மீள் வருகை
ஜனவரி பத்து 2021
இந்நாளை நான் என்றோ வாழ்ந்திருக்கிறேன். ஒரு முறை மட்டும் அல்ல, இரண்டு முறை அல்லது மூன்று முறை. அது எந்த நாட்கள் என்று நினைவில் இல்லை. ஆனால் என் ஆழ் மனதில் அது உறைந்திருக்கிறது. அந்நாட்களில் அனுபவித்த உணர்வுகள், இதயத்தின் படபடப்புகள் இப்போதும் இருக்கிறது. இது deja -vu இல்லை. சற்று வித்தியாசமானது.
மனதை திசை திருப்ப காரின் ஜன்னலை திறந்து வெளியே எட்டிப் பார்த்தேன். வயல்கள், நெடு மரங்கள் மின் வேகத்தில் எதிர் திசையில் ஓடிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே சில மனிதர்களும் தென்பட்டனர். கடிகாரம் காலை மணி ஆறு என்று காண்பித்தது. விடியல் மெல்ல தன் வருகையை அறிவித்தது. கதிரவன் வானில் எழுந்து பூமியின் மீது ஒளியை பாய்ச்சியது. கோவையிலிருந்து சென்னையை நோக்கி காரில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். என் அருகில் 20 வயது ஓவியம் உறங்கி கொண்டிருக்கிறாள். தியா என் செல்ல பேத்தி. லதா பாட்டி லதா பாட்டி என என்னையே சுற்றி சுற்றி வரும் கவிதை. அவள் உறங்கும் போது கூட அழகிய மலர் போல தெரிகிறாள். பெற்றோர் இல்லை. சிறு வயது முதல் என் அரவணைப்பில் வளர்ந்து வருகிறாள். அவள் மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்கிறாள். இன்று இரவு விமானப் பயணம்.
ஒரே துணையாக இருந்த தியா என்னைப் பிரிந்து தனி வாழ்க்கை அமைத்து கொள்ளப் போகிறாள். இனி மீதமிருக்கும் வாழ்நாளை தனிமையில் கழிக்க வேண்டும் என்று எதிர்காலத்தைப் பற்றி அச்சம் கொண்டிருக்கிறேன். .அதனால் கலக்கமுற்று சிந்தனைகள் தறிகெட்டு அலைந்து கொண்டிருக்கிறது. இந்த எதிர் மறை சிந்தனைகளை கலைய வேண்டும். நன்றாக உறங்கி பல நாட்கள் ஆகிறது. வலிந்து தூங்குவதற்கு முற்பட்டேன். கண் இமைகள் மூடியது. ஒரு கனவு விரிந்தது.
ஜனவரி பத்து 1961
"அக்கா அழுகை வருதா?"
"இல்லைடா "
"நான் செத்து போய்டுவேன்னு பயப்படறியா?"
"அப்படி எல்லாம் சொல்லாதே. நீ நூறு வருஷம் உயிரோட இருப்ப."
மணிகண்டன் முகத்தில் புன்னகை தோன்றியது. அவனுக்கு இரண்டு வாரங்களாக கடும் காய்ச்சல். கோவையில் இருக்கும் மருத்துவர்கள் அனைவரும் கை விரித்ததால் சென்னையில் ஒரு பெரிய மருத்துவமனையில் காண்பிக்க என் பெற்றோருடன் வேனில் சென்று கொண்டிருக்கிறோம்.
மணிகண்டனுக்கு இன்னொரு தாய் தந்தை எல்லாம் நான் தான். என்னைப் பிரிந்து ஒரு கணம் கூட அவனால் இருக்க முடியாது. உண்பது, விளையாட்டு, கதைகள் சொல்வது, உறங்குவது என்று சகலமும் என்னுடன் தான். இத்தனைக்கும் எனக்கு வயது எட்டு. மணிகண்டன் என்னை விட நான்கு வயது சிறியவன்.
அவன் உடல் நலம் குன்றியபோது இரவெல்லாம் முழித்து அவனை கவனித்து கொண்டேன். என் கையால் தான் அவன் மருந்துகளை உட்கொள்வான். வேறு யாரையும் நான் அனுமதிக்க மாட்டேன்.
குளிர் காற்று வீசியதால் நான் வேனின் ஜன்னல்களை மூடினேன். விடிகாலை என்றாலும் மேக மூட்டமாக இருந்தது. சற்று நேரத்தில் பெரிய மழை பெய்வதற்கான அறிகுறி தெரிந்தது.
மணிகண்டன் என் மடியில் படுத்து உறங்க ஆரம்பித்தான். அவன் பிழைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொண்டேன்.
திடீரென்று வேன் நின்றது. சாலையில் இரண்டு கார்கள் மோதிய நிலையில் இருந்தது. விபத்தில் ஒருவர் காயமுற்று அபாய நிலையில் இருந்தார்.
நிலவரம் என்னவென்று தெரிந்து கொள்ள அப்பா கீழே இறங்கினார்.
ஒரு பெண்மணி அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு ஏதோ மன்றாடினாள். அப்பா சிறிது நேரம் சிந்தனையில் இருந்தார். பிறகு எங்களை நோக்கி வந்தார். அம்மாவிடம் விஷயத்தை சொன்னார்.
"அந்த மனிதர் உயிருக்கு அபாய நிலையில் இருக்கிறார். சென்னை இங்கிருந்து இன்னும் 20 கிலோ மீட்டர் தான். நாமும் மருத்துவமனைக்கு செல்கிறோம் என்பதால் காயமுற்ற மனிதரையும் அவர் மனைவியையும் நம்முடன் அழைத்து செல்ல கேட்கிறார்கள். வேனில் இடம் இருக்கிறது. பின் சீட்டில் அவர்களை உட்கார சொல்லலாம். எனக்கு சம்மதம். நீ என்ன சொல்கிறாய்."
அம்மாவும் தன் சம்மதத்தை தெரிவித்தாள்.
அப்போது எனக்குள் ஒரு துர் தேவதை ஆட்கொண்டது போல ஆக்ரோஷம் வந்தது. பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்தேன்.
"நான் யாரையும் விட மாட்டேன். வண்டியை இப்பவே கிளப்புங்க. மணிகண்டன் நல்லா ஆகணும். எனக்கு யார் பத்தியும் கவலை இல்லை. இப்பவே ஆஸ்பத்திரி போகணும். வண்டியை எடுங்க.
அம்மா என்னை சமாதானப்படுத்த வந்தாள். நான் அவள் முடியை பற்றி இழுத்தேன்.
"என்னங்க லதா இப்படி செய்யறா. என்ன சமாதனப்படுத்தினாலும் அடங்க மாட்டேன் என்கிறாள். எனக்கும் நாம கிளம்பிடலாம்னு தோணுது. இவங்களை நம்முடன் அழைச்சிட்டு போனா, மணிகண்டனை நாம் சரியா கவனிக்க முடியாது."
அப்பா சிறிது நேரம் யோசித்தார். பிறகு டிரைவரிடம் ஏதோ சொன்னார். அவன் விடுக்கென வண்டியை எடுத்து அங்கிருந்து அகன்றோம்.
நான் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். காயமுற்றவரின் மனைவியின் கண்களில் தெரிந்த கோபமும், வெறுப்பும் என்னை நிலைகுலையைச் செய்தது.
சரியாக ஒரு வாரத்தில் சென்னை மருத்துவமனையில் மணிகண்டன் நோய் முற்றி இறந்தான்.
————*********————-
திடுக்கென முழிப்பு வந்தது. தூக்கத்தில் வந்தது கனவல்ல, நிஜம். 60 வருடங்கள் முன்பு நடந்தது, எப்படி கனவென உருமாறி வந்தது என்று வியப்படைந்தேன். எது கனவு எது நிஜம் என்ற பேதம் தெரியாத மன நிலையில் இருக்கிறேனா என்று ஐயுற்றேன். இதயத்துடிப்பின் வேகத்தை குறைக்க தண்ணீர் குடித்தேன். மனம் சற்று நிதானத்திற்கு வந்தது.
தியா இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவள் வைத்திருந்த கைப்பையில் ஒரு புத்தகம் துருத்திக் கொண்டிருந்தது. ஆவலில் அதைக் கையில் எடுத்தேன். நீட்ஷேயின் தத்துவங்கள் குறித்த புத்தகம். இந்த புத்தகங்கள் எல்லாம் எப்படி படிக்கிறாள் என்று வியந்தேன். தன் வயதை மீறிய அறிவு அவளுக்கு என்பதில் பெருமிதம் அடைந்தேன்.
புத்தகத்தில் "Eternal Recursion " என்ற அத்தியாயத்தைப் படித்தேன். நீட்ஷேவின் கோட்பாடு படி இந்த பிரபஞ்சத்தின் இருக்கும் அனைத்து துகள்களின் நிறை (Mass) வரையறுக்கப்பட்டது. ஆனால் காலமோ எல்லையற்றது. அதனால் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழும் என்று கூறப்பட்டிருந்தது. பின்னால் ஐன்ஸ்ட்டின் கோட்பாடு நிறை (Mass) மற்றும் ஆற்றலுக்கிடேயே (Energy) உள்ள சமன்பாட்டை நிறுவிய பிறகு பிரபஞ்சத்தின் நிறையும் எல்லையற்றது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் நீட்ஷேவின் "Eternal Recursion" வாதத்தை அறிவியலாளார்கள் பொருட்படுத்தவில்லை.
புத்தகத்தை மேலும் புரட்டிய பிறகு பக்கங்களுக்கிடேயே வைக்கப்பட்டிருந்த ஒரு இளைஞனின் புகைப்படம் கண்ணில் பட்டது. பின் பக்கத்தில் "My First Love - Nirav " என்ற வரிகள் தியாவின் கையெழுத்தில் இருந்தது.
தியா தன் காதலை என்னிடமே மறைத்திருக்கிறாள். நீரவ் பார்க்க தியாவுக்கு பொருத்தமாக இருந்தான். புத்தகத்தை மூடி அதன் இருப்பிடத்தில் வைத்தேன்.
First Love . முதல் காதல். என் நினைவுகள் நாற்பது வருடங்கள் முன்பு சென்றது.
ஜனவரி பத்து 1981
"கல்யாணக் கலை உன் முகத்தில் இப்போதே தெரிகிறது லதா."
"மாப்பிள்ளைக்கு மட்டும் என்னவாம்."
ரஞ்சன் முகத்தில் சிறு புன்னகை மின்னல் போல வெட்டியது .
நானும் ரஞ்சனும் கோவையிலிருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். அடுத்த நாள் எங்கள் இருவருக்கும் நிச்சயம்.
என் முதல் காதலன் ரஞ்சன். அவனுக்கும் நான் தான் முதல் காதலியாக இருந்திருக்க வேண்டும். நான் படித்த வேளாண்மை கல்லூரியில் ரஞ்சன் ஒரு வருடம் சீனியர். கல்லூரியில் பல பெண்களின் இதயத் துடிப்பை எகிற வைத்தவன். கல்லூரியில் நடக்கும் ஆண்டு இறுதி நாடகத்தில் அவன் நடிப்பு மிகவும் பிரபலம். நாடக மேடையில் அவனுடைய துறுதுறுப்பு, வசனத்தை தெளிவாக பேசும் திறன் - இதன் மூலம் கல்லூரியில் அவனுக்கு பெரும் பிரபலத்தை அளித்தது. ஒரு ஆண்டு விழாவிற்கு ரோமியோ ஜூலியட் நாடகம் . ரோமியோவாக அவனும் ஜூலியட்டாக நானும் நடிக்க நேர்ந்தது. எனக்கு அது முதல் நடிப்பு அனுபவம். ஆனால் ஒத்திகைகளில் ரஞ்சனுக்கு நிகராக என் நடிப்பும் இருந்தது என்று அனைவரும் பாராட்டினர். அதன் பிறகு ரஞ்சன் என் மீது அதிக கவனம் செலுத்தினான். நாடக தினத்தன்று என்னிடம் வந்து இன்று நடக்கும் நடிப்புப் போட்டியில் யார் வெல்கிறார்கள், பார்ப்போம் என்று சவால் விட்டான். நாடகம் முடிந்த பின் இருவரில் யார் நடிப்பில் மிகச் சிறந்தது என்று சொல்ல இயலாத வண்ணம் இருந்தது என்று பார்வையாளர்கள் கருத்து கூறினர்.
அதன் பின் ரஞ்சன் என்னை அடிக்கடி சந்திக்க வந்தான். எங்கள் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. போராடி இரு பெற்றோரின் சம்மதத்தையும் பெற்றோம். எங்கள் திருமணம் 1981 ஆம் ஆண்டு ஜனவரி 11 அன்று சென்னையில் நிச்சயிக்கப்பட்டது. என் பெற்றோர் விழா ஏற்பாடுகளுக்காக முன்னரே சென்று விட்டனர். கல்லூரியில் இறுதி பரீட்சை நடந்ததால் ரஞ்சனும் நானும் ஒரு நாள் முன்னர் தான் சென்னை செல்ல இயன்றது.
"லதா, நான் ஏன் உன்னை விரும்பினேன் தெரியுமா?"
"சொன்னால் தானே தெரியும்"
"நான் சிறு வயதிலேயே எல்லாவற்றிலும் முதலாக இருந்தவன். படிப்பு, விளையாட்டு என்று சகலத்திலும் நானே முதல். என்னை ஒரு ஹீரோவாகவே அனைவரும் பார்த்தனர். என்னுள் அவ்வப்போது தோன்றும் மமதையை அடக்குவது கடினமாக இருந்தது. அதனால் நான் திருமணம் செய்யும் பெண் என்னை வெல்லக் கூடியவளாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
"அந்தப் பெண் யார்."
"நாளை நம் கல்யாணத்தில் என் பக்கம் அமர்ந்திருப்பாள் பார்த்துக் கொள்.”
இப்படித் தான் அவன் என்னை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான்.
"மிகவும் களைப்பாக இருக்கிறது. வண்டியிலிருந்து இறங்கி சிறிது நேரம் வெளியே நிற்கலாம்."
ரஞ்சன் காரை நிறுத்தினான். நாங்கள் இருவரும் இறங்கி ஒரு ஹோட்டலில் உணவருந்தினோம்.
அப்பொழுது அந்த துர் சம்பவம் நிகழ்ந்தது. எதிரெதிரே வந்த இரு கார்கள் மோதியது. நான் அதிர்ச்சியில் அசைவின்றி இருந்தேன்.
ரஞ்சன் வேகமாக விபத்து நடந்த இடத்திற்கு சென்றான். ஒரு காரில் வயதான மனிதரும் அவர் டிரைவரும் இறந்து கிடந்தனர். அடுத்த காரில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர். பின் சீட்டில் ஒரு சிறுவன் அடிபட்டு உயிரோடு இருந்தான்.
விடிகாலை என்பதால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. ரஞ்சனுக்கு உதவியாக ஹோட்டலில் வேலை செய்த பணியாட்கள் மூன்று பேர் மட்டுமே இருந்தனர். அடிபட்டிருந்த சிறுவனை காரிலிருந்து வெளியே எடுத்தனர்.
ரஞ்சன் மற்றவர்களுடன் ஏதோ விவாதத்தில் இருப்பது தெரிந்தது. அவன் என்னிடம் வந்தான்.
"இங்கே அருகே ஒரு மருத்துவமனை இருக்கிறது. அங்கே இவனை சேர்த்து விடலாம். என்ன சொல்கிறாய்."
அவன் யோசனையில் எனக்கு உடன்பாடு இல்லை. அவனிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை.
"சேர்த்து விட்டு உடனே நாம் கிளம்ப முடியுமா. மற்றவற்றை இங்கே இருப்பவர்கள் பார்த்துக் கொள்ள மாட்டார்களா"
"அது முடியாது என்று நினைக்கிறேன். போலீஸ் விசாரணைக்கு வ்ருவார்கள். மேலும் அடிபட்ட சிறுவனின் சிகிச்சைக்கு ஆரம்பகட்ட செலவுகள் நாம் தான் செய்ய வேண்டும். இவர்களுக்கு அந்த அளவிற்கு பொருளாதார வசதி கிடையாது."
"நீ என்ன நினைத்துக் கொண்டு பேசுகிறாய். நாளை நமக்கு மிக முக்கியமான நாள்."
"மனிதாபபமற்ற சொற்கள் உன்னுடையது."
"இந்த சிக்கலில் நாம் மாட்டிக் கொண்டால், நம் பெற்றோர்களுக்கு என்ன பதில் சொல்வது. ஒரு மங்கள நிகழ்ச்சிக்கு முன் இப்படி நடந்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்."
அந்தக் கணம் ரஞ்சன் என்னை ஒரு கொடூரமான விலங்காக பார்த்தான். நான் கோபத்துடன் காரில் ஏறிக் கொண்டேன்.
ரஞ்சன் சிறிது நேரம் சிந்தனையில் நின்று கொண்டிருந்தான். பிறகு அவனும் காரியில் ஏறி அங்கிருந்து வண்டியை நகர்த்தினான்.
ரஞ்சன் இறுக்கமாக இருந்தான். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சென்னை ஹோட்டலில் என்னை இறக்கி விட்டு செல்லும் போதும் கூட அவன் என்னிடம் விடை பெறவில்லை.
அடுத்த நாள் நிச்சயம் நடக்கும் மண்டபத்திற்கு சென்றோம். மண்டபம் காலியாக இருந்தது. அப்பா பதட்டத்துடன் ரஞ்சன் வீட்டிற்கு சென்றார். ரஞ்சனுக்கு தற்போது திருமணத்தில் விருப்பம் இல்லை என்று அவன் பெற்றோர் தெரிவித்து விட்டனர்.
அதன் பிறகு நான் ரஞ்சனை நான் சந்திக்கவில்லை.
முதற் காதல் என் வாழ்விலிருந்து அகன்றது.
———*********————-
தியா முழித்துக் கொண்டாள்.
"சென்னைக்கு போக இன்னும் எவ்வளவு நேரம் பாட்டி"
"இரண்டு மணி நேரத்தில் விமான நிலையத்தில் இருப்போம்."
"நல்ல தூக்கம். ஒரே கனவாக வந்தது'"
"நிரவுடன் டூயட் பாடினாயா"
தியா அதிர்ச்சியடைந்தாள்.
"அவன் போட்டோவைப் பார்த்தேன். உனக்கு பொருத்தமாகத் தான் இருக்கிறான்."
"பாட்டி நீ ரொம்ப மோசம். நான் தூங்கும்போது எனக்கு தெரியாமல் என்னென்ன வேலையெல்லாம் செய்திருக்கிறாய்."
"என்னிடம் சொல்லாமல் இதை மறைத்து வைத்திருக்கிறாய்"
நான் கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டேன்.
"நீ அந்த காலத்து ஆள் இல்லையா. ஏற்றுக் கொள்வாயோ என்று பயம். "
"யார் அந்த காலத்து ஆள். நான், உன் அம்மா எல்லோரும் காதலித்திருக்கிறோம் தெரியுமா. "
"உன் காதல் கதை ஏற்கனேவே கூறியிருக்கிறாய். அம்மாவின் கதை சொல்லேன்."
என் கண்ணீரை தியா பார்த்து விட்டாள்.
"ரொம்ப ட்ராஜெடியான கதைனா வேண்டாம் பாட்டி. ஊருக்கு போற நேரத்திலே எதுக்கு மூட் அவுட் ஆயிட்டு."
"இல்லை உன் அம்மா பற்றி நீ அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்”
ஜனவரி பத்து 2001
உன் தாத்தா இறக்கும் போது உன் அம்மா மேனகாவிற்கு வயது ஆறு. அவர் ஆசைப்படி I.A .S படிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். ஜனவரி பத்து 2001 ஆம் ஆண்டு எங்கள் இருவர் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நாள். அன்று அவளுக்கு சென்னையில் I.A .S இறுதித் தேர்வு இருந்தது. நானும் உன் அம்மாவும் காரில் சென்று கொண்டிருந்தோம்.
வழியில் சாலையில் ஒரு விபத்தில் இரண்டு கார்கள் மோதியிருந்தன. ஒரு சிறு கூட்டம் அங்கு கூடியிருந்தது. டிரைவர் வண்டியை நிறுத்தி என்னவென்று விசாரித்தார். விபத்தில் இரண்டு பேர் இறந்திருந்தனர். ஒருவருக்கு தக்க நேரத்தில் சிகிச்சை அளித்தால் பிழைக்கலாம்.
கூடியிருந்தவர்கள் அடிபட்டவரை அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்க மன்றாடினர். மேனகாவும் அவர்கள் கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்தாள்.
ஆனால் சென்னையில் அவள் தேர்வு நடக்கும் இடத்திற்கு செல்ல குறுகிய கால அவகாசமே இருந்தது. நான் டிரைவரை வண்டியை எடுக்க சொன்னேன். பரீட்சைக்கு சரியான நேரத்திற்கு சென்றோம்.
மேனகா பரீட்சை முடித்த பின், எப்படி செய்தாள் என்று கேட்டேன். ஒரு கொலையை செய்து விட்டு எப்படி பரீட்சை எழுத முடியும். பரீட்சை நடந்த மூன்று மணி நேரங்களும் அடிபட்டவனின் ரத்தம் சிந்திய முகமே நினைவில் இருந்தது என்று கூறினாள். அத்தோடு அவள் IAS கனவு மண்ணோடு மண்ணாகியது.
அதன் பின் மேனகாவின் இயல்பு மாறியது. சரியான உறக்கம் இல்லை. குற்றவுணர்வு அவளுக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்தது.
ஒரு நாள் அவள் என்னை விட்டு பூனா சென்று அங்கிருக்கும் ஓஷோவின் ஆசிரமத்தில் சேர்ந்தாள். உன் தந்தையை திருமணம் செய்து உன்னைப் பெற்றாள்.
ஆனால் உன்னை வளர்ப்பதில் உன் பெற்றோருக்கு விருப்பம் இல்லை. அவர்கள் ஆன்மீக தேடலுக்கு நீ இடையூறாக இருப்பதாக எண்ணினர். உன்னை ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்து அவர்கள் உலகம் முழுதும் பயணம் செய்தனர். இதை எப்படியோ அறிந்து, உன்னை அங்கிருந்து மீட்டு நான் வளர்த்து வருகிறேன். உன் பெற்றோர் இறக்கவில்லை உயிரோடு தான் இருக்கின்றனர்.
———*******———
தியா தன் முகத்தை இரு கைகளால் மூடிக் கொண்டு விசும்பினாள். பிறகு கண்களை துடைத்து என்னை அணைத்துக் கொண்டாள்.
"என் அம்மா இல்லையென்றால் என்ன பாட்டி. நீ எனக்கு கிடைத்தாய் அல்லவா. உன் போல என் அம்மா கூட சிறப்பாக வளர்த்திருக்க முடியாது."
"தியா நான் செய்தது தவறா. விபத்து சம்பவத்தில் வேறு முடிவு எடுத்திருந்தால் நான் என் மகளையும் நீ உன் அம்மாவையும் இழந்திருக்க மாட்டோம். இந்த இருபது வருடங்களாக இந்தக் கேள்வி என்னை துளைத்துக் கொண்டிருக்கிறது."
"நீ செய்ததில் தவறு ஒன்றும் இல்லை பாட்டி. இந்த உலகத்தில் நூற்றுக்கு 99.99 மனிதர்கள் அவ்வாறு தான் முடிவெடுத்திருப்பார்கள். ஏன் நான் கூட அதைத் தான் செய்திருப்பேன்."
திடீரென என் கைகள் நடுங்கியது. உடல் முழுதும் பதற்றம் கொண்டது.
"இன்று தேதி என்ன?"
"ஜனவரி பத்து. ஏன் கேட்கிறாய்."
"ஜனவரி பத்து. ஆண்டு 2021 . அதே நாள். ஒரே சம்பவம். இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை. நான் ஏன் இதை யோசிக்கவில்லை. Eternal Recursion. ஆண்டவனே இன்றும் என்னை சோதிக்காதே. இந்தக் குழந்தையையாவது நிம்மதியாக வாழ விடு."
நான் என் கைகளைக் குவித்து சஷ்டி கவசம் சொல்லிய வண்ணம் இருந்தேன். தியா ஒன்றும் புரியாமல் பயத்துடன் என்னை பார்த்தாள்.
வண்டி நின்றது.
டிரைவர் ஒரு விபத்து நடந்திருக்கிறது என்று கூறினான். சிறிது நேரம் நிறுத்தி கூட்டத்தை பார்த்து விட்டு வண்டியை கிளப்பினான்.
எனக்கு திடீரென ஆவேசம் வந்தது. டிரைவரை வண்டியை விபத்து நடந்த இடத்திற்கு திருப்ப சொன்னேன்.
விபத்தில் ஒரு நான்கு வயது குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
என்ன செய்ய வேண்டும் என்று நான் தெளிவாக முடிவெடுத்தேன்.
"தியா, உன் பெட்டிகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கு."
"பாட்டி என்னாச்சு. நீ என் அம்மா கதையை சொல்லியிருக்கவே வேண்டாம். அதன் பிறகு நீ மிகவும் விபரீதமாக நடந்து கொள்கிறாய்."
"நாம் இப்போது செங்கல்பட்டில் இருக்கிறோம். இங்கிருந்து சென்னைக்கு அரை மணி நேரத்திற்கு ஒரு பஸ் கிடைக்கும். நீ ஏதாவது ஒரு பஸ்ஸில் ஏறி விமான நிலையத்திற்கு சென்று விடு. துணைக்கு டிரைவரை வைத்துக் கொள்."
"நீ என்ன செய்யப் போகிறாய்."
"இந்தக் குழந்தையை நான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப் போகிறேன். குணமாகும் வரை இவள் கூடவே இருப்பேன்."
"உனக்கு ஏதாவது அறிவிருக்கிறதா பாட்டி. இந்த வழியில் பல வண்டிகள் போகும். யாராவது ஒருவர் இந்தக் குழந்தையை காப்பாறுவார்கள். ஆனால் இந்த தருணத்தில் நீ என்னை விட்டு போகலாமா. பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் தெரியாத தேசத்திற்கு செல்கிறேன். ஒரு முறை கூட நான் விமானத்தில் பயணம் செய்தது கிடையாது. ஒரு Moral Support கொடுப்பதற்கு நீ என்னுடன் இருக்க வேண்டாமா?"
"உனக்கு புரியாது தியா. Eternal Recursion. நிகழ்வுகளின் வட்டத்திலிருந்து தப்பிக்க இது தான் சரியான வழி. வண்டியை விட்டு இறங்கு."
நான் டிரைவரை இறங்க சொல்லி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தேன். வேறு வழியில்லாமல் தியா வண்டியை விட்டு இறங்கினாள்.
கூட்டத்தில் இருந்தவர்கள் அடிபட்ட குழந்தையை வண்டியில் ஏற்றினார்கள்.
கிளம்புவதற்கு முன்னர் தியாவின் முகத்தைப் பார்த்தேன்.
"இருபது வருடங்கள் முன் என் அம்மா கை விட்டாள். இப்போது நீ. இனி உன் முகத்தில் கூட விழிக்க மாட்டேன்."
தியா அங்கிருந்து விருட்டென அகன்றாள். டிரைவர் பெட்டிகளை எடுத்துக் கொண்டு அவளை பின் தொடர்ந்து சென்றான்.
குழந்தையை நான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். மருத்துவர்களின் கடும் சிகிச்சைக்குப் பின் பிழைத்துக் கொண்டது.
நான் கோவைக்கு திரும்பினேன். என் மனம் முழுதும் தியாவே இருந்தாள். அவள் நல்லபடியாக அமெரிக்கா சேர்ந்திருப்பாளா என்ற பதற்றம் ஒவ்வொரு நொடியும் இருந்தது. நாட்கள் ஓடியது. தியாவிடமிருந்து ஒரு போன் கால் கூட வரவில்லை. அவள் தோழிகள் மூலம் அவளை தொடர்பு கொள்ள நான் எடுத்த முயற்சிகள் தோல்வியுற்றது.
ஒரு நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு போன் அடித்தது. மறுமுனை மெளனமாக இருந்தது.
"தியா நீ தானே. குழந்தை நல்லபடியாக போய் சேர்ந்தாயா. உன்னை நினைத்து நான் வேண்டாத தெய்வம் இல்லை."
எதிர்முனையில் மௌனம் தொடர்ந்தது.
"என்னை மன்னித்து விடு தியா. "
"பரவாயில்லை விடு. முதலில் எனக்கு உன் மீது கோபம் இருந்தது. வாழ் நாள் முழுதும் உன் கூட பேசக்கூடாது என்ற முடிவில் இருந்தேன். அனால் ஒரு ஆச்சர்யம் என்ன தெரியுமா. என் பயணம் எந்த சிக்கலுமின்றி நடந்தது. சென்னை ஏர்போட்டில் விமானம் ஏறுவதற்கு ஒரு மணி நேரம் தாமதமாக சென்றோம். ஆனால் அங்கிருந்த பணியாட்கள் சரியான நேரத்தில் நான் விமானத்தில் ஏற எல்லா உதவிகளும் செய்தனர். அதே விமானத்தில் நிரவின் அண்ணனும் பயணம் செய்தார். அவர் பிளைட் மாறுவது, லக்கேஜ் பெற்றுக்கொள்வது என்று சகலத்திற்கும் உதவியாக இருந்தார். இங்கு யுனிவர்சிட்டியில் எனக்கு பல உதவிகள் கிடைத்தது. நல்ல room mate ஒருத்தி கிடைத்திருக்கிறாள்."
"மிகவும் சந்தோஷம் தியா."
"ஒன்று சொல்லட்டுமா. நீ அன்று செய்தது தான் சரி. அந்தக் குழந்தையை காப்பாற்ற நீ முடிவெடுத்தாய். அதன் பலனாக என்னை கடவுள் கவனித்துக் கொண்டார்."
"Eternal Recursion . அதிலிருந்து தப்ப நான் எடுத்த முடிவு தான் வழி."
"ஏ கிழவி. இனிமேல் Eternal Recursion என்று லூசு மாதிரி பேசினால் உனக்கு போனே செய்ய மாட்டேன். ஆமாம்."
"கோபிக்காதே தியா."
"என் புத்தகத்திலிருந்து இரண்டு வார்த்தைகளை படித்து விட்டு உளறுகிறாய். Eternal Recursion என்றால் என்னவென்று தெரியுமா. எவ்வளவு தத்துவ ஞானிகள், அறிவியலாளர்கள் இதை ஆராய்ந்து விவாதித்திருக்கிறார்கள். நீ உன் கந்த சஷ்டி கவசம் படிப்பதோடு நிறுத்திக் கொள். இதெல்லாம் உனக்கு புரியாது."
நான் புன்னகைத்தேன். புரிவதற்கு என்ன, அதை நான் வாழ்ந்தே இருக்கிறேன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
சிட்டுக் குருவி போல எதிர்முனையில் தியாவின் உற்சாகமான பேச்சு தொடர்ந்தது.
———-**********————