Tuesday, February 6, 2018

இந்திரஜித் அறிவியல் கதை


                                                                       இந்திரஜித்


"இந்திரஜித் என்ற பெயர் உனக்கு பிடித்திருக்கிறதா?”

தேஜா கேள்விக்குறியுடன் மினியை நோக்கினான். தேஜா உலகின் 10  முக்கிய பண அதிபர்களில் ஒருவன். புவியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதே அவன் கனவு. மனிதர்களை ஒத்த எந்திரர்களை உருவாக்குவதும், செவ்வாய் கிரகத்தில் மனிதர்களின் குடியேற்றத்தை நடத்திக் காட்டுவதும் அவன் வாழ்வின் லட்சியம். மனைவியை விபத்தில் இழந்து, ஒரே மகளாகிய மினியை தானே வளர்த்து வந்தான்.

"யாருக்கு இந்த பெயர் அப்பா. புது  நாய்குட்டி வாங்குவதாக சொல்லவே இல்லையே?"

மினி தன் அகன்ற  பார்வையுடன் தேஜாவை நோக்கினாள். பதினான்கு வயதை நெருங்கினாலும் தன் சம வயது பெண்களைக் காட்டிலும் உயரம் குறைவாக இருந்தாள். அம்மா இல்லாத பெண் என்பதால் தேஜா அவளைத் தன் கண்ணின் இமை போல பாதுகாத்து வந்தான்.

"நாய்குட்டி பெயர் எல்லாம் இல்லை. நான் உருவாக்கிக் கொண்டிருக்கும் புது எந்திரனுக்கு இந்த பெயர் வைக்கலாம் என்றிருக்கிறேன்."

"அது என்ன இந்திரஜித். வித்தியாசமான பெயராக இருக்கிறது. வழக்கமாக ரெமோ, மேக்ஸ் என்று தானே பெயர் வைப்பீர்கள்."

"நான் உனக்கு ராமாயணம் கதை சொல்லியிருக்கிறேன் அல்லவா? அதில் வரும் அசுரன் ராவணனின் மகன் தான் இந்திரஜித்."

"ஆக இந்திரஜித் கெட்டவன். தற்போது மக்கள் எந்திரர்களை அச்சத்துடன் பார்க்கிறார்கள். எங்கே மனிதர்களைக்  காட்டிலும் வலிமையானவர்களாக மாறி நம்மை அழித்து விடுவார்களோ என்ற ஐயம் வந்து விட்டது. அப்படி இருக்கும் போது இந்திரஜித் என்ற அசுரனின் பெயர்  வைத்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா. உங்கள் புது எந்திரனுக்கு  எதிர்ப்பு  வராதா?”

"இந்திரஜித் கெட்டவன் இல்லை. தன் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்டவன். சூராதி சூரன். அவனிடம் இல்லாத அஸ்திரங்களே கிடையாது. ராமாயணப் போரில் லட்சுமணனை வீழ்த்தினான். அனுமான் சஞ்சீவி மூலிகையை மட்டும் கொண்டு வராவிட்டால் லட்சுமணன் இறந்திருப்பான். இது எல்லாவற்றையம் விட அவனிடம் ஒரு தனி திறமை இருக்கிறது. இந்திரஜித் ஒரு மாயாவி. தன்னைப் போன்ற பொய் உருவங்களை உருவாக்கி மறைந்து விடுவான். அதனால் எதிரிகளுக்கு அவனுடன் போரிடுவது மிகவும் கடினம்."

"எனக்கென்னவோ இந்தப் பெயர் பிடிக்கவில்லை அப்பா. தூக்கம் வருகிறது. நான் என் அறைக்கு போகிறேன்."

மினி சென்றதும் புத்தகம் பிடித்து விட்டு தேஜா விளக்கை அணைத்தான். சில நிமிடங்களில் உறங்கினான். தூக்கத்தில் ஒரு கனவு வந்தது. தேஜா, மினி அவன் மனைவி மேகா  மூவரும் காரில் ஒரு மலைப் பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வளைவில் கார்  பாதையை விட்டு விலகி கீழே உள்ள ஒரு ஏரியில் விழுகிறது.  மேகா மெல்ல இறந்துக் கொண்டிருந்தாள். "அப்பா" என்று மினியின் அலறல் கேட்கிறது.

தேஜா திடுக்கிட்டு எழுந்தான். வேகமாக மினியின் அறைக்குச் சென்று மெதுவாக கதவைத் திறந்தான்.

மினி நிம்மதியாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

தேஜா தன் அறைக்குத் திரும்பி உறக்கத்தை தொடர முயன்றான்.
                           
                                                 ————**********—————-

காவல் துறை மேன்மை அதிகாரி நரசிம்மா தன் அறையில் யாருக்காகவோ காத்திருந்தார்.
சிறிது நேரத்தில் கதவைத் திறந்து தீரஜ், எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான். தீரஜ் அவர் கீழ் பணி புரிந்து வருபவன். துடிப்பானவன். இளம் வயதிலேயே, வேகமாக முன்னேறி உயர் பதவிக்கு வந்து விட்டான்.

சம்பிரதாய விசாரிப்புகளுக்குப் பின் நரசிம்மா நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

"உன் தலைமையில் நாம் மெடிக்கல் மாபியாவை சென்ற வருடம் அழித்தோம் ஞாபகம் இருக்கிறதா. இப்போது அதே மருத்துவ துறையில் முறைகேடுகள் நடப்பதாக சில சந்தேகங்கள் எழுந்துள்ளன."

தீரஜ் கூர்மையாக கவனிக்க ஆரம்பித்தான்.

"இன்று இந்தியாவில் 20 முக்கிய மருத்துவமனைகள் உள்ளன. இங்கே சில நோயாளிகளின்  நோய்க்கு எந்த தொடர்புமில்லாமல்,  அவர்களின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது. டெங்கு ஜுரத்திற்கு கூட ஸ்கேன் செய்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள். இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால் இந்த ஸ்கேன் எடுப்பதற்கு நோயாளிகளிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை. அப்படியென்றால் இந்த ஸ்கேன் எதற்கு செய்கிறார்கள். மர்மமாக இல்லை."

"இது ஒன்றும் முக்கியமான விஷயமாக எனக்குப் படவில்லை."

"அப்படி நாம் விட்டு விட முடியாது. இது வரை 10000 நோயாளிகளுக்கு இது நடந்திருக்கிறது. கண்டிப்பாக இதன் பின் ஒரு சதி இருக்க வேண்டும். இந்த சதியின் ஆதி மூலம் வரை சென்று கண்டு பிடிப்பது தான் உன் அடுத்த மிஷன்."

தீரஜ் சலிப்புடன் அறையை விட்டு சென்றான்.

                                 —————***********——————-


தேஜா பரிசோதனைக்கூடத்தில் தனது  நிறுவனத்தின் புது எந்திரன் மாடலின் வெள்ளோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தலைமை விஞ்ஞானி சூரியதேவ் விளக்கங்கள் அளித்துக் கொண்டிருந்தார்.

"ஒரு மனிதனின் மூளையை  மென்பொருள் மாதிரியாக உருவாக்கி இந்த எந்திரனில் பொருத்தியிருக்கிறோம். எந்திரனின் வெளித்தோற்றம் மனிதனை ஒற்று இருக்கும். பழங்காலத்து எந்திரர்களைப் போன்று உலோகத்தால் அமைக்கப்பட்டதன்று இந்த எந்திரன்.  தோல், தசை, உள்ளே இருக்கும் உறுப்புகள் எல்லாம் மனிதனைப் போலவே   உருவாக்கப்பட்டது."

"இந்த எந்திரனை எப்படி மனிதனிலிருந்து வேறுபடுத்துவது?"

"ஒவ்வொரு மனிதனின் ரெடினாவும் வெவ்வேறு அமைப்பைக் கொண்டவை. இந்த வேறுபாட்டை எந்திரனின் வடிவமைப்பில் பிரதிபலிப்பது தற்போதைய அறிவியலில் கடினம். இந்த மாடலில் வரும் அனைத்து எந்திரர்களும் ஒரே ரெடினா அமைப்பைக் கொண்டவை."

"இவற்றின் சிந்திக்கும் திறன் எப்படி."

"நீங்கள் பார்க்கும் இந்த எந்திரன் 10  வருடங்கள் முன் இறந்த புவிநேசன்  என்ற ஒரு கவிஞர் மூளையின் பிரதி. இவன் ஒரு கவிதை சொல்வான் கேளுங்கள்."

எந்திரன் கவிதை ஒன்றை கூறினான்.

"இந்தக் கவிதை நான் சொன்ன கவிஞர் எழுதிய 100 வது கவிதை. இதை முன்னரே இவன் அறிந்திருக்கும்  வாய்ப்பு சிறிதும் இல்லை. வெறும் தற்செயல் அல்ல இது. இவன் சிந்தனைகள் கவிஞரை 100  சதவீதம் ஒத்து இருக்கிறது."

"அபாரம்."

தேஜா பரிசோதனை கூடத்திலிருந்து வெளியேறி நான்காவது மாடியிலிருந்த விக்கியின் அறைக்குச் சென்றான். விக்கி தேஜாவின் வலது கை, இடது  கை  எல்லாம்.

"புது எந்திரன் ராட்சத வேகத்தில் உருவாகி வருகிறான்."

"ஆம்.  இதனால் என்ன பயன். மனிதர்களை ஒத்த எந்திரர்களை உருவாக்குவதற்கு அரசாங்கத்திடமிருந்து கடும் எதிர்ப்பு இருக்கிறது. ஒரு எந்திரன்  தன்னை ஒத்த மனிதனைப் போல இருப்பதால் மற்றும் சிந்திப்பதால் மற்றவர்களை ஏமாற்றி மோசடி செய்யலாம் இல்லையா? சமூகத்தில் எவ்வளவு குழப்பங்கள் ஏற்படலாம்.

"தற்காலத்தை மட்டுமே சிந்திப்பவன் சாமானியன். தன் காலத்தைத் தாண்டி நூறு ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகள் கழித்த ஒரு சமூகத்தை  கற்பனை செய்பவன் கடவுள். நான் கடவுளாக விரும்புகிறேன்."

விக்கியின் முகத்தில் தோன்றிய கேலி புன்னகையை தேஜா கவனிக்க தவறவில்லை.

"நான் உன்னிடம் கொடுத்த அசைன்மென்ட் என்னவாயிற்று."

"இது வரை 10000 சாம்பிள்கள் கிடைத்து விட்டது. அனைத்தும் இந்த கணினியில் ஏற்றப்பட்டு விட்டது."

"வேகம் போதாது. உன் இலக்கு 10 லட்சம் சாம்பிள்கள்."

"நாம் செய்வது சட்டப்படி குற்றம்.  நம் சப்லையர்களை இதற்கு சம்மதிக்க வைப்பது மிகக் கடினமான வேலை என்பது உங்களுக்கே தெரியும்."

"வெறும் சாக்குகளை சொல்லி என்னிடம் வேலை செய்ய இயலாது. உன் சிந்தனை நான் கொடுத்த இலக்கு பற்றியே இருக்க வேண்டும். 24  மணி நேரமும் அதைப் பற்றி மட்டுமே சிந்தனை செய். வழி தானாக உனக்கு தெரியும்."

தேஜா தன் அலுவலக கட்டிடத்தை விட்டு வெளியேறி மெதுவாக நடக்க ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் ஒரு பரந்த வெளி மைதானத்தில் இருந்த அந்த விண்கலத்தைப் பார்த்தான். இன்னும் ஒரு வாரத்தில் முழு அளவில் தயாராகி விடும். மனிதன் செவ்வாய் கிரகத்தை எட்டும் நாள் தொலைவில் இல்லை.

கனவுகள் மெய்ப்படும் காலம் நெருங்கி விட்டது. புது உலகம், புது சமூகம் உருவாகும். அதை உருவாக்கியவன் நான். இந்த சிந்தனை அவன் உணர்ச்சிகளை உச்சத்திற்கு கொண்டு சென்றது. சட்டென நிதர்சனம் அவனை தொற்றியது. மினி தனக்காக காத்திருப்பாள் என்பது நினைவுக்கு வந்தது. வேகமாக வீட்டை நோக்கி சென்றான் 

                                         ————-************—————

நரசிம்மாவிற்கு அசைவ உணவு வகைகள் மிகவும் விருப்பம். யாரும் அதிகம் தெரிந்திராத சிறிய உணவகங்களில் உண்பது அவர் வழக்கம். சென்னை கிண்டியில் உள்ள மதீனா பாய் கடையில் வாரம் ஒரு முறையாவது வருகை தந்திடுவார். அன்று அவருடன் தீரஜும் சாப்பிட வந்திருந்தான்.

"கேசில் ஒரு சிறு க்ளூ கிடைத்திருக்கிறது. நீங்கள் கூறிய 20 மருத்துவமனை முதலாளிகளும் சென்ற ஆண்டு வெவ்வேறு நாட்களில் விக்கி என்பவனை சந்தித்திருக்கிறார்கள். இந்த விக்கி புகழ் பெற்ற தொழிலதிபர் தேஜாவின் உதவியாளன்."

"எந்த தேஜா? எந்திரன், செவ்வாய் கிரகம் என்று பத்திரிக்கைகளில் பேட்டி கொடுப்பானே அவனா?"

"ஆம். விக்கி அவர்களை சந்தித்த ஒரு வாரத்தில் இவர்களின் ஸ்விஸ் அக்கவுண்டில் பல கோடி பணம் கைமாறியிருக்கிறது."

"ம். யோசிக்க வேண்டிய விஷயம் தான்."

"விக்கி, தேஜா இவர்களை நன்றாக கண்காணிக்க வேண்டும். அடுத்த வாரம் கேசில் மேலும் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறேன்.”

                                             ————*********————-

 "மினி,  பள்ளியில் இன்று உனது நாள் எப்படி கழிந்தது."

"மேத் டீச்சர் அல்ஜீப்ரா நடத்தினார்கள். பெரும் போர். ஆங்கிலம் பரவாயில்லை. வரலாறு கிளாஸ் தான் சுவராஸ்யமாக இருந்தது. இன்று சென்ற நூற்றாண்டில் ஒடுக்கப்பட்டவர்கள் பற்றிய வரலாறு நடத்தினார்கள். அமெரிக்காவில் கறுப்பர்கள் அடிமையாக நடத்தப்பட்டது, இந்தியாவில் தலித்துகள் ஒடுக்கப்பட்டது என்று சுவையான விபரங்கள் பல பாடத்தில் இருந்தது. எனக்கு ஒரு சந்தேகம். நம் எந்திரர்களும் இவர்களை போல தானே? என்ன தான் அவர்கள் சிந்திக்கும் ஆற்றல் பெற்றாலும், அவர்களுக்கு   தங்களுக்கென்று லட்சியம் ஓன்றும் இல்லையே. மனிதர்களுக்கு சேவை செய்வதே அவர்கள் விதியா?"

"எந்திரர்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று முதலில் குரல் கொடுப்பவன் ஒரு எந்திரனாக இருக்காது. அதுவும் ஒரு மனிதனாகத் தான் இருப்பான். சொல்லப் போனால் எந்திரர்கள் தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணமே மனிதர்கள் தான் உருவாக்க வேண்டும். அப்படிப்பட்ட சிந்தனை அவர்களை இயக்கும் மென்பொருள் வடிவமைப்பினாலேயே உண்டாக்க முடியும்." 

"எதிர்காலத்தில் எந்திரர்கள் நம்மைப் போலவே சிந்திப்பார்களா?"

"தற்போது விஞ்ஞானிகள், சிந்திக்கும் எந்திரர்களை, மனித மூளையின் மென்பொருள் பிரதியாக தான் உருவாக்க  முயற்சிக்கிறார்கள். இது வெற்றி பெற்றால் மனிதர்களை ஒத்த எந்திரர்கள் மனிதர்களுக்கு துணையாக அவர்களுடன் சம உரிமை கொண்டவர்களாக இந்த பூமியில் சில காலம்  வாழ்வார்கள். இதன் பிறகு  100,000  ஆண்டுகள் கழித்து உருவாகும் எந்திரர்களின் சிந்தனையே வேறு விதமாக இருக்கும். எப்படி மிருகங்களின் சிந்தனை செடிகளின் சிந்தனையை விட வேறுபட்டு  இருக்கிறதோ,  மனிதர்களின் சிந்தனை முறை மிருகங்களிலிருந்து வேறுபட்டு இருக்கிறதோ, எந்திரர்கள் தங்களுக்கென ஒரு சிந்தனை முறையை உருவாக்குவார்கள். அந்த சிந்தனை கணித விதிகளை அடிப்படையாகக் கொண்டு இருக்கும். மனித உணர்ச்சிகளை கூட கணித விதிகளாக விளக்கி, அதற்கான மென்பொருள் வடிவு கொண்ட எந்திரர்கள் உருவாகுவார்கள். மனிதனின், தன் சிந்தனை முறை தான் பிரபஞ்சத்தில் சிறந்தது என்ற அகங்காரம் அழியும்.”

"இந்த வகை எந்திரர்கள் நம்மைக் காட்டிலும் வலிமையானவர்களாக மாறி நம்மை அழித்து விடுவார்கள் அல்லவா?"

"அதற்கு சாத்தியம் உள்ளது. ஆனால் இவ்வகை எந்திரர்கள் உருவாக 100,000 ஆண்டுகள் ஆகும். மனித இனம் அதற்குள் தானாகவே அழிந்து விடும்.  இயற்கை சீற்றம், மனிதனின் பேராசை, வல்லரசுகள் இடையே நடக்கும் போர்  காரணமாக மனித  இனம் சில நூறாண்டுகளிலேயே அழிந்து விடும். மனித இனத்தின் அழிவு மனிதனாலேயே நிகழும். எந்திரர்களால் அல்ல."

"நீங்கள் ஒரு பெசிமிஸ்ட் அப்பா."

"இருக்கலாம். மனிதன் அழிந்தாலும் எந்திரர்களால் மானுடம் வாழும்."

புரியவில்லை.”

மனித இனம் அழிந்து விட்டால் எஞ்சியிருப்பவர்கள் எந்திரர்கள். இவர்கள்  ஒரு மனித மூளையின் பிரதியாக தான் இருப்பார்கள். இவர்கள் நம்மைப் போலவே சிந்திப்பார்கள். நாம் அழிந்தாலும் நம் சிந்தனை எந்திரர்களின் வழியாக தொடரும். இப்போது சொல் நான் பெஸிமிஸ்ட்டா அல்லது ஆப்டிமிஸ்ட்டா 

"பரவாயில்லை. என்னை மடக்கி விட்டீர்கள். உங்கள் எந்திரனின் பெயர் இந்திரஜித் என்று முடிவாகி விட்டதா?"

"ஆம்."

"நான் பார்க்கலாமா?"

"கண்டிப்பாக."

"உங்கள் அலுவலகம் வெகு தொலைவில் இருக்கிறது. போக  நேரமாகும். நான் தூங்க வேண்டுமே."

"அலுவலகம் எல்லாம் போக வேண்டாம். என்னுடன் வா."

தேஜா மினியை வீட்டின் கார் கராஜுக்கு அழைத்துச் சென்றான். அங்கு சுவரில் இருந்த ஒரு குமிழியை திருக்கியதும்,  திறந்தது. கீழே செல்ல படி தெரிந்தது. இருவரும் கீழே செல்ல, தேஜாவின் பரிசோதனைக்கூடத்தில்  தேஜாவை போல உருவமுள்ள ஒரு எந்திரன் தெரிந்தான். அவனை ஒரு எந்திரன் என்று அவ்வளவு சுலபமாக சொல்லி விட முடியாது. அச்சு அசல் மனிதனைப் போல, தேஜாவை ஒத்து இருந்தான். The  Fabric  of  cosmos  என்ற புத்தகம்  படித்துக் கொண்டிருந்தான்.


"இந்திரஜித், புத்தகம் படித்து விட்டாயா?"

"இன்னும் 50  பக்கங்கள் இருக்கின்றன. பிரபஞ்சம் உருவான வரலாற்றை இந்த புத்தகத்தை விட தெளிவாக யாரும் கூறி விட முடியாது."

"ஒரு நாளில் நீ 5 புத்தகங்கள் படித்து விடுகிறாய். உன் அறிவுப் பசிக்கு நான் தீனி போட முடியாது. “

தனிமை என்னைக் கொல்கிறது. அதனால் புத்தகங்கள் கொண்டு என் வெறுமையை நிரப்பிக் கொள்கிறேன். நான் எப்போது வெளி உலகைக் காண்பது. மற்ற மனிதர்கள், மற்ற எந்திரர்களுடன் நான் உறவாடும் நாள் என்று?"

"உனக்கு விடுதலை வெகு சீக்கிரம் கிடைக்கும். உன்னை சந்திக்க ஒரு தோழி வந்திருக்கிறாள். இது என் மகள் மினி."

இந்திரஜித் மினியுடன் கை குலுக்கினான்.

"அப்பா, இது நீங்களே உருவாக்கிய எந்திரனா? அப்போது உங்கள் அலுவலகத்தில் விஞ்ஞானிகள் உருவாக்கும் எந்திரனுக்கும் இவனுக்கும் என்ன வேறுபாடு. இது பற்றி மற்றவர்களுக்கு தெரியுமா?"

"இவனைப் பற்றிய விபரங்கள் யாருக்கும் தெரியாது. இவன் என் விஞ்ஞானிகள் உருவாக்கும் எந்திரனை விட விசேஷமானவன்."

"எப்படி."

"இன்றைய உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகள் மனிதர்களை போல சிந்திக்கும் எந்திரர்களை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அதில் அவரக்ளுக்கு 90 சதவிகித வெற்றி மட்டுமே. ஏனெனில்  அவற்றால் சிந்திக்க மட்டுமே இயலும். இந்திரஜித்தின் சிறப்பு தன் சிந்தனை குறித்த தன்னுணர்வு இருக்கும். தன் சிந்தனைகளைக் குறித்தும் அவனால் சிந்திக்க முடியும். அதனால் இவன் நூறு சதம் மனிதனை ஒத்து இருப்பவன்.”

மினி இந்திரஜித்துடன்  பேசி,  விளையாடிக் கொண்டிருந்தாள்.

"அப்பா, இவனுடன் பழகும் போது, உங்களுடன் இருப்பது போன்ற உணர்வு வருகிறது. எனக்கு இவனை மிகவும் பிடித்திருக்கிறது. இந்திரஜித் என்ற பெயரும் கூட."

தேஜாவின் முகத்தில்  புன்னகை தோன்றியது.

                                         ————-*************———————

"பாஸ் தேஜா கேசில் இப்போது பல விஷயங்கள் தெளிவாகிறது. எல்லாப் புள்ளிகளும் இணைத்து ஒரு சித்திரத்தை உருவாக்க முடிகிறது."

தீரஜின் குரலிலும் உடல் மொழியிலும் தெரிந்த பரபரப்பை நரசிம்ம கவனிக்க தவறவில்லை. பெரும்பாலும் ஞாயிறன்று வீட்டிற்கு அலுவல் விஷயமாக யாரையும் அவர் சந்திப்பதில்லை. அவ்வப்போது சில விதி விலக்குகள் ஏற்படுவது உண்டு, இன்று போல.

"முதலில் உட்கார. காபி சாப்பிடுகிறாயா. என் கையால் நானே போட்டு தருகிறேன்.”

"பரவாயில்லை சார் வேண்டாம். தேஜா மிக சக்தி வாய்ந்த எந்திரர்களை உருவாக்க முயலுகிறான். இவர்கள் ஆச்சு அசல் ஒரு நிஜ மனிதனின் பிரதியாக இருப்பார்கள், என்னைப் போல, உங்களை போல."

"இது சட்டப்படி குற்றம் அல்லவா?"

"ஆம். ஒரு நிஜ மனிதனின் உருவில் இருக்கும் ஒரு எந்திரனை வைத்து ஒரு வங்கியை கொள்ளை அடிக்கலாம், கொலைகள் செய்யலாம், மேலும் பல மோசடிகள் செய்ய வாய்ப்பு உள்ளது அல்லவா. அதனால் தான் இதற்கு அரசு தடை விதித்திருக்கிறது."

"அதற்கும் நம் மருத்துவமனைகளின் மோசடிக்கு என்ன தொடர்பு?"

"என்னைப் போன்ற ஒரு எந்திரன் தேவை என்றால், தோற்றத்தில் மட்டும் என்னைப் போல இல்லாமல், சிந்தனையிலும் என்னைப் போன்று இருக்க வேண்டும். என்னைப் போன்று சிந்திக்க வேண்டுமென்றால் என் மூளையின் பிரதி தேவை அல்லவா? பேஷண்டுகளின் மூளையை ஸ்கேன் செய்து, அதன் மென்பொருள் பிரதி எடுத்து, அதை தான் உருவாகும் எந்திரர்களுக்கு பொருத்துவது தான் தேஜாவின் திட்டம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் என்னிடம் இருக்கின்றன."

"கிளம்பு. என் காரில் செல்லலாம்."

"எங்கே போகிறோம் பாஸ்."

"தேஜாவை கைது செய்ய."

                                —————-**************————————-


தேஜாவிற்கு அன்றைய இரவும் துர்கனவுகளின் தொல்லை. உறக்கம் வராததால் கீழே  இந்திரஜித்தை சந்திக்க சென்றான். புத்தகம் படித்துக் கொண்டிருந்த இந்திரஜித், தேஜாவின் வருகையினால் மகிழ்ச்சி அடைந்தான். தனிமை எந்திரனை எவ்வளவு வாட்டுகிறது என்பது தேஜாவிற்கு புரிந்தது.

"இன்று என்ன புத்தகம் படித்தாய்?"

"Parallel  Worlds என்ற புத்தகம். நம் பிரபஞ்சங்கள் போல பல பிரபஞ்சங்கள் இருப்பது குறித்த புத்தகம்."

"ஆம். இது இன்னும் முழுமையாக நிறுவப்படாத அறிவியல் கோட்பாடு."

"உயிரினங்கள் பூமியை தவிர்த்து வேறு உலகங்களில் இருக்க வாய்ப்பு உள்ளதா?"

"அது பற்றி தெரியாது. ஆனால் மனிதர்கள் வேறு உலகங்கள் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை."

"மனிதர்களுக்கு இந்த பூமியை விட்டு செல்ல விருப்பம் இருக்காது. எத்தனை பேர் தாங்கள் வளர்ந்த ஊரை விட்டு செல்ல மறுக்கிறார்கள். அது போல மனிதர்கள் பூமியுடன் தங்களுக்கு இருக்கும் பிணைப்பை அறுத்து விட்டு செல்ல மாட்டார்கள்.”

"சந்தர்ப்பங்களின்  அழுத்தத்தினால் வேறு உலகங்களுக்கு செல்லும் நிலைக்கு மனிதர்கள் தள்ளப்படுவார்கள். ஆனால் அங்கு சென்றும் பூமியில் தாங்கள் கழித்த நாட்கள் எவ்வளவு சுகமானவை என்று அசை போடுவார்கள்."

"நீங்கள் பூமியை விட்டு செல்வீர்களா?"

"கண்டிப்பாக. என் மனநிலை கொலம்பஸ், வாஸ்கோ  டகாமாவை ஒத்தது. பல கிரகங்களில் தடம் பதிப்பதே என்  வாழ்நாள் லட்சியம்."  

"
கொலபஸ், வாஸ்கொ டகாமா என்ற பெயர்கள் கேட்டதும் நான் படித்த சரித்திர புத்தகங்கள் நினைவுக்கு வருகிறது. குறிப்பாக மகாபாரதம். என்னவொரு சரித்திர கதை. எப்படிப்பட்ட மனிதர்கள் அக்காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்."

"மகாபாரதம் சரித்திரக் கதை அல்ல, ஒரு இதிகாசம். அது உண்மையா, பொய்யா, அல்லது இரண்டின் கலவையை என்று எனக்கு இன்றும் சந்தேகம் தான். "

"ஆனாலும் எப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் நிறைந்துள்ளன இக்கதையில். குறிப்பாக அரவான் கதாபாத்திரம் நினைத்தால் மனதில் ஒரு கிளர்ச்சி தோன்றுகிறது.”

"மகாபாரத யுத்தத்திற்கு முன் நடக்கும் உயிர்பலிக்கு தன்னை சமர்ப்பித்தவன். அது அக்காலத்தில் நடந்த ஒரு சடங்கு."

"எனக்கு ஒரு சந்தேகம், உயிர்பலிக்கு ஏன் கிருஷ்ணர் தன்னை சமர்ப்பிக்கவில்லை. ஏன் அர்ச்சுனனோ, தருமனோ தேர்வு செய்யப்படவில்லை. வலியவர்கள் இடையே நடக்கும் விளையாட்டில் ஏன் ஒரு எளியவன், அப்பாவி பலியிடப்பட்டான்."

"அரவானிடம் நீ இந்த கேள்வி கேட்டால், அவன் உன்னை கொன்றே இருப்பான். அவனைப் பொறுத்த வரை  இது தனக்கு கிடைத்த பெரிய கௌரவம் என்றே நினைத்திருப்பான்."

"இவ்வாறு தானே வலியவ்ரகள் எளியவர்களை காலம்காலமாக  மூளைச்சலவை செய்கிறார்கள். எனக்கு ஒரு சிறு சந்தேகம். நாளை மனிதர்களுக்கிடேயே நடக்கும் யுத்தத்தில் அரவான் யார். எந்திரர்களா?"

"இருக்கலாம், யார் கண்டது."

"உங்களுக்கு  ஒரு இக்கட்டு வந்தால், என்னை பலியிட்டு உங்களை காத்துக் கொள்ள முன் வருவீர்களா?"

தேஜா பதில் தெரியாமல் கேள்வியை தவிர்க்க யோசித்தான்.

"உங்கள் தயக்கம் என்னை அச்சமூட்டுகிறது. என் கைகள் ஏன் இப்படி நடுங்குகிறது. இது தான் உயிர் பயமா."

அப்போது மேலே கதவை யாரோ ஓங்கி தட்டும் சத்தம் கேட்டது. தேஜாவின் உடலில் ஒரு பரபரப்பு தெரிந்தது.

"அவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். ஆபத்து. மினியை எழுப்ப வேண்டும். நான் இறந்தாலும் பரவாயில்லை அவள் தப்பிக்க வேண்டும்.”

தேஜா மேலே நோக்கி ஓடினான்.

இந்திரஜித் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.

"தேஜாவிற்கு ஆபத்து. அப்படியானால் எனக்கும் ஆபத்து. தப்ப வேண்டும்."

இந்திரஜித் ஒரு வினோதமான காரியம் செய்தான். தரையில் இருந்த ஒரு கல்லை அகற்றினான். படிக்கட்டுகள் தெரிந்தது. அதில் இறங்கி சென்றான். சில நொடிகளில் படிக்கட்டிலிருந்து  மீண்டும் அறைக்கு  வந்தான்.

                               ——————***************———————————-

கதவை தட்டியது நரசிம்மாவும் தேஜாவும் தான். கதவை அடைத்து உள்ளே சென்று படுக்கை அறையிலிருந்த தேஜாவை கைது செய்தனர்.

தேஜாவை நரசிம்மா விசாரணை செய்து கொண்டிருந்தார். ஒரு சிகரெட்டை பற்ற வைத்து தேஜாவுக்கு  கொடுத்தார். தேஜா பழக்கமில்லை என்று மறுத்தான்.

"எனக்கும் பழக்கிமில்லாமல் தான் இருந்தது. எப்போது போலீஸ் வேலைக்கு வந்தேனோ, வேலை தரும் மன அழுத்தத்தினால் இந்த கருமத்தை பிடிக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் ஸ்ட்ரெஸ்ஸை எப்படி ஹாண்டில் செய்கிறீர்கள்."

"பாட்டு கேட்பது. புத்தகம் படிப்பது.”

"உங்களுக்கு ஒரு பெண் இருக்கிறாள் அல்லவா. அவள் எங்கே?"

" தோழி வீட்டில் இருக்கிறாள். அவளை எதற்கு இதில் இழுக்கிறீர்கள்?"

"சும்மா விசாரிக்க தான் செய்தேன். அவளுக்கு ஒரு தீங்கும் வராது கவலைப் படாதீர்கள்."

"அவள் சிறு பெண். தப்பு செய்தது நான்." 

"நீங்கள் தப்பு செய்ததாக இது வரை நான் சொல்லவே இல்லையே. நீங்கள் செய்த குற்றம் என்ன தெரியுமா?"

"தெரியும். நோயாளிகள் மூளையின் ஸ்கேன் அவர்களுக்கு தெரியாமல் மருத்துவமனையிலிருந்து வாங்கியது. இது நோயாளிகளின் அந்தரங்கமான விஷயம். நோயாளிகளின் அனுமதி இல்லாமல் மருத்துவமனைகள் யாருக்கும் பகிரக் கூடாது. சட்டப்படி குற்றம்."

"இது சிறு தவறு. நீங்கள் செய்தது அதை விட பெரும் குற்றம். மனிதர்களை ஒத்த எந்திரர்களை உருவாக்க முயலுகிறீர்கள். இதனால் நிகழும் குற்றங்கள், ஆள் மாறாட்ட மோசடிகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று உங்களுக்கு புரிகிறது."

"தெரியும். ஆனால் அது பற்றி எனக்கு கவலையில்லை. நான் அடிப்படையில் ஒரு விஞ்ஞானி. தேடல் மட்டுமே என் வாழ்க்கை. படைப்பது மட்டுமே என் லட்சியம். அதன் பக்க விளைவுகள் பற்றி யோசிக்க வேண்டியது அரசாங்கம். நானில்லை."

"நூறு ஆண்டுகள் முன் விஞ்ஞானிகள் அணு பிளவை கண்டு பிடித்தார்கள். அதன் விளைவு தான் அணு ஆயுதங்கள். இன்று வரை இவற்றால் உலகம் அழியலாம் என்ற அச்சம் இருக்கிறது. விஞ்ஞானிகளுக்கு சமூக அக்கறை இருக்க வேண்டியது அவசியம் அல்லவா."

"எனக்கு சமூக அக்கறை இருக்கிறது. சில நூறு ஆண்டுகள், அல்லது ஆயிரம் ஆண்டுகள் கழித்து மனித இனம் அழியும் நிலை ஏற்படலாம். கோள வெம்மை, இயற்கை சீற்றங்களினால்   வாழ இயலாத சூழ்நிலை வரலாம். உயிர் வாழ்வதற்கு வேறு உலகங்களுக்கு வேறு கிரகங்களுக்கு தான் செல்ல வேண்டிய  நிர்பந்தம் வரும் போது, மனித இனத்தை விட எந்திரர்களே இக்கடுமையான தட்ப வெப்பத்தை தாக்கு பிடிக்கும் திறன் இருக்கிறது. ஆக எதிர்காலத்தில் மனித இனம் அழியும். அதன் பிறகு  பிறகு எந்திரர்கள் இந்த உலகை ஆள்வார்கள். அவர்களை உருவாக்கியது என் சமூக அக்கறை இல்லையா?"

"மனித இனம் அழிந்து விடுகிறது. அதன் பிறகு எந்திரர்கள் ஆள்கிறார்கள். இதனால் மனித இனத்துக்கு என்ன நன்மை."

"நான் உருவாக்கும் எந்திரர்கள் மனிதர்களின் நகல்கள். மனிதர்களை போலவே சிந்திப்பவர்கள். இவர்கள் மூலம் மனித இனம் அழிந்தாலும் மானுடம் வாழ்கிறது அல்லவா?"

"புரியவில்லை."

"மனிதன் என்பவன் யார். வெறும் உடல் மட்டுமா. உடல் இறந்தாலும் ஆன்மா வாழ்கிறது என்கிறது இந்து ஞான நூல்கள். அது உண்மையா என்று தெரியாது. என்னைப் பொறுத்த வரை மனிதன் என்பவனின் அடையாளம் அவன் உடலோ, ஆன்மோவோ கிடையாது.  அவன் சிந்தனைகளே. அந்த சிந்தனைகள் காலம் காலமாக தொடர்வதற்கு நான் வழி வகுக்கிறேன். சொல்லுங்கள் நான் குற்றவாளியா?"

"இதெல்லாம் பல நூறாண்டுகள் கழித்து கிடைக்கும் நண்மை. தற்போதைக்கு இந்த கண்டுபிடிப்பினால் நிகழும் குற்றங்கள், குழப்பங்களை எப்படி தடுப்பது."

"என் எந்திரர்கள் இந்த பூமியில் வாழ மாட்டார்கள். அதனால் மனிதர்களுக்கு எந்த பிரச்சினையும் வராது"

நரசிம்மாவின் முகத்தில் சிறு அதிர்வு தெரிந்தது.

"நீங்கள் செவ்வாய் கிரகம் செல்ல விண்கலம் உருவாக்குகிறீர்கள் அல்லவா. உங்களுக்கு அங்கே செல்லும் விருப்பம் உள்ளதா."

தேஜாவின்  முகத்தில் புன்னகை  தோன்றியது.

"நான் நினைத்ததை விட நீங்கள் அறிவாளி நரசிம்மா. இந்நேரம் நான் செவ்வாய் கிரகத்தை அடைந்திருப்பேன்.”

நரசிம்மா அதிர்ச்சியடைந்தார். 

"நீ உண்மையில் யார்?  நீ உண்மையில் தேஜாவா? நீ மனிதனா  அல்லது எந்திரனா?"

"உங்களுக்கு ராமாயணத்தில் வரும் இந்திரஜித்தின் கதை தெரியமா?”

"அடே மாயாதாரி. தேஜா செவ்வாய் கிரகம் சென்று விட்டானா? உண்மையை சொல்."

அப்போது நரசிம்மாவிற்கு தீரஜிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு வந்தது."

"பாஸ். நாம் ஏமாந்து விட்டோம். நான் தேஜாவின் வீட்டை  நன்கு அலசினேன். ஒரு ரகசிய அறையில் தேஜாவின் உருவத்தை ஒத்த எந்திரர்கள் 10  பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்கள் பெயர் இந்திரஜித் என்கிறார்கள்."

நரசிம்மாவின் கை அதிர்ச்சியில் நடுங்கியது. இந்திரஜித் வெறி பிடித்தவன் போல சிரித்தான்.

தேஜா ஒரு இந்திரஜித்தை உருவாக்கினான். இந்திரஜித் தன்னைப் போல பத்து இந்திரஜித்தை உருவாக்கினான். இவர்களில் நான் யார் . தேஜாவா? இந்திரஜித்தா? அல்லது இந்திரஜித் உருவாக்கிய இந்திரஜித்தா? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். "

"உன்னை  அடித்து நொறுக்கி தூள் தூளாக உடைக்கிறேன் பார்."

"அது இப்போது முக்கியமில்லை. டிவியை ஆன் செய்து செய்தியைப் பாருங்கள்.

டிவியில் காலவரமான முகத்துடன் ஒரு பெண் செய்தி வாசித்துக் கொண்டிருந்தாள்.

"பூமியை நோக்கி ஒரு சிறு கோள் (Asteroid) நெருங்கி வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது முதலில் வேறு பாதையில் செல்லும் என்பதால்  பூமிக்கு எந்த பாதகமும் வராது என்று விஞ்ஞானிகள் கருதி இருந்தனர். அனால் தற்போது இதன் பாதை மாறி விட்டது என்றும், ஒரு வாரத்தில் பூமியை தாக்கும் என்றும், மனித இனமே அழியலாம் என்றும் கூறியுள்ளனர்."

நரசிம்மா மயக்கத்தில் கீழே விழுந்தார்.

                                            —————***********—————

                                               ஒரு வருடம் கழித்து செவ்வாய் கிரகத்தில்

"செவ்வாய் கிரகம் உனக்கு பிடித்திருக்கிறதா மினி."

"மிகவும் பிடித்திருக்கிறது. பூமியை போன்ற ஒரு உலகை நாம் படைத்திருக்கிறோம். இங்கு நம்மை தவிர மற்ற அனைவரும் எந்திரர்கள். ஆனால் மனிதர்களுக்கும் அவர்களுக்கும் எந்த வேறுபாடும் தெரியவில்லை. இது எப்படி சாத்தியமாயிற்று."

"பூமியில் இருக்கும் 10000  மனிதர்கள் மூளையின் மென்பொருள் பிரதி வைத்து தான் இந்த எந்திரர்களை உருவாக்கினோம். இனி செவ்வாய் கிரகத்தில் எந்திரர்களின் சமூகம் தழைக்கும்."

அவர்கள் இருவருக்குமிடையே சில நிமிடங்கள் நிகழ்ந்த மௌனத்திற்கு பின் மினி உரையாடலை தொடர்ந்தாள்.

"அன்று என்ன நடந்தது அப்பா?"

"என்று?"

"நாம் பூமியிலிருந்து தப்பிய நாள். நான் நன்கு உறங்கி கொண்டிருந்தேன். கதவை தட்டும் சத்தம் கேட்டது. நீங்கள் என்னை எழுப்பினீர்கள். உங்கள் அருகே இந்திரஜித் இருந்தான். அவனை அங்கேயே விட்டு பின் கதவு வழியாக தப்பி, நாம் விண்கலம் இருக்கும் இடத்தை அடைந்து, செவ்வாய் கிரகம் வந்தோம். ஏன் இந்திரஜித்தை நம்முடன் அழைத்து வரவில்லை. அவனை ஏன் அங்கேயே விட்டு வந்தீர்கள். இது நாம் அவனுக்கு இழைத்த துரோகமாக மனதை உறுத்துகிறது."

"கவலைப்படாதே மினி. அவன் இருக்க வேண்டிய இடம் பூமி  தான். இந்நேரம் அவன் பூமியை ஒரு சொர்க்கமாக மாற்றி இருப்பான். அவனும்  நம்மை போல  ஒரு எந்திரர்களின் சமூகத்தை பூமியில் உருவாக்கி இருப்பான்."

"சில சமயம் எனக்கு நானும் எந்திரனா என்று சந்தேகம் வருகிறது. சிறு வயதில் நடந்த விபத்தில் மினி உண்மையில் இறந்து விட்டாளா? அவள்  நினைவாக நீங்கள் உருவாக்கிய எந்திரன் தான் நானா என்று பல சமயம் யோசித்தது உண்டு?"

"நேரமாகி விட்டது. நீ படு மினி."

தேஜா விளக்கை அணைக்க சென்றான்.

"அப்பா நான் ஒன்று கேட்கவா?"

"உண்மையில் நீங்கள் யார்? தேஜாவா? இந்திரஜித்தா?

"அதிகம் யோசித்து குழப்பிக் கொள்ளாதே மினி. படுத்து உறங்கு."

தேஜா தன் படுக்கை அறை சென்று சிறிது நொடிகளில் உறங்கினான்.

அவனுக்கு இப்போதெல்லாம் கனவுகள் வருவதில்லை.

                                                                                  முற்றும்No comments:

Post a Comment