ஓம் நமஹ
CHAPTER 1
அந்த மாலை நேரத்தில் சூரியன் மெல்ல மறைந்து
இருள் வானத்தைக் கவ்வ ஆரம்பித்தது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் மைதானம் மாலை
நேரங்களில் வழக்கமாகக் கலை கட்ட ஆரம்பித்து விடும். கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் என்று எல்லா விளையாட்டுகளும் அங்கு நடைபெறும்.
இருட்ட ஆரம்பித்ததால் மைதானத்தில் இருந்த
கலகலப்பு குறைந்தது. அனைவரும் தங்கள் ஹாஸ்டல் அறைக்கும், வீட்டுக்கும் செல்ல ஆரம்பித்தனர்.
ஆர்யா தனது டென்னிஸ் மட்டையைக் கையில் எடுத்துக்
கொண்டு கிளம்பினான். வெகு நேரம் விளையாடியதால் அவன் முகத்தில் வியர்வை வழிந்தது. உற்சாகத்துடன் ஒரு பாடலை
முனுமுனுத்த வண்ணம் தனது ஹாஸ்டல் அறையை நோக்கிச் சென்றான்.
பெண்களின் ஹாஸ்டலைக் கடந்துச் செல்லும் போது, அந்த இரு பெண்களைக்
கண்டதும் அவன் மனதில் பட்டாம்பூச்சி பறந்தது. ஹாஸ்டல் வாசலின் முன்னே இருந்த ஒரு திண்டில்
அமர்ந்துப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் குறிப்பாக சினேகா தான் ஆர்யாவின் உள்ளத்தைக்
கவர்ந்தவள்.
சினேகா ஆர்யாவுடன் அதே வகுப்பில் தான் படித்து வந்தாள். அவளைப் பார்த்த முதல் நாளிலேயே
அவள் அழகில் ஆர்யா மயங்கினான். கடந்த இரு வருடங்களாக அவளிடம் பேச முயற்சி செய்தான்.
ஆனால் அவள் கண்ணைப் பார்த்ததுமே அவன் வாய் வரை வந்த வார்த்தைகள் மௌனத்தின் பிடியில்
சிக்கின.
ஆர்யா சற்றுத் தூரத்தில் அவர்களுக்கு எதிரே
இருந்த இன்னொரு திண்டில் அமர்ந்த வண்ணம் சிநேகாவையே கண் கொட்டாமல் பார்த்தான்.
அவள் பார்வையில் படாத வண்ணம் இருந்தான். சினேகா பேசும் அழகை ரசித்தான். பேசும் போது
விரியும் அவள் கண்களை ரசித்தான். கைகளை ஆட்டி ஆட்டி அவள் பேசும் நளினத்தை ரசித்தான்.
எவ்வளவு நேரம் தன்னையே மறந்த வண்ணம் இருந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. இவளுடன்
மட்டும் தனது வாழ்க்கை அமைந்தால் எப்படி இருக்கும். ஆனால் அவள் தான் இவனைச் சட்டையே செய்வதில்லையே. அடுத்த வாரம் valentines day அன்று கண்டிப்பாக
அவளிடம் தனது காதலைத் தெரியப்படுத்த வேண்டும்.
அப்போது சினேகாவிடம் பேசிக் கொண்டிருந்த அந்த இன்னொரு பெண் ஆர்யாவைப் பார்த்து
விட்டாள். அவள் சினேகாவிடம் ஏதோ கூற, சினேகா ஆர்யாவைப் பார்த்து முறைத்தாள். பிறகு விருட்டென
இருவரும் கிளம்பி ஹாஸ்டலுக்குள் சென்று விட்டனர்.
ஆர்யா ஏமாற்றத்துடன் தனது ஹாஸ்டல் அறைக்கு வந்தான். ஒரு நீண்ட குளியல் போட்டு விட்டுத்
தனது வகுப்பில் கொடுத்த அசைன்மெண்ட் செய்ய ஆரம்பித்தான்.
அறைக்கு அவனது நண்பன் தனுஷ் வந்து இருவரும் சேர்ந்துப் பேசிக்கொண்டே அசைன்மென்ட்
செய்ய ஆரம்பித்தனர்.
ஆர்யா "மச்சான் இன்னைக்கு அவளைப் பார்த்தேண்டா"
தனுஷ் "யாரை?"
ஆர்யா "அதாண்டா சினேகா. தினமும் நான் அவளைப் பார்க்கிறது தான். ஆனா இன்னைக்கு
என்னைக்கும் இருக்கிறதை விடப் பல மடங்கு அழகா இருந்தா."
தனுஷ் "உனக்குப் பைத்தியம் தலைக்கு மேலே ஏறிடிச்சுன்னு நினைக்கிறேன். சரி
இன்னைக்காவது பேசினியா ?"
ஆர்யா "எங்கேடா என்னைப் பார்த்தாலே முறைச்சிட்டுப் போயிடறா"
தனுஷ் "மாப்ளே, அவளோட கோபமும் நியாயம்
தாண்டா. ரெண்டு வருஷமா வெறும் பார்வைதான். ஒரு வார்த்தைக் கூட பேசலே. அவளுக்கு உன்
மேலே எரிச்சல் வருமா வராதா"
ஆர்யா "அப்போ அவளுக்கும் என் மேலே ஒரு இது இருக்கும்னு சொல்றியா "
தனுஷ் "நம்மளை மாதிரி பொண்ணுங்களுக்கு ‘இது’ எல்லாம் உடனே வந்துராது.
பேசணும், பழகனும் அப்புறம் தான் வரும். நீ இன்னும் முதல் சாப்டேரே ஆரம்பிக்கல.
எங்கே லவ் வரும்"
ஆர்யா "பேசணும்னு நானும் தான் முயற்சி பண்றேன். ஆனா அவள் கண்ணைப் பார்த்தாலே
என் பல்ஸ் எகிறுது. ஹார்ட் பீட் எக்குத் தப்பா ஓடுது."
தனுஷ் "சரி உனக்கு ஸ்டார்டிங் டிரபிள். சினேகா கூடவே இன்னொரு பொண்ணும் சுத்துதே
அவ பேரு என்னடா"
ஆர்யா "ஏதோ அனுஷாவோ அனுஷ்காவோ. அவளை எல்லாம் யாரு கேர் பண்றா"
தனுஷ் "கேர் பண்ணனும். நம்ம லவ்வரோட பிரண்டோட இதயத்துல ஒரு சாப்ட் கார்னர்
கிரியேட் பண்ணாலே நம்ம காரியம் பாதி சக்சஸ்.
"
ஆர்யா "அப்படியா சொல்றே"
தனுஷ் "நீ நாளைக்கு என்ன பண்ணு. அந்த அனுஷ்காவோட பேசிப் பாரு. அவளை உன்னோட
பிரண்டா மாத்து. அப்புறம் அவள் மூலமா உன்னோட சினேகாவை மடிக்கப் பாரு"
ஆர்யா "இதுக்குதாண்டா நீ கூடவே இருக்கணும்னு சொல்றது. உனக்கு மட்டும்தான்
இப்படி ஐடியா எல்லாம் வருது"
தனுஷ் "அதுக்குதான் நிறைய தமிழ்ப் படம் பார்க்கனும்னு சொல்றது. வெறும் ஹாலிவுட்
படம் பார்த்தா அறிவு வளராது"
ஆர்யா உடனே யோசனையில் ஆழ்ந்தான்.
தனுஷ் "சரி கனவு கண்டது போதும். இந்த ப்ராப்ளம்ல அடுத்த ஸ்டெப் என்னனு சொல்லு"
ஆர்யாவும் தனுஷும் தங்கள் படிப்பில் ஆழ்ந்தனர்.
தனுஷ் கிளம்பத் தயார் ஆனான்.
ஆர்யா "சரிடா நாம பேசின மாதிரி அனுஷ்காவோட போய் பேசறேன். அவ எப்பவுமே சினேகாவோட தான் இருக்கா. எப்படிப் பேசறது."
தனுஷ் "நீ நாளைக்கு லேடீஸ் ஹாஸ்டல்லே போய் அவளை மட்டும் தனியா கூப்பிட்டுப்
பேசு"
ஆர்யா "இப்படி திடு திடுப்புன்னு கூப்பிட்டா கோவிச்சுக்க மாட்டாளா. நீயும்
கூட வாயேன்"
தனுஷ் "இதுக்கும் நான் தான் வரணுமா. நீ எல்லாம் இன்ஜினியரிங் காலேஜ் படிக்க
வந்துட்டே. ஆடு மேய்க்கத் தான் நீயெல்லாம் லாயக்கு. ஒன்னு பண்ணு நாளைக்கு கிளாஸ்லே
அவகிட்டே அசைன்மெண்டுல ஒரு டவுட் அப்படின்னு சொல்லி பேப்பர்ஸ் வாங்க லேடீஸ் ஹாஸ்டல்
வர்றேன்னு ஒரு வார்த்தை போட்டு வை. அப்படியே ஜாலியா அவகிட்டே பேசி ஒரு இம்ப்ரெஷன் கிரியேட்
பண்ணலாம். சரி லேட்டாச்சு நான் கிளம்பறேன்"
தனுஷ் அறையை விட்டுச் சென்றான்.
தனுஷ் சென்றவுடன் ஆர்யா இன்னும் சில நேரம் படித்து விட்டு உறங்கத் தயார் ஆனான்.
தனது பெட்டியைத் திறந்து நைட் டிரெஸ் அணிவதற்காகத்
தேடினான்.
அப்போது அந்த வாக்மேன் அவன் கண்ணில் பட்டது.
சென்ற முறை ஊருக்குச் சென்றபோது அவன் பள்ளி நண்பன் பரிசாகக் கொடுத்தது..
ஹாஸ்டல் வந்து அதை சுத்தமாக மறந்து விட்டான்.
சரி அதில் பாட்டு கேட்டுக் கொண்டே தூங்கலாம் .என்று வெளியே எடுத்தான்.
விளக்கை அணைத்து விட்டு அந்த வாக்மேனைக் காதில் அணிந்துப் பாடல்கள் கேட்க ஆரம்பித்தான்.
இளையராஜாவின் பாடல்கள் இனிமையாக ஒலித்தது.
பிறகு திடீரென்று "ஓம் நமஹ " என்ற மந்திரம் ஒலிக்க ஆரம்பித்தது இது எப்படி
வந்தது என்று வியப்புடன் கேட்க ஆரம்பித்தான்.
அந்த மந்திரம் அவன் மனதிலும் உடலிலும் ஒரு மாற்றத்தை உண்டாக்கியது. உடல் முழுவதும்
மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு தோன்றியது. அப்படியே அவன் கண் அசந்துத் தூங்க ஆரம்பித்தான்.
நடு இரவில் திடீரென்று முழித்தான்.
எழுந்தவுடன் தலையில் ஒரு பெரும் பாரத்தை உணர்ந்தான். அவன் தலையின் உள்ளே பல ஆயிரக்ககணக்கான குரல்கள் ஓலமிட்டது.
ஆர்யா தலையைப் பிடித்த வண்ணம் படுக்கையை விட்டு எழுந்தான்.
அறையை விட்டு ஓடினான். தலையில் ஒலித்தக்
குரல்களின் சத்தம் அதிகமாக ஆரம்பித்தது.
ஆர்யா இதற்குள் கல்லூரியின் வளாகத்தை விட்டு வெளியே வந்திருந்தான்.
அவன் ஓட்டத்தின் வேகம் கூடியது. ரோட்டை வேகமாகக் கிராஸ் செய்தான்
அப்போது ஒரு கார் அவனைத் தூக்கி அடித்தது.
ஆர்யா தெருவின் ஓரத்தில் கிடந்தான்.
மெதுவாக தனது சுய நினைவை இழக்க ஆரம்பித்தான்.
அவன் கண் முன் ஒரு அற்புதக் காட்சி தோன்றியது.
ஆர்யா ஒரு கடற்கரையில் நின்றுக் கொண்டிருக்கிறான். அவன் முன்னே பனை மர உயரத்திற்கு
ராட்சத அலை அவனை நோக்கி வருகிறது. ஆர்யா அந்த அலையைப் பார்த்த வண்ணம் நிற்கிறான். அந்த
அலை வேகமாக வந்து ஆர்யாவைத் தனக்குள் முழுங்கியது.
ஆர்யா தனது சுய நினைவை முற்றிலும் இழந்து விட்டான்.
ஆர்யா சுயநினைவுத் திரும்பிக் கண் விழித்துப் பார்த்தவுடன் தான் ஒரு ஹாஸ்பிடலில்
இருப்பதை உணர்ந்தான். மெதுவாக உடலை அசைத்த போது வலது கையில் வலியை உணர்ந்தான்.
"உங்க மேல் தோளிலே ஜாயிண்ட் டிஸ்லோகேஷேன் ஆகியிருக்கு. ஆபரஷேன்
பண்ணியிருக்காங்க. முழுதா சரி ஆக இரண்டு மாதங்கள் ஆகும்"
இனிமையாக ஒலித்த அந்தப் பெண்ணின் குரல் கேட்டு வலது பக்கம் திரும்பியபோது ஆச்சரியத்தின்
எல்லைக்கே சென்றான்.
அனுஷ்கா தான் அவனிடம் பேசினாள்.
"அனுஷ்கா நீ எப்படி இங்கே"
"நான் கம்ப்யூடர் சென்டரிலே நைட் அவுட் பண்ணிட்டு வீட்டுக்குப்
போக ஆட்டோவுக்காக நின்னுட்டு இருந்தேன். அப்போ தான் நீங்க வேகமா ரோட்டைக் கிராஸ் பண்ணீங்க.
நீங்க அடிபட்டு விழுந்தவுடன் நான் தான் உங்களை இங்கே அட்மிட் பண்ணேன்.உங்க பிரண்ட்
தனுஷுக்கு கால் பண்ணி சொன்னேன். அப்புறம் அவரும் நானும் தான் பாத்துக்கிறோம். பகல்லே
நானும் இரவிலே அவரும் மாத்தி மாத்தி பாத்துக்கிட்டோம்"
"எவ்வளவு நாளா நான் இப்படி"
"ஐந்து நாட்களா நீங்க நினைவுத் தெரியாம இருந்திருக்கீங்க. கீழே
விழுந்ததிலே நிறைய பிளட் லாஸ். அதனால தான் சுய நினைவு வர டைம் ஆச்சு. நல்ல வேலையா தலையிலே
பெரிசா அடிபடலே. "
"எனக்காக ரொம்ப சிரமம் எடுத்திகிட்டீங்க அனுஷ்கா"
"பரவாயில்லே எல்லாம் ஆண்டவன் செயல்"
"சரி உங்ககிட்டே ஒன்னு கேட்கணும். எதுக்கு அப்படிப் பித்து பிடிச்ச
மாதிரி கண் மண் தெரியாம ஓடினீங்க. உங்களுக்கு மன நிலை சரியில்லாம இருந்துச்சா.
"
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை அனுஷ்கா. நல்லா தூங்கிட்டிருந்தேன்.
திடீர்னு தலையிலே பல குரல்கள் ஒரே நேரத்துலே ஒலிச்சுது. தலையே வெடிக்கிற மாதிரி இருந்துச்சு. டிப்ரஷன் அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை. படுக்கிறதுக்கு
முன்னாடிக் கூட நானும் தனுஷும் ஜாலியா உங்களைப் பத்தி பேசிகிட்டிருந்தோம் "
"என்னைப் பற்றி எதுக்குப் பேசணும்" என்று அனுஷ்கா
ஆச்சரியத்துடன் கூடிய கோபப் பார்வையுடன் கேட்டாள்.
"சாரி வாய் தவறி சொன்னேன். ஒன்னும் தப்பா நினைக்காதே”
அப்போது அறைக்குள் தனுஷ் நுழைந்தான். ஆர்யா கண் முழித்திருப்பதைப் பார்த்து முகம்
மலர்ந்தான்.
"ஐந்து நாட்களா நீ எப்படி இருந்தே தெரியுமா. இப்போ தான் எனக்கு
உயிரே வந்துச்சு."
அனுஷ்கா "ஆர்யா சாப்பிடற டைம் வந்தாச்சு"
அவள் தனுஷ் உதவியுடன் ஆர்யாவை மெதுவாகக் கைகளைப் பிடித்து நிமிர்ந்து உட்கார வைத்தாள்.
அவன் தட்டில் இட்லிகள் வைத்தாள். அவன் சாப்பிட சிரமப்படுவதைப் பார்த்து அவளே அவனுக்கு
ஊட்டி விட்டாள்.
ஆர்யா சாப்பிட்டு முடித்தவுடன் தலையணை சரி செய்து படுக்க வைத்துப் போர்த்தி விட்டாள்.
தனுஷ் "அனுஷ்கா நைட் ஆயிடுச்சு. நீ வீட்டுக்குப் போ. நான் இனிமே பாத்துக்கிறேன்.
நேரம் ஆனா உங்க வீட்லே எதவாது சொல்வாங்க"
அனுஷ்கா இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினாள்.
அவள் போனதும் தனுஷ் "ரொம்ப நல்ல பொண்ணுடா உன்னை எப்படி நல்லா கவனிச்சுகிட்டா
தெரியுமா"
ஆர்யா "சினேகா பார்க்க வந்தாளா?"
"அவகிட்டே சொன்னேன். ஒன்னும் பெரிசா கஷ்டப்படலே. உன்னை
நினைச்சாலே வெறுப்பா இருக்கு பார்க்க எல்லாம் வர முடியாதுன்னு சொல்லிட்டா"
ஆர்யாவின் முகத்தில் வருத்தம் தெரிந்தது.
தனுஷ் "ஆர்யா நான் ஒன்னு சொல்றேன்,
அனுஷ்கா உன்னைப் பாத்துக்கிறதுலே வெறும் பரிதாபம் மட்டும் இல்லைடா. அதுலே ஒரு பாசம்,
அன்பு, காதல் எல்லாம் தெரிஞ்சுதுடா"
"எனக்கும் அது தோனுச்சு"
"தப்பா நினைக்காதே. நம்ம தலைவர் டயலாக் தான் நானும்
சொல்றேன். நாம விரும்பறவங்களை விட நம்மளை விரும்பறவங்களோட
வாழ்க்கை அமைஞ்சா தான் நல்லா இருக்கும்."
"நீ என்ன சொல்றே"
"சினேகாவை மறந்துடு. அனுஷ்காவை லவ் பண்ணுனு சொல்றேன்"
"எனக்கும் அனுஷ்காவை பிடிக்க தாண்டா செய்யுது. ஆனா கொஞ்சம் டைம் கொடு. யோசிச்சு
முடிவெடுக்கிறேன்"
"எவ்வளவு வேணும்னாலும் டைம் எடுத்துக்கோ. ஆனா தெளிவான முடிவா எடு."
இருவரும் மேலும் சில மணி நேரங்கள் கதைத்துக் கொண்டிருந்தனர்.
பிறகு இருவரும் படுக்கச் சென்றனர்
அடுத்த நாள் காலை அனுஷ்கா அவனைப் பார்த்துக் கொள்ள வந்தாள்.
அவளின் அன்பு மிகுந்த செயல்கள் ஆர்யாவின் மனதை நெகிழ வைத்தது.
இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
"அனுஷ்கா திடீர்னு கேக்கறேன்னு நினைக்காதே,
நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசைப்படறேன். உன்னோடு என் வாழ்க்கை அமைஞ்சா
ரொம்ப சந்தோஷமா இருப்பேன்"
அனுஷ்கா அமைதியாக இருந்தாள்.
"நீ சினேகாவை லவ் பண்றேன்னு எனக்கு தெரியும். இப்போ
ஏன் இந்தத் திடீர் மாற்றம்"
"சிநேகா மேல வெறும் ஒரு ஈர்ப்பு தான். பரிசுத்தமான
அன்பை நான் உன்கிட்டே தான் பார்த்தேன். சொல்லப் போனா உன்கிட்டே தான் நான் இறந்துப்
போன என் அம்மாவைப் பார்த்தேன்."
அனுஷ்கா மெளனமாக இருந்தாள்.
"சொல்லு அனுஷ்கா சம்மதமா"
"சினேகாவுக்கு கொடுத்துக் வைக்கலே" என்றாள் புன்னகையுடன்.
ஆர்யா மகிழ்ச்சியுடன் அவள் கை விரல்களைப் பற்றி முத்தமிட்டான்.
"உங்க அம்மா அப்பா சம்மதம் சொல்லுவாங்களா"
"இந்த ஒரு வாரமா உன்னை நான் பாத்துக்கிறது அவங்களுக்கு தெரியும். ஓரளவு யூகம் பண்ணியிருப்பங்கன்னுதான்
நினைக்கிறேன். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து தான் வளர்த்திருக்காங்க. அதனால அவங்க
சைடிலிருந்து எந்தப் பிரச்சினையும் வராது"
"அப்படினா நம்ம கல்யாணம் எப்ப வச்சிக்கலாம்"
"நீ ரொம்ப ஸ்பீடா போறே. எல்லாம் நாம டிகிரி முடிச்சு நாம ரெண்டு பேரும் ஒரு வேலை
வாங்கின பிறகு தான். அது வரைக்கும் நாம வெறும் பேச மட்டும் தான் செய்ய முடியும்."
அடுத்த இரண்டு நாட்களில் ஆர்யா நன்றாக உடல் தேறி டிஸ்சார்ஜ் ஆனான்.
அடுத்த நாள் ஹாஸ்டலில் தனது அறைக்கு வந்தான்.
மெதுவாகத் தனது அறையை ஒழுங்குப்படுத்தினான்.
அப்போது அவன் கண்ணில் அந்த வாக்மேன் தென்பட்டது.
அதைப் பார்த்தவுடன் அதைத் தூர எரிய வேண்டும் என்று தோன்றியது.
அதைக் கையில் எடுத்து எறிய முற்பட்டபோது வேறு ஒரு சிந்தனை தோன்றியது.
இந்த வாக்மேனில் மட்டும் தான் அன்று பாட்டு கேட்காவிட்டால் தனக்கு அனுஷ்கா கிடைத்திருப்பாளா?
இவ்வாறு யோசித்தாலும் அதில் மீண்டும் பாட்டு மட்டும் கேட்க ஏனோ முற்படவில்லை.
அந்த வாக்மேனை எடுத்துத் தனது பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்தான்.
CHAPTER 2
5 வருடங்கள் கழித்து
அமெரிக்கா மியாமி நகரில்
மியாமி ஏர்போர்டில் தனது பெட்டிகளை டிராலியில் ஆர்யா வைத்துக் கொண்டிருந்தான்.
பெட்டி கனமாக இருந்ததால் ஆர்யா தடுமாற அனுஷ்கா அவனுக்கு உதவியாக ஒரு கை கொடுத்தாள்.
ஆர்யா கோபத்துடன் அனுஷ்காவைக் கடிந்தான். "பெட்டியை நீ தூக்காதே. கனமான பொருட்களைத் தூக்காதே என்று எத்தனை தடவை சொல்வது".
"ரொம்ப தான் அக்கறை உனக்கு என் மேலே" என்றாள் அனுஷ்கா கேலியாக.
"அக்கறை உன் மேலே இல்லை. உன் வயித்துக்குள்ளே இருக்கிற என் குட்டி பாப்பா
மேலே தான்”
அனுஷ்கா செல்லமாக அவனைக் கன்னத்தில் கிள்ளினாள்.
"ஷாங்காய் ரீச் ஆனதும் எனக்கு கால் பண்ணு. பிளைட்டில் நல்லா தூங்கு. ஹாவ்
எ நைஸ் ஜர்னி" என்று கூறி ஆர்யாவை அணைத்தாள்.
ஆர்யா எதிர்பாராதவண்ணம் அவள் முன் மண்டியிட்டு அவள் வயிற்றில் முத்தமிட்டான்.
"என்ன இப்படி பொது இடத்தில். எல்லோரும் என்ன நினைப்பார்கள்" என்று அனுஷ்கா
கோபமாகக் கூறுவது போல நடித்தாள்.
"என் பாப்பாவுக்கு நான் முத்தம் கொடுக்கிறேன். யார் என்ன நினைத்தாலும் எனக்கென்ன"
ஆர்யா அனுஷ்காவுக்குப் பிரியா விடை கொடுத்து செக்கிங் கவுண்டர் சென்றான். பிறகு
பிளைட்டில் ஏறி தனது சீட்டில் சென்று அமர்ந்தான். அவன் அருகில் ஒரு சீன மனிதன் அமர்ந்தான்.
சிறிது நேரத்தில் விமானம் ஆகாயத்தில் மிதந்துக் கொண்டிருந்தந்து. அனுஷ்காவைப் பிரிந்ததன்
வலியை ஆர்யா இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்தான்.
தனது பர்சைத் திறந்து அதிலுள்ள அனுஷ்காவின் போட்டோவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"உன் காதலி மிகவும் அழகாக இருக்கிறாள்."
அருகிலிருந்த சீன மனிதன் முகத்தில் புன்சிரிப்புடன் கூறினான்.
"இவள் என் மனைவி. எங்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது"
"மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் நல்லப் பொருத்தம் இருக்கிறது. பை த வே, என்
பெயர் ஷான் லீ" என்று அவனுக்குக் கை தொடுத்தான்.
"நான் ஆர்யா" என்று கை குலுக்கினான்.
"ஷாங்காய் பயணத்தின் நோக்கம்?" என்று வினவினான்.
"ஒரு செமினாருக்காகச் செல்கிறேன். நீங்கள் உங்கள் குடும்பத்தைக் காணப் போகிறீர்களா?"
"எனக்கு ஷாங்காய் நகரில் மைக்ரோ சிப் தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கிறது.
இங்கு அமெரிக்காவில் எங்கள் கஸ்டமர்களைச் சந்திப்பதற்காக வந்தேன்."
"பிசினஸ் எப்படி இருக்கிறது"
"ரொம்ப டல். அமெரிக்காவில் வேலைப் பற்றாக்குறை. டிமாண்ட் குறைந்ததால் சேல்ஸ்
ரொம்ப படுத்து விட்டது. "
"அமெரிக்காவின் எல்லா வேலைகளையும் தான் நீங்கள் திருடிக் கொண்டு போய் விட்டீர்களே"
ஷான் சிரித்து விட்டு "அமெரிக்காவின் வீழ்ச்சியின் ஆரம்பம் இது நண்பனே. கேபிடலிசம்
கொள்கையின் அழிவின் ஆரம்பத்தைத் தான் நீ பார்க்கிறாய்."
"ஆமாம் கம்யூனிசம் அழிந்து 20 வருடங்கள் ஆகி விட்டது. இப்போது கேபிடலிசத்தின்
முறை வந்து விட்டது"
"கம்யூனிசம் அழியவில்லை. தற்சமயம் புலி பதுங்கியிருக்கிறது. பொங்கி எழும்
நாள் வெகு தொலைவில் இல்லை"
"உங்கள் சீன நாடே கேபிடலிசம் கொள்கையைத் தழுவி விட்டது. பிறகு கம்யூனிசம்
அழியவில்லை என்றால் நம்ப முடியவில்லை. ஏன் நீங்கள் கூட பிசினஸ் தானே செய்கிறீர்கள்.
கேபிடலிசம் உங்களையே விட்டு வைக்கவில்லையே."
"விஷத்தை விஷத்தால் தானே எடுக்க வேண்டும். பொறுத்திருந்து பார் உனக்கு விளங்கும்"
"நமக்கு அரசியல் எதற்கு ஷான். ஷாங்கை நகரில் தங்குவதற்கு ஒரு நல்ல ஓட்டல்
சொல்லுங்கள்"
"நான் தங்கியிருக்கும் ஓட்டலிலேயே நீங்களும் தங்கலாமே"
"அப்போது உங்கள் குடும்பம்"
"என் குடும்பம் சீனாவின் ஒரு கிராமத்தில் இருக்கிறார்கள். நான் பிசினசுக்காக
ஷாங்காய் நகரில் வசித்து வருகிறேன்."
"உங்கள் ஓட்டலிலேயே தங்குவது வசதி. புது இடம் என்பதால் உங்கள் துணை உதவியாக
இருக்கும்"
விமானம் ஷாங்காய் நகரை அடைந்தது. ஆர்யாவும் ஷானும் ஒரு டாக்சி பிடித்து ஓட்டலை
அடைந்தார்கள்.
"ரூமுக்குச் சென்று குளித்துத் தயாராக இருங்கள். ஓட்டலின் கீழே தான் ரெஸ்டாரன்ட்
இருக்கிறது. நான் வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன்"
"வேண்டாம் ஷான். எனக்குப் பசிக்கவில்லை. மிகவும் களைப்பாக வேறு இருக்கிறது.
நான் உறங்கப் போகிறேன்"
ஆர்யா தனது அறைக்கு வந்து ஷவரில் நின்று உடலின் அசதி தீரக் குளித்தான். அனுஷ்காவிடம்
சிறிது நேரம் பேசி விட்டு விளக்கை அணைத்துப் படுக்கையில் தூங்க ஆரம்பித்தான்.
உறக்கம் அவனைத் தழுவ முற்பட்ட நேரத்தில் போன் ஒலித்தது.
"ஹலோ"
"ஆர்யா. நான் ஷான் பேசுகிறேன். நான் ஒரு ஆபத்தில் மாட்டியுள்ளேன். நீ உடனே
என் அறைக்கு வா"
ஆர்யா அவசரமாக ஷானின் அறைக்குச் சென்றான். ஷான் கலவரமான முகத்துடன் காணப்பட்டான்.
"ஆர்யா நீ தான் எனக்கு உதவ வேண்டும். இந்த பிளாஷ் டிரைவ் உன்னிடம் வைத்துக்
கொள். உனக்கு மாஸ்கோ செல்ல டிக்கட் ஏற்பாடு செய்து விட்டேன். நீ உடனே ஓட்டலை விட்டுக்
கிளம்பி ஏர்போர்ட் செல்"
"வாட்! மாஸ்கோ நான் போகனுமா. உனக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா"
"நீ மாஸ்கோ சென்று நான் சொல்லும் நபரிடம் இதை ஒப்படைத்து விட்டால் உன் அக்கவுண்டில்
5 மில்லியன் டாலர்கள் வரவு வைக்கப்படும். சீக்கிரம் கிளம்பு"
"ஏன் நீ இதை எடுத்துக் கொண்டு மாஸ்கோ போக வேண்டியது தானே"
"என் கதை முடியும் நேரம் வந்து விட்டது. இன்னும் 5 நிமிடத்தில் என்னைக் கொல்ல
ஆட்கள் வந்து விடுவார்கள். இங்கிருந்தால் உனக்கும் ஆபத்து தான். நீ உடனே கிளம்பு"
அவன் கூறி முடிக்கும் முன்னர் அறையின் கதவைத் தட்டும் சத்தம் பலத்து கேட்டது.
"அவர்கள் வந்து விட்டார்கள். நீ பாத்ரூம் சென்று மறைந்திரு. நான் கூறியதை
மறக்காதே. மாஸ்கோவில் டிராட்ஸ்கி என்பவன் உன்னை வந்து சந்திப்பான். அவனிடம் கொடுத்து
விடு. 5 மில்லியன் டாலர்களை இழந்து விடாதே"
ஆர்யா குழப்பத்துடன் பாத்ரூம் சென்று கதவை மூடினான்.
அறையின் கதவை ஷான் திறந்தான். நான்கைந்து மனிதர்கள் உள்ளே வந்திருப்பார்கள். யாரோ
ஒருவன் சீன மொழியில் கத்தும் சத்தமும் ஷானின் பதட்டமான பதிலும், சிறிது நேரத்தில் துப்பாக்கியின்
சத்தமும் கேட்டது.
ஒரு மனிதன் பாத்ரூமின் கதவைத் திறந்து சோதித்துப் பார்த்தான். அங்கு யாருமில்லை.
பின்னர் அவர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றார்கள்.
ஆர்யா அது வரை பாத்ரூம் ஜன்னல் வழியாக வெளியேறி அறைக்கு வெளியே இருந்த ஒரு திண்டில்
பதுங்கி மறைந்திருந்தான்.
பிறகு மெல்ல ஜன்னல் வழியாக அறைக்குள்ளே நுழைந்தான். ஷானின் உடல் இரத்த வெள்ளத்தில்
கிடந்தது. ஆர்யா தனது பாக்கெட்டில் பிளாஷ் டிரைவ் பத்திரமாக இருப்பதை உறுதி செய்துக்
கொண்டான்.
மெதுவாக அறையை விட்டு வெளியேறினான். இந்த ஓட்டலை விட்டு வேறு இடம் செல்ல வேண்டும்.
தனது அறைக்குச் சென்று பெட்டிகளை எடுத்துக் கொண்டு ஓட்டலை விட்டு வெளியேறினான்.
அப்போது ஒரு டாக்சி அவன் முன் நின்றது. டிரைவர் அவனை வண்டியில் ஏற அவசரப்படுத்த
குழப்பத்துடன் ஆர்யா வண்டியில் ஏறினான்.
"இங்கிருந்து வெகு தொலைவில் ஏதாவது ஒரு நல்ல ஓட்டலுக்கு அழைத்துச் செல்"
"உங்களை எங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும். அமைதியாக
வாருங்கள்"
சிறிது நேரத்தில் டாக்சி ஏர்போர்ட் வந்தடைந்தது.
டிரைவர் அவனிடம் ஒரு கவரை அளித்து "இதில் நீ மாஸ்கோ செல்ல டிக்கெட் இருக்கிறது.
இன்னும் இரண்டு மணி நேரத்தில் பிளைட் கிளம்பி விடும். நேரம் குறைவாக இருக்கிறது. சீக்கிரம்
செல்"
"ஏ! நான் மாஸ்கோ செல்லவில்லை! நீ யார்? என்னை எதற்கு இங்கு அழைத்து வந்தாய்"
"நீ உயிருடன் இருக்க வேண்டுமென்றால் ஷான் சொன்னது போன்று செய். தெரிந்தோ தெரியாமலோ
ஒரு பெரிய புதைக் குழியில் மாட்டி விட்டாய் வெளியே வர வேண்டுமென்றால் இது தான் உனக்கு
ஒரே வழி. இல்லை என்றால் ஷானின் கதை தான் உனக்கும்"
அப்போது தொலைவில் ஒரு காரில் ஷானைக் கொன்றவர்கள் வருவது தெரிந்தது.
"இன்னும் நேரம் கடத்தாதே. சீக்கிரம் செல். மாஸ்கோவில் நீ சந்திக்க வேண்டிய
நபரின் பெயர் டிராட்ஸ்கி" என்று கூறி விட்டு அந்த மனிதன் டாக்ஸியில் வேகமாக அவ்விடத்தை
விட்டுக் கிளம்பினான்.
ஷானின் கொலையாளிகள் ஏர்போர்ட் கட்டடத்தினுள்ளே செல்பவர்களைக் கூர்ந்து கவனித்துக்
கொண்டிருந்தனர்.
குழப்பத்துடன் ஆர்யா டிக்கெட் கவுண்டரை நோக்கிச் சென்றான்.
கொலையாளிகளுக்கு ஆர்யா மீது சந்தேகம் வரவில்லை. அவர்கள் ஒரு சீன மனிதனை எதிர்பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.
ஆர்யா படபடக்கும் இதயத்துடன் விமானம் செல்லும் கேட்டை வந்தடைந்தான். சில நிமிடங்களில்
விமானத்தினுள்ளே நுழைந்தான். அவனுக்கு பிசினஸ் வகுப்பில் டிக்கெட் எடுக்கப் பட்டிருந்தது.
தனது இருக்கையில் அமர்ந்து சீட் பெல்ட்டை அணிந்தான். களைப்பும், அயர்வும் அவனைத் தாக்க
அமர்ந்த சிறிது நேரத்திலேயே கண்ணை மூடி உறங்கினான்.
CHAPTER 3
அடுத்த நாள் விடியற்காலை ஆர்யா மாஸ்கோ வந்தடைந்தான். ஒரு சுமாரான ஓட்டலில் ரூம்
எடுத்துத் தங்கினான். ரூம் வந்ததும் முதற்காரியமாக பிளாஷ் டிரைவில் என்ன இருக்கிறது
என்று ஆராய முற்பட்டான். அந்த பிளாஷ் டிரைவில் உள்ள ஒரு புரோகிராமைக் க்ளிக் செய்த
போது அவன் வியப்பின் எல்லைக்கே சென்றான். அது எந்த ஒரு கம்ப்யூட்டர் சர்வரையும் ஊடுருவக்கூடிய
புரோகிராம் ஆகும். அதனுடன் கொஞ்சம் விளையாடிப் பார்த்தபோது அது மிகவும் நூதனமான புரோகிராம்
என்பது தெளிவானது.
தான் ஒரு பெரிய சதி வலையில் மாட்டிக் கொண்டதை ஆர்யா உணர்ந்தான். ஒரு கிரிமினல்
கூட்டம் தன்னைப் பகடைக் காயாகப் பயன்படுத்துவது தெளிவானது. இவர்களது நோக்கம் என்னவாக
இருக்கும். ஒரு வேலை பேங்க் சர்வரை ஹாக் (hack) செய்து கொள்ளையடிக்கும் கூட்டமாக இருக்குமோ?
அப்போது அவன் ரூம் போனுக்கு ஒரு கால் வந்தது. ஆர்யா வேகமாக அதை எடுத்தான்.
"மாஸ்கோ உன்னை வரவேற்கிறது தோழரே" என்று எதிர்முனையில் ஒரு குரல் ஒலித்தது.
"யார் நீ? டிராட்ஸ்கி தானே?"
"ஆம். நான் எதிர்பார்க்கும் ஒரு பொருள் உன்னிடம் இருக்கிறது. அதை நாளை இரவு
நான் சொல்லும் இடத்தில் கொண்டு வந்து சேர்த்து விடு"
"தருகிறேன். ஆனால் அதை வைத்து என்ன செய்ய உத்தேசிக்கிறாய்."
"நீ கேட்பதைப் பார்த்தால் அந்த பிளாஷ் டிரைவில் என்ன இருக்கிறது என்று கண்டு
பிடித்து விட்டாய் என்பது தெரிகிறது"
"ஆம்"
"உனக்குத் தேவையில்லாத விஷயங்களை நோண்டாதே. கொடுத்து விட்டு உன் பங்கான 5
மில்லியன் டாலர்களை பெற்றுக் கொண்டு உன் வழியைப் பார்த்து நீ செல்லலாம். அதற்குப் பிறகு
உன்னை எந்த தொந்தரவும் செய்ய மாட்டோம்"
"சரி"
"போலீசிடம் தொடர்பு கொள்வது போன்ற முட்டாள் காரியங்களைச் செய்யாதே. போலீசிடம்
போனால் முதலில் உன்னைத் தான் உள்ளே வைப்பார்கள் புரிகிறதா."
"சரி. எங்கே சந்திக்க வேண்டும் என்பதைச் சொல்"
அவன் கூறிய முகவரியை ஆர்யா குறித்துக் கொண்டான்.
இந்தப் புரோகிராமைத் தடுக்கும் சாப்ட்வேர் இருக்கிறதா என்று ஆர்யா யோசித்தான்.
தற்போது உள்ள தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு அதைச் சாதிக்க முடியாது. அப்போது தான்
கல்லூரியில் படித்த ஒரு அல்காரிதம் நினைவுக்கு வந்தது. அதன் விவரங்களை கூகுல் செய்து
பார்த்தான். தன்னுடைய நண்பன் தனுஷ் இது சம்பந்தமாக ரிசர்ச் பேப்பர்கள் வெளியட்டது நினைவுக்கு
வந்தது. அவனுடைய நம்பர் தன்னுடைய டைரியில் குறித்து வைத்திருந்தான். டைரியைத் தேடிய
போது அவன் கண்ணில் ஒரு வாக்மேன் தென்பட்டது. ஐந்து வருடங்கள் முன் அந்த வாக்மேன் கேட்டு
நடந்த சம்பவங்கள் அவன் மனத்திரையில் ஓடியது. அனுஷ்கா தனக்குக் கிடைத்தது இதனால் தானே?
நேரத்தைப் பார்த்தபோது இரவாகி இருந்தது. காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாதலால்
மிகவும் பசித்தது. தானே ஓர் சான்ட்விச் செய்து சாப்பிட்டான்.
இரவின் அமைதி அவனை அமைதியில்லாதவனாய் ஆக்கியது. என்ன செய்யலாம் என்று யோசித்த போது
வாக்மேன் கண்ணில் பட்டது.
அந்த வாக்மேனைக் கையில் எடுத்து பாட்டு கேட்டுக் கொண்டே தூங்கலாம் என்று நினைத்தான்.
அவனுக்குப் பழைய நினைவுகள் தோன்றி சிறிது அச்சம் வந்தது. பிறகு தான் எவ்வளவு மூட நம்பிக்கையுடன்
இருக்கிறோம் என்று நினைத்து வாக்மேனில் பாடல்கள் கேட்டான். அதைக் கேட்டதும் அவன் மனதில்
சிறிது நிம்மதி வருவதை உணர்ந்தான்.
கடைசியில் முன்னர் போல "ஓம் நமஹ" என்ற மந்திரம் வாக்மேனில் ஒலித்தது.
அதைக் கேட்டதும் அவன் உடலில் ஒரு புல்லரிப்பு வந்தது. மனதில் விசித்திரமான பல உணர்வுகள்
தோன்றியது. அந்த உணர்வுடனேயே அவன் அப்படியே உறங்க ஆரம்பித்தான்.
இரவு மணி மூன்று ஆகியது. ஆர்யா திடீரென்று எழுந்து அமர்ந்தான். சிறிது நேரத்தில்
அவன் தலையில் மெல்ல ஒலிகள் கேட்டது. நேரம் ஆக ஆக அந்த ஒலிகளின் சத்தம் அதிகமாக ஆரம்பித்தது.
தலையில் இருக்கும் ஓலங்களை அவனால் தாங்கவே முடியவில்லை.
தனது தலையைப் பிடித்த வண்ணம் உட்கார்ந்தான். கொஞ்சம் தண்ணீர் குடிக்கலாம் என்று பிரிட்ஜை நோக்கிச்
சென்றான்.
தலையில் சம்மட்டி அடிப்பது போன்று சத்தங்கள் ஒலித்தது.
ஆர்யா அப்படியே மயக்கம் போட்டு விழுந்தான்.
அவன் தன்னுணர்வை இழப்பதற்கு முன்னர் மீண்டும் அந்த அற்புத காட்சியைக் கண்டான்.
ஒரு கடற்கரையில் அவன் அலைகளைப் பார்த்த வண்ணம் நிற்கிறான். ஒரு மாபெரும் அலை அவன்
முன்னே பொங்கி வந்துக் கொண்டிருக்கிறது. ஆர்யா சிறிதும் நகராமல் அந்த அலையையே வெறித்துப்
பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்த அலை ஒரு ராட்சதன் போல வந்து அவனை அப்படியே தன்னுள்
முழுங்கி விடுகிறது.
ஆர்யா தன் சுய நினைவை முற்றிலும் இழந்து விட்டான்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு ஆர்யாவுக்கு மெதுவாக நினைவுத் திரும்பியது. விடிந்ததிலிருந்து
ஆர்யாவின் செல்போனில் கால் மேல் கால்களாக வந்த வண்ணம் இருந்தது. அனுஷ்கா தான் அவனுடன்
தொடர்பு கொள்ள முயற்சித்திருந்தாள்.
ஆர்யா அனுஷ்காவுக்குப் போன் செய்தான்.
"ஆர்யா என்ன ஆனது உனக்கு. நூறு காலாவது
பண்ணியிருப்பேன். ஏன் எடுக்கலை"
"ஒண்ணுமில்லை அனுஷ்கா கொஞ்சம் அசந்துத் தூங்கிட்டேன்.”
"எப்பவுமே தூங்கும்போதும் அலெர்டா இருப்பியே. ஒன்னும்
பிராப்லம் இல்லையே"
"அதெல்லாம் ஒண்ணுமில்லை. ட்ரிப் பிளானில்
ஒரு சின்ன மாற்றம். அதனால் மாஸ்கோ வர வேண்டியதாகி விட்டது.“
"வாட்! மாஸ்கோவில் இருக்கிறாயா? ஒரு நாள் கூட முழுதாக நீ ஷாங்காயில் தங்கவில்லையே.
அதற்குள் ஏன் மாஸ்கோ வந்து விட்டாய்."
"மாஸ்கோவில் உள்ள ஒரு VP சைனா வர முடியவில்லை. அதனால் எல்லோரும் மாஸ்கோ வரும்படியாக
ஆகி விட்டது?"
"வழக்கமாக உங்கள் கம்பெனியில் எல்லாமே மிகவும் சரியாகப் பிளான் செய்வார்களே.
இந்தத் தடவை ஏன் இந்தக் குளறுபடி"
"நீ ஒன்றும் கவலைபடாதே அனுஷ்கா. மாஸ்கோ மிகவும் அருமையான நகரம். இங்கு எனக்கு
நன்றாகப் பொழுது போகிறது. நீ உன் உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள். நன்றாக சாப்பிடு.
நிறைய தண்ணீர் குடி"
"சரி ஓகே. மீண்டும் எப்போது கால் செய்வாய்."
"நாளை உனக்குப் போன் செய்கிறேன்"
சில நிமிடங்கள் அவர்கள் சாதாரணமாகப் பேசினார்கள். முடிக்கும் போது
அனுஷ்கா "நான் ஒன்று சொல்ல மறந்துட்டேன். எங்க அப்பாவுக்கு இன்று நினைவு நாள். மாஸ்கோவில் ஏதாவது பெருமாள் கோவில் இருந்தால் போய் வேண்டிக் கொள்கிறாயா?"
அனுஷ்காவின் தந்தை சுனாமியின் போது இறந்து விட்டார். தான் இருக்கும்
நிலையில் கோவில் எப்படிப் போக முடியும்.
மறுத்து விடலாமா என்று யோசித்தான். வேண்டாம்
இந்த விஷயத்தில் அனுஷ்கா மிகவும் சென்சிடிவ். கண்டிப்பாகப் போவதாக அனுஷ்காவிடம் உறுதி
அளித்தான்.
பேசி முடித்தவுடன் ஆர்யா தனது முகத்தைக் கழுவினான். நேற்று தனக்கு என்ன நடந்தது
என்பது புரியாப்த புதிராக இருந்தது. ஐந்து வருடங்கள் முன்பு வாக்மேன் கேட்டபோது
நடந்த விஷயம் அப்படியே இப்போதும் சிறிதும் மாறாமல் நடந்திருப்பது அவனுக்கு வியப்பை
அளித்தது.
தனது பெட்ரூம் சென்று அந்த வாக்மேனைக் கையில் எடுத்தான். அதை வெளியே விட்டெறியலாம்
என்று பால்கனிக்கு வந்தவன், ஏதோ நினைத்து மனம் மாறி அதை மீண்டும் தனது பெட் மேலே வைத்தான்.
அனுஷ்கா சொன்னது போல கோவிலுக்குப் போகலாம். ஏதாவது ஒரு மாற்றம் தெரியும் என்று
யோசித்து மாஸ்கோவில் பெருமாள் கோவில் எங்கிருக்கிறது என்று நெட்டில் தேடிக் கண்டு பிடித்துக்
கிளம்பினான்.
கோவிலை வந்தடைந்ததும் கோவிலில் சிறிதும் கூட்டம் இல்லாமலிருப்பதைப் பார்த்தான்.
அவன் காலை எட்டு மணிக்கே வந்து விட்டதால் கூட்டம் இல்லை என்று அவனுக்குத் தோன்றியது.
கோவிலில் ஒரு வயதான மனிதர் காவி உடை உடுத்தி ஒரு மூலையில் தியானம் செய்துக் கொண்டிருந்தார்.
மேலும் இறைவனின் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தது.
ஆர்யாவும் கடவுளின் சந்நிதானம் முன்னர் அமர்ந்துக் கண்ணை மூடினான். தன் மனதை ஒரு
நிலைப்படுத்தி தன்னுடைய குழப்பத்திற்கு ஒரு வழி காட்ட வேண்டும் என்று வேண்டினான்.
அப்போது இறைப் பாடல்கள் நின்று "ஓம் நமஹ" என்ற மந்திரம் கேட்க ஆரம்பித்தது.
அதைக் கேட்டதும் ஆர்யாவின் மனதிலும் உடலிலும் மீண்டும் முன்னர் நிகழ்ந்த அதே மாற்றங்கள்
நிகழ்ந்தன.
அப்படியே தனது சுய நினைவை இழந்தான்.
அவன் எழுந்ததும் தான் ஒரு சிறிய வீட்டில் இருப்பதை உணர்ந்தான். அவன் முன்னாள் கோவிலில்
பார்த்த அந்தக் காவி உடை மனிதர் உட்கார்ந்திருந்தார்.
"தம்பி உனக்கு என்ன ஆச்சு. ஏன் திடீர்னு மயக்கம் போட்டு
விழுந்தாய்"
ஆர்யா அவரிடம் உண்மையைச் சொல்வதற்கு யோசித்தான்.
"நீ நன்றாகத் தான் இருந்தாய். ஆனால் எப்போது ஓம் நமஹ
மந்திரம் கோவிலில் ஒலிக்க ஆரம்பித்ததோ அப்போது உன்னிடத்தில் மாற்றங்கள் கண்டேன். ஓம்
நமஹ மந்திரம் பிரணவ மந்திரம். இந்த பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்திருக்கும் சாஸ்வத
மந்திரம். அது உன்னிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறதென்றால் நீ மிகவும்
கொடுத்து வைத்தவன்"
ஆர்யா தனக்குக் கல்லூரி நாட்களில் நடந்த சம்பவத்தையும் நேற்று இரவு நடந்த நிகழ்ச்சிகளையும்
அவரிடம் கூறினான்.
"தம்பி இறைவனிடமிருந்து உனக்கு ஒரு செய்தி வருகிறது.
அந்தச் செய்தியை ஏற்கும் மனப் பக்குவம் இல்லை. உன் தலையில் பல ஒலிகள் ஒலிக்கிறது என்று
கூறினாய் அல்லவா. அந்தப் பல ஒலிகளில் இறைவனின் செய்தி அமுங்கி விடுகிறது. உன் மனதில் இருக்கும்
பல குழப்பங்களில், பல அழுத்தங்களில்
அந்த செய்தி உனக்குக் கேட்காமல் போய் விடுகிறது."
"நீங்க என்ன சொல்றீங்க. எனக்குச் சுத்தமா புரியலை"
"தம்பி நீ கொடுத்து வைத்தவன். இறைவன் உன்னை ஒரு பெரும் செயலுக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறான்.
அதற்கு நீ உன்னைத் தகுதியானவனாய் ஆக்கிக் கொள்."
"நான் என்ன செய்ய வேண்டும்"
" உன் வீடு சென்றவுடன் ஓம் நமஹ
என்ற மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே தியானம் செய். பிறகு உன் வாக்மேனில்
மீண்டும் அந்த மந்திரத்தைக் கேள். அப்போது உன்னால் தெளிவாக இறைவனின் செய்தியைக் கேட்க
முடியம்"
ஆர்யா அவருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்பினான்.
இந்த மனிதர் வேறு என்ன புதிதாகக் குழப்புகிறார். தன் ரூமுக்கு வந்ததும் ஓம் நமஹ
என்ற மந்திரத்தைச் சொன்னான். அதைப் பல முறை சொன்னான். அவன் மனம் ஒரு தெளிவான நிலைக்கு
வந்தது.
ஆர்யா படுத்துக் கொண்டே தனது வாக்மேனில் பாடல்கள் கேட்டான். பாடல்கள் முடிந்து
"ஓம் நமஹ" மந்திரமும் ஒலித்தது. கேட்டுக்கொண்டே அப்படியே உறங்கியும் போனான்.
மூன்று மணிக்கு அவனுக்கு முழிப்பு வந்தது.
அந்த நடு இரவில் அமானுஷ்யமான் ஒரு அமைதி இருந்தது. ஒரு மெலிதானக் குரல் அவனுக்குள்
ஒலித்தது.
"நண்பரே நலமா"
"யார் நீ"
"நான் யார் என்று பிறகு கூறுகிறேன். உம்முடன் பேச
வேண்டும் என்று நான் ஐந்து வருடமாக முயற்சி செய்கிறேன். அது இன்று தான் வெற்றிகரமாக
நடந்திருக்கிறது. இன்று எனக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாள் என்று நினைக்கிறேன்."
"நீ என்னுடன் எப்படிப் பேசுகிறாய். நீ ஏதாவது அதி
நவீனமான சாதனங்கள் பயன்படுத்துகிறாயா"
"அதெல்லாம் ஒன்றும் இல்லை. நீ இப்போது முழிப்பதற்கு
முன்னாள் கடைசியாக என்ன செய்தாய்"
ஆர்யா சிறிது நேரம் யோசித்து விட்டு "ஓம் நமஹ என்ற மந்திரத்தைக் கேட்டேன்"
"அதைத் தான் நானும் செய்தேன். அந்த மந்திரத்தைக் கேட்டு
உறங்குகிறேன். அதே நேரத்தில் நீயும் அதைக் கேட்கிறாய். நம் இருவருக்கும் எண்ணத் தொடர்புகள்
நிகழ்கிறது. நம் இருவரின் எண்ணங்களும் ஒருவருடன் ஒருவர் உரையாடுகிறது"
"இது எப்படி சாத்தியம்"
"அது தான் ஓம் நமஹ என்ற மந்திரத்தின் சக்தி. எந்த
அறிவியல் விளக்கங்களக்கும் கட்டுப்படாத, மனிதர்களால் விளக்க
முடியாத இறைவனின் சக்தி மந்திரம்"
"நீ என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டிய காரணம் தான் என்ன?"
"உன் உலகிற்கு பேராபத்து
ஒன்று காத்திருக்கிறது. அதைக் காப்பாற்றும் பொறுப்பு உன் கையில் இருக்கிறது. உனக்குச் சரியான வழியைக் காட்டும் நண்பன் தான் நான்"
"நீ என்ன சொல்கிறாய்"
"அந்த பிளாஷ் டிரைவில் இருக்கும் புரோகிராம் எதற்கு டிராட்சியின்
கூட்டம் பயன்படுத்தப்போகிறது என்ற குழப்பத்தில் தானே இருக்கிறாய்"
"ஆம். ஏதோ ஒரு சர்வரை ஹாக் (hack) செய்யப் போகிறார்கள் என்று
தெரிகிறது. ஆனால் எந்த சர்வர் என்று தான் தெரியவில்லை"
"அந்த சர்வரின் IP அட்ரஸ் உன் பிறந்த நாளின் தேதியிலேயே இருக்கிறது"
"அப்படியா? அது எந்த அமைப்பின் சர்வர்."
"நீயே அதைக் கண்டு பிடி. மீண்டும் நாம் பேசலாம்"
அவனுக்குள் ஒலித்த அந்தக் குரல் நின்றது.
ஆர்யா மீண்டும் இரவின் அமைதியை உணர்ந்தான். அவன் மனதில் எந்த சிந்தனைகளும் இல்லை.
மனம் ஒரு நிலைப்பாட்டில் இருந்தது. அடுத்து தான் செய்ய வேண்டிய காரியங்கள் அவனுக்குத்
தெளிவாகப் புலப்பட ஆரம்பித்தது. உறக்கம் அவனை ஆட்கொண்டது.
CHAPTER 4
விடிந்ததும் ஆர்யா முதல் வேலையாக பிளாஷ் டிரைவை ஆராய்ந்தான். சாப்ட்வேர் IP அட்ரஸ்
எதுவெனக் கேட்க, ஆர்யா நேற்று இரவு ஒலித்தக் குரல் சொன்னபடி தனது பிறந்த நாளான
24.12.1974 என்பதைச் சிறிது மாற்றி 241.129.740 என அடித்தான். சிறிது நேரத்தில் அவன்
சர்வருக்குள் லாகின் செய்யப்பட்டான். சர்வருக்குள் நுழைந்ததும் ஒரு மெனு ஸ்க்ரீனில்
தோன்றியது.
Enter the Location of the Asset to Activate
1)
US 2) UK 3) Turkey 4) China 5) Japan 6) India
ஆர்யா ஜப்பானைத் தேர்ந்தெடுத்தான்.
Enter the Name of the Asset to Activate
1)
Gladiator 2) Patriot 3) Bulhawk
ஆர்யாவுக்கு இவை எதன் பெயராக இருக்கும் என்று குழப்பமாக இருந்தது. ஒவ்வொரு பெயரையும்
கூகுல் செய்து பார்த்தான். Buhawk என்னும்
பெயரை முதலில் அடித்தான். அது அமெரிக்காவின் அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் என்னும் விவரம்
தெரிந்தது. மற்ற பெயர்களை அடித்து அதனை உறுதி செய்தான்.
ஆர்யாவுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. டிராட்ஸ்கியின் கூட்டம் அமெரிக்காவின்
அணு ஆயுதத்தை இயக்க முயற்சிக்கிறார்கள். சில நிமிடங்கள் அதிர்ச்சியில் சிலையாக அமர்ந்திருந்தான்.
தனது நண்பன் தனுஷ் தற்போது அமெரிக்கக் குடிமகனாக மாறி CIA வில் வேலை பார்ப்பது நினைவுக்கு
வந்தது.
அவனுக்கு போன் செய்த போது நல்ல உறக்கத்திலிருந்தான்.
"என்ன ஆர்யா இந்த நேரத்திலே? ஏதாவது முக்கியமான விஷயமா?"
ஆர்யா அவனுக்கு நடந்த விஷயங்களைக் கூறினான்.
"டிராட்ஸ்கி, ஷான் லீ இவர்கள் யார் என்பதை உங்கள் CIA டாடாபேசில் தேடினால்
விவரங்கள் தெரியுமா?"
"இப்போதே என் சிஸ்டத்தில் பார்த்துச் சொல்கிறேன்"
சிறிது நிமிடங்கள் கழித்துத் தனுஷின் குரல் கேட்டது.
"இவர்கள் இருவரும் சோவியத் காலத்து கம்யூனிஸ்ட் ஆட்சியின் போது ரஷ்யாவின்
உளவாளிகளாக இருந்தனர். சோவியத் அரசு உடைந்து கம்யூனிசம் முடிவுக்கு வந்த பிறகு இவர்கள்
இருவரும் தலை மறைவாகி விட்டனர். இவர்கள் மீண்டும் கம்யூனிசம் தழைப்பதற்குச் சதி செய்வதாக
எனக்குத் தோன்றுகிறது"
"இவர்களுக்கும் ரஷ்ய அரசாங்கத்துக்கும் ஏதும் சம்பந்தம் இருக்குமா"
"இருக்காது. ரஷ்ய அரசாங்கம் இது போன்ற ஒரு செயலில் கண்டிப்பாக ஈடுபட மாட்டார்கள்.
இவர்கள் எந்த அரசாங்கத்துக்கும் கட்டுப்படாத போக்கிரிகள்."
"அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்த திட்டமிடுகிறார்களா?"
"எனக்கென்னவோ இவர்கள் திட்டம் அதை விட அதி பயங்கரமாக இருக்கும் என அஞ்சுகிறேன்.
எனக்கு ஒரு நாள் டைம் கொடு. டிராட்ஸ்கியின் போன் கால்கள், ஈமெயில்கள் மற்றும் இன்டர்நெட்டில்
அவனது செயல்கள் எங்கள் டாடாபேசில் பதிவுகள் இருக்கிறதா எனத் தேடிப் பார்க்கிறேன்"
"இன்று இரவு நான் டிராட்ஸ்கியை சந்திக்க வேண்டும். அவனிடம் பிளாஷ் டிரைவை
கொடுக்க வேண்டும். அதற்குள் உன்னால் ஏதாவது செய்ய முடியுமா?"
"கஷ்டம் தான். என்னால் இயன்ற வரை முயற்சிக்கிறேன்"
"அவனைச் சந்திக்க செல்லும் போது பிளாஷ் டிரைவை எடுத்துப் போகாமல் இருக்கலாமா என் யோசிக்கிறேன்"
"அப்படி எந்த முட்டாள்தனமும் செய்து விடாதே. உன் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
நீ அவனிடம் பிளாஷ் டிரைவைக் கொடு. எங்கள் உளவு நிறுவனம் அதற்கு மேல் அனைத்தும் கவனித்துக்
கொள்ளும்."
அன்று இரவு டிராட்ஸ்கி கூறிய இடத்திற்குச் சென்று காத்திருந்தான். சிறிது நேரத்தில்
முகமூடி அணிந்து ஒரு மனிதன் வந்து நின்றான்.
"ஆர்யா?"
"ஆம்"
"பிளாஷ் டிரைவ்?"
ஆர்யா தயக்கத்துடன் அவனிடம் கொடுத்தான். டிராட்ஸ்கி தனது லாப்டாப்பில் அதைப் பரிசோதித்து
உறுதி செய்துக் கொண்டான்"
"நன்றி தோழா. இன்னொடியில் நீ 5 மில்லியனுக்கு அதிபதி. வாழ்த்துக்கள்"
"அதை அனுபவிக்க நான் உயிரோடு இருப்பேனா?"
"கண்டிப்பாக. உன்னை ஒன்றும் செய்ய மாட்டோம். உன்னால் எந்த ஆபத்தும் இருக்காது
என எங்களுக்குத் தெரியும்"
டிராட்ஸ்கி வேகமாக மறைந்து விட்டான்.
அவன் சென்ற பிறகு ஆர்யாவின் போனில் தனுஷிடமிருந்து கால் வந்தது.
"ஆர்யா நிலைமை மிகவும் மோசம். டிராட்ஸ்கி யிடம் பிளாஷ் டிரைவைக் கொடுத்து
விட்டாயா?"
"நீ சொன்னது போல் கொடுத்து விட்டேன். எல்லாவற்றையும் நீ கவனித்துக் கொள்வேன்
என்று கூறினாய் அல்லவா"
"சர்வ நாசம். அவர்கள் திட்டம் அதி பயங்கரமானது. அவர்கள் அமெரிக்காவின் நட்பு
நாடுகள் மீது அணு ஆயுதத்தை செலுத்த முயற்சிக்கவில்லை. மாறாக கடலிலேயே வெடிக்கத் திட்டமிடுகிறார்கள்"
"அதனால் என்ன பிரச்சினை?"
"நீ பொறியியல் படித்தவன் தானே. உனக்குப் புரியவில்லையா. ஹிரோஷிமா நாகசாகியில்
வெடித்ததை விடப் பல்லாயிரம் மடங்கு வலிமையான அணு ஆயுதங்கள் இக்கப்பல்களில் இருக்கின்றன.
இவை வெடித்தால் என்னவாகும்?"
"கடலின் தரைமட்டத்தில் ஏற்படும் அதிர்வுகளினால் சுனாமி கூட வரலாம்"
"ஆம் அது தான் அவர்கள் திட்டம். அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், இந்தியாவின்
பம்பாய் மற்றும் ஜப்பான் நாடு, இவை மூன்று தான் அவர்களின் இலக்கு"
"முதலில் என்ன சொன்னாய். புளோரிடா மாகாணமா? அப்படியானால் அனுஷ்காவுக்கு ஆபத்து.
நான் உடனே அமெரிக்கா கிளம்ப வேண்டும். அவளைக் காப்பாற்ற வேண்டும்"
"அவர்கள் நாளை காலை திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார்கள். அதற்குள் நீ அமெரிக்கா
வருவது முடியாத காரியம். அவளைக் காப்பாற்றுவது என் பொறுப்பு. ஒரு போன் மட்டும் செய்து விவரங்களைக் கூறி விடு."
"டிராட்ஸ்கியின் திட்டத்தை முறியடிக்க உன்னிடம் பதிலுக்கு என்ன பிளான் இருக்கிறது"
சிறிது நொடிகள் எதிர்முனை மெளனமாக இருந்தது.
"உண்மையை சொல்ல வேண்டுமானால் இங்கு யாருக்குமே என்ன செய்வது என விளங்கவில்லை.
இது போன்ற ஒரு தீவிரவாதத் தாக்குதலுக்கு எங்கள் CIA மற்றும் ராணுவ நிறுவனம் தயாராக இல்லை. நான் ஏன் உன்னை பிளாஷ் டிரைவை டிராட்ஸ்கியிடம் கொடுக்கச்
சொன்னேன் என்று ஆளாளுக்கு என் மீது காய்கிறார்கள். டிராட்ஸ்கி இப்போது எங்கே?"
"அவன் ஒரு காரில் சென்று விட்டான்"
"காரின் நம்பரை கவனித்தாயா"
"தெரியவில்லை. மிகவும் இருட்டாக இருந்தது. சிவப்பு நிறக் கார் என்பது மட்டும்
தெரியும்"
"ரஷ்ய அரசாங்கத்தின் உதவியை கேட்க முயற்சிக்கிறோம். அவர்கள் நம்ப மறுக்கிறார்கள்.
அநேகமாக நானும் எங்கள் குழுவைச் சேர்ந்தவர்களும் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மாஸ்கோவை
நோக்கி ஒரு விமானத்தில் பறந்து வந்து கொண்டிருப்போம். சோகமான விஷயம் என்னவென்றால் நாங்கள்
அங்கு வந்து சேர்வதற்குள் எல்லாம் முடிந்திருக்கும்"
"ஷான் லீயைக் கொன்றவர்கள் யார்?"
"இந்தத் தீவிரவாதக் கூட்டத்திலேயே இரண்டு பிரிவுகள் உள்ளன. இவர்கள் வெறும்
கொள்கைவாதிகள் கிடையாது. இந்தச் சதியில் பல மில்லியன் டாலர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறது.
பணப் பிரச்சினையில் இரு கோஷ்டிகளுக்குள் நடந்த மோதலில் ஷான் பலியாகியுள்ளான்."
போனைத் துண்டித்து ஆர்யா ஒரு டாக்சி பிடித்து வீடு வந்து சேர்ந்தான். அனுஷ்காவின்
நினைவு வந்தவனாய் போன் செய்து விவரங்கள் கூறினான்.
"தனுஷின் ஆட்கள் உன்னைத் தேடி வருவார்கள். நீ அவர்களுடன் புளோரிடாவை விட்டுக்
கிளம்பு"
"முடியாது ஆர்யா"
"என்ன உளறுகிறாய் அனுஷ்கா?"
"சென்ற முறை வந்த சுனாமியினால் என் தந்தை பலியானார். இப்போது நிகழப் போகும்
சுனாமியினால் எவ்வளவு உயிரழப்பு ஏற்படும். நான் மட்டும் கோழைத்தனமாக தப்பித்தால் என்
தந்தையின் ஆவி என்னை மன்னிக்காது. நீ ஏதாவது செய்து இதைத் தடுக்க முயற்சி செய்"
"ஏன் புரியாமல் பேசுகிறாய். இதைத் தடுக்கவே முடியாது. அமெரிக்காவிலிருக்கும்
பெரிய தலைகளுக்கே என்ன செய்வதென விளங்கவில்லை"
"மேலும் தீவிரமாக முயற்சி செய். ஏதாவது வழி தென்படும்"
"என்ன சொல்கிறாய் அனுஷ்கா? உன் பிடிவாதத்தினால் நம் குழந்தையைப் பலியிட நினைக்கிறாயா"
"பாப்பா சாமி. அவள் இறக்க மாட்டாள். அவள் உனக்குத் துணையாக இருந்து வழி நடத்துவாள்.
என்னைப் பற்றி நீ கவலைப்படாதே."
"உனக்கு எப்படிப் புரிய வைப்பது அனுஷ்கா. வழி ஒன்றுமே இல்லை"
"வாக்மேனில் ஓம் நமஹ பாடல் கேள். அந்தக் குரல் உன்னை வழி நடத்தும்"
ஆர்யா போனை வைத்து அனுஷ்கா சொன்னதை யோசித்துப் பார்த்தான். நம்பிக்கை இல்லாமலிருந்தாலும்
முயற்சித்துப் பார்க்கலாமே என்று வாக்மேனில் ஓம் நமஹ மந்திரத்தைக் கேட்டான்.
அவனுக்குப் பழக்கமான அக்குரல் மெல்லக் கேட்டது.
"நீ புத்திசாலி ஆர்யா"
"ஏன்"
"ஆபத்தான சமயத்தில் மனைவி கூறிய யோசனையைக் கேட்டு நடந்தாய் அல்லவா.”
"என் மனைவியைக் காப்பாற்ற வேண்டும். நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது. யாருக்கும்
என்ன செய்ய வேண்டுமெனத் தெரியவில்லை"
"அதற்கு வழி நான் சொல்கிறேன் கவலைப்படாதே."
"வழி நீ சொல்கிறாயா?"
"ஆம். வைரஸ் நம் கம்ப்யூட்டரை ஊடுருவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்"
"ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் கம்ப்யூட்டரில் ஏற்ற வேண்டும்"
"அதே தீர்வு தான் இதற்கும். சர்வரை ஊடுருவாமல் தடுக்க ஒரு Encryption சாப்ட்வேர் நீ எழுத வேண்டும். அதனைச் சர்வரில் ஏற்றினால்
எதிரிகளின் திட்டத்தை முறியடிக்கலாம்"
"அதைக் கூட யோசிக்காமல் நாங்கள் இருப்போமா. இப்போது இருக்கும் கணிப்பொறி விஞ்ஞானத்தைக்
கொண்டு அப்படி ஒரு Encryption Algorithm எழுத
முடியாது. டிராட்ஸ்கியின் கைவசம் உள்ள அந்த சாப்ட்வேர் சர்வ வலிமையானது"
"50 வருடங்கள் கழித்து வரக்கூடிய கணிப்பொறி விஞ்ஞானத்தின் வளர்ச்சி மூலம்
எதிர்காலத்தினர் இதற்கு ஒரு Encryption Software
எழுதியிருப்பார்கள் அல்லவா"
"நீ என்ன சொல்ல வருகிறாய்"
"அந்த Algorithm உனக்கு நான் சொன்னால்
நீ இந்த உலகத்தைக் காப்பாற்றிய சூப்பர் மேன் ஆகி விடுவாய் அல்லவா"
"Algorithm நீ தருகிறாயா? உண்மையில்
நீ யார்"
"அது இப்போது முக்கியமில்லை. Algorithm ஐந்தே வரிகள் தான்."
Algorithm விளக்கி முடித்து விட்டு அக்குரல் நின்றது.
ஆர்யா விடு விடுவென algorithm எழுதி முடித்தான்.
தனுஷூடன் தொடர்பு கொண்டு அவன் அணியினரின் உதவி மூலம் சர்வருக்குள் லாகின் செய்து சாப்ட்வேரை
ஏற்றினான்.
தனுஷின் அணியினர் சோதனைகள் செய்துப் பார்த்தனர்.
ஆர்யா தனுஷின் போனையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
போன் ஒலித்ததும் வேகமாக அதை எடுத்தான். எதிர் முனையில் தனுஷின் குரல் உற்சாகமாக
ஒலித்தது.
"ஆர்யா. உனக்கு ஐன்ஸ்டீன் மூளைடா. உன் சாப்ட்வேர் சக்சஸ். டிராட்ஸ்கி இனி
எந்த மயிரையும் புடுங்க முடியாது"
ஆர்யாவுக்கு இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
"இங்கே இருக்கும் ஹார்வர்ட், MIT படித்த மேதாவிகளே வியக்கிறார்கள். ஐந்தே
வரியில் எப்படி இவ்வாறு ஒரு அற்புதத்தை நீ நிகழ்த்தினாய் என்று. எனக்கு மட்டும் சொல்லேன்.
எங்கிருந்து பிடித்தாய் இந்த மேஜிக்கை"
"தெரியலைடா. ஏதோ தோணிச்சு எழுதினேன். அப்புறம் டிராட்ஸ்கி குழுவினரின் கதி"
"நாளை காலை நானும் என் அணியினரும் மாஸ்கோவில் இருப்போம். ரஷ்ய அரசாங்கத்தின்
உதவியும் நமக்குக் கிடைத்து விட்டது. அவர்கள் நடத்தும் அதிரடித் தாக்குதலில் டிராட்ஸ்கியின்
கூட்டம் இன்னும் சிறிது நேரத்தில் பரலோகத்திலிருக்கும்"
ஆர்யா பிறகு அனுஷ்காவிற்குப் போன் செய்து விவரங்கள் கூறினான். அவள் குரலில் தெரிந்த
மகிழ்ச்சி அவனுக்கு மீண்டும் உற்சாகத்தைக் கொடுத்தது.
ஆர்யா மீண்டும் தனது வாக்மேனில் பாடல்கள் கேட்டான். அவனுக்கு வெகு பரிச்சியமான
குரல் மீண்டும் கேட்டது.
"வாழ்த்துக்கள் தோழரே"
"நன்றி. உன் உதவியால் தான் இது முடிந்தது"
"எல்லாம் அடிபட்டதால் வந்த அனுபவம் தோழரே. நீ உன்
உலகத்தைக் காப்பாற்றியது போல என்னால் என் உலகத்தைக் காப்பாற்ற இயலவில்லை"
"என்ன சொல்கிறாய். நீ யார்"
“நான் யார் என்பதைச் சொல்வதற்கு முன்னாள் நான் எங்கிருந்துப் பேசுகிறேன் என்று சொல்ல
வேண்டும். நான் ஒரு மாற்றுப் பிரபஞ்சத்திலிருந்து (alternate universe ) பேசுகிறேன். அதுவும் நீ இருப்பதுப்
போன்ற ஒரு உலகம் தான். இரண்டாம் உலகம் என்று வைத்துக் கொள்ளேன். அங்கும் பூமி உள்ளது.
அங்கும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் உள்ளது. அங்கிருந்து தான் நான் உன்னைத் தொடர்பு
கொண்டிருக்கிறேன்"
“நானும் alternate universe பற்றிப் படித்திருக்கிறேன்.
அது எல்லாம் உண்மையா"
"உண்மை தான். உங்கள் உலகிற்கு வந்த அதே பிரச்சினை
எங்களுக்கும் வந்தது. தீவிரவாதிகள் நடத்திய அணு ஆயுதத் தாக்குதல் மூலம்
வந்த சுனாமியினால் எங்கள் உலகிற்குப் பேரழிவு ஏற்பட்டது. அந்த அழிவிலிருந்து என்னால்
என் அனுஷ்காவைக் காப்பாற்ற முடியவில்லை"
" உன்
அனுஷ்காவா? என்ன சொல்கிறாய்? நீ யார்?"
"கண்ணாடி முன் சென்று உன் முகத்தை பார்"
"எதற்குப் பார்க்க வேண்டும்"
"சொன்னதைச் செய்"
ஆர்யா கண்ணாடி முன் நின்று தன் உருவத்தைப் பார்த்தான்.
"உன் முன்னாள் நிற்கும் உருவம் ஐம்பது வருடங்கள் கழித்து
எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார். அது தான் நான்"
"அப்படி என்றால்"
"நீ நினைப்பது சரி தான். மாற்று உலகிலிருக்கும்
ஆர்யா நான். சொல்லப் போனால் நான் உன்னைப் போலவே தான் இருப்பேன். உன் வாழ்வில் நடந்த
சம்பவங்கள் அனைத்தும் எனக்கும் நடந்தன. நான் அனுஷ்காவைத் திருமணம் செய்தேன். ஆனால்
உன் வாழ்வில் நடந்த ஒரு விஷயம் மட்டும் எனக்கு நடக்கவில்லை. நீ செய்த ஒரு புத்திசாலித்தனமான
காரியம் நான் செய்யாதலால் எங்கள் உலகம் அழிந்தது"
"என்ன செயல் அது"
"நான் அந்த வாக்மேனைத் தூக்கி எறிந்து விட்டேன். அது
தான் நான் செய்த முட்டாள்தனம். எங்கள் உலகம் அழிந்தது. என் அனுஷ்காவையும்
இழந்து விட்டேன். தோழரே நான் விடை பெறுகிறேன்.
இனிமேல் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன். குட்பை"
அந்தக் குரல் நின்றது. இதன் பிறகு அந்தக் குரலை அவன் கேட்கப் போவதே இல்லை.
ஆர்யா களைப்புடன் நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தான்.
(முற்றும்)
REFERENCE MATERIAL FOR THE STORY:-
1)
Parallel Universes – Michio Kaku.
No comments:
Post a Comment