிகவும் வலித்தது. அம்மாவுக்கு அப்பா வேண்டும். எனக்கு அம்மா வேண்டும். அதற்கு நான் அப்பாவைத் தேட வேண்டும்.
"அப்பாவுடன் வருகிறேன்", என்று என்னுடைய குழந்தைத்தனமான எழுத்தில் அம்மாவுக்கு தெரிவித்து விட்டு கிளம்பினேன்.
தெருவெங்கும் அலைந்தேன். ரயில் நிலையத்தை வந்தடைந்தேன். அங்கும் தேடி அப்பா காணவில்லை. ஒரு ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்தேன். பசி மயக்கம் கண்ணை அடைத்தது. ரயில் கிளம்பியது கூட தெரியாமல் படுத்திருந்தேன்.
சிறிது நேரத்தில் என்னை டிக்கெட் பரிசோதகர் எழுப்பினார். ஏதோ கேட்டார். என்ன கேட்டார். என்பதை புரியாத நிலையில் இருந்தேன். பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவர் பரிசோதகரிடம் ஏதோ பேசினார். அவர் பணம் கொடுத்ததும் சென்று விட்டார். நான் மீண்டும் மயக்கத்தில் விழுந்தேன்.
மீண்டும் என்னை யாரோ எழுப்பினார்கள். பக்கத்தில் அமர்ந்திருந்த சீக்கியர் எனக்கு உணவளித்தார். அசுரப் பசி இருந்ததால் உணவை வேகமாக விழுங்கினேன். இன்னும் பசிக்கிறதா என்று அவர் கேட்க நான் தலையாட்டினேன். மேலும் சில சப்பாத்திகள் அவர் கொடுக்க வயிறார சாப்பிட்டேன்.
மீண்டும் தூக்கம் வந்தது. இப்போது நிம்மதியான நித்திரை. எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியாது. கனவு வந்தது. கனவில் அப்பா வந்தார். பிறகு அம்மா வந்தார். உடனே எழுந்தேன். அம்மாவை விட்டு எவ்வளவு நாள் பிரிந்திருந்தேன் என்று எனக்குத் தெரியாது. அம்மாவிடம் போக வேண்டும் போல இருந்தது.
நான் அழ ஆரம்பித்தேன். சீக்கியர் ஏதோ கேள்விகள் கேட்டார். அவர் என்னை சமாதானம் செய்ய முயன்று தோற்றார்.
அவர் இறங்கும் இடம் வந்தது. அவருடன் எனக்கு வர சம்மதமா என்று கேட்டார். ஒரு நிமிடம் குழம்பினேன். அம்மாவின் கண்ணீர் தோய்ந்த முகம் மீண்டும் நினைவில் வந்தது. அப்பா இல்லாமல் எங்கும் போவதில்லை என்று முடிவெடுத்தேன். நான் வருவதில்லை என்பதை தெரிவித்த பிறகு அவர் இறங்கி சென்று விட்டார்.
ஒரு வாரம் ரயில் பயணத்தில் கழிந்தது. இப்போது நான் அழுவதில்லை. வீட்டிற்குத் திரும்பினால் அப்பாவுடன் தான் போக வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். ரயிலில் பலர் வந்து இறங்கினார்கள். வருபவர்கள் என்னிடம் பரிவாகப் பேசினார்கள். எனக்குப் பிரியமாக உணவளித்தார்கள். ஏன் தனியாக வந்தேன் என்ற அவர்களின் கேள்விகளை மட்டும் தவிர்த்தேன்..
ரயில் இறுதியாக சென்னை நகரத்திற்கு வந்து சேர்ந்தது. மீண்டும் நான் தெருக்களில் அலைய ஆரம்பித்தேன். புரியாத மொழி, புரியாத மனிதர்கள், தெரியாத இடம். ஆனால் அப்பாவைத் தேடும் என்னுடைய உறுதி தளரவில்லை.
எத்தனை நாட்கள் சுற்றினேன் என்று எனக்குத் தெரியாது. பசிக்கும் போதெல்லாம் அன்பான மனிதர்கள் எனக்கு உணவளித்தார்கள்.
அப்பாவின் புகைப்படம் என்னிடம் இருந்தது. அதைக் காண்பித்து அவரை யாராவது பார்த்தார்களா என்று விசாரித்தேன்.
யாருக்கும் தெரியவில்லை. ஒரு மதுக்கடை சென்றேன். அனைவரும் அங்கெல்லாம் நான் வரக்கூடாது என்று துரத்தினார்கள். நான் நகராமல் அழுதுக் கொண்டு அங்கேயே நின்றேன்.
கடைக்காரர் எனக்கு என்ன வேண்டும் என்று விசாரித்தேன். என் தந்தையின் புகைப்படத்தைக் காண்பித்து அவர் எங்கிருக்கிறார் என்று கேட்டேன்.
கடைக்காரர் வியப்புடன் என்னைப் பார்த்தார்.
"இவர் மோகன்தாஸின் மகன் அல்லவா. இவரை ஏன் தேடுகிறாய்."
நான் பதில் ஏதும் சொல்லவில்லை. கடைக்காரர் பலவாறு என்னை விசாரித்தார். நான் அழ ஆரம்பித்தேன்.
"சரி. சொல்கிறேன். ஒரு நாள் இங்கு வந்தார். குடித்து விட்டு மயங்கி விட்டார். நான் அவரை எழுப்பியதும் கன்னியாகுமரிக்கு செல்லும் பேருந்து எப்போது வரும் என்று கேட்டார். நான் பதிலளித்ததும் சென்று விட்டார். அவர் அநேகமாக கன்னியாகுமரி தான் சென்றிருக்க வேண்டும்.
ஒரு நாள் கடற்கரையில் சுற்றிக் கொண்டிருந்தேன். இரவானதால் கூட்டம் கலைந்திருந்தது. சுற்றிலும் மனிதர்கள் யாருமில்லை. நான் கடலின் அலைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வயதான மனிதர் என் அருகில் வந்தமர்ந்தார்.
இந்தியில் என்னுடன் உரையாடினார். நான் யார், என் பெயரென்ன என்று கேள்விகள் கேட்டார்.
என் உண்மைப் பெயரைக் கூறாமல் ராம் என்று பதிலளித்தேன். என் தந்தையைக் கண்டுபிடிக்க உதவ முடியும் என்று வாக்களித்தார். என்னை ஒரு பெரிய விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு உறங்கி அடுத்த நாள் கன்னியாகுமரியை நோக்கி ரயிலில் பிரயாணம் செய்தோம்.
நான் சம்மதித்ததும் என்னை ஒரு பெரிய விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு உறங்கி அடுத்த நாள் கன்னியாகுமரியை நோக்கி ரயிலில் பிரயாணம் செய்தோம்.
மூன்று நாட்கள் கழித்து கன்யாகுமரி வந்தடைந்தோம்.
பெரியவர் - "இங்கு உன் தந்தையை எங்கு தேடுவது."
நான் - "இங்கு மதுக்கடைகளில் தேடலாம். பெரும்பாலும் அங்கு தான் இருப்பார்."
பெரியவரின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.
மதுக்கடைகளில் விசாரித்தபோது அப்பா அருகில் ஒரு கிராமத்தில் இருப்பதாக தெரிந்தது. கயல்விழி என்பவருடன் தங்கி இருப்பதாகக் கூறினார்கள்.
அடுத்த நாள் கிராமத்தை நோக்கி ஒரு மாட்டு வண்டியில் பிரயாணித்தோம்.

வழியில் ஒரு கலவரம் நிகழ்ந்துக் கொண்டிருந்தது. கலகக்காரர்கள் எங்கள் மாட்டு வண்டியை சுற்றி நின்றுக்கொண்டு போக விடாமல் தடுத்தனர். 
கலவரக்காரர்களால் நானும் தாக்கப்பட்டேன். என் கண்கள் இருண்டது. நான் மயக்கத்தில் ஆழ்ந்தேன்.
கண் விழித்ததும் நான் ஒரு குடிசையில் இருப்பது தெரிந்தது முதலில் பார்த்தது பெரியவரைத் தான். அவர் எப்படியோ என்னைத் தேடிக் கண்டு பிடித்து விட்டார். ஒரு மூதாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தார். நான் கண் விழித்தது கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.
"உன் தந்தை இந்த கிராமத்தில் தான் இருக்கிறார். மதுரைக்கு வைத்தியத்திற்காக சென்றிருக்கிறார். நாளை வந்து விடுவார் என்று கூறினார்கள். கவலைப்படாதே எல்லாம் நல்ல விதமாக முடியும்."
அடுத்த நாள் காலை கண்விழித்தபோது யாரோ என் நெற்றியை வருடுவது போன்ற ஓர் உணர்வு.
என் தந்தை அருகிலிருப்பதைப் பார்த்து திகைத்தேன். அவர் கைகளைத் தள்ளிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.
அப்பா என்னை அணைத்துக் கொண்டு அழுதார். நான் அவரிடம் பேசவில்லை. என் கோபம் அனைத்தும் கண்ணீராய் வழிந்தது.
அப்பா - "ரசிக் இனிமேல் உன்னையும் அம்மாவையும் விட்டு நான் எங்கும் செல்ல மாட்டேன். என்னை மன்னித்து விடு."
தாத்தா இரண்டு நாட்களில் மதுரை வருவதை தந்தை தெரிவித்தார். நாங்கள் அனைவரும் தாத்தாவை சந்திப்பது என்று முடிவானது.
நாங்கள் மதுரை வந்தடைந்தோம். தாத்தா வசிக்கும் விடுதிக்கு சென்றோம். தாத்தா தலைவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் அருகில் பாட்டியும் அமர்ந்திருந்தார்.
தாத்தா என்னையும் அப்பாவையும் கண்டதும் எங்கள் இருவரையும் அணைத்துக் கொண்டார்.
"சிறுவனே நீ சேட்டைக்காரன். எங்கள் அனைவரையும் எத்தனை சோகத்தில் ஆழ்த்தி விட்டு மறைந்து விட்டாய். விடா முயற்சியுடன் உன் அப்பாவைத் தேடிக் கொண்டு வந்து விட்டாயே."
அப்பா தாத்தாவின் காலில் விழுந்து வணங்கினார்.
"இனிமேல் இது போல செய்வதில்லை என்று உறுதி கொடு. உன் மகனுக்காகவும், உன் மனைவிக்காகவும் இதை நீ செய்தே ஆக வேண்டும். உன்னால் என் மருமகளும் பேரனும் மதுக்கடைகளில் எல்லாம் போவதை அறிந்து மனம் வாடுகிறது."
"உங்கள் சொல்லை நான் எப்போதும் மீறப்போவதில்லை என்று உறுதியாகக் கூறுகிறேன் தந்தை. இனி மதுவை நான் தொடப் போவதில்லை."
"மிக்க மகிழ்ச்சி. இதற்குப் பதிலாக நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறு. நீ பயனுடன் உன் வாழ்வை அமைத்துக் கொள்ள என்ன உதவி வேண்டும்."
அப்பா என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது பெரியவர் குறுக்கிட்டு - "ஐயா. உங்கள் மகனுக்கு காங்கிரஸ் கட்சியில் பதவி கொடுத்தால் நாட்டுக்காக அவரும் உழைக்கும் வாய்ப்பு கிடைக்கும் அல்லவா."
"ஐயா நீங்கள் என் மகனையும், பேரனையும் காப்பாற்றியவர். உங்களுக்கு நான் ஆயுள் முழுதும் கடன் பட்டிருக்கிறேன். முதலில் உழைப்பைத் தர வேண்டும். அதற்குப் பிறகு தானே பதவி வரும். ஹீரா முதலில் தொண்டாற்ற வேண்டும். தகுதி இருந்தால் அதன் பிறகு பதவி தானே வரும்."
பாட்டி குறுக்கிட்டு பேச முயன்றார். தாத்தாவை சந்திக்க ஜவஹர் வந்ததால் பேச்சு தடைபட்டது.
பாட்டி பெரியவரையும் அப்பாவையும் தனியே அழைத்துப் பேசினார்.
"ஐயா. நான் என் மகனை இனியும் இழக்க விரும்பவில்லை.  ஹீரோவின் நல்வாழ்விற்கு உங்கள் ஆலோசனைகளைக் கூறுங்கள்."
"நீங்கள் ராஜாஜியை சந்தித்து காங்கிரசில் தங்கள் மகனின் எதிர்காலத்தைப் பற்றி பேச வேண்டும்."
"நீங்கள் சூட்சுமமாக சொல்வது புரிகிறது. என் கணவருக்கு எதிராக கொடி பிடிக்க வேண்டும் என்று உணர்த்துகிறீர்கள். அவருக்கு நாடு முக்கியம் என்றால் எனக்கு என் மகன் முக்கியம். என் குடும்பம் முக்கியம். கணவர் சொல்லை மீறாத கஸ்தூரி இறந்து விட்டாள். என் மகனுக்காக என் கணவரையும் எதிர்க்க தயாராக இருக்கிறேன்."
"ராஜகோபால் தற்போது சென்னையில் இருக்கிறார். அவரை சந்திக்க முகம்மது அலியும் நாளை வருகிறார். நாம் சென்னை சென்று இருவரிடமும் பேசுவோம்."
அப்பாவுக்கும் பாட்டிக்கும் இது சம்மதமாக இருந்தது. தாத்தாவை சந்திக்க பலர் வந்த வண்ணம் இருந்தனர். என்னுடன் விளையாட, பேச அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.  அதனால் நானும் தந்தையுடன் சென்னைக்குப் பிரயாணம் செய்தேன்.
ராஜகோபாலின் வீட்டில் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது.  தாத்தாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் எதுவும் செய்ய இயலாது என்று அவர் கை விரித்து விட்டார்.
அடுத்த நாள் ஒரு திடீர் திருப்பம் நடந்தது. ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து பூனாவில் ஒரு காவல் நிலையம் முழுதாக எரிக்கப்பட்டது. 20 போலீசார் கொல்லப்பட்டனர். ஆங்கிலேயர் குடியிருப்பிலும் வன்முறையாளர்கள் புகுந்து 164 ஆங்கிலேயர்களைக் கொன்றனர். இதில் பெண்கள், குழந்தைகளும் அடக்கம்.
தாத்தா இதை வன்மையாகக் கண்டித்தார். தனது சத்தியாகிரகப் போராட்டத்தைக் கைவிட்டார்.
ராஜகோபால் தந்தையை சந்திக்க அவர் வீட்டுக்கு அழைப்பு விடுத்தார்.  அங்கு முகம்மது அலி, சுபாஷ் மற்றும் பல தலைவர்கள் ஆலசோனையில் இருந்தனர். அப்பாவையும் பாட்டியையும் ஆர்வத்துடன் வரவேற்றனர்.
ராஜகோபால் - "சரித்திரத்தின் முக்கியமான தருவாயில் இருக்கிறோம். நாம் இன்று எடுக்கும் முடிவு இந்த நாட்டின் தலையெழுத்தையே மாற்றும். இன்று நம் மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக செய்த வன்முறை கண்டிக்கத்தக்கது. ஆனால் அதற்காக மோகன்தாஸ் நம் விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டது முட்டாள்தனமானது. ஆங்கிலேயர்கள் ஜாலியன்வாலாபாக்கில் நடத்திய வன்முறையை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா. அந்தக் காயம் மக்கள் மனதில் இருக்கும் அல்லவா. அதன் பின்விளைவுகள் தான் இன்று நம் மக்கள் நடத்திய வன்முறை. இது தவறு என்றாலும் புரிந்துகொள்ளக் கூடியது. மோகன்தாசின் இந்த முடிவு நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதை இருபது ஆண்டுகள் பின் தள்ளி விடும். இதை இங்கிருப்பவர்கள் ஆமோதிக்கிறீர்களா?"
அனைவரும் ஆம் என்று குரல் கொடுத்தனர்.
"நமது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யத் தான் கூடியிருக்கிறோம். வழக்கம் போல மோகன்தாஸின் எல்லா முடிவுகளையும் நமக்குள் தயக்கம் இருந்தும் ஆதரிப்பது போல இந்த முறை செய்ய முடியாது. அடுத்த மாதம் நடக்கும் கட்சி தலைவர் போட்டிக்கு நம் தரப்பில் ஒருவரை நிறுத்த வேண்டும். அது யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்."
 "மோகன்தாஸின் தரப்பில் ஜவஹர் நிற்கிறார். அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அமோகமாக இருக்கிறது. நம் தரப்பில் வலுவான தலைவர் யாரும் இல்லை."
மேற்கண்ட கருத்தை எல்லா தலைவர்களும் கூறினார்.
ராஜாஜி - "முகம்மது அலியை நம் தரப்பில் நிற்க வைக்கலாம் என்று நான் முன் மொழிகிறேன். உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கூறுங்கள்."
"முகம்மது நின்றால் கண்டிப்பாக தோற்பார். அவருக்கு ஹிந்துக்களின் மத்தியில் ஆதரவு மிகக் குறைவு"
ராஜாஜி - "இரண்டு நாட்களுக்கு முந்தைய நிலை அது. இப்போது நிலைமை முற்றிலும் தலைகீழ். மோகன்தாஸ் போராட்டத்தை வாபஸ் வாங்கியது மக்கள் மனதில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தலைமையில் விடுதலை கிடைப்பது நிராசை என்று மக்கள் எண்ணத் தொடங்கியுள்ளனர். இந்த தருணத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகம்மது தலைவர் பதவிக்கு நிற்பார். பொது செயலாளர் பதவிக்கு மோகன்தாஸின் மகன் ஹீராலால் நிற்பார். தேசப்பிதாவுக்கு எதிராக அவர் மகனே நிற்பது நமக்கு பெரும் பலம்."
விவாதத்திற்குப் பின் அனைத்து தலைவர்களும் இதை ஆமோதித்தனர்.
அன்று சென்னை மெரினா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் தலைவர்கள் பேசினர்.
அப்பாவுக்கும் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவரது உணர்ச்சிகரமான பேச்சுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. ஒரு புது நட்சத்திரத் தலைவர் உருவாகிறார் என்று பத்திரிக்கைகளில் பேசப்பட்டார்.
தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும் நாளும் வந்தது. மாநாட்டில் முதலில் தலைவர்கள் பேசினர்.
இறுதியாக அப்பா பேசினார்.
"இன்று வரலாற்றின் முக்கியமான நாள். இது வரை என் தந்தை தசரதனாகவும் அவர் சொல் மீறாத ராமனாகவும் நான் இருந்தேன். இன்று அவர் ராமனாகவும் நான் லவ குசா இரட்டையர்களில் ஒருவனாக மாறி விட்டேன். இரு நூறு ஆண்டுகளாக ஆண்டுகளாக ஆங்கிலேயர்கள் நமக்கு நிகழ்த்திய கொடுமைகள் எத்தனை. நம் உரிமைகள் பறிக்கப்பட்டது. வளமான இந்த நாடு சுரண்டப்பட்டது. நம் சொந்த நாட்டிலேயே நாம் பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டோம். ஒரு காலத்தில் பூமியின் பொருளாதாரத்தில் முதன்மையான நாடக நமது நாடு இருந்தது. மேலை நாடுகள் நம் நாட்டுடன் வாணிகம் செய்ய போட்டி போட்டன. இப்போது மேலை நாடுகள் பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுவிட்டன. ஆனால் நாம் இப்போது ஒரு ஏழை நாடாக மாறி விட்டோம். இதற்கு மேலை நாடுகளின் விஞ்ஞான வளர்ச்சி மட்டுமா காரணம். ஆயிரம் ஆண்டுகள் முன்னரே ஆர்யபட்டா, வராஹமீரா போன்ற விஞ்ஞானிகள் கொண்ட நாடு இது. இப்போது ஏன் நாம் விஞ்ஞான அறிவில் பின் தங்கி இருக்கிறோம். ஏன் என்றால் இந்த காலகட்டத்தில் நாம் அடிமை நாடாக இருந்திருக்கிறோம். நம் நாடு சுதந்திரக் காற்றை அனுபவிப்பதை இனியும் ஒரு நாள் கூட தள்ளிப் போடக்கூடாது. போராட்டத்தைக் கை விடக்கூடாது. மாறாக போராட்டத்தை மேலும் தீவிரமாக்க வேண்டும். இதில் நம் மக்கள் சில தவறுகள் செய்யக் கூடும். அது ஒடுக்கப்பட்டவர்களின் குமுறல் என்று தான் கருத வேண்டும். அதற்காக போராட்டத்தைக் கை விடக்கூடாது. என் தந்தையுடன் எனக்குள்ள கருத்து வேறுபாடு இந்த ஒரு விஷயத்தில் தான். எங்கள் தரப்பில் நிற்கும் முகம்மது அலி தேர்ந்த பண்பாளர். அவரால் மட்டுமே இந்துக்களையும் முசல்மான்களையும் ஒன்றுபடுத்த முடியும். அவர் தலைமையில் ஒரு வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். அவருக்கு உங்கள் ஆதரவை அளித்து ஒரு புது யுகத்தை உருவாக்க உதவி செய்யுங்கள். ஜெய் ஹிந்த்"
மாநாட்டில் பெரும் கரகோஷம் நடந்தது. அனைவரும் அப்பாவுக்கும் முகம்மது அலிக்கும் ஆதரவாக கோஷம் போட்டனர்.
அதன் பிறகு வாக்கெடுப்பு நிகழ்ந்தது. பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முகம்மது அலி வென்றிருந்தார்.
தாத்தாவுக்கும் ஜவஹரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். தாத்தாவின் அரசியல் வாழ்க்கையின் அஸ்தமனம் அன்று தொடங்கியது.
அப்பாவை அனைத்து தலைவர்களும் சூழ்ந்துக் கொண்டனர். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாலும் அப்பாவின் கண்கள் ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்த பெரியவரை நோக்கிச் சென்றது.
அனைவரையும் விலக்கி விட்டு அவரிடம் சென்றார்.
"ஐயா உங்களால் நான் புது மனிதன் ஆனேன். என் மகனைக் காப்பாற்றினீர்கள். அவனுக்கு வழிகாட்டியாக இருந்து, ஆழ்ந்த குழிக்குள் இருந்த என்னையும் வெளி கொண்டு வந்தீர்கள்.  பெரும் வரலாற்று மாற்றத்திற்கு நீங்கள் வித்திட்டுள்ளீர்கள். இதை நான் என்றும் மறவேன். உண்மையில் நீங்கள் யார். எங்கிருந்து வருகிறீர்கள்,"
"நான் ஒரு நாடோடி. இந்த பிரபஞ்சத்தின் மூலை முடுக்கெல்லாம் அலைபவன். புது புது உலகங்களைத் தேடி செல்பவன். எனக்கென எந்தப் பெயருமில்லை எந்த ஊருமில்லை. நான் வந்த வேலை முடிந்தது. உன்னிடமிருந்து விடைபெறுகிறேன்."
பெரியவர் விடைபெற்று சென்று விட்டார். அதன் பிறகு எங்கள் வாழ்வில் நாங்கள் அவரைக் காணவே இல்லை.
அப்பா என்னை அழைத்துக் கொண்டு அகமதாபாத் திரும்பினார். அப்பாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. வீட்டிற்கு வந்ததும் அம்மா அவரிடம் ஒன்றும் பேசவில்லை. என்னிடமும் தனது செல்லக் கோபத்தைக் காண்பித்தார். நான் சமாதானம் செய்த பின் என்னிடம் ஆசையாக எனது அனுபவங்களை ஆர்வமாகக் கேட்டறிந்தார்.
அப்பாவும் அம்மாவிடம் பேச முயன்றார். சிறிது நேரத்திற்குப் பின் அம்மாவின் கோபம் சற்று தணிந்தது.
அப்பா - "நான் குடியை விட்டு இரண்டு மாதங்கள் ஆகி விட்டது. இன்று நாடே மதிக்கும் நிலையில் இருக்கிறேன். உன் முகத்தில் சிறிதும் மகிழ்ச்சி இல்லையே ஏன்?"
அம்மா - "உங்களின் இன்றைய அரசியல் நிலைப்பாடு வெற்றியை அளித்திருக்கலாம். ஆனால் உங்கள் தந்தை ஒரு மகாத்மா.  அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவின் பின் சத்தியம் இருக்கும். நீங்கள் வேண்டுமானாலும் பாருங்கள் வரலாறு அவர் பக்கம் தான் இருக்கும்."
அப்பா - "என் தந்தை ஒரு கொள்கைவாதி. ஆனால் வாழ்க்கையில் சிறிது நெளிவு சுளிவு வேண்டும். அது என் தந்தையிடம் சிறிதும் இல்லை. மற்ற நாடுகளின் விடுதலை போராட்டத்தைப் பார். அங்கு நடக்காத வன்முறையா நம் நாட்டில் நடந்துள்ளது. அதற்காக என் தந்தை போராட்டத்தைக் கை விட்டது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். ஏன் இது உனக்குப் புரியவில்லை."
அம்மா - "நான் பெண்பிள்ளை. எனக்கென்ன தெரியும்".
அம்மா அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டார்.
இரவில் அம்மா அப்பா மற்றும் நான் படுக்க சென்றோம்.
அப்பா உற்சாகத்துடன் அம்மாவிடம் தன் அரசியல் கனவுகள் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அம்மாவிடம் எந்த பதிலும் இல்லை. அவள் முகம் மறு பக்கம் திரும்பியிருந்தது. அப்பா அவளை மெதுவாக அசைத்துப் பார்த்தார். அவள் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றிருந்தாள்.
                         முதல் கதை முற்றும்
                            --------***********----------
அடுத்த நாள் காலை  ரெமோ ஜென்னியிடம்  தான் படித்த டைரியில் இருந்த விபரங்களைக் கூறினான்.
"ஹீராலாலின் தந்தை மோகன்தாஸ் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவர் இந்திய அரசியலில் இவ்வளவு பெரிய ஆளுமை என்பது எனக்கு தெரியாது. இந்திய விடுதலை போராட்டத்திற்கு அவர் தான் வித்திட்டார் என்பது புதிய செய்தி."
"இது நம் சரித்திர புத்தகங்களில் கூறப்படவில்லை."
"மேலும் நம் சரித்திரத்தில் ஹீராலால் ஒரு குடிகாரர் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. இது வேண்டுமென்றே ரஞ்சித் திரித்தது என்று தெளிவாகிறது. ஹீராலால் முதலில் குடிகாரராக இருந்தாலும்  தலைமை பதவிக்கு வந்த பிறகு குடியை முழுதும் விட்டார்."
"எவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்கள் கிடைத்துள்ளது."
"சரி நீ படித்த புத்தகத்தில் என்ன கூறப்பட்டுள்ளது."
"1922 பிறகு நடந்த சரித்திர நிகழ்வுகள் முல்லரின் புத்தகத்தில் இருந்தன. ஹீராலால் பதவி ஏற்றவுடன் காங்கிரஸ் கட்சி உடைந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஜவஹர் தலைமை ஏற்றார். ராஜகோபால், முகம்மது அலி, ஹீராலால் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சுதந்திரா கட்சி தொடங்கினர். அடுத்த தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வி அடைந்தது. மக்களுக்கு மோகன்தாஸ் மீது இருந்த கடும் கோபமே அதற்கு காரணம். ஜவஹர் கூட மோகன்தாஸின் கிராம ராஜ்யத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை மறுத்தார். அவருக்கு சோஷ லிஸசித்தின் மீது ஈர்ப்பு இருந்தது. 1925  ஆம் ஆண்டு மோகன்தாஸ் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். சபர்மதி ஆசிரமத்தில் தனிமையில் தன் வாழ்க்கையைக் கடத்தினார்."
"ஹீராலாலின் அரசியல் வாழ்க்கை என்னவாயிற்று."
"அவர் இந்திய அரசியலின் பெரும் சக்தியாக உருவெடுத்தார்.  ஜவஹர், முகம்மது அலியை விட மக்கள் மத்தியில் பிரபலமான தலைவர் ஆனார். அவர் தன் தந்தையின் அகிம்சை கொள்கையை  முழுதாக ஏற்கவில்லை. ஆங்கிலேயர்கள் மீது வன்முறையைத் தூண்டி விட்டார். நாடெங்கும் கலவரங்கள் வெடித்தன. அவர் கட்சியினர் காங்கிரஸ் தொண்டர்களையும் தாக்கினர். இதை அடக்க முடியாமல் அரசு தடுமாறியது. 1927 ஆண்டு  முகம்மது அலி, ஹீராலால் கைது செய்து அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தவுடன்  1942 ஆம் ஆண்டு ஹீராலால் மற்றும் முகம்மது அலி விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு பதிலாக  உலகப் போரில் அவர்கள் இருவரின் ஆதரவு பிரிட்டன் அரசுக்கு கிடைத்தது. இது வரை மட்டும் தான் நான் படித்தேன்."
"ஒரு தகவல் பொக்கிஷமே நமக்கு கிடைத்திருக்கிறது. ரசிக்கின் கதையின் முதல் பகுதி மட்டும் தான் இந்த டைரியில் உள்ளது. மேலும் இரு கதைகள் இருக்கின்றன. அது எங்கே என்று நாம் தேட வேண்டும்."
இருவரும் வீட்டை முழுதும் அலசினர். ரசிக்கின் மற்ற கதைகள் கிடைக்கவில்லை.
அவர்கள் இருவரிடமும் இருந்த பணமும் கரைந்து விட்டது. இருவரும் அருகிலிருந்த வால்மார்ட் கடையில் வேலை பெற்றுக் கொண்டனர். தங்களை அமெரிக்க பிரஜை என்று பொய் கூறி தான் வேலை பெற முடிந்தது.
வேலையிலிருந்து வீடு திரும்பிய ஜென்னி வீட்டின் கதவு திறந்தாள். சாவியைப் பார்த்ததும் அவளுக்கு ஒரு சந்தேகம் வந்தது,
"ரெமோ, இதில் மூன்று சாவிகள் உள்ளன. மற்ற இரு சாவிகள் கொண்டு இந்த வீட்டின் கதவைத் திறக்க முடியவில்லை. இந்த இரு சாவிகள்  எதற்காக."
"தெரியவில்லை முல்லரின் பேரனிடம் தான் கேட்க வேண்டும்."
அடுத்த நாள் இருவரும் முல்லரின் பேரனை சந்தித்தனர். சாவி பற்றி தங்கள் சந்தேகத்தை கேட்டனர்.
"இரண்டாவது சாவி பற்றி மட்டும் தான் எனக்குத் தெரியும். ரசிக் காடு மலைகளில் நடப்பதை விரும்புவார். இங்கிருந்து 4  மைல்கள் தாண்டி ஒரு காடு உள்ளது. அங்கு ஒரு மர வீடு உள்ளது. இதை ரசிக்கே உருவாக்கியது. மனம் சஞ்சலம் அடையும் போதெல்லாம் அங்கு அவர் ஓய்வெடுப்பார். மூன்றாவது சாவி பற்றி எனக்கு தெரியாது." 
ரெமோ ஜென்னியுடன்  உடனே காட்டில் உள்ள ரசிக்கின் மர  வீடு இருக்கும் விபரங்கள் கேட்டுக் கொண்டான். இருவரும் காட்டை அடைந்தனர்.
காடு மிகவும் அமைதியாக இருந்தது. மிக உயரமான மரங்கள். பல பறவைகள் இணைந்து ஒலிக்கும் சத்தம் சங்கீதம் போல இருந்தது. ரெமோவுக்கு அந்த  இடம் மிகவும் பிடித்தது. ஜென்னி  தனிமையை விரும்ப மாட்டாள். அவள் அச்சத்துடன் ரெமோவைப் பின் தொடர்ந்து சென்றாள்.
சிறிது நேரம் நடைக்கு பிறகு அந்த மர வீடு தெரிந்தது. ஒரு அழகிய ஆற்றுக்கு  அருகில் அந்த வீடு இருந்தது.  ஆற்றின் சல சல சத்தம் இசை போல ஒலித்தது.
ரெமோ வீட்டின் கதவை திறந்தான்.   
வீடு முழுதும் புழுதியாக இருந்தது. இருவருக்கும் தும்மல் வந்தது. மூக்கைப் பொத்திக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர்.
வீடு முழுதும் தேடினர். மேல் மாடியில் படுக்கை அறையில் ஒரு மேஜையும்  நாற்காலியும் இருந்தது. மேஜையை ஜென்னி திறந்தாள். நீல நிறத்தில் ஒரு டைரியைக் கையில் எடுத்தாள். தேடிய பொருள் கிடைத்து  விட்டது என்று கைகளால் சைகை செய்தாள்.
இருவரும் அந்த இடத்தை விட்டு வெளியேறினர். இரவில் ரெமோ இரண்டாவது டைரியை படிக்க கையில் எடுத்தான். டைரி முழுதும் புழுதி ஒட்டியிருந்தது. அதை நன்கு சுத்தம் செய்து படிக்கத் தொடங்கினான். இந்நேரம் ஜென்னி முல்லரின் புத்தகத்தை தொடர்ந்து படிக்க ஆரம்பித்திருப்பாள் என்று மனதுக்குள் நினைத்துக்  கொண்டான்.
டைரி 1947 ஆம் ஆண்டின் சரித்திரச் சுழலுக்குள் ரெமோவை இழுத்துக் கொண்டது.

                                        இரண்டாம் கதை

                                              1947- ஆகஸ்ட்


நான் இப்போது 31 வயது  இளைஞன். எனது பத்து வருட ஐரோப்பா வனவாசத்தை முடித்துக் கொண்டு தாய் நாடு திரும்பியிருக்கிறேன். நான் பிரயாணம் செய்யும் ரயில் இன்னும் அரை மணி நேரத்தில் அகமதாபாதை நெருங்கி விடும்.
ஜன்னலோரம்  அமர்ந்திருந்ததால் அதிகாலை சுகமான காற்று என் முகத்தைத் தழுவி சென்றுக் கொண்டிருந்தது. எப்போதும் இல்லாத வகையில் அந்தக் காற்றில் சுதந்திரத்தின் மணம் வீசிக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன். ஆம் இந்திய தேசம் சுதந்திரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்த பத்து வருடங்களில் எத்தனை நிகழ்வுகள். நான் அறிவியல் கல்வி கற்க ஐரோப்பாவில் தங்கியிருந்தது, அப்பா இந்திய அரசியலில் பெரும் ஆளுமையாக முன்னேறியது,  நாட்டு மக்களை ஒருங்கிணைத்து சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட தாத்தாவின் அரசியல் வாழ்க்கை சரியத் தொடங்கியது என எல்லாம் இந்த பத்தாண்டுகளில் அரங்கேறியது.
இந்தியா திரும்பியதும் நான் முதலில் சந்திக்க விரும்பியது தாத்தவைத் தான். இதில் அப்பாவுக்கு சற்று வருத்தம்.
ரயில் ஸ்டேஷனில் நின்றது. நான் தாத்தாவின் ஆசிரமத்திற்கு சென்றேன். எப்போதும் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும் அவ்விடம் வெறிச்சோடி இருந்தது. தாத்தாவை பார்த்ததும் பெரிதும் வியந்தேன். நான் எதிர்பார்த்தது முதுமையின் அழுத்தத்தில், தோல்வியின் விரக்தியில் இருக்கும் ஒரு வயோதிகரை. ஆனால் தாத்தாவின் முகத்தில் முன்னிருந்ததை விட பொலிவு கூடியிருப்பதாகவே தோன்றியது. அன்றைய செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தார்.
என்னை அவரால் அடையாளம் கொள்ள முடியாதலால் அவருக்கு நான் யார் என்று தெரியப்படுத்தினேன். என் வருகை அவருக்கு பெரும் ஆனந்தத்தை அளித்தது. உறவுகளை பற்றிய விசாரிப்புகள் முடிந்து பேச்சு அரசியலை நோக்கித் திரும்பியது.
"25 வருடங்கள் முன்பே அரசியலில் என் சகாப்தம் முடிந்தது. அதில் எனக்கு வருத்தம், மகிழ்ச்சி இரண்டுமே இருக்கிறது. குடிகாரனாக இருந்த என் மகன் இப்போது பெரும் பொறுப்பில் இருக்கிறான். என் பிடிவாதம் அவனை அழித்திருக்கும். என் தாழ்வில் அவன் உயர்வு நிகழ்ந்திருக்கிறது. சுதந்திர போராட்டத்தில் முகம்மது அலியும் ஹீராவும் இனைந்து செயல்பட்டது. இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒருங்கிணைக்க உதவியது. இல்லாவிட்டால் இந்த தேசம் பிரிந்திருக்க சாத்தியம் உள்ளது. "
தாத்தா சிறிது நேரம் அமைதியில் ஆழ்ந்து பிறகு பேச்சைத் தொடர்ந்தார்.
"வருத்தம் என்னவென்றால் இந்த தேசம் தன் ஆன்மாவை இழந்து வருகிறது. உன் அப்பாவின் சுதந்திரா  கட்சி அகிம்சை கோட்பாட்டை உறுதியாக ஏற்கவில்லை. அங்கங்கே ஆங்கிலேயர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக நடக்கும் வன்முறைகள் கண்டும் காணாமல் விடப்பட்டது. சுதந்திரம் அடைந்த பிறகு அமையும் அரசாங்கம் நான் கனவு கண்ட ராம ராஜ்ஜியமாக இருக்காது. கிராமங்கள் அழியும். மேலை நாடுகளின் அரசியல் சித்தாந்தங்களே இங்கு கோலோச்சும். பொருளாதார மற்றும் ராணுவ வளர்ச்சியே பிரதானப்படுத்தப்படும். சுதந்திரா கட்சி தான் ஆட்சிக்கு வரும். முகம்மது  அலி பிரதமர் ஆவார். அவ்வாறு நிகழ்ந்தால் ஜனநாயகம் என்னும் போர்வைக்கு அடியில் மெலிதான சர்வாதிகாரம் தான் இருக்கும்.  மேலும் 20 ஆண்டுகள் கழித்து இந்த நாட்டின் எதிர்காலம் குறித்து தான் என் கவலை எல்லாம்."
"நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்  ரசி. மக்கள் என்னை மறந்து விட்டது கூட ஒரு விதத்தில் நன்மையே. இந்த இடம் எவ்வளவு அமைதியாகி விட்டது பார். அமைதியில் தான் நம் மனதின் சஞ்சலங்கள் நமக்கு தெளிவாக கேட்கும். தனிமையில் என் மனதை சத்யசோதனைக்கு தீவிரமாக உட்படுத்த என்னால் இயன்றது. இந்த சத்ய சோதனை மூலம் என் உதிரத்தில் கலந்திருந்த நஞ்சை சிறிதளவாவது வெளியேற்ற முடிந்தது. இறைவனின் பாதத்தை அடைவதற்கு  தகுதியானவனாக என்னை சிறிது சிறிதாக மாற்றி வருகிறேன்.  "
எனது மேலை நாட்டு அனுபவங்கள், என் அறிவியல் கல்வி குறித்து விசாரித்தார். நான் தாத்தாவிடம் விடை பெற்று டெல்லிக்குப் பிரயாணம் செய்தேன்        
                               --------********-------------   
அப்பா மிகவும் கம்பீரமாக தெரிந்தார். நான் வீட்டிற்கு வந்தது முதல் சளைக்காமல் பேசிக் கொண்டிருந்தார்.
"பத்து வருடம் கழித்து வருகிறாய், உன் அம்மாவைக் கூட தேடாமல் சபர்மதி சென்று விட்டாய். எப்படி இருக்கிறார் உன் தாத்தா."
" அவர் மிகவும் மன நிம்மதியுடன் இருப்பது போல தெரிகிறது. அவருக்கு தற்போது அரசியல் ஒரு பொருட்டே கிடையாது. ஒரு  நாடே அவரை மறந்து விட்டது. இன்று விடுதலையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் அவர் தானே. ஆனால் இன்று அவருக்கு கிடைக்கும் மரியாதை என்ன. அதனால்  அவரை தான் முதலில் சந்திப்பது என்று முடிவெடுத்தேன்."
"மரியாதை தானே கொடுக்க வேண்டும். வேண்டுமென்றால் சுதந்திர இந்தியாவின் ரூபாய் நோட்டுக்களில் அவர் படத்தை அச்சிட்டு விடுகிறோம். அவ்வளவு தான் செய்ய முடியும். அவர் கொள்கைகள் சித்தாந்தங்களுக்கு சுத்தமாக இடமிருக்காது."
"நாம் மேலை நாடுகளை பின்பற்ற  முயலுகிறோம். ஆனால் அவர் இந்த மண்ணை நன்றாகப் புரிந்தவர். கிராமங்களை மையமாகக் கொண்ட, அவற்றுக்கு முழு சுதந்திரம் அளிக்கும் ஒரு நாட்டை அவர் கனவு காண்கிறார். அது எனக்கு ஏற்புடையதாகத் தான் இருக்கிறது."
"அந்த கிராம ராஜ்ஜியத்தில் உனது இடம் என்ன என்று யோசித்துப் பார். நீ அறிவியல் மீது ஆர்வம் கொண்டவன். உன்னை ராட்டினத்தின் நூலை கோர்க்க சொன்னால் சம்மதமாக இருக்குமா. எல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாத வெட்டிக் கற்பனைகள்."
"இன்று உலகத்தின் அரசியல் கோட்பாடுகள் இரு துருவங்களாய் தனித்து இருக்கிறது. அரசு என்பது நாட்டின் வெளியுறவுக் கொள்கை, மக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு என்பதோடு சுருக்கிக் கொள்வது. வலிமையான ராணுவம் என்பது இந்த சித்தாந்தத்தில் இன்றியமையாத  ஒரு அம்சமாக இருக்கும். இதன் படி மக்கள் தங்கள் பொருளாதார நிலையை தானே தீர்மானித்துக் கொள்வார்கள்.  முதலீட்டாளர்கள் பெரிதும் மதிக்கப்படுவார்கள். அவர்கள் நடுவில் அரசின் கட்டுப்பாடுகள் இருக்காது. இது வடது சாரி அரசியல் கொள்கை. அமெரிக்க நாடும், சில  ஐரோப்பா நாடுகளும் இந்த கோட்பாட்டின்  அடிப்படையில் தங்கள் அரசியல் கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். "
"இன்னொரு துருவத்தில் மக்கள் மீது பல கட்டுப்பாடுகளை சுமத்தும் அரசாங்கம்.  ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதே அரசின் முக்கிய நோக்கமாக இருக்கும். மக்கள் மீது அதிக வரிச்சுமை, வர்த்தகம் மீது பல தடைகள் என்று குடிமகனின் அன்றாட வாழ்க்கையில் அரசு தன் மூக்கை நுழைக்கும். மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையீட்டை மறுதலிக்கும். இது இடது சாரி அரசியல் கோட்பாடு."
"இதில் இந்தியாவின் அரசியல் சூழ்நிலை எப்படி பொருந்துகிறது. இடது சாரி கோட்ப்பாட்டை ஜவஹர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், வடது சாரி அரசியலின் பிரதிநிதியாக முகம்மது அலியின்  தலைமையிலான சுதந்திரா கட்சியும் தாங்கி நிற்கும். உலகமே  பிரமிக்கும் வகையில் இந்தியாவின் ஜனநாயகம் இயங்கும்."
"எனக்கு அரசியல் மீது ஆர்வம் கிடையாது. பாட்டி எங்கே இருக்கிறார்."
"அவர் என்னுடன் தான் இருக்கிறார். இரண்டு வருடங்கள் முன்பு பாட்டி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். மருத்துவர்கள் பரிந்துரைத்த அறுவை சிகிச்சையை உன் தாத்தா மறுத்தார். பாட்டி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உன் தாத்தாவிடம்  சண்டை போட்டு நான் பாட்டிக்கு சரியான மருத்துவம் கிடைக்க செய்தேன். அன்றிலிருந்து உன் பாட்டி என்னுடன் தான் இருக்கிறார்."
"தாத்தாவின் கொள்கைகள் பாட்டிக்கு நன்று தெரியும். இதற்காகவெல்லாம் அவரை பிரிந்திருக்க மாட்டார்."
"ஆம் மேலும் சில சம்பவங்கள் நடந்தன. மனிதனுக்கு இயல்பாக வரும் உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வர உன் தாத்தா போராடினார். சத்ய சோதனை என்று பலவாறு கூத்தடித்தார். அது உன் பாட்டிக்கு சங்கடமாக இருந்தது. 24  மணி நேரமும் காமத்தையை சிந்திப்பவனால் அதை எப்படி வெல்ல முடியும். மக்கள்  நகைக்கும் வண்ணம் தன்னை அசிங்கப்படுத்திக் கொண்டார். உனக்கும் வயதாகிக் கொண்டே போகிறது.  எப்போது திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாய்."
"ஏற்ற பெண் கிடைக்கும் போது."
                            ---------------********************-----------------------
வைஸ்ராய்  மௌண்ட்பேட்டன் தனது மாளிகையில் நடத்தும் ஒரு விழாவிற்காக முக்கியமான இந்திய தலைவர்களை அழைத்திருந்தார். அப்பா என்னையும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
விழா அரட்டைகள், சுவையான உணவு வகைகள்,  நடனம் என்று கோலாகலமாக நடைபெற்றது. அப்பா ஜவஹருடன் எதையோ விவாதித்துக் கொண்டிருந்தார். அவர்களுடன் முகம்மது அலியும் இணைந்துக் கொண்டார்.
எனக்கு பேச்சுத் துணை யாருமே இல்லாததால் மாளிகையின் வெளியே உள்ள பூங்காவில் அமர்ந்துக் கொண்டிருந்தேன். உள்ளே இருப்பதை விட இந்தத் தனிமை நிம்மதியை தந்தது. ஆனால் அது  நீடிக்கவில்லை.
சிறிது நேரத்தில் ஒரு அழகான இளம் பெண் சற்று தள்ளி அமர்ந்தாள். இப்படி ஒரு அழகான பெண்ணை நான் எங்கும் பார்த்ததில்லை. அவள் கண்களில்  கண்ணீர் வழிந்தது. நான் அங்கு இருப்பதை அவள் கவனிக்கவில்லை.
சிறிது நேரத்தில் அவளைத் தேடி ஒருவன் வந்தான். அவன் பெரிய இடத்துப் பையனாக இருப்பான் என்று நான் யூகித்தேன். அவர்களுக்குள் சிறிது நேரம்  வாக்குவாதம் நடந்தது. அந்த இளைஞன்  கோபமாக கத்திக் கொண்டே சென்று விட்டான்.
அவன் சென்ற பின் அந்தப் பெண் கண்களை மூடிக் கொண்டு அழுதாள். நான் அவள் அருகே சென்று அமர்ந்தேன். அவள் கேள்விக்குறியுடன் என்னைப் பார்த்தாள்.
"இங்கு எத்தனை சத்தம். எத்தனை கொண்டாட்டம். எத்தனை வினோதமான காட்சிகள். இத்தனை இருந்தாலும்  நாம் தனிமையான மனிதர்களாகத் தான் இருக்கிறோம் இல்லையா?"
"நான் உணர்வது தனிமை இல்லை. என் மனம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. அதை யாருடனோ பகிர்ந்து கொள்ள துணை தான் தேவைப்படுகிறது."
"அந்தத் துணை ஏன்  நானாக இருக்கக் கூடாது.?
"நீங்கள் யார். என்னிடம் உங்களுக்கு ஏன் இத்தனை கரிசனை."
"தெரியவில்லை. நான் யாருடனும் அத்தனை எளிதில் பேசுபவன் கிடையாது. உண்மையில் சொல்ல வேண்டுமானால் நீங்கள் ஒரு அதிசய அழகு. இத்தனை அழகான பெண்ணுக்கும் ஒரு சோகம் இருக்கிறது என்ற நிலை உங்களுக்கு ஆறுதல் சொல்ல தூண்டுதலாக அமைந்தது."
அந்தப் பெண்ணின் முகம் நாணத்தில் சிவந்தது.
"நமக்கு முன் பின் அறிமுகம் எதுவும் கிடையாது. அப்படி இருக்க நீங்கள் எப்படி ஆறுதலாக முடியும்."
"நீங்கள் ரயிலில் பயணம் செய்திருக்கிறீர்களா?"
"ஆம்"
"உயர் வகுப்பில் சென்றிருப்பீர்கள். கீழ் வகுப்பில் சென்ற அனுபவம் உங்களுக்கு கிடைத்திருக்காது. நம் அருகில் முன் பின் தெரியாத ஒரு நபர் அமர்வார். உடனே பேச்சு கொடுப்பார். அதன் பின் சில மணி நேரங்களில் இருவருக்குமிடையே எந்த அந்தரங்கமும் இருக்காது. அனைத்தையம் பகிர்ந்திருப்போம். அது போல என்னை நினைத்துக் கொள்ளுங்கள்."
"அப்போது நீங்கள் வெறும் வழிப்போக்குத் துணை மட்டும் தானா?"
"உங்களுக்கு தான் வேறு துணை இருப்பது போல தெரிகிறதே."
"அவன் ஒரு பார்ஸி  வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எங்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணம் நடப்பதற்கு முன்பே ஏகப்பட்ட கட்டுப்பாடு. சரியான சந்தேகப்பிராணி. எப்போதும் அவனுடனேயே ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறான்."
"டினா இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்."
அவளைத் தேடி முகம்மது அலி வந்து விட்டார். அவள் என்னுடைய சிறுவயது தோழி டினா என்பது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
"யாருடன் பேசிக் கொண்டிருக்கிறாய்."
"ஐயா. நான் உங்களுக்குத் தெரிந்தவன் தான். ஹீராலாலின் மகன் ரசிக். சற்று தனிமையைத் தேடி இங்கு வந்தேன். உங்கள் மகளும் தனிமையை விரும்புவார் என்பதால் இங்கு சந்திக்க நேர்ந்து உரையாடிக்  கொண்டிருந்தோம்."
"ஹீராலாலின் மகனா நீ? ஐரோப்பாவிலிருந்து வந்திருக்கிறாய் என்று உன் தந்தை இப்போது தான் கூறினார். உன்னை பார்த்ததில் மிக்க சந்தோஷம். நீங்கள் பேசுங்கள். நான் வருகிறேன்."
அவர் சென்ற பின் டினா என்னை அணைத்துக் கொண்டாள்.
"எத்தனை ஆண்டுகள் கழித்து சந்திக்கிறோம் ரசிக். அதுவும் எப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில்"
"நம் குழந்தைப் பருவ விளையாட்டுக்களை நான் இன்னமும் நினைப்பதுண்டு. "
"என் வாழ்வில் நடந்த மிகக் குறைவான மகிழ்ச்சியான தருணங்களில் அதுவும் ஒன்று."
"உன் வருங்காலக் கணவர் உன் மீது  அபரிதமான அன்பு வைத்திருப்பதால் தான் இப்படி நடக்கிறார் என்று நான் நினைக்கிறேன் ?"
" உண்மையான அன்பு என்பது எல்லையில்லாத வானத்தில் இரு பறவைகள் சேர்ந்து பறக்கும் உணர்வு போல இருக்க வேண்டும். கட்டுப்பாடுகளுக்கு அங்கே இடமில்லை."
மீண்டும் முகம்மது அலி டினாவைத் தேடி வந்தார்.
"நசீர் உன் மீது மிகவும் கோபமாக இருக்கிறார். போய் அவரை சமாதானம் செய். ரசிக், நீங்கள்  பேசிக் கொண்டிருப்பதற்கு தடையாக இருப்பதற்கு மன்னித்துக் கொள்.  சற்று தர்மசங்கடமான சூழ்நிலை. நாங்கள் இந்த வார இறுதி வரை டெல்லியில் தான் தங்குகிறோம். ஒரு நாள் எங்களை சந்திக்க வரலாமே. நிம்மதியாக பேசலாம்."
டினா கண்களால் என்னிடம் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்.                                     
மீண்டும் அவ்விடத்தின் அமைதி என்னை சூழ்ந்துக் கொண்டது.
சிறிது நேரம் கழித்து இரு சிறுவர்கள் விளையாடுவதற்கு அங்கே வந்தனர். அவர்கள் இருவரும் சகோதரர்களாக இருப்பார்கள் என்று எனக்குத் தோன்றியது. மூத்தவனுக்கு நான்கு வயதும் இளையவனுக்கு  இரு வயதும் இருக்கலாம்.
சிறிது நேரத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை வந்தது. மூத்தவன் இளையவனை அடிக்க ஆரம்பித்தான். கடிக்கவும் உதைக்கவும் செய்தவன். மூத்தவன் தடுக்க மட்டுமே முயன்றான், திருப்பி அடிக்கவில்லை.
நான் சற்று நேரம் இதைப் பொறுமையாக பார்த்துக்  கொண்டிருந்தேன். பிறகு சிறியவனை மிரட்டினேன். அவன் அடிப்பதை நிறுத்துவதாகத் தெரியவில்லை.
அவனை மரத்தின் ஒரு கிளையில் உட்கார வைத்தேன். அவன் அழுகை சத்தம் காதைப் பிளந்தது. இறங்குவதற்கு குதிப்பதற்கும் முயற்சி செய்தான், ஆனால் பயத்தினால் கிளையிலிருந்து இறங்கவில்லை .
நான் அவனை இறக்க வேண்டுமென்றால் அழுகையை நிறுத்தி சகோதரனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றேன். ஆனால் அவன் அழுகையை நிறுத்தவுமில்லை மன்னிப்பு கேட்கவுமில்லை.
சிறிது நேரத்தில் குழந்தைகளின் அம்மா வந்து விட்டாள். அவளுக்கு என் வயது இருக்கலாம். மிகவும் ஒல்லியாகவும், நீண்ட முகமும், கூர்மையான நாசியும் கொண்டவளாக இருந்தாள்.
தன் மகனின் நிலையைப் பார்த்து பதறினாள். அவனை இறக்குவதற்காக ஓடினாள்.
"சற்று பொறுமையாக இருங்கள். அவன் தன் அண்ணனிடம் மன்னிப்பு கேட்கும் வரை இறங்க விடாதீர்கள்."
அவள்  சம்மதமாவது போல  தெரியவில்லை.
"என்னை நம்புங்கள். இன்று நாம் அவனைப் பணிய வைத்தால் அது அவன் குணத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படும்."
சிறுவன் அரை மணி நேரம் அழுதவாறே இருந்தான். பிறகு சற்று அமைதியாகி  என்னையும் அவன் அண்ணனுயும் மாறி மாறி பார்த்தான்.
"சாரி"
"இது போல இனி நடந்து கொள்ள மாட்டாய் அல்லவா?"
"ம்"
"உன் பெயர் என்ன"
"ரஞ்சித்"
"உன் அன்னான் பெயர்"
"ராஜ்."
"ராஜ், என்னை மன்னித்து விடு. இது போல செய்ய மாட்டேன் என்று சொல்."
"அது தான் மன்னிப்பு கேட்டு விட்டேனே."
"அப்படியானால் நீ இறங்க முடியாது."
"ராஜ். என்னை மன்னித்து விடு."
நான் சிறுவனை இறக்கி விட்டேன்.
அவர்கள் இருவரும் விளையாட வேறு இடம் சென்று விட்டார்கள். அவர்களின் தாயார் என்னை நன்றியுடன் பார்த் தாள்.
"அவன் சற்று முரடன். செல்லம் கொடுத்து கெடுத்துவிட்டேன். அவன் பிறந்த முதல் மாதத்தில் செத்துப் பிழைத்தான். அவனுக்கு சிறிதாக எது நிகழ்ந்தாலும் மனம் பதறி  விடுகிறது. அதை தனக்கு சாதகமாக அவன் பயன்படுத்திக்கொள்கிறான்."
"அவன் தந்தை என்ன செய்கிறார்."
"எங்கள் இருவருக்கும் ஒத்து வரவில்லை. பிரிந்து வாழ்கிறோம் நாங்கள் தனியே வாழ ஆரம்பித்த பிறகு பிறகு ஒரு முறை கூட குழந்தைகளை பார்க்க அவர் வரவில்லை."
"உங்கள் பெயர் என்ன.  வெறும் அரசியல் பெருச்சாளிகளாக வந்திருக்கும் இந்த  விழாவிற்கு நீங்கள்  எப்படி"
"நானும் அரசியல்வாதி தான். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜவஹருக்கு உதவியாக நான் இருக்கிறேன். என் பெயர் சந்திரா"
"நான் ரசிக். ஹீராலாலின் மகன்."
"வெகு நேரம் வெளியே இருந்து விட்டோம் குழந்தைகளும் என்ன விஷமம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. உள்ளே செல்வோம்."
உள்ளே அப்பா இன்னமும் அரசியல் விவாதங்களில் மூழ்கி இருந்தார். டினா எங்கே என்று என் கண்கள் தேடியது. ஒரு ஓரத்தில் அவளை நஸீர் சமாதானம் செய்துக் கொண்டிருப்பது தெரிந்தது. தனிமையில் மீண்டும் அவளுடன் பேச வேண்டும் என்று என் மனம் விரும்பியது.
நான் சந்திராவுக்கு அவளை காட்டினேன்.
"நம்முடன் விளையாடிய டினாவும் இங்கு தான் இருக்கிறாள்."
"அவள் மீது உனக்கு காதலா?"
"ஏன் அப்படி சொல்கிறாய். அவளை பார்த்து ஒரு மணி நேரம் தான் ஆகிறது. அதற்குள் எப்படி காதல் வரும்."
"வரும். உன் கண்களைப் பார்த்தாலே தெரிகிறதே."
"அப்படி எல்லாம் இல்லை."
"பார்த்து கவனமாக இரு. அவளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இப்பொழுதே வரப் போகும் கணவனுடன் பிரச்சினை. மிகவும் திமிர் பிடித்தவள்."
நான் அமைதியாக இருந்தேன். சந்திரா அவ்வாறு சொல்வதன் காரணம் உண்மையா அல்லது பொறாமையினாலா என்று என்னால் யூகிக்க முடியவில்லை.
விழா முடிந்து அனைவரும் கிளம்பினோம். செல்வதற்கு முன் டினாவை நான் தேடினேன். அவள் நசீருடன் சென்றுக் கொண்டிருந்தாள். சட்டென எதேச்சையாக என்னை நோக்கி திரும்பினாள். என்னைப் பார்த்தவுடன் முக மலர்ச்சியுடன் புன்னகை செய்தாள்.
இதை சற்று தள்ளி நின்ற சந்திரா கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்ததை நான் அறியவில்லை.
                         -----------************-------------          
அப்பா  முகம்மது அலியை சந்திக்க சென்றார். உடன் என்னையும் அழைத்துச் சென்றார். டினாவை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதால் நானும் சம்மதித்தேன்.
இன்னும் ஓரிரு வாரங்களில் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு சுதந்திரம் அறிவித்து விடுவார்கள் என்பதனால் அலியுடன் இந்த சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. அப்பா இது போன்ற அரசியல் விவாதங்களுக்கு என்னையும் அழைத்துச் செல்லும் காரணம் என்னவென யோசித்தேன். தனது அரசியல் வாரிசாக என்னை உருவாக்க திட்டமிடுகிறார் என்று யூகித்தேன்.
அப்பாவைத் தவிர மற்ற முக்கிய கட்சித் தலைவர்களையும் அலி அழைத்திருந்தார். தலைவர்களுள் ஆலோசனை தொடங்கியது.
ராஜகோபால் - "விடுதலை அறிவித்த பிறகு தற்காலிக அரசு அமைக்க வைஸ்ராய் உத்தரவிடுவார். பிரதமராக யாரை அறிவிக்க கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்."
ஹீராலால் - "வைஸ்ராயுக்கு ஜவஹர் மீது பிரியம் இருந்தாலும் சென்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை  விட பெரும்பான்மை பெற்றது  நமது கட்சி தான். அதனால் பிரதமர் பதவிக்கு அலியை தான் அழைக்க வேண்டும் என்று வைஸ்ராயிடம் கோரிக்கை விட வேண்டும்"
ராஜகோபால் - "இந்தியாவின் முதல் பிரதமராக  ஒரு முஸ்லீம் ஏற்பதற்கு இந்துக்களின் ஒரு சாராரை கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். சாவர்க்கர் போன்ற இந்து தீவிரவாதிகள் அலியை கொல்ல வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்."
ஹீராலால்- "வெகு சில இந்துக்களைத் தவிர  பெரும்பான்மையோர்  முஸ்லிம்களுடன் சமாதானத்தையே விரும்புகிறார்கள்.  அலி பிரதமர் ஆவதற்கு பெரும் எதிர்ப்பு இருக்காது என்று நினைக்கிறேன். ஒரு முஸ்லீம் பிரதமரால் தான் இந்த நாடு இந்து தேசம் முஸ்லீம் தேசம் என்று இரண்டாக பிரிவதை தடுக்க முடியும்  என்பதை நாம் தெளிவாக மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்"
அலி - "வைஸ்ராய் கண்டிப்பாக சுதந்திரா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துவார். அது சரி என்று எனக்கும் படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் ஜவஹர் , வல்லபாய் போன்ற முக்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கும் அமைச்சரைவில் இடம் கொடுக்க வேண்டும்"
அரசியல் சம்பாஷணைகள் எனக்கு சலிப்பை தந்தது. நான் அறையை விட்டு வெளியேறினேன். பக்கத்து அறையில் இருந்த நூலகத்தில் சில புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தேன்.
"அரசியல் மீது ஆர்வமில்லாத நீங்கள் அரசியல் புத்தகங்கள் படிப்பீர்களா."
டினா கதவருகில் நின்றுக் கொண்டிருந்தாள். வெள்ளை நிற சல்வார் அணிந்து தேவதை போல தெரிந்தாள். அவள் முகத்திலிருந்து என் கண்களை அகற்ற முடியவில்லை.
"ஏன் அப்படி பார்க்கிறீர்கள்"
"அழகு. இப்படி ஒரு பரிசுத்தமான அழகை நான் எங்கும் பார்த்ததில்லை."
டினா நாணத்துடன் புன்முறுவல் செய்தாள்.
"நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை"
"என்ன கேட்டாய்"
"நீங்கள் அரசியல் புத்தகங்கள் படிப்பீர்களா?"
"அரசியல் படிப்பது கிடையாது. நான் படிப்பது அறிவியல் புத்தகங்கள் மட்டுமே. அறிவியல் தவிர எனக்கு வேறு எதுவம் தெரியாது."
"நீங்கள் ஒரு விஞ்ஞானியா?"
"ஆம்."
"எனக்கு படிக்கும் போது அறிவியல் மீது மிகவும் ஆர்வம். அப்பா தான் வற்புறுத்தி சட்டம் படிக்க வைத்தார். நீங்கள் எந்தத் துறையில் ஆராய்ச்சி செய்கிறீர்கள்."
"குவாண்டம் இயற்பியல் துறையில் ஆராய்ச்சி செய்கிறேன்."
"குவாண்டம் இயற்பியல், பல இணைப் பிரபஞ்சங்கள் உள்ளது என்று கூறுவதை நம்புகிறீர்களா?"
"குவாண்டம் இயற்பியல் பற்றி இவ்வளவு நன்றாக தெரிந்து வைத்திருக்கிறாய். இணை பிரபஞ்சங்கள் குறித்து தான் நானும் ஆராய்ச்சி செய்து வருகிறேன். நாம் வாழ்வது நட்சத்திரங்கள், கிரகங்கள் நிறைந்த இந்தப் பிரபஞ்சம் என்பதை நன்கறிவோம். குவாண்டம் இயற்பியல் தலையெடுத்தப் பிறகு இது போல பல பிரபஞ்சங்கள் இருக்கின்றன என்று சில அறிவியலாளர்கள் உறுதியாக நம்பத் தொடங்கினர். அது மட்டுமல்ல இதில் சில பிரபஞ்சங்கள் அச்சாக நமது பிரபஞ்சம் போல இருக்கும் சாத்தியக்கூறும் இருப்பதாக ஒரு கருத்து உள்ளது. அங்கும் பூமி என்னும் ஒரு கிரகம் இருக்கலாம். அங்கு மனிதர்கள் இருக்கலாம். உன்னையும்  என்னையும் போன்ற  ஒரு மனித நகல்கள் அந்த உலகில் இருக்கலாம். நீ  இப்போது என்னுடன் பேசிக் கொண்டிருக்கும் இதே சமயத்தில் நம்  நகலும் அந்த உலகில் இவ்வாறு உரையாடிக் கொண்டிருக்கலாம். எல்லாப் பிரபஞ்சங்களும் ஒரே விதமாக இருக்க வேண்டும் என்பதில்லை. சில பிரபஞ்சங்கள் நம் பிரபஞ்சங்களிலிருந்து சிறிதளவு மாறுபடலாம். இந்த பிரபஞ்சத்தில் நீ  ஒரு வக்கீலாக  இருந்தால் மாற்றுப் பிரபஞ்சத்தில் நீ  ஒரு விஞ்ஞானியாக இருக்கலாம். இதெல்லாம் வெறும் கட்டுக் கதை அல்ல. அறிவியல் கோட்பாடுகள் மீது எழுப்பப்பட்ட கருத்துக்கள். மாற்றுப் பிரபஞ்சங்களுக்கு பயணம் செல்லக் கூடிய ஒரு இயந்திரத்தை உருவாக்குவது தான் என் இலட்சியம். "
டினா நான் சொன்னதைக் கேட்டு ஏதோ சிந்தனையில் இருந்தாள்.
"என்ன யோசிக்கிறாய்."
"மாற்று பிரபஞ்சத்தில் இந்நேரம் என்ன செய்துக் கொண்டிருப்பேன் என்று யோசிக்கிறேன்."
"மாற்று பிரபஞ்சத்தில் நாம் இருவரும் காதலர்களாக இருக்கலாம்."
"பிறகு."
"உன்னை நான் முத்தமிட்டுக் கொண்டிருக்கலாம்."
"என் திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது."
"தெரியும். விருப்பமில்லாத திருமணத்தை நிறுத்த முடியும் அல்லவா."
"அது அவ்வளவு எளிது என்று தோணவில்லை. என் தந்தை இந்தத் திருமணத்தில் பிடிவாதமாக இருக்கிறார்."
"நம் இருவரின் தந்தைகளும் அரசியல் சகாக்கள்."
"ஆம்."
"அது நமக்கு சாதகமா, இல்லை பாதகமா"
"அரசியலுடன் குடும்ப உறவு  இணைவதை என் தந்தை சுத்தமாக விரும்ப மாட்டார். நாம் சேர்வது சாத்தியமில்லை"
"நல்ல நண்பர்களாக இருக்கலாம் அல்லவா?"
"இருக்கலாம்."
"திருமணத்திற்கு பின்னும்?"
"நசீர் ஒரு முட்டாள். இது தெரிந்தால் கொதித்து விடுவான்."
"அவனுக்கு தெரியாமல் நாம் நண்பர்களாக இருக்கலாம் அல்லவா?"
"இருக்கலாம்"
"நண்பர்களுக்குள் முத்தமிடலாம் அல்லவா?"
நான் அவளை நெருங்கி உதட்டில் முத்தமிட்டேன். அவள் என்னை தடுக்கவில்லை.
"கதவு, கதவு" - என்று டினா முனகினாள்.
நான் கதவை மூடினேன்.
இருவரும் அருகிலிருந்த டினாவின் படுக்கை அறை சென்றோம். எல்லையில்லாத இன்ப உலகிற்கு சென்று திரும்பினோம்.
டினா கலைந்த தன் ஆடைகளை சரி செய்துக் கொண்டிருந்தாள்.  நான் அவளை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
"என்ன பார்க்கிறாய்"
"டினா"
"திருமணத்திற்குப் பின் இது"
நான் முடிப்பதற்குள் டினா அழுத்தமான பதிலை சொன்னாள்.
"தொடரும். ஏனென்றால் என் திருமணம் நடக்காது. நசீருடன் நான் வாழப் போவதில்லை."
அப்போது வெளியே சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
"நம்மை தேடுவார்கள். நான் கிளம்புகிறேன்."
அப்பா முகம்மது அலியிடம் விடை பெற்றுக் கொண்டிருந்தார்.
நான் செல்வதை டினா கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்ததை திரும்பிப் பார்க்காமலேயே என்னால் உணர முடிந்தது.
                            -------**********---------
ஜவஹருடன் ஒரு அரசியல் சந்திப்பிற்காக அப்பாவுடன்  வந்திருந்தேன்.  சந்திரா வீட்டில் சந்திப்பு நிகழ்ந்தது.
அப்பா - "நீங்கள் காணும் ஏற்றத்தாழ்வில்லாத சமூகம் நல்ல சிந்தனை தான். ஆனால் அதை தொழில்கள் மீதான கட்டுப்பாடு மற்றும் அதிக வரிகள் மூலம் சாதிக்க முடியாது. ஆயிரம் காலமாகவே இந்தியர்களாகிய நாம் வாணிகத்தில் சிறந்து விளங்கினோம். திரைக்கடல் தாண்டி வர்த்தகம் செய்தோம். அப்படிப்பட்ட துடிப்பான நம் சமூகத்தை கட்டுப்பாடுகள் மூலம் அடக்குவது தவறு."
ஜவஹர் - "நீங்கள் சொல்வது ஆயிரம் காலத்திற்கு முந்தைய சரித்திரம். நான் சொல்வது சமீபத்தில் நடந்த 20 வருடங்கள் முந்தைய சரித்திரம். அமெரிக்காவின் நிலையைப் பாருங்கள்.   அவர்கள் பெருமையாக கூறிக்கொள்ளும் முதலாளித்துவ பொருளாதாரம் என்னவாயிற்று. வர்த்தகம், பங்கு சந்தை இவற்றின் மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லாத அவர்கள் பொருளாதாரம் சரிந்தது அல்லவா."
அப்பா - "ஆனால் அவர்கள் மீண்டும் எழுந்து வந்து விட்டார்களே?"
ஜவஹர் - "அதற்கு காரணம் ரூஸ்வெல்ட் கொண்டு வந்த சோஷலிச சீர்திருத்தம் தான். இப்போது ஐரோப்பா எங்கும் சோஷலிசம் தானே தழைத்திருக்கிறது."
அப்பா - "விரைவில் இந்நாடுகள் அனைத்தும் கடன்காரர்களாக அழிய போகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பத்தே வருடங்களில் இந்தியாவை வல்லரசாக்குவோம். நீங்களும் பாருங்கள்."
இந்த விவாதத்தில் என் மனம் ஈடுபடவில்லை. நான் நெளிந்துக் கொண்டிருப்பதை  சந்திரா கவனித்தாள்.
என்னை நோக்கி அவள் கண் ஜாடை காண்பிக்க நாங்கள் இருவரும் வேறு அறைக்கு சென்றோம். அதே அறையில் ராஜுடன் ரஞ்சித் விளையாடிக் கொண்டிருந்தான்.
ரஞ்சித் என்னைப் பார்த்ததும்  ஓட முயன்றான். நான் அவனை  ஓட விடாமல் பிடித்துக் கொண்டேன்.
"நீ நல்ல சிறுவனாக மாறி விட்டாய் என்று உன் அம்மா  சொன்னாள். உண்மை தானே."
ரஞ்சித் பதில் சொல்லாமல் திமிரிக் கொண்டு ஓட முயன்றான்.
"நீ பதில் சொல்லாவிட்டால் நான் உன்னை விடப் போவதில்லை."
"ம். நான் நல்ல சிறுவன்"
சிறுவர்கள் இருவரும் ஓடி விட்டனர்.
சந்திரா - "சில நாட்களாக எனக்கு உன் நினைவாகவே  இருக்கிறது. ரஞ்சித்தை பார்க்கும் போது அந்த நினைவுகள் அதிகமாகிறது."
நான் மெளனமாக இருந்தேன்.
"அவனுடைய இந்த முரட்டு குணத்திற்கெல்லாம் காரணம் சரியான தந்தை அமையாதது தான். அவர் ஒரு முறை கூட குழந்தைகளிடம் அன்பாக பேசியது கிடையாது. தவறு செய்யும் போது கண்டித்தது கிடையாது. குழந்தைகள் உன்னிடம் இருக்கும் போது அவர்களிடம் பெரிய மாற்றத்தை பார்க்கிறேன். ஒரு தந்தை போல அவர்களிடம் பழகுகிறாய்."
"சந்திரா, நான் அவர்களுக்கும் உனக்கும் ஒரு நண்பன் தான். வேறு எதற்கும் சாத்தியம் கிடையாது."
"டினாவை சந்தித்தாக கேள்விப்பட்டேன்."
எனக்கு சிறிது அதிர்ச்சியாக இருந்தது.
"அரசியல் பேசுவதற்காக அலியின் வீட்டிற்கு அப்பா அழைத்துச் சென்றார்."
"அவளுடன் தனிமையாக நேரம் கழித்திருப்பாய்."
"உன் கேள்விகள் சரியில்லை. நான் அவளுக்கு வெறும் நண்பன் தான்."
"அவள் திருமணத்தை நிறுத்த சொல்லி தந்தையிடம் வாதிடுகிறாளாமே."
"அது பற்றி எனக்கு தெரியாது."
"நண்பனுக்கு இது கூட சொல்லவில்லையே உன் தோழி."
அப்போது அப்பா உள்ளே நுழைந்தார்.
"ரசி, நாம் கிளம்ப வேண்டும்."
நான் எழுந்திருக்க முற்பட்டேன். சந்திரா உடனே குறுக்கிட்டாள்.
"குழந்தைகள் இவருடன் விளையாட ஆசைப்படுகிறார்கள். இரவு உணவு முடித்து விட்டு இவர் கிளம்பலாமே."
அப்பாவும் இதற்கு சம்மதித்து சென்று விட்டார்.
நான் சந்திராவிடமிருந்து தப்பிக்க குழந்தைகள் அறைக்கு சென்றேன்.
அவர்களுடன் சிறிது நேரம் விளையாடினேன். ரஞ்சித்திற்கு என் மீதிருந்த பயம் குறைந்தது.
சிறிது நேரம் கழித்து சந்திரா எனக்கும் குழந்தைகளுக்கும் உணவு பரிமாறினாள்.
குழந்தைகளை உறங்க வைக்க அவர்கள் படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றாள். ரஞ்சித் உறங்காமல் அழுதுக் கொண்டிருந்தான்.
"நீ கீழே செல் சந்திரா. நான் அவர்களை உறங்க வைக்கிறேன்."
குழந்தைகள் இருவருக்கும் கதைகள் சொன்னேன். இருவரும் அமைதியாக கதையை கவனித்தார்கள். சிறிது நேரத்தில் உறங்கி விட்டனர்.
நான் அவர்கள் இருவரின் போர்வையை சரி செய்து விட்டு கீழே இறங்கினேன். சந்திரா எனக்காக காத்திருந்தாள்.
எனக்கு அவளுடன் தனிமையில் இருப்பது சற்று தர்மசங்கடமாக இருந்தது. சந்திரா மௌனத்தை கலைத்தாள்.
"உனக்கு அரசியல் மீது ஆர்வம் உள்ளதா. உன் அப்பா எல்லா சந்திப்புகளும் அழைத்துச் செல்கிறாரே."
"எனக்கு அரசியலில் முழுதும் ஆர்வம் இல்லை. அப்பா மனம் கோணக் கூடாது என்று அமைதியாக இருக்கிறேன்."
"எனக்கு அரசியல் கனவுகள் உள்ளன. நான், அதற்குப் பின் என் மகன் இந்த நாட்டை ஆள வேண்டும். "
"பெரும் கனவு தான்."
"ராஜ் மென்மையானவன். அவன் அரசியலுக்கு தகுதியில்லை. ரஞ்சித்திடம் வேகம் துடிப்பு இருக்கிறது. அவன் வலிமையான தலைவன் ஆவான். அவனை வழிநடத்த நல்ல ஆசான் தேவை. அதை விட ஒரு நல்ல தந்தை தேவை."
சந்திரா தன் கண்களால் என்னை ஆழமாக அளந்தாள்.
"நேரமாகிவிட்டது. நான் கிளம்புகிறேன் சந்திரா."
"என்ன அவசரம். "
சந்திரா என் கைகளை பிடித்து இறுக்க அணைத்தாள். நான்  அவளை உதறி விட்டு வேகமாக வீட்டை விட்டு வெளியேறினேன்.
                       --------------*****************--------------------------
அன்று முக்கியமான நாள். காலையில் எழுந்ததுமே வீடு பரபரப்பாக இருந்தது. அப்பாவை சந்திக்க பலர் வந்தனர். வீட்டின்  வெளியே மக்கள் கோலாகலமாக ஆடிப் பாடிக் கொண்டிருந்தனர்.
அப்பா என்னைத் தேடி வந்து கை கொடுத்தார்.
"வைஸ்ராய் நம் நாட்டிற்கு சுதந்திரம் அறிவித்து விட்டார். ஆகஸ்ட் 15  1947  ஆம் தேதியிலிருந்து நாம் சுதந்திர இந்தியாவில் வசிப்பவர்கள் ஆவோம்."
நான் மகிழ்ச்சியில் சில கணங்கள் உறைந்து  போனேன். எனக்கு முதலில் தாத்தாவின் நினைவு வந்தது. இப்போது அவரை நினைவு கூர்பவன்  நான் ஒருவன் மட்டுமே என்பது வலித்தது.
நான் அப்பாவிடம் என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.
"நீங்கள் முதலில் தாத்தாவை சந்தித்து ஆசி வாங்க வேண்டும்"
"நீ சொல்லித் தான் அது எனக்கு தெரிய வேண்டுமா. அடுத்த வாரம் நாம் இருவரும் சபர்மதி செல்கிறோம்."
ஏன் அடுத்த வாரம் வரை தள்ளிப் போடுகிறார் என்று எனக்கு கோபம் வந்தது.
"ரசி, நாம் முகம்மது அலி வீட்டிற்கு செல்கிறோம். நீ உடனே கிளம்ப வேண்டும்."
டினாவை பார்த்து  இரு வாரங்கள் மேல் ஆயிற்று. அவளை சந்திக்கப் போவதில் மனம் உற்சாகமாயிற்று.
அலி வீட்டின் முன் பெருங்கூட்டம் இருந்தது. ஏனோ அவர் முகம் சோர்வாக இருந்தது. ஏதோ ஒரு கவலை அவரை வாட்டிக் கொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அவருக்கென்ன கவலை இருக்கக் கூடும் என்று யோசித்தேன்.
அப்பாவை அலி அணைத்துக் கொண்டார். இருவரும் ஒருவருக்கொருவர் இனிப்பு பரிமாறிக் கொண்டனர்.
சிறிது நேரத்தில் ஜவஹரும் அங்கு வந்தார். தலைவர்கள்  சிறிது நேர ஆலோசனைக்குப் பிறகு பத்திரிக்கையாளர்களிடம் தங்கள் அறிவிப்பை வெளியிட்டனர். அனைவரின் சார்பாகவும் அலி பேசினார்.
"இருநூறு ஆண்டுகள் நடந்த போராட்டம் இன்று முடிவுக்கு வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நாளில் நாம் ஒற்றுமை உணர்வை காண்பிக்க வேண்டும். வைஸ்ராய் அவர்கள் என்னை தற்காலிக அரசிற்கு தலைமை தாங்க அறிவித்துள்ளார். ஆனால் அமையவிருக்கும் அரசில் காங்கிரசும் பங்கேற்க நான் ஜவஹரிடம் கோரிக்கை விடுத்தேன். அவர் அதை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு சம்மதித்தார். யார் எந்த துறைக்கு அமைச்சராக வேண்டும் என்பதிலும் இரு கட்சிகளுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஹீராலால் துணைப்பிரதமர், ஜவஹர் வெளியுறவுத்துறை அமைச்சர், ராஜகோபால் நிதி அமைச்சர், வல்லபாய் உள்துறை அமைச்சர்  என்றவாறு பொறுப்பை ஏற்பார்கள். நாட்டு மக்களுக்கு என் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்."
முகம்மது அலி ஜவஹர், அப்பா போல மிகச் சிறந்த பேச்சாளர் என்று தான் எல்லோராலும் கருதப்படுகிறார். ஆனால் இன்று அவருடைய பேச்சு சோபிக்கவில்லை. அவரிடம் எந்த உற்சாகமும் தெரியவில்லை.
நான் டினா எங்கு என்று தேடினேன். அவள் வீட்டில் இல்லை. பணிப்பெனிடம் விசாரித்தேன்.
அவள் தனக்கு திருமணத்தில் ஆர்வம்  இல்லையென்று தந்தையுடன் வாதிட்டதாகவும், கோபித்துக் கொண்டு தன் தோழி வீட்டிற்கு சென்று விட்டாள் என்று தெரிந்தது. அலியின் கவலைக்கான காரணம் புரிந்தது.
நான் தந்தையிடம் சொல்லி விட்டு டினாவை சந்திக்க சென்றேன்.           
                                ------********--------
"என்னால் அந்த முட்டாளை திருமணம் செய்து கொள்ள முடியாது ரசி. நான் என்ன செய்வது  என்று நீ  தான் சொல்ல வேண்டும்."
"நாம் திருமணம் செய்து கொள்ளலாம். என் அப்பாவிடம் பேசுகிறேன்."
"உன் அப்பாவிடம் பேசுவது வீண். என் தந்தை மிகுந்த கோபத்தில் இருக்கிறார். அவருக்கு வறட்டு பிடிவாதம் அதிகம். அதை விட நஸீரின் குடும்பத்திற்கு கொடுத்த வாக்குறுதியை மீறுவது பற்றி கவலைப்படுகிறார். பெற்ற மகளையே தலைமுழுகவும் தயாராக இருக்கிறார். அதனால் அவருடன் கோபித்து வந்து விட்டேன். இப்போது இருக்கும் சூழ்நிலையில் உன் தந்தை என் அப்பாவை பகைத்துக் கொள்ள விரும்ப மாட்டார். அதனால் நம் பெற்றோரை மீறி ரகசிய திருமணம் தான் செய்ய வேண்டும்."
"என் அப்பாவை மீறுவது பற்றி நான் கவலைப்படவில்லை. என் தாத்தாவின் ஆசீர்வாதம் எனக்கு வேண்டும். அவரை சபர்மதியில் சந்திக்க போகிறேன். நீ என்னுடன் வருவதாக இருந்தால் நாளை நாம் புறப்படலாம்."
"கண்டிப்பாக அவர் ஆசி நமக்கு நிச்சயம் தேவை."
அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. வெளியே முகமது அலி நின்றுக் கொண்டிருந்தார்.
"ரசி இங்கே நீ என்ன செய்துக் கொண்டிருக்கிறாய்."
நான் பதில் சொல்ல யோசித்துக் கொண்டிருந்தேன், அதற்குள் டினா முந்திக் கொண்டால்.
"நான் இவரை தான் திருமணம் செய்யப் போகிறேன்."
"ஹீரா என்னை அவமானப்படுத்த உன்னை பகடைக் காயாக பயன்படுத்துகிறாரா. அவருக்கு ஏன் இந்த முதுகில் குத்தும் வேலை."
"அப்பாவுக்கு இந்த விஷயம் ஒன்றும் தெரியாது. அவர் மீது நீங்கள் கோபம் கொள்ள வேண்டாம்."
"நீ சொல்வதை நான் நம்புகிறேன். ஆனால் உன் தந்தை இதற்கு சம்மதம் தெரிவிப்பார் என்று நம்புகிறாயா."
"கண்டிப்பாக மாட்டார்."
"நீங்கள் இருவரும் உங்கள் பெற்றோருக்கு காட்டும் மரியாதை இது தானா. நான் நஸீரின் தந்தை முகத்தில் எப்படி முழிக்க முடியும். நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்கும் தருணத்தில் இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு என் எதிரிகள் எப்படி காயப்படுத்துவார்கள். என் நிலையைப் பற்றி சிறிதாவது யோசித்தாயா?"
"நீங்கள் ஏன் அதை பற்றி எல்லாம் கவலைப்படுகிறீர்கள். உங்கள் மகளாகிய நான் மகிழ்ச்சியாக இருப்பேன். அது போதாதா?"
"என்னை காயப்படுத்தி விட்டாய் டினா. இனி நீ என் மகள் இல்லை. உன் மீது நான் கோபம் கொண்டது உண்மை தான். ஆனால் இன்று நம் சுதந்திரம் கிடைக்கும் மகிழ்ச்சியான செய்தியை உன்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தேடி வந்தேன். உன்னை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து செல்ல விரும்பினேன். ஆனால் உன் துரோகச் செயகை என்னால் மன்னிக்க முடியாது. டினா என்ற ஒரு மகள் எனக்குப் பிறக்கவில்லை என்று நான் நினைத்துக் கொள்கிறேன்."
முகம்மது அலி தளர்ந்த நடையுடன் சோர்வாக சென்றார்.
அவர் சென்ற பின் அழுதுக் கொண்டிருந்த டினாவை சமாதானம் செய்து விட்டு வீட்டிற்கு திரும்பினேன்.
இரவு உறங்கிக் கொண்டிருந்த  என்னை தந்தை எழுப்பினார்.
"முகம்மது அலி இறைவனடி சேர்ந்து விட்டார்."
என் தலையில் இடி இறங்கியது போல் இருந்தது. நான் உடனே டினாவை சந்திக்க சென்றேன். அவள் இறந்த தன் தந்தை உடலின் தலைமாட்டில் அமர்ந்திருந்தாள். முகம் எவ்வித உணர்ச்சியுமின்றி இருந்தது. அவளை தனிமையில் சந்தித்து சிறிது நேரம் பேசினேன்.
"என் அப்பாவை நான் கொன்று விட்டேன் ரசி. நசீரை திருமணம் செய்து கொள்வது தான் அவர் ஆன்மாவை சாந்தி அடைய செய்யும். நீ என் வாழ்க்கையை விட்டு செல்."
நான் எந்த பதிலும் கூறாமல் அங்கிருந்து அகன்றேன்.
அப்பாவும் நானும் முகம்மது அலியின் உடலுக்கு மரியாதை செலுத்தி விட்டு வீடு திரும்பினோம்.
"என் மீது மிகப் பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது. நான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளேன். இது வரை வழிகாட்டியாக இருந்த என் மூத்த சகோதரர் இறந்து விட்டார். திக்கற்றவனாக இருக்கிறேன். நீ என்னுடன் இருந்து விடு ரசி. என் அரசியல் வாழ்க்கையில் துணைவனாக இரு."
 "என் மன நிலை சரியில்லை அப்பா. நான் அடுத்த வாரமே அமெரிக்காவிற்கு பயணம் செய்யப் போகிறேன். அங்கு என் ஆராய்ச்சியை தொடர போகிறேன். இங்கு உங்களுக்கு துணையாக ராஜகோபால் இருப்பார். அவரை விட ஒரு சிறந்த ராஜதந்திரி யார் இருக்க முடியும். எனக்கு விடை கொடுக்க சம்மதியுங்கள் அப்பா."
"நான் தலைமை ஏற்கும் விழாவில் நீ பங்கெடுக்கப் போவதில்லையா."
"என்னால் இயலாது. மன்னியுங்கள்."
"உன் தாத்தாவை நாளை சந்திக்கப் போகிறேன். உடன் வருவாய் அல்லவா."
"அவர் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கும் மன நிலையில் நான் இல்லை."
"உனக்கு என்ன கவலை. நேற்று வரை உற்சாகமாக தானே இருந்தாய்."
"இப்போது அது பற்றி பேச வேண்டாம். தக்க சமயத்தில் சொல்கிறேன்."
அப்பா ஏமாற்றத்துடன் அங்கிருந்த அகன்றார்.
                           ---------********-----------
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக என்  தந்தை பதவி ஏற்ற அதே வேளையில் நான் அமெரிக்காவை நோக்கி  கப்பலில் சென்றுக் கொண்டிருந்தேன்.
இரவு கப்பலின் மேல் தளத்தின் தனிமையில் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஆகாயத்தில் தெரியும் நட்சத்திரங்களையும் தாண்டி ஒரு உலகம் இருக்கும். இங்கு என்னை உதறிய டினா அங்கே என்னை மணமுடிக்க ஆவலுடன் காத்திருப்பாள். இனி எஞ்சியிருக்கும் என் வாழ்க்கையை அந்தப் பூவுலகில் அவளை சந்திப்பதற்காக அர்பணிப்பேன்.
வருகிறேன் டினா உன்னை சந்திக்க வருகிறேன். இந்த உலகில் இல்லை. வேறு ஒரு பிரபஞ்சத்தில். நமக்கென படைக்கப்பட்ட ஒரு சொர்க்க பூமியில்.
வருகிறேன் டினா. வருகிறேன்.
                     இரண்டாம் கதை  முற்றும்
அடுத்த நாள் ஜென்னியும் ரெமோவும் தாங்கள் படித்த செய்திகளை பற்றி விவாதித்தனர்.
"எத்தனை தடங்கலுக்கு பிறகு ஹீராலால் பிரதமர் ஆகியிருக்கிறார். அதிர்ஷ்டமும் அவர் பக்கம்  இருந்திருக்கிறது. ஜவஹர், முகம்மது அலி இருவருக்கும் அதிக வாய்ப்பு இருந்தாலும் சந்தர்ப்பங்கள் ஹீராவுக்கு சாதகமாக அமைந்தது."
"நம் தலைவன் ரஞ்சித்தின் சிறு வயது வாழ்க்கை படிக்கவும் சுவாரஸ்யமாக இருந்தது."
"ஆம். சிறு வயதிலேயே அவன் முரடனாகத் தான் இருந்திருக்கிறான்."
"முல்லரின் புத்தகம் என்ன சொல்கிறது."
"ஹீராலாலின் ஆட்சி 1970  வரை சுபிட்சமாகவே இருந்திருக்கிறது. அவரின் முதலாளித்துவ பொருளாதாரத்தில் தொழில்கள் வழமையாக இருந்தது. மேலை நாடுகளுக்கு நிகராக இந்தியாவின் கட்டுமானத்தை அமைப்பதில் ஹீராலால் வெற்றி பெற்றார். நாட்டில் ஏழ்மை முழுதும் அகன்றது.  தனி நபர் வருமானம் அமெரிக்காவிற்கு நிகராக இருந்தது."
"1970க்குப்  பின் என்னவாயிற்று."
"ஹீராலாலின் பலவீனம் அவருடைய சர்வாதிகார மனப்பான்மை. பொருளாதார சுதந்திரம் இருந்தாலும் நாட்டில் அரசியல் சுதந்திரம் இல்லை. எதிர் கட்சிகள் முடக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையில் இருந்த மாநில அரசுகள் எல்லாம் கலைக்கப்பட்டது. குறுகிய அரசியல் வெற்றிகளுக்காக மத துவேஷத்தை வளர்த்தார். அவருடைய அரசியல் விளையாட்டுக்களின் விளைவாக பாகிஸ்தானிலும் வங்கத்திலும் பிரிவினைவாதம்  வலு பெற்றது. 1971  ஆம் ஆண்டு பாகிஸ்தானும், பங்களாதேஷும் இந்தியாவிலிருந்து பிரிந்தன. அதன் பிறகு ஹீராலின் அரசியல் வாழ்க்கை தேய ஆரம்பித்தது."
"ஜவஹர், சந்திரா, ரஞ்சித் இவர்கள் நிலை என்ன?"
"1970  வரை ஜவஹர் காங்கிரஸ் கட்சியில் தலைமை பொறுப்பில் இருந்தார். தொடர்ந்து தேர்தலில் தோல்வி பெற்றதால் அதன் பிறகு அவர் ஓரம் கட்டப்பெற்றார். சந்திராவும் ரஞ்சித்தும் கட்சியை தங்கள் வசப்படுத்தினர். ஜவஹர் பெயரளவுக்கே தலைவராக இருந்தார். கட்சியினருக்கும் ரஞ்சித்தின் துடிப்பான செயல்பாடு பிடித்திருந்தது.  1975 ஆண்டு நடக்கவிருந்த அடுத்த தேர்தலில் காங்கிரஸே வெற்றி பெரும் என்று அனைவரும் நம்பினர்.  இது வரை தான் நான் படித்தது."
"ரசிக் என்னவானார்."
"அவர் பற்றிய விபரங்கள் இணையத்தில் தேடிக் கண்டு பிடித்தேன்."
"1947  ஆண்டு அமெரிக்க சென்ற  ரசிக் 1975  ஆண்டு வரை இந்தியா திரும்பவில்லை. தன் ஆராய்ச்சியில் முழுதாக ஈடுபடுத்திக் கொண்டார். அவருக்கு நோபல் பரிசும் கிடைத்தது.  டினா தன் மண திருமணத்திற்குப் பின் ரசிக்கை சந்திக்கவே இல்லை. குடும்பத் தலைவியாக தன் எஞ்சிய  வாழ்க்கையை கழித்திருக்கிறாள்."                    
"இனி நாம் மூன்றாவது டைரியை தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்."
"அதற்கு இந்த மூன்றாவது சாவி தான் உதவ வேண்டும்."
இருவரும் சிறிது நேரம் தீவிர சிந்தனையில் இருந்தனர்.
ஜென்னி திடீரென்று மகிழ்ச்சியில் கத்தினாள்.
"இந்த மூன்றாவது சாவி ரசிக்கின் ஆராய்ச்சி அறையின் சாவியாகத் தான் இருக்க வேண்டும்."
"ஆராய்ச்சி நிலையம் எங்கு இருக்கிறது என்று எப்படி கண்டு பிடிப்பது."
"கண்டு பிடித்து விட்டேன். ரசிக் இங்கிருந்து 40  மைல்கள் தள்ளி இருக்கும் ஒரு சிறு குன்றிற்கு அடிக்கடி செல்வார் என்று கேள்விப்பட்டேன். அங்கு அடிக்கடி நடந்து செல்வதை பலர் பார்த்திருக்கிறார்கள். நாம் அங்கே சென்றாள் என்ன."
ஜென்னியின் யோசனைப்படி குன்றின் மீது அலைந்தோம். சில மணி நேர தேடலுக்குப் பின் ஒரு கட்டிடம் தெரிந்தது. அதன் கதவில் மூன்றாவது சாவியை ரெமோ பொறுத்தினான். கதவு மெதுவாக திறந்தது.
இருவரும் உள்ளே நுழைந்தனர். மற்ற இரு வீட்டில் பார்த்தது போல அங்கும் ஒரு மேஜையும் நாற்காலியும் இருந்தது. மேஜையைத் திறந்ததும் ஒரு பச்சை நிற டைரி இருந்தது.
"ரெமோ, இந்த புத்தகத்தை இங்கேயே அமர்ந்து படித்து விடலாம். இருவரும் சேர்ந்தே படிக்கலாம். எனக்கும் மிக ஆர்வமாக உள்ளது."
டைரியின் முதல் பக்கத்தை ரெமோ திறந்தான். இருவரும்  இணைந்து ரசிக்கின் உலகிற்கு சென்றார்கள்.
                                 ------***********-----

                   மூன்றாவது கதை

                                வருடம் 1975


இரவில் திடுக்கென்று எனது நித்திரை கலைந்தது. மணி 2 என்று கடிகாரம் காண்பித்தது. சில நாட்களாக இவ்வாறு நடு ராத்திரியில் முழிப்பு வருகிறது. அப்போதெல்லாம் என் இதயத்துடிப்பின் ஓசை மிகவும் தெளிவாகக் கேட்கிறது. அது என் படபடப்பை அதிகரிக்கிறது. நடக்கவிருக்கும் ஒரு துர்சம்பவத்தின் அறிகுறி இதுவா என்ற பயமும் தோன்றுகிறது. நான் ஒரு விஞ்ஞானி என்பதால் என் அறிவின் பலத்தைக் கொண்டு இந்த விபரீத சிந்தனைகளை நிராகரிக்கிறேன்.
வீட்டைப் பூட்டி விட்டு என் காரில் ஏறினேன். 10 நிமிடங்களில் என் ஆராய்ச்சி கூடத்திற்கு வந்தேன். என் முன் இருக்கும் இயந்திரத்தைப் பார்த்தேன். ஒரு வருடமாக இயங்கும் நிலைக்கு கொண்டு வர போராடுகிறேன். இன்னும் சில நாட்களில் இயந்திரம் வெற்றிகரமாக வேலை செய்யும் நிலையில் இருந்தது.
நேரம் போனதே தெரியாமல் என் ஆராய்ச்சியில் மூழ்கினேன். வெளியே கதிரவன் ஒளி எட்டிப் பார்க்க வீட்டிற்குத் திரும்பினேன்.
கதவைத் திறந்ததும் தொலைபேசி அடித்துக் கொண்டிருந்தது. மறுமுனையில் அப்பா.
"எவ்வளவு நேரம் உன்னைத் தொடர்பு கொள்ள முயன்றுக் கொண்டிருந்தேன். தாத்தாவின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. உடனே இந்தியா கிளம்பி வா."
நான் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.
                            -------********------

இந்தியா வந்ததும் நேராக சபர்மதியில் என் தாத்தா வசித்து வந்த ஆசிரமத்திற்குச் சென்றேன். தாத்தா படுத்திருக்க அவர் அருகில் பாட்டி அமர்ந்திருந்தார்.
தாத்தாவுக்கு வயது 107. பாட்டிக்கும் அநேகமாக அதே வயது தான் இருக்கும்.  ஆனால் இருவருக்கும் ஒரு 30 வயது குறைத்தே தான் சொல்ல முடியும். அவர்களின் நல்ல ஆரோக்கியம் எங்கள் மரபணுக்களில் தொடர்ந்து வந்தது.
தாத்தாவின் கண்கள் மூடியிருந்தது. நான் வந்ததைப் பாட்டி அவருக்குச் சொல்ல மெல்ல கண்விழித்தார். என்னை அருகில் வரும்படி சைகை செய்தார்.
என் கைகளைப் பிடித்து முத்தமிட்டார். என் காதில் மெலிதான குரலில் பேசினார்.
"ரசிக்! உன் அப்பா பேச்சை நீ கேட்காதே."
பிறகு மீண்டும் கண்களை மூடினார்.
நான் அவர் காலடியில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.
பாட்டி என்னைப் பக்கத்து அறைக்கு வர சொன்னார். தாத்தா சொன்னதை அவர் யூகித்திருப்பார் என்று எனக்குத் தோன்றியது. அது குறித்து அவர் பேச நினைப்பது புரிந்தது.
"எவ்வளவு நாள் இங்கிருப்பதாக உத்தேசம்."
"நான் இந்தியா வந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. இரண்டு மாதங்கள் இங்கு செலவிடலாம் என்று நினைக்கிறேன். எப்போதிருந்து தாத்தாவுக்கு இப்படி ஆயிற்று."
"ஒரு வாரமாகத் தான். உன்னைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். நீ அம்மா பிள்ளையும் இல்லை, அப்பா பிள்ளையும் இல்லை. தாத்தா பிள்ளையாகவே வளர்ந்து விட்டாய்."
"அவர் அருமை யாருக்கும் தெரியாமல் போய் விட்டது. உங்களையும் சேர்த்து."
"உன் தாத்தா பெருந்தலைவராக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு நல்ல கணவராகவோ தகப்பனாகவோ இருந்தாரா என்ற கேள்வியை நீ ஒரு முறையாவது கேட்டுப் பார்த்தாயா. வீட்டைப் பொறுத்த வரை அவர் ஒரு சர்வாதிகாரி. அவர் எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் குறித்து நான் எந்த கேள்வியும் கேட்டதில்லை. அவருடைய அரசியல் போராட்டத்தில் நானும் கலந்துக் கொண்டு உழைத்தேன்.  மோகன்தாஸ் என்ற பிம்பத்தின் பின் இந்த கஸ்தூரி என்ற நிழலும் தொடர்ந்தது. எப்போது உன் தந்தை வாழ்க்கையை சீரழிக்க நினைத்தாரோ அப்போது நான் அவருக்கு எதிரானேன்."
"அப்பா ஒரு சந்தர்ப்பவாதி. கட்சியில் உள்ள அனைவரையும் தன் பக்கம் சேர்த்து தாத்தாவைத் தனிமைப்படுத்தினார். தாத்தா போராடி கிடைத்த வெற்றியைத் தனதாக்கிக் கொண்டார்."
"எனக்கு அரசியல் தெரியாது. ஆனால் உன் அப்பா ஹீராலால் வைத்திருந்த பாசம் தான் என் உயிரைக் காப்பாற்றியது. நான் நோயுற்றிருந்த போது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் உன் தாத்தா கொள்கைவாதி ஆயிற்றே. அறுவை சிகிச்சை என்பது நம் ஆன்மாவுக்கு செய்யும் வன்முறையாம். நல்ல வேலை உன் அப்பா தான் அவரின் கிறுக்குத்தனத்திலிருந்து என்னைக் காப்பாற்றினான். கடைசி காலத்தில் சத்யசோதனை என்று அவர் அடித்த கூத்தெல்லாம் உனக்குத் தெரிந்தது தானே. அவர் செய்ததெல்லாம் நான் செய்தால் அவரால் ஏற்க முடியுமா.  தான் ஒரு ஆண் என்ற அகங்காரம் தானே இதற்கெல்லாம் காரணம்."
நான் மெளனமாக இருந்தேன். பாட்டி மேலும் தொடர்ந்தார்.
"உன் அப்பா உனக்காக சில திட்டங்கள் வைத்திருக்கிறான். இப்போதாவது அவன் பேச்சைக் கேள்."
அதே நேரம் அப்பா அறைக்குள் நுழைந்தார்.
"நேராக இங்கேயே வந்து விட்டாயா. முதலில் என்னைப் பார்க்க வருவாய் என்றல்லவா நினைத்தேன்."
பாட்டி கண் ஜாடை காண்பிக்க அப்பா பேச்சை மாற்றினார். நல விசாரிப்புகள், குடும்பம் மற்றும் உறவினர்களை பற்றிய செய்திகளின் பரிமாறுதலுக்குப் பின் என்னைத் தன்னுடன் வர சொன்னார். ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்று பேசத் தொடங்கினார்.
"28  வருடங்கள்!  நான் இந்த நாட்டின் பிரதமராகி 28  வருடங்கள்  ஆகி விட்டது. ஒரு ஏழை பிச்சைக்கார நாடாக இருந்த இந்தியா இப்போது ஒரு வல்லரசாக மாறி விட்டது. உலகின் 10 பணக்கார நாடுகளில் ஒன்றாக நாம் உருவெடுத்து விட்டோம். சுதந்திரம் அடைந்த முதல் நாளிலிருந்தே நாம் கையாண்ட தாராளமய பொருளாதாரக் கொள்கை நம்மை ஒரு பணக்கார நாடாக மாற்றி விட்டது. இன்று இந்தியாவில் பசி என்ற பேச்சே கிடையாது. ஒரு ஏழைக்கு கூட நல்ல கல்வி, மருத்துவ வசதி கிடைக்க செய்தேன். நமது நாட்டின் கட்டுமானம் வளர்ந்து மேற்கத்திய நாடுகளுக்கு நிகராக உள்ளது."
"ஆனால் இதற்கு பெரும் விலை நாட்டு மக்கள் கொடுக்க வேண்டியதாகி  விட்டதே. கிராமங்கள் அழிந்தன. சுற்றுப்புற சூழல் மாசடைந்து விட்டது. பெரும் தொழிற்சாலைகள் நிறுவ ஏழை ஆதிவாசி மக்கள் தங்கள் நிலத்தை இழந்தனர். அவர்களுக்கு சரியான  நிவாரணம் அளிக்கவில்லை. பெரு வெள்ளம், வறட்சி என்று இயற்கை கடுமையானதாக மாறி விட்டது. மக்களின் எதிர்ப்பை இரும்புக் கரம் கொண்டு அடக்கினீர்கள். எத்தனை ஆயிரம் பேர் இதில் பலியாகினர்."
"இதற்கு  நீ கூறும் மாற்று பாதை என்ன. அருகிலிருக்கும் சீனாவைப் பார். அவர்களுடைய சோஷலிச பொருளாதாரத்தின் விளைவுகள் என்ன. நாட்டில் பாதி  ஜனத்தொகை கொலைப் பட்டினியில் தான் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிடும் போது நான் செய்தது சாதனையாக ஏன் உனக்குத் தெரியவில்லை?"
"எனக்கு பொருளாதாரம் தெரியாது. ஆனால் நீங்கள் உண்மையான ஜனநாயகவாதி கிடையாது. நீங்கள் கையாண்ட அரசியல் தந்திரங்கள் மற்றும் சூழ்ச்சிகள்  விளைவாக நம் நாட்டிலிருந்து பிரிந்து பாகிஸ்தான், வங்க தேசம் உருவாகின. பஞ்சாபில் பெரும் கலவரம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது."
"இதெல்லாம் வெளிநாட்டின் சதி. என் அரசியல் வாழ்க்கையை நான் இப்படி முடிக்க விரும்பவில்லை. என் ஆட்சி அசோக சக்கரவர்த்திக்கு நிகராக பொன்னேடுகளில் பதிக்கும் படி இருக்க வேண்டும். அதற்கு உன் உதவி தேவை. நாம் ஒருவரை சந்திக்க போகிறோம். அவருடன் நீ தான் எனக்காக பேச வேண்டும்."
"எனக்கு அரசியலில் யாரையும் தெரியாது."
"உனக்கு அவரை நன்றாகத் தெரியும். அவருக்கு நீ மிகவும் விருப்பமானவர். அது நமக்கு உதவும்"              
                           -------*************--------          .   
அப்பா பிரதமர் ஆனாலும் மிக எளிமையாகவே இருந்தார். அவர் காரில் போகும்போது செக்யூரிட்டி பந்தோபஸ்து, போக்குவரத்தை நிறுத்துதல் போன்றவற்றைக் கடுமையாக மறுத்து வந்தார்.
கார் சந்திராவின் வீட்டை அடைந்தது. அவளை நான் பார்த்து 28  வருடங்கள் ஆகி விட்டது. அவள் இப்போது ஜவஹருக்கு உதவியாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருக்கிறாள். ஜவஹர் ஓய்வு பெற்று, அவள் தலைமையில் நடக்கவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட முடிவு செய்திருந்தது. அவள் மகன் ரஞ்சித் இளைஞர் அணிக்கு தலைவராக இருக்கிறான்.
சந்திரா என்னை எதிர்பார்க்கவில்லை. என்னை அவள் ஏறெடுத்து பார்க்கவில்லை. என் தந்தையை வரவேற்ற அவள் என்னை உதாசீனப்படுத்தினாள். ரஞ்சித் அவள் அருகில் அமர்ந்திருந்தான். அவன் துடிப்பானாகவும் அதே சமயம் அமைதியற்றவனாகவும் இருந்தான். என்னை அவன் பார்த்த பார்வையில் வெறுப்பு தெரிந்தது
அப்பா சந்திராவுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார்.
"அரசியலில் ஜவஹரும் நானும் எதிர் துருவங்களில் இருந்து விட்டோம். ஆனாலும் அவர் மீது நான் மரியாதையுடன் நடந்து வந்தேன். எங்கள் இருவருக்கும் 80  வயது நெருங்கி விட்டது. ஓய்வெடுக்கும் கால கட்டத்தை நெருங்கி விட்டோம். இனி எதிர்காலம் நீ, ரசிக் போன்ற இளைஞர்கள் கையில். அடுத்த தலைமுறையைச் சேர்ந்த நீங்கள் இருவரும் சேர வேண்டும். அது தான் நாட்டுக்கு நல்லது. என்ன சொல்கிறாய் சந்திரா."
என் பெயரையும் அப்பா சேர்த்துக் கூறியதில் அவர் தந்திரம் புரிந்து விட்டது. என்னை அரசியலுக்கு இழுக்கப் பார்க்கிறார் என்பது தெளிவானது.
சந்திரா - "சற்று புரியும்படி சொல்லுங்கள்."
"வரும் தேர்தலில் சுதந்திரா கட்சியும் காங்கிரசும் கூட்டணி சேர்ந்து போட்டியிட வேண்டும். இல்லாவிட்டால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை வரும். கம்யூனிஸ்ட் மற்றும் மாநில காட்சிகள் வெற்றி  பெறும். அது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல."
"தலைமைப் பதவி யாருக்கு?"
"காங்கிரசை விட சுதந்திரா கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகம். நாங்கள் தான் வரும் தேர்தலில் அதிக இடங்கள் பெறுவோம். ஆகையால் ரசிக் பிரதமராகவும் நீ துணைப் பிரதமராகவும் இருப்பது நியாயமானது"
"பிரதமராக என் மகன் ரஞ்சித் என்றால் தான் காங்கிரஸ் கட்சி சம்மதிக்கும். மேலும் அமையவிருக்கும் ஆட்சியிலோ உங்கள் கட்சியிலோ ரசிக்  ஒரு பொறுப்பிலும் இருக்கக் கூடாது. இதற்கு சம்மதம் என்றால் எங்கள் தரப்பிலிருந்து உடன்படிக்கைக்கு ஒப்புக் கொள்வோம். இல்லை என்றால் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும்."
அப்பாவுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. என் மனம் நிம்மதியானது.
ஏமாற்றத்துடன் அப்பா சந்திராவிடமிருந்து விடை பெற்றார். காரில் அப்பாவிடம் நான் எதுவும் பேசவில்லை. அவர் மன சஞ்சலத்தில் இருந்ததால் இருவரும் மௌனமாகவே இருந்தோம். 
அடுத்து ஜனாதிபதி மாளிகைக்கு நாங்கள் வந்து சேர்ந்ததும் எனக்கு வியப்பு மேலிட்டது. இங்கு எதற்கு என்னை அழைத்து வந்தார் என்ற கேள்வியும் வந்தது.
ஜனாதிபதி சஞ்சீவ் அப்பாவை எதிர்பார்த்திருந்தார். முக்கியமான நாட்டு நிலவரங்கள் குறித்துப் பேச ஆரம்பித்தனர்.
அப்பா - "நாடு இப்போது முன் போல இல்லை.  முன் அபரிதமான தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு மட்டும் மக்களை திருப்தி செய்வதாக இருந்தது. இப்போது மக்கள் சுற்றுப்புற சூழல், விவசாயிகளின் நலன் பற்றி எல்லாம் பேச ஆரம்பித்து விட்டனர்."
ஜனாதிபதி - "நிலம் கையகப்படுத்துவதற்கான மசோதா இந்தப் பாராளுமன்றக் கூட்டத்திலாவது நிறைவேறுமா. எதிர் கட்சித்தலைவர் ஜவஹர் என்ன சொல்கிறார். அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா."
அப்பா - "இந்த மசோதாவின் பெயரால் நாடு முழுதும் கடும் எதிர்ப்பை ஜவஹர் தூண்டி வருகிறார். என்னை விவசாயிகளின் எதிரியாக சித்தரிக்கிறார். இப்போது மக்கள் மாறி விட்டார்கள். அவர்கள் எதிர்பார்ப்பு மாறி விட்டது. வலது சாரி அரசியல் இனியும் இங்கு செல்லாது. வலது, இடது இரண்டின் கலவையான அரசியல் தேவைப்படுகிறது."
ஜனாதிபதி - "சரியாக சொன்னீர்கள்."
அப்பா - "அதற்கு புதிய தலைமை தேவை. நான் ஓய்வு பெறப் போகிறேன். என் மகன் ரசிக் நாட்டையும் கட்சியையும் வழி நடத்துவான்."
எனக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. என்னிடம் கலந்துப் பேசாமல் அப்பா இந்த முடிவெடுப்பார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
கோபத்தில் அறையை விட்டு நான் வெளியேற நினைத்தபோது அப்பாவின் உதவியாளர் அவர் காதருகே ஏதோ சொன்னார். அப்பா ஜனாதிபதியிடம் விஷயத்தை சொன்னார்.
"என் தந்தை தேசப்பிதா மோகனதாஸ் இறைவனடி சேர்ந்து விட்டார்." 
அப்பாவின் கண்களில் கண்ணீர் வழிந்து வந்தது.
                        ---------*********--------
தாத்தாவின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நீண்ட நித்திரையில் இருப்பது போல காணப்பட்டார்.  தூங்கும்போது அவர் முகத்தில் எப்போதும் இருக்கும் மென்புன்னகை இப்போதும் தெரிந்தது. அவர் இருக்கும் நிலை நிரந்தரக் கனவா அல்லது கனவுகளே இல்லாத துயில் தான் மரணமா? இறக்கும் போது அவர் வயது 105. வாழ்வின் இறுதிக் காலத்தில் கூட அவர் படுத்தப்படுக்கையாக இருந்தது கிடையாது. அவர் மரணம் மிக எளிதாகவே நடந்து முடிந்தது.
வளைந்து கொடுக்கும் தன்மை இருந்ததாலே அவருக்கும் தாத்தாவுக்கும் இடையே நிகழ்ந்த யுத்தத்தில் வென்றார். தேசப்பிதா என்று நாடே கொண்டாடிய தாத்தாவின் அரசியல் வாழ்க்கையை சூன்யமாக்கினார். நாட்டின் பிரதமராக 22 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தது அப்பாவின் இந்த நடைமுறை வாழ்க்கை சாமர்த்தியம் தான் காரணம்.
தாத்தாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த தலைவர்கள் வரத் தொடங்கினர். அப்பாவிடம் செயற்கையான சோகம் ததும்பிய முகத்துடன் துக்கம் விசாரித்தனர்.
"தேசப்பிதா மோகன்தாஸ் வாழ்க" என்ற கோஷம் வீட்டின் வெளியே கேட்டது.
கடந்த 35 ஆண்டுகளாக யாரும் தாத்தவைப் பொருட்படுத்தியதில்லை. இப்போது அனைவரும் அவரைப் புகழ்வது எனக்கு வெறுப்பாக இருந்தது.
எதிர்கட்சித் தலைவர் ஜவஹர் வருகிறார் என்று அப்பாவிடம் உதவியாளர் கூற, அவரை வரவேற்க அப்பா வாசல் சென்றார். அரசியலில் ஜவஹர் தனக்கு எதிரி என்றாலும் அவர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார்.
வந்ததும் அப்பாவை ஜவஹர் அணைத்தார். இருவரும் அந்நிலையில் சில நொடிகள் இருந்தனர்.
"எப்படி நடந்தது ஹரிலால்", என்று ஜவஹர் அப்பாவிடம் விசாரித்தார்.
"மிகவும் அழகாக அவர் மரணம் நிகழ்ந்தது. இரவில் தூங்கும் போது அவர் இதயத் துடிப்பு நின்றது." 
பிறகு ஜவஹரைத் தாத்தாவின் உடல் இருந்த அறைக்கு அப்பா அழைத்துச் சென்றார்.
தாத்தாவின் உடலைப் பார்த்ததும் அவர் காலடியில் மண்டியிட்டு கண்ணீர் விட்டழுதார்.
“பெற்ற மகனான என்னை வெறுத்தார். வளர்ப்பு மகனான ஜவஹர் மீது உயிரையே வைத்தார்", என்று அப்பா அடிக்கடி கூறுவதுண்டு
ஜவஹர் அப்பாவின் உடலை விட்டு அகன்று, அருகிலிருந்த என்னை நோக்கி வந்தார்.
"ரசிக், எப்போது அமெரிக்காவிலிருந்து வந்தாய்."
"நான் வந்து ஒரு வார காலம் ஆகிறது."
"பிறகு சாவகாசமாக உன் ஆராய்ச்சி பற்றி பேச வேண்டும்."
தத்துவம், இலக்கியம், அரசியல், வரலாறு, விஞ்ஞானம் என்று அனைத்திலும் ஜவஹர் ஆர்வமுடையவர். அவரிடம் நான் மணிக்கணக்காக உரையாடல் நடத்துவதுண்டு.
என்னிடம் நலம் விசாரித்து விட்டு மற்ற உறவினருடன் ஜவஹர் பேசிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் தாத்தாவின் உடல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஈமக்கிரியை செய்யப்பட்டது.
குடும்பத்தினர் அனைவரும் வீட்டிற்குத் திரும்பினோம். நான் யாருடனும் உரையாடும் நிலையில் இல்லை. மனதில் தாத்தாவைப் பற்றிய எண்ணங்கள் அலை மோதிக் கொண்டிருந்தது.
என் தோளில் யாரோ கை வைக்க, திரும்பிப் பார்த்தேன். அப்பா நின்றுக் கொண்டிருந்தார். என்னுடன் தனியாகப் பேச அவர் அறைக்கு அழைத்துச் சென்றார்.
அறையில் எங்களுக்கிடையே நிலவிய மௌனத்தை அப்பாவே உடைத்தார்.
"இன்று எரித்தோமே, கிழவர், எவ்வளவு பெரிய மனிதர் தெரியுமா?."
நான் அப்பா மேலும் பேசட்டும் என்று மௌனத்தைத் தொடர்ந்தேன்.
"மூடர்கள்! நமக்கு சுதந்திரம் அவரால் கிடைக்கவில்லை என்று ஊளையிடுகிறார்கள். உலகப் போர் வரவில்லையென்றால் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காதாம். வரலாறு தெரியாத அறிவீனமான வார்த்தைகள். அவர் காலத்திற்கு முன் சுதந்திரப் போராட்டம் எப்படியிருந்தது? இங்கொன்றும் அங்கொன்றும் என சில கலகங்கள். ஒரு நாட்டு மக்கள் அனைவரையும் போராட்டத்திற்குள் இழுப்பதென்றால் சாதாரண காரியமா? இதற்கான முழு பாராட்டும் கிடைக்காமல் இறந்து விட்டார் கிழவர்."
"அவருக்கு கிடைக்க வேண்டிய பாராட்டுக்கள் அனைத்தையும் தான் நீங்கள் பறித்து விட்டீர்களே. ஜின்னா, சுபாஷ் போன்றவர்களை உங்கள் பக்கம் இழுத்து அவரைத் தனிமைப் படுத்தினீர்கள். இறுதியில் ஜவஹர் தவிர யாரும் அவருக்கு ஆதரவாக இல்லாமல் செய்து விட்டீர்கள். அவர் பக்கமிருந்த நாட்டு மக்களை உணர்ச்சிகரமான வார்த்தைகள் பேசி உங்கள் பக்கம் இழுத்தீர்கள். கடைசியில் சுதந்திரம் கிடைத்தது ஹரிலால் தான் காரணம் என்று ஒரு பொய் சரித்திரம் பள்ளியில் படிக்கும்படி செய்தீர்கள்."
"கிழவருக்கு இருக்கும் அதே நேர்மைத் திமிர் உனக்குமிருக்கிறது. நான் அவருக்கு எதிரி இல்லை. பிடிவாதம், கொள்கைப் பிடிப்பு போன்ற குணங்கள் தான் அவருக்கு எதிரி. அவர் எனக்கு தலைமை தாங்கும் தகுதி இருப்பதாக சிறிதும் நம்பவில்லை. கிழவர் என்னை அவர் ஆசிரமத்தில் பணி செய்ய அழைத்தார். அங்கு போய் நான் என்ன செய்ய? கழிவறைகளை சுத்தம் செய்யவா? கிழவர் உண்மையில் ஒரு சர்வாதிகாரி. எத்தனை மணமான இளம் தம்பதிகள் அவர் பேச்சைக் கேட்டு பிரம்மச்சரிய விரதம் பூண்டு தங்கள் வாழ்க்கையை நாசம் செய்தார்கள் தெரியுமா."
வாதம் தேவையில்லாமல் வளர்ந்து கொண்டிருப்பதை உணர்ந்து நான் பேசாமல் மௌனம் காத்தேன்.
"சரி. நான் தான் என் அப்பா பேச்சைக் கேட்கவில்லை. நீயாவது என் விருப்பத்தை மதித்து நடக்கலாம் அல்லவா."
"என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?"
“எனக்கு உதவியாக நீ அரசியலில் நுழைய வேண்டும். எனக்குப் பிறகு என் வாரிசாக இந்த நாட்டை ஆள வேண்டும்."
"வாரிசு அரசியலைக் கொண்டு வந்து ஜனநாயகத்தைப் பலியிடுகிறீர்கள். மேலும் எனக்கு அரசியலில் விருப்பமில்லை. என் ஆர்வம் அறிவியல் மீது தான்."
"அது தான் சென்ற வருடம் அறிவியலுக்கு நோபல் பரிசு வாங்கி விட்டாயே. இதற்கு மேல் நீ அறிவியலில் என்ன சாதிக்க வேண்டும்."
"என் அறிவியல் கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் ஒரு இயந்திரத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறேன். மேலும் நான் நாளையே அமெரிக்கா செல்கிறேன்."
"ஒரு மாதம் இருந்து விட்டு செல்வதாக சொன்னாயே."
"இங்கு எனக்கு வசதிப்படவில்லை. நான் போகிறேன்."
இந்தியாவில் மேலும் இருந்தால் அப்பாவின் வற்புறுத்தல் அதிகமாகும் என்பது தான் உண்மையான காரணம் என்று நான் சொல்லவில்லை.
அப்பா என்னைப் பலவாறு பேசி அரசியலில் இழுக்கப் பார்த்தார். நான் பிடி கொடுக்கவில்லை. அவர் அறையை விட்டு வெளியே வந்ததும் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தேன். சிறிது நேரம் என் தாய் மற்றும் உறவினருடன் பேசி விட்டு உறங்கினேன்.
                             --------**********---------
அடுத்த நாள் விடிகாலை கிளம்பி விமானப் பயணம் மூலம் அமெரிக்காவின் சன்னிவேல் நகரம் வந்தேன்.
இரண்டு மாதங்கள் முழுமூச்சாக என் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தினேன். என் ஆராய்ச்சி பற்றி நான் இது வரை உங்களிடம் கூறவில்லை.
நாம் வாழ்வது நட்சத்திரங்கள், கிரகங்கள் நிறைந்த இந்தப் பிரபஞ்சம் என்பதை நன்கறிவோம். குவாண்டம் இயற்பியல் தலையெடுத்தப் பிறகு இது போல பல பிரபஞ்சங்கள் இருக்கின்றன என்று சில அறிவியலாளர்கள் உறுதியாக நம்பத் தொடங்கினர். அது மட்டுமல்ல இதில் சில பிரபஞ்சங்கள் அச்சாக நமது பிரபஞ்சம் போல இருக்கும் சாத்தியக்கூறும் இருப்பதாக ஒரு கருத்து உள்ளது. அங்கும் பூமி என்னும் ஒரு கிரகம் இருக்கலாம். அங்கு மனிதர்கள் இருக்கலாம். உங்களையும் என்னையும் போன்ற ஒரு மனித நகல் அந்த உலகில் இருக்கலாம். நீங்கள் இப்போது இந்தக் கதையைப் படித்துக் கொண்டிருந்தால் உங்கள் நகலும் அந்த உலகில் இந்தக் கதையைப் படிக்கலாம். எல்லாப் பிரபஞ்சங்களும் ஒன்றாக ஒரே விதமாக இருக்க வேண்டும் என்பதில்லை. சில பிரபஞ்சங்கள் நம் பிரபஞ்சங்களிலிருந்து சிறிதளவு மாறுபடலாம். இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரு எழுத்தாளராக இருந்தால் மாற்றுப் பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரு விஞ்ஞானியாக இருக்கலாம். இதெல்லாம் வெறும் கட்டுக் கதை அல்ல. அறிவியல் கோட்பாடுகள் மீது எழுப்பப்பட்ட கருத்துக்கள்.
நான் மாற்றுப் பிரபஞ்சங்களுக்கு பயணம் செல்லக் கூடிய ஒரு இயந்திரத்தை உருவாக்கியுள்ளேன். இன்று அந்த இயந்திரம் முழு அளவில் செயல்படும் நிலையில் உள்ளது.
இதை பரிசோதனை செய்ய வேண்டுமென்றால் ஒரு மனிதன் மாற்றுப் பிரபஞ்சத்திற்குச் சென்று வந்தால் ஒழிய முடியாது. இப்படிப்பட்ட பரிசோதனைக்கு யாரும் சம்மதிக்க மாட்டார்கள். அதனால் என்னையே இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளப் போகிறேன்.
என் முன் உள்ள இயந்திரத்தின் உள்ளே நுழைந்தேன். கதிர்கள் என் மீது பாய்ந்தது.  என் உடல் துகள் துகள்களாக மாறின. சில நொடிகளில் நான் மறைந்தேன். 
                             --------**********---------

                                                          மாற்று உலகம்

                                                                வருடம் 1922


சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்தியின் பிரார்த்தனை கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது.
காந்தியடிகள் பகவத் கீதை, குரான் மற்றும் பைபிளிலிருந்து சில பத்திகள் வாசித்தார்.
அதன் பின்னர் பஜன் பாடல்கள் கூட்டத்திலிருந்தவர்கள் பாடினர்.
இறுதியில் காந்தியடிகள் கூட்டத்தினரை நோக்கிப் பேச ஆரம்பித்தார்.
"இந்த பிரார்த்தனை கூட்டம் ஒவ்வொரு நாளும் நடந்து வருகிறது. நீங்களும் தவறாமல் கலந்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆசிரமத்தில் ஒரு சிறுவன் இருக்கிறான். அவனுக்கு பன்னிரண்டு வயது இருக்கும். அவன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான். தாத்தா நீங்கள் தினமும் கடவுளிடம் வேண்டுகிறீர்கள். நம் நாட்டுக்கு சுதந்திரம் தர கடவுளிடமே கேட்டு விடலாமே. எதற்கு சத்யாகிரகப் போராட்டம் எல்லாம். நீங்களும் கஷ்டப்படுகிறீர்கள். மக்களையும் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று அந்த சிறுவன் கேள்வி கேட்டான்."
கூட்டத்தினர் அனைவரும் சிரித்தனர்.
"சிறுவன் மிகவும் புத்திசாலி. நிறைய கேள்விகள் கேட்பான். கேள்வி கேட்பதனால் தானே தெளிவு பிறக்கும். நம் குழந்தைகளை கட்டுப்பாடு என்ற பெயரில் அவர்கள் ஆர்வத்தை நாம் முடக்கி விடக் கூடாது. சரி சிறுவன் கேள்விக்கு வருவோம்.  நாம் ஏன் இறைவனைப் பிரார்த்திக்கிறோம். நம் தேவைகளைக் கேட்டு பெறுவதற்கா?. இல்லை. பிரார்த்தனை நம் மனதின் ஆழத்தில் உள்ள மிருகத்தை வெளியேற்றுகிறது. கருணை எண்ணங்களின் மூலம் நம் மனதை சுத்தப்படுத்துகிறது. அதனால் நம் போராட்டம் அறப்போராட்டமாக இருக்க வேண்டும். எதிரியை நம் கருணை உள்ளத்தின் மூலம் தொட வேண்டும். அதற்கு பிரார்த்தனை மிகவும் அவசியம்."
காந்தியடிகள் பேசிக் கொண்டிருக்கும் போது உதவியாளர் அவர் காதில் மெதுவாக ஒரு துர் செய்தியைத் தெரிவித்தார்.
"சிறுவன் காணவில்லை."
காந்தியடிகள் அதிர்ச்சியில் உறைந்தார்.
"ஹே ராம். இன்னும் எவ்வளவு சோதனைகள் எனக்குத் தரப் போகிறாய்."
                       -------********-------
சென்னை ரயில் நிலையத்தில் சிறுவன் யாரையோ தேடிக் கொண்டிருந்தான். ஒவ்வொரு ரயில் வரும்போதும் ஏறுபவர் இறங்குபவர்களைக் கூர்மையாகக் கவனித்தான்.
வெகு நேரம் ஆகியும் தான் தேடியவர் கிடைக்கவில்லை என்றதும் அவன் முகம் வாடியது. பசி வேறு அவனை வாட்டியது. கையில் பணம் சுத்தமாக இல்லை. மயக்கமுற்று பிளாட்பாரத்தில் விழுந்தான்.
கண் விழித்ததும் தன் முன் இரு போலீஸ் நிற்பதை உணர்ந்தான்.
"சிறுவனே நீ யார்.  உன் பெயரென்ன. தனியாக ரயில் நிலையத்தில் உனக்கென வேலை."
என்னவானாலும் தன் உண்மைப் பெயரையும் தன் பெற்றோர் யார் என்பதையும் சொல்லக் கூடாது என்று சிறுவன் நினைத்துக் கொண்டான்.
"என் பெயர் ராம். நான் என் அப்பாவைத் தேடி வருகிறேன்."
"உன் அப்பா உன்னையும் உன் அம்மாவையும் கை விட்டு மறைந்து விட்டாரா?"
சிறுவன் பதிலேதும் சொல்லாமல் இருந்தான்.
"உன் அப்பாவுக்கும் உன் அம்மாவுக்கும் ஏதாவது பிரச்சினையா?"
சிறுவன் அழ ஆரம்பித்தான். அவனுக்கு மன நிலை சரியில்லை என்று தீர்மானித்து போலீஸ் அவனை விட்டு விட நினைத்தனர்.
"பசிக்கிறது. ஏதாவது வாங்கித் தருகிறீர்களா?"
அவனைப் பொருட்படுத்தாமல் சென்று விட நினைத்தனர். ஆனால் சிறுவன் அவர்களை பின் தொடர்ந்து வந்துக் கொண்டே இருந்தான்.
அவன் கையில் 1 ரூபாய் கொடுத்ததும் சிறுவன் மகிழ்ச்சியுடன் ஓடி ஒரு உணவு விடுதிக்குச் சென்றான்.
அங்கு வந்த அனைவரும் சாதம் வாங்கி உண்டனர். ஆனால் சிறுவன் வட மாநிலத்தவன் என்பதால் சப்பாத்தி சாப்பிட்டான்.
சாப்பிட்டதும் அவனுக்கு தெம்பு வந்தது. மீண்டும் தன் தேடல் வேட்டையைத் தொடர்ந்தான்.
                                                -------*******-------- 

எனக்கு நினைவு தோன்றியதும் முதலில் தோன்றிய உணர்வு வியப்பு. நான் இன்னும் முழுதாக இருக்கிறேன் என்பதே நம்ப முடியாத விஷயமாக இருந்தது.
அடுத்து நான் எங்கிருக்கிறேன் என்ற கேள்வி எழுந்தது. அருகில் சலசலவென ஓசை கேட்டது. சுற்றிலும் மனிதர்கள் நடமாட்டம் தெரிந்தது. ஒரு நதியின் கரையில் மக்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் துணிகள் துவைத்துக் கொண்டிருந்தார்கள். நான் இருப்பது இந்தியாவின் ஏதோ ஒரு நகரம். அது நான் வாழும் பிரபஞ்சமா அல்லது மற்றொரு பிரபஞ்சமா என்பது தெளிவாகவில்லை.
மெல்ல எழுந்து நடக்கத் துவங்கினேன். உடலெங்கும் வருத்திய பெறுவலியைத் தாங்கி கொண்டு நடந்தேன். தெருவோரத்திலிருந்த கடைகளை நோட்டமிட்டேன். என் செலவுக்கு சில தங்கக் கட்டிகள் கொண்டு வந்திருந்தேன். முதலில் ஒரு நகைக் கடையில் அதை விற்று ருபாய் நோட்டுகள் பெற்றுக் கொண்டேன். ஒரு செய்தித்தாள் வாங்கினேன். முதலில் பார்த்தது தேதியைத் தான். வருடம் 1921 என்பதைப் பார்த்ததும் சிறு அதிர்ச்சி ஏற்பட்டது.
நான் உருவாக்கியது கால இயந்திரம் கிடையாது. அது வேறு ஒரு பிரபஞ்சத்திலிருக்கும் பூமிக்கு பயணம் செய்யவல்ல ஒரு இயந்திரம். நான் 52 ஆண்டுகள் பின்னோக்கி சென்றது குழப்பத்தை ஏற்படுத்தியது
இதற்கு இரண்டு சாத்தியக்கூறுகள் உள்ளது. நான் என் பிரபஞ்சத்திலேயே காலத்தில் பின்னோக்கி சென்றிருக்க வேண்டும்.
அல்லது நான் வந்திருக்கும் பிரபஞ்சத்தில் நாகரீக வளர்ச்சி 52 ஆண்டுகள் கழித்து துவங்கியிருக்க வேண்டும். மனிதன் குரங்கிலிருந்து உருமாறியதில் துவங்கி, இயேசு பிறந்தது, ஐரோப்பா வலு பெற்றது, இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்திய அனைத்து சரித்திர நிகழ்வுகளும் 52 ஆண்டுகள் கழித்து இந்தப் பிரபஞ்சத்தில் நடந்திருக்க வேண்டும்.
நான் செய்தித்தாளை மேலும் படித்ததில் சில விஷயங்கள் தெரிந்தது.
இந்தியா இன்னும் அடிமைப்பட்டிருந்த நேரம் அது. என் தாத்தா மோகன்தாஸை இங்கு அவரது கடைசிப் பெயரான காந்தி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஜவஹரை நேரு என்றும், முகம்மது அலியை ஜின்னா என்ற பெயரால் அழைக்கப்பட்டிருந்தார். என் தந்தையைப் பற்றி ஒரு குறிப்பும் இல்லை. அவர் இந்நேரம் தான் அரசியலில் புகழ் அடையாத தொடங்கிய காலகட்டம்.
நான் இருப்பது இன்னொரு பிரபஞ்சம் என்ற நம்பிக்கை வேரூன்ற ஆரம்பித்தது.  என் ஆராய்ச்சி வெற்றிபெற்றது மனதைக் களிப்படையச் செய்தது.
நான் என் உலகிற்கு எப்போது திரும்பலாம் என்று யோசித்தேன். இந்த உலகில் என் தந்தை மற்றும் என் தாத்தாவையும் சந்தித்து விட்டு தான் திரும்ப வேண்டும் என்று முடிவு செய்தேன்.
நான் இருப்பது சென்னை நகரம் என்பது புரிந்தது. நகரத்தை தெருத்தெருவாக சுற்றி வந்தேன். சில ஆங்கிலேயர்களும் கண்ணில் பட்டனர். அவர்களுடன் இந்தியர்கள் சிலர் சகஜமாகப் பேசியது வியப்பாக இருந்தது. எனக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டும் தான் தெரியும். ஆனால் இங்கு பெரும்பாலும் தமிழ் மட்டுமே பேசுகிறார்கள். எனக்கு ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டது. யாரிடமும் உதவி கேட்கத் தயக்கமாக இருந்தது.
காலாற நடந்து கடற்கரையை அடைந்தேன். மாலை நேரம் ஆனதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது, இருட்ட ஆரம்பித்ததும் கூட்டம் குறையத் தொடங்கியது. எனக்கு கடற்கரையை விட்டு அகல மனம் வரவில்லை. சிறிது நேரத்தில் கடற்கரை நிசப்தமாக இருந்தது. மெதுவாக நடக்கத் தொடங்கினேன். ஒரு படகின் அருகில் யாரோ இருப்பது தெரிந்து அருகில் சென்றேன்.
ஒரு பத்து வயது சிறுவன் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வந்துக் கொண்டிருந்தது.
அவன் பார்க்க வடநாட்டுச் சிறுவன் போலத் தெரிந்தான்.  அவனிடம் பேச்சுக் கொடுத்தேன்.
"தம்பி உனக்கு ஹிந்தி தெரியுமா", என்று ஆங்கிலத்தில் கேட்டேன்.
சிறுவன் பதில் அளிக்கவில்லை.
"உன் பெயர் என்ன?" -  இந்த முறை ஹிந்தியில் கேட்டேன்.
"ராம்."
"ஏன் அழுதுக் கொண்டிருக்கிறாய்?"
"என் அப்பா போய் விட்டார். எங்களை விட்டுப் போய் விட்டார்"
"இறந்து விட்டாரா?"
"இல்லை. எங்களை வேண்டாம் என்று விட்டுச் சென்று விட்டார்."
"நீ தமிழனா?"
"இல்லை. நான் குஜராத்தைச் சேர்ந்தவன். அப்பா எங்களை விட்டுச் சென்று ஒரு வருடம் ஆகிறது. நான் அவரைத் தேடி இரண்டு மாதங்கள் முன்பு சென்னை வந்தேன்.. இங்கு இருக்கும் மக்களிடம் பேசிப் பேசி தமிழ் கற்றுக் கொண்டேன்."
"உன்னுடன் பெரியவர்கள் யாரும் வரவில்லையா?"
"அவர்கள் யாருக்கும் என் அப்பா மீது அக்கறையில்லை."
"சரி நமக்குள் ஒரு ஒப்பந்தம் செய்துக் கொள்ளலாம். நான் உன் தந்தையைத் தேடிக் கண்டுபிடிக்க உதவுகிறேன். நீ இவரிடம் என்னைக் கொண்டு போய் சேர்ப்பாயா?"
நான் அவனிடம் என் தாத்தா மோகன்தாஸின் புகைப்படத்தைக் காண்பித்தேன்.
சிறுவன் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. அவன் இன்னொரு புகைப்படத்தைக் காண்பித்தான். என் தாத்தாவின் மடியில் அவன் விளையாடுவது போன்ற ஒரு புகைப்படம்.
"எனக்கு மகாத்மாவுடன் நல்ல பழக்கம். அவர் இன்னும் இரண்டு வாரங்களில் மதுரை வருகிறார். நான் அவரிடம் உங்களை அழைத்துச் செல்கிறேன்."
"உன் அப்பா எங்கிருக்கிறார் என்று தெரியுமா? யாரிடம் விசாரிப்பது."
"அவர் கன்னியாகுமரி சென்றிருப்பதாக தெரிந்தவர் ஒருவர் கூறினார். என்னிடம் பணம் இல்லை. நான் எப்படி கன்னியாகுமரி போவது."
"கவலைப்படாதே நான் உனக்கு உதவுகிறேன். நாம் நாளையே ரயிலில் கன்னியாகுமரி போகலாம். சந்தோஷம் தானே."
சிறுவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரியவில்லை. நான் அவனை அழைத்துக் கொண்டு ஒரு விடுதிக்குச் சென்றேன். அன்றிரவு நாங்கள் இருவரும் அங்கேயே கழித்தோம்
அடுத்த நாள் நானும் சிறுவனும் ரயிலில் கன்யாகுமரிக்குப் பயணமானோம். கன்யாகுமாரியை அடைவதற்கு மூன்று நாட்கள் ஆகும்.
எங்கள் அருகில் மூன்று பேர் அமர்ந்து அரசியலை விவாதித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் முஸல்மான், மற்றொருவர் சீக்கியர் மூன்றாமவர் நெற்றியில் நாமம் போட்டிருந்தமையால் தமிழ் அய்யர் என்று யூகிக்க முடிந்தது.
முஸல்மான் - "ஜின்னாவுடன் கருத்து வேறுபாடு காரணமாக காந்தி மெல்ல முஸ்லிம்களை இழந்து விடுவாரோ என்று அச்சமாக உள்ளது."
அய்யர் - "காந்தியின் போராட்டம் எல்லா இனத்தினரும் சேர்ந்த ஒரு முழு இந்தியப் போராட்டம். ஒரு பகுதியினரை மட்டுமே திருப்தி செய்யும் நிலைப்பாட்டை அவர் எடுக்க முடியாது."
சீக்கியர் - "அவர் இந்து மேல் சாதியினருக்குச் சாதகமானவர் என்பதை ஏன் இப்படி சுற்றி வளைத்துச் சொல்கிறீர்கள். அம்பேத்கரும் அவருக்கு எதிராக இருப்பதனால் சிறுபான்மையிரின் ஆதரவும் இழந்து விடுவார் போலிருக்கிறது"
அய்யர் - "தலித்துகளுக்கு ஹரிஜன், அதாவது கடவுளின் குழந்தைகள் என்று பெயரிட்டதே காந்தி தான். தலித்துகளுக்காக குரல் கொடுத்து அவர்கள் நல்வாழ்வுக்காக செயல்படுகிறார் காந்தி. அம்பேத்கர் ஏன் இதைப் புரிந்து கொள்ள வில்லை. இருவரும் ஏன் இணைந்து செயல்படக்கூடாது."
சீக்கியர் - "காந்தியின் தலித்களின் மீதான அக்கறை ஒரு வலியவன் தன்னை விடப் பலம் குறைந்தவனிடம் காட்டும் பரிதாபம் மட்டுமே. ஆனால் அம்பேத்கர் வலியவர்களின் முன் சம அந்தஸ்துடன் தலித்துகள் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறுகிறார். இது தான் வித்தியாசம்."
நான் இந்த விவாதத்தை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன். ராம் ஒரு நாளிதலைப் புரட்டிக் கொண்டிருந்தான். அதில் காந்தி, நேரு, அம்பேத்கர் இவர்களின் புகைப்படத்தை பார்த்த வண்ணம் இருந்தான்.
"இவர்களில் யாரைப் போல ஆக வேண்டும் என்று உனக்கு விருப்பம். காந்தி போல தானே"
ராம் மறுத்து இன்னொரு பக்கத்தில் உள்ள ஒரு புகைப்படத்தைக் காண்பித்தான். நாளிதழின் ஒரு மூலையில் ஐன்ஸ்டினின் புகைப்படம் இருந்தது.
"நான் இவரைப் போல ஆக வேண்டும்"
"இவர் யார் என்று உனக்குத் தெரியுமா."
"தெரியும். ஐன்ஸ்டின். விஞ்ஞானி."
"இவர் என்ன கண்டுபிடித்தார்."
"நாம் எப்படி சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு பயணம் செய்கிறோம். அது போல எதிர்காலத்திற்கும், பிற்காலத்திற்கும் பயணம் செய்ய முடியும் என்று கண்டுபிடித்தார்."
சிறுவனின் பதிலைக் கேட்டு நான் அசந்தே விட்டேன்.
"உனக்கு அறிவியல் மீது அவ்வளவு விருப்பமா?."
"இவ்வளவு விருப்பம்." என்று சிறுவன் தன கையை அகல விரித்துக் காண்பித்தான்.
"உனக்கு கணிதம் தெரியுமா."
"நீங்கள் எந்த இரண்டு எண்களை வேண்டுமானாலும் கொடுங்கள். எண்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதன் பெருக்கல், வகுத்தல், எளிதாக செய்து விடுவேன்."
சிறுவனை பரிசோதித்தேன். அசாத்தியமான திறமை அவனிடம் இருந்தது.
"வகுத்தல், பெருக்கல் நன்றாக தெரிந்தால் விஞ்ஞானி ஆகி விடலாம் அல்லவா."
"இதெல்லாம் பத்தாது. முதலில் அல்ஜீப்ரா தெரிய வேண்டும். அதன் பின் இன்னும் கடினமான கணிதம் தெரிய வேண்டும்."
"எனக்கு அல்ஜீப்ரா சொல்லிக் கொடுப்பீர்களா."
"சரி."
"இப்பொழுதே?"
நான் சற்றுத் தயங்கினேன்.
"ரயிலின் எந்திரக் கோளாறின் காரணமாக பயணம் ஒரு வாரம் தாமதம் ஆகும் என்று இப்போது தானே அறிவித்தார்கள். நீங்கள் அல்ஜீப்ரா சொல்லிக் கொடுப்பதன் மூலம் நம் இருவருக்கும் பொழுது போகும் அல்லவா?"
நான் சம்மதித்தேன். சிலருக்கு சொல்லிக் கொடுப்பது நமக்கு அல்லது இன்பத்தைத் தரும். நான் அதை ராம் மூலம் அடைந்தேன். அவன் கிரகிக்கும் திறமை அபாரமாக இருந்தது.
10 நாட்கள் கழித்து நாங்கள் கன்யாகுமரி வந்தடைந்தோம்.  ராமின் தந்தையை எங்கு சென்று விசாரிப்பது என்ற குழப்பத்தில் இருந்தோம். முதலில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் செல்வது என்று முடிவெடுத்தோம்.
காவல் நிலையத்திற்குச் சென்றோம்.  அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரி அனைத்து போலீசுக்கும் ஆணைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தார். இன்னும் மூன்று நாட்களில் ஒரு போராட்டம் நடைபெற இருப்பதால் காவல் துறை மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
நாங்கள் இருவரும் அதிகாரியை சந்திப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தோம். எங்களுக்கு அனுமதி கிடைத்ததும் அதிகாரியின் அறைக்குச் சென்றோம். நான் அவரிடம் ராமின் நிலையைக் கூறினேன்.
"இப்போது எதுவும் என்னால் செய்ய முடியாது. இன்னும் மூன்று நாட்களில் பெரும் போராட்டம் வெடிக்க இருக்கிறது. அதை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக இருக்கிறோம். சிறுவனின் தந்தையை தேடுவதற்கான நேரம் எங்களிடம் சிறிதும் இல்லை."
காவல் நிலையத்தை விட்டு வந்ததும் ஒரு விடுதியில் அறையெடுத்து சிறிது நேரம் இளைப்பாறினோம். பிறகு மீண்டும் தேடல் வேட்டையில் இறங்கினோம்.
ராம் - "இங்கு மதுபானக் கடைகள் எங்கிருக்கிறது என்று விசாரியுங்கள்."
எனக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது.
"என் அப்பா 24 மணி நேரமும் போதையில் தான் இருப்பார்."
"சரி நான் சென்று விசாரிக்கிறேன். ஆனால் நீ அது போன்ற இடங்களுக்கெல்லாம் வரக் கூடாது. அதனால் நீ இங்கேயே எனக்காகக் காத்திரு."
"நான் இதற்கு முன் பல முறை அந்த இடங்களுக்குச் சென்றிருக்கிறேன்."
"என்ன சொல்கிறாய். நீ அது போன்ற சிறுவனாகத் தெரியவில்லையே."
"என் தந்தை சில சமயம் போதையில் முதுக்கடைகளில் மயங்கிய நிலையில் இருப்பார். நான் தான் அவரை வீட்டுக்கு அழைத்து வருவேன்."
எனக்கு என் தந்தையின் நினைவு வந்தது. தன் விருப்பத்தை என் மீது திணிக்க நினைக்கும் என் தந்தை. மகனின் விருப்பம் என்னவென்றே அக்கறையே இல்லாத ராமின் தந்தை. இருவருக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.
ஒவ்வொரு மதுபானக் கடையாக ஏறி இறங்கி ஊரைச் சுற்றினோம். ஆனால் சிறுவனின் தந்தை காணவில்லை.
கடைசியாக நாங்கள் போன மதுபானக் கடையிலிருந்த ஒருவர் எங்களை கவனித்துக் கொண்டிருந்தார்.
"நீங்கள் பார்க்க கனவான் போல இருக்கிறீர்கள், சிறுவனை அழைத்துக் கொண்டு ஏன் இது போன்ற இடங்களுக்கு வருகிறீர்கள்."
"இவன் தந்தை காணவில்லை. அவருக்கு குடிப்பழக்கம் உண்டு அதனால் தேடி இங்கு வந்தோம்."
"இவன் தந்தையின் புகைப்படம் இருக்கிறதா?"
புகைப்படத்தை பார்த்தவர், "இவர் இங்கு வருவதுண்டு. தனியாகத் தான் வருவார். யாரிடமும் பேச மாட்டார். அதிகமாகக் குடிப்பார். குடித்து விட்டு நினைவு தவறி ரோட்டில் படுத்துக் கிடப்பார். ஆனால் ஒரு வாரமாக அவர் இங்குக் காணவில்லை. வேறு ஏதாவது ஊர் சென்றிருப்பாரோ என்னவோ."
"அவருக்குத் தெரிந்தவர் யாருமே இல்லையா?"
"இரவில் அவர் சில சமயம் மயங்கிக் கிடைக்கும் போது ஒரு பெண்மணி அவரை அழைத்துச் செல்ல வருவதுண்டு. அந்தப் பெண்மணி பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர். பெயர் கயல்விழி"
கிராமத்தின் விவரங்களைக் கேட்டுக் கொண்டு நாங்கள் எங்கள் விடுதிக்கு வந்தோம். அந்தப் பெண்மணியைத் தேடித் செல்வது என்று முடிவெடுத்தோம்.
அடுத்த நாள் நாங்கள் கிராமத்திற்கு ஒரு மாட்டு வண்டியில் ஏறி சென்றுக் கொண்டிருந்தோம். போகும் வழியில் ஒரு போராட்டம் நடந்துக் கொண்டிருந்தது. கூட்டத்திலிருந்தவர்கள் தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு கோஷமிட்டனர்.
"காந்தி வாழ்க!"
"ஆங்கிலேயனே இங்கிலாந்துக்கு திரும்பி செல்"
"வேண்டும் எங்களுக்கு விடுதலை"
போலீஸ் கூட்டத்தினரைக் களைந்து செல்ல ஆணையிட்டுக் கொண்டிருந்தனர். கூட்டத்தினர் நகர்வதாகத் தெரியவில்லை.
பிறகு தடியடி நடந்தது. கூட்டத்தினர் அசையாமலிருந்தனர். வண்டியிலிருந்தது நாங்கள் இறங்கினோம்.
போலீசின் அத்துமீறல் ஆரம்பித்தது. கூட்டத்தினரை நோக்கித் துப்பாக்கி சூடு நடத்தினர்.
நாங்கள் இருவரும் தப்பித்து ஓடினோம். கூட்டத்தினரும் ஓட ஆரம்பிக்க, குழப்பத்தில் சிறுவனை நான் பிரிய நேரிட்டது. ஒரு வீட்டில் எனக்கு அடைக்கலம் கொடுத்தனர்.
எனக்கு சிறுவன் என்ன ஆனானோ என்ற கவலையும், குற்ற உணர்ச்சியும் மேலிட்டது.
அடுத்த நாள் கலவரம் அடங்கிய பின் நான் வீட்டினருக்கு நன்றி தெரிவித்து விட்டு தெருவுக்கு வந்தேன்.  மக்கள் நடமாட்டம் இருந்தாலும் சகஜ நிலை திரும்பவில்லை. போலீசின் கண்காணிப்பு இன்னமும் தொடர்ந்தது.
சிறுவனைத் தேடுவதை விட்டு கிராமத்துக்குச் சென்று அவன் தந்தையைத் தேடலாம் என்று நான் கிராமத்தை நோக்கி சென்றேன்.
வண்டியில் குறுக்கிக் கொண்டு உட்கார்ந்தது அயற்சியாக இருந்தது. வழியில் ஒரு குளம் தெரிந்ததால் இளைப்பாறலாம் என்று இறங்கினேன்.
குளத்தினருகே நான் கண்ட காட்சி திகைப்பளித்தது.
ஒரு சிறுவன் நிர்வாணமாகப் படுத்துக் கிடந்ததைப் பார்த்து பதைபதைத்து ஓடினேன்.
என் உள்மனம் கூறியபடி அந்தச் சிறுவன் ராம் தான். தந்தையைத் தேடி தன்னந்தனியாக இவ்வளவு தூரம் வந்த அவன் தைரியம் ஆச்சரியமளித்தது.
அவன் வலது தோளில் குண்டு பாய்ந்து ரத்தம் வந்துக் கொண்டிருந்தது. உடலில் ஆடை இல்லாதது கண்டு நான் திகைப்பிலிருந்த போது அங்கு வந்த ஒரு மூதாட்டி தன் புடவையிலிருந்து ஒரு பகுதியைக் கிழித்து அவன் உடலின் அந்தரங்கப் பகுதிகளை மூடினார்.
நாங்கள் இருவரும் ராமை மூதாட்டியின் குடிசைக்கு தூக்கிச் சென்றோம்.
குடிசையில் மூதாட்டியின் பேரன் இருந்தான். அவனுக்கு ராம் வயது தான் இருக்கும். அவனிடம் மூதாட்டி ஏதோ சொல்ல, தன்னுடைய ஆடைகளை எடுத்து வந்தான். அதை ராமுக்கு அணிவித்தோம்.
பாட்டி மேலும் சிறுவனிடம் ஏதோ சொல்ல அவன் வெளியே சென்றான். சிறிது நிமிடங்களில் டாக்டர் ஒருவரை அழைத்து வந்தான்.
டாக்டர் அறுவை சிகிச்சை மூலம் குண்டை வெளியெடுத்து, தோளில் மருந்தைத் தடவி கட்டு போட்டார்.
அவன் சாப்பிடுவதற்கு சில மாத்திரைகள் கொடுத்தார். நாளை நினைவு திரும்பி 1 வாரத்தில் பூரண குணமடைவான் என்று கூறினார். 
நான் மூதாட்டிடம் கயல்விழி பற்றி விசாரித்தேன். அவள் இரண்டு தெருக்கள் தள்ளி தான் இருக்கிறார் என்று கேட்டதும் மனம் உற்சாகமடைந்தது.
கயல்விழி வீட்டுக்கு அழைத்துச் செல்ல நான் வேண்டியதால் பாட்டி என்னை அழைத்துச் சென்றார்., வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டிலிலுள்ள ஒரு பெண்மணியிடம் விசாரித்தோம்.
"இரண்டு மாதமாக யாரோ ஒரு ஆளைத் தன் வீட்டில் வைத்திருந்தாள். அவன் பார்க்க ஏதோ ஒரு வடநாட்டுக்காரன் போல இருந்தான். பெரும் குடிகாரன். 24 மணி நேரமும் போதையிலிருப்பான். குடிப் பழக்கத்திற்கு மதுரையில் வைத்தியம் தருகிறார்கள் என்று கேள்விப்பட்டு அவனை அழைத்துச் சென்றிருக்கிறாள். நாளை வருவார்கள் என்று நினைக்கிறான். கயல் பார்க்க கிளி போல இருப்பாள். இந்தக் குடிகாரனிடம் அப்படி என்னத்தைக் கண்டால் என்று தெரியவில்லை. அவனிடம் போய் முந்தானை விரித்திருக்கிறாள்."
அவரகள் வந்தால் அவசியம் தெரிவிக்கும்படி கூறி விட்டு மூதாட்டியின் குடிசைக்கு வந்தோம்.
சிறுவன் உறங்கி கொண்டிருந்தான். “நாளை வரை பொறுத்திரு ராம். உன் தந்தை கிடைத்து விடுவார்”, என்று மனதுக்குள் கூறிக் கொண்டேன்.
சம்பவங்கள் வேகமாக சென்றாலும் நல்ல விதமாக முடிவது நிம்மதியாக இருந்தது. 
ராமுக்கு அடுத்த நாள் நினைவு வந்தது. அவன் அருகே அமர்ந்திருந்த என்னைப் பார்த்து புன்னகை செய்தான்.
"என்னை விட்டு ஓடி விட நினைத்தீர்கள். ஆனாலும் நான் உங்களைக் கை விடவில்லை அல்லவா."
"ஆம் நீ பெரிய உபத்திரவம் தான்."
வாசலில் யாரோ வருவது பார்த்து திரும்பினேன்.
"ரசிக் நீ எப்படி இங்கே?"
வந்த நபர் எனக்குத் தெரிந்தவர் இல்லை. ஆனால் எப்படி என் பெயர் தெரிந்தது என்று வியப்புடன் நான் பார்த்துக் கொண்டிருந்தபோது சிறுவன் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான்.
"ரசிக், எப்படி நீ குண்டடிபட்டாய்? எப்படி என்னைத் தேடி வந்தாய். விபரமாக சொல்.
சிறுவன் பெரியார் ராம் இல்லை. ஆனால் எப்படி இவனுக்கும் எனது பெயர் அமைந்தது. இது ஏதோ தற்செயலாக எனக்குத் தோணவில்லை.
தன்னை அணைக்க வந்த தந்தையை சிறுவன் கைகளால் தள்ளி விட்டான். பிறகு தன் கன்னத்தில் தானே அறைந்துக் கொண்டான்.
வந்த மனிதர் ரசிக்கின் கைகளைப் பற்றி தன்னுடன் அணைத்துக் கொண்டார். சிறுவன் எதுவும் பேசாமல், கண்களிலில் கண்ணீர் வழிய உட்கார்ந்திருந்தான்.
வாசல் அருகே ஒரு பெண்மணி நிற்பதைக் கண்டேன். அவள் கயலாக இருப்பாள் என்று யூகித்து பேச்சு கொடுத்தேன்.
"இவர் உன்னுடன் தான் இருந்து வருகிறாரா?"
"ஆம்."
"இவருக்கும் உனக்கும் என்ன உறவு."
கயல் அதற்கு எதுவும் பதில் சொல்லவில்லை.
"இவருக்குத் திருமணமாகி குழந்தை வேறு இருக்கிறது. ஏன் இவருடன் தகாத உறவு வைத்திருக்கிறாய்?"
"முதலில் இவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? எப்பேர்பட்ட மனிதரின் மகன் தெரியுமா. போற்றிப் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டியவரின் நிலையைப் பாருங்கள். தேசப்பிதா காந்தியின் மகனின் கோலத்தைப் பாருங்கள். அவர் கவலைகளுக்கெல்லாம் மருந்தாக, ஆறுதலாக இருந்தது தான் என் குற்றம் என்றால் அந்தக் குற்றத்தை நான் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யத் தயார்."
எனக்குத் தலை சுற்றுவது போல இருந்தது. நான் மாற்று பிரபஞ்சத்தின் என் தந்தை மற்றும் என்னுடைய பிரதியின் முன் தான் நின்றுக் கொண்டிருக்கிறேன் என்னும் உண்மையை ஏற்றுக் கொள்வதே கடினமாக இருந்தது.
என்னுடைய பிரதியாகிய சிறுவன் தன் உண்மையான பெயரைக் கூறாமல் ராம் என்ற கற்பனைப் பெயரை அனைவரிடமும் கூறி வந்திருக்கிறான். அதற்கான வலுவான காரணங்களை என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
இவை எல்லாவற்றையும் விட மேலாக இந்த உலகில் என் தந்தையின் நிலை ஏன் இப்ப்டி அலங்கோலமாக உள்ளது. ஒரு குடிகாரராக, குடும்பத்தின் மீது அக்கறை இல்லாத மனிதராக மாறியது எப்படி. இதைப் பார்க்கும் போது என் மனமே எவ்வளவு நடுங்குகிறது. இதை எப்படி என் தாத்தா மோகன்தாஸ் ஜீரணித்துக் கொண்டார்.
நான் பார்த்த தந்தை எவ்வளவு கம்பீரமானவர். கனவான் போல உடை அணிந்திருப்பார். ஆனால் இங்கே எப்படி ஒரு தற்குறி போல இருக்கிறார். அதனால் தான் அவரை உடனே அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போனது.
நானும் சிறுவனின் உத்தியைக் கையாள்வது என்று முடிவு செய்தேன். என் உண்மைப் பெயரைக் கூறப் போவதில்லை. நான் எங்கிருந்து வருகிறேன் என்பதையும் கூறப்போவதில்லை.
என் கடமை என்னவென்பது தெளிவானது. என் பிரதியாகிய என்னவனின் வாழ்க்கையை நான் சீரழிக்க விடப்போவதில்லை.
ஹீராலால் என் பக்கம் திரும்பி என் கால்களைப் பற்றினார்.
"ஐயா, நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றிய தெய்வம் "
நான் 51 வருடங்கள் முந்தைய காலத்திற்கு வந்திருந்ததால் என் தந்தையை விட 32 வருடங்கள் மூத்தவனாக இருந்தேன். இருந்தாலும் அவர் என் தந்தை. அவர் என் காலில் விழுவதை நான் அனுமதிக்க முடியாது.
அவர் கைகளைப் பிடித்து தடுத்தேன்.
"நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர். என் காலில் விழலாமா?"
"பெரிய மனிதர் என் தந்தை. நான் வெறும் மலம் போன்றவன். அவருக்கு அவமானத்தைத் தருபவன். உங்கள் பெயரென்ன?"
"ரஞ்சன் தாஸ்."
"உங்களிடம் ஒரு விண்ணப்பம். என் மகனை அவன் தாத்தாவிடம் சேர்த்து விடுங்கள்."
"கண்டிப்பாக செய்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. அவனோடு உங்களையும் அவரிடம் சேர்த்து விடுகிறேன். உங்கள் குடிப்பழக்கத்தையும் நீங்கள் விட வேண்டும். சம்மதமா?"
"அவர் முகத்தைப் பார்க்க கூட எனக்கு அருகதை கிடையாது. என் அருகிலிருக்கும் ஒவ்வொரு நொடியும் அவரும் என் தாயும் படும் ரண வேதனையை என்னால் தாங்க முடியவில்லை. என்னால் அவர்களைப் பார்க்க முடியாது. விட்டு விடுங்கள்."
"நான் விட்டாலும் இந்த சிறுவன் உங்களை விட மாட்டான். உங்களை தேடி மதுபானக் கடைகள் என்று இவன் வயதிற்குப் போகக் கூடாத இடங்கள் எல்லாம் சென்றிருக்கிறான். இவன் எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள். அதற்காக என்னுடன் வாருங்கள்."
ஹீராலால் சிறிது நேர மௌனத்திற்குப் பின் பேச ஆரம்பித்தார்.
"நான் வருகிறேன். ஆனால் என் வாழ்க்கையை அவர் தன் வாழ்க்கையின் தொடர்ச்சியாகப் பார்க்கிறார். என்னால் பிரம்மச்சரியம் விரதம் மேற்கொள்ள முடியாது. ஆசிரமத்தின் ஊழியனாக இருக்க முடியாது. வீதியில் இறங்கி கொடி ஏந்தி போராட்டங்கள் செய்ய முடியாது. சிறைக்குச் செல்ல முடியாது. நான் மேல்நாடு செல்ல வேண்டும். சட்டம் படிக்க வேண்டும். இங்கிலாந்தில் வழக்கறிஞராக இருக்க வேண்டும். எனக்கென்று வேறுபட்ட ஒரு வாழ்க்கை தேவைப்படுகிறது.  என் தந்தை இதெற்கெல்லாம் ஒப்புக் கொள்ள மாட்டார்."
"நான் அவரை சம்மதிக்க வைக்கிறேன். என்னால் அது முடியும் நம்புங்கள்."
ஹீராலால் தயக்கத்துடன் சம்மதித்தார். அடுத்த வாரம் மோகன்தாஸ் மதுரை வருகிறார் என்பது அறிந்து அவரை சந்திக்க முடிவு செய்தோம்.
இந்திய அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த காலகட்டம் அது. கோகலேவின் மரணத்திற்குப் பின் காங்கிரசில் காந்தி கோலோச்சிய நேரம் அது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு எதிராக சத்தியாகிரக போராட்டத்தை காந்தி அறிவித்திருந்தார். கிலாபத் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் முஸ்லிம்களும் அவரைக் கொண்டாடினர். அப்போது காங்கிரசில் ஜின்னாவும் மதிக்கத்தக்க தலைவராக இருந்தார். அவர் காந்தியடிகளின் சத்தியாக்கிரக போராட்டத்தை எதிர்த்தார்.அவர் நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சிக்குள் ஆதரவு இல்லை. அதனால் அவர் காங்கிரசை விட்டு விலகினார்.
சுருக்கமாக சொல்லப் போனால் இந்தியா-பாகிஸ்தானின் பிரிவினைக்கான வித்து அந்த வருடத்தில் இடப்பட்டது.
நாங்கள் மூவரும் கிளம்பி மதுரை வந்தடைந்தோம் அடுத்த நாள் காந்தியடிகள் மதுரை வந்தார். அவரை சந்திப்பதற்காக அவர் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தோம்.

காந்தியடிகளுடன் அவர் மனைவி கஸ்தூரிபாவும் இருந்தார். ஹீராலால் தயங்கி வாசலிலேயே நின்றார். நானும் சிறுவனும் அவர் அறைக்குச் சென்றோம்.
சிறுவன் ரசிக்கைப் பார்த்ததும் காந்தியடிகள் முகம் மலர்ந்தது.
"சேட்டைக்கார சிறுவனே, எங்களை எல்லாம் தவிக்க விட்டு நீ எங்கு சென்று விட்டாய்."
சிறுவன் நடந்தது எல்லாம் காந்தியடிகளிடம் கூறினான்.
"உன் அப்பா ஹீராலால் எங்கே."
தன் மகனைத் தேடி வாசலுக்கே சென்று விட்டார்.
"ஹீரா, உன் மனைவி, குழந்தைகள் பற்றிக் கவலைப்படாமல் ஏன் இப்படி குறிக்கோளற்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறாய்?"
ஹீரா தன் தந்தை மற்றும் தாயின் காலில் விழுந்து வாங்கினார்.
"அப்பா, உங்களுக்கு பிடித்த ஒரு பொருளை பரிசாக வாங்கி வந்திருக்கிறேன்."
தான் பரிசாக வாங்கியிருந்த ஒரு கடிகாரத்தை தன் தந்தையின் கைகளில் காட்டினார்.
"மிக நன்றாக இருக்கிறது. இதெற்கெல்லாம் பணம் எப்படி கிடைத்தது. எதவாது தொழில் செய்கிறாயா?"
"இந்த பெரியவர் பணத்திற்கு உதவி செய்தார். என்னையும் சிறுவன் ரசிகையயம் உங்களிடம் சேர்த்து வைத்தது இவர் தான்."
"ஐயா. உங்களுக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன். அப்படியே ஹீராவை என்னுடனே தங்கிவிட சொல்லுங்களேன். உங்கள் மீது அவன் பெரிதும் மதிப்பு வைத்திருக்கிறான். நீங்கள் வற்புறுத்தி சொன்னால் கேட்பான்."
"உங்கள் மகன் இங்கிலாந்தில் படித்து அங்கே வக்கீல் தொழில் செய்ய விரும்புகிறார். எனக்கும் அது நல்ல யோசனையாகத் தான் தெரிகிறது."
"ஐயா, நான் நாட்டு மக்களிடம் படோபடமான வாழ்க்கையைத் துறக்க வேண்டுகோள் விடுக்கிறேன். எளிமையாகவும், உண்மையாகவும் வாழ்வதே உன்னதம் என்று அறிவியுறுத்துகிறேன். அப்படி இருக்கும்போது என் மகனை வெளிநாட்டில் ஆடம்பரமாக வாழ அனுமதி தந்தால் மக்கள் எப்படி மதிப்பார்கள். நான் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா?"

"நாட்டின் சுதந்திரத்துக்கு போராடும் நீங்கள் மகனை உங்கள் விருப்பத்திற்கு கட்டுப்படுத்தலாமா? அவருக்கும் ஆசைகள் கனவுகள் இருக்கும் அல்லவா?"
"என்ன செய்ய. தேசப்பிதா என்னும் முற்கிரீடத்தின் பின் விளைவுகள் இது."
காந்தியடிகளை சந்திக்க உள்ளூர் தலைவர்கள் வந்ததால் அவர் நகர்ந்து விட கஸ்தூரிபா என்னிடம் தனியாகப் பேச அழைத்தார்.
"ஹீராவின் குடிப்பழக்கம் இன்னும் போகவில்லையா?"
"சில நாட்களாக குடிப்பழக்கத்தை நிறுத்தியிருக்கிறார். இது தொடர அவர் பெற்றோர்களான உங்கள் கையில் தான் இருக்கிறது."
கஸ்தூரிபா கேள்வியுடன் என்னை நோக்க நான் விளக்கினேன்.
"தந்தை, மகன் இருவரும் பிடிவாதமாக இருக்கிறார்கள். நீங்கள் தான் மகனுக்காக உங்கள் கணவரிடம் போராட வேண்டும்."
"பாபு சொல்வதை இந்த நாடே மதிக்கிறது. நான் அவர் வார்த்தைகளை தட்டலாமா. ஒரு தாயாக நான் என்ன செய்ய முடியும்."
"என் தாய் நான் சிறு வயதாக இருக்கும் போதே இறந்து விட்டார். என்னை வளர்த்தது என் பாட்டி. என் பாட்டி உங்கள் நிலையில் இருந்தால் என்ன செய்திருப்பார் தெரியுமா. தன் மகனுக்காக கணவனிடம் சண்டை போட்டிருப்பார். கணவனை விட்டு பிரியக் கூட தயங்க மாட்டார். நீங்கள் ராஜாஜியிடம் பேசி ஹீராவை இங்கிலாந்து அனுப்ப முயற்சிக்கலாமே."
"என் கணவர் சொல் மீறி எனக்கு வேறு எதுவும் இல்லை."
"இந்த செயலின்மை உங்கள் மகனின் வாழ்க்கையை மட்டுமல்ல இந்த நாட்டின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.  உங்கள் மகன் மட்டும் சுதந்திரமானவராக இருந்தால் அரசியலிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவார். பாபுவிடம் முரண்பட்டவர்களில் எல்லாம் ஒன்றிணைப்பார். இந்த தேசம் பிளவுபடாமல் வலிமையானதாக மாற்றுவார். இது நடக்க உங்கள் கைகளில் தான் இருக்கிறது. நீங்கள் உங்கள் ஆன்மாவின் குரலைக் கேட்டு ஒரு தீர்க்கமான முடிவெடுத்தால் அது உங்கள் குடும்பம் மற்றும் தேசத்தை பெரிதளவு மாற்றும்."
"பெரிய வார்த்தைகள் கூறுகிறீர்கள், ஒரு மாபெரும் மனிதரின் மனைவி என்பதைத் தவிர சொல்லிக்கொள்ளும்படி எந்தத் திறனும் என்னிடம் கிடையாது. பாபு சொன்னால் அதில் கண்டிப்பாக பொருள் இருக்கும். அவர் சொல்படி நடக்க ஹீராவிடம் அறிவுறுத்துங்கள்."
என் முயற்சி பலனளிக்காதலால் என் கடைசி வேண்டுகோள் ஒன்றை கஸ்தூரிபாவிடம் கோரினேன்.
"சிறுவன் ரசிக்கை என்னிடம் அனுப்பி வையுங்கள். அவனுக்கு அறிவியல் மீது பெரிதும் ஆர்வம் இருக்கிறது. அவனுக்கு நான் குருவாக இருக்க விரும்புகிறேன். உங்கள் குடும்பத்தினர் அனைவரிடமும் பேசி நீங்கள் தான் சம்மதம் வாங்க வேண்டும்."
"அவன் உயிரையே காப்பாற்றியவர் நீங்கள். கண்டிப்பாக நான் இதை செய்கிறேன்."
அப்போது ஓர் சிறு பெண் ரசிக்கை தேடி வந்தாள்.
"ரசிக்  இவ்வளவு நாளாக  எங்கிருந்தாய். நீ இல்லாது விளையாட ஆளில்லாமல் சோர்வாக இருந்தது."
"டினா, நான் தனியாக எங்கெல்லாம் சென்றேன் தெரியுமா?"
சிறுவன் தன் தீரத்தை டினாவிடம் பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தான்.
நான் டினாவின் முகத்தை பார்த்த வண்ணம் இருந்தேன். அச்சாக அப்படியே  இருக்கிறாள். அவள் அருகில் சென்று நெற்றியில் முத்தமிட்டேன். என் கண்களில் கண்ணீர் வழிந்தது.
அவள் என் கண்ணீரை துடைத்தாள்.
"உங்களை நான் எங்கேயோ பார்த்தது போன்று ஒரு உணர்வு."
டினா உன்னைத் தேடி இந்த புது உலகிற்கு வந்தேன். உன்னுடன்  வாழ முடியும் என்று ஒரு சிறு நப்பாசை இருந்தது. ஆனால் ஒரு சிறு தேவதையாக அல்லவா நீ இருக்கிறாய். அவளை நான் அள்ளி அணைத்துக் கொண்டேன்.
சிறுவனும் டினாவும் விளையாட சென்று விட்டனர்.
கஸ்தூரிபா தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றினார். சிறுவனை என் உலகிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தேன். அதற்கு முன் எனக்கு ஒரு வேலை இருக்கிறது.
நானும் சிறுவனும் கப்பலில் ஜெர்மனிக்குப் பயணமானோம்.
அங்கு ஐன்ஸ்ட்டினை சந்தித்தோம். இயற்பியலில் பெரும் புரட்சிகள் நிகழ்ந்துக் கொண்டிருந்தது. ஐன்ஸ்ட்டின் ரிலேட்டிவிட்டி கோட்பாட்டைக் கண்டுபிடித்தார். அதே நேரம் போகர் என்னும் விஞ்ஞானி குவாண்டம் கோட்பாட்டைக் கண்டுபிடித்தார். இணைப் பிரபஞ்சங்கள் இருக்கும் சாத்தியக்கூறை குவாண்டம் கோட்பாட்டின் மூலமே முதன் முதலில் பேசப்பட்டது. ஆனால் இவ்விரு கோட்பாடுகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருந்தது. ரிலேட்டிவிட்டி கோட்பாடு நட்சத்திரங்கள், கோள்கள் போன்ற பெரும் பொருள்களுக்கும் மட்டுமே பொருந்துவதாக இருந்தது. நுண்ணிய துகள்களின் செயல்பாட்டை விளக்குவதற்கு குவாண்டம் இயற்பியல் பொருந்தியது. ஆனால் குவாட்டம் இயற்பியல் பெரும் பொருட்களின் செயல்பாட்டை விளக்குவதில் தோற்றது.
இவ்விரு கோட்பாட்டை இணைக்கும் ஒரு கோட்பாட்டைக் கண்டு பிடிப்பதில் போகரும் ஐன்ஸ்ட்டினும் பெரும் விவாதங்கள் நடத்தி வந்தனர்.
நான் இவ்விரு கோட்பாடுகளை இணைக்கும் கோட்பாடான ஸ்ட்ரிங் கோட்பாட்டைக் கண்டுபிடித்திருந்தேன். அது பற்றிப் பேசவே ஐன்ஸ்ட்டினை சந்திக்கச் சென்றேன்.
தன்னை சந்திக்க இந்தியாவாலிருந்து ஒருவர் வந்திருக்கிறார் என்பதை கேட்டு ஐன்ஸ்ட்டின் ஆச்சரியத்தில் இருந்தார். என்னுடன் வந்த சிறுவன் காந்தியின் பேரன் என்பது அவரை மேலும் வியப்பிலாழ்த்தியது.
காந்தியைப் பற்றி என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டார். பிறகு அறிவியல் மீது எங்கள் உரையாடல் சென்றது.

என்னுடைய ஸ்ட்ரிங் கோட்பாட்டைப் பற்றி ஆர்வத்துடன் கேட்டார். அது குறித்த ஆவணங்களை பெற்றுக் கொண்டார்.
ஒரு வாரம் கழித்து என்னை சந்திக்க அழைத்தார்.
"உங்கள் ஸ்ட்ரிங் கோட்பாடு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும், அதை நிரூபிப்பதற்கான ஆராய்ச்சிகள் செய்வது மிகவும் கடினம். அதனால் உங்கள் கோட்பாட்டின் மூலம் ஒரு பயனும் இல்லை."
"எனக்கு ஒரு வருடம் கொடுங்கள். ஸ்ட்ரிங் தியரியின் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஒரு இயதிரத்தை நான் நிர்மாணிணிக்கிறேன். அதன் மூலம் இணைப் பிரபஞ்சங்களுக்கு நாம் பிரயாணம் செய்யலாம்."
ஐன்ஸ்ட்டின் தயக்கத்துடன் இதற்கு ஒப்புக் கொண்டார்.
ஒரு வருடம் நான் ஜெர்மனியிலேயே கழித்தேன். சிறுவன் ரசிக்கின் அறிவியல் ஆர்வத்தையும் நான் வளர்த்தேன். ஐன்ஸ்ட்டின் மூலம் தலை சிறந்த விஞ்ஞானிகள் பலரையும் சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
என் இயந்திரம் தயாரான நிலையிலிருந்து.
அதன் செயல்பாட்டைக் காண போகர், எய்ன்ஸ்ட்டின் போன்ற பல விஞ்ஞானிகள் வந்திருந்தனர்.
"நீங்கள் இதன் மூலம் ஒரு இணைப் பிரபஞ்சத்திற்கு செல்லப் போகிறீர்கள் என்று நினைக்கிறேன். திரும்பி வருவீறீர்கள் அல்லவா?"
"தற்போதைக்கு அந்த எண்ணம் இல்லை."
"அப்படியானால் உங்கள் கருத்து உண்மை என்று எப்படி தெரிந்துக் கொள்வது."
"இயந்திரம் இங்கேயே தானே இருக்கப் போகிறது. வேண்டுமானால் நீங்கள் நான் சென்ற உலகிற்கு வரலாமே."
நானும் சிறுவனும் இயந்திரத்திற்குள் நுழைந்தும். எங்கள் மீது கதிர்கள் பாய்ந்தது. நாங்கள் இருவரும் மறைந்தோம்.
நான் என் உலகிற்குத் திரும்பினேன். சிறுவன் நடந்தது எதுவும் புரியாமல் வியப்பிலிருந்தான்.
நான் வந்த சில நொடிகளில் என் தந்தையிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது.
வெகு நாட்களாக பேசாததால் அவர் சற்று பயந்திருந்தார். நான் நலமாக இருப்பது அறிந்து நிம்மதியானார்.
தந்தையின் மீதிருந்த என் மதிப்பு பன் மடங்கு உயர்ந்தது. தாத்தாவுக்கும், அவருக்குமிடையே இருந்த மோதலில் தாத்தாவே சரி என்று இது வரை நான் நினைத்திருந்தேன். இணைப் பிரபஞ்சம் சென்று அங்கிருந்த தந்தையின் நிலையைக் கண்டது என் எண்ணத்தை மாற்றியது. என் தந்தை சுதந்திரமாக இருந்தால் எவ்வளவு சாதித்திருப்பார் என்று தெளிவானது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை தடுத்தது, இந்தியாவை பொருளாதார உச்சிக்கு செலுத்தியது, இது அனைத்துக்கும் என் தந்தையே காரணம். தாத்தாவுக்கு நிகரான வரலாற்றுப் புருஷர் என் தந்தை.
சிறுவன் ரசிக் வந்த அடுத்த நொடியிலேயே சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்தான். நூலகத்திற்குச் சென்று என் புத்தகங்கள் அனைத்தையும் புரட்ட ஆரம்பித்தான்.
என் எதிர்காலம் என்னவென்பது கண்கள் முன்னே தெளிவாகத் தெரிந்தது.
அடுத்த சில மாதங்கள் ஆராய்ச்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். என்னுடைய இயந்திரம் மாற்று பிரபஞ்சத்திற்கு 53 ஆண்டுகள் பின்னே தான் சென்றது. எனக்கு அந்த பிரபஞ்சத்தின் இன்றைய கால கட்டத்திற்கு செல்ல ஆவலாக இருந்தது. அந்த பிரபஞ்சத்தில் இந்தியாவிற்கு சுதந்திரம்  கிடைத்திருக்குமா, அங்கே என் தாத்தா மற்றும் தந்தைக்கு என்னவாயிற்று என்பதையல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  அதனால் மாற்று பிரபஞ்சத்தின் எந்த காலகட்டத்திற்கு செல்லும் வண்ணம் என் இயந்திரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆராய்ச்சியில் இறங்கினேன். சிறுவன் ரசிக் நான் ஆராய்ச்சியில் இருக்கும் போது ஏதாவது படித்துக் கொண்டிருப்பான். அவனுக்கு தினமும் 2 மணி நேரம் கணிதம் மற்றும் அறிவியல் சொல்லிக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.
என் தந்தையிடம் அவ்வப்போது தொடர்பில் இருந்தேன். அவர்  கட்சி தேர்தலில் படு தோல்வி அடைந்திருந்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ரஞ்சித் பிரதமராகியிருந்தான்.
7  மாதங்கள் கழிந்து ஒரு நாள் அப்பா என்னை தொலைபேசியில் அழைத்தார். ரஞ்சித் ஒரு பெரும் ஊழல் புகாரில் மாட்டியிருந்தான். நீதிமன்றம் அவன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தீர்ப்பு அளித்திருந்தது. அப்பாவின் குரலில் பழைய உற்சாகம் தெரிந்தது. மீண்டும் தேர்தலை அறிவிக்க அவர் ஒரு போராட்டம் நடத்தவிருப்பதாகக் கூறினார். என்னை இந்தியாவிற்கு வந்து அவருக்கு உதவும்படி வற்புறுத்தினார். நான் அவருக்கு தெளிவான வாக்குறுதி எதுவும் அளிக்கவில்லை.
என் ஆராய்ச்சி முடிவடைந்தது. இன்று நான் சிறுவன் ரசிக்குடன்  மாற்று பிரபஞ்சத்திற்கு  செல்வதென முடிவு செய்திருந்தேன். அதற்கு முன் என் தந்தையிடம் பேச வேண்டும் என்று தோன்றியதால் தொலைபேசியில் அழைத்தேன்.
அப்பா - "ரஞ்சித் எமெர்ஜென்சி சட்டம் அறிவித்து விட்டான். எதிர்க்கட்சியினர் பலர் மர்மமான முறையில் இறந்து விட்டனர். என் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம். உன்னையும்  உளவுத்துறை மூலம் கொல்ல முடிவு செய்திருப்பதாக நான் அறிந்தேன். என்னை பற்றிக் கவலைப்படாதே நீ ஜாக்கிரதையாக  இரு."
அப்பா பேசிக் கொண்டிருக்கும்போதே துப்பாக்கி சத்தம் கேட்டது.
"ரசிக் பத்திரம்" - என்பது தான் அவர் கூறிய கடைசி வார்த்தைகள். தொலைபேசியின் மறுமுனை துண்டிக்கப்பட்டது.
என் தந்தையின் மரணம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  ஏதோ ஒரு குற்ற உணர்வு என்னை உலுக்கிக் கொண்டிருந்தது. 27  ஆண்டுகள் முன்னரே அப்பாவின் அழைப்பை ஏற்று அவருக்கு துணையாக அரசியலில் நான் ஈடுபட்டிருந்தால் இந்த நிலை அவருக்கு வந்திருக்குமா? அவர் எடுத்த பல தவறான முடிவுகளை நான் எடுத்துக் கூறி மாற்றியிருக்க முடியுமா? என்றெல்லாம் சிந்தனை சென்றது
எனக்கு உயிர் வாழ்வதில் ஆர்வம் குறைந்தது. மாற்று பிரபஞ்சத்திற்கு செல்ல நான் செய்த முடிவை மாற்றினேன். என் மரணத்தை எதிர்கொள்ள தயார் ஆனேன்.  ஆனால் சிறுவன் ரசிக்கை காப்பாற்ற வேண்டும். அவன் உலகிற்கு செல்லப் போகிறான் என்று அவனுக்கு தெரியப்படுத்தினேன்.  தன் குடும்பத்தினரை பார்க்கப்போகிறோம் என்பதை உணர்ந்து அவன் இதை உற்சாகமாக ஏற்றுக் கொண்டான். அவனை இயந்திரத்தில் நிற்க வைத்தேன். கதிர்கள் பாய அவன் அங்கிருந்து மறைந்தான்.
அதன் பிறகு அவ்விடம் அமைதியானது. எனக்கு நான் மட்டுமே, வேறு யாரும் இல்லை என்ற உண்மை வலித்தது. அப்போது தான் என் வாழ்க்கையை கதையாக எழுத வேண்டும் என்று தோன்றியது. மூன்று பகுதிகளாக என் கதையை எழுத முடிவு செய்தேன்.
இரண்டு நாட்களாக என் கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். முதல் இரண்டு பகுதிகளை நான் வசித்த இரண்டு வீடுகளில் மறைத்து வைத்தேன்.
இன்று தான் மூன்றாவது பகுதியை ஆரம்பித்தேன். நேரம்  போனது தெரியாமல் எழுதினேன். கதை முடியும் தருவாயில் இருக்கிறது.
நேரம் நள்ளிரவை நெருங்கியது. வெளியே யாரோ கதவை தட்டு ம் சத்தம் கேட்டது. என் முடிவு நெருங்குவதை நான் மனதில் உணர்ந்தேன். கதவை உடைத்து ஒருவன் உள்ளே வந்தான். அவன் கையில் துப்பாக்கி இருந்தது. நான் அவனை ஒரு கணம் பார்த்தேன். அவன் முகம் உணர்ச்சியற்ற கல் போல இருந்தது. நான் எழுதுவதை தொடர்ந்தேன். வந்த மனிதன் துப்பாக்கியை இயக்கினான்.
ஒரு தோட்டா என் நெற்றிபொட்டை நோக்கி சீறி வருகிறது.
பட்.
                           மூன்றாம் கதை முற்றும்
கதை முடிந்தவுடன் பேச வார்த்தைகளற்று இருவரும் சிறிது நேரம்  மெளனமாக இருந்தனர்.
ஜென்னி - "நம் முதல் பிரதமர் ஹீராலாலையும் அவர் குடும்பத்தினரையும் ரஞ்சித் தான் கொன்றிருக்கிறான்.
ரெமோ - "ஆம்."
ஜென்னி - "எத்தனை பயங்கரமான உண்மை. இதை நாம் உலகிற்கு சொல்லலாமா?"
ரெமோ - "அதன் பின் நாம் உயிருடன் இருக்க முடியாது."
ஜென்னி - "ரசிக் மாற்று பிரபஞ்சம் சென்றது, அங்கும் நம்  போன்ற இந்தியாவைக் கண்டது, தன்னுடைய பிரதியான சிறுவன் ரசிக்கை சந்தித்து அவனை நம் உலகிற்கு கொண்டு வந்தது; இது எல்லாமே எதோ ஒரு சைன்ஸ் பிக்ஷன் படம் பார்த்தது போல இருக்கிறது. இதுவெல்லாம் உண்மையாக இருக்குமா."
ரெமோ - "எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. முதல் கதையில் நம் உலகின் ரசிக் சிறுவனாக இருக்கும் போது தன் தந்தையைத் தேடி வீட்டை விட்டு போகிறான். ஒரு பெரியவரை சந்தித்து, அவர் உதவியுடன் தன் தந்தையை கண்டு பிடிக்கிறான். மூன்றாம் கதையில் ரசிக்  மாற்று உலகம் செல்கிறார். அங்கு சிறுவன் ரசிக்கை சந்திக்கிறார். அதன் பிறகு முதல் கதையில் நடந்த நிகழ்வுகள்  அப்படியே மாற்று பிரபஞ்சத்தில் நடக்கிறது. முதல் கதையில் ரசிக்கிற்கு பெரியவர் செய்த உதவியை மாற்று பிரபஞ்சத்தில் நம்  உலகின்  ரசிக் செய்கிறார். இரண்டு உலகில் நடந்த சம்பவங்களும் ஒரே விதமாக இருக்கிறது. இது எவ்வாறு சாத்தியம்."
ஜென்னி - "நம் பிரபஞ்சத்தை ஒத்த பிரபஞ்சங்கள் பல இருக்கலாம். இங்கு நடக்கும்  சம்பவங்கள்  அங்கும் நடக்கலாம் என்று தான் ரசிக் முதலிலேயே சொல்லியிருந்தாரே."
ரெமோ - "அப்படி ஆனால் முதல் கதையில் வந்த பெரியவர் யார்"
ஜென்னி - "அவர் வேறு ஏதோ மூன்றாவது பிரபஞ்சத்திலிருந்த வந்த ரசிக்காகத் தான் இருக்க வேண்டும்."
ரெமோ - "நம்புவதற்கு மிகவும் கஷ்டமாகத் தான் இருக்கிறது. ஆனால் இரு பிரபஞ்சங்களிலும் நடந்த நிகழ்வுகள் இறுதியில் மாற ஆரம்பித்ததை கவனித்தாயா?"
ஜென்னி - "ஆம் நம் பிரபஞ்சத்தின் கஸ்தூரிபாய் தன் கணவரை எதிர்த்து குரல் கொடுக்கிறார். அதனால் குடிகாரனாக இருந்த ஹீராலால் பெருந்தலைவராகிறார். ஆனால் மாற்று பிரபஞ்சத்தின் கஸ்தூரிபாய் கணவர் சொல்லே மந்திரம் என்று இருந்ததால் ஹீராலால் குடிகாரராகவே தொடர்கிறார். பெண் சக்தி எவ்வளவு வலியது என்று இப்போது புரிகிறதா."
ரெமோ - "எனக்கு ஒரு ஆசை. அந்த மாற்று பிரபஞ்சத்திற்கு சென்று அங்கிருக்கும் தற்போதைய நிலையை பார்க்க வேண்டும் என்று மனம் துடிக்கிறது."
ஜென்னி - எனக்கும் தான். இவ்விடம் ரசிக்கின் ஆராய்ச்சி கூடம் என்பதால் அந்த இயந்திரம் இங்கு எங்கேயோ தான் இருக்கும்."
இருவரும் அவ்விடத்தை அலசிப் பார்த்தனர். ஒரு அறையில் கட்டில் இருந்தது. ரெமோ கட்டிலை நகட்டியதும் தரையில் இரும்பினால் செய்த ஒரு கைப்பிடி தெரிந்தது. அதை இழுத்ததும் கீழே ரகசிய அறைக்கு செல்லும் படிகளைப்   பார்த்தனர். ரெமோ படிகளில் இறங்க ஜென்னி அவனைப் பின் தொடர்ந்தாள்.
கீழே இருந்த  பெரிய அறையில்  ஒரு வினோதமான  இயந்திரத்தைக் கண்டனர் .  இருவரும் அந்த இயந்திரத்திற்குள் நுழைந்தனர். அதை எப்படி இயக்குவது என சிறிது நேர முயற்சிக்குப் பின் புரிந்தது.
ரெமோ ஒரு பொத்தானை அமுக்க, கதிர் வெளிச்சம் பாய, அவர்கள் இருவரும் மறைந்தனர்.

                               மாற்று பிரபஞ்சம்
                                      வருடம் 2017

ஜென்னியும் ரெமோவும் தாங்கள் வந்த புது உலகை வியப்புடன் பார்த்த வண்ணம் தெருக்களில் அலைந்தனர்.
ரெமோ - "நாம் வந்த வருடம் 2014 . இடம் டெல்லி  நகரம் ."
ஜென்னி - "ஆம். நாம் படித்த ரசிக்கின் மூன்றாவது கதையின் மூலம்  இந்த உலகில் 1922  ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுகள் தெரிந்தது. அதன் பின் நடந்த சரித்திரத்தை எப்படி அறிந்து கொள்வது."
ரெமோ - "புத்தகங்கள் மூலமாகத் தான்."
இருவரும் ஒரு புத்தகக் கடையில் சரித்திர புத்தகங்கள் பலவற்றை அள்ளிக் கொண்டு ஒரு ஹோட்டல் அறைக்கு சென்றனர். புத்தகங்கள் படிப்பதில் தங்கள் முழு நேரத்தையும் செலவிட்டனர்.
ரெமோ - "ஹீராலால் இந்த உலகில் வெறும் குடிகாரகாவே இருந்திருக்கிறார்."
ஜென்னி - "அவர் தாயாரின் தயக்கம், கணவரை எதிர்த்து போராடாது ஒரு உலகின் சரித்திரத்தையே மாற்றியிருக்கிறது பார்த்தாயா."
ரெமோ - "1922  ஆம் ஆண்டு வரை இரு உலகின் சரித்திரமும் ஒன்றாகத் தான் இருந்திருக்கிறது. அதன் பின் காந்தி சுதந்திர போராட்டத்தின் இறுதி வரை செயல்பட்டது, அவர் சுட்டுக் கொல்லப்பட்டது, முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி ஏற்றது, காங்கிரஸ் ஏறக்குறைய 50  ஆண்டுகள் பதவியில் இருந்தது என்று இந்த உலகின் சரித்திரம் நம் பிரபஞ்சத்திலிருந்து மாறியிருக்கிறது. அதற்கு ஒரே காரணம் கஸ்தூரிபாய் தான்."
ஜென்னி - "வந்ததிலிருந்து ஹோட்டல் அறையிலேயே அடைந்து கிடக்கிறோம். சற்று தெருக்களில் தான் நடந்து செல்வோமே."
இருவரும் தெருக்களில் சுற்றினர். ஒரு கடை முன் பெரும் கூட்டத்தைப் பார்த்து இருவரும் நின்றனர். கடையிலிருந்த டிவியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்து கொண்டிருந்த கிரிக்கெட் மாட்ச் ஒளிபரப்பு செய்ததை கூட்டத்தினர் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைய, கூட்டத்தினர் கோபத்தில் கத்திக் கொண்டே கலைந்தனர். அவர்கள் பேசியதை ரெமோவும் ஜென்னியும் கவனித்தனர்.
"எனக்கு வரும் கோபத்தில் பாகிஸ்தான் என்ற நாடே இல்லாத வண்ணம் செய்ய வேண்டும் போல இருக்கிறது."
"பாகிஸ்தான் என்ற நாடே இருந்திருக்காது. எல்லாம் அந்த காந்தியால் தான்."
"காந்தி மட்டுமா காரணம். நேருவும் தான். நேரு மட்டும் பிரதமராகமல் இருந்தால் நாம் எப்போதோ வல்லரசாகியிருப்போம்."
"கவலைப்படாதே. மோடி நம் கனவை எல்லாம் நனவாக்குவார்.  இன்னும் சில வருடங்களில் காங்கிரஸ் என்ற கட்சியே இருக்காது."
அவர்கள் சென்ற பின் ஜென்னி ரெமோவைப் பார்த்து சிரித்தாள்.
ரெமோ - "இவர்களுக்கு தாங்கள் கிடைத்ததின் அருமை புரியவில்லை. நம் உலகில் இப்போதைய நிலை சர்வாதிகாரம் தான். ஆனால் இங்கு ஜனநாயகமும் சுதந்திரமும் நிலைத்து இருக்கிறது. அதற்கு காரணம் நேரு, காந்தி போன்ற தலைவர்கள் தான். தங்களுடைய சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் அருமை இவ்வுலகத்தினருக்குத் தெரியவில்லை."
ஜென்னி - "ரெமோ. நான் ஒன்று சொல்லவா?"
ரெமோ - "நீ என்ன சொல்ல வருகிறாய் என்று யூகித்து விட்டேன். இங்கேயே, இந்த உலகிலேயே இருந்து விடலாம் என்பது தானே."
ஜென்னி - "ஆம். இந்த உலகின்   சுதந்திரக் காற்றை, மக்களின் மகிழ்ச்சியான முகங்களை பார்த்த பின் நம் உலகிற்கு எப்படி செல்ல முடியும். மேலும் சிறுவன் ரசிக் இந்த உலகிற்கு திரும்ப வந்து விட்டார் அல்லவா. அவரை நாம் தேட வேண்டும்."
ரெமோ - "ஆம் நானும் அதைத் தான் நினைத்தேன்."
ரெமோ ஜென்னியின் இடுப்பை அணைக்க, ஜென்னி அவன் தோளில் சாய, இருவரும் ஒரு புதிய எதிர்காலத்தை, ஒரு புதிய தொடக்கத்தை, ஒரு புதிய விடிவை நோக்கி நடந்தனர்.
                            முற்றும்