Thursday, February 26, 2026

Kill Heisenberg

 பெர்லின் நகர வீதி ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் இரு உருவங்கள் மெதுவாக நடந்து கொண்டிருந்தன. இருவரில் ஜேக்கப் சற்று முதியவன். இளையவன் ஸ்காட்டிற்கு வயது இருபது மட்டுமே.  ஜேக்கப்பிற்கு வயது முப்பது இருக்கும். வீதியில் வெளிச்சம் சற்றும் இல்லை. நிலவின் ஒளியைத் தவிர. அவர்கள் அந்த ஊருக்கு புதிது என்றும் வெளிநாட்டினராக  இருக்கக் கூடும்  எவராலும் எளிதாக கண்டுபிடிக்க முடியும். அது போர் காலத்தில் தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கும். அதனால் அவர்கள் இரவு முழுதும் விடுதியிலேயே கழித்தார்கள். சோர்வின் காரணமாக பகல் முழுதும் குடித்தே நேரத்தை கழித்தார்கள். 

ஜேக்கப் தன் சுருட்டை பற்ற வைத்து பேச்சு கொடுத்தான்.


"நண்பா போர் எதற்கு நடக்கிறது என்று தெரியுமா? போர் என்பது இரு நாடுகளுக்கிடையே அல்ல. இரு நாட்டு மக்களுக்குமிடையே அல்ல. மனிதனின் அகம் பல்வேறு முரண்பாடுகளால் பிளவுண்டு இருக்கிறது. பல்வேறு அகத்துண்டுகள் தமக்குள் நடக்கும் கூச்சலின் வெளிப்பாடே போர் ஆகும். மனித மனம் ஒத்திசைவுடன் ஒருமையாக இருந்தால் போரே இருக்காது."


"நீங்கள் கூறுவது கவிதை போலவும் இருக்கிறது. தத்துவம் போலவும் இருக்கிறது. என் சிற்றறிவுக்கு எதுவும் புரியவில்லை.நீங்கள் அதிகம் படிப்பீர்கள் என்று யூகிக்கிறேன்.”


"இது  தத்துவமே. கீழை உலகின்  தத்துவங்கள்  எப்போதும் கவிதை  போலவே பெருக்கெடுத்து ஓடுகிறது. என் நண்பன் ஒருவன் வேதாந்த புத்தகங்கள் மீது ஈடுபாடு கொண்டவன். அவன் மிதமிஞ்சிய குடி போதையில் இருக்கும்போது வரும் உளறல்களில் இருந்து நானும் சிலவற்றை கற்றுக் கொண்டேன்."


"நீங்களும் ரம் அதிகம் எடுத்திருக்கிறீர்கள். அதனால் மனித மனத்தையும், போரையும் இணைத்து குழப்புகிறீர்கள்"


"மூடா. நான் சொல்வதை கேள். இந்த புவியில் இருக்கும் ஒவ்வொரு மனமும், இணைந்த  ஒரு கூட்டு மனதின் பகுதியே. இந்த கூட்டு மனதின் பிரதிபலிப்பே புற உலகின் நிகழ்வுகளும். இந்த கூட்டு மனம் ஒத்திசைவுடனிருந்தால் இவ்வுலகில் போரே இருக்காது. போர் என்பது என்ன  மனிதன் உருவாக்குவது தானே. அல்லது மனித மனம் உருவாக்குவது தானே"


புரிகிறது. நீங்கள் யூதரா?"


"ஆம். ஏன் கேட்கிறாய்?"


"நீங்கள் ராணுவத்தில் சேர்ந்தது ஹிட்லர் யூதர்களுக்கு எதிராக செய்யும் கொடுமைகள் தானே காரணம்."


"என் பெற்றோர் ரஷ்யாவை சேர்ந்த யூதர்கள். இருபது வருடங்கள் முன்பு ரஷ்யாவில் யூதர்களுக்கு எதிராக பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. நாங்கள் அமெரிக்காவிற்கு வந்து நியூயார்க்கில்  குடியேறினோம். இந்த உலகம் யூதர்களை எங்கும் நிம்மதியாக வாழ விடாது. ஒவ்வொரு இனத்தினருக்கும் ஒரு நாடு இருப்பது போல் யூதர்களுக்கும் ஒரு நாடு வேண்டும். உலகெங்கிலும் உள்ள யூதர்கள் அங்கு வந்து குடியேற வேண்டும். இந்த போர் அதற்கான முதல் திறப்பு. முதலில் ஹிட்லரின் அழிவு, அதன் பின் யூதர்களுக்கான தேசம் - இஸ்ரேல். அதை அடைவதே ஒவ்வொரு யூதனின் கனவாக இருக்க வேண்டும்."


"உங்களுக்காவது இந்த போரில் பங்கெடுப்பேதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது.   ஆனால் நான் இந்த போரில் பங்கெடுத்தது கொள்கை சார்ந்த காரணங்கள் எதுவுமில்லை வெறும் பணத்திற்காக மட்டுமே. அமெரிக்காவின் மாபெரும் பொருளாதார வீழ்ச்சியின் போது என் தந்தை, பங்குசந்தையில் அவருடைய  முதலீடுகள் பெருமளவு சரிந்தது, அதன் விளைவாக அவர் வியாபாரம் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் இழந்தார். கடன்காரர்கள் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்தார். அப்போது எனக்கு பதினேழு வயது.என் தாய், தங்கையுடன் பெரும் இன்னல்கள் சந்தித்தோம். இந்த போர் ஆரம்பித்தவுடன் உடனே ரானுவத்தில் சேர்ந்தேன். என் வருமானத்தில் ஒரு நல்ல தொகையை வீட்டிற்கு அனுப்பி முடிகிறது.  போரின் விளைவாக உற்பத்தி சார்ந்த தொழில் எழுச்சி ஏற்பட்டது. என் தாயும் தங்கையும் ஒரு நல்ல வேலையில் இருக்கிறார்கள். நாம் இந்த நகரத்திற்கு வந்த காரணம் என்ன?"


"இந்த போரை முடிவுக்கு கொண்டு வர"


"இந்த போரை நீங்களும் நானும் முடிவுக்கு கொண்டு வருகிறோமா? "


"ஆம். இந்த இரவு அதற்கான துவக்கம்"


"நாம் என்ன செய்ய போகிறோம்?"


"ஒருவரை சந்திக்க போகிறோம். அவர் பெயர் ஹெய்சன்பர்க்.”


"ஹிட்லருக்கு நெருக்கமான ஆலசோகரா?"


"இல்லை. விஞ்ஞானி. அவரைக் கொலை செய்யப் போகிறோம்


இரவின் முழு நிலவு வெள்ளிக்கிண்ணம் போல் ஒளிர்ந்தது. தெரு மனித நடமாட்டம் இன்றி கனத்த மௌனத்துடன் நீண்டது. யார் வீட்டிலோ நாயின் குறைப்பு சத்தம் கேட்டு அடங்கியது.


"இன்னும் சில மாதங்களில் இந்நகரம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு வரும்."


"ஆனால் போர் இன்னும் இழுபறியாக தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள்"


"அதை தான் நாம் இன்று முடிவுக்கு கொண்டு வர போகிறோமே"


இருவரும் ஒரு வீட்டை அடைந்து கதவை தட்டினார்கள். வீட்டின் உள்ளே மெலிதான பியானோ சத்தம் கேட்டது. சில நிமிடங்களில் கதவை ஒருவர் திறந்தார்.


இருவரும் உள்ளே அறைக்கு வந்து அமர்ந்தனர்.


"நீங்கள். யார். ரகசிய கண்காணிப்பு துறை சேர்ந்தவர்களோ?  நான் எல்லா விபரமும் சென்ற வாரமே அனுப்பி விட்டேன்."


"உங்கள் பெயர் ஹெய்சன்பர்க் தானே?


"ஆம்"


"நாங்கள் ரகசிய உளவுத்துறை சேர்ந்தவர்கள் தான். ஜெர்மனியுடையது அல்ல. அமெரிக்காவின் உளவுத்துறை சேர்ந்தவர்கள் நாங்கள்."


ஹெய்சன்பர்க் அதிர்ந்தார்.


"உங்களுக்கு என்ன வேண்டும்."


"அதை பின்னர் சொல்கிறேன். இந்த போர் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்."


"அதை பற்றி நான் என்ன சொல்ல?"


"இது நியாயமான யுத்தமா?"


"அது பற்றி எனக்கு எந்த கருத்தும் இல்லை."


"நீங்கள் யூதர்கள் அழிக்கப்பட வேண்டிய இனம் என்று கருதுகிறீர்களா?"


"இல்லை. தொழில் ரீதியாக எனக்கு பல யூதர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். எய்ன்ஸ்ட்டின் உட்பட"


"எய்ன்ஸ்ட்டின் பற்றி என்ன நினைக்கிறீர்கள்"


'தலை சிறந்த விஞ்ஞானி தான். ஆனால் மிகையாக போற்றப்படுபவர். நான், ஷ்ராடிங்கர், போகர் போன்றவர்கள் அவரை விட சிறந்த  அறிவியல் கருத்தாக்கங்கள் உருவாக்கியிருக்கிறோம். குவாண்டம் இயற்பியலில் அவர் பங்களிப்பு மிகவும் குறைவு என்பதை ஏனோ அனைவரும் பொறுப்படுத்துவதில்லை"


"அவர் யூதர் என்பதால் வெறுக்கிறீர்களா


"இல்லை வெறும் தொழில் ரீதியான போட்டி மட்டுமே


"நாங்கள் கதவை தட்டும்போது இனிதான பியானோ இசை ஒலித்தது. அது நீங்கள் வாசித்ததா?"


"இல்லை இந்த ஒலிப்பேழையில் இருந்து வந்தது"


"அந்த இசையை மீண்டும் போட முடியுமா? இந்த இரவில் பீத்தோவனின் இசை கேட்பது என்பது எவ்வளவு சுகம்."


இசை அந்த அறையை நிறைத்தது. துள்ளும் தென்றலைப் போல, நதி நீரின் சுழற்சியை போல, கடல் அலையின்  ஓங்காரத்தை போல இசை பல பரிமாணங்களை எடுத்து முடிவுக்கு வந்தது. ஹெய்சன்பர்க்  இறுக்கம் குறைந்து இயல்பானார்.


"நீங்கள் வந்த காரணம் என்ன?"


"எனக்கு இடப்பட்ட ஆணை உங்களை கொல்ல வேண்டும் என்பது. என் உள் சட்டையில் ஒரு துப்பாக்கி உள்ளது. ஆனால் அதற்கு தேவை இருக்காது என்று நான் நினைக்கிறேன். என் உள் மனம் சொல்கிறது நீங்கள் நம்பத்தகுந்தவர் என்று.  நீங்கள் நாடு, இனம் தாண்டி சிந்தனை செய்பவர் என்று நான் நம்புகிறேன். உங்களை ஹிட்லர் கொல்ல நினைத்தார் என்பது உண்மையா"


"ஆம் உண்மை தான். ஹிட்லர் ஒரு மூடன். சார்பியல் கோட்பாடு (relativity  தியரி), குவாண்டம் இயற்பியல் போன்றவை யூதர்களின் அறிவியல் என்றும், அவை குறைபட்டது என்றும், அவற்றை ஜெர்மானிய விஞ்ஞானிகள் யாரும் ஏற்க கூடாது என்று உத்தரவவிட்டிருந்தான். ஆனால் ஹிட்லரின் இந்த கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் என்னை கொலை செய்ய நினைத்திருந்தான்."


"பிறகு எப்படி அவன் மனம் மாறியது"


"அது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது."


"உங்கள் தாய்க்கும், ஹிட்லரின் ஆலோசகரான ஷிமலருக்கும் என்ன உறவு"


"நீ என்ன கேட்கிறாய் என்று புரிகிறது. என் தாய் ஷிம்லரிடம் வேண்டியதால் நான் தப்பினேன் என்பது உண்மை. ஆனால் அவளுக்கும் ஷிமலருக்கும் என்ன தொடர்பு என்பது எனக்கு தெரியாது. நல்ல நண்பர்கள் என்பது மட்டும் அறிவேன்"


'இந்த போரில் யார் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள்"


"கண்டிப்பாக ஜெர்மனி. ஜெர்மனியின் தலைமையில் ஒன்றுபட்ட ஐரோப்பா என்னவெல்லாம் சாதிக்கலாம் என்று யோசித்து பார். அது மானுடத்தின்  வளர்ச்சிக்கு எத்தனை உந்துதலாக இருக்கும்"


"ஜெர்மனியின் தலைமையில் என்பதை ஹிட்லரின் கீழ் என்று மாற்றி யோசித்து, பிறகு உங்கள் கருத்தை மீண்டும்  சொல்லுங்கள். நீங்களே கூறினீர்கள் அவன் ஒரு மூடன் என்று. அவன் கீழ் முழு ஐரோப்பாவும் இருந்தால் என்னவாகும் என்று ஒரு கணம் சிந்தியுங்கள்".


"என்னை என்ன செய்ய சொல்கிறாய்"


"இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறீர்களா?"


"ஆம்.உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இந்த போர் சலித்து விட்டது. எப்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம் என்றிருக்கிறது. இந்த போர் விரைவில் முடிய வேண்டும். ஜெர்மனி தோற்றாலும் கூட பரவாயில்லை என்று கூட சில சமயம் யோசிப்பதுண்டு


"இந்த போர் முடிவது உங்கள் கையில் தான் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா. ”


"ஜெர்மனிக்காக ஒரு ரகசிய ஆயுதம் தயாரிப்பது உங்கள் பொறுப்பில் இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். அந்த ஆயுதம் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வல்லது. அணுக்களை பிளந்து பெரும் வெடிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டது அந்த ஆயுதம். ஒரு பெரும் நகரையே தட்டையாக்க வல்லது என்பதை அறிவோம்."


"அமெரிக்காவிற்கு இது தெரியும் என்பதும் எனக்கு தெரியும். நீங்கள் மட்டும் வெறும் வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். லட்சம் பேர் இணைந்து ஆப்பன்ஹேமெர் தலைமையில் நீங்களும் அதே ஆயுதத்தை தயார் செய்ய முனைகிறீர்கள் என்பதை நானும் அறிவேன்."


"இந்த ஆயுதம் யார் முதலில் தயாரிக்கிறார்களோ அவரே இந்த போரில் வெற்றி பெறுவார் என்பதை ஏற்கிறீர்களா?"


"கண்டிப்பாக. ஆனால் இந்த ஆயுதம் தயார் செய்யும் முயற்சி வெற்றி அடையக் கூடாது என்றே நான் விரும்புகிறேன். இது உண்டாக்கும் கதிர் வீச்சு பல தலைமுறைகளை பாதிக்கும்."


"அப்படி ஆனால் ஏன் இந்த முயற்சிக்கு ஒப்புக்கொண்டீர்கள்?"


"நான் வற்புறுத்தப்பட்டேன். என்னை, என் மனைவியை கொலை செய்வதாக மிரட்டினார்கள்."


"உங்கள் தரப்பில் இன்னும் எவ்வளவு நாட்களில் இந்த ஆயுதம் தயார் ஆகி விடும்"


"நான் நினைத்தால் இன்னும் சில மாதங்களில். ஆனால் நான் வேண்டும் என்றே இழுத்தடிக்கிறேன். காரணம் என் மனது சொல்கிறது இந்த ஆயுதம் மனித இனத்தின் கையில் கிடைக்க கூடாது என்று. மேலும் இந்த முயற்சியில் அமேரிக்கா காட்டும் முனைப்பு ஹிட்லரிடம் இல்லை. அவன் ஒரு மூடன் என்று முன்னரே சொன்னேனே"


"இந்த முயற்சியை இழுத்தடிப்பதாக கூறினீர்கள். மேலும் விபரம் சொல்லுங்கள்"


"அணுக்கரு சங்கிலித் தொடர்வினையை(nuclear chain  reaction) நிலைநிறுத்தும் குறைந்தபட்ச நிறையை (critical  mass) நான் மிகைப்படுத்தி சொல்லி இருக்கிறேன். அதனால் இந்த முயற்சி நிறைவுக்கு கொண்டு வர பல வருடங்கள் ஆகும் என்றும் என் ரிப்போர்ட்டில் கூறியிருக்கிறேன். அதனால் ஹிட்லர் இதில் ஆர்வம் இழந்து விட்டான்"


"மிக நன்று. அவ்வாறே தொடருங்கள். எனக்கு மேலும் சில விபரங்கள் தேவை. அணு ஆயுத தயாரிப்புக்கு தேவையான கண நீர் உற்பத்தி செய்யும் இடங்கள் பற்றி விபரங்கள் தேவை."


"இந்த ஆயுதம் உலகை பேரழிவிற்கு கொண்டு வந்து நிறுத்தும். அதற்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் செய்வேன்."


ஹெய்சன்பர்க் சில ஆவணங்களை அளித்தார். 


"நன்றி நாங்கள் செல்கிறோம்"


"ஒரு நிமிடம். இந்த ஆய்தம் தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா எந்த அளவு முன்னேறி இருக்கிறது என்பதை கூறாமல் செல்கிறாயே"


"அது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது தோழரே, நாங்கள் விரைவில் இங்கிருந்து செல்ல வேண்டும்."


"நான் கேட்கும் விபரங்கள் கூறாமல் உங்களால் தப்ப முடியாது. இந்த நொடியே என்னால் ஹிட்லரின் உளவுத் துறையிடம் தொடர்பு கொண்டு உங்களை அழிக்க முடியும்"


"நண்பரே இது என்ன பிடிவாதம். எனக்கு இடப்பட்ட ஆணை உங்களைக் கொலை செய்ய வேண்டும் என்று. நீங்கள் உளவுத்துறையை தொடர்பு கொள்ளும் முன்னரே, இந்த துப்பாக்கியை  இயக்கி என்னால் ஒரு நொடி உங்களை மேலுலகம் அனுப்ப முடியும். உங்கள் மீது கொண்ட நம்பிக்கையின் பேரில் நான் இத்தோடு செல்கிறேன்.”


"இந்த அணு ஆயுதம் யாரும் தயார் செய்யக் கூடாது,ஜெர்மனி மட்டுமல்ல. உலகின் எந்த நாடும்"


"உண்மையில் எனக்கு அது பற்றி தெரியாது. . நான் ஒன்று மறந்து விட்டேன். எய்ன்ஸ்ட்டின் இந்த கடிதத்தை உங்களிடம் கொடுக்க சொன்னார்.”


எய்ன்ஸ்ட்டின் கடிதம் பார்த்தவுடன் ஹெய்சபெர்க் முகம் பிரகாசித்தது. 


"இந்த கடிதத்தில் எய்ன்ஸ்ட்டின் ஒரு சமன்பாடு அளித்து என்னை சரி பார்க்க சொன்னார். ஆனால் அவருடைய சமணப்பாடு குறை கொண்டது. பதிலுக்கு சரியான சமன்பாடை நான் அளிக்கிறேன். ஐன்ஸடீனிடம் கொடுத்து விடு."


ஹெய்சன்பெர்கிடமிருந்து  சில தரவுகளை வாங்கி கொண்டு இருவரும் கிளம்பினர். வெளியே வந்ததும் இருவரும் சுருட்டை பற்ற வைத்த்து நடந்தனர்.


"நண்பா. போர் முடிவுக்கு வந்து விட்டது. நம் இருவர் இன்று செய்த முயற்சியினால்."


"அது தான் தெரியுமே. நாம் முயற்சி செய்வதற்கு முன்னரே, ஹெய்சென்பெர்க் அணு ஆயுத முயற்சியை இழுத்தடிப்பதாக கூறினாரே."


"அது இந்த போரையும் இழுத்தடிக்க மட்டுமே செய்யும். நீண்ட போர். பெரும் உயிரிழப்பு."


". கண நீர் உற்பத்தி செய்யும் இடங்கள் குறித்த விபரங்கள் ஹெய்ஸ்ன்பர்க் நமக்கு அளித்தாரே. அதை சொல்கிறீர்களா. இப்போது புரிகிறது."


"அது அல்ல. இது போன்று உற்பத்தி செய்யும் இடங்களை சில நாட்களில் ஜெர்மனி உருவாக்க முடியும்"


"என்னை குழப்புகிறீர்கள்"


ஜேக்கப் ஹெய்சென்பெர்க் தந்த தரவுகளை சுட்டிக் காட்டினான்.


"இது போரை நிறுத்த வல்லது. ஹெய்ஸ்ன்பர்க் சங்கிலித் தொடர்வினையை நிலைநிறுத்தும் குறைந்தபட்ச  நிறை பற்றி கூறினார் அல்லவா? அது ஐஸ்ட்டின் உட்பட அமெரிக்க விஞ்ஞானிகள் யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. சரியான சமன்பாட்டை ஹெய்ஸ்ன்பர்க் கண்டுபிடித்துள்ளார். அது இந்த தரவில் உள்ளது."


"இதை ஏன் ஹெய்ஸ்ன்பர்க் நமக்கு கொடுக்க வேண்டும்"


"நான் அவர் அகந்தையை தூண்டினேன். எய்ன்ஸ்ட்டினால் முடியாதது தன்னால் முடிந்தது என்ற அவர் ஆணவத்தை தூண்டியதால் இது நமக்கு கிடைத்தது."


'இந்த சமன்பாட்டைக் கொண்டு நாம் என்ன செய்ய இயலும்"


"அணு ஆயுதத்தை அமெரிக்கா முதலில் கண்டுபிடிக்கும். சில மாதங்களில் அது நடக்கும். என் கணிப்பு அமெரிக்கா இதை ஜெர்மனி மீது பிரயோகிக்காது. ஜப்பான் மீது இந்த ஆயுதத்தை பயன்படுத்தலாம். அது நிகழ்த்தும் பேரழிவை பார்த்து இந்த உலகே ஸ்தம்பிக்கும், நம் எதிரி நாடுகள் உட்பட. போர் நின்று விடும்"


"புரிகிறது. ஆனால் ஜெர்மனியினால் நிகழக்கூடிய அழிவு அமெரிக்காவினால் நிகழும். அவ்வளவு தானே வேறுபாடு. கதிரியக்கம் நிகழ்த்தும் தாக்கம் எத்தனை தலைமுறைகளை பாதிக்கும். இந்த போர் தாண்டி எதிர்காலத்தில் எத்தனை நாடுகள் இந்த ஆயுதத்தை உருவாக்கி, இந்த புவியையே அழிவின் வாசலில் கொண்டு நிறுத்தும். இதை எல்லாம் மெத்த அறிவாளியான தாங்களே உணரவில்லையா?"


ஹெய்சன்பர்கிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.


"கடைசியாக ஒரு கேள்வி. நீங்கள் ஏன் ஹெய்சன்பர்கை கொல்லவில்லை.?"


"எல்லாம் ஒரு தொலைநோக்குப் பார்வை தான். இந்த போருக்கு பின் ஹெய்சன்பர்கை நம் பக்கம் இழுத்துக் கொண்டால் அது பெரும் நன்மை அல்லவா?”


"உங்களுக்கும் மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதோ என்று ஒரு நிமிடம் நினைத்து விட்டேன்.”


ஜேக்கப் வெகு நேரம் அமைதியாக இருந்தார். தன் பதட்டத்தை மறைக்க சுருட்டை வேகமாக இழுத்தார்.


ஜேக்கப் வெகு நேரம் அமைதியாக இருந்தார். தன் பதட்டத்தை மறைக்க சுருட்டை வேகமாக இழுத்தார்.


"நான் யார். வெறும் போர் வீரன் ஒரு கருவிஅவ்வளவு தான்."


"ஆம். அவ்வளவு தான்."


இருவரும் வேகமாக அந்த இருட்டில் மறைந்தனர்.


                                          ———********———