போஸ் தாத்தாவிற்கு மதிய நித்திரை கலைந்தது. இன்றும் பக்கத்து வீட்டிலிருந்து உரத்த சத்தம். குழந்தை ஒன்றின் அலறல். தாத்தாவிற்கு இரவு உறக்கம் குறைவு என்பதால் ஆழ்ந்த மதிய தூக்கம் அவசியம். மெதுவாக எழுந்து வீட்டிற்கு வெளியே வந்தார். பக்கத்து வீட்டின் கதவருகே பெண் குழந்தை அழுதபடியே நின்றுக் கொண்டிருந்தாள். தாத்தாவைப் பார்த்ததும் அழுகையை நிறுத்தி புன்னகை செய்தாள்.
"ஏன் இப்படி அழுகிறாய். மற்றவர்கள் உன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்".
"என் பெற்றோர் நான் கேட்ட பரிசு வாங்கித் தராமல் ஏமாற்றி விட்டார்கள்."
"பரிசு தராததற்கு எல்லாம் இப்படி அழுவார்களா. இந்த காலத்துக் குழந்தைகள். பெற்றோர் வளர்ப்பு சரியில்லை"
"என்னைப் பற்றி என்ன வேண்டும் என்றாலும் சொல்லுங்கள். என் பெற்றோர் பற்றி யாரும் ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டேன்."
தாத்தாவிற்கு சிரிப்பு வந்தது.
"அப்படி என்ன பெரிய பரிசுப் பொருள் கேட்டாய்"
"இன்று ஆகஸ்ட் 15 1997 அல்லவா. சுதந்திரம் கிடைத்து 50 வருடங்கள் ஆகி விட்டது. அதன் நினைவாக சுபாஷ் போஸின் வாழ்க்கை வரலாறு கார்ட்டூன் புத்தகம் வாங்கித் தர என் தந்தையைக் கேட்டேன். இன்றும் மறந்து விட்டார்."
"சரி நாளை வாங்கித் தந்தால் போயிற்று"
"ஆனால் நாளை சுதந்திர தினத்தைக் கடந்து விடுவோமே"
போஸ் அவளைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். குழந்தை வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். சுபாஷ் சந்திர போஸின் புகைப்படம் பார்த்ததும் முகம் மலர்ந்தாள்.
"உங்களுக்கும் போஸ் பிடிக்குமா."
"நான் அவரை நேரிலேயே பார்த்திருக்கிறேன். உன் பெயர் என்ன?."
"காமினி."
"என் பெயர் போஸ் பாண்டியன்."
"நேதாஜியை எப்படித் தெரியும்"
"அவர் ராணுவத்தில் வீரனாக நான் பர்மாவில் பணியாற்றினேன். அப்போது சந்தித்திருக்கிறேன்."
"நீங்கள் சுதந்திரப் போராட்ட வீரரா? சரி இதற்கு பதில் சொல்லுங்கள். போஸ் பெரியவரா. காந்தி பெரியவரா. என் நண்பன் ரோஹன் சொல்கிறான், போஸ் தான் பெரியவர் என்று. அவர் தான் வீரர். ஆர்மியை வைத்தெல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தார். காந்தி வெறும் கோழை. அவரால் ஒரு துப்பாக்கியைக் கூட தூக்க முடியாது என்றான்."
"நீ யார் பெரியவர் என்று சொல்லு."
"சுபாஷ் எனக்குப் பிடிக்கும் தான். ஆனால் காந்தியின் சிரித்த புகைப்படம் பார்க்கும் போது எனக்கு சுந்தர் தாத்தா நினைவில் வரும். அவருக்கு காந்தி தான் பிடிக்கும். அவர் இறந்து இரண்டு வருடம் ஆகிறது. நீங்கள் சொல்லுங்கள் யார் பெரியவர் என்று."
"நாளை வா சொல்கிறேன். நிறைய சுதந்திர காலத்துக் கதையெல்லாம் சொல்கிறேன்."
காமினி போஸ் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு ஓடி சென்றாள்.
போஸ் தாத்தாவிற்கு இரவு உணவு சமைக்க வேண்டும் என்று நினைவு வந்தது. கேழ்வரகு மாவு தீர்ந்து விட்டது. பக்கத்து கடைக்குச் சென்று வாங்க வேண்டும். இரண்டு மாதங்களாக அவரது பென்சன் பணம் வரவில்லை. அதனால் பணத் தட்டுப்பாடு. இன்றும் கடைக்காரனிடம் கடன் சொல்ல வேண்டும். சுதந்திரம் கிடைத்து 50 வருடங்கள் ஆகி விட்டது. தேசம் அதன் தியாகிகளை மறந்து கடந்து விட்டது. இனியும் சர்க்காரை நம்புவது சுயமரியாதைக்கு இழுக்காக நினைத்தார். காமினியைக் கண்டது முதல் ஒரு புது சிந்தனை தோன்றியது. குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தால் என்ன? வரலாறு பாடம் நடத்தலாம் என்று முடிவு செய்தார். தன்னை விட வரலாறு பாடத்தை சிறப்பாக நடத்த, இந்த காலத்து ஆசிரியர் எவராலும் முடியாது என்று உறுதியாக நம்பினார்.
அடுத்த நாள் காமினி வந்து கதை சொல்லும்படி நச்சரித்தாள்.
"கதை சொல்கிறேன். ஆன்னால் ஓன்று. நான் சிறுவர்களுக்கு வரலாறு பாடம் நடத்த விரும்புகிறேன். நீ உனக்கு தெரிந்த நண்பர்களிடம் சொல்லி ஆள் சேர்க்க வேண்டும்."
"செய்கிறேன். எனக்கு கப்பலோட்டிய தமிழன் கதை சொல்லுங்கள்."
தாத்தா கதை சொல்லி முடித்ததும், காமினி கேள்விகளைத் தொடுத்தாள்.
"சிதம்பரம் சுதேசி வாணிபம் தலையெடுக்க வேண்டும் என்று கப்பல் வாங்கினார். அனால் இப்போது கோகோ கோலா, பெப்சி என்று எத்தனை வெளிநாட்டுப் பொருட்கள் இங்கு கிடைக்கின்றன. இவற்றை நம் அரசு ஏன் தடை செய்யவில்லை? நாம் மீண்டும் அடிமை நாடாக ஆகி விடுவோமா?”
"இப்போதைய காலகட்டம் வேறு, நம் தேசத்திற்கு இப்போது வலுவான ராணுவம் இருக்கிறது. மீண்டும் அடிமை ஆட்சி எல்லாம் நடக்காது."
"என் அப்பா சொல்கிறார்,நம் பிரதமர் அமெரிக்கா பேங்க் சொல்லும்படி தான் நடக்கிறார் என்று. அப்படியானால் நாம் இப்போது அடிமைகளா?"
"நமக்கு அவர்கள் பணம் வேண்டும். அதனால் சிறிது காலம் அப்படி இருக்க வேண்டி இருக்கும். கவலைப்படாதே. நீ வளர்ந்து பெரிய பெண் ஆகும் போது, நம் நாடு சொல்வதை அனைத்து நாடுகளும் கேட்கும், ஆங்கிலேய அரசு உட்பட."
"அப்படியானால் நான் பெரிய பெண் ஆனவுடன் கோஹினூர் வைரத்தை ஆங்கிலேய அரசிடமிருந்து வாங்க முடியுமா."
"முடியும். அதற்கு இன்னும் வெகு நாட்கள் ஆகும். நீ பாட்டி ஆகும் போது நடக்கலாம்."
அடுத்த நாள் காமினி ஐந்து மாணவர்களுடன் வந்தாள். ஒரு மாதத்திலேயே இருபது மாணவர்கள் சேர்ந்து விட்டனர்.
போஸ் வகுப்பில் பாட புத்தகங்கள் வாசிப்பதே எல்லை. மாணவர்களை குழுக்களாக பிரித்து விவாதம் செய்ய வைத்தார். பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிற்கு நன்மையா தீமையா? அக்பர் ஆட்சி இந்தியாவின் பொற்காலமா? சோழ மன்னர்கள் கோவில்கள் காட்டியது பயனுள்ளதா? இவ்வாறு பல தலைப்புகளில் விவாதங்கள் நடந்தது.
துவக்கத்தில் பெற்றோர்கள் முறையிட்டனர். இப்படி படித்தால் மதிப்பெண்கள் வராது என்று குறை கூறினர். போஸ் அவர்களைப் பொறுமையாக இருக்கும்படி கூறினார். அவர் எதிர்பார்த்தபடியே பாடங்களை குழந்தைகள் தானாகவே படித்தனர். அனைவரும் தேர்வில் 90 மதிப்பெண்கள் மேல் பெற்றனர்.
மேலும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் போஸிடம் படிக்க வைக்க விரும்பினர். ஆனால் போஸ் நிறைய கூட்டத்தை சேர்க்க விரும்பவில்லை.
ஒரு நாள் போஸிடம் ஒரு மாணவன் காந்தி, சுபாஷ் இருவரில் யார் பங்களிப்பு விடுதலை போராட்டத்திற்கு முக்கியமானது என்ற தலைப்பில் விவாதம் செய்யலாம் என்று கூறினான். போஸ் அதற்கு சம்மதித்தார்.
"சந்திரன் தானே உன் பெயர். உன் வகுப்பில் மற்றவரை அடித்து மிரட்டும் ஒரு மாணவன் இருக்கிறானா?"
“இருக்கிறான். பரத் என்ற தடியன். அவனைக் கண்டால் எல்லா மாணவர்களுக்கும் பயம். அவன் முகத்தில் அறை விட்டால் எல்லாப் பல்லும் தெறித்து விடும். யாரும் அவன் பக்கம் போவதற்கே அஞ்சுவர்."
"அவனை யாராவது எதிர்த்திருக்கிறார்களா?"
"இருக்கிறான். அஷ்வின். அஷ்வின் ஒரு நாள் பரத்தை வகுப்பறைக்கு வர விடாமல் தடுத்தான். பரத் அஷ்வினை அடித்து துவைத்து விட்டான். அடுத்த நிமிடமே ஒரு மாயம் அடைந்தது. வகுப்பின் அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்ந்து பரத்தை தடுத்தோம். அன்றிலிருந்து பரத் யாரையும் அடிப்பதில்லை."
அடுத்து ரியோவிடம் தாத்தா அதே கேள்வியை கேட்டார்.
"என் வகுப்பில் சேகர் என்ற முரடன் ஒருவன் இருந்தான். அவன் மற்ற மாணவர்களை வம்புக்கிழுத்து, அடித்து கொடுமை செய்வான். ஒரு நாள் மனோ என்றவன் சேகரிடம் சண்டைக்குச் சென்றான். ஆனால் சேகரின் பலத்தின் முன் மனோ வெறும் பூச்சி. சேகர் அடித்த அடியில் மனோ இரண்டு மாதம் வகுப்பிற்கே வரவில்லை. மாணவர் எல்லோருக்கும் பயம். அடுத்து சேகர் கோபத்தில் யாரையெல்லாம் கொடுமை செய்வான் என்று நடுங்கினர்"
தாத்தா இப்போது தன் கருத்தை முன் வைத்தார்.
"இரண்டு கதைகளை நீங்கள் கேட்டீர்கள். இதில் யார் பெரியவர். அஷ்வினா அல்லது மனோவா? அஷ்வின் பரத்தை வன்முறையால் எதிர்க்க முடியாது என்று அறிந்து, அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து அகிம்சை முறையில் போராடினான். வெற்றியும் பெற்றான். மனோ முட்டாள்தனமாக வலியவனை வன்முறையால் எதிர்க்க முயன்றான். அஷ்வின் காந்தி என்றல் மனோ சுபாஷ். யார் திறமைசாலி. நீங்களே சொல்லுங்கள்"
ரியோ - "ஆனால் மனோவும் வெற்றி பெற்றான். சேகர் பள்ளியிலிருந்து நின்று விட்டான். அவன் பெற்றோரைக் கேட்ட போது சேகர் மிகவும் நடுக்கத்தில் இருப்பது தெரிந்தது. இது வரை தன் மீது ஓருவர் கூட கை வைத்ததில்லை. ஆனால் அதை மீறி இப்போது ஒருவன் அடிக்க வந்து விட்டான். ஒருவன் என்பதால் போயிற்று. நாளை முழு வகுப்பும் அடிக்க வந்தால் என்ன செய்வது. இதனால் சேகர் பயந்து பள்ளியிலிருந்து நின்று விட்டான்."
போஸ் தாத்தா இந்த பதிலைக் கேட்டு வியப்பில் மூழ்கினார். காமினி தன் கேள்வியைக் கேட்டாள்.
"அப்போது சுபாஷ் போஸும் வெற்றி பெற்றவர் தானே. காந்தி, போஸ் இருவரும் வெற்றி பெற்றனர். இருவரும் சமமான பலமுடையவர்.
மூன்று வருடங்கள் கழிந்தது. மாணவர்கள் மூலம் வரும் வருமானத்தால் தாத்தாவிற்குப் பணமுடை ஏற்படவில்லை.அரசிடமிருந்து உதவிப்பணம் ஏதும் வரவில்லை. போஸ் அதை பெரிதுபடுத்தவும் இல்லை.
காமினி வளர்ந்து பெரிய பெண் ஆகியிருந்தாள். அவளிடமிருந்த துடிப்பும், குறும்பும் குறையவில்லை. அவள் மதி இன்னும் கூர்மையாகத் தீட்டப்பட்டிருந்தது.
ஒரு நாள் தாத்தாவிற்கு நிமோனியா காய்ச்சல் வந்தது. ஒரு மாணவனின் தந்தை மருத்துவர் உதவியால் போஸ் நோயிலிருந்து மீண்டு வந்தார். ஆனால் உடம்பில் வலு குறைந்திருந்தது. தாத்தாவால் முன் போல வகுப்புகள் எடுக்க முடிவதில்லை. மற்ற மாணவர்கள் தாத்தாவை மறந்திருந்தனர். ஆனால் காமினி மட்டும் விடாமல் வந்தாள்.
தாத்தாவிற்கு மீண்டும் பணத்தேவை வந்தது. அரசாங்க உதவி கண்டிப்பாக வேண்டிய சூழ்நிலை. காமினி தன் தந்தை அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருப்பதால் உதவி செய்ய முடியும் என்று கூறினாள். போஸ் காமினியின் தந்தையை சந்தித்து நிலைமையைக் கூறினார். அவள் தந்தை உதவுவதாக உறுதி கூறினார். ஒரு மாதம் ஆகியும் காமினியின் தந்தையிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. மூத்த அதிகாரி ஓய்வில் சென்று விட்டதால், புது அதிகாரி வந்திருப்பதாகவும், மிகவும் கண்டிப்பானவர் என்றும் கூறினார். இப்போது உடனே உதவி கேட்க வேண்டாம், சில நாட்கள் கழித்து கேட்பதாக கூறினார்.
அடுத்த சில நாட்கள் காமினி தாத்தாவைச் சந்திக்க வரவில்லை. அவள் வீட்டிலிருந்து அழுகையும் சண்டை போடும் சத்தமும் கேட்டது. போஸ் அவள் வீட்டிற்குச் சென்று என்ன நடக்கின்றது என்று பார்க்கலாம் என்று நினைத்து பிறகு அந்த எண்ணத்தைக் கை விட்டார்.
ஒரு வாரத்திற்குப் பிறகு காமினியும் அவள் தந்தையும் சந்திக்க வந்தனர். அவள் தந்தை மிகவும் தளர்வாக தென்பட்டார்.
"கடந்த சில நாட்களாக காமினி உங்களுக்கு நான் உதவ வேண்டும் என்று நச்சரித்து வந்தாள். புதிதாக வந்திருக்கும் என் உயர் அதிகாரி மிகவும் கடுமையானவர். அவரிடம் சென்று இது பற்றி எல்லாம் பேச முடியாது. இது புரியாமல் காமினி அடம் பிடித்து அழுதுக் கொண்டிருந்தாள். ஒரு நாள் காமினி வீட்டிற்கு வெகு நேரம் வரவில்லை. அப்போது என் உயர் அதிகாரி உடனடியாக அலுவலகம் வர சொல்லியிருந்தார். அங்கு காமினியும் இருந்தாள். அவள் நேரடியாக உயரதிகாரியிடம் சென்று உங்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டிருக்கிறாள். அவர் அதெல்லாம் சட்டென்று நடவடிக்கை எடுக்க முடியாது. நீ உன் வீட்டிற்கு செல் என்று கடுமையாகப் பேசியிருக்கிறார். காமினி அடம் பிடித்து அங்கிருந்து போக மாட்டேன் என்று சொல்லியிருக்கிறாள். அதிகாரி என்னைத் தொடர்பு கொள்ள ஆள் அனுப்பியிருந்தார். நான் அந்த நேரம் காமினியைத் தேடி அலைந்தது கொண்டிருந்தேன். அவர் பணியாட்கள் மூலம் பலவந்தமாக காமினியை அலுவலகத்தை விட்டு வெளியேற்றினார்.
அடுத்த சில மணி நேரம் கலெக்டரிடமிருந்து என் உயரதிகாரிக்கு அழைப்பு வந்தது. அங்கு காமினி இருந்தாள். ஒரு சுதந்திர போராட்ட வீரருக்குக் கூட உதவி செய்ய முடியவில்லை என்றால் உனக்கெல்லாம் எதற்கு பதவி, அதிகாரம் என்று கலெக்டர் திட்டினார். அதிகாரி ரெண்டு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த மூன்று வருடங்கள் உங்களுக்கு நிறுத்தியிருந்த உதவித்தொகை வட்டியுடன் சேர்த்து இந்த டிராப்ட். இதை நானே உங்கள் வங்கியில் கட்டி விடுகிறேன். ஒரு கையெழுத்து மட்டும் நீங்கள் போட்டால் போதும்.இனி மாதா மாதம் முதல் தேதியில் உதவிப் பணம் உங்கள் வங்கியில் வந்து விடும். மேலும் உதவிக்கு ஒரு நர்ஸும், பணியாளும் எப்போதும் உங்களுடனேயே இருப்பார்கள். நான் வருகிறேன்."
காமினியை என்னிடம் விட்டு அவள் தந்தை சென்று விட்டார். காமினி முகத்திலிருந்த பெருமிதம் பார்த்து எனக்குப் புன்னகை வந்தது.
"காமினி உன்னுடையது காந்தி வழியா, இல்லை சுபாஷ் வழியா?’
"இரண்டும் இல்லை. காமினி வழி.”
——-*****—-