Tuesday, May 12, 2015

காலத்தால் அழிவதில்லை - அறிவியல் சிறுகதை

காலத்தால் அழிவதில்லை

                                                                     Chapter 1

"அம்மா நாளைக்கு டூர் போறோமா இல்லையா?"
"தெரியலையே நிஷா. உங்கப்பா இன்னும் வீட்டுக்கு வரலை. கால் மேலே காலா போட்டு பார்த்தாச்சு. போனை எடுக்கவும் மாட்டேங்கிறாரு."
"லீவ்லே என் பிரண்ட்ஸ் எல்லாம் டூர் போயிட்டாங்க. நான் மட்டும் தான் இந்த ஊட்டியிலேயே வீட்லயே இருக்கேன். விளையாடறதுக்கு யாருமே இல்லை."
"சரி மாமாவும் டூர் வராங்க. அப்பா வரலைன்னா அவங்களோட போயிடலாமா."
"அதெல்லாம் கிடையாது. அப்பா இல்லைன்னா நான் வர மாட்டேன்".
தன் நான்கு வயது குழந்தையான நிஷாவை திவ்யா சமாதானப்படுத்தி தூங்க வைக்க முயன்றாள்.  நிஷா அம்மாவின் மடியில் தலை வைத்து தூங்காமல் ஓர் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள்.
வீட்டின் காலிங் பெல் அடிக்க நிஷா "அப்பா" என்று ஓடி கதவைத் திறந்தாள்.
வெளியே ஆதித்யா களைப்பான முகத்துடன் நின்றுக் கொண்டிருந்தான். நிஷாவைப் பார்த்தவுடன் அவளைத் தூக்கி முத்தம் கொடுத்தான்.
திவ்யா - "ஏன் இவ்வளவு லேட் ஆதித்யா. எவ்வளவு போன் பண்ணேன். அண்ணா வேற டூர் வரோமா இல்லையானு கன்பர்ம் பண்ண சொல்றாங்க."
ஆதித்யா - "டூர் கண்டிப்பா போறோம். அதிலென்ன சந்தேகம்."
திவ்யா - "ஏன் தினமும் இப்படி லேட். கேட்டா பிசினஸ்னு சொல்றீங்க. அப்படி என்ன பெரிய பிசினஸ் பண்றீங்க."
ஆதித்யா - "டைமண்ட் எக்ஸ்போர்ட் பிசினஸ். லண்டன் கஸ்டமர் ஒருத்தன் போன்லே கத்திட்டு இருந்தான். அதான் லேட்."
திவ்யா - "சரி டைனிங் டேபிள்லே தோசை வச்சிருக்கேன். சாப்பிட்டு நிஷாவை தூங்க வைங்க."
ஆதித்யா சாப்பிட்டு விட்டு பெட்ரூம் செல்ல, நிஷா ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள்.
"அப்பா. இந்த புத்தகத்திலே இருக்கிற ராஜா உங்களை மாதிரியே இருக்காங்க."
"எங்கே பார்ப்போம்".
படுத்துக்கொண்டு இருந்த திவ்யா புத்தகத்தைப் பிடுங்கி "நேரமாச்சு தூங்கு நிஷா."
ஆதித்யாவும் நிஷாவும் சிறிது நேரத்தில் உறங்கினர்.
நிஷா உறக்கம் வராமல் சிந்தனையில் இருந்தாள். அவள் அருகில் நிஷா பார்த்துக் கொண்டிருந்த பொன்னியின் செல்வன் புத்தகம் இருந்தது.
                               ------******------
நிஷாவும் அவள் குடும்பத்தினரை டூரை மகிழ்ச்சியாகக் கழித்தனர். நான்காம் நாள் கன்னியாகுமரியில் கடல் அலைகளை ரசித்தும், கடல் நீரில் ஆடியும் நேரம் சென்றது. மாலை நேரம் நெருங்கியதால் அங்கிருந்து கிளம்பவேண்டும் என்று ஆதித்யா கூறினான். ஆனால் நிஷாவின் அண்ணன் சூரியாவும் அவன் மனைவி சரிகாவும் மிகவும் விரும்பியதால் விவேகானந்தர் பாறை சென்றனர். பாறையின் விளிம்பில் நின்றுக் கொண்டு சூரியாவும் சரிகாவும் ஒருவரை ஒருவர் அணைத்த வண்ணம் கடல் அலைகளைப் பார்த்து தங்களை மறந்த வண்ணம் நின்றனர்.
ஆதித்யா - "என்ன லவ் பர்ட்ஸ் கிளம்பற மாதிரி தெரியல."
திவ்யா - "எங்க அண்ணனும் அண்ணியும் இங்கே தான் முதன் முதல் மீட் பண்ணாங்க. அதான் கொஞ்சம் செண்டிமெண்டலா ஆயிட்டாங்க. நீங்க என்னை எப்போதாவது இப்படி ஹக் பாணி இருப்பீங்களா".
சிறிது நேரத்தில் அவர்கள் பாறையை விட்டுக் கிளம்பி கரையை நோக்கிப் படகில் சென்றுக் கொண்டிருந்தனர்.
ஒரு சீன வாலிபனும், அவனருகில் காவி உடை அணிந்து உயரமாக தாடியுடன் இருந்த ஒருவனும் தங்களையே நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை திவ்யா பார்த்துத் திடுக்கிட்டாள்.
திவ்யாவின் கண்களில் கலவரம் தெரிந்தது. சூர்யாவைத் தொட்டு அவர்களை நோக்கிக் கையைக் காண்பித்தாள்.
சூர்யாவும் அதிர்ச்சி அடைந்தான்.
படகு கரையை வந்தடைந்ததும் அவர்கள் ஓடி தங்கள் காரை வந்தடைந்தனர். பின்னால் அந்த இருவரும் அவர்களைத் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தனர்.
காரில் டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்ததும் சூரியா - "நாம் நேராக நம் வீடு போகிறோம்.  காரை ஊட்டி நோக்கி செலுத்தப் போகிறேன்".
ஆதித்யா - "வாட்? இன்னும் இரண்டு நாட்கள் டூர் இருக்கிறதே. அடுத்து கேரளா போக பிளான் செய்திருந்தோமே."
சூரியா - "பிளான் எல்லாம் கேன்சல். நாம் இப்போதே ஊட்டி திரும்புகிறோம்."
ஆதித்யா - "என்ன உன் இஷ்டத்திற்கு பிளானை மாற்றுகிறாய்."
திவ்யா - "அண்ணா சொல்றது தான் சரி. இப்போ நாம் ஊட்டி திரும்புவது தான் நல்லது."
ஆதித்யா - "ஏன் நாம் ஊட்டி திரும்ப வேண்டும். போட்டில் இரண்டு பேரைப் பார்த்ததும் இருவரும் பேய் அறைந்தது போல ஆனது எனக்குத் தெரியும். யார் அந்த இரண்டு பேர்."
சூர்யா - "அது பற்றி உனக்குத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை."
ஆதித்யா - "அவசியம் எனக்குத் தெரிய வேண்டும். அண்ணனும் தங்கையும் எல்லா விஷயத்திலும் ஒளிவுமறைவு. "
திவ்யா - "உன்னிடம் அப்படி என்ன மறைத்தோம் ஆதித்யா"?
ஆதித்யா - "உன்னை நான் ஒரு மருத்துவமனையில் சந்தித்தேன். நான் கோமாவில் இருந்ததாகக் கூறினாய். அதற்கு முன் நடந்த சம்பவங்கள் எதுவும் என் நினைவில் இல்லை. நான் யாருக்குப் பிறந்தேன், உன்னை முதன் முதல் எங்கு சந்தித்தேன் இது எதுவும் என் நினைவில் இல்லை. பல முறை இது பற்றிக் கேட்டும் நீ மழுப்பினாய். இப்போது எனக்கு எல்லா உண்மைகளும் தெரிய வேண்டும்."
சூர்யா - "சொல்ல முடியாது ஆதித்யா."
திவ்யா - "சொல்லா விட்டால் உன் தங்கையை நான் டைவர்ஸ் செய்ய வேண்டி வரும்".
அது வரை அமைதியாக இருந்த சரிகா - "ஆதித்யா உனக்கென்ன, நீ யார் என்பது தானே தெரிய வேண்டும். கேட்டுக் கொள். நீ தான் சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன். கி.பி 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தர சோழனுக்குப் பிறந்தவன். சக்கரவர்த்தி ராஜ ராஜ சோழனின் அண்ணன்".
ஆதித்யா நம்ப முடியாதவனாய் - "வாட்! குடும்பமே பைத்தியகாரக் குடும்பமாய் இருக்கும் போலிருக்கிறதே".
சூர்யா - "யாரும் இங்கு பைத்தியம் இல்லை அதித்யா. சரிகா கூறுவது அனைத்தும் உண்மை. நீ தான் ஆதித்த கரிகாலச் சோழன். ஆறு வருடங்கள் முன் நடந்த என் கதையைச் சொல்கிறேன். அப்போது உனக்கு அனைத்தும் தெளிவாகும்.
                          --------********----------
ஆறு வருடங்கள் முன்பு
சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய திருவல்லிக்கேணி குறுகிய சந்தில் உள்ள அந்த வீட்டுக்குள் இருந்து கந்தர் சஷ்டி கவசம் பாடல் வந்து கொண்டிருந்தது. அந்த வீடு மிகவும் சின்னதாகவும் பழையதாகவும் இருந்தாலும் ஒரு அம்சமான கலை வீட்டுக்கு இருந்தது 
அந்த வீட்டில் வசித்த குடும்பத்தில் மொத்தம் மூன்று உறுப்பினர்.
"அடுத்த வாரம் செமஸ்டர் எக்ஸாம் வச்சிகிட்டு இப்போ எந்த புக்கைப் படிச்சிகிட்டு இருக்க. டாக்டர் படிப்புனா அவ்வளவு சாதாரணமா போச்சு உனக்கு" என்று பொரிந்துக் கொண்டிருந்தாள் ரேவதி.
"சும்மா அனத்திகிட்டு இருக்காத அம்மா. எப்போ பார்த்தாலும் பாடமும் கையுமா தான் இருக்கணுமா. அதான் ஒவ்வொரு செமஸ்டர்லயும் டிஸ்டிங்சன் வாங்கிடறேன் இல்ல. அப்புறமும் ஏன் தொல்லை பண்றே. கதை ரொம்ப விறு விறுப்பா போய்கிட்டு இருக்கு. தொந்தரவு பண்ணாதே". என்று சலித்துக் கொண்டாள் திவ்யா. 
"இவ ஒரு பைத்தியம். அந்த பொன்னியின் செல்வன் புத்தகத்தை இதோட ஒரு நூறு தடவையாவது படிச்சு இருப்பா. அப்படி என்ன தான் அதிலே இருக்கோ தெரியலே.  இவ அண்ணன் நைட் வேலை பார்த்து லேட்டா வந்துட்டு அப்புறம் விழுந்தடிச்சிகிட்டு காலைலே ஆபீஸ் கிளம்பறது, டேய் சூர்யா எழுந்திரிடா."
சிறிது நேரத்தில் சூர்யா கிளம்பி ரெடி ஆகி தட்டில் இருந்த மூன்று தோசைகளை வெகு வேகமாக முழுங்கிக் கொண்டிருந்தான்.
"மெதுவா சாப்பிடுடா. என்ன அவசரம்".
"ஒன்பது மணிக்கு மீட்டிங். அப்புறம் இந்த சண்டே நம்ம வீட்டுக்கு ஒரு கெஸ்ட் கூட்டிட்டு வர போறேன்மா".
"யாருடா அது".
"சஸ்பென்சா இருக்கட்டும் அம்மா."
"எங்கம்மா உன் பொண்ணு ஆளையே காணோம். காலேஜ் கிளம்பியாச்சா."
"இல்ல ஆள் மூட் அவுட். அவ புருஷன் ஆதித்த கரிகாலன் செத்துப் போயிட்டானாம். அந்த ரூமை மூடிகிட்டு அழுதுகிட்டு இருக்கா.
"ஒரு புத்தகத்தில வர கேரக்டர் மேலே இவ்வளவு பிடிப்புன்னா அவ புருஷன் மேல எவ்வளவு பாசமா இருப்பா. கொடுத்து வச்சவன் என் மச்சான். நானும் அந்த புத்தகம் ஒரு தடவையாவது படிக்கணும்னு பாக்கறேன். ஆனா ஆறு பாகங்கள் எப்படி படிக்கறாங்க. அதுவும் உன் பொண்ணு இதோட ஒரு நூறு தடவையாவது படிச்சு இருப்பா. நாலு பக்கம் ஒரு புத்தகத்தில படிச்சாலே நமக்கு தூக்கம் வருது. "
சாப்பிட்டு முடித்து சூர்யா வெளியே வந்து பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
"பார்த்துப் போடா." என்று அம்மா வழி அனுப்ப வெளியே வந்தாள்.
"அப்புறம் உன் கெஸ்ட் வராங்கன்னு சொன்னியே. எதாவது சமைச்சு வைக்கணுமா".
"அதெல்லாம் வேணாம்மா அவங்க வந்து உனக்கு சமைச்சுத் தருவாங்க."
"அவங்க சமைப்பாங்களா" என்று குழம்பி கேட்பதற்குள் பைக்கில் சென்று விட்டான் சூர்யா.
சென்னை அடையாரில் உள்ள ஹோட்டலில் யாருக்காகவோ சூர்யா காத்துக் கொண்டிருந்தான். பத்து நிமிடம் கழித்து செல்போனில் கால் செய்தான்.
ரெண்டு தடவை ரிங் செய்தும் எதிர் தரப்பில் எடுக்காததால் பொறுமை இழந்த போது அழகிய நிலவைப் போல் நிஷா வந்து அமர்ந்தாள்.
சூர்யா அவளைப் பார்த்து முறைத்து "கால் பண்ணா எடுக்க மாட்டியா". 
"கிட்டத்தட்ட ஹோட்டல் வாசல் வந்துட்டேன். இன்னும் ஒரு நிமிஷத்துலே சந்திச்சுடுவோம்னு எடுக்கலே".
ஒரு மாசமா நாம சந்திக்கவே இல்லை. பெங்களூர் போறதா சொன்னியே, என்ன பண்ணே”.
ஒரே கலக்கல். என்னோட கசின் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்தான். அவனோட ஒரே சுத்தல் தான்.”
சூர்யா முகம் ஜிவ்வென்றானது. கோபத்துடன் எழுந்து வெளியே வந்த போது, அங்கு நிஷா அவன் பைக்கில் அமர்ந்து கண்ணாடியில் தன் கேசத்தை சரி செய்துக் கொண்டிருந்தாள்.
“என்ன உடனே எழுந்திருச்சிட்டே. எவ்வளவு ஆர்வமா சொல்லிட்டு இருந்தேன். என் கசின் பத்தி சொன்னேன் இல்லை அவன் போட்டோவைப் பார்க்கிறாயா”.
“இங்க பார் இது தான் என் கசின்.”
போட்டோவில் தன் முகத்தைப் பார்த்ததும் வழிந்தான் சூர்யா.
“அதுக்குள்ளே இவ்வளவு கோபமா”?  
“உண்மையிலே நீ இல்லாம ஒரு மாசம் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்.”
“எங்க ஆன்ட்டிக்கு உடம்பு முடியல. ஹாஸ்பிடல்ல இருந்து அவங்களைக்  கவனிச்சுகிட்டு இருந்தேன்
“நிஷா இந்த வாரம் நீ எங்க வீட்டுக்கு வரணும்.  அம்மாகிட்ட உன்னை அறிமுகம் பண்ணலாம்னு இருக்கேன்.”
“ரொம்ப நெர்வஸா இருக்குடா. உங்க அம்மா நம்ம விஷயம் தெரிஞ்சா கோபப்படுவாங்களா.”
“கண்டிப்பா உன்னைப் பார்த்தா எங்க அம்மாவுக்குப் பிடிக்கும். சன்டே உன்னை வந்து பிக்கப் பண்றேன்.”

                       

                           இரண்டு நாள் கழித்து 
அடையார் பெசன்ட் நகரில் உள்ள அந்த பஸ் ஸ்டாண்ட் அருகில் நிஷா வெறுப்புடன் தனது ஸ்கூட்டரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இதோடு ஒரு இருபது தடவையாவது ஸ்டார்ட் செய்திருப்பாள். தனது செல்போன் எடுத்து கால் செய்தாள்.
"சூர்யா உங்க வீட்டுக்கு வர லேட் ஆகும்னு நினைக்கிறேன். ஸ்கூட்டர் மக்கர் பண்ணுது. ஆட்டோ பிடிச்சி வரேன்".
"இப்போ எங்கே இருக்கே".
"அடையாரில் இருக்கேன்".
"ஓகே நான் பக்கத்திலே தான் இருக்கேன். வந்து பிக்கப் பண்றேன். ஒரு பதினைந்து நிமிடம் வெயிட் பண்ணு".
நிஷா பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து டிராபிக் சிக்னலில் சூர்யாவின் பைக் தெரிந்தது. சூர்யா தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து லேசாகச் சிரித்தாள்.
அப்போது ஒரு இரண்டு வயது குழந்தை ரோட்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. குழந்தையின் தாய் யாருடனோ மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தாள். குழந்தையைக் கவனிக்கவில்லை. ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. டிரைவர் செல் போனில் பேசிக்கொண்டே வந்ததால் அவனும் குழந்தையைப் பார்க்கவில்லை. நிஷா உடனே குழந்தையைக் காப்பாற்ற ஓடினாள். அதற்குள் அந்த கார் நிஷாவைத் தூக்கி அடித்தது. குழந்தை ரோட்டின் அடுத்தப் பக்கம் பத்திரமாகச் சென்று விட்டது. நிஷாவையே பார்த்துக் கொண்டிருந்த சூர்யா பைக்கை அப்படியே போட்டு விட்டு ஓடி வந்தான்.
நிஷாவின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.                                                                                                        
                              2 வாரம் கழித்து
தனது அறையில் சூர்யா படுத்துக் கிடந்தான். இரண்டு மாதமாக சூர்யா அந்த அறையில் தான் இருந்தான். சிறிது நேரம் வந்து டிவி பார்ப்பான். பிறகு அறைக்குச் சென்று கதவை மூடிக் கொள்வான். தனது பர்சில் உள்ள நிஷாவின் போட்டோவைப் பார்த்துக் கொண்டே இருப்பான்.
அவன் அம்மா இட்லி எடுத்து வந்து அவனுக்கு ஊட்டி விட்டாள்.
பாத்திரம் கழுவி விட்டு சூர்யா அறை வந்ததும் அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அறையில் சூர்யா காணவில்லை.
                                  -------*******--------
கன்யாகுமரி நோக்கிச் செல்லும் வோல்வோ பஸ்ஸில் சூர்யா ஒரு வெறுமையான பார்வையோடு உட்கார்ந்து இருந்தான்.  
"சார் டிக்கெட் ரிசர்வ் பண்ணீங்களா" என்றார் கண்டக்டர்.
இல்லை என்று தலை ஆட்டினான் சூர்யா.
"சரி ஐநூறு ரூபாய் கொடுங்க. வண்டி கன்னியாகுமரியில தான் நிக்கும்".
சூர்யா ஒரு ஆயிரம் ருபாய் நோட்டை நீட்டினான். கொடுத்த மீதி சில்லறையைக்  கவனிக்காமல் இருந்தான். கண்டக்டர் சூர்யாவின் பாக்கெட்டிலேயே சில்லறையை வைத்து விட்டுச் சென்றார்.
அடுத்த நாள் காலையில் வண்டி கன்னியாகுமரி வந்து சேர்ந்தது.
சூர்யா நாள் முழுவதும் திக்கில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தான். கடற்கரை அருகே வந்தான். படகில் ஏறி விவேகானந்தர் பாறைக்கு வந்தான். அங்கு உள்ள தியான அறையில் அமர்ந்தான். கண்ணை மூடிய போது மனம் ஓர் நேர்க்கோட்டில் வந்து நின்றது. ஒரு ஒளி வெள்ளம் தெரிந்தது. அதில் நிஷாவின் முகம் தெரிந்தது. என்னிடம் வா என்று அந்த உருவம் கையை நீட்டி அழைத்தது.
சூர்யா சட்டென்று எழுந்தான். பாறையின் விளிம்புக்கு வந்தான். கடல் அலைகள் ராட்சத வேகத்தில் பொங்கி வந்து கொண்டிருந்தது. அலைகளை உக்ரமாக பார்த்து சிறிது நேரம் நின்றான். பிறகு கடலில் விழுந்தான்.
அவன் பின்னால் இன்னொரு நபரும் விழுந்தது தான் அவன் கடைசியாக உணர்ந்தது. கடலின் அலைகள் அவனைத் தூக்கி அடித்து விளையாடியது. சிறிது நேரத்தில் மயக்கம் அவனை ஆட்கொண்டது.
                              ------********-------
சூர்யா கண் விழித்துப் பார்த்தபோது ஒரு பெரிய அறையில் இருப்பதை உணர்ந்தான்.  மெதுவாக எழுந்து ஜன்னல் பக்கம் பார்த்தபோது, கடற்கரை ஒட்டிய ஒரு பெரிய பங்களா போன்ற வீட்டில் தான் இருப்பதை அறிந்தான்.
சிறிது நேரம் கழித்து வயதான மனிதர் வந்தார். "இப்போ எப்படி இருக்கே. ஏறக்குறைய ஆறு மணி நேரம் உனக்கு சுய நினைவு இல்லை."
சூர்யா "நான் கடலில் விழுந்த போது என்னைக் காப்பாத்தினது யார் "
"அவங்களை வெகு சீக்கிரம் சந்திப்பாய். என் பெயர் சந்துரு. நான் ஒரு சைன்டிஸ்ட் . இங்கே கீழே எங்களோட ஒரு பெரிய ஆராய்ச்சிக் கூடம் இருக்கு".
வெளியே "Excuse me" என்று குரல் கேட்டது. 
"உன்னைக் காப்பாத்தினது யாருன்னு கேட்டியே, அது இவங்க தான்"
அந்த நபரைப் பார்த்ததும் சூர்யா ஒரு இருபது வயது இளம் பெண்ணா தன்னைக் காப்பாற்றியது என்று வியப்படைந்தான்.  
என் பெயர் சரிகா. நான் நீச்சல்ல தேசிய சாம்பியன். அதனால பிழைச்சீங்க " என்று சிரித்தவாறே சொன்னாள் அந்தப் பெண்.
"என் பெயர் சூர்யா. நான் வில் போட்டியில் தேசிய சாம்பியன்”.
"என்ன ஜோக்கா?"
"நான் உண்மையா தான் சொல்றேன். ஆசிய விளையாட்டில் கலந்து கொள்ளும் தேர்வுப் போட்டியில ஒரு  பாய்ண்டில ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டேன். அது மட்டுமில்லை ஹார்ஸ் ரைடிங் கூட எனக்குத் தெரியும்".
சரிகா - "ஏன் அப்படி ஒரு முடிவு எடுத்தீங்க. ரொம்ப பர்சனல் அப்படின்னா சொல்ல வேண்டாம்".
"இல்லை நீங்க என் உயிரைக் காப்பாற்றி இருக்கீங்க. அதனால உங்களுக்கு சொல்லக் கடமைப்பட்டு இருக்கேன்" என்று சூர்யா தன் கதையைச் சொன்னான்.
"சராசரி லவ் பெயிலியர் கதை தான். சரியான கோழை இவன்னு நினைக்கறீங்களா". 
"நான் லவ் பண்ணது கிடையது அதனால உங்க வலி எப்படிப்பட்டதுன்னு என்னால சொல்ல முடியலே. எனக்குத் தெரியாத ஒரு விஷயத்தைப் பத்தி நான் ஜட்ஜ் பண்ண விரும்பலே. சரி இதுக்கப்புறம் என்ன பண்ணப் போறீங்க".
"மறுபடியும் தற்கொலைக்கு முயற்சிப்பேன்".
"இது சுத்தப் பைத்தியக்காரத்தனம்.அப்போ நான் அவ்வளவு ரிஸ்க் எடுத்து கஷ்டப்பட்டதெல்லாம் வேஸ்ட் தானா".
"என் நிஷா இல்லாத ஒரு வாழ்க்கையை என்னாலே யோசிக்கக் கூட முடியலே. என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இல்லாத மாதிரி இருக்கு".
சிறிது நேரம் அவர்கள் இடையே மௌனம் நிலவியது. சரிகா எதுவும் சொல்லாமல் அறையை விட்டு நகர்ந்தாள்.                                       
அன்று மாலை சந்துரு, சரிகா வந்தனர்.
சந்துரு மெதுவாகப் பேச ஆரம்பித்தார், "உன் மன நிலை பற்றி சரிகா சொன்னாள். எல்லா முடிவிலும் ஒரு ஆரம்பம் இருக்கு. உன் வாழ்க்கைக்கு ஒரு இலட்சியம் இருக்கு. அதை முடிக்காம நீ இந்த உலகத்தை விட்டுப் போக முடியாது".
"என் வாழ்க்கையின் இலட்சியம் நிஷாவோட வாழறது தான். அதை விட முக்கியம் எதுவும் இல்லை".
"நீ தப்பா நினைக்கலைன்னா நான் ஒரு யோசனை சொல்றேன்.”.
"சொல்லுங்க".
"நாங்க ஒரு ஆராய்ச்சி பண்றோம். அதுக்கு நீ உதவி செய்யனும்".
"என்ன ஆராய்ச்சி".
"நீ நிறைய படத்திலே, புத்தகங்களில படிச்சு இருப்பாய். கால இயந்திரம் அப்படின்னு கண்டிப்பா நீ கேள்விபட்டு இருப்பாய். அது தான் எங்க ஆராய்ச்சி. இந்த இயந்திரம் மூலம் நாம சரித்திர காலத்துக்கும் போக முடியும் எதிர் காலத்துக்கும் போக முடியும்".
"நடக்கக் கூடிய விஷயமா பேசுங்க சார். இதெல்லாம் எப்படி சாத்தியம். இதுல என் உதவி என்ன தேவைப்படும்".
"நாங்க கால இயந்திரத்தை அதோட முழு வடிவுல செயல்படும் அளவுக்கு முடிச்சு இருக்கோம். இதன் மூலம் ஆயிரம் வருடங்கள் முன்னாள் சரித்திர காலத்துக்குப் போய்த் திரும்பி வர முடியுமானு டெஸ்ட் பண்ணனும்".
"என்னை தான் முதன் முதலாக பரிசோதனைக்கு அனுப்புகிறீர்களா?"
"இல்லை. உனக்கு முன் மைக் லீ என்கிற மேகாலயா மாநிலத்து இளைஞனை அனுப்பினோம். அவனைக் கண்டுபிடித்தது திரும்ப அழைத்து வருவது தான் உனது மிஷன்."
"இதற்கு ஏன் நான். உங்க உதவியாளர் யாரையாவது கேட்கலாமே. ஏன்  நீங்களே ட்ரை பண்ணிப் பார்க்கலாமே".
"அது அவ்வளவு சுலபம் இல்லை. என்னுடைய ஒவ்வொரு உதவியாளரும் இந்த ஆராய்ச்சிக்குத் தேவை, நான் உற்பட. அதனால இந்த ஆராய்சியில சம்பந்தபட்டவங்க யாரையும் பயன்படுத்த முடியாது. காரணம் உயிருக்குப் பயந்து இல்லை. அவர்களுடைய இழப்பு இந்த ஆராய்ச்சிக்குப்  பெரிய இழப்பா  இருக்கும்".
"நான் மட்டும் என் உயிரை எதற்கு ரிஸ்க் பண்ணனும்".
"கொஞ்சம் முன் தான் உன் உயிருக்கு எந்த அர்த்தமும் இல்லை தற்கொலை பண்ணப் போறேன்னு சொன்னே. எந்தப் பயனும் இல்லாம உன் உயிரை வெறுமனே பலி கொடுக்கறதுக்கு எங்க ஆராய்ச்சிக்கு நீ உதவி பண்ணலாமே. இதுலே ரிஸ்க் இல்லைன்னு சொல்லலே. ஆனா இது வெற்றிகரமா முடிஞ்சுதுன்னா மனித இனத்துக்கு எவ்வளவு பெருமை".
"யோசிக்கற மாதிரி தான் இருக்கு. இதுலே கண்டிப்பா ஒரு த்ரில் இருக்கத் தான் செய்யுது. அதுக்காகவே ஒத்துக்கலாம்னு நினைக்கிறேன்.”
சூர்யாவுக்கு அடுத்த சில நாட்கள் அந்தக் கால இயந்திரம் பற்றிய பயிற்சி நடந்தது. அவனிடம் வீடியோ ரெகார்டர் போல கைக்கு அடக்கமான ஒரு கருவி கொடுக்கப்பட்டது. அதை இயக்கினால் அவன் திரும்ப நிகழ்காலத்துக்கு வர முடியும் என்றும் சொல்லப்பட்டது. மைக் லீயின் புகைப்படமும் அவனுக்குத் தரப்பட்டது.
அந்தக் கால இயந்திரத்தின் மூலம் சரித்திர காலம் செல்லும் ஆராய்ச்சிக்கான நாளும் வந்தது. சூர்யா கால இயந்திரத்தின் உள்ளே நுழைந்தான். தன் பயிற்சியில் சொல்லிக் கொடுத்தது படி அந்த இயந்திரத்தை இயக்கினான். சிறிது நேரத்தில் அவன் அந்த இடத்தை விட்டு மறைந்தான்.





Chapter 2
                               வருடம் கி.பி 983

அடர்ந்த காட்டுக்குள் சூர்யா சுய நினைவு இன்றிக் கிடந்தான். சிறிது நேரம் கழித்துக் கண் விழித்துப் பார்த்தான். உடலில் ஒவ்வொரு செல்லும் ஊசி வைத்துத் தைப்பது போல ஒரு உணர்வு. அருகில் ஒரு அழகிய நதி சென்று கொண்டிருந்தது. அதில் தண்ணீர் அருந்தினான். அது போன்று இனிமையான நீர் தனது வாழ்நாளில் என்றுமே அருந்தியது கிடையாது. இப்போது கொஞ்சம் அவனுக்கு நினைவு வந்தது. தான் ஆயிரம் வருடங்கள் முந்தைய காலகட்டத்திற்கு வந்திருப்பதை எப்படி தீர்மானப்படுதுவது என்று யோசித்து நதியின் கரை ஓரமாக நடக்க ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில் புயல் அடிப்பது போல பெரும் சத்தம் கேட்டது. அவன் திரும்பிப் பார்த்த போது மூன்று பேர் குதிரையில் வெகு வேகமாக வந்து கொண்டிருந்தனர். அவர்கள் பார்ப்பதற்கு பண்டைய காலத்து வீரர்கள் போல தெரிந்தனர். 
அவனைச் சுற்றி ஒரு வளையம் போல நின்று கொண்டு "யாரடா நீ. பார்ப்பதற்கு     விசித்திரமான உடைகள் அணிந்து இருகிறாய். தமிழ் பேசுபவனா நீ "
"சோமா இவன் ஏதோ கூத்தில் நடிப்பவன் போல தெரிகிறது. டேய் வாய் திறந்து பேச மாட்டாயா. நீ எந்த நாட்டவன். சோழனா?”
"இடும்பா எனக்கு என்னவோ இவன் வாய் திறக்காததைப் பார்த்தால் ஆதித்த கரிகாலனின் ஒற்றன் என்று தெரிகிறது. இவனை நம் இடத்துக்கு கூட்டிச் செல்லலாம். நம் தலைவர் ரவிதாசர் கேட்கும் விதத்தில் கேட்டால் இவன் பதில் சொல்வான்”.
சூர்யா திமிரத் திமிர அவனைக் கட்டி வைத்து குதிரையில் ஏற்றி கூட்டிச் சென்றனர்.
காடு மிக அடர்த்தியாக இருந்தது. அதற்குள்ளே மிகவும் கஷ்டப்பட்டு குதிரையை மூவரும் செலுத்தினர்.
சிறிது தூரம் சென்றவுடன் ஒரு பெரிய மரத்தின் கீழ் மேலும் பல வீரர்கள் இருப்பதைப் பார்த்தான். இவர்கள் வருவதைப் பார்த்து பரபரப்பு அடைந்தனர்.
"எங்கே தலைவர்" என்றான் சோமன்.
"ரவிதாசர் கடம்பூர் மாளிகை சென்று இருக்கிறார். ஆதித்தனைப் பற்றி ஒற்றறியச் சென்று இருக்கிறார்."
பின்னால் இருந்த குதிரையில் சூர்யா இருப்பதைப் பார்த்து விட்டு. "யாரடா இவனைப் பிடித்து வந்து இருக்கிறீர்கள். இவன் ஆளும் உடையும் பார்த்தால் விசித்திரமாக இருக்கிறான்".
"வாயே திறக்க மாட்டேன் என்கிறான். சோழனின் ஒற்றன் போலத் தோன்றுகிறது. "
"இவன் ஒற்றன் இல்லை. கூத்தன். இவன் கயிறை அவிழ்த்து விடுங்கள். "
"டேய்  ஒரு கூத்தாட்டம் ஆடு பார்போம்".
"அடேய் முட்டாள்களா. என்ன ஒரே ஆட்டமும் கூத்தும்" என்று யாரோ கத்துவது கேட்டு அனைவரும் திரும்பினர்.
பின்னால் நல்ல வாட்டசாட்டமான ஒருவன் நின்றுக் கொண்டிருந்தான். முறுக்கி வைத்த மீசையுடன் பார்க்க அதி பயங்கரமாக இருந்தான்.
"தலைவர் ரவிதாசர் வந்து விட்டார்" என்று அனைவரும் அமைதி ஆயினர்.
"யார் இவன். "
"இவனைக் கொள்ளிட நதிக்கரை அருகில் பார்த்தோம். பார்க்க விநோதமான ஆடைகள் அணிந்து இருந்தான். ஒற்றனா அல்லது கூத்தில் ஆடுபவனா என்று தெரியவில்லை. நீங்கள் விசாரிப்பதற்காகக் கூட்டி வந்தோம். "
இவனை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் சற்று விலகி நில்லுங்கள். நான் இவனுடன் தனிமையில் பேச வேண்டும்.
அனைவரும் விலகி நின்றனர். 
ரவிதாசன்  சூர்யாவை ஏற இறங்கப் பார்த்தான்.
"தம்பி நீ யார். உன் பெயர் என்ன. நீ எந்த நாட்டவன்."
சூர்யா எதாவது நாம் சொல்லித்தான் ஆக வேண்டும். இல்லையேல் இந்த முரடர்கள் நம்மை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவர் என்று யோசித்துப் பதில் சொன்னான்.
"நான் சூர்யா. தமிழ்நாட்டவன்".
"சூர்யா என்ற பெயரை நான் கேள்விப்பட்டதில்லை. நீ தமிழ்நாட்டவன் என்றால் சோழனா, பாண்டியனா அல்லது சேரனா".
"எனக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்".
"ஓஹோ கூலிக்கு மாரடிப்பவனா. யார் பக்கம் பலமோ அங்கு சேர்ந்து விடுவாயோ".
"ஆமாம்".
"தம்பி உன்னைப் பார்த்தவுடன் எனக்குப் பிடித்து விட்டது. மிகவும் நகைச்சுவையாகப் பேசுகிறாய். நல்ல மதியூகமானவன் போலத் தெரிகிறாய். என்னிடம் இருப்பவர்கள் வெறும் முரட்டு முட்டாள்கள். எனக்கு உன் போன்றவன் தான் தேவை. சோழர்களைப் பழி வாங்க வீரம் மட்டும் பத்தாது. சமயோசித அறிவும் தேவை என்பதை நான் அறிவேன். நீ எங்கள் பக்கம் சேர்ந்து விடு. நாங்கள் காலம்  சென்ற பாண்டிய மன்னரின் ஆபத்துதவிகள். தொன்று தொட்டே சோழர்களுக்கு பாண்டியர்களுடன் பெரும் பகை இருந்தது. பாண்டிய மன்னர் வீர பாண்டியர் சோழர்கள் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதில் தீவிரமாக இருந்தார். அவருக்கு உதவியாக அவரின்  உயிரைப் பாதுகாத்து  தங்கள் உயிரையும் பலியிடத் துணிந்த ஆபத்துதவிப் படையின் தலைவனாக நான் இருந்தேன். பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் பெரும் போர் சேவூரில் நடந்தது. சோழர்களின் படையை இளவரசர் அதித்த சோழன் தலைமை தாங்கி நடத்தினான். சோழர்களின் படை பாண்டியர்களின் படையைக் காட்டிலும் பெரிது. அதனால் பாண்டியர்கள் படை சின்னாபின்னமாகியது. வீர பாண்டியரும் ஆபத்துதவிப் படைகளும் பின் வாங்கி ஒரு காட்டில் மறைந்திருந்தோம். வீர பாண்டியர் போரில் காயமுற்றதால் உடல் பலகீனமாயிருந்தார். அவரை ஒரு குடிசையில்  மறைத்து வைத்து நாங்கள் மருத்துவ உதவி செய்து வந்தோம். அப்போது திடீரென்று புயல் போல் ஆதித்த சோழன் குடிசைக்குள் வந்தான். போர் தர்மப்படி எதிரி ஆயுதம் இல்லாத போதும், நோயுற்று இருக்கும்போதும் தாக்கக்கூடாது. ஆனால் அந்த இராட்சசன் ஆதித்தன் இதைக் கருத்தில் கொள்ளாமல் வீர பாண்டியரின் தலையைக் கொய்தான். ஆதித்தனைப் பலி வாங்க வேண்டும் என்பதற்காகத் தப்பித்தோம். எங்கள் நோக்கம் நிறைவேறும் காலம் நெருங்கி வருகிறது. ஆதித்த கரிகாலனை விரைவில் யமலோகம் அனுப்பி விடுவோம். நீ எங்கள் பக்கம் சேர்ந்தால் உனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது."
சூர்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை. சரி என்று பதிலை மட்டும் அளித்தான்.
சூர்யா பாண்டிய வீரர்களைத் தொடர்ந்து ஒரு குதிரையில் சென்றான்.  ரவிதாசன் சூர்யாவிடம் அன்பாக நடந்துக் கொண்டான். அவன் புதியவன் என்பதால் நிறைய பேச்சுக் கொடுத்தான். சூர்யாவுக்கும் ரவிதாசனைப் பிடித்து விட்டது. அவனிடமிருந்து அக்காலகட்ட சரித்திரம் பற்றிய அறிவும் சூர்யாவுக்குக் கிடைத்தது. பல முறை ரவிதாசனால் நோயுற்றிருந்த வீர பாண்டியன் கொல்லப்பட்ட கதை கேட்டு அவன் மீது அனுதாபம் ஏற்பட்டது. ஆதித்த கரிகாலன் மீது வெறுப்பும் கோபமும் ஏற்பட்டது.
வெகு நாட்கள் பிரயாணம் செய்து அவர்கள் ஒரு பாழடைந்த கோவிலை அடைந்தனர். அங்கிருந்து சற்று இளைப்பாறலாம் என்று முடிவு செய்தனர்.
ரவிதாசன் - "நாம் இப்போது கடம்பூர் நகரை ஒட்டிய காட்டுப் பகுதியில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் ஆதித்த கரிகாலன் கடம்பூர் நகரம் வருகிறான். அவனைப் பழி வாங்க ஏற்ற இடம் கடம்பூர் மாளிகை தான்."
சுற்றி இருந்த அனைவரும் "வீர பாண்டியன் வாழ்க! ஆதித்த கரிகாலனுக்கு மரணம்!" என்று கத்தினர்.
ரவிதாசன் சூர்யாவைத் தனியாக அழைத்துச் சென்று "இன்று நாம் ஒருவரை சந்திக்கப் போகிறோம். அவர் உதவி நம் அணிக்குப் பெரும் பலமாக இருக்கும்."
இரவு சந்திக்க வந்த மனிதனைப் பார்த்து சூர்யா அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றான். வந்த மனிதன் குள்ளமாக நீளமான மீசையுடன் இருந்தான். தன்னிடமிருந்த புகைப்படத்துடன் அவன் முகத்தை ஒத்துப் பார்த்தான். சந்தேகமே இல்லை. இவன் மைக் லீ தான். சந்துரு கால இயந்திர பரிசோதனைக்காக அனுப்பியதாகக் கூறிய அதே மைக் லீ தான். இங்கு ரவிதாசனுடன் இவனுக்கென்ன வேலை என்ற கேள்வி சூர்யாவுக்கு எழுந்தது.
“இவரைப் பார்த்து வியப்பாக இருக்கிறதா? இவர் பெயர் ஷான் சூ. இவர் சீனப் பேரரசின் முக்கிய தளபதி. இவரும் நமக்கு உதவியாக இருப்பார்."
சூர்யா மனதுக்குள் சிரித்துக் கொண்டான். மைக் லீயின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்ள ஆவல் ஏற்பட்டது.
"சோழர்களைக் கடல் வழியில் தாக்குவதற்கு ஷான் உதவியாக இருப்பார். சோழர்களிடம் கடற்படை வலிதாக இருக்கிறது. அது பாண்டியரகளாகிய நமக்கு பெரும் பலவீனம். அதை சரி செய்வதற்குத்தான் சீனர்களின் உதவி நமக்குத் தேவை. சீனர்களின் மரக்கலங்களும் கடற்படையும் சோழர்களை விடப் பல மடங்கு பலமானது என்பதை நீ அறிந்திருப்பாய்.”
"பதிலுக்கு சீனர்களுக்கு கிடைப்பது என்ன?"
ரவிதாசன் சிறிது நேரம் யோசித்தான். "உன்னிடம் சொல்வதில் ஒன்றும் தவறில்லை. பதிலுக்கு நான் சீனர்களுக்கு அன்பளிப்பாகத் தர வேண்டியது இது தான்." என்று ரவிதாசன் தான் மறைத்து வைத்திருந்த ஒரு வினோதமான பொருளைக் காண்பித்தான்.
சில ஓலைச் சுவடிகளும், மிருகங்களின் தோலில் வரையப்பட்ட சில சித்திரங்களும் காணப்பட்டன. அதை சிறிது நேரம் பார்த்த சூர்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
"ரவிதாசரே, எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. இந்த ஓலைச்சுவடிகளும் வரைபடங்களும் எதனைப் பற்றியது என்று சற்று தெளிவாகக் கூறுங்கள்."
“நான் கூறும் விஷயங்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பாண்டிய அரசர்களால் ரகசியமாகப் பாதுகாத்து வந்த உண்மைஅரசன் இறக்கும் தருவாயில் தனக்கு அடுத்து பட்டத்துக்கு வருபவரிடம் இந்த ரகசியத்தை வெளிப்படுத்துவார். இந்த ஓலைச்சுவடிகள் முதல் சங்க காலத்தில் அப்போதிருந்த பாண்டிய மன்னனிடம் அகத்திய முனிவர் அளித்ததாகக் கூறப்படுகிறது. அகத்திய முனிவர் இந்திரனை நோக்கிக் கடுந்தவம் செய்ததன் பலனாக அவன் மனமுவந்து அவருக்கு அளித்ததாகவும் சொல்லப்படுகிறது. இது எதைப் பற்றி என்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது அல்லவா".
“ஆம்”.
மனிதர்களாகிய நாம் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்வது சாத்தியமாகும் ஆனால் தேவ குலத்தினர் இறந்தகாலம் மற்றும் எதிர்காலத்திற்கும் செல்லும் சக்தி படைத்தவர்கள். அவ்வாறு செல்வதற்கு அவர்களிடம் சக்தி வாய்ந்த புஷ்பக விமானங்கள் இருக்கின்றன. அந்த விமானங்களை வடிவமைக்கும் மூல மந்திரங்களும் வரைபடங்களும் தான் நீ பார்ப்பது."
சூர்யாவினால் சிறிதும் நம்ப முடியவில்லை. "ரவிதாசரே உமது ஏமாற்று சொற்களை பாவம் இந்த சீனர் வேண்டுமானால் நம்பலாம். ஆனால் நான் கொஞ்சம் தெளிவானவன். என்னை ஏமாற்ற முயல வேண்டாம்".
அது வரை மெளனமாக இருந்த சீனன் பேச ஆரம்பித்தான் "எது ஏமாற்று சொற்கள். நான் வெறும் படைத் தளபதி மட்டும் அல்ல. அறிவியல் சாத்திரமும் படித்தவன். ரவிதாசர் கூறுவது அனைத்தும் உண்மை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்."
"அப்படியானால் பாண்டிய மன்னர்கள் ஏன் இந்த கால இயந்திரங்களை உருவாக்கவில்லை".
"இந்த ஓலைச்சுவடியில் இருப்பதை புரிந்து கொள்ளும் அறிவியல் அறிவும் இதனை உருவாக்கும் பொறியியல் அறிவும் தற்போதிருக்கும் மனித சமூகத்திற்கில்லை. இன்னும் பல ஆயிரம் வருடங்கள் கழித்து, அப்போது அறிவில் பன் மடங்கு உயர்ந்திருக்கும் சமூகம் கால இயந்திரத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் தான் பாண்டிய மன்னர்கள் இந்த ரகசியத்தைப் பாதுகாத்து வந்திருகின்றனர்."
"ரவிதாசரே, இது எப்படி உமது   கையில்?"
"வீர பாண்டிய மன்னர் இறக்கும் தருவாயில் என்னிடம் அளித்தார். “
"இதை சீனர்களிடம் கொடுத்து அவர்களின் படை உதவியை பெறுவதுதான் உமது திட்டமா?"
"ஆம்".
"ரவிதாசரே, நான் உம்மிடம் தனியாகப் பேச வேண்டும்."
சீனன் புரிந்து கொண்டு சற்று விலகிச் சென்றான்.
"தம்பி நீ தேவையில்லாமல் எதைப் பற்றியோ கவலைப்படுவதாகத் தெரிகிறது. சீனனை நாம் முழுதாக நம்பலாம்."
"சீனனை நம்புவது ஒன்றும் பிரச்சினையில்லை.நமது முன்னோர்கள் எதிர் காலச் சந்ததியினருக்காக காத்து வந்த ரகசியத்தை கேவலம் வெளி நாட்டவனான சீனனுக்கா கொடுக்க வேண்டும்?"
"சோழர்கள் கையில் சிக்குவதை விட இது பரவாயில்லை அல்லவா?"
"சோழர்கள் நமது எதிரிகள் தான். ஆனால் அவர்கள் நம் இரத்தம். சோழர்கள், பாண்டியர்கள் பேசும் மொழி தமிழ். நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். ஆனால் சீனர்கள் அப்படியில்லை. அவர்கள் வேற்று இனத்தினர்கள்."
"ஆயிரம் ஆண்டுகள் கழித்து வாழும் சோழ இனத்தினர்கள் இந்த ரகசியத்தைப் புரிந்து கொண்டு பாண்டியர்களாகிய நம்மை முழுதும் அழித்து விடக்கூடும் அல்லவா".
"ரவிதாசரே உமக்கு மிகவும் குறுகிய சிந்தனையாக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் கழித்து நம் இனம் சோழர்கள், பாண்டியர்கள் என்று பிரிந்திருக்கும் என்றா நினைக்கிறீர். தமிழர்கள் என்று ஒரே இனமாக, ஏன் வட நாட்டவர்களுடனும் இனைந்து பாரத இனம் என்று வலிமை மிகுந்த இனமாக இருக்கும். அப்போது இந்த சீனர்கள் நமது முதல் எதிரியாக இருப்பார்கள்".
"ஆயிரம் ஆண்டுகள் சென்று நேரில் பார்த்து வந்தவன் போல கூறுகிறாயே" என்று ஏளனமாக ரவிதாசன் கேட்டான்.
"தர்க்க ரீதியாக சிந்தித்தால் இது தெளிவாகப் புரியும் ரவிதாசரே. கற்காலத்தில் மனிதன் கூட்டமாக சிறு இனமாக இருந்தான். பிறகு ஒன்று சேர்ந்து ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஓரினமாக இருந்தனர். தற்போதைய காலகட்டத்தில் பல கிராமங்கள் சேர்ந்து ஒரு நாட்டை மனிதர்கள் உருவாக்கினர். எதிர்காலத்தில் சிறு நாடுகளாக சிதறிக் கிடக்கும் மனித குலம் பெரும் நாட்டை உருவாக்கி தங்கள் வலிமையை வெளிப்படுத்துவர் என்பது புரியவில்லையா?"
"தம்பி அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. என்னுடைய தற்போதைய குறிக்கோள் சோழர்களை அழிப்பது. அதற்கு யார் உதவியை வேண்டுமானாலும் நான் நாடுவேன்."
"சீனனிடம் இந்த ரகசியத்தைக் கொடுப்பது உறுதி தானா?"
"ஆம்".
"அப்படியானால் என்னை உன் அணியில் சேர்க்காதே. நான் என் வழியில் செல்கிறேன்".
ரவிதாசன் ஒன்றும் கூறாமல் மெளனமாக இருந்தான்.
சூர்யா அவ்விடத்தை விட்டுக் கிளம்ப எத்தனித்த போது பாண்டிய வீரர்கள் அவனைச் சூழ்ந்து நின்றனர்.
"உன்னை அவ்வளவு சுலபமாக செல்ல விடுவேனா. உனக்கு நாளை வரை கால அவகாசம் கொடுக்கிறேன். எங்களுடன் இருக்க விருப்பமா என்று யோசித்து முடிவு சொல். முடிவு எனக்கு எதிரானதாக இருந்தால் உன்னைக் கொல்லக் கூடத் தயங்க மாட்டேன். அதுவரை நீ எங்கள் கைதியாக இருப்பாய்."
பாண்டிய வீரர்கள் சூர்யாவை கட்டி ஒரு மரத்தின் கீழே அமர வைத்தனர். பின்னர் அனைவரும் உறங்கச் சென்றனர்.
சூர்யா மெல்ல கட்டுக்களை அவிழ்த்து வீரர்கள் இருக்கும் இடம் சென்றான். சீனன் அருகே வந்ததும் நின்றான். அவன் காலை மிதித்ததும் சீனன் விழித்துக் கத்த முயல அவன் வாயைப் பொத்தி தனியான மறைவிடத்திற்கு அழைத்துச் சென்றான்.
"மைக் லீ. என்ன முட்டாள்தனமான வேலை செய்கிறாய். எனக்கு எல்லா ரகசியமும் தெரியும். நீ 2009 ஆம் வருடத்திலிருந்து சந்துருவினால் கால இயந்திரத்தின் மூலம் அனுப்பப்பட்டவன் என்பதும் தெரியும். உன்னை அழைத்துவரத்தான் சந்துரு என்னை அனுப்பினார். நம் காலத்திற்கே நாம் செல்லலாம்."
"20 மில்லியன் டாலர். அது சந்துரு மற்றும் உன்னால் கொடுக்க முடியுமா?"
"என்ன உளறுகிறாய்."
"நான் உண்மையில் சைனாவைச் சேர்ந்தவன். எங்கள் உளவுப்படை கால இயந்திர ரகசியங்களைக் கவர்வதற்காக என்னை இந்தியா அனுப்பி வைத்தனர்."
"கால இயந்திர ரகசியம் வேண்டுமானால் சந்துரு அணி வடிவமைத்திருக்கும் டிசைன் டாக்குமெண்டுகளை திருடுவதை விட்டு ஏன் மூக்கைச் சுற்றி 10 ஆம் நூற்றாண்டுக்கு வர வேண்டும். அவரிடம் வேலை செய்தவன் தானே நீ.  உன்னால் மிக எளிதாக இதை செய்திருக்க முடியுமே. "
"இப்போது என்ன வருடம் 983 தானே. இன்னும் 30 ஆண்டுகள் கழித்து ராஜராஜ சோழன் என்னும் மன்னன் நீ பார்க்கும் இந்தக் கால இயந்திர வரைபடங்களை தஞ்சை அருகில் ஒரு சுரங்கப்பாதையில் மறைத்து வைப்பான். அதனால் 1970 ஆம் வருடம் தஞ்சைக்கு அருகே நடந்த அகழ்வாராய்ச்சியில் இந்தப் படங்கள் இந்திய அரசாங்கத்திற்குக் கிடைத்தது. இந்திய அரசாங்கம் கால இயந்திர பிராஜெக்டை ஆரம்பித்தனர். 40 வருடங்கள் கழித்து சந்துருவின் தலைமையில் இந்தக் கால இயந்திரம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. எங்கள் நோக்கம் வெறும் கால இயந்திர ரகசியம் கவர்வது மட்டுமில்லை."
"பிறகு?"
"அதை முதன் முதலில் நிர்மாணித்தவர்கள் இந்தியர்களாக இருக்கக் கூடாது. சீனர்களாகத் தான் இருக்க வேண்டும். புரிகிறதா."
"புரிகிறது. ரவிதாசனிடமிருந்து இந்த வரைபடங்களைத் திருடி நீ நம் கால கட்டம் சென்று விட்டால் ராஜராஜ சோழன் இதனை மறைத்து வைத்திருக்க முடியாது. 1970 ஆம் வருட அகழ்வாராய்ச்சியின் போது இது இந்திய அரசாங்கத்திற்கும் கிடைத்திருக்காது. கால இயந்திரம் முதலில் படைத்தவர்கள் இந்தியர்களாக இருக்க மாட்டார்கள். சீனர்களாக இருப்பார்கள். நல்ல மாஸ்டர் பிளான் தான். ஆனால் அது என்னிடம் நடக்காது."
சூர்யா மைக் லீயிடமிருந்து வரைபடங்களைப் பிடுங்க முயன்றான்.
இருவருக்கும் பலத்த சண்டை நடந்தது. முடிவில் சூர்யா மைக் லீயைக் கீழே தள்ளி மயக்கமுறச் செய்தான். அவனிடமிருந்த வரை படங்களை எடுத்துக் கொண்டான். படுத்திருந்த ஒரு வீரனின் வில் மற்றும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு காட்டுக்குள் ஓடி நதிக்கரை அருகே வந்தான். அங்கு ஒரு மரத்தின் கீழ் சற்று இளைப்பாறினான். அப்போது சத்தம் கேட்க மரங்களின் இடையே ஒளிந்துக் கொண்டான்.
இரண்டு அரச குலத்தவர் ஆற்றில் இறங்கி நீர் குடித்து சிறிது இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.
அதே சமயம் திடீர் என்று பல குதிரை வீரர்கள் காட்டுக்குளிருந்து வரும் சத்தம் கேட்டது. பாண்டிய ஆபத்துதவிகள் தான் சூர்யாவைத் தேடி வந்து கொண்டு  இருந்தனர்.
நதிக்கரை அருகே வந்ததும் அரச குடும்பத்தினரைப் பார்த்து வியப்படைந்தனர்.
அந்த அரச குலத்தவனும் வியப்படைந்து "ரவிதாஸா என்னை அடையாளம் தெரிகிறது அல்லவா. உன் கதையை உன் எஜமானனுடன் ஐந்து வருடங்கள் முன்னரே முடித்து இருக்க வேண்டும். இப்போதும் ஒன்றும் குறைந்து போகவில்லை" என்று வாளை உருவினான்.
"உன்னை அடையாளம் தெரியாமல் இருக்குமா ஆதித்தா. நோயுற்று இருந்தவனைக் கொன்ற பேடி தானே நீ. என் வாளுக்குப் பதில் சொல்"
ஒரு பெரும் வீர சண்டை நடந்தது. ஆதித்த கரிகாலனைச் சுற்றி பத்து பேர் மூர்க்கமாக சண்டை போட்டனர். ஆதித்த கரிகாலன் சிங்கம் போல சண்டை போட்டான். ஆனால் ஒரு ஆள் 10 வீரர்களுடன் சண்டை போடுவது அவ்வளவு எளிதன்று. எவ்வளவு வீரத்துடன் போரிட்டாலும் அவர்கள் இருவரும்  களைப்படைந்தனர்.   
அப்போது திடீர் என்று அம்பு மாரி பொழிபாண்டிய வீரர்கள் பொத் பொத்தென சரிந்தனர். மற்ற பாண்டிய வீரர்களும் ரவிதாசனும் காட்டுக்குள் ஓடினர். மரத்தின் பின் ஒளிந்து கொண்டிருந்த சூர்யா தான் பாண்டிய வீரர்கள் ஒவ்வொருவரையும் தன் வில் மூலம் அம்பெய்திப் பதம் பார்த்தான். பாண்டிய வீரர்கள் ஓடிய பின்னர் ஆதித்த கரிகாலன் அம்பு வந்த திசையை நோக்கினான். அங்கு மரத்தின் மேல் சூர்யா இருப்பதைப் பார்த்து கை அசைத்து கீழே வரச் சொன்னான். கீழே வந்த சூர்யாவை ஆதித்த கரிகாலன் கட்டிப் பிடித்தான்.
சூர்யா திடீரென்று ஆதித்த  கரிகாலன் மேல் சரிந்தான். அவன் முதுகில் குருதி வந்ததைப் பார்த்து ஆதித்த கரிகாலன் திடுக்கிட்டான். ஒரு பாண்டிய வீரன் பின் வாங்கி ஓடும் சமயம் குறு வாளை வீசினான். அது முதுகில் பாய்ந்து, சூர்யா சுய நினைவிழந்து விழுந்தான்.
அருகிலிருந்த வீரனிடம் ஆதித்த கரிகாலன் "இவ்வீரரை நாம் எப்படியும் காப்பாற்றியே ஆக வேண்டும்."
"கரிகாலேரே நேரம் ஆகிறது. தாமதப்படுத்தும் ஒவ்வொரு நிமிடமும் இந்த மனிதனின் உயிருக்கு ஆபத்து என்றான்.
சூர்யாவை புரவியில் படுத்த வண்ணம் ஏற்றி இருவரும் அவ்விடத்தை விட்டு மறைந்தனர்.
Chapter 3

கடம்பூர்  மக்கள்  கோலாகலமாக ஆதித்த கரிகாலரை வரவேற்க காத்திருந்தனர். சிறிது நேரத்தில் வேகமாக இரண்டு புரவிகள் வந்தது. புரவியில் அமர்ந்தவர்கள் மக்களின் வரவேற்பை பொருட்படுத்தாமல் கோட்டைக்குள்ளே சென்றனர். அடுத்து ஒரு பல்லக்கு வர, அதற்குக் கோட்டை வாசல் வீரர்கள் வழி விட்டனர். அதில் காயமுற்றிருந்த சூர்யா படுக்க வைக்கப்பட்டிருந்தான்  
அன்று மதியம் கரிகாலர் வேற்று நாட்டுத் தூதர்கள், வணிகப் பிரதிநிதிகள், மற்றும் சிற்றரசர்களைச் சந்தித்தார். பிறகு சக்கரவர்த்தி சுந்தர சோழரின் தூதரைத் தனிமையில் சந்தித்தார். அவர் கொண்டு வந்த ஓலையைப் படித்து கரிகாலரின் கண் சிவந்தது. அடுத்து பட்டத்திற்கு மதுராந்தகரை அறிவிக்க தான் முடிவு செய்திருப்பதாக சக்கரவர்த்தி எழுதியிருந்தார்.
ஓலையைப் படித்த கரிகாலன் அதைத் தூக்கி எறிந்தான். கோபத்துடன் அரசவையிலிருந்து வெளியேறி தன் அறைக்குச் சென்றான்.
ஒரு பணிப்பெண் பயத்துடன் வந்து மெதுவாக கரிகாலனிடம் சூர்யாவின் உடல்நலம் பற்றிய விஷயத்தை சொன்னாள்.
மாலை நேரத்தில் சூர்யாவை சந்திக்க ஆதித்த கரிகாலன் வந்தான். இறுக்கமான  முகத்துடன் வந்தவன் சூர்யாவைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்தான்.
சிறிது நேரம் சூர்யாவை ஏற இறங்கப் பார்த்தான். சூர்யா தன் சிரம் தாழ்த்தி வணங்கினான்.
"சோழ இளவரசர் மாவீரர் ஆதித்த கரிகாலரைச் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.”
"வீரரே தங்கள் பெயர் என்ன. தாங்கள் எந்த நாட்டவர்"
"என் பெயர் சூர்யதேவன். நான் வல்ல நாட்டில் இருந்து வருகிறேன். வணிகம் செய்துப் பிழைத்து வருகிறேன்”.
"தாங்கள் வணிகரா. தாங்கள் ஆற்றங்கரையில் அம்பெய்தது பார்த்தால் வணிகர் போலத் தெரியவில்லை. என் உயிரைக்  காப்பாற்றியதற்கு உமக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும் என்று தெரியவில்லை."
"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அவள் தங்கள் மீது ஒரு தலைக் காதலாக இருக்கிறாள். அவளை நீங்கள் மணந்து கொள்வீரா".
இதைக் கேட்டு இடி இடி என சிரித்த கரிகாலன் "உமது வேடிக்கைப் பேச்சு எனக்கு பிடித்து இருக்கிறது வீரரே. உம் தங்கை பெயர் என்னவோ"
"திவ்யா".
"திவ்யமான பெயர். வித்தியாசமாக உள்ளது. நான் ஏற்கெனவே ஒரு பெண் மீது விருப்பம் கொண்டுள்ளேன் வீரரே. "
"அட இங்கேயும் முக்கோணக் காதல் கதை தானா. அவள் பெயர் என்னவோ?"
"நந்தினி"
"என் தங்கையை மணக்க வாய்ப்பே இல்லையா இளவரசே".
"அடுத்த ஜென்மத்தில் கண்டிப்பாக நீர் தான் என் மைத்துனர் சூர்ய தேவரே."
"அடுத்த ஜென்மத்திலும் நந்தினி நீயே என் காதலி என்று சென்று விட மாட்டீரே".
"இந்த ஒரு ஜென்மத்தில் அவளிடம் சிக்கி நான் படும் பாடு போதாதா. உம்மிடம் பேசிய பிறகு என் மனது லேசானது சூர்யதேவரே. நாம் அடிக்கடி சந்திப்போம்" என்று கூறி ஆதித்த கரிகாலன் விடை பெற்றான்.
சிறிது நாட்களில் சூர்யா உடல் நலம் தேறினான். கரிகாலன் தினமும் சந்தித்து அவனுடன் பேசினான். ஆதித்த கரிகாலனின் அன்பு சூர்யாவைத் திக்கு முக்காட வைத்தது.
ஒரு நாள் சூர்யா ஆதித்த கரிகாலனிடம் தன் மனதில் வெகு நாட்கள் புகைந்துக் கொண்டிருந்த விஷயத்தைக் கேட்டான்.
"இளவரசே. தாங்கள் மாவீரர். அப்படியிருக்க எதற்கு நீங்கள் நோயுற்றிருக்கும் வேளையில் வீரபாண்டியனைக் கொல்ல வேண்டும். அது போர் தர்மத்திற்கு எதிரானது அல்லவா?"
"வீரரே! மனதில் பட்டதைத் தயக்கமில்லாமல் கேட்டதற்கு நன்றி. பாண்டியர்களிடம் தொன்று தொட்டு இந்திரன் அளித்த ரகசியம் ஒன்று இருந்து வருகிறது. அது புஷ்பக விமானம் என்றும் முக்காலமும் செல்ல வல்ல விமானங்கள் படைப்பதற்கான ரகசியம் என்றும் கூறுகிறார்கள். அதை வீர பாண்டியன் வெளி நாட்டினரிடம், குறிப்பாக சீனரிடம் விலை பேச நினைத்தான். இந்த ரகசியம் பாரத மண்ணிற்கு சொந்தமானது. அதை வெளிநாட்டினற்கு விற்க நினைத்த வீர பாண்டியன் ஒரு குற்றவாளி. போர் தர்மம் எதிரி வீரர்களிடம் தான் பொருந்தும். குற்றவாளிகளிடம் இல்லை. விளக்கம் கிடைத்து விட்டதல்லவா. மனம் தணிந்ததா."
"தணிந்தது கரிகாலரே. தாங்கள் சோழர்களின் மாவீரத்திற்கும் தர்மத்திற்கும் களங்கம் வரும்படி நடக்க மாட்டீர்கள் என்பது புரிந்தது. புஷ்பக விமான ரகசியம் பிறகு என்னவாயிற்று."
"அது இப்போது பாண்டிய மன்னனின் ஆபத்துதவி படைத் தலைவன் ரவிதாசனிடம் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன்."
"இதை எடுத்துக் கொள்ளுங்கள் கரிகாலரே."
சூர்யா கால இயந்திர வரைபடங்களை ஆதித்த கரிகாலன் கையில் கொடுத்தான்.
"கரிகாலரே. புஷ்பக விமான ரகசியம் இப்போது உங்கள் கையில். இதைக் கட்டிக் காக்கும் மாபெரும் பொறுப்பு சோழ அரச பரம்பரையுடையது."
கரிகாலன் அதைப் பார்த்து வியந்தான். சூர்யாவைக் கட்டி அணைத்தான். “தாங்கள் தமிழ் சமூகத்திற்கு ஆற்றிய சேவை அளவிற்கறியது சூர்யதேவரே. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. நாளை மாலை நாம் வேட்டைக்குச் செல்கிறோம் நினைவிருக்கிறதல்லவா. உங்கள் அறையிலேயே நாளை சந்திக்கிறேன். இங்கிருந்து வேட்டைக்குச் செல்வோம்."
சூர்யாவிடம் விடை பெற்று கரிகாலன் சென்றான்.
அடுத்த நாள் கரிகாலன் சூர்யாவைச் சந்திக்க நந்தவனத்தைக் கடந்து வந்தான், மலர்செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்த ஒரு பணிப்பெண்ணைத் தாண்டிச் சென்றான்.
அந்தப் பெண் "இளவரசே" என்று கூப்பிடத் திரும்பிப் பார்த்தான்.
"பெண்ணே நீ யார்" என்று ஆதித்த கரிகாலன் வினவினான்.
"என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனால் இந்த மோதிரம் ஞாபகம் இருக்கிறதா?" என்று ஒரு மோதிரத்தை நீட்டினாள்.
அந்த மோதிரத்தைப் பார்த்ததும் ஆதித்தனுக்கு தலையே சுழன்றது.
"இந்த மோதிரத்துக்கு சொந்தக்காரர் உங்களை சந்திக்க விரும்புகிறார்".
"நந்தினி உயிரோடு இருக்கிறாளா. அவளை உனக்குத் தெரியமா?"
"அதிகம் பேச நேரமில்லை இளவரசே. யாராவது நம்மைப் பார்த்து விடக் கூடும்.ஊர்க் கோடியில் ஓர் பாழடைந்த பள்ளிப்படை ஒன்று உள்ளது. அங்கு இப்போதே செல்லுங்கள். நந்தினி தேவியாருடன் நீங்கள் மனம் தீரப் பேசலாம்" என்று கூறி அந்தப் பெண் வேகமாக மறைந்து விட்டாள்.
ஆதித்தன் யாரும் அறியாத வண்ணம் மாறுவேடம் பூண்டு தன் குதிரையில் கடம்பூர் அரண்மனையை விட்டு வெளியே விரைவாகச் சென்றான்.
வெகு நேரமாகக் காத்திருந்தும் கரிகாலன் வராததால் சூர்யா அவர் அறைக்கு சென்றான். அங்கும் இல்லாதது கண்டு மாளிகையை விட்டு வெளியே வந்தான். ஒருவன் வேகமாகக் குதிரையில் செல்வதைப் பார்த்து சந்தேகம் வந்தது. தானும் ஒரு குதிரையிலேறி பின் தொடர்ந்தான்.
இதே நேரத்தில் கடம்பூர் அரண்மனையை விட்டு வேகமாகச் சென்ற ஆதித்த கரிகாலன் பின்னால் தன்னை ஒரு மனிதன் தொடர்ந்து வருவது தெரியாமல் சென்று கொண்டிருந்தான். குதிரை போகும் வேகத்தை விட அவன் இருதயம் அடிக்கும் வேகமும், அவன் சிந்தனையின் வேகமும் பலமாக இருந்தது.
சிறிது தூரத்தில் சாலை இரண்டாகப் பிரிந்தது. தூரத்தில் ஒரு இடத்தில் சின்ன விளக்கு தெரிந்தது அது தான் நந்தினி சொன்ன பள்ளிப்படையாக இருக்கும் என்று முடிவு செய்து அதை நோக்கிச் சென்றான்.
சிறிது தூரம் சென்ற பிறகு விளக்கு வெளிச்சம் நன்றாகத் தெரிந்தது. வெளிச்சத்தை நெருங்கியவுடன் அது தான் நந்தினி சொன்ன பள்ளிப்படை என்று தெரிந்தது. அவன் மெதுவாக உள்ளே நுழைந்தான்.
"நந்தினி. எங்கே நீ?" என்று கேட்டவாறு இருட்டில் தடுமாறிய வண்ணம் உள்ளே சென்றான்.
நந்தினி இல்லாதது ஆதித்த கரிகாலனுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. அவள் தன்னை வஞ்சித்து விட்டாள் என்பதை ஜீரணிக்கக் கஷ்டமாக இருந்தது. திடீரென்று ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டது.ஆதித்த கரிகாலன் யாரோ அங்கு இருப்பதை உணர்ந்து எச்சரிக்கை ஆனான். உடனே அவன்  கை  வாளுக்குப் போனது.
ஆதித்த கரிகாலன் முன் மூன்று பேர் தோன்றினர்.
"ஆதித்தா நாங்கள் யார் என்று தெரிகிறதா." என்று கேட்டான்.
அவர்களைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்த கரிகாலன் "சதிகாரர்களே நீங்கள் தானா. இரவிதாசா நரி  வேலை செய்து தான் உன் காரியத்தை முடிக்க நினைக்கிறாயா. நேருக்கு நேர் மோதலாம் வா" என்று தன் வாளை உருவினான்.
அப்போது இரவிதாசன் விளக்கை உடனே அணைத்தான். இருட்டில் ஆதித்த கரிகாலன் தடுமாறினான்.  இரவிதாசன் தன் வாளை எடுத்து ஆதித்த கரிகாலன் இதயத்தை நோக்கி வேகமாக ஓங்கினான். அந்த சமயம் மண்டபத்தின் வெளியே யாரோ வேகமாக ஓடி வரும் சத்தம் கேட்டது. இரவிதாசன் பின்னால் ஏதோ உயிர் போகும் வண்ணம் ஒன்று துளைத்தது. அவன் பின்னே சூர்யா இரத்தம் படிந்த வாளுடன் நின்றான்.
"இளவரசே தாங்கள் நலம் தானே" என்று கேட்ட வண்ணம் நெருங்கினான்.. இரவிதாசனும் அவனுடன் வந்த வீரர்களும் பயந்து ஓடினர். ரவிதாசன் ஒரு பெரிய பாறாங்கல்லை ஆதித்த கரிகாலன் மண்டையில் போட்டு விட்டு ஓடினான்.
கரிகாலரின் உடல் கீழே சரிந்து கிடந்தது. அவர் தலையிலிருந்து குருதி வந்த வண்ணம் இருந்தது.  
சூர்யா வெகு நேரம் செயலற்று ஆதித்த கரிகாலரின் உடலருகே உட்கார்ந்திருந்தான். கரிகாலரின் உயிர் பிரிந்திருக்க வேண்டும் என்றே நினைத்தான். தன்னிலைக்கு   வந்த பின் இளவரசரிடமிருந்து மூச்சு வருகிறதா என்று சோதித்தான். அப்போது ஆதித்த கரிகாலரிடமிருந்து "ஆ" என்று முனகல் கேட்டது.
உடனே வேகமாக சூர்யா "இளவரசே! இளவரசே" என்று அவரைத் தோளில் தட்டினான். ஆதித்த கரிகாலரிடமிருந்து எந்த அசைவும் இல்லை. அவரைத் தோளில் தூக்கிய வண்ணம் இருட்டில் தட்டுத் தடுமாறி மண்டபத்தை விட்டு வெளியே வந்தான்.
கட்டி இருந்த குதிரையில் இளவரசரை ஏற்றி தானும் குதிரையில்  ஏறினான். குதிரையை வேகமாகச் செல்லுமாறு தட்டினான்.
குதிரை ஒரு சிறிய கிராமத்தை அடைந்தது. நல்லிரவானதால் யாரும் சாலையில் இல்லை. சூர்யா ஒரு வீட்டின் கதவைத் தட்டினான். வயதான ஒரு முதியவர் வெளியே வந்தார். மருத்துவர் இருக்கும் இடத்தைக் கேட்டறிந்து அதை நோக்கிச் சென்றான்.
வைத்தியர் கதவைத் திறந்து சூர்யாவிடம் என்ன என்று கேட்டார். சூர்யா அவரைக் கரிகாலரிடம் அழைத்துச் சென்று காண்பித்தான்.
அவரைப் பார்த்தவுடன் வைத்தியர் "இளவரசரா!" என்று திகைக்க, சூர்யா வாயில் கையை வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான்.
பிறகு இருவரும் சேர்ந்து இளவரசரின் உடலைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் எடுத்துச் சென்றனர்.
வைத்தியர் இளவரசரைத் தீவிரமாக பரிசோதித்துப் பார்த்தார். நாடித்துடிப்பைச் சோதித்தார். தலை அடிபட்டு இருப்பதையும் பார்த்து விட்டு "உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் சுய நினைவு தான் இல்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இவர் நடைப்பிணம் போல இருக்கிறார். என்னால் இயன்ற மருத்துவம் செய்கிறேன். ஆனால் இளவரசர் பழைய நிலைக்கு வருவார் என்று எந்த உறுதியும் இல்லை."
"தஞ்சை ஆதுர சாலையில் உள்ள பெரிய மருத்துவர்கள் இதைச் சரி செய்வார்களா?" 
"தம்பி எனக்குத் தெரிந்தவரை இதற்கு மருத்துவம் இல்லை. கடவுள் அனுக்கிரகம் இருந்தால் இளவரசர் பிழைக்க முடியும். என் கையில் ஒன்றும் இல்லை".
மருத்துவர் சில பச்சிலைகளை அரைத்தார். இளவரசர் தலையில் அதனை வைத்துக் கட்டுப் போட்டார். ஆதித்தரின் வாயிலிருந்து மறுபடியும் "ஆ" என்று முனகல் கேட்டது.
இரவு முழுவதும் சூர்யா ஆதித்த கரிகாலரின் கால்மாட்டின் அருகிலேயே இருந்தான். கடவுளே இளவரசரைப் பிழைக்க வை." என்று மனதில் கூறியவண்ணம் இரவு முழுதும் விழித்திருந்தான்.
விடியற்காலை சில பொருட்கள் வாங்க வெளியே சென்றிருந்த மருத்துவர் உள்ளே வந்தார்.
"தம்பி இளவரசர் இப்போது எப்படி உள்ளார்."
“அப்படியே தான் உள்ளது”.
அப்போது முன் அறையில் ஏதோ சத்தம் கேட்க என்னவென சூர்யா வினவினான்.
மருத்துவர் -  "சொல்ல மறந்து விட்டேன். இந்த ஓவியம் பார்த்தீர்களா. இது மிகவும் வித்தியாசமாக உள்ளது. இது கையால் சுரண்டினாலும் அழியாமல் உள்ளது. இதில் உள்ள மனிதரின் முகம் தங்களைப் போலவே உள்ளதாக எனக்குத் தோன்றியது."
சூர்யா அதைப் பார்த்து அதிர்ந்தான். அது தன்னுடைய போட்டோ தான்.
"இது எப்படி தங்களிடம் வந்தது" என்று மருத்துவரிடம் படபடப்பாகக் கேட்டான்.
"நான் கடைத்தெருவுக்குச் சென்ற போது ஒரு பெண்மணியைச் சந்தித்தேன். அவர்கள் உடை, பேச்சு பாவனை எல்லாம் வித்தியாசமாக இருந்தது. நாம் எது பேசினாலும் அவர்களுக்குப் புரியவில்லை. இந்த ஓவியத்தைக் காட்டி சூர்யா என்ற ஒரு வார்த்தையைத் தான் கூறிக்கொண்டு இருந்தார்கள்".
"அவர் எங்கே" என்றான் பரப்பரப்பாக சூர்யா.
"முன் அறையில் அவர்களை இருக்க வைத்தேன். மிகவும் மிரண்டு போய் உள்ளார்கள். பார்த்துப் பக்குவமாக அவர்களிடம் நடந்துக் கொள்ளுங்கள்'.
முன் அறைக்கு சூர்யா சென்றான். அங்கு இருப்பவளைப் பார்த்து உறைந்து போனான். அவன் தங்கை திவ்யா மிரட்சியான பார்வையுடன் உட்கார்ந்திருந்தாள்.
சூர்யாவைப் பார்த்ததும் திவ்யா "அண்ணா." என்று உணர்ச்சிவசப்பட்டு கத்தினாள்.
மருத்துவர் "யார் இவர்கள். இவர்களை மெதுவாகப் பேசச் சொல்லுங்கள். ஆதித்த கரிகாலர் நோயுற்று இருக்கும் இவ்வேளையில் நாம் சற்று அமைதியாக இருப்பது நல்லது".
உடனே திவ்யா "அண்ணா என்ன இது. ஆதித்த கரிகாலர் அப்படின்னு ஏதேதோ இந்த ஆள் சொல்றார்".
நாம் இப்போது இருப்பது சோழர்கள் காலம். இது ஆதித்த கரிகாலர் தான். இவர் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. நீ எப்படி இங்கே வந்தாய்." 
"நீ எங்கே என்று தேடி பல இடங்கள் நானும் அம்மாவும் அலைந்தோம். அப்போது தான் கன்யாகுமரி சென்றிருப்பது அறிந்து அங்கே சென்றோம். அங்கே தான் சந்துருவை சந்தித்தேன். எல்லா விஷயங்களும் சொன்னார். நீ திரும்பி வெகு நாட்கள் ஆனதால் உன்னைத் தேடி அழைத்து வர என்னை கால இயந்திரத்தில் அனுப்பினார்கள்.
“இவர் உடல் நிலை சரி இல்லை. உயிர் இருக்கு ஆனால் நினைவு சரியா இல்லை. நீ மருத்துவம் படிச்சிருக்கே இல்லை. இவரைப் பரிசோதித்து பார்" என்றான்.
"இவருக்கு எப்படி இப்படி ஆச்சு" என்று வியப்புடன் கேட்டாள் திவ்யா.
அவள் இளவரசரைச் சோதித்துக் கொண்டு இருக்கும் போது சூர்யா தன் கதையைச் சொன்னான்.
இளவரசரைச் சோதித்த திவ்யா "அண்ணா இவர் உயிரோட தான் இருக்கார். ஆனால் அடிபட்டதால் கோமா நிலையிலே இருக்கார்."
"இவர் நல்ல நிலைக்கு வர முடியுமா”.
"இவருக்கு 21 ஆம் நூற்றாண்டு மருத்துவம் கிடைச்சா ஒரு வாய்ப்பு இருக்கு. இது வரைக்கும் மருத்துவ சரித்திரத்திலேயே இவர் போல ஒரு நோயாளி சரி ஆனது மூன்று  பேர் தான். இரண்டு பேர் அமெரிக்காவுலே சரி ஆனாங்க. ஒருத்தரை நம்ம  டெல்லி AIMS ஆஸ்பத்திரியில குணப்படுத்தினாங்க. ஆனா  திரும்ப நினைவு வந்தாலும் இவங்களுக்குப் பழைய ஞாபகம் எதுவுமே இருக்காது. எல்லாமே இவங்களுக்குப் புதுசாதான் இருக்கும்." என்றாள்.
சூர்யா திவ்யாவைப் பார்த்து "நீ சோழர் காலச் சரித்திரம் படிச்சிருக்கே இல்லை. இளவரசர் ஆதித்தர் முடிவு என்னன்னு சரித்திரத்திலே சொல்கிறார்கள்”?.
"ஆதித்த கரிகாலர் அகால மரணம் அடைந்தார் அப்படின்னு சரித்திரம் சொல்லுது. அவரைப் பாண்டியர்களின் ஆபத்துதவிகள் படு கொலை செய்து இருக்காங்க. ஆனா ஒரு விஷயம் மட்டும் பெரிய மர்மமா இருக்குன்னு சரித்திர ஆசிரியர்கள் சொல்றாங்க. ஆதித்த கரிகாலரின் இறந்த உடலை யாருமே பார்க்கலே. அது எப்படி மறைஞ்சுப் போனது அப்படிங்கறது தான் மிகப்பெரிய கேள்வி.”
உடனே சூர்யா முகம் பிரகாசமானது. "ஆதித்த கரிகாலரை நாம் நிகழ் காலத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு அவருக்கு மருத்துவ உதவி அளித்துக் காப்பாற்ற வேண்டும்.”
திவ்யாவுக்கும் அது சரியான யோசனையாகத் தோன்றியது.
ஆதித்யாவை அணைத்தவண்ணம் இருவரும் தங்கள் கால இயந்திரக் கருவியை இயக்கினர்.
மூவரும் அங்கிருந்து மறைந்தனர்.

Chapter 4
நிகழ் காலம்

"இது தான் உன் பூர்வீக வாழ்க்கை ஆதித்யா. உன்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்த பின் திவ்யா உன்னைக் குணப்படுத்த கடும் முயற்சி செய்தாள். டெல்லி AIMS  மருத்துவமனையில் உன்னை சேர்த்தோம். உனக்கு நினைவு திரும்பியது. ஆனால் உன் பழைய வாழ்க்கை பற்றிய ஞாபகம் உனக்கு சுத்தமாக இல்லை. அதைத் தெரியப்படுத்த வேண்டாம் என்று நானும் திவ்யாவும் முடிவு செய்தோம். பிறந்த குழந்தை போன்ற மனநிலையிலிருந்த உன்னை திவ்யா முழு மனிதனாக மாற்றினாள்.  உனக்கு சகலத்தையும் கற்றுக் கொடுத்தாள். நிகழ் கால மனிதன் தெரிந்துக் கொள்ள வேண்டிய அனைத்தும் திவ்ய உனக்கு பயிற்சி அளித்தாள்.   அவள் மீது உனக்கும் அன்பு பிறந்தது. சிறு வயது முதல் எந்த புத்தகத்தின் நாயகனை விரும்பினாலோ அவனையே திவ்யா மனம் முடித்தாள். உங்கள் இருவருக்கும் நிஷா பிறந்தாள். என் உயிரைக் காப்பாற்றிய சரிகாவை நான் மனம் முடித்தேன். இது தான் நடந்தது."

இது அனைத்தையும் கேட்டு ஆதித்யா அதிர்ச்சியில் உறைந்திருந்தான்.

"படகில் நாம் பார்த்த இருவர் மைக் லீ, ரவிதாசன் போலிருந்தது. அவர்கள் எப்படியோ மோப்பம் பிடித்து நிகழ் காலம் வந்து விட்டார்கள். அவர்கள் குறி உன் மீது தான் என்று நான் பயப்படுகிறேன். உன்னைப் பழி வாங்கத்தான் ரவிதாசன் நிகழ் காலம் வந்திருக்க வேண்டும் என்று நான் சந்தேகப்படுகிறேன். இப்போதைக்கு எங்கள் அனைவரின் குறிக்கோள் மாவீரர் ஆதித்த கரிகாலர் உயிருக்கு எந்த கெடுதலும் வராமல் பாதுகாப்பது. நாம் ஊட்டி அவசரமாகத் திரும்ப வேண்டிய காரணம் புரிந்தது அல்லவா."

ஆதித்யா ஒன்றும் சொல்லாமல் தன் அருகில் அமர்ந்திருந்த திவ்யாவை அணைத்துக் கொண்டான். இருவர் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

சூர்யா மௌனமாகக் காரை ஊட்டி நோக்கி செலுத்தினான்.

                                 ------******---------
ரவிதாசன் - "நான்கு வருடம் அலைந்து ஆதித்த கரிகாலன் நம் கையில் கிடைக்கும் தருணத்தில், உன்னால் அவனைத் தவற விட்டோம்."
மைக் லீ - "எல்லாம் என் தவறு என்று குற்றம் சுமத்தாதே."
ரவிதாசன் - "சரித்திர காலத்தில் சூர்யா தப்பித்து கால இயந்திர ரகசியங்கள் உன்னிடமிருந்து கவர்ந்து சென்றான். இதெல்லாம் உன் தவறு தானே.  ஆதித்த கரிகாலனும் இறக்கவில்லை என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அவனும் சூர்யாவும் கால இயந்திரம் மூலம் 21ஆம் நூற்றாண்டு சென்றிருக்க வேண்டும் என்று நீ கூறியதால் நாமும் 21 ஆம் நூற்றாண்டுக்கு வந்தோம். நான்கு வருடங்கள் அவனைத் தேடாத இடமில்லை. இன்று நம் கையில் அவர்கள் மாட்டும் தருவாயில் உன் முட்டாள்தனத்தால் அவனைத் தொலைத்து விட்டோம்."
மைக் லீ - "கோபம் கொள்ளாதே ரவிதாஸா.என் வாகனம் திடீரென்று அவசர நேரத்தில் செயல்படாததால் அவனைத் தவற விட நேர்ந்தது. ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டு பிடித்து விட்டேன்."
மைக் லீ – “அப்படியா”?
"ஆம். நாம் இப்போது உதகமலை செல்கிறோம்."
                            ------------------
ஒரு வாரம் கழிந்திருந்தது. சூர்யாவின் குடும்பத்தினர் சகஜ நிலைக்கு வந்திருந்தனர். ஒரு நாள் சூர்யா ஆதித்யாவுடன் காரில் சென்றுக் கொண்டிருந்தான். அப்போது பின்னாலிருந்து ஒரு கார் அவர்களை வேகமாகத் தாண்டிச் சென்றது. காரிலிருந்த மனிதன் சூர்யாவையும் ஆதித்யாவையும் நோக்கிச் சரமாரியாக சுட்டான்.
ஆதித்யா காரை உடனே நிறுத்தினான். இருவரும் சீட்டில் குனிந்தனர். காரின் கண்ணாடிகளை குண்டுகள் துளைத்தன. சூர்யா தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்துத் திருப்பிச் சுட, அந்த கார் வேகமாக முன்னாள் சென்றது.
அதே நேரத்தில் ஒரு லாரி திடீரென்று வேகமாக எதிரே வந்து காரைத் தூக்கி அடித்தது.
ஆதித்யாவும் சூர்யாவும் காரை நோக்கி ஓடினர். காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த மைக் லீ இறந்திருந்தான். அவன் காரிலிருந்த பொருட்களை சூர்யா தேட, Blue Regency என்கிற ஹோட்டலில் அவன் தங்கியிருந்த ரசீது கிடைத்தது.
சூர்யாவின் செல்போனுக்கு ஒரு கால் வந்தது. திவ்யா மறுமுனையில் "அண்ணா. இன்று காலையிலிருந்து நிஷா காணவில்லை. ஸ்கூல் போனவள் திரும்ப வரவே இல்லை. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது."
"ஒன்றும் கவலைப்படாதே. நாங்கள் திரும்பி வரும் போது நிஷாவுடன் தான் வருவோம்."
சூர்யா - "ஆதித்யா நாம் இந்த ஹோட்டல் செல்ல வேண்டும். நிஷா அங்கு தான் அடைத்து வைக்கப்பட்டிருப்பாள் என்று தோன்றுகிறது.”
இருவரும் காரில் ஹோட்டலை நோக்கிச் சென்றனர். கார் மலைப் பாதையில் வளைந்து வளைந்து சென்றது.
ஹோட்டலை நெருங்கியதும் சூர்யா - "நாம் சற்றுத் தொலைவிலேயே காரை நிறுத்தி நடந்து செல்வோம்."
காரை விட்டு இருவரும் இறங்கினர். வெகு பனி மூட்டமாக இருந்தது. சிறிது தூரம் நடந்ததும் மலையின் விளிம்பு வந்தது. மலை உச்சியிலிருந்து பார்க்கும் போது ஒரு பெரிய பள்ளம் தெரிந்தது. இருவரும் அங்கிருந்து ஹோட்டலைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
சூர்யா ஹோட்டலை நோக்கி செல்லலாம் என்று சைகையில் தெரிவித்தான். இருவரும் திரும்பும்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவர்கள் முன் நிஷாவும் அவள் பின்னே ரவிதாசனும் நின்றுக் கொண்டிருந்தான்.
"என்னை இங்கு நீ எதிர்பார்க்கவில்லை அல்லவா ஆதித்யா. நீ உண்மையில் சோழ நாட்டு இளவரசன் ஆதித்த கரிகாலன். உனக்கும் பாண்டிய பரம்பரையைச் சேர்ந்த எங்களுக்கும் ஜென்ம விரோதம். உன்னை கடம்பூரில் கொலை செய்ய திட்டமிட்டோம். கொலை முயற்சியில் நீ இறக்கவில்லை. உன்னை சூர்யா காப்பாற்றி ரகசியமாக கால இயந்திரம் மூலம் சோழர் காலத்திலிருந்து இக்காலத்திற்கு அனுப்பி வைத்து விட்டான். ஆனால் நீ எங்கு சென்றாலும் உன்னைத் தொடர்ந்து வருவேன். உனக்கும் எனக்குமுள்ள இந்த விரோதம் காலத்தால் அழியாதது. நீ எந்த தேசம், எந்தக் காலத்திற்கு சென்றாலும் உன்னைப் பலி வாங்க நான் பின் தொடர்ந்து வருவேன். ஜென்மம் ஜென்மமாகத் தொடரும் விரோதம் இது. பிடி இந்த வாளை. இன்று உயிரோடு இருப்பது நீயா நானா என்று பார்த்து விடுவோம்.”
ரவிதாசன் ஆதித்யா முன் ஒரு வாளை தூக்கி எறிந்தான். இருவருக்கும் பயங்கரமான வாள் யுத்தம் நடந்தது.  ரவிதாசன் மூர்க்கமாக தாக்கினான். முதலில் தடுமாறினாலும் பின்னர் மெல்ல .ஆதித்யாவுக்கு வாளை சரளமாக பயன்படுத்த முடிந்தது. இறுதியில் ரவிதாசனின் வாள் கீழே விழுந்தது. ஆதித்யா தனது வாளை ரவிதாசன் மீது பாய்ச்சினான்.
ரவிதாசன் தடுமாறி மலையின் விளிம்பிருந்து கீழே பள்ளத்தில் விழுந்தான்.
சூர்யா பள்ளத்தின் கீழே சிறிது நேரம் பார்த்து "உன் எதிரி தொலைந்தான் ஆதித்யா. இவ்வளவு உயரத்திலிருந்து விழுந்த யாரும் தப்ப முடியாது. இனி எக்காலத்திலும் அவன் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டான்."
நடந்தது அனைத்தையும் நிஷா பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆதித்யா வேகமாக சென்று நிஷாவை தூக்கி அணைத்துக் கொண்டான்.
அவர்கள் மூவரும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தவுடன் பள்ளத்தின் கீழே விழுந்த ரவிதாசன் உடலில் லேசாக அசைவுத் தெரிந்தது. அவன் கை அருகிலிருந்த கால இயந்திரக் கருவியை நோக்கி மெதுவாக நகர்ந்தது.
                               THE END
Inspiration:-
Ponniyin Selvan – Kalki.
Hollywood Movie - Timeline

   


No comments:

Post a Comment