Monday, December 2, 2019

கடைசி முள் - சிறுகதை


                                                                         கடைசி முள்

சிதம்பரத்திலிருந்து 10  கிலோமீட்டர்கள்  தள்ளி இருந்தது கிருஷ்ணன் சாமியின் ஆசிரமம். சுற்றிலும் வயல்கள், உயர்ந்த தென்னை மரங்கள் ஆசிரமத்தை சூழ்ந்திருந்தது. சுகமான தென்றல், பறவைகளின் இனிய கானம் என்று ரம்மியமாக இருந்தது ஆசிரமம். 

பாலன் என்ற நான், கிருஷ்ணன் சாமியை சந்தித்தது இரண்டு மாதங்கள் முன். என் வயது 25 . என் வயதொத்த மற்ற வாலிபர்களிடமிருந்து நான்  மாறுபட்டிருந்தேன். படிப்பு, உத்தியோகம், திருமண வாழ்வு என்ற எந்த கனவுகளும் இல்லாதவனாய் இருந்தேன். ஒரு  தேடல் இந்த ஆசிரமத்திற்கு என்னை  இழுத்து வந்தது.

கிருஷ்ணன் சாமியை சந்தித்த முதல் நாள் எனக்கு இன்னமும் ஞாபகமிருக்கிறது. காலை ஆறு மணி இருக்கும்.ஒரு மரத்தின் கீழ் கிருஷ்ணன் அமர்ந்திருந்தார். முகத்தில் பிறந்த குழந்தையின் களங்கமின்மை தெரிந்தது. அவரை சுற்றி பத்து பேர் இருந்தனர். அவர்கள் எல்லோர் முகத்திலும் அப்படியொரு பரவசம்.

ஒரு வசீகரமான சிரிப்புடன்  பேச ஆரம்பித்தார்.

"இன்று நாம் எதை பற்றி விவாதிக்கலாம். யாராவது கேள்வி கேட்கலாமே. அதிலிருந்து தொடங்குவோம்."

ஒரு நடுவயது பெண்மணி கேள்வி கேட்டார்.

"உண்மையான அன்பு என்பது என்ன."

"அன்பு என்பது என்ன. அன்பின்மை என்பது என்னவென்று  தெரிந்தால் அன்பு தெளிவாகி விடுமல்லவா. தன்னை மையமாக கொண்ட எந்த அன்பும் அன்பல்ல. ஒருவர் மீது எந்த வித முன் தீர்மானமும் இல்லாமல், அந்த கணம் தான்அவரை முதன் முதலாக காண்பது போல பார்க்கப் பழகுங்கள். அது தான் அன்பு. ஒருவர் மீது அன்பு கொண்டிருக்கிறோம் என்பதை உணராமலேயே அன்பு செலுத்துவது அன்பு."

சுற்றி இருந்தவர் யாரும் அவர் கூறியதை புரிந்ததாகத் தெரியவில்லை. நான் அவரிடம் மறு கேள்வி கேட்டேன். 

"எந்த வித முன் தீர்மானமில்லாமல் ஒருவருடன் எப்படி பழக முடியும். அது சாத்தியமில்லையே."

"நீங்கள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வருகிறீர்கள். உங்கள் மனைவி வந்ததும் எரிந்து விழுகிறார். அவருக்கு என்ன பிரச்சினையோ. அன்று நாள் முடிகிறது. அடுத்த நாள் உங்கள் மனைவியை பார்க்கும் போது, நேற்று அவர் நடத்தையின் எந்த விதமான பிம்பமும் இல்லாமல் உங்களால் அவரை பார்க்க முடியுமா. முடியும். முயன்று பாருங்கள். மிக எளிதான விஷயம்."

நான் பல தத்துவ, ஆன்மீக புத்தகங்கள் படித்திருக்கிறேன். பல துறவிகளிடம் பேசியும் இருக்கிறேன். அவர்கள் எல்லோரையும் விட கிருஷ்ணன் வேறு தளத்தில் இருப்பதாக எனக்கு தோன்றியது. இவர் துறவியோ, தத்துவ ஞானியோ கிடையாது. புத்த பிரான் மறு அவதாரம் செய்து என் முன் அமர்ந்திருப்பதாகவே எனக்கு தோன்றியது.

மற்றவர்களுடன் கிருஷ்ணன் சாமியின் உரையாடல் தொடர்ந்தது. முடிந்த பின் வந்திருந்த அனைவரும் கலைந்து சென்றனர். நான் மட்டும் அமர்ந்திருந்தேன். கிருஷ்ணன் கேள்வியுடன் என்னை நோக்கினார்.

"இன்று முதல் நீங்கள் தான் என் குரு. நான் உங்களுடனேயே இருந்து விடுகிறேன்."

"நான் யாருக்கும் குரு இல்லை. எந்த குருவாலும் ஒரு மனிதனுக்கு வழி காட்டியாக இருக்க முடியாது. பாதையை நீயே தேடி கண்டுபிடிக்க வேண்டும்.   நீ என்னுடைய சக பயணியாக  வேண்டுமானால் இருக்கலாம்.  என்னுடைய உரையாடல்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிடலாம் என்று ஒரு எண்ணம். அதற்கு நீ உதவலாம்."

நான் மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன்.

கிருஷ்ணன் சாமியை மிக அருகிலிருந்து கவனிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் சொல்வதை வாழ்ந்து காட்டும் மனிதராகவே இருந்தார். உறவுகளினால் ஏற்படும் மன சலனங்கள்  அவரிடம் சிறிதும் இல்லை. யார் மீதும் கோபம் கொண்டு வன்மம் பாராட்டுவதும், அன்பு காட்டுவது என்பதன் மூலம் பிறரை கட்டுப்படுத்துவதும் அவரிடம் சிறிதும் நான் காணவில்லை.  பிறர் செய்யும் தவறுகள் தன்னை பாதித்தாலும் அடுத்த நொடியே மறந்து விடுவார்.

ஒரு நாள் அவரை சந்திக்க திருவண்ணாமலையிலிருந்து முதியவர் ஒருவர் வந்தார். அவரிடம் கிருஷ்ணன் சாமி வெகு நேரம் அன்னியோன்னியமாக உரையாடிக் கொண்டிருந்தார். அந்த முதியவரிடம் தனியாக பேச  ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டேன். அவர் கிருஷ்ணன் சாமியின் பள்ளி ஆசிரியர்  என்று தெரிந்தது. அவரிடம் கிருஷ்ணன் சாமியின் சிறு வயது வாழ்க்கையை பற்றி விசாரித்தேன்.

"அவன் அப்பொழுதே இப்படித்தான். பாடம்  சொல்லிக் கொடுப்பது  எதுவும் ஏறாது.  தன் பாட புத்தகங்கள் அனைத்தையும் ஏழை சிறுவர்களுக்கு கொடுத்து விடுவான். நான் கோபத்தில்  பல முறை பிரம்பால் அடித்து விளாசியிருக்கிறேன். அடி வாங்கும் போது துடிப்பான். ஆனால் அவனுக்கு என்னிடம் பயம் சிறிதளவும் இல்லை. பயம் மட்டுமன்றி கோபம், வெறுப்பு என்ற எந்த உணர்வும் கிடையாது. "

"ஒரு சமயம் நான் கடுமையான காலரா நோயால் விழுந்தேன். எனக்கு திருமணம் ஆகாதலால்  என்னை கவனிக்க யாருமில்லை. இறந்து விடுவேன் என்றே நினைத்தேன். கிருஷ்ணன் சாமி என்னை தேடி வந்தான். வீட்டிலிருந்து பத்திய உணவு கொண்டு வந்திருந்தான். என் அருகிலே இருந்து என்னை கவனித்தான். நான் இப்போது உயிருடன் இருப்பது அவன் புண்ணியம். இவன் மனிதப் பிறவியே இல்லையப்பா. தெய்வம். இல்லை அதற்கும் மேல்.”

நான் கிருஷ்ணன் சாமியுடன் பல முறை விவாதங்கள் செய்ததுண்டு. நான் கேட்கும் கேள்விகள் அவருக்கு என் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இன்று கூட வன்முறை பற்றி விவாதித்தோம். போர் பற்றி நான் கேள்வி கேட்டேன்.

"போரே இல்லாத ஒரு சமூகத்தை மனிதன் ஏற்படுத்த முடியுமா?"

"முடியும். ஆனால் அதற்கு முன் மனிதன்  தன்னிடம் இருக்கும் வன்முறையை களைய வேண்டும்."

"சில சமயம் தற்காப்பிற்காவது வன்முறை தேவை அல்லவா. கொலை செய்ய வரும் ஒருவனிடம் வன்முறை மூலம் தானே என்னை காத்துக் கொள்ள முடியும்."

"நன்றாக யோசித்துப் பார். வன்முறை தவிர வேறு வழியே இல்லையா?"

"காந்தி போன்று அகிம்சாவாதியாக இருக்க சொல்லுகிறீர்களா? அவர் இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் மூலம் துன்புறுத்தப்பட்ட யூதர்களை வலிந்து மரணத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இது நடைமுறைக்கு சாத்தியமா."

"சாத்தியம் இல்லை தான்.  ஆனாலும் வன்முறை இல்லாமல் உன்னை நீ தற்காத்துக் கொள்ள முடியும். அது அந்த சூழ்நிலையில் உன் முன் இருக்கும் எல்லா  தெரிவுகளை பொறுத்தது. அதில் ஒரு தெரிவு வன்முறையற்ற தற்காப்பாக இருக்கும். அந்த நொடியில், அந்த தெரிவை நீ கண்டு பிடிப்பது  தான்  உண்மையான ஞானம். மற்றவை எல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகாத வெற்று கோட்பாடுகள் தான்."

"நீங்கள் இது வரை யார் மீதும் வன்முறை கையாண்டதில்லையா. "

"இல்லை. நம்புவது கடினம். ஆனால் அது தான் உண்மை."

கிருஷ்ணன் சாமி மீதிருந்த பிரமிப்பு மேலும் கூடியது.

இவரிடம் காம உணர்வுகள் சிறிதும் இல்லாதது தான் இந்த பக்குவத்திற்கு காரணமா என்று கூட  நான் யோசித்ததுண்டு. எந்தப்  பெண் மீதாவது இவருக்கு மோகம் இருந்ததுண்டா. என் ஐயத்தை அவரிடமே கேட்டேன்.

"காமம் என்பது என்ன அருவருப்பான விஷயமா. அதுவம் அன்பின் வெளிப்பாடு தானே. நான் கன்னித்தன்மையை இழந்தவன் தான். ஐந்து வருடங்கள் முன் மேகி என்று ஒரு பிரிட்டிஷ் பெண் என்னை சந்திக்க வந்தாள். வந்தவள் என்னிடமே தங்கி விட்டாள்.  எங்கள் இருவருக்கும் உடல் ரீதியான ஈர்ப்பு இருந்தது. உடலுறவும்  ஏற்பட்டது. நான் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், எங்கள் உறவை பகிரங்கமாக இந்த உலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் விரும்பினேன். ஆனால் அதில் அவளுக்கு சில சிக்கல்கள் இருந்தன. சில நாட்களிலே லண்டன் சென்று விட்டாள். அங்கு அவளுக்கு வேறு ஒருவனிடம்  திருமணமும் நடந்தது. வருடத்திற்கொரு முறை என்னை சந்திக்க கணவனுடன் வருவாள். இன்றளவும் நல்ல நண்பர்களாக எங்கள் உறவு நீடிக்கிறது.”

நான் கிருஷ்ணன் சாமியின் வாழ்க்கை எந்த ஒரு ரகசியமுமற்ற திறந்த புத்தகம் என்று தான் நினைத்து வந்தேன். ஆனால் அது தவறு என்று தெரிய வந்தது. ஆசிரமித்தில் ஒரு அறை பூட்டியே இருந்தது. அந்த அறைக்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. வாரம் ஒரு முறை கிருஷ்ணன் சாமி அந்த அறைக்குள் சென்று ஒரு மணி நேரம் கழித்து வருவார். அந்த அறைக்குள் என்ன இருக்கிறது, கிருஷ்ணன் சாமி என்ன செய்கிறார் என்று யாரும் அறியாத மர்மமாக இருந்து வந்தது.

ஒரு நாள் கிருஷ்ணன் சாமி இல்லாத நேரத்தில் அந்த அறையின் சாவியை தேடி எடுத்தேன். அறையை திறந்து பார்த்தேன். ஒரே ஒரு பெட்டி அந்த அறைக்குள் இருந்தது. பெட்டியை  திறந்து பார்த்த போது ஒரே ஒரு புகைப்படம் மட்டும் இருந்தது. 40 வருடங்கள் முன் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஐந்து வயது சிறுவனும் அவன் மடியில் ஒரு வயது சிறுவனும் இருந்தனர். அதில் ஒருவர் கிருஷ்ணன் சாமியாக இருக்க வேண்டும் என்று யூகித்தேன். புகைப்படத்தை அப்படியே வைத்து விட்டு அறையை பூட்டி வெளியே வந்தேன். 

சிந்தனை  முழுதும் அந்த அறையும், அறைக்குள் இருந்த புகைப்படத்தை சுற்றியும் இருந்தது. அறை சாவியின் பிரதி ஒன்றை தயாரித்து கொண்டு உண்மையான சாவியை அதன் இருப்பிடத்திலையே வைத்தேன். 

ஒரு நாள் கிருஷ்ணன் சாமி ரகசிய அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டதை கவனித்தேன். நான் அறையின் கதவை திறந்து உள்ளே என்ன நடக்கிறது என்று கவனித்தேன்.  புகைப்படத்தை கைகளில் வைத்துக் கொண்டு  கிருஷ்ணன் சாமி  அழுதுக் கொண்டிருந்தார். 

கிருஷ்ணன் சாமியை இவ்வளவு  உணர்வு பூர்வமாக நான் பார்த்ததில்லை. கதவை மீண்டும் பூட்டி விட்டு நான் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தேன். பிறகு அன்றிரறவு யாரும் அறியாத வானம் அந்த அறைக்குள் சென்று புகைப்படத்தை எடுத்து  மறைத்து வைத்துக் கொண்டேன்.

அடுத்த நாள் திருவண்ணாமலை சென்று கிருஷ்ணன் சாமியின் ஆசிரியரை சந்தித்தேன். அவரிடம் புகைப்படத்தை காண்பித்தேன்.

"பெரியவன் கிருஷ்ணன் சாமி. சிறியவன் அவன் தம்பி. தம்பி என்றால் கிருஷ்ணனுக்கு அவ்வளவு உயிர். இருவருக்கும் நான்கு வயது வித்தியாசம். தம்பியை ஒரு தாய் போல கிருஷ்ணன் சாமி பார்த்துக் கொண்டான். ஆனால் இரண்டு வயதான போது  தம்பி நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டான். தம்பியின் மரணத்திற்குப் பிறகு கிருஷ்ணன் நடைப் பிணம் போல ஆனான். ஒரு வருடம் யாரிடமும் பேசவில்லை. சரியாக உணவு இல்லை. பள்ளி வருவது முற்றிலும் நின்றது. அவனுக்கு என்ன ஆகுமோ என்று நாங்கள் எல்லாம் பயந்திருந்தோம். திடீரென்று ஒரு நாள் பழைய கிருஷ்ணனாக மாறினான். தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினான். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று பெரும் புதிராக இருந்தது.”

நான் பஸ்ஸில் சிதம்பரம் திரும்பிக் கொண்டிருந்தேன்.  கள்ளம் கபடமில்லாத இரு சிறுவர்கள் இருந்த புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த புகைப்படத்தை கிழித்து ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தேன்.

எதுவும் நடக்காத வண்ணம் இயல்பாக ஆசிரமத்தில் உலவி வந்தேன். ஒரு நாள் கிருஷ்ணன் சாமி ரகசிய அறைக்குள் செல்வதை கவனித்தேன். சிறிது நேரத்திலேயே அறையை விட்டு வெளியே வந்தார். அவர் முகம் வெளிறி இருந்தது. அன்று முதல் அவர் யாரிடமும் பேசவில்லை.  உணவு சரியாக சாப்பிடவில்லை. யாரையும் சந்திக்க விரும்பவில்லை. 

நான் அவர் படுக்கை அறைக்கு சென்றேன். உறங்காமல் வெறும் படுத்திருந்தார்.

"உங்கள் பலவீனம் எனக்கு மட்டும் தெரியும்."

அவர் உடல் பதறியது.

"அந்த புகைப்படம். உங்கள் சகோதரனுடன்."

"அதை என்ன செய்தாய். என்னிடம் கொடுத்து விடு." 

கிருஷ்ணன் சாமி என் கைகளை பற்றி கதறினார் .

"அதை நான் கிழித்து விட்டேன்."

"கிழித்து விட்டாயா?"

நானே எதிர்பார்க்காத ஒரு செயலை கிருஷ்ணன் சாமி செய்தார். என்னை பளாரென்று அறைந்தார்.

நான் அவரை ஏளனமாக ஒரு பார்வை பார்த்தேன்.

தன்னை மீறிய செய்கை கிருஷ்ணன் சாமிக்கு அதிர்ச்சி அளித்திருக்க வேண்டும். தன் முகத்தை கைகளால் புதைத்துக் கொண்டு அழுதார்.

அவரை வென்ற பெருமிதத்துடன் நான் அங்கிருந்து நகர்ந்தேன்.

அடுத்த நாள் கிருஷ்ணன் சாமி ஆசிரமத்திலிருந்து மறைந்தார். அவர் எங்கிருக்கிறார் என்று யாரும் அறியவில்லை. இமைய மலையில் சுற்றுவதாகவும், குகைகளில் தியானம் செய்கிறார் என்றும் சில வதந்திகள் என் காதுக்கு வந்தன. 

நான் அவர் ஆசிரமத்தை ஒரு பள்ளிக்கூடமாக மாற்றினேன். ஏழை சிறுவர்களுக்கு கல்வி அளித்து வந்தோம். இவ்வாறாக பத்து வருடங்கள் கழிந்தது. நான் கிருஷ்ணன் சாமியை மறந்து விட்டிருந்தேன். 

ஒரு நாள் எனக்கு உதவி செய்து வரும் பணியாள் ஒருவன் கிருஷ்ணன் சாமி புதுவையில் இருப்பதாகவும், மீண்டும் பொது மக்களை சந்தித்து உரையாடுவதாகவும் தெரிவித்தான்.

நான் விசாரித்து கிருஷ்ணன் சாமி இருக்குமிடத்தை அடைந்தேன். 

ஒரு சிறிய வீட்டில் கிருஷ்ணன் தங்கியிருந்தார். வீட்டின் முன் தோட்டம். தோட்டத்தில் வித விதமான ரோஜா செடிகள். நான் மலர்களின் அழகில் லயித்து நின்று கொண்டிருந்தேன்.

"பாலா எப்படி இருக்கிறாய். பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிறது."

ஒரு ரோஜா செடியின் முட்களை கிருஷ்ணன் அகற்றி கொண்டிருந்தார். என்னை அவரருகே வருமாறு அழைத்தார்.

என் உடலில்  சிறு பதற்றம் இருந்தது.

"வா இப்படி அருகில் வந்து உட்கார். சிதம்பரம் வர வேண்டும் என்று பல முறை நினைத்ததுண்டு."

எனக்கு அவரிடம் பேச வார்த்தைகள் சுலபமாக வரவில்லை.

"எவ்வளவு அழகான மலர். ஆனால் அதை சுற்றி முட்கள். இங்கு குழந்தைகள் விளையாட வருகிறார்கள். மலர்களை பறிக்கிறார்கள். அவர்கள் காயப்படக்  கூடாது அல்லவா. தினம் காலை இங்கிருக்கும் செடிகளின் முட்களை அகற்றுகிறேன்."


அந்த செடியின் எல்லா முட்களையும் அகற்றி விட்டார். கடைசி முள் சற்று சிரமமாக இருந்தது. அதை அகற்ற முயல்கையில் கிருஷ்ணனின் விரலை காயப்படுத்தியது. அவரிடமிருந்து கத்தியை வாங்கி அந்த முள்ளை நான் அகற்றினேன்.

"என் மீது உங்களுக்கு கோபம் சிறிதளவும் இல்லையா?"

“பாலா, உன் மீது எனக்கு எப்படி கோபம் வரும். உன் மீது எனக்கு மிகுந்த நன்றியுணர்வு தான் இருக்கிறது. இந்த ரோஜா செடியின் கடைசி முள்ளையும்  அகற்றியது நீ தானே"

நான் கிருஷ்ணன் சாமியின் கால்களை பற்றியவண்ணம் தேம்பி அழுதேன். கிருஷ்ணன் என்னை கைகளால் தாங்கி அனைத்துக் கொண்டார்.

அன்று நான் முடிவு செய்தேன். என் வாழ் நாள் முழுதும் கிருஷ்ணன் சாமியை விட்டு பிரிய மாட்டேன் என்று.



No comments:

Post a Comment