உயிரின் விளிம்பில்
Chapter 1
மும்பை நகரம்
பீசா ஹட் அன்று வழக்கத்திற்கு மாறாக ஆள் அரவமற்றி இருந்தது.
தான் காலையிலேயே வந்து விட்டதால் இருக்கும் என்று சத்யன் நினைத்துக் கொண்டான். அவன்
தன் காதலி நிஷாவுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். சத்யனை சந்தித்து ஒரு முக்கியமான
விஷயம் பேசுவதாகக் கூறியிருந்தாள்.
சிறிது நிமிடங்களில் அழகு தேவதையாக நிஷா எதிரிலிருந்த சீட்டில் அமர்ந்தாள்.
"ரொம்ப நேரம் காக்க வெச்சிட்டேனா?"
"10 நிமிஷம் முன்னாடி தான் நானும் வந்தேன். ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னியே"
“நாம லவ்
பண்ணி 4 வருஷம் ஆகுது. எப்போ கல்யாணம்னு யோசிச்சியா?"
சத்யன்
பதிலேதும் சொல்லாமல் மெளனமாக இருந்தான்.
நிஷா
கோபத்துடன் டேபிளை விட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தாள். சத்யன் அவள் பின்னே
தொடர்ந்தான்.
"என்ன
கோபம் நிஷா?"
"எவ்வளவு
முக்கியமான மேட்டர் பேசிட்டு இருக்கேன். ஒரு பதிலும் சொல்லாம இருக்கே. எங்க
அப்பா அவரோட பிசினஸ் பிரண்டோட சன்னை நான் கல்யாணம் பண்ணனும்னு கண்டிப்பா
சொல்றார். என்ன செய்யலாம்?"
"என்ன
செய்யலாம்னு நீயே சொல்லு?"
"ஒரு
அக்கறையும் இல்லாம நீ பதில் சொல்றே?"
"உங்க
அப்பாவை நீ தான் சம்மதிக்க வைக்கணும். நான் என்ன பண்ண முடியும்?"
"எங்க
அப்பாகிட்டே நீயே வந்து கன்வின்ஸ் பண்றேன்னு பதில் சொல்வேன்னு நினைச்சேன்.
உண்மையான லவ்வர்னா இந்த பதில்தான் சொல்வாங்க. என்ன பண்றது என் தலையெழுத்து
அப்படி இருக்கு. நான் எங்க அப்பாகிட்டே
நம்ம லவ் மேட்டரை சொல்லிட்டேன்."
"அதுக்குள்ளேயா.
நான் இன்னும் மேரேஜுக்கு தயாரா இல்லை"
"அப்படினா
இதோ போகுதே இந்த எருமையைத்தான் நீ கல்யாணம் பண்ணனும். இன்னைக்கு அப்பா உன்னை
மீட் பண்ணி முடிவு பண்றேன்னு சொல்லியிருக்கார். இப்பவே நாம் கிளம்பறோம்."
இதற்கு
மேல் எதுவும் சொன்னால் நிஷா கோபத்தில் வெடிப்பாள் என்று அவள் காரில் ஏறினான்.
காரில் போகும்போது தன் தந்தையிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று பெரிய
லெக்சரே நடத்திக் கொண்டிருந்தாள்.
பேசிக்கொண்டிருக்கும்போதே
சத்யனின் செல்போன் அடித்தது. போனில் பேசியவன் உடனே பதட்டத்துடன் கத்தினான்.
"நிஷா
காரை நிறுத்து."
சத்யன்
காரை விட்டிறங்கி வேறு ஒரு ஆட்டோவிலேறி மறைந்தான்.
நிஷாவின்
முகம் கோபத்தில் சிவந்திருந்தது .
------******-----
ஆட்டோவிலிருந்து
இறங்கிய சத்யன் வேகமாக படிகளிலேறி மூன்றாவது மாடியிலிருந்த டாக்டர் ஆகாஷின்
அறைக்கு வந்தான்.
"ரொம்ப
அவசரமான விஷயம்னு சொன்னீங்க ஆகாஷ். ஏதாவது குட் நியூஸா"
"இல்லை
பேட் நியூஸ்."
"என்ன
சொல்றீங்க?"
"டாக்டர்
மூர்த்தியை நான் உன்னிடம் அறிமுகப்படுத்தவில்லையே. இவர் இந்த ஹாஸ்பிடலின் மிகச் சிறந்த ஹார்ட் சர்ஜன் தான்.இவர்
என்னிடம் கூறிய ஒரு விஷயம் தான் நம் ஆராய்ச்சிக்கு பேட் ந்யூஸ். முதலில் டாக்டர் மூர்த்திக்கு நம்
ஆராய்ச்சி பற்றி விளக்குவோம்."
ஆகாஷ் - "மனிதன்
ஓரளவு நாகரீகம் அடைந்த காலத்திலிருந்தே நமது சிந்தனைகள் எப்படித் தோன்றியது
என்பது பெரிய கேள்வியாக இருந்து வந்தது. நமது இந்து மற்றும் புத்த மதக்
கோட்பாட்டின் படி நமது சிந்தனைகள் நாம் இறந்த பின்பும் உயிரோடு இருக்கும் என்று
கூறுகிறது. இதைத் தான் ஆன்மா என்றும் கூறப்படுகிறது. சிந்தனை என்பது மூளைக்கு அப்பாற்பட்ட
விஷயமாகத் தான் மதங்கள் கருதி வருகிறது. ஆனால் சமீப காலத்தில் விஞ்ஞானம் வளர்ந்தப்
பிறகு சிந்தனைகள் என்பது மூளையிலிருந்தே பிறக்கிறது என்ற கருத்தும் நிலவி
வருகிறது. அதனால் மரணத்திற்குப் பின் சிந்தனை முடிவுக்கு வருகிறது என்று விஞ்ஞானம்
சொல்கிறது. இரண்டு தரப்பும் தங்கள் கருத்துக்களை உண்மை என்பதை நிரூபிக்க
முடியவில்லை."
சத்யன் -
"ஆகாஷ் சொல்வது சரி ஆகாஷ். குவாண்டம் இயற்பியல் கோட்பாடுகள்
கண்டுபிடிக்கப்பட்ட பிறகு சிந்தனைகள் மூளையிலிருந்து தோன்றவில்லை என்பதை சில விஞ்ஞாநிங்களும்
கூறி வருகிறார்கள்."
மூர்த்தி
- "அது எப்படி".
சத்யன் -
"இப்போது உங்கள் அறைக்கு வெளியே இருக்கும் மூன்று லிப்ட்களைப் பாருங்கள்.
அதன் முன் நிற்கும் அந்த மனிதர் ஏதாவது ஒரு லிப்டில்தான் ஏற முடியும். ஆனால்
குவாண்டம் விதிகளின் படி நுண்மையாக இருக்கும் அணுத்துகள்கள் ஒரே நேரத்தில் இந்த
மூன்று லிப்டுகளிலும் இருக்கும் சாத்தியம் கண்டுபிடிக்கப்பட்டது."
மூர்த்தி
- "நீ சொல்வது படி பார்த்தால் துகள்கள் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருப்பது
புரிகிறது. இது வெறும் அணுத்துகள் அளவுக்கு நுண்மையான பொருட்களில் மட்டும் தானே காணப்படும்?"
சத்யன் -
"ஆம் நாம் நிஜ வாழ்க்கையில் பார்க்கும் பெரிய உருவங்கள் இந்த விதிக்குக் கட்டுப்பதாது.
அணு அளவுக்கு நுண்மையான துகள்களில் மட்டுமே காணப்படும்."
மூர்த்தி
- "ஒரு துகள் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்கும் என்றால், லாப்களில்
பயன்படுத்தபடும் எந்தக் கருவியும் அணுத்துகள்கள் இருப்பதைப் பதிவு செய்ய
முடியாதே?"
சத்யன் -
"இல்லை. எப்போது மனிதர்களாகிய நாம் அணுத்துகள்கள் இருப்பதை ஒரு கருவியின் மூலம்
கவனிக்கிறோமோ அப்போது பல இடங்களில் இருக்கும் அணுத்துகள் ஒரு இடத்தில் இருப்பதாக
நாம் உணர்கிறோம்."
மூர்த்தி
- "எது உண்மை. அணுத்துகள் மூன்று லிப்ட்களில் இருப்பது உண்மையா அல்லது ஒரு லிப்டில்
இருப்பது உண்மையா?”
சத்யன் -
"இந்தக் கேள்விக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. அணுத்துகள் முதலில் தன் இயல்புப்படி
பல இடங்களில் (மூன்று லிப்டகளில்) இருக்கிறது. நாம் பார்ப்பதால் அது ஒரு இடத்தில்
இருப்பதாக நாம் உணர்கிறோம். உண்மையில் அது இயல்பாகவே ஒரு இடத்தில் இருப்பதாக மாறுகிறதா
அல்லது ஒரு இடத்தில் இருப்பதாக நமக்கு மட்டும் தான் தோன்றுகிறதா. இந்தக் கேள்விக்கு
இன்னும் விடை கிடைக்கவில்லை"
மூர்த்தி
- "இதற்கும் மனிதனின் சிந்தனைக்கும் என்ன தொடர்பு?"
சத்யன் -
"நாம் பார்க்கும் நிகழ்வுகளை உணரச் செய்வது நம் மூளை தான். மூளையின் இயக்கம்
பல ந்யூரான்கள் இணைந்திருப்பதனால் நடப்பது. இந்த இணைப்புகளில் அனுத்துகளை விடச் சிறிதான
எலெக்ட்ரான் துகள்கள் நகர்வதனால்தான் தான் நாம் வெளி உலகை உணர்கிறோம்."
மூர்த்தி
- "அப்படியானால் மூளையும் குவாண்டம் விதிகள் படி தான் இயங்குகிறது?"
சத்யன் -
"ஆம். குவாண்டம் விதிகள் படி மூளையும் அணுத்துகள் மூன்று லிப்டகளில் இருப்பதாகத்
தான் உணர வேண்டும். ஏன் ஒரு லிப்டில் இருப்பதாக மூளை நமக்கு உணர்த்துகிறது. இது தான்
புரியாத மர்மம். மூளைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி அணுத்துகள் ஒரு லிப்டில் இருப்பதாக
நமக்கு உணர்த்துகிறதா அல்லது நமக்குத் தெரியாத மூளையின் ஒரு பகுதி தான் இவ்வாறாக
ஒரு லிப்டில் இருப்பதாக நமக்கு உணர்த்துகிறதா. இது தான் அறிவியலில் தீர்வு கிடைக்காத
கேள்வி."
மூர்த்தி
- "மூன்று லிப்டில் இருக்கும் அணுத்துகள் ஒரு லிப்டில் இருப்பதாகத் தோன்றுவது
தான் நமது சிந்தனை. நீ சொல்வது படி பார்த்தால். இந்த சக்தியின் (சிந்தனையின்) தோற்றம்
மூளையா அல்லது மூளைக்கு அப்பாற்பட்டதா. உண்மையில் வியப்பான விஷயம் தான்."
ஆகாஷ் -
"இந்த அறிவியல் மர்மத்திற்கு ஒரு தீர்வு காண்பதற்குத் தான் சத்யனும் நானும்
சேர்ந்து இந்த ஆராய்ச்சி செய்து வருகிறோம். மனிதனின் சிந்தனைகள் தோற்றம் மூளை
தான் என்பது எங்கள் இருவரின் தீவிர நம்பிக்கை. இது உடலியல், இயற்பியல் இரண்டும்
சம்பந்தப்பட்டிருப்பதால் நாங்கள் கூட்டு சேர்ந்தோம். சிந்தனைகள் மூளையின்
நியூரானில் இருக்கும் Microtubules எனப்படும் ப்ரோடான் பாலிமர்கள் தான் காரணம்
என்று Stuart Hameroff என்னும் டாக்டர் சில வருடங்கள் முன் கூறினார். அது உண்மை
என்பதை நிரூபிக்க உடலியல் கோணத்தில் நானும் இயற்பியல் கோணத்தில் சத்யனும் ஆராய்ச்சி செய்து வருகிறோம்"
மூர்த்தி
- "மனிதன் சிந்தனைகள் மூளையிலிருந்து தான் தோன்றுகிறது என்றால் இறந்தப்
பிறகு சிந்தனைகள் என்னவாகும்".
சத்யன் -
"நாம் இறந்த பின் நம் சிந்தனைகளும் ஒரு முடிவுக்கு வரும்."
மூர்த்தி
- "இது தான் உண்மையா என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால், நாம்
மூவரும் ஒரு பேஷண்டை சந்திக்க வேண்டும். நான்காவது தளத்திலிருக்கும் வார்டுக்குப்
போக வேண்டும். என்னுடன் வாருங்கள்."
மூவரும்
வார்டுக்கு வந்தனர். அங்கே 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் படுத்திருந்தார்.
மூர்த்தி
- "இவர் பெயர் கிருஷ்ணன். இவருக்கு இரண்டு கண்களும் சுத்தமாகத் தெரியாது.
நேற்று விடியற்காலை மாரடைப்பு வந்து இங்கு அட்மிட் செய்யப்பட்டார். வந்த ஒரு மணி
நேரத்தில் மரணம் அடைந்தார். இவர் இதயமும், மூளையும் இயங்குவது நின்றது. அப்போது
நாங்கள் வழக்கமாக செய்வது போல அவர் நெஞ்சை அமுக்கினோம். சில நிமிடங்களில் அவர்
உயிர் வந்தது."
சத்யன் -
"இது சிவாஜி படத்தில் கூட காண்பித்திருக்கிறார்களே".
மூர்த்தி
- "ஆம். அவர் உயிர் வந்தப் பிறகு அவர் கூறும் விஷயங்கள் எங்களுக்கு
பிரமிப்பைத் தந்தது. அதை அவர் வாயால் நீயே கேள்."
கிருஷ்ணன்
சன்னமானக் குரலில் பேச ஆரம்பித்தார் - "என் உயிர் பிரிந்த அடுத்த நொடி என்
உடலிலிருந்து ஏதோ ஒன்று வெளியேறுவது போல இருந்தது. என் இறந்த உடலை நானே நேரில்
பார்த்தேன். வெளியே என் மனைவி ராம நாமம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
வெளியூரிலிருந்து வந்த என் மகன் அவளை அணைத்தவாறு ஆறுதல் சொன்னான். என்னை
உயிர்ப்பிக்க டாக்டர்கள் பரபரப்பாக இயங்குவது தெரிந்தது. டாக்டர் கிருஷ்ணன் தன்
மஞ்சள் நிற கையுறையைக் கழற்றி நீல நிற கையுறையை மாட்டியது தெரிந்தது. என்
பின்னால் இருக்கும் இயந்திரத்தில் 56.8 என்ற எண் தெரிந்தது. ஏதோ ஒரு சக்தி பெரும் இருட்டுக்குள் என்னை
இழுத்தது. இருட்டின் முடிவில் ஒளி வெள்ளத்துக்குள் நான் நுழைவது தெரிந்தது. அங்கே இறந்த என் மூத்த சகோதரனைக் கண்டேன்.
உன் நேரம் இன்னும் வரவில்லை. திரும்பிப் போ என்றான். உடனே நான் இறந்த என்
உடலுக்குள் நுழைவது தோன்றியது. அதன் பிறகு என் உயிர் வந்தது.என் அருகிலிருந்த
டாக்டர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்வது கேட்டது".
சத்யன் -
"என்னால் சுத்தமாக நம்ப முடியவில்லை. இது எல்லாம் பொய்"
மூர்த்தி
- "இவர் சொல்வது அனைத்தும் உண்மை. நான் கிளவுஸை மாற்றியது, மெஷினில்
தெரிந்த நம்பர் எல்லாம் துல்லியமாக இவர் கூறுகிறார்."
சத்யன் -
"இவர் முற்றிலும் அப்போது இறந்திருக்க மாட்டார். மூளையின் ஏதோ ஒரு பகுதி
இயங்கிக் கொண்டு இது அனைத்தையும் பதிவு செய்திருக்க வேண்டும்."
மூர்த்தி
- "இல்லை இவர் முற்றிலும் இறந்திருந்தார். இவர் மூளையில் ரத்த ஓட்டம்
சுத்தமாக இல்லை என்பதை நாங்கள் உறுதி செய்தோம். இவருக்கு கண்கள் சுத்தமாகத்
தெரியாது. அப்படி இருக்கும் போது நேரில் பார்த்தது போல நடந்தது அனைத்தையும்
எப்படி துல்லியமாக சொல்கிறார்."
சத்யன்
பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
மூர்த்தி
- "பார்த்தது அவர் கண்கள் இல்லை. அவரது சிந்தனை, ஆன்மா எது வேண்டுமானாலும்
வைத்துக் கொள். மரணத்திற்குப் பின்னும் நம் சிந்தனைகளுக்கு அழிவில்லை என்பதை இது
நிரூபிக்கிறது. அதனால் சிந்தனையின் தோற்றம் மூளை இல்லை என்பதும் தெளிவாகிறது."
சத்யனின்
முகம் வாடிப் போனது. வார்டை விட்டு அவனும் ஆகாஷும் வெளியே வந்தனர்.
ஆகாஷ் -
"மனசைத் தளர விடாதே சத்யன். நமக்கு வேறு ஏதாவது ஒரு வழி தோன்றும்.
பொறுமையாக இரு".
ஆகாஷிடம்
விடைப் பெற்றுக் கொண்டு சத்யன் தன் வீட்டுக்கு வந்தான்.
செல்போனில்
நிஷா பல முறை கால் செய்தது தெரிந்து அவளைத் தொடர்புக் கொள்ள முயன்றான். நிஷா
போனை எடுக்கவே இல்லை.
டெல்லி
ஜீவன்
மும்முரமாகக் கதை எழுதிக் கொண்டிருந்தான். குமுதம் பத்திரிக்கைக்கு நாளைக்குள்
கதையை அனுப்ப வேண்டும் என்று எடிட்டர் காலையில் தான் சொல்லியிருந்தார்.அவன்
மனைவி சுனிதா டேபிளில் காபியை வைத்து நின்றுக் கொண்டிருந்தாள்.
"நான்
உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்.எழுதறதை நிறுத்திட்டு நான் சொல்றதைக் கேளுங்க.
நேத்து
உங்க கசினோட ரிசப்ஷனுக்குப் போனோம் இல்லை. அங்கே உங்க வீட்டு சைட்லே எல்லோரும் ஒரு மாதிரி
பேசினாங்க"
"என்ன
சொன்னாங்க"
"உங்க
அம்மா தங்கை எல்லோரும் நமக்கு குழந்தை இல்லைன்னு குத்தி காட்டினாங்க"
"அவங்க
சொன்னதில் என்ன தப்பு. அவங்களுக்கும் பேரக் குழந்தை பாக்கணும்னு ஆசை இருக்காதா.
குழந்தை பெத்துக் கொடுக்க உனக்குத் துப்பு இல்லை."
"ரொம்ப
பேசாதீங்க. எனக்கு எல்லா டெஸ்டும் பண்ணியாச்சு. என் சைட்லே பிராப்ளம் இல்லைன்னு
க்ளியரா டாக்டர் சொல்லிட்டார். நீங்க உங்களுக்கு டெஸ்ட் எடுங்கன்னு சொன்னா கேட்காம
திமிரா இருக்கீங்க."
"யாருக்குத்
திமிர். என் மேலே பிராப்ளம்னு சொல்ல எவ்வளவு தைரியம் உனக்கு. நீ தாண்டி
மலடி."
"நீ
தான் ஆண்மை இல்லாதவன்."
ஜீவன்
கோபத்தில் டேபிளில் இருந்த சூடான காபியை சுனிதா முகத்தில் எறிந்து வீட்டை விட்டு
வெளியேறினான்.
சுனிதா
குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தாள்.
வீட்டை விட்டு
வெளியேறிய ஜீவன் கோபத்தின் உச்சத்திலிருந்தான். அருகிலிருந்த பார்க்கிற்கு வந்து
ஒரு பெஞ்சில் அமர்ந்தான். ஒரு சிகரெட்டை வெளியே எடுத்துப் புகையை இழுத்தான். ஜீவனுக்குத்
தன் பெற்றோரைப் பற்றி யார் குறை கூறினாலும் கோபம் வந்து விடும். அவன் அப்பா ஒரு டாக்டர்.
அவனை ஒரு லாரியின் கண்டெய்னரில் முதலில் கண்டெடுத்ததாக கூறியிருந்தார். தன் சொந்தக்
குழந்தையாகவே அவனை வளர்த்து வந்தனர். இரண்டு வருடங்கள் முன்பு திருமணம் நடந்தது.
அம்மாவுக்கு ஜீவன் மீது உள்ள பொசசிவ்னஸ் காரணமாக பிரச்சினைகள் வர ஆரம்பித்தது.
இன்னும் எவ்வளவு
நாள் தான் சுனிதாவுடன் நரக வாழ்க்கை வாழ்வது. ஏதாவது செய்ய வேண்டும் யோசித்தவாறே
பார்க்கைச் சுற்றி நடக்க ஆரம்பித்தான்.
|
|
Chapter
2
|
|
"இதுக்கு மேலே நமக்குள்ளே சரிப்பட்டு வராதுன்னு நினைக்கிறேன்
சத்யன். நாம பிரியறது நல்லது."
"எனக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடு நிஷா. ப்ளீஸ்".
"அப்பா உன் மேலே ரொம்பக் கோபமா இருக்கார். உன்னை சந்திக்கனும்னு ஒரு முக்கியமான க்ளையன்ட் மீட்டிங்கைக் கூடத் தள்ளி வச்சிருந்தார். நீ வராததை பெரிய இன்சல்டா நினைக்கிறார்."
"இன்னைக்கு அவரை சந்தித்து மன்னிப்பு கேட்கிறேன்."
"அப்பாவை விடு. எனக்குமே உன் கூட சரி வருமான்னு யோசனையா இருக்கு. எனக்கு ரொம்ப சாதாரணமான ஆண் துணை தான் தேவை. என் டிரஸ் பத்திக் கமெண்ட் பண்ணனும். நான் அழகா இருக்கேன்னு சொல்லணும். மொக்கையான ஜோக் அடிக்கணும். உன்னைப்போல் அறிவு ஜீவி எனக்குத் தேவை இல்லை. உன் சிந்தனைகள் எல்லாம் எந்த நேரமும் ஆராய்ச்சியை சுத்தியே இருக்கு. உன்னை என்னாலே ஹான்டில் பண்ண முடியலே சத்யன்."
"இன்னும் இரண்டு வாரம் டைம் கொடு. என் ஆராய்ச்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வரேன். அதுக்குப் பிறகு ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை சேர்ந்து நீ எதிர்பார்க்கிற சராசரி மனுஷனா மாறிடறேன்"
"என்ன செய்யனும்னு சொல்றே"
"உங்க அப்பாவை நான் மீட் பண்ண ஏற்பாடு செய்"
நிஷா போனில் தன் தந்தையைத் தொடர்புக் கொண்டுப் பேசினாள்.
"இப்போ வந்தா பேசலாம்னு சொல்றார். அதுக்கப்புறம் பிசி ஆயிடுவார்".
"தாங்க்ஸ் நிஷா."
இருவரும் நிஷாவின் காரிலேறி அவள் வீட்டை வந்தடைந்தனர்.
நிஷாவின் தந்தையை ஹாலில் சந்தித்தனர். முகத்தில் புன்னகையுடன்
அவனை வரவேற்றார். சிறிது நேரம் காஷுவலாக இருவரும் பேசினார். சத்யனின் பெற்றோரைப் பற்றி
விசாரித்தார். பிறகு பேச்சின் தொனி சீரியஸ் ஆனது.
"விஷயத்துக்கு வரேன் சத்யன். நிஷா அவளை நீ லவ் பண்றதா சொன்னா.
அதில் எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை. பட் அவளைத் திருமணம் பண்றவன் அவளுக்கு ஏத்தவனா
இருக்கணும். நான் அவளுக்குக் கொடுத்த வாழ்க்கையை விட ஒரு பெட்டரான லைப் கொடுக்கணும்."
"உங்கப் பெண்ணை நான் நல்லா வச்சிப்பேன் சார்."
"நீங்க என்ன பண்றீங்க. ஓ! நீங்க சைண்டிஸ்ட் அப்படின்னு
நிஷா சொன்னதை மறந்துட்டேன். இந்த ந்யூட்டன் லா, ஐன்ஸ்டீன் லா அப்படின்னு ஏதோ புரியாத
மாதிரி பேசுவாங்களே, அந்த சைண்டிஸ்டா. ஸ்கூல்லே படிச்சதா ஞாபகம். இதெல்லாம் நடைமுறை
வாழ்க்கைக்கு உதவுமா. என்னையே எடுத்துக்கோங்க நான் 12th பெயில். ஆனா கடுமையா
உழைச்சு இன்னைக்கு 2000 கோடி மதிப்புள்ள இந்த பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தை நிறுவி இருக்கேன்.
50000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வச்சிருக்கேன். நீங்களே சொல்லுங்க, உங்களை மாதிரி
சைண்டிஸ்ட் சமூகத்துக்கு முக்கியமா அல்லது ஸ்ட்ரீட் ஸ்மார்ட்னெஸ் உள்ள என்னைப் போன்றவர்கள்
இந்த சமூகத்துக்கு முக்கியமா."
"நீங்க என்ன பிசினஸ் பண்றீங்க."
"டெக்ஸ்டைல் பாக்டரி வச்சிருக்கேன்."
"அங்கே மெஷின்லாம் இருக்கும் இல்லே?”
"எல்லாம் பாரீன் இம்போர்டட்."
"அதெல்லாம் எப்படி இயங்குதுன்னு நினைக்கிறீங்க. நீங்க கேலி
பண்ண அதே ந்யூட்டன் லா, ஐன்ஸ்டீன் லாவினால் தான். சைண்டிஸ்ட் இல்லைனா முதலில் உங்க
பாக்டரியே இருக்காது, உங்களை மாதிரி பிசினஸ் செய்றவங்க பணம் பண்ணவும் முடியாது."
சத்யனின் பதில் கேட்டு நிஷா தந்தையின் முகத்தில் கோபம் தெளிவாகத்
தெரிந்தது. சிறிது நேரம் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தார். அதற்கு மேல் அவர் பேச
இஷ்டப்படவில்லை என்பதைப் புரிந்துக் கொண்டு சத்யன் விடைப் பெற்றுக் கொண்டு கிளம்பினான்.
அவன் பின்னாலே வந்த நிஷா - "எல்லாத்தையும் சொதப்பிட்டே.
உனக்கு என்ன அவ்வளவு ஈகோ. உன் வேலை தான் முக்கியம்னு அவர்கிட்டே ஆர்க்யூ பண்றே."
"என் வேலை முக்கியமே இல்லைன்னு அவர் சொன்னார். நான் அவர்கிட்டே
என் பாயிண்ட் ஆப் வியூவை சொன்னேன்."
"அவர் சம்மதிச்சாதான் நம்ம கல்யாணமே நடக்கும். பொறுமையா
இருந்திருக்கலாம் இல்லை."
"பொறுமையா இருக்க நான் தயார். ஆனால் சுய மரியாதையை விட்டு
இருக்க முடியாது. நான் வரேன் நிஷா."
இரண்டு நாட்கள் கழித்து சத்யன் நிஷாவைப் போனில் தொடர்புக் கொண்டான்.
"உங்க அப்பா என்ன சொன்னார்."
"என்னை அவர் சொன்ன மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்ய சொல்றார்.
என்னாலே ஒரு முடிவும் எடுக்க முடியலே. நாளைக்கு நான் டெல்லி போறேன். நான் வரைந்த ஆர்ட்
ஒர்க் எல்லாம் ஒரு எக்சிபிஷனில் காண்பிக்கப் போறாங்க."
"என்னிடம் இதை சொல்லவே இல்லையே. போன வருடம் கூட உன் ஆர்ட்
எக்சிபிஷனுக்கு என்னை வரச் சொல்லி கம்பெல் பண்ணியே".
"எனக்குக் கொஞ்சம் தனிமை தேவைப்படுது. சொன்னா தப்பா எடுக்காதே.
நான் டெல்லியில் இருக்கும் பொது நீ கால் பண்ணாதே. பத்து நாள் கழித்து பாம்பே திரும்பியவுடன்
நம்ம விஷயம் பத்தி ஒரு முடிவெடுப்போம்."
------******-----
"இன்னைக்கு என்னுடைய பிறந்த நாள் ஞாபகம் இருக்கா."
புத்தகம் படித்துக் கொண்டிருந்த ஜீவன் எதுவும் பதில் சொல்லாமல்
அமைதியாக அவள் கையில் ஒரு கவரைக் கொடுத்தான். டைவர்ஸ் பேப்பர்ஸ் கவரில் இருந்தது.
"இது தான் உங்க முடிவா? பிறந்த நாள் அதுவுமா நல்ல கிப்ட்
கொடுத்திருக்கீங்க".
சுனிதா தன் உடைமைகள எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினாள்.
தன் பெற்றோர் இருக்கும் பாம்பே செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து ரயில்வே ஸ்டேஷன்
செல்ல ஒரு ஆட்டோவைப் பிடித்தாள்.
சுனிதா சென்றவுடன் வீட்டிலிருந்த அமைதி ஜீவனை என்னவோ செய்தது.
ஏதாவது ஒரு டைவர்ஷன் தேவைப்பட்டது. நேற்றிலிருந்து ஆர்ட் எக்சிபிஷன் நடப்பது நினைவு
வந்து வீட்டை விட்டுக் கிளம்பினான்.
------******-----
நிஷாவுக்கு வெறுப்பாக இருந்தது. எக்சிபிஷனில் அவளுடைய ஓவியங்களுக்கு
எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. தலை வேறு வலித்துக் கொண்டிருந்தது. ஒரு காபி
சாப்பிட்டு விட்டு வரலாம் என்று கேண்டீன் சென்றாள். திரும்பி வந்தவுடன் அவள் ஓவியம்
முன் ஒரு மனிதன் நின்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். நிஷா அருகிலிருப்பது
கூட பிரக்ஞை இல்லாமல் அந்த மனிதன் ஓவியத்தை ரசித்துக் கண்டிருந்தான்.
"வாட் எ ப்யூட்டி!"
"உங்களுக்கு இந்த ஓவியம் பிடிச்சிருக்கா."
"இந்த எக்சிபிஷனிலிருக்கும் ஓவியங்களில் பெஸ்ட் இது தான்.
உங்களுடைய ஒபினியன் என்ன?"
"என்னுடைய ஓவியம் எனக்கு பெஸ்டாகத் தானே இருக்கும்".
"நீங்கள் தான் இதை வரைந்ததா. உங்களுடைய ஓவியம் போலவே நீங்களும்
அழகு தான்".
நிஷாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
"என் பெயர் ஜீவன். நான் ஒரு ரைட்டர். உங்கள் பெயர் நிஷா
தானே. ஓவியத்தில் உங்கள் பெயர் இருப்பது மூலம் தெரிந்தது".
"ரைட்டர் ஜீவன் நீங்கள் தானா. நீங்கள் எழுதிய புத்தகங்கள்
ஒன்று விடாமல் படித்திருக்கிறேன். தமிழில் முதன் முதலில் உங்கள் புத்தகங்கள் தான் மில்லியன்
பிரதிகள் விற்றிருக்கிறது. உங்களை சந்திப்பேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை."
"என்னை நீங்கள் மிகவும் புகழ்கிறீர்கள். ஏதாவது ரெஸ்டாரென்ட்
சென்று சாப்பிட்டுக் கொண்டே பேசலாமே."
ஜீவனிடம் ஏதோ ஒரு வசீகர சக்தி இருக்கிறது. அது தன்னை ஈர்ப்பதை
நிஷா உணர்ந்தாள்.
ரெஸ்டாரென்ட் வந்ததும் இருவரும் பாஸ்தா ஆர்டர் செய்தனர்.
"நிஷா, உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?"
"இல்லை?"
"யாரையாவது லவ் பண்றீங்களா?"
"ஆமாம். ஆனால் சரியாக வராதுன்னு தோணுது. விரைவில் பிரிஞ்சிடுவோம்."
"என் நிலைமையும் அதே தான். என் மனைவியிடமிருந்து டைவர்ஸ்
கேட்டிருக்கிறேன்."
சந்தித்த சில நிமிடங்களில் தாங்கள் இருவரும் தத்தம் பெர்சனல்
வாழ்க்கையைப் பற்றி பேசுவது நிஷாவுக்கு வியப்பாக இருந்தது. வெகு இயல்பாக அது நடந்திருக்கிறதே
என்று நினைத்தாள்.
"ஏன் உங்கள் மனைவியிடமிருந்து பிரிய முடிவெடுத்தீர்கள்".
"எனக்கு பெற்றோர் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள்.
நான் என் மனைவியிடம் பெரிய அழகு எதுவும் எதிர்பார்க்கவில்லை. நான் எழுதும் கதைகளுக்கு
முதல் ரசிகையாக அவள் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் சுனிதா அப்படி இல்லை.
எங்களுக்குக் குழந்தையும் பிறக்கவில்லை. அது அவளுக்குப் பெரிய குறையாக இருந்தது.போதாக்குறைக்கு
என் அம்மாவிற்கும் அவளுக்கும் சரிப்பட்டு வரவில்லை. அவள் இழுத்து வைக்கும் குடும்பப்
பிரச்சினைகள் எல்லாம் என் எழுத்துக்கும் கற்பனா சக்திக்கும் பெரிய தடையாக இருப்பதை
உணர்ந்தேன். ஒரு லிமிட்டிற்கு மேல் தாங்க முடியவில்லை. உங்கள் லவ்வர் எப்படி?"
"சத்யன் ஒரு சைண்டிஸ்ட். அவன் உன்மையிலேயே ஒரு ஜீனியஸ்.
ஆனால் என் தேவை அது இல்லை. என்னுடைய மென்மையான உணர்வுகளைப் புரிந்துக் கொள்பவன் தான்
எனக்குத் தேவைப்படுகிறது. அவன் சிந்தனைகள் எல்லாம் ஏதோ ஒரு ஈக்குவேஷன் பற்றித்தான்
இருக்கும். சரிப்பட்டு வரவில்லை."
"சுனிதா கூட கணிதப் புரபசராக இருந்தாள். கல்யாணத்திற்குப் பின் வேலையைத் தொடர வேண்டும் என்றுக்
கூறினாள். எனக்குப் பிடிக்கவில்லை. பிறகு வேலையை விட்டாள்."
"இந்த மேத் சப்ஜெக்ட் என்றாலே எனக்கு அலர்ஜி. எப்படித்
தான் படிக்கிறார்களோ".
"எனக்கும் தான். நீங்கள் எங்கு தங்கியிருக்கிறீர்கள்?"
"வுட்லண்ட் ஹோட்டலில் தான் தங்கியிருக்கிறேன்".
"நீங்கள் தப்பாக நினைக்கவில்லை என்றால் என் வீட்டில் தங்கலாமே.
எனக்குத் தனியாக இருப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.வீட்டின் அமைதி வேறு ஆளைக் கொல்கிறது.
உங்களுடன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. "
நிஷா தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.
ஜீவனின் காரில் நிஷா ஏறினாள். தனக்கு என்ன நடக்கிறது. முன் பின்
தெரியாத ஒரு ஆணிடம் இவ்வளவு நெருக்கம் இவ்வளவு சீக்கிரம் எப்படி நடந்தது என்று வியந்தாள்.
தன் செல்போனை எடுத்துப் பார்த்த போது சத்யன் அவளைக் கால் செய்திருப்பது
தெரிந்தது. வெறுப்பாக போனை மூடி ஜீவனிடம் அவன்
சமீபத்தில் எழுதிய புத்தகம் பற்றிப் பேச ஆரம்பித்தாள்.
--------********-------
சத்யன் ஆகாஷின் அறையில் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தான்.
"நமது ஆராய்ச்சியைக் கை விடுவது தான் ஒரே வழி என்று எனக்குத்
தோன்றுகிறது சத்யன்".
"தேவையில்லை. நான் வேறு ஒரு கோணத்தில் இதை அணுக முயற்சிக்கிறேன்.
மனிதன் இறந்தப் பிறகு அவன் சிந்தனைகள் அழியாமல் இருப்பதால் சிந்தனைகளின் தோற்றம் மூளையாக
இல்லாமலிருந்தாலும், அவன் உயிரோடு இருக்கும் போது சிந்தனைகளுக்கு மூளை தேவைப்படுகிறது.
அதாவது மூளையை ஒரு கருவியாக சிந்தனைகள் பயன்படுத்துகிறது. இறந்தப் பின் தன் கருவியாகிய
மூளையை விட்டு சிந்தனைகள் தனித்து இயங்குகிறது. இதைக் குவாண்டம் தியரியுடன் தொடர்புபடுத்தி
ஆராய்ச்சியைத் தொடர்கிறேன். வெகு சீக்கிரம் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன்."
"ஆல் தி பெஸ்ட் சத்யன்".
ஆகாஷிடம் விடைபெற்று சத்யன் அருகிலிருந்த பார்க்கிற்கு வந்து
அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தான்.
ஏதோ தோன்ற தன்னிடமிருந்த பேப்பர்களை எடுத்து ஆராய்ச்சி தொடர்பாக
எழுத ஆரம்பித்தான்.
வெகு நேரம் எழுதியவன் ஒரு பேப்பர் தொலைந்ததால் தேடினான்.
அப்போது ஒரு பெண் அவன் முன் நின்று பேப்பரை நீட்டினாள்.
"இதைத் தானே தேடுகிறீர்கள்."
"ஆம். தேங்க்ஸ்."
"காற்றில் பறந்து நான் அமர்ந்த இடத்திற்கு வந்தது. நீங்கள்
கோபித்துக் கொள்ளவில்லை என்றால் ஒன்று சொல்கிறேன். நீங்கள் எழுதிய இந்த ஈக்குவேஷனில்
ஒரு தவறு இருக்கிறது.அதை நான் திருத்தியும் வைத்திருக்கிறேன். கவனக்குறைவாக இந்தத்
தவறு செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்."
"ஆம்! வெகு நேரமாக
குழப்பத்திலிருந்தேன். இந்த சிறிய தவறை கவனிக்காமல் விட்டேன். உங்களுக்கு கணிதம் நன்றாக
வருமா?"
"நான் மேத் புரபசராக இருந்தேன். கல்யாணத்திற்கு பிறகு வேலையை
விட்டேன்."
"உங்கள் பெயர் கேட்க மறந்து விட்டேன். நான் சத்யன்."
"சுனிதா. ஏதாவது எக்ஸாமுக்குத் தயார் செய்கிறீர்களா. சுற்றி
என்ன நடக்கிறது என்றே தெரியாமல் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்."
"இல்லை நான் ஒரு சைண்டிஸ்ட். இது என் ஆராய்ச்சி தொடர்பானது."
சுனிதா சத்யனின் ஆராய்ச்சி தொடர்பான விபரங்கள் கேட்டுத் தெரிந்துக்
கொண்டாள்.
"எனக்கு நீங்கள் சொல்வது சரியாகப் புரியவில்லை. உங்களைப்
போன்ற ஜீனியஸ் நானில்லை".
"என் ஈக்குவேஷனிலேயே தவறு கண்டுபிடித்த நீங்கள் உங்களை
குறைவாகச் சொல்கிறீர்கள்."
"இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.ஒரு சராசரி கல்லூரி மாணவன்
கூட கண்டுபிடித்து விடுவான்."
"ஒரு சராசரி மாணவனை விட என் அறிவு குறைவானது என்று கூறுகிறீர்களா?”
"அப்படி இல்லை."
"விளையாட்டாகத் தான் சொன்னேன். கேட்கிறேன் என்று தவறாக
நினைக்காதீர்கள். உங்கள் கழுத்தில் ஏதோ புண் போல இருக்கிறது. என்ன ஆயிற்று."
சுனிதாவின் கண்களில் கண்ணீர் வந்தது.
"நான் ஏதாவது தவறாகக் கேட்டு விட்டேனா."
"உங்களிடம் சொல்வது பற்றி ஒன்றும் இல்லை. இது என் கணவர்
கோபத்தில் சூடான காபியை என் மீது ஊற்றியதால் வந்தது".
"உங்கள் கணவருக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை."
சுனிதா ஜீவனிடம் தனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளையும் தனக்கு
டைவர்ஸ் நோடீஸ் கொடுத்ததையும் கூறினாள்.
"இங்கு யார் வீட்டில் இருக்கிறீர்கள்".
"என் அம்மா வீட்டில். உங்களுக்கு கல்யாணம் ஆயிற்றா?"
"இல்லை. ஒரு பெண்ணிடம் காதல் ஏற்பட்டது. ஆனால் சரிபட்டு
வரவில்லை."
சத்யன் நிஷா தன் காதலை உதறிய விபரங்களைக் கூறினான்.
"நிஷா இப்போது எங்கே?"
"டெல்லியில்."
"நானும் டெல்லி அடுத்த வாரம் திரும்ப வேண்டும். நீங்கள்
உண்மையில் நல்லவராக இருக்கிறீர்கள். நிஷாவிடம் நான் பேசிப் பார்க்கவா."
"எதற்கு. தேவையில்லாத பிரச்சினைகள் தான் வரும்."
"முயற்சி செய்து தான் பார்ப்போமே. நான் கிளம்ப வேண்டும்.
அம்மா தேடுவார்கள். நாளை மீண்டும் சந்திப்போம்."
Chapter 3
ஜீவனுடன் நிஷா அவனது வீட்டில் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தாள்.
"மணி 1 ஆச்சே. பேசிட்டே இருந்ததில் டைமே பார்க்கலை. நான்
தூங்கப் போறேன் ஜீவன்."
"ஷுர். நீ இந்த ரூமை யூஸ் பண்ணிக்கலாம். இன்னைக்கு இங்கே
படுத்துக்கோ."
ஜீவன் படுக்கையின் விரிப்பை ஒழுங்குப்படுத்தி தலையணையை சரிப்படுத்தினான்.
"குட் நைட்"
ஜீவன் அறைக் கதவை சாத்தி விட்டுச் சென்றான்.
புது இடம் என்பதால் நிஷாவுக்குத் தூக்கம் வரவில்லை. ஹாலுக்குச்
சென்று ப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் குடித்தாள். ஜீவன் அறையின் விளக்கு இன்னும் அணைக்காமல்
இருந்தது அவளுக்கு வியப்பளித்தது. மெதுவாக அவன் அறை நோக்கிச் சென்றாள். அறைக் கதவு
திறந்தே இருந்தது. எட்டிப் பார்த்த போது ஜீவன் எழுதிக் கொண்டிருப்பது தெரிந்தது.
"இந்நேரம் கூட எழுதுவீங்களா."
"ஓ நிஷா! நீ இன்னும் தூங்கலையா."
"புது இடம்னால தூக்கம் வரலை. நடு ராத்திரி தான் நீங்க எழுதுவீங்களா."
"வழக்கமா கிடையாது. இன்னைக்கு என்னவோ எழுதுவதற்கு ஒரு புது
உத்வேகம் வந்தது போல இருக்கு. மடை திறந்து வெள்ளம் வருவது போல எழுதிட்டு இருக்கேன்."
"எதனால்?"
"தெரியலை.காரணம் நீயாகக் கூட இருக்கலாம். சிலரிடம் பழகும்
போதோ பேசும் போதே நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் பன்மடங்கு பெருகி வெளிப்படும்
இல்லையா."
"என்ன எழுதிறீங்க. நான் பார்க்கலாமா?"
ஜீவன் கம்ப்யூட்டரில்தான் எழுதுவது வழக்கம். நிஷா அவன் அருகில்
நின்று குனிந்து படித்துப் பார்த்தாள்.
"வாவ்! உங்களுடைய நடை ரொம்ப வித்தியாசமானது.ஐ லவ் இட்".
ஜீவனுக்கு அவள் வார்த்தைகள் இனித்தது. தன் முகத்தின் அருகாமையில்
அவளது முகம் உரசியும் உரசாமல் இருந்ததும், அவள் கேசம் தன் தோளில் லேசாகப் பட்டு சீண்டிக்
கொண்டிருந்ததும் அவனுக்குப் போதையை அளித்தது.
திடீரென்று நிஷாவைத் தன் பக்கம் இழுத்து அவள் உதட்டில் முத்தத்தைப்
பதித்தான். நிஷா எந்த எதிர்ப்பையும் காண்பிக்காதது அவனை மேலும் தூண்டியது. அவளை இறுக
அணைத்து கழுத்தில் முத்தமிட்டான். பிறகு மெல்ல அவளைப் படுக்கையில் மலர் மாலையைப் போல
மென்மையாக வைத்தான்.
இருவரும் ஆடைகள் களைந்து சுகமான ஒரு புது உலகிற்குச் சென்று
திரும்பினர்.
"நிஷா! நீ என் கூடவே இருந்துடு. என்னை விட்டுப் போகாதே."
"இப்படி என்னைக் கட்டிப் பிடுச்சிட்டே இருந்தே நான் எங்கேயும்
போக மாட்டேன்."
இந்தப் பதில் ஜீவனை மேலும் தூண்டி, அந்த அனுபவத்தை மீண்டும்
அடைய அவளை இறுக அணைத்தான்.
--------********-------
"இன்னைக்கு சந்திக்கலாம்னு சொல்லியிருந்தீங்களே சத்யன்.
உங்களுக்காக நான் பார்க்லே அரை மணி நேரம் வெயிட்டிங்."
"காலையிலிருந்து ஒரே ஜுரம் சுனிதா. வர முடியாதுன்னு நினைக்கிறேன்."
"ஜுரமா. உங்க வீடு எங்கேன்னு சொல்லுங்க. நான் வரேன்."
ஒரு மணி நேரம் கழித்து சுனிதா சத்யன் வீட்டில் இருந்தாள்.
"ஏதாவது சாப்பிட்டீங்களா.வீடு வேறு எவ்வளவு அலங்கோலமா இருக்கு."
சுனிதா பம்பரமாக வீட்டை ஒழுங்குப்படுத்தி விட்டு சமைக்க ஆரம்பித்தாள்.
உணவு ரெடியாக இருவரும் டைனிங் டேபிள் முன் அமர்ந்தனர்.
"உங்க சமையல் ரொம்ப அருமையா இருக்கு".
"உங்களுக்கு உடம்பு சரியில்லாததாலே காரம், உறைப்பு எல்லாம்
கொஞ்சம் கம்மியாவே வெச்சிருந்தேன்."
"எல்லாம் கரெக்டா இருக்கு சுனிதா."
டின்னர் முடித்து பிறகு இருவரும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
பிறகு பேச்சு பொதுவாக அறிவியல் பற்றியும் விஞ்ஞானிகள் பற்றியும் திரும்பியது.
"நான் ஐன்ஸ்டீன் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். அவரோடு
சம்பள செக்லே எல்லாம் கணக்கு எழுதுவாராம்.யூனிவர்சிடியிலிருந்து அவர் வீட்டுக்கு தினமும்
நடந்தே தான் போவார். சில நாட்கள் தினமும் போற வழியையே மறந்துடுவாராம். உங்ககிட்டே அது
மாதிரி வித்தியாசமான பழக்கம் ஏதாவது உண்டா."
"எனக்கு இரவில் கனவுகள் வரும். கனவில் உருவங்கள் வராது.
வெறும் நம்பர்கள், ஈக்குவேஷன் தான் வரும். நான் ஸ்கூல் படிக்கும் நாளிலிருந்தே என்
கனவுகள் இப்படித்தான் இருக்கும். உன் கனவுகள் எப்படி?"
"என் கனவில் தினமும் ஒரு பெண் வருவாள். சின்ன வயதிலிருந்தே
அந்தப் பெண் என் கனவில் வந்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் அந்தப் பெண் தொடர்பாக
ஏதாவது ஒரு சம்பவம் கனவில் வரும். நான் வளர வளர அந்தப் பெண்ணும் வளர்ந்தாள். இப்போது
கனவில் வரும் அந்தப் பெண்ணுக்கு என் வயது."
"ஆச்சர்யமா இருக்கே."
"முதலில் இந்தக் கனவுகளினால் மிகவும் பயந்தேன். என் பெற்றோர்
இதைப் பெரிதாக நினைக்கலே. என் பாட்டி தான் தைரியம் சொன்னார். என் கனவில் வரும் அந்தப்
பெண் என் பூர்வ ஜென்மம் என்றுக் கூறினார். என் பூர்வ ஜென்ம நினைவுகள் தான் கனவாக வருகிறது
என்றும் கூறினார்."
"இதெல்லாம் நீங்களுமா நம்புறீங்க. மறு ஜென்மம் எல்லாம்
வெறும் கட்டுக் கதை."
"ஆனால் நான் நம்பறேன். சொல்லப் போனா உங்க ஆராய்ச்சிக்கான
விடையும் இதுலே இருக்கு. நம் நினைவுகள் மரணத்திற்குப் பிறகும் உயிரோட இருக்கும்னு தான்
நானும் நினைக்கிறேன். நாம் இறந்தப் பிறகு அது வேறு ஒரு உயிரைத் தேர்ந்தெடுத்து அதில்
வாழ்கிறது அப்படிங்கிறது என் கருத்து. இது தான் மறு ஜென்மம்னு அந்தக் காலத்திலேயே சொன்னாங்களோ
என்னவோ."
"சுத்தப் பேத்தல். சிந்தனை இறந்தப் பிறகு வேறு உயிரைத்
தேர்ந்தெடுக்கிறது என்றால் இரண்டு ஜென்மங்களின் சிந்தனைகள் மற்றும் குணாதிசயங்கள் ஒரே
மாதிரி தானே இருக்கணும். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர்கள் இருவரும் தொடர்பேயில்லாத வித்தியாசமான
நபர்களாத் தானே இருக்கிறார்கள்."
"இதுக்கு நான் அறிவியல் பூர்வமாகவே பதில் சொல்ல முடியும்.
சிந்தனைகளை நாம் ஒரு ஆற்றலாகக் கருதினால் இந்தக் குழப்பம் இருக்காது, ஆற்றல் தான் இருக்கும்
பொருளுக்கு ஏற்றபடி தன் பண்புகளை மாற்றிக் கொள்கிறது அல்லவா. உதாரணத்திற்கு எலெக்ட்ரிக்
வயர்களில் மின் வடிவிலிருக்கும் அதே ஆற்றல் பல்ப்களில் ஒளியாக மாறுகிறது. அது போல சிந்தனைகள்
தான் தேர்ந்தெடுக்கும் உருவத்திற்கு ஏற்றவாறு தன் பண்புகளை மாற்றிக் கொள்கிறது."
"வாவ். நீயே ஒரு சைண்டிஸ்டாக இருக்க வேண்டியவள் தான். இது
போல நான் நிஷாவிடம் பேசியதில்லை. உன்னுடன் பழகும் நொடிகள் எவ்வளவு இதமாக இருக்கிறது
தெரியுமா. அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் அதிலும் நாம் இருவரும் இப்படிப் பழகும்
வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன்."
சுனிதா பேசாமல் அமைதியாக இருந்தாள்.
"நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா. உன்னுடன் வாழ்வின் இறுதி
வரை கூட இருக்க வேண்டும் என்று தோன்றுது."
சத்யன் சுனிதாவின் கைகளைப் பற்றினான். ஒரு வினாடி சுனிதாவின்
கைகளும் சத்யனின் கைகளைப் பற்றியவாறு இருந்தது. திடீரென்று சத்யனின் கைகளை உதறி வீட்டை
விட்டு சுனிதா வேகமாக வெளியேறினாள்.
--------********-------
நிஷாவுக்கு மிகவும் போரடித்துக் கொண்டிருந்தது. ஜீவன் ஒரு பப்ளிஷரை
சந்திப்பதற்காக வெளியே சென்றிருந்தான். இரவு தான் வர முடியும் என்றுக் கூறியிருந்தான்.
என்ன செய்து பொழுதைப் போக்குவது என்று நிஷா யோசித்துக் கொண்டிருந்தாள்.
ஜீவனின் அறைக்குச் சென்றாள். அங்கு அவன் லேப்டாப் கண்ணில் பட்டது.அதைத்
திறந்து சிறிது நேரம் செய்திகள் படித்தாள். பிறகு ஏதோ தோன்ற ஜீவன் எழுதிய கதையைப் படிக்க
ஆரம்பித்தாள்.
ஜீவனிடம் பல முறை கதையைப் படிக்க கேட்டிருந்த போது மறுத்திருந்தான்.
முழுதும் முடித்தப் பிறகே படிக்கக் கொடுப்பதாகக் கூறியிருந்தான். அவனுக்குத் தெரியாமல்
கதையைப் படிப்பதில் ஒரு திருட்டுத்தன சந்தோஷம் கிடைத்தது. கதை மிகவும் சுவையாக இருந்தது.
கதையில் வரும் கதாபாத்திரங்களும், சம்பவங்களைக் கோர்த்த விதமும் வித்தியாசமாக இருந்தது.
ஆனால் ஜீவன் கதையின் முடிவை மட்டும் இன்னும் எழுதவில்லை.
கதையை ஜீவன் எப்படி முடிக்கக்கூடும் என்று பலவாறு யோசித்துப்
பார்த்தாள். பிறகு தானே ஒரு முடிவை யோசித்து அவள் கதையின் தொடர்ச்சியாக தான் யோசித்த
முடிவை எழுதினாள் இதை ஜீவன் படித்தால் என்ன நினைப்பான், தன் முடிவு அவனுக்குப் பிடிக்குமா
என்று தெரிந்துக் கொள்ள ஆவலும் வந்தது.
வாசலில் காலிங் பெல் அடித்தது. ஜீவன் தான் திரும்பி வந்திருப்பான்
என்று நினைத்து லேப்டாப்பை முதலில் இருந்தவாறு ஆப் செய்தாள். கதவைத் திறந்ததும் ஜீவனின்
உற்சாகமான முகம் தெரிந்தது.
"பப்ளிஷரோட கான்ட்ராக்ட் சைன் ஆயிடுச்சு. இன்னும் ஒரு வாரத்திலே
கதை ரெடி பண்ணிட சொல்லியிருக்காங்க. நான் இப்பவே கதையை எழுத உட்காரணும். முடிவு மட்டும்
தான் பாக்கி. ஒரு நல்ல ஐடியா இப்போ தான் கிடைச்சுது. எனக்கு ஒரு காபி மட்டும் போட்டுத்
தர முடியுமா ப்ளீஸ்."
நிஷாவின் முகத்தில் புன்னகை வந்தது.
"என்ன சிரிக்கிறே. நான் இல்லாதப்போ ஏதாவது திருட்டுத்தனம்
பண்ணியா."
ஜீவன் தன் லேப்டாப்பை ஆன் செய்துக் கொண்டிருந்தபோது நிஷா காபியைக்
கொண்டு வந்து வைத்தாள். ஜீவன் தன் கதையின் பைலை திறந்தான். நிஷாவுக்குத் தான் எழுதிய
முடிவைப் படித்து என்ன சொல்வானோ என்று மனம் குரு குருத்தது.
படித்துக் கொண்டிருந்த ஜீவன் முகம் கோபத்தில் சிவந்தது.
"எனக்குத் தெரியாம கதையைப் படிச்சியா."
"ஆமாம் அதுக்கென்ன?"
"என் அனுமதி இல்லாம எப்படி நீ செய்யலாம். அது மட்டும் இல்லாம
நீயே ஏதோ எழுத வேற செஞ்சிருக்கே. ஒரு கல்ச்சர் இருந்தா நீ இப்படி செய்வியா?"
"உனக்கு சர்ப்ரைசா இருக்கட்டும்னு தான் அப்படி செஞ்சேன்.
நான் எழுதின முடிவு படிச்சு நீ எப்படி ரியாக்ட் பன்ன்வேன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருந்துச்சு.
அதுக்கு ஏன் கல்ச்சர் அப்படின்னு வார்த்தைகள் எல்லாம் சொல்றே."
"இது என் கதை. இதை எழுதறது எனக்கு ஒரு யாகம் மாதிரி. இதைத்
தொட உனக்கு எந்த உரிமையும் கிடையாது."
"எனக்கு உரிமை கிடையாதுனா அப்போ உனக்கு நான் யார். வெறும்
படுக்க மட்டும் தானா. நீ ஒரு சுயநலவாதி. உன் கூட சுனிதா எப்படி நரக வாழ்க்கை வாழ்ந்தான்னு
இப்போ தான் புரியுது."
அடுத்த நொடி ஜீவன் நிஷாவின் முகத்தில் பளீரென்று அறைந்தான்.
நிஷா இதை ஜீவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. சிவந்திருந்த அவள் முகத்தில் கண்ணீர்
பொங்கி வந்தது.
"நீ ஒரு மிருகம். மிருகத்திலும் கேவலமானவன்." என்று
கூறியவண்ணம் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு ஜீவனின் வீட்டை விட்டு வெளியேறினாள்.
--------********-------
இரண்டு நாட்களாக சத்யன் சுனிதாவை சந்திக்கவில்லை. மனதை ஏதோ செய்தது. மிகவும் யோசித்து அவளை செல்போனில் தொடர்புக் கொண்டான்.
"அன்னைக்கு நடந்ததற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். உன்னை
சந்தித்து பேசணும்னு தோணுது."
"பேசலாம். வீட்டுக்கே வந்துடு."
"உங்க அம்மா ஒன்னும் நினைக்க மாட்டாங்களா?"
"அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க. வீட்டுக்கே வா நீ."
சத்யன் சுனிதாவின் வீட்டை அடைந்த போது அவள் மட்டும் தனியாக இருந்தாள்.
சிறிது நேரம் பொதுவாகப் பேசி விட்டு நேரடியாக விஷயத்திற்கு சத்யன் வந்தான்.
"சுனிதா, நான் உன்னைத் திருமணம் செய்யனும்னு முடிவு பண்ணியிருக்கேன்."
சுனிதா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
"தெரியும் உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு. ஆனால் உன்னுடையது
எல்லாம் ஒரு வாழ்க்கையா. ஜீவன் உன்னைப் பல முறை அடிச்சான்னு சொல்லியிருக்கே. இப்படிப்பட்டவனோட
நீ எப்படி கடைசி வரை இருக்க முடியும்."
"நிஷா பத்தி என்ன யோசிச்சே?"
"நிஷா கண்டிப்பா அவள் அப்பா சொல்ற மாப்பிள்ளையைத் தான்
கல்யாணம் பண்ணுவா. அவள் டெல்லி போய் ஒரு வாரம் ஆகுது. நான் அவளைப் பல முறை கால் செய்தேன்.
அவள் போனை எடுக்கவே இல்லை."
"நிஷா போயிட்டா. அதுக்குப் பதில் நானா?"
"அப்படி சொல்லலே. நம் இருவரின் குணம், சிந்திக்கும் விதம்,
பிடித்த விஷயங்கள் எல்லாம் பொருந்தி இருக்கு. உன்னைப் பார்த்த அன்னைக்கே நான் புரிஞ்சுகிட்டேன்.
வீ ஆர் மேட் பார் ஈச் அதர்."
"என்னால ஜீவனை அவ்வளவு சுலபமா விட முடியாது."
"நீ ரொம்ப முற்போக்கான சிந்தனை உடையவள்னு நினைச்சேன். நீயும்
சராசரி பொண்ணு மாதிரி அடிச்சாலும், உதைச்சாலும் கணவனே கதின்னு கிடப்பேனு நினைக்கலே."
சத்யன் வெறுப்பாக விடை பெற எழுந்தான்.
"உட்காரு சத்யன். இதைப் படித்துப் பார்."
சுனிதா மெடிக்கல் ரிப்போர்ட் ஒன்றை சத்யன் கையில் கொடுத்தாள்.
"இது என்ன. உனக்கு உடம்புக்கு ஒன்னும் இல்லையே."
"நான் ப்ரெக்னன்ட். ஜீவனின் வாரிசு என் வயிற்றில் வளருது."
சத்யன் சில நொடிகள் திகைப்பில் உட்கார்ந்திருந்தான். பிறகு பேச
ஆரம்பித்தான்.
"எனக்கு அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை சுனிதா. உன் வயிற்றில்
வளரும் உயிரை என் குழந்தையாகப் பாவித்து வளர்க்க நான் தயார். உன் குழந்தைக்கு ஜீவன்
ஏற்றத் தகப்பன் கிடையாது."
"நீ என்ன சொன்னாலும் இது அவன் வாரிசு. உன் குழந்தையாக முடியாது."
"இந்த வார்த்தைகளை நான் உன்னிடம் எதிர்பார்க்கவில்லை."
"நான் ஒருவனின் மனைவி. அவன் குழந்தைக்குத் தாயாகப் போகிறேன்.
இதனுடைய அர்த்தம் என்னனு கல்யாணத்தைப் பார்க்காத நீ புரிஞ்சுக்க முடியாது."
"என்ன செய்றதா முடிவு பண்ணியிருக்கே."
"நான் நாளை டெல்லி போகப் போறேன். ஜீவனை சந்திச்சு விஷயத்தை
சொல்லப் போறேன். எங்களுக்கு பிரச்னை வர முக்கியக் காரணம் குழந்தை இல்லாதது தான். இப்போ
ப்ரெக்னன்ட் ஆக நான் இருப்பதால் அவன் மனம் மாறும்னு நம்பிக்கை இருக்கு."
சத்யன் இடி விழுந்தது போல அமைதியாக இருந்தான்.
"நீயும் என்னுடன் டெல்லி வா. டெல்லியில் தானே நிஷா இருக்காள்.
அவளை சந்தித்து உனக்காக நான் பேசறேன். அவள் மனசை மாத்த நான் முயற்சி செய்றேன். இது
தான் நம்ம இரண்டு பேருக்கும் சரியான வழி."
"நிஷாவோட இனிமேல் சரி வராது."
"சரி வரும். வர வைப்போம். யார் மனசு எப்படி மாறும்னு சொல்ல
முடியாது, நம்ம முயற்சியைத் தொடர்ந்துக் கொண்டே இருக்கணும். உனக்கும் சேர்த்து நான்
டெல்லிக்கு டிக்கெட் புக் பண்ணிட்டேன். உன்னைக் கேட்காமல் செய்தது தப்பு தான்.ஆனால்
உன் மேலே உண்மையான அக்கரை இருப்பதால் தான் இதை செய்தேன். நாளைக்கு காலை 8 மணிக்கு ஏர்போர்ட்
வந்துடு."
ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு டிக்கெட்டை வாங்கிக் கொண்டு சத்யன்
சுனிதாவிடம் விடை பெற்றுச் சென்றான்.
Chapter 4
சத்யன் சுனிதாவுடன் விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தான்.
சுனிதா நிஷாவின் இருப்பிட முகவரியை வாங்கிக் கொண்டு அவளைச் சந்திக்க சென்றாள்.
சத்யன் ஒரு வாடகைக் காரை எடுத்து வரச் சென்றான். அப்போது செல்போன்
சிணுங்க, எடுத்துப் பார்த்தபோது நிஷாவின் நம்பரைக் கண்டு அவனுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.
எதிர் முனையில் நிஷாவின் அழுகை சத்தம் கேட்டது.
"நிஷா என்ன ஆச்சு. ஏன் அழறே?"
"ஐ மிஸ் யூ சத்யன். உன்னைப் பார்க்கணும் போலத் தோணுது.
நான் மும்பை கிளம்பி நாளை வரேன். ஏர்போர்ட்டுக்கு கண்டிப்பாக வா."
"நான் டெல்லியில் தான் இருக்கேன். ஒரு சின்ன வேலை இருக்கு
முடிச்சுட்டி நைட் 9 மணிக்கு மீட் பண்றேன். இப்போ உன் கூட பேச சுனிதான்னு என்னுடைய
பிரண்ட் வருவாங்க."
நிஷாவின் மனம் மாறியிருக்க வேண்டும் என்பதை சத்யன் யூகித்தான்.
ஒரு சின்னப் பிரிவு அவளுக்குள்ளிருந்த காதலை வெளிக்கொண்டு வந்திருக்க வேண்டும். சுனிதா
சொன்னது சரிதான். காலம் யார் மனதையும் மாற்ற வல்லது. அவளை மீண்டும் சந்திக்கப் போகிறோம்
என்ற நினைவு அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
--------********-------
சுனிதா நிஷா தங்கியிருந்த ஓட்டலை வந்தடைந்தாள். அவள் அறையைக்
கண்டுபிடித்து கதவைத் தட்டினாள்.
கதவைத் திறந்த நிஷாவின் முகத்தைப் பார்த்ததும் சுனிதாவுக்குத்
தோன்றிய முதல் உணர்வு, சத்யன் எவ்வளவு கொடுத்து வைத்தவன் என்பது தான். உண்மையில் நிஷா
அவ்வளவு அழகு. முகம் சிவந்திருந்ததால் அவள் அழுதிருக்க வேண்டும் என்று நினைத்தாள்.
"நீங்கள் சுனிதாவா?"
நிஷாவின் கேள்வி சுனிதாவுக்கு வியப்பை அளித்தது.
"என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்?”
"சத்யனிடம் இப்போது தான் பேசினேன். நீங்கள் வருவதாக சொன்னான்."
"சத்யன் உங்களுக்குப் போன் செய்தானா?"
"இல்லை. நான் தான் பேசினேன். உள்ளே வாங்களேன்."
இருவரும் சோபாவில் அமர்ந்தனர்.
"சத்யனுடன் உங்களுக்கு எவ்வளவு நாளாகப் பழக்கம். உங்களைப்
பற்றி சொன்னேதே இல்லையே."
"ஒரு வாரமாகத் தான் பழக்கம். உங்களுக்குள் நடந்த பிரச்சினை
பற்றி சொன்னான். உங்களைக் கன்வின்ஸ் செய்ய நான் முயற்சி செய்கிறேன் என்று கூறி வந்தேன்."
"ஏன் அவனே வந்து பேச மாட்டானா?"
"அவன் உங்களைத் தொடர்பு செய்ய முயற்சித்ததாகக் கூறினான்.
உங்கள் சைடிலிருந்து ரெஸ்பான்ஸ் இல்லை என்றும் சொன்னான்."
"ஆம். என் தவறு தான். இந்த ஒரு வாரம் நான் நானாக இல்லை.
பெரும் தவறு செய்து விட்டேன்."
"உணர்ச்சிவசப்படாமல் சொல்லுங்கள். நீங்கள் அழுதிருக்கிறீர்கள்
என்றுத் தெரிகிறது. நான் உங்கள் இருவருக்கும் நன்மையே நினைப்பவள். ஒரு பெண்ணின் உணர்வு
இன்னொரு பெண்ணுக்குத் தெரியும். எந்த விஷயமானாலும் என்னிடம் சொல்லுங்கள்."
"நான் சத்யனுக்குத் துரோகம் செய்து விட்டேன். இந்தப் பத்து
நாட்களாக இன்னொரு மனிதனுடன் ரிலேஷன்ஷிப் வைத்திருந்தேன். இப்போது என் தவறை உணர்ந்து
விட்டேன். சத்யனின் அருமை எனக்கு இப்போது நன்றாகத் தெரிகிறது."
சுனிதா இதை எதிர்பார்க்கவில்லை. சத்யனுக்கும் தன் மீது காதல்
எண்ணம் வந்தது நினைவு வந்தது. பிரிவு வரும் போது தோளில் சாய்ந்து அழ இன்னொரு நபர் தேவைப்படுகிறது.
அந்த நபரையே தனது புதுக் காதலாகவும் நினைத்து மனம் ஏமாறுகிறது என்று நினைத்துக் கொண்டாள்.
"யார் அது?"
"அவன் பெயர் ஜீவன். பெரிய எழுத்தாளன்."
"ஜீவனா?"
சுனிதாவுக்கு அதிர்ச்சியில் தலையே சுற்றும் போல இருந்தது.
--------********-------
நிஷா வீட்டை விட்டுச் சென்றதிலிருந்து ஜீவுனுக்குப் பைத்தியம்
பிடிப்பது போல இருந்தது. இரவில் தூங்காதலால் கண்கள் சிவந்திருந்தது.
தன் கதையை முடிக்க வேண்டும் என்று இரண்டு நாட்களாக முயன்று வந்தான்.
நிஷா இருந்த போது தெளிந்த ஓடை போல பிரவாகமாக வந்த வார்த்தைகள் இப்போது வர மறுத்தது.
தனக்கு நிஷா வேண்டும். தன் எழுத்துக்கு நிஷா வேண்டும் என்பதை
ஜீவன் தெளிவாக உணர்ந்தான்.
போனில் பேசலாமா என்று ஒரு கணம் யோசித்தான். வேண்டாம் கோபத்தில்
இருப்பாள். நேரில் சென்று பேசி அவள் மனதை மாற்ற வேண்டும் என்று நினைத்து அவள் ஓட்டலை
நோக்கிக் காரை செலுத்தினான்.
--------********-------
"ஜீவனை உங்களுக்கு ஏற்கனேவே தெரியுமா?"
நிஷாவின் முகத்தில் கேள்வி தெரிந்தது.
"ஆம் நன்றாகத் தெரியும். இரண்டு வருடங்கள் அவனுடன் வாழ்ந்திருக்கிறேன்."
"ச்சே! எனக்குத் தோன்றவே இல்லை. சுனிதா என்று தனக்கு மனைவி
இருக்கிறாள் என்றும் அவளுடன் டைவர்ஸ் ஆகப் போகிறது என்றும் ஜீவன் சொல்லியிருந்தான்.
அந்த சுனிதா நீங்கள் தான் என்று கொஞ்சம் கூட யோசிக்கவில்லை."
சுனிதா கோபத்துடன் எழுந்து வீட்டை விட்டுக் கிளம்ப எத்தனித்தாள்.
"ஒரு நிமிஷம் உட்காருங்கள். நான் உங்கள் வாழ்க்கையில் விளையாடி
விட்டேன். இதற்குப் பரிகாரமாக நான் ஒரு யோசனை சொல்கிறேன். கேட்டு விட்டுப் பிறகு முடிவெடுங்கள்."
"என்ன சொல்லப் போகிறாய்."
"ஜீவன் ஒரு மிருகம். அவனை விட்டு நீங்கள் பிரிவது நல்லது.
நீங்கள் சத்யனைக் கல்யாணம் செய்துக் கொள்ளுங்கள்."
"என்ன உளறுகிறாய். நான் ஜீவனின் மனைவி."
"அவன் உங்களுக்கேற்ற கணவனே கிடையாது .சத்யனைப் பற்றி நான்
பேசும் போதெல்லாம் உங்கள் கண்களைப் பார்த்தேன். அதில் சத்யன் மீது உங்களுக்குள்ள காதல்
தெளிவாகத் தெரிகிறது."
"நடக்காத விஷயத்தைப் பற்றி நீ பேசுகிறாய். என் வயிற்றில்
ஜீவனின் குழந்தை வளருகிறது."
நிஷா அதிர்ச்சியில் உறைந்தவாறு அமர்ந்திருந்தாள்.
அப்போது கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
இந்நேரம் யாராக இருக்கும் என்று யோசித்தவாறு நிஷா கதவில் பொருத்தியுள்ள
சிறு கண்ணாடியின் மூலம் வெளியே நிற்பது யார் என்று பார்த்தாள். வெளியே ஜீவன் நிற்பது
தெரிந்தது.
பதட்டத்துடன் சுனிதாவை பாத்ரூம் நோக்கி அழைத்துச் சென்று,
"வெளியே ஜீவன் நிற்கிறான். உன்னை இங்கு பார்த்தால் பிரச்சினை செய்வான். நீ இங்கேயே
ஒளிந்திரு. நான் ஏதாவது பேசி அவனை அனுப்பி வைக்கிறேன்.
சுனிதாவை ஒளிந்திருக்கச் சொல்லி விட்டு நிஷா கதவைத் திறந்தாள்.
ஜீவன் உள்ளே நுழைந்ததும் கதவை சாத்தினாள்.
"எதுக்கு இந்நேரம் இங்கே வந்திருக்கே? எதுவென்றாலும் நாளை
காலையில் பேசலாம். நீ இங்கிருந்து போய் விடு."
"நிஷா, என்னை மன்னிச்சுடு. நீ இல்லாமல் என்னால் ஒரு நொடிக்
கூடத் தனியாக இருக்க முடியல. என் வீட்டுக்கு நீ வந்து விடு."
"அதெல்லாம் இப்போது முடியாது. எதுவென்றாலும் நாளை பேசலாம்."
"உன்னை விட்டுட்டு என்னாலே ஒரு நிமிஷம் கூட இருக்க முடியலைன்னு
சொல்றேன். உனக்கு அந்தத் தவிப்பு இல்லையா. என் கூட படுத்தே இல்லை. அந்த சுகம் கிடைச்சவுடனே
போதும்னு கிளம்பிட்டியா."
"முட்டாள் மாதிரி பேசாதே. முதலில் இங்கிருந்து வெளியே போ."
ஜீவன் திடீரென்று மூர்க்கத்துடன் அவள் கழுத்தைப் பிடித்தான்.
நிஷா திமிறி அறையின் ஓரத்திற்குச் சென்றாள்.
ஜீவன் அவளை இறுகப் பிடித்தான். அவளைப் பலவாறு அடித்து வன்முறைப்
பிரயோகம் செய்தான். அடித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென ஜீவன் அலறியவண்ணம் கீழே
சாய்ந்தான். அவன் பின்னே சுனிதா ரத்தம் தோய்ந்தக் கத்தியுடன் நின்றுக் கொண்டிருந்தாள்.
"சுனிதா என்ன காரியம் செஞ்சிட்டே. இப்போ நாம் என்ன பண்றது."
சுனிதாவின் முகத்தில் ஒரு தீர்க்கமான உறுதி தெரிந்தது.
"எல்லாத்தையும் நான் கவனிச்சுக்கிறேன். நீ முதலில் இங்கிருந்து
கிளம்பு. சத்யனுடன் நாளை காலை முதல் வேலையாக மும்பைக்குப் போய் விடு."
"உன்னை இப்படி விட்டுட்டு என்னால் எப்படிப் போக முடியும்?"
"இது ஜீவன் காரின் சாவி. எடுத்துக் கொண்டு நீ வெளியே போ?"
"சுனிதா அது வந்து எப்படி நான்?"
"கெட் அவுட் நிஷா."
நிஷா காரிலேறி சென்றாள். அன்று நடந்த நிகழ்ச்சிகள் அவளைப் பெரும்
குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது. சாலையில் அவள் கவனம் செல்லவில்லை. முன்னே சென்ற ஒரு
காரை ஓவர்டேக் செய்ய முயன்ற போது எதிரில் வந்த ஒரு டேங்கர் லாரி அவள் காரின் மீது மோதியது.
கார் பல முறை உருண்டு ரோட்டின் நடுவில் கிடந்தது. உள்ளே நிஷா இரத்த வெள்ளத்தில் கிடந்தாள்.
--------********-------
சத்யன் மனம் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது. நிஷாவை
சந்திக்க துடித்துக் கொண்டிருந்தான். ஆனால் பாழாய்ப் போன டெல்லி டிராபிக் அவனை வெறுப்பேற்றியது.
கார் ஊர்ந்தவண்ணம் சென்றுக் கொண்டிருந்தது. டிராபிக்கிலிருந்து தப்பிப்பதற்காக அடுத்த
சிக்னலில் மெயின் ரோட்டை விட்டு ஒரு குறுகிய ரோட்டில் சென்றான். அந்த ரோட்டில் அவன்
வண்டியைத் தவிர வேறு வண்டிகள் எதுவும் காணப்படவில்லை. சிறிது தூரத்தில் மக்கள் கூட்டமாக
நின்றுக் கொண்டிருப்பது தெரிந்தது. ஏதோ ஒரு விபத்து நடந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.
நின்றுக் கொண்டிருந்த நபர்களில் சிலர் அவன் வண்டியை நிறுத்தினர்.
"சார் ஒரு உயிர் போராடிகிட்டு இருக்கு. பக்கத்திலேதான்
ஆஸ்பத்திரி இருக்கு. இப்போ உடனே கூட்டிட்டுப் போனா பிழைக்க சான்ஸ் இருக்கு. உங்கள்
வண்டியில் எடுத்துப் போக ஹெல்ப் பண்ணுங்க சார்."
சத்யனுக்கு ஒரு நிமிடம் குழப்பமாக இருந்தது. மணி 10 ஆகி விட்டது.
நிஷாவை 9 மணிக்கு சந்திப்பதாகக் கூறியிருந்தான். அவள் மனம் மாறி தன்னுடன் பேசக் கூப்பிட்ட
நேரத்தில் இது வேறு என்ன உபத்திரவம் என்று சலிப்பாக இருந்தது.
"என்ன சார் யோசிக்கிறீங்க.ஒரு பெண்ணோட உயிர் சார். வாழ
வேண்டிய வயசு சார்."
"கொஞ்சம் தள்ளுங்க. நான் இறங்கி உடலை வண்டியிலேற்ற ஹெல்ப்
பண்றேன்."
அவர்கள் நகர்ந்தவுடன் சத்யன் வேகமாகக் காரை அவ்விடத்தை விட்டுக்
கிளம்பினான். தவறு செய்து விட்டோமோ என்று மனம் உறுத்தியது. வேறு யாராவது வந்து உதவி
செய்யாமலா போய் விடுவார்கள் என்றுத் தன்னை சமாதானம் செய்துக் கொண்டான். சிறிது நேரத்தில் நிஷாவின் ஹோட்டலை வந்தடைந்தான்.
அங்கும் பெரும் கூட்டமாக இருந்தது. சத்யன் காரை விட்டு இறங்கினான். போலீஸ் வேறு இருப்பது
பார்த்து பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மேலே படிகளிலிருந்து ஒரு பெண்ணை போலீசார் அரெஸ்ட்
செய்து அழைத்து வந்துக் கொண்டிருந்தனர். யார் அந்தப் பெண் என்று சத்யன் ஆவலுடன் பார்க்க
முயன்றான். சுனிதா தன முகத்தை துப்பட்டாவால் மறைத்து போலீசாருடன் சென்றுக் கொண்டிருப்பதைப்
பார்த்து அதிர்ச்சியில் உறைந்தான்.
இரண்டு போலீஸ் பேசிக் கொண்டிருந்தது அவன் காதில் விழுந்தது.
"செத்தது ஜீவன் அப்படிங்கிற ரைட்டர் சார். ரெண்டு பொண்ணுங்க
சேர்ந்துக் கொலை பண்ணியிருக்காங்க. ஏதோ லவ் பிரச்சினை போலிருக்கு. ஒரு பொண்ணை அரெஸ்ட்
பண்ணியாச்சு. இன்னொரு பொண்ணு தப்பிச்சு காரில் போயிருக்கு. வழியிலேயே ஆக்சிடெண்ட் ஆயிருக்கு.
இப்போ நாம அந்த ஆக்சிடெண்ட் ஸ்பாட் போகணும்."
இன்னொரு பெண்ணுக்கு ஆக்சிடெண்டா. அப்போது தான் வழியில் பார்த்தது
நிஷா தானா? சத்யன் பதறியவண்ணம் வந்த வழி காரை வேகமாக செலுத்தி.விபத்து நடந்த இடம் வந்தான்.
கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான். இறந்த நிஷாவின் உடலைப் போலீசார் வண்டியில்
ஏற்றிக் கொண்டிருந்தனர்.
சத்யன் முகத்தை மூடியவண்ணம் அழுதுக் கொண்டு அவ்விடத்தை விட்டு
ஓடினான். வெறிப் பிடித்தவன் போல ஓடினான். ஒரு பாலம் வந்ததும் நின்றான். அங்கிருந்து
கீழே தண்ணீரில் விழுந்தான். அவன் உடல் தண்ணீரில் மிதந்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் கூட்டம் கூடியது.
"உயிர் முழுசா போகலே. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போங்க."
வழியில் சென்ற ஒரு வண்டியை நிறுத்தி சத்யனை ஹாஸ்பிடலுக்கு அழைத்து
வந்தனர்.
சத்யனை ஸ்ட்ரெட்சரில் படுக்க வைத்து ஆபரேஷன் தியேட்டர் எடுத்துச்
சென்றனர். அன்று இரவு முழுதும் டாக்டர்கள் போராடினர். சத்யனுக்கு உயிர் இருந்தும்,
மூளை செயல்படாது கோமா நிலையில் இருந்தான்.
அடுத்த நாள் காவல் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சுனிதா
ஆஸ்பத்திரி வந்தாள். தன்னுடன் வந்த போலீசிடம் தான் தனியாக சத்யனுடன் சில நிமிடங்கள்
இருக்க வேண்டினாள். உடன் வந்த போலீஸ் பெண் என்பதால் மனமிரங்கி ஒப்புதல் தந்தார்.
சுனிதா சத்யன் இருந்த அறைக்குச் சென்றாள். சத்யன் கண்ணை மூடியவண்ணம்
படுத்திருந்தான். அருகிலிருந்த ECG அவன் இதயம் துடித்துக் கொண்டிருப்பதைக் காட்டியது.
படுக்கையருகே அமர்ந்து சுனிதா சத்யன் தலையை லேசாக வருடினாள். பிறகு அவன் தலையில் கை
வைத்து அவன் முகத்தைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது சத்யனின்
உதடுகள் லேசாக அசைந்தது. அவன் கைகள் சுனிதாவின் விரல்களை மெலிதாகப் பற்றியது.
"டாக்டர்! டாக்டர்! யாராவது சீக்கிரம் வாங்க!"
சுனிதா அலறியது கேட்டு டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் உள்ளே வர
அந்த அறை சுறுசுறுப்பானது. டாக்டர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். சுனிதா ஒரு
ஓரமாக நின்றுக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சத்யனின் இதயத் துடிப்பு குறைந்துகொண்டே வருவதை ECG காட்டியது.
சில நொடிகளில் சத்யன் இதயம் நின்றதை ECG உணர்த்தியது. சுனிதா வாயில் கையை வைத்துப்
பொத்தியவாறு அழுதுக் கொண்டிருந்தாள்.
டாக்டர்கள் சத்யனின் மார்பை அழுத்தி அவனை மீண்டும் உயிர்ப்பிக்கப்
போராடினர்.
சத்யன் தன் இறந்த உடலிலிருந்து “தான்” பிரிந்து வெளியே வருவதை
உணர்ந்தான். டாக்டர்கள் போராடிக் கொண்டிருப்பதை உடலிலிருந்துப் பிரிந்த அந்த நினைவுகளுக்குத்
தெரிந்தது. அறையின் மூலையில் சுனிதா விம்மி அழுவது தெரிந்தது. அவள் அருகே சென்று அவள்
கண்ணீரைத் துடைத்துத் தேற்ற வேண்டும் என்றுத் தோன்றியது.சத்யனின் நினைவுகளை ஒரு அமானுஷ்ய
சக்தி இழுத்தது. ஒரு கரிய இருளுக்குள் புகுந்து ஒரு ஒளி வெள்ளத்துக்குள் அவன் நினைவுகள்
நுழைந்தது. ஒளி வெள்ளத்தின் இறுதியில் சுற்றிலும் வெண்மை நிறமான ஒரு உலகத்துக்குள்
வந்து அவன் நினைவுகள் நின்றது.தூரத்தில் ஒரு உருவம் தெரிந்தது. கிட்டே நெருங்க அவ்வுருவம்
நிஷா என்பது தெளிவானது.
"நிஷா, நீ எப்படி இங்கே. நமக்கு என்னவாயிற்று? நான் எங்கே
இருக்கிறேன்?"
"சத்யன், நாம் இறந்து விட்டோம்.ஒரு புதிய உலகிற்கு வந்திருக்கிறோம்.
ஆனால் நீ வெகு நேரம் இங்கிருக்கக் கூடாது. நீ திரும்பிச் செல்ல வேண்டும்."
"உன் மரணத்திற்குக் காரணம் நான் தான். விபத்தில் நீ அடிபட்டுக்
கிடந்தபோது உன்னைக் காப்பாற்ற எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் என் மடத்தனத்தால்
உன்னை நான் சாக விட்டேன்."
"என் நேரம் முடிந்தது அதனால் நான் கிளம்பி விட்டேன். அதை
யாராலும் தடுக்க முடியாது. உன் உண்மையான அன்பை நான் புரிந்துக் கொள்ளவில்லை நான். உனக்கு
நான் செய்த துரோகத்திற்குக் கிடைத்த தண்டனை தான் எனக்குக் கிடைத்த முடிவு."
"எப்படி ஆனாலும், இந்தப் புதிய உலகில் நாம் மீண்டும் இணைய
ஒரு வாய்ப்பு கிடைத்து விட்டதே."
"இல்லை நீ திரும்பிச் செல்லும் நேரம் நெருங்குகிறது. உன்
உடலை நீ மீண்டும் அடைய வேண்டும்."
"இல்லை! உன்னை விட்டு நான் பிரிய மாட்டேன் நிஷா!"
"சுனிதா. அவளுக்காக நீ போக வேண்டும்."
"சுனிதாவே இருந்தாலும் உன்னுடன் நான் சேர்ந்து வாழத்தான்
விருப்படுவாள்."
"சுனிதா சிறைக்குச் சென்றுவிடுவாள். அவளுக்கு சில மாதங்களில்
குழந்தை வேறு பிறக்கப் போகிறது. அவள் இருக்கும் நிலையில் குழந்தை எப்படி நல்லபடியாக
வளரும். நீ தான் அவளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அவள் குழந்தையை நம் குழந்தையாகப்
பாவிக்க வேண்டும்."
"நிஷா! நான் எப்படி திரும்பப் போக முடியும். நான் தான்
இறந்து விட்டேனே."
சத்யன் நிஷாவின் கரங்களைப் பற்றியவண்ணம் இருந்தான்.
"போ சத்யன்! திரும்பப் போ!"
ஒரு சக்தி அவனை மீண்டும் கரிய இருளுக்குள் இழுத்தது. சத்யனின்
கரங்கள் நிஷாவின் கரங்களை விட்டு சட்டென விலகியது. நிஷாவின் முகம் கடைசியாகத் தெரிந்தது.
அடுத்த நொடி சத்யனின் நினைவுகள் அவன் உடலில் புகுந்தது. அவன்
கண்கள் மெதுவாகத் திறந்தது.
"உயிர் வந்து விட்டது! உயிர் வந்து விட்டது!"
அறையிலிருந்த டாக்டர்கள் அனைவரும் உற்சாகமாகக் கத்தினர்.
சுனிதா ஓடி வந்து சத்யனின் கரங்களைப் பற்றினாள். அவள் முகத்தில்
அளவிட முடியாத சந்தோஷம் தெரிந்தது. சத்யன் முகத்தில் லேசான புன்னகை வந்தது.
அதற்குள் போலீஸ் அறைக்குள் நுழைந்து சுனிதாவை வற்புறுத்தி அழைத்துச்
செல்ல முயன்றனர்.
கதவருகே சென்று அங்கிருந்து மறையும் முன் சுனிதா கடைசியாக சத்யனின்
முகத்தைப் பார்த்தாள்.
"கவலைப்படாதே. உனக்கு எல்லாமாக நான் இருக்கிறேன்"
என்று அவன் கண்கள் சொல்லியதை சுனிதா புரிந்துக் கொண்டாள்.
THE END
Reference:-
SCIENCE AND THE NEAR DEATH EXPERIENCE – Chris Carter