ஜீவன்
Chapter 1
ஜீவனுக்கு இன்று விடுதலை. அவன் மனம் கனவுகளில் லயித்துக்
கொண்டிருந்தது
"சென்னையை நோக்கிச் செல்லும் கன்யாகுமரி எக்ஸ்பிரெஸ்
இன்னும் 10 நிமிடங்களில் ஆறாம் நம்பர் பிளாட்பாரத்தை விட்டுக் கிளம்பும்"
விழுப்புரம் ரயில்வே நிலையத்தில் தெளிவான பெண் குரலில்
ஒலித்துக் கொண்டிருந்த அறிவுப்புகள் அவன் காதில் கேட்கவில்லை.
"காலேஜ் போனவுடனே போன் பண்ணு தம்பி. ஹாஸ்டல்
சாப்பாடு பிடிக்காட்டியும் கண்ணை மூடிட்டு
சாப்பிடு. ரொம்ப படிக்கிறேன்னு தூக்கத்தைக் கெடுத்துக்காதே."
தன் அம்மா கூறிய வார்த்தைகளும் எதுவும் அவன் மனதில்
பதியவில்லை. இன்று அவனுக்கு விடுதலை. 18 ஆண்டுகளாக உழன்றுக் கொண்டிருந்த தனது கிராமத்திலிருந்து
விடுதலை. ஒரு புது வாழ்க்கை சென்னையில் இன்று தொடங்குகிறது. ஐ.ஐ.டி யில் பொறியியல்
கற்க வேண்டும் என்ற கனவு நனவாகும் நாள் இன்று.
ரயில் மெல்ல நகர, ஜீவனின் அம்மா கைகளை ஆட்டி அவனுக்கு
விடை கொடுத்துக் கொண்டிருந் தார். ஓடும்
ரயிலிலிருந்து ஜீவன் கை அசைப்பான் என்று ஏக்கத்துடன் எதிர்பார் க்க ஜீவன் அவரை நோக்கித் திரும்பவே இல்லை.
--------**********--------
“நான் கேட்ட ரிப்போர்ட் கொண்டு வந்திருக்கிறீர்களா?"
எதிரே அமர்ந்தவர் கொடுத்த ரிப்போர்ட்டை ஐ.ஐ.டி துணை
வேந்தர் தீனதயாள் கவனமாகப் பார்த்தார்.
"மிஸ்டர் நரசிம்மன் நீங்கள் எத்தனை வருடமாக இந்தக்
கல்லூரியில் வேலை செய்கிறீர்கள்?"
"இருபது வருடமாக வேலை செய்கிறேன்"
"அதில் எத்தனை வருடம் Placement Depatmentல்
இருக்கிறீர்கள்?"
"கடந்த ஐந்து வருடங்களாக.”
"இந்த ஐந்து ஆண்டுகளின் உங்கள் அனுபவம் எப்படி.
கம்பெனிகள் நமது மாணவர்களின் தரம் பற்றிக் கூறும் கருத்துக்கள் என்ன"
"மிகவும் பிரமாதம்.மைக்ரோசாப்ட்,கூகிள். ஜி.ஈ
போன்ற மேல் நாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு நமது மாணவர்களைக் கொத்திச் செல்கிறார்கள்.
கோடிக் கணக்கில் சம்பளம் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். நமது மாணவர்கள் பற்றி
உயர்வான அபிப்பிராயமும் தெரிவித்திருக்கிறார்கள்."
"உங்கள் ரிப்போர்டை மிகவும் டீட்டெய்லாகப் பார்த்தேன்.
எனக்கு முழு திருப்தி இல்லை"
"என்ன சொல்கிறீர்கள்?"
"நான் இந்தக் கல்லூரியின் துணை வேந்தர் பதவி
ஏற்று ஒரு வாரம் தான் ஆகி உள்ளது. எனக்கு முன்னாள் இருந்த துணை வேந்தர்கள் ஒவ்வொருவருக்கும்
கல்லூரியை இந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒரு விஷன் இருக்கும். என்னுடைய
விஷன் ரொம்ப சிம்பிள். உலக அளவில் உள்ள முதன்மையான கல்லூரிகளின் பட்டியலில் நாம் இடம்
பெற வேண்டும் என்றெல்லாம் எனக்கு ஆசை இல்லை. அதனால் யாருக்கும் ஒரு பயனும் இல்லை. என்னுடைய
இலட்சியம் இந்தக் கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் நல்ல நிறுவனத்தில், நல்ல
சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும். புரிகிறதா?"
"புரிகிறது சார். நமது கல்லூரி இதில் சாதனை படைத்துள்ளது.
ரிப்போர்டில் அது தெளிவாகத் தெரியுமே"
"நான் சொன்னது உங்களுக்கு முழுமையாகப் புரியவில்லை.
இங்கு படிக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் வேலை கிடைக்க வேண்டும். ஒவ்வொரு என்ற வார்த்தையை
அண்டர்லைன் செய்யுங்கள். இந்த ரிப்போர்ட் படி 80 சதவிகித மாணவர்களுக்குத் தான் வேலை
கிடைக்கிறது. மீதி 20 சதவிகிதம் என்ன ஆயிற்று"
"அவர்கள் கோட்டாவில் சேர்பவர்கள். அவர்களுக்கு
வேலை கிடைப்பது சற்று சிரமம்"
"ஏன். நான் இதற்கு முன்னர் பணி ஆற்றிய கல்லூரிகளில்
கோட்டா மாணவர்களுக்கும் எளிதாக வேலை கிடைத்துள்ளதே"
"இங்கு நிலைமை வேறு. முதலில் இந்த மாணவர்கள்
படிப்பை முடிப்பதே கிடையாது. மற்ற கல்லூரிகளை விட இங்கு சிலபஸ் மிகவும் கடினம். அதனால்
பல அரியர்ஸ் வைத்து, அதைக் கடைசி ஆண்டு கூட கிளியர் செய்ய முடிவதில்லை. மேலும் மற்ற
கல்லூரிக்கு செல்லும் நிறுவனங்கள் நடுத்தர மாணவர்களைக் கூட எடுத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் நமது கல்லூரிக்கு ஆளெடுக்க வரும் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.
டாப் நாட்ச் டேலன்ட் மட்டுமே வேண்டும் என்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை கோட்டா மாணவர்கள்
நிறைவு செய்ய முடிவதில்லை."
"டாமிட். இந்த கிராமத்தான்கள் எல்லாம் ஐ.ஐ.டியில்
சேரவில்லை என்று யார் அழுதது. இவர்களுக்குத்தான் மூலை முடுக்கெல்லாம் பிரைவேட் கல்லூரிகள்
கடை விரித்திருக்கிறார்களே. அங்கு போய் தொலைக்க வேண்டியது தானே. இவர்கள் எல்லாம் எஞ்சினியர்
ஆனால் நாடு உருப்படுமா. இவர்கள் கட்டும் பாலங்கள் இடிந்து விழாதா. இவர்கள் எழுதும்
சாப்ட்வேர் தொங்காதா?"
"உங்கள் கோபம் புரிகிறது சார். இதற்கு நாம் ஒன்றும்
செய்ய முடியாது. எல்லாம் கவர்ன்மெண்ட் பாலிசி."
"குப்பை கவர்ன்மெண்ட். அடுத்த வாரம் டெல்லியில்
கல்வி அமைச்சருடன் மீட்டிங் உள்ளது. அவரிடம் இது பற்றி பேச வேண்டும்"
"பேசி ஒரு பயனும் இல்லை. எல்லாம் ஒட்டு அரசியல்
நடத்துபவர்கள். அவர்களிடம் பேசுவது செவிடன் காதில் சங்கு ஊதுவது போலத்தான்."
"பேசித்தான் பார்ப்போம். பிறகு உங்களை மீண்டும்
சந்திக்கிறேன். இனி வரும் ஆண்டுக்கு என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது பற்றி
விவாதிப்போம்"
தீனதயாள் சிந்தனையில் ஆழ்ந்தார். அவருடைய மௌனத்தைப்
புரிந்து கொண்டு நரசிம்மன் அறையை விட்டு சென்றார்.
---------*******----------
ஜீவன் கையில் பெட்டியுடன் தனது 42 ஆம் ரூம் நம்பரைத்
தேடிக் கொண்டிருந்தான். தான் நினைத்ததை விட ஹாஸ்டல் வசதியாக இருப்பதை உணர்ந்தான். ரூம்
வந்ததும் இரு கட்டில்கள் இருப்பதைக் கண்டான். தனது ரூம்மேட் இன்னும் வரவில்லை என்பது
தெரிந்தது.
பெட்டியை ஒரு மூலையில் வைத்து ரூமை ஒழுங்குப்படுத்திக்
கொண்டிருக்கும்போது "ஹே மேன் ஹவ் ஆர் யூ" என்ற குரல் ஒலிக்கத் திரும்பினான்.
வாசலில் உயரமாக கூலிங் கிளாஸ் அணிந்த ஒருவன் நின்று
கொண்டிருந்தான்.
"ஐ ஆம் கவுத்தம். யுவர் நேம்? "
"என் பெயர் ஜீவன்."
"நீ தான் என்னுடைய ரூம் மேட்டா. நாலு வருஷம்
உன் கூடத் தான் நான் இருக்கணும். ஹோப் யூ ஆர்
எ fun person. நான் பெங்களூரிலிருந்து வருகிறேன். உனக்கு எந்த ஊர்"
"பண்ருட்டி பக்கத்தில் ஆண்டிக்குப்பம் என்கிற
கிராமம்"
"வாட்! ஒரு பட்டிக்காட்டான் என்னுடைய ரூம்மேட்டா.
என்ன க்ரூப்? மைனிங்கா?"
"இல்லை. கம்ப்யூடர் சைன்ஸ்"
"என்னால் நம்பவே முடியவில்லை. என்ட்ரன்சில் என்ன
ஸ்கோர் உன்னுடையது?"
"1150"
"என் ஸ்கோர் 1850. நானும் கம்ப்யூடர் சைன்ஸ்.
நீ என்ன கோட்டாவா?"
"ஆம்" என்று ஜீவன் தயக்கத்துடன் கூறினான்.
"உங்களை எல்லாம் சுட்டுத் தள்ளனும் மேன். ஐ.
ஐ. டி. என்னுடைய எத்தனை வருடக் கனவு தெரியுமா. எட்டாவதிலிருந்து கோச்சிங் கிளாஸ் போயிருக்கேன். காலையில் நான்கு
மணிக்கே முழித்து கிளாசில் இருப்பேன். நாலு வருஷம் நாயா உழைச்சிருப்பேன். நீ நோகாம
நொங்கு தின்னு கம்ப்யூடர் சைன்ஸ் சேருவியோ?"
"நீ நாலு வருஷம் கோச்சிங் கிளாஸ் எல்லாம் போயிருக்கே.எங்க
கிராமத்திலே ஒரே ஸ்கூல் தான். கவர்ன்மெண்ட் ஸ்கூல் அது. வாத்தியார் பாதி நாள் வர மாட்டாங்க.
வீட்டில் கரண்ட் கிடையாது. கேண்டில் விளக்கிலே தான் படிச்சிருக்கேன். உன்னையும் என்னையும்
சமமாக மதிப்பிட முடியுமா?"
"உன்னுடன் என்னால் ஒரே ரூமில் தங்க முடியாது. இப்போதே சென்று வார்டனிடம்
ரூம் மாற்றச் சொல்கிறேன்" என்று கூறி கோபத்துடன் கவுதம் ரூமை விட்டு வெளியேறினான்.
அன்று இரவு முழுதும் கவுதம் அறைக்கு வரவே இல்லை. அடுத்த நாள் காலை பஷீர் என்பவன் ரூமுக்கு வந்தான். கவுதம்
வேறு அறைக்கு மாறி விட்டான் என்பது புரிந்தது.
இருவரும் கிளாசுக்குச் சென்றனர். முதல் வருடம் எல்லாத்
துறை மாணவர்களும் கலந்து தான் கிளாசில் இருந்தார்கள். அவன் கிளாசில் தான் கவுதமும்
பஷீரும் இருந்தனர்.
புதிதாக வந்த மாணவர்கள் தங்களுக்குள் அறிமுகம் செய்துக்
கொண்டனர். அவர்கள் பேச்சு என்ட்ரன்ஸ் ஸ்கோர், எந்த பிராஞ்ச் என்பது பற்றியே இருந்தது.
பிறகு கிளாசிலிருந்த மாணவிகளில் யார் மிகவும்
அழகு என்ற மதிப்பீடு பற்றிய பேச்சும் பிராதானமாக இருந்தது.
கவுதம் எங்கே என்று ஜீவன் அலசினான்.
அவன் ஒரு அழகான பெண்ணிடம் சிரிக்க சிரிக்கப் பேசிக்
கொண்டிருந்தான். அவள் பெயர் காவ்யா என்பது அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது.
அவளைப் பார்த்ததும் ஜீவனுக்கு என்னமோ செய்தது. இவ்வளவு
அழகான ஒரு பெண்ணை அவன் பார்த்ததே இல்லை. பேசும் போது அவள் கண்களின் அபிநயத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்
போல இருந்தது.
கவுதம் முதல் நாளிலே அவளிடம் பேச ஆரம்பித்து விட்டானே.
தன்னால் அது முடியுமா.
காவ்யாவிவின் முகத்திலிருந்து தனது பார்வையை ஜீவனால்
அகற்றவே முடியவில்லை. அப்போது சட்டென காவ்யா ஜீவனை நோக்கித் திரும்பினாள். ஜீவன் தன்னையே
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததை அவள் யூகித்தது விட்டாள். கவுதமிடம் அவனை நோக்கி
கை காட்டி ஏதோ சொன்னாள். இருவரும் பலமாகச் சிரித்து விட்டு அவனைக் கண்டு கொள்ளாமல்
மீண்டும் மும்முரமாக பேச ஆரம்பித்தனர்.
கணிதப் பேராசிரியர் வகுப்பறைக்கு வந்ததும் கிளாஸ்
மவுனமானது.
Fourier Transformation பற்றி பாடம் நடத்தினார். அவர்
கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் கவுதம் பளிச்சென பதில் சொன்னான்.
ஜீவனுக்கு அவர் நடத்தியது எதுவும் புரியவில்லை. மேஜையில்
தலை வைத்து அமர்ந்திருந்தான்.
அப்போது திடீரென அவனை நோக்கி ஒரு குரல் ஒலித்தது.
" கடைசி
டெஸ்கில் யாரோ தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஜென்டில்மேன் இங்கே வந்து இந்த ஈக்குவேஷனை
சால்வ் செய்யலாம்"
ஜீவன் போர்டை நோக்கிச் சென்றான். போர்டில் எழுதியிருந்தது
ஒன்றும் புரியவில்லை. சாக்பீசைக் கையில் வைத்து என்ன எழுதுவது என்று புரியாமல் முழித்தான்.
"Gautham can you try this"
கவுதம் வேகமாக வந்து அந்த ஈக்குவேஷனை போர்டில் எழுதினான்.
புரபசர் ஜீவனைப் பார்த்து "உன் பெயர் என்ன"
"ஜீவன்"
"எந்த ஊர்"
ஜீவன் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.
"சார் இவன் ஆண்டிக்குப்பம்." என்றான் கவுதம்.
"வாட் போண்டிக்குப்பமா. நான் சொன்னதைக் குறித்துக்
கொள். இந்த வருடம் என் சப்ஜெக்டில் உனக்கு அரியர்."
வகுப்பிலிருந்த அனைவரும் சிரித்தனர். அதில் காவ்யாவின்
சிரிப்பொலி மட்டும் சத்தமாகத் தெளிவாகக் கேட்டது.
ஜீவன் அவளை நோக்கிப் பார்த்தான். அவளின் ஏளனப் பார்வையைத்
தாங்க முடியாமல் தலையைக் குனிந்தான்.
மிகவும் அவமானமாக இருந்தது, அழுகை அழுகையாக வந்தது.
வேண்டாம். எனக்கு இந்தப் படிப்பு வேண்டாம். இந்தக் கல்லூரி வேண்டாம். இது நான் இருக்க
வேண்டிய இடமில்லை. இது என் உலகம் இல்லை. விருட்டென கிளாசை விட்டு வெளியேறினான்.
நேராக ஹாஸ்டல் வந்தவன் போனில் தன் வீட்டைத் தொடர்பு
கொண்டு பேசினான்.
"என்ன தம்பி காலேஜ் வந்ததும் போன் பண்ணுவேன்னு
நினைச்சேன். இவ்வளவு நாள் ஆச்சு."
"நம்ம வீட்டில் போன் கிடையாது. பக்கத்து கிரிஜா
மாமி வீட்டுக்குப் போன் பண்ணித் தான் உங்களைக் கூப்பிட்டுப் பேசணும். அது ரொம்ப சலிச்சுக்க
வேற செய்யும். அதான்."
"அதைப் பத்தி நீ ஏன் கவலைப்படறே. வாரா வாரம்
போன் பண்ணு. அப்புறம் அங்க உனக்கு எல்லாம் சந்தோஷமா இருக்கு இல்லை. படிப்பெல்லாம் சுளுவா
இருக்கா. கூடப் படிக்கிற பசங்க எல்லாம் எப்படி"
ஜீவன் பதில் சொல்லவில்லை.அவன் வருத்தத்தை அம்மா யூகித்து
விட்டாள்.
"என்னப்பா. ஏதாவது பிரச்சினையா?."
"எல்லாமே ரொம்ப கஷ்டமா இருக்குமா. இங்கே இருக்கிற
எல்லோரும் ரொம்ப அறிவாளிங்க. இவங்க முன்னாடி என்னைப் பார்த்தா ஒரு சின்ன ஈ மாதிரி தான்
தெரியுது. இங்கே விட்டு எங்கேயாவது ஓடிடலாமான்னு தோணுது"
"அப்படி சொல்லாதே தம்பி. மத்தவங்களைப் பத்தி
நீ ஏன் கவலைப்படுறே. உன் படிப்பை நீ சந்தோஷமா செய். எந்த வேலை செஞ்சாலும் அனுபவிச்சு
செய்யனும்னு தாத்தா சொல்லுவார் இல்லை"
"ஒண்ணுமே புரிய மாட்டேங்குது"
"அங்கே எல்லாம் புதுசுனாலே மிரண்டு போயிருப்பே.
கொஞ்ச நாள் பொறுமையா இருந்து கடுமையா முயற்சி செய். நம்ம செந்தில் போன வருஷம் மெடிக்கல்
காலேஜ் சேர்ந்தான். புத்தகம் எல்லாம் இங்லீஷ்லே இருக்குனு எவ்வளவு புலம்பினான். இப்போ
நல்லாதான் படிக்கிறான். மனசைத் தளர விடாதே
தம்பி"
அம்மாவின் வார்த்தைகள் ஆறுதலாக இருந்தது. தனது அறையை
நோக்கிச் சென்றான்.
அங்கு பஷீர் கவுதமுடன் பேசிக் கொண்டிருந்தான்.
பஷீர் ஜீவனைப் பார்த்ததும் "என்ன மாப்ளே, கிளாஸ்லே இன்னைக்கு நீ தான் ஹீரோவாமே."
கவுதம் அதற்கு கேலியாக சிரித்தான்.
ஜீவனால் அங்கு நிற்க முடியவில்லை. ஹாஸ்டலை விட்டு
வேகமாக வெளியே வந்து ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தான். தன் முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டு
வெகு நேரம் அழுதான்.
Chapter 2
தீனதயாள் டெல்லியின் பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் வோட்கா
ஆர்டர் செய்ய வெயிட்டருக்காக காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் வயதை ஒத்த நபர் ஒருவர் அருகில் வந்து
"உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கணும். இது நான் ரிசர்வ் செய்த இடமாச்சே."
"அப்படியா எனக்கு இந்த இடம் தான் கொடுத்தாங்க.
ஏதோ குழப்பம் நடந்திருக்கணும். நான் ரிசப்ஷனில் என்னவென்று விசாரிக்கிறேன்."
"பரவாயில்லை நாம் இருவரும் தனியாகத் தான் வந்திருக்கிறோம்.
இங்கேயே நாம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கலாமே."
"தாங்க்ஸ். உங்கள் பெயர் என்ன."
"உதயமூர்த்தி. சென்னையில் ஜெனெடிக் எஞ்சினியரிங்கில்
ஆராய்ச்சி செய்து வருகிறேன்."
“இன்டரஸ்டிங். என் பெயர் தீனதயாள். நான் சென்னை ஐ.ஐ.டியில்
துணை வேந்தராக இருக்கிறேன்."
"நீங்கள் டெல்லி வந்த விஷயம்"
"கல்வி அமைச்சருடன் ஒரு அப்பாயிண்ட்மெண்ட்."
“என்ன ஒரு கோயின்சிடன்ஸ் பாருங்கள். நானும் ஹெல்த்
மினிஸ்டரைப் பார்க்கத் தான் டெல்லி வந்தேன்."
"எதைப் பற்றி சந்திக்க வந்தீர்கள்?"
"என்னுடைய ஒரு ஆராய்ச்சிக்கு அரசிடம் அனுமதி
பெறுவதற்கு டெல்லி விசிட் செய்தேன்."
"என்ன விதமான ஆராய்ச்சி"
"கொஞ்சம் டீட்டெய்லாக விளக்க வேண்டும். பரவாயில்லையா"
"வித் ப்ளஷர். சொல்லுங்கள்."
"இயற்கை மனிதர்கள் நம் அனைவரையும் சமமாகப் படைக்கவில்லை.
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை, ஆற்றலுடன் தான் படைத்திருக்கிறது. குறிப்பாக நமது
அறிவாற்றலை எடுத்துக் கொண்டால் அதில் இயற்கை நம் ஒவ்வொருவரையும் வேறுபட்ட திறனுடன் படைத்துள்ளது.. ஆதி காலத்தில்
உடல் வலிமை படைத்தவன் ஆற்றுடையவனாகக் கருதப்பட்டான். ஆனால் நவீன விஞ்ஞான உலகில் அறிவாற்றலே
பிராதானமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மனிதனின் அறிவாற்றலும் சமமான அளவில் கிடையாது.
ஒரு மனிதன் தன் அறிவாற்றல் மூலம் ஐன்ஸ்டீன் ஆகிறான். இன்னொருவன் சமூகத்தில் மிகவும்
தாழ்ந்த நிலையில் இருக்கிறான். மனிதனின் அறிவாற்றலுக்கு HAR1, ASPM என்ற இரண்டு ஜெனெடிக்
சீக்குவன்ஸ் தான் காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த இரண்டு ஜீன்களை
மாற்றி அமைப்பதன் மூலம் ஒரு மனிதனின் அறிவாற்றலை மேம்படுத்த முடியும் என்பதே என் ஆராய்ச்சி.
இதை மிருகங்களிடம் டெஸ்ட் செய்து வெற்றி கிடைத்துள்ளது. மனிதர்களிடம் டெஸ்ட் செய்வதற்கு
அரசின் அனுமதி பெறுவது தான் என் டெல்லி விசிட்டின் நோக்கம்."
"அனுமதி கண்டிப்பாகக் கிடைத்திருக்காதே"
"எப்படி கண்டுபிடித்தீர்கள்"
"நான் சொல்கிறேன் என்று தவறாக எண்ணாதீர்கள்.
உங்கள் ஆராய்ச்சியை குப்பையில் தான் போட வேண்டும். இறைவன் ஏன் நம் அனைவரையும் சமமான
அறிவாற்றலுடன் படைக்கவில்லை? அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். சமூகத்தில் ஒரு மனிதன்
அடையும் அந்தஸ்தை அவன் அறிவாற்றல் தான் நிர்ணயிக்கிறது. This is a Survival of the
Fittest World. செயற்கையாகத் தன் ஆற்றலைப் பெருக்கிக் கொண்ட ஒரு மனிதன் இயற்கையிலேயே
ஆற்றல் உடையவனிடம் போட்டியிட்டு வெற்றி பெறுவது எந்த விதத்தில் நியாயம்?"
"இயற்கையின் நமது பல குறைபாடுகளை நாம் செயற்கையாக நிவர்த்தி செய்வதில்லையா. கை, கால் ஊனமுற்றவர்கள் செயற்கை சாதனங்கள் மூலம் சரி செய்வதில்லையா. அழகில் குறைந்த பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அதை சரி செய்வதில்லையா. அது போலத்தானே இதுவும்?"
"நீங்கள் சொன்ன அனைத்தையும் விட உங்களுடைய இந்த ஆராய்ச்சி பயங்கரமானது. இதனால் ஏற்படுத்தும் மாறுதல்கள் மோசமாக இருக்கும். சமூகத்தில் யார் தகுதி உடையவன், யார் தகுதி அற்றவன் என்ற பேதமே இல்லாமல் போய் விடும்."
"நமது சமூகத்தில் தகுதி என்பது தவறாக நிர்ணயிக்கப்படுகிறது. அறிவாற்றல் என்பது வெறும் இயற்கையான விஷயம் இல்லை. ஒரு மனிதன் பிறந்து வளர்ந்த சூழ்நிலைகளும், அவனுக்குக் கிடைத்த வாய்ப்புகளும் தான் அதைப் பெரிதும் நிர்ணயிக்கிறது. சிட்டியில் பிறந்து, உயர்ந்த கல்விகள் கிடைத்த ஒரு மாணவன் கிராமத்தில் எந்த கல்வி வசதியும் இல்லாத மாணவனுடன் போட்டியிடச் சொல்லும் இந்த சமூக அமைப்பே தவறு தீனதயாள்."
"இதை நாம் பேசித் தீர்மானிக்க முடியாத விஷயம் உதயன். நம் இருவருடைய கருத்துக்கள் நம்முடைய வெவ்வேறு ஐடீயாலஜியின் பிரதிபலிப்பு. Any Way. உங்களுடைய முயற்சி தோல்வி அடைய என் வாழ்த்துக்கள்."
உதயன் புன்னகைத்து விட்டு "நாம் பிரச்சினை தராத வேறு விஷயம் பற்றி பேசுவோமே"
இருவரும் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர்.
திடீரென்று தீனதயாள் ஞாபகம் வந்தவராய் "நாளை விடிகாலை சென்னைக்கு பிளைட். ரூம் சென்று ரெஸ்ட் எடுக்க வேண்டும். உங்கள் நம்பர் தாருங்கள். அவசியம் பின்னர் தொடர்பு கொள்கிறேன்"
இருவரும் விடைபெற்று தங்கள் அறைக்குச் சென்றனர்.
--------*******---------
ஜீவன் பெசன்ட் நகர் பீச் மணலில் அமர்ந்து கடலின் அலைகளையே பார்த்துக் கொண்டிருந்தான். சென்னை வந்து நான்கு மாதங்கள் கழிந்திருந்தது. முதல் வாரம் கிளாஸ் சென்றதோடு சரி. அதன் பிறகு வகுப்பு பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. நண்பர்கள் யாரும் சரியாக அமையவில்லை. தினமும் பீச்சுக்கு வந்து அமர்ந்து விடுவான். கடல் அலைகளின் அழகையும், பீச்சிற்கு வரும் வித்தியாசமான மனிதர்களைப் பார்ப்பதிலும் தனிமை பெரிய சுமையாகத் தெரியவில்லை.
திடீரென்று தன் பக்கத்தில் யாரோ அமர்ந்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டான்.
"அஞ்சு நிமிஷமா உன் பக்கத்தில் தான் உட்கார்ந்திருக்கேன். கொஞ்சம் கூட கண்டுக்கவே இல்லை. கடல் அலைகளில் அப்படி என்னதான் கண்டே"
"காவ்யா நீயா? நீ எப்படி இங்கே?"
"பெசன்ட் நகரில் தான் என் வீடு இருக்கு. போரடிச்சுதுனா இங்கே வந்துடுவேன்."
சிறிது நேரம் அவர்களிடேயே மௌனம் நிலவியது. ஜீவனுக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை.
"என்ன காலேஜ் பக்கமே காணோம்."
"பிடிக்கலே"
"என்ன பிடிக்கலே"
"எதுவுமே"
"என்னை?"
"நீ என்ன சொல்றே"
"கிளாஸ்லே என்னை எப்பவுமே உத்து உத்துப் பார்த்ததெல்லாம் தெரியும். என்ன லவ்வா?"
"அப்படியெல்லாம் இல்லை. அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேணும்"
"உனக்கு தகுதி இருக்கா இல்லையானு நான் தான் சொல்லணும்"
"கவுதம்?"
"கவுதம் பத்தி என்ன?"
"உனக்கு ரொம்ப சூட்டபிலான
பையன்"
"எதுக்கு லவ் பண்ணி கல்யாணம் பண்ணவா?"
"அப்படி சொல்லலே. பிரண்டா இருக்கலாம்னு சொன்னேன். நல்ல வசதியான குடும்பம். ரொம்ப இன்டலிஜென்ட்."
"இதெல்லாம் மட்டும் இருந்தா போதுமா"
"வேற என்ன வேணும்"
"ஒன்னும் இல்லை. நீ எந்த ஊர். ஏதோ ஆண்டிக்குப்பம்னு சொன்னியே. அந்த ஊர் எப்படி இருக்கும்"
"கிராமம் எப்படி இருக்கும். அது மாதிரி தான் இருக்கும்"
"ஏன் அப்படி சலிப்பா சொல்றே. எங்க அப்பா தஞ்சாவூர் பக்கத்து கிராமத்திலிருந்து சென்னை வந்தவர். இங்கே பிசினஸ் செய்து இப்போ பெரிய ஆள் ஆயிட்டார். அம்மா ரொம்ப வசதியான குடும்பத்திலிருந்து வந்தவங்க.சின்ன வயசிலே பாட்டி வீடுன்னு அப்பாவோட கிராமம் வந்துடுவேன். எங்க கிராமத்திலே நான் கழித்த நாட்கள் மறக்க முடியாதது. அதன் பிறகு அப்பா கிராமம் வருவதை நிறுத்திட்டார். அம்மாவோட நச்சரிப்புனால இருக்கும். அப்புறம் இந்த நகரத்தில் என் வாழ்க்கை ஓடிடுச்சு.இங்கே எல்லாம் செயற்கை. செயற்கையான உணவு, செயற்கையான உணர்வுகள், செயற்கையான மனிதர்கள். கவுதம் போல"
ஜீவன் எதுவும் பதில் சொல்லவில்லை.
"என் ஆசை என்ன தெரியுமா. எந்தக் கவலையும் இல்லாமல் இந்த உலகம் முழுதும் சுத்தணும். படிப்பு, வேலை இந்த பிரஷர் எதுவும் இருக்கக் கூடாது. உலகத்திலே இருக்கிற இயற்கை அழகு மிக்க இடங்கள், கிராமங்கள் செல்ல வேண்டும். இந்த ஆசை எங்கே நடக்கப் போகிறது. சரி அடுத்த மாசம் செமஸ்டர் எக்ஸாம். கிளாஸ் பக்கம் நீ வரவே இல்லை. வேணும்னா நாம் இருவரும் கம்பைன் ஸ்டடி பண்ணலாம். ஈவினிங் நாலு மணிக்கு மேலே வீட்டுக்கு வந்துடு. நான் அட்ரஸ் சொல்றேன் நோட் பண்ணிக்கோ."
ஜீவன் அட்ரசை குறித்துக் கொண்டான்.
"ஜீவன். ஐ ஆம் சாரி."
"எதற்கு"
"அன்னைக்கு கிளாசில் உன்னைப் பார்த்து சிரித்ததற்கு. என்ன செய்வது இந்தக் கூட்டத்துடன் இருக்கும்போது சில சமயம் அவர்கள் குணம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது."
"பரவாயில்லை"
"நாளை வீட்டுக்கு வந்துடு சரியா."
---------********-----------
தீனதயாள் அறையில் Artificial
Intelligence துறையின் தலைமை புரபசர் ராம் ஷங்கர் அமர்ந்திருந்தார்.
"ராம். உங்களிடம் நான் இப்போது பேசப் போகும் விஷயம் மிகவும் முக்கியமானது. இதை நீங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தினால் நம் காலேஜ் உலக இரங்கில் முதலாவதாக இடம் பிடிக்கும்"
" விவரமாக சொல்லுங்கள் சார்."
"கடந்த பத்து ஆண்டுகள் Artificial Intelligence துறையின் பொற்காலம் என்று கூறலாம். மனிதனை ஒத்த ரோபோக்கள் நம் உலகில் உலாவும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஏன் மனிதர்களை விட பல மடங்கு சக்தி வாய்ந்த ரோபோக்கள் கூட உருவாகலாம். இதன் முன்னர் இந்த முயற்சி பல தோல்விகள் சந்தித்திருந்தது. காரணம் மனிதனின் மூளை எப்படி இயங்குகிறது என்பது புரிந்தால் தான் இந்த முயற்சியில் வெற்றி அடையலாம். மூளையின் ஒவ்வொரு நியூரானின் செயல்பாடும் அந்த நியூரான் அதன் அருகில் இருக்கும் மற்ற நியூரான்களுடன் பிணைந்திருக்கும் செயல்பாடும் தெரிந்து கொள்வது தான் இந்த முயற்சியின் முதல் கட்டம். இதை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ஏற்கனவே சாதித்து விட்டது. இதன் அடுத்த கட்டமாக மூளை நரம்பியல் வலையமைப்பின் சாப்ட்வேர் பிரதியை
நமது கல்லூரி உருவாக்கும் இதை தலைமை தாங்கி நீங்கள் நடத்த வேண்டும்"
"இது நீங்கள் அளித்திருக்கும் மிகப் பெரிய கௌரவம் சார்"
"மனித உணர்சிகளை செயல்படுத்தும் Amygdala என்னும் மூளையின் ஒரு சிறு பகுதியை முதலில் சாப்ட்வேராக வடிவமைப்போம். இதை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும். இது தொடர்பாக நாளை சி.என்.என் செய்தி நிறுவனத்திலிருந்து நம் இருவரையும் பேட்டி எடுக்க வருகிறார்கள். விஷ் யூ ஆல் சக்சஸ் ராம்"
Chapter 3
"இதோட பத்து தடவையாவது இந்த தியரி சொல்லிக் கொடுத்திருப்பேன்.
உன் மனசிலே ஏன் பதிய மாட்டேங்குது."
"இதுக்கு தான் நான் முன்னாடியே சொன்னேன் இந்த
கம்பைன் ஸ்டடி எல்லாம் வேண்டாம்னு. உனக்கு சொல்லிக் கொடுக்க பொறுமை வேணும்"
"உன் மனசு ரொம்ப அலை பாயுது. நான் இங்கே சொல்லி
கொடுத்துட்டிருக்கும்போது உன் பார்வை பக்கத்து
ரூமிலே இருக்கிற டி.வி மேலே போகுது. கொஞ்சம் கூட கவனமே இல்லை"
"நான் கிராமத்திலிருந்து வந்திருக்கேன். உங்களை
மாதிரி குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி நேரான பார்வையிலே போக முடியாது. ஒரே நேரத்திலே
பத்து விஷயங்களைப் பத்தி சிந்திக்கனும். அவ்வளவு பிரச்சினை இருக்கு அங்கே"
"நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே. என்ன
தைரியத்திலே நீ ஐ. ஐ. டி சேர்ந்தே. இங்கே லெவலே வேற. ஜஸ்ட் கிராமத்திலே படிச்சி இங்கே
வந்து உனக்கு கிடைச்ச சீட்டை வேஸ்ட் பண்றே. தகுதியான வேற யாருக்காவது கிடைச்சா பிரயோஜனமா
இருக்கும் இல்லை"
ஜீவன் ஒன்றும் பேசாமல் அமைதியாக எழுந்து வெளியேறினான்.
காவ்யா அவன் பின்னால் வந்தாள்.
"ஜீவன். ஐ ஆம் சாரி. நான் அப்படி சொல்லியிருக்கக்
கூடாது. நீ இப்படி கிளம்பிப் போனா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். கொஞ்சம் நேரம் இருந்துட்டாவது
போ"
ஜீவன் பதில் எதுவும் சொல்லாமல் காவ்யாவின் வீட்டை
விட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.
ஜீவன் மனம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது. இந்த
உலகில் யாரை நம்புவது. கடைசியில் எல்லோரும் தங்கள் சுய ரூபத்தைக் காண்பித்து விடுகிறார்களே.
சிந்தனையுடன் சென்ற அவன் ரோட்டைக் கடக்கும்போது தன்னை நோக்கி வரும் காரை கவனிக்கவில்லை.
வேகமாக வந்த கார் அவனை இடித்தது. ஜீவன் உடம்பில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது.ஆனால்
வண்டியில் வந்தவர் பிரேக்கை போட்டு விட்டதால் பெரிய பாதிப்பு இல்லை. ஜீவன் மயக்கத்தில்
ஆழ்ந்தான்.
வண்டியி லிருந்து
இறங்கிய மனிதர் உடனே அவனைத் தூக்கி பின் சீட்டில் கிடத்தினார்.
ஜீவன் கண் முழித்த போது தான் படுக்கையில் இருப்பதை
உணர்ந்தான்.
"முதலுதவி செஞ்சிருக்கேன். ஒரு வாரத்தில் முழுதும்
குணமாயிடுவே."
"நீங்க யாரு. நான் எங்கே இருக்கேன்."
"என் பெயர் உதயமூர்த்தி. நீ என் வீட்டில் தான்
இருக்கே. என் கார் உன்னை இடித்ததில் நீ மயக்கமானாய். தவறு என் மீது இல்லை. சிக்னல்
ரெட்டாய் இருப்பதை கவனிக்காமல் நீ தெருவை கிராஸ் செய்தாய். நான் ஹாரன் அடித்தும் நீ
சுதாரிக்கவில்லை. இருந்தாலும் உனக்கு ஏற்பட்ட தொந்தரவிற்கு மன்னிக்கணும்"
"பரவாயில்லை. நீங்கள் என்ன டாக்டரா"
"ந்யூரோ சர்ஜனாக இருந்தேன். இப்போது ஜெனடிக்
என்ஜினீயரிங்கில் ஆராய்ச்சி செய்து வருகிறேன். என்ன பிரச்சினை உனக்கு"
"ஏன் கேட்கிறீர்கள்"
"தெருவில் இவ்வளவு கவனக்குறைவாக இருந்தால் ஒன்று
குடித்திருக்க வேண்டும் இல்லை மனக்குழப்பத்திலிருக்க வேண்டும். நீ குடிக்கவில்லை என்று
தெரிந்து விட்டது. ஏதாவது லவ் பெய்லியரா"
"அதெல்லாம் ஒன்றும் இல்லை." ஜீவன் தன் கதையை
உதயனுக்கு விவரித்தான்.
உதயன் சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பேச ஆரம்பித்தார்.
"ஒரு மனிதனை அடித்து இன்னொரு மனிதன் வாழ்கிற
இந்த உலகில் உன்னைப் போல பலர் இருக்கிறார்கள். உன் பிரச்சினைக்கு தீர்வு என்னால் கொடுக்க
முடியும் உன் ஒத்துழைப்பு இருந்தால்"
"எப்படி"
"நான் ஜீன் தெரபி என்ற ஒரு ஆராய்ச்சி செய்து
வருகிறேன். அதன் மூலம் ஒரு மனிதனின் அறிவாற்றலை பெருக்க முடியும்."
"இது ஏதோ காயகல்பம் கதை போல இருக்கிறதே"
"நம்ப முடியவில்லை அல்லவா. என்னுடன் வா"
உதயன் ஜீவனை ஒரு அறைக்கு அழைத்து வந்தார். கூண்டில்
ஒரு குரங்கு இருந்தது.
"இந்த ரியூபிக் க்யூபைக் குரங்கிடம் கொடு"
ஜீவனிடமிருந்த க்யூபை வாங்கிய குரங்கு அதனை இரண்டு
நிமிடங்களில் தீர்வு செய்தது.
ஜீவன் வியப்பில் ஆழ்ந்தான்.
"இது தவறு இல்லையா."
"ஒரு தவறும் இல்லை. வலியவன் தாழ்ந்தவனை ஏறி மிதிக்கும்
இந்த உலகில் எதுவும் தவறில்லை. எல்லா மனிதர்களும் சமம் என்கிற சொர்க்க உலகை என் ஆராய்ச்சி
உருவாக்கும்"
"மிகவும் வலிக்குமா"
"என்ன"
"இல்லை மூளை ஆபேரஷன் ஏதாவது செய்வீர்களா"
"ஒரே இன்ஜெக்ஷன் அவ்வளவு தான். ஒரே வாரத்தில்
மாற்றங்கள் உணருவாய்"
"எனக்கு சம்மதம்."
"குட். ஒரே வாரத்தில் நீ அபரிதமான் சக்தியை உணருவாய்.
ஆனால் மற்றவர்களுக்கு இதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாதே. புரிகிறதா"
ஜீவன் சம்மதிக்க உதயன் ஒரு சிவப்பு நிற திரவத்தை சிரிஞ்சிலேற்றி
ஜீவன் கையில் ஏற்றினார்.
"லேசாக மயக்கமாக இருக்கும். நானே காரில் உன்
ஹாஸ்டலில் கொண்டு வந்து விடுகிறேன்"
ஒரு மணி நேரம் கழித்து ஜீவன் தன் அறையிலிருந்தான்.
அடித்துப் போட்டது போல தூக்கத்தில் ஆழ்ந்தான்.
வழக்கம் போல ஒரு வாரமாக ஜீவன் கிளாஸ் செல்லவில்லை.
அன்று மாலை அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது வாட்ச்மேன் அவனைப் பார்க்க
ஒரு பெண் வந்திருப்பதாகக் கூறினார்.
யாராக இருக்கும் என்று ஆவலுடன் கீழே வந்தவன் காவ்யாவைப்
பார்த்தவுடன் திரும்பிச் செல்ல முயன்றான்.
"ஒரு நிமிஷம் நில்லு. நான் சொல்றதைக் கேட்டுட்டு
எதுவும் முடிவு பண்ணு. நான் செஞ்சது தப்பு தான். என்ன பண்றது நான் அப்படி வளர்ந்துட்டேன்.
என்னை சுத்தி இருக்கிற மனிதர்கள் எல்லாம் அப்படி. தப்புன்னு தெரிஞ்சாலும் அப்பப்போ
அந்த பாதிப்பு என் பேச்சு செயலில் வந்துடுது. இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்னு எல்லாம்
சொல்ல மாட்டேன். நான் ஏன் அப்படி செஞ்சேன்னு மட்டும் புரிஞ்சுக்கோ. நான் ஒன்னும் ஹெட் வெயிட்
பிடிச்சவ இல்லை. என்னிடமும் ஒரு இதமான பக்கம் இருக்கு. அதை என்னிடமிருந்து கொண்டு வர
முயற்சி செய். இவ்வளவு தான் நான் சொல்ல வந்தது"
"இப்போ நான் என்ன செய்யனும்னு சொல்றே"
"வழக்கம் போல நாலு மணிக்கு என் வீட்டுக்கு வா. சேர்ந்து படிக்கலாம்"
"அதற்கு தேவை இருக்காது."
"நீ வரலைனா என் படிப்பையே நிறுத்திடுவேன்."
"நிறுத்திக்கோ"
"என் பிடிவாதம் உனக்குத் தெரியாது. நிஜமாவே செஞ்சிடுவேன்"
"சரி வரேன்"
அன்று மாலை காவ்யாவும் ஜீவனும் படித்துக் கொண்டிருந்தனர்.
வரிசையாக ஒவ்வொரு கணக்காகப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
"இந்த சம் போட வேண்டாம். சாராலேயே கிளாஸ்லே பண்ண
முடியலே. இன்னொரு புக் ரெபர் செய்து அடுத்த வாரம் சொல்வதாகக் கூறியிருந்தார்."
ஜீவன் காதில் வாங்காமல் கணக்கைப் போடுவதில் மும்முரமாக
இருந்தான்.
"என்ன செஞ்சுகிட்டு இருக்கே"
"இந்த ஆன்சர் கரெக்டான்னு பார்."
காவ்யா புத்தகத்தைப் பார்த்து "கரெக்டா தான்
இருக்கு. என்னால் நம்பவே முடியலே. எப்படி செஞ்சே. போன வாரத்துக்கு இந்த வாரம் ரொம்ப
முன்னேற்றம் தெரியுதே. என்னையே மிஞ்சிடுவே போலிருக்கே. நான் சொல்லலே உன்னால் முடியும்னு.
முயற்சி செஞ்சா நம்மால் சாதிக்க முடியாதது ஒன்னும் இல்லை"
"கொஞ்சம் அட்வைஸ் மழையை நிறுத்துறியா"
"எல்லாம் என் கோச்சிங் எபக்ட் தான்"
ஜீவன் எதுவும் பதில் அளிக்காமல் மனதிற்குள் சிரித்துக்
கொண்டான்.
இரண்டு வாரங்கள் கழிந்தது. செமஸ்டர் எக்ஸாம் ஆரம்பித்து
அன்று கடைசி பரீட்சை. Artificial Intelligence சப்ஜக்ட் மிகவும் கடினமாக இருந்தது.
பரீட்சை முடிந்ததும் அனைவரும் சோகமான முகத்துடன் வெளியே வந்தனர்.
ஜீவன் காவ்யா எங்கே என தேடினான். அவள் கவுத்தமுடன்
பேசிக் கொண்டிருந்தாள். சற்று தள்ளி நின்று அவர்கள் பேசுவதைக் கவனித்தான்.
"கவுத்தம் எப்படி பண்ணே. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.
பாஸ் ஆனால் பெரிய விஷயம்."
"எனக்கு ரொம்ப ஈசியா இருந்துச்சு. 95 மேலே கிடைக்கும்னு
நினைக்கிறேன்"
"நீ ஒருத்தன்தான் இப்படி சொல்றே. காலேஜ்ல எல்லோரும்
இந்த பேப்பர்லே அரியர்னு சொல்றாங்க"
காவ்யா ஜீவன் நிற்பதைப் பார்த்து கையசைத்து அவனிடம்
வந்தாள்.
"எப்படி பண்ணே. எனக்கு ஊத்திக்கும்னு நினைக்கிறேன்"
"பண்ணியிருக்கேன்.பார்ப்போம்"
"ஒன்னும் கவலைப்படாதே. காலேஜ்லே எல்லோரும் பேப்பர்
பார்த்து கலவரத்துல இருக்காங்க. இந்த ஒரு பேப்பர் போனா என்ன. மத்ததெல்லாம் நல்லாதானே
செஞ்சிருக்கே"
"ம்."
"சரி லீவ்லே ஊருக்கு போறியா."
"இல்லை"
"நான் ஜெர்மனிக்கு ஒரு பேமிலி ட்ரிப் போறேன்.
காலேஜ் ஆரம்பித்ததும் பார்க்கலாம்."
காவ்யா ஜீவனிடம் விடை பெற்றுச் சென்றாள்.
ஒரு மாதம் கழித்து கல்லூரி திறந்தது.
நோட்டிஸ் போர்டில் ரிசல்ட் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொருவரும் தங்கள் மார்க்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அனைவரும் Artificial Intelligence சப்ஜெக்டில் பெயில் ஆகியிருந்தனர்.
காவ்யா கவுத்தமை நோக்கி "எப்படி வாங்கியிருக்கே"
"எல்லாத்துலே 90க்கு மேலே. ஆனா Artificial
Intelligence சப்ஜெக்டில் மட்டும் 50 தான். அந்த புரபசருக்கு என்னைக் கண்டாலே பிடிக்கலே.
அதான் பழி வாங்கிட்டார்."
"நான் Artificial Intelligence சப்ஜக்டில்
52. கிளாஸ்லே மத்த எல்லோரும் பெயிலாமே"
சற்று தள்ளி நின்ற ஜீவனைப் பார்த்து "ஜீவன் மார்க்
பார்க்கலையா"
"இல்லை"
"சரி என் கூட வா பார்க்கலாம்"
காவ்யா ஜீவனின் கையைப் பிடித்து நோட்டிஸ் போர்டைப்
பார்க்க அழைத்துச் சென்றாள்.
"வாவ் எல்லத்துலேயே 100 வாங்கியிருக்கே. Artificial
Intelligence சப்ஜெக்டிலேயும் 100. என்னால் நம்பவே முடியலே. ஜீவன் நீ அவ்வளவு ஜீனியஸா.
உன்னைப் பார்த்து எனக்கு மிகவும் பொறாமையா இருக்கு"
திடீரென ஜீவன் கன்னத்தில் ஒரு முத்தமிட்டாள். அவன்
இதை எதிர்பார்க்காமல் திகைத்து நின்றான்.
கவுத்தம் தனது பார்வையால் இருவரையும் சுட்டெரித்துக்
கொண்டிருந்தான்..
Chapter 4
தீனதயாள் பைல்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த போது
உதவியாளர் அறைக்கு வந்தார்.
"சார் உங்களைப் பார்க்க ஸ்டுடண்ட்ஸ் ரெண்டு பேர்
வந்திருக்காங்க"
"சரி வர சொல்லு"
தன்னை நேரடியாக ஸ்டுடண்ட்ஸ் சந்திக்க வந்திருப்பதால்
விஷயம் கொஞ்சம் பெரிதாகத் தான் இருக்கும் என்று தீனதயாள் ஊகம் செய்தார்.
அறைக்குள் கவுத்தமும் பஷீரும் உள்ளே நுழைந்து தங்களை
அறிமுகம் செய்துக் கொண்டனர்.
"என்ன விஷயம்"
"போன செமஸ்டர் எக்சாமில் சில முறைகேடுகள் நடந்திருக்கு.
அதைப் பற்றி உங்களிடம் ரிப்போர்ட் செய்ய வந்திருக்கோம்"
"விவரமா சொல்லுங்க"
"பஷீரின் ரூம்மேட் பெயர் ஜீவன். அவன் எக்சாமுக்கு
முன்னரே அனைத்து கேள்வித்தாள்களையும் பார்த்திருக்கிறான்"
"அதற்கு வாய்ப்பே இல்லை"
"கேள்வித்தாள்கள் அனைத்தும் நம் கல்லூரியின்
கம்ப்யூட்டர் சர்வர் ஒன்றில் வைத்திருக்கிறீர்கள் அல்லவா. அதை அவன் ஊடுருவி அனைத்தையும்
பார்த்திருக்கிறான்"
"ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டக் கூடாது"
"நம் கம்ப்யூட்டர் சென்டரிலிருந்து தான் அந்த
சர்வரை ஊடுருவி இருக்கிறான். நவம்பர் 10 ஆம் தேதி அன்று நடந்திருக்கிறது. தனது ஐடியிலிருந்தே
இதை செய்திருக்கிறான். அந்த தேதியில் யார் யாரெல்லாம் அந்த சர்வரை அணுகியிருக்கிறார்கள்
என்று பார்த்தால் தெரிந்து விடும்"
"சரி நான் கவனிக்கிறேன். நீங்கள் போகலாம்."
-------------*********-----------
ஒரு வாரம் கழித்து தீனதயாள் ஒரு அவசர ஸ்டாப் மீட்டிங்
நடத்தினார்.
"மிகவும் சீரியசான ஒரு விஷயம் நடந்திருக்கு. ஜீவன் நம்முடைய
கம்ப்யூட்டர் சர்வர்களை ஊடுருவி எக்ஸாம் கேள்வித்தாள்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறான்..
அந்த சர்வர் ஊடுருவபட்டிருப்பதாக நம்முடைய சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டரும் ஊரிஜிதம் செய்துள்ளார்.
இதை எல்லாம் ஜீவன் தான் செய்துள்ளான் என்பதற்கும் ஆதாரம் இருக்கிறது. அவனது ஐடியிலிருந்துதான்
இது எல்லாம் நடந்துள்ளது. இது மிகவும் கவலை தரக்கூடிய ஒரு விஷயம். இது பற்றி உங்கள்
கருத்து என்ன. மேற்கொண்டு நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் நாம் விவாதிக்க
வேண்டும்"
"அந்த ஜீவன் செமஸ்டரில் முதன்மையான மாணவனாக வந்திருக்கிறான்.
ஆனால் அவன் போன செமஸ்டரில் ஒரு வாரம் தான் கிளாசே அட்டண்ட் செய்திருக்கிறான். அப்படி
ஒன்றும் மிக புத்திசாலியான மாணவனும் கிடையாது. டெர்ம் டெஸ்ட் எல்லாவற்றிலும் ஒற்றை
இலக்க மதிப்பெண்கள் தான் வாங்கியிருக்கிறான்"
"அவனைக் கல்லூரியிலிருந்து நீக்க வேண்டும். போலீசில்
ஒப்படைக்க வேண்டும்"
"போலீஸ் எல்லாம் வேண்டாம். நீக்கினாலே போதும்"
"ராம் ஷங்கர், நீங்கள் ஒன்றும் கூறாமல் இருக்கிறீர்கள்."
"என்னுடைய Artificial Intelligence பேப்பரில்
கல்லூரியிலேயே மூன்று பேர் தான் பாஸ் ஆகியிருக்கிறார்கள். அதில் ஜீவனும் ஒருவன். அவன்
100 மதிப்பெண்கள் வாங்கியிருந்தான்"
"அதற்கென்ன. அவன் தான் கேள்வித்தாளை முன்னரே
பார்த்துவிட்டானே."
"அதில் ஒன்றும் பிரயோஜனமில்லை. எக்சாமில் நான்
கேட்டிருந்த கேள்விகள் இது வரை Artificial Intelligence துறையிலிருக்கும் பெரிய மேதாவிகளுக்கே
சரியான விடை தெரியவில்லை. அவன் அளித்திருந்த பதில்களைப் பார்த்து எனக்கே ஒரு இன்ப அதிர்ச்சியாக
இருந்தது. அவன் தவறு செய்திருக்க வாய்ப்பில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது"
"இந்த இண்டநெட் உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும்
அவன் பதில்கள் கண்டு பிடித்திருக்கலாம் அல்லவா"
"இருக்கலாம். ஆனால் அதற்கு வாய்ப்பு மிகவும்
குறைவு. இந்தக் கேள்விகள் Artificial Intelligence துறையின் பெரிய மர்மங்கள். இதற்கு
சரியான விடைகள் தெரிந்தவர்கள் யாருமில்லை"
"ராம்ஷங்கர் நீங்கள் தேவையில்லாமல் குழப்பாதீர்கள்.
ஜீவன் மிகவும் சராசரியான ஸ்டுடென்ட். நான் கிளாசில் அவனிடம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம்
அவன் முழித்த முழியைப் பார்த்தால் நீங்கள் இவ்வாறு கூற மாட்டீர்கள்"
தீனதயாள் சிறிது நேரம் அமைதியாக சிந்தித்தார்.
"சரி நாளை ஜீவனின் பெற்றோர்களை என்னை வந்து சந்திக்க
தகவல் அனுப்பி விடுங்கள். அவரகளிடம் பேசிய பிறகு ஜீவனைக் கல்லூரியிலிருந்து நீக்கி
விடலாம்."
-------------*************------------
ஜீவனும் அவனது அம்மாவும் தீனதயாளின் அறை முன் காத்துக்
கொண்டிருந்தனர். என்ன விஷயமாக இருக்கும் என்ற கவலை தோய்ந்த குழப்பம் இருவர் முகத்திலும்
தெரிந்தது.
உதவியாளர் உள்ளே செல்லலாம் என்று கூற இருவரும் அறைக்குள்
நுழைந்தனர். தீனதயாள் இருவரையும் அமருமாறு கூறினார்.
"நீங்கள் எந்த ஊர் அம்மா"
"நாங்க விழுப்புரம் பக்கத்திலே ஆண்டிக்குப்பம்
கிராமம் ஐயா"
"உங்க பையன் என்ன தப்பு பண்ணியிருக்கான் தெரியுமா"
"அவன் தப்பு ஒன்னும் செய்ற பையன் இல்லை ஐயா"
"போன செமஸ்டர் எக்ஸாம் கேள்விகள் இருக்கும் எங்க
கம்ப்யூட்ட ரை பரீட்சைக்கு முன்னரே ஊடுருவி
கேள்விகளைப் பார்த்திருக்கான். இது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா"
"நீங்க சொல்றது புரியல ஐயா. இவனுக்கு சின்ன வயசிலேயே
உங்க காலேஜில தான் படிக்கணும்னு அவ்வளவு ஆர்வம். சோறு தண்ணி கூட சாப்பிடாம இரவு பகலா
படிப்பான். ஏதேதோ கணக்கெல்லாம் போடுவான். சொல்லி கொடுக்க கூட யாரும் கிடையாது. அவனே
முயற்சி செஞ்சி படிச்சது தான். புது இடம்னால் இங்கே கொஞ்சம் கஷ்டபட்டிருப்பான். ஆனா
நல்ல அறிவாளியான பையன். தப்பு எல்லாம் செஞ்சிருக்க மாட்டான்."
"அவன் தான் செஞ்சிருக்கான் என்று எங்களிடம் ஆதாரம்
இருக்கு. இவனை நாங்கள் கல்லூரியிலிருந்து நீக்கப் போகிறோம். இன்று தான் கடைசி நாள்.
ஹாஸ்டலை காலி செய்து விடுங்கள்."
"என்ன இப்படி சொல்றீங்க ஐயா. இவன் கனவில் மண்
அள்ளிப் போட்டுடாதீங்க.. தம்பி என்ன அமைதியா இருக்கே. நீ செய்யலைன்னு ஐயா கிட்டே சொல்லு"
ஜீவன் எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தான்.
------******----------------
இரண்டு நாட்கள் கழித்து தீனதயாளுக்கு போன் கால் வந்தது.
மறுமுனையில் உதயமூர்த்தி சந்திக்க விரும்புவதாகக் கூறினார். மாலை தன்னை கல்லூரியில்
சந்திக்கலாம் என்று தீனதயாள் பதிலளித்தார்.
சரியாக ஆறு மணிக்கு வந்த உதயனை வரவேற்றார்.
"கரெக்ட் டைமுக்கு வந்துட்டீங்களே. உங்கள் டைம்
சென்ஸ் ரொம்ப ஷார்ப்பா இருக்கு."
"விஷயம் மிகவும் முக்கியம் என்கிற காரணம் தான்."
"சொல்லுங்க என்ன விஷயம்"
"இரண்டு நாள் முன்னர் ஜீவன் என்கிற மாணவனை உங்கள்
கல்லூரியிலிருந்து நீக்கியிருக்கிறீர்கள். அது பற்றி பேச வேண்டும்"
"ஜீவனைப் பற்றியா. அவன் சில தவறுகள் செய்திருக்கிறான்.
அதனால் ஆக்ஷன் எடுத்தோம். அதற்கென்ன"
"ஜீவனை எனக்கு நன்கு தெரியும். அவன் தவறு செய்யவில்லை"
"அவன் எங்கள் கம்ப்யூடர் சர்வரை ஊடுருவி கேள்வித்தாள்களை
பார்த்திருக்கிறான். ஆதாரம் எல்லாம் இருக்கே"
"அவன் கம்ப்யூடர் சென்டர் வந்தது உண்மை. ஆனால்
அதில் கேம் தான் ஆடியிருக்கிறான். போகும்போது Log Off செய்யவில்லை. அதன் பின் கவுத்தமும்
பஷீரும் அதே ஐடியில் சர்வரை ஊடுருவி இருக்கிறார்கள்"
"இதற்கு ஆதாரம் உள்ளதா"
"இல்லை"
"அப்படி என்றால் ஏன் இப்படி அபத்தமாக உளறுகிறீர்கள் .ஜீவன் ஒரு பிலோ ஆவரேஜ் மாணவன். ஆனால் அவன் கல்லூரியின் டாப்பர்.ஆனதிலிருந்தே
ஊகம் செய்ய முடியவில்லையா அவன் தான் கல்ப்ரிட் என்று"
"அதற்கு வேறு காரணங்கள் இருக்கிறது"
"என்ன காரணம்"
"சென்ற முறை சந்தித்த போது உங்களிடம் என் ஜெனடிக்
ஆரய்ச்சி பற்றி கூறினேன் அல்லவா. என்னுடைய டெஸ்டிற்கு ஜீவனைப் பயன்படுத்தினேன். அதன்
விளைவு தான் அவனிடம் ஏற்பட்ட இந்த மாற்றம்"
"வாட்! நீங்கள் இப்படி செய்திருப்பீர்கள் என்று
நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் செய்திருப்பது கிரிமினல் குற்றம்"
"என்ன குற்றம். ஒரு ஏழை மாணவன். கிராமத்திலிருந்து
பல கஷ்டங்களைத் தாங்கி கனவுடன் இந்த கல்லூரிக்கு வந்திருக்கிறான். அவனால் பிறக்கும்
போதே வெள்ளிக் கிண்ணத்தில் சோறுண்ட மற்றவர்களுடன் போட்டியிட முடியவில்லை. அவனை எள்ளி
நகையாடி உங்கள் சிஸ்டம் அவன் கனவை சிதைக்கிறது. இந்த சிஸ்டத்தை தலைகீழாகப் புரட்டிப்
போடும் என் ஆராய்ச்சியில் என்ன தவறு"
"உதயன் உங்களுக்கு ஒரு சிறுவன் பற்றி கதை சொல்லப்
போகிறேன். ராமநாதபுரத்தை ஒட்டிய கிராமத்தில் பிறந்த சிறுவன் அவன். வறுமை என்றால் வறுமை
அவன் குடும்பத்தில் அவ்வளவு வறுமை.அவன் அப்பா ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. அவன்
அம்மா ஒரு விவசாயக் கூலி. சிறுவனுக்கு படிக்க வசதி இல்லை. அவன் தினமும் ஒரு பீடித்
தொழிற்சாலையில் வேலை செய்தான். அவனுக்கு படிப்பின் மீது தீராக் காதல்.வெறித்தனமாகப்
படித்தான். ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். தன் படிப்பு செலவுக்காக இரவெல்லாம்
வேலை செய்தான்.கல்லூரியின் முதல் மாணவனாக வந்தான். இன்று மிகவும் நல்ல நிலையில் இருக்கிறான்.
அந்த சிறுவன் யார் தெரியுமா"
உதயன் முகத்தில் கேள்வி தெரிந்தது.
"அந்த சிறுவன் தான் இன்று உங்கள் முன் நிற்கிறான்.
கடும் உழைப்பினால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. அதற்கு உதாரணம் நான் தான்."
"உங்களைப் போல கோடியில் ஒருவரால் தான் சாதிக்க
முடியும்.உங்கள் வழி சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்கு எளிய வழி கிடையாது."
"இதற்கு மேல் உங்களிடம் வாதம் செய்ய நான் விரும்பவில்லை.
நீங்கள் போகலாம்."
------------************------------
அடுத்த நாள் செய்தித்தாள்களிலும் தொலைகாட்சியிலும்
பரபரப்பான செய்தி வந்திருந்தது.
"சென்னையைச் சேர்ந்த உதயமூர்த்தி என்கிற சைண்டிஸ்ட்
கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மரபியல் மூலம் மனிதனின் அறிவாற்றலை மேம்படுத்தும் ஆராய்ச்சி
செய்து வருகிறார். இதன் மூலம் சராசரி அறிவாற்றல் உடைய மனிதர்கள் கூட ஐன்ஸ்டீன் அளவுக்கு
பேரறிவாற்றல் அடையலாம் என்று அவர் கூறி வருகிறார். தன் ஆராய்ச்சியை மனிதர்களிடம் பரிசோதிக்க அரசு அனுமதி மறுத்த பின்னும் ஐ.ஐ.டி
யைச் சேர்ந்த ஒரு மாணவனைப் பரிசோதனைக்கு பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனை
அந்தக் கல்லூரியின் துணை வேந்தர் தீனதயாள் புகார் அளித்துள்ளார்."
அடுத்த சில மணி நேரங்களில் எல்லாக் கல்லூரிகளிலும்
இந்த செய்தியே பிராதானமாக விவாதிக்கப்பட்டது. சில இடங்களில் உதயனுக்கு ஆதரவாகவும் எதிராகாவும்
மானவர்களிடேயே அடிதடி ஏற்பட்டது.
தெருக்களில் கலவரம் ஏற்பட ஆரம்பித்தது. அப்போது தான்
அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது.
உதயனுக்கு ஆதரவாக ஒரு மாணவன் தன்னையே தீக்குளித்துக்
கொண்டான்.
அடுத்த நாள் உதயனைத் தண்டிக்க வேண்டும் என்று இன்னொரு
மாணவன் தீக்குளித்தான்.
அரசு சட்ட ஒழுங்கை நிலை நிறுத்த முடியாமல் தவித்தது.
தீனதயாள் இதனால் சிறிதும் சலனம் அடையாமல் தனது தினக்
கடமைகளை செய்து வந்தார்.
ஒரு நாள் அவரது உதவியாளர் அறைக்கு வந்து முதலமைச்சர் சந்திக்க விரும்புவதாகக்
கூறினார். உடனே கிளம்பி முதலமைச்சர் வீட்டில் இருந்தார்.
"என்ன நடக்குது தீனதயாள். நீங்க செய்த காரியம்
பெரிய வினையை ஏற்படுத்தி இருக்கு. உடனே உதயன் மீதான குற்றச்சாட்டை வாபஸ் வாங்குங்கள்"
"அதனால் பிரச்சினை சரி ஆகி விடுமா. உதயனுக்கு
எதிராகவும் எவ்வளவு பேர் போராடுகிறார்கள். அவர்கள் சும்மா இருப்பார்களா"
"அதெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்"
"உதயன் செய்தது சட்ட விரோதம். நீங்கள் என்னை
வற்புறுத்தினால் நான் பிரதமரிடம் கூட செல்வேன். ஏற்கனவே சட்ட ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை
என்று உங்கள் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று பேசுவதாகத் தெரிகிறது."
"என்னையே மிரட்டுகிறீர்களா."
"என்னை வற்புறுத்தினால் எனக்கு வேறு வழி இல்லை"
"சரி நீங்கள் உதயனை சந்தித்துப் பேசுங்கள். அவர்
வாயாலேயே தன் ஆராய்ச்சி தவறு என்றும், இதனால் பல சைட் எபக்ட் வரும் என்றும், தன் ஆராய்ச்சியை
நிறுத்தப் போவதாகவும் சொல்ல வையுங்கள். இந்த உதவியாவது செய்தால் பலரின் உயிரைக் காப்பாற்றிய
புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்"
"சரி முயற்சி செய்கிறேன்"
--------------***********------------
அடுத்த நாள் தீனதயாள் உதயனை சிறையில் சந்தித்தார்.
உதயனின் முகத்தில் ஒரு யோகியின் அமைதி இருப்பதைக் கண்டு வியப்பாக இருந்தது.
"உங்களால் எவ்வளவு பிரச்சினை. எத்தனை உயிரிழப்பு"
"பெரிய மாற்றங்கள் ஒரு புரட்சியின் மூலமே மலரும்.
சரித்திரத்தை படித்துப் பாருங்கள்."
"இத்தனை சிறுவர்கள் உயிரிழந்து இறந்திருக்கிறார்களே.
அவர்கள் குடும்பத்துக்கு யார் பதில் சொல்வது"
"நாளை மலரும் புதிய சமூகத்திற்கு தங்கள் உயிரைக்
கொடுத்த சிப்பாய்கள் அவர்கள்"
"அரசாங்கம் உங்களுக்கு மேலும் பிரச்சினை தரும்.
வாழ் நாள் முழுக்க இந்த சிறையை விட்டு வெளியே வர முடியாதபடி செய்ய முடியும்"
"ஏன் இந்த மிரட்டல்"
"மிரட்டவில்லை. உங்கள் ஆராய்ச்சியினால் உயிருக்கு
தீங்கு விளைவிக்கும் சைட் எபக்ட் உண்டு என்று ஒரே ஒரு ஸ்டேட்மென்ட் மட்டும் கொடுத்து
விடுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்"
"முதலில் மிரட்டல். இப்போது பேரம்"
"உங்கள் மனைவி குழந்தைகள் அனைவரையும் என்னால்
உள்ளே தள்ள முடியும்"
"முதலில் எனக்கு மனைவி குழந்தைகளே கிடையாது.
நான் திருமணமே செய்து கொள்ளவில்லை"
"ஜீவனைப் பற்றி நான் எந்தப் புகாரும் இது வரை
அளிக்கவில்லை. நீங்கள் முரண்டு பிடித்தால் அவனையும் நான் உள்ளே தள்ள முடியும்"
"முயற்சி செய்யுங்கள். முதலில் அவன் எங்கே என்று
கண்டு பிடியுங்கள்"
"ஜீவனை ஒளித்து வைத்திருக்கிறீர்களா"
உதயன் முகத்தில் புன்னகை மட்டும் பதிலாக வந்தது.
-----------********-----------
இரண்டு வாரங்கள் கழிந்தது. தெருக்களில் குழப்பம் குறைந்தபாடாக
இல்லை. தீனதயாள் அரசிடமிருந்து வந்த நெருக்கடிகள் எதற்கும் மசிந்து கொடுக்கவில்லை.
எப்போதும் போல தனது வேலைகளை செய்து வந்தார். அன்று பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் துணை
வேந்தருடன் ஒரு அப்பாயின்மென்ட். அப்போது தான் அவருக்கு ராம்ஷங்கர் தலைமையில் நடக்கும்
ஆராய்ச்சி பற்றி ஞாபகம் வந்தது. மற்ற பிரச்சினைகளில் அது எந்த நிலையில் இருக்கிறது
என்று கவனிக்கவே இல்லை. உடனே ராம் ஷங்கர் தன்னை சந்திக்க வர சொல்லி தகவல் அனுப்பினார்.
சில நிமிடங்களில் ராம் ஷங்கர் தீனதயாள் அறையில் இருந்தார்.
"ஒரு பெரிய சிக்கல் சார். நாங்கள் எந்த கோட்பாட்டின்
அடிப்படையாகக் கொண்டு சாப்ட்வேர் எழுதினோமா அது தவறு என்று இப்போது தான் தெரிகிறது.
நானே நேரடியாக இதில் ஈடுபட்டுள்ளேன். எல்லோரும் இரவும் பகலுமாக வேலை செய்து வருகிறோம்.
ஆனால் எங்களால் ஒரு தீர்வு கண்டு பிடிக்க முடியும் என்று தோணவில்லை"
"வாட்! இதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் தெரியுமா.
உலகமெங்கும் உள்ள மீடியாவில் நம் கல்லூரி பற்றியும் இந்த ஆராய்ச்சி பற்றியும் கவர் செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியே தெரிந்தால்
எல்லோரும் காறித்துப்புவார்கள். நாம் பிரின்ஸ்டன் பல்கலைகழகத்துடன் செய்த உடன்பாடு
படி இந்த மாதத்துக்குள் வெற்றிகரமாக ஆராய்ச்சியை முடிக்கா விட்டால் அவர்களுக்கு நஷ்ட
ஈடு கொடுக்க வேண்டும்."
"எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை"
"என்ன பதில் இது. உங்கள் வேலை போகும் சமாசாரம்
இது. அதற்கு முன்னாள் என் வேலை போகும். மிகவும் பொறுப்பில்லாமல் பதில் சொல்கிறீர்கள்"
"எனக்கு ஒரு யோசனை. நீங்கள் மட்டும் கொஞ்சம்
பிடிவாதம் பிடிக்காவிட்டால் இந்த பிரச்சினையிலிருந்து நாம் விடுபடலாம்"
"என்ன தீர்வு"
"ஜீவன்"
"புரியும்படி சொல்லுங்கள்"
"இந்த ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்து கொடுக்கக்
கூடிய ஒரே ஆள் ஜீவன் தான். அவனை கண்டு பிடித்து அழைத்து வந்தால் தான் நாம் நிம்மதியாக
மூச்சு விட முடியும்"
"அவனால் செய்ய முடியும் என்று எப்படி சொல்கிறீர்கள்"
"செமஸ்டர் எக்சாமில் நான் கேட்ட கடினமான கேள்விகளுக்கு
அவன் தெளிவாக பதிலளித்ததிலிருந்து எனக்கு இந்த யோசனை தோன்றியது"
"அது முடியாது. இது என் கௌரவம் சம்மந்தமான விஷயம்"
"உங்கள் கௌரவம் முக்கியமா அல்லது நமது கல்லூரியின்
மானம் பெரிதா என்று முடிவு செய்யுங்கள்"
தீனதயாள் சிறிது நேரம் சிந்தித்து விட்டு தான் உதயனை
சந்திக்க விரும்புவதாக போலீஸ் அதிகாரியிடம் சொல்லி அனுப்பினார்.
அடுத்த நாள் காலை உதயனை தீனதயாள் சந்தித்தார். அவரிடம்
நிலைமையை விளக்கிக் கூறினார்.
"ஜீவனை கண்டிப்பாக என்னால் சம்மதிக்க வைக்க முடியும்.
ஆனால் இது உங்கள் சூழ்ச்சியோ என்று தோன்றுகிறது. அவனை கைது செய்ய நீங்கள் போடும் திட்டமா
இது."
"இந்த கடிதத்தைப் பாருங்கள். முதலமைச்சர் கையெழுத்து
உள்ள கடிதம். இந்த பிரச்சினைக்கு ஜீவன் தீர்வு கொடுத்தால் உங்களுக்கும் விடுதலை. ஜீவன்
கல்லூரியில் தொடர்ந்து படிக்கலாம் என்று இதில் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
"
"எனக்கு ஒரு செல்போன் மட்டும் கொடுங்கள். ஜீவனைத்
தொடர்பு கொண்டு பேசுகிறேன். இன்னும் அறை மணி நேரத்தில் ஜீவன் உங்கள் அலுவலகத்தில் இருப்பான்"
தீனதயாள் கல்லூரிக்கு சென்ற போது அவர் அறையில் ஜீவன்
இருந்தான்.
"ராம்ஷங்கரை நான் சந்திக்க வேண்டும். அவரிடம்
அனைத்து விபரங்களும் கேட்ட பிறகு எப்போது சாப்ட்வேர் எழுதி முடிக்கலாம் என்று தேதி
சொல்கிறேன்"
ராம்ஷங்கர் தீனதயாள் அறைக்கு அழைக்கப்பட்டார்.விபரங்கள்
கேட்ட பிறகு ஜீவன் "நான் மட்டும் வேலை செய்தால் ஒரு மாதத்தில் முடிக்கலாம். ராம்ஷங்கரின்
உதவி கிடைத்தால் 20 நாட்களில் முடிக்கலாம்"
"நாம் முடிக்க வேண்டிய தேதி என்ன" தீனதயாள்
ராம்ஷங்கரிடம் கேள்வி கேட்டார்.
"இன்னும் 30 நாட்கள் டைம் உள்ளது"
"உடனே வேலையைத் துவங்குங்கள்"
------------***********---------------
ஒரு மாதம் கழிந்தது. ஜீவனும் ராம்ஷங்கரும் ஆராய்ச்சியை
வெற்றிகரமாக முடித்திருந்தனர்.
தீனதயாள் மற்றும் ராம்ஷங்கரின் பேட்டிகள் உலகமெங்கும்
உள்ள செய்தித்தாள்களிலும் தொலைகாட்சிகளிலும் பேசப்பட்டது.ஐஐடி கல்லூரியின் பெருமை உலகமெங்கும்
பரவியது.
உதயன் விடுதலை செய்யப்பட்டார். அதனால் கலவரங்களும்
குறைந்தது.
ஒரு நாள் உதயன் தன் வீட்டில் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும்போது
வீட்டில் காலிங் பெல் அடித்தது. வெளியே தீனதயாள் நின்று கொண்டிருந்தார்.
உதயன் அவரை வரவேற்று இருவரும் சோபாவில் அமர்ந்தனர்.
"என்னை சந்திக்க வருவீர்கள் என்று எதிர்பார்க்கவே
இல்லை. என் மீது உங்கள் கோபம் குறையாது என்று நினைத்தேன்"
"அது இன்னும் குறையவில்லை. ஜீவன் கல்லூரி பக்கம்
வரவே இல்லை. அவன் எங்கு சென்றான் என்று கேட்கத்தான் வந்தேன்"
"அவனிடம் அவசியம் டிகிரி முடிக்க வேண்டும் என்று
வற்புறுத்தியிருந்தேன். அவன் ஹாஸ்டலில் இருப்பான் என்றல்லவா நினைத்தேன்"
"அவனைத் தொடர்பு கொண்டு பேச முடியுமா"
உதயன் செல்போனில் ஜீவனைத் தொடர்பு கொள்ள முயன்று தோற்றார்.
"ஊரில் இருக்கும் அவன் அம்மாவிடம் பேசுகிறேன்"
"போன மாதம் வீட்டிற்கு வந்தான். காவ்யா என்கிற
பெண்ணை அறிமுகம் செய்தான்.தன் தோழி என்றும் அவளைத் தான் கல்யாணம் செய்வேன் என்றும்
கூறினான். படிப்பை முதலில் முடி என்று சொன்னேன். ஏதோ வாழ்க்கையை படிக்கப் போகிறேன்
என்றெல்லாம் சொன்னான். எனக்கு ஒன்றும் புரியவில்லை.கல்லூரி பக்கம் போகப் போவதில்லை
என்று சொன்னான்.அவன் இஷ்டம் என்று விட்டு விட்டேன். காவ்யாவும் அவனும் சேர்ந்து ஏதோ
ஒரு புதுமையான முயற்சி செய்யப் போவதாக சொன்னான். வருடத்திற்கு ஒரு முறை மட்டும் என்னை
பார்க்க வா என்று சொன்னேன். அவன் எங்கு இருக்கிறான் என்று தெரியவில்லை. வாரம் ஒரு முறை
அவனும் அந்தப் பெண்ணும் போனில் தொடர்பு கொண்டு பேசுவார்கள். அவ்வளவு தான் எனக்குத்
தெரியும்"
உதயன் போனை வைத்ததும் உடனே காவ்யாவை தொடர்பு கொள்ள
வேண்டும் என்று தீனதயாள் கூறினார்.
"விட்டு விடுங்கள். அவன் எங்கிருந்தாலும் சந்தோஷமாக
இருக்க விடுங்கள்."
தீனதயாள் ஒரு பெருமூச்சு விட்டு விடை பெற்று சென்றார்.
வீட்டின் கதவருகே வந்ததும் தீனதயாள் உதயனைப் பார்த்து
"நீங்க ஜெயிச்சிட்டதா நினைக்காதீங்க. இந்த உலகிலே எல்லோரும் சமம் ஆகிட முடியாது.
உங்கள் சித்தாந்தம் ரஷ்யாவில் தோல்வி அடைந்தது.சீனா வேறு தடத்தில் செல்கிறது. முடிவில்
உங்களுக்குத் தோல்வி தான்."
"நான் உலகில் எல்லோரும் சமமாக முடியும் என்று
கூறவில்லையே. அறிவாற்றல் என்பது வெறும் ஒரு கருவி தான். அது எல்லோருக்கும் கிடைக்க
செய்யாமல் தடைகளைப் போட்ட இந்த சமூகத்தின் போலித்தன்மையை தான் உடைத்தேன். இந்தக் கருவி
ஒரு உளி போல.அதை வைத்து ஒரு சிற்பமும் வடிக்கலாம், வெறும் கல்லையும் செய்ய முடியும்
அது ஒவ்வொரு மனிதனின் உள்ளிருக்கும் ஜீவ சக்தியைப் பொருத்தது. இந்த ஜீவசக்திதான் ஒவ்வொரு
மனிதனையும் வேறுபடுத்துகிறது. எந்த காலகட்டத்திலும் இந்த சமூகம் சமமாக முடியாது. நான்
உங்களுடன் உடன்படுகிறேன்"
தீனதயாள் பதில் ஏதும் கூறாமல் சென்று விட்டார்.
எட்டு வருடங்கள் கழித்து
உதயன் ஓய்வு பெற்று ஊட்டியில் ஒரு சிறு வீடு வாங்கினார்.
தன் கடைசி காலத்தை இயற்கை சார்ந்த மலைப் பிரதேசத்தில் கழிக்க முடிவு செய்திருந்தார்.
தினமும் காலை வாக்கிங் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு மணி நேரம் நடந்து விட்டு ஒரு பார்க்கில் அமர்வார்.
பார்க்கில் கடந்த ஒரு வாரமாக அந்த நான்கு வயது சிறுவன்
விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.
அன்று அந்த சிறுவன் அவர் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.
உதயன் தன் பையிலிருந்து க்யூபைக் கையில் எடுத்து விளையாடினார். ஐந்து நிமிடங்கள் ஆகிறது.
இரண்டு நிமிடங்களில் முடித்த காலம் எல்லாம் போய் விட்டது. தனக்கு வயதாகிக் கொண்டிருப்பதை
உணர்த்துவதாக அது இருந்தது.
சிறுவன் அவர் கையில் இருக்கும் க்யூபையே பார்த்துக்
கொண்டிருந்தான்.
சிறுவனிடம் வேண்டுமா என்று சைகையில் உதயன் கேட்டார்.
ஆம் என்று சிறுவன் தலையாட்டினான்.
உதயன் அவனிடம் க்யூபை கொடுக்க சிறுவன் சர சரவென சுற்றினான்.
ஒரு நிமிடத்தில் க்யூப் தீர்வு செய்யப்பட்டிருந்தது.
"மை காட்! இவன் என்ன சிறுவன்!" உதயன் பெரிதும் வியப்படைந்தார்.
பல முறை க்யூபை கலைத்து கொடுத்தும் ஒரு நிமிடத்தில்
தீர்வு கண்டான்.
உதயன் அவனிடம் பேச்சு கொடுத்தார்.
"உன் பெயர் என்ன"
"விஷால்"
உங்க வீடு எங்கே இருக்கு"
சிறுவன் சற்றுத் தொலைவிலிருந்த ஹோட்டலைக் காண்பித்தான்.
"ஒ! வேற ஊரிலிருந்து வந்திருக்கியா. உங்க அப்பா
அம்மா எங்கே"
"ரூம்லே இருக்காங்க"
"அப்பா பெயர்"
அப்போது "விஷால்" என்று ஒரு குரல் கேட்க
பின் திரும்ப காவ்யா நின்றாள்.
"விஷால் இங்கே என்ன பண்றே.யார் கூட பேசிட்டு
இருக்கே. அட உதயன் சார்! நீங்களா! உங்களைப் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு."
"காவ்யா உன்னை இங்கே பார்ப்பேன் என்று எதிர்
பார்க்கவே இல்லை. ஜீவன்?"
"நான் ஜீவனோட தான் இருக்கேன். எங்களுக்குத் திருமணம்
ஆகி ஐந்து வருடம் ஆகிறது. இது எங்க ஒரே பையன் விஷால். ஜீவன் உங்களைப் பார்த்த ரொம்ப
சந்தோஷப்படுவார்"
ஜீவன் அவர்களை நோக்கி சற்று தொலைவில் வந்து கொண்டிருந்தான்.
"உதயன் சார் நீங்களா? வாட் எ ப்ளசன்ட் சர்ப்ரைஸ்."
உதயன் ஜீவனுக்கு கை கொடுத்து அணைத்தார்.
"உங்க ஆராய்ச்சிக்கு சென்ற மாதம் கடைசியா அரசிடமிருந்து
சம்மதம் வந்து விட்டதுன்னு தெரிஞ்சு ரொம்ப சந்தோஷப்பட்டேன்.உடனே உங்களிடம் பேசணும்னு
தொடர்பு கொண்டேன். உங்க போன் மாறிடுச்சுனு நினைக்கிறேன்"
"ஆம். நீ என்ன செய்றே"
"காவ்யா, விஷாலோட இந்த உலகெல்லாம் சுத்தறேன்"
"வேலை என்ன செய்யறே"
"இந்த வேலைன்னு கிடையாது. ஒரு நாள் கூகிள் கம்பனியில்
கன்சல்டிங் பண்றேன் இன்னொரு நாள் கிராமத்து ஸ்கூலில் பாடம் சொல்லித் தரேன் மற்றொரு
நாள் லாரி ஓட்டுறேன். ஒரு இடம் ஒரு தொழில்னு நிரந்தரம் இல்லாமல் வாழ்க்கை ஓடுது. என்னுடைய
பயணத்துக்கு தேவையான அளவு சம்பாதிக்கிறேன்"
"அப்போ விஷாலின் படிப்பு?"
"என்னைப் போலவே சம கருத்துடைய 10 குடும்பங்கள்
ஒன்றாக உலகமெங்கும் சுத்துறோம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு துறையில் திறமை. நாங்களே
ஒண்ணா சேர்ந்து எங்கள் குழந்தைக்கு சொல்லி கொடுக்கிறோம். எங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பது
வெறும் அறிவு வேட்கையைத் தீர்வு செய்யும் கல்வி.
இதில் பரீட்சை கிடையாது மார்க் கிடையாது. நம்மை சுற்றி இருக்கும் உலகைப் பற்றி
ஒரு பிரமிப்பை குழந்தைகள் மனதில் உருவாக்க முயலுகிறோம்"
"ரொம்ப வித்தியாசமா இருக்கு. நேரமாகி விட்டது.
இன்னும் எவ்வளவு நாள் இங்கே இருப்பே. மீண்டும் நாம் சந்திக்கலாம்”
"நாங்க இன்னும் சிறிது நேரத்தில் கோவை ஏர்போர்ட்
போக வேண்டும். அங்கிருந்து இன்று பாரீஸ் செல்வதாகத் திட்டம். உங்க நம்பர் கொடுங்க நான்
அவ்வபோது உங்களிடம் பேசுகிறேன்."
“உன்னை சந்தித்ததில் சந்தோஷம்.உன் புது முயற்சி புதிய
வாழ்க்கை முறை வெற்றிகரமாக செல்ல என் வாழ்த்துக்கள்."
அவர்களிடம் விடை பெற்று விட்டு உதயன் மெல்ல வீட்டை நோக்கி நடந்தார். அவர் முகத்தில் ஒரு சிறு
புன்னகை தெரிந்தது.
"தீனதயாள் சார். நான் ஜெயிச்சுட்டேன். அதை இன்று
தான் முதன் முதலாக உணர்ந்தேன். நான் ஜெயிச்சுட்டேன்."
THE END
Inspirations:-
Non Fiction -The Future of Mind ---- Michio
Kaku.
Hollywood Movie ---- Good Will Hunting
Fiction - Five Foot Something --- Chetan
Bhagat.