Sunday, October 13, 2019

குழல் - சிறுகதை



                                                                           

                                                                குழல் 

என் பெயர் ரித்விகா. நான் வளர்ந்ததல்லாம் மும்பையில். வேலை கிடைத்து  சென்னைக்கு வந்திருக்கிறேன்.  இரண்டு வாரங்கள் அலைந்து  தரமணியில்  இந்த வீடு கிடைத்தது.  சில மாதங்களுக்கு முன் தான் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் கட்டியும் கட்டாமலிருக்கும் வீடுகள். 

டின்னர் முடித்து விட்டு, அரைகுறையாக விட்டிருந்த புத்தகத்தை படித்து முடித்தேன். நைட்டி மாற்றிக் கொண்டு படுக்கையில் விழுந்தேன். மிகுந்த உடல் அசதி. பொதுவாக இரவுகள் எனக்கு கொடுமையானது. எத்தனை மணிக்கு படுக்க சென்றாலும், மூன்று மணி நேரம் கழித்தே உறக்கம் வரும். அந்த மூன்று மணி நேரம் நரக வேதனை தான். புரண்டு புரண்டு படுப்பேன். பாடல்கள் கேட்பேன். பழைய நினைவுகளை அசை போடுவேன். ஆனால்  உறக்கம் பிடிக்க மூன்று மணி  நேரம் ஆகும்.

உறக்கம் என்னை ஆட்கொள்ளும் தருவாயில்,, திடீரென்று என் உணர்வுகள் கூர்மையானது. மென்மையான இசையின் ஒலி என்னை ஆட்கொண்டது.

இசை இன்னும் தெளிவாக கேட்டது. குழலின் இசை தான் அது.  இசை எங்கிருந்து வருகிறது. இந்த நேரத்தில் குழலை வாசிப்பவர் யாராக இருக்கும். என் கண்களை மூடினேன். இசையின் பிரவாகம் என் உடல் முழுதும் பரவியது. மாயக்கண்ணனின் உருவம் என் கண் முன்  தோன்றியது.  என் உணர்வுகளை  வருடும்  இசையில் நான் கிரங்கினேன். முடிவின்றி தொடர வேண்டும்  என்று யாசித்தேன். எப்போது உறங்கினேன் என்று நான் அறியவில்லை. 

அடுத்த நாள் இரவு எதிர்பார்ப்புடன் படுக்கைக்கு சென்றேன். அறையின் விளக்கை  அணைத்தேன். முழு இருட்டு. அமைதி. சிறிது நேரத்தில் குழலின் இசை இரவின் தென்றலில் தவழ்ந்து என்னை அணைத்தது. என் மனதில் கற்பனவுகள் உதித்தது. இசைப்பவன் உருவம் எப்படி இருக்கக் கூடும். நான் கேட்பதை அவன் அறிவானா? அவனும் என்னைப் போன்ற தனியனா.  என் கற்பனை மேலும் விரிந்தது. மாபெரும் சமுத்திரத்தின் கரையோர பாறையில் அமர்ந்து அவன் குழல் வாசிக்கிறான். நான் அருகில் மெய் மறந்து  கேட்கிறேன். நீர்வீழ்ச்சியின் நீர் பிரவாகத்தில் நான் நின்றிருக்க, அவன் என்னை ரசித்தவண்ணம் குழல் வாசிக்கிறான். காட்டில் பறவைகள் சூழ்ந்திருக்க அவன் குழல் வாசிக்கிறான். இப்படி பல காட்சிகள்.

அடுத்த நாள்  இரவின் குழல் இசையின் போது அவன் மேலும் எனக்கு நெருக்கமாகிறான். என்னை மெதுவாக அணைக்கிறான். என் உடலையே ஒரு குழல் போல வாசிக்கிறான். அன்று அவனுடன்  உறவு செய்வதாக நான் மானசீகமாக கற்பனை செய்தேன். 

காலையில் அவனை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. இசை அருகில் இருக்கும் வீட்டிலிருந்து தான் வந்திருக்க  வேண்டும்.  அந்த வீட்டின்  கதவுகள் முன் நின்று கவனித்தேன். வீட்டில் யாரும் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. கதவைத் தட்டலாமா என்று யோசித்தேன்.

அவன் என்னை எப்படி எதிர்கொள்வான் என்று நினைத்ததும் தயக்கத்துடன் திரும்பினேன்.

அன்று இரவு மீண்டும் இசை. இசையின் சக்தி என்னை அதன்  அருகே அழைத்துச் சென்றது. மனதில் எதிர்பார்ப்புடன் கூடிய படபடப்பு. கதவைத் தட்டினேன். கதவு தானே திறந்தது. முன் அறை இருட்டாக இருந்தது. அடுத்த அறையில் வெளிச்சம் தெரிந்தது. அங்கிருந்து  இசை வந்து கொண்டிருந்தது. மெதுவாக அவ்வறைக்குச் சென்றேன். இசைப்பவரின் கண்களும் என் கண்களும் சந்தித்தன.அடுத்த நொடி நான் ஒரே ஓட்டமாக வெளியேறி என் வீட்டின் படுக்கையில் விழுந்தேன். மனம் வெடித்து சிதறுவது போல ஓர் குமுறல். எவ்வளவு பெரிய ஏமாற்றம். தலையணையை கண்ணீர் நனைத்தது.

காலை மீண்டும் அடுத்த வீட்டிற்கு சென்றேன். 62  வயது முதிய பெண்மணி நாற்காலியில் அமர்ந்திருந்தார். என்னை சோபாவில் அமர சொன்னார்.

"ஏன் நேற்று இரவு அப்படி ஒரு ஓட்டம். குழலூதும் கண்ணனை எதிர்பார்த்து ஏமாந்தாயோ?"

இதயத்தை சொடுக்கென்று அடித்தது போல இருந்தது. 

"நம் இருவருக்கும் காபி போட முடியுமா. இன்று எனக்கு  மூட்டு வலி அதிகமாக இருக்கிறது."

காபி தயாரித்து இருவரும் பருகினோம்.

"எத்தனை வருடங்களாக குழல் வாசிக்கிறீர்கள்."

"35  வருடங்கள்."

"யாரிடம் கற்றீர்கள்?"

"எல்லாம் கேள்வி ஞானம் தான். என் கணவர் இதில் வித்தகர்."

"அவர் இப்போது எங்கே? "

"அவர்  இறக்கவில்லை ஆனால் என்னை விட்டு பிரிந்து பல வருடங்கள் ஆகி விட்டது. அவர் பெயர் மதனகோபால். எங்கள் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. அப்போது எனக்கு வயது 16.  அவர் என்னை விட பத்து வருடங்கள் மூத்தவர். ஒரு பெரிய கம்பெனியில் வேலை செய்தார். கை நிறைய சம்பளம். அவர் ஒரு அறிவு ஜீவி. பல புத்தகங்கள் படிப்பார். இசை, இலக்கியம், வரலாறு என்று பல விஷயங்கள் பேசுவார். எனக்கு ஒன்றும் புரியாது. அவர் பேசுவதை கேட்பதோடு சரி.  அவருக்கு பிடித்த விஷயங்கள் பேசும் போது, முகத்தில் ஒரு பொலிவு தோன்றும். அதை நான் ரசிப்பேன். என்னை மண்டு கோமதி என்று அழைப்பார். கோமதி, ஆம் அது தான் என் பெயர்.  தினமும் இரவு  பத்து மணிக்கு குழல் வாசிப்பார். நீ நேற்று கேட்ட இசை எல்லாம் அதன் அருகில் கூட வர முடியாது. கேட்கும் போது உடலின் சர்வ நாடிகளும் உச்ச சுதியில் இயங்கும்.  வேறு ஒரு உலகம், கிருஷ்ணனின் கோகுலத்திற்கு அந்த இசை அழைத்துச் செல்லும். இந்த சந்தோஷம் எல்லாம் சில வருடங்கள் தான்.  மோகனா, அவள் வந்ததும் எல்லாம் மாறி விட்டது.”

“அவள் கேரளா பக்கம் ஏதோ ஒரு அரசரின் பரம்பரையிருந்த வந்தவள் என்றார்.  இவரை ஒரு கச்சேரியில் சந்தித்திருக்கிறாள். அவளுடன் மணிக்கணக்காக போனில் பேசுவார்.  பிறகு அவள் வீட்டிற்கே வர ஆரம்பித்தாள். ஐந்து மணி நேரம், ஆறு மணி நேரம் என்று நேரம் போவதே தெரியாமல் பேசுவார்கள். மொசார்ட், பாக், எலியட், பெர்னாட் ஷா  என்று சில  பெயர்கள் காதில் விழும். இந்தப் பெயர்கள் எல்லாம்  யார் என்று கூட தெரியாது. நான் ஒரு ஓரமாக அமர்ந்து அவர்கள் பேசுவதையே கேட்பேன். மாலை நேரம் அவளுக்காக குழல் வாசிப்பார். அவள் அவருடன் இனைந்து சங்கீதம் பாடுவாள்.  அவள் சென்றதும் அன்றிரவு எங்கள் கூடல் நடக்கும். அந்த நாட்கள் மட்டும் மிகவும் உன்மத்தமாக இருப்பார். ஒரு நாள் இரவு உச்சத்தின் போது அவள் பெயர் சொல்லி வீழ்ந்தார்.  அடுத்த நாள் ஒரு கடிதம் எழுதி சென்று விட்டார். அதன் பிறகு அவரை நான் சந்திக்கவில்லை.”

கோமதி சிறிது நேரம் மெளனமாக இருந்தார்.

"அவர் சென்றதும் தனிமை பெரிதும் வாட்டியது. என் பெற்றோர் இறந்து விட்டனர். உறவினர் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. எனக்கு எல்லாமாக அவர் தான் இருந்தார். ஒரு நாள் அவர் அலமாரியை சுத்தம் செய்த போது இந்த குழல் கிடைத்தது. தினமும் இரவு இந்த குழலை எடுத்து வாசிப்பேன். சிறிது நாட்களில் பழகி விட்டது. இவ்வாறாக இத்தனை வருடங்கள் கடந்து விட்டேன்."

"நான் உங்களிடம் ஒன்று கேட்டால் தவறாக நினைக்க மாட்டீர்களே?"

"சொல்"

"நீங்கள் ஏன் அவரை மறக்கவில்லை. அவரைப் பிரிந்த ஏக்கத்திலிருந்து நீங்கள் மீளவில்லை என்று நினைக்கிறேன். அதனால் தான் இந்த குழல், இசை எல்லாம்."

கோமதி மெளனமாக இருந்தார்.

"இப்போது உங்களை தேடி வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடன் சேர்ந்து வாழ்வீர்களா?"

"மீண்டும் வந்தால் அவர்  மீது தூ என்று காரி உமிழ்வேன். நான் இன்னும் அவரை மன்னிக்கவில்லை. ஆனால் இந்த இசை. ஒரு குழந்தை போல.  இதை என் குழந்தையாக ஏற்றுக் கொண்டு இதனுடன் வாழ்கிறேன்."

அன்றிலிருந்து தினமும் கோமதியை  சந்திப்பதை வழக்கமாகக் கொண்டேன். அவருக்கு உணவு சமைத்து கொடுத்து, கதைகள் பேசி, இசையை ரசித்து,  நல்ல தோழியாக  எனக்கு மாறினார்.

ஒரு நாள் இரவு அவர் வீட்டில் சிரிப்பு சத்தம் கேட்டது. கோமதியுடன் வேறு யாரோ ஒரு நபர் இருந்தார். வந்திருப்பவர் ஒரு வயதான ஆண் என்பது தெரிந்து மேலும் என் ஆவல் கூடியது. 

"ரித்து நான் சொன்னேன் இல்லையா. மதனகோபால் இவர் தான். இதனை வருடங்கள் கழித்து என்னை பார்க்க வந்திருக்கிறார். இன்று நாம் இருவரும் சேர்ந்தே ஒரு விருந்து வைப்போம். சமையல் அறைக்கு வா."

சமையல் அறையின் தனிமையில் நான் அவரிடம் விவரங்கள் கேட்டேன்.

"சென்ற மாதம் மோகனா  இறந்து விட்டாளாம். இவருக்கு என் ஞாபகம் வந்து விட்டது. தான் செய்த தவறெல்லாம் உணர்ந்து விட்டார். வந்ததும் வெளியே போ என்று கத்தினேன். கதவை மூடிக்கொண்டு அழுதேன். அவர் என்ன செய்தார் தெரியுமா. புல்லாங்குழலில் ஒரு இசை வாசித்தார் பாரேன், என் கோபம் எல்லாம் தணிந்தது. கதவை திறந்து அவரை அணைத்துக் கொண்டேன்.  அவர் என்னைப் பிரிந்த பின்  நானும் சரித்திரம், இலக்கியம் எல்லாம் படித்தேன் இல்லையா, அவருடன் சரிக்கு சமமாக என்னால்  பேச முடிகிறது. என் குழலிசை கேட்டு மிக அருமை என்றார்.   நேற்று அவருடன் 'அது ' நடந்தது. இந்த வயதிலும் கூட முடிகிறது பார்.”

நான்  பேசாமல் மெளனமாக இருந்தேன்.

"நீ ஏன் அப்படி பார்க்கிறாய்.?"

"ஒன்றுமில்லை. நேற்று அவர் யார் பெயர் சொன்னார்."

கோமதியின் முகத்தை கூட பார்க்காமல் வேகமாக அங்கிருந்து வெளியேறினேன்.

அதன் பிறகு கோமதியை சந்திப்பதை முழுதும் நிறுத்தினேன்.

                                   ———————-*************——————

No comments:

Post a Comment