Thursday, July 30, 2020

கான் சகோதரர்கள் - சிறுகதை

                                                                                        கான் சகோதரர்கள் 


                                                                        வருடம் 1941


ரெகிஸ்தான், ஆபிகானிஸ்தானில் உள்ள  ஒரு வறண்ட சமவெளிப் பிரதேசம். பசுமை என்றால் என்னவென்றே அறியாத பாலைவனம்.   சிறு சிறு  செந்நிறக்குன்றுகள் கொண்ட ஒரு பொட்டல்காடு. இக்குன்றுகள் பெரும்பாலும் ஐம்பதிலிருந்து நூறடிகள் உயரமானதாக இருக்கும். அங்கென்றும்  இங்கென்றுமாய் குன்றுகளின் மேல் வீடுகளும், குடிசைகளும் காணப்படும் 


 அங்கே அப்துல்லாகானின்  குடும்பம் வசித்து வந்தது.  அப்துல்லாகான் தன்னிடமுள்ள  பத்து ஆடுகளைக் கொண்டு ஜீவிதம் நடத்தி வந்தான். விடிகாலையில் ஐந்து மணிக்கே எழுந்திரித்து ஆடுகளை மேய்க்க சென்று விடுவான். வயதாக ஆக தன் இரு மகன்கள் தன் சுமையில் பங்கெடுக்காதது அவனுக்கு வெறுப்பை அளித்தது. மூத்தவன் அகமத்கானுக்கு 15  வயதும், இளையவன் உமர்கான் சென்ற வாரம் 14 வயதையும் எட்டினான்.  தடியன்கள் போல வளர்ந்தாலும் , ஊர் சுற்றுவதும்,  பெண்களிடம் வம்பு செய்வதிலும்  மகன்கள் நாட்களை கழித்து வருவது அப்துல்லாகானை சினமுற செய்தது.  40  ஆண்டுகள் சலியாமல் தான் உழைத்து வந்ததை நினைக்கும் போது அவனுக்கு தன் மீது கழிவிரக்கம் தோன்றும்.


அன்று காலை எழுந்ததும் அவன் தன் மகன்களைத் தேடினான். சமையல் அறையில் மனைவி ஏதோ உருட்டிக் கொண்டிருந்தாள். மூலையில் மகள் ஹசீனா உடலை சுருட்டி  உறங்கி கொண்டிருந்தாள்.   மகன்கள் மட்டும் காணவில்லை. எருமைகள் இந்த நேரத்திலே எங்கு சென்று விட்டார்கள் என்று ஏசிக்கொண்டே ஆடுகளை திரட்டி குன்றிலிருந்து இறங்கி சென்றான். 


உமர்கானும், அகமத்கானும் கதீஜா என்கிற வேசியின்  வீட்டின் முன் நின்று விவாதித்துக் கொண்டிருந்தனர். 


உமர் - "இன்றாவது நாம் உள்ளே போகலாமா?"


அகமத் - "சரி போகலாம். முதலில் நீ போகிறாயா அல்லது நான் போகவா?"


உமர் - "நீ போ"


அகமத் - "இல்லை நாம் இருவரும் உள்ளே போகலாம்."


இருவரும் தயக்கத்துடன் கதவைத் தட்டினர். 


கதவு திறந்தே இருந்ததால் மெதுவாக உள்ளே சென்றனர். உள்அறையில் கதீஜா படுத்திருந்தாள். 


சிறுவர்களை பார்த்து வியப்புடன் ஏளனப் புன்னகை செய்தாள். 


"முன் அனுபவம் உண்டா?"


இருவரும் இல்லை என்று தலையாட்டினர். 


"சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதால் நிறைய செலவாகும். பணம் எவ்வளவு வைத்திருக்கிறீர்கள்."


"பணம் கொண்டு வரவில்லை."


"பணம் இல்லாமல் பொருள் கிடைக்குமா. பணத்துடன் நாளை வாருங்கள்."


இருவரும் ஏமாற்றத்துடன் வெளியே வந்தனர்.


உமர் - "இவள் உடல் தங்கத்தால் செதுக்கியது போல் இருக்கிறது. "


அகமத் - "இப்போதே வேலையை முடித்து விடலாம் உமர்."


உமர் - "பணத்திற்கு எங்கே போவது. இவள் அழகைப் பார்த்தால் நிறைய கேட்பாள் போல இருக்கிறது."


அகமத் - "வீட்டிற்கு வா சொல்கிறேன்."


வீட்டில் அப்துல்லாகான்  உணவருந்திக் கொண்டிருந்தான். மகன்களை பார்த்ததும் சாப்பிட்ட கையுடன் அவர்களை வெளுத்தான்.


அடுத்த நாள் காலை அப்துல்லா  ஆடுகளை ஒட்டிச் சென்றவுடன், அகமத்  உமரை எழுப்பினான். இருவரும் மெதுவாக உள்ளே இருந்த அறைக்குச் சென்றனர். அங்கே ஒரு பெட்டியில் துப்பாக்கி ஒன்று இருந்தது.


உமர் - "இதை வைத்து அவளை மிரட்டி வேலையை முடிக்கலாம் என்கிறாயா?"


அகமத் - "முதலில் இதை எடுத்துக் கொள்ள சொல்லலாம். மறுத்தால் மிரட்டலாம்."


இருவரும்  கதீஜாவின் வீட்டை அடைந்தனர். துப்பாக்கியை அவள் முன் நீட்டினர்.


கதீஜா மிரட்சியுடன் பார்த்தாள்.


"பயப்படாதீர்கள். இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். "


கதீஜா கலகலவென்று சிரித்தாள்.


"உங்களிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். உங்களுக்கு எந்த விலையும் கிடையாது."


கதீஜா தன் மேலாடையை கலைத்து மோகனப் பார்வை எய்தாள்.


சிறுவர்கள் இருவரும் கதீஜாவை நெருங்கினர். திடீரென்று கதவை யாரோ வேகமாக தட்டினர். அவர்கள் சுதாரிக்கும் முன் அறைக்குள் அப்துல்லாகான் நுழைந்தான். தன் மகன்களை பார்த்ததும் வெறியுடன் தாக்க வந்தான்.


சிறுவர்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர். அப்துல்லாகான் கதீஜாவின் மீது எச்சியை உமிழ்ந்து சிறுவர்களை பின் தொடர்ந்து சென்றான். சிறுவர்கள் எங்கோ மறைந்து விட்டனர்.


அப்துல்லா ஒரு வாரமாக தன் மகன்களை சல்லடையாக சலித்துத் தேடி,  அலுத்து, கழுதைகள் தொலைந்து போகட்டும் என்று கைவிட்டான்.


சிறுவர்கள் வேறு ஒரு கிராமத்தில், மலைப்பகுதியில் உள்ள ஒரு குகைக்குள் ஒளிந்துக் கொண்டிருந்தனர். வழி தவறி வரும் ஆடுகளைக் கொன்று, சமைத்து பசியை ஒட்டினர். 


உமர் - "இப்படி நாம் வெகு நாட்கள் இருக்க முடியாது. வீட்டிற்கே சென்று விடலாமா?" 


அகமத் - "கிழவன் நம்மை கொன்றே விடுவான். அவனிடம் இனிமேலும் என்னால் அடி வாங்க முடியாது."


உமர் - 'எனக்கு ஒரு சந்தேகம். கிழவன் எப்படி நாம் கதீஜாவின் வீட்டில் இருந்ததைக் கண்டு பிடித்தான். அவன் வந்தது நம்மைத் தேடியா, இல்லை கதீஜாவை பார்ப்பதற்கா?"


அகமத் - "கிழவி சமையல் அறையில் எப்போதும் இருமிக் கொண்டிருக்கிறாள். கிழவன் வேறு எங்கு செல்வான்."


உமர் - "கதீஜாவிடம் கொடுப்பதற்கு கிழவனிடம் ஏது பணம்."


அகமத் மௌனமாக இருந்தான்.


உமர் - "எனக்கு இன்னொரு சந்தேகம்."


அகமத் - "கேள்வி கேட்டு உயிரெடுக்காதே. ஏதாவது ஆடு வருகிறதா என்று போய் தேடு."


உமர் - "இல்லை நான் இதைக் கேட்டே ஆக வேண்டும். கதீஜா ஏன் நம்மிடம் பணம் வாங்கவில்லை."


அகமத் வெகு சத்தத்துடன் சிரித்தான். உமரும் அவனுடன் சேர்ந்து சிரித்தான்.


உமர் - "நாம் இங்கேயே இருந்து விட முடியாது. உனக்கு ஏதாவது யோசனை தோன்றுகிறதா."


அகமத் -  "நாம் காபூல் சென்று பிழைத்துக் கொள்ளலாம். “


உமர் - “காபூல் சென்று தொழில் செய்தால் நிறைய பணம் கிடைக்குமா? எவ்வளவு கிடைக்கும்?"


அகமத் - "பல லட்சங்கள் சம்பாதிக்கலாம்."


உமர் -“அவ்வளவு பணம் வைத்து என்ன செய்வது."


அகமத் - “நான் கதீஜாவை திருமணம் செய்து கொள்வேன். அப்படிப் பார்க்காதே, உனக்கும் ஒரு நல்ல அழகான பெண்ணாக பார்த்து மணம் செய்து வைப்பேன்"


உமர் - "அப்போது கிழவனும் கிழவியும்"


அகமத் - “அவர்கள் நரகத்திற்கு செல்லட்டும்


உமர் - "காபூலிற்கு எப்படி செல்வது?"


அகமத் - “அதோ தெரிகிறது பார் அந்தக் குன்று. அந்த உச்சியிலிருந்து பார்த்தால், காபூல் செல்லும் பாதை தெரியும். அந்த வழியில் பெரும்பாலும் சாமானியர்கள் பயணிக்க மாட்டார்கள். ராணுவ வண்டிகள் மட்டும் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். நாம் எப்படியாவது அந்த வழியில் செல்லும் ஒரு வண்டியை அபகரிக்க வேண்டும்."


உமர் - "இது விபரீத யோசனையாக தோன்றுகிறது. நம்மை வேட்டையாடி, உடலைக் கண்டந்துண்டமாக வெட்டிக் கொன்று விடுவார்கள்."


அகமத் - "உனக்கு பயமாக இருந்தால், இங்கேயே இருந்து செத்து தொலை. நான் போகிறேன்."


அகமத்  துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான். உமர் வேறு வழியில்லாமல் அவனைப் பின் தொடர்ந்தான்.


இருவரும் குன்றின் மீது படுத்து , துப்பாக்கியை நீட்டியவண்ணம், ஏதாவது வண்டி செல்கிறதா என்று கவனித்து வந்தனர்.


வெகு நேரம் கடந்தது. உமர் பொறுமை இழந்தான்.


"நான் வீட்டிற்கு போகிறேன். கிழவனிடம் அடி  வாங்கினாலும் பரவாயில்லை. இந்த நாய் பிழைப்பிற்கு அது எவ்வளவோ தேவையில்லை."


உமர் சிறிது தூரம் செல்ல, திடீரென்று துப்பாக்கி ஒலிக்கும் சத்தம் கேட்டது. உமர் வேகமாக அகமதிடம்  சென்றான். அகமத் கை  நீட்டிய  திசையில் பார்த்தான். சாலையில் ஒரு ஜீப்  நின்றுக் கொண்டிருந்தது. அதிலிருந்த மனிதர்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்து செத்திருக்க வேண்டும்.


இருவரும் சாலையை நோக்கி ஓடினர்.


வண்டியில் இரு வெள்ளைக்கார ராணுவத்தினர் குண்டடிபட்டு இறந்து கிடந்தனர். அவர்கள் இருவரையும் அப்புறப்படுத்தி,  ஜீப்பில் ஏறினர். வண்டி கிளம்பவில்லை.  ஒரு டயர் பழுதாகி இருந்தது, உமரை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டு, வேறு டயர் கொண்டு வருவதற்காக கிராமத்தை நோக்கி அகமத் சென்றான்.


வெகு நேரமாகியும் அகமது திரும்பி வரவில்லை. இரவு மெல்ல வானில் கவிழ்ந்தது. சுழல் காற்று மணலை சூறையடித்தது. உமர் மனதில் பயம் சூழ்ந்தது.  தன் உடலை ஒடுக்கிக் கொண்டு வண்டியிலேயே கண்களை மூடி படுத்துக் கிடந்தான். 


விடிகாலையில் மெல்ல சூரிய ஒளி எட்டிப் பார்த்தது. உமர் அகமதைத் தேடி கிராமத்தை நோக்கி கிளம்ப எத்தனித்தான். அப்போது இன்னொரு வண்டி சாலையில் வந்துக் கொண்டிருந்தது. உமர் மறுபடியும் ஜீப்பில் ஏறி ஒளிந்துக் கொண்டான்.


வண்டி ஜீப்பை நெருங்கியதும் நின்றது. அதிலிருந்து மூவர் இறங்கினர். பார்ப்பதற்கு இந்துஸ்தானியர் போல தெரிந்தனர்.  இறந்த சடலங்களை பார்த்து தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.


"இவர்கள் ஆங்கிலேயர்களா?"


கேள்வி கேட்டவர் இவர்களுக்கெல்லாம் தலைவர் போல தெரிந்தார். கம்பீரமான முகமும், தீர்க்கமான பார்வையும் கொண்டிருந்தார்.


இன்னொரு நபர்  உடல்களை பரிசோதித்தார், 


"இவர்களிடம் இருக்கும் ஆவணங்களையும்,  அடையாள அட்டை முதலியவற்றைப் பரிசோதித்ததில், இவர்கள் ரஷ்யர்கள் என்று தோன்றுகிறது."


தலைவர் நீண்ட சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு ஜீப்பை நெருங்கினார். உள்ளே பயத்துடன்  உமர் இருப்பதைக் கண்டு வியந்தார்.


"சிறுவனே பயப்படாதே. இந்த வீரர்கள் எப்படி இறந்தார்கள் என்று தெரியுமா?"


அருகில் இருந்தவர் உமருக்கு மொழி பெயர்த்தார்.  உமர் அச்சத்துடன் பதில் ஏதும் சொல்லவில்லை. 


"இவர்களை நீ கொன்றாயா?"


மூவரும் சரமாரியாக கேள்விகள் கேட்டும், உமரிடமிருந்து மௌனத்தை தவிர வேறு ஏதும் பதில் வரவில்லை.


"தலைவரே இவனை நாம் என்ன செய்யலாம்."


"இவனைக் கைது செய்து ரஷ்யர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் விசாரித்துக் கொள்வார்கள்."


அப்போது அவர்களை நோக்கி துப்பாக்கி குண்டுகள் சரமாரியாக பாய்ந்தது.  தப்பிப்பதற்கு ஜீப்பின் பின் ஒளிந்துக் கொண்டனர். 


அகமது துப்பாக்கியுடன் நின்றுக் கொண்டிருந்தான். சிறிது நேர அமைதிக்குப் பின் தலைவர் வெளியே வந்து, அகமதை நோக்கி  பயமனின்றி நடந்தார். அவரைக் கண்டதும் ஏனோ அகமத் கைகள் நடுங்கியது.  குண்டுகள் அனைத்தும் தவறான திசையில் சென்றது. தலைவர் அகமதின் கைகளிலிருந்து துப்பாக்கியை பிடுங்கி கீழே எறிந்தார்.


சிறுவர் இருவரின் கைகளையும் கட்டி,  தங்கள் வண்டியில் அழைத்துச் சென்றனர்.


மூவரின் பேச்சிலிருந்து ஒருவன் பெயர் தல்வார் என்பதும், இன்னொருவன் பெயர் அபாத்  என்பதும், அவன் உண்மையில் இந்தியன் அல்ல, பதான் என்பதும்  அகமதால் ஊகிக்க முடிந்தது. அவர்களின் தலைவரை பெயர் சொல்லி அழைக்கவே இல்லை. தலைவர் என்றே அழைத்தனர்.


தலைவர் - "நாம் இருக்கும் இடம் இப்போது யார் ஆட்சிக்கு உட்பட்டது."


தல்வார் - "இன்னும் சிறிது  சென்றால் ஆங்கிலேயர் எல்லையை தாண்டி விடுவோம். அதற்கப்பால் உள்ள  இடங்கள் எல்லாம் ஆப்கன் பழங்குடியினர் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவை."


அபாத்  - "இன்னும் பத்து கிலோமீட்டர்கள் தான் வண்டியில் செல்ல முடியும். இது 

 1932  ஆண்டு செவ்ரோலே மாடல். இவ்வளவு தாக்குப் பிடித்ததே பெரிய விஷயம். அதன் பிறகு கரடுமுரடான குன்றுகள் நிறைந்த இடங்களை நடந்தேதான்  செல்ல வேண்டும். "


சிறிது தூரம் சென்றவுடன் வண்டி நின்றது.  மூவரும் வண்டியை விட்டு இறங்கினர். 


அபாத்  சிறுவர் இருவரையும் கால்களால் எத்தி இறங்கச்  சொன்னான். தாங்கள் கொண்டு வந்த பெட்டிகள் அனைத்தையும் அவர்கள் தலையில் சுமத்தினான். 


தலைவர் - "சிறுவர்கள் மீது கடுமையைக் காட்ட வேண்டாம். பெட்டிகளை நாம் அனைவரும் நம் உடல்பலத்திற்கு ஏற்ப  சுமந்துச்  செல்வோம்."


சிறுவர்களை முன்னாள் நடக்க விட்டு, மற்ற மூவர்  அவர்களைப் பின் தொடர்ந்து சென்றனர். வெயில் மிகவும் கடுமையாக இருந்தது. சிறு குன்றுகள் மீது ஏறி, இறங்கி செல்ல வேண்டியிருந்தது.


ஒரு முறை அபாத்  தன் கையிலிருந்த கம்பால் உமரை  அடித்தான்.


"நாய் மகனே, விரைந்து செல்."


தலைவர் வேகமாக முன் சென்று அபாதை கடுமையான வார்த்தைகளால் திட்டினார்.


தலைவரின் உடல் மிகவும் பருமனாக இருந்ததால் அவரால் வேகமாக நடக்க இயலவில்லை. அவர் மிகவும் சுகவாசியாக வாழ்ந்திருக்க வேண்டும்.  அவர் உடலெங்கும் வியர்வையால் தொப்பலாக நனைந்திருந்தது. அவ்வப்போது மூச்சிரைத்து அமர்ந்து விடுவார்.


சிறிது நேரத்தில் ஒரு கிராமத்தை அவர்கள் அடைந்தனர். அவர்கள் யாரென்று தெரியாவிட்டாலும் கிராமத்தினர் அவர்களுக்கு உண்ண உணவும், தங்க இடமும் அளித்தனர்.


தலைவரும், தல்வாரும் ஓர் அறையிலும், சிறுவர்கள் இன்னொரு அறையிலும் தங்கினர். காவலுக்கு அபாத் வெளியே அமர்ந்திருந்தான்.


அதுவரை மௌனமாகவே இருந்த சகோதரர்கள் இருவரும்,  தனித்து இருந்ததால் பேச ஆரம்பித்தனர்.


உமர் - "இந்த வேசிமகன்கள் நம்மை என்ன செய்வார்கள் என்று நினைக்கிறாய்."


அகமது - "இவர்கள் பேச்சிலிருந்து காபூலில் நம்மை ரஷ்யர்களிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்று ஊகிக்கிறேன்."


உமர் - "ரஷ்யர்கள் நம்மை என்ன செய்வார்கள்."


அகமது - "ரஷ்யாவில் செர்பியா என்றொரு இடம் இருக்கிறது. அங்கிருக்கும் குளிர் வேறு எங்கும் இல்லையாம். அங்கு நமக்கு கடுமையான வேலைகள் கொடுத்து கைதிகளாக வைத்திருப்பார்கள். அங்கு சென்றவர்கள் யாரும் உயிரோடு பிழைத்தது கிடையாது."


உமர் - "இந்த மூன்று இந்தியர்களின்  வம்பிற்கு நாம் போகவே இல்லை.  பிறகு ஏன் நம்மை ரஷ்யர்களிடம் ஒப்படைக்க வேண்டும்."


அகமது - "நான் ஊகிப்பது என்னவென்றால் இவர்கள் ஆங்கிலேயரிடமிருந்து தப்பித்து ரஷ்யர்களிடம் அடைக்கலம் தேடி செல்கின்றனர். நாம் ரஷ்ய வீரர்களை கொன்றிருக்கிறோம். நம்மை  ஒப்படைத்தால், இவர்கள் கோரிக்கைக்கு ரஷ்யர்கள் சுலபமாக ஒத்துக்க கொள்வார்கள் என்று நினைக்கிறார்கள்."


உமர் - "எனக்கு பயமாக இருக்கிறது.  என்னால் செர்பியா எல்லாம் சென்று சாக முடியாது. நான் இங்கேயே சாகிறேன்."


அகமது மெளனமாக யோசித்தான்.


உமர் - "அகமத். இவர்கள் தலைவனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்."


அகமத் - "இவன் உடலில் வெறும் ஊளை சதை மட்டும் தான் இருக்கிறது. பத்தடி நடந்தாலே மூச்சிரைக்கிறது. இவனெல்லாம் எப்படி தலைவன் ஆனான் என்று வியப்பாக இருக்கிறது."


உமர் - "இவனிடம் ஏதோ ஒரு காந்த சக்தி இருக்கிறது.  நீ துப்பாக்கி பிடித்திருக்கும் போது எப்படி பயமின்றி, கம்பீரமாக நடந்து வந்தான். உன் கைகளே நடுங்கியதே. உன்னை இவ்வளவு கோழையாக இதற்கு முன் நான் பார்த்ததே கிடையாது."


அகமத் உமரை கால்களால் எத்தினான்.


"கேலியா செயகிறாய். இப்போது கேட்டுக் கொள். அந்த நாயை நான் தான் கொல்வேன். அவனுடைய சவத்துடன் உன்னையும் சேர்த்து  புதைப்பேன்."


உமர் முகத்தைத் திருப்பி படுத்துக் கொண்டான். அகமத் உறங்கவில்லை. அவன் மனம் ஆழ்ந்த யோசனையில் இருந்தது.


அடுத்த நாள் அவர்களின் நடைப்பயணம் தொடர்ந்தது. நேற்று போலன்றி தலைவர் வேகமாகவும், தொய்வின்றியும் நடந்தார். உடல் பலம் இல்லையென்றாலும் மன பலத்தினால் எதையும் சாதிக்கக் கூடியவர் என்று சிறுவர்கள் உணர்ந்தார்கள்.


மதியம் ஒரு கிராமத்தில் உணவருந்தி இளைப்பாறினார்கள் . அப்போது  அவர்களை ஒரு பிரிட்டிஷ்  ராணுவ குழு கடந்து சென்றது. 


அகமது தனது ஒரு விரலை உயர்த்தி உடனே செல்ல வேண்டும் என்றான். நேரம் கடத்தாதே, உடனே வா என்று அபாத் அரட்டினான்.


சிறிது நேரத்தில் அகமதும்  அவனுடன் சில ஆங்கிலேய வீரர்களும் வந்தனர். உடனே அபாத் உள்ளே ஓடினான். வீட்டின் உரிமையாளர் ஆங்கிலேய வீரர்களுடன் உரத்தக் குரலில்  விவாதம் செய்து கொண்டிருந்தார்.  வீரார்கள் அவரை எட்டி தள்ளி விட்டு குடிசைக்குள் நுழைந்தனர். யாரும் இல்லாததைக் கண்டு அகமதை அறைந்து  விட்டு சென்றனர்.


அவர்கள் தப்பி விட்டார்கள். என்னுடன் வாருங்கள் நான் அவர்களைக் காண்பிக்கிறேன்”, என்ற அகமதின் காட்டு கத்தலைப் பொருட்படுத்தாமல் அகன்றனர்.


பிரிட்டிஷ் வீரர்கள் சென்றவுடன் , ”உமர்! உமர்! " என்று அலறியவண்ணம் அகமது ஓடினான்.


குன்றுகளின் பாதையில் எங்கெல்லாம் தேடியும் அகமதினால் உமரையும் மற்ற மூவரையும் கண்டு பிடிக்க முடியவில்லை. 


சிறிது நேரத்தில் அழுகையுடன் ஒரு பாறை அடியில் அமர்ந்தான். களைப்பினால் அவன் தலை சுற்றியது. மயக்கம் வருவது போல இருந்தது.


அவன் முன் உமர் நின்றான்.  


"உமர் நீயா!"


உமர் ஓடி வந்து கன்னத்தில் அறைந்தான். கையில் ஒரு பெருங்கல்லை எடுத்து அடிக்க ஓங்கினான்.


"எருமைக்குப் பிறந்தவனே. இனி என்னை விட்டு நீ எங்கேயாவது சென்றால் இந்தக் கல்லாலேயே உன்னை அடிப்பேன்"


அகமது உமரை அணைத்துக் கொண்டான்.


தலைவர் அவர்கள் அங்கிருந்து நகர வேண்டும் என்று அவசரப்படுத்தினார். சிறுவர்களை தாக்கக்கூடாது என்று  அபாதை அவர் எச்சரித்ததால்,  முறைத்துக் கொண்டு  அவன் முன்னாள் சென்றான்.


மாலை முழுவதும் நடந்து, இரவில் ஒரு கிராமத்தின் குடிசையில் தங்கினர். அனைவரும் உறங்கி கொண்டிருக்கும் நள்ளிரவில் அகமத் உமரை எழுப்பினான். பயத்தில் உமர் சத்தம் போட முயல, அகமத் அவன் வாயை மூடினான்.


"நீ போய் வெளியே காத்திரு. நான் இம்மூவரையம் கொன்றுவிட்டு வருகிறேன்."


"எப்படி கொல்வாய்."


அகமத் தன் கையிலிருந்த கூர்மையான கத்தியை காண்பித்தான்.


"அந்த ஆங்கிலேய வீரர்களிடமிருந்து களவாடினேன். இவர்களின்  தலைவனை முதலில்   கொன்று, மற்ற இருவரின் கதையையும் முடித்து விட்டு வருகிறேன். நீ வெளியே போ."


அகமத் மெதுவாக தலைவர் இருந்த அறைக்குச் சென்றான். தலைவர் சீரான மூச்சு விட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.


அகமத் கத்தியை ஓங்கி அவர் கண்களை நோக்கி செலுத்த, கண நொடியில், தலைவர்  அகமதின் கையை இறுக்கப் பற்றினார்.


அவனை தன் அருகில் அமருமாறு ஜாடை காட்டினார்.


"அந்த இரு ரஷ்ய வீரர்களை எதற்கு கொன்றீர்கள். நீங்கள் ஆங்கிலேயரின் ஒற்றர்களா?"


"இல்லை. நாங்கள் காபூல் சென்று தொழில் செய்து பிழைக்க எண்ணினோம். வண்டி தேவைப்பட்டதால் அவர்களைக் கொல்ல நேரிட்டது."

 

"நீங்கள் செய்தது குற்றம். இரு ராணுவ வீரர்களைக் கொன்றிருக்கிறீர்கள். அதற்கான தண்டனையை நீங்கள் அனுபவிக்க வேண்டும்."


"இது எங்கள் மண். ஆங்கிலேயர், ரஷ்யர், இந்தியர்களுக்கெல்லாம் இங்கு என்ன வேலை"


"ரஷ்யர்களிடம் உங்களுக்கென்ன பிரச்சினை. உங்கள் எதிரி ஆங்கிலேயர் தானே."


"யாராய் இருந்தால் என்ன. எங்கள் நாட்டை எரித்து குளிர் காய  நினைக்கும் எவரையும் கொல்வோம்.  ஆங்கிலேயரிடம் அடிமை வாழ்க்கை நடத்தும் இந்தியர்களுக்கு எங்களின் சுய மரியாதை பற்றி புரியாது. இந்த மண்ணில் கால் வைத்த எந்த அன்னியனும் நிலைத்தது இல்லை"


தலைவர் பிரமிப்புடன் அகமதை பார்த்தார்.


போ. உன் தம்பியுடன் சென்று உறங்கு."


அடுத்த நாள் பயணம் மிகவும் கடுமையானது. குன்றுகள்  முழுதும் முட்புதர்களால் சூழ்ந்திருந்தது.


தலைவர்  இப்போது நடப்பதற்கு மிகவும் பழகியிருந்தார். வேகமாக அனைவருக்கும் முன்னால் விரைந்து நடந்தார்.


மதிய வெய்யில் கடுமையாக எரித்தது. எவ்வளவு நீர் குடித்தும் நாக்கு வறண்டே இருந்தது. முட்கள் குத்தியதால் அனைவருக்கும் உடலெங்கும் காயங்கள் இருந்தது. தலைவர் நிதானமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.  உமருக்கு நடப்பது மிகவும் கடினமானது. அபாத் சிறுவர்களை விரைந்து நடக்க கடிந்து கொண்டே இருந்தான். 


திடீரென்று அகமத் மயக்கத்தில் சுருண்டு விழுந்தான். தலைவர் அவனை நெருங்கி சோதித்தார். கடுமையான காய்ச்சல் இருந்து. உடல் நீர்ச்சத்தை வெகுவாக இழந்திருந்தது.


தல்வார் - "இவர்களை இங்கேயே விட்டு செல்ல வேண்டும். இந்த வேகத்தில் நாம் நடந்தால் நாளை இரவு ஜலாலாபாதை அடைவோம். அங்கிருந்து ஏதாவது வண்டி பிடித்து காபூல் செல்ல வேண்டும். அவ்வளவு தூரம் இவனையும் தூக்கிக் கொண்டு நம்மால் நடக்க முடியாது."


தல்வார் கூறியதை தலைவர் பொருட்படுத்தாது, அகமதை தோளில் தூக்கி வேகமாக முன்னாள் நடந்தார். அபாத்  பதட்டத்துடன் சிறுவனை வாங்கி தன் தோளில் தாங்கி நடந்தான்.


வெகு தூரம் நடந்தனர். அனைவரும் களைப்புற்றதால் ஒரு பாறையில் அகமதை இறக்கி, அவன் வாயின் நீரை ஊற்றினர். அகமதுக்கு சிறிது நினைவு வந்தது.


"நான் இறந்து போகிறேன். என்னை இங்கேயே விட்டு செல்லுங்கள். உமர், காபூலில் தொழில் செய்து நிறைய பணம் சம்பாதி.  கிழவனையும், கிழவியையும் அழைத்து உன்னுடன் வைத்துக் கொள். கிழவன் நல்லவன். என்னை மன்னிக்கச் சொல்."


அகமத் புலம்பிக் கொண்டே இருந்தான். அபாத் களைத்திருந்ததால் இம்முறை தலைவர் அகமதை தூக்கி நடந்தார்.  சிறிது தூரம் சென்றவுடனேயே அபாத்  மீண்டும் அகமதை வாங்கி தன் தோளில் ஏற்றுக் கொண்டான். அன்றிரவு வழக்கம் போல ஒரு கிராமத்தில் தங்கி, அடுத்த நாள் மீண்டும் நடந்து சென்றனர். இப்போது பாதை எளிதானதால் நடையின் வேகம் கூடியது.


இறுதியாக ஜலாலாபாதை அடைந்து அங்கு ஒரு விடுதியில் தங்கினர். அபாத் ஒரு மருத்துவரை அழைத்து வந்தான். அகமதுக்கு சுரம் கடுமையாக இருந்தது. அவனுக்கு மருந்து அளித்து, மூன்று நாள் முழு ஓய்வு வேண்டும் என்று கூறினார்.


தலைவர் மூன்று நாள் விடுதியிலேயே தங்க வேண்டும் என்று முடிவெடுத்தார். தல்வார் அவருடன் கடுமையாக விவாதம் செய்தார்.


தல்வார் - "இங்கு தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நமக்கு ஆபத்து. இங்கு ஆங்கிலேய படையினரின் போக்குவரத்து மிகவும் அதிகம். அவர்களின் உளவாளிகள் இவ்விடம் முழுதும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களிடம் சிக்கினால் நம் நிலை மோசமாகி விடும். இவ்வளவு கஷ்டப்பட்டதெல்லாம் வீணாகும்."


தலைவர் - "என்ன ஆனாலும் பரவாயில்லை. நம்மை நம்பி வந்திருக்கும் இந்த சிறுவர்களை விட்டு நான்  காபூல் செல்ல தயாராக இல்லை."


தல்வார் - "உங்களை நம்பி ஒரு நாடே விடுதலைக்காக காத்திருக்கிறது. அதை இரு சிறுவர்களுக்காக வீணடிப்பீர்களா."


தலைவர் - "இந்த இரு சிறுவர்களையே காப்பாற்ற முடியாத என்னால் ஒரு நாட்டின் கோடி கணக்கான மக்களை எப்படி காப்பாற்ற முடியும்."


தலைவரின் பிடிவாதம் தல்வாரை சினமுறச் செய்தது. ஒன்றும் பேசாமல் அங்கிருந்து அகன்றார். 


மூன்று நாட்கள் கழிந்தது. அகமதின் உடல் நன்றாக தேறியிருந்தது. அவனால் பேசவும் நடக்கவும் முடிந்தது.


அபாத் ஒரு வண்டி ஏற்பாடு செய்திருந்தான். அன்றிரவு அவர்கள் காபூலை நோக்கி பயணம் செய்தனர். காலை நான்கு மணிக்கு காபூலை அடைந்தனர்.


தலைவர் சிறுவர்களை நோக்கி, "நீங்கள் செய்தது குற்றம். ஆனால் ரஷ்ய  தூதரிடம் உங்களை மன்னிக்க சொல்லி கோரிக்கை வைப்பேன். உங்களுக்கு சாதகமான பதில் கிடைக்காது நான் காபூலை விட்டு செல்ல மாட்டேன்." 


தல்வாருடன் தலைவர் ரஷ்ய தூதரை சந்திக்க சென்றார். வாயிலிலேயே அவர்கள் இருவரும் தடை செய்யப்பட்டனர். எவ்வளவு முயன்றும், இருவருக்கும் தூதரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை.  ஒரு வாரம் கழிந்தும் நிலைமையில் ஒரு முன்னேற்றமும் இல்லை.


ஒரு நாள் ரஷ்ய தூதரின் கார் சேற்றில் மாட்டி நின்று கொண்டிருந்தது.  தல்வார் அவரிடம் சென்று தலைவரை சுட்டி காட்டி, அவர் பெயர் சொல்லி, இந்தியாவிலிருந்து தப்பி வந்திருப்பதாகவும் மாஸ்கோ சென்று ஸ்டாலினை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார். 


தூதர் சந்தேகத்துடன் தலைவரைப் பார்த்தார். இவர்கள் பிரிட்டிஷ் உளவாளிகள் என்று முடிவு செய்து வண்டியில் ஏறி அங்கிருந்து அகன்றார்.


தல்வாருக்கு ஒரு விபரீத யோசனை தோன்றியது.  சற்று தூரத்திலிருந்த ஜெர்மனிய தூதரகத்திற்கு  தலைவரை அழைத்துச் சென்றார். அங்கு இருப்பவர்கள் தலைவர் யாரென்று தெரிந்ததும் ராஜ மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். தலைவர் ஜெர்மனி செல்வதற்கான சாதகமான பதில் பெர்லினிலிருந்து விரைவில் கிடைக்கும் என்று தூதர் உறுதி அளித்தார்.


தலைவர் விடுதிக்கு திரும்பிய போது, உமரும் அகமதும்  அச்சத்துடன் அவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.


"ரஷ்யருடன் பேச்சு வார்த்தை சரியாக முடியவில்லை. உங்களுக்கு இன்று முதல் விடுதலை. நீங்கள் இங்கிருந்து செல்லலாம்."


சகோதரர்கள் இருவருக்கும் பெரும் நிம்மதி வந்தது.


"அப்போது நீங்கள் எங்கே செல்வீர்கள்."


"ஸ்டாலினின் உதவி நாடி வந்தேன், ஹிட்லரிடம் உதவி பெரும் கதவு திறந்துள்ளது. நான் விரைவில் பெர்லின் செல்லவிருக்கிறேன். போகும் முன்  சொல்லி அனுப்புகிறேன்.  அப்போது சந்திக்கலாம்."


தலைவர் சிறுவர்களுக்கு ஒரு பையில் தங்க நாணயமும், பணமும்  அளித்தார்.அதைக் கொண்டு ஒழுக்கத்துடன் தொழில் நடத்துமாறு அறிவுறுத்தினார். 


ஒரு வாரம் கழிந்தது. சகோதரர்கள் தலைவரை சந்திக்க வந்தனர்.


விடுதி முன் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. தலைவர் பெர்லின் கிளம்ப தயாராக இருந்தார்.


சிறுவர்களைக் கண்டதும் முக மலர்ச்சியுடன் அணைத்து பிரியா விடையளித்தார்.


அவர் காரை நோக்கி சென்று கொண்டிருந்த போது  அகமத் அவரை அழைத்தான்.


"தலைவரே! இது வரை உங்கள் பெயரென்ன என்பதை நாங்கள் அறியவில்லை."


"சுபாஷ் சந்திர போஸ்"


நேதாஜி (தலைவர்) சிங்கம் போல  கம்பீரத்துடன் நடந்து காரில் ஏறியதை கண்ணிமைக்காமல் சிறுவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.


                                  ———-******———

Inspired From;-

Babel - Movie

The Lost Hero - Mihir Bose















  

No comments:

Post a Comment