Saturday, April 12, 2025

இணைந்த உலகம்

 












                                                    இணைந்த உலகம்

                                                சத்திஷ் ராஜமோகன்








































 











                                                   இணைந்த உலகம்



என்றோ ஒரு யுகத்தில், வேறு எங்கோ ஒரு பிரபஞ்சத்தில், பூமி என்னும் கிரகத்தில் மானுட குலம் தழைத்திருந்தது. அக்கிரகத்தில்  மூன்று நாடுகள் - யுதோபியா நாடு, மகரநாடு, லாமா தேசம் என்ற  பெயர் கொண்டிருந்தன.  யுதோபியா நாடு - நீர், மகரநாடு - அக்னி,  லாமா தேசம்  - காற்று என்ற அம்சங்கள் கொண்டிருந்தன.  


இனி கதைக்குள் நுழைக.


                                                        பகுதி -  1

                                                       மகர தேசம் 


வெண்மேகங்களால் சூழப்பட்டு, ஓங்கி உயர்ந்து, முகில்மலை செருக்குடன் நின்றுக் கொண்டிருந்தது. வருடம் முழுதும் இம்மலை மேகங்களைத்  தன் கிரீடமாக  அணிந்திருக்கும். மலையின் உச்சியில் மகர நாட்டு மக்களின்  முதற் தந்தையாகிய  பூரிசிவஸின் ஆலயம் இருந்ததது. 


மலை குறித்தும் இவ்வாலயம் குறித்தும் பல தொன்மங்கள் மக்களிடையே உலவி வந்தது. தியானத்திலிருந்த ஆதிக்கடவுளின்  சிறு சலனத்தால் இப்பிரஞ்சம் மலர , பல கோடி நட்சத்திரங்கள் உதிக்க, பூமி என்னும் கிரகம் உருவாகியது. ஆதிக்கடவுள் இமையின் ஒரு சிறு முடி உதிர்ந்து  முகில்மலையாக மாறியது. முதல் மனிதனாகிய  பூரிசிவஸ் இம்மலையின் ஒரு குகைக்குள் பிறந்தான். அவன் வயது முதிர்ந்து, மலையின் அடிவாரத்தில் இருந்த அம்பிகையின்  வருகையை எதிர்பார்த்துத்  தனிமையில் வெம்பினான். ஒரு நாள் பேரிடியுடன் மழை பெய்ய, மேகங்கங்களின் புகை மூட்டத்திலிருந்து அம்பிகை பொன் மயிலாய் அவன் முன் தோன்றினாள். இருவரும் பல நூறாண்டுகள் வாழ்ந்து, பல புதல்வர், புதல்விகள் பெற்று மகர தேசத்தில் மனித இனத்தைப் பெருக்கினர்.


சாரை சாரையாக மக்கள் முகில்மலை மீது நடந்துச் சென்றுக் கொண்டிருந்தனர். வருடந்தோறும்  பூரிசிவஸ் ஆலயத்தில் நடக்கும் உற்சவத்திற்காக மக்கள் திரள் மலை மீது ஊர்ந்துக் கொண்டிருந்தது. பாதை பெரும் மரங்களால் அடர்ந்து காட்டுக்குள் செல்லும் உணர்வை அளித்தது. அம்மரங்களிலிருந்து இலைகளும் பூக்களும் உதிர்ந்து பாதையை மிருதுவான கம்பளமாக மாற்றியிருந்தது.


பல கிராமங்கள், நகரங்களிலிருந்து குடும்பத்துடன் படை சூழ மக்கள் ஆலயத்தை நோக்கிச் சென்றனர். பலி கொடுப்பதற்காக சேவல், கோழி மற்றும் ஆடுகளை வண்டியில் எடுத்துச் சென்றனர்.


மக்கள் சென்ற பாதையெங்கும் மலர்கள், பழங்கள் பூசை சாமான்கள் விற்பவர்கள் நிறைந்திருந்தனர். அக்கடைகள் முன் ஆடவரும் பெண்டிரும் உரத்தக் குரலில் பேரம் பேசிக் கொண்டிருந்தனர். 


திரளாகச் சென்ற மக்கள் கூட்டம் மலை உச்சியை நெருங்கியதும் அங்கிருந்த மண்டபங்களில் அமர்ந்து இளைப்பாறினர். சில மணி நேரங்களில் உயிரை இழக்கப் போகும் கோழி, ஆடுகள் மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.


பெண்கள் தாங்கள் சமைத்துக் கொண்டு வந்திருந்த உணவை  அனைவருக்கும் பரிமாறினார்கள். சைவம், புலால் இரண்டும் கலந்த உணவு வகைகள்  இருந்தது. ஆட்டின் ஈரல், மூளை, வறுத்த கோழி கறி என்று பல விதமான அசைவ உணவு அனைவரையும் கவர்ந்தது. கீரை, வேக வைத்த காய்கள், வறுத்த கிழங்கு வகைகளும் அனைவருக்கும் பிடித்தமாக இருந்தது.


வெய்யில் மிகவும் உக்கிரமாக இருந்தது. மக்கள் முகத்திலிருந்து உதிர்த்த வேர்வைத் துளிகள் சுடு நீராய் தகித்தது. மாலை நெருங்க ஆதவன் மெல்ல மறைந்தான். மேகங்களில் தன் கதிர்களைப் பாய்ச்சி விண்ணை வண்ணக் கலவையாக மாற்றிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் விண்ணைக் கருமை கவ்வியது.  இளங்காற்று லேசாக வீசி மறைந்தது. சூரியன் மறைந்தும் வெம்மை குறையவில்லை.


ஒரு பெண் தன் கையில் பாம்பை ஏந்தி மக்களிடையே நடந்து கொண்டிருந்தாள். ஓர் ஓரத்தில் நல்ல உடற்கட்டுடன் கூடிய மனிதன் ஒருவன் பல தீப்பந்துகளை மேலே போட்டு கைகளில் பிடித்து வித்தை காட்டிக் கொண்டிருந்தான். இன்னொரு மனிதன் தன் முதுகில் சாட்டையால் அடித்த வண்ணம் இருந்தான்.


மக்கள் ஆலயத்தை நோக்கி நடந்துச் சென்றனர். ஆலயத்தின் முன் பூரிசிவஸின் பெரும் உருவச்சிலை இருந்தது. அவன் தன்னுடைய 10  கரங்களிலும் அக்னிக்கலன்கள் வைத்திருந்தான். அவன் நாக்கை  வெளி நீட்டி தன் உருண்ட விழிகளால் கோரமாக பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு காலை மேலே உயர்த்தி நடன பாவனையில் இருந்தான். 


சிலையை ஒட்டி ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அருகே இசைக்கலைஞர்கள்  தங்கள் மேளம் மற்றும் வாத்தியங்கள் மூலம் மக்களை வெறி கொள்ள வைத்தனர்.  இசையின் உக்கிரம் கூட மக்கள் நடனமாட ஆரம்பித்தனர். மது அருந்தியதால் தயக்கங்கள் தகர்ந்து ஆண் பெண் இணைந்து ஆட ஆரம்பித்தனர்


திடீரென இசை நின்றது. மக்கள் தங்கள் ஆட்டத்தை நிறுத்தினர். ஒரு கிழவன் உடுக்கையை  அடித்து  உச்சக் குரலில் பாடிக் கொண்டிருந்தான். பெண்களும் இணைந்து பாடினார்கள். பிறகு பாட்டு நின்றது. சில நொடிகள் மயான அமைதி அங்கு திகழ்ந்தது.


அரசக் குடும்பத்தினர் பரிவாரத்துடன் பூரிசிவஸ் ஆலயத்திற்கு வந்துக் கொண்டிருந்தனர். முதலில் அரண்மனை பணிமக்கள் கைகளில் பழங்கள், மலர்கள், உணவு வகைகள் கொண்ட தட்டினை ஏந்தி வந்தனர். மிகக் குறைவான ஆபரணங்கள் அணிந்திருந்தனர். அவர்களைத் தொடர்ந்து அரச குலத்தின் பாதுகாவலர்கள் கையில் வாள், ஈட்டி, வில் முதலியவற்றைச் சுழற்றியவண்ணம் வந்தனர். அவர்களைப் பின்தொடர்ந்து குறுநில மன்னர்களும் அவரகள் குடும்பத்தினரும் மிகையான ஆபரணங்களுடன் வந்தனர். மன்னன் திரிவிக்ரமனின் குடும்பத்தினர் பல்லக்குகளில் வந்தனர். இளவரசன் எழில்குமரனும் அவன் தோழன் மணிமாறனும் குதிரைகளில் வந்தனர். இறுதியாக மன்னன் திரிவிக்ரமன் தன் வெள்ளைக் குதிரையில் கம்பீரமாக வந்தார்.


முதலில் கோழி ஆடுகள் பலியிடப்பட்டு அவற்றின் குருதி பாத்திரங்களில் நிரப்பப்பட்டன.  அன்று நள்ளிரவில் நரபலியிடப்படும் இளைஞன் ஒருவன் மேடையில் நிறுத்தப்பட்டான். அவன் முகத்தில் புன்னகை தெரிந்தது. அவனுக்கு  பூஜைகள் செய்த பின் மூன்று பெண்கள் அவனை அழைத்துச் சென்றனர். அன்று அவன் விருப்பப்பட்ட எந்த பெண்ணும் மறுக்காமல்  அவனுடன் கலவி கொள்ள வேண்டும். 


அக்னிக்குண்டத்தில் தீ வளர்க்கப்பட்டது. அதில் பலி மிருகங்களின் குருதி ஊற்றப்பட்டது. அதன் பின்  பூரிசிவசுக்கு மந்திரங்கள் ஓதப்பட்டது. நரபலியிடப்படும் மனிதனை மீண்டும் மேடைக்குக் கொண்டு வந்தனர். அவன் ஆடை களைந்து முழு நிர்வாணமாக்கப்பட்டான். உடல் எங்கும் முதலில் குங்குமமும், மஞ்சளும், இறுதியாக குருதியும் பூசப்பட்டது. கைகள் இரண்டும் இரு கம்புகளில் சங்கிலியால்  பிணைக்கப்பட்டது. அவன் முகத்தில் தெரிந்த புன்னகை அகலவே இல்லை. மணிமாறன் வாளால் அவன் முதுகெங்கும் கீறினான். அதிலிருந்து குருதி பொங்கி வந்தது. பிறகு வாளை ஓங்கி  இளைஞனின் தலையை வெட்டினான். கூடியிருந்த அனைவரும் உரத்த குரலில் சத்தமிட்டனர். பிறகு ஆண் - பெண், கலவியில் ஈடுபட்டனர். மனித உடல்கள் பிண்ணிப் பிணைந்த பாம்புகள் போல காணப்பட்டது. 


மணிமாறனின் முகமெங்கும் இரத்தம் தெறித்து சிவப்பாகியது. அவன் கைகள் படபடத்தது.   உதடுகள் எதையோ மூணுமுணுத்த வண்ணம் இருந்தது. அவன்  உடலின்  பதற்றம் ஒவ்வொரு தசை நரம்பிலும் தெரிந்தது.  இளவரசன் எழில்குமரன் இரு பெண்களுடன் அவனை நோக்கி வந்தான். உரத்த குரலில் ஏதோ உளறினான். அவனுடன் வந்த பெண் ஒருத்தி மணிமாறனை அணைத்து புணர்வுக்கு  அழைத்தாள். மணிமாறன் அவளை எட்டித் தள்ளினான். அவளை எழில்குமரன்  கீழே தள்ளி ஆடைகளைக் கிழித்து மிருகத்தைப் போல புணர்ந்தான். மணிமாறன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.  அப்பெண் அவன் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள். பின் எழில்குமரனை  தள்ளி விட்டு அவளும் இருளுக்குள் சென்றாள்.

                                           

                                            

                                               ———-*********————-


முகில்மலை  அருகே சண்டிவனம் என்னும் காடு இருந்தது. நெடிய மரங்கள் கொண்ட இவ்வனம் சூரிய வெளிச்சமற்று இருந்ததால், மனித நடமாட்டம் சற்றும் இல்லை. 


எப்போதும் இருளையே வரித்துக் கொண்டிருந்த  இக்காட்டின் நிசப்தத்தைப் பூச்சிகளின் ரீங்காரம் குலைத்து, மெல்லிய கானம் போல ஒலித்துக் கொண்டிருந்தது. திடீரென பறவைகள் கத்துவதும் பின் அடங்குவதும் தொடர்ந்தது. எப்போதாவது ஒலிக்கும் புலிகளின் உறுமலும் யானைகளின் கர்ஜனையும் அச்சமூட்டுவதாக இருந்தது.


மணிமாறன் பத்து நாட்களாக இக்காட்டில் அலைந்துக் கொண்டிருந்தான். மகர தேசத்தின்  பட்டத்து இளவரசனான எழில்குமரனைக்  காணவில்லை. யாரோ ஒரு பெண்ணுடன்  இவ்வனத்தை நோக்கிச்  சென்றதை உளவாளிகள் மூலம் தெரிந்துக் கொண்டான். அப்பெண் பூரிசிவஸ் உற்சவத்தில் தான் சந்தித்தவளாக தான் இருக்க வேண்டும் என்று யூகித்தான். 


இளம் பிராயத்தில் மணிமாறன் சண்டிவனத்தில் அலைந்துத் திரிந்திருந்ததால் காட்டின் ஒவ்வொரு அங்குலமும் அவனுக்கு அத்துப்படி. மற்ற வீரர்கள் அஞ்சியதால் தான் ஒருவனே இளவரசனைக் கண்டுபிடிப்பதாக அரசன் திரிவிக்ரமனிடம் வாக்குறுதி அளித்து காட்டில் தேடினான்.


மணிமாறன் மெல்ல நம்பிக்கையை இழந்துக் கொண்டிருந்தான். எழில்குமரனை கண்டுபிடிக்காமல் அரசனைச் சந்திப்பது தர்மசங்கடமாக இருந்தது. இன்னும் சிறிது தூரம் சென்றால் நதியின் அருகே தவம் செய்வோரின் குடில்கள் இருக்கும். அங்கே தான் செல்ல அனுமதி இல்லை என்றாலும் அதை மீறியே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தான். 


நதியின் சலசல சத்தம் சங்கீதமாய் ஒலித்தது. முகில்மலையிலிருந்து நீர் அருவியாய் கொட்டி, காட்டில் நதியாய் உருவெடுத்திருந்தது. அக்கரையில் முனிவர்களின் குடில்கள் தெரிந்தது. ஆற்றில் நீந்தி, மறுகரை அடைந்து அக்குடில்களை நோக்கி  நடந்தான். குடில்களைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டிருந்தது. வேலியைத் தாண்ட எத்தனித்த போது மனிதர்களின் சத்தம் கேட்டுத் திரும்பினான். சற்று தூரத்தில் காட்டுவாசிகள் இரண்டு பேர் அவனை அழைத்தனர். மணிமாறன் அவர்களுடன் சென்று ஒரு குடிசைக்குள் நுழைந்தான்.


உள்ளே பலகீனமான நிலையில் எழில்குமரன் படுத்திருந்தான். அவனிடம் பேச வேண்டாம் என்று காட்டுவாசிகள் எச்சரித்தனர். அவன் உடல் தேற இன்னும் மூன்று நாட்கள் ஆகும் என்றும் அதன் பின் அவனை அழைத்துச் செல்லலாம் என்று கூறினர்.


மணிமாறன் அங்கேயே தங்கி எழில்குமரனுக்குப் பணிவிடை செய்தான். இளவரசன் உடல் நலம் தேறிய பின் நடந்த சம்பவங்களைக் கேட்டறிந்தான்.


அப்பெண் அரச குலத்துக்கு எதிரிகளான புரட்சிப் படையினரின் உளவாளி. எழில்குமரனை  மயக்கி இக்காட்டுக்கு அழைத்து வந்து, வாளினால் வெட்டி சென்று விட்டாள். இக்காட்டுவாசிகளின் மருத்துவம் இல்லை என்றால் தான் பிழைத்திருக்க முடியாது என்று உரைத்தான்.


புரட்சிப் படையினர் மகர தேசத்தின் பல நகரங்களைக் கைப்பற்றிவிட்டதாகவும். அவர்கள் தலைநகரை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை அப்பெண் மூலம் தான் அறிந்ததாக கூறினான்.


தாங்கள் இருவரும் அரசரை உடனே சந்தித்து தலைநகரான மதுராபுரியை நோக்கி விரைய வேண்டும் என்றான். 


அரசர் முகில்மலை அருகே சாவடி என்னும் கிராமத்தில் இருந்தார். அங்கே ஒரே நாளில் செல்லும் குறுக்கு வழியைக் காட்டுவாசிகள் மூலம் தெரிந்துக் கொண்டு இருவரும் சாவடி நோக்கி விரைந்தனர்.


                                                 ————**************——————-


முகில்மலை அடிவாரத்தில் சாவடி என்னும் கிராமத்தில் அரசன் திரிவிக்கிரமன் தங்கியிருந்தான். தினமும் மாலைப் பொழுதில் மழை பெய்வதால் பலவிதமான நெடிதுயர்ந்த மரங்கள் அங்கு காணப்பட்டது. அவற்றிலிருந்து வித விதமான மருந்துகள் மற்றும் எண்ணெய் வகைகளை கிராமத்தினர் தயாரித்தனர்.  


மழை அடித்து ஓய்ந்திருந்தது. பத்து நாட்களாக சாவடியில் தங்கியிருந்த திரிவிக்கிரமன் நிலைகொள்ளாது தவித்தான். மணிமாறனிடமிருந்து எழில்குமரனைப் பற்றி எந்த செய்தியும் வரவில்லை. சண்டிவனம் அதி பயங்கரமான காடு. அதற்குள் சென்றவர் மீண்டு வருவது கடினம். திரிவிக்கிரமன் மெல்ல நம்பிக்கையை இழந்துக் கொண்டிருந்தான்.


தனக்குத் தந்தைப் பாசம் கிடைக்காததால் தன் ஒரே மகனைச் செல்லமாய் வளர்த்தது எவ்வளவு பெரும் தவறு.


திரிவிக்கிரமனின் தந்தை தேசிங்கு ராஜன் மகர தேசத்தின் மிக வலிமையான அரசனாக திகழ்ந்தவன். அவனுக்கு வெகு நாட்கள் குழந்தை பாக்கியம்  இல்லை. பல அரசிகளை மணந்து, அவனது  அறுபதாவாது வயதில் திரிவிக்ரமன்  பிறந்தான். அது உண்மையில் அரசனுக்குப் பிறந்த குழந்தை அல்ல. அரசி அடிமை ஒருவனுடன் கொண்ட உறவில் பிறந்தவன் என்ற வதந்தியும் உண்டு.


திரிவிக்ரமன் பிறந்த ஐந்து வருடங்களில் தேசிங்கு ராஜன் இறந்தான். இளவரசன் வயதுக்கு வரும் வரை ஆட்சிப் பொறுப்பை அவனது தாய் மாமன் மகேந்திரபூபதி  ஏற்றான்.  அவன் திரிவிக்ரமனைப் பலவீனமானவனாக வளர்த்தான். அவனுக்கு எந்த போர்ப்பயிற்சியும் அளிக்கவில்லை. வெளி உலகத்தைக் காணவும் அனுமதிக்கவில்லை. இளவரசனை எப்போதும் அரண்மனையிலேயே வைத்திருந்தான்.  


திரிவிக்ரமன்  அரண்மனையில் பொழுதைக் கழிப்பதற்கு விளையாட்டுக்களில் ஈடுபட்டான். குறிப்பாக சதுரங்க ஆட்டத்தில் அவன் ஆர்வம் கொண்டிருந்தான். அவனுடன் சதுரங்கம் ஆடுவதற்கு மஞ்சுநாதன் என்ற திறமையான ஆட்டவீரன் கிடைத்தான்.  மஞ்சுநாதன் மகேந்திரபூபதியின் சூழ்ச்சிகளை விளக்கினான்.


சில வருடங்களில் மகேந்திரபூபதி  இளவரசனைக் கொன்று தனது மகனை அரசனாக நியமிப்பான். இளவரசன் மற்ற சிற்றரசர்களின் ஆதரவைப் பெற்று, மகேந்திரபூபதியையும் அவன்  வாரிசுகளையும்  அழிக்க வேண்டும் என்று மஞ்சுநாதன் அறிவுரை கூறினான்.


திரிவிக்ரமன் அரண்மனையிலிருந்து எடுத்துச் செல்லப்படும் அழுக்குத் துணி மூட்டைகளில் மறைந்து தப்பினான். சிற்றரசர்களின் ஆதரவுடன், பெரும்படையுடன் மகர தேசத்தின் தலைநகரமான  மதுராபுரியைத் திரிவிக்ரமன் தாக்கினான். மகேந்திரபூபதியும் அவன் குலமும் அழிந்தது. 


அரசனாக பதவி ஏற்ற பின் ஒரு நாள் திரிவிக்ரமன் மஞ்சுநாதனுடன் சதுரங்க ஆட்டம் விளையாடினான். அப்போது மஞ்சுநாதன் இது தான் அவர்கள் இருவரும் ஆடும் கடைசி ஆட்டமாக இருக்கும் என்றான். அடுத்த நாள் மஞ்சுநாதன் அரண்மனையிலிருந்து மறைந்தான். மஞ்சுநாதனுக்குப் பிறகு திரிவிக்ரமனுக்கு சரியான ஆலோசகர்கள் அமையவில்லை. தவறான அறிவுரைகளைப் பின்பற்றி மோசமான முடிவுகளை எடுத்தான்.


ஒவ்வொரு நாள் இரவும் சதுரங்கப்பலகை முன் அமர்ந்து தானே தனியாக விளையாடினான். திரிவிக்ரமன்  தன்னை மிகவும்  தனிமையானவனாக உணர்ந்தான். 


                                         ———*********————


தொலைவில் புரவிச்சத்தம் கேட்டதால் திரிவிக்கிரமனின் சிந்தனை தடைபட்டது குடிலுக்கு வெளியே வந்தான். மணிமாறனுடன் எழில்குமரன் வந்தது கண்டு பேருவகை அடைந்தான். எதிரிகளின் படை தலைநகரம் நோக்கிச் சென்றுக் கொண்டிருப்பதையும், உடனே அங்கிருந்து கிளம்பி மதுராபுரி செல்ல வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தான்.


திரிவிக்கிரமன் சில வினாடிகள் திக்பிரமையில் இருந்தான்.  பிறகு மணிமாறனைத் தனியாக அழைத்து பேசினான்.


"எதிரிகளின் தாக்குதலை எதிர்கொள்ள நாம் தயார் நிலையில் இல்லை. நான் இறப்பது உறுதி. எழில்குமரனுக்கும் அதே நிலை தான். எங்கள் தலைகள் மதுராாபுரியின் கோட்டைச்  சுவரில் தொங்கும். ஆனால் நீ உன்னை மாய்க்க  வேண்டாம். போருக்குப் பின் புரட்சிப் படையினரிடம் சேர்ந்து விடு. அதற்கு அந்த உளவாளிப் பெண்ணை பயன்படுத்திக் கொள். எதிரிகளின் அருகிலிருந்து, அவர்கள் நம்பிக்கையைப் பெற்று அதன் பின் அவர்களை அழிக்க வேண்டும். எனக்கு இந்த வாக்குறுதி நீ தர வேண்டும்."


மணிமாறன் கண்களில் கண்ணீருடன் அரசனின் கைகளைப் பற்றினான். மூவரும் புரவியிலேறி மதுராாபுரி நோக்கிப் புயல் வேகத்தில் சென்றனர்.


                                  ———-*********————-

                                       

                                                 யுதோபியா தேசம்

                                                  

"இந்தக் கடல், அதில் தெறித்துப் பொங்கியெழும் அலைகள், கடலின் எல்லையைத் தொடும் வானம், அதன் நீல நிறம், மேகங்களிடேயே கிழித்தெழும் ஞாயிறு, கடற்கரையில் கேளிக்கை கொள்ளும் பல் வகை மனிதர்கள்,  மகனே ரூசோ - இதை நான் நாற்பது ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன். எந்த மாற்றமும் இல்லை. முகங்கள் மாறுகின்றன, ஆனால் காட்சிகள் அப்படியே தான் இருக்கின்றன. மாற்றமின்மை! அதுவே இந்த நிலத்தின் சாபக்கேடு.”


வால்டேர் கூறியதற்கு பதிலேதும் கூறாமல்  ரூசோ அலைகளையே தியானித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். யுதோபியா நாட்டின் தலைநகரான ப்ரின்ஸிபியா நகரம் காட்சிக்கினிய கடற்கரைகள் கொண்டது.


பதினெட்டு ஆண்டுகளாக ரூசோ ஒவ்வொரு முறை ப்ரின்ஸிபியா நகரின் கடற்கரைக்கு வரும்போதும் மீண்டும் பிறந்தவன் போல உணர்வான். குறிப்பாக கடல் அலைகள் அவனுக்குப் பெரும் மனக்கிளர்ச்சியை அளிக்கும். முன் செல்லும்  சிற்றலைகளை முழுங்கிப் பொங்கி எழும் பின் வரும் பேரலைகள், நீல நிறத்தின் எழுச்சியிலிருந்து உருவாகும்  வெண் நுரைகள், கால் அளவு வரும் அலைகள் திடீரென உத்வேகம் கொண்டு மார்பளவு வந்துத்  தாக்கும் தருணம் - இவற்றை எத்தனை முறை பார்த்தாலும் புதிய அனுபவமாகவே  அவனுக்கு தோன்றும்.


அன்று கடற்கரையில் கூட்டம் அதிகம். சிறார்கள் நண்டுகளைத்  தொடர்ந்து அவை குழிக்குள் செல்வதை வேடிக்கை பார்த்தனர். சிறுமிகள் கடற்கரையில் சிப்பி, சங்குகளைச் சேகரித்துக் கொண்டிருந்தனர். சிலர் மணலில் கோட்டை, ஆலயங்கள் அமைத்துக் கொண்டிருந்தனர். அக்கோட்டை  கடல் அலைகளால் அடித்துச் செல்லப்படுவதை ஆரவாரத்துடன் பார்த்த்தனர். சில குறும்புக்கார சிறுவர்கள் குழிகளைத் தோண்டி, அதற்குள் இறங்கி, கழுத்தளவு மணலுக்குள் மறையும் வண்ணம் விளையாடினர். 


காதலர்கள், தம்பதியினர் கடலுக்குள் இறங்கி ஒருவர் மீது ஒருவர் நீரைத் தெளித்து விளையாடினர். சில தைரியமானவர்கள் தங்கள் காதலிகளைக் கரங்களில் ஏந்தி கடலின் ஆழத்திற்கு சென்றார்கள்.


அன்று பௌர்ணமி. மாலைக் கதிரவன் கடலினுள் மூழ்கி வானை வண்ணக் கோலமாக மாற்றியது. சிறிது நேரத்தில் முழு நிலவு இரவுக்கு விளக்கேற்றியயது. மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவை குடும்பத்துடன் பகிர்ந்து உண்டார்கள். பெரும்பாலும் இரவு நேரங்களில் புட்டு, அப்பம், இடியாப்பம், தேங்காய் பால் உணவாக இருக்கும். மாமிச உணவை இரவு நேரங்களில் தவிர்ப்பது வழக்கம்.


கடற்கரையை ஒட்டி யுதோபியா நாட்டின் முதல் தெய்வமான ஜோகன் தாயின் ஆலயம் இருந்தது. அவ்வாலயம் மூன்று பெரும் கோபுரங்கள் கொண்டது. கோபுரங்களின் உச்சியில் நட்சத்திர வடிவம் அமைக்கப்பட்டிருந்தது. ஆலயத்தின் உள்ளே ஜோகன் தாய் தன் குழந்தையை ஏந்திய சிலை நடுவில் இருந்தது. அக்குழந்தை தான் யுதோபியா நாட்டின் மக்கள். அவள் இந்நாட்டு மக்களைத் தன் சேயாக பாவித்து காத்து வருகிறாள்.  ஆலயமணியின் ஓசை கேட்டதும் தொழுவதற்கு மக்கள் திரள் திரளாக கோவிலுக்குக் கிளம்பினார்கள். ஆலயத்திலிருந்து தெய்வ கானம் ஒலிக்க ஆரம்பித்தது. மக்கள் மெல்ல ஆலயத்திற்குள் நுழைந்து கை கூப்பி மண்டியிட்டு அமர்ந்தனர்.  இன்னும் சிறிது நேரத்தில் பிரார்த்தனை ஆரம்பித்து விடும். அதன் பிறகு மக்கள்  அனைவரும் தத்தம் வீட்டிற்குச் சென்று விடுவார்கள். 

 

மக்கள் கூட்டம் முழுதும் கலைந்திருந்தது. வால்டேரும் ரூசோவும் மட்டும் ஒரு பாறையில் அமர்ந்து நிலவொளியில் மின்னும் கரு நிறக் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.


"ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் தலைநகரம் எப்படி இருக்கிறது பார். சூரியன் மறைந்ததும் அனைவரும் உறங்க சென்று விட்டனர். இரவு நேரங்களில் கேளிக்கை, வணிகம், பயணிகளின் வருகை என்று இந்நகரம் ஜொலிக்க வேண்டும் அல்லவா. நான் இந்த தேசத்தை விட்டு எங்காவது செல்ல வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு."


"தந்தையே. நீங்கள் உரைத்தீர்கள்,  இந்த நகரம் சலித்து விட்டது என்று. இந்தக் கடற்கரை சலித்து விட்டது என்று. எனக்கு அவ்வாறு தோன்றவில்லை. இன்று நாரைகளைப் பார்த்தோம் அல்லவா. அது பறக்கும் போது  அதன் சிறகுகளில் என் இதயம் அமர்ந்து பறப்பதாக உணர்ந்தேன். கதிரவன் மறையும் போது என் ஜீவன் அதன் செந்நிறக் கதிர்களில் ஒருபகுதியாக உணர்ந்தேன். கடல் அலைகள் மேலெழுந்து கீழே விழும்போது நானும் அதில் ஒரு துளியாக புரண்டு விழுவதாக உணர்ந்தேன். எத்தனை முறை இந்த கடற்கரை வந்தாலும் எனக்கு சலிக்காது."


"ஆ! நீ கவிஞன். கலாதேவி உன் ஆத்மாவில்  உறைந்திருக்கிறாள். நான் வெறும் வணிகன். எல்லாவற்றிலும்  செல்வம் ஒன்றை மட்டும் பார்க்கிறேன். உன் தாத்தா உன்னைப் போலவே பெரும் படிப்பாளி. சரித்திரம், தத்துவம் என்று அவர் படிக்காத நூல்கள் இல்லை. நம் வீட்டில் ஒரு அறை முழுதும் அவர் படித்த நூல்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன். அவர் நினைவாக. ஆனால் என்ன பயன். அவர் வாழ்நாள் முழுதும் யாருக்கோ ஊழியம் செய்து கொண்டிருந்தார். அவர் முதலாளிகள், அவரை விட அறிவில் தாழ்ந்தவர்கள். ஆனால் சாதுவான அவரை பெரிதும் அவமதித்தனர்."


"இதனால் வெறுப்புற்று நான் முடிவு செய்தேன். யாருக்கும் வேலை பார்ப்பதில்லை என்று. என் படிப்பை நிறுத்தினேன். சிறு அளவில் ஆரம்பித்து, இன்று பெரும் வணிகனாக உருவாகியிருக்கிறேன். ஆனால் எனக்கு இது போதாது. இந்த கடலைப் பார்க்கும் போது எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா. கூறுகிறேன் கேள்."


"நூற்றுக்கணக்கான கப்பல்கள் இந்த கடலில் நின்று கொண்டிருக்கின்றன. அதில் பெரும்பகுதி என்னுடையதாக இருக்கும். அதிலிருந்து பொருட்களை இறக்கி படகுகளில் கரைக்கு கொண்டு வருகின்றனர். அதனை வண்டிகளில் ஏற்றி நகருக்கு எடுத்துச் செல்கின்றனர். இந்த உலகில் உள்ள அத்தனைப் பொருட்களும் இந்த கடற்கரையில் தான் இறங்குகிறது. வாசனைப் பொருட்கள், உணவு வகைகள், தங்க ஆபரணங்கள், மூலிகை மருந்துகள், மது என்று இங்கு விற்கப்படாத பொருட்கள் இல்லை. கரையில் பல விதமான உணவு விற்கும் கடைகள் இருக்கின்றன. அவற்றை மக்கள் தேனீக்கூட்டம் போல மொய்த்துக் கொண்டிருக்கின்றன. அரசு அதிகாரிகள் வர்த்தகர்களிடமிருந்து சுங்கம் வசூலித்துக் கொண்டிருக்கின்றனர்."


"என் கனவு மேலும் விரிகிறது. நான் இங்கிருந்து கப்பலில் தொலை தூரம் செல்கிறேன். புதிய தேசங்களைக் காண்கிறேன். அவை செல்வத்தில் மிகவும் செழிப்பானவை. என்னுடைய  படை கொண்டு அத்தேசத்தின் சிறு நிலப்பகுதிகளை ஆக்ரமித்துக்  கொள்கிறேன்.  அவற்றில் நம் நாட்டு மக்களைக் குடியேற்றுவேன்.  அவர்கள் அத்தேசத்து மக்களுடன் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு அந்நாட்டு அரசர்களுடன் ஒப்பந்தங்கள் செய்வேன். பிறகு வேறு நிலங்கள் நோக்கி பயணம் செய்வேன்."


"என் பயணங்களில் உன்னையும் அழைத்துச் செல்வேன். ஒரு வணிகனாக அல்ல. ஒரு ஞானியாக. பல அனுபவங்கள் உன்னை மேலும் செம்மைப்படுத்தும் என்பதற்காக. என்னுடைய இந்த கனவு நிறைவேற நீ பிரார்த்தனை செய்வாயா."


ரூசோ தந்தையின் கைகளைப் பற்றி முத்தமிட்டான். நகரம் நள்ளிரவை எட்டியது. அலைகள் கொந்தளிப்பு அதிகமானது. இருவரும் நகருக்குள் தங்கள் வீட்டை நோக்கி சென்றனர்.


அடுத்த நாள் ஜோகன் தாய் பூமியில் அவதரித்த நினைவு நாள். நகரமே விழாக்கோலமாக இருந்தது. விடிகாலையில் தேவாலயம்  திறக்கப்பட்டு சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. தேவாலயம் விளக்குகளால் முழுதும் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் மெல்ல ஆலயத்தை நிறைத்துக் கொண்டிருந்தது. அனைவரும் கைகூப்பி மண்டியிட்டு அமர்ந்திருந்தனர். ஆலயத்தில் இருந்த உயர்ந்த பீடத்தில் குழந்தையை கைகளில் ஏந்திய  ஜோகன் தாயின் உருவச்சிலை இருந்தது. தங்கத்தால் செய்த கிரீடம் ஜோகன் தாயின்  தலையில் பொருத்தப்பட்டிருந்தது.


வால்டேர் தன் மனைவியுடன் ஆலயத்திற்கு வந்து முன் வரிசையில் அமர்ந்தார். ரூசோ பொதுவாக ஆலயத்திற்கு வருவதைத் தவிர்த்தான். வருடத்திற்கு ஒரு முறையாவது வர வேண்டும் என்ற பெற்றோர்களின் வற்புறுத்தலை அவன் பொருட்படுத்துவதில்லை.


குழந்தைகள் மேடைக்கு அழைக்கப்பட்டு பாடல்கள் பாடினர். பக்தர்களும் அவர்களுடன் இணைந்து பாடியது பரவச நிலையை உண்டாக்கியது. மதக்குருமார்கள் ஒவ்வொருவராக வந்து பிரார்த்தனைகள் செய்தனர். இறுதியாக மூத்த குரு வந்ததும் ஆலயமே அமைதியானது. அவர் ஜோகன் தாயின் வரலாற்றை விவரிக்க ஆரம்பித்தார்.


"ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மழை, இடியுடன் கூடிய ஒரு இரவில் ஜோகன் தன் கைக்குழந்தையுடன் ப்ரின்சிபியா நகருக்கு வந்தாள். நகரத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தையின் தந்தை எங்கே என்று வினவினார்கள் அதற்கு ஜோகன் இக்குழந்தைக்கு தந்தை யாரும் கிடையாது. இறைவனின் பரிசாக இந்த குழந்தை தனக்கு அளிக்கப்பட்டதாக கூறினாள். இதை மக்கள் நம்பாததால் அவளுக்கு எங்கும் அடைக்கலம் கிடைக்கவில்லை. ஊரின் எல்லையில் மாட்டுக் கொட்டடியில் ஜோகன் தங்கியிருந்தாள்.


ஜோகன் ஊருக்கு வந்த போது ஆரம்பித்த மழை இடைவிடாது பெய்துக் கொண்டிருந்தது, பல வாரங்கள் கடந்தும் மழை நிற்கவில்லை. ஊரே வெள்ளத்தில் மூழ்கியது. ஆனால் ஜோகன் தங்கியிருந்த கொட்டடியில் மட்டும் நீர் புகவில்லை.


மக்கள் ஜோகன் தாயிடம் மன்னிப்பு கேட்டனர். எப்படியாவது மழையை நிற்க வைக்க முடியுமா என்று மன்றாடினார்கள். ஜோகன் பிரார்த்தனை செய்ய, சில நிமிடங்களில் மழை நின்றது. இதனால் அதிசயித்த மக்கள் அவள் இறைவனின் தூதர் என்று நம்பினார்கள். அவளுக்குத் தங்க வசதியான இடம் தருவதாக கூறினார்கள். ஆனால் ஜோகன் மாட்டுக் கொட்டடியே தனக்கு போதும் என்று கூறி விட்டாள் நோயாளிகள், மனப்பிரமை கொண்டவர்களைத் தனது பிரார்த்தனையால் குணமாக்கினாள்.


மெல்ல மக்கள் அவள் போதனைகளை நம்ப ஆரம்பித்தனர்.  ஜோஷுவா தான் ஒரே இறைவன். அவரை வழிபடாதவர்கள் நரகத்திற்கு செல்வர். அப்போது மக்கள் வழிபட்ட சால்ஸ்டிஸ் மத தெய்வங்கள் அனைவரும் சாத்தான்கள். மேரியின் இது போன்ற போதனைகளால் சால்ஸ்டிஸ் மதக்குருக்கள் அவளுக்கு விரோதிகளானார்கள். அரசனிடம் முறையிட்டு அவளைக் கழுவேற்ற வேண்டும் என்று தூண்டினார்கள்.


வீரர்கள் ஜோகனைக் கைது செய்து அரசன் முன் நிறுத்தினர். ஜோஷுவா இறைவன் அல்ல என்று அவள் மக்களிடம் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவள் குழந்தை கண் முன்னே கத்தியால் வெட்டப்படும் என்று அரசன் ஆணையிட்டான்.


ஜோகன் அதற்குச் சம்மதிக்கவில்லை. குழந்தையை அவளிடமிருந்து பிடுங்கி ஒரு மேடையில் படுக்க வைத்தனர். வீரன் ஒருவன் குழந்தையின் தலையை வெட்ட வந்தான். அவன் கத்தியை ஓங்கியபோது குழந்தை சிரித்தது. வீரன் உடல் முழுதும் நடுக்கமுற்று மயங்கி விழுந்தான். மற்ற வீரர்களாலும் குழந்தையை வெட்ட முடியவில்லை.


அனைவரும் ஜோகன் தாயின் காலில் மண்டியிட்டு வணங்கினர். அரசன் அவள் அரண்மனையில் தங்கி தனக்கு வழி காட்டுமாறு வேண்டினான். அனால் ஜோகன் தான் தங்கியிருக்கும் இடமே வசதியாக இருப்பதாக கூறினாள்.  ஜோஷுவாவுக்கு ஆலயங்கள் நிர்மாணிக்க வேண்டும் என்றும்  அரசும், மக்களும் சால்ஸ்டிஸ் மதத்தைத் துறக்க வேண்டும் என்று கட்டளையிட்டாள். இதனை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.


மேலும் நாற்பது ஆண்டுகள் ஜோகன் உயிர் வாழ்ந்தாள். ஆனால் அவள் குழந்தை வளராமல் இருந்தது. மொத்த மானுடம் இந்த குழந்தை வடிவில் இருப்பதாக ஜோகன் அதற்கு விளக்கம் கொடுத்தாள். ஒரு நாள் ஜோகன் தானும் தன் குழந்தையும் இறைவனை சேரும் நாள் நெருங்கி விட்டது என்றாள். ஒரு பள்ளம் தோண்டி அதில் ஒரு சிறு அறை கட்டப்பட்டது. அவளும், குழந்தையும் அதனுள்ளே சென்று அமர்ந்தனர். குழி மூடப்பட்டது. ஜோகன் பூரண தியான நிலையில் இருந்தாள். ஏழாவது நாள் ஒரு பெரும் ஒளி விண்ணை நிறைத்தது. ஜோகனும், குழந்தையும் இறைவனடி சேர்ந்தனர்.


அன்று முதல் ஜோகன் தாயே நம் மக்களின் முதல் தெய்வமாக இருக்கிறாள். பல இடர்களிலிருந்து இந்நாட்டைக் காப்பாற்றியிருக்கிறாள். அவளை வணங்குவோம். அவள் குழந்தையை வணங்குவோம்.ஜோஷுவாவை பிரார்த்திப்போம். நம் வாழ்வில் உன்னதங்கள் பெறுவோம்."


தலைமை குரு சிறிது நேரம் அமைதியாக இருந்தார். சபையும் எவ்வித சலனமுமின்றி இருந்தது. அதன் பின் ஆலயத்தின் மணி அடித்தது. அது நின்றதும் மக்கள் எழுந்து ஒவ்வொருவராக பிராசாதம் பெற்று ஆலயத்தை விட்டு சென்றனர்.


வால்டேர் பூங்காவுக்குச் சென்று ஒரு மரத்தின் கீழ் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.  அவர்  மனைவி தன் தோழியருடன் ஒரு நாடகம் பார்க்க சென்று விட்டாள். சிறிது நேரம் கழித்து ரூசோ ஒரு பெண்ணுடன் பூங்காவுக்கு வந்தான். வால்டேர் இருப்பதை இருவரும் கவனிக்கவில்லை.


வால்டேர் அவர்கள் அருகில் சென்றதும் அப்பெண் வேகமாக எழுந்தாள். ரூசோவும் தந்தையைப் பார்த்ததும் திகைத்து நின்றான்.


"உன் தோழியை எனக்கு அறிமுகம் செய்ய மாட்டாயா?"


"இவள் பெயர் ஜென்னி. எனக்குத் தோழி மட்டும் அல்ல. நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம்."


"அதற்கென்ன. விரைவில் உங்கள் திருமணம் நடக்க ஏற்பாடு செய்வோம்."


வால்டேர் கூறியது ஜென்னியை மேலும் தர்மசங்கடம் ஆக்கியது. இருவரிடமும் விடை பெற்று விட்டு சென்றாள்.


"நல்ல பெண்ணாக தெரிகிறாள். இன்று ஏன் ஆலயத்திற்கு நீ வரவில்லை?"


"நான் இறை நம்பிக்கை அற்றவன். ஒரு கேள்வி கேட்கிறேன். ஜோஷுவா தான் நம்மையும் இந்த உலகையும் படைத்தார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?”


"ஆம் அதிலென்ன சந்தேகம்."


"அதற்கு ஆதாரம் என்ன?"


"வேறு எவ்விதத்தில் இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கும்.?"


"தானாகவே தோன்றியிருக்கலாம். நம் வாழ்வு விதியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று நம்புகிறீர்களா?"


"ஆம் அவ்வாறு தான் நம் மதத்தில் கூறப்பட்டுள்ளது."


"அந்த விதிகளை ஜோஷுவாவால் மாற்ற முடியுமா?"


"விதிகள் சாஸ்வதமானது. அதை இறைவனாலும் மாற்ற இயலாது."


"இறைவனால் விதியை மாற்ற இயலாது என்றால் அவரை எதற்கு வணங்க வேண்டும்."


"ஏன் என்றால் அவர் சர்வ வல்லமை படைத்தவர்."


"அதனால் அவர் வணங்கத் தகுதியுடையவரா?  ஒருவரின்  செயல்கள் தானே அவர் மதிக்கத்தக்கவரா என்பதை நிர்ணயிக்கிறது."


"ஜோஷுவா பரிசுத்தமானவர்"


“பிறகு ஏன் இவ்வளவு அநீதிகள் இவ்வுலகில் நடக்கின்றன. நேற்று இந்நகரில் ஒரு சிறு பெண் குழந்தை கொடுமையான முறையில் கயவன் ஒருவனால்  கொல்லப்பட்டாள். இதை நினைத்துப் பார்க்கும் போது எனக்கு உடலெங்கும் நடுக்கம் கொள்கிறது. உங்கள் பரிசுத்தமான ஜோஷுவா எவ்வாறு இதை அனுமதிக்கிறார்.”


"மகனே நீ அதிகம் யோசிக்கிறாய். உன் இயல்பு அது. எனக்குத் தேவை நம்பிக்கை. ஆழ் கடலில் சிக்கிய ஒருவன் சிறு மரத்துண்டு கிடைத்தாலும், கரை சேர்வோம் என்ற நம்பிக்கையுடன் அதைப் பற்றிக் கொள்வான். என் வணிகத்தில் நான் பல முடிவுகள் எடுக்க வேண்டும். அது எதிர்காலத்தில் சரியாக முடியும் என்று நான் நம்ப வேண்டும். நம்பவில்லை என்றால் என்னால் வணிகனாக இருக்க முடியாது. எதிர்காலம் குறித்த நம்பிக்கைக்கு இறை நம்பிக்கையே அடித்தளம். அந்த நம்பிக்கை இல்லை என்றால் செயல் இருக்காது. இந்த உலகம் இயங்காது. புரிகிறதா ரூசோ. மேலும் தர்க்கம் புரியாமல் இரவுக்குள் வீடு வந்து சேர்."


வீட்டிற்கு வந்ததும் யாருமில்லாத தனிமை வால்டேரை உறுத்தியது. சிறிது நேரத்தில் அவர் மனைவி மேரி வீட்டிற்கு வந்தான்.


தன் தோழிகளுடன் நடந்த உரையாடல்களை கணவருடன் பகிர்ந்தாள். ரூசோ ஏன் வீட்டிற்கு வரவில்லை என்று பதட்டப்பட்டாள்.


"இன்று அவனைப் பூங்காவில் ஒரு பெண்ணுடன் பார்த்தேன் அவளை விரும்புவதாகக் கூறினான். அந்த துணிச்சல் எனக்குப் பிடித்திருந்தது."


"பதினாறு  வயது தான் ஆகிறது. அதற்குள் இந்த வேலை எல்லாம் ஆரம்பித்து விட்டானா. நம் காலத்தில் இதெல்லாம் நடக்குமா. திருமணத்திற்கு முன்பு நான் எந்த ஆணையும் ஏறிட்டுக் கூட பார்த்ததில்லை. ஆண்கள் கூட எவ்வளவு கட்டுப்பாடுடன் இருந்தனர். நீங்கள் தீண்டிய முதல் பெண் நான் என்று கல்யாணத்தின் போது கூறியது இன்னும் நினைவில் உள்ளது."


"இப்போதைய குழந்தைகளுக்கு சுதந்திரம் அதிகமாக உள்ளது. அனால் ரூசோ தவறாக எதுவும் செய்ய மாட்டான். இன்னும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவான்."


"ஒன்று தெரியுமா, செலீனாவின் கணவனைக் கைது செய்து விட்டார்கள். வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்தது."


"ஆம் நல்ல குடும்பத்திற்கும், சமூகத்தின் நலனுக்கும் ஒருதார மணம் அவசியம். தற்போது சிலர் அதை மீற ஆரம்பித்து விட்டார்கள். இதை முளையிலே கிள்ளி ஏறிய வேண்டும். அரசாங்கம் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்."


"ஆண்கள் மட்டும் இல்லை பெண்கள் கூட ஒழுங்கீனமாக நடக்க ஆரம்பித்து விட்டார்கள். கேட்டி தன் கணவனின் நண்பனோடு உறவு வைத்திருக்கிறாளாம். அவள் கணவன் அரசிடம் முறையிட யோசிக்கிறான். அவன் நிலை மிகவும் பரிதாபம்."


கதவைத் தட்டும் சத்தம் கேட்க உரையாடல் தடைபட்டது. ரூசோ வீட்டிற்குள் நுழைந்தும்  நேராக தன் அறைக்கு சென்று விட்டான். 


வால்டேர் மேரியுடன் இரவுணவை முடித்து படுக்கை அறைக்குச் சென்றனர். வால்டேர் கட்டிலில் அமர்ந்தார். மேரி அருகில் அமர்ந்து அவர் தோளைப் பற்றினாள்.


வால்டேர் அவள் கரங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.


"ஜோகன் தாயின் நினைவு நாள் என்பதை மறந்து விட்டாயா. ஒரு வாரம் நாம் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்."


"ஆம் மறந்து விட்டேன். மன்னியுங்கள். இன்று நான் கீழே படுத்துக் கொள்கிறேன்."


மேரி கீழே மெத்தை விரித்துப் படுத்தாள். வால்டேர் சில கணங்களில் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றார்.


மேரிக்கு உறக்கம் வரவில்லை. வால்டரின் முதுகையே பார்த்துக் கொண்டிருந்தாள். எழுந்து வால்டேர் அணிந்த ஆடை ஒன்றை எடுத்து அதை அணைத்த வண்ணம் உறக்கத்திற்குச் சென்றாள்.


                                               லாமா தேசம்                                                                                                              


வெண்ணிற பனிமலைக்கிடையே ஆதவன் தன் கதிர்களைப் பாய்ச்சி பொன்னிறமாக்கிக் கொண்டிருந்தான். காலை வெயிலில் காஞ்சன் மலை தகதகவென மின்னிக் கொண்டிருந்தது. வான் மேகங்களிலிருந்து வானவில் வெளிவந்து வண்ணத் தோகையாய்  ஜொலித்துக் கொண்டிருந்தது. எங்கும் பேரமைதி, நிச்சலனம். அவ்விடம், அத்தருணம் லாமா தேசத்தின் அடிப்படை இயல்புகளான வெறுமை, சூன்யம், செயலின்மையைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.


கனிஷ்கா மலையைப் பார்த்து உச்சிக்கு தான் செல்ல வேண்டிய தூரத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தான். மேலே செல்வதற்கு நாளை நடுப்பகல் ஆகி விடும். அவன் நடக்க முதியவரான நரோபா பின் தொடர்ந்தார். வழியெங்கும் பனி மண் மீது படர்ந்திருந்தது. ஆங்காங்கே பசும் கோரைப்புற்கள் தெரிந்தன.


சில இடங்களில் எருமைகள் ஊர்ந்து கொண்டிருந்தன. அவை உடலைச் சிலிர்த்து மேலிருந்த பனியை உதறின. வளைந்த கொம்புகளைக் கொண்டிருந்த அவை தங்கள் தலையை  ஆட்டியவண்ணம் இருந்தன. எருமைகள் மீது அமர்ந்திருந்த சிறுவர்கள் அவ்விருவரை நோக்கி தங்கள் கைகளை அசைத்தனர்.


சிறிது நேரத்தில் ஒரு சிற்றோடையைக் கண்டடைந்தனர். இருவரும் ஓடையின் தெளிந்த நீரில் தங்கள் முகத்தைக் கழுவிக் கொண்டனர். ஓடை நீர் வேகமாக சுழன்று சென்றது. அதில் பனித்துகள்கள் மிதந்து கொண்டிருந்தன. ஓடையைச் சுற்றிலும் உயரமான மரங்கள் நிறைந்திருந்தன. மரங்கள் ஊசி போன்ற பசும் இலைகளைக் கொண்டிருந்தன. அருகில் இருக்கும் அருவியின் சலசல சத்தம் கேட்டது. குளிர் தென்றல் லேசாக மேனியைத் தைத்து சென்றது. கனிஷ்கா நரோபாவை நோக்க, அவர் தலையசைத்தார். தன்  ஆடைகளை வேகமாக களைந்து கனிஷ்கா ஓடை நீரில் மூழ்கி சிறிது நேரம் நீந்தினான். அவன் கரையேறியதும் அவர்கள் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.


இருவரும் அன்று நாள் முழுதும் மலையில் ஏறிக் கொண்டிருந்தனர். மேலே செல்ல செல்ல பாதை குறுகலாகிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் மலையும், அடுத்த பக்கம் அதல பாதாளமும் இருந்தது. கனிஷ்கா முன்னே செல்ல, அவன் பின்பக்கமாக நீட்டிய ஒரு நீண்ட கம்பைப் பிடித்துக் கொண்டு நரோபா கவனமாகப் பின் தொடர்ந்தார்.


அன்று இரவு ஒரு சிறு குகைக்குள் இருவரும் படுத்துக் கொண்டனர். வெளியே பெரும் பனி சூறாவளி மலையைப் புரட்டி எடுத்தது. கனிஷ்கா நரோபாவின் பாதங்களைத் தேய்த்து சூடேற்றினான்.


அடுத்த நாள் காலை அவர்கள் பயணம் தொடர்ந்தது. இறுதியாக காஞ்சன் மலையின் உச்சியை அடைந்தனர். பின்னர் சிறிது தூரம் கீழ் நோக்கி சென்றபின் குன்றை ஒத்த ஒரு பெரும் பாறையைக் கண்டனர்.


நரோபா ஜாடை காட்ட கனிஷ்கா நின்றான். தாங்கள் சரியான இடத்திற்கு வந்து விட்டதை இருவரும் உணர்ந்தனர். 


பனியால் மூடப்பட்ட பாறையிலிருந்து பேரொளி வீசியது. கிழவர் உடல் சிலிர்த்து மண்டியிட்டு அமர்ந்தார். அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது.


“இருபத்தி மூன்று வருடங்கள் முன்பு நடந்த சம்பவங்களைக் கூறுகிறன். அப்போது நான் லாமா தேசத்தின் வழிகாட்டி என்ற பொறுப்பை ஏற்றிருந்தேன். நம் நாட்டிற்கு தலைவர்கள் யாரும் இல்லை என்பதை நீ அறிவாய். யாரும் யாரையும் கட்டுப்படுத்த அதிகாரம் இல்லை. அதனால் என்னை மக்கள் தலைவன் என்று அழைப்பதில்லை. நான் அடைந்த ஞானத்தின் காரணமாக மக்கள் அவர்களின் வழிகாட்டியாக கருதுகிறார்கள்."


"ஒவ்வொரு வழிகாட்டிக்கும் தனக்கு அடுத்து தகுதியானவனைக் கண்டடைந்து, தனக்கு பின் மக்களை வழிநடத்திச் செல்வதற்கான ஞானத்தைக் கற்பிக்கும் பொறுப்பு உள்ளது. நான் எனக்கு அடுத்தவனைத் தேடி நாடெங்கும் சுற்றினேன். பல நாட்கள், மாதங்கள் கடந்தது. முயற்சி வெற்றி பெறவில்லை."


"வெறுப்பு ஏற்பட்டதால் இந்த மலையில் தனியாக அலைந்தேன். அப்போது ஒரு நாள் இவ்விடத்தை அடைந்தேன். ஐந்து வயது பாலகனான உன்னைக் கண்டேன். தியான முத்திரையில் இருந்தாய். எத்தனை நாட்கள்  நீ  அந்நிலையில் இருந்தாய் என்று தெரியாது. உன் உடல் முழுதும் பனியால் மூடப்பட்டிருந்தது. உன் முகம் மட்டும் தெரிந்தது.  அதிலிருந்து பேரொளி வீசியது. உன்னைப் பார்த்ததும் முடிவு செய்தேன் நீ தான் அடுத்தவன் என்று.”


"உன்னை அழைத்துச் சென்று நான் அறிந்தவை முழுதும் கற்றுக் கொடுத்தேன். இன்று உன்னைக் கண்ட இவ்விடத்தில் என் முடிவு நடக்க போகிறது.  எனக்கு அடுத்து நீ பொறுப்பேற்கும் தருணம் வந்து விட்டது. நீ அதற்கு தகுதியானவனே. ஆனால் நான் அஞ்சுவது அகிம்சை வழிமுறைகளில் உன் எண்ணங்களை முழுதாக ஈடுபடுத்தவில்லை."


"இது நீ ஏற்கும் பொறுப்புக்கு  முற்றிலும் எதிரானது. இந்த மண்ணின் இயல்பிற்கே மாறானவை. அகிம்சை, கூட்டு வாழ்க்கை, உடமை மறுப்பு இம்மூன்றும் இம்மண்ணின் ஆதாரக் குணங்கள். இதற்கு எந்த பங்கமும் வராது என்று சத்தியம் செய். உன் உயிர் போனாலும் கூட, ஏன் நம் இனமே முற்றிலும் அழிந்தாலும் கூட நீ இந்த சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும்.  செய்வாயா?"


நரோபா கையை  நீட்டினார். கனிஷ்கா சில கணங்கள் தயங்கினான். அவன் தயங்கிய அக்கணங்களில் நரோபாவின் உயிர் பிரிந்தது. அவர் கை  நீட்டியவாறே இருந்தது. அக்கையைப் பற்ற இறுதி வரை கனிஷ்காவின் மனம் ஒப்பவில்லை.


அவர் முகத்தை ஒரு முறை நன்றாக பார்த்து கனிஷ்கா அவ்விடத்தை விட்டு நீங்கினான்.

                                        

                                          ———**********————


அசோகா அங்காடி தெருவில் இலக்கின்றி நடந்து கொண்டிருந்தான். மக்கள் திரளாக இருக்கும் இடங்கள் அவனுக்குப் பிடித்தமானது. ஒவ்வொருவரின் முகத்தையும் அதன் வெளிப்பாட்டையும் ஆராய்வதில் அவனுக்கு அலாதி இன்பம். மேலாளர்களின் கடுகடுப்பு, உழைப்பாளர்களின் உற்சாகம், பெண்டிரின் கலகலப்பு,  சிறுவர்களின் விளையாட்டுத்தனம்  - உலகமே அந்த அங்காடி தெருவில் வந்து நிறைந்திருப்பது போன்ற உணர்வு.


தொழிலாளிகள் வண்டிகளில் சரக்கு மூட்டைகளை ஏற்றி, இறக்கிய வண்ணம் இருந்தனர். மேலாளர்கள் அனைத்தையும் மேற்பார்வை இட்டு ஆணைகள் இட்டுக்கொண்டிருந்தனர். லாமா தேசத்தினர் எளிமையானவர்கள். ஆபரணங்கள், வாசனைத் திரவியங்கள் விற்கப்படுவதில்லை. போர் ஆயுதங்கள் வாங்குவது தடை செய்யப்பட்டிருந்தது.


யாரோ ஒரு அயல் தேசத்தவன் தெருவில் தடுமாறி நிற்பதை அசோகா கண்டான். அவனுக்கு லாமா மொழி பேச வரவில்லை. அசோகா அவனிடம் சென்று ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டான். அயலான்  மாமிச உணவு எங்கு கிடைக்கும் என்று கேட்ட்டான்.


"இந்த தேசத்தில் உயிர்களைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மாமிசம் எங்கும் கிடைக்காது."


"அப்படியானால் சமைத்த உணவு எங்கு கிடைக்கும்?"


"அதற்கு வேறு தெரு செல்ல வேண்டும்."


அசோகா அயலானை உணவகங்கள் இருக்கும் தெருவிற்கு அழைத்துச் சென்றான்.


இருவரும் உணவு உண்ட பின், அயலான் வேலை பார்ப்பவனிடம் ஏதோ கேட்டான். அதற்கு அவனால் சரியான பதில் சொல்ல இயலவில்லை.


"நான் சாப்பிட்டதற்கு எவ்வளவு நாணயங்கள் தர வேண்டும் என்று கேட்டால் இவன் உளறுகிறான்."


"நீங்கள் நாணயங்கள் தர தேவையில்லை. இங்கு எந்த பொருளுக்கும் விலை இல்லை. எல்லாப் பொருளும் அனைவருக்கும் சொந்தமானது. அதை அவரவர் தேவைக்கேற்ப பங்கிட்டுக் கொள்வோம்."


"யாருக்கு எத்தனை பங்கு என்பதை எவர் தீர்மானிப்பார்?"


"மக்கள். இந்த நாடே ஒரு குடும்பம் என்று எண்ணிக் கொள்ளுங்கள். குடும்பத்தில் யாருக்கு எவ்வளவு உணவு என்பதை யாரும் நிர்மாணிப்பதில்லை. அது போல ஒருவர் தன் தேவையும், மற்றவரின் தேவையையும் உள்ளுணர்வால் அறிந்து பங்கிட்டு கொள்வதே இந்நாட்டு மக்களின் இயல்பு."


"யாராவது  துஷ்பிரயோகம் செய்தால் தண்டனை உண்டா?"


"இல்லை. சில சமயம் குடும்பத்தில் குழந்தைகள் ஆர்வத்தில் அதிக உணவு எடுத்துக் கொள்வது இல்லையா? இது தொடர்ந்தால் மட்டுமே மென்மையாக கண்டிக்கப்படுவார்கள்."


"இந்த வழிமுறை எப்படி இயங்குகிறது என்று வியப்பாக உள்ளது."


"மனிதன் மனதில் உறைந்துள்ள மனசாட்சி. அதனால்.”


"விசித்திரமான தேசம். யாருக்கும் எந்த பொருளும் உடமை இல்லை என்றால், இங்கு       வன்முறை முற்றிலும் இருக்காது அல்லவா?"


"அங்கொன்றும், இங்கொன்றும் இருக்கும். பொதுவாக சேட்டைக்கார இளைஞர்கள் பெண்களிடம் வம்பு செய்வது, அதனால் மோதல்கள்  நடப்பது உண்டு. மற்றபடி கொலை, கொள்ளை முதலியவை என் வாழ்நாளில் ஒரு முறை கூட நடந்தது இல்லை."


"தவறு செய்வோருக்கு என்ன தண்டனை?"


"இரு மாதங்கள் சீர்திருத்த விகாரத்திற்கு அனுப்பப்படுவர். அங்கு அவர்களுக்கு அளிக்கப்படும் ஆன்மீகப் பயிற்சி அவர்களை மென்மையானவர்களாக மாற்றும்."


 "நல்ல தேசம். நல்ல மக்கள்.”


அயலான் விடைபெற்ற பின் அசோகா தன் வீட்டை நோக்கி சென்றான்.


                                    

அசோகா வீதியில் நடந்த போது  மென்மையான பனிமழை பெய்துக்  கொண்டிருந்தது. தூரத்து மலைகளில் வெண்திட்டுக்கள் நிறைந்திருந்தது. சிறுவர்கள் ஒருவர் மீது ஒருவர் பனிக்கட்டிகளை எறிந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.  மரங்களின் இலைகள் மறைந்து  கிளைகள் முழுதும் பனி படர்ந்திருந்தது. 


கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்திருந்தது. உணவகங்களில் வாடிக்கையாளர்கள் குளிருக்கு இதமான சுடுபானம் அருந்தினர்.  வீதியில் நடந்த மக்கள் உடல் முழுதும் மூடிய மிருகத்தோலினால் செய்யப்பட்ட ஆடைகள் அணிந்திருந்தனர். வண்டிகளை இழுத்து  செல்லும் குதிரைகளின் கண்களை பனி மறைத்ததால் வண்டிகள் ஓரமாக நிறுத்தப்பட்டன. 


வீட்டை நெருங்கியதும் அசோகா, மகன்  விஷ்வபந்து பனிமனிதன் பொம்மையை உருவாக்கி அலங்கரித்துக் கொண்டிருந்ததைக் கண்டான். தந்தையைக் கண்டதும் விஷ்வா ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொண்டான்.


அவனைத் தூக்கி வீட்டிற்குள் சென்று படுக்கையில் எறிந்தான். விஷ்வா ஆர்வமாக அன்று பள்ளியில் நடந்தவற்றைக் கூறினான். மனைவி நளா அறைக்குள் வந்தாள். அவள் அழுதிருந்தது தெரிந்தது. 


நளா ஜாடை காட்டியதும் அசோகா மகனுக்கு விஷயத்தைக் கூற ஆராம்பித்தான்.


"உன் அத்தை மகன் சித்தார்த்துக்கு சென்ற வருடம் நடந்ததை நீ கேள்விபட்டிருப்பாய்."


"ஆம் அவனுக்கு மாமா ஒரு குதிரை  வாங்கிக் கொடுத்தார்."


"நான் சொல்ல வருவது அது அல்ல. அவனுக்கு சென்ற வருடம் ஐந்து வயது முடிந்தது. அதனால் அவன் பெற்றோரை விட்டு நீங்கி மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து வாழும் விகாரத்திற்கு சென்றான். நாளை உனக்கு ஐந்து வயது முடிகிறது. இனி நாங்கள் உனக்கு பெற்றோர் கிடையாது."


சிறுவன் முகத்தில்  அதிர்ச்சி தெரிந்தது.


"கவலைப்படாதே. அங்கு உன் வயது சிறுவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களுடன் விளையாடுவதிலேயே உன் பொழுதெல்லாம் கழிந்து விடும். எங்களை நீ முற்றிலும் மறந்து விடுவாய். உன்னை நானும், நளாவும் மாதம் ஒரு முறை சந்திப்போம். உனக்கு எதுவும் தேவை என்றால் எப்போதும் உனக்காக நாங்கள் இருப்போம்.”


சிறுவன் முகத்தை மூடி அழ ஆரம்பித்தான். அசோகா அவனுக்கு சமாதானம் கூற முயன்றான். நளா வேண்டாம் என்று கண்ணசைக்க இருவரும் அடுத்த அறைக்குச் சென்றனர்.


"நாளை அவன் நமக்கு மகன் இல்லை. நீ என் கணவன் இல்லை. நான் உன் மனைவி இல்லை.  மூன்று குருவிகள்  சேர்ந்து  கூடு கட்டி, அந்த கூடு அழிக்கப்படுவதைத் தடுக்க எந்த முயற்சியும் செய்ய முடியாத கையறு நிலை."


"கணவன், மனைவி, பிள்ளை இந்த உறவுகள் எல்லாம் ஒருவரை இன்னொருவருக்கு அடிமையாக்குவது. அவர்களின் உடமையாக்குவது. இது இந்த நாட்டின் அடிப்படை இயல்புக்கு எதிரானது."


"நாம் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தது, ஒரு குழந்தை பெறுவதற்கும், ஐந்து வயது வரை வளர்ப்பதற்கு மட்டுமே. அதன் பின் நாம் அந்நியர்கள். என்ன சட்டம் இது. மக்களின் உணர்வுகளைப் புரியாத சட்டம் எதற்கு."


"மக்களின் உணர்வுகளைப் புரிந்ததால் தான் இந்த சட்டம். உறவுகள் மனிதனைக் கட்டுப்படுத்துவது. அவனை ஆசை என்ற வலையில் சிக்க வைப்பது. மோகம், அச்சம் போன்ற துஷ்ட சிந்தனைகளை மனதில் விதைப்பது. இவை இல்லாத சமூகமே மேம்பட்ட சமூகம். அதற்கு இந்த தியாகத்தை நாம் செய்து தான் ஆக வேண்டும்."


"உண்மையை சொல் நாங்கள் இல்லாமல் நீ வாழ்ந்து விடுவாயா? அந்த  அறையில்  படுத்திருப்பவனின் புன்னகை மலர்ந்த முகத்தைக் காணாமல் இருந்து விடுவாயா. என்னை அணைத்து என் உடலில் அமுதை செலுத்திய நினைவுகள் அவ்வளவு எளிதாக உன் மூச்சை விட்டு நீங்குமா. சொல்." 


"நாம் உறவு கொள்ளலாம். அதற்கு எந்த தடையும் இல்லை."


"ஆம். வேறு யாருடனும் கூட உறவு கொள்ளலாம். அதற்கும்  எந்தத் தடையும் இல்லை. ஆனால் அதில் கிடைப்பது என்ன. நீ என்னவன். நான் உன்னவள் என்ற உரிமையில் கொள்ளும் உறவுக்கு அது ஈடாகுமா?"


"நான் நாளை திரிபோலி நகருக்கு செல்கிறேன், அங்கு இருக்கும் விகாரத்தில் தத்துவம் பயில முடிவிடுத்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது உன்னையும், விஷ்வாயையும்  சந்திக்க  வருவேன்."


அசோகா கதவை மெதுவாகத் திறந்தான். சிறுவன் தூக்கத்தில் இருந்தான். அவன் அழுதிருந்ததால் கன்னங்கள் செம்மை நிறத்தில் இருந்தது.


"கடவுளே! இந்த பிரிவை நாங்கள் மூவரும் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்."


அசோகா உடல் முழுதும் பொங்கி விம்மினான். நளா அவனை அணைத்து தன் மடியில் படுக்க வைத்தாள். 


"கடைசி இரவு. இன்று எனக்கு அடிமையாக நீ.  உனக்கு அடிமையாக நான். என் சகல விருப்பத்தையும் நிறைவேற்று."



                                        ————-**************—————-



                                                 



























                                                  


                                                    பகுதி -  2

                                                   மகர தேசம்


பூம்பாறை மகரதேசத்தின் ஒரு சிறிய கிராமம். அங்கு கந்தமாறன் என்று ஒரு எளிய குடியானவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு  ஆண், பெண் என்று இரு குழந்தைகள்.  மூத்தவனுக்கு மணிமாறன் என்று பெயர். பெண் பூங்குழலி என்ற பெயரால் அறியப்பட்டான்.


மணிமாறன் வீட்டில் தங்குவது குறைவு. அக்கிராமத்தின் அனைத்து மூலைகளிலும் சுற்றிக் கொண்டிருப்பான். யார் வீட்டின் முன்னாவது விளையாடிக்  கொண்டிருந்தால், அவ்வீட்டின் பெண்கள் அவனுக்கு உணவு அளித்து விடுவார்கள். வீட்டின் முன்னாள் அமர்ந்திருக்கும் முதியவர்கள்  அவனை உட்கார வைத்துக் கதை சொல்வார்கள். அக்கிராமத்துக்கே செல்லப் பிள்ளையாக மணிமாறன் வளர்ந்து வந்தான்.


அமைதியாக இருந்த அக்கிராமத்துக்குப் புயலென  பெரும் இடர் வந்தது. கொள்ளையர்கள்  தொல்லை பெரும் தலைவலியைத் தந்தது. இக்கொள்ளையர்கள் திருடுவது பொருட்களை அல்ல. ஆட்களை. வேலை செய்ய வல்ல ஆண் பெண்களை அடிமைகளாக மாற்றி நகரங்களில் விற்றனர். அவர்கள் சிறுவர்களைக் கூட விட்டு வைப்பதில்லை.


இதை திரிவிக்ரமனின் அரசாங்கம் கண்டும் காணாமலேயே இருந்தது. அவன் அரண்மனைகளில் கூட பூம்பாறை கிராமத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்டவர்கள் அடிமைகளாக வேலை செய்கிறார்கள் என்ற பேச்சு நிலவியது.


திடீரென நாற்பது, ஐம்பது கொள்ளையர்கள் குதிரைகளில் வருவார்கள். ஒவ்வொரு வீடாக புகுந்து சாட்டையால் அடித்து தேவைப்பட்டவர்களைச் சங்கிலியால் பிணைத்து தங்களுடன் அழைத்துச் சென்று விடுவார்கள்.


கந்தமாறன் வீடு எப்படியோ இக்கொள்ளையரிடமிருந்து தப்பி வந்தது. ஆனால் இந்நிலை வெகு நாட்கள்  நீடிக்கவில்லை. ஒரு நாள் கொள்ளையர்கள் கந்தமாறன் வீட்டின் முன் வந்தனர். அங்கு மணிமாறன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவன் கண்களில் அச்சம் சிறிதும் இல்லை. செம்பவன் தன் ஆட்களை வீட்டிற்குள் போக சொன்னான்.


மணிமாறன் தன் முன்னாள் ஒரு கோடு வரைந்தான்.


"ஆம்பளையா இருந்தா இந்த கோட்டைத் தாண்டி வாங்கடா பார்ப்போம்"   என்று சிறுவன் சூளுரைத்தான்.


கொள்ளையர்கள்  முகத்தில் கேலிச் சிரிப்பு தெரிந்தது. செம்பவன் தன் ஆட்களில் ஒருவனைச் சிறுவனைப் பிடித்து வரச் சொன்னான். மணிமாறன்  ஓரத்தில் கிடந்த ஒரு வாளைக் கொண்டு கோட்டைத் தாண்டியவனைத்  தாக்கினான். கொள்ளையன் கால்களில் ரத்தம் பாய கீழே விழுந்தான். அடுத்து வந்த அனைவரையும் மணிமாறன் வெட்டிச் சாய்த்தான்.


பிறகு செம்பவன் தானே குதிரையிலிருந்து இறங்கி  மணிமாறன் அருகில் வந்தான். வாளைப் பிடித்திருந்த மணிமாறனின் கையைக் காயப்படுத்தினான். பிறகு ஒரு பெரும் கம்பைக் கொண்டு மணிமாறனைப் பலமாகத் தாக்கினான். மணிமாறன் சுருண்டு விழுந்தான்.


கொள்ளையர்கள் வீட்டின் உள்ளே சென்று பூங்குழலியைப் பிடித்து வந்தனர். மணிமாறன், பூங்குழலி இருவரையும் தங்கள் குதிரைகளில் பின்னால் கட்டி இழுத்துச் சென்றதை அக்கிராமமே பார்த்தது. எதிர்க்க ஒருவரும் துணிவில்லை. 


கொள்ளையர்கள் சிறுவர்கள் இருவரையும்  தலைநகருக்கு அழைத்துச் சென்றனர். மணிமாறன் செம்பவனை நோக்கி இரைந்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு இரவும் மணிமாறன் முன்னாள் பூங்குழலியைக் கொள்ளையர் வன்புணர்வு செய்தனர்.


செம்பவனுக்குத்  தலைநகரில் பெரும் மாளிகை இருந்தது.  ஓவ்வொரு நாளும் அடிமைகளை நல்ல விலைக்கு வாங்க செல்வந்தர்கள், அரச குடும்பத்தினர் வந்த வண்ணம் இருந்தனர்.


ஒரு நாள் செம்பவன் மாளிகைக்குத் திரிவிக்ரமன் விஜயம் செய்தான். அவன் முன்னாள் அடிமைகள் நிறுத்தப்பட்டனர். அரண்மனையில் வேலை பார்க்க மணிமாறன் தேர்வு செய்யப்பட்டான்.


திரிவிக்ரமன் மற்றும் குடும்பத்தினருக்கு உணவு தயாரித்துப் பரிமாறும் வேலை மணிமாறனுக்குக் கிடைத்தது. சில நாட்கள் அரசனுடன் முக்கியமான விருந்தினரும் உணவுண்ண வருவதுண்டு. மெல்ல மணிமாறனுக்கு அவர்கள் பேசும் அரசியல் புரிந்தது.  பல ராஜ்ய ரகசியங்கள் அவனுக்குத் தெளிவானது.


ஒரு நாள் திரிவிக்ரமன் செம்பவன் மாளிகைக்கு மணிமாறனுடன் சென்றான். அன்று செம்பவன் வீட்டின் சமையல் வேலைகளில் மணிமாறனும் பங்கெடுத்தான். 


உணவு பரிமாறப்பட்டது. திரிவிக்ரமன் உணவில் விஷம் கலக்கப்பட்டிருந்தது. அதை நிரூபிக்க முடியும் என்று மணிமாறன் அவ்வுணவைத் தானே உண்டான்.


மணிமாறன் மயக்கமடைந்தான். அவனுக்கு  அரண்மனையில்  சிறப்பான மருத்துவம் அளிக்கப்பட்டு பிழைத்தான். செம்பவனைச்  சித்திரவதை செய்துக் கொல்ல திரிவிக்ரமனிடம் அனுமதி கேட்டான். அடிமை முறை மகர தேசம் முழுதும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்குத் திரிவிக்ரமன் சம்மதித்தான்.


சில வருடங்களில்  மணிமாறன் இளைஞன் ஆனதும் திரிவிக்ரமனின் முக்கிய தளபதியாக மாறினான்.


                                            ———-*********————-


தாரா வானில் என்றும் ஓளிர் விடும் நட்சத்திரம். கருவுற்றிருக்கும் போது ஒவ்வொரு இரவும் அதைப் பார்த்த பின்னரே செந்தாழை உறங்குவாள். அதனால் பிறந்த தன் பெண் மகளுக்கு தாரா என்று  பெயர் சூட்டினாள். தாராவுக்கு மூத்த சகோதரர்கள் இரண்டு பேர். அவர்கள் தாராவைக் கண்ணின் மணி போல காத்து வந்தனர். அவள் பதினான்கு வயதை அடைந்து பூப்பெய்தியதற்குப் பிறகு பல கட்டுப்பாடுகளை விதித்தனர்.


தாராவின் தந்தை  சாத்தனார் பெரும் நிலக்கிழார். புரட்சிப் படைகள் அவ்வப்போது கிடங்குகளில் சேமித்து வைத்திருந்த தானிய மூட்டைகளைக் களவாடிச் செல்வதுண்டு. இது சாத்தனாருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. அதனால் தன் நிலத்தைப் பாதுகாப்பதற்காக ஆயுதம் ஏந்திய சிறிய படை ஒன்றை வைத்திருந்தார்.


தாரா ஒவ்வொரு வெள்ளியன்றும் அருகிலுள்ள வனத்தின் அருவியில் குளிக்கச் செல்வாள். துணைக்கு அவள் தோழிகளும் காவலுக்கு வீரர்களும் உடன் வந்தனர்.


ஒரு நாள் அருவிக்குச் சென்ற போது அங்கு ஒரு ஆடவன் அருவியாற்றில் நீந்திக் கொண்டிருந்தான். அம்மனிதன்  உடை எதுவும் அணியவில்லை.  பெண்கள் சற்று ஒதுங்கினால்  சென்று விடுவதாக கூறினான்.


தாராவும் தோழிகளும் ஒரு புதருக்கருகே மறைந்தனர். அவ்வாடவன் நிர்வாணமாகச் சென்றுக் கொண்டிருந்ததைத் தோழிகளின் தூண்டுதலினால் ஒரு கணம் பார்த்தாள். மரச்சிற்பம் போன்று வார்க்கப்பட்ட அவன் தேகத்தைக் கண்டு  முகத்தை மூடிக் கொண்டாள். அதைக் கவனித்துப் புன்சிரிப்புடன் அகன்றான்.


அதன் பின் ஒவ்வொரு முறையும் அருவிக்கு வரும் போது அவ்வாடவனும்  வந்தான். தாராவுடன் வலிய பேசினான். அவர்கள் இருவருக்கிடேயே காதல் உண்டானது. இதை அறிந்து காவலுக்கு வந்த வீரர்கள் தாராவின் சகோதரர்களிடம் தெரிவித்தனர்.

அவன் கிராமத்திற்குச் சென்று அவனைப் பற்றி தகவல் சேகரித்தனர். அவன் பெயர் சேதுபதி என்றும் அவன் புரட்சிப்படையைச் சேர்ந்தவன் என்றும் அறிந்தனர். இதன் பிறகு தாராவின் காதலுக்கும், சேதுபதியைச் சந்திப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.


ஒரு நாள் தாரா வீட்டில் இல்லை. சேதுபதியுடன் அவள் கிராமத்தை விட்டுச் சென்றிருந்தாள். சகோதரர்கள் காட்டில் அருவிக்கு அருகில் இருவரையும் தேடிக் கண்டுபிடித்தனர். அப்போது இருவரும் கலவி சுகத்தில் மெய் மறந்திருந்தனர்.


சகோதரர்கள் வெறி கொண்டு சேதுபதியை அக்கணமே கொன்றனர். தாரா அருவியில் விழுந்தாள். அவள் உடல் அருவியாற்றில் வேகமாக அடித்துச் செல்லப்பட்டது. பலவாறு தேடியும் அவள் உடல் கிடைக்கவில்லை. அவள் இறந்து விட்டாள் என்றே அனைவரும் நினைத்தனர்.


ஆனால் தாரா உயிர் பிழைத்திருந்தாள். வேறு ஒரு கிராமத்தில் விருஷி என்ற காவல் தெய்வத்தின் கோவிலருகே அலைந்துக் கொண்டிருந்தாள். அவள் உடல் வனப்பைக் கண்டு அங்கு வரும் ஆடவர் சிலர் அவளுடன் உடலுறவு கொண்டார்கள். ஆனால் அவர்கள் யாரிடத்தும் அவள் நிறைவைக் காணவில்லை. சேதுபதியிடம் நிறைவேறாது தடைபட்ட சுகம் வேறு எந்த ஆடவனிடமும் அவளுக்குக் கிடைக்கவில்லை.


சில நாட்கள் கழித்து அங்கு வந்த புரட்சி வீரர்களில் ஒருவன் அவளை அடையாளம் கண்டு கொண்டான். தான் சேதுபதியின் நெருங்கிய தோழன் என்றும், தங்கள் படையில் சேரும்படி வற்புறுத்தினான்.


தாரா அதற்கு இணங்கினாள். தன் காதலனைக் கொன்ற குடும்பத்தினரைப் பலி வாங்க அவர்கள் உதவியைக் கேட்டாள். அதன் பின் ஒரு வாரம் கழித்துப் புரட்சி படையுடன் பிறந்த கிராமத்திற்குச் சென்று தன் சகோதரர்கள் இருவரையும் வெட்டிக் கொன்றாள்.


அதன் பிறகு அணையாத அனலைத் தன்னுள் அடக்கி, காட்டு தேவதையின் அடங்கா வெறியுடன் புரட்சிப் படையின் பல போர்களில் பங்கெடுத்து, எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாக தாரா விளங்கினாள்.


                                           ———-*************———-

                                   

அச்சிறு கிராமத்தில் குடியானவர்கள் வயலில் வேலை செய்துக் கொண்டிருந்தார்கள். வயலை ஒட்டி சிறு குடிசைகள் இருந்தன. சிறார்கள் உரத்தக் குரலுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.கோழிகளும் ஆடுகளும் சிறுவர்களிடேயே ஓடிக் கொண்டிருந்தன. முதியவர்கள் கிராமத்தின் மண்டபங்களில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர்.


அக்கிராமத்தின் சோம்பல் கலந்த அமைதி திடீரென குலைந்தது. ஆயிரக்கணக்கான  புரவிகள் ஒளி வேகத்தில் பறந்தன. அவற்றின் மீது அமர்ந்திருந்த வீரர்கள் உரத்த குரலில் கத்தியவண்ணம்  சென்றுக் கொண்டிருந்தனர்.


கிராமத்து மக்கள் இக்காட்சியை கண்டு பெரிதும் வியக்கவில்லை. இவர்கள் புரட்சியாளர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள்.


"நாளைக்குள் திரிவிக்ரமன் தலை கோட்டை மதிலில் தொங்கும்"  என்று  ஒரு முதியவர் கூறினார்.


மக்களுக்குத் திரிவிக்ரமன் ஆட்சி மீது விருப்பமில்லை. விவசாயி மற்றும் எளிய மக்களிடம் கடுமையான முறையில் வரி வசூலிப்பது அவர்களுக்கு அதிருப்தியைத் தந்திருந்தது. பெரும் வணிகர்கள், அந்தணர்கள், பெருநிலக் கிழார்களுக்கு  ஆதரவாக அரசு இருந்தது. எளியவர்களை அட்டை போல உறிஞ்சி  வலியவர்களை ஆதரித்தது. 


மகர தேசத்திற்கு நிலையான ஆட்சி அமையவில்லை. இதன் மண் அக்னியின் இயல்பைக் கொண்டது. எதுவும் நிலைக்காது. ஒன்று தோன்றும். அது சிதையும். மீண்டும் புதியது தோன்றும். அரசகுலமும், புரட்சியாளர்களும் மாறி  மாறி ஆட்சி செய்தார்கள்.


புரட்சியாளர்களின் குதிரைப்படை புயல்  வேகத்தில் மதுராபுரியை அடைந்தது. இவர்கள் வருவதை ஏற்கனவே அறிந்திருந்ததால் கோட்டைக் கதவுகள் மூடப்பட்டிருந்தன.


வீரர்கள் கயிறுகளைக் கோட்டை மதில்கள் மீது  செருகி ஏறினார்கள். அவர்களுக்குத் துணையாக பின்னிருந்த வீரர்கள் எரி ஆயுதங்களைக் கோட்டை மீது செலுத்தினர். மேலும் சில வீரர்கள் கோட்டைக் கதவைப் பெரும் மரக்கட்டை கொண்டு தகர்க்க முயன்றனர். பதிலுக்குக் கோட்டை  வீரர்கள் அம்பு மாரி  பொழிந்தனர் 


சில மணி நேரங்களில் கோட்டைக்கதவு தகர்க்கப்பட்டது. எதிரி வீரர்களை வெட்டி சாய்த்து படை முன்னேறி அரண்மனைக்குள் சென்றது. 


அரண்மனைக்குள் இருந்த மணிமாறன் தீரத்துடன் போராடினான். ஆனால் எதிரி வீரர்களின் எண்ணிக்கை அதிகம். தான்  இறப்பது உறுதி என்று எண்ணினான். 


அப்போது முகம் மூடப்பட்டிருந்த ஒரு வீரன் மணிமாறன் முன் தோன்றினான். அவ்வீரன் ஒரு நொடி தயங்கி தன் முகமூடியைக் களைந்தான். அது ஒரு பெண். பூரிசிவஸ் ஆலயத்தில் புணர்வுக்கு அழைத்த அதே பெண். அவள் வேகமாக மணிமாறன் கைகளைப் பற்றி தன்னுடன் வருமாறு அழைத்தாள். இருவரும் கோட்டையை விட்டு வெளியேறினார்கள். கோட்டை மதிலில் செருகப்பட்டிருந்த  திரிவிக்ரமன் மற்றும் எழில்குமரனின் தலைகளை பார்த்து மணிமாறன் உடல் அதிர்ந்தது.


அப்பெண் விரைந்து வருமாறு மணிமாறனை அழைத்தாள். இருவரும் குதிரையில் மின்னல் வேகத்தில் சென்றனர்.


சில மணி நேர குதிரைப் பயணத்திற்குப் பின் ஒரு ஏரி தெரிந்தது. இளைப்பாறுவவதற்காக அப்பெண் குதிரையை நிறுத்தினாள்.  தன் பெயர் தாரா என்றாள்.


"என்னை எதற்காக கொல்லாமல் உன்னுடன் அழைத்துச் செல்கிறாய்"


"புரட்சிக்கு சிறு துரும்பும் உதவும் என்ற எண்ணத்தில்.”


"என் மீது உனக்கு கோபம் இல்லையா? பூரிசிவஸ் ஆலயத்தில் உன்னை அவமதித்ததற்கு. அன்று பெரும் மனக்கொந்தளிப்பில் இருந்தேன்." 


தாரா மணிமாறனை நெருங்கி அவன் உதட்டில் தன்னுடையதைப் பதித்தாள். மணிமாறனின் கைகள் தாராவின் உடலெங்கும் பரவியது. இரவு வந்தது. வானின் நிலவு அவர்கள் இருவரின் மோக நாடகத்தை வெட்கமின்றி பார்த்துக் கொண்டிருந்தது.

                      

                                    —————-*************——————



முல்லைநகரம் பூரிசிவஸ் ஆலயத்தினால் பெயர் பெற்ற நகரம். இந்த ஆலயம் திரிவிக்ரமனின் தந்தை தேசிங்குராஜனால்  கட்டப்பட்டது. அவன் போர்க்கைதிகளைக் கொண்டு இவ்வாலயத்தை நிறுவினான். கோவிலின் மையத்தில் உயரமான பூரிசிவஸின்  சிலை இருக்க, அதன் முன் பெரும் பலிபீடம் இருந்தது. அருகே சிறு தேவர்களின் சிலைகளும் இருந்தன. கோவிலுக்குப் பின்னே ஒரு குகை இருந்தது. அதனுள்ளே பூரிசிவஸ் குறித்த தொன்மங்கள் ஓவியங்களாக வரையப்பட்டிருந்தது.


மகர தேசத்தில் ஆதி காலம் முதல் இரு இனக்குழுக்கள் இருந்தன. ஒன்று இறை நம்பிக்கை கொண்டவர்கள். இவர்களுக்குப் பூரிசிவஸ் முதன்மையான கடவுள். இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும்  ஒரு கடவுள் உருவத்தில் வணங்கினார்கள். இவர்களுக்கு ஆதரவாக அரசகுலத்தினர் இருந்தார்கள்.  இரண்டாவது  குழுவினர் இறை நம்பிக்கை அற்றவர்கள். உருவ வழிப்பாட்டுக்கு எதிரானவர்கள்.  மாறா இயற்கையின் விதிகளே கடவுள் என்றும் அது அருவமானது என்ற நம்பிக்கை கொண்டவர்கள்.  இயற்கையை அதன் தூய்மையான வடிவில் வணங்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். இந்த இனமே புரட்சிக்குழுவாக உருமாறி மன்னராட்சிக்கு எதிரான ஒரு சக்தியாக அமைந்தது. 


இவ்விரண்டு இறை நம்பிக்கையினரைத் தவிர்த்து மூன்றாவது வகையினரும் இருந்தனர். இவர்கள்  வனத்தில் தியானம் செய்து, ஆன்மாவை அறியும் யோகிகள். இவ்வுலகின் தொடர்பை முற்றிலும் தவிர்த்து கடுந்தவம் செய்பவர்கள்.


பூரிசிவஸ் இறை நம்பிக்கை அற்றவர்களுக்கு  எதிரி. நம்பிக்கையற்றவர்களின்  ஒரு சேயைக் கூட விடாது  முற்றழிக்க வேண்டும் என்பது அவன்  கட்டளை. அரச குடும்பத்துக்கும் புரட்சிக்குழுவினருக்கும் இடையே இருந்த விரோதத்தின் வேர் இறை நம்பிக்கையே ஆகும்.


திரிவிக்ரமனின் ஆட்சி  கவிழ்ந்த பிறகு எஞ்சியிருந்த  அரசப்படைகள் அனைத்தும் ஆலயங்களைப் பாதுகாப்பதில் ஈடுபட்டிருந்தனர். புரட்சிப் படையினர் ஆலயங்களை இடித்து தரைமட்டடமாக்குவார்கள் என்பதே காரணம்.  முல்லை நகரின் பூரிசிவஸ்  ஆலயத்தைச்  சுற்றி நூற்றுக்கணக்கான வீரர்கள் காவலுக்கு இருந்தனர். 


சிறிது நேரத்தில் புரட்சிப் படையினர் முல்லை நகருக்குள் நுழைந்தனர். அவர்கள் பூரிசிவஸ் ஆலயத்தை நெருங்க விடாமல் அரச படையினர் தீரத்துடன் எதிர் கொண்டனர். இரு படைக்கும் இடையே கடுமையான போராட்டம் இருந்தது. புரட்சிப் படையினர் பின் வாங்கிச் சென்றனர். அவர்கள் மீண்டும் அதிகமான வீரர்களுடன் வரக் கூடும் என்று அரச படையினரின் தலைவன் கூறினான்.


புரட்சி படையினர் சென்ற சிறிது நேரத்தில் தாராவும் மணிமாறனும் முல்லை நகருக்கு வந்தனர். மணிமாறன் தான் முல்லைநகரிலேயே தங்கி பூரிசிவஸ் ஆலயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறினான். தாரா அதற்குத் தேவையிருக்காது என்றும், மகர நாட்டின் எந்த ஆலயத்துக்கும் அழிவிருக்காது என்று கூறினாள். மணிமாறன் அதை நம்பவில்லை. அவனை விட்டு பிடிக்க வேண்டும் என்று தாராவும் அன்றிரவு முல்லை நகரிலேயே தங்க சம்மதித்தாள்.  


அடுத்த நாள் பெரும் படையுடன் புரட்சி வீரர்கள் மீண்டும் நகருக்குள் நுழைந்தனர். மணிமாறன் அரச படையுடன் சேரத் துடித்தான். அவர்கள் ஆலயத்தை நெருங்கியவுடன் எதிர் திசையிலிருந்து புரவியில் ஒரு முதியவர் வந்தார்.


"நிறுத்துங்கள்"  - என்று புரட்சி படையை நோக்கி கைகளைத் தூக்கினார். புரட்சி படையின் தலைவனிடம் ஒரு ஓலையை குடுத்தார். அதைப் படித்த  தலைவன் தன் வீரர்களைப் பின் வாங்க ஆணையிட்டான். புரட்சி படையினர் முல்லை நகரை விட்டு வெளியேறினர்.


"இவர் யார்" - என்று வியப்புடன் மணிமாறன் தாராவிடம் வினவினான்.


"மேகநாதன். எங்கள் குழுவின் தலைவருக்கு ஆலோசகர். நான் கூறினேன் அல்லவா. ஒரு ஆலயத்திற்குக் கூட தீங்கு வராது என்று. அதற்கு காரணம் மேகநாதர் தான்."


"மேகநாதனுக்கு இறை நம்பிக்கை உண்டா?


"இல்லை. ஆனால் மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்கத் தெரிந்தவர்."                            


                                 —————-*************——————


அடுத்த நாள் காலைப் பயணத்திற்குப் பின் மங்களபுரி நகரத்தை அடைந்தனர். மங்களபுரி மகர தேசத்தின் மிக முக்கியமான வர்த்தக நகரம். மகர தேசத்தின் பல புள்ளிகளளை வர்த்தகத்தின் மூலம் இணைக்கும் கோடு.


நகரத்தின் நுழைவாயிலில் செல்வத்திற்குக் குறியீடான மேகலாதேவியின்  கோவில் இருந்தது. அங்கிருந்து நகரத்தின் மையத்திற்குச் செல்லும் பாதையில் மாடுகள், மற்றும் கை வண்டிகள் பயணித்தன. அது தவிர நடை செல்லும் மக்களின் கூட்டமும் நெரிசலை உண்டாக்கியது.


இருவரும் தங்கள் குதிரைகளிலிருந்து இறங்கி மெதுவாக கூட்டத்திற்குள் நுழைந்து நடந்தனர்.


புரட்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றியபின் அந்நகரம் குருதிக்களரியாக இருக்கும் என்று நினைத்திருந்த மணிமாறன் ஏமாந்தான். மாறாக முன்னை விட அந்நகரின் செயல்பாட்டில் ஒழுங்கு கூடியிருந்தது.


காய்கள், பழங்கள் மற்றும் அரிசி பருப்புகள் விற்கும் கடைகள் முதலில் தெரிந்தன. இவற்றை சிறு வணிகர்கள் மூட்டைகளாக கொள்முதல் செய்து கொண்டிருந்தனர்.


ஒவ்வொரு கடைக்கு முன் வண்டிகளிலிருந்து பொருட்களை இறக்கியும் ஏற்றியும் விலை செய்யும் கூலித் தொழிலாளிகளின் குரலும் அவர்களை மேற்பார்வை இடுபவர்களின் கட்டளைளைக் குரலும் கேட்டது. கடைகளின் உள்ளே கணக்கர்கள் அவர்களுக்கு உதவி செய்யும் ஊழியர்கள் இருந்தனர். கடைக்குப் பின் புறத்தில் கிடங்குகள் இருந்தன.


உணவுக்குச் சேர்க்கப்படும் மிளகு, வத்தல் போன்ற வாசனைப் பொருட்களுக்கு மங்களபுரியில் பெரும் தேவை இருந்தது. வடக்கே இருந்து இப்பொருட்கள் மூட்டைகளில் வண்டிகள் மூலம் கடைகளில் இறக்கப்பட்டன.


மேலும் வீதியில் செல்ல ஆபரண கடைகள் தெரிந்தன.  ஆபரண கடைகளில் இளம் பெண்களும் அவரகள் காதலர், கணவர்களுடன் காணப்பட்டனர்.  அங்கு தங்கம், வைரம், முத்து, பவளம் போன்றவற்றினால் செய்யப்பட்ட விதவிதமான ஆபரணங்கள் கண்ணைக் கவர்ந்தன.


பல விதமான நறுமணப் பொருட்கள், திரவியங்கள் விற்கும் கடைகளில் இளைஞர்களின் கூட்டம் நிறைந்திருந்தது. மங்களபுரி வாசனைத் திரவியங்களுக்கு  பெயர் பெற்ற நகரம். பல விதமான பூக்களில் இருந்து செய்யப்பட வாசனைப் பொருட்கள் மகர தேசம் முழுதும் பிரசித்தி பெற்றது. 


சிறிது தூரம் சென்ற பின் குறுவாட்கள் மற்றும் சிறு ஆயுதங்கள் விற்கும் கடைகள் தெரிந்தன. சில ஆயுதங்களின் கைப்பைடிகள் ஆபரணக் கற்கள் மற்றும் பொன்னால் செய்யப்பட்டு அழகிய வேலைப்பாடுடன்  இருந்தன.


நகரத்தின் மையத்திற்கு வந்ததும் ஒரு மண்டபத்தின் முன் வணிகர்கள் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குப் புரட்சியாளர்களின் அதிகாரிகள் புதிய விதிகளை விளக்கிக் கொண்டிருந்தனர்.


பொருட்களுக்குக் குறிப்பிட்ட சதவிகிதற்கு மிகையாக லாபம் வைக்கக் கூடாது. வேலை செய்யும் ஊழியர்களுக்குக் குறிப்பிட்ட ஊதியத்திற்குக் குறைவாகத் தரக்கூடாது. ஊழியர்களை  குறிப்பிட்ட நேரம் தாண்டி வேலை வாங்கக் கூடாது. விற்பனையில் குறிப்பிட்ட சதவிகிதம் அரசுக்கு வரியாகக் கட்ட வேண்டும். இந்த விதிகள் மீறினால் அளிக்கப்படும் தண்டனைகளும் விவரமாக அதிகாரிகள் விளக்கினர்.


"தாரா நான் இதை எதிர்பார்க்கவில்லை. இதற்கு முன் புரட்சியாளர்கள் ஆட்சியின் போது வணிகம் முழுதும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. தனி மனித வர்த்தக முயற்சிகள் நசுக்கப்பட்டது."


"திரிவிக்ரமன் ஆட்சியில் வணிகர்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் இருந்தது. மிகையான லாபம், வரி கட்டாமை, ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் என்று வணிகர்களுக்குப் பல சலுகைகள் இருந்தது. ஆனால்  நாங்கள் நியாயமான வணிகம் மற்றும் வர்த்தகத்துக்கான விதிகளை  உருவாக்குவோம். எங்கள் புதிய விதிகளினால்  மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். விற்பனை அதிகரிப்பதனால் வியாபாரிகளின் நிகர வருமானம் பல மடங்கு அதிகமாக இருக்கும். இரு சாராருக்கும் நன்மையை அளிக்கும். வர்த்தகர்களிடமிருந்து கிடைக்கும் வரிகள் கொண்டு மகர தேசம் முழுதையும் இணைக்கும் அகல சாலைகள் இடப்படும். வழிப்போக்கர்கள் இளைப்பாற சத்திரங்கள் அமைக்கப்படும். இதனால் வணிகர்கள் எங்கள் புரட்சியாளர்களுக்கு இணக்கமாக மாறுவார்கள்."   


"புரட்சியாளர்களின் சிந்தனையில் இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது."


"முன்பு எங்களை வழிகாட்டியது வீரத் தளபதிகள். இப்போது கற்றறிந்த சான்றோர்கள் எங்கள் தலைமைக்கு வழி காட்டுகிறார்கள். இதற்கு நேர்மாறாக திரிவிக்ரமன்  ஆட்சி மூடர்களால் நிர்வகிக்கப்பட்டது. எங்கள் புரட்சிப்படை தலைநகரை வந்தடைய இரண்டு நாட்களே ஆகின. எங்கும் எதிர்ப்பு அறவும் இல்லை. அரசரின் படைகள் எங்களுக்கு வழி விட்டு ஒதுங்கின.”


மணிமாறன் மெளனமாக இருந்தான்.


"மணிமாறா நீ எங்கள் தரப்புக்கு வந்து விடு. உன் போன்ற மாபெரும் வீரர்களுக்குத் தக்க மரியாதை  நாங்கள் அளிப்போம்."


"நான் திரிவிக்ரமனுக்கும், அரச குலத்திற்கும் கடன்பட்டிருக்கிறேன்."


"அவர்களின் தலைகள் தான் கோட்டை மதில் சுவரில் தொங்குகிறதே .”


இருவரும் நகரத்தின் எல்லைக்கு அருகிலிருந்த சத்திரம் ஒன்றை அடைந்தனர். தாரா தன் உடைகளைக் களைந்து தரையில் படுத்துக் கொண்டாள். அவள் பின்புறத்தின் செழுமையைக் கண்டு மணிமாறன் தாபத்துடன் அவள் இடுப்பின் வளைவுகளில் கை வைத்தான்.


தாரா அவன் கைகைளைத் தள்ளி விட்டாள்.

                                                  

                           ———-**********————-


அடுத்த நாள் இருவரும் வில்லிபுரம் என்ற நகரை அடைந்தனர். அங்கு ஒரு நாள் தங்கி இளைப்பாறி விட்டு மீண்டும் பிரயாணத்தை தொடர்ந்தனர். வழியில் ஒரு ஆறு இருந்தது. அங்கு இருவரும் நீந்தி நீர் விளையாட்டுக்களில் ஈடுபட்டனர். நீந்தியபடியே கலவி செய்வதன் அலாதி சுகத்தை இருவரும் அடைந்தனர்.


இருவரும் ஓரு சிறு குடிலை அடைந்தனர். வீட்டிற்கு முன் பெரும் தோட்டம் இருந்தது. அங்கு வித விதமான பூக்கள் கண்ணுக்கு இனிமையும், நாசிக்கு சுகந்தத்தையும் அளித்தது.


"தாரா, இங்கு நமக்கென்ன வேலை."


"இன்று இரவு நாம் இங்கு தங்கி மீண்டும் பிரயாணத்தைத் தொடர்வோம்."


"இங்கு இருப்பவர்  யார். உனக்குத் தெரிந்தவரா."


ஆம்.  என் காதலன்."


அப்போது குடிசையிலிருந்து ஒரு வாலிபன் வந்து தாராவை அணைத்தான். அவளைத் தூக்கி குடிசைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டான்.


மணிமாறன் வீட்டின் வெளியே அமர்ந்திருந்தான்.


உள்ளே கேட்ட சத்தம் அவனுக்கு கிளர்ச்சியை உண்டாக்கியது. ஆனால் தாராவின் மீது அவனுக்கு எந்த கோபமும் இல்லை. மகர தேசத்தின் பெண்கள் ஒரு ஆணுடன் மட்டுமே உறவு கொள்பவர்கள்  இல்லை. திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் பல ஆண்களுடன் உறவு கொள்வது மிக சாதாரணமாக நிகழ்வது.


சிறிது நேரத்திற்குப் பின் தாரா வெளியே வந்தாள்.


"மணிமாறா வீடு சிறியது. ஒரு அறை மட்டுமே உள்ளது. அதனால் நீ இரவு வெளியே தான் உறங்க வேண்டும்."


இந்த இம்சை வேறா என்று மணிமாறன் தனக்குள் நினைத்துக் கொண்டான். தாரா முகத்திலிருந்த நாணம் கலந்த புன்னகையை அவன் கவனிக்க தவறவில்லை.


தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த மணிமாறன் அங்கு சில ஓவியங்கள் தீட்டப்பட்டிருப்பதைப் பார்த்தான். அனைத்தும் நிர்வாணமான பெண்கள், ஆண் - பெண் புணரும் ஓவியங்களாக இருந்தது.


மகர தேசத்தின் சிற்பிகள், ஓவியர்கள் ஏன் காமத்தையே கட்டிக் கொண்டு அழுகிறார்கள் என்று மணிமாறன் சலித்துக் கொண்டான்.


அடுத்த நாள் காலை தாரா மணிமாறனை அழைத்தாள்.  உள்ளே தாரா புணர்வுக்கு பின் படுத்திருந்த காட்சியை ஓவியமாக அவள் காதலன் வரைந்திருந்தான்.


எப்படி இருக்கிறது என்று தாரா வெட்கத்துடன் கேட்டாள்.


மணிமாறன் அவள் மீது பாய்ந்து தரையில் வீழ்த்தினான். அவள் காதலன் கதவை மூடி வெளியே சென்றான்.


மதிய நேரம் ஆனதும் இருவரும் மீண்டும் பிரயாணத்தைத் தொடர்ந்தனர்.


"தாரா நான் பல முறை கேட்டு விட்டேன். என்னை எங்கு அழைத்து செல்கிறாய் என்று நீ இன்னும் கூறவில்லை.".


"உனக்கு எங்கள் புரட்சிக் குழுவின் மீது விருப்பமில்லை என்று தெரியும். உன்னை நான் வற்புறுத்த மாட்டேன். ஆனால் நீ இந்த மகர தேசத்தின் மீது பற்றுள்ளவன் என்றும் நான் அறிவேன். அதனால் நான் அழைத்துப் போகும் இடத்திற்கு நீ மறுக்காமல் வர வேண்டும்."


"எங்கு?"


"பொன்னகரத்தில் இருக்கும் கடிகைக்கு. அங்கு நாம் மூவரைச் சந்திக்கிறோம்.


                                      ———-**********————-


 பொன்னகரம் இன்னும் சில மணி நேரப் பிரயாண தூரத்தில் இருந்தது. குதிரைகள் மிகவும் களைத்திருந்தன.


மணிமாறனுக்குத்  தான் திரிவிக்ரமனுக்குக் கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. அவன் தாராவுடன் இணைந்ததன் காரணம் புரட்சிக்குழுவின் தலைவனான கிள்ளிவளவனைக் கொல்வது. பொன்னகரத்தில் தான் சந்திக்கப் போவது கிள்ளிவளவனா? தாரா மூவர் என்று கூறினாள். அவர்கள் கிள்ளிவளவனுக்குச் சமமான அதிகாரம் கொண்டவர்கள் என்று யூகித்தான். பெரும் எதிர்காலத் திட்டங்கள் தீட்டப்படப் போகின்றன.


மணிமாறனின் கேள்விகள் அனைத்திற்கும் நேரடியான பதில் கூறாமல்  தாரா தவிர்த்து வந்தாள். இனியும் அவள் தன்னை லேசாக எடுத்துக் கொள்ள அனுமதிக்கக்  கூடாது.  அவன் புரவியை நிறுத்தி ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்தான்.


மணிமாறன் தன்னைப் பின்தொடராததை உணர்ந்த தாரா அவனிடம் வந்தாள்.


"இன்னும் சிறிது நேரப் பிரயாணம் தான். அதற்குள் என்ன சோர்வு?"


"என்னை நீ மிக எளிதாக எடை போட்டு விட்டாய். நீங்கள் போடும் திட்டங்கள் என்ன என்பது அறியாமல் நான் இவ்விடத்தை விட்டு அகல்வதில்லை."


"உனக்கு என்ன தெரிய வேண்டும்?"


"நாம் சந்திக்கப் போகும் மூவர் யார்?"


"அக்னிதேவன், மேகநாதன் மற்றும் நீலகண்டன். பொன்னகரத்தில் நம் தேசத்தின் எதிர்காலம் குறித்து ஒரு ஆலோசனைக்  கூட்டம் நடை பெறப்போகிறது. இவர்களுடன்  எங்கள் குழுவின் தலைவன் கிள்ளிவளவனும் இணைவான்."


"இதில் என் பங்கென்ன?"


"நம் தேசம் இன்னும் பல நூற்றாண்டுகள் ஸ்திரத்தன்மைக்  கொண்டதாக மாறுவதற்கான அரசியல் திட்டங்கள் பொன்னகரத்தின் கடிகையில் விவாதிக்கப்படுகிறது.  அக்னிதேவன் சில உண்மைகள் அறிந்திருக்கிறார். இது தொடர்பாக  நீண்ட பயணங்களை நாம் இருவரும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. நான் அறிந்தது அனைத்தும் கூறி விட்டேன். போதுமா."


"எதிரியான என்னைத் தேர்ந்தெடுத்ததன் காரணம்."


"நாட்டு மக்களை ஒருங்கிணைப்பதற்காக. இதன் மூலம் எதிர்த்தரப்புடன்  இணைந்து

செயலாற்றும் எங்கள் விழைவை உன் அணிக்கு தெரியப்படுத்துகிறோம் . இது அக்னிதேவனின் முடிவு. கிள்ளிவளவன் உட்பட மற்ற யாரும் இது பற்றி அறியவில்லை."


"நான் கிள்ளிவளவனை அறிவேன். மற்ற மூவர் யார்."


"இந்த தேசத்தின் அரசியலமைப்பை நிர்மாணிக்கப் போகும் சிற்பிகள். நாளைய சரித்திரம் கிள்ளிவளவனை விட இவர்கள் மூவரைத் தான் அதிகம் பேசும். "


"நாளைய சந்ததியினர்  சரித்திரம் மூலம் அறிவதற்கு முன் தற்கால சமூகம் இவர்கள் குறித்துத்  தெரிந்துக்  கொள்வது அவசியம்.  இவர்கள் மூவரைப் பற்றி, இவர்களின் முழு வரலாற்றை ஒரு கதை போல கூறு. "


தாரா மணிமாறன் அருகில் அமர்ந்தாள். மூவரின் வரலாற்றைக்  கூற ஆரம்பித்தாள். 

                                      

                                                   



                                          அக்னிதேவன்


தாடகை  என்னும் அடர்வனம் சான்றோர்கள் வாழும் உறைவிடமாக திகழ்ந்தது. அவ்வனத்தில் ரிஷிகள் ஆசிரமக் குடில்கள் அமைத்துத் தங்கள் ஞானத்தை மாணவர்களுக்கு அளித்து வந்தனர். உயர்ந்த காட்டு மரங்கள், ரீங்காரமிடும் வண்டு பூச்சிகள், பல்வகைப் பறவைகளின் கானம், அவ்வப்போது கேட்கும் விலங்குகளின் உறுமல் என இயற்கை எழில் பூக்கும் இவ்வனம் கல்விக்கு உகந்ததாக அமைந்தது. தாடகை வனத்தில்  காட்டுவாசிகளும் வசித்து வந்தனர். அவர்கள் ஆசிரமக் குடில்களுக்கு அருகே செல்வதற்கு அனுமதி இல்லை. 


இடும்பன் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த காட்டுவாசி சிறுவன். அவ்வனம் தான் அவனைச் சீராட்டி வளர்த்தது. மரங்களில் தொற்றி, நதிகளில் நீந்தி, யானை மீது சவாரி செய்து சிறுவன் அக்காட்டின் இளவரசனாக வாழ்ந்தான்.


வெறும் உணர்வுகளால் உந்தப்பட்டு வாழ்ந்த இடும்பனுக்கு முதன் முறையாக சிந்தனை துளிர் விட்டது அவனது பத்தாவது வயதில்.  ஒரு நாள் இரவுப்பொழுதில் மரத்தின் உச்சியில் படுத்துக்  கொண்டு வானத்தில் இருக்கும் நிலவைப்  பார்த்த போது அச்சிந்தனை தோன்றியது. நிலவு  பூமியைச் சுற்றுகிறதா அல்லது அதற்கு நேர்மாறாகவா என்ற கேள்வி எழுந்தது. பூமியில் வசிக்கும் தனக்கு நிலவு சுற்றுவதாக தோன்றுமானால், நிலவில்  இருக்கும் மனிதனுக்கு பூமி தன்னைச் சுற்றுவதாக தோன்றும் அல்லவா. இந்த அறிதல் அவன் மனதில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது.


அதன் பிறகு தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை வேறு பார்வையுடன் கவனிக்க  ஆரம்பித்தான். மண், கல்லுக்கு இல்லாத தன்னுணர்வு ஏன் விலங்குகளுக்கு இருக்கிறது? தாவரங்களுக்குத் தன்னுணர்வு உள்ளதா? பொருட்களைப் பகுத்துக் கொண்டே இருந்தால் இறுதியாக பகுக்க முடியாத நுண் துகள் உள்ளதா?  அவன் கேள்விகள் நீண்டன. பதில்கள் இல்லை. தனக்குக் கற்பிக்க குரு ஒருவர் தேவை என்பதை உணர்ந்தான்.


நதியின் அக்கரையில் ஒரு ஆசிரமம் இருப்பதைக் கண்டு ஒரு நாள் அங்கு சென்றான்.  அது தேவதேவன் என்னும் ரிஷியின் ஆசிரமம். மறைந்திருந்து அங்கு நடப்பதைக் கவனித்தான். தன்னை அங்கு இருக்கும் மாணவன் போல உருமாற்றிக் கொண்டு ஆசிரமத்தில் சேர்ந்தான். 


தன் பெயரை அக்னிதேவன் என்று மாற்றிக் கொண்டான். ஆசிரமத்தில் கிடைத்த கல்வியின் மீது வெகு விரைவிலேயே அவனுக்கு சலிப்பு வந்தது. அங்கு சொல்லப்படும் ஆத்மா, மறுபிறப்பு, கர்மா இது எதன் மீதும் அவன் மனம் பதியவில்லை. அவன் கற்க விரும்பியது இயற்கையை.  தன்னைச் சுற்றி எங்கும் திகழும் மாபெரும் பிரபஞ்சத்தின் மர்மத்தை. அக்கல்வி அவனுக்கு ஆசிரமம் வழங்கவில்லை.


அவன் ஆசிரமத்தை விட்டு வெளியேறி மீண்டும் வனத்தில் சுற்றி அலைந்தான். ஒரு நாள் நதியில் குளித்துக் கொண்டிருந்த குருதத்தன் என்னும் ரிஷி ஒருவரைக் கண்டான். அவர் மீது அவனுக்கு ஈர்ப்பு வந்தது. இவரே தனக்கு ஞானத்தந்தையாக இருக்க முடியும் என்று அவன் உள்ளுணர்வு கூறியது.  குருதத்தன் அவனைத் தன் மாணாக்கனாக ஏற்றுக் கொண்டார்.


பிரபஞ்சத்தின் தோற்றம், அணுக்களின் இயல்பு, உயிர்களின் பரிணாமம்  என்று அளவில்லா ஞானத்தைக் குருதத்தன் அவனுக்கு அளித்தார். இவை எல்லாம் அவருக்கு எவ்வாறு  தெரியும் என்று அக்னிதேவன் வியந்ததுண்டு. மற்ற ரிஷிகள் போல இவரும்  தியானத்தில் இருக்கும் போது இறைவன் அளித்த வரமா என்று அவரிடம் ஒரு முறை கேட்டான். தன்னைச் சுற்றி வியாபித்திருக்கும் இயற்கையைக் கூர்மையுடன் கவனிப்பதே உயர்ந்த தியானம் என்று குருதத்தன் அவனுக்கு விளக்கினார். 


பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மகர தேசத்து அரசவையில் நடக்கும் தத்துவ விவாதத்தில் கலந்து கொள்ள குருதத்தன் அக்னிதேவனுடன் சென்றார். ஒவ்வொருவரும் தங்கள் தத்துவ ஞானத்தை தர்க்கம் மூலம் நிலை நாட்ட வேண்டும். எதிராளியின் தத்துவத்தை அதே தர்க்கத்தைக் கொண்டு உடைக்க வேண்டும். விவாதத்தில் வெற்றி பெற்று குருதத்தன் இறுதிச் சுற்றில் சுக்ரதேவன் என்னும் ரிஷியுடன் வாதம் செய்தார். தன்னுடைய கூர்மையான தர்க்கம் மூலம் சுக்ரதேவன் வென்றார்.


வனத்திற்குத் திரும்பிய குருதத்தன் மனம் உடைந்துப் போயிருந்தார். சில நாட்களிலேயே மரணம் எய்தினார். குருவை இழந்த அக்னிதேவன் பித்துப் பிடித்தவன் போல இருந்தான். பிரபஞ்சத்தின் உண்மையை அறிய தர்க்கம் மட்டும் போதாது. தர்க்கம் தாண்டிய வேறு ஒரு மொழி வேண்டும். அந்த மொழியைத் தான் கண்டறிய வேண்டும் என்று உறுதி பூண்டான்.


கடும் உழைப்புக்குப் பின் எண்கள் மற்றும் எழுத்துக்கள் கொண்ட புதிய மொழி ஒன்றை உருவாக்கினான். அதற்கு அட்சர கணிதம் என்ற பெயர் வைத்தான். அதன் மூலம் அவனுக்கு  விடை தெரியாத பல கேள்விகளுக்கு  விளக்கம் கிடைத்தது. 


ஒரு முறை  அவன் கையிலிருந்த  மண் பாத்திரம் கீழே விழுந்து உடைந்தது. உடைந்த அப்பாத்திரம் மீண்டும் முன் போல அதே பழைய நிலைக்கு கொண்டு வர ஏன் இயலவில்லை என்ற கேள்வி அக்னிதேவனைத் துளைத்தது. எந்தப் பொருளும், மற்ற பொருட்களுடன்  உராய்வதன் மூலம் தன் ஆற்றலை உஷ்ணம் மூலம் இழக்கிறது. இழந்த உஷ்ணத்தை மீண்டும் பெற முடியாது.  உஷ்ணம் இழந்த பொருள் உருமாறிய பின் மீண்டும் அதை பழைய நிலைக்குக் கொண்டு  வர இயலாது. எனவே இயற்கையில்  சிதைவு என்பதே சாஸ்வதம்.  பிரபஞ்சத்தில் சிதைவு பெருகுமே ஒழிய குறையாது. இந்த சிதைவுக் கோட்பாட்டைத் தன் கணித மொழி மூலம் நிரூபித்தான். 


அடுத்த  வருடத்தில் அரசவையில் நடந்த விவாதத்திற்கு அக்னிதேவன் கலந்துத் கொண்டான். இறுதிச் சுற்றின்  போது தர்க்கம் மூலம் இரு தரப்பிலும் நிரூபிக்க முடியாத நிலைக்கு விவாதம் நின்றது. அப்போது ஒரு புதிய  மொழி மூலம் தன்னால் நிரூபிக்க முடியும் என்று அக்னிதேவன் கூறினான்.


அதைப் பற்றி அறிந்துக் கொள்ள அனைவருக்கும் ஆவல் வந்தது.  அந்தப் புதிய கணித மொழியைப் புரிந்துக் கொள்ள யாராலும் இயலவில்லை. அவன் மோசடி செய்கிறான் என்று அனைவரும் குற்றம் சாட்டினார்கள். அரசன் அக்னிதேவனைக் கைது செய்ய உத்தரவிட்டான்.


இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுச் சிறையிலிருந்துத் தப்பிய அக்னிதேவன் கிள்ளிவளவனைச் சந்தித்தார். மகர தேசத்து அரசனைப் பழி வாங்க வேண்டும் என்றும் அவனை வீழ்த்த தன்னால் உதவ முடியும் என்று கூறினார்.


தன் அறிவியல் திறன் கொண்டு பல இயந்திர ஆயுதங்களை உருவாக்கி புரட்சிப் படையினருக்கு அளித்தார். இதற்கிடையே மகர தேசத்து அரசனாக திரிவிக்ரமன் முடிசூட்டினான். அவன் ஆட்சிக்கு வந்து பன்னிரண்டு வருடங்கள் கழித்து புரட்சிப் படையினர் ஆட்சியைக் கைப்பற்றினர். அதற்கு அக்னிதேவன் உருவாக்கிய இயந்திரங்கள் பெரிதும் உதவின.


தான் செய்த உதவிக்குக் கைம்மாறாக பொன்னகரம் என்ற நகரில் ஒரு மாபெரும் கடிகை ஒன்றை உருவாக்க அக்னிதேவன் அனுமதி பெற்றார். அங்கு உயர் தர அறிவியல், கணிதம், தத்துவம் மற்றும் இலக்கியம் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.  


சில மாதங்களுக்கு முன் அவர் கனவு நிறைவேறியது. பொன்னகரத்தில் கடிகை உருவாக்கப்பட்டது. மகர தேசத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் அமைப்பாக மாறியது.



                                         ———-**********—————


                                               மேகநாதன்


மல்லிபுரம் மகர தேசத்தின் பிரசித்திப் பெற்ற நகரம். அங்குக் கிடைக்கும் மல்லிப் பூக்களுக்கு மற்ற நகரங்களில் பெரும் தேவை இருந்தது. மல்லிப் பூக்களில் இருந்து வித விதமான வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் கலையை மகர தேசத்தினர் அறிந்திருந்தனர்.


 அந்நகரத்தின் பெரும் தனவந்தராக வல்லபன் இருந்தார். அவர் மனைவி அடிக்கடி நோய்வாய்ப்பட்டதால் மெலிந்த தேகத்தினை உடையவளாக இருந்தாள். அவர்களுடனுய ஒரே மகனாகிய மேகநாதனுக்கு வெகு நாட்களுக்கு பேச்சு வரவில்லை. பல மருத்துவர்கள், கோவில்கள் என்று அலைந்து ஆறு வருடங்கள் கழித்தே அவன் பேசினான். அவன் பேசிய முதல் வார்த்தை மல்லி.


மேகநாதன் பேச தொடங்கிய ஒரு மாதத்திலேயே அவன் தாய் இறந்தாள். மேகநாதனும் அவன் தந்தையும் இதனால்  நிலைக்குலையவில்லை. அவன் தாய் எப்போதும் படுக்கையில் இருமிக் கொண்டே இருந்தவள். அவள் குடும்பத்தினருடன் மகிழ்வாக செலவழித்த நேரங்கள் மிகக் குறைவு.


அவன் தாய் இறந்த பிறகு நீலாம்பரி என்பவள் வீட்டுக்கு அடிக்கடி வருகை தந்தாள். அவளும் வல்லபனும் வெகு நேரம் சிரித்தபடி பேசிக் கொண்டிருப்பார்கள். இரவு உணவுடன் மது அருந்துவார்கள். பிறகு இருவரும் படுக்கை அறைக்குச் சென்று விடுவார்கள்.


நீலாம்பரியின் வருகையை மேகநாதனும் ஆவலுடன் எதிர்பார்ப்பான். அவளுடைய மகள் மல்லிகாவும் உடன் வருவாள். அவளுடன் விளையாடுவது அவனுக்கு மிக விருப்பம். அவ்விளையாட்டுக்களில்  இருவரும் கணவன் மனைவி, அரசன் அரசி, தோழன் தோழி என்று பல வேடங்கள் போடுவார்கள். இரவானதும் இருவரும் ஒரே படுக்கையில் உறங்குவார்கள்.


ஒரு நாள் வீட்டுக்கு வந்த மல்லிகாவிடம் பெரும் மாற்றம் தெரிந்தது. மேகநாதனை அவள் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. எப்போதும் நாணத்துடன் தலையைக் குனிந்தவண்ணம் இருந்தாள். விளையாட்டுக்கு அழைத்தும் அவள் வர மறுத்தாள். அன்று இரவு அவள் வேறு அறையில் உறங்கினாள்.


ஒரு நாள் வீட்டுக்கு வந்த மல்லிகா தனிமையில் அழுதுக் கொண்டிருப்பதை மேகநாதன் கவனித்தான். அன்று இரவு வல்லபன் அறைக்கு  மல்லிகா செல்ல வேண்டும் என்று அவன் தாய் உத்தரவிட்டதாகக் கூறினாள்.


மேகநாதன் மல்லிகாவுடன் வீட்டிலிருந்து தப்பி அருகிலிருந்த தென்னைமரத் தோட்டத்தில் ஓளிந்துக் கொண்டனர்.  அன்று இரவு நிலவின் ஒளியில் கிறங்கி இருவரும் தங்கள் முதல் அனுபவத்தைப் பெற்றனர். விடியும் போது அவர்கள் இருவரையும் வல்லபன் ஆட்கள் கண்டு பிடித்து அவர் முன் நிறுத்தினர். வல்லபன் ஒன்றும் கூறாமல் நீலாம்பரியுடன் தனிமையில் பேசினார்.


அடுத்த நாள் மல்லிகா மகர தேசத்தின் தலை நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அங்கு அரசனின் அந்தப்புரத்தில் சேர்க்கப்பட்டாள். அவள் வெகு விரைவில் அரசனுக்கு மிகப் பிடித்தமானவளாக மாறினாள். விலை உயர்ந்த துணிகள், ஆபரணங்கள், வசதியான வாழ்க்கை இவை மல்லிகாவின் இயல்பை மாற்றின. அவள் மேகநாதனை மறந்து போனாள்.


மல்லிகா சென்ற பின் மேகநாதன் பித்துப் பிடித்தவன் போல அலைந்தான். ஒரு முறை அவன் மல்லிகாவைத் தலைநகரின் கோவிலில் பார்த்தன் . அவன் நிலையைக் கண்ட அவள் ஏளனப் பார்வையுடன் அங்கிருந்து அகன்றாள்.


இதன் பிறகு மேகநாதன் மதுவுக்கு அடிமையானான். குடித்து விட்டு அரண்மனைக்கு அருகாமையில் மல்லிகாவைத் தேடி அலைந்தான். ஒரு இரவு குடித்து விட்டுப் படுத்துக் கிடந்தவனைத் திருக்கிழார் என்னும் புலவர் தன் வீட்டுக்குக் கொண்டு சென்றார்.


காலையில் விழித்தவனிடம் உன் நாக்கில் கல்வியின் தேவி இருக்கிறாள் என்று புலவர் கூறினார். குடி போதையில் அவன் உளறிய வார்த்தைகளில் கவித்தன்மை இருந்ததாகவும், வாழ்க்கையின் தத்துவத்தை அது காட்டியதாகக் கூறினார். தன்னுடன் தங்கி கலை மற்றும் இலக்கியம் கற்க வேண்டினார். மேகநாதன் இதற்கு சம்மதித்தான். குடிப்பழக்கத்தை அடியோடு விடவும் செய்தான்.


நாட்கள் கழிந்தன. மேகநாதனின் கவி வன்மை பெருகியது. ஒரு மாபெரும் காப்பியத்தை எழுதி முடித்தான். அது  அரசவையில் அரங்கேறுவதற்கான வாய்ப்பு பெற்றான்.  ஆனால் அவனுடைய காவியம் மற்ற புலவர்களால் அங்கீகரிக்கப்படவில்லை. ஒரே கோட்டில் செல்லாமல்  ஒழுங்கின்மையுடன் முன்னுக்குப் பின் இருந்ததாகவும், வேண்டுமென்றே வலிந்து இலக்கணப் பிழைகள் புகுத்தப்பட்டிருக்கிறது என்றும், கடவுள்களை ஏளனப்படுத்துகிறது என்றும், அரசரையே கூட பகடி செய்கிறது என்று பல காரணங்கள் புலவர்கள் கூறினார்கள். கவிதைகள் மிக சிதைந்த தன்மை உடையதாக இருக்கிறது என்று கவிஞர்கள் அனைவரின் கருத்தாக இருந்தது.


அடுத்த நாள் மேகநாதன் அரண்மனைக்கு வர சொல்லி பட்டத்து அரசியிடமிருந்து அழைப்பு வந்தது. அவள் மேகநாதனின் கவிதைகள் தன்னை வெகுவாக ஈர்த்ததாகவும், இலக்கியத்தில் இது மாபெரும் புரட்சி என்று புகழ்ந்தார். தன்னை அடிக்கடி வந்து சந்திக்குமாறும் அழைப்பு விடுத்தார்.


அரண்மனைக்கு வரும்போதெல்லாம்  அரசி அவனுக்கு விலை உயர்ந்த பரிசுகள் அளித்தாள். அதை மேகநாதன் மறுக்காமல் வாங்கிக் கொள்வான். அரசியின் மூலம் மேகநாதனின் காவியம் பெண்களிடம் வெகுவாகப் பிரபலமானது. பல இளம் பெண்கள் அவனிடம் மையல் கொண்டனர். ஆனால் மேகநாதன் யாரையும் பொருட்படுத்தவில்லை. காலத்தால் அழியாக் காவியங்கள் படைப்பதிலேயே அவன் சிந்தனை முழுதும் இருந்தது.


ஒரு நாள் அரண்மனைக்குச் சென்ற போது அரசி காணவில்லை. அரசர் இறந்து போயிருந்தார் என்று மேகநாதன் அறிந்தான். அவர் மகன் திரிவிக்ரமன் ஆட்சிக்கு வந்தான். திரிவிக்ரமன் ஆட்சிக்கு வந்த சில நாட்கள் கழித்து மல்லிகா, ஒரு ஆண் குழந்தையுடன் மேகநாதன் வீட்டிற்கு வந்தாள். தனக்குப் போட்டியாக அரசுரிமையுடைய  வாரிசுகள்  அனைவரையும் கொல்ல திரிவிக்ரமன் ஆணை இட்டிருந்தான். அதற்கு அஞ்சி மேகநாதனிடம் அடைக்கலம் தேடி வந்தாள். மேகநாதன் மல்லிகாவுடன்  தலை நகரை விட்டுத் தப்பிச் செல்ல முடிவெடுத்தான். ஆனால் அவர்கள் திரிவிக்ரமனின் வீரர்ளால் கைது செய்யப்பட்டார்கள்.


மல்லிகாவின் குழந்தை கண்டிப்பாக கொல்லப்படும். ஆனால் தன்னுடைய ஒரு கட்டளைக்கு இணங்கினால் அவனும்  மல்லிகாவும் விடுதலை செய்யப்படுவார்கள்.  மரபான இலக்கிய விதிகள் படி ஒரு கவிதை சொல்ல வேண்டும். அது தன்னைப் புகழ்வதாக இருக்க வேண்டும் என்று திரிவிக்ரமன் கூறினான்.


அவன் கட்டளைப்படியே மேகநாதன் ஒரு பாடல் பாட அவர்கள் இருவரையும் விடுதலை செய்ய திரிவிக்ரமன் கட்டளை இட்டான். ஆனால் திரிவிக்ரமனின் தலைமைப் புலவர் குறுக்கிட்டார். அவன் கவிதையில் திரிவிக்ரமனின் தந்தையை ஏளனம் செய்வதாக இருந்தது என்று கூறினார். இதனால் கோபம் கொண்ட திரிவிக்ரமன் மேகநாதனைச் சிறையில் வைக்க உத்தரவிட்டான். 


சிறையில் மேகநாதன் அக்னிதேவனைச் சந்தித்தான். அவருடைய பிரபஞ்ச சிதைவு கோட்பாடும் தன்னுடைய கவிதைகளும் ஒத்திருப்பதை உணர்ந்தான். இருவரும் சிறையிலிருந்துத் தப்பிக்க திட்டம் தீட்டினர். இன்னொரு  கைதியாக இருந்த புரட்சி வீரன் ஒருவனின் நட்பு கிடைத்தது. அவன் மூலமாக இருவரும் தப்பினர். கிள்ளிவளவனைச் சந்தித்தனர். 


கவிதைகள் மூலம் மக்களிடையே ஒரு எழுச்சியை உருவாக்க வேண்டும் என்று கிள்ளிவளவன்  கோரிக்கை  விடுத்தான்.


மேகநாதன் அதற்குப் பிரதி உதவியாக தற்போது இருக்கும் எந்த ஆலயங்களும், கலைச் செல்வங்களும் நாசப்படுத்த கூடாது என்று கேட்டார். மேகநாதனின் வேண்டுகோளுக்குப் பின் ஆலயங்கள் இடிக்கப்படுவது முற்றிலும் நின்றன.


மேகநாதனின் ஆழம் பொதிந்த உணர்ச்சிக் கவிதைகள் மக்களிடேயே பெரும் உத்வேகத்தை அளித்தது. திரிவிக்ரமன் எளிதாக வீழ்ச்சியடைய இது முக்கிய காரணமாக இருந்தது. 


                                  ——————***********————-


                                               நீலகண்டன்


நீலகண்டன் முத்துநகரத்தின் வணிக வீதிகளில் அலைந்துக் கொண்டிருந்தான். பசி உயிர் போனது. உடல் தளர்வாக இருந்தது. ஆனால் எக்கணத்திலும் யாரிடமும் கையேந்தி பிச்சை மட்டும் எடுப்பதில்லை என்று உறுதியாக இருந்தான்.


அவன் சின்னிபுரம் என்ற ஊரைச்  சேர்ந்தான். அவன் தந்தை ஒரு காலத்தில் பெரும் வணிகராக இருந்தவர். மளிகை, ஆடைகள், ஆபரணங்கள் என்று பல வியாபாரங்கள் செய்து வந்தார். விவசாய நிலங்களும் வைத்திருந்தார். 


ஒரு முறை ஊரில் கடும் பஞ்சம் வந்தது. மக்கள் கொத்து கொத்தாக இறந்தனர். சினம் கொண்டு அவ்வூரின் தனவந்தர்களைக் கொன்று அவர்கள் பொருட்களைச் சூறையாடினர். அதில் நீலகண்டனின் தந்தையும் மாய்ந்தார். நீலகண்டன் தப்பி முத்துநகரத்தை வந்து அடைந்தான்.


அவன் வணிகர் வீதிகளில் அலைந்து வேலை தேடினான். வணிகர்கள் அவன் இது வரை எந்த உடல் உழைப்பும் செய்யாதவன் என்று சரியாக கணித்தனர். அதனால் அவனுக்கு வேலை கிடைப்பது சிரமமாக இருந்தது.  


தெருக்களில் அலைந்துக் கிடந்தவன் சோர்வுற்று ஒரு பெரும் மளிகைக்கடை முன் ஓரமாக அமர்ந்தான். வேலையாட்கள் எறும்புகள் போல வேலை செய்தனர். மூட்டைகள் வண்டிகளில் ஏற்றியும் இறங்கிய வண்ணமாக இருந்தது.


கடையில் முதலாளி, தலைமை நிர்வாகி -  இருவருக்கிடையே கடும் வாதம் நடந்துக் கொண்டிருந்தது.  அவர்கள் இருவரும் அடுத்த மூன்று மாதத்திற்கு எவ்வளவு பருப்பு வகைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவாதித்துக் கொண்டிருந்தனர்.


நீலகண்டன் குறுக்கிட்டான். பருப்பு வகைகள் மணிப்புரிப் பிராந்தியத்தில் தான் அதிகமாக விளைகிறது. அங்கு பருவ மழை தவறியுள்ளதால் ஒரு மாதத்தில் தட்டுப்பாடு வரும். அதனால் இப்போதே அதிகமாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினான்.


அதைக் கேட்டு அக்கடையின் நிர்வாகி அவனைத் தாக்க வந்தார்.  முதலாளி தடுத்து நீலகண்டன் அறிவுரைப்படியே  செய்வதாகவும், அவன் கூறியது சரி என்று நிரூபணமானால் நீலகண்டனையே தலைமை நிர்வாகியாக நியமிப்பதாகவும், அப்படி இல்லை என்றால் அவன் வாழ்நாள் முழுதும் ஊதியம் வாங்காமல் தன்னிடம் வேலை செய்ய வேண்டும் என்றார்.


மூன்று மாதங்கள் கழித்து நீலகண்டன் சொன்னது சரி என்று நிரூபணமானது. அவன் அக்கடையின் தலைமை நிர்வாகி ஆனான். பிறகு தானே சொந்தமாக கடைகள் வைத்துப் பெரும் பொருள் ஈட்டினான்.


சில வருடங்கள் கழித்து தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்றான். அப்போது தான் அக்கிராமம் பெரும் பஞ்சத்திலிருந்து மீண்டு வந்திருந்தது. நீலகண்டன் அவ்வூரின் தலைவரைச் சந்தித்து ஒரு உபாயம் கூறினான்.


அவ்வூரிலிருந்த ஒவ்வொவருவரும் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை மாதா மாதம் அளித்து விட வேண்டும். அது ஊரின் பொதுச் சொத்தாக கருதி பாதுகாக்க வேண்டும். வேறு  எதற்காகவும் அதைப் பயன்படுத்தக் கூடாது. அடுத்து பஞ்சம் வரும் போது அதை மக்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். பருவ மழையை மட்டும் நம்பி இராமல் எந்தச் சூழ்நிலையிலும் விளையும் தானியங்களைப் பயிரிட வேண்டும் என்று கூறினான்.


தலைவர் அதை ஏற்றார். நான்கு வருடங்கள் கழித்து பஞ்சம் வந்தபோது சின்னிபுரம் அதை எளிதாகக் கடந்து சென்றது.


திடீரென்று ஒரு நாள் நீலகண்டன் தன சொத்துக்கள் அனைத்தையும் ஊருக்கு அளித்து விட்டு  மறைந்தான். அவனுக்குக் கல்வி மீது ஆர்வம் பெருகியது. அவன் மகர தேசத்தின் பெரும் கடிகைகள் அனைத்திற்கும் சென்றான். ஆனால் அவன் தேடலுக்கான விடை எங்கும் கிடைக்கவில்லை. அவனுக்கு வர்த்தகம், பொருளாதாரம் குறித்து முறையான கல்வி பெற ஆர்வம் இருந்தது. இவற்றை இயக்கும் அடிப்படை விதிகளை அறிய ஆவல் இருந்தது. ஒரு நாட்டின் அரசியலைத் தீர்மானிப்பது அந்நாட்டின் பொருளாதாரம் தான் என்பதில் அவனுக்கு ஐயமில்லை. ஆனால் இது குறித்து எந்த நூலும் எழுதப்படவில்லை.


பிறகு தானே அதை எழுதுவது என்று முடிவு செய்து, மூன்று வருடங்களில் அதை எழுதி முடித்தான். அரசனாக இருந்த திரிவிக்ரமனின் அரசவைக்குச் சென்று அந்நூலை விளக்கினான்.


அரசனின் தலைமை மந்திரி தன் பதவி இதனால் பறிபோகும் என்று பயந்து நீலகண்டனை சிறையிட ஏற்பாடு செய்தார்.


சிறையில் அக்னிதேவன், மேகநாதன் இருவரிடமும் நீலகண்டனுக்கு நட்பானது. அவர்கள் இருவருடன் சேர்ந்து சிறையிலிருந்து தப்பினார். கிள்ளிவளவனைச் சந்தித்தார்.


புரட்சிப் படையினர் உழைக்கும் வர்க்கத்திற்குத் துணையாக இருப்பதில் தவறில்லை. ஆனால் அதற்காக தனவந்தர்கள், வர்த்தகம் செய்வோரை சூறையாடுவது தவறு. புரட்சி படையினரின் சென்ற படையெடுப்புகள் தோல்வி அடைந்ததற்கு பொருளின்மையே காரணம். அரசனை எதிர்த்து போரிட வேண்டுமானால் பெரும் செல்வம் வேண்டும். அதற்கு தனவந்தர்கள் உதவி தேவை.  அவர்களும் உழைக்கும் வர்க்கமும் இணைந்து வளர வேண்டும். இருவரும் பரஸ்பர நலன் பெறும் வண்ணம் திட்டங்கள் வேண்டும் என்று நீலகண்டன் ஆலோசனை  கூறினார். திரிவிக்ரமனை எளிதாக வீழ்த்தியதில் நீலகண்டனின் அறிவுரை முக்கிய காரணமாக இருந்தது.


                                       


                                        






                                                





                                              பகுதி -  3


                                            யுதோபியா தேசம்


ஜனநாயகத்தின் எல்லைக்குள் நடத்தப்படும் சர்வாதிகாரமே சிறப்பான ஆட்சி.


"யுதோபியா நாட்டின் ஜனநாயக வரலாறு" என்ற ஆவணங்களைப் படித்த பின் மார்க்ஸ் இந்த முடிவுக்கே வர வேண்டியிருந்தது. 


தற்போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மார்க்ஸுக்கு  தனக்கு முன் ஆட்சி செய்தவர்களின் வழிமுறைகளைப் படித்த போது பல பாடங்கள் கற்றார்.


யுதோபியா நாட்டில் மன்னராட்சி முடிவுற்று, சுமார் ஐநூறு ஆண்டுகளாக ஜனநாயகம்  தழைத்திருந்தது.  நாட்டிற்குச் சட்டங்கள் இயற்றும் அதிகாரம் செனட் வசம் இருந்தது. இயற்றப்பட வேண்டிய சட்டங்கள் என்னவென்றும், அதன் தத்துவார்த்தமான வடிவம் குறித்தும் தனது ஆலோசனைகளை மட்டும் ஜனாதிபதி  கொடுக்கலாம். சட்டத்தின் நுண்ணிய வடிவங்கள் வடிவமைக்கப்பட்டு, ஓட்டெடுப்பு நடத்தி செனட்டில் இயற்றப்படும். அந்த சட்டம் ஜனாதிபதி இறுதி ஒப்புதல் கொடுத்த பின் நடைமுறைபடுத்தப்படும்.


செனட் போடும் முட்டுக்கட்டைகளை சில ஜனாதிபதிகள் கையாண்ட விதம் மார்க்ஸை பிரமிக்க செய்தது. குறிப்பாக பத்தாவது ஜனாதிபதியாக இருந்த தியோடர் ‘பெண்ணுக்கு வாக்குரிமை’ அளிக்கும் சட்டம் இயற்ற நடத்திய சாம, பேத, தண்ட வழிமுறைகள் வியக்க வைத்தது. சட்டத்தை எதிர்த்த ஒவ்வொரு செனட்டரின் தொகுதிக்கும் ஆலயம், அருங்காட்சியகம், பல்கலைக்கழகம் அமைத்து தருவதாக வாக்களித்தார். அந்த திட்டத்தை செயல்படுத்த அரசு அளித்த நிதியை செலவு செய்யும் அதிகாரம் செனட்டருக்கு அளிக்கப்பட்டது. அதில் செனட்டர்கள் நடத்திய ஊழல்கள் கண்டும் காணாமலும் விடப்பட்டது. அடுத்த தேர்தலில் தன் கட்சி சார்பாக யாரையும் நிறுத்துவதில்லை என்றும் சில செனட்டர்களுக்கு  தியோடர் வாக்களித்தார். இறுதியாக ஒரு செனட்டரின் சம்மதம் மட்டும் கிடைக்கவில்லை. சட்டம் குறித்து ஆலோசனை என்ற பெயரில்  ஜனாதிபதி மாளிகையின் ஒரு அறையில் அடைக்கப்பட்டார். ஜனாதிபதியின் ஆலோசகர்கள் அவருடன் ஒவ்வொரு நாள் 24  மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். செனட்டரின் ஆதரவு உறுதியான பின்னரே அவர் ஜனாதிபதி மாளிகை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்.


இது போல சில ஜனாதிபதிகள் தனக்கே உரித்தான படைப்பூக்கத்துடன் செனட்டைக் கையாண்டனர். 


செனட் தலைவர் ஹெகல் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக  காத்திருப்பதை உதவியாளர் கூறியதும், மார்க்ஸ் மேல் மாடியிலிருந்து அறைக்குச் சென்றார்.


உள்ளே ஹெகல் சில ஆவணங்களைப் படித்துக் கொண்டிருந்தார்.


"இந்நாட்டு மக்களை அறிவுஜீவிகள் என்பதா, அல்லது அறிவிலி மந்தை கூட்டம் என்பதா. என் குழப்பத்திற்கு தீர்வு சொல்வீர்களா ஹெகல்."


"யுதோபியா நாட்டின் ஜனாதிபதிக்கு இப்பெரும் குழப்பம் வந்ததன் காரணம் என்ன?"


"இரண்டு ஆண்டுகள் முன் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெற்றேன். அடுத்த வருடம் நடந்த செனட் தேர்தலில் உங்கள் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இது முட்டாள்தனமாக தெரியவில்லை."


"எனக்கு அப்படி தோன்றவில்லை"


"நான் அனுப்பும் சட்டங்கள் அனைத்தையும் உமது செனட் நிராகரிக்கிறது. செனட் அனுப்பும் சட்டங்கள் எதுவும் எனக்குத் திருப்தியாக இல்லை.  ஆக மொத்தம் நாட்டில் ஒரு தேக்கநிலை உள்ளது."


"நமது நாட்டிற்கு ஜனநாயக முறையை தெரிவு செய்த போது இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது நமது தேசத்தந்தைகளின் நோக்கம்."


"புரியவில்லை."


"பெரும் மாற்றங்கள், புரட்சி, அரசிடம் அளவிலா அதிகாரம். இவை அனைத்துக்கும் முட்டுக்கட்டையாக இருக்க வேண்டும் என்பது தான் ஜனநாயகத்தின் முக்கிய நோக்கம்."


"மாற்றமின்மை, ஸ்தம்பித்த  நிலை இது தான் ஜனநாயகத்தின் விளைவு என்றால் அதைத் தூக்கி ஏறிய வேண்டும். ஒரு நேர்மையான சர்வாதிகார ஆட்சிக்கு மக்கள் ஏங்குகிறார்கள்."


"ஏங்குவது மக்களா அல்லது நீங்களா?"


"நம்மிடையே இருக்கும் தத்துவ மோதலைப் பிறகு விவாதிக்கலாம். நான் பரிந்துரை செய்த மசோதாக்கள்  ஏன் செனட் நிராகரித்தது. விளக்கம் தேவை."


"முதலில் நீங்கள் அனுப்பிய மருத்துவ சீரமைப்பு மசோதா குறித்து பேசுவோம். மருத்துவம் இலவசமாக்கப்பட வேண்டும். அதற்கு நிதி ஒதுக்க மக்களிடம் வரி சுமத்த வேண்டும் என்பது இந்த சட்டத்தின் நோக்கம். ஆனால் இதில் சில பிரச்சினைகள் உள்ளது. மருத்துவம் இலவசமாக்கப்பட்டால் சாதாரண சளி, காய்ச்சலுக்கு கூட மருத்துவரை நாடுவார்கள். மருத்துவ தேவை அதிகரிக்கும். அதை ஈடு செய்யும் அளவுக்கு நாட்டில் மருத்துவர்கள் இல்லை. மருத்துவர்கள் தங்கள்  கட்டணத்தை உயர்த்துவார்கள். நாட்டின் நிதியில் துண்டு விழும். மக்களிடம் வரியை உயர்த்த வேண்டும். சிக்கல் புரிகிறதா."


"இது மிகவும் எதிர்மறையான சிந்தனை. நீங்கள் கூறிய குறைகளை நிவர்த்தி செய்யும் சரத்துகள் மசோதாவில் உள்ளது."


"இருக்கலாம். என்னுடைய பரிந்துரை முதலில் இந்த மசோதாவை ஒரு மாகாணத்தில் மட்டும் நிறைவேற்றி பரிசோதித்து பார்ப்போம். பிறகு படிப்படியாக மற்ற மாகாணத்தில் நடைமுறைப்படுத்துவோம். இதன் மூலம் பிரச்சினைகள், குறைகள் அனைத்தையும் களைந்து, தெளிவான ஒரு மசோதாவை தேசிய அளவில் கொண்டு வரலாம்."


"அதற்கு இருபது வருடங்கள் ஆகும். என் பதவிக்காலம் பத்து வருடங்களில் முடிந்து விடும்."


"ஆகலாம். ஆனால் இப்படித்தான் ஜனநாயகம் இயங்க வேண்டும். நாம்  சென்ற வருடம் நிறைவேற்றிய சாலை கட்டமைப்புச் சட்டம் இருபது வருடங்கள் முன்பு வடிவமைக்கப்பட்டு பல தோல்விகளுக்குப் பிறகு உங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. அதற்கான நல்ல பெயர் தங்களுக்கு கிடைத்ததது. ஆனால் இதற்கான அடிப்படை நமக்கு முன்னாள் இருந்த ஜனாதிபதிகள், செனட் போட்டது. இதற்காக அவர்கள் தேர்தலில் தோல்வி கூட அடைந்தார்கள்.”


"அடுத்து நீங்கள் பரிந்துரைத்த நாடு முழுதும் ஒரே விற்பனை வரி மசோதா. தற்போது ஒவ்வொரு மாகாணத்திற்கும் விற்பனை வரி விகிதம் மாறுபட்டு உள்ளது. ஒரே வரி விகிதம் நிறைவேற்றப்பட்டால் சில மாகாணங்களுக்கு நிதியிழப்பு ஏற்படும். அதனால் அவர்கள் எதிர்க்கிறார்கள். அவர்களைத் திருப்திப்படுத்த வரி விகிதத்தை ஏற்றினால் மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்."


மார்க்ஸ் சிறிது நேரம் மெளனமாக அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார்.


“அரசு நிர்வாகம் குறித்து பொதுவாக உள்ள அபிப்பிராயம் இது. தங்களுக்கு ஆலோசனை கூறுபவர்கள் தகுதியற்றவவர்கள். அவர்களை நீங்கள் மாற்ற வேண்டும். அரசின் நிர்வாகத் துறையும், சட்டமியற்றும் துறையும் இணக்கத்துடன் செயலாற்ற வேண்டும். இது நான் மட்டும் சொல்லவில்லை. தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களே கூறுகிறார்கள்."


"மாற்ற வேண்டியது ஆலோசகர்களை அல்ல. செனட்டை."


ஹெகல் அதிர்ச்சியடைந்தார். "என்ன சொல்கிறீர்கள்."


"நீங்கள் செல்லலாம். மசோதாக்கள் குறித்து என்னுடைய முடிவை நான் செனட்டிற்கு வெகு விரைவில் அறிவிப்பேன்.”


                                                 ————************—————


யூடா பல்கலைக்கழகம் ப்ரின்சிபியா நகரின் மிக முக்கியமான கல்விக்கூடம். நகரின் நடுவில் விஸ்தாரமான நிலப்பரப்பில் பல்கலைக்கழகம் அமைந்திருந்தது. இதன் தொடக்கம் ஆயிரம்  ஆண்டுகளுக்கு முந்தையது. 


ஜோகன் தாய் விண்ணுலகம் சென்ற பின் யுதோபியா  நாட்டில் அவளைக் கடவுளாகக் கொண்டு ‘மாதாஸ்’ என்று ஒரு புதிய மதம் உருவானது. இம்மதத்தின் முதன்மை இறைவனாக ஜோஷுவா கருதப்பட்டார். நாளடைவில் யுதோபியா நாட்டின் ஒரே மதமாக ‘மாதாஸ்’  உருவானது. இம்மதத்திற்குச் சில அடிப்படைச் சிந்தனைகள் தேவைப்பட்டது. ஐந்து குருமார்கள் இனைந்து மதத்தின் அடிப்படைத் தத்துவங்களை உருவாக்கினர். அவர்கள் ஆழ்ந்த தியானத்தில் இருந்த போது தரிசனங்களாக இச்சிந்தனைகளை ஜோஷுவா அளித்ததாக நம்பப்பட்டது.  பிரபஞ்சத்தின் பிறப்பு, மறுபிறப்பு, விதி போன்ற சிந்தனைகளைத் தொகுத்து ஒரு மத நூல்  எழுதப்பட்டது. ஜோகன் தாயின் வாழ்க்கை மற்றும் மக்களுக்குத் தேவையான வாழ்க்கை நெறிகளும் போதனைகளாக இந்நூலில் சேர்க்கப்பட்டது. புனித நூலாக மாறியது.


இச்சிந்தனைகள் மக்களிடம் பரப்பவும், இவை குறித்து விவாதங்கள் நடத்தவும் ஒரு அமைப்பு தேவைப்பட்டது. இத்தேவையை ஒட்டி உருவாகிய முதல் நிறுவனம் யூடா பல்கலைக்கழகம். ஆரம்பத்தில் வெறும் மதக்கோட்பாடுகள் மட்டுமே கற்பிக்கப்பட்டது. பின் நாளடைவில், இலக்கியம், கலை, கைத்தொழில், முதிராக்கணிதம் மற்றும் அறிவியல் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது.


ஸ்பினோசா இப்பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறையில் ஆராய்ச்சி செய்து வந்தான். யுதோபியா நாடு அறிவியலில் மிகவும் துவக்க நிலையில் இருந்த கால கட்டம் அது. அறிவியலுடன் மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளும் இணைந்திருந்தது. மறுபிறப்பு, விதி, எதிர்காலத்தைக் கணிக்கும் ஜோதிடம் ஆகிய வேகாத சிந்தனைகள் அறிவியல் பாடமாக இருந்தது.


ஸ்பினோசா அறிவியலில் ஒரு புது புரட்சியை உண்டாக்க முனைந்தான். அறிவியலைத் தர்க்க ரீதியாக கணிதத்தின் அடிப்படையில் ஆராய்ச்சி செய்யும் அணுகும் முறையை பின்பற்றினான்.  


அவன் பல வருடங்களாக உழைத்து உருவாக்கிய புதிய கோட்பாடை பல்கலைக்கழகத்தின் முக்கியமான ஆசிரியர்களுக்கு விளக்கும் வாய்ப்பு ஒரு நாள் கிட்டியது. படபடக்கும் மனதுடன் தன் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினான்.


"ஆக என் கோட்பாடு கூறுவது  என்னவென்றால் இந்த பிரபஞ்சம் நிலைத்திருப்பது பொருட்களுக்கிடேயே உள்ள ஈர்ப்பு சக்தியினால் ஆகும்.”


தலைமைப் பேராசிரியரான ஹெபர்ட்டும்,  மற்ற பேராசிரியர்களும், ஸ்பினோசா பேசுவதை ஆர்வமற்று கேட்டுக் கொண்டிருந்தார்.


"ஈர்ப்பு சக்தியை விளக்க ஏன் இவ்வளவு பெரும்பாடு.  இரவு கலவிக்கு முன் என் மனைவி அரை நிர்வாணத்துடன் நிற்கும் போது இந்த ஈர்ப்பு சக்தியை நான் உணர்ந்திருக்கிறேன்."


ஹெபர்ட் கூறியதை மற்ற பேராசிரியர்கள் சுவையான ஹாஸ்யத்தைக் கேட்டது போல உரத்தக் குரலில் சிரித்தனர்.


ஸ்பினோசா சங்கடத்தில் நெளிந்தான். அவனால்  மேலும் தன் கோட்பாட்டை தடையின்றி விளக்க இயலவில்லை. பெரும் முயற்சிக்குப் பின் தொடர்ந்தான்.


"ஈர்ப்பு சக்தி எல்லா பொருட்களுக்கும் இடையே உள்ளது. உயிரற்ற ஜடப் பொருட்களையும் சேர்த்து."


"என் முன்னாள் இருக்கும் மேஜைக்கும் எனக்கும் இடையே ஈர்ப்பு சக்தி உள்ளது என்றால் ஏன் இந்த மேஜையுடன் நான் மோதிக் கொள்ளவில்லை."


"ஈர்ப்பு சக்தி பொருட்களின் எடையையும், அதனிடையே உள்ள தூரத்தையும் பொறுத்தது. அதிகமான எடையும், அருகாமையில் உள்ள பொருட்களுக்கும் இடையே ஈர்ப்பு சக்தி அதிகம் இருக்கும்."


"என்னுடைய எடையும், இந்த மேஜையின் எடையும் குறைந்தது அல்லவே."


"நான் கூறுவது விண்கோள்கள் அளவு பெரும் பொருட்களுக்கு இடையே உள்ள விசை பற்றி.  ஈர்ப்பு சக்தியினால் பூமி கதிரவனைச் சுற்றி வருகிறது. நிலவு பூமியைச் சுற்றுவதும் ஈர்ப்பு சக்தியினால்.  ஈர்ப்பு சக்தி இல்லை என்றால் பெரிய அளவு பொருட்கள் உருவாக சாத்தியம் இல்லை. பிரபஞ்சம் முழுதும் துகள்கள் மட்டுமே இருந்திருக்கும். துகள்கள்  ஒவ்வொன்றுடன் மோதி ஒழுங்கின்மைத் தன்மை உடையதாக இருந்திருக்கும். பிரபஞ்சம் உருவானது ஈர்ப்பு சக்தியினால். பிரபஞ்சம் நிலைத்திருப்பதும் ஈர்ப்பு சக்தியினால். நாளைய பிரபஞ்சத்தின் அழிவும் ஈர்ப்பு சக்தியினால்.”


"உன் விளக்கங்களை நான் படித்தேன். அவற்றில் புரியாத வகையில் எழுத்தும், எண்ணும் இணைந்த சிலவற்றை நான் பார்த்தேன். ஏதோ புது மொழியைப் படிப்பது போல இருந்தது. அது என்ன."


"இது கணிதத்தின் நூதனமான புதிய வடிவம்."

"ஸ்பினோசா, நீ கூறுவதை என்னால் நம்ப இயலவில்லை. ஆனால் நீ கூறுவது உண்மை என்றால் நீ இந்த யுகத்தில் பிறக்க வேண்டியவன் இல்லை. இன்னும் பல நூறாண்டுகள் கழித்துப் பிறக்க வேண்டியவன். எங்களைப் போன்ற சிறு மதியாளர்களிடம் உன் நேரத்தை வீணாக்காதே.”


"ஆசிரியர்களே எனக்கு சிறு உதவி தேவை. என் ஆராய்ச்சியைத் தொடர அனுமதியும் அதற்கான நிதி உதவியும் அளிக்க வேண்டுகிறேன்."


"அது இயலாது. அதற்கு அரசின் சம்மதம் வேண்டும். இது போன்ற ஆராய்ச்சிகளுக்கு கண்டிப்பாக கிடைக்காது."


"நீங்கள் சுபாரிசு செய்தால் கண்டிப்பாக நடக்கும். சற்று கருணை காட்டுங்கள்."


"ஒன்று செய். தற்போது ஜோதிட சாஸ்திரம் குறித்து எந்த ஆராய்ச்சிக்கும் உடனே அரசிடம் நிதி உதவி கிடைத்து விடும். ஜோதிட சாஸ்திரம் குறித்து ஒரு புதிய விளக்கம் கொடு. மற்ற கிரகங்கள் நம்முடைய எதிர்காலத்தை எவ்வாறு தீர்மானிக்கிறது என்பதற்கு உன் ஈர்ப்பு சக்தி மூலம் ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கு. அதனுடன் மறைமுகமாக உன் ஆராய்ச்சியைத் தொடர்வதில் எனக்கு எந்த மறுப்பும் கிடையாது. "


"நீங்கள் கூறும் அறிவுரை அறிவியலுக்கு எதிரானது. ஜோதிட சாஸ்திரம் வெறும் போலி அறிவியல். அறிவியலின் நோக்கம் உண்மையைக் கண்டறிவது மட்டுமே.”


"எங்களை எதிர்ப்பதற்கு உனக்கு நிறைய துணிவு வேண்டும். நான் நினைத்தால் இந்த பல்கலைக்கழகத்தில் நீ காலடி வைக்க இயலாதபடி செய்ய முடியும்."


"இந்த மூடர் கூடத்தில் இருந்து மாரடிப்பதற்கு எனக்கும் பொறுமை இல்லை."


ஸ்பினோசா கோபத்துடன் அவ்வறையை விட்டு வெளியேறினான்.


அவனைப் பின் தொடர்ந்து ஸ்பென்ஸர் என்ற பேராசிரியர் வந்தார்.


"ஸ்பினோசா. உனக்கு உதவி இந்த பல்கலைக்கழகமும், அரசும் தராது. நான் ஒரு உபாயம் கூறுகிறேன். உன் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நூதனமான எந்திரங்களை நீ உருவாக்கு.  அதற்கு இந்த நகரத்தின் பெரும் தனவந்தர்கள் உதவியை நீ நாடலாம். உன் கோட்பாடு நிஜ வாழ்வில் எப்படி இயங்குகிறது என்பதைப் பரிசோதிப்பதற்கு உனக்கும் இது நல்ல வாய்ப்பு. என்ன கூறுகிறாய்."


"ஆனால் என்னை நம்பி யார் நிதி கொடுப்பார்கள்."


"வால்டேர் என்ற வணிகர் இந்த நகரத்தில் இருக்கிறார். அவர் உதவியை நீ நாடலாம்." 


"உங்கள் அறிவுரையை ஏற்று நடப்பேன். தங்கள் உதவிக்கு நன்றி."


சோர்ந்திருந்த ஸ்பினோசா புது உற்சாகத்துடன் செல்வதைப்  பார்த்து ஸ்பென்சர் முகத்தில் மகிழ்ச்சி புன்னகை தோன்றியது.


                                   ———-*************————-


‘ப்ளூ பார்க்’ யுதோபியாவில் ஆடைகள் உற்பத்தி செய்யும் பெரும் தொழிற்சாலை நிறுவனம். அத்தொழிற்சாலையில் பல்லாயிரம் நெசவாளிகள் வேலை செய்தனர். துணிகள் பெரும்பாலும் நெசவாளர்களின்  கையாலேயே நெய்யப்பட்டது. சமீப காலமாக போட்டி காரணமாக ப்ளூ பார்க் நசிந்து வந்ததால் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று அதன் நிறுவனர் டேவிட் முடிவு செய்தார். அத்தருணத்தில் தான் அவரை நீட்ஷே சந்தித்தான்.


நீட்ஷே விந்தையான இயந்திரங்களை உருவாக்குபவன். தன்னால் நெசவு செய்வதற்காக ஒரு இயந்திரத்தை உருவாக்க முடியும் என்றும், நூறு பேர் செய்யக்கூடிய வேலையை ஒரு இயந்திரம் செய்து முடிக்கும் என்று உறுதியளித்தான். 


நீட்ஷே ஒரு வருடமாக  இயந்திரம் உருவாக்குவதில்  செலவிட்டான். பல மாதிரிகள் வடிவமைத்து அவை எல்லாம் தோல்வியில் முடிந்தது. டேவிட் பொறுமை இழந்து வந்தார். தனக்கு இறுதியாக ஒரு வாய்ப்பு மட்டும் அளிக்குமாறு நீட்ஷே மன்றாடியதால் ஒப்புக் கொண்டார். 


டேவிடுக்கு இயந்திரத்தின் இயக்கத்தைக் காட்டும் நாள் வந்தது. ராட்சதப் பறவையென விரிந்துக் கிடந்த இயந்திரத்தை நீட்ஷே கண் இமைக்காமல் நோக்கினான். மரப்பலகைகளாலும், உருளைகளாலும் அந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனைப் பல முறை இயக்கிப் பார்த்து சரி செய்தான்.


டேவிட் அறைக்குள் நுழைந்ததும் இயந்திரத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்து சிலிர்த்தார்.


"இம்முறை சரியாக இயங்கும் என்று என் உள்மனம் கூறுகிறது."


"இம்முறை தவறாது. பல முறை இயக்கிப் பார்த்து சரி செய்திருக்கிறேன். இரண்டு வாரங்களாக நான் உறங்கவில்லை."


"உன் உறக்கம் குறித்து எனக்கு அக்கறை இல்லை. இன்று உன் இயந்திரம் இயங்கவில்லை என்றால் இந்த தொழிற்சாலை மூடப்படும். உன் வேலை போகும். "


இயந்திரம் முதல் முறை செவ்வனே இயங்கியது. இரண்டாவது முறை துணிகள் சிக்கிக் கொண்டு இயந்திரம் நின்றது. அதனை சரி செய்த பின் மூன்றாவது முறை இயந்திரத்தின் சில பலகைகள் உடைந்து இயந்திரம் சரிந்தது.


நீட்ஷே பிரமை பிடித்தவன் போல நின்றான். டேவிட் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து அகன்றார். வாயிற்காவலர்கள் நீட்ஷேயைத் தொழிற்சாலையை விட்டு வெளியேற்றினர்.


நீட்ஷே விரக்தியுடன், எங்கு செல்கிறோம் என்ற நினைவின்றி தெருக்களில் நடந்தான். ஒரு மதுசாலைக்குச் சென்று  ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்தான். அங்கு ஆடவரும் பெண்டிரும் உரத்தக் குரலில் சிரித்து பேசி மகிழ்வுடன் இருந்தனர். 


நீட்ஷே இரண்டு கோப்பை மது அருந்தியபின் மனம் சற்று இலகுவானது. அவன் எதிரில் இளைஞன் ஒருவன் அமர்ந்தான். தன்னைப் போல் அவ்விளைஞனும் விரக்தியுடன் இருப்பதை உணர்ந்து அவனுடன் பேச்சு கொடுத்தான்.


"இளைஞனே. சுற்றிலும் இங்கு இருப்பவர்களை பார். இவர்கள் எல்லோருக்கும் அடுத்த நாள் பொழுது எப்படி விடியும் என்ற கவலை இல்லை.  நாளை இவர்கள் வேலையை இழக்கலாம். வீட்டிற்குச் சென்றால் இவர்கள் மனைவி ஏளனம் செய்து வெறுப்பேற்றலாம். இவர்கள் குழந்தைகள் மதிக்காது இருக்கலாம். ஆனால் இதைப் பற்றி இவர்கள் ஏதும் கவலை கொள்கிறார்களா?  இந்தத் தருணத்தை எவ்வாறு மகிழ்வுடன் கழிக்கிறார்கள். உன்னாலும் எந்நாளும் மட்டும் ஏன் அவ்வாறு இருக்க இயலவில்லை.”


"எதிர்காலத்தைப் பற்றி அதிகம் யோசிப்பவன் மூடன் என்று என் தந்தை கூறுவார். அடுத்த கணம் எவ்வாறு மலரும் என்று  எந்த அறிவாளியாலும் கணிக்க முடியாது. அவர் கூற்று படி நாம் இருவரும் மூடர்கள். ஆம். ஸ்பினோசா என்ற பெயர் கொண்ட நான் முழு மூடன்."


"நீட்ஷே என்ற நானும் மூடன்."


இருவரும் தங்கள் வருத்தத்திற்கான  காரணங்களைப் பகிர்ந்து கொண்டனர். அதன் பின் ஸ்பினோசா ஒரு யோசனை கூறினான்.


"உங்கள் இயந்திரம் வடிவமைப்பில் அறிவியல் ரீதியாக ஏதோ ஒரு குறை இருக்கலாம். அதை சரி செய்ய என்னால் உதவ முடியும்".


"அங்கு இனிமேல் செல்ல முடியாது. என் வேலை போயிற்று."


"கவலை வேண்டாம். டேவிட்டுடன் நான் பேசுகிறேன். "


இருவரும் அடுத்த நாள் டேவிடை சந்தித்தனர். பெரும் முயற்சிக்குப் பின் இயந்திரத்தை சரி செய்வதற்கு இன்னொரு வாய்ப்பைப் பெற்றனர்.


இரண்டு நாட்களாக கடுமையாக உழைத்து இயந்திரத்தை சரி செய்தனர். அதை வெற்றிகரமாக இயக்கியும் டேவிடுக்கு காண்பித்தனர்.


"நீட்ஷே. உன்னை மட்டும் என்னால் மறுபடியும் வேலைக்குச் சேர்க்க முடியாது. உன் நண்பனும் சம்மதித்தால் உங்கள் இருவருக்கும் சேர்த்து வேலை தர முடியும்."


நீட்ஷே மகிழ்வுடன் சம்மதிக்க நினைத்தபோது ஸ்பினோசா குறுக்கிட்டு அவனை தடுத்தான்.


"எங்கள் இருவருக்கும் இங்கு வேலை செய்ய விருப்பமில்லை."


இருவரும் தொழிற்சாலையை விட்டு வெளியேறினர்.


"நீட்ஷே, உனக்கு என் மீது கோபம் இருக்கலாம். புதுமைகள் பெரும் போராட்டத்திற்குப் பின்னே வெற்றியடையும். குறிப்பாக அறிவியலில் நடக்கும் புதுமைகளை உதாரணமாக சொல்லலாம். நம் முயற்சிகளுக்கு டேவிட் சரியான நபர் அல்ல. அவருக்குப் பொறுமை இல்லை. நான் வேறு ஒரு யோசனை சொல்கிறன். இங்கு வால்டேர் என்று ஒரு வர்த்தகர் இருக்கிறார். அவர் நமக்குச் சரியான முறையில் உதவ முடியும் என்று  நம்புகிறேன். நாளை அவரை சந்திக்கலாம்." 


"டேவிட்டிடம் நாம் உடனேயே மறுத்திருக்க வேண்டாம். வால்டேரிடம் பேசி உறுதியான பின் டேவிட்டிடம் மறுப்பைத் தெரிவித்திருக்கலாம்."


"டேவிட் தொலைநோக்குப் பார்வை அற்றவர். அவரூக்கு உடனடியாக கிடைக்கும் லாபமே குறிக்கோள். நாளை வால்டேரிடம் நடக்கும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தாலும் மீண்டும் டேவிட்டிடம் வேலைக்குச் சேர்வது உசிதமல்ல.”


 ஸ்பினோசாவின்  யோசனையை நீட்ஷே முழு மனதுடன் ஏற்கவில்லை. குழப்பமான சிந்தனைகளுடன் வீடு நோக்கிச் சென்றான்.


                                        ————*************—————


மார்க்ஸின்   படிப்பறை விளக்குகளால் ஒளி வீசிக் கொண்டிருந்தது. மேஜை மீது மெழுகுவர்த்திகள் எரிந்துக் கொண்டிருந்தன. மார்க்ஸ் பின் தூங்கி முன் எழுபவர். இரவு அதிக நேரம் படிப்பதில் செலவிடுவார். அவர் பெரும்பாலும் வரலாற்று ஆவணங்களைப் படிப்பார். 


அறையில் சிறு சலனம் தோன்றியது. மார்க்ஸின்  மகள் ஸ்டெல்லா அறைக் கதவருகே நின்றுக் கொண்டிருந்தாள்.


"சில நாட்களாக உறக்கம் சரியாக வரவில்லை. வெயில் காலம் வந்து விட்டதால் புழுக்கம் அதிகமாக இருக்கிறது. அதனால் உங்களுடன் சிறிது பேசலாம் என்று வந்தேன்."


"சில வரலாற்று ஆவணங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன். சரித்திரம் ஒரு சுழல் வட்டம். சென்றைய சரித்திரம் மீண்டும் புது வடிவில் வரும். கடந்த காலத்தின் நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்காத நாடுகளும் தலைவர்களும் முன்னோர்கள் செய்த தவறையே மீண்டும் செய்வர். இப்படிப்பட்ட நாடுகள் நசிந்து விடும். அந்த தவறை நான் செய்யக் கூடாது என்று உறுதியாக இருக்கிறேன். அதனால் பல நூறு ஆண்டு கால சரித்திரத்தை உன்னிப்பாக படிக்கிறேன். அதிலிருந்து பாடங்கள் கற்கிறேன்."


"எனக்கும் படிப்பதற்கு உந்துதல் வருகிறது. இதிலிருந்து சிலவற்றை என் அறைக்கு எடுத்துச் செல்கிறேன்."


"எடுத்த பொருள் தவறாமல் இருப்பிடத்திற்குச் சேரும்  வரை எந்த பிரச்சினையும் இல்லை."


ஸ்டெல்லா சில ஆவணங்களை எடுத்து தன் அறைக்குச் சென்றாள்.  எல்லாவற்றையும் மேலோட்டமாக பார்த்தவளுக்கு, குறிப்பாக ஒன்று கவனத்தை கவர்ந்தது. அதை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.


                                                          ஜேம்ஸ்


மன்னராட்சியிலிருந்து ஜனநாயக முறைக்கு யுதோபியா மாறியதற்கு வித்திட்டவன் ஒரு தலைவனோ அல்லது போர் வீரனோ இல்லை. ஒரு எழுத்தாளன் - ஜேம்ஸ் என்பவன். "ஜோஷுவா படைப்பில் மனிதர் அனைவரும் சமம்" என்ற சிந்தனையை தனது எழுத்தின் மூலம் மக்கள் மனதில் ஆழமாக பதிய செய்தவன்.


ஜேம்ஸின் தந்தை அரச பரம்பரையைச் சேர்ந்தவர். அந்தஸ்த்தில் குறுநில மன்னருக்குச் சமமானவர். சில சிற்றூர்கள் அவர் கட்டுப்பாட்டில் இருந்தது.


சிறு வயதில் ஜேம்ஸ் அடிக்கடி நோய்வாய்ப்பட்டதால் மிகவும் மெலிந்த தேகத்தினை உடையவனாகவும் போர்ப்பயிற்சிகள் மீது நாட்டம் இல்லாதவனாகவும் இருந்தான். படிப்பதில் அவனுக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. குறிப்பாக யுதோபியா நாட்டின் சரித்திரம் அவனுக்குப் பிடித்தமானது. 


பிறகு மெல்ல கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டான். அதன் பின் நாடகங்கள் எழுத ஆரம்பித்தான். தன் எழுத்து அவனுக்கு எப்போதும் பிடிப்பதில்லை. அதனால் அவற்றை வேறு யாரிடமும் காண்பிப்பதும் இல்லை.


அவனுக்கு பதினான்கு வயது இருக்கும் போது திடீரென்று உடல் நலம் குன்றினான். என்ன நோய் என்று மருத்துவர் எவராலும் கண்டு பிடிக்க இயலவில்லை. அவன் இறந்து விடுவான் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் ஒரு நாள் முழுதும் தேறி இயல்பான உடல் நிலைக்கு மாறினான். முதல் நாள் இரவு தனக்குப் பரவாசமான அனுபவம் தோன்றியது என்றும், ஜோஷுவா தன் முன் தோன்றி  'நீ இன்னும் உனக்கு இடப்பட்ட வேலையை முடிக்கவில்லை.  அதற்குள் என்ன அவசரம்' என்று கூறி விட்டு மறைந்தார் என்றான்.  இந்நிகழ்வுக்கு பிறகு அவனுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகமானது. எப்போதும் ஆலயங்களில் தொழுதுக்  கொண்டிருந்தான்.


அவன் ஆலயம் சென்ற பொழுதெல்லாம் நான்சி என்ற பெண் வருவதைக் கவனித்தான். அவள் மீது ஈர்ப்பு  இருந்தது.  தயக்கத்திற்குப் பின் அவளிடம் பேசினான். நான்சியின் தந்தை நெசவாளியாக இருந்தார். சிறிது பழக்கத்திற்கு பின் நான்சியைச் சந்திப்பதற்காக அவள் இருப்பிடத்திற்குச் சென்றான். அது சமூகத்தில் கீழான நிலையில் உள்ளவர்கள் இருக்குமிடம். அவ்விடத்தில் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பார்த்து ஜேம்ஸ் பெரும் அதிர்ச்சிக்குள்ளானான்.  ஏலும்புக் கூடுகளை ஒத்த சிறுவர்கள், ஒரு வேளை உணவுக்குக்  கஷ்டப்படும் குடும்பங்கள், தங்குவதற்கு இடமின்றி வெட்ட வெளியில் படுத்துக் கிடக்கும் மனிதர்களைப் பார்த்து அவன் மனம் வலித்தது.


இந்த மக்களுக்கு ஏதாவாது செய்ய வேண்டும் என்று எண்ணி தன் தந்தையிடம் பேசினான்.


"சேற்றில் வாழும் பன்றிகள் குறித்து உனக்கென்ன கவலை. அவர்கள் தலைவிதி அது. ஒன்றும் மாற்ற இயலாது."


"நமது நிதி நிலை நன்றாகவே உள்ளது. அது கொண்டு அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கலாம். ஒவ்வொரு நாளும் உணவு மீதமாகி குப்பைக்குச் செல்கிறது. ஆனால் அவர்களோ ஒரு வேளை உணவின்றி தவிக்கின்றனர். இதையல்லாம் ஜோஷுவா மன்னிப்பாரா?"


"மகனே ஒன்றை நினைவு கொள். அவர்களின் துர்பாக்கிய நிலைக்கு நாம் காரணம் அல்ல. அவர்கள் பாவிகள். இதற்கு முன் பல பிறவிகளில் பெரும் பாவங்கள் செய்தவர்கள். அதனால் ஜோஷுவா அவர்களை இந்நிலைக்கு ஆள்ளாக்கியுள்ளார். அவர்களுக்கு உதவி செய்தால் அவர்களின் பாவம் நம்மையும் தொற்றிக் கொள்ளும்."


"அவர்கள் பாவிகள் அல்ல. நம்மைப் போன்ற மனிதர்கள். நமக்குச் சமமானவவர்கள்.  எந்த விதத்திலும் நமக்குக் குறைவானவர்கள் அல்ல."


ஜேம்ஸின் தந்தை அவனை அறைந்தார்.


"பன்றிகளும் நானும் சமமா? இதைக் கூற உனக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்."  


இதன் பின் ஜேம்ஸ் நான்சியைச் சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. ரகசியமாக தனது மாளிகையிலேயே நான்சியை ஜேம்ஸ் சந்தித்தான்.  அவன் எழுதிய நாடகங்களை நான்சி படித்து வியந்தாள். ஒவ்வொரு நாடகமும் பெரும் தாக்கத்தை அவளுக்கு ஏற்படுத்தியது. இந்நாடகங்களை மேடையேற்ற வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தனர்.


நான்சி தனது நண்பர்கள் துணைக் கொண்டு மேடை நாடகங்களை உருவாக்கினாள். பெரும்பான்மையான நாடகங்கள் ஜோகன் தாயின் பெருமைகள் குறித்ததாக இருந்தது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.


நான்சி ஜேம்ஸை மாளிகையில் சந்திப்பது ஜேம்ஸின் தந்தைக்குத் தெரிய வந்தது. அவளைக் கடிந்து இனிமேல் அவள் வந்தால் உயிர் இருக்காது என்று மிரட்டினார்.


நான்சியை சந்திக்காது ஜேம்ஸ் பெரிதும் தவித்தான்.  நான்சியின் இருப்பிடத்திற்கே மீண்டும் சென்றான். அங்கு தனது நாடகத்தின் மேடை வடிவத்தைப் பார்த்து வியந்தான். தன் எழுத்தை விட மேடை வடிவம் மிகவும் சிறப்பாக இருப்பதாக எண்ணினான்.


அதன் பின் அவன் ‘கதாநாயகன்’ என்று புதிதாக ஒரு நாடகம்  இயற்ற ஆரம்பித்தான். இம்முறை ஆன்மீக நாடகங்களுக்குப் பதிலாக ஒரு அரசியல் நாடகம் எழுதினான். வறியவர்கள் சுரண்டப்படுவதும், அவர்களைக் காப்பாற்ற ஒரு வீரன் போராடுவதும் கதைக்களனாக இருந்தது. இந்த வீரன் அரசாட்சியை அழித்துப் புதிய ஆட்சிமுறையை உருவாக்குகிறான். மக்களே தலைவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.  "ஜோஷுவாவின் படைப்பில் மனிதர் அனைவரும் சமம்" என்று அந்த தலைவன் முழங்குவதுடன் நாடகம் முடிவடைகிறது. ஜனநாயகம் என்ற சிந்தனையின் வித்து இந்நாடகம் வித்திட்டது.


இந்நாடகம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. யுதோபியா நாடு முழுதும் நாடகம் மேடையேற்றப்பட்டது.  அரசன் பயந்து நாடகத்தைத் தடை செய்தான்.  ஆனால் நாடகம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. நாடகங்கள் நடக்கும் இடங்களில்  அரச வீரர்களின் வன்முறைத் தாக்குதல் நடந்தது.


இவ்வாறு நடந்த ஒரு தாக்குதலில் நான்சி இறந்தாள். அவள் இறந்த பின் பித்து பிடித்து ஜேம்ஸ் தன்னை மாய்த்துக் கொண்டான்.


நான்சியும், ஜேம்ஸும் யுதோபியா நாட்டு மக்கள் மனதில் அழியாமல் இருந்தார்கள். இவர்களின் கலைப்படைப்பு இருபது வருடங்கள் கழித்து அரசாட்சிக்கு எதிராக உருவான ஜனாநாயகவாதிகளின் போராட்டத்திற்கு மூல காரணமாக இருந்தது.

                                                     

ஆவணங்கள் படித்த பின் ஸ்டெல்லா உறக்கத்திற்கு சென்றாள். அன்றை அவள் நித்திரையில் ஜேம்ஸும் நான்சியும் நிறைந்திருந்தனர். 


                                            ————*****************—————-


ஸ்டெல்லா மார்க்ஸின்  படிப்பறைக்கு  வந்தபோது புதிதாக ஒருவனைப் பார்த்தாள். அவளை பார்த்ததும் மெலிதான புன்னகை செய்தான். ஸ்டெல்லாவின்  இதயத் துடிப்பு ஒரு கணம் நின்றது. இந்த இளைஞனிடம் ஏதோ ஒரு வசீகரம் உள்ளது.


"ஸ்டெல்லா, இவன் ரூசோ. பெரும் தனவந்தரின் மகன். இவனுக்கோ அறிவின் மீது நாட்டம். சரித்திரம் இவனுக்கு அத்துப்படி. என் ஆட்சிக்காலத்தை ஆவணப்படுத்தம் பணியில் இவனை அமர்த்தியுள்ளேன்."


"அதையும் நேர்மையாக செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். நிறை, குறை இரண்டையும் பதிவிட வேண்டும் என்பது அவரின் ஆணை."


ஆண்மையின் கம்பீரமும், பெண்மையின் குழைவும் இணைந்த ரூசோவின் குரல் ஸ்டெல்லாவை மயக்கியது.

"உன் ஆவணங்களை நான் படித்தல் சரியாக இருக்காது. ஸ்டெல்லா அதை செய்வாள்."


மார்க்ஸ் அமைச்சரைச் சந்திப்பதற்கு சென்றார். ஸ்டெல்லாவும் ரூசோவும் தனித்து விடப்பட்டனர்.


"என் தந்தையின் ஆட்சி பற்றி உங்கள் கணிப்பு என்ன."


"சில சாதனைகள் உள்ளன. நாட்டின் பொருளாதாரம் இத்தனைச் சிறப்பாக என்றும் இருந்தது இல்லை. மக்கள் நிறைவுடன், மகிழ்வுடன் உள்ளனர். எல்லையில் கொள்ளைக்காரர்களின் தாக்குதல்களை முழுதும் அடக்கினார். நாடு முழுதும் சாலைகள் இடப்பட்டுள்ளன. குறைகள் என்றால் செனட்டிடம் இணக்கமான உறவு இல்லை. நாட்டின் அனைத்து தரப்பினரையும் இணைத்து அரசு செயல்படவில்லை. சரித்திரம் மார்க்ஸைச் சாதனையாளராக தான் மதிப்பிடும்."


"என் தந்தை அவ்வாறு எண்ணவில்லை தனது கனவுகளில் மிக குறைந்த சதவீதம் நிறைவேற்றியுள்ளதாக நினைக்கிறார்."


"என் தந்தையும் அவசரக்காரர் தான். ஆனால் சமூகம் அவர் வேகத்திற்கு ஈடு கொடுக்கவில்லை என்று நினைக்கிறார். இவர்கள் இந்நாட்டின் அடிப்படை இயல்பான மெதுவான, நிலையான மாற்றங்கள் என்ற கோட்பாடு பெரும் தடை என்று நினைக்கிறார்கள்."


"அது உண்மை தான்."


"மன்னராட்சியை ஒழித்து முதல் ஜனாதிபதியானவர் பீட்டர். அவரின் வலது கரமாக விளங்கிய மாத்யூவைத் தெரியுமா. இந்நாட்டின் அரசியல் சட்டத்தை இயற்றியவர். சரித்திரத்தில் அதிகம் பேசப்படாதவர்.  நாட்டின் தேசத்தந்தைகளில் அவரும் ஒருவர்.          'நிலையான மாற்றங்கள்'  என்ற கோட்பாடு நம் அரசியல் சட்டத்தின் அடிப்படையாக அமைந்ததற்கு காரணகர்த்தா இவரே."


மாத்யூ குறித்த ஆவணங்களை ரூசோ ஸ்டெல்லாவிடம் தந்தான். ஸ்டெல்லா படிப்பதில் ஆழ்ந்தாள்.


                                                     மாத்யூ


மாத்யூ பரவச நிலையில் இருந்தான். அதிலிருந்து மீள்வதற்கு நேரம் ஆகும். ஒவ்வொரு முறை கதாநாயகன் நாடகத்தின் முடிவைப் பார்க்கும் போதும் இந்நிலைக்கு  ஆளாவான். தனது வாழ்நாளில் கதாநாயகன் போன்ற ஒரு நாடகத்தை அவன் பார்த்ததில்லை. இதற்கு முன் வந்த நாடகங்கள் எல்லாம் ஜோகன் தாய் மற்றும் அவள் வழி வந்தவர்களின் பெருமை பேசுபவை. ஆனால் கதாநாயகன் நாடகம் வித்தியாசமானது. மக்களைச் சுரண்டுபவர்களை வெளிக்காட்டி, அவர்களைத் தோற்கடித்து,  ஏழை எளியவர்களுக்கு நம்பிக்கை ஊட்டியது இந்நாடகம்.


'கதாநாயகன்'  அரசினால் தடை செய்யப்பட்டிருந்தது. பெரும் நகரங்களில் இது சாத்தியமாயிற்று. ஆனால் சிற்றூர்களில் நாடகம் நடப்பதை அரசினால் தடுக்க இயலவில்லை.  இந்நாடகம் பார்ப்பதற்கு மட்டுமே  நகரங்களிலிருந்து வருபவர்களும் உண்டு.


நாடகம் பார்த்து முடித்தவுடன் வீட்டிற்கு வந்ததும் அதன் வசனங்கள் அவன் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதை பேசி நடித்துப் பார்ப்பான். யுதோபியா நாட்டை மீட்கும் கதாநாயகன் வருவது எப்போது. அது தானாகவும் இருக்கலாம் அல்லவா என்று நினைப்பான்.


மாத்யூவின் தந்தை ஒரு விவசாயி. தனது மகனை பிரின்ஸிபியா நகரின் யூடா பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க வேண்டும் என்று கனவு கண்டார். அதற்கேற்ப மாத்யூவும் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தான். யுதோபியா நாட்டின் சரித்திரம் தன் நுனிவிரலில்  வைத்திருந்தான். மகனின் படிப்பிற்காக தந்தை சிறுக சிறுக சேமித்து வந்தார்.


யுதோபியா நாட்டின் அரசனாக அப்போது இருந்தவன் டொனால்ட். பெரும் வலிமை மிகுந்தவனாக இருந்தான். மக்கள் ஆதரவும் பெருமளவு இருந்தது. ஆனால் யுதோபியா நாட்டின் கடைசி மன்னனாக, அரசாட்சி அவனோடு முடிவுற்றது. புரட்சி ஏற்பட்டு ஜனநாயக அரசாட்சி முறை வந்தது. இதெற்கெல்லாம் காரணம் அவனுடைய மூடத்தனமான ஒரு திட்டம்.


அப்போது யுதோபியா நாட்டில் நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. அதைத் தடை செய்து காகிதங்களில் செய்யப்பட பணம் அமலுக்கு கொண்டு வருவது என்ற விசித்திரமான ஒரு திட்டத்தை அரசன் கொண்டு வந்தான்.  மக்கள் தங்களிடமிருக்கும்  நாணயங்களை அரசிடம் ஒப்படைத்து நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.


இதனால் நாடே கொந்தளிப்புக்கு உள்ளானது. அரசுக்கு நெருக்கமானவர்கள்,  பெரும் தனவந்தர்கள் சுலபமாக நாணயங்களைப் பண நோட்டுகளாக மாற்றிக் கொண்டனர். பாதிக்கப்பட்டது எளியவர்கள். ஒரு நாளுக்குக் குறிப்பிட்ட மதிப்புள்ள நாணயங்கள் மட்டுமே மாற்றப்படும் என்று விதிகள் இருந்தது. தங்கள் அனைத்து நாணயங்களையும் மக்களால் சுலபமாக மாற்ற இயலவில்லை. மக்கள் பொறுமையிழந்தனர். நாடெங்கும் கலவரம் வெடித்தது. அதில் மாத்யூவின் தந்தை இறந்தார்.


அரசாட்சிக்கு எதிராக புரட்சி வெடித்தது. பீட்டர் என்பவன் புரட்சிப் படையின் தலைவனாக இருந்தான். சிறு கிராமங்களைக் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். மாத்யூ பீட்டரைச் சந்தித்தான். இருவரும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். புரட்சி வீரர்களை உற்சாகப்படுத்த தினமும் இரவில் கதாநாயக நாடகம் நடைபெறும். வீரர்களுடன் சேர்ந்து பீட்டரும், மாத்யூவும் நாடகத்தை ரசித்தனர்.


ஒரு நாள் நாடகம் முடிந்த பின் மாத்யூ தீவிர சிந்தனையில் இருந்தான். பீட்டர்  பேச்சு கொடுத்தும் சரியாக பதிலளிக்கவில்லை."


"ஏன் இந்த மௌனம். எப்போதும் நாடகம் முடிந்த பிறகு உற்சாகமாக இருப்பாய். வீர வசனங்கள் எல்லாம் பேசுவாயே."


"இது வரை பல முறை இந்நாடகம் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் எளிய மக்களுக்காக போராடும் ஒருவன், அவன் பேசும் தெறிக்கும் வசனங்கள்  இவை தான் என்னை ஈர்த்தது. ஆனால் இன்று நான் வேறு ஒரு கோணத்தில் பார்த்தேன். ஜனநாயகம். மக்களே தலைவனைத் தேர்ந்தெடுப்பது. எத்தனைப் புதுமையான ஆட்சி முறை. இதை யோசித்தவன் பெரும் அரசியல் ஞானியாக இருக்க வேண்டும். ஜேம்ஸ் நீ ஒரு மேதை. மக்கள் அனைவரும் சமம் என்ற நிலை உருவாக வேண்டும் என்றால் அதற்கு ஜனநாயகம் தான் சரியான அரசியல் முறை என்று நீ யோசித்திருக்கிறாய். உனக்கு என் வந்தனங்கள். " 


“நீ கூறுவது பெரும் மனத்திறப்பாக  உள்ளது."


"நான் ஜேம்ஸின் சிந்தனையிலிருந்து மேலும் செல்ல முயலுகிறேன். நாளை இந்த அரசாட்சி கவிழ்கிறது. புரட்சி அணி ஆட்சியைக் கைப்பற்றுகிறது. மக்களே ஒரு தலைவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவன் செய்யும் முட்டாள்த்தனங்களிலிருந்தும் காப்பாற்ற ஒரு அமைப்பு வேண்டும் அல்லவா?"


"அதற்குத் தான் தேர்தல் உள்ளது."


"இருக்கிறது. ஆனால் அது போதாது. தவறுகள் செய்யும் தலைவன் மக்களை மூளைசலவை செய்து அல்லது வலிமையற்ற எதிர்க்ட்சிகள் காரணமாக தேர்தலில் வென்று ஆட்சியில் தொடரலாம்."


"நீ என்ன சொல்ல வருகிறாய்."


"ஜனநாயகத்திற்கு அடிப்படை ஸ்திரத்தன்மை. பெரும் மாற்றங்கள் கொண்ட திட்டங்கள் மெதுவாக, அனைத்துத் தரப்பினரிடம் விவாதித்த பின்னரே கொண்டு வர வேண்டும். அதற்காக செனட் என்ற அமைப்பு உருவாக வேண்டும். இந்த அமைப்பின் உறுப்பினர்களையும் மக்களே தேர்ந்தெடுப்பார்கள். நம் நாட்டின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் செனட் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  இவர்கள் கொண்டு வரும் சட்டங்களுக்கு தலைவன் ஒப்புதல் அல்லது மறுப்பைத் தெரிவிக்கலாம்.  சட்டம் இயற்றிய பின் அதை நடைமுறைப்படுத்துவது தலைவனின் அதிகாரத்திற்கு உட்பட்டது.”


"நாட்டின் தலைவனின் அதிகாரத்தை இது குறுகியதாக மாற்றுகிறது. மிக புதுமையாக இருக்கிறது உன் சிந்தனைகள்."


"நாட்டில் நிலையான மாற்றங்கள், சமநிலை, அனைத்துத் தரப்பினரையும் இணைத்து செல்லும் அரசாட்சிமுறை,  இதுவே ஸ்திரத்தன்மைக்கு அடிப்படை. ஸ்திரத்தன்மையே நாட்டின் செழிப்பிற்கு மூல காரணம்."


அன்றைய விவாதம் நண்பர்கள் இருவருக்கும் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. சில ஆண்டுகளுக்குப் பின் புரட்சி அணி ஆட்சியைக் கைப்பற்றியது. மன்னராட்சி ஒழிந்தது. தேர்தல் நடந்து பீட்டர் ஜனாதிபதி ஆனான். மாத்யூவின் தலைமையில்  நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. பரவாலாக்கப்பட்ட அதிகாரம், செனட் போன்ற சித்தாந்தங்கள் புதிய அரசியல் சட்டத்தில்  இருந்தது. அதன் பின் நாட்டில் பல தலைவர்கள் வந்தனர், சென்றனர். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கான  ஸ்திரத்தன்மையை மாத்யூ வடிவமைத்த அரசியல் சட்டம் கொடுத்தது. அதற்கு அரசியல் சட்டத்தில் இருந்த  'சீரான, தீர்க்கமாக ஆலோசிக்கப்பட்ட மாற்றங்கள்' என்ற கோட்பாடு ஆணி வேறாக அமைந்தது.

   

                                        ———-**********——-


வால்டேர் தன் முன் அமர்ந்திருந்த இரு இளைஞர்களை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்ததார். திட்டமிட்டபடி நீட்ஷேயும், ஸ்பினோசாவும் அவரைச் சந்தித்து தங்கள் திறனைப்  பயன்படுத்த வாய்ப்பு அளிக்குமாறு  வேண்டினர். உடனே அவர்கள் மீது அவருக்கு நம்பிக்கை வந்து விட்டது.


"உன் வயது இளைஞர்கள் மதுசாலைகளில் போதையில் பெண்கள் மடியில் உருண்டு கிடக்கின்றனர். லட்சியவாதி இளைஞர்களைக்  காண்பது நாட்டில் அருகி விட்டது. உங்களைப் பார்க்கும் போது என் மகன் கண் முன் தெரிகிறான்."


அவர் கூறி முடித்ததும் ரூசோ அறைக்கு வந்தான்.


வால்டேர்  ஒரு பெரும் கப்பல் உருவாக்க வேண்டும் என்றும், ஆயிரம் பேர் கப்பலில்  பயணிக்க, பல்லாயிரம் மைல்கள், பல வருடங்கள் நிலைத்திருக்க, பெரும் புயல்களைத் தாங்கும் வண்ணம் வடிவமைக்க வேண்டும் என்று தன் திட்டத்தைத் தெரிவித்தார்.


நீட்ஷேயும், ஸ்பினோசாவும் உற்சாகத்துடன் ஓரே மாதத்தில் கப்பலின் வடிவமைப்பைத் தருவதாக கூறினார். 


வால்டேர் அதற்கு சம்மதித்து வடிவமைப்பு திருப்தியாக இருந்தால் இருநூறு பேர் கொண்ட தொழிற்சாலை அவர்கள் மேற்பார்வையில் அமைத்துத் தருவவதாக கூறினார்.


வால்டேர் சென்றவுடன் ரூசோ அவ்விரு இளைஞர்களுடன் தனித்து விடப்பட்டான்.


யூடா பல்கலைக்கழகத்தின்  தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர். பேச்சு அறிவியல் பக்கம் திரும்பியது. தனக்கு அறிவியல் தெரியாவிட்டாலும் அறிவியலின் வரலாறு தெரியும் என்று ரூசோ கூறினான்.  யுதோபியா போன்ற சீரான வேகத்தில் செல்லும் சமூகத்திற்கு அறிவியல் சிந்தனை எடுபடாது என்றும் அறிவியல் ஏற்படுத்தும் பெரும் மாற்றங்களை இந்த சமூகம்  ஏற்கும் நிலை இல்லை என்றும் கூறினான்.


ரூசோ சொல்வதை இருவரும் வியப்புடன் கேட்டனர். பல நூறு ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரும் அறிவியல் புரட்சி எவ்வாறு தோற்றது என்றும், ஆல்பர்ட் என்ற சிந்தனையாளனின் சோகமான முடிவை அவர்களுக்கு கூற ஆரம்பித்தான். 

    

                                           

                                                 ஆல்பர்ட்


ஜனநாயகப் புரட்சிக்கு சுமார் நூறாண்டுகளுக்கு முன்னரே யுதோபியா நாட்டில் காகிதப் புரட்சி தோன்றி விட்டது. காகிதங்கள் புழக்கத்திற்கு வந்ததால் புத்தகங்கள், காகித ஆவணங்கள் பயன்பாட்டிற்கு வந்தது.  இதற்கு காரணகர்த்தா ஆல்பர்ட் என்ற அறிவியல் மேதை.


ஆல்பர்ட் சிறுவயதில் மந்தமான குழந்தையாக இருந்தான். அவன் பேச ஆரம்பித்தது ஐந்தாவது  வயதில். இருந்த இடத்தை விட்டு அசையாமல் ஒரு பொருளைக் கையில் வைத்து பார்த்த வண்ணம் இருப்பான். அவன் பெற்றோருக்கு இது கவலை அளித்தது. பள்ளியில் சேர்ந்தவுடன் அவன் படிப்பிலும் சோபிக்கவில்லை. குறிப்பாக கணிதத்தில். பத்தாவது வயதிலும் சாதாரண கூட்டல் -  கழித்தல் கணக்குகளில் தவறு செய்தான். சக மாணவர்கள் மத்தியில் கேலிக்குரியவனாக இருந்ததால் ஆல்பர்ட் தனியன் ஆனான்.  ஆசிரியர்களில் கோபத்திற்கு ஆளானான். அவர்கள் அவனைக் கடுமையாக தண்டித்தனர். ஆனால் உடலின் வேதனை  அவன் மனதில் எந்த காயத்தையும் ஏற்படுத்தவில்லை. 


தன் வீட்டின் அருகிலிருந்த ஏரிக்கரையில் மணிக்கணக்காக அமர்ந்திருப்பான். செடிகளின் பசுமை கதிரவன் ஒளியில் மின்னுவதை, பறவைகள் தத்தி தத்தி நடப்பதை, நீரில் மிதக்கும் மீன்களை வியப்புடன் பார்ப்பான். சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகளின் வண்ணங்களில் தன்னை மறந்து இருப்பான். ஆனால் அவன் மனதில் இக்காட்சிகள் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. காட்சிகளுக்கும் அவனுக்குமிடையே இடைவெளி  இல்லாமலாகி அவனே அக்காட்சிகளாக மாறினான்.


பதினாறாவது வயதில் அவனுக்கு ரெபெக்காவின் நட்பு  கிடைத்தது. அவள் அவனுக்கு கணிதம் கற்று கொடுத்தாள். அவள் மூலம் கிடைத்த உந்துதல்  ஆல்பர்ட்டை வேறு மனிதனாக மாற்றியது. இருவரும் இணைந்து பல கணிதப் புதிர்களுக்கு விடை கண்டுபிடித்தனர். தங்களுக்குள் போட்டி வைத்துக் கொண்டனர். விரைவில் ஆல்பர்ட் ரெபெக்காவை மிஞ்சினான். அவன் கணிதங்களின் ஆதார விதிகளை ஆராய்ந்தான். வடிவங்களை கணித விதிகள் மூலம் உருவகம் செய்தான். ரெபெக்காவிற்கும்  ஆல்பர்ட்டுக்கும் இடையே விலகல் எற்பட்டது. அவளுக்குத்  திருமணம் ஆண பின் இருவரும் சந்திக்கவில்லை.  


ஆண்டுகள் செல்ல சம அலைவரிசை உடைய மேலும் சில மாணவர்கள்  ஆல்பர்ட்டுக்கு நண்பர்கள் ஆயினர். இணைந்து சிறிய  இயந்திரங்களை உருவாக்கினர். பல வித இரசாயனங்கள் கொண்டு ஆராய்ச்சி செய்தனர்.


இந்த இளைஞர்கள் உருவாக்கிய இயந்திரங்கள் மக்களைக் கவர்ந்தது. தங்கள் அன்றாட வாழ்க்கையை இவ்வியந்திரங்கள் எளிமைப்படுத்தியதை மக்கள் உணர்ந்தனர். இயந்திரங்களுக்குப் பெரும் தேவை இருந்ததால் பெருமளவு உற்பத்தித் திறன் கொண்ட தொழிற்சாலைகள் தேவை என்று  ஆல்பர்ட்டும் அவன் நண்பர்களும் கருதினர்.  செல்வந்தர்கள் பலரின் உதவியை நாடினர். ஆனால் எவருக்கும் இவர்கள் மீது நம்பிக்கை இல்லை.


ஒரு நாள் மேசன் என்ற மனிதர் ஆல்பர்ட்டைச் சந்திக்க வந்தார். அவர் அரசின் தலைமை நிர்வாகிகளில் ஒருவர். அரசின் ஆவணங்களைச் சிறந்த முறையில் பேண வேண்டிய அவசியம் இருப்பதாகவும், அதற்கு உதவ முடியுமா என்று வினவினார்.


ஆல்பர்ட்டும் அவன் நண்பர்களும் யோசித்து, சில காலம் முன் தாங்கள் பரிசோதனை முயற்சியாக செய்த காகிதம் என்ற பொருளைத் தேர்வு செய்தனர். வெகு விரைவில் காகிதங்கள் தயாரித்து முடித்தனர். அதனைப் பயன்படுத்தும் முறையை அரசருக்குக் காண்பித்தனர்.


ஆனால் அரசர் முழு அளவில் திருப்தி அடையவில்லை. காகிதங்களில் மையினால் தான் எழுத வேண்டும். வெகு விரைவில் அழிந்து விடும். அழியாத எழுத்துக்கள் கொண்ட ஆவணங்கள் தேவைப்படுகிறது என்றார்.


ஆல்பர்ட்டும் அவன் நண்பர்களும் கடுமையாக விவாதித்தனர். ஆனால் அவர்களால் தெளிவான ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அரசர் கொடுத்த காலக்கெடு நெருங்கிக் கொண்டிருந்தது. 


ஆல்பர்ட் கடும் மன உளைச்சலில் ஒரு நாள் இரவில் உறக்கம் வராமல் படுத்திருந்தான். அவன் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தான். அவ்வீட்டின் சிறுமிகள் சிறு அச்சுகள் கொண்டு கைகளில்  ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தனர். அடுத்த நாள் காலை ஒரு சிறுமி தன் கைகளை அவனுக்கு காண்பித்தாள். ஓவியங்கள் அழியாமல் இருந்தன. 


ஆல்பர்ட் சிந்தனை புரவி வேகத்தில் பாய்ந்தது. தன் நண்பர்களை அழைத்து தனது யோசனையைத்  தெரிவித்தான். வெகு விரைவில் அச்சு இயந்திரம் உருவாக்கினர். அரசின் சில ஆவணங்களைக் காகிதங்களில் பதிப்பித்தனர்.


அரசர் இதனைக் கண்டு பிரமித்தார். ஆல்பர்ட் தலைமையில் அரசின் அறிவியல் துறையை நிறுவினார். இந்த துறை நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளை நிர்வகித்தது. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஆராய்ச்சிக் குழு இருந்தது. ஆல்பர்ட் மேற்பார்வையில்  புதுமையான இயந்திரங்கள் பல்வேறு ஆராய்ச்சிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டது. இவற்றிற்குத் தேவையான தகுதியுள்ள ஊழியர்களை உருவாக்க பல்கலைக்கழகங்கள் உதவியாக இருந்தன.


அக்காலகட்டத்தில் யுதோபியா நாட்டின் மருத்துவம் மிகவும் கீழான நிலையில் இருந்தது. நாற்பது வயதில்  மரணங்கள் சாதாரணமாக நிகழ்ந்தது. அனைத்திற்கும் மூலிகைகளே மருந்தாக பயன்படுத்தப்பட்டது.


ஆல்பர்ட் ரசாயங்கள் கொண்டும், கிருமிகளே கிருமிகளை அழிக்கும் மருந்துகளைக் கண்டுபிடித்தான். இது பெரிதும் வெற்றியடைந்தது. யுதோபியா சமூகம் நோய்கள் குறைந்து ஆரோக்கியமானதாக மாறியது.


ஆல்பர்ட் மக்கள் மத்தியில் பெரிதும் செல்வாக்கு உடையவனாக மாறினான். அரசனுக்கு சமமான மரியாதையும் புகழும்  உருவானது.   

 

இது வெகு நாள் நீடிக்கவில்லை. கடுமையான விஷக்கொல்லி கிருமி நாட்டைத் தாக்கியது. மக்கள் கொத்து கொத்தாக இறந்தனர். அவர்கள் ஆல்பர்ட் தங்கள் ரட்சகனாக இருப்பான் என்று நம்பினார்கள். ஆல்பர்ட் கடுமையாக உழைத்து சில மருந்துகள் உருவாக்கினான். ஆனால் இவை எதுவும் கிருமியின் சீற்றத்தை அடக்க இயலவில்லை. இயற்கையின் வேகத்திற்கு அறிவியலால் ஈடு கொடுக்க முடியாமல் திணறியது.


மக்களின் சினம் ஆல்பர்ட் மீது திரும்பியது. வன்முறையாளர்கள் கூட்டம் அவன் மீது தாக்குதல் நடத்தினர். ஆல்பர்ட் உயிர் தப்பினான். ஆனால் அவனைத் தண்டிக்க வேண்டும் என்ற குரல் வலுத்தது.


அவன் அரசினால் சிறை செய்யப்பட்டான். பொது மக்கள் முன் அவனைக் கழுவேற்றவேண்டும் என்று அரசன் ஆணையிட்டான். கடைசியாக அவன் விருப்பம் என்னவென்று கேட்டபோது நாட்டு மக்களுக்குத் தான் சில கருத்துக்கள் சொல்ல அனுமதி வேண்டும் என்றான். அதற்கு அரசர் ஒப்புதல் கொடுத்தார்.


"தோற்றது நானல்ல. தோற்றது யுதோபியா நாடு. இன்று கழுவில் ஏற்றப்படுவது நானல்ல. அறிவியல். அறிவியலும், தர்க்க சிந்தனையும் இன்று படுகொலை செய்யப்படுகிறது. இனி யுதோபியா தேங்கிய சமூகமாக மாறும். இன்று நான் இந்நாட்டு மக்களுக்கு எதிரியாக கருதப்படுகிறேன். ஆனால் சரித்திரம் என்னை ஒரு முன்னோடியாக கருதும்."


ஆல்பர்ட் இறந்தான். அவன் இறுதி வார்த்தைகள் மக்களிடம் தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை. அவனுடன் யுதோபியா நாட்டின் அறிவியலும் இறந்தது. அரசு அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குக் கொடுக்கும் நிதி நிறுத்தப்பட்டது.


ஆனால் ஆல்பர்ட் உருவாக்கிய சில இயந்திரங்கள் அவன் மரணத்திற்குப் பின்னும் சாஸ்வதமாக இருந்தது. காகிதங்களும், அச்சு இயந்திரங்களும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தது.  வெறும் ஆவங்களிலிருந்து, புத்தகங்களாக உருமாறியது. புனைவுகள், பாடப்புத்தகங்கள், என்று பல்வேறு வடிவங்களை எடுத்தது.


மரங்களிலிருந்து எடுக்கப்படும் செல்லுலோஸ் என்னும் பதார்தத்தில் ஆல்பர்ட்டின் ஆன்மா இறக்காமல் ஜீவித்திருந்தது.  


                                           ——-*******——-


"ரூசோ நம் நாட்டில் அறிவியல் சிந்தனைகள் மட்டுப்பட்டு புதுமையான கருத்துக்கள் ஏன் தோன்றுவதில்லை."


நீட்ஷேவின் இக்கேள்வியை ரூசோ புன்னகையுடன் எதிர்கொண்டான்.


"நீ சிறு வயதில் உன் பெற்றோரை எதிர்த்து பேசியிருக்கிறாயா?"


"இல்லை."


"வகுப்பில் ஆசிரியரிடம் பாடங்கள் குறித்து கேள்விகள்?"


"அடி விழும். வகுப்பில் அமைதியாக அமர்ந்து ஆசிரியர் சொல்வதை மட்டும் கேட்க வேண்டும்."


"கேள்விகள் கேட்காத ஒரு சமூகத்தில் புதிய சிந்தனைகள் எவ்வாறு தோன்றும்."


"நம் பெற்றோர்கள் நமக்கு கூறும் அறிவுரை என்ன. பெரியோர்களிடம் மரியாதை காட்ட வேண்டும். பெற்றோர் சொல்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நல்ல கல்வி பெற்று ஒரு நல்ல அரசாங்க உத்தியோகத்தில் அமர்வது தான் வலியுறுத்தப்படுகிறது. யாரும் செல்லாத பாதையைத் தேர்ந்தெடுக்க இளைஞர்களுக்கு  உந்துதல் இல்லை. ஏதிர்காலத்தின் வெற்றி தோல்வி பற்றி கவலை கொள்ளாமல் ஒரு செயல் செய்வதற்கு இந்த சமூகமே ஒரு தடை."


"நான் அவ்வாறு நினைக்கவில்லை. ஒழுக்கம் நம் குறிக்கோளிலிருந்து விலகும் கவனச்சிதறலைத் தடுக்கும்."


"தனி மனித ஒழுக்கம் ஒரு சமூகத்தைத் தேங்கியதாகவே வைத்திருக்கும். சிந்தனையின் ஒழுங்கின்மையே புதுமையின் ஆதாரம். நம் நாட்டில் அரசியல் சுதந்திரம் மட்டுமே உள்ளது. கலாச்சார ரீதியாக நாம் அடிமைகள். ஒரு ஆணும் பெண்ணும் இறுதி வரை தங்கள் வாழ்க்கையை ஒன்றாக கழிக்க வேண்டும். விவாகரத்து கிடைப்பது இங்கு எளிதல்ல. தனி மனித சுதந்திரம் பெரிதும் கட்டுப்பட்டுள்ளது. தனி மனிதனை விட ஒரு சமூகத்தின் கட்டுக்கோப்பே பெரிதும் வலியுறுத்தப்படுகிறது. ஆம் நீட்ஷே. நாம் முக்கால் அடிமைகள்."


"வரலாறு ரீதியாக இதன் பின்னணி என்ன."


"நாட்டின் முதல் ஜனாதிபதி மேரி கலாச்சார பழமைவாதத்தை முன் வைத்து வெற்றி பெற்று சட்டங்கள் இயற்றியவர். அதற்கு அவரின் தனிப்பட்ட வாழ்க்கை முக்கிய காரணமாக இருந்தது.”


ரூசோ மேரியின் வரலாற்றைக் கூற ஆரம்பித்தான்.


                                                    மேரி


மேரியின் தந்தை ஒரு ஸ்திரீலோலன். தாய் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவள். தந்தை வீட்டில் தங்குவது குறைவு. மாலை ஆனவுடன் தாய் மது அருந்த ஆரம்பித்து இரவுக்குள் மட்டை ஆகி விடுவாள்.  வீட்டின் சகல வேலைகளையும் மேரி தான் செய்து வந்தாள். அவளுக்கு இரண்டு தமக்கைகள். 


தானும் தன் தமக்கைகளும் வறுமை என்னும் படுக்குழியிலிருந்து வெளியே வர வேண்டும் என்றால் கல்வி தான் ஒரே வழி என்பதில் மேரி தெளிவாக இருந்தாள். மாலை ஆனவுடன் தமக்கைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பாள். இரவானதும் தன்  தாய்க்கு உணவளித்து படுக்கையில் தூங்க வைப்பாள்.  குழந்தைகளைத்  தூங்க வைத்து, தனது பாடங்கள் படித்து சிறிதளவே உறங்குவாள். அதன் பின் விடிகாலையிலேயே சமையல் அனைத்தும் முடித்து தங்கைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். 


ஒரு நாள் அவள் தந்தை ஒரு பெண்ணை வீட்டிற்கே அழைத்து வந்தான். படுக்கையறையில் இருவரின் வினோத சத்தங்கள் குழந்தைகளைப் பயமுறுத்தியது. மேரியின் தாய் கணவனையும் அப்பெண்ணையும் படுக்கையறையிலேயே வைத்துக் கொன்றாள். அவள் சிறையில் அடைக்கப்பட்டாள்.


அதன் பின் மேரி தனியாகவே குழந்தைகளை வளர்த்தாள். அவளுடைய பதினெட்டாவது வயதில் வேறு பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்தது. பொறுக்கிகள் அவளுக்கு இம்சை கொடுத்தனர்.


ஒரு நாள் இரவு வீட்டின் கதவு பலமாக தட்டப்பட்டது. மேரியும் குழந்தைகளும்  சமையலறையின்  கீழே இருந்த  ரகசிய அறையில் ஒளிந்துக் கொண்டனர். முரடர்கள் வீடு முழுதும் தேடி சென்றனர்.


அடுத்த நாள் மேரி நகரின் செனட்டர் ரீகனைச் சந்தித்தாள். தன் நிலையைக் கூறி ஒரு வேலையும், தங்குவதற்கு இடமும் தர வேண்டினாள். மேரியின் நேர்மையும், கடும் உழைப்பும் ரீகனைக் கவர்ந்தது. 


கடும் உழைப்புக்குமிடையே அவள் தங்கைகளின் கல்வியில் எந்த சமரசமும் செய்ததில்லை. அவர்களை நல்ல நிலைக்குக் கொண்டு வருவதில் உறுதியாக இருந்தாள். அவள் அறையின் விளக்கு இரவு முழுதும் எரிந்துக் கொண்டே இருக்கும். யாரும் கேட்டால் இருட்டு குழந்தைகளைப் பயமுறுத்துகிறது என்பாள்.


வருடங்கள் கடந்தன. ஒரு நாள் மேரி செனட்டர் ரீகனைச் சந்தித்தாள். தான் யூடா பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பு முடித்து விட்டதாக கூறினாள். பெரும் வியப்புற்று இனிமேல் வீட்டு வேலை செய்ய வேண்டாம் என்று ரீகன் கூறினார். அடுத்த நாள் ரீகனை  அவர் அலுவலகத்தில்  சந்தித்தாள்.  முதலில் சிறிய பொறுப்புகளைத் திறம்பட செய்து, மெல்ல ரீகனின் வலது கரமாக மாறினாள். 


அவ்வருடம் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரீகன் நிற்பதாக அறிவித்தார். அவருக்கு எதிராக நின்ற கென்னடி ரீகனைக் காட்டிலும் முப்பது வயது குறைந்தவர். வசீகரமானவர். அதனால் பெண்கள் ஆதரவு கணிசமாக இருந்தது.


ஒரு நாள் தனிமையில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த ரீகனிடம் மேரி காரணம் கேட்டாள்.


"ஒவ்வொரு நாள் செல்ல செல்ல என் தோல்வி உறுதியாகி வருகிறது. கென்னடியின் புன்னகைக்கு இந்நாட்டின் பெண்கள் அனைவரும் தங்கள் கற்பையே கொடுத்து விடுவார்கள் போல. "


"பெண்களின் வாக்கு கிடைப்பதற்கு நான் வழி சொல்கிறேன். இந்நாட்டின் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் ஒரு கண்ணீர்க் கதை. காரணம் ஆண்களிடம் உள்ள மதுப்பழக்கம் மற்றும் பெண்ணடிமை. இதை மாற்றுவதாக நீங்கள் மக்களிடம் உறுதியளிக்க வேண்டும்."


"ஒவ்வொரு வீட்டின் படுக்கையறையில் நடக்கும் விஷயங்களில் அரசாங்கம் தலையிட முடியாது."


"முடியும். நாட்டில் பல தார மணத்தைத் தடை செய்யுங்கள். மனைவி இருக்கும் போது வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைப்பது குற்றம். விவாகரத்து பெறுவது கடினமாக்கப்பட வேண்டும்.  மனைவியிடம் வன்முறையில் ஈடுபடும் ஆண்களுக்குப் பத்து வருட சிறை தண்டனை.  இரவு ஒன்பது மணிக்கு மேல் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். பெண்களின் உயர் கல்விக்கு  நிதி உதவி. பட்டப்படிப்பு முடிக்கும் பெண்களுக்கு அரசு வேலையில் முதலுரிமை. இதை எல்லாம் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாக வாக்களியுங்கள். பெண்கள் வோட்டு முழுதும் உங்களுக்கே விழும். நான் உறுதி கூறுகிறேன்."


"நீ ஒரு அரசியல் மேதை மேரி."


"இல்லை. அரசியலை நான் எங்கும் கற்கவில்லை. என் வாழ்க்கையே எனக்குப் பல பாடங்கள் கற்பித்துள்ளன."


ரீகன் தேர்தலில் வென்று ஜனாதிபதி ஆனார். ஆனால் வெற்றி பெற்றவுடன் பெண்களின் நலனுக்குத் தான் வாக்களித்த திட்டங்களை நிறைவேற்றுவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை.


கருத்து முரண்பட்டு காரணமாக ரீகன் கட்சியை விட்டு பிரிந்தாள். அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று முதல் பெண் ஜனாதிபதி ஆனாள்.


பல இடர்களுக்கிடேயே பெண்களின் நலனுக்காக பல சட்டங்கள் அவள் ஆட்சியில் கொண்டு வரப்பட்டன. கட்டற்று கிடந்த ஒரு சமூகத்தைத் தனது அதிகாரம் மூலம் கட்டுக்கோப்பானதாக மாற்றினாள். 


அவள் ஆட்சி பெண்களின் உரிமைக்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஆனால் தனி மனித சுதந்திரம் சமூகத்தின் கால்களில் நசுக்கப்பட்டது.


                                              































                                                பகுதி -   4


                                               லாமா தேசம்


அசோகா தன் நகரத்தை  விட்டு நீங்கி இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. அவன் சென்ற பாதை பெரும்பாலும் மனித நடமாட்டமே இல்லாத வெட்டவெளி. ஆங்காங்கே வழியில் தோன்றிய ஒன்றிரண்டு  கிராமங்களில் இளைப்பாறி சென்றான். லாமா தேசம் பரப்பளவில் பெரிது, ஆனால் ஜனத்தொகையோ மிகவும் குறைவு. நாட்டில் பெரும் நகரங்கள் மிகவும் குறைவே.


அசோகா வெண்ணிறப் புரவியில் மெதுவாக சென்றுக் கொண்டிருந்தான். அவன் மனோவேகமோ தறி கெட்டு சென்றுக் கொண்டிருந்தது.  மனம் முழுதும் நளாவும், மகனும் நிறைந்திருந்தனர். வேறு விதமாக முடிவெடுத்திருக்கலாமோ என்ற சிந்தனை அவனைக் குடைந்துக் கொண்டிருந்தது. 


லாமா தேசத்தில் சட்டம் எதுவும் கிடையாது. எல்லாம் பரிந்துரையே. அசோகாவும் நளாவும்   தொடர்ந்து குடும்பமாக இயங்குவது என்று முடிவெடுத்தால் யாரும் தடை செய்ய முடியாது. ஆனால் சமூகத்தின் வரிசையில் பின்னுக்குத்  தள்ளப்படுவார்கள். குழந்தையைப்  பள்ளியில் சேர்க்க வேண்டுமென்றால் கூட்டு வாழ்க்கையை ஏற்ற மற்ற மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். தான் விரும்பிய தொழில் செய்ய வேண்டுமென்றாலும் அது கிடைப்பது அவ்வளவு எளிதன்று.  ஏன் அன்றாட உணவுப் பொருள்  கூட  விரும்பியவற்றை உடனே அங்காடியில் வாங்க இயலாது. பல நாட்கள் முன்னரே சொல்லி, தரம் குறைந்த பொருளே தரப்படும். சமூகத்திற்காக தன் சொந்த விருப்பங்களைத் தியாகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது நியாயமே.


சில தம்பதியினர் வேறு விதமாக இதைக் கையாளுவதும் உண்டு.  தம்பதியினரும்  குழந்தைகளும்  தனித்தனியாக இருந்து கொண்டே குடும்பமாக இயங்குவது.  இது தவறு என்றாலும் சிலர் செய்வதுண்டு.


நளாவை முதலில் சந்தித்து பழகிய ஆரம்ப நாட்கள் அசோகாவின் நினைவில் வந்தது. அப்போது அவள் எண்ணங்கள் வேறு விதமாக இருந்தது. ஐநது வருடங்கள் கழித்து நாம் தம்பதிகள் இல்லை என்றால் என்ன. நல்ல நண்பர்களாக நம் உறவு  தொடரலாம் என்று கூறியவள் எப்படி மாறினாள். மகன் பிறந்தது காரணமாக இருக்கலாம். தன் உதிரத்தைக் கொண்டவனை எப்படி தன்னவன் இல்லை என்று விட்டுக் கொடுக்க இயலும். மகனைத் துறக்க முடியாததால் கணவனையும் துறக்க இயலவில்லை.


மாலை ஆகியிருந்தது. லேசாக பனிமழை பெய்யத் தொடங்கியது. கதிரவன் தொலைதூர மலையின் இடுக்குகளில் எங்கோ ஒளிந்துக் கொண்டான். இருள் மெல்ல வானைக் கவ்வ ஆரம்பித்தது. அசோகா ஒரு சிறு கிராமத்தை அடைந்தான்.  கிராமத்தினர் அனைவரும் தங்கள் குடிலில் உறங்க சென்று விட்டனர். லாமா தேசத்தினர் முன் தூங்கி முன் எழுபவர்கள்.


அசோகா ஒரு சத்திரத்தில் அன்றிரவைக் கழிக்க முடிவெடுத்தான்.  உணவு உண்ட பின் ஓர் அறையில் படுத்தான். அடுத்த நொடியே உறக்கத்திற்கு சென்று விட்டான். அவ்வறையில் இன்னொரு வாலிபன் படுத்திருந்தான். கண்கள் மூடியிருந்தாலும் அவன் உறங்கவில்லை. வேறு ஒரு மூலையில் இரு துறவிகள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவதை வாலிபன் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான்.


"என்ன வாழ்க்கை மனித வாழ்க்கை. எங்கும் எப்போதும் துன்பம். மனிதன் தன் வாழ்நாளில் மகிழ்வாக கழித்த பகுதி  மிகவும் குறைவு. குருவே, இது ஏன் என்று விளக்கவும்."


"மனித வாழ்க்கையின் இலக்கு என்ன?."


"மகிழ்வாக இருப்பது. மற்றவரை மகிழ்வாக வைத்திருப்பது."


"அது தவறான இலக்கு. அதற்கு பதிலாக ஒரு மனிதன் தன்னைப் பரிசுத்தமானவனாக கண்டடைவதே இலக்கு என்று வைத்துக் கொண்டால், தான் சந்திக்கும் இடர்கள் எல்லாம் தன்னைப் பட்டை தீட்டும் கருவியாக எண்ண ஆரம்பிப்பான். அகத்தின் ஆழத்தைக் கண்டு, அதிலிருக்கும் ஒளியைக் காண்பதற்கு துன்பமே மனிதனுக்கு உற்ற துணை.”


"தனி மனித வாழ்வின்  இலக்கு பற்றி கூறினீர்கள். ஒட்டு மொத்த மானுடத்தின் இலக்கு    என்ன?"


"மானுட வாழ்வே துன்பம் என்று கூறினாய்.  இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சத்தில் மனித இனம் பெரும் கொடையைக் கொண்டது என்று  சிந்தித்திருக்கிறாயா? பிரபஞ்சத்தின் ஆதி வெறும் துகள்கள் கொண்டது.  ஒரு சிறு சலனத்தினால் இத்துகள்கள் இணைந்து நட்சத்திரங்கள், விண்கோள்கள் உருவாகின. அச்சிறு சலனம் இல்லை என்றால். இந்த கதிரவன் இல்லை. இந்த பூமி இல்லை. நீ இல்லை. நான் இல்லை. பல கோடி நட்சத்திரங்களில் கதிரவன் தோன்றியதும், பூமி உருவானதும், அதில் நீர், வாயு தோன்றியதும், உயிர் தோன்றியதும், அவ்வுயிர்களில் மனித இனம் தோன்றியதும், அவ்வினம் சிந்திக்கும் ஆற்றல் பெற்றதும் என்ன மாபெரும் விந்தை? ஒரு விசை வேறு விதமாக இயங்கியிருந்தாலும் மானுடம்  தோன்றியிருக்காது."


"நீ மானுடத்தின் இலக்கு என்னவென்று கேட்டாய். உயிரினங்களில் படைப்பாற்றல் கொண்ட ஒரே இனம் மனித இனம் தான். பிரபஞ்சத்தின் படைப்பூக்க ஆற்றலை மேலும் முன்னெடுத்து செல்வதே மானுடத்தின் இலக்கு. படைப்பு என்பது ஒரு கருவியாக இருக்கலாம், ஒரு கருத்தாக இருக்கலாம், ஒரு தத்துவ உண்மையாக இருக்கலாம், ஒரு கவிதையாக, ஒரு இலக்கியமாக இருக்கலாம். மானுடத்தின் இலக்கு படைப்பே. தேவையற்றதை அழித்து புதியனவற்றை உருவாக்குவதே மானுடத்தின் இலக்கு."


"அளவற்ற ஞானத்தை அளித்தீர்கள் குருவே. அப்படியே என்னுடைய வாழ்வின் இலக்கு என்னவென்று கூறினால் மகிழ்வேன்."


"உனது வெறும் அற்ப வாழ்க்கை. அங்கு படுத்திருப்பது போல நடிக்கிறான் ஒருவன். அவன் இந்த லாமா தேசத்தின் தலைவிதியை மாற்றுவான். இந்த தேசத்தின் மக்களைப் பெரும் இடர்களிலிருந்து காப்பாற்றுவான். இன்னொரு மூலையில் படுத்திருக்கிறானே. அவன் முன்னவனின் உற்ற துணைவனாக இருப்பான். அவனின்  இரு கரங்களாக, அவன் மதியாக, அவன் இதயமாக, அவன் ஆன்மாவாக இயங்குவான்.  இருவரும் இணைந்து இந்த தேசத்திற்கு ஒரு புதிய சரித்திரத்தை உருவாக்குவார்கள்."


தன்னைப் பற்றிய உரையாடலை விழித்து கேட்டுக் கொண்டிருந்த கனிஷ்கா சிறு புன்னகையுடன் உறக்கத்திற்கு சென்றான்.


                                           ———********———


 

லாமா தேசம் சில ஆயிரம் ஆண்டுகள் முன் பல பழங்குடி சமூகங்களாக பிரிந்திருந்தது. தேசத்தின் நிலப்பரப்பு பெரிதாக இருந்ததால் இந்த சமூகங்கள் தனியே விலகியிருந்தன. இவை ஒவ்வொன்றும் தமக்கே உரிய மதச் சடங்குகள், கடவுள், பண்பாடு கொண்டதாக இருந்தது. சமூகத்திற்கிடையே மோதல்கள் இருந்தன.


போதி மதம் லாமா தேசத்தில் நிலைபெற்ற பின் இந்த சமூகங்கள் அனைத்தையும் இணைக்கும் பாலமாக அது இருந்தது. ஒரே மதம், ஒரே கோட்பாடு, ஒரே பண்பாடு என்று ஒன்றுபட்ட தேசமாக மாறியது. தங்களுடைய பழைய மத நம்பிக்கைகளை மக்கள் முழுதாகத் துறந்தனர். 


போதி மதம் இறை வழிபாட்டை முற்றிலும் மறுத்தது. இந்த பிரபஞ்சம் எல்லையற்றது. இதைப் படைத்த இறைவன் என்று யாருமில்லை. எல்லையற்ற பிரபஞ்சம் எல்லையற்ற காலவெளியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்குத் தொடக்கம், முடிவு என்று எதுவுமில்லை.


போதி மதத்தின் மையக் கருத்து மனித வாழ்வின் நோக்கம் தன் ஆன்மாவைப் பரிசுத்தமாக்குவது. அதற்கு தூய சிந்தனை, தூய அறிவு, தூய செயல் இவற்றைத் தன் வாழ்வின் அனுபவங்கள் மூலம் கற்று ஞானம் அடைய வேண்டும். இதை அடைவதற்கு ஒரே வழி தன்னைக் கூர்ந்து  கவணித்து சுயபரிசீலனை செய்துக் கொள்வதே ஆகும். கொல்லாமை, கூட்டு வாழ்க்கை உடமை மறுப்பு போன்ற கோட்பாடுகள் போதி மதத்தின் ஆணிவேராக இருந்தன.


போதி  மதத்தை நிறுவியவர் போதிதாசர். இவர் மதத்தைப் பரப்ப நாடெங்கும் விகாரங்கள் அமைத்தார். இந்த விகாரங்களில் மதக் கோட்டபாடுகள் தவிர இலக்கியம், அறிவியல், தத்துவம் பயில்விக்கப்பட்டன.  நாட்டின் விகாரங்கள் அனைத்தையும் இணைக்கும் மையமாக திரிபோலி நகரின் விகாரம் அமைந்தது. இந்த விகாரத்தின் மூத்த குருவே லாமா தேசத்தின் தலைமை வழிகாட்டியாகக் கருதப்படுவார்.


ஐம்பது ஆண்டுகள் முன் நரோபா தலைமை வழிகாட்டியாக பொறுப்பேற்றார். அவர் மதத்தின் நியதிகளைக் கடுமையாகப் பின்பற்றுபவர். ஒரு நாள் அவர் விகாரத்தை விட்டு மறைந்தார். ஒரு வருடத்திற்குப் பின் தன்னுடன் ஒரு சிறுவனையும் அழைத்து வந்தார். அவன் தான் கனிஷ்கா. தனக்குப் பின் கனிஷ்காவே லாமா தேசத்தை வழி நடத்துவான் என்று கூறினார்.


கனிஷ்கா விளையாட்டுக் குழந்தையாக இருந்தான். பிற்காலத்தில் தலைமை  வழிகாட்டியாக ஆவதன் எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவன் பாடங்கள் கற்பதில் ஆர்வம் சிறிதும் காட்டுவதில்லை. புரவிகள் மீது மையல் கொண்டிருந்தான். மணிக்கணக்காக குதிரை மீதேறி பயணம் செய்வதில் கழித்தான். தச்சு வேலை, கட்டிட வேலைகளில் ஆர்வம் கொண்டவனாக இருந்தான்.


அவன் வளர்ந்த பின் மதக் கோட்பாடுகள் மீது பல எதிர் கேள்விகள் எழுப்பினான். அகிம்சை எல்லாத் தருணங்களிலும் பின்பற்ற இயலாதது என்று நரோபாவிடம் வாதிட்டான். சுய பாதுகாப்பிற்காக மனிதனும் ,தேசமும் வன்முறையில் இறங்குவது தவிர்க்க இயலாதது என்று கூறினான். அதற்கு நரோபா கொல்ல வரும் எதிரி முன் துணிவாக என்னைக் கொல் என்று நெஞ்சை நிமிர்த்தி நில். அவன் மனசாட்சியை சீண்டு. அது தான் அவனை எதிர்க்கும் சரியான ஆயுதம் என்று கூறினார். இவ்வுலகில் நூற்றுக்கு தொண்ணுறு மனிதர்கள் மனசாட்சி அற்றவர்கள். மனிதன் மனம் விலங்குணர்ச்சிகளை முற்றிலுமாகத் துறக்கவில்லை என்று கனிஷ்கா வாதம் புரிவான்.


மேலும் வெறும் குழந்தை பெறுவதற்காக மட்டுமே குடும்பம் என்ற  சிந்தனையின் மீது அவனுக்கு எதிர் கருத்துக்கள் இருந்தன. உறவுகளைத் துறப்பதன் மூலம் பெரும் ஞானம் போலி.  உறவுகளே மனிதனின் மனதை அறியும் கண்ணாடி. அதில் தெரியும் பிம்பம் மூலமே அவன் தன்னை அறிய முடியும்.


இவ்வாறாக நரோபாவும், கனிஷ்காவும் மணிக்கணக்காக வாதாடுவதுண்டு. இது அவர்கள் இருவருக்குமிடையே  அன்பையும் நெருக்கத்தையும் உண்டாக்கியது.


ஒரு நாள் விகாரத்தைச்  சேர்ந்த ஒருவன் ஒரு பெண் குழந்தையை வன்கலவி செய்த குற்றம் நரோபாவின் விசாரணைக்கு வந்தது. அவனுக்கு தண்டனையாக ஒரு வருடம் தீவிர உடல் உழைப்பு, ஆன்மீகக் கல்வி  என்று நரோபா உத்தரவிட்டார்.


இது கனிஷ்காவைச் சினமுற செய்தது. அந்த மனிதனுக்கு மரணதண்டனை அளிக்க வேண்டும் என்று கூறினான். மரண தண்டனை தடை செய்யப்பட்டு சில நூற்றாண்டுகள் ஆகிறது என்று நரோபா மறுத்தார்.


அந்த பெண்ணிற்கும் அவள் குடும்பத்தினருக்கும் நடந்த அநீதிக்கு என்ன நியாயம் கிடைக்கும் என்று கனிஷ்கா வாதம் செய்தான். நரோபா, இது அவர்களுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பு. இந்த துன்பம் அவர்கள் ஆன்மாவை மேலும் பரிசுத்தமாக்கும் என்றார்.


வெறுப்படைந்த கனிஷ்கா விகாரத்தை விட்டு நீங்கினான்.  அவனைத் தேடி நரோபா நாடெங்கும் அலைந்தார். தொலை தூரத்தில் ஒரு கிராமத்தில் கனிஷ்கா கட்டிட வேலை செய்து வந்தான். தன்னுடன் வரவில்லையென்றால் தானும் இங்கேயே தங்கிவிடுவதாக நரோபா கூறினார்.


தன் வாழ்நாள் வரை தான் எண்ணும்  தர்மப்படி தேசம் இயங்கட்டும்.  கனிஷ்கா பொறுப்பேற்ற பின் அவன் விரும்பும் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்று இருவரும் சமாதானத்திற்கு வந்தனர்.


நரோபாவின் இறுதிக் காலங்களில் கனிஷ்காவுடன் கருத்து வேறுபாடு அதிகமாகியது. லாமா தேசம் வெகு விரைவில் அந்நியத் தாக்குதலுக்கு ஆளாகும். அதனால் மக்களுக்கு போர்ப்பயிற்சி அளிக்க வேண்டும். நாட்டைக் காக்க பெரும் படை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கனிஷ்கா வற்புறுத்தினான். நரோபா இதைத் தீவிரமாக மறுத்தார்.


சில மாதங்கள் முன்பு நரோபாவிற்கு தான் இறக்கப் போவது உறுதி என்று தெரிந்து விட்டது.  இறக்கும் முன் காஞ்சன் மலைக்குப் பயணம் செய்து அந்த மலையிலேயே தன் உயிர் பிரிய வேண்டும் என்று விரும்பினார். இந்த பயணத்திற்கு கனிஷ்கா உடன் வர வேண்டும் என்று விரும்பினார். கனிஷ்கா இதற்கு சம்மதித்தான்.


காஞ்சன் மலையில் நரோபா உயிர் பிரிந்த பின் திரிபோலி நகரத்திற்கு திரும்பினான். இம்முறை நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் சென்று, அங்கு மக்களின் நிலையைக் கண்டறிய வேண்டும் என்று  விரும்பி ஒரு பெரும் பயணத்தை மேற்கொண்டான்.


இன்னும் ஓரிரண்டு நாட்களில் திரிபோலி நகரை அடைந்து விடுவோம் என்று எண்ணியதும் அவன் மனதில் புதிய உற்சாகம் தோன்றியது.

                                         

                                          ———-**********———


அசோகா சிறு வயதிலேயே படிப்பில் சூட்டிகையானவனாக இருந்தான். அவன் பெரிதும் விரும்பியது கணிதமும், அறிவியலும். வானில் மிதக்கும் நிலவு, நட்சத்திரங்களை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருப்பான். பறந்து செல்லும் பறவைகளையும், சிறகடிக்கும் பூச்சிகளையும் கண்ணிமைக்காமல் பார்ப்பான். அவனுள் பல கேள்விகள் பிறக்கும். இரவு உறக்கத்தின் கனவுகளில் அக்கேள்விகளுக்கு விடை கண்டிருப்பான்.


தன் கிராமத்திற்கு அருகிலிருந்த விகாரத்தில் அவன் கல்வி கற்றான். ஆனால் அவனுடைய எந்த கேள்விக்கும் ஆசிரியரால் பதில் கூற இயலவில்லை. தங்கள் இயலாமையை மறைக்க கேள்வி கேட்டால் தண்டனை அளித்தனர்.


தான் அறிவியல் பற்றி தொடர்ந்து சிந்திக்கும் போது எங்கோ ஓரிடத்தில் முட்டுவதை உணர்ந்தான். அதற்கான காரணத்தை ஆராய்ந்த போது அந்த அறிவியல் கருத்தின் அடிப்படை சிந்தனையே தவறு என்பதை அறிந்தான். வேறு கோணத்தில் சிந்திக்க வேண்டுமென்றால் தனக்கு தத்துவக் கல்வி இன்றியமையாதது என்று அவனுக்கு  தெளிவானது. அறிவியலைத் தத்துவமும், தத்துவத்தை அறிவியலும் நிறைவு செய்வதை அறிந்தான்.


தன் நண்பன் மூலம் திரிபோலி நகரில் உள்ள விகாரத்தில் சிறப்பான அறிவியல் மற்றும் தத்துவக் கல்வி அளிப்பதை அறிந்தான். ஆனால் 18  வயதுக்கு மேற்பட்டவருக்கு மட்டுமே அங்கு தத்துவக் கல்வி அளிக்கப்படும். தான் வளர்ந்தவுடன் திரிபோலி நகரில் தத்துவம் கற்பதைத் தன் லட்சியமாகக் கொண்டிருந்தான்.


அவனது இருபதாவது வயதில் நளா அவன் வாழ்வில் புகுந்தாள். ஒரு வருடம் பழகிய பின் திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தனர். திருமணம் முடிந்த உடனே  திரிபோலி நகருக்கு சென்று விடலாம் என்றும், அங்கு தான் மேற்கல்வியைத் தொடரலாம் என்று அசோகா நளாவிடம் கூறினான்.


ஆனால் அதற்கு நளா தரப்பில் சில பிரச்சினைகள் இருந்தன. தன் வயது வந்த பெற்றோரைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இருப்பதாகக் கூறினாள். அவன் திரிபோலி செல்லலாம். அவன் வரும் வரை காத்திருப்பதாகக் கூறினாள். அசோகா அதற்கு இசையவில்லை. 


நளாவா  அல்லது தன் லட்சியமா என்று முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்தது. அவன் நளாவைத் தேர்ந்தெடுத்தான். ஆனால் நளாவிற்கு  ஒரு ஓரத்தில் குற்றவுணர்வு உறுத்தியது. தங்கள் குழந்தை வளர்ந்தவுடன் லாமா தேசத்தின் சட்டப்படி  இருவரும்  பிரிய நேரிடும். அப்போது அவன் திரிபோலி நகரம் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாள். அதற்கு அசோகா சம்மதித்தான்.


இப்போது அவன்  வாழ்நாள் கனவு நிறைவேறும் போது மனதில் மகிழ்ச்சி அறவே இல்லை என்பது என்ன விந்தை.


                                      ———***********———


அடுத்த நாள் காலை அசோகா பிரயாணத்திற்கு குதிரையைத் தயார் செய்து கொண்டிருந்தான். கனிஷ்கா அவனிடம் வந்து அறிமுகம் செய்துக் கொண்டான்.


"தோழரே நீர் செல்வது திரிபோலி நகரம் என்றால் நாம் இணைந்தே செல்லலாம். நேர்    வழியில் சென்றால் இரண்டு நாட்களில் அடைந்து விடலாம். ஆனால் நான் குறுக்கு        வழியில் பல கிராமங்களையும், நகரங்களையும் கடந்து செல்லலாம் என்று                       நினைக்கிறேன். அது உனக்கு சம்மதமா?"


அசோகா அதற்கு சம்மதித்தான். இருவரும் குதிரையில் ஏறிக் கொண்டு பிரயாணத்தைத் துவங்கினர்.


"நண்பரே, உன் முகத்தில் சோகம் தெரிகிறது. காரணம் நான் அறியலாமா."


"சென்ற வாரம் என் மகனுக்கு ஐந்து வயது."


"புரிகிறது. பிரிவின் கொடுமை. என்ன செய்வது.  நம் சமூகம் இப்படி கேடுகெட்ட விதமாக இயங்குகிறது.  கவலைப்பட வேண்டாம். இது விரைவில் மாறும்." 


"அது எப்படி உமக்குத் தெரியும்."


"மாற்றப் போவதே நான் தான்."


"மாற்றுவதற்கு நீர் யார்."


கனிஷ்கா பதில் சொல்லாமல் உரத்தக் குரலில் சிரித்தான்.         


"நீர் சிரித்தாலும் உமது முகத்திலும் ஒரு மென்சோகம் இருப்பதை நான் அறிகிறேன்."


"ஆம் இறக்கும் தருவாயில் இருந்த ஒருவர் தன் கடைசி விருப்பமாகக் கேட்ட ஒன்றைத் தர மறுத்தேன். எனக்கு நரகம் நிச்சயம்."


"உமக்கு ஏன் இத்தனை கல் நெஞ்சம். அவர் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கலாமே."


"அதை நிறைவேற்ற சம்மதம் தெரிவித்தால் இந்நாட்டின் மக்கள் அனைவரும்  நரகத்தின் வாசற்கதவைத் தட்டுவார்கள்."


"நீர் பூடகமாகவே பேசுகிறீர். ஆனாலும் உமது நகைச்சுவை என்னைச் சிரிக்க வைக்கிறது. மனது லேசாகிறது." 


 இருவரும் அன்று மாலை ஒரு விகாரத்தை அடைந்தனர். அன்றிரவு அங்கே கழிப்பது என்று முடிவு செய்தனர். விகாரத்தின் தலைமை குரு அவர்களைச் சந்திக்க வந்தார். அவர் கனிஷ்காவிற்கு  ஏற்கனவே அறிமுகமானவர்.  இரவு உணவுக்குப் பின் விகாரத்தின் குரு மற்றும் சீடர்களிடேயே உரையாடல் நடந்தது.


"இவ்வுலகம் அறிவியல் விதிப்படி இயங்குகிறது என்றால் இறைவன் செய்வது யாது."


"விதிகளே இறைவன்."


"விதியை மனிதனின் சிந்தனைகள் மாற்ற இயலுமா?"


"மனிதனின் சிந்தனைகளே அறிவியல்  விதிகளின் பின் விளைவு என்றால் 

எது எதை மாற்றுவது? இந்த பிரபஞ்சத்தின் இயக்கம் விதிப்படி. மனிதன் என்பவன்  யார். பிரபஞ்சத்தின் துகள்களின் ஒரு சிறு தொகுப்பு. அப்படியானால்  அவனது இயக்கமும் விதிப்படியே நடக்கும். அவன் சிந்தனைகளுக்கு புறவுலகின் தூண்டுதலும்,  மூளை மற்றும் நரம்புகளின் பின்னலும்,  மரபணுக்களுமே காரணம். இவை அனைத்தும் அறிவியல் விதிப்படி இயங்குகிறது."


"மனிதனின்  இயக்கமும், சிந்தனையும் புறவுலகின் விதிகளுக்கு உட்பட்டதென்றால், அவன் மரணத்திற்குப் பின் தொடர்ச்சி இல்லையா? மரணத்தோடு அவன் உடலின் இயக்கமும் சிந்தனைகளும் முடிவடைந்து விடுமா? " 


"ஆம் மரணமே முடிவு."


"அப்படியானால் ஆத்மா அவன் மரணத்திற்குப் பின் தொடராதா?"


"ஆத்மா என்பது என்ன? அவனது சிந்தனையா? அல்லது அவனது உடலுக்கு                  அப்பாற்பட்ட அருவமான ஒரு சக்தியா?"


"அருவமான ஒரு சக்தியாக ஆத்மா இருக்க வேண்டும். அது மரணத்திற்குப் பின் மறு ஜென்மமாகத் தொடர வேண்டும்."


"அவை எல்லாம் மூட நம்பிக்கைகள். மரணமே முடிவு. தொடர்ச்சி இல்லை."  


இந்த விவாதங்களை அசோகாவும் கனிஷ்காவும் கூர்மையாகக் கவனித்தனர். பிறகு இரவு உணவு உண்டு இருவரும் உறங்கச் சென்றனர்.


வானில் முழுமதி தோன்றியது. அசோகாவிற்கு அதில் நளா, விஷ்வாவின் முகம் தெரிந்தது. கண்களை கண்ணீர் மறைத்தது. சிறிது நேரத்தில் நித்திரையில் ஆழ்ந்தான்.


கனிஷ்கா மாலையில் நடந்த கலந்துரையாடலைப் பற்றியே சிந்தித்தான். மனம் பல கோணங்களில் ஆராய்ந்தது. சிறிது நேரத்தில் அவனும் உறங்கினான்.


நிலவு மெல்ல மேகங்களுக்கிடையே சிக்கி வானைக் கருமை நிறமாக்கியது.


                                        ——-*********———

 

காலையில் அவர்கள் பயணம் மேலும் தொடர்ந்தது.


"முதல் முறை உன் முகத்தில் புன்னகை கண்டேன்."


"எல்லாம் நீ உடனிருப்பதால் தான்."


"பிரிவின் துயர் குறைந்து விட்டதா?"


"எப்படி குறையும். காலம் முழுதும் இருக்கும். ஆனால் இதைத் தாண்டி வாழ்க்கையில் மேலும் பலவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்ற தெளிவு வந்திருக்கிறது. மனம் அதற்கு தயாராகிறது."


"நன்று. நான் திருமணமாகாதவன். எனக்கு இது புரிவது கடினம்."


"நம் நாட்டில் குழந்தை பிறந்தவுடன் பிரிவது என்பதை நூற்றில் தொண்ணுறு மக்கள் எளிதாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். எனக்கு இது எப்படி என்று புரியவில்லை."


"நம் நாடு வெறும் உயிரற்ற சடலம். பிறகு அதன் மக்கள் எப்படி இருப்பார்கள்."


"வாழ்வில் ஆசை, பற்று இவற்றை விட வேண்டும் என்று நம் மதம் கூறுகிறது. இது சரியா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.”


"செயலுக்கு ஆசை, பற்றே உந்துசக்தி. ஆசையிலிருந்தே தேடல் உருவாகிறது. சமூகத்தில் மாற்றம், புதுமை இவை எல்லாவற்றிற்கும் ஆசையே மூல காரணம். புதுமையைத் தேடும் ஒருவன் எவனும் சமூகத்தின் அக்கறை கொண்டு செயலாற்றுவதில்லை. தன்னுடைய தேடலை நிறைவு செய்யத்தான் மனிதன் அசாதாரண செயல்கள் செய்யத் தூண்டப்படுகிறான்."


"அதீத ஆசை ஒரு மனிதனைப் படுகுழிக்குள் அல்லவா தள்ளி விடும்."


"ஆசை, பற்றின்மை, பேராசை என்ற மூன்று நிலைகள் சமநிலையில் இருப்பதில்லை.  இந்த மூன்று நிலைகளின் சமநிலை குலைவதால் மனிதனிடமிருந்து படைப்பு உருவாகிறது. செயல் பிறக்கிறது. இந்த மூன்று நிலைகள் எத்தனை விகிதத்தில் இருக்க வேண்டும் என்பது நொடிக்கு நொடி மாறும். சில நேரங்களில் பற்றின்மை, சில நேரங்களில் பேராசை, சில நேரங்களில் வெறும் ஆசை என்று மனம் வானில் பறக்கும் பட்டம்  போல ஊசலாடிக் கொண்டிருக்கும்.  ஒரு தருணத்தில் இந்த மூன்று நிலைகளில் எதை உயர்வாக வைத்திருக்க வேண்டும் என்பதைத் தன்னை முழுதாக அறிந்தவனாலேயே இயலும். அவனே கர்மயோகி.”


"மூன்று நிலைகளில் இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையைக் கண்டடைய முடியுமா"


"காற்று, அக்னி, நீர் என்ற இயற்கையின் மூன்று நிலைகள். படைத்தல், காத்தல், அழித்தல் என்று இறையின் மூன்று நிலைகள்.  மிகையுணர்வு, உணர்வின்மை, அமைதி என்று அகத்தின் மூன்று நிலைகள். செயல், செயலின்மை, மிகைச்செயல் என்று புறவுலகின் மூன்று நிலைகள். ஆம் மூன்று நிலைகளில் இந்த பிரபஞ்சத்தின் உண்மை உறைந்திருக்கிறது."


"இது எதுவும் நம் மதங்களில் கூறப்படவில்லையே."


"அதனால் தான் நம் நாடு கெட்டொழிந்திருக்கிறது. நேற்று மாலை உணவருந்தும் போது எதிரில் சிறு பாறையில் மனிதன் ஒருவன் அமர்ந்திருந்தான். வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். நள்ளிரவு உறக்கமின்றி வெளியே  வந்த போது அந்த மனிதன் அதே பாறையில், அதே நிலையில் அமர்ந்திருக்கிறான்.  இது தான் நம் நாடு. இது தான் நம் மக்கள். செயலூக்கமற்ற பிணங்கள்."


"ஆனால் நம் மக்கள் மன நிறைவோடு தானே இருக்கிறார்கள்."


"மன நிறைவை நோக்கிச் செல்லும் தேடலே வாழ்வைச் சுவையாக்கும். அந்தத் தேடல் இறக்கும் வரை நிற்கக் கூடாது. மனம்  நிறைவுற்றால் தேடல் நின்று வாழ்வு சுவையை இழந்து விடும். ஒரு தேடல் முடிந்து இன்னொரு தேடல்  என்று வாழ்வு நிற்காமல் பறக்க வேண்டும்."


"நீ சொல்வது அனைத்தும் புதுமையாக இருக்கிறது. நீ யாரிடம் இதை கற்றாய். உன் குரு யார்."


"யாரையும் பின்பற்றாதே. அவர்கள் வாழ்வின் பாடங்கள் உனக்குப் பொருந்தாது. இந்த உலகை கூர்மையாகக் கவனி. உன்னை, உன் மனதின் ஆழத்தில் தோன்றும் அசைவுகளைக் கவனி. அதுவே அளவற்ற ஞானத்தை உனக்கு அளிக்கும்.”


"என் மனம் தெளிவடைகிறது. உன்னை என் உற்ற தோழனாக கருதுகிறேன். நீ பெரும் செயலாற்றப் பிறந்தவன் என்று உணர்கிறேன். உன் வாழ்க்கைப் பயணத்தில் என்னை     சகாவாக ஏற்பாயா?"


"அப்படித்தானே விதிக்கப்பட்டிருக்கிறது."


மாலை நேரம் ஆனது. தொலைவில்  மலையின் உச்சியில் விகாரம் ஒன்று தெரிந்தது. வெளியே சுவரில் தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தது. அது மலையில் சிறு நட்சத்திரக்  கூட்டம் மின்னுவது போல இருந்தது.


"திரிபோலி நகருக்கு வந்து விட்டோம்!"


கனிஷ்காவின் உற்சாகம் அசோகாவையும் தொற்றிக் கொண்டது. புறவிகளும் கனைத்துக்  கொண்டு தங்கள் வேகத்தைக் கூட்டின.


மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்த இருவரைத் திரிபோலி நகரம் வரவேற்க தயாரானது.


                                

                                        ——-************———


திரிபோலி நகரத்தின் விகாரத்தில் அசோகாவை கனிஷ்கா அறிமுகம் செய்தான்.  அவர்கள் நரோபாவின் முடிவைக் கேட்டறிந்தனர். அன்றிலிருந்து இரண்டு வாரங்கள் துக்கம் அனுஷ்டிப்பது என்று முடிவானது. பௌர்ணமி அன்று கனிஷ்கா தலைமை வழிகாட்டியாக பதவி ஏற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


இரண்டு வாரங்கள் விழா எடுத்து, தினமும் நடனம், இசை, நாடக நிகழ்ச்சிகள் நடத்தலாம்  என்று கனிஷ்கா கருத்து கூறினான்.


போதி மாதத்தில் இறை வணக்கம் கிடையாது. ஆனால் இயற்கை குறித்து வணக்கங்கள் உண்டு.  தினமும் காலை இயற்கை வணக்கத்துடன் விழா ஆரம்பமானது. பகல் முழுதும் நடன நிகழ்ச்சிகள் நடந்தன. நடனம் ஆடுபவர்கள் பல்வேறு மிருகங்களின் முகமூடியை அணிந்து ஆக்ரோஷமாக ஆடினர்.  சிம்பல் என்ற தாள வாத்தியமும், எருமைக் கொம்புகளினால் செய்யப்பட குழல் போன்ற வாத்தியமும் இசைத்து நடனத்தை உச்சத்திற்கு எடுத்து சென்றது.


மாலை விகாரம் முழுதும் தீபங்கள் ஏற்றப்பட்டன. இரவு உணவுக்கு பின் நாடகங்கள் அரங்கேறியது. போதி மதத்தின் தலைமை வழிகாட்டிகளின் வாழ்க்கை நாடகமாக மேடையேறின.  


நாடகங்களை அசோகா ஆவலுடன் பார்த்தான். தன்னை மறந்து ஒரு புது உலகிற்கு சென்றான்.  அருகிலிருந்து  அவர்களுடன் தானும் வாழ்வதாக உணர்ந்தான்.


முதலில் போதிவர்மன் வாழ்க்கை குறித்த நாடகம் அரங்கேறியது.



                                               போதிவர்மன் நாடகம்


லாமா தேசத்தின் மேற்குப்பகுதியில் மேய்ப்பு நிலங்கள் உண்டு. அங்கு  சங்க்ரி, நச்சன் என்று இரண்டு பழங்குடிச்சமூகங்கள் வாழ்ந்து வந்தன.  இவ்விரு குழுக்களுக்கிடையே அடிக்கடி மோதல்கள் நடப்பதுண்டு.


நச்சன் குழுவின் தலைவனாக பிரேமவர்மன் இருந்து வந்தார். அவர் வயதானவுடன் குந்திவர்மன் தலைவனானான். அவன் மகன் போதிவர்மன் எட்டு வயது சிறுவன். போதிவர்மன் தன் பொழுதைப்  பெரும்பாலும் பிரேமவர்மனுடன் கழித்து வந்தான். கிழவர் பேரனுக்குத் தனது உலக ஞானம் முழுதும் அளித்தார். இருவரும் குதிரைகளில் பல பிரதேசங்களுக்குப் பயணம் செய்வர். கிழவர் அந்நிலங்களின் தொன்மையான வரலாற்றைக் கூறுவார்.


ஒரு நாள் இருவரும் பனிமலைகளில் உலாவி வந்தனர். கிழவர் மிகவும் சோர்வுற்றிருந்தார். ஒரு பாறை அடியில் அமர்ந்தனர். பிரேமவர்மன் தன் உறையிலிருந்து ஒரு வாளை எடுத்தார்.


"போதிவிவர்மா, நீ இனிமேல் சிறுவன் அல்ல. அதனால் இதை உனக்கு அளிக்கும் தருணம் வந்து விட்டது. இந்த வாள் பல நூற்றாண்டுகளாக நம் இனத்தின் சிறந்த வீரனிடம் இருக்கும். நீ வளர்ந்து மாவீரன் ஆவாய் என்பதில் எனக்கு இம்மியளவும் சந்தேகம் இல்லை. அதனால் இதை உன்னிடம் அளிக்கும் தருணம் வந்து விட்டது."


ஆனால் வாளைப்  பயன்படுத்த வீரம் மட்டும் போதாது. விவேகமும் தேவை. வாளை வீச ஒரு கணம் நீ அதிகம் யோசித்தால் உன் தலை இருக்காது. ஒரு கணம் அவசரப்பட்டால் தேவையில்லாமல் ஒரு அப்பாவியின் தலை உருளும். அந்த ஒரு கணம் - அதை எப்போதும் நினைவில் கொள். அந்த ஒரு கணம் உனக்கு சரியான முடிவெடுக்கும் திறனை அளிக்க இறைவனை வேண்டு. 


நான் மேலுலகம் செல்லும் நேரம் வந்து விட்டது. நீ மாபெரும் காரியங்கள் ஆற்ற வந்தவன் என்று நீ பிறந்த போது பெரியவர்கள் கூறினார்கள். அதை நிறைவேற்று."


போதிவர்மன் வளர்ந்தவுடன்  நச்சன் குழுவின் தலைவன் ஆனான். அவனுக்குத் திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 


எல்லையில் சங்க்ரி குழுவின் தொல்லை அதிகமானது. மாடுகளைக் களவாடுவது, பெண்களைத்  தூக்கிச் செல்லுதல் என்று  அட்டகாசம் செய்தனர்.


போதிவர்மன் எல்லைப்பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களைச்  சந்தித்து பேசினான். சங்க்ரி குழுவினர் காட்டுமிராண்டிகள் போல நடந்து கொள்வதை மக்கள் கூறினர். இளம் பெண்களைத்  தூக்கிச் சென்று, பல கொடுமைகள் செய்து பிறகு எறிந்து விடுவதாகக்  கூறினர்.


அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண் வீட்டிற்குச் சென்றான். அப்பெண் இடிப்பொடிந்து நடக்க முடியாத நிலையில் இருப்பதைக் கண்டு ஆவேசம் மிகுந்தது.


தேர்ந்த ஐந்து வீரர்களைப் பொறுக்கி சங்க்ரி இனத்தின் தலைவன் வசிக்கும் நகரத்திற்கு சென்றான். அரண்மனைக்குள் புகுந்து தலைவன், அவன் மனைவியர், பணிப்பெண்கள்  என்று அனைவரையும் வெட்டிச் சாய்த்தனர்.


போதிவர்மன் வெறிப் பிடித்தவன் போல கண்ணில் தெரிந்த அனைவரையும் கொன்று குவித்தான். அப்போது அவன் முன் ஐந்து வயது சிறுவன் ஒருவன் சிறு வாளைக் கையில் பிடித்து நெஞ்சை நிமிர்த்தி அவன் முன் நின்றான்.  அவன் தலைவனின் குழந்தை.


போதிவர்மன் ஒரு கணம் தயங்கினான். சிறுவன் கண்களில் சிறுதும் பயமில்லை. அவனைத்  தவிர்க்கலாமே என்ற சிந்தனை தோன்றியது. ஆனால் வெறி மிக அச்சிறுவன் தலையை வெட்டினான்.


அன்றிரவு வெற்றியுடன் போதிவர்மனும் அவன் வீரர்களும் திரும்பினர். போதிவர்மன் உறக்கத்தில் அச்சிறுவனின் பயமற்ற முகம் தோன்ற திடுக்கென விழித்தான்.


 போதிவர்மன் தன் நகரத்திற்கு சென்ற பின் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவன் மகன் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தான். போதிவர்மன் அவன் காலடியில் அமர்ந்து கண்களை மூடி இறைவனைப் பிரார்த்தனை செய்தான். பிரார்த்தனையின் போது இறந்த சங்க்ரி இனச் சிறுவனின் முகம் இடையே வந்தது. 


போதிவர்மன் அச்சிறுவனின் உருவத்தை மனதில் நினைத்து, அவன் காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்பதாய் கற்பனை செய்தான்.


"நான் செய்தது தவறு. என் மகனை பழி வாங்காதே"  என்று  பிதற்றிக் கொண்டே இருந்தான்.


அவன் மகன் இறந்தான். அதன் பின் போதிவர்மன் தலைநகரை விட்டு சென்றான். நாடெங்கும் சுற்றினான். பனிமலைகள் எங்கும் அலைந்தான்.


காஞ்சன் மலைக்கு வந்ததும் தான் வேறு மனிதனாய் மாறுவதை உணர்ந்தான். ஒரு பனிப்பாறை மீது அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தான். திடீரென்று தன் அகத்தில்  ஒரு பேரொளி வீசுவதை உணர்ந்தான். மனிதப் பிறப்பின் அடிப்படை கேள்விகளுக்கு தனக்கு விடை கிடைத்ததை அறிந்தான்.


நாடெங்கும் நடந்து  மக்களிடம் பிற உயிர்களைத் துன்புறுத்துதல் கூடாது என்று அறிவுரை கூறினான். அவனை மக்கள் பொருட்படுத்தவில்லை. 


ஒரு கிராமத்தில் நோய் கடுமையாக இருந்தது. கொத்து கொத்தாக மக்கள் இறந்தனர். போதிவர்மன் நோய்வாய்ப்பட்டவன் ஒருவனைத் தொட்டதும் அதிசயமாக அம்மனிதன்  நோயிலிருந்து மீண்டான்.


கிராமத்து மக்கள் அனைவரும் தங்களை போதிவர்மன் கருணைக்கு  ஒப்படைத்தனர். விரைவிலேயே அக்கிராமம் நோயிலிருந்து மீண்டது. அம்மக்களிடம் போதிவர்மன் தன் அகிம்சைத் தத்துவத்தை எடுத்துரைத்தான். அதை அம்மக்கள் ஏற்றுக்கொண்டனர். 


போதிவர்மன் லாமா தேசம் முழுதும் சுற்றினான். மக்களின் எல்லா துன்பத்தையும் அகற்றினான். அதற்கு பதிலாக அகிம்சையை ஏற்றுக் கொள்ள மக்கள் ஒப்புக் கொண்டனர்.


'போதி' என்று புதிய மதம் ஒன்றைத் துவங்கினான். அகிம்சை, ஆசை துறத்தல், சக உயிர்களிடம் கருணை என்பதை அடிப்படையாக இம்மதம் கொண்டிருந்தது. போதிவர்மனுடன் பல சீடர்கள் இணைந்தனர். அவர்கள் மூலம் நாடெங்கும் போதி மதம் பரவியது. ஒரே மதம் என்றானதால்  பல சமூகங்களாக பிரிந்திருந்த மக்கள் ஒரே இனமாக, ஒரே தேச மக்களாக மாறினர்.


போதி  என்ற மதம் மூலம் லாமா என்ற தேசம் உருவான கதை இது.


                                     ———-***********————


                                    சித்தார்த்தன் நாடகம்



திரிபோலி நகரத்தில் சித்தார்த்தன், விக்ரமசிங்கன் என்று இரு நண்பர்கள் இருந்தனர். விக்ரமசிங்கனுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருந்தான். விக்ரமசிங்கன் வறியவன் என்பதால் மகனைப் படிக்க விகாரத்திற்கு அனுப்ப இயலவில்லை.  மகன் ஒரு வணிகரிடம் வேலை பார்த்து வந்தான்.


மகன் ஒரு நாள் இரவு வீட்டிற்கு வரவில்லை. வணிக வீதியில் ஒரு ஓரமாக இறந்து கிடந்தான். விசாரித்ததில் அவன்  வேலையில் தவறு செய்தான் என்பதற்காக அடிக்கப்பட்டதால் இறந்தான் என்று தெரிய வந்தது. குற்றம் விசாரணைக்கு வந்த போது போதிய ஆதாரம் இல்லை என்பதால் வணிகன் விடுவிக்கப்பட்டான்.


விக்ரமசிங்கன் இடிந்து போனான். தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று குமுறினான். வணிகனைக் கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்து தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தான். வணிகனைத் தொடர்ந்தான். ஒரு நாள் வணிகன் அருகிலிருந்த மலைக்குத் தனியாக சென்றான். அங்கு நின்று இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தான். இது தான் சரியான சந்தர்ப்பம். அவனைத் தள்ளி விட்டால் படு குழிக்குள் விழுந்து இறப்பான். விக்ரமசிங்கன் வணிகன் அருகில் சென்றான்.  அவனைக் கொல்ல மனதில் உறுதி இல்லாததால் திரும்பினான்.


பிறகு சித்தம் கலங்கி வீட்டை விட்டு எங்கோ மறைந்தான். சித்தார்த்தன் அவனைப் பல இடங்களில் தேடினான். இறுதியாக ஒரு மலைக் குன்றில் கண்டு பிடித்தான். வீடு திரும்புமாறு வேண்டினான்.


"நான் ஒருவருக்கும் தீங்கு மனதாலும் நினைத்ததில்லை. யாரையும் கடுமையாகப் பேசியது கூட இல்லை. என்னால் முடிந்தவரை அனைவருக்கும் உதவி செய்து வந்திருக்கிறேன். என் மகன். அவன் வானுலகத்தேவன் போன்று தூய்மையானவன். அவன் இறந்தது என்ன நியாயம். அந்த வணிகன் எந்த குற்ற உணர்வுமின்றி உலவிக் கொண்டிருக்கிறான். நன்மை செய்தற்கு நன்மை நடக்கும், தீமை நினைப்போருக்கு தீய்மையே என்று நம் போதி மதம் கூறுகிறது. பிறகு எனக்கு ஏன் இந்த அநீதி. நல்லவருக்கு ஏன் தொடர் துன்பம். இது எவ்விதத்தில் நியாயம்.”


"நம் வாழ்வு ஒரு ஜென்மத்தில் முடிவதில்லை. நம் கடந்த  ஜென்மத்தின் புண்ணிய பாவங்கள் இந்த ஜென்மத்தின் வாழ்வைத் தீர்மானிக்கிறது."


"இது ஏற்கக் கூடியதாக இல்லை. ஒரு ஜென்மத்தின் புண்ணிய, பாவங்களின் விளைவுகளை அந்த ஜென்மத்திலேயே தீர்மானிக்கப்பட வேண்டும். தாமதித்து கிடைக்கும் நீதியும் அநீதி தான்.  என் முந்தைய ஜென்மங்களின் நினைவு இப்போதில்லை.  என்னைப் பல ஜென்மங்களின் தொடர்ச்சி என்பதை மனதால் உணரவும் இயலவில்லை. ஆகையினால் அதன் புண்ணிய பாவங்களின் விளைவை நான் இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதை ஏற்க இயலவில்லை. தொடர் ஜென்மங்கள் என்ற கருத்து ஆன்மீகவாதிகள் தங்கள் கோட்பாடுகளின் இயலாமையை மறைப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று என்று எனக்கு தோன்றுகிறது."

 

"உன் கேள்விகளுக்கு பதில் என்னிடம் இல்லை. நாம் விகாரத்திற்கு சென்று போதிவர்மரை சந்திப்போம். அங்கு தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்."


போதிவர்மரிடம் விக்ரமசிங்கன் தன் கேள்விகளைக் கேட்டான்.


"இறைவன் என்று ஒருவர் இருக்கிறாரா?”


"தெரியாது."


"தொடர் ஜென்மங்கள் இருக்கின்றனவா?”


"தெரியாது."


"இந்த உலகம் தோன்றியது எப்படி?”


"தெரியாது."


"இதெல்லாம் சொல்ல தெரியாத நீர் என்ன வழிகாட்டி. உமது மதம் என் குண்டியைக் கழுவக் கூட உதவாது."


விக்ரமசிங்கன் விகாரத்தை விட்டு சென்றான். ஆனால் சித்தார்த்தன் அங்கேயே தங்கினான்.


விக்ரமசிங்கனின் கேள்விகளால் போதிவர்மர் பெரிதும் நிலைக் குலைந்திருந்தார். தன்னை சந்திக்க வருபவர்களைத் தவிர்த்தார். எப்போதும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.


ஒரு நாள் சித்தார்த்தன் அவர் அறைக்குச் சென்றான்.


"குருவே என் நண்பனின் கேள்விகளுக்கு பதில் கிடைத்தாக உணர்கிறேன். என் கருத்துகளைக் கூறுகிறேன். 


நம் மனித வாழ்வின் நோக்கம் என்ன? துன்பமின்றி இன்பமாக இருப்பது என்று அனைவரும் கருதுகிறார்கள். அதையே நீங்களும் கூறுகிறீர்கள். அது தவறு."


போதிவர்மர் வியப்புடன் சித்தார்தனை நோக்கினார்.


"நம் வாழ்வின் நோக்கம் பரிசுத்தமான மன நிலையை அடைவது. பரிசுத்தமான செயல்கள் செய்வது. இந்த நிலையை அடைவதற்கு துன்பத்தை விட உற்ற துணை எது. என் நண்பன்  எப்போது தன் மகனைக் கொன்றவனை பலி  வாங்காது விட்டானோ, அப்போதே பரிசுத்த நிலையை அடைந்து விட்டான். ஆனால் அதை அவன் உணரவில்லை. நான் அவனுக்கு இதை உரைப்பேன். எனக்கு விடை கொடுங்கள் குருவே."


போதிவர்மர் சித்தார்தனை ஆசீர்வதித்து அனுப்பினார். அவன் விக்ரமசிங்கனைச் சந்தித்து விவாதித்தான். அவன்  மனம் சாந்தி அடைந்ததது.


பரிசுத்த சிந்தனை, பரிசுத்த செயல்கள், பரிசுத்த ஆன்மா. இதை அடைவதே மனித வாழ்வின் நோக்கு என்ற கருத்து போதி மதத்தின் அடிப்படையாக இருக்கும். இதனை நண்பர்கள் இருவரும் நாடு முழுதும் மக்களிடம் எடுத்துரைக்க  போதிவர்மர் வேண்டினார்.


அவர் கோரிக்கைக்கு இணங்கி நண்பர்கள் இருவரும் போதி மதத்தின் நற்கருத்துகளை மக்களிடம் எடுத்துரைத்து லாமா தேசத்தின் சரித்திரத்தில் அழியா இடத்தைப் அடைந்தனர். 


                                     ———************———


                                          மிதோபா நாடகம்



மெருவா லாமா தேசத்தின் சிறு நகரம். இங்கு தீனபந்து என்ற வணிகர் வாழ்ந்து வந்தார். பெரிய மேய்ச்சல் நிலங்களுக்கு சொந்தக்காரர். அப்பிரேதசத்தின் முக்கிய வணிகர்.


அவர் மகன் பெயர் மிதோபா. அவனது பதினாலாவது அகவையில் அவர்கள் நகரத்திற்கு போதிவர்மன் வருகை தந்தார். ஒரு மாதம் தங்கியிருந்து மக்களுக்கு உபதேசம் செய்தார். அவர் வந்த போது மிதோபா அவர் அருகிலேயே இருந்து உபசரித்தான். அவன் போதிவர்மருக்கு மிகவும் நெருக்கமானவன் ஆனான்.


போதிவர்மன் விடைபெறும் போது சிறுவனை ஆசீர்வதித்தார்.


"மிதோபா, இன்னும் சில ஆண்டுகள் கழித்து நீ என்னிடம் வந்து சேர்வாய். ஆன்மீகத்தில் மிகவும் உன்னதமான நிலையை அடைவாய்."


அதன் பின் மிதோபா விகாரத்திற்குச் சென்று ஆன்மீகக் கல்வி கற்றான். அவன் தந்தை வணிகத்தில் தனக்கு உதவி செய்ய வற்புறுத்தினார். ஆனால் மிதோபாவின் மனம் வேறு எதிலோ இருந்தது.


ஒரு முறை லாமா தேசம் முழுதும் கடும் பஞ்சம் வந்தது. மக்கள் உணவின்றி வருந்தினர். தீனபந்துவிடம் மூட்டை மூட்டைகளாக தானியங்கள் இருந்தன. அவை பல மாதங்கள் பயன்படாமல் புழுத்து தான் போகும். அதை எளிய மக்களுக்கு அளிக்குமாறு மிதோபா வேண்டினான்.


"மகனே. நான் அவர்களுக்கு தானியம் அளிக்க இயலாது. ஏன் என்றால் இம்மக்கள் தங்கள் வறுமைக்கு அரசு காரணம் என்பார்கள். பருவநிலை காரணம் என்பார்கள். என் போன்ற தனவந்தர்கள் காரணம் என்பார்கள். ஆனால் தாங்கள் காரணம் என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நாம் இப்போது உதவி செய்தால், தொடர்ந்து உதவி எதிர்பார்ப்பார்கள். தங்கள் நிலையை மாற்ற எந்த பிரயத்தினமும் செய்ய மாட்டார்கள். இவர்கள் உண்பதற்கு பதிலாக என் தானியத்தை எலி தின்பதே மேல்."


மிதோபா தந்தையுடன் உடன்படவில்லை. தந்தைக்கு தெரியாமல் தானிய மூட்டைகளை ஏழைகளுக்குக் கொடுத்து உதவினான். இதை அறிந்த அவன் தந்தை வெகுண்டார். நீ என் மகனே இல்லை என்று சீறினார்.


மிதோபா வீட்டை விட்டு வெளியேறினான். மக்கள் அவன் தங்களுக்கு ஒரு நல்ல வழி சொல்வான் என்று நம்பினர். தீவிரமாக ஆலோசித்த பின் ஒரு உபாயம் தோன்றியது. அவன் மக்களிடம் எடுத்துரைத்தான்.


"இத்தேசம் பெரிது. இத்தேசத்தில் இல்லாத  வளம் இல்லை. பல இடங்களில் மனித குடியேற்றம் இல்லாத நிலங்கள் உள்ளன. நாம் அனைவரும் இந்நகரத்தை விட்டு விலகுவோம். நம்முடன் மற்ற கிராமத்தினரையும் இணைத்துக் கொள்வோம். தொடர்ந்து பயணம் செய்து புதிய நிலங்களைக் கண்டடைவோம்.


ஆனால்  நான் சொல்வதற்கு நீங்கள் அனைவரும் கட்டுப்பட வேண்டும்.  நாம் கூட்டு வாழ்வை ஏற்றுக் கொள்ள வேண்டும். யாருக்கும் எந்தப் பொருளின் மீதும் உரிமை இல்லை. எந்தப் பொருளும் விற்பனைக்கு இல்லை. நாணயங்கள் பயன்படுத்தக் கூடாது. அனைவரும் பொருட்களைப் பங்கிட்டு வாழ வேண்டும். 


இதற்கு ஒப்புக் கொண்டால் நான் வழி காட்டுவேன்.”


மக்கள் மிதோபா கூறியதை ஏற்றனர். கும்பல் கும்பலாக தங்கள் இருப்பிடத்தை விட்டு அகன்றனர். இது நகரத்தின் பெரும் பணக்காரர்களைச் சினமுற செய்தது. அவர்களுக்கு வேலை செய்ய ஆட்கள் கிடைக்காதலால் கோபமுற்றனர்.


தங்கள் சார்பாக தீனபந்துவை மகனுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார்கள். தீனபந்து முதலில் கோபமாக பேசினார். பிறகு மன்றாடினார். ஆனால் எதற்கும் மிதோபா இணங்கவில்லை. 


மிதோபா மக்களுடன் சேர்ந்து கடற்கரையை ஒட்டிய புதிய நிலம் ஒன்றை அடைந்தார். அங்கு மக்கள் ஒருங்கிணைந்து புதிய கிராமம் ஒன்றை உருவாக்கினர். பல தானியங்கள் நிலங்களில் விளைவித்தனர்.  கடலிலிருந்து மீன்கள் பிடித்து உணவாக்கினர். ஆனால் கூட்டு வாழ்க்கை முறையைக் கடைபிடிக்க சில பிரச்சினைகள் இருந்தன. சிறு சிறு மோதல்கள் நடந்து வந்தன.


ஒரு முறை மூன்று மீனவர்கள் ஒரு பெரிய சுறா மீனைப் பிடித்து கொண்டு வந்தனர். அதை தாங்கள் மூவர் மட்டுமே பங்கிட்டுக் கொள்வோம் என்று வாதம் செய்தனர். மிதோபா அதை எல்லா மக்களும் சமமாகப் பங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதை மீனவர்கள் ஏற்கவில்லை.


மிதோபா தன் ஆலோசனையை ஏற்கவில்லை  என்றால் உண்ணாவிரதம் இருந்து உயிர் விடுவதாக கூறினார். இரண்டு நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். மீனவர்கள் மனம் சிறிதும் இளகவில்லை. 


திடீரென கடல் சீற்றம் கொண்டது. ஊர் முழுதும் நீரில் மூழ்கும் நிலைக்கு வந்தது. ஆனால் மிதோபா வசித்த குடிலை ஒட்டி மட்டும் நீர் தேங்கவில்லை. மக்கள் இந்த அதிசயத்தைக் கண்டு வியந்தனர். மிதோபாவை வருத்தியதற்காக இயற்கை தங்கள் மீது சீற்றம் கொண்டுள்ளது என்று எண்ணி தங்கள் செய்கைக்கு மன்னிப்பு கேட்டனர். மிதோபா தன் உண்ணாவிரதத்தை நிறுத்திய பின் கடல் சீற்றம் நின்றது.


இவ்வாறு பல இடையூறுகளுக்கு பிறகு மக்கள் கூட்டு வாழ்வையும், உடமை மறுப்பையும் ஏற்றனர். 


 ஒரு நாள் அவர்கள் கிராமத்திற்கு போதிவர்மர் வருகை தந்தார். அவர்கள் வாழ்க்கை முறை அவரைப் பெரிதும் கவர்ந்தது. மிதோபாவைத் தன்னுடன் திரிபோலி நகரத்திற்கு அழைத்துச் சென்றார். மிதோபாவின் உதவியுடன் நாடு முழுதும் கூட்டு வாழ்க்கை, உடமை மறுப்பு கொள்கையைப் பரப்பினார்.


போதிவர்மர் இறக்கும் தருவாயில் தனக்குப் பின் மிதோபாவே மக்களை வழிநடத்துவார் என்று அறிவித்தார்.


போதி மதத்தின் இரண்டாவது வழிகாட்டியாக  மிதோபா உருவானதன் கதை இது.


                                              ———**********————-


                                                கௌதமன் நாடகம்


கௌதமன் போமி கிராமத்தைச் சேர்ந்த எளிய விவசாயி. அவனுக்கு உத்ரா என்று ஐந்து வயது மகள் இருந்தாள். ஒரு நாள் மகள் படித்த விகாரம் தீப்பற்றிக் கொண்டது. கௌதமனும், கிராமத்தைச் சேர்ந்த மற்றவர்களும் தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


உத்ராவும் மேலும் ஐந்து குழந்தைகளும் தீயில் மாட்டிக் கொண்டனர். அவர்கள் தகப்பன்மார்கள்  தத்தம் குழந்தையைத் தீயிலிருந்து மீட்டனர். உத்ராவையும் கௌதமன் தீயிலிருந்து காப்பாற்றினான்.


ஒரு குழந்தை மட்டும் தீயில் மாட்டிக் கொண்டது. அவள் பெற்றோர் அங்கு இல்லை. மற்றவர்களும் அக்குழந்தையை மீட்க எந்த முயற்சியும் செய்யவில்லை. கௌதமன் அக்குழந்தையைக் காப்பாற்ற எத்தனித்தான். அவன் மனைவி அழுது மன்றாடி அவனைப் போக விடாமல் தடுத்தாள்.


கௌதமன் மனம் குற்றவுணர்வில் சிக்கித் தவித்தது. அவரவர் தத்தம் குழந்தையைக் காப்பாற்ற மட்டுமே முயன்றனர். அந்த ஒரு குழந்தை அனாதையாக இறந்தது. இது ஏன். மனித மனம் ஏன் தன் குழந்தை, தன் குடும்பம் என்று யோசிக்கிறது. இக்கேள்விகளுக்கு  விடை கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளானான். இரவில் உறக்கம் வரவில்லை. பகலில் வேலை செய்யாமல் அங்கிங்கும் அலைந்தான்.


குடும்பம் மனிதனைக் குறுகிய சிந்தனை உள்ளவனாக மாற்றுகிறது என்று தெளிவு பிறந்தது. எப்படி மனிதன் பொருட்களை உடமையாக்குவதைத் தவிர்க்க வேண்டுமோ அது போல சக  மனிதர்களையும் உடமையாக்குவதைத் தவிர்க்க வேண்டும். அப்போது தான்  மனதில் சக உயிர்களிடம் உண்மையான கருணை தோன்றும்.


அவன் திரிபோலிக்கு பயணம் செய்து அங்கு மிதோபாவை சந்தித்தான். போதி மதம் தற்போதைய குடும்ப அமைப்பை நிராகரிக்க வேண்டும். குழந்தை பெற்று ஐந்து வருடம் வளர்ப்பதற்கு மட்டுமே குடும்பம் என்ற அமைப்பு போதுமானது. அதன் பின் குழந்தை விகாரத்தில் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்தல் அவசியம். கணவன் மனைவி என்ற உறவையும் முறித்து வெறும் நண்பர்களாக வாழ வேண்டும்.


இதை மிதோபா கடுமையாக மறுத்தார்.


"போதி மதத்தில் எதுவும் சட்டமாக விதிக்கப்படவில்லை. அனைத்தையும் மக்களின் ஒப்புதலுடன் அவர்கள் ஏற்புடன்  நடக்கிறது. குடும்பம் என்ற அமைப்பைத் துறக்க வேண்டும் என்பதை மக்கள் ஏற்பது இயலாத காரியம்.”


"அப்படியானால் உடமை துறப்பு  வெறும் ஜடப்பொருட்கள் மீது மட்டும் தானா? அன்பு, பாசம் என்ற பெயரில் ஒரு மனிதன் மற்ற மனிதனை உடமையாக கருதலாமா."


"இந்த கேள்வியைப் பத்து மாதம் சுமந்து குழந்தை பெற்ற ஒரு தாயிடம் கேள். ரத்த பந்தம் என்பது அவ்வளவு எளிதில் துறக்கக் கூடிய ஒன்றா?”


"இந்த விகாரத்தைச் சேர்ந்த மற்றவர்களிடம் கலந்து ஆலோசிக்கலாம். அவர்கள் கருத்து என்னவென்று அறியலாம்."


விகாரத்தைச் சேர்ந்த அனைவரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு ஊர் மக்களிடமும் இதைப் பற்றி விவாதித்தனர். யாரும் இதற்கு சம்மதிக்கவில்லை.  ஒரு ஆணும் பெண்ணும் மட்டும் இதற்கு உடன்பட்டனர்.


அவ்விருவரும் இணைந்து வாழ்ந்து குழந்தை பெற்று ஐந்து வருடம் வளர்க்க வேண்டும். பிறகு பிரிய வேண்டும். பிரிந்து ஒரு வருடம் கழித்து அவர்கள் உணர்வுகள் எவ்வாறு இருந்தன என்று கூற வேண்டும்.


இதற்கு ஊர்மக்கள் அனைவரும் சம்மதித்தனர்.


ஐந்து வருடம் கழித்து ஒரு ஆண் மகனைத் தம்பதியினர் விகாரத்தில் சேர்த்தனர். ஒரு வருடம் கழித்து ஊர் மக்கள் முன் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தனர்.  


ஆண் பேசினான்.


"முதலில் மிகவும் கடினமாக இருந்தது. என் மகன் மற்றும் மனைவியின் பிரிவு பெரும் மனச்சுமையாக இருந்தது. ஆனால் அதற்குப் பின் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. நாங்கள் மூவரும் நல்ல நண்பர்களாக மாறினோம். வாரத்தில் ஒரு முறை நான் என் மனைவியையம், மகனையும் சந்திக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்த நாள் எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தோம்."


சேர்ந்து வாழும் போது  புரிதலில் பெரும் பிரச்சினை  இருந்தது. குடும்பத்தில் அடிக்கடி சண்டை வரும். குழந்தை வளர்ப்பிலும் தவறுகள் நடந்தது. அதிகமாக செல்லம் கொடுத்தோம். அடம் செய்யும் போது என் மகனை அடித்திருக்கின்றேன். ஆனால் அவன் விகாரரத்திற்கு வந்தவுடன் அவன் குணத்தில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தது. அவன் சாதுவான, அமைதியான, ஒழுக்கமான குழந்தையாக மாறினான்."


அதன் பின் பெண் பேசினாள்.


"நாங்கள் சேர்ந்து வாழும் போது கருத்து வேறுபாடுகள் வரும். அவன்  மற்ற பெண்களிடம் பேசினாலே எனக்கு கோபம் வரும். அவனும் என் மீது சந்தேகம் கொண்டு சண்டை போடுவான். ஆனால் பிரிந்த பின் எங்களுக்குள் ஒரு நட்பு உருவானது. நான் மற்ற ஆண்களிடம் உறவு கொண்டேன். அவனும் மற்ற பெண்களிடம். ஆனால் நாங்கள் அதை இயல்பாக ஏற்றுக் கொண்டோம். நல்ல புரிதலுக்கு அடிப்படை நல்ல நட்பு. அது  பழைய குடும்ப அமைப்பில் சாத்தியமில்லை.”


தம்பதியினர் கூறிய கருத்துக்கள் மிதோபாவுக்கு பெரும் வியப்பை அளித்தது. கௌதமனுடன் இதை விவாதித்தார்.


"நான் இதை எதிர்பார்க்கவில்லை. மனிதன் அவ்வளவு எளிதாக உறவுகளைத் துறப்பான் என்பதை நம்புவது கடினமாக இருக்கிறது."


"அந்த தம்பதியினர் பிரிவுக்குப் பின்னும் உறவுடன் தான் இருக்கிறார்கள். ஆனால் எதிர்பார்ப்பில்லாத, நிர்பந்தங்கள் இல்லாத உறவு. சுதந்திரத்துடன் கூடிய உறவு. மனிதன்  அன்பு, பாசம் இவற்றைக் காட்டிலும் பெரிதும் விரும்புவது சுதந்திரம் தான்."


இதன் பின் மற்றவர்களும் இந்த புதிய குடும்ப அமைப்பை ஏற்றுக் கொண்டனர். மிகச் சிலரைத் தவிர மற்ற அனைவரும் இதனால் தாங்கள் மகிழ்வாக இருப்பதை உணர்ந்தனர்.


மிதோபா இதன் பின் மற்ற ஊர்களில் உள்ள விகாரங்களையும் தொடர்பு கொண்டு இந்த புதிய குடும்ப அமைப்பை மக்களிடம் விவாதிக்க வேண்டினார்.


மெல்ல நாட்டின் பெரும்பான்மையோர் புதிய குடும்ப அமைப்புக்கு விருப்பத்துடன் ஒப்புக் கொண்டனர்.


மிதோபா இறக்கும் தருவாயில் தனக்குப் பின் கௌதமன் தலைமை வழிகாட்டியாக வேண்டும் என்று அறிவித்தார்.


                                         ———-***********———



கௌதமன் வழிகாட்டியாக பொறுப்பேற்ற சில நாட்களில் ஒரு புது தலைவலி வந்தது. நாடு முழுதும் விகாரத்திலிருந்து வந்த குருக்கள் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாத நிலையை எடுத்துரைத்தனர்.


"கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா. இருக்கிறார் என்றால் ஏன் உலகில் இவ்வளவு துன்பம். மறு ஜென்மங்கள் உள்ளதா. இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது. பிரபஞ்சத்திற்கு தொடக்கம், முடிவென்றுள்ளதா. இவ்வாறு மக்கள் கேள்விகளால் துளைக்கின்றனர். நம் மதம் மீது மக்களின் நம்பிக்கை குறைகிறது."


கௌதமன் தீவிர சிந்தனையில் இருந்தார். அவர் அதிகம் படித்தவர் அல்ல. அதனால் மற்ற குருக்களுடன் கலந்தாலோசித்தார். ஒவ்வொருவரும் தத்தம் கருத்துக்களைக் கூறினர்


"முதலில் கடவுள், பிரபஞ்சத்தின் தோற்றம் இதெல்லாம் ஆன்மீகக் கேள்விகளா? அல்லது அறிவியல் கேள்விகள் மட்டுமா?"


"இவை அறிவியல் கேள்விகள் என்றாலும் அதனிடம்  இதற்கு பதில் இல்லை. இக்கேள்விகளுக்கு பதில் எப்போதும் மானுடன் அறியக் கூடிய சாத்தியம் இல்லை என்று நான் நம்புகிறேன்."


"அறிவியல் இக்கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாது என்றால் வேறு எந்த துறை சொல்ல இயலும்."


"தத்துவம். ஆனால் தத்துவம் உரைப்பது முடிவான உண்மையை அல்ல. பல்வேறு சாத்தியக்கூறுகளை மட்டுமே கூறுகிறது."


"இவ்வாறு நாம் பேசிக் கொண்டே இருப்பதில் பயன் இல்லை, மக்கள் அறுதியான பதிலை எதிர்பார்க்கிறார்கள்."


"மக்களிடம் நாம் கூற வேண்டியது உண்மையா அல்ல பதிலா."


"அவர்கள் திருப்தியடையும்படி பதிலைக் கூறி சமாளித்து விடலாம்."


"அப்படி செய்தால் நாளைய சரித்திரம் நம்மை மன்னிக்காது.”


மதக்குருக்களிடம் இது பெரும் கருத்து வேறுபாட்டை உருவாக்கியது. தெளிவான உண்மை அல்லது மேலோட்டமான ஒரு பதில் கூறி மக்களைச் சமாளித்தல் என்று இரண்டு முரண்பாடான கருத்துக்களால் கௌதமன் குழப்பத்திற்கு ஆளானார். அவர் அடுத்த பௌர்ணமி  அன்று மக்களிடம் இதற்கான உரை ஒன்று ஆற்றுவதாக வாக்களித்திருந்தார்.


ஜீவநேசன் என்ற அறிவியலாளரைச் அழைத்து விவாதித்தார்.


இருவரும் தீவிரமாக விவாதம் செய்தனர். கௌதமன் தன் இறுதி முடிவை தெரிவித்தார். 


"கடவுள் இல்லை. இந்த பிரபஞ்சத்திற்கு தொடக்கம் முடிவென்று எதுவும் இல்லை. இதை படைத்தவர் என்று யாரும் இல்லை. பிரபஞ்சம்  இயங்குவது அறிவியல் விதிகளால்.  நாம் செய்யும் நன்மை  தீமை எந்த பலனையும் எதிர்பார்த்து அல்ல.  நன்மை செய்வது நம்மையும் இந்த பிரபஞ்சத்தையும் பரிசுத்தமாக்குவது என்ற நோக்கத்தினால். இது தான் நான் மக்களிடம் கூறப் போவது. இந்த பதில் மற்ற மதங்களிடமிருந்து நம் மதத்தைத் தனித்துவமாகக் காட்டுகிறது."


"ஆனால் அது உண்மை என்று அறுதியாக தெரியாதே.”


"என்ன பதில் கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்."


"இக்கேள்விகளுக்கு  விடை தெரியாது என்ற பதில். இந்த உண்மையைக் கூற நாம் அஞ்ச வேண்டியதில்லை."


"அது மக்கள் நம் மீது கொண்ட நம்பிக்கையைக்  குலைக்கும்."


"ஆனால் உண்மையைக்  கண்டறிவதே மதத்தின் நோக்கம் அல்லவா?”


"அது அறிவியலின் நோக்கம். மதத்தின் நோக்கம் மனிதனுக்கு  நம்பிக்கை அளிப்பது. அவனை நல்வழிப்படுத்துவது."


ஜீவநேசன் கௌதமனிடம் மன்றாடினார். கௌதமன் பதிலேதும் கூறாமல் அறையை விட்டுச் சென்றார்.


பௌர்ணமி அன்று கௌதமன் மக்களிடம் உரையாற்றினார்.


கடவுள் இல்லை. மறு  ஜென்மம் இல்லை. பிரபஞ்சத்திற்கு தொடக்கம் முடிவென்று எதுவும் இல்லை. மக்கள் தங்கள் செயல்களுக்குத் தாமே பொறுப்பேற்க வேண்டும். நன்மை செய்வதன் நோக்கம் எந்தப் பலனையும் எதிர்பார்த்து அல்ல. நம்மை பரிசுத்தமாக்குவதே வாழ்வின் நோக்கம்.


அதுவே அவ்வுரையின் சாராம்சமாக இருந்தது. மக்கள் இப்பதில்களினால் திருப்தியுற்றனர்.


ஆனால் அடுத்த நாள் ஜீவநேசன் விகாரத்தில் இல்லை. அவன்  கடும் விரக்தியுடன் யாரிடமும் சொல்லாமல் குதிரையேறி சென்று விட்டான் என்று தெரிந்தவர்கள் 

கூறினார்கள்.


கௌதமன் முகத்தில் மெலிதான புன்னகை மலர்ந்தது.





















                                                   


                                                   பகுதி -  - 5

         

                                                   மகர தேசம்



இரவின் கடும் குளிர் மதுராபுரியை அணைத்துக் கொண்டிருந்தது. நிலவு மேகங்களிடேயே மறைந்தும், சிறிது நேரம் கழித்து வெளி வந்தும் விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தது. பகலில் கடும் வெயிலும், இரவில் கடும் குளிரும் கொண்ட நகரமாக மதுராபுரி விளங்கியது. அன்றிரவு வானில் நட்சத்திரங்கள் இல்லை. மழை எப்போதும் பெய்யலாம். 


மகர தேசத்தின் தலைநகரமான மதுராபுரி தூங்கா நகரம் என்று அழைக்கப்பட்டது. புரட்சிப்படை வீரர்கள் மதுவருந்தி ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். வணிக வீதிகளில் உணவகங்கள் திறந்திருந்தது. இறைச்சி உணவின் வாசனை வீரர்களை அவ்வுணவகங்களை நோக்கி அழைத்துக் கொண்டிருந்தது.  வீரர்கள் உண்டதற்கு நாணயங்கள் தரா விட்டாலும், கடைக்காரர்கள் சிறிதும் அதனைப் பொருட்படுத்தவில்லை. புரட்சியாளர்களின் ஆட்சியை மதுராபுரி பூரணமாக ஏற்றுக் கொண்டதை இது காட்டியது.


வணிக வீதிக் கடைகளில் வாடிக்கையாளர்கள் இல்லை என்றாலும் திறந்திருந்தன. வண்டிகளில் இருந்து மூட்டைகள் ஏற்றி இறக்கும் வேலை நிகழ்ந்து கொண்டிருந்தது. மேற்பார்வையாளர்கள் வேலையாட்களை உரத்த குரலில் கடிந்துக் கொண்டிருந்தனர்.


சற்று தள்ளி வீடுகள் இருந்தன. ஒரே தெருவில் மாடி வீடுகளும், குடிசைகளும் அக்கம் பக்கத்தில் இருந்தன. யாரோ ஒரு பெண் தன் குழந்தையைத் தூங்க வைக்க பாடிய தாலாட்டு அவ்வீதியையே உறங்க வைத்துக் கொண்டிருந்தது.


நகரத்தின் மையத்திலிருந்து பூரிசிவஸின் ஆலயத்தில்  இரவு நேரப் பூஜைகள் நடந்துக் கொண்டிருந்தது. ஆலயத்தின் முன் உடுக்கை ஒலியுடன் மேளச்சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. சில பெண்களும் ஆண்களும் நடனமாட அதைக் கும்பலாக மக்கள் சுற்றி நின்று ரசித்துக் கொண்டிருந்தனர்.


மகர தேசத்தின் புதிய தலைவனான கிள்ளிவளவன் தனிமையில் மதுராபுரியின் வீதிகளில் அலைந்துக் கொண்டிருந்தான். இந்நகரத்திற்கு  எப்போது வந்தாலும் ஒரு கொந்தளிப்பான மனநிலையை அவன் உணர்வான். அவன் மதுராபுரியைக் கைப்பற்றி 10  நாட்கள் ஆகியிருந்தது. அன்றிலிருந்து ஒரு நாள் கூட அவன் உறங்கவில்லை. இந்த மாபெரும் தேசத்தை எவ்வாறு ஆட்சி புரிவது என்ற கேள்வி அவனைத் துளைத்துக் கொண்டே இருந்தது. 


பத்து வருடங்கள் முன்பு அவன் புரட்சிப்படையின் தலைவன் ஆன போது அவன் தீவிர இலட்சியவாதியாக இருந்தான். கீழ்த்தட்டு மக்களுக்கு ஆதரவாளனாக இருந்தான். அவர்களைச் சுரண்டி வாழ்ந்துக் கொண்டிருந்த வணிகர்கள், பூசகர்களைத் தன் முதல் எதிரியாகக் கருதினான். ஆனால் மெல்ல தன் இலட்சியங்களைத் தளர்த்த  வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான்.  எதிரிகளை அழிக்காமல் தன் திட்டங்களுக்கு ஒரு கருவியாக அவர்களைப் பயன்படுத்துவதே உகந்த அரசியல் என்பதை உணர்ந்தான். 


கிள்ளிவளவன் மார்தாண்டபுரம் என்ற கிராமத்தில் பிறந்தவன். அவன் பெற்றோர் குடியானவர்கள். அவனுக்கு மூன்று வயது ஆன போது தங்கை மீனலோசினி  பிறந்தாள். பெற்றோர் வேலைக்குச்  சென்ற பின் தங்கையை அவனே பார்த்துக் கொண்டான். தங்கையைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டு வீட்டின் முன் வாசலில் அமர்ந்திருப்பான். துரு துரு குழந்தையாக இருந்த மீனலோசினி அண்ணன் மடியில் அமரும் போது மட்டும் சாந்தமாக இருப்பாள்.


வருடந்தோறும் முகில்மலை பூரிசிவஸ் ஆலயத்தில் நடக்கும் உற்சவத்திற்கு நரபலி இடுவது வழக்கம். ஒவ்வொரு முறையும் ஒரு  கிராமத்திலிருந்து இளம் வயது ஆண் ஒருவன் தேர்வு செய்யப்படுவான். பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பெண் ஒருவள் பலியிடப்படுவாள். யாரைப் பலியிடுவது என்பதை அரசனின் குலகுரு தீர்மானிப்பார்.


நரபலி கொடுப்பதற்கு மார்தாண்டபுரம் தேர்வு செய்யப்பட்டது. இம்முறை ஒரு பெண் பலியிடப்பட வேண்டியிருந்தது. குலகுரு கிராமத்திற்கு வருகை தந்த போது ஊரின் தலைவர் அவரிடம் ஐந்து பெண்களின் பெயரைப் பரிந்துரை செய்தார். அதில் மீனலோசினியும் ஒருவள். குலகுரு மீனலோசினியைப் பார்த்து இவளே நரபலி இட தகுதியானவள் என்று முடிவெடுத்தார்.


இதை அவள் பெற்றோருக்குச் சொன்ன போது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இது மகர தேசத்தினரின் இயல்பாக இருந்தது. நரபலி இடப்படும் ஆணோ பெண்ணோ மேலுலகில் பூரிசிவசுக்கு உற்றவராக ஆவர் என்பது அவர்கள் நம்பிக்கையாக இருந்தது.


மீனலோசினி நரபலி இடப்படும் செய்தி கேட்ட கிள்ளிவளவன் கொந்தளித்தான். தன் தங்கையுடன் ஊரை விட்டுத் தப்பி காட்டில் மறைந்திருந்தான். வீரர்கள் அவர்களைக் கண்டுபிடித்து அரசன் முன் நிறுத்தினர். மீனலோசினி பூரிசிவஸ் உற்சவத்தில் பலியிடப்பட்டாள். கிள்ளிவளவன் சிறையில் அடைக்கப்பட்டான்.


கிள்ளிவளவன் இறைநம்பிக்கைக்கு எதிரானவனாக மாறினான். தன் தங்கையின் மரணத்திற்கு காரணமான அரசகுலம் மற்றும் பூசகர்களை முற்றிலும் அழிக்க முடிவெடுத்தான்.


சிறையிலிருந்து தப்பி காட்டில் வெகு நாட்கள் அலைந்தான். பிறகு நாகபுரம்  என்ற நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு ஒரு மாபெரும் ஆலயம் கட்டிக் கொண்டிருந்தார்கள். அடிமைகளும், போர் கைதிகளும் அதற்குப் பயன்படுத்தப்பட்டனர். கிள்ளிவளவன் அவர்களுடன் தொடர்பு கொண்டு ஒரு சிறு புரட்சியை ஏற்படுத்தினான். நாகபுரம் கிள்ளிவளவன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அந்நகரத்தின் ஆலாயங்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டது. 


அந்நகரத்தின் பெரும் நிலக்கிழார்களின் வயல்கள் அனைத்தையும் உழுபவருக்கே சொந்தமாக்கினான்.  மெல்ல மேலும் சில நகரங்கள் புரட்சிக் குழுவினரின் கட்டுக்குள் வந்தது.


ஆனால் அரசகுலத்தை அழித்து தன் ஆட்சியை நிறுவும் லட்சியம் நிறைவேற வீரர்கள் மட்டும் போதாது என்பதை உணர்ந்தான். நல்ல ஆலோசகர்கள்  அவனுக்குத் தேவைப்பட்டது.


அக்னிதேவன், நீலகண்டன், மேகநாதன் - இவர்கள் மூவரின் தொடர்பு கிடைத்தது. இவர்கள் மூவரின் ஆலோசையடன் கிள்ளிவளவன் மகர தேசத்தின் தலைநகரைக் கைப்பற்றினான்.


ஒரு தலைவன் என்பவன் வெறும் ஆணைகளைப் பிறப்பிப்பவன் மட்டும் அல்ல. பல முரணான விசைகளுக்கிடையே சம நிலையை உருவாக்குபவன்  சாம, தண்ட, பேதம் என்ற அனைத்து யுக்திகளை பயன்படுத்த வேண்டும். தான் அடைய வேண்டிய குறிக்கோளில் தெளிவும், அதனை அடைய வேண்டிய வழி முறைகளில் நெகிழ்வுத்தன்மையும் அரசனுக்குத் தேவை. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் தன்னை ஒரு புரட்சியாளன் என்று கூறிக் கொள்வதே எவ்வளவு நகைப்பானது. தான் அடைந்த வெற்றியில் அரசனும் அவன் வாரிசுகளும்  தவிர வேறு யாரும் பலியிடப்படவில்லை. இது முந்தைய புரட்சிகளில் நடக்காத அதிசயம். 


ஆனால் மகர தேசத்தின் அரசியலில் இருந்த நிலையாமையை அகற்றி ஒரு ஸ்திரத்தன்மையை தர வேண்டுமென்றால் சில தியாகங்கள் செய்யத்தான் வேண்டும். ஸ்திரத்தன்மையை அளிக்க வல்ல மாய சூத்திரம் எது. இக்கேள்வியே அவனை உறங்காமல் செய்துக் கொண்டிருந்தது.


இதற்கான பதிலைக் கண்டு பிடிக்க மூவரால் மட்டுமே இயலும். கிள்ளிவளவன் உடனே தன் குதிரை மீதேறி பொன்னகரம் நோக்கிச் செலுத்தினான். மகர தேசத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் முக்கிய புள்ளியாக  பொன்னகரம் உருவானது.


                                            ——********——-


கோடையின் வெக்கை இரவு நேரத்திலும் பொன்னகரை வருத்திக் கொண்டிருந்தது.  அந்நகரம் உறக்கத்திற்குச் சென்று விட்டது. மது அந்நகரில் தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் மற்ற நகரங்கள் போல் இரவில் குழப்பத்தை ஏற்படுத்தும் குடிகாரர்கள் தொல்லை இல்லை. இது சான்றோர்களின் உலகம். அறிவின் போதையில் மிதக்கும் ஞானிகள் நிறைந்த நகரம். 


ஊரின் நடு மத்தியில் கடிகை இருந்தது.  மாணவர்கள் வேடிக்கைப் பேச்சுக்களிலும், விவாதங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கடிகையின் முன் அறையில் ஞானத்தின் தேவியான வீணா தேவியின் உருவச்சிலை இருந்தது. அதற்கு வெண்ணிற ஆடை உடுத்தி, அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  வகுப்பறைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.


கடிகை மாளிகையின் நடுவில் ஒரு விஸ்தாரமான அறை இருந்தது. அவ்வறை மேற்கூரை இல்லாது திறந்தவெளியாக இருந்தது. வானில் தெரிந்த பிறை நிலவை அக்னிதேவன் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.  அமுதன் அவருக்கு உணவு எடுத்து  வந்து அவர் அருகில் வைத்து விட்டு தள்ளி நின்றான்.


சிறிது நேரத்திற்குப் பிறகு சுய நினைவுக்கு வந்த அக்னிதேவன் தட்டில் பழங்களும் அருகில் அமுதன் நின்றிருப்பதையும் பார்த்தார்.


"நான் எவ்வளவு நேரம் இவ்வாறு இருந்தேன்?."


"வெகு நேரம். தாங்கள் நிலவையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அது தங்களுக்குச் செய்தி எதுவும் அளித்ததா?"


"இல்லை. ஒரு அழகிய கனவு. விண்தேரில் அமர்ந்து நான் நிலவுக்குச் செல்கிறேன். அங்கு காலடி வைக்கும் முதல் மனிதனாக நான் இருக்கிறேன். பின் அங்கிருந்து விண்வெளியில் வெகு காத தூரம் செல்கிறேன். பல அழகிய நட்சத்திரங்களையும், கிரகங்களையும் தாண்டி செல்கிறேன். ஒரு கிரகத்தில் சில மனிதர்களைக் காண்கிறேன். அவர்கள் நம் போல இல்லை. நீங்கள் யார் என்று கேட்டேன். உம்மைப் படைத்தவர் என்றனர். எம்மை ஏன் படைத்தீர் என்றேன். எம்மைப் போல நீரும் படைப்பதற்கு என்றனர். முதலில் மனிதர்களைப் படைப்பீர், பிறகு சிக்கலான கட்டமைப்புகள் படைப்பீர், அதன் பிறகு கருத்துக்கள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள், இறுதியில் எம்மைப் போன்று பிரபஞ்சங்களும் படைப்பீர். முடிவிலா படைப்பு தொடர்வதற்கே உம்மைப் படைத்தோம். அறிந்து கொள்க என்றனர் அக்கிரகத்தின் மனிதர்கள். இதற்கு மறுமொழி நான் கூறுவதற்கு முன் கனவு கலைந்தது.”


"விழிப்பு நிலையில் கனவு காண தங்களால் மட்டுமே இயலும் குருநாதரே.”


"இரவின் கனவுகள் வெறும் மனதின் இறுக்கத்தின்  வெளிப்ப்பாடு. அது ஆழ் மனதின் கழிவு. விழிப்பு நிலையில் நிகழும் கனவே புதிய சாத்தியங்களை உருவாக்குவது."


"உங்கள் கனவில் படைப்பு பற்றி கூறினீர்கள். இயற்கையின் படைப்பு எவ்வாறு நிகழ்கிறது."


"இயற்கை பொதுவாக சிதைவு தன்மையும், ஒழுங்கின்மையும் கொண்டது. பிரபஞ்சத்தில் இருக்கும் ஒழுங்கின்மையை கட்டுக்குள் கொண்டு வருவது பொருட்களுக்கிடேயே இருக்கும் ஈர்ப்பு சக்தியும், பொருட்களுக்கிடையே  நிகழும் உராய்வு மூலம் வெளிப்படும் உஷ்ணமும் தான். இயற்கையில் வியாபித்திருக்கும் சிதைவுத்  தன்மை, ஈர்ப்பு சக்தி, உராய்வு விசை இவற்றுக்கிடேயே நடக்கும் இயக்கத்தினாலேயே படைப்பு நிகழ்கிறது.”


"அப்படியானால் எல்லாவற்றையும் அறிவியில் விதிகளால் கணித்து விட முடியுமா?"


"இல்லை. ஒரு மைதானத்தில் பந்தை எறிகிறாய். அது எந்த வேகத்தில் செல்லும், எவ்வளவு தூரம் செல்லும் என்பதை அறிவியல் சொல்லி விடும். ஆனால் ஒரு மேஜையில் பல பந்துகள் இருக்கிறது. நீ ஒரு பந்தைத் தட்டி விடுகிறது. இப்போது மேஜையில் இருக்கும் பந்துகளுக்கிடேயே அது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதைத் துல்லியமாக அறிவியல் சொல்லி விட இயலாது."   


வெளியே ஏதோ சத்தம் கேட்டது. அமுதன் சென்று என்னவென விசாரித்து வந்தான்.


"கிள்ளிவளவனிடமிருந்து செய்தி வந்திருப்பதாக தெரிகிறது. தூதரை உள்ளே அனுப்பவா.?"


தூதர் உள்ளே வந்து செய்தி கூறினார். அக்னிதேவன் முகத்த்தில் மகிழ்ச்சி தெரிந்தது. அமுதனிடம் கட்டளைகள் பிறப்பித்தார்.


"திரிவிக்ரமன் வீழ்ந்து விட்டான். தலைநகரம் புரட்சிப்படையினரின் கைக்கு வந்து விட்டது. நீ உடனே மேகநாதனும், நீலகண்டனும் இங்கே வரச் சொல்லி தூதரை அனுப்பு. தாரா ஏன் மணிமாறனுடன் பொன்னகரம் வந்து சேரவில்லை. அவள் எப்போதும் கணிக்க இயலாதவளாக இருக்கிறாள். அவளைத் தேடி ஆட்களை அனுப்பு."


அக்னிதேவனின் கட்டளைகள் தொடர்ந்து, கடிகை உறக்கத்திலிருந்து விழித்தது போல பரபரப்பானது.


                                        ———***********————-

                 

கதிரவன் கீழிறங்கும் மாலைப் பொழுதில் மேகநாதன் தன் வீட்டின் தோட்டத்தில் அமர்ந்திருந்தார். தோட்டத்தில் நெடிய மரங்களில் அமர்ந்து பறவைகள் கீச்சலிட்டுக் கொண்டிருந்தன. சுகமான தென்றல் செடி மரம் இலைகளின் தலை சீவி மேகநாதனின் உடலைத் தழுவின. மேகநாதன் யாரையோ எதிர்பார்த்தக் கொண்டிருந்தார்.


சிறிது நேரத்தில் கவிதாசன் வருகை தந்தார். கவிதாசன் மேகநாதனின் நெருங்கிய நண்பர். இலக்கியத்தில் இருவருக்கும் கடுமையான கருத்து வேறுபாடு இருந்தும் நட்பு வலுவாக தொடர்ந்தது.


"வாருங்கள் மரபுக் கவிஞரே. தங்கள் வரவு இந்த மாலைப் பொழுதை இனிமையாக்குகிறது. இன்று எதைப் பற்றிப் பேசவேண்டும் என்ற திட்டத்தில் வந்திருக்கிறீர்கள்."


"புரட்சிக் கவிஞரே தங்களுக்கு மட்டும் பெண் ரசிகைகள் அதிகமாக இருக்கிறார்கள். அதன் ரகசியம் என்னவோ. என் எழுத்தை என் மனைவி, மகள்கள் கூட படிப்பதில்லை."


"ரகசியம் ஒன்றுமில்லை. ஆண்களின் சிந்தனையில் ஒரு வடிவ ஒழுங்கு இருக்கும். பெண்களின் சிந்தனையில்  ஒழுங்கின்மை  இயற்கையாகவே இருக்கும். இரண்டு பெண்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறீர்களா. ஒரே விஷயத்தில் பத்து விதமான நிலைப்பாட்டை எடுப்பார்கள். அது அவர்களை எந்த விதத்திலும் உறுத்தாது. அதனால் பெண்கள் எம் காவியத்தை ரசிப்பதில் வியப்பேதும் இல்லை.”


"தன் புதிய காவியத்தின் மூலம் புரட்சிக் கவிஞர் மரபை நோக்கி நகர்வது மகிழ்ச்சி தந்தது. தங்களுடைய எழுத்தில் இருக்கும் ஒழுங்கின்மை  இக்காவியத்தில்  இல்லை. 


“காவியம் நேர்கோட்டில் செல்லவில்லை."


"ஆம் காலத்தின் பின் நோக்கி செல்கிறது. அதுவும் ஒரு ஒழுங்கு தானே. தாங்கள் முன் எழுதிய காவியங்களில் எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் இதில் அப்படி இல்லை."


"ஆம். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இதில் வேறு ஒரு புதுமை இருக்கிறதே. கதாபாத்திரங்களின் உணர்வுகள், குணங்களின் வடிவமைப்பில் இருக்கும் ஒழுங்கின்மை.  அதைத் தாங்கள் கருத்தில் கொள்ளாதது ஏனோ."


"ஆம் இந்தப் புதுமை காவியத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது.  தங்களுக்கு இறை நம்பிக்கை துளிர் விட்டிருக்கிறதோ?  இந்தக் காவியத்தில் ஆன்மீகத்தின் தாக்கம் வலுவாக இருக்கிறது."


"ஆம். ஒவ்வொரு காவியமும் அக்காலகட்டத்தின் அரசியல் மற்றும் சமூக சூழ்நிலைகளின் பிரதிபலிப்பு. முன்பு திரிவிக்ரமன் ஆட்சி காலத்தில் மதவாதிகளின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதை எதிர்கொள்ள நான் ஆன்மீகத்தின் இருண்ட பக்கங்களைக் காண்பித்தேன். ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கும் புரட்சியாளர்கள் இறை மறுப்பை கொள்கையாகக் கொண்டவர்கள். அதன் தாக்கம் தீவிரம் அடையாமல் இருக்க நான் ஆன்மீகத்தின் நேர்மறையான பக்கத்தைக் காண்பித்தேன்."


"ஆம் இலக்கியவாதி எப்போதும் மந்தை சிந்தனைக்கு எதிர்த் தரப்பில் தான் இருக்க வேண்டும்."


பணியாளர் மேகநாதனின் அருகில் வந்து எதுவோ கூறினான்.


"நினைத்தேன். அக்னிதேவனிடமிருந்து செய்தி வந்திருக்கிறது. நாளை பொன்னகரம் செல்ல வேண்டும். நீண்ட பிரயாணத்திற்குத் தயாராக வேண்டும். "


கவிதாசன் சென்றவுடன் மேகநாதன் சிறிது நேரம் அமைதியாக சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பிறகு வீட்டின் உள்ளே சென்று பிரயாணத்திற்கான ஆயுத்தங்கள் செய்ய ஆரம்பித்தார். 


                                     ———*********————


முத்துநகரில் திருட்டுத் தொல்லை அதிகரித்துக் கொண்டிருந்தது. நீலகண்டன் ஊர் தலைவர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தார்.


"காவலர்களை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் காவலர்களின் ரோந்து நடக்க வேண்டும்."


"இந்த நகரின் ஒவ்வொவரு தெருவிற்கும்  காவல் வைப்பது இயலாத காரியம்."


"இதனுடன் இன்னொரு பிரச்சினையும் ஊர்த்தலைவர்கள் கவனித்திற்கு கொண்டு வருகிறேன். ஊரில் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. கடன் தொல்லை தான் காரணம். சில வணிகர்கள் அதிக வட்டிக்குக் கடன் தருகிறார்கள். திருப்பித் தர இயலாவிட்டால் எல்லா சொத்துக்களையும் பிடுங்கிக் கொள்கிறார்கள்."


நீலகண்டன் சிறிது யோசனைக்குப் பிறகு தன் திட்டத்தை விவரித்தார்.


"நாம் வங்கி என்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். மக்கள் தங்களிடம் இருக்கும் உபரி நாணயங்கள், மற்றும் தங்க நகைகளை இங்கே ஒப்படைத்து விடலாம். தங்களுக்கு தேவையான நேரத்தில் வங்கியிலிருந்து மீட்டும் கொள்ளலாம். இந்த வங்கி மக்களுக்குக் குறைந்த வட்டியில் கடனும் குடுக்கலாம். இந்த வங்கியை அரசே நடத்த வேண்டும்."


"திருடர்களால் இந்த வங்கியைக் கொள்ளை அடிக்க முடியும் அல்லவா."


"இன்று இந்த ஊரை 500  வீரர்கள்  காவல் காக்கிறார்கள். நாம் மேலும் 1000  பேர் வேண்டும் என்று கோரினோம். இத்தனை வீரர்கள் ஊர் முழுதும் காவல் காப்பதற்கு பதிலாக ஒரு வங்கியை மட்டும் காவல் காப்பது எளிதல்லவா. இதன் மூலம் கொள்ளைப் பிரச்சினையை முழுதும் கட்டுப்படுத்த இயலும்."


"அரசே மக்களுக்கு கடன் கொடுப்பது நடைமுறையில் சாத்தியமா. கடன் வாங்குபவர் திருப்பித் தர இயலாவிட்டால் அரசுக்கு நஷ்டம் அல்லவா."


"அரசு கடன் வாங்குபவரிடம் பரிவாகத் தான் இருக்க வேண்டும். வட்டிக்காரனிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அரசிடம் மக்கள் எதிர்பார்க்கலாம்."


"இதனால் ஏற்படும் நஷ்டத்தை எப்படி ஈடு கட்டுவது."


"ஊர் மற்றும் நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருக்கும் போது நஷ்டம் ஏற்படாது. ஆனால் கடும் பஞ்சம்  மற்றும் போர் காலங்களில்  நஷ்டம்  ஏற்படலாம். இதை எந்த புத்திசாலித்தனமான திட்டத்தினாலும் தவிர்க்க இயலாது."


ஊர்த்தலைவர்கள் தங்களுக்குள் விவாதித்து விட்டு சம்மதம் தெரிவித்தனர். 


நீலகண்டன் மாளிகைக்கு வெளியே சத்தம் கேட்டதால் அங்கு சென்றார்.


அக்னிதேவனிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. அடுத்த நாள் பிரயாணத்திற்குத் தயார் ஆனார். 


                                       ———-***********————

 

"நாம் இங்கு கூடியிருப்பது மகர தேசத்துக்கு எவ்விதமான அரசியல் சட்டம் செயல்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி விவாதிப்பதற்காக. அனைவரும் தங்கள் கருத்துக்களைக் கூறலாம்."


அக்னிதேவன் கூறி முடித்ததும் அறையில் சிறிது நேரம் மௌனம் நிலவியது. சற்று விஸ்தாரமான அறை. கடிகையின் அவ்வறை  முக்கியமான சந்திப்புகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அது மாலை நேரமானதால் அறையில் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தது. சுவர்களில் ஓவியங்கள் வரையப்பட்டியிருந்தது. அக்னிதேவன் தவிர நீலகண்டன், மேகநாதன் மற்றும் கிள்ளிவளவன் அமர்ந்திருந்தனர். 


கிள்ளிவளவன் - "பரம்பரை ஆட்சி ஒழிய வேண்டும். என் காலத்த்திற்குப் பிறகு என் ரத்த சம்பந்தம் உடைய யாரும் தலைமைப் பதவிக்கு வர மாட்டார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்."


நீலகண்டன் - "அப்படியானால் உன் காலத்திற்குப் பிறகு அடுத்த தலைவனை எப்படி தேர்ந்தெடுப்பது."


மேகநாதன் - "மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை ஏற்படுத்த வேண்டும்."


அக்னிதேவன் - "மக்கள் அறிவிலிகள். ஆட்டு மந்தைக் கூட்டம். தனக்கு எது நல்லது என்பதைத் தீர்மானிக்கும் திறன் அதற்குக் கிடையாது."


கிள்ளிவளவன் - "யார் தலைவன் என்பதை இந்த கடிகை தீர்மானிக்கும். கற்றுத் தேர்ந்த சான்றோனே ஆளத் தகுந்தவன். அதற்கு இந்த கடிகை தவிர சிறந்த அமைப்பு வேறேது. இந்த கடிகையில் சிறு வயதிலிருந்தே சேரும்  பல மாணவர்களிலிருந்து தலைவன் உருவாக வேண்டும். இம்மாணவர்கள்  அறிவியல், கலை, இலக்கியம், பொருளாதாரம், போர்க்கல்வி என்று பலதும் கற்பிக்க வேண்டும். இவர்களிலிருந்து தகுதியானவனை இங்குள்ள ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்."


நால்வரும் தங்களுக்குள் பேசி சம்மதம் தெரிவித்தனர்.


மேகநாதன் - "அடுத்து இறை நம்பிக்கை குறித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்."


கிள்ளிவளவன் - "அது தடை செய்யப்பட வேண்டும். அது மக்களைக் காட்டுவாசிக் கூட்டமாக மாற்றியிருக்கிறது." 


மேகநாதன் - "மக்களுக்கு தங்களுக்கு ஏற்ற நம்பிக்கையைத் தேர்வு செய்யும் உரிமை வேண்டும். நம்முடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மக்கள் மீது திணிக்க முடியாது. இறை நம்பிக்கை பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களின் ரத்தத்தில் ஊறியிருக்கிறது. அதைக் கலைந்தெடுக்க முயன்றால், இன்னொரு புரட்சி வெடிக்கும். இம்முறை உன் ஆட்சிக்கு எதிராக."


கிள்ளிவளவன் - " அப்படியே ஆகட்டும். ஆனால் மனித உயிப்பலி தடை செய்யப்பட வேண்டும்."


அக்னிதேவன் - "மக்கள் தங்கள் விருப்பத்துடன் உயிர் தியாகம் செய்வதை எப்படி தடுக்க முடியும்."


கிள்ளிவளவன் - "இவ்விடயத்தில் பேரத்திற்கு இடமே இல்லை. என் தீர்மானித்ததற்கு இந்த அவை சம்மதிக்காவிட்டால் நான் தலைமைப் பதவி ஏற்க தயாராக இல்லை."


அக்னிதேவன் - "உன் விருப்பப்படியே நடக்கட்டும். ஆனால் இது மக்களின் சம்மதத்தைப் பெற மேகநாதன் உதவ வேண்டும். இலக்கியம் மூலம், காவியங்கள் மூலம் நரபலி எத்தனை அறிவீனம் என்பதை மக்கள் மனதில் நிறுவ வேண்டும்."


மேகநாதன் -  "நான் உடன்படுகிறேன். என் தரப்பிலிருந்து சில நிபந்தனைகள். அரசர் ஆட்சியில் நிறுவப்பட்ட எல்லா ஆலயங்கள், கலை வடிவங்கள் பேணிக் காக்கப்படும் என்பதற்குக் கிள்ளிவளவன் சம்மதிக்க வேண்டும்"


கிள்ளிவளவன் - "சம்மதம்."


நீலகண்டன் - "ஸ்திரமான அரசு அமைப்பதற்கு மக்களின் பொருளாதார பலமே ஆணி வேர். செல்வந்தரும், வறியவரும் இணக்கமாக வாழ வேண்டும். வறுமையைப் போக்க செல்வந்தரின் உதவியுடன் தான் நிறைவேற்ற முடியும். அதற்கான திட்டங்கள் நான் வடிவமைத்திருக்கிறேன். இதைப் படித்து இந்த அவை தன் கருத்துக்களை கூற வேண்டும்."


சிறிது நேர விவாதத்திற்கு பிறகு நீலகண்டனின் திட்டத்திற்கு சம்மதம் கிடைத்தது.


கிள்ளிவளவன் - "இந்த விவாதங்கள் எல்லாம் ஒரே நோக்கத்திற்குத் தான். அது மகர தேசத்திற்கு ஒரு ஸ்திரமான ஆட்சி கிடைக்க வேண்டும் என்பது. இந்த மண் பல மாற்றங்கள், பல புரட்சிகள் மாறி மாறிச் சந்தித்திருக்கிறது. பெருத்த நாசங்கள், உயிர்ச் சேதங்கள் ஏற்பட்ட்டிருக்கிறது. இது மாறி நம் காலத்திற்குப் பிறகும் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும் தன்மை இந்த தேசத்திற்கு வேண்டும்."


அக்னிதேவன் - "நீலகண்டன் கூறியது போல பொருளாதாரமே ஸ்திரத்தன்மைக்கு அடிப்படை. அது பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்க வேண்டுமேன்றால் அறிவியலே தீர்வாகும். அறிவியல் மூலம் சக்தி வாய்ந்த இயந்திரங்கள் உருவாக்க வேண்டும். ஒரு இயந்திரப் புரட்சி இந்த நாட்டிற்குத் தேவை."


நீலகண்டன் - "இது எவ்வாறு சாத்தியமாகும். இந்த முயற்சிக்கான அறிவியல் அறிவு தங்களுக்கோ இந்த கடிகையைச் சார்ந்த மற்றவருக்கோ உள்ளதா."


அக்னிதேவன் -  "இல்லை. ஒப்புக் கொள்கிறேன். நாங்கள் அறிந்தது ஒரு மாபெரும் சமுத்திரத்தின் சிறு துளி மட்டுமே. ஆனால் இதை அடையக்கூடிய வழிமுறைகள் பற்றிய சாத்தியங்களைத் தீர்க்கத்தரிசனமாக நம் முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள். நாளை நாம் சென்னி மலையின் உச்சியில் இருக்கும் பூரிசிவஸ் ஆலயத்தில் சந்திப்போம். நம்முடன் மேலும் இருவர் சேர்ந்துக் கொள்வார்கள்."

         

சென்னி மலையில் இருக்கும் பூரிசிவஸ் ஆலயம் மிகவும் பழமையானது. இக்கோவிலுக்குப் பக்தர்கள் அதிகம் வருவதில்லை. கோவிலைச் சுற்றி பல குகைகள் இருந்தன. அங்கு ஆட்கொல்லி பேய்கள் உறைந்திருப்பதாக மக்கள் நம்பினார்கள். இக்கோவிலின் அருகே சுற்றிய பலர் இறந்துக் கிடந்ததால் மக்கள் இவ்வாறு நினைத்தார்கள்.


மலை மேல்  இருக்கும் கோவிலைத் தாண்டி இன்னும் மேலே சென்றால் ஒரு பாழடைந்த குகை இருந்தது. அங்கு நான்கு பேர் சுவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுவரில் பல ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. 


அக்னிதேவன் - "இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றையையும் பாருங்கள். இவை பல்லாயிரம் ஆண்டுகள் வரையப்பட்டு இன்னும் அழியாமல் இருக்கும் அதிசயத்தைப் பாருங்கள். நம் நாட்டின் கடந்த நூறு ஆண்டுகளின் சரித்திரம் குறித்து வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் இவை. இனி மேலும் நடக்கப்போவதையும் இவ்வோவியங்கள் கூறுகின்றன."


"பாருங்கள் இந்த ஓவியத்தில் திரிவிக்கிரமன்  தலை கோட்டைச் சுவரில் தொங்குவது வரையப்பட்டுள்ளது. நேற்று நாம் நால்வரும் சந்தித்த்து உரையாடுவது இந்த ஓவியத்தில் உள்ளது. அதன் பிறகு இரண்டு வீரர்கள், ஆண் மற்றும் ஒரு பெண் பிரயாணம் செய்கிறார்கள். கடும் பாலைவனம்  மற்றும் கடலைக் கடந்து, பல் வகை இன்னல்களை எதிர்க்கொண்டு இந்த புதிய நிலத்திற்கு வருகிறார்கள். இந்நிலத்தில் வெண்பனி மலைகள் நிறைந்துள்ளன. இங்கு நாம் அனுப்பிய இருவர் எதையோ ஒன்றைத்  தேடி அலைகிறார்கள். அங்கு ஒரு பேருண்மையைக் கண்டறிகிறார்கள். இந்த ஓவியத்தைப் பாருங்கள் பெரும் இயந்திரங்களை  நம் நாட்டில் உருவாக்குகிறோம். அவை மக்களின் வாழ்க்கையை எளிதாக்குகின்றன. மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ்கிறார்கள்."


கடைசியாக குகையில் ஒரு ஓரத்தில் சிறிய வரைபடங்கள்  இருக்கின்றன. அது புதையல் இருக்கும் இடம் பற்றிய வரைபடங்கள்.


அக்னிதவன் - "இவை எல்லாம் எதைக் குறிக்கின்றன. நான் நேற்று கூறிய இயந்திரப் புரட்சி, அதன் குறித்த அறிவியல் விளக்கங்கள் இந்தப் புதிய நிலத்தில் ஏதோ ஓரிடத்தில் உள்ளது. அதைக்  கண்டறிய ஒரு ஆண், பெண் இருவரை அனுப்ப வேண்டும்."


கிள்ளிவளவன் - "அந்த இருவரையும் நீங்கள் ஏற்கனேவே தேர்ந்தெடுத்திருப்பீர்கள்."


அக்னிதேவன் - "ஆம். வெளியே வா. அவர்களைக் காண்பிக்கிறேன்.


வெளியே மணிமாறன் மற்றும் தாரா நின்று கொண்டிருந்தார்கள்.


கிள்ளிவளவன் தன் வாளை எடுத்து மணிமாறனைத் தாக்க முயன்றான்.


"இவன் ஒரு காட்டு மிருகம். இவனைத் தான் நான் இவ்வளவு நாளாகத் தேடிக்  கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் பூரிசிவஸ் உற்சவத்தில் நரபலி சடங்கை நடத்துபவன் இவன். இவனை வெட்டிக் கொல்லாமல் விட மாட்டேன்."


அக்னிதேவன் கிள்ளிவளவனைத் தடுத்தார்.


"கிள்ளிவளவா நீ அடி முட்டாளாக நடந்துக் கொள்கிறாய். மணிமாறன் மாபெரும் வீரன். ஏன் வீரத்தில் உன்னையும் மிஞ்சியவன். அப்படிப்பட்டவன் உனக்குத் துணையாக இருப்பது பெரும் நன்மை விளைவிக்கக் கூடியது.  தேவையில்லாமல் முடிந்து போன பழைய சங்கதிகளைக் கிளறாதே. இவர்கள் இருவர் தான் நம் வருங்காலக் கனவை நனவாக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்."


"மணிமாறா. உனக்கு தாரா அனைத்தையும் விளைக்கியிருப்பாள். இந்த நாட்டின் எதிர்காலத்தையே மாற்றும் பெரும் பொறுப்பு உன் கையில் நாங்கள் ஒப்படைக்கிறோம். சென்று வென்று வா."


மணிமாறன் அக்னிதேவனை வணங்கி புரவியில் ஏறினான். தாரா அவனைப் பின் தொடர்ந்தாள்.  அவர்கள் இருவரும் மறையும் வரை நால்வரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


அக்னிதேவன் - "தேவையில்லாமல் குழப்பம் கொள்ளாதே கிள்ளிவளவா. சரித்திரத்தில்  மாபெரும் இடத்தை நீ அடைவாய். அதற்கு இவன் பெரும் துணையாக இருப்பான். அவன் உன் உடன்பிறவா சகோதரரானாய் மாறுவான். என் கணிப்பில் நம்பிக்கை வை."


அக்னிதேவன் நம்பிக்கை அளிக்கும் விதமாக கிள்ளிவளவன் கைகளைப் பற்றினார். 


மாலை சூரியன் சென்னி மலைக்குப் பின்னே மெதுவாக மறைந்தது. வானம் பல் விதமான வண்ணக்கோலங்களை அணிந்து பிறகு கரும் இருட்டுக்கு மாறியது. சில்லிப்பான காற்று லேசாக வீசியது.


நால்வரும் மலையிலிருந்து இறங்கித் தத்தம் புரவியில் ஏறி தலைநகர் நோக்கிச் சென்றனர்.


                                      ———***********————


                                          யுதோபியா தேசம்


மாலைக்  கதிரவன் கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தது.  எந்த மேகங்களுமில்லாது வானம் களங்கமற்று இருந்தது.  விண்ணைச் செந்நிறம் நிறைத்தது. காரிருள்  பரவுவதற்கான அறிகுறி தெரிந்தது. நீல நிற அலைகளைக் கிழித்துக் கொண்டு கடல் அன்னம் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. அலைகள் தட்டி தட்டி சென்றது. சுகமான கடல் காற்று கடல் அன்னத்தின் மேனியைத் தழுவியது. அதனால் அன்னம் மெல்ல சிலிர்த்தது. 


கரையிலிருந்த  மனிதர்கள் எறும்புகளாக மாறிக் கொண்டிருந்தனர். ஜோகன் தாயின் ஆலயம் சிறிதாகிக் கொண்டே இருந்தது. ‘கடல் அன்னம்'  என்ற தன் புதிய கப்பலின் மேல் தளத்தில் நின்று, கடலை நோக்கும் போது வால்டேர்  சொல்லிலடங்கா உணர்வு நிலையில் இருந்தார். வான் உச்சியிலிருந்து பூமியைப் பார்ப்பது போன்ற உவகை மனதில் பொங்கியது.


கடின உழைப்புக்குப் பின் கடல் அன்னத்தின் வெள்ளோட்டம் அன்று நிகழ்ந்தது. வால்டேர் இவ்வுலகை வென்றதாக உணர்ந்தார். இறைவனை வென்றதாக உணர்ந்தார். தன்னையே வென்றதாக உணர்ந்தார்.


மேல்தளத்தின் இன்னொரு பகுதியில் ரூசோ, ஸ்பினோசா மற்றும் நீட்ஷே உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.  வால்டேர் அங்கு சென்று மூவரையும் அணைத்துக் கொண்டார். "அதி அற்புதம்! அதி அற்புதம்!" என்று சொல்லியவண்ணம் இருந்தார். 


கப்பலின் ஊழியர்கள் சுழன்று வேலை செய்துக் கொண்டிருந்தனர். அவர்களின் மேற்பார்வையாளன் கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தான். மாலுமி நீட்ஷேவிடம்  சில சந்தேகங்கள் கேட்டுக் கொண்டிருந்தான். நீட்ஷே சில வரைபடங்களைக் காட்டி விளக்கினான். அவர்களின் விவாதத்தில் ஸ்பினோசாவும் கலந்து கொண்டான்.


திடீரென ஒரு பேரலை தாக்கியதால் கப்பலின் மேல் தளம் எங்கும் நீர் நிரம்பியது. வால்டேர் நீட்ஷேவிடம் சமிக்னை செய்ய கப்பல் மெல்ல கரையை நோக்கித் திரும்பியது. கப்பலில் இருந்த அனைவரும் உற்சாகமாக பாட ஆரம்பித்தனர்.  நீட்ஷேவும் ஸ்பினோசாவும் அவர்களுடன்  இணைந்து நடனம் ஆடினார். 


தனியாக நின்றிருந்த ரூசோவின் அருகில் வால்டேர் சென்றார். அவர்களிடேயே நிலவிய மௌனம் பல கதைகள் பேசியது. கடலைப் பார்த்துக் கொண்டிருந்த ரூசோவின் கண்களில் கண்ணீர் நிரம்பியது.  அவன் தோள்களை அணைத்து கப்பலின் ஒரு ஓரத்தில் இருந்த உணவகத்திற்கு வால்டேர் சென்றார். அங்கு இருவரும்  கோப்பையில் மதுவை நிரப்பிக் கொண்டு அமர்ந்தனர்.


"அடுத்த வாரம் இந்நேரம் நாம் இந்த கடலின் எதோ ஒரு திக்கில் மிதந்து கொண்டிருப்போம்.”


"நீட்ஷே, ஸ்பினோசா நம் பயணத்தில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்."


"அது  மிகவும் நல்லது. திறமையை மதிக்காத தேசத்தில் இது தான் நடக்கும். தாய்க் கூட்டை விட்டுப் பிரிந்து செல்லும் பறவை போல இளைஞர்கள் விலகிப் பறந்து விடுவார்கள்.”


"கடல் அன்னம் - இந்த பெயர் உங்களுக்கு எவ்வாறு தோன்றியது?”


"கடலில் அன்னம் இது வரை மிதந்து  இல்லை. சாமானிய வாழ்க்கையில் சாத்தியமாகாத ஒரு காரியத்தைச் செய்ய விழைந்ததன் விளைவு இந்த பெயர்.”


கப்பல் கரையை அடைந்தது. அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காவலர்கள் கப்பல் தொழிற்சாலையை ஆக்கிரமித்திருந்தனர். கப்பலில் இருந்த அனைவரையும் வெளியேற்றினர். 


காவல் வீரர்களின் தலைவன்  வால்டேரை அனுகினான்.


"இந்த கப்பல் தயாரிக்க அரசிடம் அனுமதி வாங்கவில்லை. இந்த நொடி முதல் இந்த தொழிற்சாலையும், கப்பலும் அரசின் கட்டுப்பாட்டுக்கு செல்கிறது."


"எல்லாவற்றிற்கும் முறையான அனுமதி வாங்கியிருக்கிறேன். அதற்கான ஆவணங்களை என்னால் காட்ட இயலும்."


"நான் வெறும் அம்பு. வில் எய்தது யாரோ.  எதுவென்றாலும் செனட்டர் ஹெகலிடம் பேசிக் கொள்ளுங்கள்.”


வால்டேர் விரைந்து வண்டியிலேறி ஹெகல் வீட்டை நோக்கிச் செல்ல ஆணையிட்டார்.


"பணமூட்டைகளுக்கு ஹெகலின் வாசல் எப்போதும் திறந்திருக்கும். வாழ்க ஜனநாயகம்."


காவல் தலைவன் பேசியது சக வீரர்களிடம் வெடிச்சிரிப்பை உண்டாக்கியது.


"சட்ட விதிகள் மீறப்படாதவை. ஒரு தனி மனிதனின் தேவைக்காக தளர்த்தப்படாதவை.   எத்தனை பெரிய ஆளுமையாக இருந்தாலும்."


ஹெகலின் நிதானமான வார்த்தைகள் வால்டேரை நிலைகுலையச் செய்தது.


"எந்த விதிகளும் மீறவில்லை. முறையான அனுமதிகள் வளங்கப்பட்டுள்ளனன. "


"இல்லை. விதிப்படி படகுகளுக்கு தான் அனுமதி. ஆனால் உங்கள் கப்பல் 20 மடங்கு பெரிது.  இக்கப்பலைக் கொண்டு எங்கு செல்ல உத்தேசம்."


"தூர தேசங்களுக்கு. இது வரை எந்த யூதோபியனும் கால் தடம் பதிக்காத மண்ணிற்கு."


"இங்கு ஒரு சிக்கல் உள்ளது. நீங்கள் சென்றால், அவர்களும் இங்கு வருவார்கள். அது தேசத்தின் பாதுகாப்பிற்கு உகந்தது அல்ல. இந்நாட்டின் பலமே  தனித்து இருப்பது. அண்டை நாடுகள் தொல்லை இல்லை. வேறு தேசத்தினர் கடல் கடந்து சுலபமாக வர இயலாது. நீர் சென்று இங்கு கொண்டு வர போகும் எலிக்கூட்டம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? யார் அறிவார்?”


"வேற்றுவரின் வருகை நலமே பயக்கும். வர்த்தகம் வளரும். புதிய தொழில்நுட்பங்கள் கற்றுக் கொள்ளப்படும். கலாச்சார பரிவர்த்தனை நடக்கும். புதிய சிந்தனைகள் உதிக்கும்."


"நீர் மேற்கூறிய எதுவும் இந்த நாட்டின் அடிப்படை இயல்புக்கு எதிரானது."


"நீ சிறு மதியாளன் ஹெகல். உனக்கு குறுகிய சிந்தனை. உன்னிடம்  இனி பேச்சு இல்லை. நான் வேறு வழியில் இதைக் கையாளுகிறேன்.”


வால்டேர் மார்க்ஸைச் சந்தித்த்து தன் திட்டங்களை விவரித்தார்


 "அருமை. வால்டேர்,  நீ என் இனமடா. வணிகரே, இத்தனை நாட்கள் எங்கு இருந்தீர்."


மார்க்சின் உற்சாகம் வால்டேரையும் தொற்றிக் கொண்டது. தனது திட்டங்களை விரிவாக எடுத்துச் சொன்னார்.


"உமது திட்டத்திற்கு எந்த தடை வந்தாலும் அதை உடைத்து ஏறிய நான் உதவி செய்வேன். நம்பிக்கையுடன் வீட்டிற்குச் செல்லுங்கள்."


அடுத்த நாள் மார்க்ஸ் அவசரச்சட்டம் பிறப்பித்தார். தொழில் தொடங்குவதற்கு உள்ள இடையூறுகள் அனைத்தும் முற்றிலும் களைந்தெறிய அந்த சட்டம் வழி வகுப்பதாக இருந்தது. இது அவசரச்சட்டம் என்பதால் செனட்டின் அனுமதி தேவையில்லை.


செனட் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்தது. மார்க்ஸ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மார்க்ஸ் அதிரடியாக செனட்டைக் கலைத்து முழு அதிகாரத்தையும் தன் கையில் எடுத்துக் கொண்டார்.


ஹெகல் ராணுவத்தின் உதவி கொண்டு மார்க்ஸைக் கைது செய்தார். ஆனால் மக்களின் ஆதரவோ மார்க்சிற்கு தான். நாடெங்கும் கலவரம் நடந்தது. நிலைமை கட்டுக்கடங்காமல் இருந்தது.


இரு அரசியல் எதிரிகள் ஒப்பந்தம் செய்து கொண்டனர். கப்பல் பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மார்க்ஸ், வால்டேர் மற்றும் அவர் குழுவினர்  அதே கப்பலில் நாட்டை விட்டு சென்று விட வேண்டும்  மீண்டும் யுதோபியாவிற்கு வரக்கூடாது.


மார்க்ஸ் இந்த திட்டத்தை  ஏற்றுக் கொண்டார்.


கடல் அன்னம் தன் கன்னிப் பயணத்தைத் தொடங்கியது. கப்பலின் மேல் தளத்தில்  மார்க்ஸ், ஸ்டெல்லா, வால்டேர், ரூசோ, நீட்ஷே, ஸ்பினோசா நின்றுக் கொண்டிருந்தனர்.


ஹெகல் கப்பலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அருகிலிருந்த வீரனிடம் சமிக்னை செய்தார்.


ஒரு அம்பு மார்க்சின் நெஞ்சைத் துளைத்தது. அவர் சடலம் கடலில் விழுந்து, குருதி நிறமாக நீர் மாறியது.


ரூசோ கடலில் பாய எத்தனித்தான். ஆனால் நீட்ஷே அவனைத் தடுத்தான். ஸ்டெல்லாவின் ஓலக்குரல் கடலின் அமைதியைக் குலைத்தது. ஹெகல் புன்னகையுடன் கரையை விட்டு நீங்கினான்.


இது எதையும் பொருட்படுத்தாமல் கப்பல் அன்ன நடை நடந்தது. 

      

                                                லாமா தேசம்


கனிஷ்கா விழா நிகழ்ச்சிகளில் முழுதும் ஈடுபட்டிருந்தான். இந்நாட்களில் அவன் அசோகாவைச் சந்திக்கவில்லை. ஒரு நாள் இரவு விகாரத்தின் பிற்பகுதிக்குச் சென்றான். 


அங்கு அசோகா தன் குதிரையைத்  தட்டிக் கொடுத்து கிளம்ப ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருந்தான்..


"நண்பா? என்ன உன் திட்டம்."


"என் நினைவு இருப்பது குறித்து மகிழ்ச்சி."


"மன்னித்து விடு. விழா ஏற்பாடுகளில் மூழ்கி விட்டேன். ஆனால் உன்னை மறக்கவில்லை."


"என்னை நீ நண்பனாக கருதவில்லை. பிரயாணத்தின் போது நான் ஒரு துணை. அவ்வளவு தான்."


"என்ன ஆயிற்று உனக்கு?"


"நண்பர்களிடையே  ரகசியம் இருக்க இயலாது. நான் என் குடும்ப வாழ்வு உட்பட அனைத்தையும் மறைக்காமல் சொன்னேன். ஆனால் நீ உன்னைக் குறித்து எதுவும் சொல்லவில்லை."


"நான் இந்த விகாரத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதைக் கூறியிருந்தால் நம்மிடையே  ஒரு  இடைவெளி இருந்திருக்கும். நட்புணர்வு வந்ருக்காது. நான் செய்த தவறுகள் எல்லாவற்றையும் மன்னித்து விடு. நீ எங்கும் செல்லாதே. எனக்கு உன் துணை வேண்டும். இங்கிருப்பவர்கள் அனைவரும் பழமையான பழக்கங்களில் ஊறியவர்கள். அதனால் நான் முடிவெடுக்க சிரமம் இருக்கும் போது உன் அறிவுரைகள் வேண்டும். வா நண்பா உள்ளே வா."


கனிஷ்கா அசோகாவை அணைத்துக் கொண்டான்.


பௌர்ணமி அன்று கனிஷ்கா பதவி ஏற்றான். அன்று மக்களிடம் உரையாற்றினான்.


"நமக்கு வழிகாட்டியாக, சிலருக்குத் தந்தையாக, சிலருக்குத் தமையனான இருந்த நரோபா விண்ணுலகம் சென்று விட்டார். அவரின் வெற்றிடத்தை நிரப்புவது சிரமம். ஆனால் என்னால் இயன்ற வரை முயல்வேன்.


நம் நாடு சந்திக்கும் பிரச்சினைகள் புது விதமானவை. அதற்கான தீர்வுகளும் புதுமையாக தான் இருக்கும். நான் விரைவில் என்ன மாற்றங்களை நம் சமூகம் ஏற்க வேண்டும் என்று சொல்வேன். என் முதல் திட்டத்தை இன்று கூறுகிறேன்.


நம் சமூகத்தின் வினோதமான குடும்ப அமைப்பு மாற்றுதல் அவசியம். குடும்பம் என்பது மக்கள் விருத்திக்காக என்பதைப் பரிசீலனை செய்ய வேண்டும். நம் குடும்ப அமைப்பின் பிராதான நன்மை சுதந்திரம் என்று கூறப்படுகிறது. அது ஓரளவு உண்மை. 20 - 45  வயது வரை நம் உடல், மனம் பல வித கனவுகளால் உந்தப்படுகிறது. அதற்கு குடும்பம் ஒரு தடையே.


ஆனால் நாம் மூப்பை நெருங்கும் போது நாம் தேடுவது  நம்மைப் பேணும் குழந்தைகள், கொஞ்சி விளையாட பேரக்குழந்தைகள், பழங்கதைகள் பேசி மகிழ மனைவி - இவை தானே வாழ்க்கையின் இறுதியை நெருங்கும் ஒருவருக்கு அமைதியை கொடுப்பது.


ஆனால் நம் வினோதமான சமூக அமைப்பு முதியவர்களுக்கு இவற்றை அளிப்பதில்லை. நாடு முழுதும் நான் பிரயாணம் செய்திருக்கிறேன். முதியவர்களின் அவல நிலை சொல்ல இயலாது. வெறும் அனாதைகளாக, நோயுற்றால் பேணுவதற்கு யாருமின்றி, விரக்தியுடன் இறக்கிறார்கள். இது முதியவர்களுக்கு நம் சமூகம் இழைக்கும் பெரும் அநீதி.


இன்று முதல் காலம் காலமாக இருந்த வந்த பழைய குடும்ப அமைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இனி யாரும் தம் துணையை, குழந்தைகளைத் தியாகம் செய்ய வேண்டாம். தற்போதிருக்கும் குடும்ப அமைப்பை விரும்புபவர் தொடரலாம். ஆனால் இவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது."


இதை இந்த விகாரத்தைச் சேர்ந்தவர்கள் தமக்குள் விவாதித்து, நாட்டு மக்களுடன் உரையாடி இரண்டே மாதங்களில் தங்கள் கருத்தைக் கூற வேண்டும்.”


கனிஷ்கா பேசி முடித்ததும் அசோகா அவன் கைகளைப் பற்றினான். ஒரு புது விடியல் உதயமாவதை விகாரத்தைச் சேர்ந்த அனைவரும் உணர்ந்தனர்.


ஒரு நாள் நள்ளிரவு. அசோகா திடீரென்று விழித்தான். அருகில் கனிஷ்கா நின்று கொண்டிருந்தான்.


"நாம் மீண்டும் ஒரு நெடிய பயணம் மேற்கொள்ள வேண்டும். கிளம்பு."


இருவரும் குதிரைகளில் ஏறி பிரயாணம் மேற்கொண்டனர்.


"அப்படி பார்க்காதே. இம்முறை உன்னிடம் எதுவும் மறைக்கப் போவதில்லை. நம் நாடு அந்நியர் படையெடுப்புக்கு ஆளாகும் என்று தகவல் வந்திருக்கிறது. வடக்கு எல்லையில் மிங் தேசத்து படைகள் இருப்பதாக செய்தி அறிந்தேன். நாம் அங்கு தான் செல்கிறோம்."


"இதற்கு வாய்ப்பே இல்லை. நம் நாடு பல நூற்றாண்டுகளாக எந்தப் போரையும் சந்திக்கவில்லை."


"ஆம். அது உண்மை. நம் நாடு நெடிய மலைச்சாரல்களால் ஒரு அரண் போல பாதுகாக்கப்படுகிறது. இதைத் தாண்டி அந்நிய தேசப் படைகள்  வருவது அவ்வளவு எளிதன்று. ஆனால் இந்த பிரபஞ்சத்தில் எதுவும் நீடிப்பதில்லை. மிங் தேசப் படைகள் வடக்கு எல்லைக்கு மிக அருகில் இருப்பதாக அறிகிறேன். அதை நேரில் காண்பதற்காக செல்கிறேன்."


"நம் வாழ்வில் போரை சந்தித்ததில்லை."


"ஆம் போதி மதமும், அதன் வழிகாட்டிகளும் இந்நிலைக்கு நம்மைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றனர். நம் தேசத்தில் யாருக்கும் போர்ப்பயிற்சி கிடையாது. நமக்கு படைகள் இல்லை. நம் இனம் அழியப் போவது என் கண் முன் தெரிகிறது."


சில நாட்கள் பயணத்திற்குப் பின் வடக்கு எல்லையை நெருங்கினர். உயரமான மலையில் ஏறி சென்றனர். மலையின் ஒரு உச்சத்தியிலிருந்து கீழே பார்த்த போது லட்சக்கணக்கான வீரர்கள் தெரிந்தனர். மலையைத் தாண்டி லாமா தேசத்தின் உள்ளே வருவதற்கு பாதைகள் போட்டுக்  கொண்டிருந்தனர்.


கனிஷ்கா தீவிர ஆலோசனையில் இருந்தான். பிறகு தன் திட்டத்தை அசோகாவிடம் விவாதித்தான்.


"நான் அண்டை நாடான மங்கள் தேசத்திற்கு  சென்று அந்நாட்டு மன்னனைச் சந்திப்பேன். மிங் தேசத்தின் அரசன் தலைநகரில் இல்லை என்றும், அவன் படைகள் நாட்டை விட்டு வெகு தூரம் லாமா தேசத்தின் எல்லையில் இருக்கின்றன என்றும் தெரிவிப்பேன். இது தான் மிங் தேசத்தைத் தாக்க சரியான தருணம் என்பதை விளக்குவேன். மங்கள் தேசத்தின்  படைகள் மிங் தேசத்தின் தலைநகரை எளிதாக கவர்ந்து விடும். அதன் பின் மிங் தேசத்து அரசன் தலைநகரை விடுவிக்க இங்கிருந்து சென்று விடுவான். நான் உன்னை மீண்டும் இதே இடத்தில் வந்து சந்திக்கிறேன் ”


மூன்று வாரங்களில் மிங் தேசத்து படைகள் லாமா தேசத்தின் எல்லையை விட்டு அகன்றன. பனிமலையில் ஒரு பாறையின் அருகில் நின்று அசோகாவும், கனிஷ்காவும் இதை கவனித்துக் கொண்டிருந்தனர்.

"நண்பா நாம் அழிவை  சில மாதங்களுக்கு  தள்ளிப்போட்டிருக்கிறோம். நம் சூழ்ச்சி மிங் தேசத்து அரசனுக்கு தெரிய வரும். மிகுந்த வெறியுடன், பெரும் படையுடன் நம்மைத்  தாக்க வருவான். அதற்குள் நாம் தயாராக வேண்டும்."


"உன் திட்டம் என்ன."


"நம்மால் ஒரு படையை இப்போது உருவாக்க முடியாது. ஆனால் படை பலம் கொண்ட மற்ற நாடுகளை அணுகலாம். அவர்கள் உதவியைக் கோரலாம்."


"அதற்கு பிரதி பலனாக நம்மிடம் எதிர்பார்ப்பார்கள்."


"ஆம். நாம் அவர்களுக்கு தர போவது  வர்த்தகம். லாமா தேசத்தின் அறிய மூலிகை மருந்துகள், வாசனைத் திரவியங்கள், தோல் ஆடைகள் - இவற்றிற்கு மற்ற நாடுகளிடம் பெரும் தேவை இருக்கும்."


"ஆனால் நம் தேசத்தில் வர்த்தகம் என்பது அறவே இல்லை."


"நான் அதை மாற்றுவேன். உடமை மறுப்பு போன்ற உதவாத கோட்பாட்டுகளை  நாம் உதறுவது அவசியம். நாம் இனியும் பொந்துக்குள் ஒளிந்து கொண்டிருக்க முடியாது. இந்த நவ உலகை எதிர் கொள்ள தயாராக வேண்டும்.” 


நாம் உடனே தெற்கு திசை நோக்கி செல்வோம். அங்குள்ள பெரூஸ் நாட்டை அணுகி உதவி பெற வேண்டும். இன்னொரு பிரயாணம் தொடங்குகிறது."


"நன்று நண்பா. ஒரு புரட்சியின் தொடக்கம் இங்கே, இந்நொடி உருவாகிறது. என் மனம் கிளர்ச்சி கொள்ளுகிறது."


நண்பர்கள் சிறிது தூரம் நடந்து புரவிகளில் ஏறி கொண்டனர்.  


வானை மேகங்கள் சூழ்ந்து கொண்டன. கதிரவன்  அவற்றுள் மறைந்து பல வண்ணங்களை ஆகாசத்தில் இறைத்தது.


பிறகு மெல்ல இருள் சூழ்ந்தது.


                                     










                                            







                                                  பகுதி   - 6



அதிகாலை இளந்தென்றல் சுகமாக வீசியது. மலர் மொட்டவிழ்வது போல சூரியன் ஆகாசத்தில் உதயமாகியது. பறவைகளின் கீச் ஒலி புவியெங்கும் நிறைத்தது. காலைத் தென்றலின் இசையை மரங்கள் தம் கிளைகளை அசைத்து ரசித்துக் கொண்டிருந்தன. வயல்களில் உள்ள  இலைகளின் பசுந்தளிர் மீது படிந்திருந்த  நீர்த்துளிகளை ஆதவன்  தன் கதிர்களால்  ஒளிரச் செய்தது.  விவசாயிகள் வயலில் வேலை செய்ய சென்று கொண்டிருந்தனர். காளை மாடுகளில் கட்டப்பட்டிருந்த  மணிகளின் ஓசை இனிய கானமாய் ஒலித்தது.


வயல்களைக் கடந்து இரண்டு புரவிகளில் மணிமாறனும், தாராவும் சென்றுக் கொண்டிருந்தனர். மணிமாறனின் மனம் பெரும் குழப்பத்தில் இருந்தது. தான் ஏன் இந்தப் பிரயாணத்திற்கு ஒப்புக் கொண்டோம் என்று சிந்தித்தான். புரட்சியாளர்களின் அணியில் சேர்வது போல நடித்து தக்க சமயத்தில் அவர்களின் தலைவர்களை அழிப்பது  தான் முதலில் திட்டமாக இருந்தது.


ஆனால் இப்போது தானும் அவர்களில் ஒருவனாக மாறிக் கொண்டிருப்பது அவனுக்கே வியப்பாக இருந்தது. அதற்கு காரணம் கிள்ளிவளவனால் மக்களுக்கு நல்லாட்சி தர         இயலும் என்ற எண்ணம் துளிர் விட்டதால். ஆனால் கிள்ளிவளவன் தன்னை                    மன்னிப்பானா என்ற சந்தேகம் அவனை உறுத்தியது. தற்போது மேற்கொள்ளும் முயற்சி வெற்றி பெற்றால் அவன் தன்னை ஏற்றுக் கொள்வானா?


கிள்ளிவளவான் மீது உண்டான நல்லெண்ணம் தான் தன் மாற்றத்துக்கு உண்மையான காரணமா? அல்லது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறோமா? உண்மையான காரணம் தாராவின் மீது ஏற்பட்ட ஈர்ப்பா?


அருகிலிலிருந்த புரவியில் தாரா மென் புன்னகையுடன் வந்து கொண்டிருந்தாள். தன் மனதில் ஓடுவதெல்லாம் இவள் படித்து விடுகிறாளா என்ற ஐயம் மணிமாறனுக்கு உண்டானது.

   

"கிள்ளிவளவன் என்னைக் கொன்று விடுவானா?"


மணிமாறனின் கேள்வியைக் கேட்டு தாரா நகைத்தாள்.


"கிள்ளிவளவன் கொல்லாவிட்டாலும் நான் உன்னைக் கொல்வது உறுதி. நாம் மகர தேசத்திற்கு  திரும்பிய பின் உன் தலையை வெட்டுவேன்."


"பிறகு இந்த பயணத்தினால் எனக்கென்ன ஆதாயம்?"


"உன் தலை என்றோ  மதுராபுரி கோட்டை வாயிலில் திரிவிக்கிரமனுடன் தொங்க வேண்டியது. இந்த பயணத்தினால் அது சில மாதங்கள் ஒத்திப் போடப்பட்டிருக்கிறது."


"நான் இறக்கப் போவது உறுதி என்றால், அது என்று நடந்தால் என்ன?"


"உன் விஷயத்தில் சிறிது நம்பிக்கை இருக்கிறது. கிள்ளிவளவன் மனம் மாறலாம். உன் மீது அக்னிதேவர் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்."


இருவரும் ஒரு சத்திரத்தில் மதிய உணவு உண்டனர்.


கிள்ளிவளவன் அக்னிதேவர் அளித்த வரைபடங்களை ப் பார்த்தான்.


"நீயும் தினமும் இந்தப்  படங்களைப்  பார்த்துக் கொண்டிருக்கிறாய். ஏதாவது புலப்படுகிறதா."


"இன்னும் இரண்டு நாட்கள் பிரயாணத்ததிற்கு பின் நாம் மகர தேசத்தின் வடக்கு எல்லையை அடைந்து விடுவோம். அதற்கு பின் துவாரா என்னும் ஒரு பெரும் பாலைவனம். இந்த பாலைவனத்தைக் கடந்த பின் தருக்கி என்னும் நாட்டை அடைவோம். இந்நாட்டைக் கடந்து  வடக்கு நோக்கி சென்றால் பெரூஸ் என்ற நாடு வருகிறது. அதன் பின் வடக்கு நோக்கி சென்றால் லாமா தேசம். அது தான் நாம் இறுதியாக அடைய வேண்டிய இடம். அங்கு  நாம் தேடும் ரகசியங்கள் இருக்கிறது."


"நம் பிரயாணம் இன்னும் எத்தனை நாட்கள்?"


மணிமாறன் தன்னிடமிருந்த மெலிதான ஒரு சிறு குச்சியை வரைபடத்தின் மீது வைத்து எதையோ அளந்தான்.


"நீ என்ன செய்கிறாய் என்பதை விளக்குவாயா?"


"இந்த ஒரு குச்சியின் நீளம் 200  காத தூரம். நாம் ஒரு நாள் கடக்கக் கூடிய தூரம். நாம் இருக்குமிடத்திலிருந்து லாமா தேசம் வரை அளந்து பார்த்ததில் இன்னும் ஒரு மாத பயணம் இருக்கிறது."  


"எனக்கு சிறிது அச்சம் கொள்கிறது "


"பெண்ணே. ஒன்று கூறவா. துவாரா பாலைவனத்தைக் கடக்க மட்டுமே  பதினைந்து நாட்கள் பிடிக்கும். கடும் வெப்பம் கொண்ட பாலைவனம். அதைக் கடந்து விட்டால். நம் முயற்சி வெற்றி அடைவது உறுதி."


"நான் துவாரா பாலைவனத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்."


"நம் நாட்டிற்கு அந்நிய தேசத்தினர் வர வேண்டுமென்றால்  இந்த பாலைவனத்தைக் கடப்பது தான் ஒரே வழி. அதை யாரும் சாதித்ததில்லை. அதனால் நம் நாடு அந்நிய தேசத்தினரின் படையெடுப்பிலிருந்து தப்பியிருக்கிறது.."


"அதை ஈடு செய்வதற்குத் தான் நமக்குள் அடித்துக் கொல்கிறோமே”.


குதிரைகள் மிகவும் களைத்திருந்தன. தாரா குதிரையின் முகத்தைத் தடவிக் கொடுத்தாள்.


"நாம் இன்று இரவு வரை பிரயாணம் செய்ய வேண்டாம். மாலையில் ஏதோ ஒரு விடுதியில் தங்குவோம். குதிரைகள் இளைப்பாற வேண்டும்."


"ஆம். இரண்டு நாட்களுக்குப் பின் இக்குதிரைகளை விற்க வேண்டும். பாலைவன பிரயாணத்திற்கு குதிரைகள் உதவாது. நமக்கு ஒட்டகங்கள் தேவைப்படும்.”


ஒரு சிறு நகரத்தை அடைந்தனர். கடைவீதிகளில் நடந்து சென்றனர். ஒவ்வொரு கடையிலும் வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாக இருந்தது.


"கிள்ளிவளவன் ஆட்சியில் மக்கள் மகிழ்வாக இருப்பதாகவே தெரிகிறது."


"மக்களிடம் செல்வம் திருப்திகரமாக இருக்கிறது. பொருட்களின் விலையும் பெரிதளவு குறைந்திருக்கிறது."


"என் எதிரியின் ஆட்சி நல்லாட்சியாகவே தெரிகிறது."


"பற்றை உன் எஜமானர்கள் மீது வைக்காதே. நாட்டின் மீது வை. கில்லவளவன் ஆட்சி சிறப்பாக இருக்கும் பட்சத்தில் நாட்டின் நலன் கருதி அவனைத் தலைவானாக ஏற்பதில் என்ன தயக்கம்.”


"நீ சொல்வது யோசிக்க வேண்டிய விஷயம்."


இருவரும் ஒரு சத்திரத்தில் இரவைக் கழித்தனர். 


பிரயாணக் களைப்பில் தாரா உடனே உறங்கி விட்டாள். மணிமாறன் அவள் பின்புறத்தை சிறிது நேரம் பார்த்து பெருமூச்சு விட்டு மறுபக்கம் திரும்பி கண்களை மூடினான்.


மறுநாள் அவர்கள் பிரயாணத்தைத் தொடர்ந்தனர். வாணியம்புரம் என்ற நகரை நெருங்கினர். நகரெங்கும் விழாக்கோலமாக இருந்தது. மக்கள் திரளாகக் கூடியிருந்தனர். அந்நகரில் அன்று பூரிசிவஸ் உற்சவம்.  தேரில் பூரிசிவஸ் சிலையை ஏற்றி உலா வரும் நாள். தேரை ஆண்கள் இழுத்து வந்தனர். பூரிசிவஸ் சிலையின் கண்கள் உக்கிரமாக இருந்தது. சிறுவர்களைத் தந்தைமார்கள் தோளில் தூக்கி தேரைக் காண்பித்தனர். தெருவோரத்தில் உணவு வகைகள் விற்றுக் கொண்டிருப்போருக்கு அன்று நல்ல வருமானம். சிலையின் மீது மக்கள் பூக்களைத் தூவினர். தேரில் நின்றுக் கொண்டிருந்த பூசாரிகள் சிலையிலிருந்து மாலைகளை எடுத்து மக்கள் மீது எறிந்தனர். 


"இங்கு யார் ஆட்சி நடக்கிறது என்று எனக்கு ஐயமாக இருக்கிறது."


"மணிமாறா, என்ன செய்வது. சில சமயம் மக்களின் மூடத்தனத்தை  ஆட்சியாளர்கள் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது."


"தாரா, மக்கள் மனதிலிருந்து இறைவனை அவ்வளவு எளிதாக அகற்றி விட முடியாது."


தாரா சிறிது நேரம் சிந்தனையில் இருந்தாள். பிறகு தொடர்ந்தாள்.


"மனித மனம் திருப்தி அடையாதது. அதனால் எப்போதும் எதிர்காலத்தை நினைத்து அச்சம் கொள்கிறது. ஆசை, பயம் இது இரண்டையும் மனித மனம் அவ்வளவு எளிதாக துறக்க இயலாது. அதனால் இறை நம்பிக்கை அழியாமல் இருக்கிறது. இறை நம்பிக்கை மூலமாக ஆசை, பயம் இவற்றை அகற்ற முடியும் என்று மதம் கூறுகிறது. ஆனால் மத நம்பிக்கையின் ஆதாரமே இந்த இரண்டு உணர்வுகள் தான் என்பது விந்தையான முரண்பாடு. மனிதன் ஆசை, பயம் இல்லாதவனாக இருந்தால் அவனுக்கு இறைவன் தேவையில்லை. பூரிசிவஸ் இருக்க மாட்டான்.”


"தாரா,  நீ வெறும் நுனிப்புல் மேய்கிறாய். மனிதன் தோன்றிய ஆதி காலத்தில் இருந்து அனைத்தும் மாறியிருக்கிறது. ஆனால் மாறாமல் இருப்பது இறை நம்பிக்கை ஒன்று தான்.  ஏன்? நம் உடல் இறைவனின் குருதியிலிருந்து உருவானது. அதனால் இறை நம்பிக்கை மனிதன் இனம் அழியும் வரை, இந்த அண்டம் மறையும்  வரை நிலைத்திருக்கும்."


"எனது தர்க்க மனதிற்கு  நீ கூறுவது வெறும் உளறலாகத் தெரிகிறது."


"தர்க்கத்தின் எல்லையை மீறு. உன்னுள் சன்னமாக ஒலிக்கும் ஆன்மாவின்  குரலைக் கேள். நீ இறைவனை உணர்வாய்."


"ஆலயத்திற்கு செல்லும் போது உன் உணர்வுகள் எவ்வாறு இருக்கும்."


"எனக்குள் ஒரு மாபெரும் சக்தி பெருகுவது  தெரியும். மாபெரும் ஆற்றல் எனது உடலின் ஒவ்வொரு அணுவிலும் இயங்குவது புரியும். ஒரு மாபெரும் சக்தியின் சிறு துளி நான் என்பது தெள்ளத்தெளிவாகும்."


"நான் ஆலயம் சென்றிருக்கிறேன். அப்போது என்னுள் சினம், காமம் என்று எதிர்மறை சிந்தனைகள் அலையென பொங்கும். நீ கூறினாய் மனிதர்கள் இறைவனின் குருதியிலிருந்து தோன்றியவர்கள் என்று. என் போன்றவர்கள் சாத்தானின் குருதியிருந்து உதித்தவர்கள். " 


"அப்படியானால் உன்னை நான் கொல்வதற்கு காரணங்கள் வலுவாகிறது."


தாரா மணிமாறனை நோக்கி சிரித்தாள்.


"பூரிசிவஸ் உற்சவத்தின்  போது, நரபலியை நிறைவேற்றும் தருணத்தில் உன் மனநிலை எவ்வாறு இருக்கும்."


"சமைப்பதற்காக கோழியின் கழுத்தை அறுக்கும் போது என்ன மனநிலையோ அதே மனநிலை."


"அவ்வளவு தானா. நீ ஒரு மிருகம் என்று கிள்ளிவளவன்  சொன்னது முற்றிலும் உண்மை.”


"போதும் நம் விவாதத்தை இத்தோடு முடித்துக் கொள்வோம்."


மணிமாறன் அருகிலிருந்தவனிடம் ஏதோ விசாரித்தான்.


"இன்னும் சிறிது நேரத்தில் இந்தக் கூட்டம் ஆற்றை நோக்கி சென்று விடும். நம் பிரயாணம் தடைபடாது."


"நல்ல வேலை. இன்று இந்த நகரத்திலேயே நாம் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்தேன்."


"பூரிசிவஸின் அருள் உனக்கும், கிள்ளிவளவனுக்கும் இருக்கிறது."


சிறிது நேரத்தில் தெருக்களில் கூட்டம் குறைய, இருவரும் குதிரைகளைத் தட்டி வேகமாக சென்றனர்.


 “தாரா நம் பயணத்தின் நோக்கமென்ன?"


"அக்னிதேவர் தெளிவாக சொன்னார் அல்லவா. லாமா தேசத்தில் புதைந்துள்ள அறிவியல் ரகசியங்களைக்  கண்டுபிடித்து நம் நாட்டை வளமாக்குவது."


"அது எனக்கும் தெரியும். இப்பயணத்தின்  இலக்கு என்ன?”


"நம் நாட்டை வளமாக்குவதன் மூலம் ஸ்திரத்தன்மையுடைய சமூகத்தை உருவாக்குவது.”


"இதை நீ நம்புகிறாயா?"


“கண்டிப்பாக. மக்களின் பொருளாதார நிலை முன்னேறினால் நிலையான அரசு அமையும்."


"கிள்ளிவளவனுக்கு பின் யார் அரசன். அவன் மகனா?"


"இல்லை. அடுத்த அரசனை பொன்னகரம் கடிகை தீர்மானிக்கும். தேர்ந்தெடுக்கப்படுபவனும்  கடிகையில் பயின்றவனாய் இருப்பான்."


"ஏன் அப்படி."


"கற்றறிந்த சான்றோரே நாட்டை ஆளத் தகுந்தவர். ஆட்சியில் ராஜ வம்ச தொடர்ச்சி  நமக்கு பலவீனமான அரசர்களையே தந்திருக்கிறது."


"ம். அப்படியென்றால் பொன்னகர கடிகை நம் நாட்டின் மிகப் பெரிய அதிகார மையமாக ஆகிறது. இதன் பின்விளைவுகளை நீ யோசித்தாயா."


"என்ன சொல்ல வருகிறாய்?"


"இனி வருங்காலத்தில் பொன்னகரம் கடிகை தன் அதிகாரத்தை விடாமல் இருக்க, தங்கள் பேச்சைக் கேட்கும், பலவீனமான அரசனை ஆட்சியில் அமர்த்த மாட்டார்கள்  என்று என்ன நிச்சயம்."


தாரா மெளனமாக இருந்தாள்.


"இல்லை இப்படியும் நடக்கலாம். நாளை ஆள போகிறவன் கடிகையின் அதிகாரத்தை முடக்க முயற்சிப்பான். கடிகையை அழித்து,  தன் வம்சாவளி ஆட்சியில் தொடர வழி செய்வான். இது நடக்காது என்று உன்னால் உத்தரவாதம் தர முடியுமா."


"என்னை குழப்புகிறாய்.”


"கிள்ளிவளவன்   இருக்கும் வரை தான் நல்லாட்சி. அதன் பிறகு பெரும் குழப்பம் வரும். ரத்தம் சிந்தப்படும். அக்னிதேவர் விரும்பும்  ஸ்திரத்தன்மை வெறும் கனவு தான்."


"நீ சொல்லும் தீர்வு என்ன?"


"அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். முழு அதிகாரம் அரசனுக்கோ, கடிகைக்கோ   யாரிடத்திலும் இருக்கக் கூடாது. நாட்டிற்குத் தெளிவான அரசியல் அமைப்புகள் தேவை. இது அமைந்தால் ஸ்திரத்தன்மை நிலைத்து விடும். உன் சான்றோர்கள் இதைப் பற்றி யோசிக்காதது வியப்பே.”


இரவில் தாரா, மணிமாறன் இருவரும் உறங்காமல் படுத்திருந்தனர்.


"தாரா, நம் நாட்டில் பெண்களுக்கு உரிமை அதிகம். குறிப்பாக உடலுறவு விஷயங்களில். திருமணத்திற்கு முன்னும் பின்னும் பல ஆடவர்களுடன் உறவு கொள்வது வெகு இயல்பாக நம் நாட்டில் நடக்கிறது."


"நீ என்ன எதிர்பார்க்கிறாய் என்று புரிகிறது."


தாரா தன் காலை மணிமாறன் மீது போட்டாள். மணிமாறனிடம் சலனம் எதுவும் இல்லை.


"நான் என் அப்பனுக்கு பிறந்தேனா, அல்லது சித்தப்பனுக்கா என்ற தன் சந்தேகத்தை என் தாய் அடிக்கடி கூறுவாள். அதுவும் என் தந்தை முன்னிலையில். அவரும் சிரித்து விட்டு சென்று விடுவார். நீ  இது வரை எத்தனை ஆண்களுடன் உறவு கொண்டிருக்கிறாய்."


"என் பதினாறு வயது தொடங்கி பத்து வருடங்களாக பல ஆண்களுடன் உறவு கொண்டிருக்கிறேன். நூறு பேராவது தேறும்."


"நம் சமூகத்தின் இந்த கட்டற்ற  தன்மை அரசியலிலும் பிரதிபலிக்கிறதா. நிலையில்லாமைக்கு இதுவும் காரணமா?"


"இன்று காலை முதல் நீ அதிகம் யோசிக்கிறாய்.உன் பிரச்சினை என்னவென்று தெரிகிறது."


தாரா தன் ஆடைகளைக் களைந்து மணிமாறனை இறுக்கமாக அணைத்தாள். மணிமாறன் அவளுள் வேகமாக இயங்கினான். பிறகு இருவரும் வானத்தைப் பார்த்த வண்ணம் படுத்திருந்தனர்.


"அந்த நூற்று சொச்சம் பேரில் உன்னை அதிகம் திருப்திபடுத்தியவன் யார்."


"என் முதலாதவன். அவனை அநியாயாமாகக் கொன்று விட்டனர். அதன் பின் என் உள்ளே வந்தவர்கள் எல்லோரும் சோடைகள்."


"என்னையும் சேர்த்தா?"


தாரா நகைத்து விட்டு மறு பக்கம் திரும்பிப் படுத்தாள். சிறிது நேரத்தில் உறங்கினாள். மணிமாறனுக்கு அன்று உறக்கம் வரவில்லை.


அடுத்த நாள் பிரயாணத்தில் இருவரும் பேசாமல் மௌனமாக இருந்தனர். வழியில் தாரா குதிரையை நிறுத்தினாள். தன் ஒரு விரலைக் காண்பித்து காட்டுக்குள் சென்றாள்.


சிறிது நேரத்தில் அவ்விடத்தில் பல குதிரைகள் வரும் சத்தம் கேட்டது. தாராவின் குதிரை பயந்து காட்டுக்குள் மறைந்து விட்டது.


நாற்பது வீரர்கள் மணிமாறனை சூழ்ந்தனர். இவர்களிடம் போரிடுவது வீண் என்று மணிமாறன் அமைதியாக இருந்துதான்.  வீரர்கள் அவனைக் கட்டி தங்களுடன் அழைத்து சென்றனர்.


தொலைவில் பூரிசிவஸின் மாபெரும் ஆலயம் தெரிந்தது. அங்கு ஒரு வீரன் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவன் மணிமாறனுக்கு தெரிந்தவன். திரிவிக்ரமன் படையில் மணிமாறன் கீழ் இருந்த உப தளபதி சின்னையன் .


"மணிமாறா, என்னை நீ இங்கு எதிர்பார்க்கவில்லை அல்லவா ?"


"நீ இறந்திருப்பாய் என்று நினைத்தேன்."


"என் தலைமையில் சில நூறு வீரர்கள் இருக்கின்றனர். தற்போது நடக்கும் புரட்சியாளர்களின் ஆட்சியை அகற்ற நாடெங்கும் வன்முறை தூண்டுவது எங்கள் திட்டம்."


"உன் முயற்சி வீண்."


“உன்னைப் போன்ற மாவீரன் புரட்சியாளர்களின் அணியில் சேர்ந்தது துரதிர்ஷ்டம். திரிவிக்ரமன் உன்னைத் தன் மகன் போல கருதினார். நீ அவர் ஆன்மாவுக்கு பெரும் துரோகத்தை இழைக்கிறாய். மீண்டும் எங்கள் பக்கம் வா. எங்களை வழிநடத்து. உன் தலைமையில் நாம் ஆட்சியைப் பிடிப்போம். நீயே அரசனாக முடிசூடு."

 

"அது என்னால் இயலாது. கிள்ளிவளவனின் ஆட்சி திரிவிக்ரமன் ஆட்சியைக் காட்டிலும் சிறப்பாக இயங்குகிறது. மக்களும் மகிழ்வுடன் இருக்கிறார்கள். நாட்டின் நலன் கருதி கிள்ளிவளவன் ஆட்சி தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."


"நீ துரோகி. உன்னை நாங்கள் அருகில் இருக்கும் பூரிசிவஸ் ஆலயத்தில்  நரபலி கொடுக்கப் போகிறோம். என்ன ஒரு விந்தை. காலம் எப்படி மாறிவிட்டது பார்."


இரவானது.மணிமாறனை கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். பூரிசிவஸின் பிரம்மாண்டமான சிலை முன் அவன் இரு கைகளும் கட்டப்பட்டது. அவன் உடலெங்கும் குங்குமம் பூசப்பட்டது. பூசாரி ஒருவன் மந்திரம் சொன்னான்.


வீரன் ஒருவன் மணிமாறன் உடலெங்கும் கத்தியால் கீறினான். மணிமாறன் உடல் நடுக்கம் கொண்டது. அவன் தலையை வெட்ட வீரன் கத்தியை ஓங்கினான். மணிமாறன் கண்களை இறுக்க மூடினான்.


அடுத்த நொடி அங்கு பலத்த சலசலப்பு கேட்டது. மணிமாறனை வெட்ட வந்த வீரன் மார்பில் அம்பு பட்டு கீழே கிடந்தான்.  சில வீரர்களின் உயிரற்ற சடலங்களை மணிமாறன் பார்த்தான். தாரா வில்லை ஏந்தி நின்றுக் கொண்டிருந்தாள். மணிமாறனைக் கட்டியிருந்த கயிற்றை அறுத்தாள். மணிமாறன் அருகிலிருந்த வாளை எடுத்து எஞ்சியிருந்த வீரர்களை வெட்டிச் சாய்த்தான்.


தாராவும் மணிமாறனும் குதிரையில் ஏறி அவ்விடத்தை விட்டு சென்றனர்.


"மணிமாறா. நீ ஒன்றும் பேசவில்லை. அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.”


"என் வாழ்வில் முதன் முறை உயிர் பயம் வந்தது. பலரை பூரிசிவஸ் உற்சவத்தில் நரபலி கொடுத்திருக்கிறேன். இன்று அந்நிலையில் நான் இருக்கும் போது அச்சம் என்னை ஆட்கொண்டது. இறைவா எனக்கு இந்த உயிர் வேண்டும், காப்பாற்று என்று மனம் அலறியது. மரணம் நேரிடும் என்ற நிலையில் நான் சலனம் கொண்டேன். இறைவனுக்கு  உயிரைக் கொடுக்க மன வலிமை அற்றவனாக இருந்தேன். நான் கோழை. என் இறை பக்தி முழுமையடையவில்லை."


“பூரிசிவஸ் என்று ஒரு இறைவன் உண்மையில் இருந்தால், உன் உயிரின் அருமை அவனுக்குத் தெரிந்திருக்கிறது. இந்நாட்டுக்கு  நீ  செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. வீணே உன் உயிரை இழக்க வேண்டாம் என்பது அந்த இறைவனின் சித்தம்."


மணிமாறன் மெளனமாக இருந்தான்.


"மணிமாறா. நீ கோழை அல்ல. எத்தனைப் போர்களை சந்தித்திருக்கிறாய். மனதைக் குழப்பாதே. ஆக வேண்டிய காரியங்களைப் பார்ப்போம்."


இருவரும் குதிரைகளின் வேகத்தைக் கூட்டி புயலென பறந்தனர்.


மணிமாறன் உடல் தளர்வாக இருந்தது. மனதின் வலி உடலையும் பாதித்தது. சிறிது தூரம் சென்ற பின் மணிமாறன் புரவியிலிருந்து விழுந்து கீழே கிடந்தான். தாரா அவன் அருகே சென்று நெற்றியைத் தொட்டாள். உடல் முழுதும் கொதித்தது.


தாரா அருகிலிருந்த கிராமத்தில் ஒரு வைத்தியரிடம் அவனை எடுத்துச் சென்றாள். அவனுக்கு கடும் சுரம் இருப்பதைத் தெரிவித்தார். அன்றைய இரவைத் தாண்டிவிட்டால் உயிர் பிழைத்து விடுவான் என்றார்.


மணிமாறன் எதை எதையோ பிதற்றிக் கொண்டிருந்தான். தாரா அவன் அருகிலிருந்து கவனித்துக் கொண்டாள். மாலை ஆனதும் காய்ச்சல் அதிகமானது. மருத்துவர் சில பச்சிலைகளைக் கொன்டு மருந்து தயாரித்துக் கொடுத்தார்.  .


தாரா அருகிலிலிருந்த ஆலயத்திற்குச் சென்றாள். அங்கிருந்த பூரிசிவஸ் சிலையைத் தீர்க்கமாக பார்த்தாள். பிறகு சட்டென கீழே விழுந்து வணங்கினாள். சிலையிலிருந்து ஒரு எலுமிச்சைப் பழம் கீழே விழுந்தது.


அதை தாரா எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தாள். மணிமாறனின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என வைத்தியர் கூறினார்.


தாரா கோவிலிலிருந்து எடுத்து வந்த பழத்தை அவன் தலைமாட்டில் வைத்தாள். இரவு முழுதும் மணிமாறன் அருகில் உறங்காமல் அமர்ந்திருந்தாள்.


காலையில் மணிமாறன் கண் விழித்தான்.அவன் சுரம் குறைந்திருப்பதாகவும், விரைவில் முழு குணம் அடைந்து விடுவான் என்றும் மருத்துவர் கூறினார்.


மணிமாறன் எழுந்து உட்கார்ந்து சில வார்த்தைகள் தாராவிடம் பேசினான். உணவு உண்டு பிறகு நீண்ட உறக்கத்திற்கு சென்றான்.


இரண்டு நாட்களில் மணிமாறன் பூரண குணம் அடைந்தான். இருவரும் மீண்டும் பிரயாணத்தைத்  தொடர்ந்தனர்.


"தாரா, நாம் நாளை துவாரா பாலைவனத்தை நெருங்கி விடுவோம். என்னால் இரண்டு நாட்கள் பிரயாணம் தடைபட்டது."


"நீ உயிர் பிழைத்ததே எனக்குப் பெரும் மகிழ்ச்சி."


"என் சுரத்தின் உச்சத்தில் ஒரு உண்மை விளங்கியது. என்னைப் பிழைக்க வைக்க நான் ஒரு முறை கூட பூரிசிவசை வேண்டவில்லை. இறைவனை வணங்குவது வீண். அனைத்தும் விதிப்படி இயங்குகிறது. அது இறைவனாலும் மாற்ற இயலாது. "


"நீ இறந்து விடுவாயோ என்று பயந்தேன். முதன் முறையாக இறைவனை வணங்கினேன். நீ பிழைத்தது பூரிசிவஸின் அருளால்.”


மணிமாறன் வியப்புடன் தாராவை நோக்கினான். பிறகு இருவரும் மெளனமாக இருக்க குதிரைகள் கணைத்துக் கொண்டன.


                         ———-***********————

 

  கடல் தன் அன்னத்தைச் சீராட்டித் தாலாட்டியது. சிற்றலைகள் கப்பலைக் கொஞ்சும் வண்ணம் அணைத்துச் சென்றது. மெல்லிய காற்று கப்பலின் மேல்தளத்தைத் தழுவியது. வினோதமான, பலவித வண்ணங்கள் கொண்ட பறவைகள் கப்பலின் பாய்களை உராய்ந்து பறந்தது. மாலை சூரியன் கடலில் நீந்தி பின்னர் ஆழ்த்துக்குள் சென்றது.


அன்னத்தின் மேல் நின்றுகொண்டிருந்த ஸ்டெல்லா கீழே அலைகளையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களிலிருந்து உகுத்த நீர்த்  துளிகள் கடலுடன் சங்கமித்தது.


அவள் உணர்வுகள், நினைவுகள் அவ்விடத்தைக் கடந்து வேறு எங்கோ இருந்தது.  தன் அருகில் வால்டேர் வந்து நின்றதைக் கூட கவனிக்கவில்லை.


"நாம் யுதோபியாவிலிருந்து பயணித்து ஒரு மாதமாகிறது. நீ யாருடனும் பேசவில்லை. சரியாக  உணவு உண்ணவில்லை. இந்த கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். உன் துக்கத்தை யாருடனாவது சொல்லி அழுது விடு."


"என் தந்தை அம்பு எய்யப்பட்டு கடலில்  விழுந்தார். அவரைக் காப்பாற்ற யாரும் முயற்சி செய்யவில்லை. நானும் கூட அவரைத் தொடர்ந்து கப்பலிலிருந்து விழுந்திருக்க வேண்டும்.”


"அது நம் அனைவருக்கும் ஆபத்தாக முடிந்திருக்கும்.”


"என் தந்தையின் மரணத்தையும் தாண்டி அவர் இறந்ததற்கான காரணங்கள் சரியோ என்ற எண்ணம் என்னுள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இது தவறா?"


"ஆம் முற்றிலும் தவறு. அவர் எண்ணங்கள் சரியானவை. அவை நாட்டைப் பெரும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றிருக்கும்."


“அவரின் வழிமுறைகள் தவறல்லவா. ஜனநாயகத்தை  வளைத்துத் தன் திட்டங்களை நிறைவேற்ற நினைத்தார்."


"முடிவு நன்மையே தந்திருக்கும்."


"முடிவு வழிமுறைகளை நியாயப்படுத்தி விடுமா. என்னால் ஏற்க இயலவில்லை.”


"ஜனநாயகம் இந்நாட்டின் சாபக்கேடு என்று உன் தந்தை  நினைத்தார். நாட்டைப் பெரும் தேக்கநிலையில் வைத்திருப்பதாக அவர் எண்ணியதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.


"ஜனநாயகத்தின் குறைகளைக் களைய ஜனநாயகத்தின் வழிமுறைகளையே என் தந்தை தேர்ந்திருக்க வேண்டும்."


"ஹெகல் உன் தந்தையைக் கொன்றான். அதுவும் அநியாயம் அல்லவா."


"ஆம் ஹெகலைப் பழி வாங்குவேன். அவன் மரணம் உறுதி. ஆனால் அது ஜனநாயகத்தின் வழியாக இருக்கும்.”


"இந்தக் கப்பலில் உள்ள அனைவரும் ஹெகலைப் பழி வாங்குவது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கு உதவி தேவை. நாம் செல்லும் வேற்று நிலங்களில் அவ்வுதவி கிடைக்கும் என்று நம்புகிறேன்."


"நாம் எங்கு செல்கிறோம் என்பதில் தெளிவுள்ளதா."


"வடமேற்கு திசையில் சென்றுக் கொண்டிருக்கிறோம். அங்கு பெரும் நிலங்களும், வளர்ச்சியடைந்த சமுதாயங்களும் உள்ளன என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்."


"அவர்களிடம் உதவி  பெற அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்க நம்மிடம் எதுவும் இல்லை."


"இந்தக் கப்பல் இருக்கிறது. மாபெரும் சமுதாயங்கள் கூட  இது போன்ற நவீன கப்பலை உருவாக்கும் திறனற்றவையாக இருக்கின்றான். அவர்களுக்கு இது போன்ற பல கப்பல்களை உருவாக்கித் தர வாக்களிக்கலாம்.”


"நம் நாடு வேறு எந்த நாட்டின் தொடர்புமின்றி தனித்தீவாக இருக்கிறது. அதன் காரணம் மற்ற நாடுகளிடம் கப்பல்கள் இல்லை என்பதும் ஒரு காரணம்."


"ஆம். ஸ்பினோசா நம் நாட்டின் அறிவியல் திறன் பற்றி குறை சொல்லிக் கொண்டிருக்கிறான். மற்ற நாடுகள் அதையும் விட தாழ்வு என்பது ஒரு சிறிய ஆறுதல்."


"மற்ற நாடுகளிடம் கப்பல்கள் இருந்தால் அது நம் தேசத்தின் பாதுகாப்பிற்கு தீங்கல்லவா?"


"இருக்கலாம். ஆனால் கிடைக்கும் நன்மைகள் மிகவும் பெரிது. அதற்கு இந்த சிறிய விலையைக் கொடுப்பதில் தவறில்லை."   


"மிகப் பெரும் நன்மை வர்த்தகமாக இருக்கும்."


"ஆம். பண்டை மாற்றம் மட்டுமன்றி,  அறிவு மற்றும் சிந்தனைகளின் பரிமாற்றமும் நடக்கும்."


"ஆயுதம் ஏந்தாமல், ரத்தம் சிந்தாமல், பெரும் புரட்சிக்கு அது வழிவகுக்கும்.”


" இது மென்புரட்சி. உறுத்தாத வண்ணம் மாற்றம் நிகழ்ந்திருக்கும்.”


இரவானது. காற்றின் குளிர் உறைத்தது. வால்டேர் இரும ஆராம்பித்தார். ஸ்டெல்லா அவர் தோள்களைப் பிடித்து அறைக்கு அழைத்துச் சென்றாள்.

 

வானில் நிலவு நட்சத்திரங்களின் படை சூழ ஊர்வலம் சென்றது. காற்று கப்பலின் பாய்களுடன் மோதும் சத்தம் பேரிடி என ஒலித்தது. கப்பலின் மேல்தளத்தில் ஆள் நடமாட்டம் குறைந்திருந்தது. அனைவரும் இரவுணவு அருந்துவதற்காக கீழே இருந்தனர்.


மேல்தளத்தில் ஒரு மூலையில் ஸ்பினோசாவும், நீட்ஷேயும் படுத்து விண்ணில் நிறைந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தனர். ஆகாசம் அன்று தூய நிலையில் இருந்ததால் நட்சித்தரங்கள் கணக்கிலடங்காமல் இருந்தது.


"ஸ்பினோசா, தினமும் இரவானதும் கப்பலின் மேல்தளத்திலிருந்து ஆகாசத்தைப் பார்க்கிறாய். பல நிமிடங்கள் நீ உன்னையே தொலைத்து விடுகிறாய். உன் மனதில் ஓடும் எண்ணங்கள் என்ன."


"நிலவில், அல்லது ஏதோ ஒரு தொலைதூர நட்சத்திரத்தில் உயிரினங்கள் இருக்குமா?  அவை நம்மைப் போன்று அல்லது நம்மை விட அறிவாற்றல் உடையதாக இருக்குமா? இக்கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை.  அவற்றைப் பற்றி சிந்திப்பதில் ஒரு இன்பம் உள்ளது."


"நாம் இப்போது தான் கடலைக் கடப்பதற்கு கப்பல் உருவாக்கியிருக்கிறோம். நிலவு, நட்சத்திரம் இவற்றை நாளைய மனிதன் அடைய முடியுமா? இது இன்னும் ஆர்வமூட்டும் கேள்வி இல்லையா?"


"அது நடந்தே ஆகும். மனித இனத்தின் அசுர வளர்ச்சிக்கு பூமி மட்டுமே காணாது. அதனால் விண்வெளிக்கு சென்று மேலும் பல கிரகங்களில் மனிதன் கால்தடம் பாதிக்கும் காலம் ஒன்று வந்தே தீரும்."


"நம்மை, நம் உலகைப் படைத்தவனும் ஒரு வேற்றுக்கிரகவாசியாக இருந்திருக்கலாம். அவனைத் தான் கடவுள் என்று வணங்குகிறோமா?"


"இருக்கலாம். அப்படியானால் அவன் மிகப் பெரிய கணித, அறிவியல் மேதையாக இருக்க வேண்டும்."


“ஆம். இறைவன் பொழுதுபோக்கிற்காக இப்பூமியைப் படைத்து விட்டு, ஆர்வம் இழந்ததால் தூக்கி எறிந்த விளையாட்டுப் பொம்மையாக நம் பிரபஞ்சம் இருக்கலாம்."


"அல்லது ஏதோ ஒரு மாபெரும் ஆராய்ச்சிக்காக நம் உலகம் படைக்கப்பட்டிருக்கலாம். ஆராய்ச்சி முடிந்ததும் நம்மைக் கண்டுக் கொள்ளாமல் விட்டிருப்பார்கள்."


"இவை  வெறும்  அறிவியல் கேள்விகளா? அல்லது தத்துவக் கேள்விகளா?"


"அறிவியலுக்குப் பயனளிக்கும் தத்துவக் கேள்விகள்.  பதில் அறிவியலால் மட்டுமே தர இயலும்.”


"ஒரு வேலை மானுட இனம் இக்கேள்விகளுக்குப் பதில் என்றுமே அறிய இயலாததாக இருக்கலாம்.”


"சில நாட்களாக ரூசோவைக் காணவில்லை."


"ஆம். அவன் ஸ்டெல்லாவிடம் அதிக நேரம் செலவிடுகிறான். அவளுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவள் தான்."


"மார்க்சின் மரணம் அனைவருக்கும் ஈடு செய்ய இயலாதது. நம்மை வழிநடத்த தலைவன் யாருமில்லை. மாலுமியை இழந்த  கப்பலாக தவிக்கிறோம்."


"வெகு விரைவில், மனம் தேறியவுடன் ஸ்டெல்லா தலைமை பொறுப்பை ஏற்பாள் என்று தோன்றுகிறது."

 

"அவள் மார்க்ஸை விட நல்ல தலைவியாக இருப்பாள். அவரிடம் இருந்த மதியூகமும், அவரிடம் இல்லாத நிதானமும் ஸ்டெல்லாவிடம் இருக்கிறது.”


"நான் இது பற்றி வால்டேரிடம் பேசினேன். ஸ்டெல்லாவைத் தேற்றி வெகு விரைவில் தலைமை பொறுப்பை ஏற்க முயற்சி செய்வதாக கூறினார்.”


“இந்த இரவு வேளையில்  நல்ல மது அருந்தினால் சுவையாக இருக்கும். என்னுடன் வா.”


ஸ்டெல்லா தன் அறையில் தனியாக அமர்ந்திருந்தாள். ரூசோ அறைக்குள் வந்து அவள் அருகில் அமர்ந்தான். ஸ்டெல்லாவின் மனதில் நிகழ்ந்த சிலிர்ப்பை ரூசோ உணர்ந்தான். மெதுவாக அவள் கைகளைப் பற்றினான். ஸ்டெல்லா அவன் தோள்களில் சாய்ந்தாள்.


"ரூசோ, நீ இதற்கு முன் யாரையாவது காதலித்திருக்கிறாயா?”


"ஆம். ஒரு பெண் இருந்தாள். இந்தப் பயணத்திற்கு அழைத்தேன். அவள் உடன்படவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தோம்."


“இப்போது யார் மீது காதல்?"


ரூசோ மெல்ல அவள் உதடுகளில் தன் உதட்டைப்  பதித்த்தான். அணைத்த நிலையில் இருவரும் வெகு நேரம் படுத்திருந்தனர்.


"ஸ்டெல்லா, உனக்கு நான் என்றும் துணையாக இருப்பேன். என்னை ஏற்பாயா?”


ஸ்டெல்லா தன் மேலாடையைக் களைந்து ரூசோவின் முகத்தைத் தன் மார்போடு அணைத்தாள்.


"உன் முதல் காதலன் யார்?"


ஸ்டெல்லா அவன் காதில் அப்பெயரைச் சொன்னாள். ரூசோ அப்பெயரைக்  கேட்டு அவளை ஒரு இசை வாத்தியம் போல மீட்டினான். உச்ச நிலையை அடைந்து பின்னர் ஒருவர் மற்றவரின் அணைப்பில் இருந்தனர். 


"என் தந்தை தன் வாழ்நாளில் காதலித்த ஒரே பெண் அம்மா தான். வேறு எந்த பெண்ணிடமும் அவர் உறவு கொண்டதில்லை."


"அதற்கு நேர் எதிர் என் தந்தை. சிறு வயதில் தற்குறியாக இருந்தார்.  திருமணத்திற்குப் பின் என் அன்னைக்கு உண்மையானவராக ஆனார். என் தாய் இறந்த பின்னும் எந்த பெண்ணிடமும் தொடர்பு இல்லை. தன் சக்தியை முழுமையாக நாட்டின் சேவைக்காக அர்ப்பணித்தார்." 


ஸ்டெல்லா தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.


"அவரது மரணத்தை நீ இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை. அது இயல்பு தான்.  உன் ஆற்றலை வேறு பொறுப்புகளில் செலுத்தினால் மட்டுமே உன் துயரிலிருந்து மீள முடியும்."


ஸ்டெல்லா மெளனமாக இருந்தாள்


"நம் குழுவின் தலைமைப் பொறுப்பை நீ ஏற்க வேண்டும் என்பது எங்கள் அனைவரின் விருப்பம்."


"உன் தந்தை தலைவர் ஆகலாம். அவர் தகுதியானவர்."


"அவருக்கு ஆர்வம் இல்லை. இந்தக் குழுவின் தலைவர், நாளை ஹெகலுக்கு எதிராக நடத்தும் போராட்டத்திற்கும் தலைமை தாங்க வேண்டியிருக்கும். "


"நான் தலைவியாக சம்மதிக்கிறேன். எனக்கு ஒரு வாக்குறுதி வேண்டும்.  நாம் மீண்டும் யுதோபியா செல்வோம்.  போர் தொடுக்க அல்ல. ஜனநாயகத்தின் முறைப்படி ஹெகலுக்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்துவோம்.”


"ஹெகலைக் கூறு போட வேண்டும் என்று அனைவரும் துடிக்கின்றனர்."


"ஹெகல் இறப்பது உறுதி. ஆனால் சட்டப்படி நடக்கும்."


"அது இயலாத காரியம். அவனிடம் முழு அரசாங்கத்தின் பலம் உள்ளது."


"அதை எப்படி சாத்தியமாக்குவது என்பதைப் பிறகு சிந்திப்போம். நம் குழு அநீதியாக எதையும் செய்யலாகாது." 


"இப்போதே தலைவியின் ஆணை பலமாக உள்ளது."


"நான் இன்னமும் முடிவெடுக்கவில்லை. எனக்கு நாளை வரை அவகாசம் கொடு."


"நீ கண்டிப்பாக சம்மதிப்பாய். மிகச் சிறந்த தலைவி ஆவாய். அது உன் ரத்தத்தில் ஊறி இருக்கிறது.”


ஸ்டெல்லாவின் முகத்தில் புன்னகை மின்னலென தோன்றியது.


“ஒரு மாதம் கழித்து முதன் முறை சிரித்தாய்."


ஸ்டெல்லாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து ரூசோ அறையை விட்டுச் சென்றான்.


ரூசோ தன் அறைக்கு வந்த போது வால்டேர் அவனுக்காக காத்திருந்தார்.


"எனக்கு உன் தாயின் நினைவாக உள்ளது. அவளை நான் இனி சந்திப்பேனா என்று ஐயுறுகிறேன். ஆண்களின் உலகியல் கனவுகளின் முதல் பலி எப்போதும் மனைவி தான்."


"நாம் கண்டிப்பாக மீண்டும் யுதோபியா செல்வோம். கவலை வேண்டாம்."


"இல்லை. நான் யுதோபியா திரும்பினால் மரணம் நிச்சயம். உன் தாயின் உயிருக்கும் உத்தரவாதம் கிடையாது. இது ஹெகலிடம் நான் கொண்ட உடன்பாடு."


"அப்படியானால் உங்கள் எதிர்காலத் திட்டம்?"


"பல நாடுகளுக்கு செல்வது. நன்றாக மது  அருந்துவது. எங்கோ ஒரு கண் காணாத தேசத்தில் அனாதையாக இறப்பது. "


"நான் ஸ்டெல்லாவை சந்தித்தேன். அவள் ஒப்புக்கொள்வாள் என்று நினைக்கிறேன்."


"அவளை சம்மதிக்க வைக்க உன்னால் மட்டுமே இயலும். ஒன்று சொல்கிறேன். அவளை மணந்து கொள். அவளை மணந்து கொண்டு அவள் எதிர்காலத்தை உன் எதிர்காலமாக மாற்றிக் கொள்.”


அப்போது அறைக்கு நீட்ஷேயும், ஸ்பினோசாவும் வந்தனர்.


"இப்போது இருக்கும் தட்ப வெப்ப நிலையை கருத்தில் கொண்டு பெரும் சூறாவளி வரும் என்று மாலுமி சொல்கிறான்."


ரூசோ அதிர்ந்தான். ஆனால் வால்டேர் நிதானமாக பதிலளித்தார்.


"துர் செய்தியைச் சொன்னவன், நல்ல செய்தியையும் சேர்த்து கூறு."


"நல்ல செய்தி, அந்த சூறாவளியை நமது கப்பல் தாங்கும்." 


"இந்த செய்தியைக் கப்பலின் தலைவியான என்னிடம் அல்லவா நீ முதலில் கூறியிருக்க  வேண்டும்."


கதவருகே  புன்னகையுடன் ஸ்டெல்லா நின்றுக் கொண்டிருந்தாள்.


"நீட்ஷே, சூறாவளியை விட வேறு ஒரு விஷயம் என்னை தொந்தரவு செய்கிறது. ஒரு  மாதமாக  கடலில் பயணம் செய்கிறோம். நாம் எப்போது நிலத்தைச் சேர்வோம்."


"அது கணிக்க இயலாது. இந்தப் பயணத்தை மேற்கொண்ட அனைவருக்கும் இது தெரியும். நிச்சயமற்ற ஒரு எதிர்காலத்தை நோக்கி நாம் செல்கிறோம் என்பதை."


"கணிக்க இயலாதது எதுவும் இல்லை. இன்று காலை மேல்தளத்தில் சில வினோதமான பறவைகளைக் கண்டேன்.  மூன்று நாள் பயணத்தில் நாம் நிலத்தைக் கண்டடைவோம் என்று யூகிக்கலாம்."


ஸ்பினோசா ஸ்டெல்லா சொல்வதை ஆமோதித்தான்.


"நானும் சில சுறா மீன்களைக் கண்டேன். அப்படியானால் நாம் நிலப்பரப்பை நெருங்கி கொண்டிருக்கிறோம் என்பது தெளிவு.”


"நாம் நிலத்தை அடைந்தவுடன் அந்நாட்டு மக்கள் நம்மை இரு கரம் கொண்டு வரவேற்பார்கள் என்று நினைத்து விட முடியாது. இது குறித்து திட்டங்கள் நாம் அடுத்த சில நாட்களில் வகுக்க வேண்டும்.”


ஸ்டெல்லா பணியாட்களை அழைத்து இரவுணவு பரிமாற சொன்னாள். உணவுண்டு பின் மேல்தளத்திற்குச் சென்று வேடிக்கையாக உரையாடிக் கொண்டிருந்தனர்.


 சிறிது நேரத்தில்  இசை வாத்தியங்கள் முழங்கின. நடன மங்கைகள் துள்ளிக் குதித்து ஆடினர். அவர்களுடன் ஸ்டெல்லாவும் ரூசோவும் இனைந்து கைகள் கோர்த்து ஆடினர்.


வால்டேர் கையில் மதுக் கிண்ணத்துடன் தனியாக அமர்ந்திருந்தார். மனைவி மேரியின் நினைவுகள் அலை மோதின. அவர்கள் முதலில் சந்தித்த தருணங்கள், திருமண நாளன்று நடந்த நிகழ்வுகள், ரூசோ பிறந்த போது மனம் நெகிழ்ந்த நினைவுகள் என்று காட்சிகள் அவர் கண் முன் விரிந்தது.


வால்டேரின் மனம் லேசாகியது. காற்று இதமாக வீசத் தொடங்கியது


திடீரென காற்று பலமாகியது. மேஜை மீது வைக்கப்பட்டிருந்த மதுக் கிண்ணம் கீழே விழுந்து உருண்டோடியது.  கருமை நிற மேகங்கள் வானைச் சூழ்ந்தது. சோவென பலத்த மழை பெய்தது. வானில் மின்னல் கீறலென வெட்டியது. இடியோசை காதைப் பிளந்தது.


"சூறாவளி ஆரம்பித்து விட்டது. பாய்களை இறக்குங்கள்" என மாலுமி கத்தினான். கப்பல் பணியாளர்கள் அங்குமிங்கும் ஓடினர். ஸ்பினோசா, நீட்ஷே மாலுமிக்கு ஆலசோணைகள் வழங்கி கொண்டிருந்தனர்.


அலைகள் பேரலைகளாகி கப்பலில் மேல்தளத்தில் தண்ணீர் புகுந்தது. அன்னம் பேயாட்டம் ஆடியது. கப்பல் முழுகாமல்  இருக்க மாலுமி உத்தரவுகள் பிறப்பித்தான். 


வால்டேர் எழுந்து நிற்க முயன்றார். கப்பலின்  ஆட்டம்  அவரைத் தள்ளியது. அவர் கீழே விழாமல் ரூசோ தாங்கினான். கப்பலின் ஒரு ஓரத்தில் இருவரும் தங்களைக் குறுக்கிக் கொண்டு படுத்திருந்தனர். ஸ்டெல்லா உடல் முழுதும் மூடிக் கொண்டு கப்பலின் இன்னொரு மூலையில் அமர்ந்திருந்தாள்.


ஒரு சிறுவன் கீழே விழுந்து கிடந்த பழங்களை எடுக்க முயன்று தள்ளாடி குப்புற விழுந்தான்.


இரண்டு நாட்களுக்குப் பிறகு சூறாவளி  நின்றது. அன்னம் சேதாரமின்றி தப்பியது.



காலைக் கதிரவன் புது மணப்பெண் பொலிவுடன் வானில் மேடையேறியது. கடல் நீர் செந்நிறத்திலிருந்து  மெல்ல பொன்னிறத்திற்கு மாறியது. அலைகள் மிதமாக கப்பலைத் தட்டியது. நீண்ட வானவில்  தோன்றியது.  வானவில்லை ஒட்டி பறவைகள் பறந்தன. மீன்கள் கப்பல் அருகில் துள்ளிக் குதித்து விளையாடின.


கப்பலில் இருந்த அனைவரும் மேல்தளத்திற்கு வந்தனர். அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி வழிந்தது.


திடீரென சிறுவன் ஒருவன் கைகைளை நீட்டி கத்தினான்.


அதைப் பார்த்து "நிலம்! நிலம்!" என்று அனைவரும் கூச்சலிட்டனர்.


ஸ்டெல்லா, ரூசோ உவகையுடன் நிலத்தை நோக்கினர். நிலத்தை நோக்கிச் செல்லலாமா என்று ஸ்டெல்லா அனைவரின் கருத்துக்களைக் கேட்டாள். ரூசோ ஒருவன் மட்டும் மாற்று கருத்து தெரிவித்தான்.


"அங்கு இருக்கும் மக்களினால் நமக்கு என்ன தொல்லைகள் வருமோ. அதனால் நாம் பயணத்தைத் தொடர வேண்டும்."

ஸ்பினோசா ரூசோவின் கருத்துக்களை மறுத்தான்.


"சூறாவளியினால் நம் உணவுப் பொருட்கள் அனைத்தும் நாசமாகியுள்ளது.  அனைவரும் மிகுந்த களைப்புற்றிருக்கின்றனர். நிலத்தில் சில நாட்கள் ஓய்வெடுப்பதே சிறந்தது."


ஸ்டெல்லா கப்பலை கரை நோக்கி செலுத்த ஆணையிட்டாள்.


கரையை அடைந்ததும் அனைவரும் சிறிது தூரம் நடந்து தோப்புக்குள் சென்றனர். அங்கு பனை, தென்னை  மற்றும் வாழை மரங்கள் நிறைந்திருந்தன. அனைவரும் காய், பழங்களை வயிறார உண்டனர்.  


மீண்டும் கடற்கரைக்கு வந்தனர். கரையில் பல் வகை நண்டுகள் ஊர்ந்துக் கொண்டிருந்தன. அவற்றைக் கொன்று தீயிலிட்டு உணவாக்கினர். வால்டேர் ஸ்டெல்லாவிடம் வந்து பழங்கள் தந்தார்.


"இங்கு மனிதக் கூட்டம் எதுவும் தென்படவில்லை."


"சற்று தூரத்தில் புகை வருவதைக் கண்டேன். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்."


திடீரென  வினோதமான சில மனிதர்கள் அவர்களைச் சூழ்ந்தனர்.


அவர்கள் அந்நிலத்தின் பழங்குடி மக்கள். நெடிது வளர்ந்திருந்தனர். அவர்களின்  கண்பார்வை தீ போல சுட்டது. மேலாடை அணியாமல் உடலின் கீழ்ப்பகுதியை மட்டும்  மறைத்திருந்தனர். கைகளில் ஈட்டியை அச்சுறுத்தும் வண்ணம் நீட்டினர். 


தீவுக்கு வந்த புது மனிதர்களின் கைகளைக் கட்டி தங்களுடன் அழைத்துச் சென்றனர். அடர்ந்த காட்டுக்குள் சிறிது தூரம் சென்றவுடன் குடிசைகள் தெரிந்தன. 


ஸ்டெல்லாவின் குழுவினரைக் கண்டவுடன் குடிசைகளில் இருந்த மக்கள் ஆர்வத்துடன் கூடினர்.  அனைவரும் தலைவன் இருக்கும் குடிசைக்கு அருகே ஒன்று சேர்ந்தனர். 


தலைவன் சிம்மாசனத்தின் மீது அமர்ந்தான். ஸ்டெல்லாவின் குழுவினரை வியப்புடன் பார்த்தான். தன் அருகில் இருந்தவனிடம் இவர்களைக் குறித்து பேசினான்.


பிறகு சைகையில்  அவர்கள் யார் என்று விசாரித்தான்.


ஸ்டெல்லா தன் குழுவின் சார்பாக சைகையில் பதிலளித்தாள்.


"நாங்கள் யுதோபியா நாட்டைச் சேர்ந்தவர்கள். நெடுநாளாக கடற்பிரயாணம் செய்து வருகிறோம். சிறிது நாட்கள் இளைப்பாறி விட்டு இங்கிருந்து சென்று விடுவோம்.  எங்களுக்கு எவ்வித தீய எண்ணமும் இல்லை."


தலைவன் சிறிது நேரம் ஸ்டெல்லாவை உற்று நோக்கினான். பிறகு தன் குழுவினரிடம் ஆலோசனை செய்தான். ஸ்டெல்லா தலைவனிடம் தன்னிடமிருந்த தங்க நாணயங்களைக் காண்பித்தாள். அதைத் தலைவன் வாங்கி கொண்டு பிரமிப்புடன் பார்த்த்தான்.


"இது தலைவருக்கு எங்கள் பரிசு. இது போன்ற பல பொருட்கள் எங்களிடம் இருக்கின்றன. அவற்றில் சிலவ்வற்றை உங்கள் அன்புக்கு ஈடாக தர இயலும்."


ஸ்டெல்லாவும் அவள் குழுவினரும் தனி குடிசைகளில் தங்க வசதி செய்யப்பட்டது. குடிசையைத் தாண்டி எங்கும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. சுவையான உணவு வகைகள் பரிமாறப்பட்டது.


வால்டேர் தலைவன் குடிசைக்குச் சென்று பேசி விட்டு வந்தார்.  பிறகு அவனுடன் நடந்த உரையாடல் குறித்து ஸ்டெல்லாவிடம்  உரைத்தார்.


"தலைவன் பெயர் அகாந்தோ. எனக்கு நல்ல நண்பனாகி விட்டான். இவர்கள் மிகவும் வித்தியாசமான மக்கள். இந்த இனத்தினரின் இறைவன் உருவம் அல்ல. தூய ஆவி. அது இந்நிலத்தின் அனைத்து பொருட்களிலும் நிறைந்திருப்பதாக நம்புகிறார்கள். அதனால் காட்டில் உள்ள மிருகங்கள், மரம், செடிகளுடன் இணக்கமாக வாழ்கிறார்கள். தேவையை மீறி இயற்கையைச் சுரண்டுவது கிடையாது. ஒரு மரத்தை வெட்டினால் கூட அதற்கு ஒரு சடங்கு நடத்தி விட்டு தான் செய்கிறார்கள். இது போன்ற பல தீவுகளில் இவ்வினத்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீவுகளைத் தாண்டி சிறிது தூர கடற்பிரயாணத்திற்குப் பின் ஒரு மாபெரும் கண்டம் உள்ளது. பெரும் காடுகள், மலைகள், பனிப்பிரதேசங்கள், பாலைவனங்கள் கொண்ட கண்டம். இவற்றில்  சில பழங்குடிகள் தவிர மனிதர்கள் அதிகம் இல்லாத நிலம். கண்டடையப்படாத பல நிலப்பிரதேசங்கள்  அக்கண்டத்தில் உள்ளது. அகாந்தோ அவ்விடங்களுக்கு என்னை அழைத்துச்  செல்வதாக கூறியுள்ளான்."


தந்தை சொல்வதை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்த ரூசோ ஒரு கேள்வியை எழுப்பினான்.


"இவர்கள் நம்மைச்  சந்தேகப்படுகிறார்களா."


"இல்லை. ஆனால் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். அந்த சிறு குன்றைத் தாண்டி நம்மைப் போன்ற வெள்ளை நிறத்தவர்கள் வசிக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு தான் இங்கு வந்திருக்கிறார்கள். பெரூஸ்  நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆயுத பலம் கொண்டவர்கள். பழங்குடி மக்களை அச்சுறுத்தி பல கொடுமைகள் இழைக்கிறார்கள். அடிமைகளாக்கி கடின வேலைகள் தருகிறார்கள். சிறு தவறுகளுக்குக்  கொடுந்தண்டனை அளிக்கிறார்கள்.  இவர்கள் வந்த சில நாட்களிலேயே தொற்று நோய் பரவி பல பழங்குடி மக்கள் இறந்தனர். அடிக்கடி இந்த கிராமத்திற்கு வந்து சிலரைக் கைதிகளாக எடுத்துச் சென்று விடுகிறார்கள்."


"இந்த பெரூஸ் நாட்டவர்கள் நம்மைக் கண்டாலும் சும்மா விட மாட்டார்கள்."


"ஆம். நான் பெரூஸ் நாட்டினரிடம் பேசி இவர்கள் பிரச்சினைக்கு ஒரு இணக்கமான  தீர்வுக்கு வர உதவுவதாக கூறியுள்ளேன்.”


அடுத்த நாள் வால்டேர்,  ஸ்டெல்லா பெரூஸ் நாட்டினரின் வசிப்பிடத்தை நோக்கிச்  சென்றனர். குன்றின் மீதேறி பிறகு இறங்கி சிறிது தூரம் சென்றவுடன் ஆள் நடமாட்டமுள்ள ஒரு குடியிருப்பிற்கு வந்தனர்.


அங்கு வெள்ளை நிறத்தவருடன் பழங்குடி மக்களும் இருந்தனர். பழங்குடி இனத்து சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அடிமைகளாக வேலை செய்தனர். வெள்ளையினத்து எஜமானர்கள் கைகளில் சாட்டையைச் சொடுக்கி அடிமைகளை வேலை வாங்கினர்.


புதிதாக வந்த இருவரைக் கண்டவுடன் வியப்புடன் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். அவர்களின் தலைவன் ஸ்டெல்லாவை விசாரித்தான்.


தன் பெயர் அலெக்சாண்டர் என்று அறிமுகம் செய்து கொண்டான். தாங்கள் பெரூஸ் நாட்டு அரசனுக்கு எதிராக கலகம் செய்து, அது தோல்வியுற்றதால் சிறை செய்யப்பட்டதாகவும், பின்னர் சிறையிலிருந்து தப்பி, கடற் பிரயாணம் செய்து, சூறாவளியின் கோர தாண்டவத்திலிருந்து தப்பி இந்த தீவை அடைந்ததை சொன்னான். ஸ்டெல்லா குழுவினரின் கப்பல் சூறாவளியைத்  தாங்கியதை வியப்புடன் கேட்டான். 


பிறகு வால்டேர் தன் கோரிக்கையை முன் வைத்தார்.


"பழங்குடி மக்களுக்கு எதிரான கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும். அடிமைகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்."


"இந்த காட்டுமிராண்டிகள் மீது உமக்கென்ன பரிவு."


"இவர்கள் காட்டுமிராண்டிகள் அல்ல. கடவுளின் குழந்தைகள். நம்மை விட பண்பட்டவர்கள். இயற்கையுடன் ஒத்து வாழ்வதை இவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்."


"சில நாட்களுக்கு முன் எங்கள் ஆள் ஒருவன் அவர்களிடம் கைதியாக மாட்டிக் கொண்டான். உன் கடவுளின் குழந்தைகள் என்ன செய்தார்கள் தெரியுமா. அவனை அங்கம் அங்கமாக வெட்டி உண்டனர். ஆம்.  இவர்கள் நர மாமிசம் உண்பவர்கள் என்று தெரியுமா."


"எனக்கு தெரியாது. அவர்களைப் பார்த்தால் அப்படிப்பட்டவர்கள் போல தெரியவில்லை. ஆத்திரத்தில் மூர்க்கமாக மாறி விடுகிறார்களோ என்னவோ. ஆனால் இது அனைத்தையும் நிறுத்த என்னால் முடியும். அடிமைகளை விடுதலை செய்வது மட்டுமே என் கோரிக்கை."


"உன் கோரிக்கையை நிறைவேற்ற என் தரப்பிலிருந்து சில நிபந்தனைகள். நீங்கள் உருவாக்கிய கப்பல் போல பத்து கப்பல்கள் எங்களுக்கு வேண்டும். அதை உருவாக்குவதில் பழங்குடி மக்களின் உதவி தேவை. அடிமைகளாக இல்லை. அவர்கள் உழைப்பிற்கான ஊதியம் தரப்படும்.  எங்கள் பலரின் குடும்பத்தினர் பெரூஸ் நாட்டுச் சிறைகளில் அவதிப்படுகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வீரர்கள் தேவைப்படுகிறது. என்னிடம் வீரர்கள் குறைவு. பழங்குடி இனத்து ஆயிரம் வீரர்கள் எங்களுடன் பெரூஸ் நாட்டிற்கு பயணம் செய்து, அங்கு நடக்கும் போரிற்கு உதவ வேண்டும்."


"இதற்கு அகாந்தோ சம்மதிப்பான் என்றே நினைக்கிறேன்."


"அது அவ்வளவு எளிதல்ல. கப்பல்கள் உருவாக்க பல மரங்களை வெட்ட வேண்டும். அதற்கு இந்த மக்கள் சம்மதிக்க மாட்டார்கள்."


"நாங்கள் முயற்சி செய்கிறோம்."


ஸ்டெல்லாவும், வால்டேரும் மீண்டும் பழங்குடி கிராமத்திற்கு திரும்பினர்.


அகாந்தோவிடம் பேச்சுவார்த்தை குறித்த விபரங்கள் ஸ்டெல்லா தெரிவித்தாள்.  அவன் தன் இனத்தாரிடம் இது குறித்து விவாதித்தான். திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக அகிரா என்ற இளைஞன் அகாந்தோவிடம் கடுமையாக வாதாடினான்.


"நாம் வேறு. அவர்கள் வேறு. அவர்களின் நிறம் வேறு. கடவுள்கள் வேறு. பழக்கங்கள் வேறு. இயற்கை மீது கருணை இல்லாத கீழ்மக்கள்.  பொழுதுபோக்கிற்காக மிருகங்களைக் கொல்கிறார்கள். மரங்களை வெட்டி சாய்க்கிறார்கள். அவர்களுடன் எவ்வாறு நாம் இணக்கமாக வாழ இயலும். அவர்கள் கேட்டது போல பத்து மரக்கலங்கள் செய்வதற்கு எத்தனை மரங்களை வெட்ட வேண்டும்.  அவர்கள் போரில் நாம் ஏன் கலந்து கொள்ள வேண்டும். நம் இனத்தவன் ஒருவன் கூட இந்த மண்ணை விட்டு செல்ல ஒப்புக் கொள்ள மாட்டான்."


அகிராவிற்கு அவன் மக்களிடம் பலத்த ஆதரவு இருந்தது.


முடிவாக அகாந்தோ ஸ்டெல்லாவின் திட்டத்திற்கு தன் சம்மதத்தைக் கூறினான்.  மறுப்பவர்களுக்கு கடும் தண்டனை என்றும் எச்சரிக்கை செய்தான்.


அகிராவும் அவன் ஆதரவாளர்களும் அன்றிரவே அகாந்தோ இறப்பான் என்று அச்சுறுத்தினர்.


இரவு பலத்த சண்டை நடக்கும் சத்தம் கேட்டது. அகாந்தோ வால்டேரிடம் வந்து அனைவர் உயிருக்கும் ஆபத்து என்றும் அங்கிருந்து உடனே தப்ப வேண்டும் என்றான்.


ஸ்டெல்லாவின் குழுவினர், அகாந்தோ, மற்றும் சில வீரர்கள் தப்பி ஓடினர்.


அலெக்சாண்டரிடம் சந்தித்து நடந்தவற்றைக் கூறினர். ஸ்டெல்லா தன்னுடைய திட்டத்தைக் கூறினாள்.


"எங்களிடம் 100  வீரர்கள் இருக்கின்றனர். உன்னிடம் 100  பேர். எங்கள் கப்பலில் 300  பேர் வரை பிரயாணம் செய்யலாம். நாம் அனைவரும் எங்கள் கப்பலில் பிரயாணம் செய்து பெரூஸ் நாட்டிற்கு செல்வோம். உங்கள் மக்களை விடுதலை செய்வோம்." 


"பெரூஸ் நாட்டின் சிறைகளில் காவல் பலம் மிகப் பெரிது. குறைந்தது 5000  வீரர்கள் நமக்கு தேவை." 


"தேவைப்படும் வீரர்களை நாம் வேறு எங்காவது  சம்பாதித்துக்  கொள்ளலாம். உங்களால் இந்த தீவிலேயே வாழ் நாள் முழுதும் கழிக்க இயலுமா? உங்கள் உறவினர்களை முற்றிலும் மறந்து இருந்து விட இயலுமா? எங்கள் கப்பல் உங்களுக்கு கிடைத்த மிகப் பெரும் வாய்ப்பு.  இனிமேல் இது போன்று அமையாது. எங்களைப் பயன்படுத்திக் கொள்."


அலெக்சாண்டர் தன் மக்களிடம் விவாதித்து சம்மதம் தெரிவித்தான். அடிமைகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.


அன்றிரவு உற்சாகமான நடனமும், கேளிக்கைகளும் நடந்தன.


வால்டேர் இதில் கலந்து கொள்ளாமல் தனிமையில் அமர்ந்திருந்தார். ரூசோ  அவரிடம் பேச வந்தான்.


"நான் உன்னிடம் விடை பெரும் நேரம் வந்து விட்டது. இனி நடக்கப் போவது பெரும் போர்கள். இதில் பங்கு பெறும் தகுதி எனக்கில்லை. நான் வணிகன். பேரம் பேசி ஒப்பந்தங்கள் செய்வது மட்டுமே என் திறமை. நான் அகாந்தோவுடன் நெடும் பயணம் மேற்கொள்ளப் போகிறேன். யாரும் கண்டடையாத புது உலகத்தை நோக்கிச் செல்கிறேன். இத்தீவுகளுக்கு அருகில்  இருக்கும் அந்த மாபெரும் கண்டம் எனக்காக காத்திருக்கிறது."


ரூசோ தன் தந்தையின் கைகளைப் பற்றினான்.


"உன் தாயிடம் என்னை மன்னிக்க சொல். என்றாவது ஒரு நாள் நம் நாட்டிற்கு திரும்பி அவளைப் பத்திரமாக பார்த்துக் கொள்."


அடுத்த நாள் காலை புலர்ந்தது. தன் புது நண்பர்களுடன் அன்னம் அடுத்த பயணத்தை மேற்கொண்டது.


ஒரு குன்றின் மீதமர்ந்து கப்பல் செல்வதை வால்டேர் கண் இமைக்காமல் பார்த்தார். கப்பல் மெல்ல அவர் பார்வையிலிருந்து அகன்றது.


நெடுமூச்சு விட்டு தன் நண்பன் அகாந்தோவைத் தேடி சென்றார்.


                        ———*********———

               





 

                                                  

                                                   பகுதி -  7


எல்லையில்லா மணற்பரப்பைத் தன்னிடம் கொண்டு விரிந்து பரந்து கிடந்தது துவாரா பாலைவனம். வெய்யிலின் கதகதப்பில்  மணல் உருகிய தங்கம் போல ஜொலித்தது.  சிறு குன்றுகள், பின்னர் சரிவுகள் அதன் பின்னர் நீண்ட சமவெளிகள் என்று மணல்வெளி  புள்ளிகளால் இணைத்த கோலம் போல இருந்தது,


மணிமாறன், தாரா இரண்டு நாட்களாகப் பாலைவனத்தில் பயணித்து வந்தனர். இருவரும் ஒட்டகத்தில் ஏறுவது முதன் முறை என்பதால் சிரமமாக இருந்தது. குறிப்பாக குன்றுகள் மீது பயணிக்கும் போது ஓட்டகம் ஒரு அடி முன் சென்றால் மூன்றடி பின் வாங்குவது போல பிரமை ஏற்பட்டது.


எங்கு நோக்கினும் மணல். மானிடர் யாருமற்ற பெருவெளியில் நின்று மாலையில்  ஆதவன் மறைந்ததை இருவரும் கண்டனர்.


இரவானதும் நட்சத்திரங்கள் விண்ணில் அள்ளித் தெளித்தது போல இருந்தது. மணிமாறனும் தாராவும் படுத்து நட்சத்திரக் கூட்டங்களில் தம்மைத் தொலைத்திருந்தனர். எரி நட்சத்திரம் ஒன்று வானை ஒளி மயமாக்கியது.


"மணிமாறா இக்கணமே, இவ்விடமே  உன் மடியில் படுத்தவாறு இறந்து விட வேண்டும்."


மணிமாறன் பதில் எதுவும் அளிக்கவில்லை. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் அவன் இருந்தான். வானில் இன்னொரு எரிநட்சத்திரம் தோன்றியது.


மணிமாறன் குனிந்து தாராவின் உதடுகளில் முத்தம் பதித்தான். இருவரும் ஒருவவரை ஒருவர் அணைத்த நிலையில் பல நிமிடங்கள் இருந்தனர். இரவானதும்  குளிர் ஊசி போல உறுத்தியது. காற்றடித்து மணலை அள்ளித் தெறித்தது. அதை பொருட்படுத்தாது மணலில் படுத்திருந்தனர்.


அன்று இரவு ஒரு நொடி கூட இருவரும் உறங்கவில்லை. பெரும் அகவெழுச்சி நிலையில் இருந்தனர். வெளியே பாலைவனைச் சூறாவளி ஓலமிட்டுக் கொண்டிருந்தது.


அடுத்த நாள்  சூரியனின் உதயம் பாலைவனத்திற்கு ஒளியூட்டியது. ஒரு மேகம் கூட இல்லாத வானில் சூரியன் வட்டபந்தாய் மேலே எழும்பியது. வானம் காவி நிறத்திலிருந்து ஒளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறியது. 

 

படுத்திருந்த ஒட்டகங்கள் மெல்ல எழுந்தன. பிரயாணத்திற்குத் தயாராகின.  ஒட்டகங்களின் கனைப்பு  அவ்விடத்தில் நிறைந்திருந்த மௌனத்தைக்  கலைத்தது.


மேலும் ஐந்து நாட்கள் பிரயாணம் தொடர்ந்தது. வழியெங்கும் இறந்த மனித, ஒட்டகம், மற்ற மிருகங்களின் உடல்கள் கிடந்தன. உதவியாளர்கள் இதைத் தாண்டி சென்றவர்கள் யாரும் உயிருடன் இல்லை என்றும், இனிமேல் தங்களால் உடன்  வர இயலாது என்றும் தெரிவித்தனர்.


மணிமாறனும் தாராவும் மட்டும் தனியாக பாலைவனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். ஒரு பாழடைந்த நகரத்தை அடைந்தனர்.  அங்கு வீடுகள், மாளிகைகள் இடிந்துக் கிடந்தன.  இறந்த மனித எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள் தரையில் கிடந்தன. திடீரென்று வானில் ஒரு வல்லூறின் உறுமல் சத்தம் கேட்டது.  தாரா மணிமாறனின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.


பிராயணத்திற்க்காக அவர்கள் கொண்டு வந்த தண்ணீர் மற்றும் உணவு வகைகள்  முழுதும் தீர்ந்து விட்டது. இன்னும் ஐந்து நாட்கள் பாலைவனத்தில் செல்ல வேண்டும். வெய்யில் மிகவும் கடுமையானது. நீர் ஆகாரம் இன்றி இரண்டு நாட்கள் தாக்குப் பிடிக்க முடிந்தது. அதற்கு மேல் இருவரிடமும் வலிமை இல்லை. உடலெங்கும் உஷ்ணத்தினால் ஏற்பட்ட கொப்புளங்கள் வேறு. இருவரும் மணலில் வீழ்ந்துக் கிடந்தனர். ஒரு அடி கூட எடுக்க முடியவில்லை.


மணிமாறன் தாராவிடம் நான்கு  வல்லூறுகளை சுட்டிக் காட்டினான். அவை இவர்களுடைய மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தன. வல்லூறுகள் பறந்து விடுவவதற்கு முன்  தாரா தன் வில்லினால்,  கண் இமைக்கும் நேரத்தில்  அம்பை எய்துக் கொன்றாள். அவற்றின் குருதியைக் குடித்து, மாமிசத்தைத் தீயில் சுட்டுத் தின்றனர்.


பகல்கள், இரவுகள் கடந்தன. தினமும் வல்லூறுகளைக் கொன்று அவற்றை மட்டுமே உண்டு தங்கள் பசியைத் தீர்த்துக் கொண்டனர். 


"மணிமாறா இந்த பாலைவனத்தை யாரும் கடந்ததில்லை என்கின்றனர். காரணம் பசி, தாகம். நம்மைப் போல மற்றவர்கள் ஏன் வல்லூறுகளைக் கொன்று வாழவில்லை."


"ஏன் என்றால் யாரும் உன் போல விரைவாக அம்பு எய்ததில்லை. மனிதர்களின் அசைவு  சற்றுத் தெரிந்தாலே அவை பறந்து விடும்." 


அடுத்த நாள்  நசாரத் தேசத்தை அடைந்து விடலாம். அங்கிருந்து தருக்கி நாட்டிற்கு செல்லுவது மிக எளிது என்று மணிமாறன் கூறினான்.


அன்றிரவு குளிரும் பாலைவனைச் சூறாவளியும் மிகக்  கடுமையாக இருந்தது. அவர்கள் கூடாரத்திற்குள்ளும் காற்று மணலை அள்ளித் தெறித்தது. 


காலை ஆனது.  இரவின் பேயாட்டத்தின் சுவடு சிறிதும் தெரியவில்லை. மதியத்திற்குள் நேதன்யா நகரை அடைந்து விடலாம் என்று மணிமாறன் கூறினான்.


சிறிது நேர பிரயாணத்திற்குப் பின்  தூரத்தில் மாளிகைகள் தெரிந்தன. மனித நடமாட்டமும் தென்பட்டது.


இருவரும் ஓடிச் சென்று அந்நகரத்திற்குள் நுழைந்து மண்ணை  முத்தமிட்டனர்.  


நேராக ஒரு உணவகத்தில் வயிறார உண்டு பயணிகளின் விடுதியில் நீண்ட உறக்கத்திற்கு சென்றனர்.


                                          ——-************————

இருவரும் நகரின் கடைவீதிகளில் அலைந்தனர். காய்கறி, பழ வகைகள் கடைகள் முன் தரையில் இறைந்து கிடந்தன.  கிடங்குகளில் உணவுப் பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. வாசனைத் திரவியங்கள் விற்கும் கடைகள் முன் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 


பாம்பாட்டி ஒருவன் பாம்பைக் காண்பித்து வசூலித்துக் கொண்டிருந்தான். சிறுவர்கள் நடன வித்தைகள் காண்பித்துக் கொண்டிருந்தனர்.


"தாரா இவர்கள் பேசும் மொழி என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எழுத்துக்கள் தான் வித்தியாசமாய் உள்ளது."


அந்நகரின் ஆண்கள் ஆறரை அடி உயரம் இருந்தனர். சில பெண்கள் முகத்திரை அணிந்திருந்தனர். அந்நகரத்தினர் மஞ்சள் நிற மேனியினராய் இருந்தனர். கருமை நிறத்தவரும் இருந்தனர்.  ஆனால் அவர்கள் மகர தேசத்தினர் அல்ல வேற்று நாட்டினர். 


குள்ளமாக சப்பை மூக்கு கொண்ட மிங் தேசத்தினர், சிவந்த நிறம் கொண்ட பெரூஸ் தேசத்தினர், மஜானியா நாட்டைச் சேர்ந்த கருமை நிறத்தவர் என்று அந்நகரம் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் சங்கமிக்கும் கடலாக இருந்தது.


நகரத்தின் மையத்தில் ஒரு பெரும் மைதானம் இருந்தது. மக்கள் கூட்டம் கடலென மைதானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அருகிலிருந்த ஊர்களிலிருந்தும் மக்கள் பெருந்திரளென மைதானத்தில் கூடியிருந்தனர். சில வெளிநாட்டினரும் ஆங்காங்கே தென்பட்டனர். அன்று நசாரத் நாட்டில் ஆண்டுக்கொரு முறை நடக்கும் வாட்போர் போட்டி. அதற்குத்  தான் இவ்வளவு ஜனக்கூட்டம். 


மைதானத்தைச் சுற்றிலும் பார்வையாளர்கள் அமர்வதற்கு  வசதிகள் செய்யப்பட்டிருந்தது. பல அடுக்கை வரிசைகளாக அமரும் இடங்கள்  இருந்தன. உட்காரக் கூட இடம் இல்லாமல் கூட்டம் நெருக்கியடித்து. மேல் வரிசையில் அரசனும் அவன் ராணியும் அமரும் சிம்மாசனம் தென்பட்டது. மற்ற அரசக் குடும்பத்தினர் அமரும் வரிசை அருகில் இருந்தது.


மைதானத்தில் முரசு சத்தம் ஓங்கி  ஒலித்து பார்வையாளர்களை வெறி கொள்ளச் செய்தது. முரசு ஒலிக்கேற்ப மக்கள் குதித்து, கைகளைத் தட்டி, நடனம் ஆடினர் . சிறுவர்கள் அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். மறைவிடங்களில் அன்று நடக்கும் வாட்போர் போட்டியில் யார் வெல்வார்கள் என்று சூதாட்டம் நடந்துக் கொண்டிருந்தது. அவ்வப்போது காவல் வீரர்கள் தலையிட்டு அவர்களை எச்சரித்துக் கலைத்தனர். சில இடங்களில் வீரர்களே சூதாட்டத்தில் பங்கேற்றனர்


பார்வையாளர்கள் அனைவரும் உரத்த குரலில் எக்காளமிட்டுக் கொண்டிருந்தனர். மைதானத்தை ஒட்டியுள்ள தின்பண்டங்கள் விற்கும் இடங்களில் ஈக்கள் போல மொய்த்தனர். பெரும்பாலும் வறுக்கப்பட்ட ஒட்டகத்தின் இறைச்சி உணவே விற்கப்பட்டது.


மணிமாறனும், தாராவும் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தனர். அவர்களின் கரு நிறமும், வித்தியாசமான உடைகளும் அனைவரின் கண்களையும் வியப்புடன் நோக்கச் செய்தன. 


சிறிது நேரத்தில் நடன மங்கைகள் மைதானத்தின் நடுவே ஆடல் நிகழ்ச்சிகள் நடத்தினர். அப்பெண்கள் மிக சல்லிசான ஆடைகள் அணிந்திருந்தனர். அவர்கள் நடனம் வித்தியாசமாக இருந்தது. உடலின் எந்த அங்கத்தையம் அசைக்காமல் வெறும் வயிற்றையும், கைகளையும் மட்டுமே ஆட்டி பார்வையாளர்களைக் கள்ளுண்டவர்களைப் போல கிறங்க வைத்தனர். மணிமாறன் வைத்த கண் வாங்காமல் நடன மங்கைகளையே பார்த்துக் கொண்டிருந்தான். அசூயை கொண்டு தாரா அவன் கண்களை மூடி மறைத்தாள்.


நடன மங்கைகள் சென்ற பின் சிறார்களின் கோலாட்டம் நடந்தது. சிறுவர்களின் துடிப்பான வேகம் பார்வையாளர்களை வியக்க வைத்தது. அதன் பின் சிறு வயது பெண்கள் ஜோதியை ஏந்தி மைதானத்தைச் சுற்றி நடந்தனர்.


திடீரென மைதானம் அமைதி கொண்டது. அரசனும், அரசியும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். அரசன் கைகளை உயர்த்தி சமிக்ஞை செய்ய மக்கள் உற்சாகத்துடன் கத்தினர்.


முதலில் போட்டியில் கலந்து  கொண்ட வீரர்கள் அனைவரும் அணிவகுத்து நின்றனர். ஒவ்வொருவரின் பெயரும், அவர்கள் பிறந்த ஊரும், பார்வையாளர்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது. பிறகு போட்டி ஆரம்பித்தது.


போட்டியின்  இறுதியில் மூன்று வீரர்கள் தேறினார். இவர்களில் வெற்றி பெறுபவனுக்கு அவன் வேண்டுவது எதுவாயினும் தரப்படும் என்று அரசன் அறிவித்தான்.


முடிவில் ஜோனாஸ் என்னும் வீரன் வெற்றி பெற்றான். அவன் விரும்புவது என்னவென அரசன் கேட்க, அளவற்ற செல்வம், நிலங்கள் போக தோற்ற வீரர்கள் அனைவரின் மனைவி, மகள்கள் தன் அந்தப்புரத்து தாசிகளாக வேண்டும் என்றான்.


இதற்கு ஒப்புக் கொள்ள முடியாது என அரசன் கூற, கொடுத்த வாக்கை மீறினால் அரசனை மக்கள் யாரும் மதிக்க மாட்டார்கள் என்ற ஜோனாஸ் எச்சரித்தான். பிறகு இன்னும் ஒரே ஒரு வீரனுடன் வாட்போர் புரிய வேண்டும். அதிலும் ஜோனாஸ் வெற்றி பெற்றால் அவன்  கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற அரசன் கூறினான்.


அப்படி அடுத்த போட்டியிலும் தான் வென்றால் அரசனின் பட்டத்து ராணி தன் அந்தப்புரத்தில் ஒரு வாரம் தன்னை மகிழ்விக்க வேண்டும் என்று ஜோனாஸ் திமிராக பதில் உரைத்தான்.


அரசன் கோபத்தில் அவனைக் கொல்ல தன் வீரர்களை ஆணையிட்டான். ஆனால் அரசி அவனைத் தடுத்தி நிறுத்தினாள்.


"ஆணுக்கு வீரம் மட்டும் போதாது. கண்ணியமும் தேவை. குறிப்பாக பெண்களிடம். ஜோனாஸ், உன் ஆணவம் உன்னை அழிக்கும். இவனுடன் போட்டியிட இந்த அரங்கில் யாராவாது இருக்கிறார்களா?  இந்த நாட்டின் ராணியின் மாணத்தைக் காக்கும் வீரன் ஒருவனாவது இங்குண்டா? "


மைதானம் அமைதியாக இருந்தது. மணிமாறன் எழுந்து அரங்கிற்குள் வந்தான். 


"என் பெயர் மணிமாறன். மகர தேசத்தைச் சேர்ந்த படைத் தளபதி நான். எங்கள் நாட்டில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான சுதந்திரம் கொண்டவர்கள். தங்களை அவமானப்படுத்தியவனை நான் அழிப்பேன். இது என் வாள் மீது உறுதி."


ஜோனாஸ் ஏழு அடி உயரம் கொண்டவன்.  மணிமாறனோ ஆறடிக்கு சற்று குறைந்தவன். ஜோனாஸ் மாமிச மலை போன்றவன். மணிமாறன் மெலிந்த தேகத்தை உடையவன். இந்த வித்தியாசத்தைக் கண்டு பார்வையாளர்கள் மணிமாறனை ஏளனம் செய்தனர். அரசன் மணிமாறனை மைதானத்திலிருந்து அகற்ற ஆணையிட்டான். அரசி அவனைத் தடுத்தாள்.


"இந்த நசாரத் நாட்டுத் தொடை நடுங்கிகளுக்கு  நடுவே ஒரு அந்நிய நாட்டு சுத்த வீரனைக் காண்கிறேன். வீரரே, நீர் வேற்று நாட்டினர் ஆனாலும் பெண்ணின் மதிப்பு தெரிந்தவர். இப்புவியில் பெண்ணினத்தின் முழு ஆசியும் உம்மை அடையும். உன் வெற்றிக்காக பெண்ணினமே இறைவனை வேண்டும். வெல்க. வெற்றி பெறுக."


ஆளுக்கு இரண்டு வாளும் கேடயமும் கொடுக்கப்பட்டது. ஜோனாஸ் மூர்க்கத்துடன் தாக்கினான். ஆனால் மணிமாறன் மதியூகத்துடன் அவன் தாக்குதல்களைத் தவிர்த்தான். ஜோனாசைக் களைப்புறச் செய்து, பிறகு தாக்குவது என்பது மணிமாறனின் திட்டமாக இருந்தது. ஆனால் ஜோனாசின் வெறித் தாக்குகளினால் மணிமாறன்  உடலில் சில காயங்கள் ஏற்பட்டது.


மணிமாறன் எதிர் தாக்குதல் தொடுத்தான். நடனமிடுவது போல ஜோனாசைச் சுற்றி வந்து பலவீனமான தருணங்களில் அவனைக் காயப்படுத்தினான். மணிமாறனின் இந்த நூதனமான வாட்போர் ஜோனாஸைத் திணரச் செய்தது.


போட்டி நிற்காமல் பல மணி நேரங்கள் சென்றுக் கொண்டிருந்தது. முடிவில் மணிமாறன் எம்பிக் குதித்து ஜோனாஸின் கழுத்தை சீவினான்.


அரங்கமே அதிர்ச்சியில் உறைந்திருந்தது. அரசி மட்டும் எழுந்து கை  தட்டினாள். அதன் பின் அரசன் எழுந்து கை  தட்ட பார்வையாளர்கள் அரங்கிற்குள் ஓடி வந்து மணிமாறனைத் தங்கள் தோள்களில் ஏற்றிக் கொண்டாடினர்.


அரசன் இறங்கி மைதானத்திற்குள் வந்து மணிமாறனைத் தழுவினான். அவனையும் தாராவையும் தன் விருந்தினராக அரண்மனைக்குள் அழைத்து வர ஆணையிட்டான்.


அவர்கள் இருவருக்கும் அணிந்து கொள்ள விலையுர்ந்த ஆடைகள், அணிகலன்கள் தரப்பட்டன. தாராவை மிகச் சிறப்பாக தாதிப் பெண்கள் அலங்கரித்தனர். இருவரும் விருந்து நடக்கும் அறைக்கு வந்தனர்.


விருந்துக்கு அரசன் கலீபும், அரசி சாராவும் சிறப்பாக உடையணிந்து கம்பீரமாக வந்தனர். தாராவை நீ ராணி போல் இருக்கிறாய் என்று சாரா புகழ்ந்தாள். பல விதமான உணவு வகைகள்  மேஜையில் வைக்கப்பட்டது.


மணிமாறன் தாராவின் காதில் மெதுவாக இந்த உணவு காரம், உறைப்பு எதுவுமன்றி சப்பென இருக்கிறது என்றான். 


விருந்து முடிந்த பின் நால்வரும் வேறு ஒரு அறைக்குச் சென்றனர். கலீப்  தனக்கு இன்னொரு உதவி தேவை என்று தெரிவித்தார்.


"எங்களுக்கு இரு ஆண், இரு பெண் என நான்கு குழந்தைகள். சென்ற வாரம் அவர்கள் தருக்கி நாட்டினரினால் கடத்திச் செல்லப்பட்டார்கள். அவர்களை விடுவிக்க உங்கள்  உதவி தேவை."


"எதற்காக அவர்கள் கடத்திச் செல்லப்பட்டார்கள். எதிரிகளின் கோரிக்கை என்ன?"


"நீங்கள் இருவரும் இந்த மண்ணின் வரலாற்றை அறிந்துக் கொள்ள வேண்டும். ஐந்தாயிரம் வருடங்கள் முன்பு இந்த மண்ணினில் எங்கள் குலம் வாழ்ந்து வந்தது. பிரளயம் இந்த உலகத்தை அழித்த போது, இறைவனின் தூதர் மோசஸ் எங்களைப் பாதுகாப்பாக இந்த மண்ணிற்கு அழைத்து வந்தார். புவி அழிந்தது. ஆனால் எங்கள் இனம் காக்கப்பட்டது. ஆம் மணிமாறா, நாங்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்று எங்கள் மத நூல்கள் கூறுகின்றன. இரண்டாயிரம் வருடங்கள் முன்பு வைகிங் நாட்டுப் படைகள் எங்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றனர். எங்கள் இனத்தினர் இங்கிருந்து தப்பியோடி, சிதறி பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். பெரும்பான்மையோர் பெரூஸ் நாட்டில் தஞ்சம்  அடைந்தனர். அங்கு பெரும் அறிஞர்களாக, வணிகர்களாக ஆகினர். அதனால் உள்ளூர் மக்களுக்கு எங்கள் இனத்தினர் மீது அசூயை இருந்தது”. 


“இருபது வருடங்கள் முன்பு பெரூஸ் நாட்டு அரசனாக விளாடிமிர் பதவி ஏற்றான். அவன் எங்கள் குலத்தை முற்றொழிக்க ஆணையிட்டான்.  எங்கள் இனத்தினர் சிறையிலடைக்கப்பட்டனர். அங்கு பெரும் கொடுமைகள் அவர்களுக்கு இழைக்கப்பட்டன. ஒரு நாளுக்கு பதினாறு மணி நேரம் கடும் உழைப்புக்கு ஆளாக்கப்பட்டனர். பலவீனமடைந்தவர்கள் கொல்லப்பட்டனர். எங்கள் இனத்தின் பல இலட்சம் பேர் இந்த சிறைகளில் மாய்ந்தனர். சிலர் பெரூஸ் நாட்டிலிருந்து தப்பி எங்கள் பூர்வீக நிலத்திற்கு திரும்பி வந்தோம். எங்கள் இனத்தினர் நாடற்ற பரதேசிகளாக இருந்ததால் தான் இத்தனைக் கொடுமைகளை அனுபவித்தனர். அதனால் இங்கே, எங்கள் மூதாதையர் மண்ணில் எங்களுக்கென ஒரு தனி நாட்டை உருவாக்கிக் கொண்டோம். அதனால் இங்கே ஏற்கனேவே வசித்து வந்த தருக்கி நாட்டினர் எங்கள் மீது சினமுற்றனர். அடிக்கடி மோதல்கள் நடந்தன.  தருக்கி நாட்டினர் காட்டு மிராண்டிகள். ஆனால் அறிவற்றவர்கள். அவர்கள் மூர்க்கமாக தாக்கினாலும் எங்களிடம் தோல்வியே அடைந்தனர்.”


"இந்நாட்டில் ஷலோன் என்ற நகரம் உள்ளது. அங்கு தான் எங்கள் முதன்மை இறைத் தூதர் ஜேசன் பிறந்தார் என்பது நம்பிக்கை. அது எங்கள் புனித மண். அங்கு எங்கள் இனத்தவரின் பல ஆலயங்கள் உள்ளன. அந்நகரைக் கைப்பற்றி எங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டோம். ஆனால் தருக்கி நாட்டினர் ஷலோன் நகரம் தங்களுக்கும் புனித மண் என்கின்றனர். அவர்களின்  இறைத் தூதர் அப்துல் ரசாக் பிறந்த நகரம் என்று வாதாடுகின்றனர். ஒரு மாதமாக அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினோம். ஆனால்       நேற்று எங்கள் குழந்தைகளைக் கடத்திச் சென்று விட்டனர். ஷலோன் நகரிலிருந்து எங்கள் இனத்தவர் முற்றிலும் வெளியேற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். "


"அவர்களை விடுவிக்க என் படை வீரர்களை அனுப்பினால் குழந்தைகளுக்கு ஆபத்து. உங்கள் இருவரையும் சந்தேகப்பட மாட்டார்கள். துணைக்கு மட்டும் சிலரை  உங்களுடன் அனுப்பி வைக்கிறேன்.  தருக்கி நாட்டினர் கொடுமையானவர்கள். என்னவெல்லாம் சித்திரவதை செய்வார்கள் என்று சொல்ல இயலாது. என் இரு பெண் பிள்ளைகளும் கடத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நிலை என்னவென எங்கள் இருவர் மனமும் தவிக்கிறது."


கலீப் மணிமாறனின் கைகளைப் பற்றிக் கொண்டார்.


மணிமாறன் அவர் தோள்களைத் தட்டி நம்பிக்கை ஊட்டினான்.


"நாளை இரவுக்குள் உங்கள் குழந்தைகள் வீட்டில் இருப்பார்கள். தாரா நாம் இப்போதே கிளம்பலாம்."


இரண்டு வீரர்களின் துணையுடன் குதிரைகளில் இருவரும் தருக்கி நாட்டின் தலைநகரம் செதினாவை நோக்கி பிரயாணம் செய்தனர்.


                                      ———**********———-


அன்று மாலையே தாராவும், மணிமாறனும் செதினா நகரை வந்தடைந்தனர். அவர்கள் தங்களுடன் மூன்று பெட்டிகளில் நகை, ஆபரணங்கள் எடுத்து வந்திருந்தனர். அரச மாளிகைக்கு பலத்த காவல் இருந்தது. மணிமாறன் பெட்டிகளைக் காண்பித்து அரசருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் பரிசு தருவதற்காக சந்திக்க வேண்டும் என்றான். காவல் வீரர்கள் தயங்கினர். தாங்கள் வெளி நாட்டிலிருந்து வந்திருப்பதாக கூறினான். சில தங்க நாணயங்கள் அவ்வீரர்களுக்குப் பரிசாகவும் அளித்தான்.


இருவரும் அரச மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மாளிகை மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. முழுதும் தங்கத்தால் இழைக்கப்பட்டிருந்தது. சுவர் முழுதும் ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும் ஓவியங்கள் இருந்தன. மேலே கூரையில் மின்னும் கண்ணாடி விளக்குகள் தொங்கின.


மண்டபத்தில் நடுநாயகமாக அரசர்  காதிப் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அருகே ராணி அமர்ந்திருந்தாள். மண்டபத்தின் இருபக்கங்களிலும் முக்கியமான அமைச்சர்களும் அதிகாரிகளும் அமர்ந்திருந்தனர்.  ஓரத்தில் அன்று அரசரை சந்திக்க வேண்டிய விருந்தினர்கள் இருந்தனர்.


தங்கள் முறை வந்ததும் மணிமாறனும் தாராவும் முன்னே வந்து அரசரை வணங்கினர். பின்னர் தாங்கள் மகர தேசத்திலிருந்து வந்திருப்பதைத் தெரிவித்தனர்.


"மகர தேசத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறன். ஆனால் துவாரா பாலைவனத்தைக் கடத்தல் அவ்வளவு எளிதன்று. அதை எவ்வாறு சாதித்தீர்கள்."


தாரா தங்கள் பயண அனுபவத்தை விளக்கினாள். அவையில் இருந்தவர்கள் வியப்புடன் கேட்டனர்.


"அரசரே தங்களுக்காக சில பரிசுகள் கொண்டு வந்திருக்கிறோம்."


இரண்டு பெட்டிகளைத் திறந்து மணிமாறன் காண்பித்தான்.


"ஒரு பெட்டி தங்களுக்கு, இன்னொன்று அரசிக்கு."


காதிப் கேள்வியுடன் மணிமாறனை நோக்கினார்.


"மூன்றாவது பெட்டி தங்கள் குழந்தைகளுக்கு."


"அதை ஏவலர்களிடம் சொன்னால் குழந்தைகளிடம் சேர்த்து விடுவார்கள்."


"இல்லை அரசே இதை நாங்களே உங்கள் குழந்தைகளிடம் காண்பிக்க விரும்புகிறோம். அவர்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியை எங்கள் கண்களால் கண்டால் தான் மனம் திருப்தியடையும்.”


வீரர்கள் பெட்டியைச் சோதித்தனர்.


“இந்த பெட்டி தக்க இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். நாளை குழந்தைகளை  சந்திக்கலாம்."


அடுத்த நாள்  தாராவும் மணிமாறனும் குழந்தைகள் வசிக்கும் மாளிகைக்கு அழைத்து வரப்பட்டனர். குழந்தைகள் அடுத்த அறையில் இருப்பதாகவும், விரைவில் வருவார்கள் என்று ராணி கூறினாள்.


மணிமாறன் பெட்டியைத் திறந்து, விடுக்கென பெட்டியின் பக்கவாட்டில் இருந்த பலகையை உடைத்து ஒரு குறுவாளை எடுத்தான். அரசன் மீது பாய்ந்து அவன் கழுத்தில் கத்தியை வைத்தான்.


"எனக்கு நசாரத் நாட்டு அரசரின்  குழந்தைகள் வேண்டும்."


"அவர்கள் அடுத்த அறையில் இருக்கிறார்கள்."


"அவர்களுக்கு ஏதாவது தீங்கு இழைக்கப்பட்டிருப்பது தெரிந்ததால் உன் குலமே அழியும்."


"நீயே சென்று பார்.”


அறையில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். காதிப் குழந்தைகளும், கலீப் குழந்தைகளும் இணைந்து. இரு எதிரி நாட்டு அரசர்களின் குழந்தைகளும் நட்புடன் இருப்பதைக் கண்டு மணிமாறனும் தாராவும் வியப்புற்றனர்.


தங்களுடன் வர கலீபின் குழந்தைகளை தாரா அழைத்தாள். அவர்கள்  இங்கு மகிழ்வாக இருப்பதாகவும், தங்கள் வீட்டில் பொழுதே போகாது என்றும்  இங்கேயே சில நாட்கள் தங்க விரும்புவதையும் கூறினார்கள்.


மணிமாறன் தன் கையிலிருந்த கத்தியைக் கீழே போட்டான். காதிப் தன் பக்கத்திலிருந்த இருக்கையில் அமரச் சொன்னார்.


"நாங்கள் இந்த மண்ணில் ஐந்நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். சில வருடங்கள் முன்பு  எங்கள் எதிரி இனத்தவர் பெரூஸ் நாட்டினரால் கொடுமைக்கு ஆளானார்கள். அவர்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். அங்கு எல்லாம் அவர்கள் துரத்தி அடிக்கப்பட்டனர். ஆனால் நாங்கள் அவர்களை வரவேற்றோம். நிலங்கள் கொடுத்தோம். தொழில் செய்ய அனுமதித்தோம். அவர்கள் சாதுரியமானவர்கள். இந்தப்  பாலைவன நிலத்தில் வெற்றிகரமாக விவசாயம் செய்தனர். எங்களுக்கும் கற்றுக் கொடுத்தனர்."


"எல்லாம் நன்றாகவே சென்றது. எப்போது கலீப்  அவர்கள் தலைவன் ஆனானோ எல்லாம் மாறியது. தாங்கள் வசிக்கும் இடங்கள் முழுதும் தனி நாடென அறிவித்தான். இது நியாயமா. நீயே கூறு. அவர்களை விருந்தினராக இரு கரங்கள் கொண்டு வரவேற்றோம். சகோதரர்களாக  அருகில் வசிக்க வைத்தோம். ஆனால் அதற்கு பிரதிபலனாக எங்கள் நிலத்தைத் தங்கள் நாடாக கூறுவது எத்தனை அராஜகம். உன் வீட்டுக்கு வரும் விருந்தினர் நன்றாக விருந்துண்டு பிறகு வீடே தனக்குச் சொந்தம் என்று கூறுவதை உன்னால் ஏற்றுக் கொள்ள இயலுமா?"


"அவர்களுடன் பல முறை மோதினோம். ஆனால் அவர்கள் மேதைகள். போர் தந்திரங்களிலும் கூட. அவர்களை எங்களால் வெல்ல இயலவில்லை. அதனால் அரசனின் குழந்தைகளைக் கடத்தினோம்.  அவர்கள் உடலில் ஒரு கீறல் கூட இல்லை. எங்கள் குழந்தைகளுக்கு சமமாக நடத்தி வருகிறோம். நீயே சொல் யார் பக்கம் நியாயம் என்று.”


"உங்கள் கோரிக்கை என்ன?"


"இதுவரை அவர்கள் வசிக்கும் பகுதிகளை அவர்களே வைத்துக் கொள்ளட்டும்.  ஆனால் மேலும் புது நிலங்களை ஆக்கிரமிக்க கூடாது. ஷலோன் நகரம் எங்கள் புனித நிலம். அதனை விட்டு அவர்கள் விலக வேண்டும். இது தான் எங்கள் கோரிக்கை.  கலீபின் குழந்தைகளைக் கடத்தி வந்தது எங்கள் தவறான செயல். அதற்குத் தண்டனையாக எங்கள் குழந்தைகளை நீ எடுத்துச் செல்லலாம். கலீப் தாக்குதல்களை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு வரச் சொல். பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் வரை என் குழந்தைகள் அவன் வசமே இருக்கட்டும்."


"உங்கள் குழந்தைகள் வேண்டாம். நீங்கள் மட்டும் என்னுடன் வாருங்கள். இது வரை அதிகாரிகள், அமைச்சர்கள் அளவில் நடத்திய பேச்சுவார்த்தைகளினால் ஒரு பயனும் இல்லை. இரு அரசர்கள் நேருக்கு நேர் சந்தித்து உரையாடினால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்."


"நீ கூறுவது சரி. கலீபின்  குழந்தைகளும் நம்முடன் வரட்டும் அப்போது தான் அவனுக்கு நம்பிக்கை வரும். இப்போதே, இந்நொடியே கிளம்பலாம்.”


                                            ——-********——


கலீபின் மாளிகையில் இரு நாடுகளின் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதற்காக அந்நாட்டின் அரசர்கள்  பேச்சுவார்த்தை நடத்தினர். சற்றுத் தள்ளி அவர்களின் முதன்மை அமைச்சர்களும், ஓர் ஓரத்தில் மணிமாறனும் தாராவும் அமர்ந்திருந்தனர்.


இரு அரசர்களும் உயர் வகை மது அருந்திக் கொண்டிருந்தனர்.


"தங்கள் விருந்தோம்பல்  எங்களை மகிழ்விக்கிறது கலீப்."


"என் குழந்தைகளை பத்திரமாக வைத்திருந்த அண்டை நாட்டு அரசருக்கு என் கைம்மாறு."


"உங்களை எனக்கு மிகவும் பிடிக்கிறது. நாம் நல்ல நண்பர்களாக இருக்கலாம். இந்த நட்பை நம் நாட்டு மக்களுக்குச் சாதகமாக மாற்றினால் நாம் இருவரும் சரித்திரத்தில் இடம் பெறுவோம்."


"உண்மை. நாம் அண்டை நாட்டவர்கள். அதனால் ஒத்து தான் போக வேண்டும். இல்லை எனில் இரு நாட்டு மக்களும் அழிவார்கள். இதை நாம் இருவரும் நன்கறிவோம். அதனால் இன்றிரவுக்குள் ஒரு தீர்வு காண்போம் என்று நம்புகிறேன்." 


"என் தரப்பிலிருந்து கோரிக்கை இது தான். நசாரத் நாட்டவர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களை உங்கள் நாட்டி பகுதிகளாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் புதிதாக மற்ற நிலங்களை ஆக்கிரமிக்கக் கூடாது.  ஷலோன் நகரிலிருந்து உங்கள் நாட்டவர் வெளியேற வேண்டும்.”


"முதல் கோரிக்கைக்கு சம்மதம். ஆனால் ஷலோன் நகரம் எங்கள் புனித பூமி. எங்கள் மதத்தின்  இறைத்தூதர் அவதரித்த நகரம். அவர் வாழ்ந்து உலவிய இடங்கள்  எல்லாம் இப்போது வழிப்பாட்டுத் தலங்களாக  இருக்கிறது. அதை விட்டுக் கொடுத்தல் இயலாது."


"எங்களுக்கும் ஷலோன் நகரம் ஒரு புண்ணிய ஸ்தலம். எங்கள் புனித நூலில் எழுதப்பட்டவை எல்லாம் இறைவனால் உரைக்கப்பட்டவை. எங்கள் இறைத்தூதர் அப்துல் ரசாக் இறைவனின் குரலைக் கேட்ட அராபத் மலை அங்குள்ளது.  ஷலோன் நகரம் எங்களுக்கே சொந்தம். அதை எங்கள் வசம் வைத்திருப்பதற்காக என் நாட்டின் சிறு  குழந்தை கூட வாளெடுத்ததுப் போரிடத் தயாராக இருக்கும்.”


"அப்போது  போர் தான் தீர்வு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்  இல்லையா?


"வேறு ஒரு வழி இருக்கிறது. நாளை நாம் இருவரும் துவந்த யுத்தம் செய்வோம். நம் இரு வாட்கள்  இரு நாடுகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கட்டும். நம் உயிரைத் தியாகம் செய்தாவது  மக்களை அழிவிலிருந்து காப்பாற்றுவோம்."


"என் உயிர் உம்  வாளினால் போவதென்றால் அதை விடச் சிறந்த மரணம் வேறெதுவும் இருக்காது நண்பரே."


"ஆம் தோழரே. நோயினால் படுக்கையில் வீழ்ந்து இறப்பதை விட  நண்பன் கையால் இறப்பது சிறந்தது.”


அடுத்த  நாள் இரு மன்னர்களும் மைதானத்தில் துவந்த யுத்தம் புரிந்திடத்  தயாராக நின்றனர். இரு நாட்டு மக்களும் பெரும் கும்பலாகக் கூடியிருந்தனர்.  மணிமாறன் தீர்ப்பு சொல்லும் பொறுப்பை ஏற்றான்.


இரு மன்னர்களும் வாட்போரில் சூரர்கள். மூர்க்கமாகப்  போரிடாமல் புதுமையான யுத்திகளைக் கையாண்டனர். போர் வெகு நேரம் நீடித்தது. இரவானது.  இருவரும் மிகுந்து களைப்புற்றிருந்தனர். ஆனால் சரிக்கு சமமாகப்  போரிட்டனர்.


முடிவில்  மண்ணில் வீழ்ந்தனர்.  போரிட வலிமையற்றிருந்தனர்.  மணிமாறன் வெற்றி தோல்வியின்றி  போட்டி முடிந்ததாக அறிவித்தான். அதற்கேற்றவாறு  இரு நாடுகளின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்று தீர்ப்பு சொன்னான்.


இரு அரசர்களும் பலத்தக் காயமுற்றிருந்தனர். அன்றிரவு ஓய்வுக்குப் பிறகு சந்தித்தார்கள். இரு நாடுகளின்  எதிர்காலம் குறித்து என்ன முடிவெடுப்பது என்று குழப்பமாக இருந்தது.


மணிமாறன் ஒரு தீர்வு சொன்னான். ஷலோன் நகரம் இரு நாடுகளுக்கும் பொதுவான நகரமாக அறிவிக்கப்பட வேண்டும். அந்நகரத்தின் தலைமை மற்றும் நிர்வாகம் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில்  இரு நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும்.  தலைவர்களை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.


இந்தத் தீர்வுக்கு இரு அரசர்களும் ஒப்புக் கொண்டனர். இரு நாடுகளின் பகை முடிந்து ஒரு புதிய எதிர்காலத்திற்கான துவக்கம் அன்று நிகழ்ந்தது. 


மணிமாறனும் தாராவும் தாங்கள் விடைபெறுவதாக தெரிவித்தனர். கலீப் அவர்கள் பிரயாணம் குறித்த விவரங்களைக் கேட்டார்.


"உங்கள் பிரயாணம் வெற்றிகரமாக நிறைபெறுவதாக. நீங்கள் அடுத்து செல்லும் இடம் எது."


"நாங்கள் லாமா தேசம் செல்வதாக உத்தேசம். எங்கள் நாட்டின் எதிர்காலம் குறித்து சில முக்கிய விவரங்கள் அந்நாட்டில் இருக்கின்றன. அதைக் கண்டறிவதே எங்கள் பிரயாணத்தின் நோக்கம்."


"லாமா தேசம் செல்ல வேண்டுமென்றால் பெரூஸ் தேசம் வழியாகத் தான் செல்ல வேண்டும்.  நீங்கள் பெரூஸ் தேசத்திற்குள் நுழைந்தவுடன் சிறைக்குள் தள்ளப்படுவீர்கள்."


அப்போது காதிப் குறுக்கிட்டார்.


"நம்முடைய இந்த சமாதானத் திட்டத்தில் ஒரு குறை இருக்கிறது. எங்கள் இனத்தவர் பெரூஸ் நாட்டில் நடக்கும்  கொடுமை தாளாமல் இங்கு அகதிகளாக வருகிறார்கள். இது தொடர்ந்தால் அவர்களைக் குடியேற்ற புதிய நிலங்களை ஆக்கிரமிக்க வேண்டி வரும். இதன் விளைவாக நம்முடைய சமாதானத் திட்டம் எதிர்காலத்தில் தோல்வியுறும். இதைத் தடுக்க வேண்டுமென்றால் பிரச்சினையின் மூலத்தை நிவர்த்தி செய்ய வேண்டும்."


"நீங்கள் சொல்வது புரிகிறது காதிப். இன்னொரு போருக்கு நம் இரு நாடுகளும் தயாராக வேண்டும். இம்முறை நாம் இணைந்து ஒரு புது எதிரியைத் தாக்க வேண்டும்."


"இதில் சிக்கல்கள் இருக்கின்றன. பெரூஸ் நாடு மிகுந்த படைபலம் கொண்டது.  நம் படைகள் பாலைவனப் போருக்குப் பழக்கப்பட்டவை. பெரூஸ் நாடு குளிர் பிரதேசம். அங்கு பனி சூறாவளி மிகவும் சகஜம். இதை நம் படைகள் எவ்வாறு சமாளிக்கும் என்று ஐயம் உள்ளது."


"நாம் நேராக பெரூஸ் நாட்டின் தலைநகரைத் தாக்கக் கூடாது. எங்கள் இனத்தவர் அந்நாட்டின் தெற்குப்பகுதியில் மிகுதியாக இருக்கிறார்கள். அங்கு பனிமழை குறைவு. அதனால் நாம் தெற்குப்பகுதியை மட்டும் தாக்கி நம் வசமாக்க வேண்டும்."


"தெற்குப்பகுதியில் தான் உங்கள் இனத்தவர் அடைக்கப்பட்ட சிறைகள் இருக்கின்றன. நம் முதல் நோக்கம் உங்கள் இனத்தவரைச் சிறையிலிருந்து காப்பாற்றுவதாக இருக்க வேண்டும்."


"நம் திட்டத்தில் மணிமாறன் மட்டும் தாராவின் பங்கென்ன."


"இவர்கள் இருவரும் தனியாக பெரூஸ் நாட்டிற்குச் சென்றால் ஆபத்து. அவர்களுக்கு நம் படைகளின் உதவி தேவை. பிரதி உதவியாக  இந்தப் போரில் நம் படைகளை இவர்கள் தலைமையேற்று வழிநடத்த வேண்டும்."


இதை ஏற்றால் தங்கள் இலட்சியம் தடைபடும் என்று மணிமாறன் நினைத்தான். ஆனால் தாரா உறுதியாக இந்தப் போரில் பங்கேற்க வேண்டும் என்றாள். காரணம் தங்கள் முயற்சிக்கு உதவி தேவை. அது கலீப், காதிப் இவர்களால் மட்டுமே  தர இயலும். அதனால் போரில் பங்கு பெறுவது தவிர்க்க இயலாது என்றாள். முடிவில் மணிமாறன் இசைந்தான்.


இரண்டு வாரங்கள் கடந்து ஒரு பெரும் படை பெரூஸ் நாட்டை நோக்கிச் சென்றது. கணிக்க முடியாத எதிர்காலத்தை எதிர்கொள்ள நான்கு மாவீரர்கள்  பயணத்தை மேற்கொண்டனர். அவர்கள் மனம் பெரும் எழுச்சி கொண்டிருந்தது. 


வானில் ஆதவனும் அதன் சக நட்சத்திரங்களும் தம் முடிவிலா நகர்வினால் படைவீரர்களை வழிநடத்திச் சென்றது.


                                            ————**********—————                                                 

                                                         


பல பனிமலைகளைக் கடந்து, பல இன்னல்களைத் தாங்கி கனிஷ்காவும் அசோகாவும் பெரூஸ் நாட்டின் தலைநகரான ரஸ்புதினா நகரை அடைந்தனர். அரசன் விளாடிமிரின் உதவியை நாடுவது என்பது திட்டம்.


ரஸ்புதினா நகரத்தின் தெருக்கள் அகலமாகவும், இருபுறம் மகத்தான மாளிகைகளும் இருந்தன. நகரத்தின் தெருக்களை பனி  மூடியிருந்தது. சிறுவர்கள் பனியில் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தனர். ஆடவரும் பெண்டிரும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டும் முத்தமிட்டுக் கொண்டும் வீதிகளில் உலவினர். துணிகளும், வாசனைத் திரவியங்கள் விற்கும் கடைகளில் மக்கள் கூட்டம் வழிந்தது. உணவகங்களில் உணவுடன் மதுவும், நடன மங்கைகளின் நாட்டியமும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது.


அந்நகரத்தின்  ஆபரணமாக  மோஸ்க்வா நதி  அழகூட்டியது.  படகுகளில் சிலர் நதியில்  சென்று  தூண்டில்கள் விரித்து மீன் பிடித்தனர். வினோதமான பறவைகள் நதியை ஒட்டி பறந்து மீன்களைக் கவ்வி சென்றன. கரையோரம் நதியைச் சுற்றி இருந்த பாதையில் மக்கள் நிதானமாக நடந்தனர். ஆடல், பாடல் என்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்களை மகிழ்வித்தன.


நகரை சுற்றி வந்து கனிஷ்காவும், அசோகாவும் நதியோரம் அமர்ந்தனர். பிரமிப்பிலிருந்து மீண்ட கனிஷ்கா அசோகாவிடம் நதியைச் சுட்டி உரையாடினான்.


"லாமா தேசத்தின் எளிமையில் வாழ்ந்த நமக்கு இது ஒரு வித்தியாசமான உலகம் ”


"இது போன்ற நகரை நம் நாட்டில் நிர்மாணிக்கும் கனவு கண்டிருப்பாயே?"


"ஆம். சிறிது வேறுபாடுடன். இந்நகரம் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஆனால் ஜீவனற்றது. வெறும் பகட்டு மட்டுமே தெரிகிறது. நம் தேசத்தின் தனித்தன்மையுடன் கூடிய மகத்தான நகரம் ஒன்றை நான் உருவாக்குவேன்.“


"இந்நகரில் வழிபாட்டுத்தலங்கள் இல்லை. இம்மக்கள் இறை நம்பிக்கை அற்றவர்கள். உல்லாசமும், கட்டற்ற நுகர்வுமே இவர்களின் வாழ்க்கை."


"அளவற்ற செல்வம் கிடைக்கும் போது மனிதன் ஆன்மாவை இழந்து விடுகிறான். வலி இல்லாத வாழ்க்கையில் இறை நம்பிக்கைக்கு இடம் ஏது?”


திடீரென சில காவலர்கள் புகுந்து நதிக்கரையில் அமர்ந்திருந்த சிலரைக் கைது செய்து அழைத்து சென்றனர். கைதானவர்கள் வேற்று இனத்தவர்கள். 


அசோகா இது பற்றி சிலரிடம் விசாரித்து கனிஷ்காவிடம் விளக்கினான்.


"இவர்கள் பெரூஸ் நாட்டினர் அல்ல. இவர்களின் முன்னோர்கள் நசாரத் தேசத்திலிருந்து குடிப் பெயர்ந்தவர்கள். பல நூற்றாண்டுகள் இங்கு வணிகத்திலும், கல்வியிலும் பெரும் சாதனைகள் படைத்தனர். அதனால் இங்கிருக்கும் மக்கள்  இவர்கள் மீது பொறாமை கொண்டனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட அரசன் விளாடிமிர் இவ்வினத்தினர் மீது பல கொடுமைகள் இழைக்கிறான்.  திடீரென  இவ்வினத்தினரில் சிலர் கைது செய்யப்பட்டு தொலை தூர சிறைகளில் அடைக்கப்படுகின்றனர்.  அதனால் பெரும்பாலோர்  தங்கள் தாய் மண்ணான நசாரத் தேசத்திற்கு தப்பிச் சென்று விட்டனர். எஞ்சியிருப்பவர்கள் அரசின் கொடுமைக்கு ஆளாகிறார்கள். இத்தேசத்தின் அரசியலும் துர்நாற்றம் அடிக்கிறது."


"வெறுப்பு அரசியல் மிகவும் பலமான ஆயுதம். தம்மிடமிருந்து மாறுபட்டவர்கள் மீது மக்கள் சந்தேகத்துடன் விலக்கம் கொள்வது  இயல்பு. இதைப் பயன்படுத்தி பதவியில்  உள்ளவர்கள்  மக்களை உசுப்பேற்றி தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள்." 


"நாம் விளாடிமிரை சந்தித்து உதவி கேட்க நினைத்தது சரியா என்று என் மனம் சந்தேகம் கொள்கிறது. அவன் வேற்று இனத்தினரை இரு கரம் கொண்டு வரவேற்பவவனாக தெரியவில்லை."


"இது அவர்களின் உள்நாட்டு அரசியல். இதனால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை."


"நான் மேலும் விசாரித்ததில் பெரூஸ் மிங் தேசத்துடன் நெருக்கமான நட்புறவு  வைத்திருக்கிறது. விளாடிமிரை  நம் பக்கம் இழுப்பது சுலபம் அல்ல. நம்மிடம் என்ன இருக்கிறது இவர்களுக்கு தருவதற்கு. நீ வர்த்தகம் என்று சொல்வாய். மிங் தேசம் நம்மைக் காட்டிலும் பொருளாதாரத்தில் வலியது. அவர்களுடன் பல நூற்றாண்டுகளாக பெரூஸ் தேசத்தினர் வர்த்தக உறவு வைத்திருக்கின்றனர். அதை இழப்பதற்கு விளாடிமிர் சம்மதிக்க மாட்டான். இந்த தேசத்தின் அரசியல் நிலை தெரியாமல் இங்கு வந்து மாட்டிக் கொண்டோம்."


கனிஷ்கா ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். பிறகு அசோகாவிடம் தன கருத்துக்களை உரைத்தான்.


"மிங் தேசம் தர இயலாத ஒன்றை நாம் தர இயலும். இங்கு குளிர் காலங்களில் தோல் ஆடைகளை மக்கள் அணிகின்றனர். ஆனால் ஆடை விலை மிகுந்தது. நாம் இவர்களுக்கு சல்லிசான விலையில் ஆடைகள் விற்பனை செய்யலாம்."


"அதற்கு எத்தனை விலங்குகளை நாம் கொல்ல வேண்டியிருக்கும். உன் திட்டம் நம் தேசத்தின் ஆன்மாவிற்கு எதிரானது. நான் இதற்கு சம்மதியேன்."


"நம் தேசம் வாழ்வா சாவா என்ற நிலையில் இருக்கிறது. நாம் சில தியாகங்கள் செய்தாக வேண்டும்."


"இன்னொரு சிக்கல் இருக்கிறது.  கடும் பனிமலைகளைத் தாண்டி பெரூஸிலிருந்து நம் தேசத்திற்கு நுழைவதற்கு  எளிதான பாதைகள் இல்லை. நாம் பெரூஸ் நாட்டை அடைவதற்கு எதிர்கொண்ட இன்னல்கள் பல. நம் உயிரை இழக்காத குறை தான். இரு நாடுகளுக்கிடேயே வர்த்தகம் அவ்வளவு எளிதல்ல?"


"மிங் தேசத்தினர் நம் தேசத்திற்கு பாதைகள் கண்டுபிடித்துள்ளனர் அல்லவா?"


"நீ என்ன சொல்ல வருகிறாய்."


"நாம் பொருட்களை மிங் தேசத்திற்கு விற்கலாம். அவர்கள் அதனைப் பெரூஸ் நாட்டிற்கு  விற்கலாம்."


அசோகா பிரமிப்புடன் கனிஷ்காவை நோக்கினான்.


"விளாடிமிரின் உதவியுடன் நம்மிடம் மிங் தேசம் கொண்டுள்ள பகையை நட்பாக மாற்றலாம். பெரும் போர் ஒன்றைத் தடுக்கலாம். நீ ஒரு மேதை கனிஷ்கா.”


இரண்டு காவலர்கள் அவர்களை நெருங்கி தம்முடன் வருமாறு அழைத்தனர். அரச மாளிகையில் ஓரிரு நாட்கள் தங்க வேண்டும் என்றும்  முக்கியமான நபர் ஒருவர் அவர்களைச் சந்திப்பார் என்றனர். அசோகா குழப்பத்துடன் கனிஷ்காவை வினவினான்.


"நாம் கைது செய்யப்பட்டிருக்கிறோமா?"


"இல்லை அரசரை எப்படி சந்திப்பது என்று யோசித்தோம் அல்லவா. அதற்கான வாய்ப்பு தானே வந்திருக்கிறது."


விளாடிமிரின் தலைமை அமைச்சர் தினமும் அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். அரசர் அவர்களை விரைவில் சந்திப்பார் என்று கூறினார். கனிஷ்கா பொறுமை இழந்தான்.  மகள் கடும் நோய்வாய்ப்பட்டிருப்பதால் விளாடிமிர் மன உளைச்சலில் இருப்பதாக கூறினார். கனிஷ்கா தன்னால் மன்னரின் மகளைக் குணப்படுத்த முடியும் என்றான். அமைச்சர் மன்னரிடம் தான் இதை தெரிவிப்பதாக கூறினார்.


சில நிமிடங்களில் மன்னரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் மகள் கடும் சுரத்தில் படுத்திருந்தாள். கவலை தோய்ந்த முகத்துடன் விலாடிமிரும், அரசியும் அருகில் அமர்ந்திருந்தனர். அவள் ஓரிரு நாட்களில் இறந்து விடுவாள் என்று அரச மருத்துவர் கூறியிருந்தார்.


கனிஷ்கா தன்னிடமிருந்த சில பொடிகள் கொண்டு கஷாயம் தயார் செய்து சிறுமிக்கு அளித்தான். மூன்று நாட்கள் தொடர்ந்து கனிஷ்காவின் மருத்துவத்தில்  இளவரசி பூரண குணமடைந்தாள். ராணி இருவருக்கும் நன்றி செலுத்தும் விதமாக இரவு விருந்து வைத்தாள்.


அரசனும், ராணியும் லாமா தேசத்தைப் பற்றிய விபரங்களை ஆர்வமுடன் கேட்டனர். கனிஷ்கா மிங் தேசத்துடன் நிலவும் பகை குறித்து விளக்கி சமரசம் செய்வதற்கு விளாடிமிரின் உதவியைக் கோரினான்.


"ஒரு தந்தையாக உங்களுக்கு எனது நன்றி . ஆனால் ஒரு அரசனாக எனது கடமை என்னவோ அதைத் தான் செய்ய இயலும். நாளை அரசவையில் இதைப் பற்றி விவாதிப்போம்."


அரசவையில் விளாடிமிர், அரசி, அமைச்சர் அமர்ந்திருக்க கனிஷ்காவும் அசோகவும் தங்கள் தேசத்தின் நிலையை விளக்கினார்.


"சம பலம் பொருந்திய அரசுகளே நட்புறவுடன் இருக்க இயலும். அதன்படி இயல்பாக மிங், பெரூஸ் தேசங்கள் பல நூறாண்டுகளாக நட்புடன் உள்ளன. லாமா தேசம் விசித்திரமான நிலமாக உள்ளது. உங்களிடம் படை பலம் முற்றிலும் இல்லை. அப்படியானால் எதிரி நாடுகள் உங்களைக் கவர்வதைத் தடுக்க இயலாது."


"மங்கள் நாட்டு படைகள் மிங் தேசத்தின் தலைநகரத்தையும் மற்றும் சில நகரங்களையும் கைப்பற்றியுள்ளது. அதனை மீட்க மிங் தேசத்து படைகள் தடுமாறுகின்றன. எங்கள் படை உதவியை மிங் நாட்டு அரசர் கோரியுள்ளார்."


"இந்த நிலைக்கு காரணம் நீங்கள் இருவர் தான் என்று மிங் அரசர் நம்புகிறார்.  நீங்கள் இங்கு வந்ததை உளவாளிகள் அவருக்கு செய்தி அனுப்பி விட்டனர். உங்களைக் கைது செய்து ஒப்படைக்கும்படி அவரின் கோரிக்கை. அதை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன். அவர்களிடம் நீங்கள் ஒப்படைக்கப்பட்டால் உங்களுக்கு மரணம் நிச்சயம். ஆனால் நீங்கள் எனக்கு செய்த பேருதவி காரணமாக எங்கள் தேசத்தின் சிறையில் நீங்கள் இருப்பீர்கள். ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை உங்களுக்கு அளிக்கிறேன். ஆனால் மற்ற குற்றவாளிகள் போல  நடத்தப்பட மாட்டீர்கள். உடல் உழைப்புக்குப் பதிலாக அலுவல் வேலைகள் மட்டுமே உங்களுக்கு அளிக்கப்படும். சிறையின் வசதியான அறைகளில் நீங்கள் தங்குவீர்கள். ஒரு மன்னனாக என் கைகள் கட்டப்பட்டுள்ளன. என்னை மன்னியுங்கள்."


விளாடிமிரின் முடிவைக் கேட்டு ராணி கோபத்துடன் வாதம் செய்து அரசவையை விட்டு சென்றாள். 


இரண்டு குதிரைகளில் இருவரும் ஏற அவர்களைச் சுற்றி பத்து வீரர்கள் உடன் வர தயார் ஆனர். மாளிகையின் மேல் தளத்தில்  விளாடிமிர் மற்றும் அவன் குடும்பத்தினர் நின்று கொண்டிருந்தனர். வீரர்கள் இருவரின் கைகளையும் கட்ட முயன்றனர். அரசன் வேண்டாம் என்று மேலிருந்து சைகை செய்தான்.


கிளம்பும் போது அரசனின் மகள் கீழே ஓடி வந்து கனிஷ்காவின் கைகளை முத்தமிட்டாள். தன் நினைவாக வைத்துக் கொள்ள தான் வரைந்த ஓவியம் ஒன்றைத் தந்தாள். கனிஷ்காவின் முகம் ஓவியமாக வரையப்பட்டிருந்தது.


பயணம் பெரூஸ் தேசத்தின் தெற்கு திசை நோக்கி தொடங்கியது. 


பத்து நாட்களுக்குப் பிறகு ஒரு கடற்கரை நகரத்திற்கு வந்தனர். அங்கிருந்து பல சிறு தீவுகளுக்குச் செல்ல படகுகள் இருந்தன. அத்தீவுகள் முழுதும் கைதிகள் அடைத்து வைக்கப்பட்ட சிறைகள் இருந்தன.


இருவரும் ஒரு தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு வசதியான அறைகள் கொண்ட ஒரு கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.


அத்தீவில் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதி இருந்தது. சிறிய கணக்கு வழக்கு வேலைகள் அவர்களுக்குத் தரப்பட்டது.


அவர்கள் மற்ற கைதிகள் அடைத்து வைக்கப்பட்ட சிறைகளுக்குச் சென்றனர். அங்கு ரபீக் என்னும் நசாரத் தேசத்தவனின் நட்பு கிடைத்தது. அவன் இச்சிறைகள் எதற்காக இயங்குகிறது என்று விபரங்கள் கூறினான்.


"என்னைப் போன்ற நசாரத் தேசத்தினர், போர்க்கைதிகள், அரசுக்கு எதிராக புரட்சி செய்தவர்கள் இச்சிறைகளில் இருக்கிறார்கள். இத்தனை சிறைகள், மற்றும் கைதிகளைப் பராமரிப்பதற்கு அரசுக்கு எத்தனை செலவாகும். அதற்குப் பதிலாக அனைவரையும் கொன்று விடுவது மேலல்லவா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அங்கு தான் விளாடிமிரின் அறிவாற்றல்  தெரிகிறது. பெரூஸ் தேசத்தின் பெரும் நகரங்களுக்கும், மக்களின் செழிப்பான வாழ்வுக்கும் இச்சிறைகளே அடித்தளம். ஒவ்வொரு தீவில் இருக்கும் சிறைகளும் பல தொழிற்சாலைகள் கொண்ட நகரம் என்று உருவகம் செய்துக் கொள்ளுங்கள். இங்கு தயாரிக்கப்படாத பொருட்களே இல்லை.  கைதிகள் பதினாறு மணி நேரம் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு  ஊதியம் என்று எதுவும் இல்லை. மூன்று வேலை மட்டரக உணவு. அதனால் இங்கிருந்து நகரத்திற்குச் செல்லும் பொருட்களின் விலை மிகவும் சல்லிசானது. இச்சிறைகள் இல்லை என்றால் பெரூஸ் தேசத்தின் பொருளாதரம் சரிந்து விடும்.”


"கைதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் சொல்லில் அடங்காதது. ஒரு சிறிய அறையில் ஆட்டு மந்தைகள் போல அனைவரும் அடைக்கப்படுவார்கள். இங்கிருக்கும் காவலர்கள் மனிதர்களே இல்லை. பிறரின் வேதனை, வலி இவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு. வேலையில் நடக்கும் சிறிய தவறுகளுக்கு கூட பிரம்படி தரப்படும்."


"இங்கு கிளர்ச்சிகள் நடந்துள்ளதா."


"ஒரு முறை அனைத்து  கைதிகளும் உணவை மறுத்தனர். ஒரு வாரத்திற்கு மேல் பலரால் பசியைத் தங்க இயலவில்லை. சாத்வீக கிளர்ச்சி தோல்வி அடைந்தது.”


மற்ற கைதிகள் கனிஷ்காவுக்கும்,  அசோகாவுக்கும்  விசேஷ சலுகைகள் தரப்படுவதைப் புரிந்து கொண்டனர். அதனால் இவர்களைக் காணும் போதெல்லாம் வசை பாடினர்.


கனிஷ்கா இது பற்றி அசோகாவிடம் விவாதித்தான். 


"இங்கிருந்து நாம் தப்பிக்க வேண்டுமென்றால் ஒரு ஆயுதக்கிளர்ச்சி நடத்த வேண்டும். அதற்கான திட்டங்கள் என்னிடம் உள்ளன. அதன் முதல் படியாக மற்ற கைதிகள் இருக்கும் சிறைகளில் நாம் தங்க வேண்டும்."


அசோகா சம்மதித்தான். அடுத்த நாள் இருவரும் பொது சிறைகளில் அடைக்கப்பட்டனர்.


தனது திட்டத்தை ரபீக் மற்றும் அவன் தோழர்களுடன் கனிஷ்கா விவாதித்தான். இரண்டு வாரங்கள் கழித்து சிறைவாசிகளின் புரட்சி நடந்தது.


எல்லா சிறைகளையும் சேர்த்து ஐந்தாயிரம் காவலர்கள் இருந்தனர். ஆனால் கைதிகளோ ஐம்பதாயிரம் பேர். அதில் நல்ல உடல் நலனுடன் இருந்தவர்கள் பத்தாயிரம் பேர். அருகிலிருந்த தீவில் ஆயுதக் கிடங்கு  இருந்தது. ஞாயிறும் அன்று எல்லா இடங்களிலும் காவல் குறைவு. அனைவரும் மதுசாலைகளிலும், கேளிக்கை அரங்குகளிலும் நிறைந்திருந்தனர். அன்று சில கைதிகள் ஒன்று சேர்ந்து அங்கிருக்கும் ஆயுதங்களைக் கைப்பற்றினர். போதையில் திளைத்திருக்கும் வீரர்களைக் கொன்றனர்.


தீவுகள் அனைத்தும் சிறைவாசிகளின் கட்டுக்குள் வந்தது. ஆயினும் கனிஷ்கா பதட்டத்துடன் இருந்தான்.  அரச படைகள் எந்நேரமும் வந்து தாக்கலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.


படைகள் வந்தன. அரச படைகள் அல்ல. மணிமாறனின் படைகள். 


அதன் பின் கடல் அன்னம் அலைக்கடலில் முளைத்தது.


நடப்பவை கனவா என்று கனிஷ்கா மற்றும் சிறைவாசிகள் வியப்பில் ஆழ்ந்தனர்.


                                      ———-**********———


























                                              




                                                         பகுதி -  8


லியோவ் நகரத்தின் கடற்கரை பல தேசத்து வீரர்களால் நிரம்பியிருந்தது. முதலில் ஒரு தேசத்து வீரர்கள் மற்ற தேசத்தவரை வியப்புடன் அணுகினர். பிறகு ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கேலி பேசி, இணைந்து மது அருந்தினர். 


நகரத்திற்கு வந்திருப்பது விளாடிமிரின் படைகள் அல்ல என்பதைக் கனிஷ்கா அறிந்தான். படையை தலைமைத் தாங்கி வந்த மணிமாறனைக் கனிஷ்கா வியப்புடன் நோக்கினான். அவன் போன்ற கருமை நிறமும், மெலிந்த தேகமும், உறுதியான உடற்கட்டும் மற்ற இனத்தாரிடம் அவன் கண்டதில்லை. அவன் பின் வந்த தாரா கருநிறத்தவள் ஆயினும் பேரழகியாய் இருந்தாள். 


சிறிது நேரத்தில் மேலும் சில படை வீரர்கள் நகரத்திற்குள் நுழைந்தனர். அவர்களைக் கலீபும், காதிபும் தலைமைத் தாங்கி வந்தனர். கலீபைக் கண்டதும் நசாரத் தேசத்து சிறைக்கைதிகள் உற்சாகக் குரலிட்டு வரவேற்றனர்.


கனிஷ்கா மணிமாறனிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். அவன் லாமா தேசத்தை சேர்ந்தவன்  என்பதை அறிந்து மணிமாறன் பெரும் உவகை கொண்டான். தனக்கு கனிஷ்கா உற்ற தோழனாய் இருப்பான் என்று உள்ளுணர்வு கூறியது. கலீப் மணிமாறனிடம் ஏதோ வினவினார். பிறகு தன் வீரர்களிடம் இவன் நம்மவன் என்று அவன் கைகளை பற்றினார்.


சிறிது நேரத்தில் கடற்கரை பரபரப்பானது. ஒரு மாபெரும் கப்பல் கரையை நோக்கி வந்தது. அது விளாடிமிரின் கப்பலாக இருக்கலாம் என்று வீரர்கள் அனைவரும் பதட்டத்துடன் இருந்தனர்.


இம்மாதிரியான கப்பல் விளாடிமிரிடம் இல்லை என்று காதிப்  அமைதிப்படுத்தினார். வந்தது கடல் அன்னம். கப்பலிலிருந்து ஒரு படகில் ரூசோ, ஸ்டெல்ல்லா மற்றும் அலெக்சாண்டர் வந்தனர்.


அலெக்சாண்டரைக் கண்டதும் சிறைக்கைதிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவன் பெரூஸ் தேசத்து மக்களின் அபிமானம் பெற்றவன் என்று அனைவரும் அறிந்தனர்.


அனைவரும் பரஸ்பர அறிமுகத்திற்குப் பின் முக்கியமான தலைவர்களும், தளபதிகளும் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து  ஆலோசனை நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.


அடுத்த நாள் காலை ஆலோசனை கூட்டம்  தொடங்கியது. ஸ்டெல்லா முதலில் பேசினாள். 


"உங்கள் அனைவரையும் சந்தித்ததில் எனக்கு இன்ப அதிர்ச்சி. உங்களுக்கும் அவ்வாறே என்று அறிகிறேன். நாம் அனைவரும் இந்த நகரத்திற்குப் பிரயாணம் செய்வதற்கு முன் இங்கு புதிய நண்பர்களைச்  சந்திப்போம்  என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.  பல தேசத்தின் கைகள் இணைந்து ஒரு புதிய வரலாற்றை நாம் உருவாக்குவோம்.


என் தேசம் நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட பெருந்தீவு.  என் இனத்தாரைத் தவிர பிறரை நான் அதிகம் கண்டதில்லை. இங்கு இத்தனை வேறுபட்டிருக்கும்  பல்லினத்தவரை முதன் முறை பார்க்கிறேன். 


நமது நோக்கம் ஒன்றே எனினும் நமக்குள் பேதங்கள் வரலாம். நாம் பல வித பண்பாடு  பின்னணி கொண்டவர்கள் என்பதால் சிக்கல் அதிகமாகிறது. அதைத் தவிர்க்க நமக்கிடையே தொடர் உரையாடல் இருக்க வேண்டும். வேற்றுமைகளை வளர விடாமல் உடனே களைய வேண்டும். அந்த பொறுப்பு இங்கு அமர்ந்திருக்கும் அனைவரையும் சாரும்.


இனி அடுத்த நம் செயல்கள் குறித்து விவாதத்தை தொடங்கலாம்."


விளாடிமிர் வீழ்ந்தால் அடுத்த தலைவன் யார் என்ற கேள்வியை ரூசோ எழுப்பினான். அனைவரும் ஒருமித்தமாக அலெக்சாண்டர் பெயரைக் கூறினர்.


படைகளுக்கு  மணிமாறன், தாரா, அலெக்சாண்டர், காதிப் மற்றும் கலீப் இணைந்துத் தலைமைத் தாங்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.  ஐவருக்கும் படைவீரர்கள் பிரித்துத் தரப்படும். போர் குறித்த வியூகங்கள், முடிவுகள் எடுப்பதில் இவர்களுக்கு முழு அதிகாரம் தரப்படும். யாருடைய குறுக்கீடும் இருக்காது.


பல தேசத்தவர் என்பதால் கருத்து வேறுபாடுகள் வரலாம். அனைவரையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பு  அசோகாவிற்குத் தரப்பட்டது. வேறுபாடுகள் குறித்து இறுதி முடிவெடுப்பது  ஸ்டெல்லா மற்றும் கனிஷ்காவைச் சாரும் என்று முடிவு செய்யப்பட்டது.


போருக்கான புது வித ஆயுதங்கள் உருவாக்க  நீட்ஷே, ஸ்பினோசா பணிக்கப்பட்டார்கள்.


நடக்கும் போர் மாபெரும் சரித்திர நிகழ்வு. அதனைப் பதிவு செய்து ஒரு காவியத்தை உருவாக்க  ரூசோ முன் வந்தான்.


இன்னும் இரண்டு வாரங்களில் படை ரஸ்புதினா நகரை நோக்கி நகரும் என்று திட்டமிடப்பட்டது.


பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி.  அனைவரும் கலைந்து சென்ற பின் நீட்ஷேயைத் தனியாக அழைத்து கனிஷ்கா நீண்ட நேரம் ஆலோசனை செய்தான்.


பிறகு இருவரும் கனிஷ்காவின் இருப்பிடத்தை நோக்கிச்  சென்றனர்.


                                        ———-**********———


மணிமாறன் கனிஷ்காவுக்குச்  சில நாட்களாக வாட்பயிற்சி அளித்து வந்தான். முதல் சில நாட்கள் தட்டுமாறிய கனிஷ்கா விரைவில் நல்ல தேர்ச்சி பெற்றான். அவன் தற்காப்பு முறை நூதனமாக இருந்தது. நீண்ட நேரம் எதிரியின் தாக்குதலைத் தாக்குப்பிடித்து, அவனைப் பலவீனப்படுத்துவது கனிஷ்காவின் உத்தியாக இருந்தது. மணிமாறன் அன்று முதன் முறை பயிற்சியின் போது தோல்வி உற்றான்.


"நான்கு  மணிநேரம் நீ ஒரு முறை கூட என்னைத் தாக்கவில்லை. உனது கவனம் மிகத் தெளிவாக இருக்கிறது. எனது தாக்குதல்களை மிக நுட்பமாக தவிர்த்தாய்.  ஒரு நொடி நான் சோர்வுற்றபோது என்னை மடக்கி விட்டாய்."


"நான் சிறு வயது முதல் தியானம் செய்கிறேன். அதனால் என் புலன்கள் கூர்மையாக உள்ளது.  என்னால் இந்த அறையில் ஒரு எறும்பு  ஊர்வதைக் கூட உணர முடியும்."


“நீ வாளைப் பிரயோகம் செய்வதில்  ஆக்ரோஷத்தைக்  காட்டவில்லை. ஒரு மங்கையின் நர்த்தனத்தின் அசைவை  ஒத்திருந்தது. உனது வாட்பயிற்சியின் நோக்கம் என்ன?"


"வெறும் தற்காப்பிற்கு மட்டுமே."


"உன் தற்காப்பிற்காக இன்னொரு உயிரைக் கொல்ல இயலுமா?"


"கொல்வதைத் தவிர்க்க தற்காப்பின் அனைத்து அம்சங்களையும் பிரோயகம் செய்வேன். இப்போது நடந்த வாட்பயிற்சி போல. ஆனால் சில சமயங்களில் உயிரிழப்பைத் தவிர்க்க இயலாது என்பதை உணருகிறேன். இங்கு சிறைக்கைதிகளை அரச காவலர் படைகளிடமிருந்து விடுவிக்க வன்முறைப் பிரோயகம் செய்ய அவசியமாக இருந்தது. மேலும் நீட்ஷே மற்றும் ஸ்பினோசா உருவாக்கும் புது ஆயுதங்கள் பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும் என்பதையும் நான் அறிவேன்."


"உங்கள் தேசத்தின் பாதுகாப்பிற்குப் படைகள் இல்லை என்று கேள்விப்பட்டேன். வித்தியாசமான உலகம் உன்னுடையது."


"சொல்ல போனால் என் இனத்தின் முதல் தீவிரவாதி நான். எனக்கு முன்னர் இருந்த வழிகாட்டிகள் வன்முறையை முற்றிலும் தவிர்த்தனர். கொல்ல வரும் எதிரி முன் வலிந்து சிரத்தைக் காட்டு. அதன் மூலம் எங்கோ ஒளிந்து கிடக்கும் அவன் மனசாட்சியைத் தூண்டு என்பதே என் குரு நரோபாவின் கூற்றாக இருந்தது."



"உன் நம்பிக்கையை நான் குலைக்கவில்லை. உனக்கு எந்த உதவி வேண்டுமானாலும் நான் செய்ய தயார். நம் இருவரின் புது நட்புக்காக. நம் இரு தேசத்தின் புதிய நல்லுறவுக்காக."


இருவரும் மற்றவரின் கரங்களை இறுக்கமாக பற்றிக் கொண்டனர்.  


                                           ————*************————-


ஸ்டெல்லா கடல் அன்னத்தைக் காட்டுவதற்காக தாராவை அழைத்திருந்தாள். கப்பலைப் பார்த்து தாரா பிரமித்தாள். 


"நடக்கவிருக்கும் போரில் நாம் தப்பித்து மீண்டால் இது போன்ற கப்பல் ஒன்றை உன் தேசத்திற்குப் பரிசாக அளிக்கிறேன்."


"பெரும் புயல்களை தாங்கும் வல்லமை கொண்டதல்லவா இந்தக் கப்பல்."


ஸ்டெல்லா அதற்கு மறுமொழி கூறாமல் தாராவின் பின்புறத்தைப் பற்றினாள். பிறகு கைகளை அவள் இடையின் வளைவுகளில் செலுத்தி, மார்பகங்களை அழுத்தினாள்.


"கருநிறத்தழகி. உன் கண்கள் எத்தனைப் பெரிது. உன் பின்னழகு, மார்புகளின் திண்மை பாறையை ஒத்திருக்கிறது. அந்த ஆடவன். அவன் பெயர் என்ன? மணிமாறன். அவன் உன்னை நாய்குட்டி போல தொடர்வதில் எந்த வியப்பும் இல்லை."


தாரா தன் உதடுகளை ஸ்டெல்லாவின் உதடுகளில் பதித்தாள். ஸ்டெல்லா மதி மயங்கியவளாய் இருந்தாள். பிறகு விருட்டென தாராவின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள்.


"இது தவறு. நான் ரூசோவிற்கு இழைக்கும் துரோகம்."


"இது துரோகம் இல்லை. சகல ஜீவராசியின் உள்ளே உறைந்திருக்கும் அடிப்படை உணர்வு."


"ஆனால் மனிதர்களாகிய நாம் நாகரீகமானவர்கள். நம் இருவரின் நடத்தை ஒருவன் ஒருத்திக்கு இடையே உள்ள பந்தத்தின் புனிதத்தை மாசுபடுத்துவது."


"என் தேசத்தில் இது மிகவும் இயல்பானது."


"யுதோபியாவில் ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் உறவு கொள்வதெல்லாம் நினைத்துக் கூட பார்க்க இயலாதது."


"அங்கும் நடக்கும். மறைவாக."


"இருக்கலாம். ஆனால்  உடல் இச்சைகளைக் கட்டுப்படுத்துவதே அக விடுதலைக்கான முதல் படி என்று எங்கள்  மதத்தில் கூறப்பட்டுள்ளது."


"உடலுக்கும், அதன் இச்சைகளுக்கு அளிக்கும் சுதந்திரம் மூலம் தான் அக விடுதலை சாத்தியமாகும். அக விழிப்பு மகிழ்வு நிலையில் நிகழும். குற்றவுணர்வு கொண்டு துயருற்ற நிலையில் அல்ல."


"அனைத்து ஞானிகளும் துயரம் மூலமே வாழ்வின் மகத்தான உண்மைகளைக் கண்டனர்.”


"மானுட வாழ்வு பெரும் கொடை. வாழ்வின் ஒவ்வொரு கணமும்  களியாட்டமாகக் கொண்டாட வேண்டும். இதை அறிவதற்கு சிறிதளவு  மூளை போதும். ஞானம் தேவையில்லை."


"உன்னிடம் வாதம் செய்பவர் தோற்க தான் வேண்டும். உங்கள் தேசத்தின் பெண்கள் கட்டற்ற சுதந்திரம் கொண்டவர்கள். ஆனால் உங்கள் அரசியல் அவ்வாறு இல்லை."


"எதனால் அவ்வாறு சொல்கிறாய்."


"உங்கள் தேசத்தை ஒரு சிறு குழு ஆள்கிறது. மக்கள் அரசியல்வாதிகளின் பிடிகளில் சிக்கியுள்ளனர். தங்கள் வாழ்வை இந்தக் குழு முடிவு செய்கிறது என்பதைக் கூட உன் நாட்டு மக்கள் உணரவில்லை."


"அந்த குழு சான்றோர்களாக இருந்தால் பிரச்சினை இல்லை."


"ஒரு நாட்டின் அரசியல் பல குழுக்களிடையே நடத்தப்படும் சமரசம். எந்த அரசியல் முடிவிலும் மக்களின் ஒரு பகுதி  வெல்லும், இன்னொரு பகுதி  இழக்கும். ஒரு நல்ல தலைவன் இழப்புகளை மிகையாகமல் வைத்திருக்க முயல வேண்டும்."


"அது எவ்வாறு சாத்தியம்."


"நாட்டின் பல குழுக்களுக்கிடையே நடத்தப்படும் தார்மீக பேரம் மூலம். அதற்கு ஒவ்வொரு இனமும்  அரசியலின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். அது ஜனநாயகம் மூலமே சாத்தியம்."


"என் நாட்டின் தற்போதைய தலைவர்கள் பிரச்சினை போது தான்தோன்றித்தமான முடிவுகளை எடுப்பதில்லை. சம்பந்தப்பட்ட குழுக்களிடைய பேச்சுவார்த்தை நடத்தி இணக்கமான முடிவை எடுக்கிறார்கள்."


"ஆனால் இந்த தலைவர்கள் போய் மற்றவர் வந்தால் இது நீடிக்கும் என்று உறுதி கூற இயலாது. பல்லினங்களுக்கிடையே சமரசம், பேச்சுவார்த்தை - இவையெல்லாம் அரசியல் சாசனத்திலேயே உறுதி செய்யப்பட வேண்டும். அதுவே நிலைத்து நீடிக்கும்."


"எங்கள் தேசத்தில் அரசியல் சாசனம் கூட இல்லை."


"உங்கள் அடிப்படை பலவீனமாக உள்ளது."


"ஆனால் எல்லா குடிமகனுக்கும் சரியான தேர்வு செய்யும் திறன் இல்லையே?”


"ஒவ்வொரு குடிமகனின் தேர்வும் தன் சுயநலத்தைச் சார்ந்தே அமைய வேண்டும். குடிமகனுக்காக தான் தேசம். தேசத்திற்காக குடிமகன் அல்ல."


"ஒவ்வொரு மனிதனும் தன் தேவையைப் பொறுத்து தேர்வு செய்தால் சமரசம் எங்கே இயலும். வெறும் குழப்பம் தானே மிஞ்சும்."


"தேர்தல் ஓட்டெடுப்பின் மூலமாகவும், அதன் பின் ஆட்சியில் பல கட்சிகளுக்கிடையே நடத்தப்படும் பங்கீடு மூலமாகவும் சமரசம் அமையும். ஒரு சந்தையில் வெளியே இருந்து பார்ப்பவருக்கு வெறும் குழப்பம் மட்டுமே தெரியும். ஆனால் அங்கு நிகழும் தெளிவான முடிவுகள் உள்ளிருந்து பார்ப்பவருக்கே தெரியும்."


"நீ சொல்வது யோசிக்க வேண்டியது. இந்த வாதத்தில் நீ வெற்றி பெற்று விட்டாய்."


"சிறிது நேரத்தில் இருட்டி விடும். நாம் கரை நோக்கிச் செல்ல வேண்டும்."


இருவரும் கப்பலிலிருந்து இறங்கி படகில் கரை நோக்கிச் சென்றனர்.


                                 ———**********———-


கடற்கரையில் நீட்ஷேவும், ஸ்பினோசாவும் தீவிரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன் அசோகா இணைந்துக் கொண்டான்.


"இரு அறிவியல் மேதைகள் உரையாடும் போது நான் குறுக்கிடவில்லை என்று நம்புகிறேன்."


ஸ்பினோசா புன்னகையுடன் அசோகாவை அருகில் அமர சைகை செய்தான்.


"உரையாடலில் இணைபவர் இன்னொரு அறிவியல் மேதை என்றால் எங்களுக்கென்ன தொந்தரவு.  அவர் தத்துவ நிபுணர் என்றும் கேள்வி." 


"உரையாடல் எதைப் பற்றியது என்று தெரிந்து கொள்ளலாமா?"


"இந்த பிரபஞ்சத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள், கோள்கள் இருக்கின்றன. அவற்றில் ஏதோ ஒன்றில் நம் போன்ற பூமியும், நம்மைப் போன்ற மனிதர்கள் இருக்க இயலுமா என்பது விவாதத்தின் சுருக்கம்."


 நீட்ஷே அதை ஆமோதித்தான்.


"அந்த உலகில் நீட்ஷே, ஸ்பினோசாவின் இன்னொரு பிரதி உள்ளதா என்ற விசித்திரமான கேள்வியை ஸ்பினோசா எழுப்பினான்."


"அங்கிருக்கும் நீட்ஷே,  ஸ்பினோசா நம்மைப் போன்று இக்கணம் உரையாடிக் கொண்டிருப்பார்களா என்ற கேள்வியும் எழுந்தது."


"கேள்விக்கான பதில் கிடைத்ததா?"


"பல கோணத்தில் சிந்தித்தும் இதற்கான பதில் இல்லை."


அசோகா புன்முறுவலுடன் தன் பதிலைக் கூறினான்.


"இந்த பிரபஞ்சம் எல்லையற்றது.  அதில் உள்ள துகள்களும் எல்லையற்றது. ஆனால் துகள்களின் சேர்க்கை எல்லைக்குட்பட்டது. நம் பூமியும், அதில் நீட்ஷே, ஸ்பினோசா வாழும் பல உலகங்கள் இந்த பிரபஞ்சத்தில் இருப்பது இயல்பல்லவா."


"அருமையான பதில். அசோகாவிற்கு  தோன்றியது நமக்கேன் தோன்றவில்லை நீட்ஷே?"


"அவர் தத்துவ நிபுணர். வித்தியாசமான மாற்றுக் கோணத்தில் சிந்திக்க வல்லமைப் பெற்றவராய்  உள்ளார்."


அசோகா தன்னடக்கத்துடன் புன்னகை செய்தான்.


"தத்துவத்தின் நோக்கம் மாற்றுக் கோணத்தில் சிந்திக்க கற்பது தான்.  தத்துவம் அறிவியலைத் தாண்டி கலை, பண்பாடு, அறம், சமூகம் பற்றியும் சிந்திக்கும் துறை. அதனால் அறிவியலில் இல்லாத கருணை மற்றும் அழகுணர்வு  தத்துவத்தில் காணலாம். அறிவியலை எவ்விதம் பயன்படுத்துவது என்பதற்கான பதில் அறிவியலில்  இல்லை. பதில் தத்துவம் மற்றும் இலக்கியத்தில் உள்ளது.”


"நன்று. எங்கள் முன் தற்போது பெரும் அறக்கேள்வி ஒன்று  உள்ளது.  அதற்கான பதிலை நீ தான் கூற வேண்டும்."


ஸ்பினோசா சைகை செய்ய மூவரும் கடற்கரையை விட்டு அகன்றனர்.


சிறைச்சாலையை ஒட்டியுள்ள ஒரு கட்டிடத்திற்குள் நுழைந்தனர். அங்கு சில ஆயுதங்கள் இருந்தன.


"எங்களுக்கு இருக்கும் குழப்பம் இதுதான். நடக்கவிருக்கும் போரில் புதுவிதமான ஆயுதங்களை உருவாக்க எங்களுக்குக் கட்டளை இடப்பட்டது. இவை வெடி மருந்துகளுடன் இணைக்கப்பட்ட ஏவுகணைகள். இவற்றை  போரில் பயன்படுத்தினால் எதிரியின் நகரத்தில் பலத்த உயிர்ச்சேதம் ஏற்படும். வீரர்கள் மட்டுமன்றி நகரத்து மக்களும் இறப்பது உறுதி. இதை உருவாக்குவது என் மனதிற்கு சம்மதமாக இல்லை. நீட்ஷே இதில் தவறேதும் இல்லை என்கிறான். உன் கருத்தென்ன அசோகா.”


"போரில் வெற்றி  எவ்வாறு  முக்கியமோ அது போல உயிர்ச்சேதம் குறைவாக இருப்பதை உறுதி செய்வதும், சாதாரண குடிமக்களை பெரிதளவு பாதிக்காத வண்ணம் போரை நிறைவேற்றுவதும் நல்ல தலைமையின் அடையாளம்."  


அது வரை அமைதியாக இருந்த நீட்ஷே இடைப்புகுந்தான்.


"இது வரை எந்தப் போரும் அவ்வாறு நடத்தப்படவில்லை என்று வரலாறு கூறுகிறது. போரில் எதிரிகளின் பெண்டிர் மற்றும் குழந்தைகக்கு கணக்கிலடங்கா கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளது."


"இருக்கலாம். ஆனால்  மனித நேயத்துடன் நடத்தப்படும்  முதல் போராக நாம் பங்கு கொள்ளப் போகும் போர் இருக்கலாம் அல்லவா?"


"மனிதநேயத்துடன் நடத்தப்படும் போர். ஒரு வாக்கியத்திற்குள் இரண்டு மாறு தன்மை கொண்ட சொற்கள். நாங்கள் வெறும் அம்புகள்.  எய்தவர்கள் யாரோ.”


அசோகா கேள்வியுடன் நீட்ஷேயை நோக்கினான்.


"ஆம் இந்த ஆயுதங்களை உருவாக்க நம் தளபதிகள்  கலீப், காதிப் மற்றும் மணிமாறனின் கட்டளை. "


"இதில் ஸ்டெல்லா மற்றும் கனிஷ்காவின்  நிலைப்பாடு என்ன."


"எங்கள் இருவரின் நிலைதான் அவர்களுடையதும். தெளிவின்மை."


"கனிஷ்காவும் இதை எதிர்க்கவில்லையா? எவ்வளவு மாறிவிட்டான். நான் அறிந்த கனிஷ்கா இவன் இல்லை. நான் இப்போதே அவனிடம் இதைப் பற்றி விவாதிக்க வேண்டும்."


அசோகா அங்கிருந்து வெளியேறி கனிஷ்கா இருக்கும் கட்டிடத்தை நோக்கி விரைந்தான்.


                                          ————**********————-


கனிஷ்கா கையில் மதுக்கோப்பையுடன் இரு பெண்களின் அணைப்பில் அமர்ந்திருந்தான். அசோகா தனிமையில் பேச விரும்பியதால் பெண்கள் அகன்றனர்.


அசோகா - "நடக்கவிருக்கும் போரில் அழிவு ஆயுதங்கள் பயன்படுத்த நீ சம்மதம் தெரிவித்தாய் என்று அறிகிறேன். அது பற்றி விளக்கம் தேவை."  


கனிஷ்கா - "விளக்கம் கேட்பது அசோகாவென்றால் கூறித் தான் ஆக வேண்டும். எனக்கு இதில் முழு ஒப்புதல் இல்லை. ஆனால் இதை விட வேறு சிறந்த பாதை எனக்கு தெரியவில்லை."


அசோகா - "ஒரு நகரம் முற்றொழிக்கப்படும்.  அப்பாவி மக்கள் கருகி இறப்பர். இதை நானறிந்த கனிஷ்கா சம்மதிக்க மாட்டான். நீ மாறி விட்டாய்."


கனிஷ்கா - "நம்முடைய வீரர்கள் பலம் ஐம்பதாயிரம் பேர். எதிரியின் பலம் அறுபதாயிரம் பேர். சம பலம் கொண்டதால் இரு தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாதது. என்ன சிறப்பான வியூகம் அமைத்தாலும் போர் பல மாதங்கள், ஏன் வருடங்கள் கூட நீளும். பட்டினி, நோய் என்று  பொது மக்கள் அவதிப்பட்டு இறப்பது உறுதி. உனக்கு வேறு மார்க்கம் தெரிந்தால் கூறு."


அசோகா - "விளாடிமிர் நம் மீது நல்லெண்ணம் கொண்டவன். மிங் அரசனிடமிருந்து நம் உயிரைக் காப்பாற்றியவன்.  ஓரு சிறு தாக்குதல் நடத்துவது போல  பாவனை செய்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கலாம். பெரும் போரைத் தவிர்க்கலாம்."


கனிஷ்கா - "போரைத் தற்போதைக்கு தவிர்க்கலாம். சில காலம் கழித்து மீண்டும் போர் வராது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த போர் இரண்டு நாடுகளுக்கிடையே மட்டும் நடப்பது அல்ல. ஐந்து நாடுகள் இதில் ஈடுபட்டுள்ளன. அடுத்த போருக்கான தூண்டுதல் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம்."


அசோகா - "அதற்காக?"


கனிஷ்கா - "அதற்காக இந்தப் போரில் எதிரிக்கு  ஒரு மாபெரும்  அழிவை ஏற்படுத்த வேண்டும்.  எதிரிக்கு பயமும், பிரமிப்பையும் ஏற்படுத்த வேண்டும். அடுத்து நம்மைத் தாக்க அவன் யோசிக்கவே இயலாத வண்ணம் அழிவு இருக்க வேண்டும். அதுவே நிலையான அமைதிக்கு அஸ்திவாரம். வருங்காலத்தில் பல போர்களைத் தடுக்க இந்த போர் அமையும். பல பேரழிவுகளைத் தடுக்க இந்த அழிவு. புரிகிறதா."


அசோகா - "இந்த உபாயத்தைக் கூறியது யார்?"


கனிஷ்கா - "யான்".


அசோகா - "உன்னை நம் முன்னோர் மன்னிக்க மாட்டார்கள். வருங்காலச் சந்ததியினர் தூற்றுவார்கள். சரித்திரத்தில் நீ ஒரு கரும்புள்ளியாய் இருப்பாய்."


அசோகா அங்கிருந்து அகன்றான். கனிஷ்கா அவன் செல்வதைப் புன்னகையுடன் நோக்கினான்.  


                                          ———-***********———


படைகள் ரஸ்புதினா நகரை நோக்கி நகர்ந்தது. பல கிராமங்களையும், நகரங்களையும் கடந்தது. வழியில் எந்த எதிர்ப்பும் படைகள் எதிர்கொள்ளவில்லை. கலீப் விளாடிமிரின் படைகள் தங்களை இடையில் சந்தித்து அதிர்ச்சி தரலாம் என்று எதிர்பார்த்தார். 

ஆனால் விளாடிமிர் ரஸ்புதினா நகரின் கோட்டையே தனக்கு பலம் என்று கருதினான்.


படைகள் சில கிராமங்களில் நட்பையும் சில இடங்களில் எதிர்ப்பையும் எதிர்கொண்டன. எக்காரணம் கொண்டும்  மக்களின் செய்கைகளால்  வீரர்கள் தூண்டப்படக் கூடாது என்பது கதிப்பின் ஆணை. போருக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழியில் சேகரித்துக் கொண்டனர்.   


படைகள் ரஸ்புதினா நகரின் கோட்டையை நெருங்கினர். மிக உயரமான கோட்டைச் சுவர்களைக் கொண்டிருந்ததால் எதிரிகள் தாக்கி உள்ளே செல்வது கடினம். கோட்டைக்கு முன் பெரும் வெட்டவெளியும், சற்றுத் தள்ளி மேடான ஒரு சிறு குன்றும் இருந்தது.  படைகள் குன்றின் மீது தங்க மணிமாறன் ஆணையிட்டான். 


கோட்டையைச் சுற்றி இருந்த கிராமத்து மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருந்தனர். படைகள் ஒரு வாரம் தங்கியிருந்தும் கோட்டைக்குள்ளிருந்து எந்த சலனமும் இல்லை. உயரமான இடத்தில் இருப்பது எதிரிகளின் பலம் என்பதால் அவர்களை வெட்டவெளியில் சந்திப்பதே தனக்கு அனுகூலம் என்று விளாடிமிர் கருதினான். 


தாக்குதலைத்  தொடங்கலாம் என்று மணிமாறன் ஆணையிட்டான். படை வீரர்கள் மெல்ல குன்றை விட்டு இறங்கி வெட்டவெளியில் அணிவகுத்து நின்றனர்.


போர் சம்பிரதாயப்படி அசோகா கோட்டை முன் சென்று போரைத் தவிர்க்க தங்கள் தரப்பு நிபந்தனைகளைக் கூறினான். பெரூஸ் நாட்டின் தெற்குப்பகுதியை முழுதும் அலெக்சாண்டருக்குத் தர வேண்டும் என்பது நிபந்தனையாக இருந்தது. நிபந்தனைகள் முழுதும் நிராகரிக்கப்பட்டதாக விளாடிமிர் தரப்பிலிருந்து கூறப்பட்டது.


போர் துவங்கியது. மணிமாறனின் படை கோட்டையை நோக்கி நகர்ந்தது. திடீரென இடது புறத்திலிருந்து எதிரி போர் வீரர்கள் தாக்க வந்தனர். மிங் தேசத்து வீரர்கள் ஆக்ரோஷத்துடன் தாக்கினர்.


யாரும் மிங் தேசத்து படைகளை எதிர்பார்க்கவில்லை.  அதிர்ச்சியினால் மணிமாறனின் படை வெலவெலத்து. கலீப், காதிப் வீரர்களை உற்சாகப்படுத்திய பின் படை நிதானம் அடைந்தது.


இரு தரப்பும் மிகக் கடுமையாக போரிட்டனர். மணிமாறன் தன் புயல் வேக வாள் வீச்சினால் எதிரிகளைத் துவம்சம் செய்தான். அதனால் அவனைத் தாக்க மிங் தேசத்து சிறந்த வீரர்கள் சூழ்ந்து கொண்டனர். வட்டவடிவில் தன்னைச் சுற்றி தாக்கிய வீரர்களைத் தீரத்துடன் எதிர்கொண்டான். மணிமாறன் செல்லும் இடமெல்லாம் தன் வீரர்களின் தலை வெட்டப்படுவதைக் கண்ட மிங் அரசன் தானே மணிமாறனைத் தாக்க வந்தான். கடும் போராட்டத்திற்குப் பின் காயமுற்ற மிங் அரசன் மணிமாறனை விட்டு விலகினான். மணிமாறனின் வீரச் செயல் மற்ற வீரர்களையும் தொற்றிக் கொண்டது. மணிமாறன் படை வெற்றியை நெருங்கும் போது இன்னொரு வியப்பான நிகழ்வு நடந்தது.


திடீரென வலது புறத்திலிருந்த்து விளாடிமிர் தலைமையில் வீரர்கள் தாக்கினர். இருபுறமும் தாக்கப்பட்டு பொறியில் சிக்கிய எலியாய் மணிமாறன் படை தவித்தது. தாரா புயலென தன் புரவியை செலுத்தி எதிரி படைக்குள் ஊடுருவினாள். தன் வில்லினால் ஒரே நேரத்தில் பல அம்புகள் எய்து எதிரிகளைக் கொன்றாள்.


மணிமாறனின் தீரமும், தாராவின் சாகசமும் எதிரிகளின் சாமர்த்தியமான போர் வியூகத்தின் முன் போதவில்லை. ஒரு புறம் கலீப் எதிரிகளின் மூர்க்கமான தாக்குதலால் தடுமாறிக் கொண்டிருந்தார். பலத்த காயத்தினால் துன்புற்றார். காதிப் சில வீரர்களின் துணையுடன் கலீபை  அப்புறப்படுத்தினர்.  இருவரும் குன்றின் மீது ஒரு பாதுகாப்பான இடத்திற்குச் சேர்ந்தனர்.


குன்றின் மீது நின்று ஸ்டெல்லாவும், கனிஷ்காவும் தங்கள் படையின் அவல நிலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.


ஸ்டெல்லா - "தோல்வி நிச்சயம்."


கனிஷ்கா - "கடைசி வீரன் உயிருடன் இருக்கும் வரை, கடைசி ஆயுதம் நம்மிடம் எஞ்சும் வரை தோல்வி உறுதி இல்லை."


ஸ்டெல்லா - "வெறும் பகல் கனவாய் எனக்குத் தோன்றுகிறது. நம் படைவீரர்களைப் பின் வாங்க சொல்ல வேண்டும். இன்றைய போரை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்."


கனிஷ்கா - "அது நல்ல திட்டம். நாளைய தினம் மங்கலமாய் விடியும் என்று நம்புவோம்."


ஸ்டெல்லா படையைப் பின் வாங்க சொல்லி செய்தி அனுப்பினாள். படைகள் திரும்பின. ஆனால் மணிமாறனும் தாராவும் வரவில்லை.


அவர்களைத் தேடி ரூசோவும், அசோகாவும் போர்க்களத்திற்குச் சென்றனர்.


போர்க்களமெங்கும் பிணங்கள். அவற்றை வல்லூறுகள் கொத்தித் தின்றுக் கொண்டிருந்தன. தலையற்ற உடல்கள், வெட்டுண்ட தலைகள் சிதறிக் கிடந்தன. கைகள் கால்கள் வெட்டப்பட்ட வீரர்கள் வலி தாங்காமல் அலறும் சத்தம் கோரமாய் ஒலித்தது. அம்பு தைத்த புரவிகள் வீழ்ந்து கிடந்தன. இறந்த புரவிகள் உடலின் கீழே வீரர்கள் சிக்கி உதவி கேட்டு கத்தினர். உயிருடன் இருந்த சில புரவிகள் உன்மத்தம் கொண்டு அலைந்து ஓடின. தரையெங்கும் குருதி நிலத்தைச் சிவப்பாக்கியிருந்தது. காயமுற்று உயிர் பிழைத்த வீரர்களை சக வீரர்கள் தூக்கிச் சென்றனர்.


போர்க்களத்தில் மணிமாறன் கடும் காயத்தினால் படுத்திருந்தான். அவன் உடலில் வாளினால் ஏற்பட்ட வெட்டுக்காயங்களிலிருந்து குருதி வழிந்தது. மூன்று அம்புகள் அவன் நெஞ்சைத் தைத்திருந்தது. அவன் கண்கள் செசெருகின. சித்தம் தன்னை விட்டுச் செல்வதை உணர்ந்தான். அவன் கண் முன் வெட்டுண்ட சில தலைகள் தோன்றி ஏளனமாக சிரித்தது. ஒவ்வொரு முகமும் அவன் நினைவில் இருந்தது. அனைத்தும் பூரிசிவஸ் உற்சவத்தின் போது அவன் வெட்டிய தலைகள். அவற்றின் முன் குற்ற உணர்வினால் மணிமாறன் கூசினான். கை தொழுது மன்னிப்பு கேட்டு  மன்றாடினான்.


நான் இறக்கிறேன். மரணத்தைக் கண்டு அஞ்சுகிறேன். இறைவா என்னை வாழ வை. இது என்ன கோழைத்தனம். இறப்பைக் கண்டு அஞ்சும் நானும் ஒரு வீரனா. என் மரணத்தைக் கண்டு அஞ்சும் நான் மற்றவர்களைக் கொன்ற போது இரக்கம் கொள்ளாதது ஏன். மணிமாறா. நீ கோழை மட்டும் அல்ல. சுயநலவாதி. நீ வாழ்வதை விட இறப்பதே மேல். செல். உன் உடலை விட்டுச் செல். மேலுலகின் கொடும் நரகத்தில் துன்புற்று உழலுவாயாக.  


மணிமாறனின் உடலை அடையாளம் கண்ட ரூசோ அவனை நெருங்கினான்.  உயிருடன் இருப்பதை இறுதி செய்துக் கொண்டு மற்ற வீரர்களை உதவிக்கு அழைத்தான். அவர்கள் அவனைப் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றனர்.


அசோகா தாராவைத் தேடி அலைந்து கொண்டிருந்தான். அவள் களத்தின் ஒரு மூலையில் படுத்திருந்தாள். அவள் தன் இரு கைகளில் வில்லையும் வாளையும் இறுக்கமாக பற்றியிருந்தாள். கண்கள் மூடியது. அவள் ஆன்மா உடலை விட்டு விலகியது. தன் உடலைப் புன்னகையுடன் நோக்கி விடை கொடுத்தது.  சுற்றியிருந்த கோர காட்சியைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு மேலெழுந்தது. புவியை விட்டு நீங்கி அண்டவெளியில் ஒளி வேகத்தில் சென்றது. விண்வெளியில் ஒரு நட்சத்திரம் அவளை வா வா என்று அழைப்பது போல மின்னியது. தாரா அந்நட்சத்திரத்தை அடைந்தாள். 


அவ்வுலகம் வென்பனி மலை,  வெண்முகில்களால் சூழப்பட்டிருந்தது. அங்கு வெண்ணிற உடை அணிந்து நீண்ட தாடி கொண்ட ஒரு முதியவர் அவளுக்காக காத்திருந்தார்.


"உன்னை இப்போது  எதிர்பார்க்கவில்லை தாரா. உன் நேரம் இன்னும் வரவில்லை."


"நீங்கள் யார்."


"என்னை பூரிசிவஸ் என்றும் இந்த பிரபஞ்சத்தின் தந்தை என்றும் அழைப்பர். பெயரில் என்ன இருக்கிறது. அனைத்திலும் நிறைந்திருப்பவன்  நான்."


"பூரிசிவஸ் உண்மையா. இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவர் நீங்கள் தானா. "


அந்த முதியவர் சிரித்து விட்டு "செல் தாரா" என்று சைகை செய்தார். தாரா ஒரு கருந்துளைக்குள் சென்றாள். பூமியில் போர்க்களத்திலிருந்த தன் உடலை அடைந்தாள். தாராவின் கண்கள் திறந்தது. அவள் உதடுகள் லேசாக அசைந்தது.


அதைக் கண்டு அசோகா உரத்த குரலில் உதவிக்கு கத்தினான்.


"தாரா இறக்கவில்லை. உயிருடன் தான் இருக்கிறாள். வாருங்கள். உதவிக்கு வாருங்கள்."


வீரர்கள்  சிலர் அவள் உடலைத் தூக்கிக் குன்றை நோக்கி ஓடினர்.


போரின் நிலை குறித்து விவாதம்  நடந்துக் கொண்டிருந்தது. கனிஷ்கா, ஸ்டெல்லா, அசோகா, அலெக்சாண்டர் ஆலோசனையில் பங்கு பெற்றனர்.


ஸ்டெல்லா - "நாளைய போரில் மணிமாறன், தாரா, கலீப் மற்றும் காதிப் பங்கு பெறும் நிலையில் இல்லை. நம் படைகள் பின்வாங்க வேண்டும்." 


கனிஷ்கா - "அந்த முடிவுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. நாளை நம்முடைய முக்கியமான ஆயுதத்தைப் பிரயோகம் செய்ய வேண்டும். அது ஒன்றே இந்த போரை முடிவுக்கு கொண்டு வர இயலும்."


அலெக்சாண்டர் - "நீட்ஷே, உன் ஆயுதங்கள் குறித்து விபரங்கள் தேவை."


நீட்ஷே - "இவை வெடி ஏவுகணைகள். அவற்றை நாம் தொலைவிலிருந்து நகரத்திற்குள் செலுத்தினால் பெரும் அழிவை ஏற்படுத்த முடியும்."


அலெக்சாண்டர் - "அழிவு எத்தகையது என்று விளக்க முடியுமா?"


நீட்ஷே - "இவை பரிசோதிக்கப்படாத ஆயுதங்கள். இதன் முழு வீச்சு பயன்படுத்திய பின் மட்டுமே தெரிய இயலும்."


கனிஷ்கா - "அது புரிகிறது. உன்னுடைய கணிப்பு என்ன?"


நீட்ஷே - "அறிவியல் விதிகளின் படி நான்கு  ஏவுகணைகள் ரஸ்புதினா நகரை  முழுதாக அழித்து விடும்."


கனிஷ்கா - "நம்மிடம் இருப்பது?"


நீட்ஷே - "ஐந்து ஏவுகணைகள்."


கனிஷ்கா - "அப்படியானால் நாளை ஏவுகணைகளை ரஸ்புதினா நகரத்தை நோக்கிச் செலுத்துவோம். ஸ்டெல்லா உன் கருத்தென்ன?"


ஸ்டெல்லா குழப்பத்தில் ஆழ்ந்திருந்ததால் பதிலேதும் அளிக்கவில்லை.


கனிஷ்கா - "உன் மௌனம் சம்மதம் என்று எடுத்துக் கொள்கிறேன்." 


அசோகா மறுத்து சொல்ல வந்ததை கனிஷ்கா தடுத்தான். அனைவரும் கலைந்து சென்றனர்.


அடுத்த நாள் காலை உதயமானது. அலெக்சாண்டர் படைகள் குன்றிலேயே இருக்க ஆணையிட்டான். மெல்ல எதிரிப்படைகள் களத்திற்குள் நுழைந்தன. எதிர் தரப்பிலிருந்து எந்த சலனமும் இல்லாததைக் கண்டு விளாடிமிர் வியப்புற்றான். தன் படைகளை நிறுத்தி குன்றின் மீது நடப்பவற்றைக் கூர்மையாக கவனித்தான்.


திடீரென வானில் ஒரு ஏவுகணை பறந்தது. அது நகரத்தின் மையத்தைக் தொட்டதும் பெரும் சத்தம் கேட்டது. நகரெங்கும் தீ பற்றி எரிந்தது. மேலும் இரண்டு ஏவுகணைகள் நகரின் மேற்கு, கிழக்கு எல்லைகளைத் தாக்கியது.  பூகம்பம் போன்ற பேரொலி காதைத் துளைத்தது. கோட்டை மதில்கள் சிதறி தூள் தூளாக நொறுங்கி கீழே விழுந்தது.


விளாடிமிரின் படைகள் சிதறி ஓடின. குன்றிலிருந்து அலெக்சாண்டர் தலைமையில் படை புரவியில் வேகமாக களத்திற்குள் நுழைந்து விளாடிமிரின் வீரர்களைத் தாக்கினர். மிங் தேசத்த்து அரசன் அம்பினால் தாக்கப்பட்டு மரித்து கீழே விழுந்து கிடந்தான்.


விளாடிமிரின் வீரர்கள் நாட்புறமும் சிதறி ஓடினர். அவர்களை அலெக்சாண்டர் படைகள் துரத்தி கொன்றன.


விளாடிமிர் சத்தமிட்டு அலைந்தான்.  காயத்தின் வலி தாங்காமல் கீழே விழுந்தான். அவன் கண்கள் மங்கலானது. தொலைவிலிருந்து யாரோ அவனை நோக்கி வருவது தெரிந்தது. அருகில் வந்ததும் கனிஷ்கா என்று அறிந்து கொண்டான்.


கனிஷ்கா அவனை அணைத்து தன் மடியில் கிடத்தினான். அவனுக்குத் தண்ணீர் புகட்டினான்.


"என்னை மன்னித்து விடு. என் உயிரைக் காப்பாற்றியவன் நீ. நான் நன்றி கெட்டவன். என் செயலை எண்ணி வருந்துகிறேன்."


"பேரழிவு ஒன்றை நிகழ்த்தியிருக்கிறாய். வருங்காலத்தில் போர்கள் இவ்வாறு தான் நடத்தப்படும். உண்மையான வீரத்திற்கு இனி போரில் இடமில்லை."


"நான் எடுத்த முடிவின் விளைவு இத்தனை கொடுமையானதாக இருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. உனக்கு ஒரு உறுதிமொழி தருகிறேன். என் ஆயுள் உள்ள வரை இந்த ஆயுதங்கள் எந்தப் போரிலும் பயன்படுத்தப்படாமல் இருக்க முழு முயற்சி செய்வேன். ஏன் உயிரே போனாலும் கூட."


"எனக்கு ஒரு உதவி செய். என்னால் வேதனை தாங்க இயலவில்லை. இந்த வாளை என் நெஞ்சினில் செலுத்து. ஒரு வீரனுக்கு உகந்த மரணத்தை எனக்கு கொடு."


கனிஷ்கா கண்ணீருடன் வாளை வாங்கி கொண்டான். அதை விளாடிமிரை நோக்கி செலுத்தினான். விளாடிமிர் இறந்த பின் சில நிமிடங்கள் மெளனமாக அஞ்சலி செலுத்தினான். பிறகு போர்க்களத்தை விட்டு அகன்றான். 


நீட்ஷே ரஸ்புதினா நகரத்தின் தெருக்களில் மதி கெட்டவன் போல அலைந்தான். நகரம் முழுதும் தீ பற்றி எரிந்தது. பெரும் கட்டிடங்கள், மற்றும் மாளிகைகள் இடிந்து கிடந்தன.  மோஸ்க்வா நதியில் இறந்த சடலங்கள் மிதந்துக் கொண்டிருந்தன.


கட்டிடத்தின் இடிபாடுகளில்  ஒரு சிறுவன் சிக்கியிருந்தான். அவனுக்கு உதவி செய்ய நீட்ஷே கைகளை நீட்டினான். அச்சிறுவன் மறுத்து நீட்ஷேயின் கைகளைத் தட்டி விட்டான். அருகில் ஐந்து மாத குழந்தை கருகி இறந்து கிடந்தது. அதன் சுண்டு விரல் மட்டும் காயப்படாமல் இருந்தது. நீட்ஷே அந்த பிஞ்சு விரலைத்த் தடவினான்.


நான் ஒரு பாவி. கொலைகாரன் என்று ஓலமிட்டபடி நீட்ஷே  ஓடி திரிந்தான்.


பண்பாடு பெருமை கொண்ட ஒரு மாநகரம் மண்ணோடு மண்ணாக  அழிந்திருந்தது. மாலை ஆனது. வானில் சூரியன் சிவப்பு நிறத்திற்கு மாறியது. மெல்ல அது மறைய, கரும் இருள் புவியை அணைத்தது. ரஸ்புதினா நகரத்தின் ஓலச் சத்தம் நிற்கவில்லை. அது சில நாட்களில் நின்று விடலாம். அனால் அங்கு  வாழும், வாழப்போகும் மாந்தர்களின் இதயத்தில் ஒலிக்கும் ஓலச் சத்தம் நிற்காது. 


சில காயங்களின் வலியும் அதன் வடுவும் அத்தனை எளிதில்  மறைவதில்லை.


                                              ———-************————


காலை இளம்வெயில் கூடாரத்திற்குள் தன் கதிர்களைச் செலுத்தியது. மணிமாறனின் முகத்தைக்  கதிர்கள் வருடி விழிக்கச் செய்தது. விழித்ததும் வாசலில் கனிஷ்கா நிற்பதைக் கண்டான். அவன் உள்ளே நுழைந்து மணிமாறன் அருகில் அமர்ந்தான்.


மணிமாறனின் உடலெங்கும் கட்டுக்கள் இருந்தது. மூன்று நாட்கள் கழித்து இன்று தான் அவனுக்கு நினைவு வந்தது. கனிஷ்காவைக் கண்டதும் உற்சாகத்துடன் பேசினான். ஆனால் கனிஷ்கா உரையாடலில் ஈடுபடவில்லை. அவன் சிந்தனை வேறெங்கோ இருந்தது. மணிமாறன் கனிஷ்காவின் கைகளைத் தொட்டதும் கனவிலிருந்து விழித்தவன் போல மணிமாறனை நோக்கினான்.


"அசோகா என்னுடன் பேசவில்லை. யுதோபியா தேசத்திற்கு செல்வதாக கூறுகிறான்."


"நண்பர்களிடேயே கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு. உன் ஆன்மாவின் ஒருபகுதி -  அவன். மீண்டும் உன்னுடன் வந்து சேருவான்."


"என் உறக்கங்களில் கொடிய கனவுகள் வருகிறது. நீட்டியவண்ணம் ஒரு கை கனவில் வருகிறது. நரோபாவின் கை."


"அடுத்த முறை அக்கையைப் பற்றிக்கொள்."


"ஆம். நானும் அதையே நினைத்தான். பல சந்தேகங்கள் என்னை அலைக்கழிக்கிறது.  ஒரு பெரும் அழிவுக்குக் காரணமாய் இருந்திருக்கிறேன். இது வரை  நான் எனக்குள் உருவாக்கி வைத்த கோட்பாடுகள் அனைத்தும் தவறு என்று தோன்றுகிறது."


"போரில்  அந்த முடிவை நீ எடுத்திருக்காவிட்டால் நாம் அனைவரும் இந்த மண்ணுக்குள் புதைந்திருப்போம்."


"ஆனாலும் குற்றவுணர்விலிருந்து என்னால் மீள இயலவில்லை. நேற்று நம் குழுவை சேர்ந்த அனைவரும் சந்தித்தோம். இனி வரும் போர்களில் எந்த நாடும் இத்தகைய ஆயுதங்கள் பயன்படுத்துவதில்லை என்று உறுதிமொழி எடுத்தோம். மீறும் நாடுகள் தனிமைப்படுத்தப்பட்டு  கடும் பொருளாதார நடவடிக்கைக்கு ஆளாகும் என்று முடிவு செய்யப்பட்டது. இது குறித்து உன்னுடைய கருத்துக்கள் என்ன."


"நான் தலைவன் அல்ல. வெறும் வீரன். உங்களுடைய எந்த முடிவுக்கும் கட்டுப்பட்டவன்."


"இன்னும் இரு நாட்களில் லாமா தேசத்திற்கு பயணம் செய்வோம். திரிபோலி நகரத்திற்கு செல்வதற்கு முன் முதலில் காஞ்சன் மலைகளில் நீ வேண்டுவதைத் தேடுவோம். இன்னொரு செய்தி தாரா, ஸ்பினோசா லாமா தேசத்திற்கு வருகிறார்கள். ஆனால் நம்முடன் காஞ்சன் மலைக்கு வராமல் நேராக திரிபோலி நகரம் செல்கிறார்கள்."


கனிஷ்கா அங்கிருந்து அகன்றதும் மணிமாறன் களைப்பு மிகுந்து உறங்கினான்.


                                   ———-**********———


நீண்ட புல்வெளியில்  ஸ்டெல்லாவும் ரூசோவும் ஒருவரை ஒருவர் அணைத்த வண்ணம் அமர்ந்திருந்தனர். ஸ்டெல்லாவின் கண்களிலிருந்து நீர் வருவதைக் கண்டு ரூசோ அவளைத் தன் மடியில் கிடத்தினான்.


"செயல்களை விட செயலின்மை எத்தனை கொடுமைக்கு வழிவகுக்கும் என்று புரிகிறது. அன்று போரில் ஆயுதங்கள் பயன்படுத்துவது குறித்து கனிஷ்கா என் கருத்துக்களைக் கேட்டான். நான் மௌனம் சாதித்தேன். முடிவெடுக்க முடியாத என்னால் யுதோபியா நாட்டைத் தலைமை தாங்க முடியுமா? என் தந்தை என்னை மன்னிக்க மாட்டார். "


"அன்று எவ்வித முடிவெடுத்திருந்தாலும் பாதகங்கள் கொண்டதாக இருந்திருக்கும்."


"நன்மையோ, தீமையோ ஏதோ ஒரு முடிவை நான் சொல்லியிருக்க வேண்டும்."


"நீ புதிதாக தலைமைப் பொறுப்பேற்றிருக்கிறாய். உனக்கு அனுபவங்கள் குறைவு. இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு முன்னகர்ந்து செல். உன் தந்தையை விட சிறந்த தலைவியாக நீ வருவாய்."


ஸ்டெல்லா ரூசோவின் கைகளைப் பற்றி முத்தமிட்டாள்.


ரூசோ - “அசோகா நம்முடன் யுதோபியாவிற்கு வருகிறான்."


ஸ்டெல்லா - “அது நமக்கு நன்மையே தரும் என்பது என் கணிப்பு.”


ரூசோ ஸ்டெல்லாவிடம் விடைபெற்று அசோகாவின் கூடாரத்திற்கு சென்றான். 


"ஸ்டெல்லாவிடம் நீ யுதோபியா தேசம் வருவதைக் குறித்து பேசினேன். அவள் மிகவும் மகிழ்ச்சியுற்றாள்."


"உன் தேசத்தில் ஆச்சு நூல்கள் இருப்பது குறித்து அறிந்தேன். அச்சுத் தொழில்நுட்பம் கற்பதற்கும், உங்கள் நூல்களைப் படிப்பதற்கும் இந்த பயணத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்."


"நீ வருவதற்கு முன் கனிஷ்காவிடம் விடைபெற்றுக் கொண்டு வா. அவன் மிகவும் மனம் உடைந்துள்ளான்."


"எங்கள் உறவில் சிறு இடைவெளி தற்போது தேவையாய் உள்ளது. நான் மீண்டும் லாமா தேசம் செல்வேன். அவனிடம் இணைவேன். இதை நீயே கனிஷ்காவிடம் சொல். இப்போதிருக்கும் மனநிலையில் என்னால் அவன் முகத்தைப் பார்க்க இயலாது."


"நன்று. அப்படியே ஆகட்டும்." 


"நீ சரித்திர ஆய்வாளன் என்று அறிகிறேன். பெரூஸ் தேசம் பலவீனமாகி  விட்டது. மிங் தேசம் தலைமையற்று  உள்ளது. இனி எந்த தேசம் பெரும் வல்லரசாகும் என்று யூகிக்கிறாய்."


"சரித்திரத்தில் வல்லரசுகள் மூன்று நிலைகளில் உள்ளது. முதலில் அது வலிமை மிகுந்ததாக மாறி ஏற்கனவே உள்ள வல்லரசை அகற்றி விடுகிறது. அடுத்த நிலை தன் வல்லரசு நிலையை அது தக்க வைத்துக் கொள்வது. மூன்றாவது அதன் வீழ்ச்சி."


"கனிஷ்கா இந்த மூன்று நிலைகளை வேறு ஒரு தருணத்தில் என்னிடம் கூறியுள்ளான். பிறப்பு, காப்பு, மரணம் என்ற இயற்கையின் மூன்று நிலைகள் வல்லரசுகளுக்கும் பொருந்துகிறது."


"ஆம். உன் முதல் கேள்விக்கான பதில். இனி வல்லரசுகளின் காலம் அல்ல. பல நாடுகளின் கூட்டுறவுடன் கூடிய சமுதாயம் ஒன்று உருவாகும். அது மானுடத்திற்கு பெரும் நன்மையைத் தரும். ஒரு நாட்டினால் மட்டுமே தீர்வு காண முடியாத பல பிரச்சினைகள் தீர்வு காணப்படும். அதற்கான முதல் விதையை உன் நண்பன் கனிஷ்கா வித்திட்டான்."


அசோகா ஆவலுடன் ரூசோவின் முகத்தை நோக்கினான்.


"இனி எந்த நாடும் கொடும் ஆயுதங்கள் பயன்படுத்தக் கூடாது என்று அனைவரும் உறுதிமொழி எடுத்ததைச் சொல்கிறேன். இது கனிஷ்காவின் முயற்சியால் நடந்தது.  பல நாடுகள் எவ்வாறு ஒருங்கிணைந்து முடிவுகள் எடுக்கும் என்பதற்கான வெள்ளோட்டம் இது. நேரமாகிறது நாளை நாம் சந்திப்போம்.”


                                ————*************————-


 தூரத்தே இருந்து காஞ்சன் மலைத்தொடரைப் பார்த்ததும் மணிமாறன் பிரமித்தான். அகன்று பிரம்மாண்டமாக நின்ற காஞ்சன்  மலை தன் சிகரத்தில் மேகங்களைக் கிரீடமாக அணிந்திருந்தது.


பனிமலையை நெருங்கியதும் மணிமாறன் தன் இரு கைகளை விரித்து மண்டியிட்டு அமர்ந்தான். பனித்துகள்களைக் கைகளில் பற்றி முகமெங்கும் பூசிக்கொண்டான் . பனித்துகள்களை கனிஷ்கா மீது எறிந்தான்.


"நான் என் வாழ்நாளில் கடற்பிரயாணம் செய்ததில்லை. பனிமலைகளைப் பார்த்ததில்ல்லை. பாலைவனத்தில் பிரயாணித்ததில்லை. இது அனைத்தும் சில நாட்களுக்குள் நடந்துள்ளது. நான் பூரிசிவஸினால் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று உணர்கிறேன்."


இருவரும் மலைப்பாதையில் நடந்து பிரயாணத்தைத் தொடர்ந்தனர். மலையின் பல குகைகளை அலசிப் பார்த்தனர். எங்கும் தேடுவது கிடைக்கவில்லை.


மணிமாறன் சோர்ந்து போயிருந்தான். திரிபோலி நகருக்குத் திரும்பலாம் என்று கனிஷ்கா கூறினான். மணிமாறனுக்கு ஒரு யோசனை தோன்றியது.


"கனிஷ்கா, நரோபா உன்னை முதலில் கண்ட இடம் , அவர்  இறந்த இடம் - அங்கு என்னை அழைத்துச் செல்."


இருவரும் குறுகலான பாதைகளில் சென்று உச்சியை அடைந்து, பிறகு சற்று கீழே நரோபா இறந்த பாறை முன் நின்றனர். நரோபாவின் நினைவுகளால் கனிஷ்கா கண்ணீர் உகுத்தான். மணிமாறன் அவனைத் தேற்றி அவ்விடத்தின் அருகாமை எங்கும் தேடினர்.  சிறு குகை ஒன்றை அடைந்தனர்.


அங்கு சுவரெங்கும் ஓவியங்கள் இருந்தன. அவை மகர தேசத்தின் சென்னி மலையில் அக்னிதேவன் காண்பித்த ஓவியங்களை ஒத்திருந்தது.  ஆனால் அவை லாமா தேசத்தின் சரித்திரத்தைக் கூறுவவதாக இருந்தது.


ஓவியத்தில் மணிமாறன், தாரா, ஸ்பினோசா லாமா தேசத்திற்கு வருகை செய்யும் காட்சிகள் இருந்தன. மூவரும் லாமா தேசத்திற்கு வருவதும், தாரா லாமா தேசத்தில் தங்கி ஒரு சேனையை உருவாக்கும் காட்சிகள் இருந்தன.


ஓவியங்களைப் பல முறை இருவரும் வியப்புடன் பார்த்த வண்ணம் இருந்தனர். ஒரு ஓவியத்தின்  முன் கனிஷ்கா பல நிமிடங்கள் நின்று ஆழ்ந்து  சிந்தித்த வண்ணம் இருந்தான். பிறகு மணிமாறனை அழைத்துக் காண்பித்தான்.


அந்த ஓவியத்தில் மணிமாறன், ஸ்பினோசாவுடன் லாமா தேசத்திலிருந்து கப்பலில் மகர தேசம் சென்றடைகிறான். அங்கு ஸ்பினோசா பல விதமான எந்திரங்களை உருவாக்குகிறான்.


"நண்பா. நீ தேடும் அறிவியல் ரகசியங்கள் எதுவென்று புரிகிறதல்லவா. "


மணிமாறன் புன்னகையுடன் புரிந்ததாக சைகை செய்தான். இருவரும் காஞ்சன் மலையிலிருந்து இறங்கி திரிபோலி நகரத்தை நோக்கி பயணித்தனர்.


                              ———-***********———


திரிபோலி நகரத்தில் மணிமாறனுக்கும், கனிஷ்காவுக்கும் உற்சாக வரவேற்பு கிடைத்தது. மணிமாறன் அங்கு தாராவையும், ஸ்பினோசாவையும்  சந்தித்ததில் பெரும் உவகை கொண்டான். தாரா சில நாட்கள் லாமா தேசத்தில் தங்கி அவர்களுக்கு உதவ முடிவு செய்ததாக கூறினாள். மணிமாறன் தான் அதை ஏற்கனவே அறிந்ததாக கூறினாள்.


வந்திருந்த புது தேசத்தவருக்கு ஒரு பெரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.  அப்போது லாமா தேசத்தின் எதிர்காலம் குறித்து கனிஷ்கா உரையாற்றினான்.


"நாம் வாழ்ந்த உலகம் நம் கண் முன்னே உருமாறிக்கொண்டிருக்கிறது. முன்னர் நம் தேசம் ஒரு தனியுலகமாய் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இனி வருங்காலம் பல தேசங்கள் இணைந்த உலகமாய் மாறும். பல தேசங்களுக்கிடையே பண்பாடு, கலை, சிந்தனை மற்றும் வர்த்தகப் பரிமாற்றங்கள் நிகழும்.


அப்படிப்பட்ட உலகில் லாமா தேசம் எப்படி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். முதலில்  இனியும் நம் தேசத்தின் பாதுகாப்பிற்காக இயற்கையின் பெரும் மலைகளை நம்பியிருக்க இயலாது. நம் தேசத்திற்கு ஒரு சேனை வேண்டும். நாம் வாள் பிடிக்க கற்றுக் கொள்ள வேண்டும். நம்மைப் பயிற்றுவிக்க மகர தேசத்தின் தாரா உதவி செய்வார்.


நாம் புது பாதையை நோக்கிச் செல்கிறோம். அப்படியானால் நம் முன்னோர்கள் கூறிய வார்த்தைகளை முற்றிலும் நிராகரிக்க வேண்டுமா? நரோபாவின் வழிகாட்டுதலைகளைப் புறக்கணிக்க வேண்டுமா? .இல்லை. நம் புது பாதையில் நாம் தடுமாறலாம். வெற்றிகளினால் கர்வம் கொண்டு சில நேரங்களில் எல்லை மீறலாம். அப்போது நரோபாவின் வார்த்தைகள் நம்மைச் சம நிலைக்கு கொண்டு வர உதவும். நாம் செல்லும் பாதை அவருக்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் அவர் நீட்டிய கரங்களைப் பற்றிக் கொண்டு நடப்போம்."


அடுத்த நாள் மணிமாறனும், ஸ்பினோசாவும் விடைபெற்றனர். ஓரிரு வருடங்களில் மகர தேசம் வருவதாக தாரா கூறினாள். இம்முறை மகர தேசத்தை அடைவதற்குப் பாலைவனப் பயணம் தேவையில்லை. பெரூஸ் தேசத்தின் லியோவ் நகரத்திலிருந்து கடற்பிரயாணம் செய்வது என்று முடிவானது. ஸ்பினோசாவின் மேற்பார்வையில் ஒரு கப்பல் மகர தேசத்திற்காக உருவாக்கப்பட்டிருந்தது.   


தாய்நாடு தன்னை அழைப்பதை மணிமாறன் உணர்ந்தான். மின்னல் வேகத்தில் இருவரையும் தாங்கிய குதிரைகள் பறந்தது.


                                     ————**************————


மதுராபுரியின் அரசவையில் நடுநாயகமாக கிள்ளிவளவன் வீற்றிருந்தான். அவனருகில் அக்னிதேவன், மேகநாதன் மற்றும் நீலகண்டன் அமர்ந்திருந்தனர்.


கிள்ளிவளவான் - "உன்னுடன் வந்த தாரா எங்கே. அவளை என்ன செய்தாய்."


மணிமாறன் - "அவள் நலமாய் உள்ளாள். அவள் லாமா என்னும் தேசத்தில் சிறிது காலம் வசித்து  திரும்புவாள்."


கிள்ளிவளவன் - "உன்னை என்னால் நம்ப முடியவில்லை. நீ ஏன் வெறுங்கையை வீசிக் கொண்டு வந்திருக்கிறாய். நாங்கள் கோரிய அறிவியல் ரகசியங்கள் எங்கே. யார் இந்த வேற்று நாட்டு மனிதன்."


மணிமாறன் தன் பயண அனுபவங்களை முழுதாக உரைத்தான்.


"நாம் தேடும் ரகசியம் சுவடிகளில் இல்லை. மனிதனின் சிந்தனைகளில் உறைந்ததுள்ளது. இதோ ஸ்பினோசா என்னும் இந்த யுதோபியா நாட்டவன் வடிவில் அந்த ரகசியம் உள்ளது. இவன் பல இயந்திரங்கள் உருவாக்கியுள்ளான். அவற்றுள் ஒன்றை என்னால் காண்பிக்க இயலும். நாளை நாம் முத்துநகரத்தில் உள்ள துறைமுகத்திற்குச் செல்வோம். அங்கு ஒரு பேரதிசயத்தை நீங்கள் அனைவரும் காணலாம்."


அடுத்த நாள் அனைவரும் முத்துநகரை அடைந்தனர். அங்கு ஒரு மாபெரும் கப்பல் நிற்பதைக்  கண்டு பிரமித்தனர்.


"இந்த கப்பல் பல்லாயிரம் காத தூரம் கடலில் செல்ல வல்லது. எந்த புயலையும் தாங்க வல்லது. இனி நாம் மற்ற நாடுகளுக்குச் செல்வதற்கு பாலைவனங்களைக் கடக்க வேண்டியதில்லை. இந்த கப்பல் மூலம் குறைந்த நேரத்தில் சென்று விடலாம். இது போல பல அதிசயங்களை உருவாக்க ஸ்பினோசா சம்மதித்துள்ளான்."


கிள்ளிவளவன் மணிமாறனை அணைத்தான்.


"நான் உன்னை சந்தேகித்தேன். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் இந்த நாட்டிற்கு பெரும் சேவை செய்திருக்கிறாய்."


அன்றிரவு அனைவரும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். மணிமாறன் தன் கருத்துக்களைக் கூறினான்.


"நாம் பல தேசங்களுடன் நல்லுறவு கொள்ள வேண்டும். அவற்றின் மூலம் வர்த்தகம் மற்றும் புதிய சிந்தனைகள் பெற முடியும். ஸ்திரத்தன்மை வெறும் பொருளாதார வளர்ச்சி மூலம் மட்டுமே அடைய முடியாது. பிச்சைக்காரனுக்கு பசி மட்டுமே பிரச்சினை. செல்வந்தனுக்கு பல பிரச்சினை. 


ஸ்பினோசாவின்  நாட்டில் தலைவர்களை மக்களே தேர்ந்தெடுக்கிறார்கள். ஆட்சியை எவ்விதம்  நடத்த வேண்டும் என்பதற்கு அரசியல் சாசன சட்டம் உள்ளது. அதனால் அந்நாடு பெரும் புரட்சிகளையோ, மாற்றங்களையோ சந்திக்கவில்லை. அங்கு மக்கள் செல்வச்செழிப்புடன் இருக்கிறார்கள்.


இதை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. சான்றோர்களின் வழிநடத்துதலைப் புறக்கணிக்க வேண்டியதில்லை. மாறாக நாட்டிற்கான திட்டங்களை இரு அவைகள் கொண்ட ஒரு அமைப்பு இணைந்து உருவாக்க வேண்டும் ஒன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட அவை. மற்றொன்று சான்றோர்களை உறுப்பினர்களாக கொண்ட அவை. இந்த இரு அவைகளின் பரிந்துரைப்படி நாட்டின் தலைவன் ஆட்சி செய்ய வேண்டும். நாட்டைத் தலைவர்கள் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் அவர்களை மக்களே தேர்தல் மூலம் மாற்றுவார்கள். இதுவே ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும். உதாரணம் யுதோபியா நாடு."


அனைவரும் இதைத் தீவிரமாக விவாதித்து ஏற்றுக் கொண்டனர். இதைச் செயல்முறைப்படுத்த மேலும் பல கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.


அக்னிதேவனுக்கு உறக்கம் வரவில்லை. மணிமாறன் சொல்வவதை முழுதும் ஏற்றுக் கொள்வதா? தான் சென்னி மலை குகையில்  கண்ட ஓவியங்கள் அனைத்தும் பொய்யா? இந்த சிந்தனைகளினால் அவர் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார்.


அடுத்த நாள் விடிகாலையில் குதிரையேறி சென்னி மலைக்குச் சென்றார். அங்கிருந்த ஓவியங்களை ஒவ்வொன்றாக  பார்த்தார். ஒரு ஓவியத்தில் வேற்று நாட்டவன்  ஒருவன் நின்று கொண்டிருப்பது அவர் கண்களில் பட்டது. யார் என்று கூர்ந்து பார்த்தார்.


ஸ்பினோசா.


                              ————***********———-


கடல் அன்னம் ப்ரின்சிபியா நகரத்தை அடைந்தது. அதில் இருந்த அனைவரையும் ஹெகல் கைது செய்தார்.  சிறையில் ஸ்டெல்லாவைச்  சந்தித்தார்.


"நீ இங்கு வந்திருக்கக்கூடாது. நீ வேறு ஒரு நாட்டில் பெரும் அரசியாக கூட இருக்கும் திறமை பெற்றவள். ஆனால் இந்த மண்ணிற்கு நீ வந்திருக்கக்கூடாது. உன் தந்தையின் நிலையை நீங்கள் அனைவரும் அடைவீர்கள். அதுத்த வாரம் இந்நேரம் நீங்கள் அனைவரும் கழுவில் ஏற்றப்படுவீர்கள்."


அவர்  சென்றதும் அசோகா ஸ்டெல்லாவிடம் ஹெகலின் உடல்நிலை குறித்து பேசினான்.


"பேசிக்கொண்டிருக்குக்கும் போதே ஹெகல் பல முறை இருமினார். கிருமிகள் தாக்கியதால் கடும் நெஞ்சுச் சளி. மூன்று நாட்களுக்குப் பிறகு படுத்த படுக்கையாய் இருந்து இறப்பது உறுதி."


"உன்னால் ஹெகலைக் காப்பாற்ற இயலுமா?"


"என்னிடம் அதற்கான மருந்துகள் உள்ளன. ஆனால் மருத்துவத்தை இன்றே தொடங்க வேண்டும்."


ஸ்டெல்லா காவலர் மூலம் ஹெகலுக்கு இதைத் தெரிவித்தாள். ஆனால் வறட்டு கௌரவம் காரணமாக ஹெகல் அசோகாவின் உதவியை ஏற்கவில்லை. அசோகா கூறியபடி ஹெகல் இறந்தான். இறுதி வரை அவன் உதவி கேட்டு ஸ்டெல்லாவை நாடவில்லை.


ஹெகலைக் கொன்ற  விஷக்கிருமி நாடு முழுதும் தாக்கியது. மக்கள் கொத்து கொத்தாக இறந்தனர்.  அசோகாவின் மருந்து சிலருக்கு அளித்து பரிசோதனை செய்த போது நோயாளிகள் உடல் நலம் தேறினர்.


நாடு முழுதும் அனைத்து மக்களுக்கும் மருந்தை அளிக்க நீட்ஷேவின் உதவியுடன் தயாரிப்பு முடுக்கி விடப்பட்டது. யுதோபியா நாடு விரைவிலேயே  நோயிலிருந்து மீண்டு வந்தது. ஸ்டெல்லாவின் புகழ்  மக்கள் மத்தியில் ஓங்கியது. 


நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஸ்டெல்லா வெற்றி பெறுவது தேர்தலுக்கு முன்னரே முடிவு செய்யப்பட்டதாக இருந்தது.


தேர்தலுக்கு முதல் நாள் ஸ்டெல்லா நாட்டு மக்களுக்கு உரையாற்றினாள்.


"என் தந்தை இந்நாட்டிற்காக  பெரும் கனவுகள் கொண்டிருந்தார் அக்கனவுகள் நிறைவேறியிருந்தால் இந்நாடு செழித்திருக்கும். ஆனால் அக்கனவுகளை நிறைவேற்ற அவர் கையாண்ட முறைகள் தவறு. ஜனநாயகத்தை அவர் வளைக்க நினைத்தது தவறு. ஆனால் அதற்காக அவருக்கு இழைக்கப்பட்ட மரணம் நியாயமல்ல.


என் தந்தை சார்பாக மன்னிப்பு கேட்கும் நான் அதே நேரத்தில் ஜனநாயகத்தின் குறைபாடுகளைக் களைவதற்கு முயற்சி செய்வது இன்றியமையாதது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.


நான் ஆட்சிக்கு வந்தால் செனட்டில்  குறிப்பிட்ட காலத்தில் நிறைவவேற்றப்படாத சட்டங்கள் மக்கள் மன்றத்தில் வைக்கப்படும். பொதுமக்கள் வாக்ககெடுப்பின் மூலம் சட்டம் ஏற்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும். 


இந்நாடு குறித்த நம் அனைவரின் கனவுகளும் நிறைவேற எனக்கு ஆதரவு தாருங்கள்."


அன்றிரவு ஸ்டெல்லா ரூசோவுடன் தனிமையில் கடல் அன்னத்தில் நின்றிருந்தாள்.


"இங்கு நிலைமை மாறியுள்ளது. உன் தந்தையைத் தேடி நீ செல். அவரை இங்கு அழைத்து வா."


"அவர் மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. ஒரு நாடோடி பயணியாக வாழ்வைக் கழிக்க முடிவு செய்துள்ளார். என் தாய் மறுமணம் செய்து கொள்ள எண்ணியுள்ளார். தந்தை எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக உள்ளார் என்று என் உள்ளுணர்வு கூறுகிறது."


"மகத்தான மனிதர் உன் தந்தை."


ரூசோ உணர்ச்சிப் பெருக்குடன் கடலலைகளை நோக்கிக் கரங்கள் நீட்டி பேசினான்.


"மகத்தான கனவுகள் கொண்டவர். இந்த தேசம் மட்டுமன்றி இந்த உலகின் வருங்காலத்தை அவரது கனவுகள் மாற்றியுள்ளது. நாம் தற்போது நின்றிருக்கும் கடல் அன்னம் போல பல்லாயிரம் கப்பல்களை பல நாடுகள் உருவாக்கும். பல நாடுகளை இணைத்து ஒருலகமாக மாறும்.


வால்டேர் என்னும் மாமனிதரே, நீங்கள் இறக்கவில்லை. இந்த புவியில் இணைக்கப்படாது  இருக்கும் மேலும்  சில கண்டங்கள் குறித்து சிந்தனை செய்வீர்கள் என்பது எனக்கு தெரியும். 


இந்த தருணத்தில் யாருமறியாத ஏதோ ஒரு நிலத்தில் மதுவருந்தி வானத்தின் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். புவியை இணைத்த நீங்கள் விண்வெளியை இணைக்கும் கனவுகளைக் காண்பீர்கள் என்பது உறுதி. பேராசை வேண்டாம் தந்தையே. இனி வரும் சந்ததியினருக்கும்  சில கனவுகளை மிச்சம் வையுங்கள். "


ரூசோ ஸ்டெல்லாவின் கரங்களைப் பற்றித் தன்னை மறந்து நின்றான். சுகமான கடற்காற்று அவர்களை தழுவியது. வானின் முழுமதி அவர்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது.


நாளைய உதயம் சிறப்பாக  இருக்கும். இந்த புவியின் எதிர்காலம் நன்றே இருக்கும் என்ற நம்பிக்கையுடன்  மேகங்களைப் போர்த்திக் கொண்டு நிலவு உறங்க சென்றது.


                                        --------**********------