Wednesday, October 30, 2019

குற்றமும் தண்டனையும் - சிறுகதை


                                                                 

                                                     குற்றமும் தண்டனையும்  

நான் இருப்பது சந்திரகலாவின் வீட்டில். ஒரு விசாலமான அறையில், சோபாவில் அமர்ந்திருக்கிறேன்.  எதிரே இன்னொரு சோபாவில் சந்திரகலா. இருவருக்கும் நடுவே ஒரு டேபிள். என் கைகளில் ஒரு ரிவால்வர். அவளைக் கொல்வதற்கு அவள் கணவனிடமிருந்து பணம் வாங்கியிருக்கிறேன்.

ரிவால்வரைப் பிடித்திருக்கும் என் கைகள் ஏன் இப்படி நடுங்குகின்றன. எதிரில் இருக்கும் பெண்ணின் அழகு என்னைத் தடுமாறச் செய்கிறதா?

நான் சந்திரகலாவின் அழகைப் பற்றி சொல்லியாக வேண்டும். நீள் வட்ட வடிவ முகம். தாமரை போல் விரிந்த கண்கள்.  கூர்மையான நாசி. மாசில்லாத வெண் சருமம். வில் போன்று  வளைந்து பருத்திருக்கும் உதடுகள் அவள் காதின் மடல்களிலிருந்து  கண்களை அகற்றுவது அத்தனை எளிதல்ல. ரோஜாப்பூ நிறத்தில், சிற்பியின் வேலைப்பாடு போல அமைந்திருக்கும் அதிசயம் - அம்மடல்கள்.  30  வயது, இரு குழந்தைகளுக்கு  தாயாக இருந்தவள் என்று சொன்னால் நம்புவது மிக கடினம். 

எனக்கு ஏற்பட்டிருக்கும் மன சலனத்திற்கு அந்த அழகு காரணம் அல்ல. அவள் என்னை எதிர் கொண்ட விதம்.என் வாழ்வில் பலரை இந்த துப்பாக்கியால் கொன்றிருப்பேன். இறப்பதற்கு முன் அவர்கள் கண்களில் தெரியும் மரண பயம், பிறப்பிலிருந்து அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் ஒரு நொடியில் கண் முன் தோன்றுவதாக நான் நினைப்பதுண்டு. அனைத்து  குற்றங்களுக்கும்  என்னிடம் பாவ மன்னிப்பு அக்கண்கள்  கேட்கும். 

ஆனால் சந்திரகலாவின் பார்வையில் இந்த உணர்வுகள் எதுவும் இல்லை.  என் கைகளில் இருக்கும் ரிவால்வரை ஒரு விளையாட்டு பொம்மையாக பாவனை செய்யும் அலட்சியம் என் கைகளில் நடுக்கத்தைக் கொடுத்தது.

"நான் செய்த குற்றத்திற்கு நீ தரவிருப்பது சரியான தண்டனையா? "

பொதுவாக அழகான பெண்களுக்கு இனிமையான குரல் அமைவதில்லை. இவள் ஒரு விதிவிலக்கு. என் படபடப்பு குறைய அவளிடம் பேச நினைத்தேன்.

"என்னை அனுப்பியது உன்  கணவன். அவன்  தரப்பு நியாயத்தை மட்டும் தான் கேட்டேன். உன் தரப்பை சொல். முடிவு செய்கிறேன்."

"புரிகிறது. என்னைக் கொல்ல உன் மனதில் வலிமை இல்லை. என்னை பேச விட்டு உன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயல்கிறாய்."

ரிவால்வரை எதிரே இருந்த டேபிளில் வைத்து அவள் கதையை கேட்க ஆரம்பித்தேன்.

நான் பிறந்தது திருவனந்தபுரத்தில். என் குடும்பம் அரசியல் பின்புலம் கொண்டது. என் தாத்தா மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார். என் தந்தை 20 வருடங்களாக ஒரே தொகுதியில் எம்.எல். ஆக தொடர்ந்திருக்கிறார். நான் ஒரே மகள். எல்லோருக்கும் பிடித்தவளாக இருந்தேன். பெரியவர்களிடம் மரியாதையும், அன்பும் கொண்டவளாக இருந்தேன். தெருவை கடக்க தடுமாறும் முதியவர்களை கை பிடித்து நடத்திச் செல்வேன். என் தாத்தாவுக்கு தினமும் தவறாமல் மாத்திரைகள் தருவது நான் தான்.  ஆனால் அப்போதே என்னிடம் ஒரு ஓரத்தில் குரூரம் இருந்திருக்க வேண்டும். விதமான பூச்சிகளை டப்பாவில் அடைத்து அவற்றின் ஒவ்வொரு கால்களையும் உடல் பாகத்தையும் வெட்டி மகிழ்வேன். அதன்ஒவ்வொரு துடிப்பும் எனக்கு பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தும். இது தவிர்த்து என்னிடம் வேறு குறைகள் இல்லை.

என் 22 வயதில் கார்த்தியுடன் திருமணம் நடந்தது. அவன் தந்தை பெரும் தொழிலதிபர். எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது. திருமணமாகி இரண்டு வருடங்களில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தது. அதன் பிறகு ஏனோ கார்த்தியிடம் பெரும் மாற்றம் தெரிந்தது. ஒரு நாள்  மீனலோசனியுடன் வீட்டுக்கு வந்தான். அவளை உபசரிக்கும்படி என்னை அதட்டினான். வெகு நேரம் சிரித்து சிரித்து பேசினார்கள். இது பல நாள் தொடர்ந்தது. ஒரு நாள் அவள் வீட்டிலிருக்கும்போது என் குழந்தைகள் இருவரும் வீறிட்டு அழுதனர். நான் பலவாறு முயன்றேன். அழுகை நிற்கவில்லை. அவள் குழந்தைகளை கையில் ஏந்தினாள். குழந்தைகள் அழுகையை உடனே நிறுத்தின. அவளை பார்த்து சிரித்து, அவள் கன்னங்களைத் தடவி விளையாடின. அப்போது என்னை இளக்காரமாக ஒரு பார்வை பார்த்தாள். அன்று தோன்றியது இந்த கொலை வெறி. அவள் மீதல்ல. என் கணவன் மீதல்ல. என் குழந்தைகள் மீது.

வீட்டில் யாரும் இல்லாத ஒரு நாள், குழந்தைகளின் விரலிலிருந்து ஆரம்பித்து அங்கம் அங்கமாக வெட்டிக் கொன்றேன். குழந்தைகளின்  குமுறல், வலி, வேதனை எனக்குள் ஒரு பரவசத்தை தந்தது. 

குழந்தைகளின் உடலை அப்புறப்படுத்தி விட்டு தலை மறைவானேன். போலீஸ் என்னைக் கைது செய்தனர். சுப்ரீம் கோர்ட் வரை கேஸ் சென்று என் தந்தையின் அரசியல் செல்வாக்கினால் விடுதலையானேன்.”

அவள் கதை கூறி முடித்ததும் என் கை டேபிள் மீதிருந்த ரிவால்வரை எடுத்தது. கைகளின் நடுக்கம் முன்னை விட அதிகமாக இருந்தது.

நடுக்கத்தை மறைக்க அவளிடம் பேச்சு கொடுத்தேன்.

"நீ மிகவும் அழகாக இருக்கிறாய்."

"ஆம்."

"இத்தனை அழகான பெண் இவ்வளவு கொடூரமான செயல் செய்திருப்பது யாரும் நம்புவது கடினம்."

"அழகு ஒரு பெரும் கவசம் அல்லவா? அதே போல அறிவான ஆணாக இருப்பதும். அழகான பெண், அறிவான ஆண் இவர்கள் ஆழ் மனதில் இருக்கும் அழுக்கை  சமூகம் அவ்வளவு எளிதாக நம்பாது இல்லையா?"

"அழகி போட்டியில் வெற்றி பெற்ற பெண்கள்,  தெளிவாக, ஆழ்ந்த கருத்துடன் பேசும் ஆண்கள் தவறே செய்வதில்லை என்பதாகத்தானே அனைவரும் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்."

"சரியாக சொன்னாய். மீண்டும் கேட்கிறேன். இந்த அழகான பெண்ணுக்கு என்ன தண்டனை தருவாய்."

"உன் கணவன் பத்து புல்லட்டுகள் உன் நெற்றியில் பாய, நீ துடித்து இறக்க வேண்டும் என்று சொன்னான். "

"அது  சரியான  தண்டனை கிடையாது. நீ யார். எப்படி என் கணவனின் தொடர்பு உனக்கு கிடைத்தது."

நான் ரிவால்வரை மீண்டும் டேபிளில் வைத்து என் கதையை அவளுக்கு கூற ஆரம்பித்தேன்.

"நான், வித்யா, சுஜித் என்று ஒரு அழகான குடும்பம். நான் போலீஸ் இன்ஸ்பெக்ட்டராக வேலை செய்தேன். திருமணமாகி 8  வருடங்கள் கழித்து சென்ற ஆண்டு, எனக்கு சில உடல் ரீதியான பிரச்சினைகள் வந்தன. ஒரு மாதமாக தொடர்ந்து இருமல், இரத்த வாந்தி என்று என்னை வருத்தியது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி, என்னால் மறக்க முடியாத நாள். அன்று மருத்துவர் எனக்கு கேன்சர் என்று பரிசோதனைகள் காட்டுவதாக கூறினார். அதிக பட்சம் ஒரு ஆண்டுக்கு மேல் பிழைத்திருப்பது கடினம் என்றார். வீட்டுக்கு வந்த  போது இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது . வித்யா கார்  விபத்தில் இறந்திருக்கிறாள்."

"சுஜித்தினால் தன் தாயின் மரணத்தை  கையாள முடியவில்லை. அவனிடம் வன்முறை அதிகரித்தது.  கோபத்தில் வீட்டில் இருக்கும் பொருள்களை எல்லாம் உடைத்தான். பள்ளியில் இருந்து அவனைப் பற்றி புகார்கள் அடிக்கடி வந்தன. என்னால் வேலை, சுஜித்  இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள முடியவில்லை. வேலையை ரிசைன் செய்து வீட்டில் சுஜித்தை பார்த்துக் கொண்டேன். 

ஒரு நாள் அவன் பள்ளியில் இருந்து அழைத்தார்கள். சுஜித் தன் சக மாணவனை தாக்கியிருக்கிறான். தன் பிளேடினால் அவனை உடல் முழுதும் கிழித்திருக்கிறான். ஆசிரியர் கூறிய ஒரு விஷயம் எனக்கு அதிர்ச்சியை தந்தது.  தாக்கப்பட்ட சிறுவன் வலியினால் கதறியிருக்கிறான். ஆசிரியர்களும் சிறுவர்களும் அவனை தேற்றுகிறார்கள். சுஜித்தின் கண்களில் பயமோ, குற்ற உணர்ச்சியோ இல்லை. அவன் முகத்தில் ஒரு குரூரமான சிரிப்பு தெரிந்ததாக கூறினார். இவன் நிச்சயம் ஒரு கிரிமினல், சீரியல் கில்லராகதான் வருவான் என்று கூறினார். அன்றிலிருந்து சுஜித் பள்ளிக்கு செல்லவில்லை.

ஒரு மாதத்திற்கு முன்  உன் கணவனின் அறிமுகம் கிடைத்தது.  நீ உன் குழந்தைகளைக் கொன்றது, வழக்கில் நிரபராதியாக தீர்ப்பான விபரங்கள் கூறினான். உன்னைக் கொன்று பழி வாங்க நான் உதவ வேண்டும் என்றான். எனக்கு பணத் தட்டுப்பாடு இருந்தது. உடனே ஒத்துக் கொண்டேன்.

செய்தித் தாள்களில் உன் கொலைகள்  பற்றிய விபரங்கள்  சேகரித்தேன்.  உன் கேஸ் குறித்து  ஒரு விஷயம் என் கவனத்தை ஈர்த்தது.  உன்னிடத்தில் Monoamine oxidase A  என்ற மரபணுவின் பிறழ்வினால் தான் கொலை செய்தாய் என்று உன் வழக்கறிஞர் வாதம் செய்து விடுதலை  வாங்கியிருக்கிறார் 

நான் சுஜித்தை  மரபணு சோதனைக்கு உட்படுத்தினேன். அவனுக்கும் Monoamine oxidase A  மரபணுவின் பிறழ்வு இருப்பதாக தெரிய வந்தது.

இப்போது இந்த ரிவால்வரை உன்னை நோக்கி நீட்டும் போது, உன் முகம் மறைகிறது. சுஜித்தின் முகம் தெறிகிறது. என் கைகள் நடுங்குகின்றன. என்  மனம் தளர்கிறது."

சந்திரகலாவின் முகத்தில் மின்னல் போன்ற ஒரு பிரகாசம் தெரிந்தது. பெரும் குழப்பத்திலிருந்து அவளுக்கு விடுதலை கிடைத்ததாக நான் உணர்ந்தேன்.

"கேஷவ், நான் ஏன் உண்மையில் நிரபராதியாக இருக்கக் கூடாது. இந்த கொலைக்கு நான் ஏன் பொறுப்பாக வேண்டும். என் மரபணு, மூளை நரம்புகளின் பின்னல், இவை காரணமாக இருக்கலாம் அல்லவா."

"நானும் அதை யோசித்தேன். ஆனால் குற்றவாளிகள் அனைவரும் இதை காரணம் காட்டி தப்பிக்கலாம் அல்லவா.  நீதி, நன்னடத்தை இவற்றை சமூகத்தில் எப்படி நிறுவ முடியும்."

"Determinism  vs  Free  Will  பற்றிய விவாதங்கள் நீ அறிந்திருக்கிறாயா?"

"நான் அதிகம் படிப்பவன் கிடையாது."

"இந்த விவாதம் மேற்கு நாகரிகத்தின் பெரும் தத்துவ மோதலாக இருந்தது.  மனிதனின் செயல்களுக்கு மரபணு மற்றும் மூளை நரம்புகளின் அமைப்பே காரணம். சுற்றுச் சூழல் அதற்கு தூண்டுதலாக அமைகிறது என்று கூறுகிறது Derterminism  மனிதன் தன் செயல்களை தெரிவு செய்யும் வாய்ப்பே  இயற்கை அமைக்கவில்லை என்கிறார்கள் Determinism வாதிகள். 

"வெறும்  உடல் மற்றும் சூழலின் கைதியாக இருப்பவன் மனிதனாக இருக்க முடியாது. அவன் வெறும் ஜடமாகத் தான் இருப்பான். தனக்கும், தன்னைச் சுற்றி நடப்பவற்றை ஆராய்ந்து தன் செய்கைகளை தெரிவு செய்பவனே மனிதனாக இருக்க முடியும் என்கிறார்கள் Free  Will வாதிகள்.

"Determinism vs Free  Will  - இதில் நீ யார் கட்சி."

"என்னால் தெரிவு செய்ய முடியவில்லை."

"நான் Free  Will கட்சி. மீண்டும் கேட்கிறேன் என் தண்டனையை முடிவு செய்து விட்டாயா?"

"உன்னை நான் கொல்லலாம்."

"இந்த தோட்டாக்கள் எனக்கு அரை நொடி வேதனை தரலாம். ஆனால் என் கணவன் தன் இழப்பை  வாழ்நாள் முழுதும் மனதில்  ஏற்றிக் கொண்டு கழிக்க வேண்டும். என் மரணம் அவன் வேதனைக்கு ஈடாகுமா."

"உன்னை நான் விட்டு விட்டு இங்கிருந்து சென்று விடலாம்."

"நான் மீண்டும் கொலை செய்யலாம். பெரியவர்களை, சிறார்களை, பெண்களை என்று வகை வகையாக சித்ரவதை செய்து கொல்லலாம் . அதற்கான உந்துதலை ஆண்டவன் என்னிடத்தில் இயற்கையாகவே அமைத்திருக்கிறார். அதற்கான முழு காரணம் நீ ஆவாய். “

உன் முன் பல தெரிவுகள். இதில் நீ எதை தேர்ந்தெடுப்பாய். Free  Will இங்கு வேலை செய்கிறது பார்."

நான் ரிவால்வரை கையில் ஏந்தினேன். இம்முறை  கைகளில் நடுக்கம் இல்லை. என் நெற்றியில் வைத்து ட்ரிக்கரை அழுத்தினேன். என்னிடமிருந்து  குருதியின் சில துளிகள் சந்திரகலாவின் முகத்தில் தெறித்தது.

சந்திரகலா வேகமாக வந்து என் தலையை அவள் மடியில் ஏந்தினாள். அவள் கண்ணீர் என் நெற்றியின் உதிரத்துடன் கலந்தது.

"இதை நீ செய்திருக்கக் கூடாது கேஷவ்."

நான் அவளிடம் பேச முயன்றேன், வார்த்தைகள்  கம்மலாக ஈனஸ்வரத்தில் வந்தது.

"இது என் கார் சாவி.  காரின் உள்ளே  வீட்டின் சாவி இருக்கிறது. என் வீட்டிற்கு செல். அங்கே சுஜித் இந்நேரம் உறக்கத்தில் இருப்பான். இந்த கணம் முதல் நீ அவன் தாய். அவனை ஒரு நல்ல மனிதனாக, சாத்வீகமானவனாக உருவாக்க வேண்டும். அவனில் இருக்கும் வன்முறையை  நீ  களைந்தெறிய வேண்டும். அதன் மூலம் உன்னில் இருக்கும் குரூரம் கரைந்து விடும். இது தான் நான் உனக்கு கொடுக்கும் தண்டனை."

சந்திரகலா என் கைகளில் முத்தம் தந்தாள்.

"சரியான தெரிவு."

அவள் காரை நோக்கி செல்வது மங்கலாக தெரிந்தது.

பின்னர் எதுவும் தெரியவில்லை.

                                   


No comments:

Post a Comment