Friday, September 11, 2015

கணினிப்போர் - அறிவியல் கதை

கணினிப்போர்
Chapter 1
“I am Vijay”.
ஆம் அது தான் என் பெயர். விஜய் என்றதும் நடிகர் விஜய் போல ஸ்மார்ட்டாக ஸ்டைலாக இருப்பேன் என்று நினைத்து விடாதீர்கள். நான் மிக சராசரியான ஆள். எனக்கு வயது 28 ஆகிறது. ஆனால் இப்போதே தலையில் நரை முடி. முகத்தில் 10 நாளாக சவரம் செய்யப்படாத தாடி. சிறு வயதிலிருந்தே நான் போட்டிருக்கும் சோடாபுட்டிக் கண்ணாடி. கண்டிப்பாக எந்தப் பெண்ணுக்கும் என்னைப் பிடிக்காது. ஏன் கண்ணாடி முன் நின்று பார்த்தால் எனக்கே என்னைப் பிடிக்காது.
சரி அது இருக்கட்டும். என் கதைக்கு வருவோம்.ஒரு வாரமாக இந்த அறையிலேயே அடைபட்டுக் கிடக்கிறேன். எல்லாம் இந்தப் பாழாய்போன ஆராய்ச்சியினால் தான். முடிவது போலத் தெரிகிறது ஆனால் எங்கோ பிரச்சினை வந்து இழுத்தடிக்கிறது.
அப்படி என்ன பெரிய ஆராய்ச்சி என்ற உங்கள் கேள்வி கேட்கிறது. வள வள என்று கதைக்காமல் விஷயத்திற்கு வருகிறேன்.
நான் ஒரு கணினி விஞ்ஞானி. பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி. நிறுவனத்தில் வேலை செய்கிறேன். உலத்தையே புரட்டிப் போடும் ஒரு புரட்சிகரமான கம்ப்யூட்டரை வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன். விபரங்கள் பின்னால் சொல்கிறேன்.
இது மே மாதம். எல்லோரும் விடுமுறையில் எங்கோ வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்க நான் இங்கே மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன். பத்து நாட்களாக என் அபார்ட்மெண்ட் செல்லவில்லை. சாப்பாட்டுக்கு? இருக்கவே இருக்கிறது வெண்டிங் மெஷின் கோக்கும், சிப்ஸ் பாக்கெட்டும்.
ஒரு சின்ன சர்க்யூட் தகராறு செய்கிறது. இதை சரி செய்து விட்டால் வேலை முடிந்தது. பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் போல புதிய சரித்திரம் படைத்தவன் ஆவேன்.
எவ்வளவு நேரம் கடந்தது என்று தெரியவில்லை. பசி கண்ணை மறைக்கிறது. மயக்கம் வருவது போல இருக்கிறது. திடீரென்று சர்க்யூட் சரியாக வேலை செய்வது மயக்கத்தில் தெரிகிறது. என் சுய நினைவை நான் முற்றிலும் இழந்து விட்டேன்.
நான் கண் விழித்துப் பார்த்தபோது ஒரு ஹாஸ்பிடலில் இருப்பதை உணர்ந்தேன். படுக்கையிலிருந்து எழுந்திரிக்க முயன்ற போது ஒரு அழகான பெண் குரல் ஒலித்தது.
"சலைன்  ஏத்திகிட்டிருக்காங்க. கொஞ்சம் அசையாமல் இருங்க"
எனக்குத் தெரிந்த பெண் முகமாக இருந்தது. இவள் எங்கள் டிபார்ட்மெண்டில் லெக்சரராக வேலை செய்யும் ரீனா தான்.
“சரியான தூக்கம், சாப்பாடு இல்லை ஓவர் ஸ்ட்ரெஸ் ஆனதால இப்படின்னு டாக்டர் சொன்னார். உங்கள் அறையில் மயக்கமாக இருந்தீர்கள். செக்யூரிட்டி பார்த்துவிட்டு முதலில் HOD  பிறகு மற்ற புரபசர்களை உதவிக்குத் தொடர்பு கொள்ள முயன்றார். லீவ் என்பதால் யாரும் ஊரில் இல்லை. நல்ல வேலை நான் போனை எடுத்ததால் ஹாச்பிடலில் சேர்க்க முடிந்தது. அப்படி என்ன பிரச்சினை உங்களுக்கு"
"பிரச்சினை ஒன்றும் இல்லை. வேளையிலே கொஞ்சம் மூழ்கிட்டேன். இதுக்கு முன்னாடி உங்களிடம் பேசியதில்லை. இருந்தாலும் உதவியதற்கு நன்றி"
"நிறைய தடவை நீங்க நடந்து போகும்போது பார்த்திருக்கேன். ஹலோ சொல்ல முயன்றிருக்கேன். ஆனால் உங்கள் பார்வை என் மீது இருந்தாலும் நினைவு ஏதோ கற்பனையிலிருக்கும். பதில் எதுவும் சொல்லாமல் கடந்து விடுவீர்கள்"
"அப்படியா. சாரி. நான் கொஞ்சம் எக்சென்ட்ரிக் ஆசாமி"
"அதனால் தான் காலேஜ் பெண்கள் மத்தியில் நீங்கள் மிகவும் பாப்புலர். உங்களுக்கு ஒரு ரசிகை கூட்டமே இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்."
"சும்மா ஜோக் அடிக்காதீர்கள்"
"ஜோக் இல்லை. எப்பவுமே சவரம் செய்யாத முகத்துடன், கண்ணில் ஒரு கனவு மிதந்து கொண்டிருக்க, தன்னைக் கடந்து செல்லும் அழகிய பெண்கள் புன்னகைப்பதையும் உணராத  ஒருவனைப் பெண்கள் விரும்புவது, பெண்கள் மட்டுமே அறிந்த ரகசியம் விஜய்"
அவள் சொன்னதை விட சொல்லும்போது என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே நெஞ்சை என்னவோ செய்வது போல இருந்தது. அந்தப் பார்வையைத் தாங்க முடியாமல் கண்களைத் தாழ்த்திக் கொண்டேன்.

"ரெஸ்ட் எடுங்கள். பிறகு சந்திக்கலாம்."
சென்று விட்டாள். ஆனால் அவள் என்னுடன் இருந்த நிமிடங்களை  என் மனம் திரும்பத் திரும்ப அசை போட்டுக் கொண்டே இருந்தது.
உடலில் நல்ல வலு வந்து விட்டதாக டாக்டர் சொன்னதால் மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தேன். மிகவும் போர் அடித்தது. அப்போது தான் நான் வடிவமைத்த கணினி ஞாபகத்திற்கு வந்தது. உடனே ஒரு ஆட்டோ பிடித்து ஐ.ஐஎஸ்.சி வந்தேன். என் அறை திறந்தே இருந்தது. என் கம்ப்யூட்டர் பத்திரமாக இருந்தது. அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன். சிறிது நேரத்தில் ஒரு போன் கால் வந்தது. ரீனா தான் எதிர்முனையில் இருந்தாள்.
"இன்றே டிஸ்சார்ஜ் செய்து விட்டார்களா? உணவுக்கு என்ன செய்வீர்கள். நாளை உங்கள் வீட்டுக்கு வந்து ஏதாவது ப்ரிப்பேர் செய்து தருகிறேன். ஈவினிங் ஏதாவது மூவி சென்று டைம் ஸ்பென்ட் செய்யலாம்."
இந்த ரீனா என் மீது வைத்திருந்த அக்கறை வியப்பாக இருந்தது. வெறும் பரிவா அல்லதா அதற்கும் மீறிய ஒன்றா? ஹாஸ்பிடலில் சொன்ன வார்த்தைகள், பார்த்த பார்வை இதெற்கெல்லாம் என்ன அர்த்தம். அவள் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு வருவதை உணர்ந்தேன்.
டிவி.பார்த்துக் கொண்டே உறக்கத்தில் ஆழ்ந்தேன். காலை எழுந்ததும் குளித்துவிட்டு ரீனாவின் வருகைக்காக தயார் ஆனேன்.
சரியாக மாலை 5 மணிக்கு ரீனா வந்தாள்.
"என்ன ரூம் இவ்வளவு மோசமா இருக்கு"  சொல்லிக்கொண்டே அறையை  ஒழுங்குபடுத்த ஆரம்பித்தாள்.
படுக்கை அறையிலிருந்த கம்ப்யூட்டரைப்  பார்த்துவிட்டு "இதை இன்ஸ்டிட்யூட்டில் உங்கள் அறையில் பார்த்தேன். இதில் தான் ரிசர்ச் செய்து வருகிறீர்களா?"
"ஆம். என் நான்கு வருட உழைப்பு இது. இந்த உலகத்தையே தலை கீழாக மாற்றக்கூடிய இயந்திரம் இது."
கேள்வியுடன் நோக்கிய ரீனாவுக்கு விளக்க ஆரம்பித்தேன்.

"நீங்க சூப்பர் கம்ப்யூட்டர் பற்றி கேள்வி பட்டிருப்பீங்க. நாம சாதாரணமா  பயன்படுத்தும் கம்ப்யூட்டரை விடப் பல மடங்கு வேகமாக இயங்கும். ஆனால் அளவில் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் இந்த கட்டடத்தை விடப் பெரிது. அப்படிப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர்களை எல்லாம் விடப் பல மடங்கு சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர் தான் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது.  ஆனால் ஒரு லாப்டாப் அளவுக்கு கைக்கு அடக்கமா இருக்கு பார்த்தீங்களா.. இதை சாதாரண மக்களும் பயன்படுத்த முடியும். குவாண்டம் கம்ப்யூடிங் என்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இதை வடிவமைச்சிருக்கேன்."
"அது என்ன குவாண்டம் கம்ப்யூட்டிங்"
"கணினியில் தகவல் பிட்(BIT)  எனப்படும் சிப்களில் சேமிக்கப்படுகிறது. ஒவ்வொரு பிட்டும் 0 அல்லது 1 என்ற இரண்டு நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் தான் இருக்கிறது. அதன்படி ஒரு பிட்டில் 0 அல்லது 1 என்ற ஏதாவது ஒரு நம்பரை மட்டுமே சேமிக்கலாம். இரண்டு பிட்களில் 0 விலிருந்து மூன்று வரை ஏதாவது ஒரு நம்பரை மட்டும் சேமிக்க முடியும். மூன்று பிட்களில் 0 விலிருந்து 7 வரை உள்ள ஏதாவது ஒரு எண்ணைத்தான் சேமிக்க முடியும். ஆனால் குவாண்டம்  கம்ப்யூட்டரில் பிட்களுக்குப் பதிலாக க்யூ.பிட்(Q.Bit)  பயன்படுத்தப்படுகிறது. பிட்களை விடவும் கி.யூ பிட்கள் மிகவும் நுண்மையானது. இந்த கி.யூ பிட்கள் அணுத்துகளை விட சிறியது. அதனால் குவாண்டம் அறிவியல் விதிகளின் படி கி.யூ பிட்கள் 0, 1 என்று ஒரே நேரத்தில் இரண்டு நிலைகளிலும் இருக்கிறது. அதனால் ஒரு கி.யூ பிட்டில் 0,1 என்ற இரண்டு எண்களையும் சேமிக்க முடிகிறது. இரண்டு பிட்களில் 0 முதல் மூன்று என்கிற நான்கு எண்களையும் மூன்று பிட்களில் 0 முதல் 7 என்கிற எட்டு எண்களையும் ஒரே சமயத்தில் சேமிக்க முடிகிறது"
ரீனா நான் சொன்னதை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.
"நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த குவாண்டம்  கம்ப்யூட்டர் 100 GIGA Q Bit சேமிப்புத் திறனுள்ளது. இந்த உலகில் உள்ள அனைத்து சாதாரண கம்ப்யூட்டர்களின் சேமிப்பு சக்தி இந்தக் குவாண்டம் கம்ப்யூட்டரிலிருக்கும்.”
ரீனாவின் முகபாவனை நான் சொல்வதை நம்பாதது போல இருந்தது.   
"நம்ப முடியலையா. உங்களுக்கு சூப்பர் கம்ப்யூட்டர் எந்த ஒரு மிகப் பெரிய எண்ணைப் ப்ரைம் நம்பரா இல்லையானு கண்டு பிடிச்சுருக்கு தெரியுமா. "
"தெரியும்."
"அந்த எண்ணை இதுல என்டர் பண்ணுங்க "
ரீனா அந்த எண்ணை அடித்தாள்.
ஒரு கணத்தில் அது ப்ரைம் நம்பர் என்று கம்ப்யூட்டர் சொல்லியது.
வியப்புடன் பார்த்த ரீனா "சூப்பர் கம்ப்யூட்டர் இந்த பதிலைக் கண்டு பிடிக்க எடுத்து கொண் டது 8 மணி நேரம். இந்தக் கம்ப்யூட்டர் அரை நொடி கூட எடுக்கலையே" என்று ஆச்சரியத்துடன் கூறியவாறு மேலும் அதை விடப் பல மடங்கு பெரிய நம்பர்களை வைத்து கம்ப்யூட்டரைப் பரிசோதனை செய்தாள். எல்லாவற்றிற்கும் மின்னல் வேகத்தில் கம்ப்யூட்டர் பதிலைக் கக்கியது.
“Amazing. இதை Google, Apple, Microsoft போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்து தயாரிக்க கூட்டு முயற்சி செய்யலாமே. இதனால் மக்களுக்கு எவ்வளவு நன்மை"
"ஆம். ஆனால் அதற்கு முன் இந்தக் கம்ப்யூட்டரை எந்தத் துஷ்பிரயோகமும் செய்யாமல் இருக்க சில சாப்ட்வேர் எழுத வேண்டும் அது முடித்த பின்னர் பெரிய நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று இருக்கிறேன்."   
“இதைத் துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்பு இருக்கா"
"இருக்கு. நாட்டுப் பாதுகாப்பு, வங்கி மற்றும் பங்குச் சந்தைகளில் பயன்படும் சிஸ்டம்களை யாரும் ஊடுருவாமல் இருக்க மிக நூதனமான encryption  முறை பயன்படுத்துவார்கள். அப்படிப்பட்ட சிஸ்டம்களை யாரும் கனவில் கூட ஊடுருவ முடியாது. அவற்றைக் கூட இந்தக் கம்ப்யூட்டர் மூலம் அரை நொடியில் ஊடுருவ முடியும். என்னடைய அடுத்த ஆராய்ச்சி குவாண்டம் கம்ப்யூட்டரினால் கூட ஊடுருவ முடியாத ஒரு encryption முறையை வடிவமைப்பது தான். அதற்குப் பிறகு தான் இதைப் பொது மக்கள் பயன்படுத்த பெரிய நிறுவனங்களிடம் தொடர்பு கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளேன்"
அதற்கு முன்னாடி இந்த நல்ல விஷயத்தை நாம கொண்டாடனும். பி.வி.ஆர். சினிமாவில் Interstellar  படம் போட்டிருக்கிறார்கள். படம் பார்த்து அப்படியே டின்னர் சாப்பிட்டு விட்டு வரலாம்.”
ரீனாவின் ஸ்கூட்டியில் இருவரும் சென்றோம். பின்னால் உட்காருவதற்குத் தயங்கிய என்னை ரீனா வற்புறித்தி உட்கார வைத்தாள். வண்டியை மிகவும் லாகவமாக ஓட்டினாள்.  ஓடும் காற்றில் அசைந்த அவள் கேசம் என் முகத்தில் உரசும் போது சொர்கத்திற்கே சென்றது போல இருந்தது.
படம் பார்த்து விட்டு அருகில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டு வெளியே வந்தோம். திடீரென்று ஸ்கூட்டி மக்கர் செய்தது.
"ஒரு ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போகலாம். நாளை காலை ஸ்கூட்டியை ஒரு மெக்கானிக் ரிபேர் ஷாப்புக்கு நான் எடுத்துப் போகிறேன்."
"மணி 11 ஆகி விட்டது. இந்நேரம் தனியாக ஆட்டோவில் வீட்டுக்குப் போக பயமாக இருக்கிறது"
"பரவாயில்லை. உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால் என் வீட்டிலேயே நீ தங்கலாம்."
ரீனா தயக்கத்துடன் ஒத்துக் கொண்டாள்.
வீடு வந்ததும் நாங்கள் பார்த்த Interstellar  படம் பற்றி வெகு நேரம் விவாதித்தோம். பிறகு என் படுக்கை அறையில் ரீனாவை உறங்கச் சொல்லி விட்டு நான் ஹாலில் படுத்துக் கொண்டேன்.
வராத தூக்கத்துடன் வெகு நேரம் போராடிக் கொண்டிருந்தேன். உள்ளே ரீனா தூங்கியிருப்பாளோ என்ற சிந்தனை வந்தது. அந்த எண்ணங்களை உடனே Off  செய்து விட்டு கஷ்டப்பட்டு தூங்கினேன்.
காலையில் எழுந்ததும் ரீனா செய்த தோசை சட்னி  சாப்பிட்டு இரவு  ஸ்கூட்டியை நிறுத்தியிருந்த இடத்திற்குச் சென்றேன். வண்டியை மெக்கானிக்கிடம் எடுத்துச் சென்று சரி செய்ய மாலை 4 மணி ஆகி விட்டது. என்னவோ தோன்ற வழியில் ரீனாவுக்கு கொடுக்க ஒரு பூங்கொத்தை வாங்கினேன்.
வீட்டிற்கு வந்ததும் கதவு திறந்திருப்பதைப் பார்த்து அதிர்ந்தேன். ரீனா எங்கே போயிருப்பாள்? எல்லா இடமும் தேடினேன். ரீனா காணவில்லை.
எதேச்சையாக டிவியை ஆன் செய்த போது பரபரப்பாக செய்தி ஓடிக் கொண்டிருந்தது.
"இன்று இந்தியாவின் பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சியை அடைந்தது. ஒரே நாளில் 50 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டதால் உடனே பங்கு விற்பனை நிறுத்தப்பட்டது. இதற்கு பங்குச்சந்தையின் கம்ப்யூட்டர் சிஸ்டம்களில் ஏற்பட்ட தவறுகளே காரணம் என்று கூறப்படுகிறது. இது எதனால் நடந்தது என்று அரசாங்கம் தீவிரமாக விசாரித்து வருகிறது."
அதிர்ச்சியில் நான் அப்படியே உறைந்து நின்றேன்.
                              Chapter 2
முதலில் குவாண்டம் கம்ப்யூட்டர் என் அறையில் பத்திரமாக இருப்பதை உறுதி செய்துக் கொண்டேன். சோதித்துப் பார்த்தபோது காலை 10 மணி அளவில் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. நான் ஸ்கூட்டியை ரிப்பேர் செய்ய வெளியே சென்ற நேரம். வேறு யார் இதை செய்திருக்க முடியும். அந்நேரம் வீட்டில் இருந்தது ரீனா மட்டுமே. ஸ்டாக் மார்கெட் வீழ்ச்சி அரங்கேறிய நேரமும் அதே பத்து மணி தான். இந்தக் குவாண்டம் கம்ப்யூட்டர் மூலம் பங்குச்சந்தை சிஸ்டம்களை  ஊடுருவி அதை நிகழ்த்தக்  கூடிய சாத்தியக்கூறு இருக்கிறது.
ரீனாவைப் பல முறை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்று தோற்றேன்.
என் உள் மனது ஆபத்து என்னைத் தேடி வருவதை உணர்த்தியது.
ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். அபார்ட்மெண்ட் கட்டிடம் முன் போலீசார் நின்று கொண்டு ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தனர். இருதயம் அச்சத்தில் வேகமாகத் துடிப்பதை உணர்ந்தேன்.உடனே என் கம்ப்யூட்டரை எடுத்துக் கொண்டு வீட்டைப் பூட்டி வெளியேறினேன். லிப்ட் வழியாக போலீஸ் கண்ணில் படாமல் வேறு வழியாக ரோட்டுக்கு வந்தேன்.
ஒரு கடையில் டீ சாப்பிட அமர்ந்த போது தான் டிவியில் என் உருவம் காண்பிப்பதைப் பார்த்தேன். பங்குச்சந்தை வீழ்ச்சி தொடர்பாகப் போலீஸ் என்னைத் தேடுவதையும் செய்தியில் வாசித்தார்கள். மற்றவர்கள் கவனம் என் மீது திரும்புவதற்கு முன் இடத்தைக் காலி செய்தேன்.
இப்போது என்ன செய்வது. முதலில் பெங்களூரை விட்டுக் கிளம்ப வேண்டும். பஸ்,கார், டிரைன், விமானம் எதிலும் செல்வது பாதுகாப்பு கிடையாது. அப்போது ஒரு பெரிய கண்டைனர் டிரக் வண்டியில் பர்னிச்சர்களை ஆட்கள் ஏற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். பொருளை ஏற்றுபவர்கள் வண்டி டெல்லிக்குப் போவதாக பேசுவதையும் கேட்டேன். யாரும் கவனிக்காத போது வண்டியில் ஏறி பர்னிச்சர்களுக்கு மத்தியில் ஒளிந்துக் கொண்டேன். வண்டி மெதுவாக நகர ஆரம்பித்தது.
டெல்லியை அடைய ரெண்டு நாட்கள் நாட்களாவது ஆகும் இரண்டு நாட்கள் இந்த இம்ச வேதனையை அனுபவிக்க வேண்டும். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழி இல்லை.
இரண்டு நாட்கள் கழிந்தது. வண்டி ஒரு பெரிய வீட்டின் முன் நின்றது. ஆட்கள் பொருட்களை இறக்கி வீட்டினுள்ளே வைத்தனர். ஒரு மனிதன் இங்கே வை அங்கே வை என்று கட்டளையிட்டுக் கொண்டிருந்தான். பார்த்தால் வேலைக்காரன் போல தெரிந்தது. நான் ஒரு இரும்புப் பெட்டிக்குள் என்னை ஒளித்துக்  கொண்டேன்.பெட்டியை  வீட்டின் பெட்ரூமில் வைத்தனர். சிறிது நேரத்தில் வேலைக்காரனும் வீட்டை வெளியே பூட்டிச் சென்று விட்டான். வெளியே வந்த எனக்கு  வீட்டை விட்டு வெளியேற வழி ஒன்றும் தென்படவில்லை. வீட்டின் சொந்தக்காரர் வரும் வரை இங்கேயே அடைந்து கிடக்க வேண்டியது தான்.
பசி வயிற்றைக் கிள்ளியது. ப்ரிட்ஜிலிருந்து இரண்டு ஆப்பிள்கள் சாப்பிட்டேன்.
“யார் நீ. இங்கே எப்படி உள்ளே வந்தாய்."
குரல் கேட்டு அதிர்ச்சியில் திரும்பினேன். ஒரு அழகான பெண் நின்று கொண்டிருந்தாள்.
இவளா? இவள் எப்படி இங்கே? இவள் எனக்குத் தெரிந்தவள். என்னுடன் படித்த காவ்யா.
"காவ்யா, நான் வந்து" என்று தடுமாறினேன்.
"விஜய். இங்கே என் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்.”
"காவ்யா நான் ஒரு பெரிய பிரச்சினையில் இருக்கிறேன். உனக்கு எல்லாவற்றையும் பொறுமையாக சொல்கிறேன்."
"அவுட். வீட்டை விட்டு வெளியே போ. இல்லை போலீசுக்கு இப்போதே போன் செய்கிறேன்"
"காவ்யா உனக்கு எந்தத் தீங்கும் செய்ய நான் வரவில்லை. நான் உனக்கு முன் பின் தெரியாதவன் இல்லை.உன்னுடன் படித்திருக்கிறேன்.என்னைப் பற்றி ஓரளவாவது ஒரு நல்ல அபிப்பிராயம் வைத்திருப்பாய். நான் தப்பான வேலை செய்வேனா என்று யோசித்து எந்த முடிவும் எடு"
"நீ அசடு. திருட்டுத்தனம் எல்லாம் செய்ய மாட்டாய். சரி சொல்."
நடந்த அனைத்தையும் காவ்யாவுக்கு விளக்கினேன்.
"நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. அந்தக் கம்ப்யூட்டர் வைத்திருக்கிறாயா?"
அவளிடம் கம்ப்யூட்டரைக் காண்பித்தேன்.
"இது பற்றி பெரிய பில்டப் எல்லாம் கொடுத்தாயே. எனக்கு ப்ரூவ் செய் பார்க்கலாம்"
"ஏற்கனவே ஒரு பெண்ணிடம் நான் சூடு பட்டு விட்டேன்."
காவ்யா செல்போனை எடுத்து ஏதோ நம்பரைத் தட்டினாள்.
"என்ன செய்கிறாய்"
"போலீசுக்கு போன் செய்கிறேன்"
"வெயிட். வெயிட். உனக்கு காண்பிக்கிறேன்"
ரீனாவுக்கு நடத்திய அதே ப்ரைம் நம்பர் டெமோவை காவ்யாவுக்கும் காண்பித்தேன்.
"பரவாயில்லே. காலேஜ்லே புக்கும் கையுமா நீ இருந்தப்போ உன்னை வெறும் போங்கு என்று தான் நினைத்தேன். புத்திசாலித்தனமான வேலை தான் செஞ்சிருக்கே."
"நான் இங்கே கொஞ்சம் நாள் தங்கலாமா காவ்யா"
"அதை விட பெட்டரான சொல்யூஷன் நான் சொல்கிறேன். பங்குச் சந்தை விற்பனைகளைக்  கட்டுப்படுத்தும் செபி நிறுவனத்தில் நான் ஒரு டாப் அஃபிஷியல். பைனான்ஸ் மினிஸ்டரிடம்  எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. நாளை அவரை சந்தித்து முழுதும் விளக்குவோம்."
"என்னை நம்புவார்களா"
"நான் பேசினால் கண்டிப்பாக நம்புவார்."
அடுத்த நாள் மினிஸ்டர் நிதிஷை அவர் வீட்டில் சந்தித்தோம். அவருக்கு 50 வயது இருக்கும். மெடிட்டேஷன் செய்வதால் முகம் நல்ல பொலிவோடு இளமையாக இருந்தது.
நான் சொன்ன அனைத்தையும் கவனமாகக் கேட்டார்.
"காவ்யா, விஜய் சொல்வதை நம்பலாமா?"
"இவனைக் காலேஜிலிருந்து எனக்குத் தெரியும். கண்டிப்பாக நம்பலாம்"
"குவாண்டம் கம்ப்யூட்டர் மூலம் ரீனா பங்குச் சந்தை சிஸ்டம்களை ஊடுருவி பங்குகளின் விலையில் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறாள் என்று விஜய் கூறுகிறான். பங்குச் சந்தை வீழ்ச்சி அடைவதன் மூலம் ரீனாவுக்கு என்ன லாபம்."
"பங்குச் சந்தையில் சில தரகர்கள் Short  Sale  என்கிற முறையில் விற்பனை வாங்குதல் செய்வார்கள்.அதன் மூலம் ஒரு ஸ்டாக் விலை குறைந்தாலும் பெரும் லாபம் ஈட்டுவார்கள்.அன்று எந்தத் தரகர்கள் பங்குகளின் வீழ்ச்சி மூலம் லாபம் அடைந்தார்கள் என்று ஆராய வேண்டும். அவர்களுக்கும் ரீனாவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதையும் கண்டு பிடிக்க வேண்டும்."
"ப்ரில்லியன்ட் காவ்யா. நான் போலீசை ரீனா எங்கிருக்கிறாள் என்று கண்டு பிடிக்க சொல்கிறேன். நீ பங்குச்சந்தை வீழ்ச்சி அன்று யார் ஆதாயம் அடைந்தார்கள் என்கிற விபரத்துடன் நாளை என்னை சந்தி."
அன்று காவ்யா வேலையிலிருந்து வீட்டிற்கு வர வெகு நேரமாகி விட்டது.அடுத்த நாள் காலை மீண்டும் நிதிஷை சந்தித்தோம். காவ்யா விபரங்களை எங்கள் இருவருக்கும் கூற ஆரம்பித்தாள்.
"பங்குச் சந்தை வீழ்ச்சி அன்று பெரும்பான்மையோர் நஷ்டம் தான் அடைந்திருக்கிறார்கள். ஆனால் நரேஷ் யாதவ் என்னும் இளம் தொழிலதிபர் மட்டும் 20,000 கோடி லாபம் சம்பாதித்திருக்கிறான். அவன் மீது ஏன் எனக்கு சந்தேகம் என்றால் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு முதல் நாள் தான் எல்லாப் பங்குகளையும் SHORT SALE முறையில் வாங்கியிருக்கிறான்."
"அப்படி என்றால் அவன் தான் கல்ப்ரிட். அவனை பற்றி வேறு ஏதாவது விபரங்கள்  தெரிந்ததா"
"அவனுக்கு வயது 27 தான் ஆகிறது. இந்தியாவின் இளம் வயதுத் தொழிலதிபர்களில் நம்பர் ஒன் அவன் தான். தற்போது அமெரிக்காவின் குடி மகனாக இருக்கிறான். உலகமெங்கும்  சுற்றிக் கொண்டிருப்பவன். உல்லாசமாக வாழக்கையை நடத்துபவன். இன்னொன்று சொல்ல மறந்து விட்டேன். அவன் டெல்லி ஐ.ஐ.டி யில் தான் பொறியியல் படித்தவன்."
"வாட்? அதே கல்லூரியில் தான் ரீனாவும் படித்தாகக் கூறினாள்".
நான் கூறியதைக் கேட்டு இருவரும் வியந்தனர்.
"முதலில் இது ரீனா நரேஷ் இருவரின் சதி என்பதை நிரூபிக்க வேண்டும். பிறகு அவன் ஏமாற்றிய பணத்தை நாம் மீட்க வேண்டும்"
"பணத்தை எப்படி மீட்க முடியும்."
"பணம் அநேகமாக ஏதாவது ஒரு சுவிஸ் அல்லது மொரிஷியஸ் பேங்கில் உறங்கிக் கொண்டிருக்கும். காவ்யா நான் சொல்லும் பிளானைக் கவனமாக கேள். நீயும் விஜய்யும் உடனே சுவிசர்லாந்து கிளம்ப வேண்டும். அங்கு வங்கிகளில் இந்தியர்கள் கள்ளப்பணம் ஒளித்து வைத்திருப்பது குறித்து நமக்கு ரகசியத் தகவல்கள் தரும் பீட்டர் என்பவனை சந்திக்க வேண்டும். அவன் உதவியுடன் இந்த சதியின் மூலத்திற்கே நீ செல்ல வேண்டும்"
"விஜய் என்னுடன் வந்து என்ன பிரயோஜனம். சிபிஐலிருந்து யாரைவது அனுப்பினால் உபயோகமாக இருக்கும்"
"அங்கு நீ அவர்கள் நாட்டுப் போலீசைத் தான் உதவிக்கு பயன்படுத்த முடியும். நமது போலீஸ் படை ஒன்றை விசாரணைக்கு அனுப்ப பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அதற்கு சற்று கால தாமதம் ஆகலாம். நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பதால் உன்னையும் விஜய்யையும் முதலில் அனுப்பலாம் என்று யோசித்தேன்"
நிதிஷிடம் விடை பெற்று நானும் காவ்யாவும் காரில் வந்து கொண்டிருந்தோம். காவ்யா அமைதியாக இருந்தாள்..
"ஏன் மினிஸ்டரிடம் அப்படி சொன்னாய். நான் உன்னுடன் சுவிசர்லாந்து வருவது தொந்தரவாக நினைக்கிறாயா?"
"ஓரிரண்டு நாட்களில் உன் பிரச்சினைக்கு ஒரு முடிவு கண்டு என்னை விட்டு சென்று விடுவாய் என்று நினைத்தேன். இப்படி கூடவே கட்டிக் கொண்டு அழ நேரிடும் என்று நான் நினைக்கவில்லை.நீ செய்த அவமானங்களை என்னால் மறக்கவே முடியாது"
"நான் என்ன செய்தேன்."
"காலேஜில் நாம் இருவரும் ஒரே கிளாசில் தான் படித்தோம். நீ நன்றாகப் படிப்பாய். நான் ரொம்ப சுமார் தான். உன்னிடம் சில டவுட்கள் கேட்க வருவேன். ஆனால் நீ என்னைக் கண்டு கொள்ளவே மாட்டாய். ஒரு முறை அசைன்மெண்ட் பேப்பர் தருகிறேன் என்று என்னை கேண்டீன் வர சொல்லி ஏமாற்றினாய். அன்று எனக்கு அப்படியே செத்து விடலாம் போல இருந்தது"
"இது நடந்து 8 வருடம் ஆகி விட்டதே. இதைப் போய் இப்போது ஞாபகப்படுத்தி சொல்கிறாய்"
"எனக்கு நடந்த அவமானங்கள் எதையும் என்னால் எளிதில் மறக்க முடியாது"
"நான் வேண்டும் என்றே அப்படி செய்யவில்லை காவ்யா. காலேஜ் படிக்கும் போது எனக்கு மற்றவர்களிடம் குறிப்பாக பெண்களிடம் எப்படிப் பழகுவது என்பதே தெரியாது. எனக்கு நண்பர்கள் மிகவும் குறைவு. கேண்டீன் வராதது கூட சத்தியமாக  மறந்தது தான் காரணம்."
"என்னை சமாதானம் செய்ய ஏதோ கூறுகிறாய்"
"அது தான் உண்மை. நீ இப்போது என்னைப் பெரும் இக்கட்டிலிருந்து காப்பாற்றியிருக்கிறாய் அதை என்னால் மறக்கவே முடியாது. உன்னை கஷ்டப்பபடும்படி எப்போதாவது ஏதவாது செய்திருந்தால் ஐ ஆம் வெரி சாரி"
"அந்த ரீனா மிகவும் அழகோ?"
"ஏன் கேட்கிறாய்?"
"நேற்று அவளைப் பற்றி நீ பேசும் போது சற்று எமோஷனல் ஆனதை கவனித்தேன். ரொம்ப லவ்வோ அவள் மீது"
“அப்படி எல்லாம் இல்லை. நான் அவளுடன் பழகியது ஒரே நாள் தான்"
"ஒரு நாளிலே உன்னை இப்படிக் கிறங்க அடித்து விட்டிருக்கிறாள் என்றால் அவள் கொஞ்சம் ஸ்பெஷல் அழகு தான் என்று நினைக்கிறேன்"
"உனக்குப் பொறாமை"
"பொறாமை எனக்கா? உன் முகத்தை எப்போதாவது கண்ணாடியில் பார்த்திருக்கிறாயா. நல்ல தேவாங்கு போல இருக்கிறாய். ரொம்ப தான் நினைப்பு உனக்கு."
மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். இந்தப் பெண்கள் மனது இருக்கிறதே. அது தான் எப்படி எல்லாம் யோசிக்கிறது தான் நினைப்பதை எப்படி எல்லாம் மறைக்கிறது. அவள் கூறியதற்கு பதிலுக்கு ஏதாவது வம்பிளுக்கலாம்  என்று வாய் வர வந்ததை நிறுத்தி விட்டேன். இவளைக் கோபமுறச் செய்தால் என் நிலைமை மேலும் கடினமாகும். இவள் காலேஜில் படித்த போது எப்படி இருந்தாலோ அதே குழந்தையாகத் தான் இருக்கிறாள்.
மீண்டும் எங்களிடையே மௌனம் குடி கொண்டது.
                           Chapter 3
ஒரு வாரம் கழித்து காவ்யாவும் நானும் ஜெனீவா நகரிலிருந்தோம். பீட்டரின் வருகைக்காக ஒரு ஹோட்டலில் காத்துக் கொண்டிருந்தோம்.
"இந்த சுவிசர்லாந்து அப்படியே தேவலோகம் போல இருக்கு. இந்த நாட்டுக் குடிமகளா மாறி இங்கேயே இருந்து விடலாம் போல இருக்கு."
காவ்யா சுவிசர்லாந்து பெருமை பாடிக்கொண்டிருக்கும்போது பீட்டர் வந்தான். என் வயது தான் அவனுக்கும் இருக்கும்.எக்சர்சைஸ் செய்து உடம்பை ஸ்மார்ட்டாக வைத்திருந்தான். வந்ததும் கால தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டான்.
"நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்."
"சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் கள்ளப்பணம் வைத்திருப்பது குறித்த ரகசியங்களை இந்திய அரசுக்கு அளித்து இதற்கு முன் உதவி செய்துள்ளீர்கள். இந்த முறை நரேஷ் யாதவ் மற்றும் ரீனா இந்த இருவர் குறித்த விபரங்கள் வேண்டும்".
ரீனா இருவரின் போட்டாக்களைப் பீட்டரிடம் காண்பித்தாள்.
காவ்யா சொல்வதைப் பீட்டர் கவனிக்காமல் அவள் முகத்தையே ரசித்துக் கொண்டிருந்தான்
"பெண்ணே. உன் பெயர் காவ்யா தானே. உன் முகத்தை நேராகப் பார்த்து என்னால் பேச முடியவில்லை. உன் கண்கள் பட்டாம்பூச்சி போல சிறகடிக்கும் போது என் இதயம் சிம்பொனி வயலின் போல இசைக்கிறது. உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள கூட நான் தயார். ஆனால் வீட்டில் மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள்"
"நன்றி பீட்டர். மிகவும் புகழ்கிறீர்கள்".  காவ்யா வெட்கத்தில் முகம் சிவந்தாள்.
எனக்கு அப்படியே வயிறு கபகபவென எரிந்தது.
"நாம் வந்த விஷயம் விட்டு வேறு வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்கிறோம்." நான் இடையில் புகுந்தேன்.
"ஆம் நாங்கள் கேட்ட விபரங்கள் எப்போது கிடைக்கும்."
"எனக்கு மூன்று நாட்கள் டைம் கொடு காவ்யா. இதே ஹோட்டலில் நாம் சந்திப்போம்."
பீட்டர் விடை பெற்றுச் சென்ற பிறகு இருவரும் ஆளுக்கு ஒரு பீசா ஆர்டர் செய்தோம்.
"என்ன பீட்டரோட ஓவர் வழிசல். இங்கே குடிமகளா மாறுவதற்கு அவனைக் கல்யாணம் செய்வது தான் பெஸ்ட் வழின்னு ப்ளான் செய்றியா"
"ஏன் அப்படி சொல்றே."
"ஏதோ பட்டாம்பூசின்றான், ஹார்ட் துடிக்குதுன்றான். நீயும் அதுக்கு சிரிச்சு சிரிச்சு வழிஞ்சே."
"பீட்டரைத் தப்பா சொல்லாதே. எந்தப் பெண்ணின் அழகையும் பாராட்டிப் பேசுவது இந்த நாட்டின் கல்ச்சர். அதற்காக நம்மைக் காதல் செய்வார்கள் என்றெல்லாம் நினைக்கக் கூடாது."
"அவன் காதலிக்கிறானோ இல்லையோ, நீ அவன்கிட்டே விழுந்துட்டது நல்லாவே தெரியுது"
"சீ. நான் கல்யாணம் பண்ணா ஒரு தமிழனைத் தான் கல்யாணம் செய்வேன்."
"நான் நம்ப மாட்டேன்."
"நம்புனா நம்பு. தமிழன் அதிலும் குறிப்பா காலேஜ்லே என் கூட படிச்சவனைத் தான் கல்யாணம் செய்வேன்"
"என்ன சொன்னே"
"ம். சரியான புண்ணாக்குன்னு சொன்னேன்"
பேசிக் கொண்டே எங்கள் ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தோம். வந்ததும் குவாண்டம் கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
"என்ன தினமும் இதை நோண்டிக் கொண்டிருக்கே"
"குவாண்டம் கம்ப்யூட்ட்டரில் என் வேலை முழுமையாக முடியவில்லை. முதலில் இதன் வடிவமைப்பு பற்றிய முழு specifications எழுத வேண்டும் அப்போது தான் பெரிய கம்பெனிகள் இதன் மீது ஆர்வம் காட்டுவார்கள். மேலும் ரீனா துஷ்ப்ரயோகம் செய்தது போல மற்ற சிஸ்டம்களை ஊடுருவாமல் தடுக்க சாப்ட்வேர்கள் எழுத வேண்டும். அப்போது தான் என் வேலை முழுமையாகும்."
"நீ சொல்வது எல்லாம் புரிந்து கொள்ள நான் அறிவாளியா இருக்கணும்."
"நீ நல்ல அறிவாளி தான் காவ்யா."
"ஆமாம் நான் மிக பிரைட் கேர்ள்." சிரித்தவாறே சொல்லிவிட்டு காவ்யா அவள் ரூமுக்குச் சென்றாள்.
மூன்று நாட்கள் கழித்து, முன்பு பீட்டரை சந்தித்த அதே ஹோட்டலில் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தோம்.
நேரமாகிக் கொண்டே இருந்தது. பீட்டர் வந்த பாடாகத் தெரியவில்லை.
காவ்யா அவனுக்குப் பல முறை போன் செய்தும் பதிலில்லை.
"பீட்டரோட வீட்டு அட்ரஸ் இருக்கா காவ்யா. நேரா அவன் வீட்டுக்குப் போய் பார்ப்போமே"
ஒரு டேக்சி பிடித்து அவன் வீட்டிற்கு வந்தோம். அங்கு போனதும் எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்துக் கிடந்தது.
வீட்டைச் சுற்றிலும் போலீஸ் குவிந்துக் கிடந்தது.
காவ்யா மெல்ல ஒரு போலீசிடம் விசாரித்தாள்.
"இந்த வீட்டில் வசிக்கும் பீட்டர் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உங்களுக்கு அவரைத் தெரியுமா"
நாங்கள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றோம். முதலில் மீண்ட நான் பதிலளித்தேன்.
"இல்லை எங்களுக்குத் தெரியாது."
"பிறகு இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். இடத்தைக் காலி செய்யுங்கள்."
எங்கள் ஹோட்டலை நோக்கித் திரும்ப சென்று கொண்டிருந்தோம்.
"எனக்கு பயமா இருக்கு விஜய். நம்ம உயிருக்கும் ஆபத்து வருமோனு திக். திக்குன்னு இருக்கு"
"கவலைப்படாதே காவ்யா. அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது. யார் இதை செய்திருப்பார்கள்?"
"நரேஷ், ரீனா வேலையாத்தான் இருக்கும். நாம் அவர்களைத் தொடர்வது அவர்களுக்குத் தெரிந்தே தான் இருக்கும்னு எனக்குத் தோணுது. இருந்த ஒரு உதவியான ஆளும் செத்தாச்சு. இதற்கு மேல் நம்ம வேலையை எப்படித் தொடர்வது. இனி சிபிஐ தான் வந்து விசாரிக்கணும். நாம் இங்கே செய்றதுக்கு ஒரு வேலையும் இல்லை."
"அவசரப்பாதே காவ்யா. ஒரு வாரம் இருந்து பார்ப்போம். ஏதாவது ஒரு லீட் கிடைக்கும்."
எங்கள் ஹோட்டலை வந்து சேர்ந்தோம். எதுவும் பேசாமல் தத்தம் அறைக்குச் சென்றோம்.
நான்கு நாட்கள் கழிந்தது. அடுத்து என்ன செய்வது என்று எங்கள் இருவருக்குமே தெரியவில்லை.
"நாளை இந்தியா செல்ல டிக்கெட் புக் செய்து விடலாம் விஜய். இங்கு நாம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம்."
"கொஞ்சம் பொறுமையாக இரு காவ்யா. இன்னும் ஓரிரு நாட்கள் இருந்து தான் பார்ப்போம்"
"இரண்டு நாட்களில் ரீனாவை நாம் கண்டுபிடித்து கிழித்து விடுவது போலத்தான்."
"இல்லை. ரீனா நம்மைத் தேடி வருவாள்."
"என்ன சொல்கிறாய்"
"ஆம். ரீனாவின் அடுத்த குறி என் குவாண்டம் கம்ப்யூடர் மீது தான் இருக்கும். அதைக் கவர்வதற்கு முயற்சி செய்வாள் என்று எனக்குத் தோன்றுகிறது"

"அதை உன்னுடைய வீட்டில் இருந்த அன்றே செய்திருக்கலாமே. நீ அவள் ஸ்கூட்டியை ரிப்பேர் செய்வதற்காக வெளியே தானே இருந்தாய். அது தானே அவளுக்கு நல்ல சந்தர்ப்பம்"
"அப்போது குவாண்டம் கம்ப்யூட்டரை அவள் எடுத்திருந்தால், போலீசின் கவனம் அவள் மீது திரும்பியிருக்கும். நான் சிக்கியிருக்க மாட்டேன். போலீஸ் வலையில் என்னை மாட்டுவதற்குத் தான் கம்ப்யூட்டரை வீட்டிலேயே வைத்து விட்டு சென்றாள். இங்கே சுவிசர்லாந்தில் கம்ப்யூட்டரைத் திருடுவதற்கு சரியான சந்தர்ப்பம் என்று அவள் நினைக்கலாம்."
காவ்யாவுக்கும் நான் சொல்வது சரி என்று பட்டது. இருவரும் டின்னர் சாப்பிட ஹோட்டல் சென்று வந்த பிறகு என் அறை திறந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். உள்ளே குவாண்டம் கம்ப்யூட்டர் காணவில்லை.
"நீ சொன்னது போலவே ரீனா தான் இதை செய்திருக்கணும்."
"கம்ப்யூட்டர் திருடு போனது நல்ல விஷயம் காவ்யா. நம் வேலை இப்போது வெகு எளிதாகி விட்டது."
"என்ன உளறுகிறாய். கம்ப்யூட்டர் திருடு போனது நல்ல விஷயமா?"
"ஆம். அந்தக் கம்ப்யூட்டருடன் ஒரு GPS  பொருத்தியுள்ளேன். கம்ப்யூட்டர் எங்கிருக்கிறது என்ற சிக்னலை என் செல்போனுக்கு வரும்படி செய்துள்ளேன்"
என் செல்போனைப் பார்த்து விட்டு "கம்ப்யூட்டரை எடுத்தவர்கள் இங்கிருந்து 20 மைல்கள் தள்ளி ஒரு காரில் சென்று கொண்டிருப்பது தெரிகிறது. நான் உடனே அவர்களைத் தொடர்ந்து செல்கிறேன்"
"நானும் உன்னுடன் வருகிறேன்"
"வேண்டாம் நீ வந்தால் கூடுதல் ஆபத்து. நான் மட்டும் செல்கிறேன்."
ஒரு ரென்டல் காரை எடுத்துக் கொண்டு GPS சொன்ன திசையில் சென்று கொண்டிருந்தேன். ஒரு மலைப்பகுதிக்கு வந்தேன். மலைப் பாதையைச் சுற்றி சுற்றி கார் சென்றது. சிறிது தூரத்தில் ஒரு வீடு தெரிந்தது. அங்கு தான் திருடியவர் இருக்க வேண்டும்.

வீட்டை நெருங்கியதும் சற்றுத் தள்ளி காரை நிறுத்தினேன். இருட்டியதும் வீட்டிற்குள் போகலாம் என்று முடிவு செய்து காத்திருந்தேன். ஒரு சிறிய பாறை மீது அமர்ந்து மலையின் இயற்கை அழகைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
"நீ என்னை சந்திக்க வருவாய் என்று எனக்குத் தெரியும் விஜய்"
அதிர்ச்சியில் நான் திரும்ப ரீனா நின்று கொண்டிருந்தாள்.
ரீனா இப்போது ஆளே வித்தியாசமாக இருந்தாள். உடை, மேக்கப், ஹேர் ஸ்டைல் எல்லாம் மாறியிருந்தது.
"எப்படி இருக்கிறாள் உன் புது கேர்ள் பிரண்ட்?"
நான் பதில் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
"எனக்கு சிறு வயதிலேயே ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை. காலேஜில் தான் நரேஷ் அறிமுகமானான். வசதியான அவன் மூலம் என் ஆசை நிறைவேறும் என்று தோன்றியதால் அவனுடன் பழகினேன். பணம், வசதி எல்லாம் கிடைத்தது. ஆனாலும் உன்னுடன் பழகிய அந்த இரண்டு நாட்கள், அது ஒரு வித்தியாசமான அனுபவம். உண்மையில் உன் மீது ஒரு சின்ன லவ் உணர்வு வந்தது. பட் நான் ஒரு பிராக்டிகலான பர்சன். உன்னை விட நரேஷிடம் தான் நான் விரும்பிய கனவு வாழ்க்கை கிடைக்கும் என்பதில் தெளிவாக இருந்தேன். அவன் சொன்னதைப் போல உன்னைப் பயன்படுத்திக் கொண்டேன்."
"பங்குச்சந்தை வீழ்ச்சி உன்னுடைய சதித் திட்டம் தானா"
"இன்னுமா அதில் சந்தேகம்."
"என் கம்ப்யூட்டரைக் கொடுத்து விடு. நான்  என் வழியைப் பார்த்து போய் விடுகிறேன்"
"அது அவ்வளவு சுலபத்தில் நடக்காது. ஏன் என்றால் அதை வாங்குவதற்கு உன் உயிர் இருக்காது."
ரீனா ஒரு பிஸ்டலை எடுத்து என் முன் நீட்டினாள்.
நான் மெதுவாகப் பின் வாங்கினேன்.
"நீ ஒரு கோழை விஜய். நீ உயிர் வாழ்ந்து ஒரு பிரயோஜனமும் இல்லை."
அவள் என்னை சுடுவதற்கு ட்ரிக்கர் மீது விரலை வைத்தாள். நான் கண்களை மூடினேன்.அப்போது சரமாரியாக துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. நான் கண்களைத் திறந்து பார்த்தேன்.
ரீனா ரத்த வெள்ளத்தில் கிடந்தாள். பின்னால் போலீசுடன் காவ்யா நின்று கொண்டிருந்தாள்.
                              Chapter 4
"காவ்யா நீ எப்படி இங்கே?"
"உன்னை தனியா அனுப்புவதற்கு நான் என்ன முட்டாளா. உன் உயிருக்கு ஆபத்துன்னு தெரியும். அதனால் போலீஸ் உதவியுடன் உன்னைப் பின் தொடர்ந்து வந்தேன்."
போலீஸ் ரீனாவின் இறந்த உடலைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் காவ்யாவுக்கு ஒரு யோசனை தோன்றியது.
"விஜய் பக்கத்தில் தான் ரீனாவின் வீடு இருக்கிறது. நான் இங்கேயே இருக்கிறேன். நீ சென்று உன் குவாண்டம் கம்ப்யூட்டரைத் தேடி எடுத்து வந்து விடு."
நான் சம்மதித்து ரீனாவின் வீட்டிற்குள் வந்தேன்.
முதலில் பெட்ரூமில் ரீனா நரேஷ் இருவரும் சேர்ந்து எடுத்த அவர்கள் கைகளின் ஓவியப் பிரதி என் கண்ணில் பட்டது. அதை எடுத்து பத்திரமாக வைத்துக் கொண்டேன். பெட்ரூமை மேலும் அலசிய போது என் குவாண்டம் கம்ப்யூடர் கிடைத்தது. அதனுடன் சில பைல்கள் கொண்ட ஒரு சிறிய பெட்டியும் இருந்தது. அதையும் எடுத்துக் கொண்டு நேராக வீட்டை விட்டு வெளியேறினேன். என் காரில் எல்லாவற்றையும் பத்திரமாக வைத்தேன்.
பிறகு போலீஸ் இருக்கும் இடத்திற்கு வந்தேன். இன்னும் ரீனாவின் இறந்த  உடலையே சோதித்துக் கொண்டிருந்தனர். சற்றுத் தள்ளி காவ்யா நின்று கொண்டிருந்தாள்.
மெதுவாக காவ்யா அருகில் சென்று வெற்றி என்று கை விரலில் சைகை செய்தேன்.
பிறகு போலீசிடம் அனுமதி பெற்று காரில் திரும்பி ஹோட்டலுக்கு வந்தோம்.
வந்ததும் ரீனா, நரே ஷ் கைகளின் போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
"காதலி இறந்த துக்கம் நெஞ்சை அடைக்குதோ. அவள் கைகளையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்"
"உளறாதே காவ்யா. நமக்கு இது உதவும்."
"எப்படி உதவும்?"
"கொஞ்சம் பொறு"
ரீனாவின் வீட்டில் எடுத்த பெட்டியிலிருந்த சில டாக்குமெண்டுகளைப் பார்த்தேன். அதில் ரீனா நரேஷ் இருவரின் joint account செக் புக் ஒன்று இருந்தது. அதிலிருந்த அக்கௌண்ட் நம்பரை குறித்துக் கொண்டேன்.
"காவ்யா எனக்கு ஒரு ஐடியா. இந்த அக்கௌண்டில் தான் நரேஷ் தன்னுடைய  பணம் அனைத்தும் வைத்திருக்க வேண்டும். நாம் பேங்க் சென்று இப்போதே பணத்தை எடுத்து விடலாம்."
"பேங்கில் எவ்வளவு செக்யூரிட்டி இருக்கும். பணத்தை நேரடியாக நரேஷ் சென்றால் தான் கொடுப்பார்கள்."
"பேங்கில் நரேஷ் பணத்தை எடுக்கச் செல்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பணத்தை  எடுப்பது நரேஷ் தான் என்பதை அவன் கை விரல் ரேகை வைத்து பேங்கின் சாப்ட்வேர் உறுதி செய்யும்."
"அப்படி என்றால் இந்த போட்டோவில் இருக்கும் கை விரல் ரேகை வைத்து நரேஷ் அக்கௌண்டைக் காலி செய்யலாம். யு ஆர் எ ஜீனியஸ் விஜய் . ஆனால் இவ்வளவு பணத்தை எப்படி இந்தியா எடுத்துச் செல்வது."
"நாம் எடுத்துப் போக வேண்டாம். இது நமது அரசாங்கத்திற்கு போக வேண்டிய பணம். நிதிஷை த் தொடர்பு கொண்டு இந்தியா அரசின் அக்கௌண்ட் நம்பரை வாங்கு. பணத்தை நரேஷின் அக்கௌண்டிலிருந்து இந்தியா அரசாங்கத்தின் அக்கௌண்டுக்கு மாற்றி விடலாம்."
காவ்யா சம்மதித்து நிதிஷைப் போனில் தொடர்பு கொண்டு பேசினாள்.
"மினிஸ்டர் மிகவும் சந்தோஷப்பட்டார். இன்னும் சிறிது நேரத்தில் நமக்கு மெசேஜ் அனுப்புவதாகக் கூறினார்."
ஐந்து நிமிடங்களில் எங்கள் இருவரின் போனுக்கும் மெசேஜ் வந்தது.
காவ்யா அது இந்திய அரசாங்கத்தின் அக்கௌண்ட் தான் என்பதை உறுதி செய்தாள்.
காவ்யாவிடம் விடை பெற்று நான் பேங்க் சென்றேன். என்னை நரேஷ் என்று அவர்களிடம் கூறினேன்.
அங்கு வேலை செய்யும் மேனேஜர் என்னை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருக்கும் கம்ப்யூட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விளக்கம் கொடுத்து விட்டு ச் சென்றார்.
கம்ப்யூட்டர் அக்கௌன்ட் நம்பர் கேட்டதும் நரேஷின் அக்கௌன்ட் நம்பரை ப் பதிவு செய்தேன்.
பிறகு கை விரல் ரேகைகளை ப் பதிவு செய்ய சொன்னது.
நரேஷின் கைவிரல்கள் போட்டோவை வைத்து ரேகைகளைப் பதிவு செய்தேன்.
அரை மணி நேரத்தில் 20,000 கோடி இந்திய அரசாங்கத்தின் அக்கௌன்டிற்கு  மாறியது.
வேலை முடிந்ததும் ஹோட்டலுக்குச் சென்றேன். காவ்யா நிதிஷிடம் பேசி பணம் அரசாங்கத்தின் அக்கௌன்டிற்கு மாற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்தாள்.
நாளை இந்தியா திரும்ப செல்வதற்கு விமான டிக்கெட்டும் வாங்கி விட்டோம்.
"சும்மா ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி ஹீரோ வேலை செஞ்சிருக்கோம் இல்லை" என்று காவ்யா படு உற்சாகமாக இருந்தாள்.
அடுத்த நாள் ஏர்போர்ட் செல்வதற்கு டேக்சி வந்தது. சந்தோஷமாக இருவரும் பேசிக் கொண்டு சென்றோம்.
திடீரென்று டேக்சியை ஒட்டிக் கொண்டிருந்தவன் பின்னால் திரும்பி எங்கள் மீது ஒரு ஸ்ப்ரே அடித்தான்.
நாங்கள் மயக்கத்தில் ஆழ்ந்தோம்.
நினைவு வந்த போது எங்களுக்குத் தெரிந்த ஒரு இடத்தில் இருப்பது போலத் தோன்றியது. ஆம் மலை மீதிருந்த ரீனாவின் வீடு தான் அது.
சிறிது நேரத்தில் உயரமான ஒரு மனிதன் வந்தான்.
"வெல்கம் விஜய். உன்னை இந்தக் கோலத்தில் சந்திக்க வைத்ததற்கு மன்னிக்கணும். என் பெயர் நரேஷ். நாம் இதற்கு முன் பார்த்ததில்லை ஆனால் உன்னை எனக்கு மிக நன்றாகத் தெரியும்."
"எனக்கும் உன்னை நன்றாகத் தெரியும் நரேஷ்"
"என்னை உனக்கு கடந்த சில வாரங்களாகத் தான் தெரியும். எனக்கு உன்னை 5 வருடங்களாகத் தெரியும். நீ அப்போது  குவாண்டம் கம்ப்யூட்டர் ஆராய்ச்சி பற்றி  எழுதிய ஒரு ஆர்டிகிள் படித்தேன். அப்பொழுதே உன்னை கவனித்து வந்தேன். என்னுடைய காதலி ரீனாவை நீ ஆராய்ச்சி செய்த இடத்திலேயே லெக்சரராக  வேலை செய்ய வைத்தேன். நீ வெற்றிகரமாக ஆராய்ச்சியை முடித்தாய். அதன் பிறகு ரீனா மூலம் என் வேலையே ஆரம்பித்தேன். ஸ்டாக் மார்கெட் வீழ்ச்சியுற வைத்து பல ஆயிரம் கோடி சம்பாதித்தேன். ஆனால் மறுபடியும் என் திட்டங்களில் நீ குறுக்கிட்டாய். ரீனாவின் மரணத்திற்கு நீ தான் காரணம். அவள் இறந்தது எனக்குப் பெரிய வருத்தமில்லை. அவளுக்கு என் மீது உண்மையான காதல் இல்லை. அவள் விரும்பியது என் பணத்தை மட்டும் தான். என் பணத்தை பேங்கிலிருந்து  எடுக்க ஒரு மாஸ்டர் பிளான் போட்டாய். ஒரே நாளில் என்னை நடுத்தெருவுக்கு கொண்டு வந்தாய்."
"இப்போதும் ஒன்றும் குறையவில்லை. சட்டத்திடம் உன் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்து விடு"
"சின்ன வயதிலிருந்தே எனக்குப் பிடித்த கார்டூன் எது தெரியுமா. டாம் அண்ட் ஜெர்ரியில் வருமே ஒரு பூனை, எலி. அது என்னுடைய பேவரைட். அதில் பூனை செய்யும் தந்திரங்களும் அதற்கு எலி போடும் பதில் தந்திரங்களும் ரியலி எ மாஸ்டர் பீஸ். என் வாழ்க்கையும் ஒரு டாம் அண்ட் ஜெர்ரி கார்டூன் போலத்தான். எனக்கு பிசினசில் பல எதிரிகள். அவர்கள் ஒவ்வொருவரையும் வீழ்த்துவதில் கிடைக்கும் இன்பமே ஒரு அலாதி. பணம் சம்பாதிப்பதில், ஒரு பெண்ணை அனுபவிப்பதில் இல்லாத சுகம் அதில் இருக்கிறது. முதன் முறையாக எனக்கு நிகரான சரியான போட்டியாக நீ வந்தாய். உன்னையும் உன்னுடைய காதலியையும் ஒரே நேரத்தில் மேலுலகம் அனுப்பப் போகிறேன்."
"என்னைக் கொல்வதால் உனக்கு ஒரு லாபமும் இல்லை. இழந்த உன் பணம் உனக்குத் திரும்பக் கிடைக்க நான் உதவுகிறேன்."
"எப்படி"
"என் குவாண்டம் கம்ப்யூட்டரை என்னிடம் கொடு. அதன் மூலம் அரசாங்கம் அக்கௌண்டிலிருந்து பணத்தை உன் அக்கௌண்டுக்கு மாற்றுகிறேன்"
"நல்ல டீல் தான் நீ சொல்வது. ஆனால் என்னை ஏமாற்ற எதுவும் திட்டம் போடாதே."
குவாண்டம் கம்ப்யூட்டர் மூலம் அரசாங்கத்தின் அக்கவுன்டிலிருந்து 20000 கோடி நரேஷின் அக்கவுண்டிற்கு மாற்றம் செய்தேன்.
"இப்போது என்னை விடுதலை செய்"
"உன்னை விடுதலை செய்வேன் என்று கனவிலும் நினைக்காதே. நாளை காலை என் அக்கௌண்டில்  பணம் இருப்பதை உறுதி செய்து விட்டு உங்கள் இருவர் உயிரையும் எடுப்பேன். குட் நைட்"
எங்கள் இருவரையும் ஒரு இருட்டறையில் கட்டி வைத்திருந்தனர். காவ்யாவின் முகத்தில் கலவரம் காணப்பட்டது. நான் அமைதியாக இருந்தேன்.
சில மணி நீரங்களில் வீட்டின் முன் கதவு தட்டும் சத்தம் கேட்டது. தப தபவென மனிதர்கள் உள்ளே நுழையும் சத்தம் கேட்டது.
சுவிஸ் நாட்டு போலீசாருடன் இந்திய சிபிஐயைச்  சேர்ந்த இருவரும் வீட்டினுள்ளே நுழைந்தனர். சிபிஐ ஆபிசர் எங்கள் கட்டுகளை அவிழ்த்து விட்டார். நரேஷை போலீசார் கைது செய்தனர்.
"நரேஷ், நேற்று பணத்தை டிரான்ஸ்பர் செய்த போது இந்திய பைனான்ஸ் மினிஸ்டர், சிபிஐ ஆபிசர் இவர்கள் இருவருக்கும் பேங்கிலிருந்து ஒரு ஈமெயில் அலெர்ட் செல்லும்படி செய்தேன். ஏன் 20,000 கோடி பணம் அரசாங்கள் அக்கவுன்டிலிருந்து எடுக்கப்படுகிறதே என்று அவர்களுக்கு சந்தேகம் வரும்படி செய்தேன். ஈமெயில் அலெர்ட்டில் உன் பெயர், உன் அக்கவுன்ட் விபரங்களும் வரும்படி செய்தேன். உடனே இந்திய அரசாங்கம் சுவிஸ் அரசுடன் தொடர்பு கொண்டு உன்னைக் கைது செய்ய ஏற்பாடு செய்தது.  நீ இது வரை செய்த தவுறுகளில் எதுவும் சட்டப்படி நீ மாட்டவில்லை. ஆனால் நேற்று நீ செய்தது சட்டப்படி குற்றம். அரசாங்கப் பணத்தை தெளிவான தடயத்துடன் கையாடிய குற்றம். குட் பை நரேஷ்"
நரேஷைப் போலீசார்  இழுத்துச் சென்றனர்.
நானும் ரீனாவும் அடுத்த நாள் பிளைட்டில் இந்தியா வந்தோம்.
என் குவாண்டம் கம்ப்யூட்டரை கூகிள் கம்பனியில் பிரெசென்டேஷன் செய்தேன். எனக்கு வி.பி பதவி, 20 மில்லியன் டாலர் சம்பளமும், பல நூறு மில்லியன் டாலர்கள் கம்பெனி ஸ்டாக் தரவும் ஒப்பந்தம் பேசினேன்.
விஷயம் கேள்விப்பட்டு காவ்யா வீட்டுக்கு வந்தாள். மகிழ்ச்சியில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளை அப்படியே கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தேன்.
"என்ன விஜய். இதெல்லாம் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது"
"சாரி. கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்"
"நீ கூகிள் கம்பனியில் சேருவது எனக்குப் பிடிக்கவில்லை"
"ஏன் அப்படி சொல்கிறாய். எவ்வளவு நல்ல Offer. என் கேரியருக்கு எவ்வளவு ஒரு நல்ல ஆரம்பம் என்று மகிழ்ச்சி அடைவாய் என்றல்லவா நினைத்தேன்."
"கூகிள் கம்பெனியில் சேருவதை விட உன் கேரியருக்கு பிரகசாமான வேறு வழியைச் சொல்கிறேன்"
"என்ன" என்றேன் ஆச்சரியத்துடன்.
"நீயே ஏன் கூகிள் போல ஒரு கம்பெனி ஆரம்பிக்கக்கூடாது. நம் திறமை அனைத்தையும் ஏன் வெளிநாட்டவர்களிடம் அடகு வைக்க வேண்டும். உன் கண்டுபிடிப்பு அசாதரணமானது. இதை வைத்து நீ ஒரு கம்பெனி ஆரம்பித்தால் உன் புகழ், இந்த நாட்டின் புகழ் உச்சத்திற்கு போகும்."
காவ்யாவை நெருங்கி அவள் எதிர்பாராதபோது ஒரு முத்தத்தை அளித்தேன். ஆனால் இந்த முறை அவள் உதட்டில்.
"என்ன விஜய் இது. விடு." சிறிது நொடியில் என்னைத் தடுப்பதை அவளும் நிறுத்தினாள்.
"ஐ லவ் யூ காவ்யா. நீ என்னை விரும்புகிறாயா."
"நான் உன்னைக் காதலிக்க ஆரம்பித்தது எட்டு வருடமாக"
"அப்படியா காலேஜிலேயே என்னைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாயா. என்னிடம் ஏன் சொல்ல வில்லை."
"பிறகு உன்னிடம் டவுட் கேட்டது, அசைன்மெண்ட் பேப்பர் வாங்க வந்தது எல்லாம் எதற்காம். நீ தான் சரியான ட்யூப் லைட். ஒன்றும் புரிந்து கொள்ளவில்லை"
"சரி எப்போது திருமணம் செய்யலாம்"
"முதலில் கம்பெனி ஆரம்பி. பிறகு பார்க்கலாம். The  Mockingjay  படம் போகலாம் என்று ப்ளான் பண்ணியிருந்தோமே. போய் கிளம்பு."
நான் ட்ரெஸ் மாற்றிக் கொண்டு தலை சீவுவதற்கு கண்ணாடி முன் நின்று என் முகத்தைப் பார்த்தேன். எப்போதும் போல் இல்லாமல் இன்று என்னைப் பார்த்ததும் வேறு விதமாகத் தோன்றுகிறது. தலையின் ஓரத்தில் தெரிந்த நரை முடி, சவரம் செய்யப்படாத என் தாடி, என் கண்ணாடி (காண்டாக்ட் லென்சுக்கு மாற வேண்டும்) எனக்கு ஒரு வசீகரத்தை தருவதாகத் தோன்றியது. மற்றப் பெண்கள் என்னை விரும்புவது இருக்கட்டும் காவ்யா போன்ற ஒரு தேவதை என்னை விரும்புகிறாள். என் மீது உயிரையே வைத்திருக்கிறாள்.
"I feel  like  a  hero "
உற்சாகத்தில் லேசாக விசலடித்தேன்.
"விஜய். உள்ளே என்ன செய்றே. கிளம்பறதுக்கு இவ்வளவு நேரமா."
"இதோ வந்துட்டேன் காவ்யா"
                               THE END.

Reference:-
The Path to the Quantum Computer --- George Johnson.












No comments:

Post a Comment