Friday, September 11, 2015

காலத்தை வென்றவன் - அறிவியல் கதை

                                                                                      காலத்தை வென்றவன்

                                                                                                     Chapter -1


தஞ்சை பெரிய கோவிலில் லிங்கம் ரூபத்தில் சிவபெருமான் திவ்யமாக காட்சி தந்து கொண்டிருந்தார். அன்று பிரதோஷம் என்பதால் மக்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது.

கோவிலிலிருந்த ராஜராஜ சோழன் சிலை முன்னர் ஒரு நடுத்தர வயது மனிதர் கை கூப்பி, கண்ணை மூடிய வண்ணம் நின்று கொண்டிருந்தார். தன்னைச் சுற்றி நடப்பது பற்றி ஒரு பிரக்ஞையும் அவருக்கு இல்லை.  மன்னன் சிலையை தடவிய அவர் கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வந்தது.

"கோவிலில் யாரும் நிற்கக் கூடாது. எல்லோரும் வெளியே போங்க" என்று போலீஸ்  மக்கள் அனைவரையும் விரட்டி அடித்துக் கொண்டிருந்ததார்கள்.

மன்னர் சிலை முன் நின்று கொண்டிருந்த மனிதரையும் பிடித்து தள்ளிக் கொண்டிருந்தனர்.

"யோவ். சொல்றது கேட்கலையா. இன்னும் கொஞ்ச நேரத்திலே பிரதமர் கோவிலுக்கு வரப் போகிறார். இங்கே எல்லாம் யாரும் நிற்கக் கூடாது."

இது எதையும் காதில் போடாது அந்த மனிதர் அசையாமல் கண்ணை மூடி நின்று கொண்டிருந்தார்.

"இது வேலைக்கு ஆகாது" என்று அவரை அப்படியே தூக்கி கோவிலுக்கு வெளியே ஒரு குப்பையைப் போடுவது போல தூக்கி எறிந்தனர்.

"எம்மன்னனும் என் மன்னன் ராஜராஜன் முன் சிறியவனே" என்று அந்த மனிதர் கத்திக் கொண்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை.

சிறிது நேரத்தில் சரசரவென கார்களின் அணிவகுப்புடன் பிரதமர் சுஷீலா வர்மா கோவிலுக்குள் நுழைந்தார். பிரம்மாண்டமாக காட்சி அளித்துக் கொண்டிருந்த கோபுரத்தை பிரமிப்புடன் பார்த்தார்.

கோவிலைச் சுற்றி வர, அவருடைய உதவியாளர் கூறிய கோவிலின் வரலாற்றை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டே வந்தார்.

கோவிலின் உயரமான கோபுரமும், அழகிய சிற்ப வேலைப்பாடுகளும், இப்பொழுதும்   அழியாதிருந்த ஓவியங்களும் அதைக் கட்டிய இராஜ இராஜச் சோழன் மீது அந்தப் பெண்மணிக்குப் பொறாமையே  வந்தது.

கோவிலை விட்டு அவர் வெளியே வர ஜனக் கூட்டம் உற்சாகத்துடன் அவரைப் பார்த்து ஆரவாரமிட்டது.

"பாரதப் பிரதமர் சுஷீலா வர்மா வாழ்க"

என்ற கோஷத்துக்குத் தலையசைத்து கைகளை ஆட்டிய வண்ணம் காரில் ஏறி அமர்ந்தார்.

கார் மின்னல் வேகத்தில் அவ்விடத்தை விட்டு நகர்ந்தது. சுஷீலா சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அவர் மனம் இன்னும் தான் பார்த்த கோவிலின் அதிசயத்திலேயே மூழ்கி இருந்தது. ஆயிரம் ஆண்டுகள் ஆயினும் இதைக் கட்டிய அரசனின் புகழ் இன்னும் அழியாமல் இருக்கிறது. பிற்கால சந்ததியினர் தங்களுடைய முன்னோர்களைப் பற்றி அறிந்து கொள்ள, பார்த்து வியப்புற இது போன்ற சின்னங்கள் தேவைப்படுகிறது.

தான் நாட்டிற்கு ஆற்றிய சாதனைகளை சுஷீலா அசை போட்டார். இது எதுவும் சரித்திரத்தில் நிலைத்திருக்கப் போவதில்லை.

சீன அரசாங்கம் பத்து மாதங்களில் உலகத்தின் உயர்ந்தக் கட்டிடம் கட்டப் போவதாக செய்தி நினைவுக்கு வந்தது. அதை விட உயர்ந்த கட்டிடம் கட்ட வேண்டும். காலத்தால் அழியாத ஒரு சாதனையை நிகழ்த்த வேண்டும் என்று உறுதி  கொண்டார்.

சில மணி நேரங்களில் கார் சென்னை நகரை வந்தடைந்தது. பிரதமர் தங்கியிருந்த ஓட்டலை அடைய, சிறிது நேரத்திற்கு யாரும் தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற கூறித் தனது அறையின் கதவைச் சாத்தினார். படுக்கையில்  கண் அசந்த சில  நொடிகளில் வெளியே கதவு தட்டும் சத்தம் கேட்டது.

முக்கியமான விஷயமாக இல்லா விட்டால் இப்படி நடக்காது. கதவைத் திறந்ததும் அறைக்குள் நுழைந்த அவர் உதவியாளர் மெல்லத் திடிக்கிடும் அந்தச் செய்தியைக்  கூறினார்.

அவரது மூத்த மகன் பிரேம் வர்மா ஒரு சாலை விபத்தில் மரணம் அடைந்திருக்கிறார்.

செய்தியைக் கேட்டவுடன் சுஷீலா அப்படியே முகத்தை மூடிய வண்ணம் குலுங்கிக் குலுங்கி அழுதார்.

சுஷீலா சுய நினைவை இழந்து மயக்கமிட்டு விழுந்தார்.

உதவியாளர்  பதட்டத்துடன் பிரதமரின் மருத்துவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தார்.


                           1 மாதம் கழித்து

சுஷீலா தனது அறையில் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. காவி உடை அணிந்த மனிதர் ஒருவர் உள்ளே நுழைந்தார். எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தார்.

"மேடம் உங்களை நான் சந்திக்க சில முறை முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் இப்போது தான் உங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது"

"தெரியும். நீங்கள் ஒரு பிரபல ஜோதிடர் என்பது எனக்குத் தெரியும். இதற்கு முன்பு பிரதமராய் இருந்தவர்கள்  மற்றும் பெரிய தலைவர்களுக்கு நீங்கள் ஜோதிடம் சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு பலிக்கும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அதனால் தான் சந்திக்க மறுத்தேன்."

"இப்போது மன மாற்றத்திற்கு காரணம்"

"என் மகன் இறந்த துர்சம்பவம் பிறகு எல்லாமே மாறி விட்டது. அதன் பிற்பாடு நாட்டில் பல தீவிரவாதச் சம்பவங்கள். பொருளாதாரத்தில் படு வீழ்ச்சி. போதாகுறைக்கு நாட்டின் எல்லையில் வேறு தொல்லைகள். என் கட்டுப்பாட்டில் எதுவும் இருப்பது போல தோன்றவில்லை. எதிர்காலத்தைப் பற்றி ஒரு பயம். என் ஜாதகம் உங்களிடம் இருக்கிறதா"

"இல்லாமலா. எல்லா பிரபலமானவர்களின் ஜாதகமும் என்னிடம் உள்ளது" என்று கூறித் தன் பெட்டியில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்தார்
சிறிது நேரம் அதை உற்றுப் பார்த்தார். சில கணக்குகள் போட்டுப் பார்த்தார்.

"உங்கள் ஜாதகப் படி இப்போது உங்களுக்கு மிகவும் யோக காலம். உங்கள் தலைமையில் நாடு படு சுபிட்சமாக இருக்க வேண்டும். உங்கள் மகன் இறந்திருக்க வாய்ப்பே  இல்லை. அவர் எதிர்காலத்தில் பல சாதனைகள் நிகழ்த்தியிருக்க வேண்டும். ஆனால் நடந்திருப்பதோ எதிர்மாறாக உள்ளாது. அதுதான் புரியவில்லை. ஜூன் 5 அன்று நீங்கள் செய்த ஒரு காரியம் உங்கள் எதிர்காலத்தையே மாற்றி இருக்கிறது. அன்று காலை 7 -9 மணிக்கு நீங்கள் எங்கு இருந்தீர்கள். என்ன செய்தீர்கள்  "

சுஷீலா சற்று யோசித்து "தஞ்சை பெரியகோவிலில் அப்போது நான் இருந்தேன்."

உடனே  ஜோதிடர் முகத்தில் ஆச்சரியம் தெரிந்தது. "மேடம் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். உங்கள் ஜாதகப்படி நீங்கள் அந்தக் கோவில் போனால் உங்களுக்கு சரிவு ஏற்படும் அமைப்பு உள்ளது. நீங்கள் மட்டும் அந்த கோவில் போகாமல் இருந்திருந்தால் உங்கள் மகன் இறந்திருக்க மாட்டார் .உங்கள் தலைமையில் நாடு ஒரு வல்லரசாக மாறி இருக்கும்."

சுஷீலாவின் முகத்தில் ஆச்சரியம் தெரிந்தது. "அந்தக் கோவிலில் அப்படி என்ன இருக்கிறது"

"மேடம் அந்தக் கோவிலைக் கட்டிய இராஜ இராஜன் அனைவரும் வியக்கும் வண்ணம் தான் கோவில் கட்டியதாக இறுமாப்பு அடைந்தான் என்று கூறுகிறார்கள். அரசருக்கெல்லாம் தானே பெரிய அரசன் என்று நினைக்கவும் ஆரம்பித்தான். ஆனால் இறைவன் முன் அரசனும் தூசி தானே. அதனால் தான் அந்தக் கோவிலுக்கு செல்லும் தலைவர்களுக்கெல்லாம் வீழ்ச்சி ஏற்படும் என்று ஒரு பேச்சு உள்ளது"

சுஷீலாவின் கண்களில் கண்ணீர் வந்தது. பிரதமர் அமைதியுடன் சிந்தனையில் இருக்க ஜோதிடர் அறையை விட்டு வெளியே சென்றார்.

சுஷீலா தனது டேபிளின் மேலே இருந்த ஒரு பைலை நோட்டம் விட்டார்.

பைலின் தலைப்பு "கால இயந்திரம் பிராஜெக்ட்" என்றிருந்தது.

                  -----------------------------------*******************------------------------------------

விஜய் தஞ்சாவூர் கோவி லுக்கு வருவது இது தான் முதன்முறை. அவன் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாய் இருந்தாலும் கோவிலைப் பார்த்ததும் ஒரு மலைப்பு வந்தது.

கோவிலைச் சுற்றி வந்தவனின் கவனத்தை ஒரு வினோதமான விஷயம் கவர்ந்தது. 50 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் கோவிலைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார். பிரதமர் வருகை தந்த தினத்தன்று காவலர்களால் தூக்கி எறியப்பட்ட அதே மனிதர் தான். அவர் நெற்றி முழுதும் பட்டை அடித்து சட்டை போடாமல் வேட்டியுடன் இருந்தார். கோவில் சுவரில் உள்ள எழுத்துக்களைப் படித்து  அவ்வபோது தனது நோட்டில் குறித்துக் கொண்டார். கோவிலில் இருந்த இராஜ இராஜ சோழனின் சிற்பத்தைப் பார்த்துக் கை கூப்பி கண்ணீர் மல்க "சோழர் பெருமானே! உடையாரே! இராஜ இராஜ சோழனே! எக்காலமும் உமது புகழ் அழியாமல் வாழ்க" என்று தன்னை மறந்துக் கூறினார்.  .

தன்னைத் தவிர வேறு யாரும் அவரைப் பொருட்படுத்தாது இருப்பது விஜய்க்கு ஆச்சரியத்தை அளித்தது.

அருகில் இருந்தவரிடம் "யார் இவர். பைத்தியம் போல நடந்து கொள்கிறாரே" என்று வினவினான்.

"இவர் சரித்திரப் பேராசிரியர் பாலன்.  சோழர் காலம் சம்பந்தமாக, குறிப்பாக  இராஜ இராஜ சோழன் மீது நிறைய ஆராய்ச்சி செய்துள்ளார். இவருக்கு  இராஜ இராஜ சோழன் மீது ஒரு பக்தி, சொல்லப் போனால் காதலே உள்ளது என்று கூறலாம். தினமும் கோவிலுக்கு வந்து விடுவார். இங்கிருக்கும் சுவரில் உள்ள சித்திரங்கள் மற்றும் எழுத்துக்களை அணு அணுவாக ஆராய்ச்சி செய்வார். இருபது வருடங்களாக இக்கோவிலுக்குத் தவறாமல் வருகிறார். வரும் ஒவ்வொரு தடவையும் அவர் புதிதாக ஒன்றைத் தெரிந்து கொள்வது போல தோன்றும்."

அதற்குள் பாலன் மறைந்து விட்டார். விஜய் அங்குமிங்கும் தேடியும் பாலன் கண்ணில் படவில்லை.

தான் பேசிக்கொண்டிருந்த நபரிடம் பாலன்  இருக்குமிடம் எங்கே என்று விசாரித்தான். பாலன் வீட்டின் முகவரி தெரிந்து கொண்டதும் ஒரு ஆட்டோவைப் பிடித்து பாலனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். வீடு வெளியே பூட்டி இருந்தது. அரை மணி நேரம் காத்திருந்த பின்னர் பாலன் வீட்டிற்கு வந்தார்.

விஜய்யை ஏற இறங்கப் பார்த்து விட்டு "யார் நீங்கள். உங்களுக்கென்ன  வேண்டும்"

"என் பெயர் விஜய். உங்களிடம் கொஞ்சம்  பேச வேண்டும்"

"வாருங்கள் உள்ளே போய் பேசலாம்" என்று பாலன் கதவைத் திறக்க இருவரும் உள்ளே சென்றனர்.

மிலிட்டரி உடையில் பாலன் ஒரு போட்டோவில் இருப்பதைப் பார்த்தான்.

"நான் 10 வருடங்கள் மிலிட்டரியில் இருந்தேன். வெடி ஆயுதங்களை செயலிழக்கச் செய்வதில் நான் தேர்ச்சி உள்ளவன். 24 வருடங்கள் முன்பு நடந்த இலங்கைப் போரில் கலந்து கொண்டேன். போர் முடிந்த பிறகு எனக்கு வாழ்க்கையிலேயே ஒரு சலிப்பு ஏற்பட்டது. இந்த தஞ்சையில் வந்து தங்கினேன்.”

"நீங்கள் தனியாகவா இருக்கிறீர்கள். மிகவும் கஷ்டமாக இருக்குமே. உங்களுக்கு மனைவி குழந்தைகள் யாரும் இல்லையா?"

"மனைவி இறந்து விட்டாள். ஒரே மகன் வெள்ளைக்காரியை கலியாணம் செய்துக் கொண்டு அமெரிக்காவில் இருக்கிறான்."

"ஏன் இப்படி தனியாக இருந்து அவதிப்படுகிறீர்கள். அவருடன் போய் இருக்க வேண்டியது தானா?"

"என் சொல் மீறி திருமணம் செய்த அன்றே அவனைத் தலை முழுகி விட்டேன். சரி நீ வந்த விஷயம் பற்றிப் பேசுவோம் "

"நான் டி.ஆர்.டி.ஓவில் ஒரு சைண்டிஸ்ட் அக வேலை செய்து வருகிறேன். உங்களைக் கோவிலில் பார்த்தேன். உங்களிடம் சில விஷயம் பேச வேண்டும்"

"சைண்டிஸ்டிற்கு சரித்திரப் பேராசிரியரிடம் என்ன வேலை"

"எங்களுடைய ஆய்வு ஒன்றிற்கு உங்களுடைய உதவி தேவைப்படுகிறது"

பாலன் வியப்புடன் புருவத்தை உயற்றினார்.

"விஷயத்திற்கு வரும் முன் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். தஞ்சைக் கோவில் மீது உங்களுக்கென்ன அப்படி ஒரு பிரேமை. நீங்கள் தீவிர சிவபக்தரோ"

"நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன் தான். அதை விட நான் இராஜ இராஜ சோழனின் பக்தன்."

"அப்படி என்ன சாதித்து விட்டான் இராஜ இராஜ சோழன். எல்லா அரசரும் கட்டுவது போலத்தானே கோவிலைக் கட்டி இருக்கிறான்"

"எல்லா அரசர்கள் போல அல்ல இராஜ இராஜ சோழன். அவன் கண்ட கனவுகள் பெரிது. அவனது சிந்தனைகள் பெரிது. அவன் ஆற்றிய செயல்கள் பெரிது. அவன் கட்டிய கோவிலும் பெரிது. இறைவன் என் முன் வந்து இரண்டு வரங்கள் தருவேன் என்றால் என்ன பதில் சொல்வேன்  தெரியுமா? இராஜ இராஜ சோழன் காலத்தில் நான் வாழ்ந்து அவனைச் சந்திக்க வேண்டும். தஞ்சைப் பெரிய கோவிலின் முதல் கும்பாபிஷேகத்தில் நான் கலந்து கொள்ள வேண்டும். இதைத் தான் நான் கேட்பேன்"

"உங்களுடைய இரண்டு வரங்களும் என்னால் நிறைவேற்ற முடிவும்"

"என்ன?"

"இல்லை உண்மையாகத்தான் கூறுகிறேன். உங்களுக்கு கால இயந்திரம் பற்றித் தெரியுமா"

"தெரியும். science  fiction  புத்தகங்கள் படிப்பது மற்றும் படங்கள் பார்ப்பது என்னுடைய பொழுது போக்கு"

"டி.ஆர்.டி.ஒவில் நாங்கள் ஒரு டைம் மெஷின் உருவமைத்திருக்கிறோம். அதன் மூலம் ஆயிரம் வருடங்கள் முன்னர் ஒரு நபரை அனுப்பிப் பரிசோதனை செய்யலாம் என்றிருக்கிறோம். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சோழர் காலத்திற்கு, இராஜ இராஜ சோழன் வாழ்ந்த காலத்திற்குப் போக வேண்டும். உங்களுக்குச் சரி என்றால் உங்களை எங்கள் பரிசோதனைக்குப் பயன்படுத்துகிறோம்"

பாலன் முகத்தில் ஒரு பரவசம் தெரிந்தது. "அப்படியா உண்மையில் இது சாத்தியமா.”

"ஆம். உங்களுடைய ஆசையை நிறைவேற்றும் வண்ணம் தஞ்சை பெரிய கோவில் கட்டி முடியக் கூடிய காலகட்டத்திற்கே நாம் செல்லுவோம்"

"இப்போதே உன்னுடன் நான் வரத் தயார்"

"மிகவும் சந்தோஷம். உங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்"

பாலன் தனது பெட்டியைத் திறந்து துணிகளை வைத்துக் கொண்டிருந்த போது ஒரு புகைப்படம் கண்ணில் பட்டது. தனது மகனுடன் சிறு வயதில் எடுத்த புகைப் படம் தான் அது. என்ன நினைத்தாரோ போனில் தனது மகனைத் தொடர்பு கொள்ள முயன்றார். பல முறை முயற்சி செய்தும் எதிர் முனையில் எந்தப் பதிலும் இல்லை.

"சார் டைம் ஆகுது. நாம் கிளம்ப வேண்டும்" என்று விஜய் அவசரப்படுத்தினான்.

பாலன் போனை வைத்து விட்டு விஜய்யுடன் வீட்டை விட்டு வெளியேறினார். "சோழர் காலத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்றால் அவர்களுடைய மொழியில் தான் நாம் பேச வேண்டும். அவர்களுடைய உடை தான் நாம் அணிய வேண்டும். நீ எப்படி சமாளிப்பாய். "

"அதற்கு உங்கள் உதவி பெரிதும் தேவைப்படுகிறது. நீங்கள் தான் இவற்றில் என்னைத் தேர்ச்சியுள்ளவனாய் ஆக்க வேண்டும்"

"அதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டாம்.“

அடுத்த நாள் இருவரும் டெல்லி வந்து சேர்ந்தனர்.

பாலனுக்கு டைம் மெஷின் சம்பந்தமான பயிற்சியும் விளக்கங்களும் நடந்தன. விஜய்க்கு சோழர்கால வாழ்க்கை முறை பயிற்சி நடந்தன.

பரிசோதனைக்கான  நாளும் வந்தது. விஜய் பாலன் இருவருக்கும் ஒரு சிறிய கருவி கொடுக்கப்பட்டது. அவர்கள் நிகழ் காலத்திற்கு வர அந்தக் கருவி உபயோகப்படும் என்று விளக்கப்பட்டது.

இருவரும்  டைம் மெஷினில் சென்று அமர்ந்தனர்.

விஜய் அந்த டைம் மெஷினை இயக்க பத்து நொடிகளில் அவர்கள் அவ்விடத்தை விட்டு மறைந்தனர்.

விஜய்யும் பாலனும் 1000 அண்டுகளுக்கு முந்திய காலகட்டத்திற்கு வந்து சேர்ந்தனர். சில நொடிகளுக்கு முன்னால் அவர்கள் கால இயந்திரத்தில் இருந்த போது தங்கள் தேகத்தைப்   பல மின்னல்கள் தாக்கி  உடம்பைக் கூறு போடுவது போல உணர்ந்தனர். பிறகு உடலில் ஒரு சில்லிப்பான குளிர்ச்சி  உணர்வு வந்தது. கண்ணைத் திறந்துப் பார்த்தால் சுற்றிலும் கும்மிருட்டாக இருந்தது.  இப்போது அவர்கள் ஒரு சிறிய மண்டபத்தின்  முன் இருந்தனர்.

விஜய் பாலனிடம் தாங்கள் இருக்குமிடம் என்னவென்று வினவினான்.

"நாம் தஞ்சையின் எல்லைப்புறத்தில் இருக்க வேண்டும். இப்போது கடும் இருட்டாக இருக்கிறது. நாம்  இந்த மண்டபத்திலேயே தூங்கிக்  காலையில் நகருக்குச் செல்லலாம்"

மண்டபத்தின் இன்னொரு  மூலையில் ஒரு மனிதன்  ஒளிந்துக் கொண்டு  ஆச்சரியத்துடன் இருவரையும் பார்த்துக்  கொண்டிருப்பதை அவர்கள் உணரவில்லை


CHAPTER 2

சோழர் காலம்  
  
காலைப் பொழுது மெல்லப் புலர, ஆதவனைப் பறவைகள் தங்கள் இனிய கீதத்தால் வரவேற்றன. விஜய் கண் விழித்து சோம்பல் முறித்து பாலன் எங்கே என்று தேட அவரோ சுறுசுறுப்புடன் காலைக் கடன்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.

பாலன் மண்டபத்தை விட்டு ஒரு குறுகியப் பாதையில் செல்ல விஜய் அவரைப் பின் தொடர்ந்து சென்றான். அவர்கள் சென்ற வழியில் நெடிதுயர்ந்த மரங்கள்   தமது பசும் இலைகளால் தென்றலைத் தாலாட்டிக் கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் கண்ட காட்சி பிரமிக்க வைத்தது. அவர்கள் முன்னே ஒரு அழகிய  நதியின் பிரம்மாண்டம் தான் அவர்கள் வியப்புறக் காரணம்.

விஜய் "இது என்ன நதி"

பாலன் "இது தான் காவேரி நதி. தமிழ் இலக்கியங்களில் புலவர்களின் வர்ணனையைப் படித்திருக்கிறேன். நேரில் பார்ப்பது அதையெல்லாம் மிஞ்சும் வண்ணமிருக்கிறது. எந்த மகாப் புலவனாலும் இப்படிப்பட்ட ஒரு  அழகை வர்ணிக்க முடியாது"

விஜய் "இதுவா காவேரி நதி. நம்ம ஊரில் இருக்கும் காவேரி நதி வற்றி வாடி  ஒரு குட்டை போலல்லவா இருக்கும்."  
.
இருவரும் சிறிது நேரம் நதியில் குளித்து முடித்து விட்டு அங்கிருந்து சென்ற ஒரு ஜனக் கூட்டத்தைப் பின் தொடர்ந்து சென்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் தஞ்சை நகரத்தை வந்தடைந்தனர்.

நகரத்தில் சிறிய கோவில்கள் தெருவுக்குத் தெரு இருந்தன. பிரதானமாக சிவன் கோவில்களும் ஓரளவு பெருமாள் கோவில்களும் இருந்தன.அக்கோவில்களில் நாட்டிய மங்கைகளின் நடனமும், அதை இரசித்துக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் ஆரவாரமும் இது இந்திரலோகமேதான் என்று இருவரையும் நம்ப வைத்தது.

பாலன் எங்கே என்று விஜய் சுற்றிலும்  பார்க்க அவரோ ஒரு நடனத்தை மெய் மறந்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று ஏதோ தோன்ற தனது தோளில் மாட்டியிருந்த பை காணவில்லை என்பதை உணர்ந்தான். அதிர்ச்சியுடன் அருகில் தேட காணாதலால் யாரோ அதைத் தன்னிடமிருந்து திருடியிருக்க வேண்டும் என்று அருகில் செல்பவர்களைக் கூர்ந்து கவனித்தான்.

அப்போது ஒரு மனிதன் பையுடன் ஒரு சந்துக்குள் செல்வதைக் கண்டு அவனைப் பின் தொடர்ந்து சென்றான். அந்த மனிதன் மிகவும் வேகமாக ஓடினான். ஜனக் கூட்டம் அதிகமாக இருந்தலால் விஜய்க்கு அவனைப் பிடிப்பது சிரமமாக இருந்தது. ஆயினும் அவனைத் தனது பார்வையிலிருந்து விலக்காமல் தொடர்ந்து சென்றான்.

அந்த மனிதன் நகரத்தின் எல்லையைத் தாண்டி வந்து விட்டான். விஜய்க்கு தான் எங்கே போகிறோம் என்பது இப்போது ஓரளவு புரிந்து விட்டது. தாங்கள் இரவு தங்கியிருந்த மண்டபத்தை நோக்கித் தான் அந்த மனிதன் போகிறான் என்பதை யூகித்தான். அம்மனிதன் எதேச்சையாகத் தன்னிடமிருந்து பையைப் பிடுங்கவில்லை மாறாகத் தங்களை நேற்றிலிருந்தே கண்காணித்து வருகிறான் என்பதும் விளங்கியது. அவன் நோக்கம் வெறும் திருட்டாக மட்டுமிருக்காது மாறாக வேறு ஒரு முக்கிய காரணம் இருக்க வேண்டும் என்று நினைத்தான்.

வெகு சீக்கிரத்தில் விஜய் மண்டபத்தை வந்தடைந்தான். அந்த மனிதன் அங்கிருக்கும் சுவடே தெரியவில்லை. சுற்றிலும் தேடி விட்டு களைப்பு மிகுதியானதால் ஒரு தூணுக்கருகே அமர்ந்தான்.

அப்போது அவன் கழுத்தை ஒரு கை பின்னாலிருந்து பலமாகப் பிடித்தது.

"அசையாதே" என்று கரகரப்பான ஒரு குரல் கேட்டது.

விஜய் திரும்பிப் பார்க்க முயன்றான்.

"அசையாதே. மீறினால் உன் கழுத்தை என் கத்தி பதம் பார்க்கும்" என்று அந்தக் குரல் எச்சரித்தது.

அப்போது தான் விஜய் தன் கழுத்தில் ஒரு கத்தியை அந்த மனிதன் வைத்திருக்கிறான் என்பதை உணர்ந்தான்.

"என்னுடைய பை உன்னிடம் தானே இருக்கிறது. சோழ நாட்டவர்கள் திருடர்கள் என்பதை நான் அறியவில்லை."

"சோழ நாட்டவர்கள் திருடர்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் வீர பாண்டியப் பரம்பரையிலிருந்து வந்தவர்கள் திருட்டு என்பது என்னவென்றே அறியாதவர்கள்"

"நீ சோழனோ பாண்டியனோ எனக்கு அது முக்கியமில்லை. என் பையை மட்டும் கொடுத்து விடு"

"கொடுக்கிறேன். ஆனால் அதற்கு முன் நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல். நீ யார். அசலூர்க் காரன் போலத் தெரிகிறாய். உன்னைப் பார்த்தால் சோழ நாட்டவன் போலவோ, பாண்டிய நாட்டவன் போலவோ இல்லை. பல்லவன், சேரன்  போலவும் தெரியவில்லை. நீ பேசுவது தமிழானாலும் வித்தியாசமாக இருக்கிறது. உண்மையைச் சொல் நீ எந்த நாட்டவன்" என்று கூறி அந்த மனிதன் விஜய் முன் வந்து  நின்றான்.

அந்த மனிதனுக்கு சுமார் எழுபது வயதிருக்கும். ஆனால் அவன் தேகத்திலோ முகத்திலோ  மூப்பின் அறிகுறியே தெரியவில்லை. அவன் உடல் வைரம் பாய்ந்திருந்தது. தலை முடி மட்டும் நரைத்திருக்காவிட்டால் அவன் வயதானவன் என்று யாருமே  கூற முடியாது. 

"சொல் நீ எந்த நாட்டவன்"

விஜய்  "நான் தமிழ் நாட்டைச் சேர்ந்தவன்"

"என்ன கிண்டல் செய்கிறாயா. என்னைப் பற்றி உனக்குத் தெரியாது. ஒரு காலத்தில் இந்த இரவிதாசன் பெயரைக் கேட்டால் பேய் பிசாசு  கூட நடுங்கும்"

"ஓ! உன் பெயர் இரவிதாசனா. எங்கேயோ கேள்விபட்டது போல இருக்கிறது. என் பெயர் விஜயன். நான் பல்லவ நாட்டைச் சேர்ந்தவன்.  இராஜ இராஜ சோழரின் பெருமை அறிந்து  அவர் கட்டும் இந்த மாபெரும் கோவிலைப் பார்க்க வேண்டும் என்று தஞ்சை நகரை வந்தடைந்தேன்"

"தம்பி இராஜ இராஜனை மிகவும் புகழாதே."

"ஆனால் மக்கள் அவர் வீரத்தை மிகவும் புகழ்ந்து பேசுகிறார்களே"

"மக்கள் கூட்டம் ஒரு ஆட்டு மந்தை. அதைப் பொருட்படுத்தாதே. அவன் வீரனாக இல்லா விட்டாலும் நல்ல மதியூகி. அதனால் நிலைத்திருக்கிறான்"

"மேலை நாடுகளில் வீரத்தை விட யுத்தத்தில் இராஜ தந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உனக்கு ஏன் சக்கரவர்த்தி மீது இவ்வளவு கோபம்"

"தம்பி உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் என்னுடைய கதையை உனக்குக் கூறுகிறேன். இந்தக் கதையில் பல இராஜ குடும்பத்தினரின் இரத்தம் சிந்தியிருக்கிறது. பல தலைகள் வெட்டுபட்டிருக்கிறது. குரோதமும் நயவஞ்சகமும் நிறைந்த என் கதையைக் கூறுகிறேன் கேள் " என்று இரவிதாசன் தன் கதையைக் கூற ஆரம்பித்தான்.

"அது 35 ஆண்டுகளுக்கு முன்னர் இராஜ இராஜ சோழரின் தந்தை சுந்தர சோழர் ஆண்ட கால கட்டம். பாண்டிய மன்னர் வீர பாண்டியர் சோழர்கள் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதில் தீவிரமாக இருந்தார். பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் பெரும் போர் சேவூரில் நடந்தது. சோழர்களின் படையை இளவரசர் அதித்த சோழன் தலைமை தாங்கி நடத்தினான். போரில் பாண்டியர்கள் படை சின்னாபின்னமாகியது. வீர பாண்டியரும் ஆபத்துதவிப் படைகளும் பின் வாங்கி ஒரு காட்டில் மறைந்திருந்தோம் எங்களைக் கண்டுபிடித்து குடிசைக்குள் வந்த ஆதித்தன் வீர பாண்டியரின் தலையைக் கொய்தான். நானும் என்னுடன் இருந்த சில ஆபத்துதவிகளும் ஆதித்தனைப் பலி வாங்க வேண்டும் என்பதற்காகத் தப்பித்தோம்."

"அன்றிலிருந்து ஆதித்தனையும் சோழ வம்சத்தையும் பழி வாங்கத் தகுந்த நேரம் பார்த்து வந்தோம். அதற்கான தருணம் கடம்பூர் மாளிகையில் கிடைத்தது. விருந்துக்காக வந்தவனை பரலோகம் அனுப்பினோம்.அதன் பிறகு உத்தமச் சோழர் பதவிக்கு வந்தார். திடீரென்று உத்தமச் சோழர் பதவி வேண்டாம் என்று விலக இராஜ இராஜ சோழன் ஆட்சிக்கு வந்தான். அது வரைப் பதுங்கியிருந்த நரி இப்போது வேட்டையாட ஆரம்பித்தது. நாங்கள் மறைந்திருந்த சேர நாட்டிற்கு பெரும் படையுடன் வந்து எங்களில் ஒருவர் கூட மிஞ்சாமல் கொன்று தீர்த்தான். ஆனால் நான் மட்டும் எப்படியோ தப்பித்தேன்."

"அதன் பிறகு இராஜ இராஜ சோழனைப் பலி வாங்க முயற்சி செய்து வருகிறேன். ஆனால் எனக்கும் வயதாகி விட்டது.மக்கள் அனைவரும் இராஜ இராஜ  சோழன் பக்கம் திரும்பி அவன் புகழ் பாட ஆரம்பித்து விட்டனர்.  எனக்கு உன் போல இள இரத்தங்களின் உதவி தேவை. நீ வீரனா என்று தெரியாது ஆனால் நல்ல தந்திரசாலியாக இருப்பாய் என்று என் உள்ளுணர்வு சொல்லுகிறது. அந்தக் கொலைகாரன் இராஜ இராஜனைப் பலி வாங்க உதவுவாயா" என்று விஜய்யின் கையைப் பிடித்தான் இரவிதாசன்

"கண்டிப்பாக உதவுகிறேன். எனக்கும் இராஜ இராஜ சோழனிடம் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று இருக்கிறது"

"அது என்ன கணக்கு"

"இராஜ இராஜ சோழன் கட்டுகிற கோவிலை நிர்மூலமாக்க வேண்டும். நான் ஒரு  வீர வைஷ்ணவக் குடும்பத்திலிருந்து வந்தவன். இந்தக் கோவில் மட்டும் இராஜ இராஜன் கட்டி முடித்தால் மகா விஷ்ணுவின் பெருமை பெரிதும் மட்டுப்படும். அதனால் இந்தக் கோவிலைத் தவிடு பொடியாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்"

"கோவில் முழுதும் கட்டி முடிக்கப்படப்போகிறதே. இன்னும் ஒரு வாரத்தில் கும்பாபிஷேகம் கூட நடத்தப் போகிறார்களாமே. இப்போது போய் கோவிலை எப்படி  அழிக்க முடியும்"

விஜய் புன்சிரிப்புடன் "அதற்கு என்னிடம் ஒரு ஆயுதம் இருக்கிறது இரவிதாசரே" என்று தன் பையிலிருந்து அந்த ஆயுதத்தை எடுத்துக் காண்பித்தான்.

"நான் மேலை நாட்டு ஆயுத வல்லுனர்களுடன் பழகி அவர்களின் தந்திரங்களைப் பயின்று இருக்கிறேன் அவர்களின் உதவியுடன் நான் வடிவமைத்த ஆயுதம் தான் இது. இதை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வெடிக்கும்படி செய்யலாம். வெடி என்றால் இது சாதரணமான வெடி அல்ல. கோவிலின் ஒரு செங்கல் கூடத் தேறாது. கோவிலை சுற்றி 200 அடி வரை ஒரு உயிர் கூட மிஞ்சி இருக்காது."

அதை நம்ப முடியாமல் வியப்புடன் பார்த்தான் இரவிதாசன். "இது போல ஒன்றை நான் கேள்விபட்டதே இல்லை. உன்னை நான் எப்படி நம்புவது"

"இரவிதாசரே நம்பிக்கை தான் வாழ்க்கை. என்னை விட்டால் உங்களுக்கு வேறு என்ன சிறந்த உதவி கிடைக்கும்"

"அதுவும் சரி தான். ஆனால் இதன் மூலம் இராஜ இராஜ சோழனைப் பலி வாங்குவது எப்படி"

"இதை நான் பெரிய கோவிலின் கும்பாபிஷேகம் அன்று வெடிக்க வைப்பேன். விழாவுக்கு இராஜ இராஜ் சோழன் மட்டுமா வருவான். அவன் குலமே வரும். அவன் மகன் இராஜேந்திரனும்  வருவான். அவன் வீட்டுப் பெண்டிரும் அவனுக்கு உதவியாக இருக்கும் சிற்றரசர் அனைவரும் வருவர். எல்லோரையும் சிவலோகம் அனுப்புவதற்கு  அதை விட ஒரு நல்ல நாள் கிடைக்குமா. உமது குறிக்கோள் இராஜ இராஜ சோழனை அழிப்பது மட்டும் தான். ஆனால் என் திட்டப்படி  சோழர் பரம்பரையே இல்லாமல் போய் விடும்."

இதைக் கேட்டதும் இரவிதாசனின் கண்கள் மின்னின. விஜய்யைக் கட்டிப் பிடித்து "அருமையான திட்டம். இது மட்டும் நடந்தால் நான் நிம்மதியாக கண் மூடுவேன். ஆனால் கும்பாபிஷேகம் அன்று கோவிலைச் சுற்றிலும் பலத்தப் பாதுகாப்பு இருக்குமே. கோட்டையைக் காவல் செய்வது போலல்லவா வீரர்கள் குவிந்திருப்பார்கள். யாருக்கும் தெரியாதபடி இதை எப்படி வெடிக்க வைப்பாய்"

விஜய் சிந்திக்க ஆரம்பித்தான் "நல்ல கேள்வி இரவிதாசரே"

"கவலைப்படாதே. அதற்கு என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது. இதைக் கோவில் அடியில் வெடிக்க வைத்தால் யாரும் கண்டு பிடிக்க முடியாது அல்லவா"

"ஆனால் அது எப்படி செய்ய முடியும்"

"கோவிலின் கீழே ஒரு இரகசியப் பாதை இருக்கிறது. இது அரசனுக்கும் அவன் மந்திரி பிரம்மராயரைத்  தவிர யாருக்கும் தெரியாது. அரண்மனையில் இருக்கும் என் ஒற்றன் மூலம் எனக்கு இது தெரிய வந்தது. இந்தப் பாதை கோவிலின் கர்ப்பக்கிரகத்திலிருந்து ஆரம்பித்து இராஜ இராஜன் மகள் இளவரசி  சந்திரமல்லியின் படுக்கை அறை வரை செல்கிறது. கும்பாபிஷேகம் அன்று நீ இளவரசி சந்திரமல்லியின் அந்தபுரத்தில் நுழைந்து இந்த இரகசியப்பாதை  வழியாக கோவிலின் கர்ப்பக்கிரகத்துக்கு  கீழே வந்து இந்த வெடி ஆயுதத்தை வைத்து விட்டால் நம் திட்டம் நிறைவேறும் அல்லவா"

"அருமையான யோசனை. அனால் சந்திரமல்லியின் அறைக்கு நான் எப்படி செல்ல முடியுமா"

"சந்திரமல்லி பார் போற்றும் அழகி. நீயும் கம்பீரமான இளைஞன்.  அதுவும் மேலை நாடுகளுக்கு எல்லாம் சென்று வந்திருக்கிறாய். அவளுக்கு இசை மேல் பிரியம். அதை விட வெளிநாட்டும் பொருட்கள் மீது மோகம். அவள் அரண்மனையில் வணிகர்களுக்கென்று தனி மரியாதை என்றால் பார்த்துக் கொள்ளேன். இதற்கு மேல் அவளை மயக்க நான் உனக்கு என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும்." என்று இரவிதாசன் இடி இடி என்று சிரித்தான்.

அவனுடன் சேர்ந்து விஜய்யும் சிரிக்க ஆரம்பித்தான்.

           -----------------------****************-------------------------------------

பாலன் நேற்றிரவிலிருந்து தான் கண்ட அனுபவங்கள் கனவா அல்லது நினைவா என்ற வியப்பிலிருந்தார். தான் கற்பனை செய்ததைக் காட்டிலும் சோழர்களின் நாகரிகம் பல மடங்கு உயர்வாக இருக்கிறது வெறும் புத்தகங்கள், ஓலைச்சுவடிகள், கோவில் சிற்பங்களில் பார்த்த உலகத்தில் இப்போது உண்மையிலே தான் வாழ்ந்து கொண்டிருப்பதை அவரால் நம்பவே முடியவில்லை.

இது எல்லாம் தான் விஜய்யைச் சந்தித்ததனால் தான் சாத்தியமானது என்று நினைத்தவர், விஜய்யின் நினைவு வர அவன் எங்கே என்று தேடினார். சுற்றிலும் பார்த்தும் விஜய் எங்கும் காணவில்லை. உற்சாகத்தில் எங்கேயாவது சுற்றிக்கொண்டிருப்பான், விரைவில்  இங்கு திரும்பி வருவான் என்று அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் விஜய் வரும் அறிகுறியே தெரியவில்லை.

இதற்கு மேல் இங்கிருந்தால் எந்தப் புண்ணியமும்  இல்லை என்று அவ்விடத்தை விட்டு  நகர்ந்தார். இன்னும் தஞ்சை பெரிய கோவிலையே பார்க்கவில்லையே என்று நினைத்து அங்கிருப்பவர்களிடம் வழி கேட்டு கோவிலை நோக்கி நடந்து சென்றார்.

விரைவில் தஞ்சைக் கோவிலின் கோபுரம் அவர் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தது. சில நிமிடங்களில் அவர் கோவிலின் முன் நின்றார். கோவில் முழுதும் கட்டபட்டிருந்தாலும் இன்னும் கோபுரத்தில் வர்ணம் அடிக்கும் வேலை மீதமிருந்தது. கோவிலைக் கண்டதும் பாலன் தன்னையே மறந்து உருகி நின்றார்.கோவில்  புதிதாகக் கட்டப்பட்ட நிலையில் காணும் அதிர்ஷ்டத்தை எண்ணி எண்ணி கடவுளுக்கு நன்றி தெரிவித்தார். கோவிலுக்குள்ளே நுழைந்து அதைச் சுற்றி நடந்து இரசித்தார்.

அப்போது கோவிலில் பலத்த சல சலப்பு கேட்டது..

"பஞ்சவன்மாதேவி வருகிறார்! பஞ்சவன்மாதேவி வருகிறார்! அனைவரும் தள்ளி நில்லுங்கள்" என்று வீரர்கள் மக்களிடம் கூறி அவர்களை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தனர். மக்களும் அதைக் கேட்டு தேவியாரைப்  பார்க்கும் ஆவலில் வரிசையாக நின்றனர்.

பாலனுக்கு உடனே புத்துணர்வு வந்தது. ஆகா பஞ்சவன்மாதேவி இராஜராஜரின்  மனைவி அல்லவா. இராஜ இராஜருக்குத் துணையாக இருந்து அவருக்கு முழு பலமும் அளித்து அவருக்கு உயிரினும் பிரியமானவர். இத்தகைய பெருமை வாய்ந்த தேவியாரைச் சந்திப்பதே தனது அதிர்ஷ்டமே என்று அக மகிழ்ந்தார்.

பாலன் சிந்தனையுடன் கோவிலை விட்டு வெளியே வந்தார்.சிறிது நேரத்தில் பஞ்சவன்மாதேவியும் வெளியே வந்து குதிரையில் ஏறினார். மக்கள் கூட்டம் வாழ்த்தொலி கூற குதிரையில் மெதுவாகச் சென்றார்.

பாலன் சக்கரவர்த்தியை எப்படியாவாது சந்திக்க வேண்டும். என்ன செய்வது என்ற குழப்பத்திலிருந்தார்.  திடீரென்று யாரும் எதிர்பாராத ஒரு செயல் செய்தார். அருகிலிருந்த காவலனை நோக்கி ஒரு குத்து விட்டார். உடனே மற்ற காவலர்கள் அவரை மடக்கி கைது செய்தனர்.

மக்கள் கூட்டத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. "சாளுக்கிய நாட்டு ஒற்றனாக இருக்க வேண்டும். சரியான கோழையாக இருப்பான் போலிருக்கிறது. தேவியாரைப் போய் கொல்ல நினைக்கிறானே. வீரமிருந்தால் ராஜராஜரிடம் மோதிப் பார்ப்பானா?" 

"தேவி சக்கரவர்த்திக்கு ஒரு செய்தி இருக்கிறது. இறைவனிடமிருந்து அரசருக்கு ஒரு செய்தி இருக்கிறது" என்று பாலன் கத்தினார்.

வீரர்கள் அவரை ஒரு குதிரையில் ஏற்றி சிறைக்கு அழைத்துச் சென்றனர்..
நிகழ்காலம்

நியூயார்க் நகரத்தின் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய அந்த விமானம் மெல்ல ஆகாயத்தில் பறந்துக் கொண்டிருந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்னையை அடைந்து விடும். ரிஷி விமானத்தின் சிறகுகள் மேகங்களைத் தழுவிய வண்ணம் மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான். 10 வருடங்கள் பிறகு தன் தாய் நாடான இந்தியாவிற்குச் செல்கிறான்.

இந்தப் பத்து வருட அமெரிக்கா வாழ்க்கையில் சேர்த்த பொருள் பல கோடி.ஆனால் இழந்தது கணக்கில் அடங்காதது. முக்கியமாகத் தன் தந்தை பாலனின் அன்பை இழந்தான். தான் மணந்த அமெரிக்க மனைவிடமிருந்து சென்ற வாரம் விவாகரத்து வேறு கிடைத்தது. கோர்ட்டிலிருந்து வந்த அன்று போனில் தன் தந்தையிடமிருந்து கால்கள் வந்தது பார்த்து மகிழ்ச்சி அடைந்தான். அவரைத் தொடர்பு கொள்ள செய்த முயற்சி தோல்வி அடைந்தது. அன்றே தான் இந்தியா செல்ல வேண்டும், தன் தந்தையின் அரவணைப்பை நாட வேண்டும் என்று முடிவு செய்தான். 

விமானம் சென்னையை அடைந்தது. ரிஷி ஒரு காரைப் பிடித்து தஞ்சையை நோக்கிப் பயணித்தான். பத்து வருடங்களில் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் அவனுக்கு வியப்பை அளித்தது.

கார் தஞ்சையில் அவன் தந்தை வசித்த வீட்டை அடைந்தது. வீட்டின் முன் பூட்டு போட்டிருப்பது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அருகிலிருந்தவர்களிடம் விசாரித்த போது ஒரு வாரமாக வீட்டில் இல்லை என்று தெரிய வந்தது.

"எப்போதும் கோவிலே கதி என்று இருப்பார். அங்கு போய் விசாரியுங்கள் எதாவாது தெரியும்" என்று பக்கத்து வீட்டிலிருந்தவர் கூற கோவிலுக்கு வந்தான். கடைகளில் கேட்டுப் பார்த்தும் உருப்படியான ஒரு விபரமும் தெரியவில்லை.

சலிப்புடன் ஒரு ஓட்டலுக்கு வந்து உணவருந்தினான். பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த ஒரு அமெரிக்கனும் அவனது காதலியின் மீது அவன் கவனம் சென்றது. அந்த மனிதன் தன் காதலிக்கு காம்கார்டரில் கோவிலைப் பதிவு செய்தவற்றைக் காண்பித்துக் கொண்டிருந்தான்.

மிகவும் சத்தமாக இருவரும் பேசிக்கொண்டிருந்தது அவனுக்கு எரிச்சலைத் தந்தது.

அப்போது "சிவபெருமானே என்னை நல்லபடியாக அனுப்பி வை" என்ற குரல் கேட்டு திடுக்கிட்டான்.

அது தன் தந்தையின் குரலே தான். சுற்றிலும் பார்த்தான்.  காம்கார்டரிலிருந்து அந்தக் குரல் வந்தது. உடனே அந்த அமெரிக்கனிடம் கெஞ்சி காம்கார்டரை வாங்கினான். தன் தந்தை இன்னொரு மனிதனுடன் கோவில் வாசலில் நின்று வணங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அந்த இன்னொரு மனிதனை Zoom செய்துப் பார்த்தான். யார் என்று தெரியவில்லை. அமெரிக்கனிடம் சென்ற வாரம் தான் பதிவு செய்தது என்று தெரிந்துக் கொண்டான். தன் தந்தை இருந்த frameமட்டும் போட்டோவாக மாற்றித் தனது செல்போனில் ஏற்றிக் கொண்டான்.

பிறகு கோவிலைச் சுற்றி இருக்கும் கடைகளில் தன் தந்தையுடன் இருக்கும் மனிதன் யார் என்று விசாரித்தான். யாருக்கும் சரிவர தெரியவில்லை.

வெறுப்புடன் திரும்பி சென்னை செல்லலாமா என்று யோசித்தான். கடைசியாக ஒரு டாக்சி டிரைவரிடம் கேட்கலாம் என்று போட்டோவைக் காண்பித்தான்.

"இவரா சார். போன வாரம் நான் தான் இரண்டு போரையும் சென்னைக்கு அழைத்துப் போனேன். இந்தப் பெரியவர் யார் உங்கப்பாவா சார்? பக்கத்திலிருக்கிறவர் பேர் என்னமோ தான். ஆ! விஜய். .இரண்டு போரையும் ஏர்போர்ட்டிலே தான் டிராப் செய்தேன். அவங்க டெல்லி போறதா பேசிகிட்டாங்க."

ரிஷி உடனே தன்னை சென்னை ஏர்போர்ட்டிற்கு அழைத்துச் செல்லும்படி அந்த டிரைவரிடம் கூறினான்.

தன் அடுத்த இலக்கு டெல்லி என்று முடிவு செய்து தனது ஐபேடில் டிக்கெட் புக் செய்வதில் மும்முரமானான்.

  Chapter - 3
சோழர் காலம்  

சந்திரமல்லியின்  மனநிலை அன்று எதிலும் ஈடுபாடற்று இருந்தது. தனது செல்லத் தோழி வினோதினி அவளுக்குப் பிடித்தமான கண்ணன் பாடலைப் பாடிக் கொண்டிருந்தாள். வினோதினியின் இனிமையான குரலை என்றும் இரசிக்கும் சந்திரமல்லி அன்று ஏனோ அதில் இலயிக்கவில்லை.. "போ" என்று கையசைக்க  வினோதினி உடனே அவ்விடத்தை  விட்டு நகர்ந்தாள்.

தான் ஏன் சில நாட்களாக இப்படி இருக்கிறோம் என்று சிந்தனை செய்தாள். தனக்கு வழக்கமாகப் பிடிக்கும் உணவு வகைகளில் இப்போது நாட்டமில்லை. தனக்குப் பிடித்தமான பாடல்களில்   இப்போது  விருப்பமில்லை. வணிகர்கள் தரும் பரிசுப் பொருட்கள் எதுவும் பிடிக்கவில்லை. மனம் ஏதோ ஒரு புதுமையை நாடுகிறது. ஒரு வினோதமான அனுபவம் தன்னை வந்துத் தாக்காதா என்று ஏங்குவதை உணர முடிகிறது.

தன் தோழிகள் இதை கவனித்து கேலி செய்வது மேலும் எரிச்சலூட்டுகிறது. வினோதினி கூட ஒரு முறை "நல்ல அழகான வாலிபராகப்  பார்த்துக் காதலியுங்கள் தேவி. உங்கள் பிரச்சினை எல்லாம் தீர்ந்து விடும்" என்று கூறியதை நினைத்தாள்.

காதல்! அந்த அனுபவம் எப்படி இருக்கும். அதையும் சோதித்துப் பார்க்க ஆசை தான். ஆனால் பாலும் மனதிற்கு எந்த வாலிபனையும் பிடிக்கவில்லையே. நல்ல வீரனாகப் பார்த்தால் முரடனாகத் தெரிகிறான். பண்பட்ட கலா வித்வானாகப் பார்த்தால் பேடியாகத் தெரிகிறான். தனக்கு என்ன பிடிக்கும் என்பதை கணிக்க முடியாதது தான் தனது பிரச்சினையே.

அப்போது பணிப்பெண் இளவரசியை வணங்கி "தங்களைப் பார்க்க வணிகர் ஒருவர் காத்திருக்கிறார் தேவி. உள்ளே வர அனுமதி தரலாமா" என்று வினவினாள்.

"யாரையும் சந்திக்கும் மனநிலையில் நான் இல்லை. போகச் சொல்"

"பல முறை சொல்லியாகி விட்டது தேவி. அந்த மனிதர் நகருவதாகத் தெரியவில்லை. தங்களைச் சந்தித்து பரிசுப் பொருள் தராமலே ஒழிய போகப்போவதில்லை என்று உறுதியுடன் இருக்கிறார்"

அப்போது வாசலில் சல சலப்பு சத்தம் கேட்டது. என்னவென பணிப்பெண் வெளியே சென்று விசாரித்து விட்டு வந்தாள்.

"அந்த வணிகன் பெரும் திமிர் பிடித்தவன் போலத் தெரிகிறது தேவி. தங்களை சந்தித்தே ஆக வேண்டும் என்று வாயிற்காவலர்களுடன் சண்டையில் இறங்கி விட்டான்"

"சரி அவனை உள்ளே அனுப்பு"

யார் இந்த வணிகன் என்று தெரிந்து கொள்ள அவள் மனம் ஆவலுற்றது. வந்தவுடன் நன்றாகத் திட்டி அறிவுரை கூறி அனுப்ப வேண்டும் என்று நினைத்தாள்.

உள்ளே வந்த வணிகன் இளம் வயதினனாக இருந்தான். வந்தவன் தன்னைப் பார்த்து மரியாதையுடன்  வணங்காமல் இடுப்பில் கை வைத்துக்  குறுகுறுவெனப்  பார்ப்பது அவளுக்குக் கோபமூட்டியது.

"வணிகரே! நீர் தவறு மேல் தவறு செய்கிறீர்.என்னை அவமதிப்பு செய்வது தொடர்ந்தால் உம்மை பாதாளச் சிறையில் அடைத்திட நான் ஆணையிட நேரிடும்"

வாலிபன் புன்சிரிப்புடன் "தேவி நான் தங்களை எந்த விதத்திலும் அவமதிக்கவில்லை. சற்று புரியும்படி விளக்குவீர்களா"

"சக்கரவர்த்தியின் மகளை வணங்காமல் இவ்வாறு வைத்த கண் வாங்காமல் பார்ப்பது குற்றம் என்பது உமக்குத் தெரியாதா"

"மன்னிக்கவும் தேவி மறந்தே விட்டேன். ரோஜா மலர் போன்ற அழகிய தங்கள் முகத்தின் அழகிலும், கரு வண்டு போல இருக்கும் தங்கள் கண்களின் அழகிலும், வில் போன்று கூர்ந்து நிற்கும் தங்கள் நாசியின் அழகிலும், தங்கள் உதட்டின் அழகு - அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இப்படி அழகிற்கே அழகு சேர்க்கும் தங்களைப் பார்த்தவுடன் பிரமித்து விட்டேன் தேவி. மன்னிக்கவும்" என்று அந்த வாலிபன் அவளை வணங்கினான்.

சந்திரமல்லிக்கு இதைக் கேட்டவுடன் வெட்கம் வந்தது.இருந்தாலும் கோபப்படுவது போல நடித்தாள்.

"முன்னர் பின் பழக்கமில்லாத ஒரு இளம் பெண்ணிடம் இப்படித்தான் பேசுவதா. உம்முடைய பெற்றோர் தங்களுக்கு நல்ல பழக்கம் எதுவும் சொல்லி வளர்த்தது போலத் தெரியவில்லையே"

"தேவி என் பெற்றோர் பற்றி குறை கூறாதீர்கள். நான் சில கேள்விகள் கேட்கிறேன்.அறையின் ஓரத்தில் கூண்டிலிருக்கும் அந்தக் கிளி அழகாக இருக்கிறது அல்லவா?"

"ஆம்"

"தங்கள் முன் வைக்கப்பட்டிருக்கும் இந்த மலர்ச்செடி அழகாக இருக்கிறது அல்லவா?"

"ஆம்"

"மேலே தொங்கும் இந்த விளக்கின் வேலைபாட்டைப் பார்த்தீர்களா. எவ்வளவு அழகாக இருக்கிறது"

"ஆம். அதெற்கென்ன"

"அழகாக இருக்கும் பொருளை அழகாக இருக்கிறது என்று தானே கூற முடியும் தேவி. தாங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று நான் சொன்னது குற்றமென்றால் இவ்வளவு பொருட்களை அழகாக இருக்கிறது என்று கூறிய தாங்களும் குற்றவாளியே"

சந்திரமல்லி விழுந்து விழுந்து சிரித்தாள்."தாங்கள் பேச்சில் வல்லவராக இருக்கிறீர்கள்.தாங்கள் யார். இங்கு வந்ததன் காரணமென்ன"

"என் பெயர் விஜயன். நான் ஒரு வணிகன். சிறு வயதிலேயே என் தந்தையுடன் பல நாடுகள் சுற்றி வந்திருக்கிறேன். தங்களைச் சந்தித்து ஒரு பரிசுப் பொருளைத் தருவதே  நான் வந்ததன் நோக்கம்"

"நீர் உமது நேரத்தை வீணாக்குகிறீர். என்னிடம் இல்லாத மேலை நாட்டுப் பொருட்களே இல்லை. எனக்கு எல்லாம் வெறுத்து விட்டது. நீர் இங்கிருந்து செல்லலாம்"

"பொறுங்கள் தேவி. இந்த பொருளைப் பார்த்தால் அப்படிக் கூற மாட்டீர்கள்." என்று கூறி அப்பொருளைக் காட்டினான்.

அழகிய வைர மாலை ஒன்றை விஜய் சந்திரமல்லிக்குக் காண்பித்தான்.

"இதற்காகத்தான இவ்வளவு கலவரம். என் அரண்மனை சேடிகள் கூட இதை விட  நல்ல அணிகலன்கள் அணிந்திருப்பார்கள்" என்று  அந்த வைர மாலையை தூக்கி எறிந்தாள்.

விஜய்க்கு கோபம் வந்து விட்டது. "தேவி என்னை அவமானப்படுத்தியதற்கு நீங்கள் மிகவும் வருத்தப்படுவீர்கள்" என்று கூறி விட்டு வேகமாக அரண்மனையை விட்டு வெளியே சென்றான்.

விஜயன் சென்றவுடன் சந்திரமல்லி மனம் வருத்தப்பட்டது. தனக்குப் பரிசு தர நினைத்த ஒரு மனிதரிடம்  இவ்வளவு கடுமையாக நடந்து கொண்டோமே என்று நினைத்தாள். இருந்தாலும் அந்த வாலிபன், அவன் பெயர் என்ன? ஆ விஜயன்! அவனுக்குத் தேவைதான். இளவரசியாகத் தன்னிடமே எவ்வளவு கர்வத்துடன் நடந்து கொண்டான்"

மீண்டும்  தனிமை உணர்வு தன்னை ஆட்கொள்வதை   சந்திரமல்லி   உணர்ந்தாள். பிறகு  கீழே விழுந்து கிடக்கும் அந்த பரிசுப் பொருள் மீது அவள்  பார்வை சென்றது. அதைக் கையில் எடுத்துத் தடவிப் பார்த்தாள். அந்த வைர மாலையில் ஏதோ ஒரு அழகு தெரிந்தது. இது மேலை நாட்டு அணிகலனாக இருக்க வேண்டும் என்று யோசித்தாள்

உடனே காவலனை  அனுப்பி விஜயனைத் தேடிக் கண்டுபிடித்து வரும்படி அனுப்பினாள். அவன் சென்ற சிறிது நேரத்தில் பணிப்பெண் வந்து  விஜய் மீண்டும் வந்திருப்பதாகக் கூறினாள். உடனே அவனை உள்ளே அனுப்பும்படி சந்திரமல்லி ஆணையிட்டாள்.

அறைக்குள்  விஜய்  வேகமாக  நுழைய  அவனைப்  பார்த்ததும் சந்திரமல்லி கல கலவென சிரித்தாள்.

"நீர் சென்ற வேகத்தைப் பார்த்தால் இந்தப் பக்கமே வரமாட்டீர் என்றல்லவா நினைத்தேன்"

"தேவி காரணத்தோடு தான் நான் வந்தேன். என்னுடைய பரிசுப் பொருளைக்  கொடுத்து விடுங்கள். நான் சென்று விடுகிறேன்"

"விஜயரே, அது என்னிடம் இல்லை. பணிப்பெண் எங்கேயாவது தூக்கி எறிந்திருபப்பாள் "

"என் பொறுமையை சோதிக்காதீர்கள் தேவி. அது உங்களிடம் தான் இருக்கிறது. தயவு செய்து கொடுத்து விடுங்கள்"

சந்திரமல்லி வைர மாலையை மறைவிலிருந்து எடுத்து முன்னே நீட்டினாள் "இதைத்தானே கேட்டீர். எடுத்துச் செல்லுங்கள்"

விஜய் அதை வாங்க முயல சந்திரமல்லி விருட்டென கையை மடக்கி  கொடுக்காமல் ஏமாற்றினாள்.

விஜய் கோபத்துடன் அவளுடைய கையைப் பற்றினான் "பெண்ணே என்னிடம் விளையாடாதே. கொடுத்து விடு நான் கேட்டதை"

ஒரு ஆடவன் தன் கையைப் பற்றி தனக்கு மிகவும் அருகாமையில் இருப்பது சந்திரமல்லிக்கு அதிர்ச்சியாக இருந்தது.ஆனால் அவனுடைய செயல், அவனுடைய அருகாமை தன் மனம் விரும்புவதை உணர்ந்தாள்.

"உன்னுடன் விளையாட எனக்கு மிகவும் ஆசை"

விஜயனுக்கு இந்த வார்த்தைகள் மேலும் தைரியத்தைக் கொடுத்தது.அவளுடைய காதுக்கு மிக அருகில் தனது உதடுகளைக் கொண்டு சென்று  "என் விளையாட்டு மிக மோசமாக இருக்கும் பெண்ணே. கொடுத்து விடு நான் கேட்டதை"

"அது மட்டும் என்னால் தர முடியாது. அதற்குப் பதில் எது வேண்டும் என்றாலும் கேள் தருகிறேன் "

"எது வேண்டுமானாலும் தருவாயா"

"கேள்"

"எனக்கு நீ வேண்டும். உன்னை எனக்குத் தருவாயா"

"தருகிறேன் எடுத்துக் கொள்" என்று சந்திரமல்லி முணு முணுக்க விஜய் மெல்ல அவள் உதடுகளில் தன் உதடுகளைப் பதித்தான்.

சந்திரமல்லி தன்னையே மறந்த நிலையில் இருந்தாள்.தான் தேடிய புதுமையான அனுபவம் தனக்குக் கிடைக்கப் போவதை உணர்ந்தாள். விஜய் அவளைத் தூக்கி படுக்கை அறைக்குச் சென்றான். அவளை மெதுவாக ஒரு மலர் போல பஞ்சணையில் வைத்தான்.

இருவரும் தங்கள் ஆடைகைளைக் களைந்து ஒரு புதிய தேடலைத் தொடங்கினர்.

நேரம் போவதே தெரியாமல் தொடர்ந்த அவர்களுடைய தேடல் ஒரு முடிவுக்கு வந்தது.

விஜய்யின் அணைப்பிலிருந்த சந்திரமல்லி "இந்த அனுபவம் மிகவும் புதுமை. என் மனம் மீண்டும் மீண்டும் இதை நாடுகிறது. நாளையும் வருவாயா"

"நாளை என்ன, தினமும் வருகிறேன். இப்போது உறங்கு பெண்ணே"

விஜய் தன்னிடமிருந்த ஒரு பொருளை எடுத்து "இதை முகர்ந்துப்  பார். நீ சொர்கத்துக்கே செல்வாய்"

அதிலிருந்து ஒரு நல்ல நறுமணம் வந்தது. சந்திரமல்லி மெல்ல மயக்கத்தில் ஆழ்ந்தாள்.

விஜய் அறையைத் தீவிரமாக அலசிப் பார்த்தான். அறையிலிருந்த ஒரு பெரிய புலியின் சிலை அவன் கவனத்தைக் கவர்ந்தது. அதை மெல்ல அகற்றப் பார்த்தான். சிலை நகல தரையில் ஒரு ஆள் செல்லும் அளவுக்கு துவாரம்  தெரிந்தது. மிகவும் இருட்டாக இருந்தாதல் ஒரு தீப்பந்தம் எடுத்துக் கொண்டு விஜய் அதனுள்ளே நுழைந்தான். 

அந்த கரிய இருட்டுப் பாதை வளைந்து வளைந்து சென்றது. தீப்பந்தம் அணைந்து விடும் போல இருந்ததால் விஜய்யும் தன் வேகத்தைக் கூட்டினான்.

அந்தப் பாதை ஒரு இடத்தில் முடிவுக்கு வந்தது. மேலே செல்ல சில படிகள் தெரிந்தன. விஜய் அப்படியில் ஏற மேலே ஒரு கருங்கல் முட்டியது. விஜய் தனது  பலத்தை எல்லாம் கொணர்ந்து அந்தக் கல்லை அகற்றி மேலே ஏறினான்.

வெளியே நிலவின் வெளிச்சம்தெரிந்தது. நல்ல இதமான காற்றும்  அடித்தது.தஞ்சை கோவிலின் சிவலிங்கம் விஜய் கண் முன் தெரிந்தது. நள்ளிரவானதால் கோவில் ஆள் நடமாற்றமின்றி இருந்தது. விஜய் தனது தோளை யாரோ பின்னாலிருந்த பற்றியதால் திரும்பிப் பார்க்க இரவிதாசன் நின்று கொண்டிருந்தான்.
                     ---------------*****************_____________

சோழர்களின் பாதாளச் சிறையில் தள்ளப்பட்ட பாலனுக்கு கவலை எதுவும் இருப்பதாகப் படவில்லை. மிகவும் உற்சாகமாக இருந்தார். சிறையில் ஓவியங்கள் வரைந்து நேரத்தைக் கழித்தார்.

அன்று பக்கத்து அறையில் ஒரு இளம் வீரன் அடைக்கப்பட்டான். அவன் முகம் களையாக இருந்தது. நிச்சயம் இவன் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவனாகத் தான் இருக்க வேண்டும் என்று பாலன் முடிவு செய்தார்.

காவலர்கள் உணவருந்த சென்று விட்டனர். பக்கத்து அறையிலிருப்பவனிடம் பேச்சுக் கொடுக்கலாம் என்று சுவரினருகே சென்றார்.

"தம்பி உன் பெயர் என்ன. பார்த்ததால் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன் போலத் தெரிகிறது. எப்படி இங்கு வந்து சேர்ந்தாய்"

உடனே இடி இடியென சிரிப்பு சத்தம் கேட்டது. "நல்ல கேள்வி கேட்டீர்கள். தங்களைப் பார்த்தாலும் பரம சாது போலத் தெரிகிறது. தாங்கள் எப்படி இங்கு வந்து சேர்ந்தீர்கள். இந்த கேடு கெட்ட ராஜராஜன் ஆட்சியில் நீதி நியாயம் என்று ஒன்று இருந்தால் நாம் இருவரும் இந்தச் சிறையிலிருக்க மாட்டோம்"

"தம்பி சக்கரவர்த்தியைப் பற்றி அப்படிக் கூறாதே, எல்லாம் விதி படி தான் நடக்கும்"

"விதியின் மீது நம்பிக்கை எனக்கு இல்லை.மதியூகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவன் நான்"

"இள இரத்தம் அல்லவா. அதான் துடிப்பாக பேசுகிறாய். உன் பெயர் என்ன என்று கேட்டேன் அல்லவா தம்பி"

"நான் பாண்டிய நாட்டு இளவரசன் இளஞ்செழியன்"

"இளஞ்செழியனா. தாங்கள் வீர பாண்டியரின் கடைசி புத்திரர் அல்லவா? தங்கள் தாயார் யார் என்று தான் எனக்குத் தெரியாது."

"என் தாயாரின் பெயர் நந்தினி தேவி. இருவரும் காந்தர்வ முறையில் திருமணம் செய்ததன் மூலம் பிறந்தவன் நான்"

அதைக் கேட்டு பாலன் பெரும் வியப்படைந்தார். "நந்தினி தேவியாருக்கு ஒரு மகன் இருப்பது எனக்குத் தெரியாது. தங்கள் தாயார் எங்கே இளவரசே?"

"இவ்வளவு கேள்விகள் கேட்கும் நீர் யார். பாண்டிய நாட்டைச் சேர்ந்தவரா."

"என் பெயர் பாலன், எனக்கு எல்லா நாடும் ஒன்றே. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கை கொண்டவன் நான். நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. தெரியாமல் என்னை இங்கு அடைத்து விட்டனர். சக்கரவர்த்தி விசாரித்து என்னை விடுதலை செய்வார் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்"

"அந்த நம்பிக்கை நிராசை பாலரே. சோழர்கள் ஆட்சியில் நீதி எங்கே. நேர்மை எங்கே. வெறும் நரித்தனம் தான் இங்கே செல்லும். இல்லையென்றால் ராஜராஜனுக்கு உதவி செய்த என்னை இங்கே அடைப்பார்களா?"

"ராஜராஜனுக்கு நீங்கள் உதவி செய்தீர்களா?"

"ஆம். உண்மையில் என் தந்தையின் பட்டத்தரசிக்கு மகனாகப் பிறந்த நெடுஞ்செழியன் தான் பாண்டிய சிம்மாசனத்திற்கு உரிமையாளன். ராஜராஜன் ஆட்சிக்கு வந்தபிறகு என் தாயாரை ரகசியமாக சந்தித்து என்னை பாண்டிய நாட்டு மன்னனாக்குவதாக சத்தியம் செய்தான். பதிலுக்கு நெடுஞ்செழியனுக்கு எதிராக சோழர்களுக்கு உதவி செய்யும்படியாகவும் கெஞ்சினான். என் தாயாரும் உடன்பட்டு போரில் சோழர்களுக்கு உதவியாக இருந்தோம். நெடுஞ்செழியன் போரில் வீர மரணம் அடைந்தான். ஆனால் ராஜராஜன் நரித்தனம் பிறகு தான் வெளிப்பட்டது.சொன்ன வாக்கை மீறி என்னைக் கைது செய்து இப்படி சிறையில் அடைத்து விட்டான்"

அதைக் கேட்டு பாலன் அமைதியாக இருந்தார். "இந்தச் சின்ன வயதில் நீங்கள் சிறையிலிருந்து அவதிப்படுவது கஷ்டமாக இருக்கிறது"

"இந்தச் சிறை எனக்கு ஒரு பொருட்டே இல்லை. நான் நினைத்தால் இந்த நொடியே தப்பிக்க முடியும்?"

"எப்படி"

"உங்களுக்கு அடுத்த அறை காலியாக இருக்கிறது அல்லவா. அதில் சுரங்கப் பாதைக்கு வழி இருக்கிறது"

"அது எங்கே செல்கிறது"

"தஞ்சை கோவிலின் சிவன் சந்நிதிக்கு அடி வரை செல்கிறது. அதன் வழியாக நாம் எளிதாகத் தப்பிச் செல்லலாம்.இதே போல இன்னொரு சுரங்கப் பாதை சந்திரமல்லியின் மாளிகையிலுமிருக்கிறது. அது அந்த சந்திரமல்லிக்கே தெரியாது." என்று கூறி இளஞ்செழியன் சிரித்தான்.
                            

நிகழ்காலம்

ரிஷி டெல்லி வந்து இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. இவ்வளவு பெரிய நகரில் தான் தேடும் இரண்டு பேரை எப்படி கண்டு பிடிப்பது என்று மலைப்பாக இருந்தது.

ஒரு ஸ்டார் ஓட்டலில் தங்கியிருந்தான். தினமும் இரவு ஓட்டலின் மேல் மாடியில் அமர்ந்து நகரத்தைப் பார்ப்பது பொழுதுபோக்காகக் கொண்டிருந்தான்.

அன்று இரவும் அவ்வாறு அமர்ந்திருந்தபோது யாருமே அருகில் இல்லாததால் போரடித்துக் கீழே செல்லலாம் என்று முடிவு செய்து எழுந்தான்.

அப்போது ஒரு இளம் பெண் வேகமாக வந்து சுவரின் அருகில் நின்றாள். அந்தப் பெண்ணின் கண்ணிலிருந்து கண்ணீர் வருவதை ரிஷி கவனித்தான்.

திடீரென்று அந்தப் பெண் சுவரின் மீது ஏறி நின்றாள். ரிஷிக்கு அவள் எண்ணம் புரிந்தது.

"பெண்ணே நில்! எந்தத் தவறான முடிவும் எடுத்து விடாதே"

"என் அருகில் வராதே. இல்லையென்றால் குதித்து விடுவேன்"

"நான் சொல்வதைக் கேள். தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவுமே இல்லை. கீழே இறங்கு"

"உன் அறிவுரை எனக்குத் தேவையில்லை" என்று கூறி அந்தப் பெண் குதிக்க எத்தனித்தாள்.

அப்போது ரிஷி வேகமாக ஓடிச் சென்று தானும் சுவரின் மீது நின்றான்.

"பெண்ணே நீ குதித்தால் நானும் குதித்து விடுவேன். என்னைக் கொன்ற பாவம் உன்னைச் சேரும்"

"ஐ டோன்ட் கேர்" என்று கூறி அந்தப் பெண் மீண்டும் குதிக்க நினைத்து மேலிருந்து கீழே பார்த்தாள்.

"இவ்வளவு மேலே இருந்து குதித்தால் தலை சிதறிவிடும். உடம்பிலிருந்து ஒரு எலும்பு கூட மிஞ்சாது. நீ சாவது பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் உன் சாவு நல்ல சாவாக இருக்க வேண்டும் என்று தான் கவலைப்படுகிறேன்"

அந்தப் பெண் மீண்டும் கீழே பார்த்தாள். தலை சுற்றுவது போல இருந்தது.

"யூ இடியட்" என்று கூறி கீழே இறங்கினாள். ரிஷியும் கீழே இறங்கினான்.

அந்தப் பெண் ரிஷியின் அருகே வந்து காலரைப் பிடித்தாள். "ஏன் இவ்வாறு செய்து என் மனதை மாற்றினாய். நான் உயிர் வாழ்ந்து சாதிக்கப் போவதென்ன" என்று அழுதாள்.

சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணின் அழுகை நின்றது. அருகிலிருந்த சேரில் அமர்ந்தனர்.

இருவரும் மெளனமாக சிறிது நேரமிருந்தனர். ரிஷி எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"வழக்கம் போல லவ் பெய்லியர் தான். நாங்கள் இருவரும் டி.ஆர்.டி ஒ வில் வேலை செய்து வந்தோம் இரண்டு வருடம் உயிருக்குயிராக காதலித்தோம். கடந்த ஒரு வாரமாக அவன் காணவில்லை. தான் ஆஸ்திரேலியா செல்வதாகவும் தன்னை மறந்துவிடும்படியாகவும் ஒரு லெட்டர் அனுப்பி விட்டு சென்று விட்டான். அவன் நாசமாகப் போக வேண்டும்"

"பெயர் என்ன"

"காவியா"

"உன் பெயர் இல்லை. உன் காதலன் பெயர்"

"அவன் பெயர் உனக்கெதற்கு?"

"அவனைப் பார்த்தால், தேவதை போல இருக்கும் இந்தப் பெண்ணை விட்டு என்னத்தைப் புடுங்குவதற்கு ஆஸ்திரேலியா செல்கிறாய் என்று கேட்பதற்காகத்தான்?"

காவ்யா விழுந்து விழுந்து சிரித்தாள்.

"விஜய். அவன் பெயர் விஜய்"

ரிஷிக்கு பெயரைக் கேட்டவுடன் தூக்கி வாரிப்போட்டது. உடனே தன் செல்போனிலிருக்கும் போட்டோவைக் காண்பித்தான்.

காவியாவுக்கு அதிர்ச்சியுடன் "விஜய் போட்டோ எப்படி உன்னிடம்?"
                                           CHAPTER 4
சோழர் காலம்  


நமக்குப் பழக்கமான அதே மண்டபத்தில் இரவிதாசன் விஜய்யுடன் இரகசியக் குரலில் பேசிக் கொண்டிருந்தான்.

"விஜயா தவறு எதுவும் நடக்காது அல்லவா. உன் திட்டத்தில் ஒரு பிழையும் இல்லாமல் பார்த்துக் கொள்."

"கவலைப்படாதீர்கள் இரவிதாசரே, நாம் நினைத்தபடி நாளை சோழர் குலத்துப் புழு பூச்சி கூட இல்லாமல் போய் விடும்."

"அந்த நாளுக்காகத் தான் நானும் காத்திருந்தேன். என்னால் சாதிக்க முடியாதது உன்னால் நாளை நிறைவேறும் என்பது நினைத்தால் அளவிடாத மகிழ்ச்சியாக இருக்கிறது. பிறகு சந்திரமல்லி எப்படி இருக்கிறாள். "

"கைக்கு அடக்கமான நாய் குட்டி போல இருக்கிறாள்"

அதைக் கேட்டு இரவிதாசன் இடி இடியென சிரித்தான்.

விஜய் எழுந்து கிளம்பும் எண்ணத்துடன் "சந்திரமல்லியைப் பார்க்க போக வேண்டும். நம் திட்டப்படி அவளை மயக்கமுறச் செய்து இரகசியப்பாதை வழியாக வந்து இந்த வெடி ஆயுதத்தை வைப்பேன். அது நாளை காலை கும்பாபிஷேகம் நடக்கும் போது சரியாக வெடிக்கும்.பிறகு நடக்கும் வேடிக்கையை நீரே பார்ப்பீர்"

"சரி போய் வா. உன்னைக் கோவிலில் சந்திக்கிறேன்."

"இல்லை சென்ற முறை போல நீர் கோவிலில் என்னை சந்திக்க முடியாது. கோவிலைச் சுற்றி பலத்த காவல்.அதனால் ஆயுதத்தை வைத்து விட்டு மீண்டும் சந்திரமல்லி அரண்மனைக்கே செல்வேன். தங்களை மறுபடியும் இதே இடத்தில் சந்திக்கிறேன்"

விஜய் இரவிதாசனிடம் விடை பெற்று சந்திரமல்லியின் அரண்மனையை அடைந்தான்.

சந்திரமல்லியின் முகம் சோகத்தில் இருப்பதைப் பார்த்து "ஆருயிரே, இப்போதெல்லாம் நீ என்னுடம் சரியாகப் பேசுவதில்லை.என் மீது உனக்கு இருக்கும் பிரியம் குறைந்து வருவது போல தோன்றுகிறது."

"விஜயரே நாம் பெரும் தவறு செய்கிறோம். எங்கள் குலத்தில் திருமணத்திற்கு முன் பெண் ஒரு ஆடவனிடம் ஒழுங்கற்ற முறையில் நடந்த கொள்ளக் கூடாது. இதுவே நாம் சந்திப்பது கடைசி முறையாக இருக்கட்டும்"

"பெண்ணே நீ அரசி என்ற திமிரைக் காட்டுகிறாய். நம் உறவு பற்றிய இரகசியத்தை  நாடு முழுவதும் வெளிப்படுத்தினால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்"

"அது மட்டும் நடந்தால் நான் உயிருடன் இருக்க மாட்டேன். ஐயா தங்களைக் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். இங்கிருந்து சென்று விடுங்கள். கையெடுத்துக் கேட்கிறேன். இனிமேல் என்னை சந்திக்க முயலாதீர்கள்"

"இதற்கு மேல் உன்னுடன் பேசிப் பயனில்லை" என்று கூறி விஜய் அவளைப் பலவந்தமாகப் பிடித்து முகத்தில் அந்த வினோதமான நறுமணம் கொண்ட மருந்தை அடித்தான். சந்திரமல்லி மெல்ல மயக்கத்தில் ஆழ்ந்தாள்.

விஜய் அவள் மயக்கமுற்றதை உறுதி செய்துக் கொண்டு அவளைப் பஞ்சணையில் படுக்க வைத்தான். பிறகு வேகமாக இரகசியப் பாதை வழியில் சென்றான்.

சிறிது நேரத்தில் அந்தப் பாதையின் முடிவுக்கு வந்ததும் டைம் பாமை எடுத்து அடுத்த நாள் காலை வெடிக்கும்படி செய்தான். பிறகு சுரங்கத்தில் ஏதோ ஒரு பொருளைத் தேடினான். ஒரு கல்லை நகர்த்தி ஓட்டையில் கையை விட்டு ஒரு பொருளை வெளியே எடுத்தான்.

எல்லாம் சரியாக இருப்பதை உறுதி செய்துக் கொண்டு வந்த வழியே திரும்பிச் சென்றான்.

சந்திரமல்லியின் அறைக்கு வந்ததும் அவள் இன்னும் நன்றாக உறக்கத்திலிருப்பதை திருப்தியுடன் பார்த்துக் கொண்டு அரண்மனையை விட்டு வேகமாக வெளியேறினான்.

                            ---------********--------------

பாலனுடன் இளஞ்செழியன் மிகவும் நெருக்கமாகி விட்டான். இருவரும் சுவரின் அருகே நின்று தினமும் உறவாடுவது வழக்கம்.

"நாளை சிவன் கோவிலுக்கு  கும்பாபிஷேகம் என்று காவலர்கள் பேசியது கேட்டீர்களா. இதன் பிறகு அந்த ராஜராஜனைக் கையிலேயே பிடிக்க முடியாது. ஏதோ பெரிய சாதனை புரிந்தது போல இறுமாப்புடன் அலைவான்"

"நாளை கும்பாபிஷேகமா? எனக்கு ஒரு உதவி செய்வாயா? எனக்கு எப்படியாவது கும்பாபிஷேகம் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ரகசியப்பாதை மூலம் நாம் தப்பிக்க உதவி செய்வாயா?"

"என்னவோ ராஜராஜன் கண்டிப்பாக விடுதலை செய்வான் என்று கூறினீரே?"

"அதைப் பற்றி எதற்கு இப்போது பேச வேண்டும். எனக்கு உதவி செய்தால் உனக்கு கோடி புண்ணியம் உண்டு?"

"கும்பாபிஷேகம் பார்த்து விட்டு என்ன செய்வீர்?"

"சக்கரவர்த்தியை நேரில் சந்தித்து நியாயம் கேட்பேன்?"

"நியாயம் கிடைத்தது போலத்தான். உன் மீது கொண்ட நட்பின் காரணமாக உதவுகிறேன். ஆனால் நான் உன்னுடன் வர மாட்டேன். என் தோழர்களைச் சந்திக்க சென்று விடுவேன். என்னைப் பற்றி யாரிடமும் மூச்சு விடக் கூடாது"

"கண்டிப்பாக"

"இரவு காவலர்கள் உணவருந்திய பின் நாம் தப்பிச் சென்று விடுவோம்"

"கதவை எப்படி திறப்பாய்"

அடுத்த அறையிலிருந்து சாவியின் சத்தம் கேட்டது.

"சாவி எப்படி உன்னிடம்"

"என் சகாக்கள் பல முறை இந்த சிறையில் இருந்திருக்கின்றனர். அதில் ஒருவன் காவலனுக்கு கையூட்டு கொடுத்து சாவிக்கு ஒரு நகல் செய்து வாங்கிக் கொண்டான்."

இரவு ஆனதும் இருவரும் கதவைத் திறந்து அடுத்த அறைக்குச் சென்றனர்.அங்கிருந்த ஒரு கல்லைப் பெரும் முயற்சி செய்து நகர்த்தினர். சுரங்கப்பாதை துவாரம் தெரிய. இருவரும் உள்ளே நுழைந்துச் சென்றனர். பாதை ஓரிடத்தில் முடிவுக்கு வந்தது. மேலே இருந்த கல்லை நகர்த்தி இளஞ்செழியன் முதலில் வெளியேறினான்.

பாலன் அடுத்து வெளியேற நினைத்தபோது அவர் கண்ணில் ஒரு வினோதமான பொருள் கண்ணில் பட்டது. அது விஜய் வைத்த டைம் பாம் தான்.

பாலனின் இருதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. "இது எப்படி இங்கே. இந்த காலத்தில் இது போன்ற ஆயதமே இல்லையே. யார் வைத்திருக்கக் கூடும்." அப்போது அவருக்கு விஜய்யின் ஞாபகம் வந்தது. அவன் தான் செய்திருக்க வேண்டும். யோசிக்க நேரமில்லை. உடனே செயலில் இறங்க வேண்டும்.

"பாலரே என்ன விளையாட்டு. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு ஆபத்து. உடனே மேலே வாருங்கள்" என்று மேலிருந்து இளஞ்செழியன் அவசரப்படுத்தினேன்.

"இளவரசே தங்களிடம் எதாவது சிறிய கத்தி இருக்கிறதா?"

"ஏன்?"

"எனக்கு கல் வழுக்குகிறது. கத்தியை வைத்து சிறிது பெயர்த்தால் வசதியாக இருக்கும்"

இளஞ்செழியன் ஒரு குறுவாளைக் கீழே எறிந்தான்.

பாலனுக்கு ராணுவத்தில் பயின்றது இப்போது உதவிக்கு வந்தது. ஒரு சிவப்பு வயரும் நீல வயரும் இணைந்திருப்பதைப் பார்த்தார். இறைவன் மீது பாரத்தை போட்டு விட்டு அந்த இணைப்பைத் துண்டித்தார். பாம் செயலிழந்துப் போனது.

பாலனுக்கு போன உயிர் இப்போது தான் திரும்ப வந்தது.

"ஐயா நீர் வராவிட்டால் நான் தனியே என் வழியைப் பார்த்து போக நேரிடும்."

"இதோ வருகிறேன் இளவரசே" என்று கூறி விடு விடுவென பாலன் மேலே ஏறி சுரங்கப்பாதையை விட்டு வெளியேறினார்.
                                 ---------**********-------------

காலைப் பொழுது விடிந்து தஞ்சை நகரமே திருவிழாக் கோலமாக இருந்தது.

சக்கரவர்த்தியின் அரண்மனையில் அரசரும், மனைவியரும், பிரம்மராயரும் மற்றும் வந்தியதேவர் குழுமி கோவிலுக்கு செல்ல கிளம்பி ஆயுத்தமாக இருந்தனர்.

திடீரென்று சக்கரவர்த்திக்கு நினைவு வர "சந்திரமல்லி எங்கே" என்று கேட்க அனைவரும் தேட ஆரம்பித்தனர்.

வானதி தேவியார் "அவள் இன்னும் தன் மாளிகையிலிருந்து வரவே இல்லை. சேடியரைக் கூட அனுப்பிப் பார்த்தேன். இன்னும் அவள் ஆழ்ந்த உறக்கத்திலிருப்பதாகக் கூறுகிறார்கள். நான் போய் பார்த்து வரலாமென்று இருந்தேன். தாங்களே கேட்டு விட்டீர்கள்"

சக்கரவர்த்தி கோபத்துடன் "எனக்கென்று தறுதலையாக ஒன்று பிறந்திருக்கிறது. நீ போக வேண்டாம் வானதி. என்னவென்று நானே சென்று பார்த்து வருகிறேன்"

அப்போது வந்தியதேவர் குறுக்கிட்டு "ஐயா நீங்கள் போனால் கோவில் வேலை தடைபடும். நீங்கள் கோவிலுக்குச் செல்லுங்கள்.நான் சந்திரமல்லியை அழைத்து வருகிறேன்”

அதுவும் நல்ல யோசனை என்று அரசர் சொல்லவே வந்தியதேவர் விரைந்து சந்திரமல்லியின் மாளிகையை நோக்கிச் சென்றார். சேடியர்கள் தேவி இன்னும் உறக்கத்திருலிருப்பதாகக் கூறினார்கள்.

அவள் படுக்கை அறைக்குச் சென்று பார்த்த போது அங்கு சந்திரமல்லி காணவில்லை.

அரசரிடம் செய்தியைக் கூறலாமா என்று யோசித்தார். வேண்டாம் கும்பாபிஷேகம் நடக்கும் சமயம் அரசர் கலவரப்படுவார். சந்திரமல்லியைத் தேடும் பொறுப்பு தன்னுடையது என்பதை வந்திய தேவர் உணர்ந்தார். கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாமல் போகிறதே என்று வலித்தது. ஆனால் இந்நேரம் தன் கடமை என்ன என்பது அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது.

வேகமாக அரண்மனையை விட்டு வெளியேறினார். அங்கிருந்த சேடியிடம் இளவரசி உடல்நலக்குறைவாக இருப்பதால் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள இயலாது என்பதை அரசரிடம் தெரிவிக்கக் கூறினார். தானும் மருத்துவருக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருப்பதால் விழாவில் கலந்து கொள்ள இயலாது என்பதையும் தெரிவிக்கக் கூறினார்.

சேடி சென்றவுடன் குதிரையில் ஏறினார். அப்போது ஒரு காவல் வீரன் வேகமாக தேவரிடம் வந்தான்.

"ஐயா சிறையிருந்து பாண்டிய இளவரசனும் அவனுடன் இன்னொரு கைதியும் தப்பிச் சென்று விட்டனர்"

"அரசருக்கு இது தெரியுமா?"

"அவரிடம் சொல்ல யாரும் தைரியம் இல்லை"

"நல்லது. அவரிடம் இதைப் பற்றிக் கூற வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்."

ஒரு பெரிய சதி வலை சோழ சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராகப் பின்னப்படுவது வந்திய தேவருக்குப் புரிந்தது. இதை முறியடிப்பது தன் கடமை.

தன்னுடன் நான்கைந்து வீரர்களைச் சேர்த்துக் கொண்டு குதிரையில் வேகமாக வந்திய தேவர் பறந்து சென்றார்.
                      ------------------**********-----------------
அதே பழைய மண்டபத்தில் விஜய் இரவிதாசனுடன் அமர்ந்திருந்தான். அங்கிருந்து பார்க்கும் போது கோவிலின் கோபுரம் தெளிவாகத் தெரிந்தது.

இரவிதாசன் பரபரப்புடன் "எப்போது காரியம் நடக்கும் " என்று கேட்டுக் கொண்டே இருந்தான்.

விஜய்யோ அமைதியாகச் சலனமின்றி இருந்தான்."பொறுமையாக இருங்கள் இரவிதாசரே. இன்னும் சில நிமிடங்களில் வான வேடிக்கையைப் பார்ப்பீர்கள்"

ஆனால் நேரம் தான் கரைந்ததே ஒழிய கோவில் அதே நிலையில் தான் இருந்தது. விஜய்யின் முகம் இருண்டுப் போக ஆரம்பித்தது.

இரவிதாசனுக்கும் சந்தேகம் வர ஆரம்பித்தது."என்ன நடக்கிறது என்று விளக்குவாயா. என்னிடம் உன் பொய் புரட்டு வேலைகளைக் காட்டதே. நான் மிகவும் பொல்லாதவன்"

விஜய் தடுமாறிய குரலுடன் "ஏதோ தவறு நடந்திருக்கிறது இரவிதாசரே. இந்நேரத்தில் கண்டிப்பாக கோவில் வெடித்து சிதறி இருக்க வேண்டும்"

அப்போது மண்டபத்தைச் சுற்றி குதிரைகள் வரும் சத்தம் கேட்டது. வந்தியதேவர் தலைமையில் வீரர்கள் மண்டபத்தை நோக்கி வந்தனர்.

விஜய் பரபரப்புடன் எழுந்து ஓட ஆரம்பித்தான். இரவிதாசனும் குழப்பத்துடன் அவனைத் தொடர்ந்தான்.

வீரர்கள் அவர்களை நெருங்க ஆரம்பித்தனர். ரவிதாசன் முன்னே வந்த வீரனைக் குப்புறத்தள்ளி குதிரையில் ஏறினான். விஜய்யும் அதைப் பின்பற்றி இன்னொரு குதிரையில் ஏறினான். இருவரும் வேகமாக அவ்விடத்தை விட்டுத் தப்பினர்.

நிகழ்காலம்

"காவ்யா எனக்கு உன் உதவி தேவை. உன் மூலமாகத் தான் என் தந்தை எங்கே என்று நான் கண்டுபிடிக்க முடியும்"

ரிஷி அனைத்து விபரங்களையும் காவ்யாவிடம் கூறினான்.

"விஜய்யின் நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றம் தெரிந்ததா?"

"அப்படி எல்லாம் ஒன்றுமில்லை."

"டி.ஆர்.டி ஒ வில் அவனுக்கென்ன வேலை"

"அவன் ஒரு சைண்டிஸ்ட். அவன் என்ன பிராஜெக்டில் வேலை செய்கிறான் என்பது பெரிய ரகசியம். மிக முக்கியமான பிராஜெக்டில் வேலை செய்தால் டி.ஆர்.டி.ஒ வில் அதை வெளிப்படுத்தாமல் ரகசியமாக வைத்திருப்பார்கள்."

"விஜய்யுடன் வேலை செய்பவர்களில் நெருக்கமானவர் யார்?"

"அது பற்றி எனக்குத் தெரியாது?"

"நாளை உன் ஆபீஸ் சென்று விசாரிக்க உதவி செய்வாயா?"

"கஷ்டம். வெளியாட்கள் யாரையும் உள்ளே விட மாட்டார்கள்."

"வேறு வழியே இல்லையா?"

காவ்யா சிறிது நேரம் யோசித்தாள். "எங்கள் ஆபீசில் வருடத்திற்கு ஒரு நாள் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து வந்து மற்ற கலீக்சுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று ஒரு ரூல்ஸ் உள்ளது. அதை பயன்படுத்தலாம்"

"என்னை யார் என்று கூறி அழைத்துச் செல்வாய்?"

"என்ன சொல்லலாம். அண்ணா என்று சொல்லவா?"

"அண்ணனா? அதெல்லாம் முடியாது. வுட்பி என்று கூறி அழைத்துப் போ"

"வாட் நீ என் வுட்பியா? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் உன் மனதில்?"

"சாரி கோவித்துக் கொள்ளாதே. அண்ணா என்றால் ஒரு மாதிரியாக இருக்கிறது. நம்மைப் பார்த்தால் யாரும் நம்பவும் மாட்டார்கள். நான் உன் உயிரையே காப்பாற்றி இருக்கிறேன். இந்த ஒரு பொய் சொல்ல மாட்டாயா?"

"இதற்கு நீ என்னை சாகடித்தே இருக்கலாம். சரி சொல்லித் தொலைகிறேன்"

அடுத்த நாள் இருவரும் ஆபீஸ் வந்தனர். காவ்யா ரிஷியை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினாள்.

காவ்யாவின் தோழி ஸ்னேஹா ரகசியமாக அவளைக் கிள்ளி "யாருடி பையன். ஸ்மார்ட்டா இருக்கான்."

"வந்து அண்ணன், இல்லை வுட்பி?"

"வுட்பியா? அப்போ விஜய்?"

"கடன்காரன். அவன் தான் போய் தொலைஞ்சிட்டானே?"

"ம். ரொம்ப தான் பாஸ்ட் நீ. நேத்து வரைக்கும் விஜய் விஜய்னு அழுதுகிட்டு இருந்தே. ஒரே நாள்லே இன்னொரு பாய் பிரண்டு பிடிச்சு வுட்பினு வேற சொல்றே. கலி முத்திப் போச்சு."

"ஏ. போய் உன் வேலையைப் பாருடி. அடுத்தவங்க விஷயத்திலே மூக்கை நுழைக்கிறதுக்குனே ஒரு கூட்டம் அலையுது."

ரிஷி காவ்யாவிடம் வந்து "யாரிடம் விசாரித்தால் உண்மை தெரியும்?"

"இப்போது எதுவும் வேண்டாம். லஞ்ச் டைமில் எல்லோரும் கேண்டீன் வருவார்கள். அங்கு விசாரிக்கலாம்."

கேண்டீனில் ரிஷி விஜய்யைப் பற்றி விசாரித்தான். அவனுக்கு நெருக்கமானவர்கள் அவன் சில நாட்களாக காணவில்லை என்று கூறினர். அவன் ஆஸ்திரலியா போகும்படியான திட்டம் ஒன்றுமில்லை என்றும் கூறினர்.

வெறுப்புடன் இருவரும் மீல்ஸ் ஆர்டர் செய்து ஒரு டேபிளில் அமர்ந்தனர்.

பக்கத்து டேபிளில் உட்கார்ந்திருந்த ஒரு சீன மனிதன் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"டி. ஆர்.டி.ஓவில் சைனீஸ் எல்லாம் வேலை பார்க்கிறார்களா?"

"சப்பை மூக்குனா சைனீஸ் தானா? ஏன் மேகாலயா, அருணாச்சல் அப்படின்னு இருக்கக் கூடாதா"

அப்போது அந்த மனிதன் அவர்கள் டேபிளுக்கு வந்து காலியான சேரில் அமர்ந்தான்.

"மன்னிக்கவும் இப்படி வந்து உட்கார்வது அநாகரீகம்தான். ஆனால் நீங்கள் விஜய் பற்றி விசாரிப்பது தெரிந்தது. விஜய்க்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்."

"அவன் இவளோட பாய் பிரண்ட். மேலும் என் அப்பாவைத் தேடி நான் அமெரிக்காவில் இருந்து வந்து இருக்கிறேன். அவர் காணவில்லை. கடைசியாக அவர் விஜய்யுடன் தான் இருந்திருக்கிறார்."

"நீ என்னுடன் தனியாக வருகிறாயா. உன் கேள்விகளுக்கு விடை என்னிடம் இருக்கிறது."

காவ்யா தயக்கத்துடன் வேண்டாம் என்று ரிஷியின் கையைப் பிடிக்க "பரவாயில்லை காவ்யா. ஒன்னும் பயப்படாதே. நான் இவருடன் போய் வருகிறேன். வேலை முடிந்தவுடன் நீ பத்திரமாக வீடு போ"

காவ்யாவிடம் விடை பெற்றுக் கொண்டு ரிஷி அந்த மனிதனுடம் காரில் ஏறிச் சென்றான்

"என் பெயர் மைக் லீ. நான் அருணாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவன். டி.ஆர்.டி.ஓவில் பத்து வருடமாக வேலை செய்கிறேன்"

"விஜய் பற்றி உங்களுக்குத் தெரியுமா?"

"விஜய்யும் நானும் ஒரே பிராஜெக்டில் தான் வேலை செய்தோம்"

"என்ன பிராஜெக்ட். விஜய் இப்போது எங்கே"

"எல்லா விபரங்களும் என் வீடு வந்தவுடன் சொல்கிறேன். பொறுமையாக இரு"

கார் ஒரு பங்களாவை வந்தடைந்தது. இருவரும் வீட்டிற்குள்ளே வந்தனர்.

மைக் ரிஷியிடம் அவனைப் பற்றி தெரிந்துகொண்டான்.

"உன் அப்பா விஜய்யுடன் தான் இருக்க வேண்டும் என்று நீ நம்புவது லாஜிக்கலாக இல்லை. ஒரு காம்கார்டர் ரெகார்டிங் வைத்துக் கொண்டு எப்படி நீ இவ்வாறு யோசிக்கலாம்"

"நான் அவர் மகன். இதில் லாஜிக் எல்லாம் பார்க்க வேண்டியது இல்லை. என் உள்ளுணர்வு சொல்கிறது"

மைக் அவனை ஆழமாகப் பார்த்தான்.

"நீ இன்னும் விஜய் பற்றி ஒரு விபரமும் கூறவில்லையே. எனக்கு நீ உதவி செய்வாய் என்ற நம்பிக்கையில் தான் இவ்வளவு தூரம் வந்தேன்"

மைக் தன் பையிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்தான். "உன் தேவைக்கு அதிகமான விஷயங்கள் நீ தெரிந்து கொண்டதால் நீ மேலுலகம் செல்ல வேண்டும். அது தான் நான் உனக்கு செய்யும் உதவி"

மைக் ரிஷியை நோக்கி சுட ஆரம்பித்தான். ரிஷி வேகமாக விலகி பக்கத்திலிருந்த ரூமில் ஒளிந்து கதவை சாத்தினான்.

மைக் கதவை நோக்கி சுட குண்டுகள் துளைத்து அறைக்குள் வந்தது.

"எவ்வளவு நேரம் உள்ளேயே இருப்பாய் என்று பார்க்கிறேன். நான் காத்திருக்க தயார்."

ரிஷி மெல்ல கதவின் பூட்டை விலக்கி, லேசாகத் திறந்து பின்னால் ஒளிந்து நின்றான்

மைக் துப்பாக்கியுடன் மெல்ல உள்ளே வந்தான்.

ரிஷி கையில் உள்ள நைட் லாம்பை வைத்து மைக் மண்டையில் ஓங்கி ஒரு போடு போட அவன் நினைவை இழந்தான். ரிஷி மைக் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டான். மைக் உயிர் பிரிந்தது.

அப்போது அறையில் செல்போன் ஒலித்தது.

போனை ஆன் செய்து ரிஷி "ஹலோ" என்றான்.

"மைக்! விஜய் விஷயம் என்ன ஆயிற்று. ஒரு செய்தியும் வரவில்லை"  எதிர் தரப்பிலிருந்து ஒரு சீனக் குரல் கேட்டது.

ரிஷி பேசாமல் அமைதியாக இருந்தான்.

"என்ன பேசாமல் இருக்கிறாய். சுஷீலாவின் மகனை நாம் கொன்ற பின் ஒரு முன்னேற்றமும் இல்லை. அந்த விஜய் நம்பிக்கைக்குரியவன் என்று நீ சொன்னதால் நான் சீன உளவுத் துறை தலைமை அதிகாரியிடம் பேசி அனுமதி வாங்கினேன். விஜய் காசை வாங்கிக் கொண்டு நம்மை ஏமாற்றி விட்டானா? டைம் மெஷின் ரகசியம் நம் கைக்குக் கிடைப்பது எப்போது? தஞ்சாவூர் கோவில் அழிவது எப்போது?"

ரிஷி உடனே போனைக் கீழே வைத்து வேகமாக அவ்விடத்தை விட்டு வெளியேறினான்.
  CHAPTER 5
சோழர் காலம்
 
சோழர் படை வீரர்களிடமிருந்து தப்பிய ரவிதாசனும் விஜய்யும் புரவிகளில் சென்று கொண்டிருந்தனர். விஜய்யின் கைகள் கட்டப்பட்டு புரவியில் குப்புறபடுத்தவாறு அழைத்துச் செல்லப்பட்டான்.

ஒரு சிறிய ஏரி வர நீர் அருந்த குதிரையை நிறுத்தினர்.

"நீர் அருந்தக்கூட என் கைகட்டை அவிழ்க்க மாட்டாயா?"

"நீ செய்த ஏமாற்று வேலைக்குப் பிறகு உன்னை எப்படி நம்புவது?"

"நான் நிச்சயமாக ஏமாற்றவில்லை. தவறு எங்கோ நடந்திருக்கிறது. எனக்கே மர்மமாக இருக்கிறது. இன்னும் ஒரு வாய்ப்பு கொடு. நான் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கிறேன்."

"போன முறை ஆயுதம் என்றாய், வெடிக்கும் என்றெல்லாம் கதை விட்டாய். இன்னொரு முறை வாய்ப்பு கொடுத்தால் இன்னும் பெரிதாக ஏதாவது திட்டம் போடுவாயோ?"

"அந்த ஆயுதம் கண்டிப்பாக வெடித்திருக்க வேண்டும். அதை செயலிழக்கச் செய்யும் ஆற்றல் இந்த பாரதத்திலேயே யாருக்கும் கிடையாது. எப்படி நடந்தது என்று எனக்கு இன்னும் புரியவில்லை"

அப்போது திடீரென்று ஏதோ தோன்ற "இப்போது எனக்கு எல்லாம் தெளிவாகி விட்டது. இதை பாலன் தான் செய்திருக்க வேண்டும். அவருடன் அறிமுகமான அன்று போரில் வெடி ஆயுதங்களை செயலிழக்கச் செய்வதில் ஆற்றல் தனக்கு உண்டு என்று கூறினார்."

"யாரது பாலன்"

"பாலனுடன் தான் தஞ்சை பிரயாணம் செய்து வந்தேன். விரிவாக சொல்ல நேரமில்லை. நாம் உடனடியாக பாலனைக் கண்டு பிடிக்க வேண்டும். இல்லை என்றால் சோழர்களுக்கு நம் திட்டம் தெரிந்து விடும்"

"இப்போது திரும்ப நாம் தஞ்சை போய் பாலனைத் தேட முடியாது. சிறிது நாட்கள் நாம் ஒளிந்திருக்க வேண்டும். நம்மை சந்திக்க பாண்டிய மன்னரும் வந்து விடுவார். அவருடன் கலந்தாலோசித்து அடுத்த திட்டத்தைத்   தீட்ட வேண்டும்"

"பாண்டிய மன்னரா அது யார்?"

"இளஞ்செழியன்"
                            ------------************-----------------

சுரங்கப்பாதை வழியாகத் தப்பிய இளஞ்செழியன், பாலனிடம் விடை பெற்றுக் கொண்டு மதுரை நோக்கிச் சென்றான்.

பாலன் இரவு முழுவதும் கோவிலருகே தங்கியிருந்தார். அடுத்த நாள் கோவிலுக்கு மன்னர் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்ததைக் கண் குளிர கண்டார்.

பிறகு விஜய்யைத் தேடிக் கண்டுபிடிப்பது தனது அடுத்தக் கடமை என்பதை உணர்ந்து தான் முதன் முதலில் தங்கிய மண்டபத்தை நோக்கிச் சென்றார்.

மண்டபம் வந்ததும் சுற்றித் தேட அங்கிருந்த மனிதனைக் கண்டதும் வியப்படைந்தார்.

இளஞ்செழியன் அந்த மண்டபத்தில் யாரையோ எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தான்.

"இளவரசே தாங்கள் இன்னும் மதுரை செல்லவில்லையா?"

"என் நண்பனுக்காக இங்கு காத்துக் கொண்டிருக்கிறேன்.  அவன் இன்னும் காணவில்லை. இருப்பினும் தங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியே"

"தங்கள் நண்பர் யார்?"

"ரவிதாசன்?"

அந்தப் பெயரைக் கேட்டதும் பாலன் திடுக்கிட்டார்."

"ரவிதாசனா? அவர் இன்னும் இறக்கவில்லையா"

"ரவிதாசனுக்கு மரணம் என்பதே கிடையாது. ஆபத்துதவிகளில் எஞ்சியிருப்பது இப்போது ரவிதாசன் மட்டுமே. எங்களை வழி நடத்தும் மதியூகியும் அவரே"

"ரவிதாசனை நான் சந்திக்க வேண்டும் இளவரசே"

"ஆம் நாம் மதுரை நோக்கி செல்ல வேண்டும். ரவிதாசர் இங்கு வராமல் நேராக அங்கு சென்றிருப்பார் என்று நினைக்கிறேன்"

இருவரும் மண்டபத்தை விட்டுக் கிளம்பினர். தான் விஜய்யைத் தேடி வந்த இடத்திற்கே ரவிதாசனைத் தேடி இளவரசனும் வந்தது பாலனுக்கு நெருடியது. விஜய்க்கும் ரவிதாசனுக்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும் என்று உள்ளுணர்வு சொல்லியது.
நிகழ்காலம்

"ஏதோ பெரிய அளவில் சதி நடப்பது தெரியுது காவ்யா. இதிலே எப்படியோ எங்க அப்பா மாட்டியிருக்கிறார்"

ரிஷி சொல்வதைக் கவலையுடன் கேட்டாள் காவ்யா.

"விஜய் இதிலே எப்படி சம்பந்தப்பட்டிருக்கான். அந்த சைனாக்காரன் மைக் யார் எனக்கு ஒண்ணுமே புரியலை ரிஷி."

"மைக் வீட்டில் நான் இருந்த போது வந்த போன்கால் மூலம் மேலோட்டமா கொஞ்சம் தெரியுது. சைனா உளவுத்துறை நம் கிட்டே இருந்து ஏதோ ரகசியத்தைக் கவர நினைக்கிறாங்க. அனேகமா அது டைம் மெஷின் சம்பந்தமா இருக்கும்னு நினைக்கிறேன். விஜய் அவர்களுக்குத் துணையாக இருந்திருக்கணும்.  டி.ஆர்.டிஒவில் டைம் மெஷின் பிராஜெக்ட் எதுவும் இயங்கிக் கொண்டிருக்கிறதா. "

"இருக்கலாம். இது மாதிரி பிராஜெக்ட் எல்லாம் சீக்ரெட்டாக வைத்திருப்பார்கள். உன் அப்பா எப்படி இதில் சிக்கியிருப்பார்."

"எங்க அப்பா சோழர் கால சரித்திரத்தில் எக்ஸ்பர்ட். போனில் பேசிய மனிதன் தஞ்சை கோவில் அழிவது எப்போது என்று கேட்டான். அநேகமாக அவர்கள் டைம் மெஷின் மூலம் சோழர் காலம் செல்ல திட்டமிட்டிருக்க வேண்டும் அதற்கு என் தந்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்."

"சுஷீலாவின் மகனைக் கொன்றது பற்றி போனில் கேட்டதாக சொன்னாயே. யாரது சுஷீலா. அவரது மகனை ஏன் கொன்றார்கள்."

சிறிது நேரம் யோசித்த ரிஷி "பாரதப் பிரதமர் சுஷீலாவின் மகன் சமீபத்தில் விபத்தில் இறந்தார் அல்லவா?  அது விபத்து இல்லை. பாவிகள் இவர்கள் தான் கொன்றிருக்க வேண்டும்"

"ரிஷி எனக்கென்னவோ பயமாக இருக்கிறது"

"காவ்யா. இது பயப்படும் நேரமில்லை. வேகமாக செயல்படும் நேரம்.  டி.ஆர்.டி.ஓவில் டைம் மெஷின் பிராஜெக்ட் ஏதும் உண்டா என்று நீ விசாரி. அதன் பிறகு அடுத்து நாம் என்ன செய்வது என்று யோசிப்போம்."

"இது போன்ற பிராஜெக்டுகள் எல்லாம் வேறு ஒரு கட்டிடத்தில் நடைபெறும். அங்கு யாரையும் உள்ளே விட மாட்டார்கள்"

"இந்த பேட்ஜ் வைத்து உள்ளே போகலாம் அல்லவா"

"இது எப்படி உன்னிடம்"

"மைக் வீட்டில் இருந்தது. எதற்கும் உதவும் என்று எடுத்து வந்தேன்"

"இது போன்று ஒன்று விஜய்யிடமும் இருக்க வேண்டும். அவன் வீட்டை உடைத்து உள்ளே போனால் தேடி எடுத்து விடலாம்"

"நான் அதைப் பார்த்துக் கொள்கிறேன் காவ்யா. இன்றிரவு அவன் வீட்டுக்குச் சென்று பேட்ஜைத் தேடி எடுத்து வருவது என் பொறுப்பு.  நாளை நாம் டி. ஆர்.டி.ஒ வில் சந்திக்கலாம்."

அடுத்த நாள் இருவரும் டி.ஆர்.டி.ஒ கட்டிடத்துக்கு முன் சந்தித்தனர்.

"உள்ளே போனதும் நீ என்ன செய்யப் போகிறாய்"

"உள்ளே டைம் மெஷின் இருந்தால் நான் சோழர் காலம் செல்லப் போகிறேன். தஞ்சைக் கோவில் கட்டிய கால கட்டத்திற்கு செல்லப் போகிறேன். அநேகமாக என் தந்தையும் விஜய்யும் அந்த காலத்திற்குத் தான் சென்றிருக்க வேண்டும்"

இருவரும் கட்டிடத்திற்குள்ளே நுழைந்தனர். சிறிது தேடிய பின் ஒரு பெரிய லேப் அறை முன் வந்தனர்.

வெளியே இரண்டு செக்யூரிட்டி நின்று கதை பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களைக் கண்டதும் தடுத்து நிறுத்தி "யாரும் உள்ளே போக முடியாது"

"உள்ளே ரொம்ப முக்கியமான வேலை நடக்குது அண்ணே. இதுக்கு முன்னாடி வேலை பாத்தவங்க இரண்டு பேர் ஓடிப் போய்ட்டாங்க. எங்களைப் புதுசா அப்பாய்ண்ட் பண்ணியிருக்காங்க. அடுத்த மாசம் பார்வையிடறதுக்கு பிரதமரே வரார். வேலை ஜரூரா நடக்கனும்னு மேலிடத்திலிருந்து ஆர்டர். லெட்டர் கொடுத்திருக்காங்க பாருங்க"

ரிஷி ஒரு லெட்டரை நீட்டினான்.

காவலர்கள் சல்யூட் அடித்து இருவரையும் உள்ளே அனுப்பினர்.

காவலர்கள் மறுபடியும் கதை பேச ஆரம்பித்தனர்.  "ஏதோ குஜிலி மெஷினாம்பா உள்ளே. என்னனமோ நடக்குது இங்கே. நமக்குதான் ஒன்னும் புரிய மாட்டேங்குது."

ரிஷியும் காவ்யாவும் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த வினோதமான டைம் மெஷினைப் பார்த்தனர்.

"இதை எப்படி இயக்குவது" என்று ரிஷி கேட்க காவ்யா அங்கிருந்த டிசைன் மற்றும் இதர டாக்குமெண்ட்டுகளை மும்முரமாக படிக்க ஆரம்பித்தாள்.

ஒரு மணி நேரம் சென்றது. ரிஷி பொறுமை இழந்தவனாய் "நேரமாகுது காவ்யா. வெளியே இருக்கிற செக்யூரிட்டி சந்தேகபடப்போறாங்க"

"இன்னும் 5 நிமிடம் டைம் கொடு."

படித்து முடித்து விட்டு காவ்யா அவனுக்கு எப்படி இயக்குவது என்று விளக்கினாள்.

ரிஷி கால இயந்திரத்தில் ஏறத் தயாரானான்.

"பை காவ்யா. நான் வெற்றியுடன் திரும்ப வேண்டிக் கொள்"

காவ்யா கையை அசைத்தாள். அவள் கண்களில் கண்ணீர் தெரிந்தது.

"ஹே. என்ன அழுகிறாயா? நான் போய் விஜய்க்கு நல்ல புத்தி சொல்லி அழைத்து வந்து உங்கள் இருவரையும் சேர்த்து வைக்கிறேன்"

"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். அவன் ஒழிஞ்சு போகட்டும்"

"அப்புறம் எதுக்கு இந்த tears எல்லாம்"

காவ்யா வெட்கத்துடன் தலையைக் குனிந்து "வுட்பியைப் பிரியறேன் இல்லையா. அது தான்"

ரிஷி சிரித்து விட்டு "நல்ல சென்ஸ் ஆப் ஹுமர் உனக்கு"

"ஹுமர் எல்லாம் இல்லை"

ரிஷி கண்களில் சந்தோஷத்துடன் உண்மையா என்று கேட்டான்.

காவ்யா வெட்கத்துடன் ஆம் என்று தலை ஆட்டினாள்

ரிஷி வேகமாக சென்று அவளைக் கட்டி அணைத்தான்.

அணைத்தவாறே "எனக்கு ஏற்கனவே திருமணம் ஆயிற்று"

"பரவாயில்லை என்னை இரண்டாவது மனைவியாக வைத்துக் கொள். நான் அக்காவின் கை காலிலாவது விழுந்து பெர்மிஷன் வாங்கிடறேன்"

"சீ அப்படி எல்லாம் இல்லை. எங்களுக்கு டைவர்ஸ் ஆயிடுச்சு"

"அப்பா! ஒரு பிரச்சினை சால்வ்ட்"

ரிஷி அவள் நெற்றியில் முத்தமிட்டு "போய் வருகிறேன் காவ்யா. உன் அன்பு என்னை வெற்றியுடன் திரும்ப அழைத்து வரும்."

காவ்யா கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. "ரிஷி என் சின்ன வயசிலேயே அப்பா அம்மாவுடன் கோவித்து பிரிஞ்சிட்டார். விஜய்யும் என்னை கை கழுவிட்டான். என் வாழ்க்கையில் நான் நேசித்த அனைவரும் என்னை விட்டுட்டு போயிட்டாங்க. நீயும் அப்படி போயிடுவியோன்னு பயமா இருக்கு"

"எங்க அப்பா என்னை அப்படி வளர்க்கலை காவ்யா. நான் உன்னை ஏமாத்த மாட்டேன். கண்டிப்பா திரும்பி வந்து உன் கைகளைப் பிடிப்பேன்.

காவ்யாவுக்குப் பிரியாவிடை கொடுத்து கால இயந்திரத்தினுள் ரிஷி நுழைந்தான். சிறிது நேரத்தில் அவன் முழுதும் மறைந்தான்.
சோழர் காலம்
"மதுரையை அடைய இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்"

"பொறுமை பாலரே. நாளை காலை நாம் சென்று விடலாம்."

இரண்டு நாட்கள் பிரயாணத்தில் சரிவர சாப்பிடாதலால் பாலன் மிகவும் கலைப்புற்றவராகக் காணப்பட்டார்.

அப்போது ஒரு அழகிய நந்தவனமும் அதன் நடுவில் ஒரு சிறிய வீடும் அவர்கள் கண்ணுக்குத் தென்பட்டது.

இருவரும் அங்கு இளைப்பாறலாம் என்று குதிரையை நிறுத்தினர்.

சிறிது நேரம் நந்தவனத்தில் அமர்ந்திருந்தனர்.

வீட்டிற்குள்ளே யாராவது இருக்கிறார்களா, பார்க்கலாம் என்று இளஞ்செழியன் கூற வீட்டின் கதவைத் தட்டினர்.

கதவு தானாகத் திறக்க உள்ளே சென்றனர்.

உள்ளே ஒரு வயதான மனிதர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.

அவர்கள் இருவரும் வந்ததை அவர் சிறிதும் சட்டை செய்யவில்லை.

"ஐயா! நாங்கள் இருவரும் தூரத்திலிருந்து பிரயாணம் செய்து வந்திருக்கிறோம். உணவு ஏதாவது கிடைக்குமா?"

பெரியவர் கண்ணைத் திறந்து அடுத்த அறைக்குச் செல்லுமாறு ஜாடை காட்டினார். இருவரும் அடுத்த அறைக்குச் சென்று பாத்திரத்தில் அப்பம் கொழுக்கட்டை முதலியவற்றைப் பார்த்ததும் வேகமாக ஒரு கட்டு கட்டினர்.

பிறகு களைப்பில் அந்த அறையிலேயே படுத்துத் தூங்கி விட்டனர்.

காலை முதலில் இளஞ்செழியன் எழுந்ததும் அறையின் மூலையில் பெரியவர் அமர்ந்து கொண்டிருந்ததைப் பார்த்தான். அவர் அவனைப் பார்த்து கேலியாகச்  சிரித்தார்.  

"இப்படித் தன்னை மறந்து தூங்கினால் நீ மன்னனாவது எப்போது? பாண்டிய நாட்டு சிம்மாசனத்தில் அமர்வது எப்போது? "

கோபமுற்ற இளஞ்செழியன் பெரியவரின் கழுத்தைப் பிடித்து "ஏ கிழவா! நீ யார்? உனக்கு எப்படி நான் யாரென்று தெரியும்"

அந்தப் பெரியவர் அடுத்த நொடி இளஞ்செழியனின் கையை ஒரு சுழற்று சுழற்றினார். இளஞ்செழியன் கீழே விழுந்தான்.

பெரியவர் பிறகு சாந்தமாக "மன்னிக்க வேண்டும் இளவரசே. என் பெயர் தர்மசேனன். நான் இரவிதாசனின் நண்பன். இரண்டு நாட்கள் முன்னர் இரவிதாசர் இங்கே வந்தார். பாண்டிய மன்னர் இங்கே வருவார் என்றும், வந்ததும் மதுரைக்கு அழைத்து வரும்படியும் கூறினார். நானேதாவது தவறாக செய்திருந்தால் மன்னிக்கவும்."

"மதுரைக்கு போகும் வழி எனக்குத் தெரியும். நீர் ஒன்றும் கூட வர வேண்டியதில்லை"

"இரவிதாசர் இன்னொரு விஷயமும் கூறினார். அதைக் கேட்டால் இவ்வாறு என்னை உதாசீனப்படுத்த மாட்டீர்கள்"

"என்ன அது?"

"மதுரையில், தங்களைக் காண தங்கள் தாயார் நந்தினி தேவியாரும் காத்திருப்பதாகக் கூறினார்"

இதைக் கேட்டதும் இளஞ்செழியன் கண்கள் பனித்தது. நெடு நாட்கள் பிறகு தன் தாயாரைச் சந்திப்பது குறித்து மகிழ்ச்சி அடைந்தான்.  தன் பிறப்பின் இரகசியம் தெரிந்தவர்கள் மிகச் சிலர் தான். அதனால் தர்மசேனர் மீது நம்பிக்கை வந்தது.

"ஐயா தங்கள் வயதுக்கு மரியாதை கொடுக்காமல் ஏதாவது பேசியிருந்தால் மன்னியுங்கள்?"

"பேச நேரமில்லை மன்னா. நாம் உடனே இவ்விடத்தை விட்டுக் கிளம்பலாம்"

இதையெல்லாம் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பாலனும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்.
                            ----------*******************-----------------
மதுரையில் அரசர் மாளிகையில் இரவிதாசனும் விஜய்யும் இளவரசருக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

"இரவிதாசரே! மிகவும் இருட்டாக இருக்கிறது. சிறிது விளக்கு இருந்தால் ஏற்றுங்கள்."

விஜய் கூறியதைக் கேட்டு இரவிதாசன் விளக்கைப் போட முயலுகையில் வெளியே யாரோ வரும் சத்தம் கேட்டது.

"யார் அது?"

"ரவிதாஸா நான் தான் இளஞ்செழியன். ஒரே இருட்டாக இருக்கிறது. முதலில் விளக்கைப் போடு"

"இதோ உடனே செய்கிறேன் இளவரசே. தங்களுடன் யாரோ வந்திருப்பது போலத் தெரிகிறது"

"நம் நண்பர் தான் இவர்."

ரவிதாசன் விளக்கைப் போட்டதும் முதலில் விஜய்யின் கண்களில் பாலன் தான் தென்பட்டார்.

"இவன் தான் நம் எதிரி. நான் கூறிய பாலன் இவன் தான். இவனை உடனே கொல்ல வேண்டும்"

"ரவிதாஸா யார் இந்த மனிதன். என் நண்பரை இவ்வாறு அவமானப்படுத்த வேண்டாம் என்று எச்சரி"

"அரசே இவர் நம்மைச் சேர்ந்தவர் தான். இவரும் நானும் தான் சோழர் குலத்தைப் பழி வாங்கவும், தஞ்சை கோவிலை அழிக்கவும் திட்டமிட்டோம். ஆனால் திட்டம் தோல்வி அடைந்தது. அதற்குக் காரணம் இந்த பாலன் தான் என்று இவர் கூறினார்"

இவை அனைத்தையும் பாலன் அமைதியாக சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

"பாலரே. ஏன் மறுமொழி கூறாமல் இருக்கிறீர்கள். இவன் கூறுவது அனைத்தும் உண்மையா?"

"ஆம் இளவரசே அவன் கூறுவது உண்மை தான். தஞ்சை கோவிலை அழிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்தக் கோவில் சோழர் பாண்டியர்களின் விரோதத்தையும் தாண்டியது. இது வெறும் சோழர்களின் கோவில் அல்ல.  தமிழர்களின் கோவில். சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் இரு குலத்தாரும் வணங்கும் சிவபெருமானின் கோவில். காலாகாலத்திற்கும் நிலைத்திருக்கும் கோவில்.தமிழனாகிய என்னால் விஜயனின் சதியை ஜீரணிக்க முடியாது"

"கொல்லுங்கள். இவனை முதலில் கொல்லுங்கள். நம் முதல் எதிரி இவன் தான்" என்று விஜய் கத்தினான்.

ரவிதாசன் வாளை எடுத்துக் கொண்டு முன்னே பாய்ந்தான். இளஞ்செழியன் அவனைத் தடுத்து நிறுத்தினான்.

"இப்போதைக்கு நம் கைதியாக வைத்திருப்போம். என் தாயார் வந்ததும் விசாரித்து ஒரு முடிவெடுப்போம்."

"தங்கள் தாயாரா. அவர் இப்போது எங்கிருக்கிறார் என்று யாருக்குத் தெரியும். உலக வாழ்க்கையே வெறுத்து மறைவில் இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியாதா?"

"என்ன உளறுகிறாய் ரவிதாஸா? தாயார் என்னை சந்திக்க விரும்புகிறார் என்று நீ பெரியவரிடம் கூறவில்லையா?"

"எந்தப் பெரியவர். நான் யாரிடமும் கூறவில்லையே"

இளஞ்செழியன் தர்மசேனர் பற்றிய விபரங்கள் கூறியதும் "அந்தக் கிழவன் ஒரு மாயாடாதாரி. உங்களை நன்றாக ஏமாற்றி இருக்கிறான். அவன் இப்போது எங்கே"

"எங்களுடன் தான் வந்தான். மதுரையில் தன் மகள் இருக்கிறாள் என்றும் சந்தித்து விட்டு வருவதாகவும் கூறினான்"

"அடுத்த முறை அவனைப் பார்த்தால் கண்டந்துண்டமாக வெட்டிப் போடுங்கள்."

"இல்லை. இப்போதே நாம் அவனைத் தேட வேண்டும். அவன் சோழர்களின் ஒற்றனாக இருக்க வேண்டும்."

"இவர்கள் இருவரையும் என்ன செய்வது"

"விஜயன் நம்பிக்கைக்குரியவன். இந்த பாலன் தான் நம் விரோதி. பாலனைக் கட்டி வைத்து விஜயனின் கண்காணிப்பில் விட்டு வைத்து செல்வோம். அந்தக் கிழவனைத் தேடி நாம் இருவரும் செல்வோம்"  

இருவரும் சென்ற பிறகும் விஜய் மற்றும் பாலன் தனிமையில் இருந்தனர்.

"ஏன் இவ்வாறு செய்தாய். தஞ்சை கோவில் எவ்வளவு புராதனமான சின்னம். அதை அழிக்க ஏன் நினைத்தாய்?"

"20 மில்லியன் டாலர்"

பாலன் விஜய்யைக் கேள்விக்குறியுடன் நோக்கினார்.

"சீன உளவுத்துறை 20 மில்லியன் டாலர்கள் தருவதாகக் கூறியிருந்தார்கள். பதிலுக்கு நான் அவர்களுக்கு செய்யும் உதவி தான் இது."

"தஞ்சை கோவிலை. அழிப்பதனால் சீனர்களுக்கு என்ன நன்மை"

"உண்மையில் எங்கள் திட்டம் கோவிலை அழிப்பதே இல்லை. எங்கள் திட்டம் இதைக் கவர்வது தான்"

விஜய் சில ஓலைகளையும், மிருகத் தோளில் வரையப்பட்ட வரை படங்களையும் காண்பித்தான்.

இது என்ன என்று பாலன் கேள்விக்குறியுடன் பார்த்தார்.

"இது என்ன என்று கூறுவதற்கு முன்னாள் உங்களிடம் ஒன்று கேட்கிறேன். டைம் மெஷின் கண்டுபிடிப்பு எப்படி நம் இந்தியர்களால் சாதிக்க முடிந்தது. மேலை நாட்டினர் எவராலும் முடியாதது ஒரு ஏழை நாடான இந்தியாவினால் எப்படி முடிந்தது என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றவில்லையா"

"ஆம் அந்தக் கேள்வி எனக்குத் தோன்றியது"

"அந்த கேள்விக்குப் பதில் தான் இந்த வரைபடங்கள். டைம் மெஷின் வடிவமைப்பு வரைபடங்கள் இவை. இது நம் முன்னோர்கள் ஏற்கனவே கண்டு பிடித்தது. அதை சோழ மன்னர்கள் காலகாலமாக  ரகசியமாகப் பாதுகாத்து வருகின்றனர். ராஜராஜ சோழன் தஞ்சைக் கோவிலுக்கு அடியில் இதை ஒளித்து வைத்தான். 1970ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியின் போது நமக்கு இது கிடைத்தது.அப்போதைய பாரதப் பிரதமர் உடனே டைம் மெஷின் நிர்மாணிக்கும் பொறுப்பை டி.ஆர்.டி.ஒ விடம் ஒப்படைத்தார். அதன் விளைவாகத் தான் நீயும் நானும் இங்கிருக்கிறோம்"

"அந்த ரகசியத்தை நீ சீனர்களுக்கு விலையாக கொடுக்க சதி செய்கிறாய். ஆனால் ஒன்று எனக்குப் புரியவில்லை. சீனர்களுக்கு இந்த ரகசியம் வேண்டுமென்றால் டி.ஆர்.டி.ஓவின் டிசைன் டாக்குமெண்ட்டுகளை நீ கொடுக்க வேண்டியது தானே. எதற்கு இவ்வளவு சிரமப்பட்டு சோழர் காலம் வந்து இந்த ஓலைச் சுவடிகளை திருட நினைக்கிறாய்"

"சீனர்களின் திட்டம் வெறும் டைம் மெஷின் ரகசியத்தைக் கவர்வது மட்டுமல்ல. அதை முதலில் கண்டுபிடித்தது இந்தியர்களாக இருப்பதை மாற்றுவதுதான் அவர்கள் நோக்கம்"

"புரிகிறது. கோவிலுக்கு அடியிலிருக்கும் இந்த ஓலைச் சுவடிகளை நீ எடுத்து விட்டால் 1970ஆம் ஆண்டு நடக்கும் அகழ்வாராய்ச்சியின் போது நம் கைக்கு கிடைத்திருக்காது. கால இயந்திரத்தை முதலில் கண்டு பிடித்தது நாமாக இருந்திருக்க மாட்டோம். சரி. கோவிலை அழிக்க நினைத்தது ஏன்."

"கால இயந்திரத்தின் மூலம் சோழர் காலத்திற்கு வருவது என்று நாங்கள் திட்டமிட்டோம். அதற்கு டி.ஆர்.டி.ஒ மேலதிகாரிகள் அனுமதி கொடுக்கவில்லை. பிரதமரிடம் கேட்கலாம் என்று முடிவெடுத்தோம். அதற்காக அவர் மகனைக் கொன்றோம். எங்கள் ஆளான ஜோதிடக்காரனை அனுப்பி அவர் மனதைக் குழப்பி விட்டோம். அதன் பிறகு அனுமதி கேட்க நான் சென்றேன். அப்போது தான் எனக்கு இந்த திட்டம் தோன்றியது. கோவிலை அழித்தால் அவர் மகன் இறக்க வாய்ப்பில்லை என்று பிரதமரை நம்ப வைத்து அனுமதி வாங்கினேன்"

"உன் வேலை தான் முடிந்து விட்டதே. டைம் மெஷின் ரகசியம் கிடைத்து விட்டது. கோவில் இருந்தால் என்ன அழிந்தால் என்ன"

"பிரதமருக்கு வாக்கு கொடுத்து விட்டேன். சொன்ன வேலையை சரிவர முடிப்பது ஏன் தொழில் தர்மம். மேலும் கோவிலை அழிப்பதில் சீனர்களுக்கும் ஆர்வம் வந்து விட்டது. இப்படி ஒரு பெருமையான விஷயம் இந்தியர்களுக்கு சொந்தமாக இருக்கிறதே என்று அவர்களுக்குப் பொறாமை. கோவிலை அழித்தால் கூடுதலாக 10 மில்லியன் டாலர்கள் தருவதாகக் கூறினார்கள்"

"பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாயா. உனக்கு மனசாட்சியே இல்லையா"

"ஆம். இவ்வளவு ரகசியத்தையும் ஏன் உனக்கு கூறினேன் தெரியுமா. நான் இப்போது உன்னைக் கொல்லப் போகிறேன். உண்மை தெரிந்து கொண்டால் கொஞ்சம் மன நிம்மதியுடன் மேலுலகம் செல்வாய் அல்லவா. அதனால் தான் உன்னிடம் எல்லா ரகசியத்தையும் கூறினேன்"

விஜய் அருகிலிருந்த வாளை எடுத்து பாலனைக் கொல்ல கையை ஓங்கினான்.

ஆனால் அடுத்த நொடி "ஆ" என்று அலறியவண்ணம் ஓங்கிய வாளுடன் கீழே சரிந்தான்.

அவன் முதுகில் ஒரு குறுவாள் பாய்ந்திருந்தது.

யார் எதை எறிந்தது என்று பாலன் வியப்புடன் பார்த்தார்.

வாசலில் தர்மசேனர் நின்று கொண்டிருந்தார்.

CHAPTER 6

தஞ்சை நோக்கி இரு புரவிகளில் பாலனும் தர்மசேனரும் சென்று கொண்டிருந்தனர்.

"பெரியவரே ரவிதாசனும் இளஞ்செழியனும் நம்மைத் தேடி பின் தொடர்ந்து வருவார்களா?"

"அவர்கள் இருவரையும் எனது ஆட்கள் இந்நேரம் கைது செய்திருப்பார்கள். இளஞ்செழியன் மீண்டும் தனது பழைய இருப்பிடத்திற்கே (தஞ்சை சிறைக்கு) வந்து விடுவான். முன்னர் துணைக்கு நீங்கள் இருந்தீர்கள்.இப்போது ரவிதாசன். தீர விசாரிக்காமல் தங்களை சிறையில் அடைத்தமைக்கு மன்னியுங்கள். அனைவரும் கோவில் கும்பாபிஷேக வேலைகள் தொடர்பாக மும்முரமாக இருந்ததால் ஏற்பட்ட கவனக்குறைவு"

தர்மசேனர் சோழ அரசில்  முக்கிய பதவியில் இருப்பவர் என்று பாலன் ஒருவாறு அனுமானித்தார்.

"பரவாயில்லை தர்மசேனரே. நான் சிறையில் இருந்ததால் தான் ரவிதாசன் மற்றும் விஜயனின் சூழ்ச்சியை அறிந்து முறியடிக்க முடிந்தது. ஒரு விதத்தில் அதுவும் நன்மைக்கே"

"ஆம் தாங்கள் சோழர் குலத்துக்கு பெரும் நன்மை செய்தீர்கள். இப்போது மன்னர் அவர் குடும்பத்தினர் உயிருடன் இருப்பதற்கும், பெரிய கோவில் அழியாமல் இருப்பதற்கும் தாங்களே காரணம். சோழர் குலம் தங்களை காலாகாலமாக போற்றி வணங்கும்"

"விஜயனிடம் நான் பேசியது அனைத்தையும் கேட்டு விட்டீர்களா?"

"ஆம்? நீங்களும் விஜய்யும் எதற்கு, எங்கிருந்து வருகிறீர்கள் என்பது அனைத்தையும்  கேட்டு விட்டேன்"

"அப்படி ஆனால் கால இயந்திரம்?"

"அதற்காகத்தான் விஜய் வந்தான் என்பதை நான் அறிவேன். அதை மீட்பதிலும் தாங்கள் உதவி செய்துள்ளீர்கள்"

"அப்படியானால் நான் பிற்காலத்திலிருந்து வருகிறேன் என்று?"

"நான் முற்றிலும் அறிவேன். விஜயனிடம் நீங்கள் பேசியதை ஒன்று விடாமல் நான் கேட்டு விட்டேன்"

"கால இயந்திரம் அமைப்பதற்குத் தேவையான அறிவியல் வளர்ச்சி சாதரணமானது   அல்ல. அதை எப்படி இந்த சமூகம் சாதித்தது"

"இது மனிதனின் கண்டுபிடிப்பு அல்ல. கடவுளின் வரம் இது. முதல் சங்க காலத்தில் அகத்தியர் கடுந்தவம் செய்து இந்திரனிடமிருந்து வரமாக வாங்கியது என்று கூறப்படுகிறது. அவர் இதை பாண்டிய மன்னரிடம் அளித்தார். பாண்டியர்களும் இதை பத்திரமாக பாதுகாத்து வந்தனர். ஆனால் வீர பாண்டியன் இதை வெளிநாட்டினரிடம் குறிப்பாக சீனர்களிடம் விலை பேச நினைத்தான். அதனால் ஆதித்த கரிகாலர் அவனைக் கொன்று விட்டு இந்த ரகசியத்தை சோழர் வசமாக்கினார். ராஜராஜர் ஆட்சிக்கு வந்த பிறகு இதை தஞ்சை கோவில் கட்டும் இடத்திற்கு அடியில் ஒளித்து வைத்தார். இந்த இயந்திரத்தை உருவாக்கும் கணித சாஸ்திரம் தான் எங்களிடம் உள்ளது. ஆனால் இதனை நாங்களே உருவாக்கும் அறிவியல் மற்றும் பொறியியல் திறன் எங்களிடம் இல்லை. பிற்கால தமிழர் சமூகம் இதனை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் பாதுகாத்து வருகிறோம். நீர் பிற்காலத்திலிருந்து   இங்கு வந்ததன் மூலம் எங்கள் முயற்சி தோல்வி அடையவில்லை என்பது தெளிவாகி விட்டது."

அவர்கள் இருவரும் தஞ்சையை நெருங்கி விட்டனர்.

"தங்களை நான் சக்கரவர்த்தியிடம் அறிமுகப்படுத்த வேண்டும். ஆனால் இப்போது சென்றால் ஒரே குழப்பமாக இருக்கும். இது வரை அனைவரும் உங்களைத் தப்பிச் சென்ற கைதியாகத் தான் பார்க்கின்றனர். நான் சென்று உண்மை விளக்கி, பிறகு வந்து அழைத்துச் செல்கிறேன்."

"நல்லது தர்மசேனரே. நான் ஊர் எல்லையில் இருக்கும் பாழடைந்த மண்டபத்தில் தங்குகிறேன். நிலைமை சரியான பிறகு தாங்கள் அங்கு வந்து என்னை அழைத்துச் செல்லலாம்."

"நல்லது. சோழர் குலத்திற்கு உரிய பொருள் ஒன்று தங்களிடம் இருக்கிறது. அதனை  தாங்கள் அளித்து விட்டால் நல்லதாக இருக்கும்"

பாலன் கால இயந்திர ரகசிய வரைபடங்களை தர்மசேனரிடம் அளித்தார்.

"ஐயா உண்மையில் தாங்கள் யார். சக்கரவர்த்திக்கும் தங்களுக்கும் என்ன தொடர்பு"

தர்மசேனர் தன் வேஷத்தைக் கலைத்து வந்தியதேவனாக காட்சி அளித்தார்.
                               
                        -------------**************----------------------
வந்தியதேவருக்கு விடை கொடுத்து, பாலன் மண்டபத்தை நோக்கிச் சென்றார். சோழர் காலத்தில் ராஜராஜ சோழரின் நெருங்கிய நண்பராகவும், பல போர்களில் அவருக்குக் கை கொடுத்தும், ராஜராஜரின் தமக்கையார் குந்தவை தேவியாரை மணந்தவருமாகிய வந்தியதேவற்றின் அறிமுகம் தனக்குக் கிடைத்தது பெரும் பாக்கியம் என்று பாலன் நினைத்தார். விரைவில் தான் சக்கரவர்த்தியையும் காணப் போவது அவருக்கு பெரும் எதிர்பார்ப்பை அளித்தது.

சிறிது நேரத்தில் விஜய்யுடன் தான் முதன் முதலில் சோழர் காலத்திற்கு வந்த அதே  பாழடைந்த மண்டபத்திற்கே வந்து சேர்ந்தார்.

உள்ளே யாரோ ஒரு மனிதன் மயக்கத்துடன் காணப்பட்டான்.

அவன் முகத்தை உற்றுப் பார்த்ததும் பாலனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அது தனது மகன் ரிஷியே தான்.

அவன் வாயில் சிறிது நீர் ஊற்றி, முகத்தில் தண்ணீர் தெளித்ததும் ரிஷிக்கு நினைவு வந்தது.

எழுந்ததும் தன் தந்தையைப் பார்த்ததும் அவன் முகம் பிரகாசம் அடைந்தது. "உங்களை எப்படி சந்திப்பேனோ என்று மலைப்பாக இருந்தது. இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை"

"நீ எதற்கு இங்கே வந்தாய். இவ்வளவு நாட்கள் கழித்து எதற்கு என் மீது அக்கறை"

"உங்கள் பேச்சைக் கேளாமல் லிண்டாவை நான் திருமணம் செய்தது பெரிய தவறாகப் போனது, எங்களுக்கு போன மாதம் விவாகரத்து ஆனது. நீங்கள் என்னைத் தொடர்பு செய்ய நினைத்து அடித்த போன் கால்களைப் பார்த்ததும் எதையும் யோசிக்காமல் உங்களைத் தேடி இந்தியா வந்தேன்."

"பிள்ளைகளுக்கு கஷ்டம் வந்தால் தான் பெற்றோர்கள் ஞாபகமே வருகிறது"

ரிஷி எதுவும் பேசாமல் தலை குனிந்தான். பிறகு "உங்களுடன் வந்த விஜய் எங்கே"

"விஜய் பற்றி உனக்கெப்படி தெரியும்"

ரிஷி நடந்த விபரங்கள் அனைத்தையும் கூறினான். பாலனும் விஜய்யின் சதியையும் அவன் இறந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறினார்.

"ஆக சீனர்கள் சதி தான் இது. இதில் நமது பிரதமர் துணை போனது தான் எனக்கு ஆத்திரமாக இருக்கிறது. நான் நமது காலத்திற்கு சென்ற பிறகு மீடியாவிடம் அனைத்தையும் வெளிப்படுத்தி பிரதமரைக் கிழி கிழியென்று கிழித்து ரெண்டில் ஒன்று பார்க்கப் போகிறேன்."

"அதெல்லாம் வேண்டாம். உன் காலத்திற்கு நீ சென்ற பிறகு பிரதமரை சந்தித்துப் பேசு. அதன் பிறகு எதையும் முடிவு செய்"

"உன் காலமா? அப்போது நீங்கள்"

"என் காலம் சோழர் காலத்தினுடையது. நான் இந்தக் காற்றையே சுவாசித்து இந்த மண்ணிலேயே உயிர் விடப் போகிறேன்"

"என்னுடன் வந்து விடுங்கள். 10 வருடங்கள் உங்கள் அன்பும் ஆதரவும் இல்லாமல் இருந்து விட்டேன். இப்போது புத்தி தெளிந்து உங்களளைத் தேடி வருகிறேன். என்னுடனே நீங்கள் இருந்து விடுங்கள் அப்பா"

பாலன் சிறிது நேரம் அமைதியாக இருந்தார். "ரிஷி நான் உன் அம்மாவைத் திருமணம் செய்து 6 வருடங்கள் கழித்து பிறந்தவன் நீ.அதனால் உன்னைக் கண்ணின் இமை காப்பது போல வளர்த்து வந்தோம். நீ சின்ன வயதில் அடிக்கடி நோய் வாய்ப்படுவாய். உன் அம்மாவிற்கு இரவில் தூங்கா விட்டால் அடுத்த நாள் மிகவும் சிரமப்படுவாள். .அதனால் இரவு முழுதும் நான் தான் உன்னைப் பார்த்துக் கொள்வேன். நீ இரவில் முழித்து வெகு நேரம் அழுவாய். தோளில்  தூக்கித் தாலாட்டுவேன், பாட்டு பாடுவேன். எதற்கும் நீ மசிய மாட்டாய். ஆனால் கதைகள் சொன்னால் அழுவதை நிறுத்தி சிறிது நேரத்தில் தூங்குவாய். உனக்கு அப்போது நான் சோழர்கள், பாண்டிய மன்னர்கள் கதைகள் சொல்லித்தான் தூங்க வைப்பேன்."

"இதை எதற்குக் கூறினேன் என்றால்.நீயும், சோழர் கால சரித்திரம் குறித்து எனது ஆவலும் எனக்கு இரண்டு கண்கள். நீ வெள்ளைக்காரியை திருமணம் செய்து சென்ற பிறகு ஒரு கண்ணை இழந்ததாகவே நினைத்தேன். பல நாட்கள் பைத்தியம் பிடித்தது போல இருந்தேன். பிறகு ஒரே முடிவாக ராஜராஜ சோழன் குறித்து ஆராய்ச்சியில் என் கவனத்தைத் திருப்பி விட்டேன். ஒவ்வொரு கோவிலாக சென்றும், கல்வெட்டுகளை அலசியும் என் காலத்தைக் கழித்தேன். ஒரு நாள் கூட தஞ்சை கோவில் செல்லாமல் இருந்ததில்லை. அங்கிருக்கும் ராஜராஜ சோழரின் சிலை முன் நேரங்காலம் தெரியாமல் நின்று கொண்டிருப்பேன். இதன் மூலமாகத் தான் நீ செய்த துரோகத்தை என்னால் மறக்க முடிந்தது."

"இப்போது தான் நான் வந்து விட்டேனே என்னுடன் நீங்கள் இருக்கலாமே"

"வயதாகி விட்டால் நமது எண்ணங்களை மாற்றுவது கடினமாகி விடுகிறது. உன்னுடன் நான் வந்தாலும் பழைய கசப்புணர்வுகள் முற்றிலும் என்னை விட்டுப் போகாது. நான் எதற்காக பிறந்தேனோ அது இப்போது நிறைவேறி இருக்கிறது. நான் பிறந்ததன் காரணம் ராஜராஜன் காலத்தில் வாழ்ந்து, அந்த மாபெரும் சரித்திரம் புரிந்தவனை நேரில் கண்டு பேசுவதும் தான். இதற்காகத்தான் நான் இந்த பிறப்பெடுத்தேன். அதனால் நான் இங்கேயே வாழ்ந்து என் காலத்தை முடித்துக் கொள்கிறேன். நீ சென்று ஒரு நல்ல பெண்ணாகத் திருமணம் செய்து சந்தோஷமாக இரு."

"உண்மையில் ஒரு பெண் மீது விருப்பம் உள்ளது அப்பா. உங்கள் தலைமையில் தான் எங்கள் திருமணம் நடக்கும் என்று ஆசைப்பட்டேன்"

"டைவர்ஸ் வாங்கின ஒரு மாதத்திலேயே இன்னொரு பெண்ணா. இவள் என்ன சைனாக்காரியா இல்லை ரஷ்யாக்காரியா?"

"இல்லை அப்பா.நல்ல ஹோம்லியான தமிழ் பெண்"

ரிஷி காவ்யாவின் போட்டோவைக் காண்பித்தான்.

"மருமகள் நல்ல கலையாகத்தான் இருக்கிறாள். இவளை நல்லபடியாகப் பார்த்து குடும்பம் நடத்து"

ரிஷி பாலனின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான். தன் தந்தைக்கு விடை சொல்லி கால இயந்திரக் கருவி மூலம் அவ்விடத்தை விட்டு மறைந்தான்.

அடுத்த நாள் பாலனும் வந்தியதேவரும் ராஜராஜத்தேவரின் மாளிகையை நெருங்கிக் கொண்டிருந்தனர்.

"சக்கரவர்த்தி தங்களைக் காண மிகவும் ஆவலுடன் இருக்கிறார். ஆனால் சற்று நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். அதனால் அதிகம் பேச வேண்டாம்"

"சக்கரவர்த்திக்கு என்ன உடல்நலக் குறைவு?"

"உடல்நலம் ஒன்றும் பாதிப்பு இல்லை. மனநிலை தான் சரியாக இல்லை. கோவில் கும்பாபிஷேகம் அன்று அவர் அருமை மகள் சந்திரமல்லி காணாமல் மறைந்துப் போனார். அது அரசரை மிகவும் பாதித்து விட்டது."

"சந்திரமல்லி இப்போது எங்கே"

"அவர் நாகை புத்த விஹாரத்தில் இருப்பதாக தகவல்.உலக வாழ்க்கை வெறுத்து புத்தமதம் சார்ந்துவிட்டதாகக் கேள்வி."

சிறிது நேரத்தில் அரசரின் அறைக்குள் நுழைந்தனர். சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ராஜராஜரைக் கண்டதும் பாலன் உணர்ச்சி வயப்பட்டு நின்றார். எந்த மனிதரைத் தரிசப்பது தனது வாழ்வின் இலட்சியமாக நினைத்திருந்தோமோ அவரைக் காணும் பாக்கியம் தனக்குக் கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்ந்தார். சக்கரவர்த்தி வயதானாலும் முகத்தின் களையும் கம்பீரமும் சற்றும் குறையாமல் இருப்பதைக் கவனித்தார். மனதிலிருந்த கவலையினால் அவர் முகத்தில் இலேசாக வாட்டம் தெரிந்தது.

அரசரை வணங்காமல் தன்னை மறந்து நிற்கிறோமே என்று உணர்ந்தவராய் தன் இரு கைகளையும் கூப்பி மண்டியிட்டு வணங்கினார்.

அரசர் எழுந்து பாலனை கட்டி அணைத்தார். "சோழர் குலத்துக்கு மாபெரும் சேவை செய்தவரைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்"

அரசரின் கைகள் தளர்வாக இருப்பதைப் பார்த்த பாலன். "அரசே சிரமப்பட வேண்டாம். உடல் நலம் சரி இல்லாத சமயம் இப்படி நிற்க வேண்டாம்."

"உடல் எப்படி ஆனால் என்ன. நான் பார்த்து பார்த்து வளர்த்த மகள் ஓடி விட்டாள். என்ன குறை வைத்தேன் அவளுக்கு. பாவி இப்படி செய்து விட்டாள்."

"அரசே உணர்ச்சி வசப்பட வேண்டாம்."

"கும்பாபிஷேகம் அன்று கழுத்தறுப்பது போல இப்படி ஒரு துரோகம் செய்து விட்டாள். எல்லாம் நான் இந்தக் கோவில் கட்டிய நேரம். எல்லா துரதிர்ஷ்டமும் சேர்ந்து வந்து விட்டது. மாதம் மும்மாரி பொழியும் இந்நாட்டில் கும்பாபிஷேகம் நடந்த இவ்வருடம் கடும் வறட்சி. வடக்கே சாளுக்கியர்கள் போருக்கு பெரும்படை திரட்டுவதாக தகவல். நான் வளர்த்த மகள் எனக்கு சதி செய்து விட்டாள். நான் சாகும் வரை அந்தக் கோவிலுக்குள் என் நிழல்கூட படாது. "

"ஐயா அது துரதிர்ஷ்டம் பிடித்த கோவில் அல்ல. சோழப் பேரரசுக்கும் அதன் மக்களுக்கும் பெரும் நன்மையை அளிக்கும் கோவில். இவ்வருடம் வறட்சி என்றாலும் மக்களுக்கு ஒரு குறையும் கிடையாது. கோவில் கட்டியதால் பல வித தொழில்களும் வணிகமும் துலங்குகிறது. விவசாயிகள் கூட ஏதோ கைத்தொழில் செய்து நன்றாகவே சம்பாதித்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.  சாளுக்கியர்களின்  படையெடுப்பெல்லாம் ஒரு பெரிய விஷயமே அல்ல. நமது வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலளிப்பார்கள். அதனால் கோவில் கட்டியது பற்றி தாங்கள் கவலைப்பட வேண்டாம்.

“நான் இலங்கையிலிருக்கும்போது பெரிய  புத்தர் சிலைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன். அது போல சிவனுக்கு ஒரு மாபெரும் கோவில் கட்ட வேண்டும் என்ற அவா என் மனதில் வளர்ந்தது. யாருமே கட்டிராத அளவுக்கு பெரிய கோபுரமும், எந்தக் கோவிலிலும் இல்லாத அளவுக்கு சிவலிங்கத்தின் உருவம் மிகவும் பெரிதாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். ஆனால் அது எவ்வளவு அறிவீனம் என்று இப்போது தான் தெரிகிறது"

"ஏன் ஐயா அப்படி நினைக்கிறீர்கள். இவ்வளவு பெரிய கோவில் சிவனின் பெருமையை நிலைத்து நிற்க வைக்கும் செயல் அல்லவா. சைவ மதம் தழைப்பதற்கு இதை விட ஒரு பெரிய ஊக்க சக்தி வேறு என்ன வேண்டும்"

"நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் இந்தக் கோவில்  கட்டுவதற்கு எத்தனை பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். 8000 பேரின் உயிரை இக்கோவில் பலி வாங்கியிருக்கிறது. கோவிலின் உயரம் கூடக் கூட உயிரிழப்பும் அதிகமாகியது. கோவில் கோபுரத்தைக் கட்ட அதனைச் சுற்றி மண் பாதை அமைத்து யானை மூலம் பெரும் கற்களை மேலே ஏற்றினோம். அனால் நூற்றுக் கணக்கில் யானைகள் தவறி விழுந்து ஆயிரமாயிரம்  கோவில் வேலை செய்பவர்கள்  இறந்திருக்கிறார்கள்.  இதுதானா என் சாதனை. சரித்திரம் என்னை ஒரு கொடுங்கோலனாகத் தான் பார்க்கும். தனது பெருமையை  மட்டுமே நினைத்த ஒரு பேராசைக்காரனாக பார்க்கும்”

"அரசே போரிலும் தான் பல்லாயிரம் பேர் இறக்கிறார்கள். அதற்காக ஒரு அரசன் மனம் கலங்கலாமா. போரை விட கோவில் கட்டுவது என்பது எவ்வளவு உயர்ந்த செயல் அதில் உயிரழப்பு ஏற்படுவது கஷ்டமான விஷயம் தான். ஆனாலும் ஒரு உன்னத இலட்சியத்துக்காக இதனைப் பொருட்படுத்தக் கூடாது. இது சரித்திரம் தங்களை வியந்து பாராட்ட வைக்கக் கூடிய கோவில். தமிழர்கள் தங்கள் முன்னோர்கள் இவ்வளவு உயர்ந்தவர்களா என்று வியப்பார்கள். பிற்காலச் சந்ததியினர் மாபெரும் காரியங்கள் சாதிப்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும். தாங்கள் காலத்தை வென்ற சாதனையாளராக சரித்திரத்தில் நிலைத்திருப்பீர்கள்."

பாலனின் பேச்சைக் கேட்டதும் அரசரின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. அவர் தோள்களை அணைத்து "நண்பரே தாங்கள் என் கண்ணைத் திறந்தீர்கள். சிவனுக்கு எதிராக இருந்த என் எண்ணங்களை மாற்றினீர்கள். இனி எப்போதும் தாங்கள் என்னுடனையே இருக்க வேண்டும். வந்தியதேவரைப் போல ஆருயிர் நண்பராக இறுதி வரை நாம் இருக்க வேண்டும்"

பாலன் தான் பிறந்ததன் பயனை அடைந்தவராக அக்கணம் உணர்ந்தார்.

             -----------------------------*************************------------------------------
நிகழ்காலம்
தஞ்சை கோவிலில் ரிஷிக்கும் காவ்யாவுக்கும் திருமணம் நடந்தது.

"ஹனிமூனுக்கு நாம் கண்டிப்பாக ஆஸ்திரலியா செல்ல வேண்டும்."

"ஏன் உன் பழைய காதலனை தேடி அங்கு செல்லவா"

"ச்சே.அவனை மறந்து எவ்வளவோ நாளாயிடுச்சு. சின்ன வயசிலேயே ஆஸ்திரேலியா போகணும்னு ஒரு ஆசை"

"சரி போகலாம். அதற்கு முன்னாள் நாம் டெல்லி போக வேண்டும்."

"டெல்லியா எதற்கு?"

"பிரதமர் சுஷீலா வர்மாவை சந்திக்க வேண்டும்"
             ---------------------***********************-----------------
சுஷீலா வர்மா உளவுத் துறை அதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரது உதவியாளர் உள்ளே நுழைந்து "உங்களைப் பார்க்க ரிஷி என்பவர் காத்துக் கொண்டிருக்கிறார்"

"யாரையும் இப்போது சந்திக்க முடியாது என்று கூறி விடுங்கள்."

"விஜய் பற்றி உங்களிடம் பேச வேண்டும் என்று கூறினார்"

விஜய் பெயர் கேட்டவுடன் சுதீலா திடுக்கிட்டு உடனே உள்ளே வரச் சொன்னார்.

ரிஷி உள்ளே வந்ததும் "விஜய்யை நீ என்ன செய்தாய்" என்று சுஷீலா கோபத்துடன் அனல் தெறிக்க கேட்டார்.

"சொல்கிறேன். ஆனால் அதற்கு முன் நீங்கள் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். தஞ்சைக் கோவிலுக்கு வெடி வைத்துத் தகர்க்க நீங்கள் விஜய்க்கு உத்தரவிட்டது ஏன்"

இதைக் கேட்டதும் சுஷீலா நிலை குலைந்தார். "என்ன உளறுகிறாய்?"

"நான் உளறவில்லை. அதற்கான ஆதாரம் அனைத்தும் என்னிடம் இருக்கிறது."

ரிஷி விஜய்யின் சதி பற்றி முழுதும் விளக்கினான். "இப்போது என்ன செய்ய முடிவு செய்துள்ளீர்கள். நீங்கள் செய்தது பெரிய தேசத்துரோகம்."

"நான் செய்தது தேசத்துரோகம் கிடையாது. தஞ்சை கோவில் சென்று வந்த பிறகு பல அரசியல் தலைவர்கள் உயிர் இழந்திருக்கிறார்கள். 1954 ஆண்டு வரதராஜ முதலியார், 1974 ஆண்டு இந்தர் சிங் 1994 மோர்கன்- இவர்கள் எல்லாம் தஞ்சை கோவில் சென்ற பிறகு உயிர் இழந்திருக்கிறார்கள்.அந்த கோவிலின் ராசி அப்படி."

"இவர்கள் மூவரும் இறந்ததற்கு வெளிநாட்டு சதி என்பதற்கு ஆதாரம் இதோ"

ரிஷி நீட்டிய ஆதாரங்கள் பார்த்ததும் சுஷீலா அதிர்ச்சியடைந்தார்.

"நம் நாட்டின் முக்கியமான சரித்திர சின்னம் அழிக்க நினைத்த கும்பலுக்கு துணையாக இருந்திருக்கிறீர்கள். நமது முன்னோர்கள் பல தியாகங்கள் செய்து கட்டிய கோவில் அது. கோவில் கட்டும்போது பலர் உயிர் இழந்திருக்கிறார்கள். ஆனால் இறந்த ஒவ்வொருவனும் ஒரு சாதனையை நிகழ்த்தி உயிரை விட்டதாகவே நினைத்து மகிழ்ச்சியுடன் மரணத்தை வரவே ற்றான். அப்படிபட்ட கோவிலை ஒரு பிரதமராக இருந்து கொண்டு அழிக்க நினைத்தது நீங்கள் செய்த பெரிய குற்றம். அதற்கு பிராயச்சித்தமாக என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்"

ரிஷி பிரதமரின் அறையை விட்டு வெளியேறினான்.

வீட்டிற்கு வந்ததும் காவ்யா "ந்யூஸ் கேட்டியா? பிரதமர் ரிசைன் பண்ணிட்டாராம்"

டிவியில் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.

"பிரதமர் சுஷீலா அவசரமாக ராஜினாமா செய்துள்ளார். அவர் தற்போது எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. அவருக்குப் பதிலாக உள்துறை அமைச்சர் விஷால் குமார் பிரதமராக பதவி ஏற்றார். இரண்டு வாரங்கள் முன்பு தான் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி அடைந்த சுஷீலா எடுத்த முடிவு நாட்டு மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது."

ரிஷியின் முகத்தில் தவழந்த புன்னகையை வியப்புடன் காவ்யா பார்த்தாள்.
               -----------------------**************--------------------------
   சில நாட்கள் கழித்து

தஞ்சை கோவில் சுற்றி அன்று பரபரப்பாக இருந்தது. முதல் அமைச்சர் வருகை காரணமாக போலீஸ் ஏற்பாடு பலமாக இருந்தது.

கோவிலைச் சுற்றி வந்து கொண்டிருந்த அந்தப் பெண்மணியை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. தலை மொட்டை அடித்து, கண்ணாடி அணிந்து அடையாளமே தெரியாத வண்ணம் சுஷீலா வர்மா காணப்பட்டார்.

கோவிலில் உள்ள ஒவ்வொரு தூணையும் தொட்டு, ஒவ்வொரு கல்லையும் தடவி, ஒவ்வொரு ஓவியத்தையும் வியப்புடன் பார்த்தார். ராஜராஜன் சிலை முன் வந்ததும் மன்னன் சிலையையே கண் கொட்டாமல் பார்த்தார்.

"ஏம்மா. வெளியே போம்மா.இன்னும் கொஞ்ச நேரத்தில் மினிஸ்டர் வரப் போறார்."

சுஷீலா காதிலேயே போடாமல் சிலையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"ஏ சொல்றது காதிலே கேட்கலை. இப்போ வெளியே போறியா இல்லையா"

சுஷீலா அசையாமல் நின்றார்.

காவலர்கள் சுஷீலாவை அப்படியே தூக்கி கோவில் வெளியே எறிந்தனர்.

"அண்ணே பார்த்துண்ணே பெரிம்மா மண்டையை போட்டுடப் போகுது"

முதல் அமைச்சர் தனது பரிவாரம் சூழ கோவிலுக்குள் நுழைந்தார்.

தெருவோரத்தில் விழுந்து கிடந்த சுஷீலா மெல்ல இவ்வார்த்தைகளை முணுமுணுத்தார்.

"எம்மன்னனும் என் மன்னன் ராஜராஜன் முன் சிறியவனே" 
THE END          
                          

Story Inspired From:-
1)   Udayar – Balakumaran.
2)   Ponniyin Selvan – Kalki.
3)   Hollywood movie – Timeline.


 


No comments:

Post a Comment