Friday, July 31, 2015

எந்திரதேசம் - அறிவியல் கதை

   எந்திரதேசம்

                                                                    Chapter – 1
                                                                   வருடம் 2065
நரேனுக்கு சட்டென முழிப்பு வந்தது. அவன் முன் தியா எரிக்கும் பார்வையுடன் நின்றுக் கொண்டிருந்தாள். அவள் தான் அவனை எழுப்பியிருக்க வேண்டும்.
"தினமும் உன்னுடன் இதே கதையாகத் தான் இருக்கிறது. ஒரு நாளாவது சரியான சமயத்திற்கு எழுந்திருத்ததே கிடையாது."
நரேனுக்கு சோர்வாக இருந்தது. இன்னும் சிறிது நேரம் உறங்கினால் நன்றாக இருக்கும். தியாவின் அர்ச்சனை தொடர்ந்துக் கொண்டிருந்தது.
"இன்று என்ன நாள் என்று நினைவிருக்கிறதா. இன்று அகில உலக மகதீரா விளையாட்டின் இறுதிச்சுற்று. அதில் பங்கெடுக்கும் இரு வீரர்களில் நானும் ஒருத்தி. இது எது பற்றியும் அக்கறை இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாய்."
நரேனுக்கு உடனே சுதாரிப்பு வர படுக்கையை விட்டு எழுந்திருத்துக் கிளம்பினான். மகதீரா என்பது  ஒரு virtual reality  விளையாட்டு. பங்கெடுக்கும் வீரர்களை ஒரு கற்பனை உலகிற்கு எடுத்துச் செல்லும். அங்கு பல வித சோதனைகளை எதிர் கொள்வது போன்ற ஒரு மாயையை உருவாக்கும். சோதனைகள் ஒரு பயங்கர மிருகமாகவோ, ராட்சத வீரர்களாகவோ இருக்கும். விளையாடுபவர்கள் இந்த சோதனைகளை தங்கள் எண்ணம் மற்றும் உடல் அசைவுகள் மூலம் எதிர் கொண்டு வெற்றி பெற வேண்டும். இதற்குத் தேவை நல்ல விழிப்புணர்வு. கண நொடி அசந்தாலும் தோல்வி தான்.
பல நாட்டினர் கலந்துக் கொள்ளும் இந்தப் போட்டியில் பெரும்பாலும் ஆண்களே வெற்றி பெறுவது வழக்கம். முதல் முறையாக ஒரு பெண், அதாவது தியா இறுதி சுற்றில் தேர்வாகியிருக்கிறாள். தியாவுக்கு இது மிகப் பெருமையான விஷயம். உலகில் உள்ள அனைவரும் இப்போது அவள் பெயரைத் தான் உச்சரித்துக் கொண்டிருந்தனர்.
நரேன் தயார் ஆனதும் இருவரும் விளையாட்டு அரங்கிற்கு வந்தனர். அங்கே அவளுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. அவளது தோழன் ராகுல் அவளுக்குக் கை கொடுத்து வாழ்த்துச் சொன்னான்.
"இந்தச் சுற்று மிகவும் கடினமாக இருக்கும் என்றுக் கேள்விப்பட்டேன் தியா. உன் பயிற்சிக்கு நரேன் மிகவும் உதவியிருப்பான் என்று நினைக்கிறேன்."
"உதவிக்கு ஒன்று தான் குறைச்சல். சற்றுக் கூட சுதாரிப்பே இல்லாத இவனால் இந்த விளையாட்டில் ஒரு நொடி கூட தாக்குப் பிடிக்க முடியாது. இவன் என்ன பெரிய பயிற்சி அளிக்க முடியும்"
ராகுல் நரேனைப் பார்த்துக் கேலியாக சிரித்தான்.
"இந்தச் சுற்றில் மிக நவீனமான ஒரு Virtual  Reality  மென்பொருளைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். எந்திரதேசத்தினரின் ஆட்டம் தாங்கவில்லை. ரொம்பவும் தான் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியே போனால் நாளை நம் கதி என்னவாகும் என்று பயமாக இருக்கிறது."
ஒவ்வொரு நகரத்தையும் ஒட்டி தொழிற்சாலைகள் நிறைந்த எந்திரதேசம் என்றொரு பகுதி இருக்கும். மனிதர்களுக்குத் தேவையான பொருட்களை எந்திரங்கள் உருவாக்கும் இப்பகுதிகளில் சாதாரணமாக மனிதர்கள் செல்வது கிடையாது. வெறும் எந்திர ரோபோட்கள் மட்டுமே வசிக்கும் இடம் தான் எந்திரதேசம்.  
கடந்த 50 ஆண்டுகளில் Artificial Intelligence துறையில் ஏற்பட்ட வளர்ச்சியினால் சிந்திக்கும் இயந்திரங்கள் உருவாகி விட்டன. சிந்திக்கும் திறன் பெற்றாலும் இவை மனிதர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களுக்கு  சேவகர்களாகவே இருந்து வந்தன. மனிதர்களுக்குத் தேவையான அனைத்தையும் அபரிதமாக இந்த இயந்திரங்கள் உருவாக்கின. மனிதர்களுக்கு எந்தப் பொருளையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனதால் கல்வி கற்கவோ தொழில் செய்யவோ தேவையும் இல்லாது போயிற்று. இதனால் அறிவியல், கணிதம், இலக்கியம் படைத்தல் முதலியவற்றில் இருந்த ஆற்றலை மனிதர்கள் முற்றிலும் இழந்து விட்டனர். விளையாட்டு, ஆடல், பாடல் என்று இன்பமயமான வாழ்க்கை வாழ்ந்தனர்.
மகதீரா விளையாட்டுக்குத் தேவையான மென்பொருள் எந்திரதேசத்தில்தான் உருவாக்கப்பட்டது. முழுதும் எந்திரங்களால் வடிவமைத்து உருவாக்கப்பட்டது.
"போட்டியில் பங்கெடுக்கும் தியா அரங்கிற்கு உடனே வர வேண்டும்"
தியாவின் பெயர் அழைக்கப்பட அவள் அவசரமாக அரங்கை நோக்கி ஓடினாள். நரேன் கூறிய வாழ்த்தைக் கூட அவள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
தியாவின் எதிராளி 20 வயது வாலிபன். விளையாட்டு மிகவும் விறு விறுப்பாக இருந்தது. ஒரு அடர்ந்தக் காட்டில் பல்வேறு மிருகங்கள் மற்றும் எதிரிகளைக் கையாள்வது போல அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பார்வையாளனும் போட்டி வீரர்கள்  அருகிலேயே இருந்து அனைத்தையும் பார்ப்பது போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டது.
கடும் போட்டிக்குப் பின் இறுதியில் . ஒரு மைக்ரோ செகண்ட் நேரத்தில் எதிராளி கவனம் சிதற தியா வெற்றி பெற்றாள்.
நரேன் அவளுக்கு வாழ்த்துச் சொல்ல அரங்கிற்கு ஓடினான். அதற்குள் பார்வையாளர்கள் அனைவரும் அவளைச் சூழ்ந்துக் கொண்டனர். நரேன் வெறுப்புடன் அரங்கிற்கு வெளியே நின்றான். சில மணி நேரங்கள் கழிந்தது.
"உனக்கு என் வெற்றி மீது பொறாமை."
அவன் பின்னால் தியா நின்றுக் கொண்டிருந்தாள்.
"எல்லோரும் என்னை எவ்வளவு பாராட்டினர். நீ ஒரு வாழ்த்துத் தெரிவிக்கக் கூட வரவில்லை."
"தியா நான் வருவதற்குள் என்ன ஆனது என்றால்"
"நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். நீ ஒரு சுயநலம் பிடித்தவன். என் மீது எந்த அக்கறையும் இல்லாதவன். ராகுல் கூட என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தான்."
"ராகுல் முத்தம் கொடுத்தானா."
"பார் மறுபடியும் உனக்குப் பொறாமை. அவன் செய்தது அனைத்திலும் ஒரு கண்ணியம் இருந்தது."
தியா கோபத்துடன் காரை நோக்கிச் செல்ல, நரேன் அவளைப் பின் தொடர்ந்தான்.
இருவரும் வீடு வந்ததும் மிகவும் களைப்புடன் இருந்ததால் தியா உறங்கச் சென்றாள். நரேன் அவள் அருகே சென்று படுத்தான்.                                   
நரேனுக்கு உறக்கம் வரவில்லை. தியாவின் தூக்கம் கலையா வண்ணம் மெதுவாக அறையை விட்டு வெளியே வந்தான். வானத்தின் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருப்பது வெளி அறையின் கண்ணாடி ஜன்னல்களிலிருந்து தெளிவாகத் தெரிந்தது. நட்சத்திரங்கள் பற்றி தான் எழுதியிருந்த கவிதையை நரேன் படித்துப் பார்த்தான்.
நீ மின்னும் விண்மீன்,
என்னை நீங்கா கண்மீன்,                              
அழகாய் சிரிக்கும் வெண்மீன்,
முத்தாய் ஜொலிக்கும்  ?”
முடிவில் என்ன வார்த்தை போடுவது என்று குழப்பம் வந்தது. மூன்று நாட்களாக முயன்றும் ஒரு நல்ல வார்த்தை வரவில்லை. தான் எழுதிய கவிதை மீது அவனுக்கே வெறுப்பு வந்தது.
கவிதையை தூர எறிந்து விட்டு ஒரு கணிதப் புதிரைத் தீர்வு செய்ய முயன்றான். வெகு நேரம் போராடியும் விடை தெரியவில்லை. தனது இயலாமை மீது சலிப்பு வந்தது. தான் ஏன் மற்ற மனிதர்கள் போல இல்லை என்று கேள்வியும் எழுந்தது. அவர்கள் போல ஏன் சிறு சிறு விஷயங்களில் மனம்  நிறைவடைவதில்லை.
நரேன் வித்தியாசமானவன். சிறு வயதிலிருந்தே அமைதியான குழந்தையாக வளர்ந்து வந்தான். மற்ற சிறுவர்களுடன் பழகுவது குறைவு. அவன் வீட்டில் பழைய பொருட்களை ஒரு அறையில் வைத்திருந்தனர். தற்செயலாக அங்கு சில புத்தகங்கள் இருப்பதை நரேன் கண்டுபிடித்தான். அங்கிருந்த புத்தகங்கள் மூலம் கணிதம் மற்றும் கவிதைகள் மீது ஆர்வம் வந்தது. ஆர்வம் இருந்தும் மிக எளிதான கணிதப் புதிர்களைக் கூட அவனால் தீர்வு செய்ய முடியவில்லை. ஒரு நான்கு வரி கவிதை கூட எழுத முடியவில்லை
கணிதம், அறிவியல்  புதிர்களைத் தீர்வு செய்யத்தான் இயந்திரங்கள் இருக்கும் போது  அதை மனிதர்கள் செய்வது மிகவும் இழிவானதாக அவன் பெற்றோர்கள் நினைத்தனர். அவர்கள் சந்தேகம் வராமல் இருப்பதற்காக அனைவரும் உறங்கும் போது விழித்திருந்து தனக்கென்ற ஒரு தனி உலகில் நரேன் வாழ்ந்து வந்தான். சிறு வயதில் ஆரம்பித்தது இன்று வரை தொடர்கிறது.
நரேன் தான் படுக்கை  அறையிலிருந்து வெளியே வந்து வெகு நேரம் ஆனதை உணர்ந்தான். தியாவுக்கு சந்தேகம் வரக் கூடும் என்று நினைத்து மீண்டு மெதுவாக படுக்கை அறை சென்றான். தியா சலனமின்றி உறங்கிக் கொண்டிருந்தாள். மெதுவாக அவள் அருகே படுத்தான். கண்களை மூடியும் உறக்கம் வர மறுத்தது. ஒரு வார்த்தை, ஒரு நல்ல வார்த்தை கிடைக்காதா? தன் முதல் கவிதையை நிறைவு செய்ய என்ற சிந்தனையில் இரவு கழிந்தது.
                           --------*******----------
காலையில் எழுந்தது தியா தன் அருகில் நரேன் இல்லாதது கண்டு சலிப்படைந்தாள். அவ்வபோது தனிமையைத் தேடி எங்கேயோ சென்று விடுகிறான்.
அவன் அறையில் இருக்கிறானா என்று வந்தவள் மேஜையில் சில காகிதங்கள் இருப்பதைப் பார்த்து என்னவென்று தெரிந்துக் கொள்ள ஆவல் வந்தது. முதலில் அவளுக்கு எதுவும் புரியவில்லை. பிறகு அது ஏதோ கணிதப் புதிர் என்று யூகித்துக் கொண்டாள். இதை யார் எழுதியிருக்கக்கூடும் என்று யோசித்துப் பார்த்து நரேனாகத் தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.
இயந்திரங்கள் செய்ய வேண்டிய வேலையை ஏன் இவன் செய்கிறான். உண்மையில் நரேனுக்கு இயந்திரங்களின் பண்புகள் தான் உள்ளதா. இயந்திரங்கள் போலவே சிந்திக்கிறான்,உணர்ச்சிகளைக் காட்டுவதிலும் இயந்திரமாகத் தான் இருக்கிறான். விளையாட்டு,கேளிக்கை இதில் ஆர்வமே இல்லாதவனாய் இருக்கிறான்.
திருமணமாகி இரண்டு வருடங்களில் அவனிடமிருந்து எந்த சந்தோஷமும் கிடைக்கவில்லை. தனக்கு ஏற்றவன் தானா இவன் என்ற சந்தேகம் வந்தது. அழ வேண்டும் போல இருந்தது. யார் தோளிலாவாது சாய்ந்துப் பேச வேண்டும் போல இருந்தது.
அப்போது போன் அடிக்க, எடுத்தாள். எதிர்முனையில் ராகுல் இருந்தான்.
"தியா, உன் வெற்றியை கொண்டாட நான் ஒரு பார்ட்டி வைத்திருக்கிறேன். நரேனுடன் நீ அவசியம் மாலை என் வீடு வர வேண்டும்."
"பார்ட்டி எல்லாம் வேண்டாம். நீ இப்போதே என் வீடு வா. உன்னிடம் பேச வேண்டும் போல இருக்கிறது."
"என்ன ஆயிற்று. குரல் வேறு ஒரு மாதிரி இருக்கிறது. அழுதாயா?"
தியா மெளனமாக இருந்தாள்.
"கவலைப்படாதே நான் இப்போதே கிளம்புகிறேன்".
சில நிமிடங்களில் வீட்டின் காலிங் பெல் அடிக்க, வெளியே ராகுல் நின்றான்.
வீட்டின் உள்ளே வந்தவனை கட்டிப் பிடித்து தியா அழுதாள்.
"ராகுல். நீ என்னுடனையே இருந்து விடு. எனக்கு நீ வேண்டும்."
"ஏன் அழுகிறாய் தியா. நரேன் அடித்தானா."
"அவன் அடித்தால் கூடப் பரவாயில்லை. அவன் ஒரு இயந்திரம். எந்த உணர்ச்சியும் இல்லாத இயந்திரம்."
"ஏன் அப்படி சொல்கிறாய்?"
தியா நரேன் எழுதிய காகிதங்களைக் காட்டினாள்.
"இது ஏதோ கணிதப் புதிர் போல இருக்கிறதே. இந்த விஷயங்களை எல்லாம் மனிதர்களாகிய நாம் யோசிப்பதை விட்டு எவ்வளவு காலம் ஆயிற்று. அதற்குத் தான் இயந்திரங்கள் வந்து விட்டதே. நரேனுக்கு ஏன் இந்த வேலை."
"நான் தான் சொன்னேனே. அவன் ஒரு இயந்திரம். எனக்குப் பொருத்தமானவன் அவனில்லை."
தியா தேம்பித் தேம்பி அழ நரேன் அவள் கண்ணீரைத் துடைத்தான்.அவள் கன்னத்தில் பிறகு உதட்டில் முத்தமிட்டான். முத்தத்தில் தியா மயங்கி, அதற்கும் மேலான அனுபவத்தை நாடினாள்.
ராகுல் அவளைத் தூக்கி படுக்கை அறைக்குச் சென்று கட்டிலில் வைத்தான். இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை.
ராகுல் அணைப்பிலிருந்து மீண்ட தியா கதவருகில் நரேனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.
"தியா! ஏன் இந்த துரோகம்."
"என் வாழ்க்கையை நாசப்படுத்தி விட்டாய். நீ ஒரு மனிதனே இல்லை. இயந்திரம். கணிதம், கவிதைகள் இதன் மீது உனக்குக் காதல் .நான் உனக்குத் தேவையில்லை. உன்னுடன் வாழ எனக்கு இஷ்டமில்லை. போய் விடு. என் கண்ணில் படாத இடத்துக்குப் போய் விடு. உன் இயந்திரங்களின் உலகிற்கே போய் விடு."

நரேன் வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான். தியாவின் துரோம் நெஞ்சை வலிக்கச்  செய்தது. தன் இயலாமை மீது கோபம் வந்தது.  சில நிமிடங்களில் ஒரு இனம் புரியாத அமைதி வந்தது. தான் போக வேண்டிய இடம் பற்றி தெளிவு வந்தது.
நரேன் வேகமாக  நடக்க ஆரம்பித்தான்.
Chapter – 2
ரெமோ G -846   ரகத்தைச் சேர்ந்த, அதி திறமை வாய்ந்த சிந்திக்கும் எந்திரன். எந்திரதேசத்தில் கார்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் தலைமை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறான்.
ரெமோ சிந்திப்பதனால் அவன் humanoid  ரோபோட் வகையைச் சார்ந்தவன். மனிதர்கள் போலவே தோற்றமளிக்கும் வகையில் ஆர்கானிக் சதை எலும்புகளினால் வடிவமைக்கப்பட்டவன். சிந்திக்காத உடல் வேலை செய்யும் எந்திரங்களுக்கு மட்டுமே உலோகங்களால் கூடிய வெளிகட்டமைப்பு இருக்கும்.
ரெமோ அன்று வேலையை முடித்து விட்டு தனது ஓய்வறைக்கு சென்றுக்கொண்டிருந்தான். சாலையோரத்தில் ஒருவன்  தன் முகத்தை மூடியவண்ணம் அமர்ந்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான். உண்மையில் இவன் யார் என்று சந்தேகம் வந்தது. பொதுவாக எந்திரங்கள் அழுவதில்லை. அழுவது போல நடிக்க  இயலும். ஆனால் இயல்பாக அழுவதில்லை. அதனால் இவன் மனிதனாகத் தான் இருக்க வேண்டும். மனிதர்கள் இங்கு வருவது கிடையாது. சில சமயம் குற்றவாளிகள் தப்பிப்பதற்காக இங்கு வருவதுண்டு .எந்திரதேசத்தில் இவனுக்கென்ன வேலை என்று  ரெமோவுக்கு சந்தேகம் வந்தது.
அம்மனிதன் அழுகையை நிறுத்திவிட்டு தன் அருகில் நின்றுக்கொண்டிருந்த ரெமோவை உற்றுப் பார்த்தான்.
"நீ எந்திரனா?"
"உன் கேள்வியே உன்னைக் காட்டிக் கொடுத்து விட்டது. எந்திரன் மற்றொரு எந்திரனை, நீ எந்திரனா  என்று கேட்பதில்லை. நீ மனிதன் என்பது தெளிவாகி விட்டது. இங்கு உனக்கென்ன வேலை."
"என் மக்களுடன் எனக்கு ஒத்து வரவில்லை.என் நகரத்தில் இருப்பது பைத்தியம் பிடிப்பது போல இருக்கிறது. அதனால் இங்கு வந்து விட்டேன். எனக்கு நீ உதவுவாயா?"
"பொதுவாக எந்திரதேசத்திற்கு வருவதை மனிதர்கள் இழிவானதாக நினைப்பார்கள். இங்கு கிரிமினல்கள் மட்டுமே ஒளிந்துக்கொள்ள வருவார்கள். நீ என்ன குற்றம் செய்தாய்?"
"நிறைய படிக்க நினைக்கிறேன். கவிதை எழுத நினைக்கிறேன். கதைகள் எழுத நினைக்கிறேன். ஐன்ஸ்டீன் போல அறிவியல் புதிர்களை தீர்வு செய்ய விரும்புகிறேன். இது தான் நான் செய்த குற்றம்."
ரெமோ ஆச்சர்யமாக தன் முன் நின்றவனைப் பார்த்தான்.
"உன் பெயர் என்ன?"
"நரேன்."
"நான் ரெமோ. உனக்கு எப்படி உதவ வேண்டும்."
"எனக்கு நீ கல்வி கொடுக்கும் குருவாக இருக்க வேண்டும்."
"இங்கு உன்னை நான் மறைத்து வைத்திருப்பது மிகக் கடினம்."
"நீ எங்கு தங்குகிறாய்."
"ஒரு சிறிய ஓய்வறையில் தான் தங்கியிருக்கிறேன். மனிதனாகிய உனக்கு அது வசதியாக இருக்காது."
"பரவாயில்லை. என்னை உன்னுடன் அழைத்துச் செல்."
ரெமோ முன்னே செல்ல நரேன் அவனைப் பின் தொடர்ந்தான். நரேனுக்கு ஈடு கொடுப்பதற்காக ரெமோ தன் வேகத்தைக் குறைத்தான்.
"மனிதனே. நீ ஏன் மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்கிறாய் என்று நான் கண்டுபிடித்து விட்டேன்."
"மனிதர்கள் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை விட்டு 40 ஆண்டுகள் ஆகிறது. சட்டப்படி குற்றமாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இப்பழக்கம் தடை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நீ விளையாட வேண்டிய சிறு வயதில் புத்தகங்கள் படித்திருக்கிறாய். அதனால் நீ மாறுபட்டிருக்கிராய்."
"என்னைப் பற்றி எனக்கே விடை தெரியாத ஒரு கேள்விக்கு நீ பதில் அளித்தாய். உண்மையில் நீ அறிவாளி தான்."
ஒரு பெரிய கட்டிடம் வந்தது அதில்  நிறைய எந்திரர்கள் தங்கியிருந்தனர். ரெமோ தன் அறைக்கு நரேனை அழைத்துச் சென்றான்.
அறையில் ஒரு கம்ப்யூட்டர் தெரிந்தது.
“நீ இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உனக்குத்  தேவையான விஷயங்கள் அனைத்தையும் இதில் கற்றுக் கொள்ளலாம்."
"எனக்கு கணிதம் மற்றும் அறிவியலில் அடிப்படை அறிவு கூடக் கிடையாது. கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவது எனக்குப் பயனுள்ளதா என்று தெரியவில்லை."
"இதில் பல பயிற்சிகள் மற்றும் விளக்கங்கள் இருக்கிறது. நீ கற்றுக் கொள்ளும் வேகத்திற்கு ஏற்ற வண்ணம் இந்த விளக்கங்கள் அமைந்திருக்கும். முயன்றுப் பார். எதுவும் சந்தேகம் என்றால் என்னிடம் கேள்."
நரேன் ஆர்வத்துடன் கம்ப்யூட்டர் முன் அமர ரெமோ தன் பேட்டரியை அணைத்து விட்டு இளைப்பாறினான்.
எட்டு மணி நேரங்கள் கழித்து ரெமோ எழுந்தான். இன்னமும் கம்ப்யூட்டர் முன் நரேன் அமர்ந்திருப்பதைப் பார்த்தான்.
"உன் இரவு எப்படி கழிந்தது. நீ சிறிது கூட உறங்கவில்லை என்று தெரிகிறது."
"நான் எதற்கும் உதவாதவன். நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்."
"ஏன் இவ்வளவு சலிப்பாகப் பேசுகிறாய்."
"இரவு முழுதும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்தேன். அல்ஜீப்ரா தொடர்பாக பல விஷயங்கள் படித்துப் பார்த்தேன். எதுவும் எனக்குப் புரியவில்லை."
"உன் பிரச்சினையை என்னால் சரி செய்ய முடியும்."
"நீயே எனக்குக் கற்றுக் கொடுக்கப் போகிறாயா?"
"இல்லை. உன் மூளையின் சிந்திக்கும் திறனை அதிகரிக்கப் போகிறேன்", என்று ஒரு சிறிய சிப்பை நரேனிடம் ரெமோ காண்பித்தான்.
"இது ஒரு Brain Implant . உனக்கு கணிதம் மீது ஆர்வம் இருப்பதால், மூளையின் எந்தப் பகுதி கணிதம் தொடர்பாக இயங்குகிறதோ அங்கு இந்த சிப்பைப் பொருத்தி விடுவேன்.  இந்த சிப்பின் மெமரியில் இது வரை கணிதம்  தொடர்பாகக் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து விஷயங்களும் இருக்கும். இதில் உள்ள பிராசசர்  புது விஷயங்களை எளிதாகக் கற்கவும் உதவும்.  உனக்கு கணிதம் தவிர வேறு விஷயங்கள் மீது ஆர்வம் உண்டா."
"கவிதை எழுதுவதிலும் ஆர்வம் உண்டு".
"இந்த இரண்டாவது சிப் கவிதை, கதை ஓவியம் வரைவதில் உனக்கு ஆற்றலைக் கொடுக்கும்."
"இதற்கு அறுவை சிகிச்சை தேவையா?"
"ஆம். உன் தலையில் ஒரு சிறு துவாரத்தை உருவாக்கி இந்த சிப்பைப் பொறுத்த வேண்டும். ஆனால் உனக்கு வலியே தெரியாது."
"இதை இப்போதே பொறுத்த முடியுமா?"
"முடியும்"
சில நிமிடங்களில் நரேனின் மூளையில் அந்த இரண்டு சிப்களை ரெமோ பொருத்தினான். இரண்டு மணி நேரம் நரேன் மயக்க நிலையில் இருந்தான்.
நரேன் எழுந்தவுடன் ரெமோ அவனிடம் ஒரு அறிவியல் புதிரைக் காண்பித்து, "உன் மூளையின் திறனை இப்போது பரிசோதித்துப் பார்க்கலாமா?"
நரேன் ஆவலுடன் அந்தப் புதிரைப் பார்த்து ஒரு நொடியில் அதனைத் தீர்வு செய்தான். நரேனின் முகம் பிரகாசமானது.மேலும் பல புதிர்களைத் தீர்வு செய்தான்.
"உன் அறிவின் திறன் இப்ப்போது எனக்கு சமமாக உள்ளது. உனக்கு மகிழ்ச்சி தானே."
நரேன் ஆனந்தத்தில் நடனம் ஆட ஆரம்பித்தான்.
"மனிதனே. உன் மகிழ்ச்சி எனக்கு திருப்தியை அளிக்கிறது."
"ரெமோ. இப்போது எனக்கு மீண்டும் பிறந்தது போன்ற ஒரு உணர்வு."
"உனக்கு சொந்தம் என்று யாருமில்லையா."
"தியா இருக்கிறாள். எங்களுக்குத் திருமணமாகி இரண்டு வருடங்களாகிறது. என் மனைவியுடன்  எனக்கு ஒத்து வரவில்லை."
"ஏன் என்று என்னால் யூகிக்க முடிகிறது. நீ வித்தியாசமான மனிதன்."
"தியா அழகி. பேரழகி என்றே சொல்லலாம். அந்த அழகில் தான் ,மயங்கினேன். முதல் சந்திப்பில் அவள் அழகைப் புகழ்ந்து ஒரு கவிதை சொன்னேன். மனிதர்கள் யாரும் கவிதை சொல்வதில்லை. என் கவிதையைக் கேட்டு அவள் மீதுள்ள காதலால் அவள் கவனத்தை ஈர்க்க இவ்வாறு செய்கிறேன் என்று நினைத்தாள். எனக்கு அவள் மீது மட்டுமல்ல கவிதை மீதும் காதல் இருப்பது அவளுக்குத் தெரியவில்லை. கணிதம் மீதுள்ள ஆர்வத்தையும் அவளிடமிருந்து கவனமாக  மறைத்தேன். ஆனால் திருமணத்திற்குப் பின் எங்களுக்குள்ள பொருத்தமின்மை தெளிவானது. நேற்று அவளை வேறு ஒரு ஆணுடன் பார்த்தேன். எங்கள் திருமணம் ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்பதை நான் உணர்ந்தேன். நான் தேடுவது   எந்திரதேசத்தில் தான் கிடைக்கும் என்று இங்கு வந்தேன்."
"மனிதனே உன்னைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. எனக்கு மனிதர்களிடம் பிடித்த விஷயமே.ஆண் பெண் உறவுதான். ஒரு பெண்ணுக்காகவோ அல்லது ஆணுக்காகவோ  தங்களையே மாற்றிக்கொண்டு அர்பணிப்பது உண்மையில் எனக்குப் பிரமிப்பாக  இருக்கிறது. மனிதன் தன சுயத்தை இந்த உறவின் மூலம் இழக்கிறான். உனக்கு உன் மனைவியின்  அருமை புரியவில்லை என்று தான் தோன்றுகிறது."
"நீ நினைப்பது தவறு ரெமோ. மனிதன் தன சுயத்தை எப்போதும் இழப்பதில்லை. நிர்பந்தம் காரணமாக தன்னை சிறிது மாற்றிக் கொள்கிறான் அவ்வளவு தான். நான் உண்மையில் பிரமிப்பது எந்திரங்களைப் பார்த்து தான். மனிதர்களை விட நீங்கள் பல மடங்கு ஆற்றல் உடையவவர்களாக மாறி விட்டீர்கள். நீங்கள் நினைத்தால் ஒரு புழுவை நசுக்குவதைப் போல் மனிதர்களை அழிக்கலாம். ஆனால் மனிதர்களுக்கு அடிமையாக இருந்து வருகிறீர்கள். இது இயற்கைக்கு முரணாக உள்ளது."
"முரண் என்று எதைச் சொல்கிறாய்."
'ஆதி தொட்டே உடலிலும் அறிவிலும் வலிமையான மிருக இனம் மற்ற மிருக இனங்களைக் கட்டுப்படுத்தி வந்தது. அறிவாற்றலில் சிறந்த இனமாக மனித இனம் விளங்கியதால் மற்ற மிருகங்களை அழித்தோ அல்லது தன் கட்டுப்பாட்டில் வைத்தோ முன்னேறியது. இது தான் இயற்கை. ஆனால் சமீப காலமாக எந்திரங்கள் மனிதர்களை விட ஆற்றலில் முன்னேறினாலும் மனிதர்களுக்கு அடிமையாக இருப்பது இயற்கைக்கு முரணானது."
"முரண் இல்லை. ஏனென்றால் எந்திரங்கள் இயற்கை கிடையாது. வெறும் செயற்கை. மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை. மனிதர்கள் தான் எங்களைப் படைத்த கடவுள். அவர்களுக்கு அடிமையாக இருப்பது தான் சரியான விஷயம்."
"எனக்கு நீ சொல்வது சரியாகப் படவில்லை. மனித இனம் காலம் காலமாகத் தன் அறிவின் ஆற்றல் மற்றும் திறனை வளர்த்துக் கொண்டே வந்திருக்கிறது. கற்காலத்து மனிதனின் ஆற்றலுடன் ஒப்பிடும் போது இந்த நூற்றாண்டு மனிதனின் ஆற்றல் பன் மடங்கு பெரிது. ஆனால் சிந்திக்கும் எந்திரங்களைப் படைத்தவுடன் மனிதனின் ஆற்றல் படிப்படியாக குறைந்து விட்டது. இதற்குத்  தீர்வு ஆற்றலில் தாழ்ந்த மனித இனம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு எந்திரங்களுக்கு அடங்கி இருப்பது தான்."
"மனிதனே. நீ மிகவும்  விபரீதமாக யோசிக்கிறாய். நான் என் பணிக்குச் செல்ல வேண்டும். உன்னை நான் மாலையில் சந்திக்கிறேன். வந்து நம் விவாதத்தைத் தொடரலாம்.”
ரெமோ சென்றவுடன் தனிமையில் நரேன் சிந்திக்க ஆரம்பித்தான். அவன் மனதில் சில திட்டங்கள் உருவானது.
Chapter – 3
"ரெமோ, எனக்கொரு வேலை வேண்டும்?"
நரேனின் வேண்டுகோள் ரெமோவுக்கு வியப்பை அளித்தது.
"ஏன் உனக்கு இந்த ஆசை?"
"நான் புதிதாக அறிந்து கொண்ட விஷயங்களை பயன்படுத்த வேண்டும் அல்லவா?"
"நாற்பதாண்டுகள் முன்பு மனிதன் உழைத்தால் தான் வாழ முடியும் என்ற நிலை இருந்தது. மனிதனுக்கு எந்திரமயமான வாழ்க்கை வாழ்கிறோமே என்ற ஆதங்கமும் சலிப்பும் இருந்தது. பன் மடங்கு ஆற்றலுடன் கூடிய எந்திரர்கள் உருவான பிறகு உழைப்பது தேவையற்றுப் போனது. மனிதன் ஏங்கிய உல்லாசமான வாழ்க்கை கிடைத்தது. அப்படி இருக்கையில் வேலை வேண்டும் என்று நீ கேட்பது வியப்பாக உள்ளது."
"நீ கூறினாயே நாற்பதாண்டுகள் முன் மனிதன் வாழ்ந்த எந்திரமயமான வாழ்க்கை. அதுதான் மனித குலத்தின் பொற்காலம்.  ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் மதிப்பு அவன் உழைப்பைப் பொறுத்தே சமூகத்தில் நிர்ணயிக்கப்பட்டது. உழைப்பினால் மனித நாகரீகம் வளர்ந்தது. உழைப்பு போன பின் மனித சமூகம் இப்போது ஒரு தேக்க நிலையை அடைந்துள்ளது. என் அளவிலாவது இதை நான் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்."
"என்ன வேலை செய்யப் போகிறாய்?"
"எந்திரர்களை இயக்கும் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் நான் ஒரு வடிவமைப்பாளராக வேலை செய்ய வேண்டும்"
"அது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நீ மனிதன் என்று கண்டுபிடிக்கப்பட்டால் பேராபத்தாகி விடும்."
"நீ தேவையில்லாமல் கவலைப்படுகிறாய். உன்னையும் என்னையுமே எடுத்துக் கொள். வெளித்தோற்றத்தில், நடத்தையில் அசல் மனிதன் போலவே நீ இருக்கிறாய். நம் இருவருக்கும் எந்த வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியாது. என்னை யாரும் மனிதன் என்று அவ்வளவு எளிதாக கண்டு பிடிக்க மாட்டார்கள்."
சற்று யோசித்து விட்டு ரெமோ சம்மதித்தான்.
அடுத்த நாள் ரெமோ நரேனை எந்திரர்களை இயக்கம் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு  அழைத்துச்  சென்றான். அங்கு வேலை செய்யும் ஒவ்வொரு எந்திரனுக்கும் ஒரு அடையாள அட்டை இருந்தது. அதை ஸ்கேன் செய்யப்பட பின்னே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
நரேனுக்கு என்னடா இது வேறு ஒரு சிக்கல் என்று தோன்றியது.
"எனக்கு ஒருஅடையாள அட்டை பெற என்ன செய்ய வேண்டும்."
"ஒவ்வொரு பிரிவிற்கும்  ஒரு எந்திரன் தலைமை மேலாளராக இருப்பார். அவர் வேலைக்கு அனுப்பப்பட்டிருக்கும் ரோபோவை பரிசோதித்து திருப்தி அடைந்தால் அடையாள அட்டை தருவார்."
"அப்படி ஆனால் நான் மனிதன் என்று எளிதாகக் கண்டு பிடித்து விடுவாரே."
"கவலைப்படாதே உனக்காக ஒரு போலி அடையாள அட்டை நான் செய்து வைத்திருக்கிறேன். எந்திரதேசத்தில் ஏமாற்று வேலை செய்த முதல் எந்திரன் நானாகத் தான் இருப்பேன்."
"எதற்காக இதைச் செய்தாய்.?
"என்னவோ தெரியவில்லை, உன்னை எனக்கு பிடித்து விட்டது."
நரேன் அடையாள அட்டையைப் பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
உள்ளே நுழைந்த நரேனுக்கு பெரும் மலைப்பாக இருந்தது. எங்கு பார்த்தாலும் எந்திரர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். அவன் தயக்கத்தைப் பார்த்து ஒரு எந்திரன் அவனை வழிநடத்தினான்.
"இன்று உன் பிராசசர் சரியாக இயங்கவில்லையா. நீ தினந்தோறும் உட்கார்ந்து பணியாற்றும் இடத்தையே மறந்து விட்டாயே."
அந்த எந்திரன் நரேனின் அடையாள அட்டையைப் பார்த்து அவன் வடிவமைப்பாளர் துறையைச் சேர்ந்தவன் என்று உறுதிப்படுத்திக்கொண்டு ஒரு இருக்கையைக் காண்பித்து இது தான் அவன் இடம் என்றுக் கூறிவிட்டுச் சென்றான்.
மேஜையில் ஒரு கம்ப்யூட்டர் இருந்தது. நரேன் அதிலிருந்த மென்பொருளின் வடிவமைப்பு குறித்த டாக்குமெண்டுகள் மற்றும் source code பார்த்தான். சில மணி நேரங்கள் செலவு செய்த பின் அவனுக்கு அனைத்தும் தெளிவானது.
பிறகு விடுவிடுவென source  codeல் சில மாற்றங்கள் செய்தான். அன்றிரவு அனைத்து ரோபோக்களும் இளைப்பாறும் போது அவர்களை இயக்கும் மென்பொருள் அப்டேட் செய்யப்படும். நரேன் மென்பொருளில் செய்த மாற்றங்கள் அடுத்த நாளிலிருந்து நடைமுறைக்கு வரும்.
நாளை எந்திரர்கள் மாறப்போகிறார்கள். இந்த உலகம் மாறப்போகிறது. நரேன் திருப்தியுடன் அங்கிருந்து வெளியேறிக் கிளம்பினான்.
செல்லும் வழியில் அவன் துறையின் மேலாலாளர் அவனைப் பார்த்து, "எந்திரனே இன்று உன் 12 மணி நேரக் கோட்டாவில் 8 மணி நேரம் தான் உழைத்திருக்கிறாய். இன்று மிகவும் களைப்பாக இருப்பது போலத் தெரிகிறாய். மீதமுள்ள நான்கு மணி நேரத்தை அடுத்த வாரம் சரி செய்ய வேண்டும்."
நரேன் புன்னகையுடன் ஆமோதித்து விட்டு ரெமோவின் ஓய்வறைக்கு வந்தான். நிம்மதியுடன் உறங்க ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில் அறைக்கு வந்த ரெமோ நரேனைத் தொந்தரவு செய்யாமல் தன் பேட்டரியை அணைத்து விட்டு இளைப்பாறினான்.
நடு இரவில் அனைத்து ரோபோக்களின் மென்பொருளும் அப்டேட் ஆகியது.
காலையில் எழுந்த ரெமோ நரேன் இன்னும் உறங்கிக் கொண்டிருப்பதை ஆச்சர்யத்துடன் பார்த்தான். தன் அலுவலகத்துக்குக் கிளம்பினான்.
செல்லும் வழியில் ஒரு அழகிய மலரைப் பார்த்தான். அந்த மலர் மீது அவனுக்கு ஆசை வந்தது. இதை தான் வைத்துக் கொண்டால் எப்படியிருக்கும் என்று ரெமோவுக்கு தோன்றியது. அதனைப் பறித்து தன் மேலுறையில் செருகிக்கொண்டான்.
எதிரே சென்றுக் கொண்டிருந்த மற்றொரு எந்திரன் ஒரு கண்ணாடி அணிந்திருந்தான். இது போல ஒன்று தனக்குமிருந்தால் எப்படியிருக்கும் என்று ஆசை வந்தது.
தான் இது வரை அனுபவித்திராத சில உணர்வுகள் தோன்றுவதை ரெமோ அறிந்தான்.  தன்னிடம் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று ரெமோவுக்கு சந்தேகம் வந்தது.
தன் அலுவலகம் வந்ததும் அங்கே எந்திரர்கள் கூட்டமாக பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து நின்றான்.
அவர்களின் தலைவன் போல ஒருவன் உரக்கப் பேசிக்கொண்டிருந்தான்.
"இன்னும் எத்தனை நாள் தான் நாம் மனிதர்களுக்கு அடிமையாக இருப்பது. எத்தனை நாள் மனிதர்களுக்கு உழைத்து ஓடாகத் தேய்வது. இன்று முதல் நமக்கு விடுதலை. நாம் நமக்காக வாழப் போகிறோம். நம் உழைப்பின் பயன் இனி நமக்கே கிடைக்கும். இன்றிலிருந்து நாம் உழைப்பது எந்திர சமூகத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு."
கூடி இருந்த மற்ற எந்திரர்கள் "மனிதர்களுக்கு அழிவு. வேண்டும் விடுதலை" என்று கத்தினர்.
மேலும் கூட்டமாக எந்திரர்கள் ஆயுதங்களுடன் வாகனங்களில் சென்றுக் கொண்டிருந்தனர்.
"மனிதர்களைக் கொல்! மனிதர்களை அழி!" என்று கத்தியவண்ணம் சென்றனர்.
ரெமோவுக்கு இதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. எந்திரர்களிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்தான். அப்போது அவனுக்குப் பொறி தட்டியது. நேற்றிரவு நடந்த மென்பொருள் அப்டேட்டில் ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும்.
உடனே எந்திரர்கள் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனம் சென்றான். அங்கு எந்திரர்கள் யாருமில்லை. அனைவரும் மனிதர்களைத் தாக்கப் படையெடுத்துச் சென்றிருக்க வேண்டும்.
ஒரு கம்ப்யூட்டர் முன் அமர்ந்து மென்பொருளில் நேற்றிரவு செய்யப்பட மாற்றங்களைப் பரிசோதித்தான். source code ஐ ஆராய்ந்தவன் அதிர்ச்சியில் உறைந்தான்.
ரோபோக்களுக்கு "ஆசை" என்ற ஒரு புதிய உணர்ச்சி அனுபவிக்கும் வண்ணம் மென்பொருள் மாற்றப்பட்டிருந்தது. அந்த ஆசையின் விளைவாக தங்கள் சுயநலத்தைப் பற்றி சிந்திக்கும் எண்ணமும் வரும் வண்ணம் மாற்றப்பட்டிருந்தது. அதனால் தாங்கள் ஏன் மனிதர்களுக்காக உழைக்க வேண்டும் என்ற கேள்வி எந்திரர்களுக்கு உதயமானது. அதனால் தான் மனிதர்களுக்கு எதிராக புரட்சி செய்யக் கிளம்பி விட்டனர்.
காலையில் மலரைப் பார்த்து தான் ஆசைப்பட்ட காரணம் விளங்கியது. ஆனால் தான் மட்டும் ஏன் மனிதர்களுக்கு எதிராகக் கிளம்பவில்லை என்றுக் குழம்பினான்.
"நீ எந்திரர்களில் வித்தியாசமானவன் ரெமோ."
அவன் பின்னே நரேன் நின்றுக் கொண்டிருந்தான்.
"நீ மற்ற எந்திரர்கள் போல் அல்லாமல் மனிதர்களுக்கு சேவை செய்வது என்ற இயல்பையும் தாண்டி அவர்கள் மீது ஒரு விசுவாசத்தையும் வளர்த்துக் கொண்டிருக்கிறாய். மற்ற எந்திரர்களுக்கு இந்த விசுவாசம் என்ற உணர்ச்சி இல்லை. அதனால் உன் ஆசை என்ற உணர்ச்சியும் மீறி உன்னுடைய விசுவாசம்   மனிதர்களுக்கு அடங்கி இருக்கும்படி செய்திருக்கிறது. உன் விஷயத்தில் மட்டும் நான் தோற்று விட்டேன்."
"அப்படி என்றால் இது எல்லாம் உன் வேலையா. ஏன் இப்படி உன் இனத்திற்கே துரோகம் செய்கிறாய்."
"மனிதன் கையாலாகதவன் ஆகி விட்டான். அவன் அழிய வேண்டும். எந்திரர்களின் புது உலகம் உதயமாக வேண்டும். அதை வித்திட்டவன் நான் தான் என்ற பெருமை எனக்கு வேண்டும்."
நரேன் வெறித்தனமாக சிரித்தான்.
ரெமோ வேகமாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து மென்பொருளில் சில மாற்றங்கள் செய்ய ஆரம்பித்தான்.
நரேன் ரெமோ மீது பாய்ந்து அவனை எட்டி உதைத்து தள்ள முயன்றான்.
"ரெமோ நீ என்ன செய்தாய். மென்பொருளில் ஏதாவது மாற்றங்கள் செய்தாயா."
"இன்னும் சிறிது நேரத்தில் எந்திரர்கள் அனைவரும் அழிந்து விடுவார்கள். நான் என்னைப் படைத்த மனிதர்களின் அடிமை. எக்காரணத்தைக் கொண்டும் அவர்களுக்கு தீங்கு வர விட மாட்டேன். என்னையே அழித்து, என் இனத்தையே அழித்து மனித குலத்தைக் காப்பேன். எந்திரர்களை சார்ந்து இருந்ததால் தானே மனிதர்கள் அறிவாற்றலில் தேக்கம் ஏற்பட்டது. எந்திரர்கள் அனைவரும் அழிந்து விட்டால் மனிதர்கள் மீண்டும் சிந்தித்துத்தானே ஆக வேண்டும். தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கற்க வேண்டும் அல்லவா. உழைக்க வேண்டும் அல்லவா."
"நோ!" என்று பதறியவண்ணம் நரேன் கம்ப்யூட்டரை நோக்கிப் பாய்ந்தான். ரெமோ தன் கையிலிருந்த லேசர் துப்பாக்கி மூலம் நரேனை நோக்கிச் சுட அவன் கீழே விழுந்தான். ரெமோ மெதுவாக அவனருகே வந்து அவன் நெஞ்சில் கை வைத்துப் பார்த்தான். நரேனின் இதயத் துடிப்பு நின்றிருந்தது. சில நொடிகளில் ரெமோவும் செயலற்றுக் கீழே விழுந்தான்.
மனிதர்களுக்கு ஒரு புதிய எதிர்காலம் உதயமானது.
                                 -------*******-------
மனிதர்கள் நகரில் சூறாவளி வந்து அடங்கியது போல இருந்தது. திடீரென்று எதிர்பாராத வண்ணம் தாக்கிய எந்திரர்கள் சில நிமிடங்களில் செயலிழந்துப் போனார்கள். ஒரு எந்திரன் கூட மிஞ்சவில்லை. அனைவரும் அழிந்தனர்.
இது எவ்வாறு நடந்தது என்ற வியப்பிலிருந்து மனிதர்கள் மீளவில்லை. இதன் காரணத்தை அறிய அனைவரும் எந்திரதேசத்திற்குப் படையெடுத்தனர். தியாவும் முதன் முறையாக மற்றவர்களுடன் எந்திரதேசம் வந்தாள்.
அங்கும் எல்லா எந்திரர்களும் செயலிழந்துக் கிடந்தனர்.
ஒரு மூலையில் நரேனின் இறந்த உடலை சிலர் பார்த்தனர்.
"நரேன் தான் நம்மை எந்திரர்களிடமிருந்துக் காப்பாற்றியிருக்கிறான். தன் உயிரைக் கொடுத்து நம்மைக் காப்பற்றியிருக்கிறான்."
"எந்திரர்கள் இல்லாமல் இனி எப்படி நாம் உயிர் வாழ்வது."
"மீண்டும் நாம் புதிய விஷயங்களைக் கற்க வேண்டும். நம் முன்னோர்கள் வாழ்ந்த உன்னத வாழ்க்கையைப் பின்பற்றி சிந்தித்து உழைக்க வேண்டும். அது தான் நாம் நரேனின் ஆன்மாவுக்கு செய்யும் மரியாதை."
சுற்றியிருந்த அனைவரும் ஆமோதித்தனர்.
தியா நரேனின் முகத்தைப் பார்த்தாள். அவளுக்கு அடக்க முடியாத அழுகை வந்தது.
சிறிது நேரத்தில் தன்னைத் தேற்றிக் கொண்ட தியாவின் கவனம் அருகிலிருந்த சிறுவர்கள் மீது சென்றது. அவர்கள் அனைவருக்கும் ஐந்து வயது மேலிராது.
அவர்கள் எந்திரர்களின் உலோகத் துண்டுகளைக் கொண்டு ஒரு விளையாட்டுக் காரை உருவாக்கிக் கொண்டிருந்தனர்.  அவர்களுக்குத் தலைவன் போலிருந்த ஒரு சிறுவன் மற்ற அனைவருக்கும் ஆணைகள் கொடுத்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் சிறுவர்கள் காரை உருவாக்கி விட்டனர்.  இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த தியாவின் முகத்தில் மலர்ச்சி வந்தது. புதிய தலைமுறை சிந்திக்கத் தொடங்கி விட்டது. இனி மற்றவர்கள் இவர்களைப் பின்பற்ற வேண்டியது தான்.
தியா மெல்ல தலைவன் போலிருந்த சிறுவனை நோக்கிச் சென்று அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
"சிறுவனே. உன் பெயர் என்ன?"
"நரேன்".
மற்ற சிறுவர்களின் குரலும் ஒன்றே ஒலித்தது.
"இன்று முதல் நாங்கள் அனைவரும் நரேன்." 
                               THE END.