Saturday, April 17, 2021

ராஜாளி - தமிழ் சிறுகதை

                                                                        இராஜாளி


“இராஜாளியை கண்டுபிடித்தது யார். நீயா? நானா"


எதிரே அமர்ந்திருந்த ரஞ்சனிடமிருந்து கேள்வி மெலிதான குரலில் வந்தது.  நோய் அவனை உருக்கியிருந்தது. கைகள் தளர்ந்து நடுக்கம் கொண்டிருந்தது. எடை குறைந்து, முகம் வற்றி, தாடை எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தது.


இராஜாளி சிறிய வடிவிலான பறக்கும் டிரோன். அதை ரஞ்சன் 1988ல், ஐ.ஐ.டி கல்லூரியில் என்னுடன் படிக்கும் போது வடிவைமைத்தான்.  


அடுத்த வாரத்தில் நானும் அதைப் போன்று ஒரு டிரோன் செய்தேன். அதில் ஒரு கேமரா பொருத்தியிருந்தேன். ரஞ்சனின் டிரோனை விட இரண்டு மடங்கு அதிக உயரம் செல்லும்படியாகவும். எளிதில் உடையாமல் இருக்கும்படியாக வேறு உலோகத்தில் செய்திருந்தேன். ஏனோ கல்லூரியில் என்னுடைய டிரோனே மிகவும் பிரசித்தி பெற்றது. இராஜாளி என்ற பெயரையும் தனதாக்கிக் கொண்டது.   


ரஞ்சன் அதை பொருட்படுத்தவில்லை. ஏனென்றால் அன்று அவன் என் உயிர் நண்பன். இன்று எதிரியாக மாறி என் எதிரில் அமர்ந்திருக்கிறான். 


என் மௌனத்தை ரஞ்சன் கலைத்தான்.


"ராகவ், என் கேள்விக்கு நீ இன்னும் பதில் அளிக்கவில்லை."


"அன்று நீ இந்த கேள்வியை கேட்கவில்லை."


"ஆம். அதன் விளைவை தான் முப்பது ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.”


உணர்ச்சி பெருக்குடன் பேசியதால் ரஞ்சனுக்கு தொடர் இருமல் வந்தது. அவன் மனைவி அவனைக் கைத்தாங்கலாக அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றாள்.


ரஞ்சனின் கேள்வி என்னை குடைந்துக் கொண்டிருந்தது. இராஜாளியை கண்டு பிடித்தது யார். சந்தேகமே இல்லாமல் ரஞ்சன் தான்.  இன்று போலவே அன்றும் அவன் ஒரு Eccentric  Genius. 


நாங்கள் இருவரும் முற்றிலும் வேறுபட்ட பின்னணி கொண்டவர்கள். நான் சென்னையில் சிறந்த தனியார் பள்ளியில் படித்தவன். என் தந்தை பெரும் நிறுவனத்தில் தலைமை மேலாளராக இருந்து வந்தார்.


ரஞ்சன் பண்ருட்டி என்னும் ஒரு சிறு ஊரிலிருந்து வந்தவன். சாதாரண பள்ளியில் படித்து ஐ.ஐ.டி. வந்தான். அவனால் ஆங்கிலம் சரளமாக பேச இயலாது.


பார்த்த முதல் கணத்திலேயே ரஞ்சனை எனக்கு பிடித்து விட்டது. எங்கள் இருவரின் மனம் ஒத்திருந்தது. எனக்கு பிடிக்கும் பெண் அவனுக்கும் பிடிக்கும். நான் ரசிக்கும் படங்களை அவனும் ரசிப்பான். என் மூலமாக ஆங்கில நாவல்கள் படிக்கவும், படங்கள் பார்க்கவும் பழகிக் கொண்டான்.


எங்கள் வருங்கால கனவுகளை பற்றி ஓயாமல் பேசிக் கொண்டிருப்போம். நன்றாக படித்து அமெரிக்காவின் நாசாவில் வேலை செய்வதே எங்கள் இருவரின் இலட்சியமாக இருந்தது. 


எங்கள் இருவருக்கும் அந்த கனவு நிறைவேறவில்லை. ஏனென்றால் வெகு விரைவிலேயே எங்கள் இலக்கு மாறியது. அதை விட பெரிய சாதனைகளை நோக்கி எங்கள் வாழ்க்கைப் பயணம் திசை மாறிச் சென்றது.


ரஞ்சன் மீண்டும் என் எதிரே அமர்ந்தான்.


"இது ஒரு ஆள்கொல்லி நோய்.  நீ எனக்கு பல கெடுதல்கள் செய்திருக்கிறாய். அதில் இந்த நோயும் ஒன்று."


என் பார்வையில் தெரிந்த வியப்பை பார்த்து நகைத்தான்.


"நீ தானே எனக்கு புகைபிடிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுத்தாய்." 


"நான் திருமணத்திற்கு பின் விட்டு விட்டேன்."


"தப்பித்தாய். ராகவா எனக்கு மரணம் பற்றிய பயம் இல்லை. ஆனால் நான் இந்த உலகத்தில் நிறைவேற்ற வேண்டிய காரியங்கள் சில உள்ளன. அது என்னால் மட்டுமே இயலும். அதற்காக ஆண்டவனிடம் ஐந்து வருடங்கள் மட்டுமே கேட்கிறேன்."


"நான் வந்ததன் நோக்கமும் அதுவே. சென்ற வருடம் நம் பகையை மறந்து மீண்டும் நாம் இணையலாம் என்ற எண்ணம் எனக்கு உதித்தது. ஆனால் விதி விளையாடி விட்டது. வர இருக்கும்  உன் இறுதி, எனக்கு பெரிய இழப்பு. 1990 ஆம் ஆண்டு, மார்ச் 18.  அன்றைய தினம் உனக்கு நினைவிருக்கிறதா."


"எப்படி மறக்கும். நம் இன்றைய வாழ்க்கையை நிர்ணயித்த தினம் அல்லவா அது."


கல்லூரி நாட்களில்  நானும் ராகவும் பெசன்ட் நகரில் இருக்கும் நூலகத்திற்கு அடிக்கடி செல்வதுண்டு. அங்கு 1000  பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை என்னிடம் ராகவ் காண்பித்தான். எயின் ராண்ட் எழுதிய Atlas  Shrugged  என்னும் நாவல். அட்டையில் உள்ள கதை சுருக்கத்தைப் படித்து விட்டு நானும் நாவலின் ஒரு பிரதியை எடுத்துக் கொண்டேன். மூன்றே நாட்களில் அப்புத்தகத்தை  முடித்தோம்.


நாவல் படித்து முடித்த அன்று என் மனம் உக்கிரமான உணர்வுகளால் ஆழ்ந்திருந்தது.  நான் ரஞ்சித்தை தேடி சென்றேன். அப்போது நள்ளிரவு. அடுத்த நாள் தேர்வுக்கு மாணவர்கள் அனைவரும் படித்துக் கொண்டிருந்தார்கள்.


ரஞ்சித் மாடியில் நிலவை பார்த்த வண்ணம் படுத்துக் கொண்டிருந்தான்.  நான் அவன் அருகில் அமர்ந்தேன்.


"ராகவ், நான் தேர்வுக்கு படிக்கவில்லை."


"இங்கும் அதே நிலை தான்."


"நாளை முதல் நான் கல்லூரியை விடப் போகிறேன்."


"உன்னை நான் தொடர்வேன்."


"நான் நாசா போவதில்லை."


"நாசாவை விட வலிதான நிறுவனத்தை நாம் உருவாக்குவோம்."


"மின்சார கார், தானியங்கி கார்கள், பறக்கும் கார்கள் என்று இந்த உலகத்தை நாம் மாற்றுவோம்."


நான் ரஞ்சித்தின் கைகள் மீது என் கைகளை வைத்தேன். அவன் என் கைகளை பலமாக பற்றினான். 


ஒரு புத்தகம் எங்கள் இருவர் வாழ்க்கையை மாற்றிய கதை இது. நாங்கள் இந்த உலகத்தை மாற்றியதன் தொடக்கமும் கூட.


அதன் பிறகு பத்து ஆண்டுகளில் நாங்கள் ஒரு கார் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்து, வெற்றிகரமாக இந்தியாவில் முதலாவது இடத்தை பிடித்தது எல்லாம் ஒரு நாவலாக எழுதும் அளவுக்கு சுவையான கதை.


எங்களுக்கிடேயே பிரிவு ஏற்பட்ட நாள்  2000, ஜனவரி ஒன்றாம் தேதி . புத்தாண்டு கொண்டாடுவதற்காக ரஞ்சன் என்னை தன் வீட்டிற்கு அழைத்திருந்தான்.


பொதுவான நலம் விசாரிப்புகளுக்கு பின் தொழில் பற்றி உரையாடல் நகர்ந்தது.


"ராகவ், நீயும் நானும் பத்து வருடங்கள் முன்னர் ஒரு அழகான கனவு கண்டோம். அதில் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறோம்."


"எகனாமிக் டைம்ஸின் நேற்றைய இதழ் நீ படிக்கவில்லையா? நாம் இன்னும் 10  வருடங்கள் முதலிடத்தில்  இருப்போம்  என்று ஆருடம் சொல்லியிருக்கிறார்கள்."


"அது போதுமா. நம் மாடல்கள் போட்டியாளர்களை விட அதிக விலை குறைவு. அதனால் நாம் முதலிடத்தில் இருக்கிறோம்."


"நம் மாடல்கள் தரத்தில் மிக சிறந்தது என்று பல விமர்சனங்கள் வந்துள்ளது."


"அதெல்லாம் சரி. ஆனால் நம் கனவுகள் இதை விட பெரிது இல்லையா. மின்சார கார்கள், தானியங்கி  கார்கள் பறக்கும் கார்கள் எல்லாம் உருவாக்கி இந்த உலகத்தை புரட்டி போடுவது அல்லவா நமது இலக்கு."


"உலக சந்தையில் இப்போது எண்ணெய் விலை சல்லிசாக இருக்கிறது.  அது பத்து மடங்கு  பெரிதானாலும், டீசல் / பெட்ரோல் கார்களின் விலையை விட மின்சார கார்கள் குறைவாக தயாரிக்க முடியாது. போர்ட் , GM, டயோட்டா, ஹோண்டா போன்ற ஜாம்பவான்களே இதில் தடுமாறுகிறார்கள். மேற்படி நீ சொன்ன தானியங்கி, பறக்கும் கார்கள் எல்லாம் எங்கோ ஒரு ஆராய்ச்சி அறையில் முடங்கி கிடக்கின்றன." 


"எனக்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடு. நான் மின்சார கார்கள் குறித்த  தொழில்நுட்ப திட்ட வடிவம் உன்னிடம் கொண்டு வருகிறேன்."


பல மணி நேர விவாதங்கள் கடந்தும் அவன்  திட்டத்திற்கு நான்  ஒப்புக் கொள்ளவில்லை. ரஞ்சன் பிரிந்து தனியாக ஒரு கார் தயாரிக்கும் நிறுவனம் ஆரம்பித்தான். நான்கே  வருடங்களில் அவன்  கம்பெனியின்  மின்சார கார்கள்  இந்தியாவி ன் சாலைகளில் பயணித்தது. உலக அளவில் மற்ற கம்பெனிகளின் மின்சார கார்கள் விலையை விட அவன் கார் மாடலின் விலை குறைவானது.  மேலும் பெட்ரோல்/டீசல் மூலம் இயங்கும் கார்களின் விலையை விடவும் குறைவான விலையில் தயாரித்தான். இந்தியாவிற்கு மட்டும் அல்லாமல் உலகத்திற்கே அவன்  நிறுவனம் மின்சார கார்கள் தயாரித்தது. 


அடுத்த ஆண்டே என்  நிறுவனம்  ஒரு மின்சார கார்  மாடலை கொண்டு வந்தது. விலை குறைவு, அதிக பேட்டரி ஆயுள், விமானத்தில் பறப்பது போன்ற சொகுசான பயண அனுபவம், நேர்த்தியான வடிவம் போன்ற காரணங்களால் நாங்கள் விரைவாக மார்க்கெட்டில் மீண்டும் முதலிடத்தை பிடித்தோம். 


அதன் பிறகு 2014 ஆண்டு  தானியங்கி கார்களை ரஞ்சன் மார்கெட்டிற்கு  கொண்டு வந்தான். அடுத்த ஆண்டே அதை விட சிறந்த தானியங்கி கார் மாடல் ஒன்றை நான் கொண்டு வந்தேன்.

எப்போதும் உலக அளவில் என் நிறுவனம் முதலாவதாகவும், ரஞ்சனின் நிறுவனம்  இரண்டாவதாகவும் இருந்து வந்தது.


2019  ஆம் ஆண்டு  பறக்கும் கார் மாடல்  ஒன்றை கொண்டு வரும் தனது கனவு திட்டத்தை ரஞ்சன் அறிவித்தான். கொரோனா தோற்று காரணமாக அத்திட்டம் தள்ளிப்போனது.


இரண்டு மாதங்கள் முன்பு தனக்கு கேன்சர் இருப்பதாகவும், தனக்கு இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே ஆயுள் இருப்பதாக அதிர்ச்சியான செய்தியை அறிவித்தான். இச்செய்தியை கேட்ட பின் என் மனதில் பல திட்டங்கள் தோன்றியது. அதன் விளைவாக இப்போது நான் அவன் முன் அமர்ந்திருக்கிறேன். 


"பழைய நினைவுகளில் மூழ்கி விட்டாயா ராகவா?"


"ஆம். கடந்து வந்த பாதையை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது."


"நீ வந்ததன் காரணத்தை இன்னும் கூறவில்லை."


"ரஞ்சன், உன் உடல்நிலை குறித்த செய்தி வருத்தத்தை அளித்தது. உனக்கு பின் உன் கம்பெனியின் எதிர்காலம் பற்றி எதுவும் முடிவெடுத்தாயா?"


"கம்பெனிக்கு புது CEO  அறிவித்திருக்கிறேன்."


"ஆனால் உன் கம்பெனிக்கு மூலதனமே நீ தான். உனக்கு பின் உன் பங்குதாரர்கள் பறந்து விடுவார்கள். ஏற்கெனெவே உன் உடல் நிலை அறிவிப்புக்கு பின் உன் கம்பெனியின் பங்குகள் தாறுமாறாக சரிந்துள்ளது."


"உன் மனத்தில் ஏதோ திட்டம் இருக்கிறது. அதை வெளிப்படையாக சொல்."


"எப்போதும் நம் இருவரின் கனவும் ஒன்றே. நமக்குள் பேதம் வழிமுறைகளில் மட்டுமே. "


"அதனால்?"


"நம் இருவரின்  கம்பெனிகளும் இணைய வேண்டும். உனக்கு பின் நம் கனவுகளை நான் தொடர்வேன்."


"இந்தக் கதையின் தொடக்கத்தில் நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும்  பதிலளிக்கவில்லை. ராஜாளியை கண்டுபிடித்தது நீயா நானா."


"யார் கண்டுபிடித்தது என்பது முக்கியமே இல்லை. ஒரு அறிவியல் கருத்தை இவ்வுலகம் பயன்படுத்தும் விதம் எளிமையாகவும் சிறப்பாகவும் அமைத்தது  யார் என்பதே முக்கியம். நீ தயாரித்த கார்கள் தொண்ணூறுகளின் மோட்டரோலா, நோக்கியா செல்போன் வகைகளை சேர்ந்தவை. நான் தயாரித்த கார்கள் ஐபோன் வகையைச் சேர்ந்தவை. இந்த உலகம் எதை  கொண்டாடுகிறது என்று நான் சொல்ல வேண்டுவதில்லை. "


"செல்போன் என்ற ஒன்றையே  காணாத ஒரு சமூகத்திற்கு, அதன் சாத்தியத்தையே கனவு கூட கண்டிராத உலகிற்கு, அதை முதலில் அறிமுகம் செய்த நோக்கியா, மோட்டோரோலா  எவ்வளவு முக்கியம் என்று உனக்கு நான் எப்படி புரிய வைப்பது."


"நமக்குள் இருக்கும் கொள்கை பேதம் இப்போது முக்கியமில்லை. நம் சாதனைகள் வருங்கால சந்ததிக்கும் தொடர்ந்து செல்ல வேண்டாமா? வறட்டு கௌரவத்திற்கு இடம் கொடுக்காதே. என் திட்டத்திற்கு ஒப்புக்கொள்."


"உனக்கு என் கம்பெனியை தாரை வார்ப்பது என் ஆன்மாவை இழப்பதற்கு சமம்."


எவ்வளவு வாதாடியும் ரஞ்சனை சம்மதிக்க வைக்க முடியவில்லை.


நான்கு மாதங்கள் கழித்து ரஞ்சன் மரணம் அடைந்தான். அதற்கு பின் ஒரு வாரம் கழித்து அவன் மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது.


ரஞ்சன் வாழ்ந்த வீட்டில் அவன் இல்லாத வெறுமையை உணர முடிந்தது.


அவன் மனைவி ரஞ்சன் எழுதிய ஒரு கடிதத்தை தந்தாள்.


"ராகவா,


நம் கடைசி சந்திப்பின் போது நடந்த உரையாடல் பல முறை மனதில் எதிரொளித்துக் கொண்டே இருந்து வருகிறது. ஒரு முறை நியூயார்க்கில் ஒரு மாலிற்கு நான்  சென்றேன். அங்கே உனது கம்பெனி மற்றும் எனது கம்பெனி கார்களின் ஷோ ரூம் அருகருகே இருந்தது.


மக்கள் உன் கார் மாடல்களை எத்தனை பிரமிப்புடன் பார்த்தனர் என்பது எனக்கு வியப்பூட்டியது. வாங்காவிட்டாலும், உன் கார்களை வெறும் பார்ப்பதிலேயே  உவகை அடைந்தனர்.


அதற்கு நேர்மாறாக என் ஷோரூமில் கார்களை பார்க்க வந்தவர்களிடேயே பெரும் தாக்கம் எதுவும் இல்லை. உலகின் முதல் மின்சார கார், தானியங்கி  காரை அறிமுகப்படுத்திய நிறுவனம் என்ற பெருமைக்காக என் கார்களை மக்கள் வாங்கியதாக தோன்றியது.


ஏன் இந்த வேறுபாடு. நான் எதை தவறாக செய்தேன். நீ எதை சரியாக செய்தாய். யோசித்ததில் ஒன்று தெளிவானது. 


நான் வெறும் அறிவியலாளன் மட்டுமே. என் கார்கள்  உலகின் தேவைக்கான ஒரு அறிவியல் தீர்வு மட்டுமே. ஆனால் நீ வெறும் அறிவியலாளன் மட்டும் அல்ல. அதிலும் மேலாக ஒரு கலைஞன். உன் கார்களில் ஒரு அழகு, கலைநேர்த்தி இருந்தது. நீ மக்களின் தேவையை மட்டும் தீர்க்கவில்லை. மாறாக அவர்களுக்கு அளவிடா மகிழ்ச்சி தந்தாய்.


நம் இருவரின் பங்கும் ஒன்றுக்கொன்று குறைந்தது இல்லை. நாம் இருவருமே இந்த உலகிற்கு   தேவையானவர்கள். நாம் இருவரும் ஒரு வட்டத்தின் இரு சரி பகுதிகள். ஒருவர் இல்லாவிட்டாலும் வட்டம் முழுமை ஆகாது.


அந்த ஒரு காரணத்திற்காக நான் என் கம்பெனியை உனக்கு தர முடியாது. நம் இரு கம்பெனிகளும், அதற்கிடேயே  உள்ள சித்தாந்த வேறுபாடும், போட்டியும் இவ்வுலகிற்கு தேவை. டெஸ்லா இல்லாமல் எடிசன் இல்லை. பில் கேட்ஸ் இல்லாமல் ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லை. ராகவ் இல்லாமல் ரஞ்சன் இல்லை. என் கம்பெனி இல்லாமல் உன் கம்பெனி இல்லை. இரண்டும் தனியே இயங்கட்டும் இவ்வுலகை வெல்லட்டும்.


அன்புடன்

ரஞ்சன்"


அவன் மனைவி ரஞ்சனின் அலுவல் அறைக்கு அழைத்து சென்றாள். அங்கே ஒரு கண்ணாடி பெட்டியில் இரு டிரோன்கள் இருந்தன. ஒன்று 33 வருடங்கள் முன் நான் வடிவமைத்தது. மற்றொன்று ரஞ்சன் வடிவமைத்தது. இரண்டும் அருகருகே கண்ணாடி பெட்டியில் கச்சிதமாக பொருத்தப்பட்டிருந்தது.


ரஞ்சனின் மனைவி  இன்னொரு கடிதத்தை கொடுத்தாள்.


"ராகவா.


நம் கல்லூரி நாட்களில் நடந்த ஒன்று நினைவிருக்கிறதா. நம் இருவரின் இராஜாளியும்  தொலைந்திருந்தது. சல்லடையாக தேடியும் கிடைக்கவில்லை. நீ பெரும் ஏமாற்றத்திற்கு ஆளானாய்.


ஆனால் உண்மையில் நான் தான் அதை ஒளித்து வைத்திருந்தேன். இத்தனை வருடங்களாக பேணி பாதுகாத்து வந்தேன்.


தொழிலில் நீ பல முறை வென்றிருந்தாய். நான் விரக்தி அடைந்த தருணங்கள் பல. அப்போது இந்த ராஜாளிக்களை பார்க்கும் போது ஒரு உத்வேகம் வரும். செயல் வேகம் கூடும்.

என் மரணத்திற்கு பின் இந்த ராஜாளிக்களின் உரிமையாளன் நீ மட்டுமே. எனக்கு தந்த அந்த ஊக்கம் உனக்கும் அளிக்கும் என்று நம்புகிறேன்.


ராஜாளியை கண்டு பிடித்தது ராகவ், ரஞ்சன் இருவருமே. அப்படியே சரித்திரம் கூறட்டும்.


அன்புடன்

ரஞ்சன்."


என் கண்களின் நீர் கடிதத்தை நனைத்தது.


இரண்டு ராஜாளிக்கள் ஆர்வத்துடன் என்னை நோக்கி சிரித்தன.

 

                              ———-**************———-