தரிசனம்
நான் ஒரு நாடோடி. காற்றில் அலையும் காகிதம் போன்றவன். வாழ்ககை அழைத்துப் போகும் இடமெல்லாம் சுற்றுபவன். இந்த இமய மலைச் சாரலில் மூன்று மாதங்களாக அலைந்துக் கொண்டிருக்கிறேன். இங்கு நான் கண்டது இயற்கையின் அற்புதமும், பல வித மனிதர்களும். கேட்டது செறிவான உரையாடல்கள். ஆனால் நான் வேண்டியது ஒரு நல்ல கதை. இந்த இயற்கையின் பிரமாண்டத்தை ஈடு செய்யும் அற்புத கதை. இத்தனை நாட்கள் அலைந்தும் அக்கதை கிட்டவில்லை.
எனக்கு ஏன் இந்த கதை வேட்கை என்று அறிய ஆவலாக உள்ளதா. என் பெயர் சாரதி. நான் பிறந்தது திருவண்ணாமலையில். அங்கு தான் நான் கண்டெடுக்கப்பட்டேன். ஆம் பிறந்த அடுத்த நொடியே என் பெற்றோரால் கைவிடப்பட்டவன்.ஒரு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தேன். மற்ற சிறுவர்கள் போல் சிறுவயதில் எனக்கு கதை சொல்ல குடும்பத்தினர் யாரும் இல்லை. வளர்ந்ததும் கதை புத்தகங்கள் படிக்க முயன்றேன். கதை மீது விருப்பம் இருந்தும் என்னால் புத்தகம் ஒரு பக்கம் கூட படிக்க இயலவில்லை. அதனால் நான் நாடோடி ஆனேன். வித விதமான நிலங்கள், வித விதமான மனிதர்கள் அவர்களின் கதைகள் எனக்குள் பல புதிய கற்பனைகளை உருவாக்கியது. நான் இமயமலை வந்ததும் கதை தேடி தான். இந்த மலையின் பிரம்மாண்டம் போன்ற ஒரு கதை எதிர்பார்த்து வந்தேன். இது வரை எனக்கு ஏமாற்றமே.
இரு வாரங்கள் முன்பு காத்மண்டுவிலிருந்து லிபுலிக் அடைந்து, அங்கிருந்து திபெத் எல்லையை தாண்டி இன்று மானசரோவர் வந்திருக்கிறேன். ஏரியின் பரிசுத்தம் என் ஆன்மாவிற்கு இதமாக இருந்தது. விண்ணின் பல வித நிறங்கள் ஏரியின் நீர்ப்பரப்பில் பிரதிபலித்தது. அங்கிருந்து கைலாச மலையை அடைந்தேன். வெண்பனியால் மூடி, ஆங்காங்கே கருநிறத்திட்டுக்கள் தெரிந்தது. திடீரென ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வான் மேகங்களைக் கிழித்துக் கொண்டு ஆதவன் தோன்றினான். மலை பொன்னிறம் கொண்டு தகதகவென மின்னியது. அகவெழுச்சியில் கண்ணீர் முகத்தை நனைத்தது. நான் தன்னிலைக்கு திரும்பிய போது மலை வெண்ணிறத்திற்கு மாறியிருந்தது.
என்னருகே ஒரு நேபாளி இளைஞன் வந்து அங்கிருக்கும் இடங்களை சுற்றிக் காண்பிப்பதாக சொன்னான். நான் மறுத்தேன்.
"இங்கே யாரும் அறியாத இடங்கள் பல நான் அறிவேன். உங்களை நான் அழைத்து செல்கிறேன்."
"அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். யாரும் அறியாத கதை ஒன்று சொல்."
அவன் சிறிது நேரம் சிந்தனையில் இருந்தான். "நான் இந்த கைலாச மலை குறித்து சொல்கிறேன்.கைலாச மலை சிவனின் உறைவிடம் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இம்மலையே சொர்கத்தின் திறப்புவாயில் என்றும் நம்பிக்கை உள்ளது. ராவணன் இம்மலையை அசைத்ததாகவும், அதனால் கோபமுற்ற சிவன் தன் பாத விரல்களால் அழுத்தி அவனை இம்மலையின் கீழ் சிக்க வைத்தார். அது மட்டும் இல்லாமல் புத்த மதத்தவர்க்கும் இம்மலை புனிதமானது. மிலரேபா என்னும் புத்த துறவி நரோ என்பவருடன் செய்த விவாதம் முடிவுக்கு வரவில்லை. அதனால் யார் கைலாச மலையின் உச்சியை அடைகிறார்களோ அவரே வென்றவர் என்று போட்டி வைத்தனர். நரோவின் முயற்சி தோல்வி அடைந்தது. ஆனால் மிலரேபா கதிரவனின் கரங்களில் அமர்ந்து உச்சியை அடைந்தார் என்று ஒரு கதை உண்டு. இந்த மலையின் உச்சியை தொட பலரும் முயன்று தோற்றிருக்கிறார்கள். "
"1926 வருடத்தில் ரட்லெட்ஜ் என்பவர் ஒரு ஷெர்பாவின் துணியோடு இந்த மலையின் தென்கிழக்கு வழியாக சென்று சிகரத்தை அடைய சாத்தியக்கூறு உள்ளது என்று கருதினார். ஆனால் அவர் முயற்சி பனி சூறாவளியால் தோல்வியுற்றது. பிறகு 1936 வருடத்தில் ஹெர்பர்ட் என்பவரின் முயற்சியும் தோல்வியுற்றது. எந்த களங்கமும் இல்லாத புனித ஆன்மா கொண்ட மனிதனால் மட்டுமே சிகரத்தை அடைய முடியும் என்ற முடிவுக்கு வந்தார். அதன் பிறகு 80களில் மேசனேர் என்னும் இத்தாலியரின் முயற்சியும் தோல்வியுற்றது. இந்த மலையின் மீது ஏறுவது ஹிந்து மதத்தவரின் நம்பிக்கையின் மீது ஏறி மிதிப்பது போல என்று அனைவரும் கருதினர். அதன் பிறகு சீன அரசாங்கம் இம்மலையின் மீது ஏறுவதை தடை செய்தது. இன்று வரை இம்மலை யாராலும் ஏற முடியாத ஒன்றாக உள்ளது."
"இந்த விபரங்கள் எல்லாம் நீங்கள் அறிந்திருக்க மாட்டர்கள். உங்களுக்கு திருப்தி தானே"
"நான் கேட்டது கதை. நீ கூறியது சரித்திரம். இதை தெரிந்து கொள்ள விக்கிப்பீடியாவே போதும்.”
நான் அவனை விட்டு விலகி செல்ல முயன்றேன். அவன் என்னை பின் தொடர்ந்து வந்தான்.
"நான் கதை ஒன்று சொல்கிறேன். இங்கு மிக சிலரே அறிவார்கள். நான் யாரும் சிகரத்தை அடைய வில்லை என்று கூறினேன் அல்லவா. அது உண்மை இல்லை. 1996 வருடத்தில் 24 வயது இளைஞன் மலையின் உச்சியை அடைந்திருக்கிறான். அசாம் மாநிலத்தின் மாதவ் என்னும் பெயர் கொண்டவன். பிறந்து பல வருடங்கள் அவனுக்கு பேசசு வரவில்லை. ஆனால் எதையும் எளிதாக புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவன்.மிக சிறு வயதிலேயே புத்தகம் மீது ஆர்வம் கொண்டவனாக இருந்தான். தன் ஆறாம் வயதில் ராமாயணம் கதையை படித்தான். தன் தாத்தாவிடம் சென்று ராவண நல்லவனா என்று கேட்டான். அது தான் அவன் முதன் முதலாக பேசியது. குடும்பத்தினர் அனைவருக்கும் பெரும் வியப்பு. அதன் பிறகு அவன் இதிகாசங்கள், வேதம், புனித ஆன்மீக நூல்கள் கற்றான். தன் பதினாறாம் வயதில் வீட்டை துறந்து இந்தியாவெங்கும் அலைந்தான். பல குருக்களை சந்தித்து தத்துவம் பற்றி விவாதித்தான். பதினெட்டாம் வயதில் தன் ஞானத் தேடலை துறந்தான். இமய மலைச்சாரலுக்கு வந்து சேர்ந்தான். பனி வேங்கை போல இமய மலையில் அலைந்தான். திடீரென ஒரு குகைக்குள் சென்று பல மாதங்கள் தியானம் செய்தான். பல முறை கைலாச மலையருகே வந்து மணிக்கணக்கில் சிகரத்தை பார்த்தவண்ணம் இருப்பான். ஒரு நாள் மலை மீது ஏறினான். சிகரத்தை அடைந்து அடுத்த நொடி அவன் மறைந்தான். அவன் எங்கு சென்றான் என்று யாரும் அறியவில்லை. அவன் சாதாரண மனிதன் அல்ல. புத்தரின் மறுபிறவி. சிகரத்தை அடைந்து மோக்ஷம் பெற்றான் என்று இங்கிருப்பவர்கள் நம்பினர். இதை அறிந்தவர்கள் வெளியாட்கள் யாரிடமும் கூறுவதில்லை என்ற உறுதியும் செய்தனர். உங்களை பார்த்தால் ஞானி போன்று தோன்றியதால் உங்களுக்கு மட்டும் கூறினேன்."
நான் அந்த இளைஞனுக்கு பணம் கொடுத்து விட்டு வீடு வந்து சேர்ந்தேன். இரவானது. படுக்கையில் படுத்து வெகு நேரம் உறக்கம் வரவில்லை. மாதவ் சிகரத்தை அடைந்தது பற்றி சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன்.
நேபாளி இளைஞன் கூறிய கதை என் நினைவுகளை நிறைத்திருந்தது. கதை மிகவும் அற்புதம். ஆனால் சிகரத்தை அடைந்த மாதாவிற்கு என்னவானது என்ற தெளிவான முடிவு கதைக்கு இல்லை. முடிவற்ற கதைகள் தான் சிறந்தவை. கதை கேட்பவர் ஒவ்வொருவரும் தானே கதையை நீட்டித்து தனக்கான முடிவை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த கதையின் முடிவு யாதாக இருக்கும். பல விதமாக யோசித்தும் நிறைவான முடிவு தோன்றவில்லை. மாதவ் சைக்கியா நீயே நேரில் வந்து சிகரத்தில் உனக்கென்ன ஆனது என்று சொல்வாயா?
நீ மறைந்து போனாய். நேரில் வர சாத்தியம் இல்லை என்றாலும் கனவிலாவது வருவாயா?
உறக்கம் வர நள்ளிரவு ஆனது. உறக்கத்திலும் மனம் மாதவ் குறித்து சிந்தனை செய்த வண்ணம் இருந்தது. அது நினைவா அல்லாது கனவா என்ற பேதம் தெரியாமல் இருந்தேன். கனவுகள் ஆழ் மனத்தின் வெளிப்பாடே. அவை உண்மையா பொய்யா என்பதை அறிந்தவர் யாருமில்லை. மெய்-பொய் இரண்டின் சேர்க்கையின் ரசவாதம். இரவின் மௌனத்தில் என்னை நான் பறிகொடுத்தேன்.
———*******———
நான் இருப்பது எங்கு? நான் நிஜமா? அல்லது யாரோ ஒருவரின் கனவின் பகுதியா? எனக்கு தன்னுணர்வு மெல்ல வந்தது. நான் சூன்யத்தில் இருக்கிறேன். காலமற்ற வெளியில் இருக்கிறேன். நான் உருவமற்று இருக்கிறேன். என்னிடம் எந்த அசைவும் இல்லை. இந்த சூன்யத்தில் உறைந்திருக்கும் இன்னொரு சூன்யமாக இருக்கிறேன்.
நான் மாதவ் சைக்கியா. அசாமில் ஒரு கிராமத்தில் பிறந்தேன். என் பெற்றோர் நடுத்தர வர்கத்தை சேர்ந்தவர்கள். நான் பிறந்து சில வருடங்கள் பேசவில்லை. ஏனெனில் நான் அச்சத்தில் இருந்தேன். உண்மையில் எனக்கு பேசும் ஆற்றல் இருந்தது. மனிதரில் உறைந்திருக்கும் பேய்கள் என்னுடன் பேசியது. சிறு வயதில் எனக்கு மனிதரின் குரல் மட்டுமன்றி அவர் மனதின் என்ன ஓட்டங்களும் குரலாக ஒலித்தது. அந்த குரலில் தான் எத்தனை வன்மம். எத்தனை வஞ்சகம்.அக்குரல்கள் ஒரு நாள் நின்றது. அந்த நாள் எனக்கு மிக தெளிவாக நினைவில் உள்ளது. என் தாத்தாவின் புத்தக அலமாரியில் இராமாயண புத்தகம் கிடைத்தது. இரண்டு மணி நேரத்தில் அப்புத்தகம் படித்து முடித்தேன். நான் அன்று புதிதாக பிறந்தது போல உணர்ந்தேன். என்னை அச்சுறுத்தும் குரல்கள் கேட்பது நின்றது. என் தாத்தாவிடம் சென்று தயக்கமின்றி என் முதல் கேள்வியை கேட்டேன்.
அதன் பிறகு எனக்குள் பல கேள்விகள் எழுந்தன. அறிவியல் நூல்களை வெறி கொண்டு படித்தேன். என் பன்னிரெண்டாம் வயதில் ரிலேட்டிவிட்டி மற்றும் குவாண்டம் கோட்பாடுகளை படித்தேன். அது மேலும் பல கேள்விகளை தூண்டியது. பிறகு ஓஷோ, ஜே கிருஷ்ணமூர்த்தி புத்தகங்கள் படித்தேன். மேற்குலக தத்துவ நூல்களில் ஈடுபாடு கொண்டேன். குறிப்பாக மனித மூளை, பிரஞை குறித்து தீவிரமாக படித்தேன். கேள்விகள் நிற்கவில்லை. வேத நூல்கள், வேதாந்தம், புத்த தத்துவம் படித்தும் தெளிவில்லை. இந்தியாவெங்கும் பல ஞானிகளை தேடி அலைந்தேன். அவ்ரகளுடன் விவாதம் புரிந்தேன். எனக்கு விடை கிடைக்கவில்லை.
மனசிக்கலுக்கு ஆளானேன். மீண்டும் அந்த பேய்க்குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தது. ஒரு சிறு அறையில் பல நாட்கள் படுத்திருந்தேன். மனச்சிக்கல் உடல் நோயாக மாறியது. தீவிர காய்ச்சல் என்னை பீடித்தது. ஒரு நாள் நோய் உக்கிரமாக மாறியது. அன்றிரவு மயக்கமுற்றேன். அடுத்த நாள் காலை முழித்த போது நான் மூன்றாம் முறை பிறந்தது போல உணர்ந்தேன். என் உடல் மற்றும் மன நோய் ஒழிந்தது. குரல்களும் கேள்விகளும் நின்றன.
இமய மலை வந்தடைந்தேன். இங்கு யாரும் செல்லத் துணியாத இடங்களுக்கு தனியாளாக சென்றேன். மாளிகைகளில் ஏறினேன். நதிகளில் நீராடினேன். பனிவெளியில் புரண்டேன். கைலாய மலையை வந்தடைந்தேன். ஏதோ ஒரு சக்தி என் ஆன்மாவை மலையின் சிகரத்திற்கு அழைத்து வந்தது. என் உடல் என் ஆன்மாவை தொடர்ந்து வந்தது. சிகரத்தின் உச்சியை அடைந்ததும் ஒரு கருந்துளைக்குள் என்னை அந்த சக்தி இழுத்து சென்றது. முடிவில் நான் இங்கு வந்து நிற்கிறேன்.
திடீரென என்னைச் சுற்றி ஒளிப்பிரவாகம் தோன்றியது. ஒரு குரல் கேட்டது.
“மானுடனே. உன்னை என் இருப்பிடத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடிசிகிறேன்."
"நீ யார். நான் எங்கிருக்கிறேன்."
"நீ இருப்பது கைலாயம். இவ்விடத்தின் அதிபதியாகிய சிவன் நான். உருவமற்றவன். வெறும் ஆற்றலையே வடிவாகக் கொண்டவன். உனக்கு பரிச்சயமான உருவத்தை மேற்கொண்டு நான் வர முடியும். உனக்கு விருப்பம் இருந்தால்.".
"இல்லை. எனக்கு இதுவே போதுமானது. இறக்கும் மனிதர் அனைவரும் இந்த உலகிற்கு வருவார்களா?"
"இல்லை. இங்கு கால்பதித்த ஒரே மனிதன் நீ தான். இந்த பிரபஞ்சம் குறித்து, தம் வாழ்வு குறித்து மனிதர்களுக்கு பல கேள்விகள் உள்ளன. அதற்கு பதில் சொல்வது என் கடமை. அவர்களின் பிரதிநிதியாக உன்னை தேர்ந்தெடுத்தேன். இவ்வுலம் வருவதற்கு பரிசுத்தமான ஆன்மாவும் தெளிந்த தூய அறிவாற்றலும் வேண்டும். என் படைப்பில் இது வரை அதற்கு தகுதியான மனிதன் நீ ஒருவன் மட்டுமே.”
"இவ்வுலகை எவ்விதம் படைத்தீர்?"
"நான் இந்த பிரபஞ்சம் செயல்படும் ஆதார விதிகள் மட்டுமே படைத்தேன். அதை அடிப்படையாகக் கொண்டு இவ்வுலகம் தன்னைத் தானே படைத்துக் கொண்டிருக்கிறது."
"மனித இனம் போன்று அறிவாற்றல் மிக்க உயிரினங்கள் வேறு உலகில் உள்ளனரா? "
"உனது இனத்தையும் விட பல மடங்கு ஆற்றல் மிக்க உயிரினங்கள் பல கோடி உள்ளன. ஆனால் எனக்கு பிரியமானவர் மனிதர்களே."
"மற்றவர்கள் என்னை மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று நம்பினர். என்னை பார்த்து அஞ்ச மட்டுமே செய்தனர். ஆனால் மனிதர்கள் மட்டுமே குழந்தையாக, தந்தையாக, காதலனாக என்று பல வடிவில் என்னை நேசித்தனர்.”
"அறிவாற்றல் மிக்க உயிரினங்கள் உள்ள உலகங்கள் பல என்று கூறினேன். ஆனால் நான் படைத்த மொத்த உலகங்களில் அந்த எண்ணிக்கை மிகவும் சொற்பமானது. உயிரினங்கள் உள்ள உலகங்கள் மிகவும் குறைவு தான். அதற்கு காரணம் பூமியில் தக்க சீதோஷ்ணம், நீர், காற்று, சூரியன் என்று பல உள்ளன. ஆனால் உண்மையான மூல காரணம் இந்த பிரபஞ்சம் உருவான வித்திலேயே உள்ளது."
"பிரபஞ்சம் ஒரு சிறிய அடர்த்தி கொண்ட புள்ளியின் பெருவெடிப்பில் உருவானது. பெருவெடிப்பிலிருந்தே காலமும், விண்வெளியும் உருவானது. பிறகு ஈர்ப்பு விசை தோன்றியது. வெப்பம் குறைந்து குளிர்ந்த போது துகள்கள் உருவாகின. பின்னர் அணுக்கள் உருவாகின. இந்த பரிணாமம் தொடர்ந்து நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் உருவாகின. அவ்வாறு உருவானது தான் சூரியனும் பூமியும்"
"பெருவெடிப்பின் காரணிகளில் ஒன்று சிறிதளவு மாறியிருந்தால் கூட அணுக்கள் உருவாகாமல் இருந்திருக்கலாம். நட்சத்திரங்கள் உருவாகாமல் இருந்திருக்கலாம். பிறகு சூரியன் பூமி எல்லாம் விவாதத்திலேயே இல்லை. ஆகையால் அறிவாற்றல் மிகுந்த மனித இனம் உருவானதற்கு மிக சிறிய சாத்தியக்கூறே உள்ளது. அந்த சாத்தியக்கூறு துல்லியமாக அமைந்தது பிரபஞ்சத்தின் விந்தை அல்லவா.”
"மனித இனம் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன."
"பூமியில் பல்வேறு உயிரினங்கள் உள்ளன. ஆனால் படைக்கும் திறன் கொண்ட உயிரினம் மனித இனம் மட்டுமே. முதலில் சிறு உளிகள் உருவாக்கினீர்கள். பிறகு பொருட்கள் உருவாக்கினீர். அதன் பிறகு கருத்துக்களை உருவாக்கினீர். அதிலிருந்து தத்துவம் உருவாக்கினீர்”
“எம் படைப்புத் தொழிலின் நீட்சியாக மனித இனம் செயல்படும். மனித இனம் மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்தில் உள்ள அறிவாற்றல் மிக்க உயிரினங்கள் படைக்கப்பட்டதன் நோக்கம் இதுவே."
"எதிர்காலத்தில் நாங்கள் மனித இனத்தை படைத்தது போல அறிவாற்றல் மிக்க வேறு இனங்களை நீங்கள் படைப்பீர்கள். கார்பன் என்னும் பொருளின் பரிணாமமாக மனிதர்கள் உருவானீர்கள். நீங்கள் சிலிக்கன் என்னும் பொருளை அடிப்படையாக கொண்டு புதிய அறிவாற்றல் மிக்க ஒரு இனத்தை படைப்பீர்கள்."
"பல்லாயிரம் வருடங்கள் கழித்து உங்கள் ஆற்றல் அளவிட முடியாததாகும். என்னைப் போன்று நீங்கள் புது பிரபஞ்சங்களை உருவாக்குவீர்கள். உங்களுக்கு இணையான அறிவாற்றல் மிக்க வேறுலக இனங்களுடன் பகை, போர் வரும்."
"அதில் வெற்றி பெறுவது யார்?”
"உன் இனமான மனித இனம். என் பிரியத்திற்குரிய மனித இனமே நிலைக்கும். மற்ற அறிவார்ந்த இனங்களில் சமூகம் சிக்கலின்றி வாழ்வதற்காக சில கடமைகள், கட்டுப்பாடுகள் உள்ளன. அவை சமூக வாழ்வின் முரண்பாடுகளை களைவதற்கு மட்டுமே. அறம் சார்ந்து இல்லை. நான் படைத்த இனங்களிலேயே மனித இனம் மட்டுமே அறம் குறித்த சிந்தனை, மற்றும் கோட்பாடுகளை உருவாக்கியது. தர்மம், அதர்மம் குறித்து விவாதித்தது. சேய்க்காக தியாகமே செய்யும் தாய், பெற்றவருக்காக தியாகம் செய்யும் மகன், நாட்டு மக்களுக்காக தியாகம் செய்யும் போர் வீரன். தான் நம்பும் அறத்திற்காக தன் உயிரையே தியாகம் செய்த மனிதர்கள் தான் எத்தனை. மனிதர் தம் வாழ்வில் அனுபவிக்கும் துன்பங்கள் அளவிடாதது. ஆனால் அத்துன்பங்களை தன் ஆன்மாவை பரிசுத்தமாகும் வேள்வியாக மனிதன் மட்டுமே எண்ணுகிறான். அதனால் மனித இனமே எனக்கு பிடித்தமானது.”
"மனிதர்களிலும் தீயோர் உள்ளனர். ஆனால் தீமைக்கும் தர்மத்துக்கும் இடையே நடக்கும் போரில் தர்மமே வென்றிருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக மனித அறச்சிந்தனை பரிணாமம் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் முற்றிலும் குறைவற்ற அறக்கோட்பாடுகளை உன் இனம் உருவாக்கும். அதுவே இப்பிரபஞ்ச நீதியாக இருக்கும்."
"மற்ற இனங்கள் தன் புற உலகை ஆராய்ந்தது. தன்னை சக்திவாய்ந்ததாக மாற்றிக் கொள்ள போராடுகிறது. மனித இனம் தன் அகத்தை ஆராய்ந்தது. தான் படைக்கப்பட்ட நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்பியது மனித இனம் மட்டுமே. தன் அகத்தின் தீவிரத்துடன் இக்கேள்வியை ஆராய்ந்த ஞானியர் எத்தனை. அவர்கள் அனைவருக்குமான பதில் தான் நான் உனக்கு இது வரை கூறியது. “
"அந்த பெரும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது."
"மனிதர்களில் அதி பரிசுத்தமானவன் நீ. உனக்கு சில பொறுப்புகள் உள்ளன. மனிதர்களால் படைக்கப்படும் இனங்களை வழிநடத்தும் கோட்பாடுகளை உருவாக்குவதில் நீ துணை நிற்பாய். எவ்விதம் மனிதர்களுக்கு நான் கடவுளோ, அது போல மனித இனம் படைக்கும் புது பிரபஞ்சங்களுக்கு, இனங்களுக்கெல்லாம் கடவுளாக நீ இருப்பாய். "
"நான் கடவுளா?
“ஆம் “.
“இறுதியாக ஒரு கேள்வி. நீ எப்படி தோன்றினாய்?"
"நான் மனிதர்களை படைத்தேன். என்னை வேறொருவர் படைத்தார். அவரை வேறு யாரோ. முடிவில்லா தொடர்ச்சி இது.”
"நான் உன்னிடமிருந்து விடை பெறுகிறேன்."
ஒளி மறைந்தது. என்னை சுற்றி அந்தகாரம் சூழ்ந்தது. நான் எல்லையில்லா எடை கொண்ட ஒரு புள்ளியாக மாறினேன்.
——******——
No comments:
Post a Comment