Friday, September 11, 2015

தெய்வமகன் - அறிவியல் கதை

                              தெய்வமகன்          
"தாத்தா தாத்தா ஒரு கதை சொல்லுங்க தாத்தா"
"இன்னைக்கு வேணாம் நாளைக்கு சொல்றேன்"
"அதெல்லாம் முடியாது தினமும் இதையே சொல்றீங்க. இன்னைக்கு கதை சொல்லியே ஆகணும்"
அவரை எல்லோரும் தாத்தா என்று தான் அழைப்பார்கள். அவரது உண்மையான பெயர் என்னவென்பது யாருக்குமே தெரியாது. தாத்தா என்ற பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.
இன்று அவரது பிறந்தநாள் என்பதால் குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர். ஒரு வாரமாக வீடே அமர்க்களப்பட்டது.கடைக்குட்டி பிரேம் அவருடன் மிகவும் ஒட்டி விட்டான். அவன் தினமும் கதை கேட்டு நச்சரிப்பது வழக்கம். தாத்தாவும் தட்டிக்கழித்துக் கொண்டே வந்தார். இன்று சொல்லாவிட்டால் பிரேம் விட மாட்டான்.
தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார்."ஒரு ஊர்லே ஒரு ராஜா இருந்தார். அவர் ரொம்ப பலசாலி. அவருக்கு இரண்டு பசங்க இருந்தாங்க"
"தாத்தா ஸ்டாப் ஸ்டாப்.எனக்கு ராஜா கதை எல்லாம் வேணாம் வேறு ஏதாவது கதை சொல்லுங்க"
"என்ன கதை சொல்லணும்"
"கதையிலே ஒரு குட்டி பாப்பா வரணும். நிறைய Gun Fight வரணும். அப்புறம் வேற கிரகத்திலிருந்து மனுஷங்க வரணும். அது மாதிரி ஒரு கதை சொல்லனும்"
"சரி அது மாதிரி ஒரு கதை உனக்கு சொல்றேன்"
                          தாத்தா சொன்ன கதை
             Chapter 1
   பூமி - 250,000 ஆண்டுகள் முன்பு
கடல் என்னும் சிறையிலிருந்து  தனது செங்கரங்களை நீட்டி சூரியன்  மெல்ல வெளியே வந்தது. பறவைகள் கூட்டம் பறந்து வானத்திற்கு அழகு சேர்த்தது. இதைத்  தன்னை மறந்து ரசித்தவண்ணம் இருவர் கடற்கரையில் நின்று கொண்டிருந்தனர்.
"அப்பா, நமது கிரகத்தின் நட்சத்திரத்தை விட இது எவ்வளளவு அழகாக இருக்கிறது. எனக்கு இந்த இடத்தை விட்டுப் போக மனமே இல்லை."
"ஆம் அஸ்தன். என்னையும் இந்தக் கிரகம் மிகவும் கவர்ந்து விட்டது. அழகிய நதிகள், வெண்ணிற பனிமலைகள், பச்சைப்பசேலன காடுகள் என்று இந்த இடம் சொர்க்கலோகம் போலிருக்கிறது. ஆனால் நம் காரியம் முடிந்தவுடன் நம் உலகிற்கு சென்று தானே ஆக வேண்டும்." என்று மேகன் தனது மகன் அஸ்தனுக்கு பதிலளித்தான்.
"நாம் எதற்கு இந்தக் கிரகம் வந்திருக்கிறோம் என்று அப்போதிருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் சொல்கிறேன் என்று ஏமாற்றிக் கொண்டே இருக்கிறீர்கள்."
"நமது ரேதியோன் கிரகத்தின் நட்சத்திரம் 300,000 ஆண்டுகள் கழித்து அழிந்து விடும். அதனால் நமது கிரகமும் அங்கு வாழும் நமது மனித இனமும் கூட முற்றிலும் அழிந்து விடும். நமது இனம் தழைப்பதற்கு ஏற்ற இன்னொரு உலகத்தைத் தேடித்தான் நீயும் நானும் வந்திருக்கிறோம்."
"இந்த பூமி அதற்கு ஏற்ற உலகமா?"
"ஆம் தட்ப வெப்பம் பொருத்தமாக இருக்கிறது.மிக முக்கியமாக இந்த உலகில் நீர் இருக்கிறது. மற்ற ஜீவராசிகளும் இந்த உலகில் வாழ்கிறது. நமது இனத்தின் உயிர் விதைகளை இந்த பூமியிலேயே வைத்து விடலாம் என்று நான் முடிவெடுத்திருக்கிறேன்."
"இந்த கடற்கரையிலேயே உயிர் விதைகளை வைத்து விடலாமே அப்பா"
"உயிர் விதைகள் அழியாமல் இருந்து வளர்வதற்கு மிகவும் குளிரான சீதோஷணம் வேண்டும். நாம் வேறு இடம் செல்லலாம்."
இருவரும் சில நொடிகளில் பனிசார்ந்த ஒரு மலையில் நின்றனர்.
"இந்த இடம் நமது ரேதியோன் கிரகம் போலவே இருக்கிறது"
இருவரும் மலையில் ஏறிச் சென்றனர். அஸ்தன் மிகவும் உற்சாகமாக பனியில் சறுக்கியவண்ணம் விளையாடிக் கொண்டிருந்தான்.
வெகு நேரம் கழித்து ஓரிடத்தில் நின்றனர். அவர்கள் முன்பு ஒரு பெரிய பனிப் பாறை இருந்தது.
மேகன் அதை நகற்றியவுடன் ஒரு துவாரம் தெரிந்தது.
இருவரும் அதற்குள் சென்றனர். மிகவும் இருட்டாக இருந்தது.
"அஸ்தன், உனக்கு அச்சமாக இல்லை அல்லவா?"
"சுத்தமாக இல்லை"
இருட்டில் வெகு நேரம் உள்ளே சென்று கொண்டே இருந்தனர். அஸ்தன் கையில் ஒரு கல்லை எடுத்துக் கொண்டு சுவரில் ஓவியங்கள் வரைந்த வண்ணம் மேகனைப் பின் தொடர்ந்தான்.
திடீரென மேகன் நின்றான். தான் நின்ற இடத்தை சுற்றிலும் பார்த்தான். மூலையில் ஒரு குரங்கு படுத்துக் கொண்டிருந்தது.
மேகன் ஊசி போன்ற ஒரு பொருளை எடுத்து அந்தக் குரங்கின் கையில் குத்தினான். குரங்கு முழித்து “வீல்” என்று கத்தியது. அஸ்தன் இது எதையும் கண்டு கொள்ளாமல் ஓவியங்கள் வரைவதில் மும்முரமாக இருந்தான்
"அஸ்தன், நாம் ரேதியோனுக்கு கிளம்ப வேண்டும். இந்த இடத்தை விட்டு வெளியேறலாம் வா."
"இனி இந்த உலகம் என்னவாகும் அப்பா"
"நமது மனித இனம் பூமி என்னும் இந்த புது உலகில் வளரும்."
"நம் உலகில் இருக்கும் மக்கள் அனைவரும் இந்த பூமிக்கே வந்து விடலாம் அல்லவா?"
"அது முடியாது"
"ஏன்"
"உன் வயது என்ன"
"500"
"என் வயது என்ன"
"ஒரு 1,00,000 இருக்குமா?"
"ஆம். உன் தாத்தா வயதென்ன"
"அவருக்கு ஒரு 250,000 இருக்கும்"
"நம் உலகைக் காட்டிலும் இவ்வுலகில் புவியீர்ப்பு சக்தி அதிகம். இந்த உலகில் உயிரினம் 120 அண்டுகள் மேல் வாழ முடியாது. அதனால் நாம் வாழ்வதற்கு ஏற்ற இடம் இதுவல்ல."
இருவரும் தங்கள் விண்கலத்தில் ஏறி ரேதியோனை நோக்கிக் கிளம்பினர்.
அஸ்தன் பூமியைப் பார்த்த வண்ணம் இருந்தான். மெல்ல அவ்வுலம் மறைந்துக் கொண்டிருந்தது. பூமியை விட்டுப் பிரிய பிரிய அஸ்தன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இதை கவனித்த மேகனுக்கு நெஞ்சு கனத்தது. எல்லாம் ரேதியோன் சென்றவுடன் சரி ஆகி விடும் என்று தன்னைத் தேற்றிக் கொண்டான். 
      காஷ்மீர் - வருடம் கி.பி 2013
காஷ்மீர் மலைப்பகுதியில் ஒரு அழகிய ஓட்டல் அறையில் ஷாலினி மேக்கப் செய்துக் கொண்டிருந்தாள். சூர்யா அவர்களது மூன்று வயதுக் குழந்தையான நிஷாவுக்கு உணவூட்டிக் கொண்டிருந்தான்.
"வயசு மூணாச்சு. இன்னும் ஊட்ட வேண்டியிருக்கு" என்று சூர்யா சலித்துக் கொண்டான்.
"நாம் இது வரை போன டூரிலே இது தான் பெஸ்ட் சூர்யா. ஐ ரியல்லி லவ் திஸ் பிளேஸ்."
"நம்ம ஹனி மூன் ட்ரிப்பை விடவா?"
"ஆமாம் ஹனிமூனுக்குனு கூட்டிட்டுப் போனியே ஏதோ டெல்லி, ஆக்ரான்னு. சுத்த போர்."
"அப்போ நமக்கு கல்யாணம் ஆன புதுசு. கொஞ்சம் ரொமாண்டிக்கா தாஜ் மஹால்  பார்க்கலாம்னு நினைச்சேன்.”
"தாஜ் மஹால் எல்லாம் ஒரு ரொமான்சும் இல்லை சூர்யா. இங்கே வந்ததும் எனக்கு எவ்வளவு மூடா இருக்கு தெரியுமா" என்று ஷாலினி கண்ணடித்தாள்.
அதற்குள் நிஷாவின் சட்டையில் தெரியாமல் சாதம் பட்டு விட குழந்தை "என் சட்டை மெஸ்ஸி ஆயிடுச்சு" என்று ஓவென அழுதது.
"சூர்யா நான் கொஞ்சம் வெளியே ஒரு குட்டி வாக் போயிட்டு வரேன்."
"குழந்தை அழுது. கொஞ்சம் கூட கவனிக்காம வாக்கிங் போறேன்னு சொல்றே"
"சான்சே இல்லை. நீ மிலிட்டரில இருக்கிறதுனால பாதி நாள் டூர்னு கிளம்பிடற. நிஷாவை நானே ஒத்தையா பார்த்து மண்டை காஞ்சு போயிருக்கேன். இங்கே எனக்கு கம்ப்ளீட் ரெஸ்ட்."
"சரி கொஞ்சம் வெயிட் பண்ணு. நாங்களும் கூட வருகிறோம்"
"நோ வே. நான் தனியா போகப் போறேன்"
"நான் உன்னுடன் வரக் கூடாதா"
"நீ தொண தொணன்னு பேசிகிட்டே வருவே. இந்த இயற்கை அழகில் நான் என்னை அப்படியே பறிகொடுக்கணும். அதுக்கு தனியா போனா தான் வசதி. போயிட்டு வரேண்டா செல்லம்" என்று அவன் கன்னத்தைக் கிள்ளிவிட்டு வெளியே சென்றாள்.
"தனியா போகணும்னா, நீ மட்டும் வர வேண்டியதுதானே எதற்கு நாங்களும் கூட" என்று அவன் கூறியதை அவள் பொருட்படுத்தவில்லை.
அது கோடை காலமாதலால் பனி அவ்வளவாக இல்லை.ஷாலினி மெதுவாக நடந்து சென்றாள். சாலை ஓரிடத்தில் முடிந்தது. ஷாலினி அங்கே இருந்த ஒரு பாறையில் அமர்ந்து மலையின் அழகை ரசித்தாள். மலையின் கீழே நோக்கி ஒரு குறுகிய பாதை செல்வதை கவனித்தாள். ஏதோ தோன்ற அந்த பாதையில் நடந்து சென்றாள். வெகு நேரம் ஆயினும் பாதை முடியாமல் சென்று கொண்டே இருந்தது .நிஷாவின்  ஞாபகம் வர திரும்பி விடலாமா என்று யோசித்தாள். அப்போது ஒரு குகையின் முன் வந்து நின்றாள்.
ஏதோ ஒரு சக்தி அவளை குகைக்குள்ளே இழுத்தது. உள்ளே மிகவும் இருட்டாக இருந்தது. தன்னுடன் எடுத்து வந்திருந்த டார்ச் லைட்டை ஆன் செய்தாள். சுவரில் சில வினோதமான ஓவியங்களைப் பார்த்து அதைத் தடவிய வண்ணம் சென்றாள். எவ்வளவு நேரம் உள்ளே நடந்தாள் என்று அவளுக்கே தெரியாது. திடீரென ஓரிடத்தில் தன் முன்னிருந்த ஆழமான பள்ளத்தை உணராமல் ஷாலினி கீழே விழுந்தாள். பள்ளத்தின் கரிய இருட்டு அவளை முழுங்கியது.
டார்ச் லைட் பள்ளத்தின் விளிம்பில் அனாதையாகக் கிடந்தது.
                 ----------------------------*********************-----------------------------------
சூர்யா கோபத்தின் உச்சத்திலிருந்தான். நிஷா அழுது ஆர்ப்பாட்டம் செய்து அப்போது தான் உறங்கியிருந்தாள். ஷாலினி போய் இரண்டு மணிநேரம் ஆகி இன்னமும் திரும்ப வரவில்லை. செல்போனை வேறு மறந்து ரூமிலேயே வைத்து விட்டு சென்றிருந்தாள்.
வேறு வழியில்லாமல் தானே தேட முடிவு செய்து, நிஷாவைக் கையில் தூக்கி ரூமை விட்டு வெளியேறினான். சாலையின் முடிவு வரை சென்றான். அங்கே சிறிது நேரம் சுற்றிலும் பார்த்தான். கீழே ஒரு பாதை செல்வதை கவனித்தான். ஷாலினி கண்டிப்பாக கீழே சென்றிருக்க மாட்டாள் என்று நம்பி ரூமை நோக்கித் திரும்பி வந்தான்.
வழியில் சென்றவர்களிடம் விசாரித்தான். யாருக்கும் ஷாலினி பற்றிய விபரம் தெரியவில்லை.சூர்யா இப்போது உண்மையிலேயே கலவரமானான்.
போலீசின் உதவியை நாடலாம் என்று ஒருவர் கூற அருகிலிருந்த போலீஸ் ஸ்டேஷன் சென்று ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தான்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்னுடன் நான்கு கான்ஸ்டபிள்களை கூட்டிக் கொண்டு ஹோட்டல் சுற்றி எல்லா இடங்களையும் அலசினார். சூர்யாவும் நிஷாவைத் தூக்கிக் கொண்டு அவர்களுடன் சென்றான். நிஷா இப்போது முழித்து விட்டாள்.
"சார். குழந்தை வேற வச்சிருக்கீங்க. ரூமுக்கு போங்க நாங்க தகவல் சொல்றோம்."
"இன்னும் கொஞ்ச நேரம் உங்களுடன் தேடிப் பார்க்கிறேன்"
இப்போது அவர்கள் மறுபடியும் அந்த சாலையின் முடிவுக்கே வந்தனர்.
இன்ஸ்பெக்டர் குறுகிய பாதை வழியாக கீழே செல்ல முடிவெடுத்தார்.
"நீங்க ரூமுக்கு முதலில் போங்க. இந்தப் பாதை கொஞ்சம் ஆபத்தா இருக்கு, குழந்தையோட நீங்க வருவது சரியாக இருக்காது"
"பரவாயில்லை சார். இது மாதிரி நிஷாவுடன் ட்ரெக்கிங் எல்லாம் போயிருக்கோம். உங்களுடன் நானும் வருகிறேன்"
அவர்கள் அந்தப் பாதையில் மெதுவாக நடந்தனர். பாதை குகையின் அருகே வந்து முடிந்தது.
"சார் உள்ளே போய் பார்க்கலாமா."  என்று ஒரு கான்ஸ்டபில் கேட்டார்.
"அந்த அம்மாக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு. இதுக்குள்ளே போக"
"இல்லே சார் எதுக்கும் பார்த்துடலாம்"
"சூர்யா நீங்க சொன்னீங்கனா பார்த்துடலாம். எனக்கென்னமோ உங்க மனைவி உள்ளே போயிருப்பாங்கன்னு தோணலை. ரொம்ப ஆபத்தா வேற இருக்கும். போய் தேடினா நம்ம உயிருக்கே உத்தரவாதம் இல்லை."
சூர்யாவும் வேண்டாம் என்று கூற அவர்கள் திரும்பினர். நிஷா அந்தக் குகையையே பார்த்து தேம்பி தேம்பி அழுதுக் கொண்டிருந்தாள்.
இரண்டு நாட்கள் கழித்து சூர்யாவைப் பார்க்க இன்ஸ்பெக்டர் வந்தார்.
ஷாலினியின் பெற்றோர் மற்றும் அவளுடைய தங்கையும் ரூமில் இருந்தனர். சூர்யாவின் முகமெல்லாம் சிவந்திருந்தது.
"என்ன சார், ஷாலினி பற்றி ஏதாவது தெரிந்ததா."
"நீங்க ரூமுக்கு வந்த பிறகு நாங்க அந்த குகைக்குள்ளே போய் பார்த்தோம். ஒரு பெரிய பள்ளம் தெரிஞ்சுது. பள்ளத்தின் விளிம்பில் இந்த டார்ச் லைட் இருந்தது. இது உங்களுடையதா என்று பார்த்து சொல்லுங்க".
"இது என்னுடையது தான். அப்போ ஷாலினி எங்கே"
"மன்னிக்கணும் சூர்யா. அவங்க அந்த பள்ளத்தின் கீழே விழுந்து இறந்திருக்கணும்."
சூர்யா தன் முகத்தை மூடிக் கொண்டு குலுங்கி அழுதான்.
           ----------------------------*********************-----------------------------------
மூன்று மாதங்கள் கழித்து
        டெல்லி
"நிஷா மூச்சை நல்லா இழுத்து வெளியே விடு"
நிஷாவின் ரெகுலர் செக்கப்புக்காக சூர்யா டாக்டர் கைலாஷின் மருத்துவமனைக்கு  வந்திருந்தான்.
"அவள் முழுதும் நார்மலாக இருக்கிறாள். கொஞ்சம் வைட்டமின் டாப்லட் மட்டும் கொடுங்கள்."
"சரி டாக்டர்."
"அப்புறம் உங்கள் மனைவி விஷயம் கேள்விப்பட்டேன். ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. குழந்தையை வைத்துக் கொண்டு தனியா எப்படி சமாளிக்கிறீங்க."
"சமாளிச்சு தானே ஆகணும். ஷாலினியின் தங்கை சுனிதா வந்து பார்த்துக் கொள்கிறாள்."
"குழந்தை அம்மாவின் இழப்பை ஜீரணித்துக் கொண்டாளா."
"அவள் மனதில் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை டாக்டர். ஷாலினி இறந்ததிலிருந்து அவள் அழுதோ சிரித்தோ நான் பார்த்ததே இல்லை."
"இது ரொம்ப அப்நார்மல் ஆச்சே. நீங்கள் ஏன் முதலிலே இதை சொல்லவில்லை"
கைலாஷ் டிவியில் கார்ட்டூன் சேனல் போட்டார்.
நிஷா ஒரு சலனமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிறகு சேனலை மாற்றி ஒரு சோகமான படத்தைப் போட்டார்.
நிஷா அமைதியாக எந்த உணர்ச்சியும் வெளிக்காட்டாமல் டிவியை பார்த்தாள்.
"அவள் அம்மா உயிருடன் இருந்த போது எப்படி இருப்பாள்."
"எப்போதும் பேசிக் கொண்டே இருப்பாள். சில சமயம் அழுது அடம் பண்ணுவாள். ரொம்ப கலகலப்பா இருப்பாள்."
"இப்போது குழந்தை மாறி இருப்பது உங்களுக்கு வித்தியாசமாகத் தெரியவில்லயா"
"சாரி டாக்டர் என் கவலையில் இதை கவனிக்காமல் விட்டு விட்டேன்."
"அவள் மன நிலை பாதிக்கப்பட்டிருக்கு. She is in a state of trauma. அவளுடைய உணர்ச்சிகள் மரத்து விட்டது. அவள் மகிழ்ச்சி, சோகம், கோபம் போன்ற உணர்வுகளை முற்றிலும் இழந்து விட்டாள்.  இது மிகவும் ஆபத்து. அவள் பெரியவள் ஆனவுடன் டிப்ரஷனில் அதிகம் பாதிக்கப்படுவாள். தற்கொலை எண்ணங்கள் கூட வர வாய்ப்பிருக்கிறது.”
"இது சரி ஆக வாய்ப்பே இல்லையா டாக்டர்."
"பெரியவர்களுக்கு இந்த பிரச்சினை வந்தால் நாளடைவில் சரி ஆகி விடும். இவளுக்குச் சின்ன வயது என்பதால் கொஞ்சம் கடினம் தான்."
சூர்யா இடி விழுந்தது போல சிறிது நேரம் அமர்ந்திருந்தான். பிறகு நிஷாவைத் தூக்கிக் கொண்டு எழுந்தான்.
"கவலைப்படாதீர்கள் நல்லதையே நினையுங்கள். எதற்கும் அடுத்த வாரம் ஒரு Brain  scan எடுத்து விடலாம்"
சூர்யா ஆஸ்பிடலை விட்டுக் கிளம்பி வீட்டுக்கு வந்தான்.
சுனிதா சமையலில் மும்முரமாக இருந்தாள்.
"டாக்டர் என்ன சொன்னாங்க சூர்யா"
சூர்யா எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தான். அப்போது அவன் செல்போன் அடித்தது. ராணுவத்தில் அவனது மேலதிகாரி போனில் இருந்தார்.
"சூர்யா காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகரித்துள்ளது. பல கொலைகள், வெடி சம்பவங்கள் இந்த மாதம் நடந்துள்ளது. உள்துறை அமைச்சரின் மகளைக் கடத்தியிருக்கிறார்கள். அதனால் நீ உடனே கிளம்பி டூட்டிக்கு வரவேண்டும். பரமுல்லாவில் உள்ள நமது ஹெட்குவார்டார்ஸில் நாளை நீ ரிபோர்ட் செய்ய வேண்டும்"
"சார் குழந்தைக்கு உடல்நலம் சரி இல்லை. என் பர்சனல் விஷயம் வேறு உங்களுக்குத் தெரியும். மனது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஒரு மாதம் லீவ் கேட்கலாம் என்று நினைத்திருந்தேன்."
"பெர்சனல் வாழ்க்கை பெரிசுன்னா நீ எல்லாம் ஏன் மேன் மிலிட்டரில சேர்ந்தே. எந்த சால்ஜாப்பும் சொல்லாமல் நாளைக்கே டூட்டிலே ஜாய்ன் பண்ற வழியைப் பார்."
அடுத்த முனையில் போன் வைக்கப்படும் சத்தம் கேட்டது.
சூர்யா கோபத்தில் போனைத் தூக்கி எறிந்தான்.
இதைப் பார்த்து சுனிதா அதிர்ச்சியில் நின்றாள். அவளுக்கு விஷயம் புரிந்து விட்டது.
இந்த நேரம் எதுவும் பேச வேண்டாம் என்று சமையல் அறைக்கு சென்று விட்டாள்.
சிறிது நேரம் கழித்து, "சூர்யா சாப்பிட வாங்க"
சூர்யா பேசாமல் அமர்ந்திருந்தான்.
"உங்க நிலைமையைப் பார்த்ததால் கஷ்டமா இருக்கு. நிஷாவை வைத்துக் கொண்டு எப்படி தனியா சமாளிப்பீங்க. இன்னும் காலம் எவ்வளவு இருக்கு.  நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. நான் உங்களுடனே வந்து இருக்கிறேன். கடைசி வரை நிஷாவை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை மறு கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். நீங்க அக்கா மேல எவ்வளவு பாசமா இருந்தீங்கன்னு தெரியும். ஆனால் என் வாழ்க்கையை நான் நிஷாவுக்காக அர்ப்பணிப்பேன். நான் கல்யாணம் செய்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளேன்."
சூர்யா பதில் கூறாமல் தன் உடமைகளை சூட்கேசில் வைக்க ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில் டேக்சி வெளியே நின்றது. சூர்யா தன் பெட்டியை எடுத்து கொண்டு வீட்டின் வெளியே வந்தான். கதவருகில் சுனிதா நின்று கொண்டிருந்தாள்.
"நாளைக்கு நீ சென்னை கிளம்பி விடு. டிரைனில் டிக்கட் புக் செய்து விட்டேன். அத்தை வந்து இனிமேல் நிஷாவைப் பார்த்துக் கொள்வார்கள்."
சூர்யா டேக்ஸியில் சென்றதை சுனிதா மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
காஷ்மீர் எல்லையில்
"தீவிரவாதிகள் உள்துறை அமைச்சரின் மகளைக் கடத்தி வைத்திருக்கிறார்கள். குழந்தையை விடுவிக்க உங்கள் நான்கு பேர் கொண்ட அதிரடிப்படையினை அனுப்ப முடிவு செய்துள்ளோம். குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது. மிகவும் ஜாக்கிரதையாக இந்த மிஷனைக் கையாளுங்கள்.குட் லக்."
ராணுவ மேலதிகாரியின் உத்தரவை கவனமாக அந்த நான்கு பேர் கேட்டுக் கொண்டிருந்தனர்.
பிறகு ஜீப்பில் ஏறி ஊரின் எல்லைப்பகுதியில் உள்ள ஓர் பாழடைந்த கட்டடத்தின் முன் வந்தனர். கட்டடத்தின் உள்ளே நடப்பனவற்றைக் கூர்ந்து கவனித்தனர். உள்ளே 6 பேர் இருப்பது தெரிந்தது.
"திடீரென்று உள்ளே சென்று தாக்கினால் எதிரிகள் அதனை எதிர்பார்க்க மாட்டார்கள். நாம் வேகமாக செயல்படவேண்டும்".
"வேண்டாம் சூர்யா. அவர்கள் கண்டிப்பாக ஆயுதம் வைத்திருப்பார்கள். குழந்தை உயிருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்று மேஜர் சொல்லி இருக்கிறார்"
"ஆம் எனக்கும் அது தான் சரி என்று தோன்றுகிறது"
"கொஞ்சம் பொறுத்திருக்கலாம் சூர்யா"
அவர்கள் தீவிரவாதிகளைக் கண்கானிப்பதைத் தொடர்ந்தனர். நேரம் கடந்து  கொண்டே இருந்தது. சூர்யா பொறுமை இழந்தவனாய் கட்டடத்தை நோக்கி வேகமாக ஓடினான்.
"சூர்யா வேண்டாம் நில்"
சூர்யா கதவை ஓங்கி உதைத்தான். உள்ளே இருந்தவர்கள் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். சூர்யா தனது துப்பாக்கி மூலம் மூன்று பேரைக் கொன்றான்.
அதற்குள் சூர்யாவின் குழுவினரும் உள்ளே நுழைந்தனர்.அவர்கள் எஞ்சியிருந்த தீவிரவாதிகளை கவனித்துக் கொள்ள சூர்யா அடுத்த அறைக்குச் சென்றான். அங்கு கட்டிலின் அருகே ஒரு சிறு குழந்தை ஒளிந்துக் கொண்டிருந்தது. சூர்யா குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியேற முயல, ஒரு துப்பாக்கி குண்டு அவன் காலைத் துளைத்தது.
சூர்யா தன்னைச் சுட்டவனைத் திருப்பிச் சுட்டான்.
அதற்குள் சூர்யாவின் நண்பர்கள் மற்ற இரு தீவிரவாதிகளைக் கொன்றிருந்தனர்.
சூர்யா குழந்தையைத் தன் நண்பனிடம் கொடுத்து அவளைப் பத்திரமாக ஜீப்பில் வைத்திருக்கச் சொன்னான்.
கீழே கிடந்த தீவிரவாதிகளை சிறிது நேரம் பார்த்தான். அதில் ஒருவனிடம் உயிர் கொஞ்சம் ஒட்டி இருந்தது. கீழே மண்டியிட்டு அவனைக் கூர்ந்து கவனித்தான்.
"பழிக்குப் பழி. உன் குழந்தை, மனைவி,உன் குடும்பத்தில் ஒருவர் மிஞ்ச மாட்டார்கள். பழிக்குப் பழி."
அந்த மனிதனின் உயிர் பிரிந்தது.                                         

        

Chapter 2

  ரேதியோன் கிரகம்
மேகனுக்கு வயது இப்போது 350,000 ஆகி விட்டது. உடல் தளர்ந்து தனது அந்திம காலத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தார். அவரது படுக்கையின் அருகே அஸ்தனும்பேரன் சமனும் அமர்ந்து  பேசிக்  கொண்டிருந்தனர்.
"அப்பா நீங்கள் சமீப காலமாக பெரும் மனக்குழப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது. எதுவாக இருந்தாலும் என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம் அல்லவா"
"மனித குலம் தழைப்பதற்கு நான் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து விடுமோ என்ற கவலை  தான் எனக்கு"
"நமது கிரகம் அழிந்து விடுமோ என்று அச்சமா?"
"இன்னும் 50,000 ஆண்டுகளில் நமது நட்சத்திரம் அழிந்து விடும். அதனால் ரேதியோன் கிரகமும் பாதிக்கப்படும் என்பது உண்மை தான். ஆனால் என் கவலை ரேதியோன் கிரகம் பற்றியது அல்ல. பூமியின் எதிர்காலம் குறித்து தான் எனக்கு மிகவும் கவலையாக உள்ளது."
"பூமியும் அதன் நட்சத்திரம் இன்னும் பல்லாண்டுகள் நிலைத்திருக்குமே. ஏன் தங்களுக்கு வீண் குழப்பம்?"
"பூமியின் அழிவு இயற்கையின் காரணமாக அல்ல. அங்கு வாழும் நம் மனித இனம் செய்யும் தவறுகள் காரணமாக  ரேதியோன் கிரகத்திற்கு முன்பே  அவர்கள் அழிவு ஏற்படும்"
"எனக்கு புரியவில்லை அப்பா. கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்."
"நம்முடைய கிரகத்தில் வாழும் மனிதர்கள் ஒருவர் மீது இன்னொருவர் காழ்ப்புணர்ச்சி கொள்வதில்லை. ஒருவரை இன்னொருவர் கொல்வதில்லை, ஒரு குழு இன்னொரு குழு மீது போர் தொடுப்பதில்லை. மேலும் நாம் இயற்கையுடன் ஒட்டிய வாழ்வை தேர்ந்தெடித்திருக்கிறோம். நமது அறிவியல் வளர்ச்சி இயற்கையை நாசப்படுத்துவதில்லை. ஆனால் இந்தத் தவறுகள் எல்லாம் பூமியில் நடக்கிறது. அதனால் பூமியில் வாழும் நமது இனம் வெகு சீக்கிரம் அழிந்து விடுமோ என்று அஞ்சுகிறேன்"
"நீங்கள் சொல்வது எனக்கு வியப்பாக உள்ளது.பூமியில் வாழ்பவர்கள் நமது சந்ததியினர் தானே. பிறகு ஏன் நம்மிலிருந்து மாறுபட்டு இருக்கிறார்கள்."
"பூமியில் வாழ்பவர்களின் உணர்வுகள் நம்மை விட குறைப்பாடுகள் உடையதாக இருக்கிறது. நமது உணர்வுகள் ஐந்து பரிமாணத்தில் இயங்குகிறது. ஆனால் பூமியில் உள்ளவர்களுக்கு நான்கு பரிமாணத்தில் தான் இயங்குகிறது. அது தான் காரணம்."
அஸ்தன் குழப்பத்துடன் தன் தந்தையை நோக்கினான்.
"நாம் நீளம், அகலம் மற்றும் உயரம் என்ற மூன்று பரிமாணத்தைக் காண முடிவது உனக்குத் தெரியும். மேலும் நான்காம் பரிமாணமான காலத்தை உள்ளுணர்வினால் காண முடிகிறது. இந்த நான்கு பரிமாணத்தையும் பூமியில் உள்ளவர்களும் உணர முடிகிறது. ஆனால் 'ஆத்மா' என்கிற ஐந்தாம் பரிமாணத்தை நம்மால் உணர முடிவது பூமியில் உள்ளவர்களால் முடியாதது தான் அவர்கள் குறைபாடு."
"ஆத்மா பற்றிய விளக்கங்கள் தங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போதாவது அது பற்றி சொல்லுங்கள்"
"ஐந்தாம் பரிமாணத்தில் தான் இந்த பிரபஞ்சத்தில் நடந்தவை, நடப்பவை, நடக்காதவை மற்றும் இனி நடக்கக் கூடியவை இவை அனைத்தின் சாத்தியக்கூறுகளும் அடங்கியிருக்கிறது. மற்ற நான்கு பரிமாணங்கள் வெளி நோக்கி விரிவடைவதாக இருந்தால் ஆத்மா உள்நோக்கி இருக்கிறது. மனிதன் தன் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி ஒரு புள்ளியில் நிலைக்கும்போது  ஐந்தாம் பரிமாணம் தெரிகிறது. ஐந்தாம் பரிமாணத்தில் சக்தி ஒளியைக் காட்டிலும் வேகமாக இயங்குகிறது. அது மனிதனை சுத்தப்படுத்தி நல்வழியில் செலுத்துகிறது. மேலும் தன்னுடைய சக மனிதர்களுடன் ஒற்றுமையாக வாழ வழிப்படுத்துகிறது. அதனால் தான் ரேதியோன் கிரகத்தில் நாம் ஒருவருக்கொருவர் பிணக்கிலாமல் வாழ்கிறோம்."                  
"ஆத்மாவுக்கு அழிவுண்டா?"
"நாம் இறந்தாலும் 'ஆத்மா' அழிவதில்லை. இறந்த பின்னும் நமது ஐந்தாம் பரிமாணத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். நீ இறந்து போன உன் தாத்தாவுடன் இன்னும் உரையாடிக் கொண்டிருக்கிறாய் அல்லவா. 'டெலிபதி' மூலம் எண்ணத் தொடர்புகள் ஐந்தாம் பரிமாணத்தில் இயங்குகிறது. இறந்தவர், உயிருடன் இருப்பவர் யாருடனும் தொடர்பு கொள்ள முடிகிறது"
"ஆத்மாவைத் தவிர மற்ற பரிமாணங்கள் உள்ளதா?"
"ஆம். அது தவிர 'பரமாத்மா' என்ற ஆறாம் பரிமாணம் உள்ளது. அந்தப் பரிமாணத்தில் ஆற்றல் எல்லையில்லாததாக இருக்கிறது. அந்தப் பரிமாணத்தை நம் ரேதியோன் கிரகத்தினர் கூட உணர்வதில்லை. ஆறாம் பரிமாணத்தில் தான் நம்மைப் படைத்த இறைவன் இயங்குவதாக நம் முன்னோர்கள் கூறி உள்ளார்கள்".
"பூமியில் ஒருவர் கூட ஆத்மாவை உணர முடியவில்லையா"
"ஆம். அதற்குக்  காரணம் பூமியில் வாழும் மனிதர்களின் மூளை நம்மிடமிருந்து வேறுபட்டிருக்கிறது. வெகு சிலரின் மூளை நம்மை ஒத்து இருந்தாலும் அவர்களால் ஆத்மாவின் மிக உயர்ந்த ஆற்றல் நிலையை தாங்க முடியாமல் சித்தம் குலைந்து பைத்தியமாக மாறுகின்றனர்."
"அப்படி ஆனால் பூமியில் வாழ்பவர்களை நாம் காப்பாற்றவே முடியாதா?"
"முடியும். நம் உலகத்திலிருந்து ஒருவர் பூமிக்குச் செல்ல வேண்டும். அங்கு தகுந்த நபர் ஒருவரைத் தேர்ந்தேடுக்க வேண்டும். அந்நபருக்கு ஆத்மாவைக் கண்டறியும் வழியைக் காட்ட வேண்டும். அந்நபர் மூலம் பூமியின் மக்களை நல் வழிப்படுத்த வேண்டும். அதன் பிறகு பூமியில் போர் இருக்காது. நாசப்படுத்தும் அணு ஆயுதங்கள் இருக்காது. கோள வெம்மை போன்ற இயற்கைச் சீரழிவுகள் இருக்காது. இரு உலகத்தைச் சேர்ந்த இவர்கள் காலத்திற்குப் பிறகு அவர்கள் சந்ததியினர் பூமியை ஆன்மீக வழியில் செலுத்துவார்கள். "
"ஏன் ரேதியோன் கிரகத்திலிருந்து ஒருவரும் பூமிக்குச் சென்று உதவவில்லை"
"நம் உலகிலிருந்து செல்லும் நபர், பூமியில் நாம் தேர்ந்தெடுக்கும் மனிதனுடன் தங்கள் முழு வாழ் நாளையும் ஒன்றாகக் கழிக்க வேண்டும். இருவரும் ஒருவருக்கொருவர் ஆத்ம துணையாக இருக்க வேண்டும். அவர்கள் இருவரின் மரணமும் ஒரே கணத்தில் நடக்கும். அதனால் பூமிக்குச் செல்லும் நம் மனிதனின் ஆயுள் குறைந்து விடும். 350,000 ஆண்டுகள் வாழும் நம் உலகத்தினர் பூமியில் 120 ஆண்டுகள் மேல் வாழ முடியாது. அதற்கு நம் உலகத்தைச் சேர்ந்த யாரும் முன் வரவில்லை"
வெகு நேரம் பேசியதால் மேகன் களைப்படைந்து கண் மூடினார். அஸ்தன் மனக்குழப்பத்துடன் அறையை விட்டு வெளியேறினான். தன்னைப் பின் தொடர்ந்து வந்த மகன் சமனின் மனதில் ஓடிய சிந்தனைகளை அவன் அறியவில்லை.
                             ---------**************-------------
சூர்யா தனது வீட்டின் தோட்டத்தில் ஒரு புதிய தென்னங்கன்று வைப்பதில் மும்முரமாக இருந்தான். நிஷா படிக்கட்டில் அமர்ந்து சுவரின் மீது அமர்ந்திருந்த சிட்டுக்குருவிகளைப் பார்த்தவண்ணம் இருந்தாள்.
திடீரென்று நிஷாவின் மெடிக்கல் ரிசல்ட் கேட்க வேண்டும் என்பது ஞாபகம் வர சூர்யா வீட்டினுள்ளே நுழைந்தான்.
நிஷாவின் பாட்டி களைப்புடன் படுத்திருந்தார்..
"உடம்பு இன்னும் அப்படியே தான் இருக்கா"
"ஆமாம். உதவிக்கு சுனிதா சென்னையிலிருந்து வருவதாகச் சொல்லி இருக்கிறாள். மாலை 4 மணிக்கு டெல்லி வருகிறாள். நீங்கள் கொஞ்சம் ஏர்போர்ட் சென்று அழைத்து வர முடியுமா"
"அவள் எதற்கு. நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா."
"இல்லை அவள் வந்தால் சமையல் முழுதும் அவளே கவனித்துக் கொள்வாள் அதனால் தான்."
சூர்யா சலித்துக் கொண்டு மருத்துவமனைக்கு போன் செய்தான்.
"பிரைன் ஸ்கேன் செய்ததில் எல்லாம் நார்மலாக இருக்கிறது. ஆனால் மற்ற டெஸ்ட்களில் அவள் மூளையில் சுரக்கும் ஒரு கெமிக்கல் குறைவாக இருப்பது  தெரிகிறது. அதனால் மன நோய் பாதிப்புகள் வரக் கூடும். அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டால் இதனைத் தவிர்க்கலாம். நீங்கள் இப்போது ஹாஸ்பிட்டல் வந்தால் எல்லா ரிப்போர்ட்டும் வாங்கிக் கொள்ளலாம்."
சூர்யாவின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. மெல்ல எழுந்து நிஷா எங்கே என்று தேடினான். அவள் எந்த சலனமுமின்றி தோட்டத்தில் உள்ள பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிறகு தனது ஷூக்களைப் போட்டுக் கொண்டு காரில் ஏறி ஹாஸ்பிட்டலை நோக்கிச் சென்றான்.
சூர்யா சென்றவுடன் ஒரு கிளி நிஷாவின் அருகில் சற்று உயரே பறந்துக் கொண்டிருந்தது. நிஷா அதை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அது வெறும் பொம்மைக் கிளி என்பதை அவள் உணரவில்லை.
அவள் அந்தக் கிளியைத் தொடர்ந்து சென்றாள்.
கிளி அவர்கள் வீட்டின் அருகிலிருந்த ஏரியின் அருகில் கீழே விழுந்தது.
அவள் அதை எடுக்க முற்பட்டபோது ஒரு உருவம் அவள் வாயைப் பொத்தி தூக்கிச் சென்றது.
                       ---------------------************************-------------------------
"சூர்யா ஏன் இப்படி உம்முன்னு இருக்கீங்க.நான் டெல்லி வந்தது பிடிக்கலியா"
"அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சுனிதா"
"நான் சும்மா அம்மாவுக்கு ஹெல்ப்பாதான் வந்திருக்கேன். ஒரு வாரத்திலே சென்னை கிளம்பிடுவேன். உங்களைத் தொந்தரவு செய்வேன் என்று நினைக்காதீர்கள்."
"அதைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை. இன்னைக்கு மெடிக்கல் ரிப்போர்ட் வந்துச்சு அது தான் மனசே சரியில்லை"
"அப்படியா நிஷாவுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லையே"
"அவள் மன நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பிருப்பதாக டாக்டர் சொன்னார்"
"எங்கே ரிப்போர்ட் கொடுங்க."
ரிப்போர்ட்டை வாங்கி சுனிதா பார்த்தாள்.
"மெடிசின் ஏதாவது கொடுத்தார்களா"
"சின்ன வயது என்பதால் தேவையில்லை என்று சொன்னார். இன்னும் 5 வருடங்கள் கவனமாகப் பார்த்துக் கொண்டு அப்போது ஒரு டெஸ்ட் எடுத்து முடிவு செய்யலாம் என்று கூறினார்."
"இப்போ மன நோய்க்கெல்லாம் ரொம்ப அட்வான்ஸ்டாக மருந்துகள் வந்திருக்கிறது. நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். எனக்குத் தெரிந்து எவ்வளவோ குழந்தைகள் நார்மலாகி நன்கு படித்து வேலையிலும் இருக்கிறார்கள். ஷீ வில் பீ ஆல்ரைட். மனசைத் தளர விடாதீர்கள்" 
"நானும் அந்த நம்பிக்கையில் தான் இருக்கிறேன்"
அதற்குள் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். சுனிதா வீட்டுக்குள் நுழைய சூர்யா லக்கேஜ் எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்தான்.
"அம்மா என்ன இப்படி தூங்கிட்டு இருக்கே. நிஷா எங்கே?"
"ஆமாம் கொஞ்சம் அசந்துட்டேன் போல. அவள் தோட்டத்தில் தானே விளையாடிக் கொண்டிருந்தாள்."
இருவரும் தோட்டத்திற்கு சென்று பார்க்க அங்கே அவள் இல்லை. வெளியே எல்லா இடமும் தேடி எரிக்கருகே வந்தனர்.
அங்கே சூர்யாவின் கண்களில் நிஷா கழுத்தில் அணிந்திருக்கும் டாலர் தெரிந்தது.
"தண்ணியில் விழுந்திருப்பாளோ?"
"இல்லை அவள் கடத்தப்பட்டிருக்கிறாள். யார் கடத்தியிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். வா வீட்டிற்குப் போகலாம்"
சூர்யா வீட்டிற்கு வந்ததும் தனது ராணுவ உயர் அதிகாரிக்கு போன் செய்தான்.
"சார் என் டாட்டரைக் கடத்தியிருக்கிறார்கள். அநேகமாக காஷ்மீர் தீவிரவாதிகளாகத்  தான் இருக்கும் என்று நினைக்கிறேன்"
“நீ உடனே ஸ்ரீநகர் செல்ல வீண்டும். உன்னுடன் நான்கு கமாண்டோக்களையும் அனுப்புகிறேன். அங்கு இருக்கும் அதிகாரிக்கும் போன் செய்து சொல்லுகிறேன். அவர் உன் மகளைக் கண்டு பிடிக்க உதவுவார்."
சூர்யா கவலையுடன் போனை வைத்து காரில் ஏறிச் சென்றான்.
அதே நேரத்தில் டெல்லியின் எல்லையைத் தாண்டி ஒரு வேன் சென்றுக் கொண்டிருந்தது. முன் சீட்டில் டிரைவர் அருகில் ஒருவன் அமர்ந்திருந்தான்.
"நஜீப் முக்கியமான ஹைவே வழியாக செல்லாதே. அங்கு கண்காணிப்பு அதிகமாக இருக்கும். நாம் இரண்டு நாட்கள் தாமதமாக பரமுல்லா சென்றாலும் பரவாயில்லை."
"எனக்குத் தெரியும் உமர். பின்னால் எதற்கும் ஒரு கண் வைத்துக் கொள்."
பின் சீட்டில் மயக்கமாக நிஷா படுத்திருந்தாள்.
                       -------------------------*********************------------------------------
ஸ்ரீநகர் ராணுவ மையம்
ஸ்ரீநகர் ராணுவ மையத்தில் மேஜரின் அறையில் சூர்யாவும் நான்கு கமாண்டோக்களும் விவாதத்தில் இருந்தனர்.
"நீங்கள் இரண்டு மாதம் பங்கெடுத்த ஆபரேஷனிற்கும் உங்கள் மகள் கடத்தப்பட்டிருப்பதற்கும் சம்பந்தம் என்று எதை வைத்து சந்தேகப்படுகிறீர்கள் சூர்யா"
"அந்த ஆபரேஷனில் நமக்குக் கிடைத்த வெற்றி இங்கு தீவிரவாதத்திற்கு கிடைத்த மரண அடி. யோசித்துப் பாருங்கள் உள்துறை அமைச்சரின் மகளையே கடத்தியிருந்தார்கள்.அவளை விடுவிப்பதற்கு அவர்கள் குழுவின் முக்கியமான ஐந்து பேரை விடுதலை செய்யக் கேட்டிருந்தார்கள். அவர்கள் கேட்டது மட்டும் நடந்திருந்தால் இங்கு பணியாற்றும் நமது வீரர்களின் மனவுறுதியைப் பெரிதும் குலைத்திருக்கும். மேலும் நான் கொன்ற ஒரு தீவிரவாதியின் கண்களில் இருந்த குரோதத்தை என்னால் இன்னும் மறக்க முடியாது. சந்தேகமில்லாமல் என்னைப் பலி வாங்குவதற்குத் தான் இதை செய்திருக்கிறார்கள்"
"கேட்கிறேன் என்று தவறாக நினைக்காதே சூர்யா. உன் மகளை இன்னும் கொல்லாமல் வைத்திருப்பது வியப்பாக இல்லையா"
"இல்லை. அவர்கள் குறி என்னை வலை விரித்து சிக்க வைப்பது தான். நான் அவர்கள் கையில் மாட்டி, என்னைக் கொலை செய்து அந்த விடியோவை  இன்டர்நெட்டில் போட்டு விளம்பரம் செய்தால் அது நமது நாட்டு மக்களையும் வீரர்களையும் பெரிதும் கலவரப்படுத்தும். என் மகளைக் கொல்லமாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அவ்வாறு செய்தால் அவர்களுக்கு ஆதரவு பெரிதும் குறையும்"
"அவர்களை எங்கு தேடப் போகிறாய்"
"எனது அனுமானம் அவர்கள் இந்நேரம் பாரமுல்லாவில் எங்கேயோ ஒளிந்திருக்க வேண்டும்"
"யாரைப் போய் அங்கு தேடுவாய்"
"நாங்கள் கொன்ற தீவிரவாதிகளின் உடன் பிறந்தவர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் இவர்கள் அனைவரின் போட்டோக்கள் உங்களிடம் இருக்குமா"
"இந்தப் பைலில் எல்லா விபரங்களும் இருக்கிறது"
சூர்யா பைலை விரித்துப் பார்த்தான். அதில் போட்டோக்களும் அவர்கள் பற்றிய விபரமும் இருந்தது. ஒவ்வொரு பக்கமாகப் புரட்டியவன், ஒரு போட்டோவை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்"
"இவன் யார்"
"நஜீப். நீங்கள் கொன்ற பரூக் என்பவனின் தம்பி"
"சமீபத்தில் இவனது போன் கால்கள் மற்றும் எல்லா நடவடிக்கைகளும் எனக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்"
ராணுவ அதிகாரி சைகை செய்ய சூர்யாவும் கமாண்டோ வீரர்களும் கலைந்தனர்.
சூர்யா கட்டடத்தை விட்டு வெளியே வந்த போது "மிஸ்டர் சூர்யா" என்ற குரல் கேட்டுத் திரும்பினான்.
கமாண்டோ குழுவைச் சேர்ந்த ரியாஸ் தான் அவனை அழைத்தது.
"நான் போன மாதம் அதிரடிப் படையில் சேர்ந்தேன். இதற்கு முன் ராணுவத்தில் சார்ஜென்டாகப் பணியாற்றினேன். நீங்கள் அமைச்சரின் மகளைக் காப்பாற்றியதில் காட்டிய வீரத்தைப் பார்த்து இந்த அணியில் ஆர்வத்துடன் சேர்ந்தேன். உங்களுடனே பணியாற்றுவேன் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அதிலும் உங்கள் மகளைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது எனது அதிர்ஷ்டம். அவளைக் கடத்தியவர்களைக் கண்டுபிடித்து நாய் சுடுவது போல சுட வேண்டும் என்று துடிக்கிறது சூர்யா"
"உன் போன்றவர்களுடன் வேலை செய்வது எனது அதிர்ஷ்டமும் தான். பக்கத்தில் இருக்கும் ஓட்டலில் காபி சாப்பிட்டுக் கொண்டு பேசுவோமே"
இருவரும் அருகிலிருந்த ஓட்டலுக்குச் சென்று காபி ஆர்டர் செய்தனர்.
"உங்கள் மனைவிக்கு நடந்தது கேள்விப்பட்டேன்.மிகவும் கஷ்டமாக இருந்தது. உங்கள் குழந்தைக்கு வேறு இப்போது இப்படி நடந்துள்ளது. நீங்கள் தைரியமாக இருப்பது ஆச்சர்யமாக உள்ளது"
"என் மகள் எனக்குக் கிடைப்பாள் என்று முழுதாக நம்புகிறேன் ரியாஸ்.அவள் முகத்தைப் பார்த்தால் அவளைக் கொல்ல யாருக்கும் மனசு வராது"
"அந்த நம்பிக்கை தான் உங்கள் பலமே. குழந்தை என்ன படிக்கிறாள்."
"அவள் ஸ்கூல் போகவில்லை. She is a Special Needs Child”
"தவறாக எதுவும் கேட்டிருந்தால் மன்னியுங்கள்"
அப்போது அவர்களைத் தேடி ஒரு மனிதன் அவசரத்துடன் வந்தான்.
"நீங்கள் சூர்யா தானே. உங்களை எங்கெல்லாம் தேடுவது. நீங்கள் கேட்ட நஜீப் பற்றிய விபரங்களுடன் வந்துள்ளேன்"
"சரி சொல்லுங்கள்"
"அவன் பரமுல்லாவை ஒட்டிய ஒரு கிராமத்தில் வசித்து வருகிறான். அங்கு இவன் ஒரு ஓட்டல் நடத்தி வருகிறான். ஓட்டல் பெயர் Paradise Valley”
சூர்யா பரபரப்புடன் "ஹோட்டல் பெயர் என்ன சொன்னீர்கள்"
“Paradise Valley. போட்டோ கூட இருக்கிறது பாருங்கள்.”
போட்டோவைப் பார்த்து விட்டு "ரியாஸ் நாம் உடனே பரமுல்லா கிளம்ப வேண்டும். எல்லோருக்கும் கால் செய்து இங்கு வர சொல்லுங்கள்"
"திடீரென்று என்ன அவசரம் சூர்யா"
"இந்த ஓட்டலில் நான் தங்கியுள்ளேன் ரியாஸ். என் மனைவியுடன் அவளது கடைசி நாட்களை இந்த ஓட்டலில் தான் கழித்தேன்.”

                                                     Chapter 3

                         ரேதியோன் கிரகம்
சமன் தனது அறையிலிருந்து வானத்திலிருந்த நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். இந்த நட்சத்திரக்கூட்டத்தில் தான் பூமி எங்காவது இருக்கும் என்று நினைத்துக் கொண்டான். ரேதியோன் கிரகத்தில் மனித இனம் மெதுவாக அழிந்துக் கொண்டிருப்பதால் அவன் வயதை ஒத்த சிறுவர்கள் அதிகம் கிடையாது. பூமியில் சிறுவர்கள் இருப்பார்களா என்ற சந்தேகம் அவனுக்குத் தோன்றியது. பூமி அழியப்போகிறது என்று அவன் தாத்தா கூறியது வேறு நினைவுக்கு வந்தது.
ரேதியோன் கிரகத்தில் தனிமை அவனை வாட்டியது. சிறிது நேரம் "ஆத்மா" பயிற்சி எடுக்கலாம் என்று அமர்ந்து கண்களை மூடினான். இன்று ஏனோ அவனால் ஆத்மாவை உணர முடியவில்லை. பூமியில் இருப்பவர்களுக்கு ஆத்மாவை உணர முடியாதாமே. அதனால் தான் அவர்கள் அழியப் போகிறார்கள் என்று தாத்தா கூறினாரே. ரேதியோன் கிரகத்திலிருந்து ஒருவன் சென்று பூமியில் இருக்கும் ஒரு உயிருடன் தோழமை கொண்டு அந்த மனிதனுக்கு ஆத்மாவைக் காட்டினால் தான் பூமியை அழிவிலிருந்து காக்க முடியுமாமே.
பிறகு ஒரு முடிவுடன் தன தந்தையின் அலுவல் அறைக்குச் சென்றான். அந்த அறையிலிருந்த படிகளிலேறி மேல் தளத்திற்கு வந்தான். அங்கு ஒரு விண்கலம் இருந்தது. அதை இயக்குவதற்கான பயிற்சிகள் அவன் தந்தை சில காலமாக அளித்திருந்தார்.
சமன் விண்கலத்தில் ஏறினான். இனி ரேதியோன் கிரகத்திற்கு தான் வரப் போவதே இல்லை என்று முடிவு செய்தான். சில நொடிகளில் அந்த விண்கலம் மறைந்தது.
                   ------------------------********************--------------------------------
ஒரு இருட்டு அறையில் நிஷா அடைக்கப்பட்டிருந்தாள். அவளது கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தது. அவளது வாய் துணியினால் மூடப்பட்டிருந்தது. அது ஓட்டலை ஒட்டி பழைய பொருட்கள் வைக்கப்படும் அறையாக இருந்தது.
"நஜீப், குழந்தை தூங்கவே மாட்டேங்குதே. கொஞ்சம் மயக்க மருந்து கொடுக்கலாமா."
"வேண்டாம். குழந்தை மிகவும் சமர்த்தாக இருக்கிறது. கொடுத்ததை  சாப்பிடுகிறது. எனக்கே மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஆனால் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஊமையோ என்னவோ தெரியவில்லை"
"இந்நேரம் சூர்யா காஷ்மீர் வந்திருப்பானா"
"கண்டிப்பாக நாம் தான் செய்திருப்போம் என்பதை உணர்ந்திருப்பான். அவனை எந்நேரமும் நாம் எதிர்பார்க்கலாம். நமது ஆட்கள் அனைவரும் ஓட்டலைப் பத்திரமாக பாதுகாக்கிறார்கள் அல்லவா."
"ஆம் அது பற்றி நீ கவலைப்பட வேண்டாம். நமது தலைவரும் இன்னும் சில நிமிடங்களில் வந்து விடுவார். சூர்யாவின் மரணம் இந்த உலகமே தெரியும்படி செய்ய வேண்டும். நம்மை எதிர்ப்பதற்கு அனைவருக்கும் ஒரு பயம் வர வேண்டும்"
"குழந்தையை என்ன செய்வது"
"குழந்தையைக் கொல்ல வேண்டாம். ஏதாவது ஆசிரமத்தில் சேர்த்து விட வேண்டும்"
அப்போது "நஜீப்", "நஜீப்" என்று யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
"உன்னுடைய அம்மா கதவைத் தட்டுகிறார்கள் என்னவென்று கேள்"
நஜீப் கதவைத் திறந்ததும் அவன் அம்மா உள்ளே நுழைந்தார்.
"வெளியே துப்பாக்கியுடன் ஒரே ஆட்களாக இருக்கிறார்கள். நீ உள்ளே என்ன செய்து கொண்டிருக்கிறாய்"
நிஷாவைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
"நீயும் உன் அண்ணன் வழியில் செல்லுகிறாயா. இது யார் பெற்ற குழந்தை. அவர்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டாள் அல்லா உன்னைத் தண்டிக்காமல் விட மாட்டார்."
"அண்ணன் மரணத்திற்கு பதில் வேண்டும். அவனைக் கொன்றவன் இங்கு வருவான். அவனது சாவு இந்தியாவிற்கும் அதன் ராணுவத்திற்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்."
"நான் சொல்வதைக் கேள். குழந்தையைப் போலீசிடம் ஒப்படைத்து விடு.ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து நல்ல வழியில் உன் வாழ்க்கையை நடத்து. இப்போது எனக்கு மிஞ்சியிருப்பது நீ ஒரே மகன் தான். எனக்கு முன் நீ சாவதை நான் பார்க்கும்படி செய்து விடாதே"
"ஏ கிழவி சும்மா புலம்பிக் கொண்டிருக்காதே."
நஜீப் அவளை வெளியே தள்ளிக் கதவை மூடினான்.
"உன் அம்மா போலீசிடம் சொல்லி விட மாட்டாரே"
"நான் என்றால் அதற்கு உயிர். சும்மா கத்தும். அவ்வளவு தான்"
அப்போது அறையின் கதவை மறுபடியும் தட்டும் சத்தம் கேட்டது.
"உன் அம்மாவின் தொல்லை தாங்க முடியவில்லை. கொஞ்சம் கண்டிப்பாகப் பேசு"
நஜீப் கோபமாக அறையைத் திறந்தான்.
வெளியே அவனது ஆள் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
"தலைவர் ஓட்டல் மேல் மாடியில் காத்துக் கொண்டிருக்கிறார். உங்கள் இருவரிடமும் அவசரமாகப் பேச வேண்டும் என்று அழைத்தார்."
"சரி குழந்தையை நீ பார்த்துக் கொள்"
"இல்லை நான் ஓட்டலின் பின் பகுதியை காவல் காக்கிறேன். அங்கே நான் ஒரு ஆள் தான்."
"சரி அப்போது நீ கிளம்பு. உமர் இப்போது குழந்தையை என்ன செய்யலாம்"
"கட்டிதான் வைத்திருக்கிறோமே. இது கொஞ்சம் மந்தமான பெண்ணாகத் தான் தெரிகிறது. ஒன்றும் கவலைப்பட வேண்டாம். தலைவரிடம் என்னவென்று கேட்டு விட்டு உடனே திரும்பி விடுவோம்"
இருவரும் அறையைப் பூட்டி விட்டு வெளியே சென்றனர்.
அவர்கள் சென்ற பிறகு மெதுவாக அறையின் கதவைத் திறந்து நஜீபின் தாயார் உள்ளே நுழைந்தார்.
நிஷாவின் கட்டுகளை அவிழ்த்து அவளை ஒரு டிரம் பெட்டியில் போட்டு அடைத்தார். நிஷாவிடம் அமைதியாக இருக்க வேண்டும் என்று சைகை செய்து  டிரம்மை மூடினார்.
டிரம்மை உருட்டிக் கொண்டே ஓட்டலின் பின் பகுதி கேட்டுக்கு வந்தார்.
அங்கே காவல் செய்தவன் "என்ன அம்மா நான் வேண்டுமானால் உதவிக்கு வரவா"
"பெற்ற பிள்ளையே உதவிக்கு வரவில்லை. நீ வேறு எதற்கு"
"உள்ளே என்ன இருக்கிறது"
"ஆகாத போகாத பழைய பொருட்களை வைத்திருக்கேன். தூக்கிச் செல்ல முடியவில்லை. அதனால் தான் இதில் போட்டு உருட்டிச் செல்கிறேன்."
"சரி சீக்கிரம் வந்து விடுங்கள். இன்னும் சிறிது நேரத்தில் இங்கு பிரச்சினை வரலாம்"
டிரம்மை உருட்டிக் கொண்டே சென்றவர் சாலையின் முடிவுக்கு வந்தார்.
டிரம்மைத் திறந்ததும் நிஷா வெளியே வந்தாள்.
"பெண்ணே கேள். கீழே போகும் இந்தப் பாதை வழியாக செல். சிறிது தூரத்தில் ஒரு குகை வரும்.  இப்போதைக்கு அங்கு சென்று ஒளிந்துக் கொள். அங்கு யாரும் உன்னைத் தேடி வர மாட்டார்கள். நான் தகுந்த சமயம் பார்த்து போலீசுடன் வந்து உன்னை விடுவிக்கிறேன்.
நிஷா அவர் சொன்னதற்கு தலையாட்டி விட்டு அந்தப் பாதை வழியாக சென்றாள். அவள் மறையும் வரை பார்த்து விட்டு நஜீபின் தாயார் ஓட்டலை நோக்கித் திரும்பினார்.
                        --------------------------**********---------------------------------
ஓட்டலை ஒட்டிய அடர்ந்த புதர்களில் அந்த நால்வர் மறைந்திருந்தனர்.
"ஓட்டலை சுற்றி தீவிரவாதிகள் எவ்வளவு பேர் இருப்பார்கள்"
"வெளியே ஆறு பேர் காவல் காக்கிறார்கள். உள்ளே எப்படியும் ஒரு ஐந்து பேர் இருப்பார்கள்"
"சூர்யா, நாம் திடீரென்று அவர்கள் எதிர்பார்க்காத நேரம் தாக்க வேண்டும்.நான் இப்போதே முன்னால் போகிறேன். நீங்கள் எனக்குப் பாதுகாப்பாக சுடுங்கள்"
"சூர்யா உங்கள் முடிவை சொல்லுங்கள். உள்ளே இருப்பது உங்கள் மகளின் உயிர். நீங்கள் சம்மதம் சொன்னால் தான் நாங்கள் தாக்குவோம்."
சூர்யா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். துப்பாக்கியைப் பற்றியிருந்த அவன் கரங்கள் நடுங்குவதை ரியாஸ் கவனித்தான்.சூர்யாவின் கரங்களை ரியாஸ் பற்றி தைரியமாக இருக்கும்படி சைகை செய்தான்.
பிறகு யாரும் எதிர்பாராதவண்ணம் ஹோட்டலை நோக்கி ஓடினான்.
முன்னே இருந்த இரண்டு தீவிரவாதிகளை ரியாஸ் கொன்றான். சூர்யா ரியாசைப் பின் தொடர்ந்து வந்தான். இருவரும் ஓட்டல் உள்ளே நுழைந்தனர். தங்களை நோக்கி சுட்டவர்களை ஒவ்வொருவராக கொன்றனர்.
அதற்குள் மற்ற கமாண்டோக்களும் உள்ளே வந்தனர்.
"வெளியே இருந்த அனைவரும் இறந்து விட்டனர்."
"உள்ளே இன்னும் இரண்டு பேர் இருக்கலாம். எங்கேயாவது ஒளிந்திருக்க வேண்டும்"
அப்போது சூர்யாவை நோக்கித் துப்பாக்கி குண்டுகள் பாய அவன் வேகமாக ஒரு மறைவிடம் நோக்கி ஒளிந்துக் கொண்டான். ரியாஸ் அவன் அருகில் வந்து அமர்ந்தான். அவர்கள் இருவரும் பக்கத்திலிருந்த அறையை நோக்கிச் சரமாரியாக சுட்டனர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு உள்ளே எந்த சலனமுமின்றி அமைதியாக இருந்தது.
ரியாசும் சூர்யாவும் மெதுவாக உள்ளே நுழைந்தனர்.
நஜீபும் உமரும் அங்கு இறந்து கிடந்தனர். நஜீபின் உடலருகே அவனது தாயார் மெளனமாக அமர்ந்திருந்தார்.
"சூர்யா நீங்கள் குழந்தை எங்கே என்று தேடுங்கள்"
சூர்யா ஒவ்வொரு அறையாகத் தேடியும் நிஷா காணவில்லை.
"ரியாஸ் குழந்தை எங்குமே காணவில்லை" என்றான் சூர்யா பதட்டத்துடன்.
நஜீபின் தாயார் சூர்யாவைத் தன்னுடன் வருமாறு சைகை செய்தார்.
இருவரும் ஓட்டலுக்கு வெளியே சாலையின் இறுதிக்கு வந்தனர்.
கீழே செல்லும் பாதையைக் காட்டி "இதன் வழியாகப் போனால் ஒரு குகை வரும். அங்கே தான் உன் மகளை ஒளிந்திருக்கச் சொன்னேன்"
“அங்கே தான் என் மனைவி இறந்தாள். அதே இடத்திற்கு ஏன் அனுப்பினீர்கள்"
"ஒன்றும் கவலைபடாதே. உன் மகள் சௌகரியமாக உயிருடன் இருப்பாள். அவள் அம்மாவின் ஆன்மா அவளைக் காக்கும்.இந்த வயதானவள் சொல்வதை நம்பு. "
சூர்யா வேகமாகப் பாதை வழியாக இறங்கிச் சென்றான்.
                      ---------------------********************----------------------------
ரேதியோன் கிரகம்
"அஸ்தன் உன் முகத்தில் ஏன் இத்தனை கவலை. என்ன வருத்தம் உனக்கு"
"சமன் சில நாட்களாகக் காணவில்லை அப்பா. அவன் எங்கு தொலைந்திருப்பான் என்று கவலையாக உள்ளது"
"சமன் எங்கு சென்றிருப்பான் என்று உன்னால் யூகிக்க முடியவில்லையா"
"ஏன் உங்களுக்குத் தெரியுமா"
"தெரியும். அவன் பூமிக்குத் தான் சென்றிருப்பான். நீயும் நானும் பூமிக்குச் சென்ற போது உனக்குத் திரும்பி வர மனமே இல்லை. உன் இரத்தம் தானே அவனுக்கும் ஓடுகிறது, அதுதான் அங்கு சென்று விட்டான். என்னவோ குழந்தைகளை பூமி மிகவும் ஈர்த்து விடுகிறது"
"போனது சரி தான். ஆனால் இவ்வளவு நாளாகியும் அவன் வரவில்லையே" 
"அவன் திரும்பி வர மாட்டான். அன்றொரு நாள் நீயும் நானும் பூமிக்கு ஏற்பாடு அழிவு பற்றி பேசியது அவன் கேட்டுக் கொண்டிருந்தான். பூமியைக் காப்பற்ற வேண்டும் என்ற உணர்வு அந்தப் பிஞ்சுக் கண்களில் நான் அன்றே பார்த்தேன். நீ ஒன்றும் கவலைபடாதே. தனது 'ஆத்மாவின்' மூலம் பூமியை நல்வழிப்படுத்தி அதனை அழிவிலிருந்து காப்பான். பூமியின் இரட்சகன் அவன் தான். "
அஸ்தன் முகம் கலவரமாகியது.  "என்ன சொல்கிறீர்கள். சமன் திரும்பி வர மாட்டானா"
"ஏன் இந்தப் பதட்டம். உன் மகன் செய்தது மகத்தான செயல். நமது மனித இனம் அழியாமல் தடுத்த தெய்வமகன் அவன்."
மேகனின் ஆறுதல் வார்த்தைகள் ஏனோ அஸ்தனை சாந்தப்படுத்தவில்லை. அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.
                   ---------------------------************************---------------------
தனியாக நடந்து கொண்டிருந்த நிஷாவுக்கு அது வெகு பழகிய பாதை போல இருந்தது. ஏதோ ஒரு சக்தி அவளை இழுத்துச் சென்றது. சிறிது நேரத்தில் அவள் குகை முன் வந்து நின்றாள். தன் கண் முன் அம்மாவின் உருவம் தெரிவது போல தோன்றியது. குகைக்குள்ளே நுழைந்து சென்றாள். குகையின் சுவரில் இருந்த ஓவியங்களைப் பார்த்தாள். விநோதமாக வரையப்பட்ட அந்த ஓவியங்கள் நிஷாவின் கண்களுக்குப் புரிவது போல இருந்தது.
நடந்து கொண்டே சென்றவள் திடீரென்று கால் தடுக்கி கீழே ஒரு பள்ளத்தில் விழ முற்பட்டாள். அக்கணம் ஒரு கை அவளை மேலே தூக்கியது. அக்கைகள் ஒரு சிறுவனுடையது. ஆனால் ஒரு வாலிபனின் பலம் அக்கைகளுக்கு இருந்தது.
அச்சிறுவன் நிஷாவை ஆச்சரியத்துடன் பார்த்தான். பிறகு அவளைத் தன் பின்னே வருமாறு அழைத்தான். ஓரிடத்தில் தரையிலிருந்த ஒரு பொருளை நிஷாவுக்குக் காண்பித்தான்.
அது ஒரு டாலர் செயின். அதன் மேலிருந்த மண்ணை அகற்றியதும் அதில் தன் அம்மா ஷாலினியும் தானும் இருப்பதை நிஷா பார்த்தாள்.இறந்த போது ஷாலினி அணிந்திருந்த டாலர் செயின் அது. அதிலிருந்த நிஷாவைக் காண்பித்து இது நீயா என்று சிறுவன் கேட்டான்.
நிஷா பதில் சொல்லாமல் தேம்பி அழ ஆரம்பித்தாள். ஷாலினி இறந்ததிலிருந்து முதன் முறையாக இப்போது தான் நிஷா தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினாள்.
"அம்மா என்னை விட்டுட்டு எங்கே போனே. சீக்கிரம் என்னிடம் வா. என்னாலே உன்னை விட்டுட்டு இருக்க முடியலே. சீக்கிரம் வாம்மா."
வெகு நேரம் நிஷா அழுது கொண்டு இருந்தாள். இதைப் பார்த்து அச்சிறுவன் மிரண்டான்.
நிஷாவின் அருகே மெதுவாக வந்து அவள் கைகளைப் பற்றி சிறிது நேரம் நின்றான். பிறகு ஒரு கையை அவள் தலை மீது வைத்தான்.
நிஷாவின் உடலில் ஒரு அற்புதமான உணர்வு வந்தது. வெள்ளம் போன்று ஒரு ஆற்றல் தன் உடலெங்கும் பரவுவதை உணர்ந்தாள். சிறிது நேரத்தில் ஒரு தெய்வீகமான அமைதி கிடைத்தது.
அவள் இதயத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. அது அவள் அம்மா ஷாலினியின் குரல் போல இருந்தது.
"நிஷா நான் அம்மா பேசறேன்."
"என்னை விட்டுட்டு எங்கே அம்மா போனே"
"நான் எங்கேயும் போகலை. உன் கூடவே தான் இருக்கேன். உன்னைப் பார்த்துகிட்டே இருக்கேன்."
"நான் உன்னைப் பார்க்க முடியாதா"
"பார்க்க முடியாது. ஆனால் என் குரலை உன் இதயத்தில் கேட்க முடியும். என் அரவணைப்பை நீ உணர முடியும்"
"அப்படி என்றால் நீ இவ்வளவு நாளா எங்கே இருந்தே"
"என்னை உணரும் நேரம் இவ்வளவு நாளாக உனக்கு வரலை. இன்று தான் அதற்கான தருணம் வந்திருக்கிறது. நீ இது வரை உன்னை மிகவும் கஷ்டப்படுத்திகிட்டே. உன் அப்பாவும் உன்னால் ரொம்ப வருத்தமா இருக்கார். நீ எப்போவும் போல சந்தோஷமா இருக்கணும். நல்லா சிரிச்சு பேசி உன் அப்பாவையும் சிரிக்க வைக்கணும். இந்த சிறுவனை நம்மோட வீட்டிலே வைச்சிக்கோ. இவன் பேர் சமன்.அவனோட அம்மா அப்பா ரொம்ப தூரத்திலே இருக்காங்க. இனிமே நாம தான் அவனைப் பார்த்துக்கணும். அம்மாவோட ஆத்மா என்னைக்கும் உனக்குத் துணையாக இருக்கும். நான் சொல்றதெல்லாம் செய்வியா. அப்போதான் அம்மா உன் மேலே சந்தோஷமா இருப்பேன்"
"இருப்பேன் அம்மா. இனிமே நான் உன் கூட பேச முடியுமா"
"சமன் என் கூட பேச உனக்கு உதவுவான். அப்பா உன்னைத் தேடுவார். சீக்கிரம் அவர்கிட்டே போ"
குரல் கேட்பது நின்றது.
நிஷா சமனின் கைகளைப் பிடித்து குகையின் வாசலை நோக்கி நடந்தாள். போகும் வழியில் சுவரிலிருந்த சித்திரங்களைக் காட்டி சமன் ஏதோ சைகைகள் செய்தான்.
"ஓ. இது உங்க அப்பா வரைந்ததா."
சமன் “ஆம்” என்று தலையாட்டினான். பிறகு வேறு ஏதோ ஒரு சைகை செய்தான்.
"எனக்கு இது புரியுதான்னு கேட்கிறியா.நல்லாவே புரியுதே. இது ஒரு வீடு போல இருக்கு. வெளியே ஒரு தோட்டம். அங்கே ஒரு அம்மா இருக்காங்க. இது உங்க அப்பாவோடே அம்மா தானே"
சமன் அவள் சொல்வது சரி என்று சைகை செய்தான்.
அதற்குள் அவர்கள் இருவரும் குகைக்கு வெளியே வந்திருந்தனர்.
"உங்க அம்மா அப்பா எங்கே இருக்காங்க"
சமன் வானத்தை நோக்கி கைகளைக் காட்டினான்.
"ஓ. செத்துப் போயிட்டாங்களா"
இல்லை என்று சமன் சைகை செய்தான்.
அப்போது "நிஷா நீ இங்கே தான் இருக்கியா" என்ற குரல் கேட்டது.  சூர்யா அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான். நிஷாவும் ஓடிச் சென்று அவள் தந்தையை கட்டிக் கொண்டாள்.
"நான் இந்த குகைக்குள்ளே போனேன் டாடி. அங்கே விழப் பார்த்தேனா. இந்த சமன் தான் என்னைக் காப்பாத்தினான். அப்புறம் அம்மா என் கூட பேசினாங்க.  சமனை நம் கூடவே வச்சிக்கலாம் என்று சொன்னாங்க."
நிஷா பேசுவதைக் கேட்டு சூர்யா எல்லையில்லாத வியப்படைந்தான். அவளைக் கட்டிப் பிடித்து முத்தங்கள் அளித்தான்.
"அப்பா இனிமே நான் உங்க கூட ஹேப்பியா பேசுவேன். நல்ல பொண்ணா இருப்பேன்."
"ஓகேடா பாப்பா"
நிஷா கீழே இறங்கியதும் சூர்யா ஓட்டலை நோக்கிச் சென்றான். சமனின் கைகளைப் பிடித்து தன் தந்தையைப் பின் தொடர்ந்து நடந்தாள்.
அவர்கள் ஓட்டலை வந்தடைந்தனர்.
அங்கு ரியாஸ் அவர்களைப் பார்த்து. "உங்க பொண்ணு கிடைச்சாச்சா. இப்போதான் சூர்யா நிம்மதியா இருக்கு.  ஒரு ரூமில் போய் நாம் ரெஸ்ட் எடுப்போம். நாளைக்கு நாம் டெல்லி கிளம்பிப் போகலாம்."
சூர்யாவும் ரியாசும் ஒரு அறைக்கு வந்து அங்கிருந்த டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சமன் நிஷாவின் தலையில் கைகள் வைத்து இருவரும் கண்கள் மூடி அமர்ந்திருந்தனர்.
"இது என்ன புது மாதிரி விளையாட்டா இருக்கே."
டிவியில் செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது.
"காஷ்மீர் எல்லைப் பிரச்சினைக்கு பாகிஸ்தான் இந்தியா இரு நாடுகள் இடையே தீர்வு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் பாலஸ்தீனிய பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை வெற்றி அடைய சாத்தியக்கூறுகள்  இருப்பதாக சி.என்.என். அறிவித்துள்ளது.
தங்களிடேயே இருக்கும் அணு ஆயுதங்கள் முழுமையாக அழிப்பதற்கு அமெரிக்க ரஷ்ய நாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கோள வெம்மை குறித்து வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது"
ரியாஸ் டிவியை வேகமாக அணைத்தான். “உங்க பொண்ணு விஷயமா ஏதாவது செய்தி வரும்னு பார்த்தா ஒண்ணுமே இல்லை. இதே மினிஸ்டர் பொண்ணுனா செய்தி முழுக்க அமர்க்களப்படுத்துவாங்க. நம்மள மாதிரி மிலிட்டரி ஆளுங்களுக்கு இவ்வளவு தான் மரியாதை"
"விடுங்க ரியாஸ். என் பொண்ணே கிடைச்சிட்டா அப்புறம் என்ன. டிவி போடுங்க. எல்லாம் நல்ல நியூஸா சொல்றாங்களே"
"எல்லாம் உங்க பொண்ணு கிடைச்ச நேரம் தான் சூர்யா"
"இனிமே எல்லோருக்கும் நல்ல நேரம் தான் ரியாஸ்"
சூர்யாவும் ரியாசும் சந்தோஷமாக சிரித்தனர்.
குழந்தைகள் இருவரும் தங்கள் விளையாட்டைத் தொடர்ந்தனர். 
                      --------------------**********************-----------------------------        
தாத்தா கதை சொல்லி முடித்தார். வெகு ஆவலுடன் கதையை கேட்டுக் கொண்டிருந்த பிரேம் "என்ன தாத்தா கதை அதுக்குள்ளே முடிஞ்சுடுச்சா"
"ஆமா அப்புறம் எல்லோரும் ஹேப்பியா ஆயிட்டாங்க.கதை முடிஞ்சுடுச்சு. கதை எப்படி இருந்துச்சு"
"நல்லா இருந்துச்சு. ஆனா நடுவுலே ஏதேதோ சொன்னீங்களே ஆத்மா, பரிமாணம் அதெல்லாம் புரியலே. நான் சின்னப்பையன் எனக்கு புரியற மாதிரி சொல்லலாம் இல்லை சரியான மக்கு தாத்தா" என்று சொல்லி விட்டு குழந்தை ஓடியது.
அப்போது யாரோ "தாத்தா கேக் கட் பண்ண வாங்க" என்று அழைத்தனர்.
அவர் கையைப் பிடித்து கேக் வெட்டும் மேஜையருகே அழைத்துச் சென்றனர். அங்கிருந்த ஒரு சேரில் அமர்ந்து கத்தியைக் கையில் எடுத்தார்.
"தாத்தா உங்க வயசென்ன" அவரது மூத்தப் பேரன் இந்த கேள்வியைக் கேட்டான்.
"இப்போ என்ன வருஷம் ஓடுது"
"2133 வருஷம் தாத்தா"
"நான் 2013ல் இந்த பூமிக்கு வந்தேன். அப்போ வயசை கணக்கு பண்ணிக்கோ"
எல்லோரும் ஆச்சரியத்தில் முணு முணுத்தனர். "தாத்தாவுக்கு 120 வயசா. நம்பவே முடியலே. இந்த வயசிலேயும் கை கொஞ்சம் கூட நடுங்காம கத்தி பிடிச்சிருக்கார் பார்"
தாத்த கேக்கை வெட்டி முதல் துண்டை பாட்டிக்கு ஊட்டினார். அனைவரும் “Happy Birthday To You. Happy Birthday to தாத்தா” என்று பாடினர்.
பிறகு அனைவரும் கதையளக்க ஆரம்பித்தனர்.
தாத்தாவுக்கு லேசாகத் தலை சுற்றுவது போல இருந்தது. மெதுவாக எழுந்து தனது அறைக்குச் சென்று கட்டிலில் படுத்து கண்களை மூடினார். தூக்கம் அவர் கண்களைத் தழுவியது.
கண் முழித்ததும் அவர் அருகில் பாட்டி அமர்ந்திருந்தார்.
"வந்தவங்க எல்லோரும் போயிட்டாங்க. உங்ககிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு  நினைச்சாங்க. நீங்க தூங்கிட்டீங்க"
தாத்தா பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாக ஜன்னலையே பார்த்துக் கொண்டிருந்தார்.
"உங்கள் கடைசிப் பேரன் கிருஷ்ஷுக்கு பேரன் பிறக்கப் போகுதாம்.  நம்மளை வரச் சொன்னான்.அவனோ நிலாவுல குடியிருக்கான். இந்த வயசுல நாம போக முடியுமா. அதெல்லாம் நடக்காதுன்னு சொல்லிட்டேன்"
“என்ன நான் பேசிட்டே இருக்கேன். நீங்க ஒண்ணுமே சொல்லலே"
தாத்தாவின் கண்களில் கண்ணீரைப் பார்த்து பாட்டி திடுக்கிட்டாள். "என்ன ஆச்சு ஏன் அழுறீங்க"
பாட்டியை கிட்டே வருமாறு தாத்தா அழைத்தார்.
"நான் உன்னை ஏமாத்திட்டேன். இறப்பதற்கு முன்னாடியாவது உன்கிட்டே உண்மையை சொல்லணும்"
"என்ன சொல்றீங்க"
"நான் இந்த பூமியில் பிறந்தவனே இல்லை. ரேதியோன் என்னும் கிரகத்தில் பிறந்தவன் நான். பல இலட்சம் ஆண்டுகள் முன்னாள் ரேதியோனின் முன்னோர்கள் பூமியில் மனித இனம் வளர்க்க வழி செய்தனர். ஆனால் சில காலங்கள் முன்னர் மனிதர்களின் விபரீதப் போக்கினால் பூமி அழியும் நிலை ஏற்பட்டது. அதை தடுத்து பூமியை ஆன்மீக வழியில் செலுத்தவே நான் இந்த பூமிக்கு வந்தேன்"
"என்ன கதை விடுறீங்களா. நீங்க பூமியை ஆன்மீக வழியிலே செலுத்தினீங்க! யாருக்கும் ஆன்மீக உபதேசம் செய்ததில்லை. ஏன் ஒரு ஆன்மீக புத்தகம் கூட நீங்க படித்ததில்லை. எல்லோரும் போல நீங்களும் கல்யாணம் பண்ணீங்க, குழந்தை பெத்தீங்க, நல்லா வாழ்ந்தீங்க. நீங்க போய் இந்த உலகத்தை ஆன்மீக வழியிலே கொண்டு போய் அழிவிலிருந்து காப்பாத்தினேன்னு சொன்னா யார் நம்புவா"
"நான் உனக்கு சின்ன வயசிலே 'ஆத்மா பயிற்சி' கத்துக் கொடுத்தேன் ஞாபகம் இருக்கா. அதை செய்யும் போது ஒரு அளவில்லா சக்தி உனக்குள் தோன்றுதுன்னு சொல்லுவியே. அதை இன்னைக்கு வரைக்கும் நீ செஞ்சிகிட்டு இருக்கே. நீ மட்டும் இல்லாமல் நம் வாரிசுகள், அவர்களின் வாரிசுகள் என்று அனைவரையும் செய்யும்படி நீ பார்த்துகிட்டே. அது நம் உணர்வின் ஐந்தாம் பரிமாணமான ஆத்மாவைக் காணும் பயிற்சி. அது ரேதியோன் கிரகத்தினர் மட்டுமே அறிந்த உண்மை. நான் உனக்கு அது கற்றுக் கொடுத்தேன். நீயும் நம் குடும்பத்தினரும் ஆத்மா பயிற்சி செய்யும் போது அதன் நல்அதிர்வுகள் இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியையும் போய் சேர்கிறது. அவர்களுக்கு நல்ல சிந்தனைகளையும் செயல்களையும் செய்யத் தூண்டுகிறது. போன நூற்றாண்டில் அணு ஆயுதப் போரிலிருந்தும் கோள வேம்மையிளிருந்தும் பூமி தப்பியது இதனால் தான்."
பாட்டி அதிர்ச்சியில் பேசாமல் மெளனமாக இருந்தார்.
"நான் உன்னுடன் ஒரு போலி வாழ்க்கை வாழ்ந்தேன்னு கோபமா"
“இல்லை”.  
தனது தலையை தாத்தாவின் மார்பில் வைத்து "நான் ஒன்னு சொல்லணும் தாத்தா"
"என்ன நீயும் தாத்தான்னு சொல்றே"
"எல்லோரும் சொல்லி அப்படியே வாயிலே வருது. சரி சொல்லட்டுமா"
"ம்"
"ஐ லவ் யூ சமன்"
"ஐ லவ் யூ டூ நிஷா"
சமன் நிஷாவின் வெண்ணிற தலை முடியைக் கோதினார். சமன் இதயத்தின் ஓசை நிஷாவுக்கு தெளிவாகக் கேட்டது. இருவரும் நேரம் கழிந்ததே தெரியாமல் அந்நிலையில் இருந்தனர்.
மணி பன்னிரண்டு அடித்தது. சமன் இதயத்தின் ஓசை நின்றது. அதே நொடி நிஷாவின் இதயத் துடிப்பும் நின்றது.
காற்று அசைவது நின்றது. பறவைகளின் சங்கீதம் நின்றது.மரங்களின் தலையாட்டுதல் நின்றது. பூமி அவ்விரு உயிர்களுக்கும் தன் மௌன அஞ்சலியை செலுத்தியது.
                             THE END

REFERENCE MATERIAL FOR THE STORY:-
1.   Book – Transcending the speed of light – Consciousness, Quantum Physics and the Fifth Dimension. By Marc Seifer Ph.D
2.   Article – About Lemuria and Telos. http://www.lemurianconnection.com/category/about-lemuria-and-telos/
3.   Bhagavad Gita and Hindu VedasNo comments:

Post a Comment