Friday, September 11, 2015

கடவுள் யார் - அறிவியல் கதை

  கடவுள்  யார்

                                                            Chapter -1

    
அதிகாலை ஐந்து மணிக்கு செல்போன் அலாரம் அடிக்க, ஆர்யா தூக்கம் கலைந்தான். சுனிதா மற்றும் ரியா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். மெதுவாக எழுந்து, பால்கனிக்கு வந்து ஆகாயத்தைப் பார்த்தான். ஆதவனின் கதிர்களை மேகங்கள் சிறைப்படுத்தியிருந்தது. மழை வருமா வராதா என்ற மர்ம நாடகம் நடந்து கொண்டிருந்தது.
ஜாகிங் செய்வதற்காக தனது ஷூக்களை அணிந்து ஆர்யா முன் அறைக்கு வந்த போது கதவருகே ரியா நின்று கொண்டிருந்தாள்.
"என்ன முழிசிட்டியா. போய்  தூங்கு "
"தூக்கம் வரலை டாடி. நீங்க எங்கே போறீங்க. நானும் கூட வரேன்"
"நான் பார்க் தான் போறேன். அம்மா திட்டுவா. நீ பெட்டுக்கு  போ"
ரியா அடம் பிடிக்க வேறு  வழியில்லாமல் ஆர்யா அவளையும் தன்னுடன் அழைத்துச் சென்றான். 
ஆர்யா பார்க்கைச் சுற்றி ஐந்து சுற்று ஓடி விட்டு பெஞ்சின் மீது அமர்ந்தான்.
பந்தைத் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்த ரியாவும் அவனருகே வந்து அமர்ந்தாள்.
"அம்மாவும் நானும் நாளைக்கு கோவா போறோம் டாடி "
ஐந்து வருடங்கள் முன்பு சுனிதா  கிருத்துவ மதத்திற்கு மாறியிருந்தாள். வருடந்தோறும் கோவாவில் உள்ள சர்ச்சிற்கு சென்று வேண்டுவது அவள் வழக்கம்.
"நீங்க கோவா போறது எனக்குத் தெரியும் ரியா. நான்  தான் நாளைக்கு ஏர்போர்ட்டில் உங்களை டிராப் பண்ண வரேன்"
"நீங்க ஏன் டாடி எங்களுடன் வரலை"
"எனக்கு ஆபீசில் நிறைய வேலை இருக்கு ரியா"
"பொய் சொல்றீங்க டாடி. அம்மா சொன்னங்க உங்களுக்கு ஜீசஸ் பிடிக்காது  அதனால தான்  நீங்க வரலைன்னு"
"அப்படி எல்லாம் இல்லை ரியா. எனக்கு எல்லோரையும் பிடிக்கும்"
"பாட்டிக்கு ஜீசஸ் பிடிக்காது. அவங்க கிருஷ்ணன், பிள்ளையார் சாமி தான் கும்பிடறாங்க"
ஆர்யா அதற்குப் பதில் அளிக்காமல் மெளனமாக இருந்தான்.
"யார் டாடி உண்மையான சாமி. ஜீசஸா இல்லை பிள்ளையாரா"
"எல்லா கடவுளும் உண்மையான கடவுள் தான்"
"கடவுள் தான் நம்மை எல்லாம் படைத்தாரா"
"போதும் ரியா. மழை வருகிற மாதிரி இருக்கு. வீட்டுக்குப் போகலாம்"
ஆர்யாவுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமாகக் கிடையாது. அவன் DRDO நிறுவனத்தில் ஒரு சைனடிஸ்டாக இருந்தான். எதையும் தர்க்க ரீதியாக ஆராய்ந்து விளக்கமளிக்க முடியும்  விஷயங்களை மட்டும் தான் நம்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன். அவனுக்கும் சுனிதாவுக்கும் நிறைய விவாதங்கள் நடந்தாலும் மற்றவரின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற தெளிவு இருவருக்கும் இருந்தது.
சமீப காலமாக ரியாவிடம் நிறைய ஜீசஸ் பற்றி பேசுகிறாள். அதனால் குழந்தை சற்று குழம்பியிருக்கிறது. சுனிதாவிடம் இதைப் பக்குவமாக சொல்ல வேண்டும். ஏற்றுக் கொள்வாளா என்று தெரியவில்லை. மத நம்பிக்கை குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்டி வளர்க்க வேண்டும் என்ற கருத்து கொண்டவள் சுனிதா.
இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். சுனிதா சமையலறையில் இருந்தாள்.
"ஏன் ரியாவை வெளியே அழைத்துப் போனீர்கள். மழை  வருகிற மாதிரி  இருக்கு. குழந்தைக்கு ஏதாவது ஆச்சுனா? நாளைக்கு டிராவல் வேற செய்றோம்"
ஆர்யா ஒன்றும் பதில் அளிக்காமல் சுனிதா அருகே சென்று அவள் உதட்டில் முத்தமிட்டான்.

"இதை ஒன்னு செஞ்சு என்  வாயை மூடிடுங்க" என்று முனு முனுத்தாள்
"நான் இன்னைக்கு சீக்கிரம் ஆபீஸ் போகணும் சுனிதா. ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு"
"நானும் ரியாவும் ஷாப்பிங் போகலாம்னு இருந்தோம். எங்களை டிராப் பண்ணிட்டு ஆபீஸ் போக முடியுமா"
"கண்டிப்பா முடியாது சுனி."
"சரி நாங்க டாக்சியில்   போகிறோம்"
காலை உணவு அருந்தி விட்டு அவசரமாக ஆர்யா வீட்டை விட்டுக் கிளம்பினான்.
DRDO அலுவலகத்தை அடைந்ததும் ஆர்யா மூன்றாவது மாடியில் உள்ள லாபுக்கு வந்தான். அங்கு ஒரு வினோதமான இயந்திரம் இருந்தது. அதை சில பரிசோதனைகள் செய்து கொண்டிருக்கும்போது அமிதாப் அறைக்குள் வந்தார்.
"ஆர்யா இன்னைக்கு டெமோவில் சொதப்பிடாதே"
"அனைத்து டெஸ்ட் கேஸ்களையும்   நிறைவேற்றி விட்டேன். டெமோ வெற்றிகரமாகப் போகும்."
"உலக அளவில் பொருளாதார வீழ்ச்சியினால அரசாங்கத்திடம் போதிய பணமில்லை. அதனால்  நிறைய பிராஜெக்டுக்கு நிதி உதவியை நிறுத்தப் போகிறார்கள். வறுமையில் பல கோடி மக்கள் தவிக்கும் போது இது போன்று ஆராய்ச்சிகளினால் என்ன பயன் என்று மக்களும் கேட்கத் தொடங்கி விட்டார்கள். மத்திய மந்திரி இன்று  அனைத்து பிராஜெக்ட்களும்   தற்போது எந்த நிலைமையில் இருக்கிறது என்று அறிந்து கொள்ள வருகிறார். தேவையில்லாத சில பிராஜெக்டுகள் ரத்து செய்யப்படும். அந்த பிராஜெக்ட்களில் பணியாற்றுபவர்களின் வேலையிலிருந்து நீக்கவும் செய்யப்படுவார்கள். உன் எதிர்காலமே இந்த டெமோவில் தான் இருக்கிறது என்பதை மனதில் நிறுத்திக் கொள் "
"எல்லாம் நல்லபடியாக முடியும். ஒன்றும் கவலைப்படாதீர்கள்  அமித்"
"கவலைப் பட வேண்டியவன் நீ, நானில்லை. இன்னும் ஒரு மணி நேரத்தில் உனது டெமோ துவங்க வேண்டும்.".
ஒரு மணி நேரம் கழித்து டெமோ துவங்கியது. அமைச்சர் அறிவு கூர்மையுள்ளவராகவும் இருந்தார். ஆர்யா முதலில் சில விளக்கங்கள் கொடுக்க ஆரம்பித்தான்.
"இந்த பிரபஞ்சம் நீளம், அகலம் மற்றும் உயரம் என்று மூன்று பரிமாணங்களில் தான் இருக்கிறது என்று அறிவியல் இது வரை சொல்லி  வருகிறது. கடந்த இருபது வருடங்களில் ஸ்ட்ரிங்  தியரி என்ற கோட்பாட்டின் மூலம் அறிவியல் உலகில் பெரிய மலர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த கோட்பாடு பிரபஞ்சம் மூன்று பரிமாணங்களில் இல்லாமல் பத்து பரிமாணங்களில் இருப்பதாக உறுதியாக  கூறி வருகிறது. இதர ஏழு பரிமாணங்கள் மிகவும் நுண்மையாக  இருப்பதால் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. மேலும் நாம் இருக்கும் இந்த பிரபஞ்சத்தைத் தவிர பல பிரபஞ்சங்கள் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. இவற்றை Brane Universe  என்று கூறுகிறார்கள். இந்த பிரபஞ்சங்கள் பல கோடிக்கணக்கான மைல்கள் தொலைவில் இல்லாமல் மிகவும் அண்மையில் நம் கைக்கு எட்டும் தூரத்திலேயே உள்ளது."
"அப்படி என்றால் ஏன் அவற்றை நாம் பார்க்க முடிவதில்லை"
"அதற்கு இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. நாம் ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பார்க்க முடிவதற்கான காரணம் அவற்றிலிருந்து ஒளிக்கதிர்கள் நம் பூமியை நோக்கி வருவதனால் தான். ஆனால் இந்த மாற்றுப் பிரபஞ்சங்களிளிருந்து ஒளிக்கதிர்கள் நம் பிரபஞ்சத்தை நோக்கி பயணம் செய்யும் சாத்தியக்கூறு இல்லை. மேலும் இப்பிரபஞ்சங்கள் நம் கண்ணுக்குத் தெரியாத எழு பரிமாணங்களில் அடங்கி இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது"
"உன்னுடைய இந்த இயந்திரம் என்ன சாதிக்கப் போகிறது"
ஆர்யா ஒரு சிறிய புத்தகத்தை அந்த இயந்திரத்தில் வைத்தான். கம்ப்யூட்டரில் சில ஆணைகளைப் பிறப்பித்ததும் அந்த புத்தகம் மறைந்தது.
அமைச்சர் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றார்.
"An  Elegant  Universe  என்ற அந்தப் புத்தகத்தை வேறு பிரபஞ்சத்தில் உள்ள ஒரு மனிதன் இந்நேரம் படித்துக் கொண்டிருக்கலாம்" என்றான் புன்னகையுடன்.
"அது இன்னொரு பிரபஞ்சத்திற்குத்தான்  சென்றது என்பதற்கு என்ன ஆதாரம்"

"இதை நிரூபிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு மனிதனை அனுப்ப வேண்டும். அம்மனிதன் வேறு பிரபஞ்சத்திற்குச்  சென்று திரும்பி இங்கே வந்து நம்மிடம் சொன்னாலே ஒழிய இதை நிரூபிக்க முடியாது"
"இது சரியான மோடி மஸ்தான் வேலையாக இருக்கிறது. உயிருக்கு எந்த உத்தரவாதம் இல்லாத இந்த ஆராய்ச்சிக்கு எந்த நபரும் தன்னை  உட்படுத்திக் கொள்ள முன் வர மாட்டார்கள். அப்படியே யாராவது ஒத்துக் கொண்டாலும் அவர்கள் கூறுவதை மட்டும் வைத்து ஆராய்ச்சியின் வெற்றி  தோல்வியை தீர்மானிப்பது பைத்தியக்காரத்தனம்"
அமிதாப் அமைச்சரை சமாதானம் செய்ய ஆரம்பித்தார்.
"இன்னும் மனிதன் செவ்வாய் கிரகத்திற்கே போன வழியைக் காணோம். அதற்குள் என்ன மாற்றுப் பிரபஞ்சம் எல்லாம். போய் வேறு வேலையைப்  பாருங்கள் " என்று கூறி விட்டு வெளியேறினார்.
ஆர்யா விரக்தியுடன் அமர்ந்திருக்கையில் அமிதாபிடமிருந்து  அழைப்பு வந்தது.
"Bad  News  ஆர்யா. உன்னுடைய பிராஜெக்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீ வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளாய். அடுத்த மாதத்திலிருந்து நீ வேலைக்கு வர வேண்டாம்"
ஆர்யா மெளனமாக நின்று கொண்டிருந்தான்.
"Sorry  ஆர்யா. அமைச்சரிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவர் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார். நான் முன்னரே உன்னை வேறு பிராஜெக்டில் போடுவதாகச் சொன்னேன். நீ கேட்கவில்லை. உன் போன்ற திறமையானவனை இழப்பதில் எனக்கும் வருத்தம் தான்"
ஆர்யா அவருக்கு நன்றி கூறி விட்டு தனது காரில் வந்து அமர்ந்தான். அவன் மனம் கனத்தது. வேலை போனது கூட பெரிய விஷயமில்லை. ஆனால் ஐந்து வருடங்களாக தான் மிகவும் நேசித்த ஆராய்ச்சியை விடுவது தான் மிகவும் வலித்தது.
ஆர்யா தன் வீடு வந்து சேர்ந்தான். சுனிதாவும் ரியாவும் ஷாப்பிங் சென்றிருந்தனர். வீட்டின் அமைதியும் தனிமையும் ஆர்யாவின் வேதனையை மேலும் அதிகப்படுத்தியது.

தன் படுக்கை அறை சென்று கண்களை மூடிப் படுத்திருந்தான். எவ்வளவு நேரம் சென்றது என்று அவனுக்கே தெரியவில்லை. திடீரென்று ரியா அவன் முதுகைத் தட்டி "டாடி! இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டீங்க. விளையாடப் போகலாம் வாங்க"
சுனிதா அவன் அருகே வந்து "அதுக்குள்ளே ஏன் வந்துட்டே ஆர்யா. உடம்பு எதுவும் சரி இல்லையா"
"எனக்கு வேலை போயிடுச்சு சுனிதா. பிராஜெக்டுக்கு நிதி உதவி நிறுத்திட்டாங்க.  அதனாலே தேவையில்லாத ஆட்களை எல்லாம் தூக்கிட்டாங்க"
சுனிதா இதைக் கேட்டதும் திடுக்கிட்டு நின்றாள். பிறகு ஆறுதலாக அவன் தலை முடியைக் கோதி "ஒன்னும் கவலைப்படாதே நாளைக்கு கோவா போய் கர்த்தர்கிட்டே வேண்டுகிறேன். கண்டிப்பாக ஒரு நல்ல செய்தி கிடைக்கும்."
"நீ கோவா கண்டிப்பா போகனுமா. இந்த நிலையிலே நீ கூடவே இருந்தா நல்லா இருக்கும். சாமி கும்பிட்டா போன வேலை கிடைச்சிடுமா"
"உனக்கு நம்பிக்கை இல்லைனாலும் என் மன திருப்திக்காக  கோவா போக அனுமதி கொடு. செய்தி கேட்டவுடனே எனக்கு இடி விழுந்த மாதிரி இருக்கு. நீயும் நொந்து போய் இருக்கே. கோவா போய் வந்தால் கண்டிப்பா எனக்கு ஒரு நம்பிக்கை  கிடைக்கும். நம் இரண்டு பேரில் யாராவது ஒருவர் தைரியமா இருந்தா தானே பிரச்சினையை சந்திக்க முடியும்"
"சரி உன் இஷ்டம் சுனிதா"
"கொஞ்ச நேரம் நீ ரியாவுடன் பேசி விளையாடு. அதுவே கவலை எல்லாம் மறந்து போகச் செய்யும்"
ரியா ஆர்யாவிடம் வந்து "நாம இரண்டு பேரும் "வீ " கேம் விளையாடலாம்.” என்று அவன் கையைப் பிடித்து விளையாட்டு அறைக்கு அழைத்துச் சென்றாள்.
அவன் சென்றதும் சுனிதாவிற்கு அது வரை கட்டுப்படுத்தியிருந்த கண்ணீர் அருவி போல வர ஆரம்பித்தது.
                              -------*******--------
அடுத்த நாள் சுனிதா ரியாவுடன் கோவா சென்று விட்டாள். ஆர்யாவுக்கு வீட்டில் இருப்பது பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது. ஆபீசுக்குக் கிளம்பி வந்து லேபுக்குள் நுழைந்தான்.
அங்கிருந்த மெஷினைச் சிறிது நேரம் அமைதியாகப் பார்த்தான். பிறகு கம்ப்யூட்டரில் சில ஆணைகள் என்டர் செய்தான்.
மெஷினுக்குள் ஆர்யா நிற்க அதன் கதவுகள் மூடியது.
"என்னை மன்னித்து விடு சுனிதா. ரியா குட்டி உனக்கு என் அன்பு முத்தங்கள்" என்று மனதுக்குள் கூறி ஆர்யா கண்களை மூடினான்.
சில நொடிகளில் கதிர்கள் அவன் மீது பாய ஆர்யா முழுதும் மறைந்தான்.

 

Chapter -2


ஆர்யா கண்களைத் திறந்து பார்த்தபோது நீண்ட தூக்கத்திலிருந்து எழுந்தது போன்ற ஒரு உணர்வு தோன்றியது. கைகளை அசைக்க முயற்சித்தபோது உடலெல்லாம் பெரும் வலியை உணர்ந்தான். பெரும் போராட்டத்திற்குப் பிறகு மெல்ல எழுந்து நடந்தான். சுற்றிலும் பசுமையான மரங்கள் இருந்தன. சல சலவென்ற சத்தம்  கேட்டுக்  கொண்டிருந்தது. சிறிது தூரம் நடந்த பின்னர் ஒரு அழகான அருவி கண் முன் தெரிந்தது. அந்த அருவியின் அழகில் பிரமித்து நின்றான்.
இப்போது தான் இருக்கும் இடம் எதுவென்ற சந்தேகம் வந்தது. பழைய நினைவுகள் உதயமாக பல கேள்விகள் தோன்றின. தான் உண்மையில் இப்போது இருப்பது இன்னொரு பிரபஞ்சமா? அல்லது பூமியில் தான் இருக்கிறோமா? அல்லது வேறு ஒரு கிரகத்திற்கு வந்து விட்டோமா?
இவ்வாறு சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்போது ஆர்யாவின் முதுகில் பல வண்ணங்கள் கொண்ட ஒரு அழகிய வண்ணத்துப் பூச்சி அமர்ந்தது. ஆகா! எத்தனை அழகு என்று வியந்தான்.  இவ்வுலகில் உயிரினங்கள் இருக்கிறது என்பது தெளிவாகிறது. சுற்றிலும் இருக்கும் மரங்களைப் பார்த்தான். ஒவ்வொன்றும் குறைந்தது 100 அடியாவது இருக்கும். கண்டிப்பாக  பூமியில் இது  போன்று காண்பது அரிது. திடீரென்று "பட" "பட" வென்று உரத்த சத்தம் கேட்டது. வானத்தில் பறவைகள் பறந்தன. அவை பிரம்மாண்டமான கழுகுகள் போன்று இருந்தன.  
ஆர்யாவுக்குத் திடீரென்று பசிக்க ஆரம்பித்தது. மரங்களில் காய் கனிகள் இருப்பதைப் பார்த்தான். அவற்றைப் பறித்து உண்டான். இனிப்பில்லாமல் சுவையன்றி கனிகள் இருந்தன.
மெல்ல இருட்ட ஆரம்பித்தது. வானத்தில் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய      உருண்டை தோன்றியது. சிறிது நேரத்தில் எதிர் திசையில் நீல நிற உருண்டையும் அதன் அருகில் வெண்மை நிறத்தில் இன்னொரு உருண்டையும் தோன்றியது. இவை நிலவுகளாக இருக்க வேண்டும். இக்கிரகத்தில் மூன்று நிலவுகள் இருப்பதால் தான் இருப்பது பூமி அல்ல என்று ஆர்யாவுக்குத் தெளிவானது.
ஒரு மரத்தின் கீழ் படுத்து வானத்தைப் பார்த்தவண்ணம் இருந்தான். வானை அலங்கரித்த மூன்று நிலவுகள், நட்சத்திரக் கூட்டங்களின் அழகில் வியந்த வண்ணம் களைப்பில் அப்படியே உறங்கினான்.   
அடுத்த நாள் எழுந்த பிறகு மேலும் அந்தப் புதிய உலகில் உலவினான். கால் போன போக்கிலே சென்றவன் கண்ணில் ஒரு பெரிய மலை தென்பட்டது. மெல்ல இருட்டவும் ஆரம்பித்தது. இவ்வுலகில் மனிதர்களைப்  போன்று அறிவிற் சிறந்த உயிரினங்கள் இருக்கின்றனவா என்ற கேள்வி அவன் மனதில் எழ, அவன் கவனத்தை ஒரு அற்புதமான விஷயம் கவர்ந்தது. மலை மேலிருந்து வெளிச்சம் தெரிந்தது. இது நெருப்பு அல்லது ஏதோ ஒரு விதமான மின்சாரத்திலிருந்து வரும்  வெளிச்சமாகத்  தான் இருக்க வேண்டும். ஆர்யா மனதில் உற்சாகம் பிறந்தது. இவ்வுலகில் அறிவில் சிறந்த உயிரினங்கள் இருக்க வேண்டும். தான் தனிமையில் இவ்வுலகில் பைத்தியம் போல அலைய வேண்டியதில்லை.
அந்த மலை மீது தான் ஏறினால் தானே அவர்களைத் தான் சந்திக்க முடியும். பல்லாயிரக்கணக்கான அடிகள் உயரம் கொண்ட இம்மலை மீது தான் ஏற பல மாதங்கள் ஆகும்.மலை ஏறிச் செல்லும் பாதையும் அவ்வளவு எளிதாகப் படவில்லை. ஆர்யா மீண்டும் விரக்தியில் ஆழ்ந்தான்.           
ஆதி காலத்தில் மனிதன் எந்த விதமான தொழில் நுட்பங்களின் உதவியுமில்லாமல் பல கண்டங்களைக் கடந்த போது தன்னால் ஒரு மலை மீது ஏறிச் செல்ல முடியாதா என்று தன்னைத் தேற்றி. மெதுவாக அம்மலை மீது ஏறினான்.மேலே தெரிந்த வெளிச்சத்தை இலக்காகக் கொண்டு ஏறிச் சென்றான்.
ஒரு வாரம் மலை மீது  தொடர்ந்து ஏறினான். உயரத்தில் செல்ல செல்ல மரங்கள் மற்றும் செடிகள் மறைந்தன. உண்பதற்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. ஆர்யா பெரும் சோர்வுடன் மயக்கமான நிலையில் இருந்தான். உடலில்  பாதி  ஜீவன்  போய்  விட்டது. தன் முயற்சி வெற்றியடையும் என்பது நிராசை என்று தோன்றியது.
இனியும் தான் இந்த அத்துவான உலகில் உயிர் வாழ்வது முட்டாள்தனம் என்று முடிவு செய்து மலையின் மீதிருந்த ஒரு பாறையின் விளிம்பில் நின்றான். தன் கண்ணை மூடியவன் மனதில் சுனிதாவின் உருவமும் ரியாவின் சிரித்த முகமும்  தெரிந்தது. கீழே குதிக்க முயன்ற போது அவனை ஒரு சக்தி தடுத்து நிறுத்தியது.
நீல நிறம் கொண்ட ஒரு உருவம் அவனைக் கீழே விழாமல் நிறுத்தியது. அவன் தலை மீது அவ்வுருவம் கை வைத்தது. அவர்கள் இருவருக்கும் டெலிபதி போன்று எண்ணத் தொடர்பு ஏற்பட்டது.
"நீ யார். என்ன செய்ய முயற்சிக்கிறாய்"
தன் முன் நிற்கும் அந்த உருவத்தைப் பார்த்ததும் ஆர்யா மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றான்.
"உன்னைக் காணும் முன்பு வரை இறக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தேன். இப்போது அதற்கான அவசியம் இல்லை"
"நீ எங்கிருந்து வருகிறாய். இந்த உலகில் மரணம் என்பதே இல்லை என்பது உனக்குத் தெரியாதா"
"நான் பூமி என்னும் கிரகத்திலிருந்து வருகிறேன்"
"பொய் சொல்லாதே. அப்படி ஒரு கிரகம் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை"
"நான் வேறு ஒரு பிரபஞ்சத்திலிருந்து வருகிறேன்"
அம்மனிதன் வியப்புடன் அவனைப் பார்த்தான்.
பிறகு அவன் தோள்கள் மீது கை வைத்து "எங்கள் இருப்பிடத்திற்குச் செல்லலாம்" என்றான்.
அடுத்த நொடியில் அவர்கள் ஒரு பெரிய மாளிகை போன்ற வீட்டில் இருந்தனர். Transporter  தொழில் நுட்பம் மூலம் கண நொடியில் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் செல்லும் அளவுக்கு இவ்வுலக மக்கள் அறிவியலில் வளர்ந்திருக்கிறார்கள் என்பதை ஆர்யா உணர்ந்தான்.
அம்மனிதன் "என் பெயர் விஷ். நான் இந்த வைகுண்ட் கிரகத்தின் தலைமை விஞ்ஞானி. உன் பெயர் என்ன"
"என் பெயர் ஆர்யா"
"நீ வேறு பிரபஞ்சத்திலிருந்து வருவதாகக் கூறினாய். அதற்கான அறிவியல் சாத்தியக்கூறு சிறிதும் இல்லை. ஒரு பிரபஞ்சத்திலிருந்து இன்னொரு பிரபஞ்சத்திற்கு ஒளி உட்பட எவ்விதமான கதிர்களும் செல்ல இயலாது. அப்படி இருக்கும் போது ஒரு பொருளை இன்னொரு பிரபஞ்சத்திற்கு அனுப்புவது என்பது இயலாத காரியம்"
"நீ கூறுவது தவறு. இதற்கு அறிவியல் ரீதியான விளக்கம் என்னால் அளிக்க முடியும். ஒரு பிரபஞ்சத்திலிருந்து இன்னொரு பிரபஞ்சத்திற்கு கதிர்கள் செல்ல இயலாது என்று கூறினாய். இதற்கு விதி விலக்கு graviton  என்று அழைக்கப்படும் புவி ஈர்ப்புக் கதிர்கள். ஒரு பொருளை graviton  கதிர்களாய் மாற்றி  இன்னொரு பிரபஞ்சத்திற்கு அனுப்பி பிறகு மீண்டும் அக்கதிர்களை அச்சாக முன்னர் இருந்தது போலவே பொருளாக  உருமாற்ற முடியும்"
இதைக் கேட்டதும் விஷ் முகத்தில் பிரமிப்பு தெரிந்தது. "நல்லது நீ இனி எங்கள் விருந்தினன். உனக்கு உதவியாகவும் எங்கள் உலகைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஒரு நபரை அனுப்புகிறேன். நீ சற்று ஓய்வு எடு" என்று கூறி விட்டு விஷ் மறைந்தான்.
சிறிது நேரத்தில் ஒரு அழகான பெண் அவன் முன் தோன்றினாள். "என் பெயர் மேகா. எங்கள் தலைவர் விஷ் வேற்றுலகிலிருந்து வந்த உனக்கு உதவியாக இருக்கும்படி அனுப்பினார். முதலில் நாம் உணவருந்தலாம்" என்று கூறியவள் கைகளை முன்னே  நீட்டி ஏதோ  சமிக்ஞைகள் செய்தாள். அவர்கள் முன்னே ஒரு மேஜையும், அமர்வதற்கு இருக்கையும் மற்றும் மேஜை மீது உணவு வகைகள் தோன்றின. ஆர்யா தயக்கத்துடன் சாப்பிட ஆரம்பித்தான். சுவை என்பதே இல்லாத காய் கனிகளை உண்பது சிறிது கடினமாக இருந்தது.
"எங்கள் உணவு உனக்குப் பிடித்திருக்கிறதா."
"ஆம்" என்று பொய் சொன்னான் ஆர்யா. "உங்கள் உலகைச் சேர்ந்த மனிதர்கள் எங்களைப் போலவே உருவ அமைப்பில் ஒத்திருப்பது வியப்பளிக்கிறது. நீங்கள் பேசும் மொழி என்ன"
"சமஸ்கிருதம்."
இதைக் கேட்டவுடன் ஆர்யா ஆச்சர்யத்தில் ஆழ்ந்தான். "உங்கள் உலகைப் பற்றிக் கூறு மேகா."
"நாம் தற்போது இருப்பது வைகுண்ட் என்னும் கிரகமாகும். இதைச் சுற்றி மூன்று நிலவுகள் இருக்கின்றன. ஸ்வர்கா, தேவேஷ், நராக் என்பது அவற்றின் பெயர். எங்கள் உலகின் தலைவர்கள் விஷ், ஷிவ் மற்றும் ஜெஸ் என்னும் மூன்று விஞ்ஞானிகள். நீ சற்று முன் சந்தித்தது விஷ் என்பவரைத் தான்."
"உங்கள் உலகின் தலைவர்கள் விஞ்ஞானிகளா?"
"ஆம். இந்த பிரபஞ்சத்தின் இயக்கமே அறிவியல் விதிகளின்படி தான் என்பது எங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை. இங்கு எதுவுமே தற்செயலாக நடப்பதில்லை. ஒவ்வொரு செயலுக்கும் அறிவியல் விதிகளைச் சார்ந்த காரணங்கள் இருக்கின்றன. எனவே விஞ்ஞானிகளால் மட்டுமே சரியான முடிவுகள் எடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். எதிர்காலம் தெளிவில்லாமல் இருக்கும்போது சரியான முடிவுகள் எடுத்து மக்களை வழிநடுத்த விஞ்ஞானிகளால் மட்டுமே முடியும்."
"எல்லாம் அறிவியல் விதிகள் படி இயங்குகிறது என்றால் உங்களுக்கு கடவுள்   நம்பிக்கை என்பது கிடையாதா. இங்கு மக்கள் மதங்கள் எதையும் பின்பற்றுவதில்லையா?"
"இங்கு நாங்கள் பின்பற்றும் மதம் அறிவியல் விதிகளே. இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் இயக்கம் அறிவியல் விதிகளினால் தான் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த அறிவியல் விதிகளில் தேர்ச்சி பெற்ற விஞ்ஞானிகள் விஷ், ஷிவ் மற்றும் ஜெஸ் என்னும் இம்மூவரைத் தான் நாங்கள் கடவுளாக பாவிக்கிறோம்."
"எங்கள் மக்களிடம் அறிவியல் சிந்தனை இருந்தாலும் கடவுள் என்னும் ஒரு சக்தி பிரபஞ்சத்தை இயக்குவதாக நாங்கள் நம்புகிறோம்"
"இங்கும் முதலில் கடவுள் நம்பிக்கை இருந்தது. ஆனால் தெளிவில்லாமல் இருந்த எல்லாக் கேள்விகளுக்கும் விடை தெரிந்த பின்னர் கடவுள் நம்பிக்கை என்பது தேவை இல்லாததாகி விட்டது."
“நீ சற்று ஓய்வெடு. நாளை உனக்கு எங்கள் உலகைச் சுற்றிக் காண்பிக்கிறேன்" என்று கூறி மேகா மறைந்தாள். "  
அடுத்த நாள் மேகா ஆர்யாவுக்கு நகரைச் சுற்றிக் காட்டினாள். அந்நகர மக்கள் எந்த விதக் கவலையுமின்றி உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்பட்டனர்.  நகரத்தில் பல விதமான கேளிக்கை மற்றும் உணவு விடுதிகள் காணப்பட்டன.
"இங்கு இருக்கும் மக்களுக்கு சராசரி வயது என்ன"
"இங்கு இருக்கும் மக்களுக்கு மரணம் என்பதே கிடையாது. எங்கள் இனம் இந்தக் கிரகத்தில் தோன்றி பல்லாயிரக்கணக்கான கோடி வருடங்கள் ஆகிறது. அந்தக் கால கட்டத்தில் பிறந்த மூதாதையர் இன்னமும் உயிர் வாழ்கின்றனர். ஜனத் தொகை அதிகமாகுவதால் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக யாரும் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை"
"அடுத்து உன்னை நான் எங்கள் விஞ்ஞான ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் செல்கிறேன்"
அடுத்த நொடி அவர்கள் ஒரு பெரிய கட்டடத்திற்குள் இருந்தனர்.
டெலிபதி மூலம் பொருள்களை இயக்கும் நுட்பம், Transporter முதலானவற்றை அந்த ஆராய்ச்சி மையத்தில் கண்டு ஆர்யா வியந்தான்.
"அடுத்து உனக்கு நான் காட்டப் போகும் இயந்திரத்தைக் கண்டால் நீ வியந்தே போவாய்."
அவர்கள் இருவரும் ஒரு பெரிய அறைக்குச் செல்ல உள்ளே இருந்த இயந்திரத்தைப் பார்த்து ஆர்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
"இந்த இயந்திரங்கள் மூலம் ஒரு பிரபஞ்சத்தையே படைக்க முடியும். ஆதியில் மிகவும் நுண்ணிய கண அளவில் அமுக்கப்பட்டு ஒரு பிரளயமாய் வெடித்து உருவானது தான் எல்லாப் பிரபஞ்சங்களும். இவ்வாறு பல பிரபஞ்சங்கள் உருவாக்கப்படும் பரிசோதனைக் கூடம் தான் இது."
ஆர்யாவினால் இதனை நம்பவே முடியவில்லை.
"இதனை விஷ் தான் முதலில் உருவாக்கினார். அவர் இது வரை படைத்த பிரபஞ்சங்கள் பல கோடி"
"அப்படியானால் நான் பிறந்த பிரபஞ்சம் உருவானது எப்படி என்று உன்னால் கண்டு பிடிக்க முடியுமா"
"ஒவ்வொரு பிரபஞ்சம் உருவானதன் பதிவு எங்களிடம் உள்ளது. உங்கள் பிரபஞ்சத்தில் உள்ள ஒரு கிரகமோ அல்லது நட்சத்திரத்தின் விவரங்களைக் கூறு. எங்கள் பதிவுகளில் தேடிப் பார்க்கலாம்"
ஆர்யா பூமி மற்றும் சூரியனின் பண்புகளைக் கூற மேகா தேடினாள்.
மேகாவின் முகம் பிரகாசமானது. "விந்தை!  விஷ் படைத்த முதல் பிரபஞ்சம் உங்களுடையது தான்."
"அப்படியானால் எங்களைப் படைத்த கடவுள் விஷ் தான் அல்லவா? எங்கள் பிரபஞ்சத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் விஷ் கட்டுப்படுத்த முடியுமா"
"இல்லை உங்கள் பிரபஞ்சம் உருவாக்குவதற்கு முதல் கட்டமாக இந்த இயந்திரத்தில் அதன் அறிவியல் விதிகள் முழுதும் வடிவமைத்து விடுகிறோம். பிரபஞ்சம் உருவானதன் பிறகு அதன் நிகழ்வுகள் இந்த அறிவியல் விதிகளை ஒட்டித் தான் நடைபெறும். உங்கள் பிரபஞ்சத்தின் நிகழ்வுகளையோ, முதலில் அமைத்த அறிவியல் விதிகளையோ விஷ் நினைத்தால் கூட மாற்ற முடியாது"
மேகா அடுத்து ஆர்யாவுக்கு இன்னொரு அறையிலிருந்த இயந்திரத்தைக் காட்டினாள்.
"நீ எங்கள் பிரபஞ்சத்திற்கு வந்தது போல ஒரு பிரபஞ்சத்திலிருந்து இன்னொரு பிரபஞ்சத்திற்குச் செல்லும் இயந்திரங்கள் கூட இங்கு இருக்கிறது."
ஆர்யாவுக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. "மேகா நான் என் உலகிற்குத் திரும்ப வேண்டும். அங்கு எனக்காக என் மனைவியும் குழந்தையும்  காத்திருப்பார்கள். அதற்கு நீ உதவுவாயா?"
மேகா சற்று தயங்கினாள். "விஷ் அனுமதி இல்லாமல் நான் இதை செய்ய முடியாது"
ஆர்யா மேகாவின் கைகளைப் பிடித்து "நான் இங்கு வந்ததை உங்கள் கிரகத்தினர் விரும்பவில்லை என்று தான் நினைக்கிறேன். இங்கு நான் தொடர்ந்து இருந்தால் எனக்கு ஆபத்து நிகழலாம். சற்று மனது வைத்து உதவி செய் மேகா"
மேகா சிறிது யோசித்து சம்மதித்தாள்.
ஆர்யா அந்த இயந்திரத்தினுள்ளே சென்று அமர்ந்தான். மேகா அதனைக் கை சமிக்ஞைகள் மூலம் இயக்கினாள்.
சிறிது நேரத்தில் ஆர்யா முற்றிலும் மறைந்தான்.
                            ---------*********------------
விஷ் கவலை தாங்கிய முகத்துடன் காணப்பட்டார். அந்த அறையில் அவரைத் தவிர ஜெஸ் மற்றும் ஷிவ் காணப்பட்டனர்.
"நாம் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. நான் படைத்த பிரபஞ்சத்திலிருந்து ஒரு மனிதன் நமது உலகிற்கு ஊடுருவி இருக்கிறான்."
ஷிவ் "அதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை என்று நீங்கள் கூறி இருந்தீர்கள்"
விஷ் "ஆம் அப்படித்தான் நான் இது வரை எண்ணி இருந்தேன். ஆனால் நம்மால் படைக்கப்பட்டவர்கள் அதி புத்திசாலிகளாக மாறி இருக்கிறார்கள்."
ஜெஸ் "நீங்கள் என்ன செய்வதாக உத்தேசித்து இருக்கிறீர்கள். அவனைக் கொல்ல முடியுமா. "
விஷ் "அவன் நமது உலகிற்கு வந்து விட்டதால் இவ்வுலகின் அறிவியல் விதிகளுக்குக் கட்டுப்பட்டவன் ஆகிறான். நமது உலகில் இருக்கும் வரை அவனுக்கு மரணம் என்பது கிடையாது"
ஷிவ் "அப்படி ஆனால் நாம் அவனை இங்கேயே சிறைப்படுத்த வேண்டி இருக்கும்"
அப்போது அந்த அறையில் மேகாவின் ஹாலோகிராம் உருவம் தெரிந்தது. "தலைவர்களுக்கு வணக்கம். நமது உலகின் விருந்தினர் ஆர்யா மறைந்து விட்டார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி நான் அவரை ஆராய்ச்சி மையத்திலிருந்த இயந்திரத்தின் மூலம் பூமிக்கு அனுப்பி விட்டேன்"
விஷ் முகம் கோபத்தில் சிவந்தது "முட்டாள் பெண்ணே. ஆர்யா ஒரு கைதி. அவனை உனது கண்காணிப்பில் வைத்திருக்கச் சொன்னேன் அல்லவா."
மேகா "அவன் நமது உலகிற்கு வந்திருப்பது மக்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பித்து விட்டது. அவனை நம்மிடையே வைத்திருப்பதால் மக்களிடயே எதிர்ப்பு பரவ ஆரம்பித்துள்ளதாக செய்தி என் காதுக்கு எட்டியது.  நம் உலகில் குழப்பங்கள் வராமல் இருப்பதற்காக இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று கருதி அவன் செல்ல அனுமதி தந்தேன்"
விஷ் "நீ முடிவு எடுப்பதற்கு முன்னர் எங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று தோன்றவில்லையா".  
மேகா "மக்களின் பாதுகாவல் மற்றும் நலன் சம்மந்தமான விஷயங்களில் எனக்கு முழு சுதந்திரம் அளித்திருக்கிறீர்கள் என்பதை மரியாதையுடன் தங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.
விஷ் "முட்டாளே ஒழிந்து போ" என்றதும் மேகாவின் உருவம் மறைந்தது.
ஷிவ் "கோபம் வேண்டாம் விஷ். நமக்கு ஆபத்து ஆர்யாவுடன் முடிந்து விடாது. பூமியில் உள்ள மக்களின் அறிவியல் திறன் வெகு வேகமாக முன்னேறி உள்ளது.  ஆர்யாவை நாம் சிறைப்படுத்தினாலும் இன்னொருவன் இங்கு வர மாட்டான் என்பது என்ன நிச்சயம்"
ஜெஸ் "பூமியிருந்து மக்கள் இங்கு வருவதனால் நமக்கு என்ன ஆபத்து வந்து விடும்"
விஷ் "நம்மால் படைக்கப்பட்ட மக்களுக்கு நம்மைப் பற்றி ஒரு மர்மம் இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் நம்மைக் கடவுளாக வழிபடுவார்கள். எப்போது அவர்கள் நம்மை நேரில் சந்திக்கிறார்களோ தங்கள் படைப்பின் ரகசியம் அவர்களுக்குப் புரிய ஆரம்பித்து விடுகிறது. அப்போது நம் மீது உள்ள பக்தி அவர்களுக்குப் போய் விடும். பிறகு நம்மை விட சக்தி மிகுந்தவர்களாக மாறி நம் மீது அவர்கள் போர் தொடுக்கும் அபாயம் உள்ளது"
ஷிவ் "விஷ் சொல்வது முற்றிலும் உண்மை. 10000 பூலோக வருடங்கள் முன்பு மனிதர்கள் இதே போல அறிவியல் திறனில் வளர்ந்து நமக்கு ஒரு அச்சுறுத்தலாக உருவெடுத்தனர். அப்போது கிருஷ் என்னும் விஷ்ஷினுடைய நகல் (Clone ) ஒன்றை பூமிக்கு அனுப்பினோம். கிருஷ் மூலம் பூமியில் உள்ள பாண்டவர் மற்றும் கௌரவர் என்னும் இரண்டு பிரிவினரிடையே பகைமையை உண்டாக்கினோம். அவர்களிடையே நடந்த போரில் மனித இனம் பேரழிவு அடைந்தது. இதனால் மனிதர்களுடைய அறிவியல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தினோம்."
விஷ் "என்னுடைய இன்னொரு நகல் (Clone) மறுபடியும் பூலோகம் செல்லும் நேரம் வந்து விட்டது. மனித இனம் மீண்டும் அழிவைச் சந்திக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் மூலம் வரும் ஆபத்தை நாம் களைய முடியும்."
விஷ் தனது திட்டங்களை மற்ற இருவருக்கும் கூற ஆரம்பித்தார்.

 

Chapter -3

                
ஆர்யா மறைந்து ஒரு வாரம் கடந்திருந்தது. சுனிதா உறக்கம் வராமல் படுத்திருந்தாள். அவளருகே ரியா பார்பி பொம்மையை அணைத்த வண்ணம் தூங்கிக் கொண்டிருந்தாள்.
நாளையோடு ஆர்யாவை மணந்து சுனிதாவுக்கு ஐந்தாண்டுகள் முடிகிறது. அந்த நினைவு அவள் துயரத்தை அதிகப்படுத்துவதாக இருந்தது. தூக்கம் வராது கண்ணை மூடிய வண்ணம் நீண்ட நேரம் இருந்தாள்.
காலை விடிந்தது. எழுந்தவுடன் சூர்யாவின் போட்டோவைப் பார்த்தாள். "ஹாப்பி ஆன்னிவர்ஸரி சூர்யா" என்று கூறி விட்டு ரியாவுக்கு காலை உணவு சமைக்கத் தொடங்கினாள்.
ரியா அவளருகே வந்து "அம்மா நீ அழுதியா? டாடி வேலை விஷயமா டூர் தான் போயிருக்கார். சீக்கிரம் வந்துடுவார்."
சுனிதா ரியாவை அணைத்து முத்தம் கொடுத்தாள்.
திடீரென்று "சுனிதா" என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுப் பின்னே திரும்பினாள். அவளுடைய கண்டதை அவளாலே நம்ப முடியவில்லை.
வீட்டின் கதவருகே ஆர்யா நின்றுக் கொண்டிருந்தான்.
சுனிதா செயலிழந்த வண்ணம் சிறிது நேரம் நின்றாள். பிறகு அவன் முன் ஓடிச் சென்று அழுகையுடன் அவன் கன்னத்தைப் பளார் பளாரென்று அறைந்தாள்.
"எங்கே போயிருந்தே ஆர்யா? ஒரு நிமிடம் எங்களைப் பற்றி யோசித்துப் பார்த்தாயா?"
"நான் வடிவமைத்த இயந்திரம் மூலமாக வேறு ஒரு உலகத்திற்குப் போய் வந்தேன் சுனிதா. அங்கே நம்மைப் படத்த கடவுள்களைக் கண்டேன்."
சுனிதா அவன் உதட்டில் விரலை வைத்துப் பேச விடாமல் தடுத்தாள். "நீ ரொம்ப மன உளைச்சலில் இருக்கிறாய். அமிதாப் நேற்று போன் செய்தார். உன்னை வேறு ஒரு பிராஜெக்டில் போடுவதாகச் சொன்னார். நல்லா ஓய்வெடுத்து அடுத்த வாரம் வேலைக்குப் போ. அந்த மாற்றுப் பிரபஞ்சம் பற்றி யோசிப்பதை விடு"
"சுனிதா நீ கூட என்னை நம்ப மாட்டாயா?"
"நான் நம்பாமல் உன்னை வேறு யார் நம்புவார்கள். இப்போது உனக்குத் தேவை நல்ல ஓய்வு"
அப்போது ரியா ஓடி வந்து ஆர்யாவைக் கழுத்துடன் அணைத்துக் கொண்டாள். "டாடி டூர் போயிருந்தப்போ ஏன் ஒரு போன் கூட பண்ணலை? அம்மா எவ்வளவு கவலையோடு இருந்தாங்க தெரியுமா. எனக்கு நீங்க ஒண்ணுமே வாங்கிட்டு வரலையா?"
"சாரிடா. உனக்கு ஒன்னும் வாங்கலை"
"சரி பரவாயில்லை. நாங்க கோவா டூர் போயிருந்தோம் இல்லை அங்கே நாங்க ஜீசஸ் சாமி பார்த்தோம்"
"நான் கூட சாமியை நேரில் பார்த்தேன்"
சுனிதா வேகமாக வந்து ரியாவை வேறு அறைக்கு அழைத்துச் சென்றாள். போகும்போது ஆர்யாவைப் பார்த்து இது போல பேச வேண்டாம் என்று கண் ஜாடை காட்டினாள்.
ரியாவுக்கு உணவு கொடுத்து விட்டு ஆர்யாவை பெட்ரூமுக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தாள். அவனை ஆறுதலாக அணைத்த வண்ணம் இருந்தாள். ஆர்யா இன்னும் தான் இருக்கும் கனவுலகில் இருந்து மீண்டு வந்தது போலத் தெரியவில்லை. சிறிது நாளில் சரி ஆகி விடும் என்று சுனிதா தன்னைச் சமாதானம் செய்து கொண்டாள்.
                              ----------*********-----------
ஒரு வாரம் கழித்து ஆர்யா ஆபீஸ் சென்று அமிதாபைச் சந்தித்தான்.
"என்ன ஆர்யா ரொம்ப நாளா ஆளையே காணோம். டிப்ரஷன்ல எங்கேயாவது போய் விட்டாயோ என்று பயந்து விட்டேன். சுனிதாவுக்கு நான் போன் பண்ணி பேசினப்போ ஏதோ ரிலேஷேன் கல்யாணத்துக்குப் போனதா சொன்னாள். அப்புறம் உனக்கு ஒரு குட் நியூஸ். உன்னை மிசைல் டிபன்ஸ் பிராஜெக்டில் போடலாம்னு முடிவெடுத்திருக்கோம். இன்றைக்கே நீ உன் புது மேனேஜரைச் சந்திக்க வேண்டும்"
ஆர்யா "பழைய பிராஜெக்டோட நிலைமை என்ன அமிதாப்?"
"அதில் நடக்கும் வேலைகளை முழுதும் நிறுத்தப் போகிறோம்"
"பரவாயில்லை. ஆனால் அந்த இயந்திரத்தை மட்டும் பத்திரமாக வைத்திருங்கள் சார். நிறைய உழைப்பு அதில் இருக்கு"
"சரி நான் அதைப் பார்த்துக் கொள்கிறேன்"
ஆர்யா அமிதாபுக்குக் கை கொடுத்து விட்டு தன் புது மேனேஜரைச் சந்திக்க சென்றான்.

        இரண்டு மாதங்கள் கழித்து


ஆர்யா இப்பொழுது முழுதும் சகஜ நிலைமைக்கு மாறி இருந்தான். தனது வேலையிலும் குடும்ப வாழ்க்கையிலும் மீண்டும் ஈடுபாடு வந்தது.
ஒரு நாள் ரியாவை அழைத்து வர பள்ளிக்குச் சென்றான்.  ரியா வழக்கமாக இருக்கும் இடத்தில் காணவில்லை. பல இடங்களில் தேடியும் ரியா தென்படவில்லை. லைப்ரரிக்கு அருகே தேடியபோது மரத்தினடியில் ரியா ஒரு மனிதனுடன் பேசிக் கொண்டிருந்தாள். ஆர்யா வருவதைப் பார்த்தவுடன் அம்மனிதன் அங்கிருந்து வேகமாக விலகினான்.
ஆர்யா "யார் கூட நீ பேசிக் கொண்டிருந்தாய்"
ரியா "நீங்க வருவதற்கு லேட் ஆயிடுச்சா. அந்த மாமா வந்து கம்பனி கொடுத்தாங்க. நிறைய கதை எல்லாம் சொன்னாங்க"
ஆர்யா "என்ன கதை"
ரியா "சாமி கதை சொன்னாங்க. என்னை சாமிகிட்டே கூட்டிட்டுப் போகிறேன்னு சொன்னாங்க"
ஆர்யாவுக்குத் திடுக்கென்று இருந்ததது. "இனிமேல் தெரியாத நபர்களிடம் பேசக் கூடாது. வா வீட்டுக்குக் கிளம்பலாம்"
ஆர்யா காரில் வரும்போது சிந்தனையுடன் இருந்தான். அந்த மனிதனைப் பார்த்தால் ஏதோ தவறாகப்பட்டது. வீட்டிற்கு வந்ததும் சுனிதா அவள் தங்கையின் திருமண ஏற்பாடுகள் பற்றிப் பேச, பள்ளியில் நடந்ததை ஆர்யா முழுதும் மறந்து விட்டான்.
அன்று நடு இரவில் அவனுக்கு முழிப்பு வந்தது. வெகு நேரம் புரண்டுப் படுத்தும் உறக்கம் வரவில்லை. சமையல் அறைக்குச் சென்று தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் உறங்குவதற்கு முன்னர் நாய் குலைக்கும் சத்தம் கேட்டு ஜன்னலோரம் எட்டிப் பார்த்தான். தெரு விளக்கினடியில் ஒரு மனிதன் தன் வீட்டையே நோட்டம் விட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு ஆர்யா அதிர்ந்தான். ஆர்யா பார்த்து விட்டதை அந்த மனிதனும் உணர்ந்திருக்க வேண்டும். உடனடியாக அந்த இடத்தை விட்டு மறைந்தான்.
ஆர்யா சிந்தனையுடன் படுத்தான். நாளை ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும். சிறிது நேரத்தில் உறக்கம் அவனை ஆட்கொண்டது.
                              --------********-------
ஆர்யாவின் புது மேனேஜர் சரத் கோபத்தில் பொரிந்துக் கொண்டிருந்தார்.
"ஆர்யா உனது பிராஜெக்ட் ஸ்டேடஸ் திருப்திகரமாக இல்லை. இன்னும் ஒரு மாதம் லைவ் டேட் வைத்துக் கொண்டு 40 சதவிகிதம் கூட முடிக்காமல் இருக்கிறோம்"
"டீமில் எல்லோரும் புது நபர்கள். யாருக்கும் சரியான முன் அனுபவம் இல்லை. இவர்களை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியவில்லை. வேறு நல்ல நபர்களைப் போட்டால் சரி செய்ய முடியும்"
"இதை இப்போது சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை. இன்னும் ஒரு மாதம் தான் இருக்கிறது. இந்த நேரத்தில் புது நபர்கள் வந்தாலும் மாற்றம் இருக்காது"
"தகுதியான நபர்களை செலெக்ட் செய்தால் நல்ல ரிசல்ட் கொடுக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது"
"சரி இதைப் பற்றி நான் யோசிக்கிறேன். மதியம் இரண்டு மணிக்கு நாம் மீண்டும் சந்திப்போம்"
இரண்டு மணிக்கு ஆர்யா மீண்டும் சரத்தின் அறைக்குச் சென்றபோது அவருடன் இன்னொரு நபர் அந்த அறையில் இருந்தான்.
அவனைக் கண்டதும் ஆர்யாவுக்குத் தூக்கி வாரி போட்டது. பள்ளியில் ரியாவுடன் பேசிக் கொண்டிருந்த அதே மனிதன் தான் அவன்.
"ஆர்யா, மீட் விஷால். இவர் தான் உன் பிராஜெக்டின் புது டீம் மெம்பர். இவர் போன வாரம் தான் DRDO  சேர்ந்தார். இவர் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து நாசாவில் 4 வருடம் வேலை செய்திருக்கிறார். இவர் உன் பிராஜெக்டில் சேர்வதன் மூலம் மீண்டும் அதனை வெற்றிகரமான பாதையில் செலுத்த முடியும் என்று நம்புகிறேன்"
விஷால் ஆர்யாவுக்குத் தன் கை நீட்ட வேண்டா வெறுப்பாக ஆர்யா அதனைக் குலுக்கினான். இருவரும் சரத்தின் அறையை விட்டு வெளியேறினர்.
விஷால் "நாம் கேண்டீனில் காபி சாப்பிட்டுக்கொண்டே பேசலாமே" என்று சொல்ல இருவரும் காபி ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தனர்.
ஆர்யா "நாம் ஏற்கனவே அறிமுகமாகி இருக்கிறோம் என்று நினைக்கிறேன்"
"ஆம். அன்று பள்ளியில் உங்கள் குழந்தையுடன் பேசி கொண்டிருந்ததைத் தானே கூறுகிறீர்கள். என் நீஸ் அந்தப் பள்ளியில் தான் படிக்கிறாள். அவளைப் பார்ப்பதற்காக வந்தபோது உங்கள் மகள் தனியாக அமர்ந்திருந்தாள். ரொம்ப ஸ்வீட்டான பெண். என்னமாய் கேள்விகள் கேட்கிறாள். அப்பாவைப் போல குழந்தையும் ப்ரில்லியன்ட் தான்"
"அது இருக்கட்டும். நேற்று இரவு என் வீட்டின் எதிரே நின்று நோட்டம் விட்டது நீ தானே"
"ஓ அதுவா. நான் தற்போது என் அக்காவின் வீட்டில் தான் இருக்கிறேன். அது உங்கள் வீட்டை ஒட்டி அடுத்தத் தெருவில் தான் இருக்கிறது. எனக்குப் புகை பிடிக்கும் பழக்கம் உண்டு. இரவில் முழிப்பு வந்தால் ஒரு தம் அடிப்பேன். அக்காவின் வீட்டில் இருந்து கொண்டு ஸ்மோக் செய்வது அவ்வளவு சரியாகப் படவில்லை. அது தான் வெளியே வந்து கொஞ்சம் நடந்தேன்."
ஆர்யாவுக்கு விஷாலின் மீது இருந்த சந்தேகம் விலகியது. வேலை சம்பந்தமாக அவனது முந்தைய அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
"நமது பிராஜெக்ட் இப்போதைக்கு ஒரு மூழ்கும் கப்பல். உங்கள் உதவியால் அதனை மீட்க முடியும் என்று நம்புகிறேன்"
"இப்போதே நான் களத்தில் இறங்க ரெடி"
இருவரும் ஆர்யாவின் க்யூபிற்குச் செல்ல, விஷாலுக்கு பிராஜெக்டின் விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. தற்போது ஆர்யாவின் அணி எதிர்கொண்டிருக்கும் டிசைன் பிரச்சினைகள் விஷாலுக்குத் தெரியப்படுத்தியவுடன், உடனடியாக அவன் கூறிய தீர்வுகள் ஆர்யாவை பிரமிக்க வைத்தது. அவன் மீது ஒரு விதமான மதிப்பு கலந்த நட்புணர்வு தோன்றியது.
சனிக்கிழமை டின்னர் தனது வீட்டில் சாப்பிட ஆர்யாவின் அழைப்பை விஷால் ஏற்றுக்கொண்டான்.  
                              -------********----------
சனிக்கிழமை அன்று விஷால் ஆர்யாவுக்குப் போன் செய்தான். "ஆர்யா நீங்கள் இரண்டு நாட்களாக ஆபீஸ் பக்கமே காணவில்லை. இன்றைக்கு நாம் சந்திக்கலாம் என்று சொல்லி இருந்தீர்கள்"
"சாரி விஷால். குழந்தைக்கு உடம்பு சரி இல்லை. ஹாஸ்பிடலில் இருக்கிறோம்"
"அப்படியா! ரியாவுக்கு என்ன?"
"இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்கூலிலிருந்து வந்தவுடன் மயக்கம் போட்டு விழுந்தாள். டாக்டரிடம் காண்பித்த போது பயமுறுத்தி விட்டார்கள். பிரைன் ட்யூமராக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார்கள். நாளை டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்"
"எந்த ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருக்கிறீர்கள்"
"மலர் ஹாஸ்பிடலில்"
அடுத்த அரை மணி நேரத்தில் விஷால் ஹாஸ்பிடலில் இருந்தான். ஒரு தனி அறையில் ரியா கண்ணை மூடித் தூக்கத்தில் இருந்தாள். ஆர்யாவும் சுனிதாவும் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தனர். விஷாலை அவர்கள் இருவரும் அங்கு எதிர்பார்க்கவில்லை.
விஷால் "இப்போ எப்படி இருக்கிறாள்"
"செடேடிவ் கொடுத்திருக்காங்க. தூங்கிக் கொண்டிருக்கிறாள்"
ஆர்யாவும் சுனிதாவும் மிகவும் களைத்து சோர்வுடன் காணப்பட்டனர். இரண்டு நாளும் ரியாவின் அருகிலேயே இருந்து உறக்கமின்றி காணப்பட்டனர்.
விஷால் "ஆர்யா நீங்கள் இருவரும் வீட்டுக்குச் சென்று கொஞ்சம் ஓய்வெடுங்கள். ரியாவை இன்றிரவு நான் பார்த்துக் கொள்கிறேன்"
சுனிதா "பரவாயில்லை எதற்கு உங்களுக்குச் சிரமம்"
விஷால் "அதெல்லாம் ஒரு சிரமும் கிடையாது. இன்றிரவு நிம்மதியாக வீட்டில் ஓய்வெடுங்கள்."
இருவரும் விஷாலிடம் விடைபெற்றுக் கிளம்பினர்.
அடுத்த நாள் இருவரும் ஹாஸ்பிடல் வந்து பார்த்தபோது ரியா விஷாலிடம் கல கலவென்று பேசிக் கொண்டிருந்தாள்.
"இந்த அங்கிள் நல்லா சிரிப்பு காட்டிக் கொண்டிருந்தார்கள் அம்மா"
ரியாவின் மலர்ச்சியைக் கண்டு இருவருக்கும் ஒரு புத்துணர்வு வந்தது.
"கொஞ்சம் நேரம் முன்னர் தான் MRI  ஸ்கேன் எடுத்தார்கள். இன்னும் ஒரு மணி நேரத்தில் ரிசல்ட் தெரியும்.
விஷால் சொல்லி முடித்த அடுத்த நொடி டாக்டர் வந்தார். "ஷி இஸ் ஆல் கிளியர். இப்போதே நீங்கள் வீடு கிளம்பலாம்"
ஆர்யா டாக்டருக்கு நன்றி தெரிவிக்க, சுனிதா ரியாவை அணைத்து முத்தம் கொடுத்தாள்.
"விஷால் உங்கள் உதவியை எங்களால் மறக்கவே முடியாது. நீங்கள் வந்த உடனேயே ஒரு பாசிடிவ் வைப்ரஷேன் தெரிந்தது."
"டோன்ட் வொர்ரி ஆர்யா. நான் எப்போதும் உங்கள் நண்பன். எப்போது வேண்டுமானாலும் என் உதவி கிடைக்கும்.
ரியாவை அழைத்துக் கொண்டு சுனிதாவும் ஆர்யாவும் ஹாஸ்பிடலை விட்டுக் கிளம்பினர்.
காரில் சென்று கொண்டிருக்கும் போது சுனிதா ஆர்யாவிடம் "விஷால் ஒரு பெர்பக்ட் ஜென்டில்மேன். உங்களுக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார்.
சுனிதா கூறியதை ஆர்யா ஆமோதித்தான்.
காரில் பேசிக்கொண்டே வந்த ரியாவின் உற்சாகம் அவர்கள் இருவரையும் தொற்றிக் கொண்டது.

Chapter -4


"நாளை நமது பிராஜெக்டின் "Go Live தினம். முதன் முறையாக 4000 கி.மீ தொலைவில் உள்ள ஒரு இலக்கை அடிக்கும் திறனுள்ள ஏவுகணையை நாம் பரிசோதிக்கப் போகிறோம். பல தடங்கலுக்குப் பிறகு இதை நாம் சாதித்திருக்கிறோம். இன்று ஒரு நாள் முழு உழைப்பை நீங்கள் கொடுக்க வேண்டும். நாளை பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தால் சரித்திரத்தில் இடம் பெறக்கூடிய ஒரு சாதனையை நமது அணி நிகழ்த்தியிருக்கும்"
சரத் மேற்கண்டவாறு பேசியதை அவரது அணியைச் சேர்ந்தவர்கள் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தனர். அவர் பேசி முடித்தவுடன் அவரவர் தங்கள் இடத்திற்குச் சென்று வேளையில் மும்முரமாக ஈடுபட்டனர். இரவானதும் ஒவ்வொருவரும் கிளம்ப ஆர்யா மற்றும் விஷால் மட்டும் எஞ்சியிருந்தனர்.
ஆர்யா "மணி 11 ஆச்சு விஷால். நாளை காலை 6 மணிக்கு வேறு வர வேண்டும். நான் கிளம்புகிறேன், நீங்கள் வருகிறீர்களா?"
விஷால் "இல்லை ஆர்யா. கடைசியாக சில டெஸ்ட் நல்லபடியாகப் போகிறதா என்று ஒரு முறை பார்த்து விடுகிறேன். நாளை காலை சந்திப்போம்"
ஆர்யா விடை பெற்று தனது வீட்டை அடைந்தான்.
தூக்கக் கலக்கத்துடன் சுனிதா கதவைத் திறந்தாள்.
"ஏன் இவ்வளவு லேட். ஒரு கால் கூட செய்யலை. டின்னர் டேபிளில் வைத்திருக்கிறேன்" என்று கூறியவண்ணம் படுக்கச் சென்று விட்டாள்.
ஆர்யா ஹாட்பேக்கிலிருந்த இட்லிகள் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் டிவி பார்த்தான். பிறகு அவனும் உறங்கச் சென்றான்.
அடுத்த நாள் ஆபீஸ் சென்ற போது விஷால் இன்னும் இருப்பதைப் பார்த்து அவனுக்கு ஆச்சர்யம் வந்தது.
"நைட் முழுதும் இங்கே தான் இருந்தீர்களா விஷால்?"
"சின்னச் சின்னப் பிரச்சினைகள் இருந்தன. அதை எல்லாம் நிவர்த்தி செய்ய டைம் ஆகி விட்டது"
மெதுவாக அணியிலிருந்த மற்றவர்களும் வர ஆரம்பித்தனர்.
ஆர்யாவும் தனது இடத்திற்குச் சென்று சில சோதனைகள் செய்வதில் மூழ்கினான்.   ஏவுகணை செல்லும் பாதையை சிமுலஷேனில் சோதித்துப் பார்த்த ஆர்யாவுக்குத் தூக்கி வாரி போட்டது.
நேராக சரத்திடம் சென்று "ஏவுகணையின் பரிசோதனையை நிறுத்த வேண்டும். அது செல்லும் பாதை மாறி இருக்கிறது"
"மாறி இருக்கிறதா? வாட் டூ யூ மீன்"
"நேற்று வீட்டிற்குச் செல்லும் முன்னர் செக் செய்தேன். அப்போது சரியாகத் தான் இருந்தது. இப்போது பார்த்தால் எல்லாம் மாறி இருக்கிறது"
"இப்போதைய பாதை எந்த இடத்தில் முடியும்"
"முன்னர் அதன் பாதை வங்கக் கடலில் சென்று முடியும் வண்ணம் அமைத்திருந்தோம். ஆனால் இப்போதுள்ள பாதைபடி அது சீனாவின் ஷாங்காய் நகரில் விழும் வண்ணம் அமைந்துள்ளது. எப்படி பாதை மாறியது என்று புரியவே இல்லை"
"நீ சென்ற பின்னர் ஆபீசில் யாராவது இருந்தார்களா?"
"விஷால் மட்டும் இருந்தார்"
இருவரும் நேராக விஷாலிடம் சென்று விசாரிக்க, விஷால் ஏவுகணையின் பாதையை சிமுலேஷனில் காட்ட எல்லாம் சரியாக இருந்தது.
"என்ன ஆர்யா ரொம்ப டயர்டா இருக்கியா. வேண்டும் என்றால் நீ வீட்டிற்குச் செல். இது போல கடைசி நிமிடத்தில் எல்லோருக்கும் டென்ஷென் ஏற்ற வேண்டாம்"
"இல்லை நான் பார்த்த போது பாதை மாறி இருந்தது"
"உளறாமல் போய் உன் வேலையைப் பார்"
ஆர்யா குழப்பத்துடன் தனது க்யூபிற்குச் சென்று பாதையை சிமுலஷேனில் மீண்டும்  பார்த்தான். சந்தேகமே இல்லை மாறி இருந்தது. மேலும் சோதித்துப் பார்த்த போது அதன் மேற்பகுதியில் அணு ஆயுதம் இருப்பது அறிந்து திடுக்கிட்டான். பொதுவாக பரிசோதனையின் போது ஏவுகணையின் மேற்பகுதியில் அணு ஆயுதம் இருக்காது. உண்மையான போருக்குப் பயன்படுத்தும் போது தான் அதன் மீது அணு ஆயுதம் பொருத்தப்படும்.
ஆர்யா மெதுவாக விஷால் இருக்கும் இடத்தை நோக்கித் திரும்பிப் பார்த்தான். விஷால் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சற்று பயம் வந்தது.
வேகமாக எழுந்து வெளியே வந்தான். ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தியவுடன் அவன் படபடப்பு சற்றுக் குறைந்தது. லிப்டில் ஏறி பத்தாவது மாடிக்குச் சென்றான். யாருமில்லாத ஒரு அறைக்குச் சென்று கதவைப் பூட்டினான். பொறுமையாக அங்கே அமர்ந்து சிமுலேஷனைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏவுகணை மேலே  செல்வதற்கு  ஐந்து நிமிடங்கள் முன்னர் வேக வேகமாக செயலில் இறங்கினான். சில பைல்களில் மாற்றங்கள் செய்தான்.
ஏவுகணை கவுன்ட்டவுன் ஆரம்பித்தவுடன் கமாண்ட் சென்டர் சென்றான்.
"3, 2, 1" என்று எண்ணிக்கை முடிந்து ஏவுகணை மேலே செல்ல ஆரம்பித்தது. அதன் பாதை ஒரு பெரிய டிவி திரையில் காண்பிக்கப்பட்டது. 2 மணி நேரம் கழித்து வங்கக் கடலில் விழுந்தது. ஆனால் விழுந்தவுடன் கடலில் அணு ஆயுதம் வெடித்து ஒரு பிரளயம் ஏற்பட்டது.
கடைசி நிமிடத்தில் ஆர்யாவினால் பாதையை மட்டும் தான் சரி செய்ய முடிந்தது. ஆனால் அணு ஆயுதத்தை எவுகனையிலிருந்து பிரிக்க முடியவில்லை. ஆர்யா செயல்பட்டிருக்கா விட்டால் ஷாங்காய் நகரம் இந்நேரம் பஸ்பமாகி இருக்கும்.
சரத் மற்றும் அணியினர் பெரும் திகைப்பில் இருந்தனர். "எப்படி இவ்வளவு பெரிய தப்பு நிகழ்ந்தது" என்று அனைவரும் தங்களுக்குள் கேட்டுக் கொண்டிருந்தனர்.
ஆர்யா விஷால் எங்கே என்று தேடினான்.  அவன் எங்கும் கண்ணில் தென்படவில்லை. அப்போது சுனிதாவிடமிருந்து ஒரு கால் வந்தது. ""ரியாவை ஸ்கூலிலிருந்து பிக்கப் பண்ண சென்றேன். அவள் காணவில்லை, சற்று முன் அவளை வேறு யாரோ கூட்டிச் சென்று விட்டதாக வாட்ச்மேன் கூறினார். எனக்குப் பயமாக இருக்கிறது. நீங்கள் உடனே வீட்டிற்கு வாருங்கள்"
ஆர்யா "கவலைப்படாதே சுனிதா. நான் ரியாவைத் தேடிப் பார்க்கிறேன்"
ஆர்யாவுக்கு விஷாலின் மீது சந்தேகம் வந்தது. அவன் மூலம் ரியாவுக்கு ஆபத்து வந்திருக்குமோ என்று யோசித்தான்.
ஸ்கூலில் சென்று விசாரித்த போது ரியா ஒரு சிவப்பு நிறக் காரில் சென்று விட்டதாகக் கூறினர். அது விஷாலின் கார் தான் என்று தெளிவானது.
விஷாலைப் பல இடங்களில் தேடிப் பார்த்து மீண்டும் ஆபீசுக்கே வந்தான். விஷாலின் சிவப்பு நிறக் கார் அங்கு பார்க் செய்யப் பட்டிருந்தது.
நேராக கமாண்ட் சென்டர் சென்று தேடியபோது அங்கு காணவில்லை. ஒவ்வொரு இடமாக சென்றவனுக்கு, ஏதோ ஒன்று தோன்ற மாற்றுப் பிரபஞ்சம் செல்லும் இயந்திரம் இருக்கும் லேபுக்குள் நுழைந்தான்.
அங்கே விஷால் கம்ப்யூட்டரில் வேலை செய்துக் கொண்டிருந்தான். அவனருகில் ரியா மயக்கத்தில் படுத்திருந்தாள்.
"விஷால் என்ன செய்கிறாய்" என்று வேகமாக அவனருகே ஓடினான். விஷால் ஆர்யாவை எட்டி உதைக்க அவன் சுவரோரம் விழுந்தான்.
விஷால் வேகமாக ரியாவைத் தூக்கிக் கொண்டு இயந்திரத்தின் உள்ளே சென்று நின்றான். விஷாலின் உடல் நிறம் நீல நிறத்திற்கு மாறியது. ஆர்யா கண் மூடித் திறக்கும் முன் விஷாலும் ரியாவும் மறைந்தனர். 
விஷாலைப் பின் தொடர்ந்து ஆர்யாவும் எந்திரத்தினுள்ளே நிற்க, கதிர்கள் அவன் மீது பாய்ந்து மறைந்தான். அடுத்த கணம் ஆர்யா மாற்றுப் பிரபஞ்சத்தில் இருந்தான்.
அவன் முன் விஷ் நின்று கொண்டிருந்தார். அருகே விஷால் ரியாவுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
விஷால் நீல நிறத்தில் அச்சாக விஷ்ஷின் இன்னொரு பிரதி போல இருந்தான். ஆர்யாவுக்குக் குழப்பமாக இருந்தது.
விஷாலின் கழுத்தைப் பிடித்து "யார் நீ? உண்மையைச் சொல்"
விஷ் "அமைதி. நீ வன்முறையைப் பிரயோகிப்பதனால் எந்தப் பயனும் இல்லை"
ஆர்யா விஷாலின் கழுத்தை விடுவித்தான்.
"விஷால் என்னுடைய Clone ஆவான். அவன் வெறும் என்னுடைய கட்டளைகளை தான் நிறைவேற்றினான். உன்னுடைய சந்தேகங்களை என்னிடம் கேள். விளக்கம் தருகிறேன்"
"எனக்கு எதுவும் புரியவில்லை. விஷால் எதற்கு பூமிக்கு வர வேண்டும். என் மகளை இங்கு கடத்தி வந்தது ஏன்"
"நீ சென்ற முறை எங்கள் உலகம் வந்த போது உனக்கு சில விஷயங்கள் புரிந்திருக்கும். உதாரணத்திற்கு உங்கள் உலகைப் படைத்தவர்கள் நாங்கள் தான் என்பது உனக்குத் தெளிவாகியிருக்கும். ஆனால் பூமியைச் சேர்ந்தவர்கள் எங்கள் உலகிற்கு வரக் கூடிய சாத்தியக்கூறு சிறிதும் இல்லை என்று இது வரை நினைத்திருந்தோம். ஏன் என்றால் அதை சாதிப்பதற்குத் தேவையான அறிவியல் திறன் சாதாரணமானதல்ல. ஆனால் நீ அதை சாதித்தாய். அதனால் நாங்கள் உங்கள் உலகை அழிக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதற்காகத் தான் விஷால் உங்கள் பூமிக்கு வந்தான்."
"ஏவுகணையின் பாதையை மாற்றியது விஷாலின் வேலை தானா?"
"ஆம் ஏவுகணை சீனாவின் ஷாங்காய் நகரை அடிக்கும் வண்ணம் மாற்றியது விஷால் தான். ஷாங்காய் நகரம் அழிந்தால் சீனா இந்தியாவின் நகரங்கள் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும். பின்னர் அது மூன்றாம் உலகப் போராக மாறும் என்று திட்டுமிட்டு விஷால் இதனைச் செய்தான். பூமி அழிவதற்கு இதை விட ஒரு நல்ல திட்டம் இருக்காது. ஆனால் நீ மறுபடியும் எங்கள் திட்டத்தை முறியடித்தாய்"
"ரியாவை விஷால் கடத்தி வந்தது ஏன்"
"எங்கள் திட்டங்களுக்கெல்லாம் பேராபத்து நீ ஒருவன் தான். உன்னை இங்கு கொண்டு வந்து எங்கள் கண்காணிப்பில் கைதியாக வைத்திருக்கத் தான் ரியாவை விஷால் கடத்தி வந்தான்."
"பூமியைச் சேர்ந்தவர்கள் உங்கள் உலகத்திற்கு வருவதனால் உங்களுக்கு என்ன நஷ்டம்"
"நாங்கள் உங்களைப் படைத்தவர்கள் ஆர்யா. எப்போதும் நாங்கள் உங்களை விட பலமிக்கவர்களாக இருக்க வேண்டும். எங்கள் மீது பூமியைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பயமிருக்க வேண்டும். படைத்தவர்களைக் கடவுளாக நீங்கள் வழிபட வேண்டும். மனிதர்கள் எங்கள் உலகிற்கு வர ஆரம்பித்தால் எங்கள் மீதுள்ள பயம் போய் விடும். நீங்களும் உங்களை எங்களுக்குச் சமமாக நினைக்க ஆரம்பித்து விடுவீர்கள். நம் இரு உலகத்திற்கும் போர் வரக் கூடிய ஆபத்து நிகழலாம். அது தான் காரணம்"
"பூலோக மக்களின் கடவுள் நம்பிக்கை பற்றித் தவறான அபிப்பிராயம் உங்களுக்கு இருக்கிறது. எங்கள் மக்களின் கடவுள் நம்பிக்கை வெறும் நீங்கள் எங்களைப் படைத்தவர்கள் என்பதனால் அல்ல. நீங்கள் சர்வ வல்லமை படைத்தவர்கள் என்ற பயத்தினாலும் அல்ல. மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை தியாகத்தை சொல்லிக் கொடுத்தது. “உன்னை ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டு” என்ற பொறுமையைச் சொல்லிக் கொடுத்தது. “கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே” என்ற பேருண்மையைச் சொல்லிக் கொடுத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான அன்பை எங்கள் உலகிற்குக் காட்டியது. வெறும் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த எங்களைச் செம்மைப் படுத்தியது இந்த கடவுள் நம்பிக்கை தான்"
அப்போது ரியா ஒரு அழகிய மலர் மாலையை எடுத்து விஷ்ஷின் கழுத்தில் அணிவித்தாள்.
"உங்களைப் பார்த்தால் எங்கள் பாட்டி கும்பிடும் விஷ்ணு பெருமாள் போலவே இருக்கிறது. என் பாட்டி தினமும் விஷ்ணு போட்டோவுக்கு மாலை போடுவது வழக்கம். இன்று நான் உங்களுக்கு நேராகவே மாலை அணிவித்து விட்டேன்" என்று கூறி ரியா மண்டியிட்டு கை கூப்பி வணங்கினாள்.
"பூலோக மக்கள் இந்த உலகிற்கு வருவதனால் உங்களுக்கு எந்த விதமான ஆபத்தும் நிகழாது. நாங்கள் நினைப்பது போல எங்களைப் படைத்தவர்களாகிய நீங்கள் அன்பின் திருவுருவமாக இருந்தால், இப்போது ரியா உங்களை வணங்குவது போல இங்கு வந்தும் உங்களை நாங்கள் வழிபடுவோம். ஆனால் நீங்கள் எங்கள் மீது பலப்பிரயோகம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் கடவுளாகவே இருந்தாலும் ஒவ்வொரும் மனிதனும் பொங்கி எழுந்து உங்களை எதிர்ப்பான். அதில் சந்தேகமே வேண்டாம். "
விஷ் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது. மெல்ல ரியாவினைத் தன் இரு கைகளால் தூக்கி தோளில் வைத்து அணைத்தார். அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தார்.
"ஆர்யா பூலோக மக்களுக்கு எங்கள் உலகைச் சேர்ந்த கிருஷ் கீதோபதேசம் செய்தான். ஆனால் எங்களுக்கு நீ ஒரு புதிய கீதையை அளித்துள்ளாய். அன்பின் பெருமையை எங்களுக்கு விளக்கினாய். நீ உன் மகளை அழைத்துக் கொண்டு பூலோகம் செல்லலாம். எதிர்காலத்தில் நம் இரு உலகங்களுக்கும் ஒரு பாலமாகவும் ,ஆழமான நட்புறவிற்குக் காரணமாகவும் இருக்க நீ உதவ வேண்டும்"
ரியா ஆர்யாவை நோக்கி ஓடி வந்து அனைத்துக் கொண்டாள். இருவரும் விஷ் நோக்கி வணங்கினர். பதிலுக்கு விஷ் அவர்களை நோக்கி வணங்கினார். பிறகு விஷ் கையினால் சமிக்ஞை செய்ய ஆர்யாவும் ரியாவும் அங்கிருந்து மறைந்தனர்.
அடுத்த நொடி இருவரும் பூமியில் தங்கள் வீட்டின் வாசலில் நின்றனர். ரியா "அம்மா! அம்மா" என்று சத்தம் போட்டுக் கதவைத் தட்டினாள்.
சுனிதா கதவைத் திறந்தாள். அவள் முகம் வாடி இருந்தது. வெகு நேரம் அவள் அழுதது முகத்தில் தெரிந்தது. ரியாவைப் பார்த்ததும் அவளை இறுக அணைத்தாள். "எங்கேடா செல்லம் எங்களை விட்டுட்டு போயிருந்தே?" என்று கூறி முத்தமிட்டாள்.
"அம்மா நானும் டாடியும் சொர்கத்துக்கு போயிட்டு வந்தோம்"
"அப்படி எல்லாம் சொல்லக் கூடாது. என்னங்க ரியாவுக்கு ஒன்னுமில்லையே" என்று ஆர்யாவை நோக்கிக் கேட்டாள்.
"அவளுக்கு எதுவும் இல்லை. நல்லாதான் இருக்கிறாள். கொஞ்சம் நேரம் விஷாலின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். நான் போய் அழைத்து வர அவர் வீட்டிற்குச் சென்றேன். அவருடன் பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை"
"ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கலாம் இல்லை. இந்த விஷால் சாமி, சொர்க்கம் அப்படின்னு எது எதுவோ பேசி குழந்தையோட மனசைக் குழப்பி விடுகிறார். கொஞ்சம் சொல்லி வைங்க அவர்கிட்டே"
ஆர்யாவும் ரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்ல சிரித்தனர்.
"அப்பாவும் மகளும் ஏதோ திருட்டுத்தனம் பண்றீங்கன்னு மட்டும் தெரியுது. சரி சாப்பிட்டுத் தூங்கப் போகலாம் வாங்க"
டின்னர் முடித்து மூவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர். நடு இரவில் ரியாவுக்கு முழிப்பு வந்தது. அவள் மெல்ல ஆர்யாவை எழுப்பினாள்.
"என்ன ரியா? தூங்காம என்ன பண்றே"
"அப்பா நாம ஒரு இடத்துக்குப் போனோம் இல்லை. அங்கே விஷ் அப்படின்னு ஒருத்தரைப் பார்த்தோம். அவர் நல்லவரா இல்லை கெட்டவரா."
                             --------------------
ஷிவ் - அந்த மனிதனை நீங்கள் அவ்வளவு சுலபமாக செல்ல விட்டிருக்கக்கூடாது. இதனால் மனிதர்கள் மாபெரும் சக்தியாக உருவாகி நம்மை அழிக்க முயல்வார்கள்.

ஜெஸ் - பொறுமை. சினம் வேண்டாம். நடந்ததெல்லாம்  ஒரு சிறு பரிசோதனை என்பது இன்னமுமா உங்களுக்கு விளங்கவில்லை.

ஷிவ் - பரிசோதனையா?

விஷ் - நாம் படைத்த பிரபஞ்சங்கள் அதனுடன் இணைந்த  விதிப்படி தானே இயங்குகிறது? அதனை நாம் கூட மாற்ற முடியாது என்பது தானே நியதி? அந்த இயற்கை விதிகளை நம்மால்  மாற்ற முடியுமா என்பது  இந்த பரிசோதனை முயற்சி.

ஷிவ் - பரிசோதனையின் முடிவு தான் என்ன?

விஷ் - நாம் செய்ய நினைக்கும் மாற்றங்கள், குளத்தில் விட்டெரியும் கல் போல தான். சிறு சலனங்களை ஏற்படுத்தி  பிறகு தன் இயல்பு நிலைக்கே வந்து விடுகிறது.

ஷிவ் - விதியை மாற்ற முடியாதென்றால் இனி நமக்கென்ன வேலை?

விஷ் - ஆம். இனி எனக்கென்ன வேலை. ரிவேரா கடலில்  ஒரு அழகான தீவு இருக்கிறது. அங்கு சென்று ஓய்வெடுக்கப் போகிறேன்.

ஷிவ் - மெதுசா சிகரத்தில்  தியானம் செய்ய நான் செல்கிறேன்.

ஜெஸ் - நான் ஒரு நாடோடி பிரபஞ்சம் பிரபஞ்சமாக எந்த நோக்குமின்றி ஒரு யாத்திரை செல்லப் போகிறேன்.

மூவரும் களைந்து தத்தம் வழியில் சென்றனர்.


                                              -------முற்றும்------  
REFERENCE MATERIAL FOR THE STORY
1.   The Hidden Reality – Parallel Universes and the Deep Laws of the Cosmos. By Brian Greene.
2.   Mahabharatha – Vyasa


No comments:

Post a Comment