Tuesday, October 20, 2020

கடவுளின் குரல் - தமிழ் சிறுகதை

 

                                                     கடவுளின் குரல் 


                                                    வருடம் 1962  - திபெத்  


அது உறைய வைக்கும் டிசம்பர் மாத ஓரிரவு. இமய மலைச் சாரலை ஒட்டிய அப்பிரதேசத்தில் மென்பனி பொழிந்து கொண்டிருந்தது. பனித்தூறல் காற்றில் அலை போல மிதந்து  கொண்டிருந்தது. தரை எங்கும் பனிக்கம்பளம் விரிந்திருக்க, புற்களின் தளிர் பசுமை  ஆங்காங்கே தெரிந்தது. கரும் இரவில்  சுழல்காற்றின் சத்தம், இசையாய் ஒலித்துக் கொண்டிருந்தது.  இயற்கையின் விளையாட்டை சிறிதும்  பொருட்படுத்தாமல் மானசரோவர் ஏரிக்கு அருகே புத்த விகாரம் ஒன்று சலனமின்றி நின்றுக்கொண்டிருந்தது. 


விகாரத்தின் மையத்தில் பிரம்மாண்டமான பிரார்த்தனை மண்டபம் ஒன்று இருந்தது. அறைக்கு  நடுவே தியான நிலையில் புத்தர் சிலையாக அமர்ந்திருந்தார். சுவர்களில்  புத்தரின் வாழ்க்கை வரலாறு ஓவியங்களாக வரையப்பட்டிருந்தது. நள்ளிரவு ஆனதால் பிரார்த்தனை மண்டபத்தின்  விளக்குகளை இளம் பிட்சு ஒருவன் அணைத்துக் கொண்டிருந்தான்.  கடைசி விளக்கை அணைப்பதற்கு முன் அறையில் ஒருவர் இருப்பதை  உணர்ந்தான். அவர் வயது அறுபதைத் தாண்டியிருக்கும். அவரது கண்கள் இமைக்காமல் புத்தர் சிலையை நோக்கிய வண்ணம் இருந்தது. அக்கண்கள் அவர் மனம் புத்தர் மீது முழுதும் குவிந்திருப்பதை உணர்த்தியது. விழிப்பு நிலையில் அவர் மனதில்  தியானம் நிகழ்ந்து கொண்டிருந்தது 


வந்திருக்கும் நபர் இன்னும் வெகு நேரம் இருக்கக்கூடும் என்பதை உணர்ந்த இளம் பிட்சு கடைசி விளக்கை அணைக்காமல் சென்றான். மறு நாள் காலை திரும்பி வந்த போது அம்மனிதர் பிரார்த்தனை அறையிலேயே சுவோராமாய சாய்ந்து படுத்துக் கொண்டிருந்தார். அவரை எழுப்ப அருகே சென்றான். அப்போது அவர் முகத்தை தெளிவாகப் பார்த்தான். வெண்ணிறத் தாடி முகமெங்கும்  பரவியிருந்தது.  சலிப்பும், விரக்தியும் அம்முகம் உணர்த்தியது. அவன் வரும் சலனம் அறிந்து எழுந்தார்.


தன்னை கும்நாமி அறிமுகப்படுத்திக்கொண்டு, தான் சில மாதங்கள் விகாரத்தில் தங்க முடியுமா என்று கேட்டார்.  தனிமையை விரும்பியதால், மற்றவர் நடமாட்டமில்லாத ஒதுக்குப்புறத்தில் இருந்த அறையை தேர்வு செய்தார்.


கும்நாமி விடியற்காலையிலேயே அறையை விட்டு சென்று விடுவார். நாள் முழுதும் மலைகளில்  நடமாடுவார். இடையர்கள் துணைக் கொண்டு,  "யாக்" எனப்படும் காட்டு எருமைகள் மீதேறி பனி மலையின் பல ரகசியப்பகுதிகளை அவர் கண்டடைந்தார். பனிப்பாறைகளிலிருந்து பீறிட்டு வருண் சுனைகள் , செங்குத்தாக நிற்கும் சரிவுகள் , அவ்வப்போது கண்களில் தென்படும் பறவைகள், மான்கள் மற்றும் பணிக்கரடிகள் - இவை எல்லாம் இயற்கை முன் மனிதன் எவ்வளவு சிறியவன் என்பதை அவருக்கு உணர்த்தியது. அப்போதெல்லாம் தன் மனதில் இருக்கும் பாரம் எவ்வளவு அற்பமானது என்பது தெளிவானது. அத்தெளிவு மிகச் சில மணி நேரங்கள் தான். இரவில் கண் மூடும் தருணம் அவர் உள்ளிருக்கும் பேய்கள் மீண்டும் முழித்து நர்த்தனமாடும்.


சில நாட்கள்  மானசரோவர் ஏரியின் முன் அமர்ந்து விடுவார். ஏரியின் பரிசுத்த நீர் தன் ஆழத்தை அவருக்கு உணர்த்தும். நீரின் புனிதத் தன்மையால்  தன் மனதின் உள்ளிருந்த விரக்தியும், கோபமும் மெல்ல கரைவதை கும்நாமி உணர்வார்.  கதிரவனின் காலை எழுகை முதல் மாலையில் அதன் மறைவு வரை விண்ணில் நிகழும் மாற்றங்களை ஏரி பல வண்ணக் கலவைகளாக மாறி மாறி  பிரதிபலிப்பதை கும்நாமி பல மணி நேரங்கள் பார்த்துக் கொண்டிருப்பார். 


ஏரிக்கு சற்று அருகே இருந்த கைலாச மலை நோக்கி நடந்தார். சில நிமிடங்களில் அவர் மலையடிவாரத்தை அடைந்தார். முக்கோண வடிவிலிருந்த மலை வெண்பனியால் மூடியிருந்தது. அங்கங்கே பாறையின் கரும் நிறத்திட்டுக்கள் தெரிந்தது. மலையின் உச்சி மேகங்களால் சூழப்பட்டிருந்தது.  சமீப காலங்களில் யாரும் இம்மலை மீது எறியதில்லை. பாவமே செய்யாத களங்கமில்லாத மனிதன் ஒருவனால் மட்டுமே இம்மலை மீது ஏற இயலும்.


கும்நாமி மலையை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவ்வதிசயம் நிகழ்ந்தது. வானத்தைக் கிழித்துக் கொண்டு ஆதவன் தோன்றினான். வானவில் வண்ணப் பூமாலை போன்று விண்ணில் தோன்றியது. மலை உச்சியிலிருந்த மேகங்கள் மறைந்தன. மலை முழுதும் பொன்னிறம் கொண்டு தகதகவென மின்னியது. கும்நாமி உடலெங்கும் பெரும் பரவசம் தோன்றியது. கண்ணீரால் அவர் முகம் நனைந்தது. பல நிமிடங்கள் அவர் உச்ச நிலையில் ஆழ்ந்திருந்தார். அவர் தன்னிலைக்கு திரும்பிய போது மலை மீண்டும் வெண்ணிறத்திற்கு  மாறியிருந்தது. 


கும்நாமி தன்னை முற்றிலும் வேறு மனிதனாக உணர்ந்தார். தன்னை அழுத்தும் எதிர்மறை சிந்தனைகள் இல்லை. ஒரு மாபெரும் நிகழ்வுக்கு மனம் தயார் நிலையில் இருந்தது. 


குளிர் காற்று அடிக்க ஆரம்பித்தது. கும்நாமி அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார். செல்லும் வழியில் சிறு குன்றின் மீது குகை ஒன்றைக் கண்டார். ஏதோ ஒரு அதிசய சக்தி அவரை அக்குகைக்குள் இழுத்தது. குகைப் பாதை வளைந்து நெளிந்து சென்றது. சிறிது தூரத்தில் விளக்கொளி அருகே தெரிந்தது. கும்நாமி அதை நோக்கி நடந்தார். அங்கே ஒரு யோகி தியானத்தில் ஆழ்ந்திருந்தார். கும்நாமி அவர் முன் அமர்ந்தார். பல மணி நேரங்கள் கடந்தது. இரவு சென்று விடியல் வந்தது. வெளியே பனிச் சூறாவளி அடிப்பதை கும்நாமி உணர்ந்தார். சூறாவளி அடங்க சில நாட்கள் ஆகும். அது வரை தான் குகையில் இருப்பது தான் உசிதம் என்று முடிவு செய்தார்.


எவ்வளவு நாட்கள் கழிந்தது என தெரியவில்லை. ஆழ்நிலை தியானத்திலிருந்த யோகியிடம் சிறு அசைவு கூட இல்லை.  அவரால் உந்தப்பட்டு கும்நாமியும் தியானம் பயில ஆரம்பித்தார். இரவு உறங்கியது போக மற்ற நேரங்களில் அவரும் தியானத்தில் இருந்தார். ஒரு நாள் உறக்கத்திலிருந்து கும்நாமி விருட்டென எழுந்தார். அவர் உடலெங்கும் நீரால் நனைந்திருந்தது. கையில் வாளியுடன் யோகி நின்று கொண்டிருந்தார்.  தன்னை பின் தொடர்ந்து வருமாறு சைகை செய்தார். வெளியே  பனி மழை அடங்கி இப்போது வெளிச்சம் தெரிந்தது. ஆகாயத்தில் சிறைப்பட்டிருந்த சூரியன் மெல்ல வெளி வர முயற்சித்தது.


யோகியின் நடை வேகத்திற்கு கும்நாமியால் ஈடு கொடுக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் ஒரு அருவியை அடைந்தனர். இருவரும் அங்கு குளித்தனர். யோகி ஒரு பாறை மீது அமர, கும்நாமி அவரருகே கீழே அமர்ந்தார்.


"எதைத் தேடி இங்கு வந்தாய்."


"எதையும் தேடாத மன நிலையைத் தேடி."


"அது உனக்கு இப்பிறவியில் கிட்டாது. நீ செயலாற்ற பிறந்தவன். அலை பாயும் மனம் உனது."


"இந்த வாழ்வில் என் செயல்கள் எல்லாம் வீணாகப் போனது. "


"உன் செயல்களை ஒரு கர்மயோகி மன நிலையில் ஆற்றவில்லை. தவறான முடிவுகள் எடுத்தாய். அதன் விளைவுகளை சந்தித்தாய்"


"என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்."


"18  ஆகஸ்ட் 1945. அன்று என்ன நடந்தது."


கும்நாமி அதிர்ச்சியில் உறைந்தார். அவர் உடலெங்கும் பெரும் நடுக்கம் ஏற்பட்டது.


"அன்று சுபாஷ் சந்திரபோஸாகிய நீ இறந்து, கும்நாமி பாபாவாக புது அவதாரம் எடுத்தாய். அன்றைய தினம் பற்றி சிறிது சொல்வாயா. விபத்துக்குள்ளான விமானத்தில் நீ உண்மையில் ஏறினாயா அல்லது இந்த உலகத்தை ஏமாற்ற நீ போட்ட நாடகமா."


"விமானத்தில் நான் ஏறவில்லை."


"அப்படியானால் உடைந்த விமானம், அதனருகிலிருந்த இறந்த உடல்கள்."


"பழுதான ஒரு போர் விமானத்தின் அருகில் ஏற்கனவே இறந்த வீரர்களை வைத்தோம்.”


"அதன் பிறகு என்ன நடந்தது."


"அடைக்கலம் தேடி ரஷ்யா சென்றேன். ஸ்டாலினை சந்தித்தேன். கம்யூனிசம், சோஷலிசம் மீது எனக்கு இருந்த நம்பிக்கையை சொன்னேன். என்னை அவருக்கு பிடித்திருந்தாலும் எனக்கு உதவுவதில்  தயக்கம் இருந்தது. இரண்டாம் உலகப் போரில் ரஷ்யாவுக்கு எதிராக போரிட்ட ஜெர்மனியை நான் ஆதரித்தது ஒரு காரணம். சில வருடங்கள் நான் மறைவாக இருப்பது  நல்லது என்று ஸ்டாலின் சொன்னார். எனக்கும் அது சரியாகப்பட்டது. என்னை செர்பியா  அழைத்துச் சென்றார்கள். எனக்கு சகல வசதியும் தந்து ஒரு இளவரசன் போல நடத்தினார்கள். ஸ்டாலின் இறந்த பிறகு என் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று அனுமதி அளித்தனர். தற்போது ஒரு நாடோடி வாழ்க்கை நடத்தி வருகிறேன்."


"நீ ஏன் உன் தாய் நாட்டிற்கு செல்லவில்லை. சுதந்திர இந்தியாவிற்கு உன் சேவையை அளிக்கவில்லை."


"நான் ஒரு போர் குற்றவாளி. மற்ற வல்லரசு நாடுகள் என்னை ஒப்படைக்குமாறு இந்திய அரசாங்கத்தை வற்புறுத்துவார்கள். நேருவுக்கு தலைவலி கொடுக்க நான் விரும்பவில்லை. மேலும் - “


கும்நாமி தான் சொல்ல வந்ததை தயக்கத்துடன்  நிறுத்தினார்.  யோகி அவரைத் தொடருமாறு சைகை செய்தார்.


“மேலும்,  ஒரு நன்றி கெட்ட நாட்டிற்கும், அதன் மக்கள் வசிக்கும் இடத்திற்கும் செல்ல நான் விரும்பவில்லை. என் தியாகத்திற்கு ஒரு மதிப்பும் இல்லை. காந்தி, நேரு, ஏன் இந்திய மக்கள் கூட என் மரணத்தை பெரும் நிம்மதியுடன் எதிர் கொண்டார்கள்".


"கழிவிரக்கம்.”


"நான் இறந்த சில மாதங்களிலேயே மக்கள் என்னை மறந்தனர். நான் ரஷ்யாவில் இருப்பது நேருவுக்கு தெரிந்தும் என்னை இந்தியாவிற்கு வரவழைக்க ஒரு முயற்சியும் செய்யவில்லை."


"கர்ணன் போல உன் சேர்க்கை சரியில்லை. அதனால் வீழ்ந்தாய்.”


"ஜெர்மானியர்கள், ஜப்பானியர்களை ஆதரித்தது குறித்தா சொல்கிறீர்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் ஆங்கிலேயர்கள் பொது எதிரி. எதிரிக்கு  எதிரி நண்பன் தானே. இதில் என்ன தவறு."


"உன் செயலில் அறம் இல்லை. பல கோடி மக்களின் மரணத்திற்கு காரணமான ஒரு தலைவனிடம் நீ உதவி கேட்டாய்."


"ஹிட்லர் மட்டும் தானா கோடிக்கணக்கான மக்களைக் கொன்றான். ஆங்கிலேயர் மட்டும் என்ன குறைச்சல். இந்தியாவில் கொடும் பஞ்சம் வந்த போது எங்கள் நாட்டு தானியங்களைத் திருடி ஆங்கிலேய  வீரர்களுக்கு சர்ச்சில் அளித்தான். கோடிக்கணக்கான இந்தியர் பசியில் இறந்தனர். அவனை என்னவென்று சொல்வீர்கள். ஒரு மதியூகி என்று தானே உலகம் கொண்டாடுகிறது."


"நீ சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆள்பவர்கள் எல்லோருமே கொலையாளிகள் தான். ஹிட்லர், சர்ச்சில், ஸ்டாலின், மாவோ, ரூஸ்வெல்ட், ட்ரூமன்  எல்லோரும் கொடூரமான குற்றவாளிகள். அனைவர் கையிலும் இரத்தக் கறை படிந்திருக்கிறது . ஆனால் இவர்கள் எல்லோரிடமிருந்து மாறுபட்டிருந்த ஒரு மனிதருக்கு துணையாக நீ நிற்கவில்லை."


"யாரைச் சொல்கிறீர்கள்."


"உன் தந்தையை. தேசப்பிதா என்று இந்த உலகிற்கு அறிவித்தாயே மோகன்தாஸ் கரமச்சந் காந்தி - அவர் பக்கம் அறம் இருந்தது, நீ அவரைப் பிரிந்ததுதான் உன் வீழ்ச்சிக்கு காரணம்."


"தேசப்பிதாவை விட்டு நன் விலகவில்லை. அவருக்கு நான் விசுவாசமாக இருந்தேன். அவர் என்னைக் கைவிட்டார். காங்கிரஸ் தலைமைப்பதவியை விட்டு என்னை அகற்ற தந்திரம் செய்தார். "


"அதற்கு என்ன  காரணம் என்று நினைக்கிறாய் ."


"கொள்கை பேதத்தினால் இருக்கலாம் "


"அவரைப் போன்று நீ அகிம்சையை  முழு மனதுடன் ஏற்கவில்லை என்பது தான் அவர் உன்னைக் கை விட்டதன் காரணம்."


"இன்றும் கூட எனக்கு அகிம்சை மீது நம்பிக்கை இல்லை."


"ஆனால் அது தான் சத்திய  தர்மம்."


"அது நடைமுறையில் எப்படி சாத்தியமாகும். ஆயுதத்துடன் வரும் ஒரு எதிரியை எப்படி எதிர்கொள்வது. அப்போது அகிம்சை எப்படி உதவும்."


"அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கண்டிப்பாக அகிம்சை முறை வெல்லும்.  உன் எஞ்சிய வாழ்க்கையில் நீயே அதை பரிசோதித்து பார்ப்பாய்."


யோகி அங்கிருந்து அகன்றார். அதன் பின் யோகியை கும்நாமி சந்திக்கவில்லை. பல நாட்கள்  யோகியைத் தேடி குகைக்கு சென்று பார்ப்பார்.  அவ்விடம் வெறுமையாக இருந்தது.


நாட்கள் கடந்தன. மாதங்கள் உருண்டோடின. பனிக்காலம் முடிந்து கோடை வெப்பம் தகித்தது. ஒவ்வொரு நாளும் கும்நாமி கைலாச மலை அடிவாரத்திற்கு வந்து தியானம் செய்வார். யோகியை சந்தித்த குகையிலும் சிறிது நேரம் அமர்ந்திருப்பார். 

நாளடைவில் அவர் மனக் கொந்தளிப்புகள் அடங்கி நிதானம் கூடியது.


போர் மேகங்கள் சூழ்ந்தன. இந்திய சீனப் போர் தொடங்கியது. அவ்விடத்தில்  ராணுவ வண்டிகள், வீரர்களின் நடமாட்டம் கூடியது. ஒரு நாள் குகையில் அவரை இரண்டு பேர் சந்தித்தனர். ஒருவர் - விக்ரம் போபட்,  மற்றவர் மனோகர் லால்.  தான் அங்கு வருவது அவர்களுக்கு எப்படி தெரியும் என்று கும்நாமி  துணுக்குற்றார். தான் யார், தன் பூர்வீகம் என்ன என்பெதல்லாம் அவர்கள் அறிந்திருந்தனர். தன்னை உளவாளிகள் மூலம் கண்காணித்திருப்பார்கள் என்று யூகித்தார்.


பரஸ்பர விசாரிப்பிற்கு பிறகு தங்கள் நோக்கத்தை தெரிவித்தனர்.


"இந்திய சீனப் போர்  அக்ஸாய் சின் நிலத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதோடு சீன அதிபர் மாவோ நிறுத்த மாட்டார். இந்தியாவின் அருணாச்சலம். சிக்கிம் மற்றும் மேகாலயா பிரதேசத்தையும் கைப்பற்ற வேண்டும் என்பது அவர் திட்டம். இப்போது நடக்கும் போர் எப்படியாவது நிறுத்தப்பட வேண்டும். "


"போரை எவ்வாறு நிறுத்துவீர்கள்."


"அதற்கு உங்கள் உதவி தேவை. மாவோவின் ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். அதற்கு முதலில் அவரை எப்படியாவது நெருங்க வேண்டும். அது எங்களால் இயலாது.  நீங்கள் பெருந்தலைவராக இருந்திருக்கிறீர்கள். கம்யூனிஸத்தின் மீது ஈடுபாடு உடையவர்.  உங்களை சந்திப்பதில்  மாவோவிற்கு ஆர்வம் இருக்கும். சந்திப்பின் போது இந்தியாவின் ராணுவ ரகசியங்கள் தொடர்பான சில போலி ஆவணங்கள்அவர் கையில் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் எங்கள் ஆட்கள் மாவோவைத் தொடர்ந்து சந்தித்து ரகசியங்களைப் பகிர்வதற்கு  அனுமதி பெறுங்கள். மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.” 


"அதன் பின் என்ன நடக்கும்."


"அது அப்போதைய சந்தர்ப்பங்களைப் பொறுத்தது." 


"உங்கள் திட்டம் என்னவென்று தெளிவாகக் கூற மறுக்கிறீர்கள். இதில் ஏதோ சூழ்ச்சி தெரிகிறது. உங்களை நான் எப்படி நம்ப இயலும். “


"தெளிவாக திட்டம் தீட்டி தாக்குவதற்கு நாங்கள் போர் வீரர்கள் அல்ல. உளவாளிகள். இது வேறு விதமான விளையாட்டு. நாம் காய் நகர்த்த, எதிராளி பதிலுக்கு தன் நகர்வைத் தேர்வு செய்ய என்று முடிவில்லாத விளையாட்டு. இந்த விளையாட்டில் நான் இறக்கலாம். நீங்கள் இறக்கலாம். மாவோ இறக்கலாம். எதுவும் உறுதியாக சொல்ல முடியாது.”


கும்நாமி அதிர்ச்சியில் உறைந்திருந்தார். 


"உங்கள் சம்மதத்தினால் பல லட்ச உயிர்களைக் காப்பீர்கள். யோசித்து நிதானமாக நாளை நீங்கள் முடிவு சொல்லலாம்.”


மேலும் அங்கிருப்பது உசிதமல்ல என்று கும்நாமிக்கு தோன்றியது. தன் வாழ்வில் இனி அரசியல் சூழ்ச்சிகளுக்கு  இடமில்லை. தான் யார் என்று பல பேருக்கு தெரிந்திருக்கிறது. அது இத்தனை நாள் தான் பேணிக் காத்த தனிமைக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் அன்றிரவே விகாரத்தை விட்டு வெளியேறினார். இந்திய எல்லைக்கு சென்று அங்கிருந்து தாய் நாட்டுக்குள் நுழைந்து விட வேண்டும் என்று முடிவு செய்தார். அவருடைய பயணத்திற்கு ஒரு ஜீப் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


காலையில் தொடங்கிய பயணம் நீண்டு கொண்டே இருந்தது. இரவானது. எல்லைப் பகுதியை நெருங்க நெருங்க சீன ராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரித்தது.  சில இடங்களில் ஜீப்பை நிறுத்தி விசாரித்து அனுப்பினார். ஓரிடத்தில் சீன  வீரன் சந்தேகம் கொண்டதால் சோதனை செய்யப்பட்டது. சோதனையில் ஜீப் டிரைவர் ஆயுதங்கள் வைத்திருந்தது   கண்டுபிடிக்கப்பட்டது.  வண்டியிலிருந்த அனைவரும் சிறை செய்யப்பட்டு சீனர்களின் ராணுவ முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அந்த முகாமில் சுமார் நூறு வீரர்கள் இருப்பார்கள். கைதிகள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு கட்டிடத்தில் கும்நாமி அடைக்கப்பட்டார். அவர் இருந்த அறையில் இன்னொரு மனிதன் இருந்தான். அவன் முகத்தைப் பார்த்ததும் கும்நாமி அதிர்ச்சிக்கு உள்ளானார். திபெத்தில் சந்தித்த இந்திய உளவாளி விக்ரம் தான் அவன்.


கும்நாமியைப் பார்த்ததும் விக்ரம் கோபத்தில் ஏசினான்.


"நீங்கள் மட்டும் சம்மதித்திருந்தால் இங்கு நாம் இருவரும் கைதியாக அடைபட்டிருக்க தேவையில்லை, இந்நேரம் பெய்ஜிங்கில் மாவோவை சந்தித்திருப்போம். மாவோ இறந்திருக்கக் கூடும். போர் நின்றிருக்கும். நான் எதிர்பார்த்தது சுபாஷ்சந்திர  போஸை. துணிச்சலான முடிவெடுத்த, கோடிக்கணக்கான இந்தியர்கள் மனதில் இடம் பெற்ற வீரனை. ஆனால் போஸ் இறந்து விட்டார். கும்நாமி என்ற கோழை  அந்த உருவத்தில் இருக்கிறான். நீங்கள் தோற்றவர் கும்நாமி. உங்கள் வாழ்க்கையே தோல்வியால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது."


அவன்  கத்தல் எதற்கும் கும்நாமி எதிர்வினை செய்யாமல் இருந்தார். ஆனால் விக்ரம் அவ்வப்போது கும்நாமியை கடிந்து கொண்டே இருந்தான்.


சீனர்கள் அளித்த உணவு விக்ரமுக்கு போதவில்லை. எப்போது அவன் அரைப் பசியிலேயே இருந்தான். அது மேலும் அவன் மன உளைச்சலை அதிகரித்தது.   இதை உணர்ந்த கும்நாமி தன் உணவை அவனுக்கு அளித்து வெறும் பழங்களை எடுத்துக் கொண்டார்.


நல்ல உணவு அருந்தியதும் விக்ரமின் மனநிலை மாறியது.


கும்நாமியுடன் சுமூகமாகப் பேச ஆரம்பித்தான்.


"இங்கு நாம் அடைப்பட்டிருக்க முடியாது. இங்கிருந்து தப்ப வேண்டும். திபெத்தில் உங்களை சந்தித்த போது என்னுடன் இருந்தானே, மனோகர்.  அவன் அருகில் ஒரு கிராமத்தில் தான் இருக்கிறான். நாம் இங்கிருப்பது தெரிந்தால் அவன் இந்திய ராணுவத்தினரின் துணையுடன் இந்த முகாமையே தரைமட்டமாக்க முடியும். அது தான் நம் விடுதலைக்கு ஒரே வழி. ஆனால் மனோகரைத் தொடர்புகொள்வது எப்படி என்று குழப்பமாக இருக்கிறது."


"இந்திய ராணுவத்தினரின் துணையை நாடினால் இரு பக்கமும் பலத்த உயிரிழப்பு நேரிடும்."


"ஆம். இங்கு என்ன கேளிக்கையா நடந்து கொண்டிருக்கிறது. நடப்பது போர். உயிரிழப்பு பற்றியெல்லாம் கவலைப்பட்டுக்  கொண்டிருக்க முடியாது." 


"வேறு வழியே இல்லையா'"


"இல்லை."


கும்நாமி நீண்ட சிந்தனையில் ஆழ்ந்தார். 


"என்னை சந்தித்த போது, மாவோவை ஏமாற்ற சில போலி ராணுவ ரகசியங்கள் இருப்பதாக கூறினாய். அது இப்போது உன்னிடம் இருக்கிறதா."


"இல்லை மனோகரிடம் உள்ளது."


"அதில் உள்ளவை உண்மையா. பொய்யா."


"இரண்டும் கலந்து. முதலில் உண்மையான ரகசியங்கள் கொடுப்போம். எதிரியின் நம்பிக்கையை  சம்பாதித்தவுடன் போலி ரகசியங்களையும் சேர்த்து கொடுப்போம்."


"என்னுடன் வா."


கும்நாமி முகாமின் உயர் ராணுவ அதிகாரியுடன் முக்கியமான ஒரு உரையாடல் நடத்த அனுமதி கேட்டார். அடுத்த நாள் சீன அதிகாரி ஒருவர் அறைக்கு வந்தார்.


"நாங்கள் இந்தப் போர் சூழலில் உங்களுக்கு உதவியாக இருக்க முடியும்.  இந்திய ராணுவத்தினரின் போர் திட்டங்கள் பற்றிய ரகசிய ஆவணங்கள் கொடுக்க முடியும். எங்கள் விடுதலைக்காக இதை செய்ய தயாராக இருக்கிறோம்."


சீன அதிகாரியின் முகத்தில் நம்பிக்கை தெரியவில்லை.


"இங்கு அருகில் ஒரு கிராமத்தில் எங்கள் ஆள் ஒருவன் இருக்கிறான். எங்கள் இருவரையும் அவனை சந்திக்க அனுமதி கொடுத்தால் இது சாத்தியப்படும். சந்தேகம் இருந்தால் உங்கள் வீரர்கள் எவ்வள்வு பேர் வேண்டுமானாலும் எங்களுடன் அனுப்புங்கள்."


"ஒரு ஆளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. நீங்கள் மட்டுமே போகலாம். விக்ரம் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இல்லை."


சீன அதிகாரி சென்றவுடன் விக்ரம் ஆனந்தத்துடன் கொண்டாடினான். 


"எப்படியாவது மனோகருக்கு நம் நிலவரத்தைக் கூறி விடுங்கள். 500  வீரர்களுடன் இங்கு திடீர் தாக்குதல் நடத்தினால் இந்தப் பதர்கள் அனைவரையும் மேலோகம் அனுப்பி விட முடியம்."


அடுத்த நாள் கும்நாமி சீன வீரர்களுடன் மனோகர் இருக்கும் கிராமத்தை அடைந்தனர். ஒரு பாழடைந்த வீட்டில் மனோகர் தங்கியிருந்தான். சீன வீரர்களளைக் கண்டதும் தப்பியோட நினைத்தான். எதிரி வீரர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர். கும்நாமி அவனுடன் இந்தியில் உரையாடினார்.


"பயப்படாதே, இவர்கள் உன்னை ஒன்றும் செய்ய மாட்டார்கள். நானும் விக்ரமும் இவர்களிடம் கைதியாக மாட்டிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தப்ப வேண்டும் என்றால் இந்திய போர் திட்டம் குறித்த ரகசியங்கள் நீ அளிக்க வேண்டும்.எக்காரணம் கொண்டும் எங்களை விடுவிக்க இந்திய ராணுவத்தினரின் துணையை நாடாதே."


அருகிலிருக்கும் சீனன் ஆங்கிலேயத்தில் பேசும்படி இருவரையும் கடிந்து கொண்டான்.


மனோகர் மறைமுகமாக கும்நாமி உணர்த்திய செய்தியை புரிந்து கொண்டான். ஒரு உறையை வீரர்களின் தலைவனிடம் அளித்தான்.


கும்நாமியும் சீன வீரர்களும் முகாமுக்கு திரும்பினர். தங்களை விடுவிக்கும் திட்டம் குறித்து மனோகரிடம் கும்நாமி ஏதாவது பேசினாரா என்று ஆவலுடன் விக்ரம் விசாரித்தான். விரைவில் உதவி கிடைக்கும் என்று கும்நாமி மழுப்பினார்.


ஒரு வாரமாக கும்நாமி - மனோகரின் சந்திப்பு நடந்தது. மனோகர் அளித்த ரகசியங்கள் சீனர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. அவர்களுக்கு கும்நாமி மீது நம்பிக்கை கூடியது.


அடுத்த சந்திப்பின் போது கும்நாமி  சீனர்களுக்கு தெரியாமல் மனோகரிடம் ஒரு கடிதத்தை கொடுத்தார். அதில் அடுத்த சந்திப்பின் போது அவன் என்னவிதமான ஆவணங்கள் தர வேண்டும் என்பது பற்றி குறிப்புகள் இருந்தது.   


அறைக்கு வந்ததும் கும்நாமின் இன்னும் இரண்டு நாட்களில் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் விக்ரமிடம் கூறினார்.


விக்ரம் ஒரு பெரும் தாக்குதல் நிகழும் என்று எண்ணிக் கொண்டிருந்தான்.


அடுத்த நாள் வழக்கம் போல மனோகரிடமிருந்து பெற்ற உறையை சீன அதிகாரியிடம் கும்நாமி அளித்தார்.


உறையைப்  பிரித்து அதில் உள்ள விபரங்களைப் பார்த்ததும் சீன அதிகாரியின் பதட்டம் கூடியது. உடனே மேலிடத்திற்கு தொடர்பு கொண்டு பேசினார். அன்று நாள் முழுதும் தொலைபேசியில் உரையாடியவண்ணம் இருந்தார்.


அன்றே இந்திய ரகசியங்கள் அடங்கிய உறை அதிபர் மாவோவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிலிருந்த ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை கவனத்துடன் பார்த்த  மாவோவின் முகம் இறுகியது.


இன்னும் சில நாட்களில் இந்திய அணுவெடிப்பு சோதனை செய்யவிருப்பதன் திட்டம் குறித்த எல்லா விபரங்களும் இருந்தன. ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் எல்லாம் கச்சிதமாக இருந்தன. பொய்யாக இருக்க வாய்ப்பே இல்லை.


சீனர்கள் அணுஆயுத சோதனையில் இன்னும் இரண்டு வருடங்கள் பின்தங்கியிருந்தனர். தற்போது அணுஆயுதப் போருக்கு சீனா  தயாராக இல்லை.


மாவோ உடனே இந்தியாவுடன் நடக்கும் போரை நிறுத்தும்படி ஆணையிட்டார்.


சீனர்களின் போர் நிறுத்தம் டெல்லியில் நேருவுக்கு தெரிவிக்கப்பட்டது. போரில் இந்தியாவின் தோல்விகளினால் துவண்டிருந்த நேருவிற்கு இது நிம்மதியை அளித்தது.


சீனர்கள் இந்த போரில் ஆக்கிரமித்தது அக்ஸாய் சின் என்ற பொட்டல் காடு நிலத்தை. இதனால் இந்தியாவிற்கு பெரும் இழப்பு எதுவும் இல்லை. மேகாலயா, சிக்கிம் மற்றும் அருணாச்சலம் போன்ற பகுதிகள் எல்லாம் இழக்க வேண்டியிருக்கும் என்று கவலை கொண்டியிருந்த நேருவிற்கு இந்த செய்தி  பெரும் வியப்பை அளித்தது. ஒன்றிற்கும் பயனில்லாத நிலத்திற்காக மாவோ ஏன் இந்த போரை நிகழ்த்தினார் என்று தன் ராணுவ அதிகாரிகளிடம் ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.


போர் நிறுத்தம் அறிவித்த பின் கும்நாமியும் விக்ரமும் விடுதலை செய்யப்பட்டனர். பெரும் தாக்குதல் ஒன்று நடக்கும்,  தன் சாகசத்தை வெளிப்படுத்தலாம் என்று நினைத்திருந்த விக்ரமிற்கு இது சற்று ஏமாற்றத்தை அளித்தது.


கும்நாமியை சீனர்கள் மரியாதையுடன் நடத்தினர். எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகக் கூறினார். எந்த தடங்கலும் இல்லாமல் தான் இந்தியா செல்வதற்கு உதவ வேண்டும் என்று கும்நாமி வேண்டினார். அதற்கான அனுமதி பத்திரங்கள் கும்நாமிக்கு கொடுக்கப்பட்டது.


விக்ரமைப் பிரியும் நேரம் வந்தது. 


"இங்கு என்ன நடக்கிறது. சீனர்கள் நம்மை எதற்காக விடுதலை செய்தார்கள். போர் கூட நின்று விட்டதாமே. அதற்கும் நீங்கள் தான் காரணம் என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. என்ன மாயம் செய்தீர்கள்."


"மனோகரிடம் கேட்டு தெரிந்துக்கொள்."


கும்நாமியின் முகத்தில் தெரிந்த மர்மப் புன்னகையை விக்ரம் கவனிக்க தவறவில்லை.  


சில நாட்கள் பயணத்திற்கு பின் கும்நாமி இந்திய எல்லையை அடைந்தார். எத்தனை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும்  தனக்கு வெகு பரிச்சயமான காட்சிகள், ஓசைகள் அனுபவிக்கிறோம் என்று அவர் மனம் கொண்டாடியது.  புத்துயிர்ச்சி  தரும் ஆனந்தம் அவரை ஆட்கொண்டது.


கல்கத்தா நகருக்கு செல்லும் ஒரு ரயில் வண்டியில் தன் பிரயாணத்தை தொடர்ந்தார். அவர் எதிர் இருக்கையில் காவி உடை அணிந்த சுவாமி ஒருவரும், கவலை தோய்ந்த முகத்துடன் ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தனர். இருவரும் தீவிர  உரையாடலில் இருந்தனர். கும்நாமி அதில் கவனம் கொள்ளாமல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். 


கடந்த நிகழ்வுகளை அவர் மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது. ஏனோ அவர் மனம் பாபுஜியை நினைத்தவண்ணம் இருந்தது. பாபுஜி இதை எவ்வாறு கையாண்டிருப்பார். உண்ணாவிரதம் இருந்திருப்பார். அது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்காது. தன் வழிமுறை காந்தியடிகளைக் காட்டிலும் சிறந்ததா. கும்நாமிக்கு தெளிவான பதில் இல்லை.


விக்ரம் கூறியபடி தான் மாவோவை கொலை செய்யும் திட்டத்திற்கு உடன்பட்டிருக்கலாம். அல்லது  சீனர்களிடம் சிறைப்பட்டிருக்கும்போது இந்திய ராணுவத்தினரின் துணை நாடி எதிரிகளைத் தாக்கியிருக்கலாம். இது வன்முறைக்கு பதில் வன்முறை என்ற வழி. 20  வருடங்கள் முன்னர் சுபாஷ் இதைத் தான் செய்திருப்பான். இந்த வழிமுறை தனக்கு கடந்த காலத்தில் தோல்வியை அளித்தாலும் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் இதைப் பின்பற்றி  இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றார்கள். வெற்றி அவர்கள் வழிமுறையை நியாயப்படுத்தவும் செய்து விட்டது.


அல்லது பாபுஜியின் அகிம்சை வழி. எதிரியின் மனசாட்சியுடன் உரையாடுவது. ஆனால் எதிரிகள் அனைவரும் மனசாட்சியின் குரலுக்கு கட்டுப்பட்டவர்களா. ஹிட்லர், மாவோ ஸ்டாலின் போன்ற கொடுங்கோலர்களை பாபுஜியின் சன்னமான குரல்  என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்தி விட முடியும்? அவர்களிடம் அகிம்சை வழிமுறை தோல்வியை அல்லவா சந்திக்கும்.  ஆனால் அமெரிக்க கறுப்பின இனத்தவரின் போராட்டம், தெற்காப்பிரிக்காவில் நடக்கும் விடுதலை போராட்டம் போன்ற  எத்தனை எழுச்சிகளுக்கு  அவர் வழிமுறை உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. எதிர்கால சமுதாயம் எப்படிப்பட்ட ஒரு மனிதர் ஒரு மனிதர் இவ்வுலகில் நடமாடியிருக்கிறார் என்று வியக்கும் விதமான வாழ்க்கை அல்லவா பாபுஜி வாழ்ந்திருக்கிறார். அவர் மகாத்மா. அவர் வழி சாமான்ய மனிதனான தனக்கானது  அல்ல.


மூன்றாவது தான் தற்போது கையாண்ட வழிமுறை. இது தந்திரம், சூழ்ச்சி அடங்கியது. ஆனால் யாருக்கும் சேதத்தை கொடுக்காதது. சாணக்கியரின் வழிமுறை. படேல் இதைத் தான் செய்திருப்பார்.


அறநெறி என்ற தராசில் வைத்துப் பார்க்கும் போது, எது சரியான வழி என்று இறைவனால் ஏற்கப்படும். கும்நாமிக்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை.


அப்போது அவர் சிந்தனை திடீரென தடைப்பட்டது. எதிரே இருந்த சுவாமி இளம் பெண்ணிடம் நிகழ்ந்த உரையாடல் அவர் சிந்தனை ஓட்டத்தை நிறுத்தியது.


“பெண்ணே,  உன் துயர் தீர்வதற்கு  எந்த வழியை மேற்கொள்வது  என்று என்னிடம்  அறிவுரை கேட்கிறாய். உனக்கு பதில் கூறும் தகுதி எனக்கில்லை. சொல்லப்போனால் சரியான வழி என்று திட்டவட்டமான ஒன்று எதுவும் கிடையாது. பாதைகளற்ற பயணம் அல்லவா மனித வாழ்க்கை. இன்று சரியெனப் படுவது நாளை தவறென்றாகிறது.  மனிதனின் துயருக்கெல்லாம் தீர்வு ஒன்று தான். இறைவன் நம்மிடம் உரையாடிக் கொண்டே இருக்கிறார். சோதனை காலங்களில்  அந்த மெல்லிய குரல் கேட்காமல் அமிழ்ந்து விடுகிறது. தெளிவான மனதுடன் அந்தக் குரலைக் கேள். அது உனக்கு சரியான வழியைக் கூறும்."


கும்நாமி மனம் காற்றில் மிதக்கும் இலை போல லேசானது.வெகு நாட்கள் தொலைத்திருந்த உறக்கம் அவரை ஆட்கொண்டது. உறங்கும் அவர் முகத்தில் லேசான புன்னகை வசீகரத்துடன் ஒளி வீசியது.